Showing posts with label ஜடாயு. Show all posts
Showing posts with label ஜடாயு. Show all posts

Thursday, 16 November 2023

சிறகுகள் எரிந்தன | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 61 (17)

Wings burnt | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் சிறகுகள் எரிந்தது எவ்வாறு என்பதையும், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதையும் முனிவர் நிசாகரரிடம் சொன்ன சம்பாதி...

Sampati and Jatayu fly high and see the earth and sun in same size
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம்

{அங்கதனிடம் சம்பாதி}, “அப்போது, சாகசமாகச் செய்யப்பட்டதும், செய்வதற்கரியதுமான அந்த பயங்கரமான கர்மத்தையும், சூரியனைப் பின்தொடர்ந்து சென்றது என, அனைத்தையும் முனிவரிடம் {நிசாகரரிடம் பின்வருமாறு} சொன்னேன்:(1) “பகவானே, புண்களுடனும், லஜ்ஜையுடனும் {வெட்கத்துடனும்}, கலங்கிய இந்திரியங்களுடனும் கூடியவனாகச் சோர்ந்திருக்கும் எனக்கு நெடும்வசனம் பேசும் சக்தியில்லை.(2) நானும், ஜடாயுவும் ஆணவத்தால் மோஹமடைந்து, பராக்கிரமத்தை அறிய விரும்பும் போட்டியில், தூரமாக ஆகாயத்தில் பாய்ந்து சென்றோம்.(3) கைலாச சிகரத்தில் இருந்த முனிவர்களின் முன்னிலையில், ‘அஸ்த மஹாகிரிவரை ரவியை {சூரியனைப்} பின்தொடர்ந்து செல்வது’ என்ற பந்தயத்திற்குக் கட்டுப்பட்டோம்.(4) 

ஒரே நேரத்தில் {வானத்தை} அடைந்த நாங்கள், மஹீதலத்தில் ரதச்சக்கரத்தின் பிரமாணத்தில் {பூமியில் தேர்ச்சக்கரத்தின் அளவில்} நகரங்களைத் தனித்தனியாகப் பார்த்தோம்.(5) சிலவேளைகளில் வாத்திய கோஷங்களுடனும், சிலவேளைகளில் பூஷணங்களின் {ஆபரணங்களின்} மெல்லொலிகளுடனும் பாடும், செவ்வாடை உடுத்திய அங்கனைகள் {பெண்கள்} பலரைப் பார்த்தோம்.(6) ஆகாசத்தில் துரிதமாக எழுந்து, ஆதித்யனின் பாதையை அனுசரித்த நாங்கள், புல்வெளித்தரை போல அந்த வனத்தைப் பார்த்தோம்.(7) உயரமான சைலங்களுடன் கூடிய பூமி சிறுகற்களால் மறைக்கப்பட்டதைப் போலவும், ஆறுகளுடன் கூடிய வசுந்தரை {நிலம்} சூத்திரங்களால் பின்னப்பெற்றதை {நூல்களால் சுற்றப்பட்டதைப்} போலவும் தெரிந்தன.(8) பூதலத்தில் ஹிமவானும் {இமயமும்}, விந்தியமும், மஹாகிரியான மேருவும், ஜலாஷயங்களில் நாகங்களை {நீர்க்கொள்ளிடங்களில் / மடுக்களில் யானைகளைப்} போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(9)

Jatayu and Sampati flying high

பிறகு, நாங்கள் இருவரும் தீவிர வியர்வையும், களைப்பும், பயமும் அடைந்தபோது, மோஹமும் {மயக்கமும்}, பயங்கரமான மூர்ச்சையும் {நினைவிழக்கும் நிலையும்} எங்களை ஆட்கொண்டன.(10) யாம்ய {தென்} திக்கும் தெரியாமல், ஆக்நேயீயும் {தென்கிழக்கும்} தெரியாமல், வாருணீயும் {மேற்கும்} தெரியாமல், உலகம் யுகாந்தத்தில் அக்னியால் எரிக்கப்பட்டு அழிவதைப் போன்ற நிலையை அடைந்தோம்.(11) மனம் நிலைகுலைந்தாலும், கண்களின் சார்பை அடையும் மஹத்தான யத்னத்துடன் {பெரும் முயற்சியுடன்} கூடிய நான், மீண்டும் மீண்டும் மனத்தையும், கண்களையும் அதில் {பார்வையை அடைவதில்} நிலைக்கச் செய்தேன்.{12} மீண்டும் மஹத்தான யத்னத்துடன் பாஸ்கரனை நேரடியாக நோக்கினேன். பாஸ்கரன், பிருத்வியின் பிரமாணத்திற்குத் துல்லியனாக எங்களுக்குப் புலப்பட்டான் {சூரியன், பூமிக்கு இணையான அளவில் எங்களுக்குத் தெரிந்தான்}.(12,13) 

ஜடாயு, {என்னைக்} கேட்காமல் கொள்ளாமல் மஹீயை {பூமியை} நோக்கி இறங்கியபோது, அவனைக் கண்ட நான், துரிதமாக ஆகாசத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.(14) என் சிறகுகள் இரண்டால் மறைக்கப்பட்டதால், ஜடாயு அதிகம் எரியவில்லை. அங்கே பிரமாதமாக வாயு பாதையில் இருந்து இறங்கிய நான் முழுமையாக எரிக்கப்பட்டேன்.(15) அந்த ஜடாயு, ஜனஸ்தானத்தில் விழுந்தான் என்று யூகிக்கிறேன். நானோ எரிந்த சிறகுகளுடன் ஜடமாக்கப்பட்டவனாக விந்தியத்தில் விழுந்தேன்.(16) இராஜ்ஜியத்தையும், உடன்பிறந்தவனையும் {தம்பி ஜடாயுவையும்}, சிறகுகளையும், விக்கிரமத்தையும் இழந்த நான், எப்படியாவது மரிக்க வேண்டி, கிரி சிகரத்தில் இருந்து விழ விரும்பினேன்” {என்று நிசாகரரிடம் சொன்னேன்” என்றான் சம்பாதி}.(17)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 17

Previous | Sanskrit | English | Next

Tuesday, 25 April 2023

ஜடாயு மோக்ஷம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 68 (38)

Salvation of Jatayu | Aranya-Kanda-Sarga-68 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடன் நடந்த மோதலையும், சீதை கடத்தப்பட்டதையும் ராமனிடம் சொன்ன ஜடாயு; ஜடாயுவின் மரணமும், தகனமும்...

Rama and Lakshmana offer water for Jatayu

இராமன், ரௌத்திரமாகப் புவியில் வீழ்த்தப்பட்ட அந்த கிருத்ரனை {கழுகான ஜடாயுவைக்} கண்டு, மித்ர சம்பன்னனான {நட்புடன் கூடிய} சௌமித்ரியிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "எனக்காக முயற்சி செய்கையில், இந்த விஹங்கமர் {வானுலாவி} போரில் ராக்ஷசனால் கொல்லப்பட்டிருக்கிறார். நிச்சயம் எனக்காகவே தன் பிராணனைத் துறந்திருக்கிறார்.(2) இலக்ஷ்மணா, இந்த சரீரத்தில் பிராணன் அதிபலவீன நிலையில் உள்ளதால், இவரது சுவரம் மந்தமாக இருக்கிறது; கடுந்துன்பத்துடன் காணப்படுகிறார்.(3) ஜடாயுவே, மீண்டும் வாக்கியங்களைச் சொல்ல முடியுமானால், சீதையைக் குறித்தும், உமது வதை குறித்தும் சொல்வீராக. உமக்கு நன்மை விளையட்டும்.(4) 

இராவணன் எதன் நிமித்தம் ஆரியையைக் கடத்தினான்? நான் அவனுக்குச் செய்த எந்த அபராதத்தை நோக்கில் கொண்டு எனக்குப் பிரியமானவளை ராவணன் கடத்தினான்?(5) துவிஜோத்தமரே {பறவைகளில் சிறந்தவரே}, சந்திரனுக்கு ஒப்பானதும், மனோஹரமானதுமான {மனத்தைக் கவர்வதுமான} அந்த முகம் எப்படி இருந்தது? அந்தக் காலத்தில் சீதை என்ன சொன்னாள்?(6) அந்த ராக்ஷசனின் வீரியம் எப்படிப்பட்டது? ரூபம் எத்தகையது? கர்மங்கள் {அவன் செய்த செயல்கள்} என்னென்ன? அவனது பவனம் {வசிப்பிடம்} எங்கே இருக்கிறது? தாதா {ஐயா}, இவற்றைக் கேட்கும் எனக்குச் சொல்வீராக" {என்றான் ராமன்}.(7)

தர்மாத்மாவான அவன் {ஜடாயு}, அநாதையைப் போல அழுது புலம்புபவனை {ராமனை} நிமிர்ந்து பார்த்துக் கலங்கிய குரலுடன் ராமனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(8) "துராத்மாவான ராக்ஷசேந்திரன் ராவணன், வாதத்துடன் {காற்றுடன்} கூடிய இந்த துர்தினம் கலக்கமுறப் பெரும் மாயையைச் செய்து அவளைக் கடத்திச் சென்றான்.(9) தாதா {ஐயா}, அந்த நிசாசரன் {இரவுலாவி}, களைத்துப் போயிருந்த என் சிறகுகள் இரண்டையும் வெட்டிவிட்டு, வைதேஹியான சீதையை எடுத்துக் கொண்டு தக்ஷிண முகமாக {தெற்கை நோக்கிச்}[1] சென்றான்.(10) இராகவா, என் பிராணன் துடிக்கிறது; பார்வை தடுமாறுகிறது, உசீரத்தை {வெட்டிவேரை / விலாமிச்சம் வேரைத்}[2] தலைமயிராகக் கொண்ட சுவர்ண விருக்ஷங்களை {பொன்மரங்களை} நான் பார்க்கிறேன்.(11) காகுத்ஸ்தா, ராவணன் எந்த முஹூர்த்தத்தில் சீதையைக் கொண்டு போனானோ, அது முற்றான தன நஷ்டத்தை ஏற்படுத்துவதும், "விந்தம்" என்ற பெயரைக் கொண்டதுமான முஹூர்த்தமாகும்[3]. சுவாமி {உரிமையாளன்} எவனோ, அவன் சீக்கிரமே அதை {தன்னைவிட்டுப் போனதை / அபகரிக்கப்பட்டதை} மீண்டும் அடைவான். அவன் {ராவணன்} அதை அறிவானில்லை.(12,13அ) இராக்ஷசேஷ்வரனான ராவணன், உனக்குப் பிரியமானவளைக் களவு செய்து, தூண்டில் முள்ளை {கவ்வும்} மீனைப் போலப் பற்றிவிட்டான். சீக்கிரமே அவன் நாசமடைவான்.(13ஆ,இ) ஜனகனின் மகளை நோக்கி நீ கவலையின்றிச் செல்வாயாக. இரணமூர்த்தத்தில் {போர்முனையில்} சீக்கிரமே அவனைக் கொன்று, வைதேஹியுடன் நீ ரமித்திருப்பாய் {இன்புற்றிருப்பாய்}" {என்றான் ஜடாயு}.(14)

[1] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும், தர்மாலயம், கோரக்பூர் பதிப்புகளிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும், "தென் திசையில் சென்றான்" என்றே இங்கே இருக்கிறது. 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெட்டிவேர் என்பது நறுமணமிக்கதும், நார்ச்சத்து மிக்கதுமான இந்தியப் புல்வகையைச் சார்ந்தது. இந்தப் புல்லானது விசிறிகள், திரைகள் ஆகியவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இலைகளுக்குப் பதிலாக புற்களைக் கொண்ட பொன்மரங்கள் மரணத்திற்கான சகுனமாகும்" என்றிருக்கிறது.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முஹூர்த்தம் என்பது, இருபத்துநான்கு மணி நேரங்களைக் கொண்ட {இன்றைய} கால அளவில், நாற்பத்தெட்டு நிமிடங்களாகும். ஒரு நாள் முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அவற்றில் சில நன்மைபயப்பவையாகவும், சில கெடுதலை விளைவிப்பவையாகவும் கருதப்படுகின்றன. தரப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய பட்டியலில் விந்தம் என்ற முஹூர்த்தம் இன்னதென்பதை அறியமுடியவில்லை. விந்தம் என்பது ஒரு நாளின் பதினோராவது முஹூர்த்தத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கெட்டதாகவும் கருதப்படுகிறது. இன்றைய நாட்களில் இது விஜயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது ஜடாயுவின் ஜோதிட அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. "வித்" {"ஈட்டுதல்"}, என்ற வேர்ச்சொல்லில் இருந்து விந்தியம் என்ற பதம் உண்டாகிறது. இந்தக் கணம் இழந்தவனுக்கு சாதகமாகவும், அபகரித்தவனுக்கு சாதகமில்லாமலும் இருக்கிறது. எனவே,  ராவணன் இந்தக் கணத்தில் சீதையை அபகரித்தது அழிவையே தரும்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எந்த வேளையில் ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு சென்றானோ, இதுதான் விந்தமென்கிற (அல்லது விஜயமென்கிற) நல்ல வேளை. ஆனது பற்றி காணாமல் போன பொருளை சீக்கிரமே சுவான்தார் திரும்பி அடைகிறான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ராவணன் சீதையை எடுத்தோடின முகூர்த்தம் விந்தமென்னும் பெயருடையது; அதில் பறிகொடுத்த பொருளை யஜமானன் மீளவும் பெறுவான்; ராவணன் அதனை யறியாமல் சீதையைப் பறித்தனன்" என்றிருக்கிறது.

மரிக்கும்போதும் மயக்கமடையாமல் ராமனிடம் பேசிக் கொண்டிருந்த கிருத்ரனின் அலகில் {கழுகானவனின் வாயில்} இருந்து சதை கலந்த உதிரம் வழிந்தது.(15) "{இராவணனென்பவன்} விஷ்ரவஸின் புத்திரன், சாக்ஷாத் வைஷ்ரவணனுடன் {குபேரனுடன்} பிறந்தவன்" என்பதைச் சொல்லிவிட்டு அந்த பதகேசுவரன் {பறவைகளின் தலைவனான ஜடாயு}, அரிதான தன் பிராணனை விட்டான்.(16) இராமன், தன் கைகளைக் கூப்பி, "சொல்லும், சொல்வீராக" என்று பேசிக் கொண்டிருந்தாலும், கிருத்ரனின் பிராணன் சரீரத்தைத் துறந்து விஹத்திற்குள் சென்றது[4].(17) அவன் {ஜடாயு}, அப்போது சிரத்தை {தலையைப்} பூமியில் சாய்த்து, கால்களை நீட்டி, தன் சரீரத்தை {உடலை} பரப்பியபடியே தரணீதலத்தில் விழுந்தான்.(18)

[4] கழுகான ஜடாயுவின் உயிர், உடலைத் துறந்து வானத்திற்குள் சென்றது.

துக்கங்கள் பலவற்றால் தீனமடைந்த ராமன், தாமிரம் போன்ற கண்களைக் கொண்ட அந்த கிருத்ரன் {கழுகானவன்}, உயிர் போய், அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பாகக் கிடப்பதைக் கண்டு, சௌமித்ரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) "இராக்ஷசர்கள் வசிக்கும் தண்டகாரண்யத்தில் சுகமாக பல வருஷங்கள் வாழ்ந்த இந்த பக்ஷியானவர் {நமக்காக} உயிரைவிட்டுவிட்டார்.(20) அனேக வயது வரை, எவர் வெகுகாலம் குறைவின்றி  வாழ்ந்து வந்தாரோ, அவர் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறார். காலத்தை மீறுவது கடினம் {சாத்தியமில்லை}.(21) இலக்ஷ்மணா, எனக்கு உபகாரம் செய்ய சீதையை மீட்கச் சென்ற இந்த கிருத்ரரை {கழுகானவரை}, பலவந்தமாக ராவணன் கொன்றிருப்பதைப் பார்.(22) இந்த பதகேஷ்வரர் {பறவைகளின் மன்னர்}, தமது பித்ருபிதாமஹர்களுக்குரிய மஹத்தான கிருத்ர ராஜ்ஜியத்தைக் கைவிட்டு, எனக்கு ஹேதுவாக பிராணனைக் கொடுத்திருக்கிறார்.(23) சௌமித்ரியே, திர்யக் யோனிகளுக்குள் சென்றவர்களிலும் {விலங்குகள், பறவைகளின் கருவறைகளுக்குள் சென்றவர்களிலும்}, சூரர்கள், சரண்யர்கள் {பிறருக்கு அடைக்கலம் தருபவர்கள்}, தர்மசாரிகள் {தர்ம வழியில் நடப்பவர்கள்}, சாத்வர்கள் {நல்லவர்கள்} எங்கும் காணப்படுகின்றனர்.(24) 

பரந்தபா, சௌம்யா, என் நிமித்தம் நேர்ந்த கிருத்ரரின் அழிவு ஏற்படுத்தும் துக்கத்தை, சீதை கடத்தப்பட்டபோதுகூட நான் அனுபவிக்கவில்லை.(25) பெரும்புகழ்மிக்கவரும், ஸ்ரீமானுமான ராஜா தசரதர் எப்படியோ, அப்படியே இந்த பதகேஷ்வரரும் {பறவைகளின் மன்னரும்} என்னால் பூஜிக்கப்படவும், மதிக்கப்படவும் தகுந்தவர்.(26) சௌமித்ரியே, விறகுக்கட்டைகளைக் கொண்டு வந்து, பாவகனைக் கடைந்தெடுப்பாயாக {நெருப்பை உண்டாக்குவாயாக}[5]. எனக்காக இறந்து போன கிருத்ர ராஜாவை {கழுகு மன்னர் ஜடாயுவை} தஹனம் செய்ய விரும்புகிறேன்.(27) சௌமித்ரியே, ரௌத்திரமான ராக்ஷசனால் கொல்லப்பட்ட இந்தப் பதகலோகநாதனை {பறவைகள் உலகின் தலைவரான இந்த ஜடாயுவை} சிதையில் ஏற்றி தஹனம் செய்ய விரும்புகிறேன்[6].(28) 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சடங்குகளில் உண்டாக்கப்படும் அக்னி, "அரணி" என்று அழைக்கப்படும் {அதற்குப் பயன்படும் கட்டைகள் அரணிக் கட்டைகள் என்று அழைக்கப்படும்}. ஒரு கட்டையில் குழிவை உண்டாக்கி, மறுகட்டையின் கூர்முனையை அதில் வைத்துக் கடையும்போது, அந்தக் கட்டைகளின் உராய்வில் நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பைப் பஞ்சில் எடுத்து, அதைக் கொண்டே பெரும் சிதையில் நெருப்பு உண்டாக்கப்படும்" என்றிருக்கிறது.

[6] தர்மாலயப் பதிப்பில் இங்கே அதிக சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றின் பொருள் பின்வருமாறு, "வீர! புண்யமான கோதாவரியின் கரையில் சிதையை ஏற்படுத்து". வீரரும், பெரும்புகழ் படைத்தவரும், ஸர்வசரண்யரும், ஸ்ரீமானும், தர்மாத்மாவுமாகி ஸ்ரீராமர் லக்ஷ்மணரை பார்த்து இவ்விஷயத்தில் மேற்கண்டவாறு ஆக்ஞாபித்துவிட்டு ஜடாயுவை எடுத்துக் கொண்டு கோதாவரியின் கரையை நோக்கி அவ்விடத்தினின்று சென்று, புனிதமான தர்ப்பைகள் நிறைந்த அதன் கரையில் இறக்கி வைத்து அதன் மேல் உடனே லக்ஷ்மணனால் கொண்டுவரப்பட்ட கட்டைகளால் சிதையைச் செய்து அக்னியை கடைந்தெடுத்து" என்றிருக்கிறது. அதன்பின் மற்ற பதிப்புகளில் வருவது போலவே தொடர்கிறது. தர்மாலயப் பதிப்பில் இருக்கும் இந்தப் பகுதி, தாதாசாரியர், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் இல்லை.

மஹாசத்வரான கிருத்ர ராஜாவே {பெரும் வலிமைமிக்க கழுகு மன்னரே}, என்னால் அனுமதிக்கப்படும் {விடைகொடுத்து அனுப்பப்படும்} நீர், யஜ்ஞசீலர்களின் {யாகங்களைச் செய்பவரின்} கதியை அடைவீராக; வேள்வி நெருப்பை மூட்டுபவர்களின், போரில் புறமுதுகிடாதவர்களின், பூமியைக் காணிக்கையளிப்போரின் கதியை அடைவீராக. என்னால் {உத்தரக்கிரியை செய்யப்பட்டு} தூய்மையடைந்து, உத்தமமான உலகங்களுக்குச் செல்வீராக[7]" {என்றான் ராமன்}.(29,30)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த தகனச்சடங்கு குறித்த அடிக்குறிப்பு மிக நீண்டதாக இருக்கிறது. அதில் உள்ள முக்கிய பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு, "ஒரு வேதச்சடங்கைச் செய்தால் விளைவது நிச்சயம் புண்ணியமே ஆகும். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்தச் சடங்குகளைச் செய்ய வேண்டியதில்லை. அவை சொர்க்கத்தையோ, முக்தியையோ அடையப்போவதில்லை. இப்பிறவியில் செய்த பாபபுண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவியையே அடையப் போகின்றன. ஆனால் ஜடாயு சொர்க்கத்திற்குத் தகுதியான செயல்களைச் செய்திருக்கிறான். எனவே பல்வேறு பிறவிகளை அடைந்து ஈட்டப்படும் முக்தியை இந்தக் குறுக்கு வழியில் அடைந்துவிடுகிறான். அதனால் தான் ராமன் இங்கே, "என்னால் அனுமதிக்கப்பட்டு, என்னால் தூய்மைப்படுத்தப்பட்டு" என்ற சொற்களைப் பயன்படுத்துகிறான்" என்றிருக்கிறது.

தர்மாத்மாவான ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, பதகேஷ்வரனை சிதையில் ஏற்றி, தன் பந்துவுக்கு {தன் உறவினருக்கு மூட்டுவது} போல நெருப்பை மூட்டி துக்கத்துடன் தகனம் செய்தான்[8].(31) பிறகு, வீரியவானான ராமன், சௌமித்ரியுடன் சேர்ந்து வனத்திற்குள் சென்று, ஸ்தூலமான மஹாரோஹிகளை {கொழுத்த பெரும் மான்களைக்} கொன்று, அந்த துவிஜத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு}  காணிக்கையாகப் பரப்பி வைத்தான்.(32) பெரும்புகழ்பெற்றவனான ராமன், ரோஹி மாமிசத்தை {மான் இறைச்சியை} எடுத்துக் கவளங்களாக {பிண்டங்களாக} உருட்டி, ரம்மியமான பசும்புல் தரையில் சகுனத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு} தத்தம் செய்தான்.(33) எதை துவிஜாதியினர் {இருபிறப்பாளர்கள்}, பிரேதமான மானுடன் ஸ்வர்க்கம் செல்வதற்காகச் சொல்வார்களோ அந்த பித்ருக்களுக்குரியதையே சீக்கிரமாக ராமனும் ஜபித்தான்[9].(34) 

[8] ஏந்தினன் இரு கைதன்னால் ஏற்றினன் ஈமம்தன்மேல்
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன் முறை கடவாவண்ணம்
தேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்

- கம்பராமாயணம்  3537ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்

பொருள்: நிறைந்த நல்ல நூல்களான சாத்திரங்களில் வல்லவனான ராமன், தன்னிரு கைகளாலும் உடலை ஏந்தி, ஈமச்சிதையில் ஏற்றி, நீரையும், சந்தனத்தையும், மலரையும் தூவி, தலைப்பக்கத்தில் எரிகிற நெருப்பை மூட்டி, செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தான்.

[9] தர்மாலயப் பதிப்பில், "பிராமணர்கள் மானிட பிணத்திற்கு பிதுருகர்மாவாகிறதும், ஸ்வர்க்கத்தை யடைவிக்கிறதுமான எந்த ஒன்றை ஜபிக்கிறார்களோ, அதை ஸ்ரீராமர் அதற்கும் (ஜடாயுவுக்கும்) ஜபித்தருளினார்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இறந்தவர்களை வானேற்றத்தக்க யாமயஸூக்தம் முதலிய மந்திரங்களை ஜபித்து, கோதாவரிக்குச் சென்று, தம்பியுடன் நீரிலாடி ஜடாயுவைக் குறித்துத் தருப்பணஞ் செய்து முடித்தருளினர்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன், இத்தகைய ஈமச்சடங்குகளில் பிராமணர்கள் பொதுவாக ஜபிக்கும் ஆபஸ்தம்ப சூத்திரங்கள் என்றழைக்கப்படும் யாமய சூக்தம், நாராயண சூக்தம் என்ற இரண்டு வேத மந்திரங்களை ஜபித்தான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

பிறகு நரவராத்மஜர்களான {மனிதர்களில் சிறந்த தசரதனின் மகன்களான} அவர்கள் இருவரும், கோதாவரி நதிக்குச் சென்று அந்த கிருத்ர ராஜனுக்காக {கழுகு மன்னன் ஜடாயுவுக்காக} நீருக்குள் இறங்கினர்.(35) அப்போது, ராகவர்கள் இருவரும், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட விதிப்படியே அந்த கிருத்ரத்திற்காக ஜலஸ்நானம் செய்து {கழுகான ஜடாயுவுக்காக நீரில் குளித்து}, அந்த கிருத்ர ராஜனுக்கு {கழுகு மன்னனுக்கு} நீர்க்காணிக்கை அளித்தனர்.(36) இரணத்தில் {போரில்} செய்யமுடியாத அற்புத காரியத்தைச் செய்து, வீழ்ந்த அந்த கிருத்ர ராஜா {கழுகு மன்னன் ஜடாயு}, அப்போது, மஹரிஷிக்கு இணையானவன் {ராமன்} மூலம் தூய்மை அடைந்து, புண்ணியமான சுப கதியை அடைந்தான்.(37) பக்ஷிசத்தமனுக்காக உதக காரியங்களைச் செய்த {பறவைகளில் சிறந்த ஜடாயுவுக்காக நீர்க் காணிக்கைகளை அளித்த} அவ்விருவரும், ஸ்திர புத்தியை அடைந்து, சீதையை அடைவதற்காக மனத்தால் பிரவேசித்து, விஷ்ணு, வாசவனை {இந்திரனைப்} போன்ற ஸுரேந்திரர்களை {தேவர்களின் தலைவர்கள் இருவரைப்} போல வனத்திற்குள் சென்றனர்.(38)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Monday, 24 April 2023

இராவணனே கடத்தினான் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 67 (29)

Ravana is the one who abducted | Aranya-Kanda-Sarga-67 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சிறகுகள் இழந்த ஜடாயுவைக் கண்ட ராமனும், லக்ஷ்மணனும்...

Rama and Lakshmana saw Jatayu

சாரத்தைக் கிரஹித்துக் கொள்பவனான ராகவன் {ராமன்}, பூர்வஜனாக {அண்ணனாக} இருந்தாலும், லக்ஷ்மணன் சொன்ன மாத்திரத்தில் நன்கு சொல்லப்பட்டவற்றின் மஹத்தான சாரத்தை ஏற்றுக் கொண்டான்.(1) மஹாபாஹுவான ராமன், தன்னில் பெருகிய கோபத்தை அடக்கிக் கொண்டு, சித்திரமான தனுவை {அற்புத வில்லைப்} பிடித்தபடியே லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "வத்ஸா {குழந்தாய்}, லக்ஷ்மணா, 'என்ன செய்வோம்? எங்கே செல்வோம்? எந்த உபாயத்தால் சீதையைப் பார்ப்போம்?' என்பனவற்றைச் சிந்திப்பாயாக" {என்றான் ராமன்}.(3)

இவ்வாறு பரிதாபமாக துன்புற்றுக் கொண்டிருந்த அந்த ராமனிடம், லக்ஷ்மணன் சொன்னான், "இராக்ஷசர்கள் பலரால் நிறைந்ததும், நானாவித மரங்களாலும், செடிகொடிகளாலும் மறைக்கப்பட்டதுமான இந்த ஜனஸ்தானத்தில் தேடுவதே தகும்.(4,5அ) இங்கே அடைதற்கரிய கிரிகளும் {மலைகளும்}, சுனைகளும், குகைகளும், விதவிதமானவையும், கோரமானவையும், நானாவித மிருக கணங்களைக் கொண்டவையுமான பள்ளத்தாக்குகளும், கின்னரர்களின் வசிப்பிடங்களும் {வீடுகளும்}, கந்தர்வர்களின் பவனங்களும் {மாளிகைகளும்} இருக்கின்றன.(5ஆ,6) என்னுடன் சேர்ந்து அவற்றைத் தேடுவதே உமக்குத் தகும். நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, புத்தியுடன் கூடிய உம்மைப் போன்ற மஹாத்மாக்கள், வாயு வேகத்தால் அசலங்களை {காற்றின் வேகத்தால் கலங்காத மலைகளைப்} போலக் கலக்கமடைவதில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(7,8அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும், குரோதம் நிறைந்த ராமன், லக்ஷ்மணனுடன் கூடியவனாக, தனுசில் கூர்மையான சரத்தைப் பொருத்திக் கொண்டு, சர்வ வனத்திலும் திரிந்தான்.(8ஆ,9அ) அப்போது பர்வதகூடத்திற்கு {மலைச் சிகரத்திற்கு} ஒப்பானவனும், மகாபாக்கியவானும், உத்தம துவிஜனும் {சிறந்த பறவையும்}, ரத்தம் தோய்ந்து பூமியில் கிடப்பவனுமான ஜடாயுவைக் கண்டான்.(9ஆ,10அ), கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} ஒப்பானவனைக் கண்ட ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான், "இவனே வைதேஹியான சீதையை பக்ஷித்திருக்கிறான் {உண்டிருக்கிறான்}. இதில் சந்தேகமில்லை.(10ஆ,11அ) கிருத்ர ரூபம் {கழுகின் வடிவத்தைப்} படைத்த இந்த ராக்ஷசன், விசாலாக்ஷியான சீதையை பக்ஷித்துவிட்டு {அகன்ற கண்களைக் கொண்ட சீதையை உண்டுவிட்டு} சுகமாக ஓய்ந்திருக்கிறான். கோரமானவையும், எரியும் முனைகளுடன் நேராகச் செல்லக்கூடியவையுமான பாணங்களால் இவனை வதம் செய்யப் போகிறேன்" {என்றான் ராமன்}.(11ஆ,12)

இவ்வாறு சொன்ன ராமன், குரோதத்துடன் தனுசில் க்ஷுரத்தைப் பொருத்தியபோது, சமுத்திரத்தை அந்தமாகக் கொண்ட மேதினியே {பெருங்கடலை எல்லையாகக் கொண்ட பூமியே} நடுங்கும் வகையில் அந்த கிருத்ரத்தை {கழுகை} நெருங்கிச் சென்றான்.(13) தீனமாக நுரையையும், உதிரத்தையும் கக்கிய அந்த பக்ஷி {கழுகான ஜடாயு}, தசரதாத்மஜனான அந்த ராமனிடம், தீனமான சொற்களில் {பின்வருமாறு} சொன்னான்:(14) "ஆயுஷ்மானே, ஔஷதிகளுடன் {மூலிகைகளுடன்} கூடிய மஹாவனத்தில் எவளைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ, அந்த தேவியையும் {சீதையையும்}, என் பிராணனையும் ராவணன் கவர்ந்து சென்றுவிட்டான்.(15) இராகவா, நீயும், லக்ஷ்மணனும் இல்லாதபோது, அந்த தேவியை பலவந்தமாக ராவணன் கடத்திச் செல்வதை நான் கண்டேன்[1].(16) நான் சீதையை மீட்கச் சென்றபோது, ரணத்தில் {அந்தப் போரில்} ராவணனையும், அவனது ரதத்தையும் சிதைத்து, இங்கே தரணீதலத்தில் விழச் செய்தேன்.(17) இராமா, பங்கமடைந்த இந்த தனு {வில்} அவனுடையதே; இந்தக் கவசமும் அவனுடையதே; இரணத்தில் {போரில்} பங்கமடைந்த இந்த ரதமும் அவனுடையதே.(18) என் சிறகுகளால் கொல்லப்பட்டுப் புவியில் கிடக்கும் அந்த சாரதியும் அவனுடையவனே. களைப்படைந்த என் சிறகுகள் இரண்டையும் ராவணன் கட்கத்தால் {வாளால்} வெட்டி, வைதேஹியான சீதையை எடுத்துக் கொண்டு, வானில் ஏறிப் பறந்தான். அந்த ராக்ஷசனால் ஏற்கனவே கொல்லப்பட்டவனான என்னைக் கொல்வது உனக்குத் தகாது" {என்றான் ஜடாயு}.(19,20)

[1] இதுவரை தன் மனைவியான சீதை கடத்தப்பட்டதையும், கடத்தப்பட்ட திசையையும் அறிந்திருந்த ராமன், முதன்முறையாக எவன் கடத்தினான் என்பதை இங்கேதான் அறிகிறான்.

அப்போது ராமன், தன் பிரியத்திற்குரிய சீதையைக் குறித்த கதையை அறிந்து, மஹத்தான தனுவை வைத்துவிட்டு, அந்த கிருத்ரராஜனை {கழுகு மன்னனான ஜடாயுவைத்} தழுவிக் கொண்டான்.(21) இராமன் தீரனாக இருந்தாலும் வசமில்லாமல் பூமியில் விழுந்து, இரட்டிப்பான துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாக லக்ஷ்மணனுடன் சேர்ந்து அழுதான்[2].(22) மிகச் சிரமத்துடன் {அடைதற்கரிய} தனிமையான இடத்தைத் தனியொருவனாக அடைந்தவன் {ஜடாயு} மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிடுவதைக் கண்ட ராமன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக சௌமித்ரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(23) "இராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டது, வனவாசத்தை அடைந்தது, சீதையை இழந்தது, துவிஜர் {பறவையான ஜடாயு} கொல்லப்பட்டது என இவ்வகையான என் துரதிர்ஷ்டம் பாவகனையே கூட தகித்துவிடும் {நெருப்பையே கூட எரித்துவிடும்}.(24) இப்போது சம்பூர்ணமான பெருங்கடலில் நான் பிரவேசித்தால், அந்த சரிதாம்பதியுங்கூட {ஆறுகளின் தலைவனே கூட} என் துரதிர்ஷ்டத்தால் வற்றிப் போவான்.(25) நான் அத்தகைய மஹத்தான துயரப் படுகுழியை அடைந்திருக்கிறேன். சராசரங்களுடன் கூடிய இந்த உலகத்தில் என்னைவிட பாக்கியமற்றவன் வேறொருவனும் இல்லை.(26) என் பிதாவின் நண்பரும், முதியவருமான இந்த கிருத்ர ராஜா {கழுகு மன்னன்}, என் பாக்கியத்தின் எதிர் விளைவாலேயே கொல்லப்பட்டு பூமியில் கிடக்கிறார்" {என்றான் ராமன்}.(27)

[2] உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீகக் கண்
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும்

- கம்பராமாயணம் 3496ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்

பொருள்: இராமன் ஒரு நாழிகை அளவு மூச்சற்றவனானான்; உணர்ச்சியற்று மயங்கினான் போலும் என்று ஐயங்கொண்ட தம்பி லக்ஷ்மணன் சென்று அவனைத் தழுவி மேகத்தில் இருந்து மலை அருவியாக வந்த நீரை முகத்தில் தெளித்த உடன் தாமரை கண்களைத் திறந்து மெதுவாகச் சோர்வு நீங்கி இச்சொற்களைக் கூறத் தொடங்கினான்.

இராகவன் இவ்வாறும், பலவாறும் சொல்லி, பித்ருசினேகத்தை {தந்தையிடம் காட்டக்கூடிய அன்பை} வெளிப்படுத்தும் வகையில் லக்ஷ்மணனுடன் சேர்ந்து ஜடாயுவைத் தடவினான்.(28) சிறகுகள் வெட்டப்பட்டு உதிரத்தில் நனைந்திருந்த அந்த கிருத்ரராஜனைத் தழுவிக் கொண்ட ராமன், "என் பிராணனுக்கு சமமான மைதிலி எங்கே?" என்ற சொற்களை உதிர்த்துவிட்டு பூமியில் விழுந்தான்.(29)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Wednesday, 12 April 2023

சீதையின் நிந்தனை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 53 (26)

Reproach of Sita | Aranya-Kanda-Sarga-53 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கண்டித்து, மன்றாடி, ஏற்படப் போகும் பயங்கர விளைவுகளைச் சொல்லி அச்சுறுத்திய சீதை...


Ravana abducting Sita

ஜனகாத்மஜையான மைதிலி {சீதை}, வானத்தில் உயர்ந்து ஏறுபவனை {ராவணனைக்} கண்டு, பரம கலக்கத்தையும், மஹத்தான பயத்தையும், துக்கத்தையும் அடைந்தாள்.(1) சீதை கடத்தப்பட்ட போது, சினத்தால் தாமிரம் போலான கண்களில் கண்ணீர் சிந்தி அழுதபடியே, பயங்கர கண்களைக் கொண்ட ராக்ஷசாதிபனிடம் பரிதாபகரமாக இதைச் சொன்னாள்:(2) "நீசா, ராவணா, யாருமில்லாதவளாக {என் தனிமையை} அறிந்து, என்னைத் திருடிக் கொண்டு ஓடும் உன்னுடைய இந்த கர்மத்திற்காக நீ வெட்கப்படவில்லையா?(3) துஷ்டாத்மாவே, கடத்த இச்சிக்கும் கோழையான நீயே, நிச்சயம் மிருக ரூபத்திலான {மான் வடிவிலான} மாயையால் என் பர்த்தாவை {கணவரை} அப்புறப்படுத்தி இருக்கிறாய்.(4) என்னைக் காக்கப் போராடியவரும், என் மாமனாரின் பழைய சகாவுமான கிருத்ரராஜா {கழுகு மன்னன் ஜடாயு} உண்மையில் வீழ்ந்துவிட்டார்.(5) 

இராக்ஷசாதமா {இழிந்த ராக்ஷசா}, உன் பரம வீரியத்தைக் காட்டிவிட்டாய். பெயரைக் கேட்கச் செய்த உன்னால் யுத்தத்தில் நான் வெல்லப்படவில்லை[1].(6) நீசா, பிறர் ஸ்திரீயை யாருமில்லாத போது கடத்தும் இத்தகைய கேவலமான கர்மத்தைச் செய்துவிட்டு, எவ்வாறு லஜ்ஜை {நாணம்} இல்லாதிருக்கிறாய்?(7) வலிமையெனத் தற்புகழ்ந்து கொள்ளும் உன் செயலை மனிதத் தன்மையற்றதாக, தர்மமற்றதாக, இழிவானதாகவே உலக புருஷர்கள் சொல்வார்கள் {தூற்றுவார்கள்}.(8) நீ அப்போது சொன்ன உன் வலிமைக்கும், தைரியத்திற்கும் ஐயோ. உலகில் உன் குலம் வருந்தத்தக்க இத்தகைய உன் நடத்தைக்கும் ஐயோ.(9) இவ்வாறு வேகமாக நீ ஓடுவதால் என்ன செய்துவிட முடியும்? ஒரு முஹூர்த்தம் காத்திருந்தாலும் நீ ஜீவனுடன் திரும்பிப் போக மாட்டாய்.(10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ், வி.வி.சுப்பாராவ-பி.கீர்வானி பதிப்புகளில் மேற்கண்டவாறே இருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "இராக்ஷசர்களில் இழிந்தவனே, உன் வலிமை மகத்தானதாகக் காணப்பட்டது; உன் பெயரை மட்டுமே சொல்லி என்னைக் கடத்திவந்தாயேயன்றி போரில் என்னை வெல்லவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "இராக்ஷசர்களில் இழிந்தவனே, உண்மையில் உன் மகத்தான வீரம் காணப்பட்டது. நம்பிக்கை என்று அறியப்பட்ட போரில் மட்டுமே நீ என்னை வென்றாய்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இராக்கதப்பதரே, உனது வீர்யம் மிகச் சிறந்ததாகவே காணப்படுகிறது. உன்னால் பெயரைக் கூறி, போர் செய்து நான் ஜயிக்கப்பட்டேனல்லவா" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ மிகச் சூரன் போலும்; ஆகிலும், இவ்வண்ணம் கபடம் செய்யாமல் யான் ராவணனென்றுரைத்து எதிரில் நின்று என் பர்த்தாவுடன் போர் செய்து வெற்றி கொண்டு என்னை எடுத்து வருவாயாகில், சூரனே யாகுவாய்; இவ்வண்ணம் என்னைக் களவு செய்தும் நாணுகின்றிலையே?" என்றிருக்கிறது.

பார்த்திப புத்திரர்கள் இருவரது பார்வையின் பாதையில் வந்தால், நீயும், உன் சைனியத்தாரும் ஒரு முஹூர்த்தமும் ஜீவிக்கும் சமர்த்தராக மாட்டீர்கள்[2].(11) வனத்தில் எரியும் அக்னியை ஸ்பரிசிக்கும் பறவையைப் போலவே நீயும் அவ்விருவருடைய சரங்களின் ஸ்பரிசத்தைப் பொறுத்துக் கொள்ளவல்லனல்ல.(12) இராவணா, நல்லவனாக, ஆத்மாவுக்கான பத்தியத்தை {உனக்கான நன்மையைச்} செய்து கொள்வாயாக. என்னை விடுவிப்பதே நல்லது. நீ என்னை விடவில்லையென்றால், என்னை ஒடுக்கியதில் கோபமடையும் என் பதி {கணவர் ராமர்}, தன்னுடன் பிறந்தவருடன் {லக்ஷ்மணருடன்} சேர்ந்து உனக்கான நாசத்தை விதிப்பார்.(13,14அ) நீசா, எந்த வியவஸாயத்தால் என்னை நீ பலவந்தமாகக் கடத்த இச்சிக்கிறாயோ, அந்த வியவஸாயம் உனக்கு அர்த்தமற்றதாகவே விளையும்[3].(14ஆ,15அ) தேவனுக்கு ஒப்பான பர்த்தாவானவரை {ராமரைப்} பார்க்காமல், சத்ருவின் வசப்பட்டவளாக நீண்ட காலம் பிராணனைத் தரித்திருக்க நான் துணிய மாட்டேன்.(15ஆ,16அ)

[2] பூமியின் தலைவரான தசரதரின் மகன்கள் இருவருடைய {ராமலக்ஷ்மணரின்} பார்வையில் அகப்பட்டால், நீயும், உன் சைனியத்தாரும் ஒரு முஹூர்த்த காலமும் உயிர்வாழவல்லவராக மாட்டீர்கள்.

[3] "எந்த நோக்கத்தைச் செயல்படுத்த என்னை நீ பலவந்தமாகக் கடத்த விரும்புகிறாயோ அந்த நோக்கத்திற்கான உன் செயல் பொருளற்றதாகவே முடியும்" என்பது இங்கே பொருள். தர்மாலயப் பதிப்பில், "நீ எந்த எண்ணத்தால் என்னை பலாத்காரமாய் திருடிச் செல்ல துணிந்திருக்கிறாயோ, அற்ப, உனது அந்த பிரயாசை பிரயோஜனமற்றதாக ஆகப்போகிறது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ என்ன எண்ணங்கொண்டு என்னை எடுத்துக் கொண்டுடோடுகின்றனையோ? அந்த எண்ணம் ஒருகாலும் நிறைவேறாதென வுணர்க" என்றிருக்கிறது.

ஒரு மனிதன், மிருத்யு காலத்தில் {சாகும் வேளையில்}, விபரீதமானதை சேவிப்பதைப் போலவே, உன் ஆத்மாவுக்கான பத்தியத்தையோ {உன் நலத்தையோ}, நன்மையையோ நிச்சயம் நீ கருத்தில் கொள்ள மாட்டாய்.(16ஆ,17அ) இறக்கப் போகும் மனிதர்கள் யாவரும், எது பத்தியமானதோ {நலத்தை விளைவிப்பதோ}, அதை விரும்பமாட்டார்கள். இப்போது நீ உன் கண்டத்தில் {கழுத்தில்} சுற்றியிருக்கும் காலபாசத்தைக் காணாமல் இருக்கிறாய்.(17ஆ,18அ)  தசானனா {பத்து முகத்தானே}, இந்த பய ஸ்தானத்திலும் {பயப்பட வேண்டிய இந்த இடத்திலும்} நீ பயப்படாமல் இருக்கிறாய். எனவே, ஹிரண்யமயமான மரங்களை நன்றாகப் பார்க்கிறாய் என்பது உண்மையில் வெளிப்படையாகத் தெரிகிறது.(18ஆ,19அ) இராவணா, உதிர ஓடைகள் பாயும் கோரமான வைதரணீ நதியையும், பயங்கரமான வாள்களையே இலையாகக் கொண்ட வனங்களையும் நீ பார்ப்பாய்.(19ஆ,20அ) புடம்போட்ட காஞ்சன புஷ்பத்தாலும், சிறந்த வைடூரிய இலைகளாலும், கூரிய இரும்பு முட்களாலும் நிறைந்த சால்மலியை {முள்ளிலவம் மரத்தை} நீ தரிசிப்பாய்.(20ஆ,21அ)

கருணையற்றவனே, மஹாத்மாவானவருக்கு {ராமருக்கு} இத்தகைய இழிவைச் செய்ய விரும்பிய நீ, விஷம் பருகியவனைப் போல நீண்ட காலம் நிலைத்திருக்க மாட்டாய்.(21ஆ,22அ) இராவணா, நீ தவிர்க்க முடியாத காலபாசத்தில் கட்டுண்டிருக்கிறாய். மஹாத்மாவான என் பர்த்தாவிடம் செல்லாமல் எங்கே நீ அமைதியை அடையப் போகிறாய்?(22ஆ,23அ) உடன்பிறந்தவர் இல்லாமலேயே, போரில் நிமிஷாந்தர மாத்திரத்தில், பதினான்காயிரம் ராக்ஷசர்களைக் கொன்றவரும், சர்வ அஸ்திரங்களிலும் திறம்பெற்றவரும், பலமிக்க வீரருமான அந்த ராகவர், தன் இஷ்ட பாரியையை {விருப்பத்திற்குரிய மனைவியை} அபகரித்துச் செல்லும் உன்னை கூரிய சரங்களால் எவ்வாறு கொல்லாதிருப்பார்?" {என்றாள் சீதை}.(23ஆ-25அ)

இராவணனின் விலாவில் இருந்த வைதேஹி, பயத்தாலும், சோகத்தாலும் நிறைந்த இத்தகையவற்றையும் இன்னும் கூரியவற்றையும் சொல்லி பரிதாபகரமாக அழுது புலம்பினாள்.(25ஆ,இ) பெருந்துன்பத்துடன் அழுது புலம்பி, பல்வேறு வகையில் பரிதாபகரமாகப் பேசுகிறவளும், மனம் துடித்து, உடல் நடுங்கி தீனமடைந்த நிருபாத்மஜையுமான அந்த பாமினியை {சோர்வடைந்த இளவரசியான அந்த அழகிய பெண்ணை} அந்தப் பாவி இவ்வாறே கவர்ந்து சென்றான்.(26)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Sunday, 9 April 2023

ஜடாயு ராவண யுத்தம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 51 (46)

The war between Jatayu and Ravana | Aranya-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த போர்; ராவணனின் பத்து கைகளை வெட்டிய ஜடாயு; ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்திய ராவணன்...

Ravana cuts off the wings of Jatayu

புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும், குரோதத்தால் தாமிரம் போலான கண்களுடனும் கூடிய ராக்ஷசேந்திரன் {ராவணன்}, இவ்வாறு சொல்லப்பட்டதும் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் பதகேந்திரனை {பறவைகளின் மன்னனா ஜடாயுவை} எதிர்த்து விரைந்தான்[1].(1) ககனத்தில் வாதத்தால் {வானத்தில் காற்றால்} தூண்டப்பட்ட மேகங்கள் மோதிக் கொள்வதைப் போலவே, அந்த மஹாவனத்தில் அவர்களுக்கிடையில் நடந்த அந்தப் போர் பயங்கரமானதாக இருந்தது.(2) சிறகுகளைக் கொண்ட மால்யவந்த மஹாபர்வதங்கள் இரண்டும் {மோதிக் கொண்டதைப்} போலவே, அப்போது கிருத்ரனுக்கும் {கழுக்கான ஜடாயுவுக்கும்}, ராக்ஷசனுக்கும் {ராவணனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் அற்புதமானதாக இருந்தது[2].(3)

[1] ஆங்கிலத்தில் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் பதிப்புகளிலும், தமிழில் தர்மாலயம், தாதாசாரியர் பதிப்புகளிலும் இதற்கு முன் ஒரு சுலோகம் இருக்கிறது. அதன் பொருள் பின்வருமாறு, "இவ்வாறு ஜடாயு சொன்ன நியாயத்தால் சினங்கொண்ட ராவணனின் இருபது கண்கள் ஒவ்வொன்றும் அக்னியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் தேசிராஜு ஹனுமந்தராவ், ஹரிபிரசாத் சாஸ்திரி, மன்மதநாத தத்தர், கோரக்பூர் பதிப்புகளில் இந்த சுலோகம் இல்லை.

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்ததாக நம்பப்படுகிறது" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஓர் உரையாசிரியர், இதில் ஒன்று தண்டகவனத்தில் இருந்த மால்யவந்தமென்றும், மற்றொன்று கிஷ்கிந்தையில் இருந்த மால்யவந்தமென்றும் சொல்கிறார். மற்றொரு உரையாசிரியரோ, ஒன்று தண்டகவனத்தில் இருந்ததென்றும், மற்றொருன்று மேரு மலையின் அருகில் இருந்ததென்றும் சொல்கிறார். ஆனால், இரண்டாவது மால்யவந்த மலை என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. இங்கே கவி, ஒரே மலையையே மற்றொரு மலையாக உருவகப்படுத்திக் கொண்டு, ஒரே மலையே இரு வடிவங்களை ஏற்றுப் போரிட்டுக் கொண்டால் எப்படி பயங்கரமாக இருக்கும் என்பதைச் சொல்ல வருகிறார். இஃது அவர்கள் இருவரும் துணிவிலும், பலத்திலும் சமத்தன்மையுடன் இருந்தனர் என்பதைச் சொல்வதற்காக உரைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

பிறகு அந்த மஹாபலவான் {ராவணன்}, கூரிய முனைகளைக் கொண்ட மஹாகோரமான நாளீகங்களையும், நாராசங்களையும், விகர்ணிகளையும் கிருத்ரராஜன் மீது மழையாகப் பொழிந்தான்.(4) பத்ரரதேசுவரனான அந்த கிருத்ரன் {சிறகுகள் படைத்த தேராகத் திகழும் பறவைகளின் தலைவனான அந்த கழுகானவன்} ஜடாயு, அந்த சர ஜாலங்களையும், ராவணனின் அஸ்திரங்களையும் தாங்கிக் கொண்டான்.(5) மஹாபலம் கொண்ட அந்த பதகசத்தமன் {பறவைகளில் சிறந்த ஜடாயு}, தன் கால்களின் கூரிய நகங்களால் அவனது அங்கங்களின் பல இடங்களில் காயங்களை உண்டாக்கினான்.(6) அப்போது, தன் சத்ருவை அழிக்க விரும்பிய தசக்ரீவன், மிருத்யு {யமனின்} தண்டத்திற்கு ஒப்பான கோரமான பத்து கணைகளை எடுத்தான்.(7) அந்த மஹாவீரியன், {வில்லை} பூர்ணமாக வளைத்து, நேராகச் செல்லக்கூடியவையும், கூரியவையும், கோரமானவையும், இரும்பு முள் முனைகளைக் கொண்டவையுமான அந்த பாணங்களால் கிருத்ரனை {கழுகான ஜடாயுவைத்} துளைத்தான்.(8) 

இராக்ஷசனின் ரதத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூடிய ஜானகியைக் கண்டவன் {ஜடாயு}, அந்த பாணங்களைக் குறித்துச் சிந்திக்காமல், ராக்ஷசனை {ராவணனை} நோக்கி வேகமாகப் பாய்ந்தான்.(9) மஹாதேஜஸ்வியான அந்த பதகோத்தமன் {பறவைகளில் உத்தமனான ஜடாயு}, முத்துகளாலும், மணிகளாலும் {ரத்தினங்களாலும்} அலங்கரிக்கப்பட்டதும், சரம் பொருத்தப்பட்டதுமான வில்லைத் தன் கால்களால் முறித்தான்.(10) பிறகு குரோதத்தால் மூர்ச்சித்த {மயங்கிய} ராவணன், மற்றொரு தனுவை எடுத்து, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சரங்களை மழையாகப் பொழிந்தான்.(11) அப்போது அவனது சரங்களால் சூழப்பட்ட அந்த பதகேசுவரன் {பறவைகளின் தலைவனான ஜடாயு}, கூட்டை அடைந்த பக்ஷியை {பறவையைப்} போலக் காட்சியளித்தான்.(12)

மஹாதேஜஸ்வியான அவன் {ஜடாயு}, அந்த சரஜாலத்தை {சரங்களாலான அந்த வலையைத்} தன் சிறகுகளால் உதறித் தள்ளிவிட்டு, அவனது {ராவணனின்} மஹத்தான தனுவை {வில்லைத்} தன் கால்களால் {மீண்டும்} முறித்தான்.(13) மஹாதேஜஸ்வியான அந்த பதகேசுவரன், அக்னியைப் போல ஒளிரும் ராவணனின் சராவரத்தையும் {கவசத்தையும்} தன் சிறகுகளால் தகர்த்தான்.(14) அந்த பலவான் {ஜடாயு}, காஞ்சனக் கவசங்களால் மறைக்கப்பட்டவையும், திவ்யமானவையும், பிசாச வதனத்தையும், பெரும் வேகத்தையும் கொண்டவையுமான அவனது கோவேறு கழுதைகளை சமரில் கொன்றான்.(15) ஏர்க்கால்களுடன் கூடியதும், விருப்பப்படி செல்லக்கூடியதும், பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்வதும், மணிகள் பதித்த படிக்கட்டுகளுடனும், சக்கரங்களுடனும் வடிவமைக்கப்பட்டதுமான அந்த மஹாரதத்தை நொறுக்கினான்.(16)

பூர்ண சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் வெண்குடை, வெண்சாமரங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, {அவற்றைப் பிடித்துக் கொண்டிருந்த} ராக்ஷசர்களையும் வேகமாக வீழ்த்தினான்.(17) மீண்டும், மஹாபலவானும், ஸ்ரீமானுமான அந்த பக்ஷிராஜன் {பறவைகளின் மன்னனான ஜடாயு}, அவனது {ராவணனுடைய} சாரதியின் மஹத்தான சிரத்தைத் தன் அலகால்  வேகமாகக் கொய்தான்.(18) அந்த ராவணன், தனுபங்கமடைந்து {வில் முறிந்து}, ரதம் ஒழிந்து, அசுவங்கள் கொல்லப்பட்டு, சாரதியும் கொல்லப்பட்டதும், வைதேஹியை விலாவில் பற்றியபடி பூமியில் விழுந்தான்[3].(19) வாகனம் பங்கமடைந்து விழுந்த ராவணனைக் கண்ட பூதங்கள் {உயிரினங்கள்}, "நன்று, இது நன்று" என்று சொல்லி கிருத்ரராஜனை {பறவைகளின் மன்னனான ஜடாயுவைப்} பூஜித்தன.(20) பக்ஷியூதபனான அவன் {பறவைகளின் படைத்தலைவான ஜடாயு}, முதுமையால் களைத்திருப்பதைக் கண்ட ராவணன் மகிழ்ச்சியுடன் மைதிலியைப் பற்றிக் கொண்டு மீண்டும் உயர எழுந்தான்.(21)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தச் சொற்றொடருக்கு இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். ஒன்று வில்லன் விலாவை {இடுப்பைப்} பற்றுவது போன்றது. மற்றொன்று, பக்தனைப் போல அவளைத் தன் விலாவில் {இடுப்பில்}  வைத்துக் கொள்வது. இது சீதையைத் தூக்கிய போது விராதன் கடைப்பிடித்த முறையை ஒத்திருக்கிறது" என்றிருக்கிறது. ஆரண்ய காண்டம் 2:16ல் விராதன் சீதையை விலாவில் {இடுப்பில்} வைத்துக் கொள்கிறான். அங்கே மூலத்தில் "ஸீதாம் விராத அங்ககதாம்" என்று, விராதனனின் அங்கத்தில் {விலாவில்} சீதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கே தேசிராஜு ஹனுமந்தராவ், "அங்கேந ஆதாய வைதேஹீம்" என்பதை ஆங்கிலத்தில் "he on grabbing Vaidehi by her torso" என்று மொழிபெயர்த்திருக்கிறார். தலை, கழுத்து, கைகால் உறுப்புகள் தவிர்த்த உடற்பகுதியே Torso என்றழைக்கப்படும். அவ்வாறு எடுத்துக் கொண்டே இங்கே தமிழில், "வைதேஹியை விலாவில் {இடுப்பில்} பற்றியபடி" என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. "வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர் ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் Lap என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Lap என்றால் மடி என்று பொருள். தர்மாலயப் பதிப்பில், "வைதேகிதேவியை மடியில் வைத்துக் கொண்டு பூமியில் வந்து நின்றான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பிலும், கோரக்பூர் தமிழ்ப்பதிப்பிலும் இந்தப் பொருளிலேயே இருக்கிறது. மடி என்பது மனிதரின் தொப்புளுக்குக் கீழிருந்து முன் தொடைவரையுள்ள பகுதியாகும். ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "சீதையை மார்போடு அணைத்தபடி ராவணன் தரையில் குதித்தான்" என்றிருக்கிறது.

கிருத்ரராஜனும் {கழுகுகளின் மன்னனும்}, மஹாதேஜஸ்வியுமான ஜடாயு, சாதனங்கள் அழிந்து, முழுவதும் நஷ்டமடைந்தவனும், கட்கத்தை {வாளை} மட்டுமே கொண்டவனும், ஜனகாத்மஜையை {சீதையைத்} தன் விலாவில் {இடுப்பில்} வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் உயர எழுந்தவனுமான அந்த ராவணனின் எதிரே விரைந்து சென்று {அவனைத்} தடுத்தபடியே இதைச் சொன்னான்:(22,23) "அற்ப புத்தி கொண்ட ராவணா, வஜ்ர ஸ்பரிசத்துடன் கூடிய {இடி போல் தாக்கக்கூடிய} பாணங்களைக் கொண்ட ராமனின் பாரியையான இவளை {சீதையை}, ராக்ஷசர்களின் வதத்திற்காகவே நிச்சயம் நீ கடத்திச் செல்கிறாய்.(24) தாகம் கொண்டவன் நீரைப் {பருகுவதைப்} போல, உன் மித்ரர்கள் {நண்பர்கள்}, பந்துக்கள் {உறவினர்கள்}, அமைச்சர்கள், பலம் {படை}, துணைவர்கள் ஆகியோருடன் இந்த விஷ பானத்தைப் பருகுகிறாய்.(25) அறிவற்றவர்கள், கர்மங்களின் அனுபந்தத்தை {செயல்களின் பின்விளைவை} அறியாமல் சீக்கிரம் நாசமடைவதைப் போலவே நீயும் நாசமடையப் போகிறாய்.(26) இறைச்சியுடன் கூடிய தூண்டில் முள்ளைப் பற்றிய ஜலஜத்தைப் {நீரில் பிறந்த மீனைப்} போல, வதத்திற்காக காலபாசத்தில் கட்டுண்ட நீ எங்கு சென்று அதிலிருந்து விடுபடப் போகிறாய்.(27)

இராவணா, வெல்லப்பட முடியாதவர்களும், காகுத்ஸ்தர்களுமான ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, இந்த ஆசிரமத்தின் மீது நீ தொடுத்த தாக்குதலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.(28) கோழையைப் போல நீ உலகத்தால் கண்டிக்கப்படும் கர்மத்தை செய்தாய். திருடர்கள் செல்லும் மார்க்கம் வீரர்களால் ஒரு போதும் சேவிக்கப்படுவதில்லை.(29) இராவணா, நீ சூரனாக இருந்தால், யுத்தம் செய்ய ஒரு முஹூர்த்தம் காத்திருப்பாயாக. பூர்வத்தில் கரனுக்கு நேர்ந்ததைப் போலக் கொல்லப்பட்டு பூமியில் புரள்வாய்[4].(30) ஒரு புருஷன் மரண காலத்தில் ஆத்மநாசத்தின் {தன்னழிவின்} பொருட்டு எந்தக் கர்மத்தைச் செய்வானோ அதர்மியமான அந்தக் கர்மத்தையே நீ செய்திருக்கிறாய்.(31) எந்தக் கர்மத்தின் அனுபந்தம் {பின்விளைவு} பாபமாக இருக்குமோ அதை லோகாதிபதியான பகவான் ஸ்வயம்பூவாகவே {பிரம்மனாகவே} இருந்தாலும் எவன்தான் செய்வான்?" {என்றான் ஜடாயு}.(32)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "3-50-23ம் சுலோகம் அப்படியே திரும்ப உரைக்கப்படுகிறது. இத்தகைய உரைகள் வசனங்களுக்கான பற்றாக்குறையாலோ, சொற்கோர்வைகளுக்கான பற்றாக்குறையாலோ நேரிடவில்லை. ஒரு பாத்திரம், ஒத்த சொற்களில் தன் நிலைப்பாட்டை உறுதிபடச் சொல்வதற்காக இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.

வீரியவானான ஜடாயு இந்த சுபமான வாக்கியங்களைச் சொல்லிவிட்டு, ராக்ஷசனான அந்த தசக்ரீவனின் பிருஷ்டத்தில் {பின்புறத்தில்} உக்கிரமாகப் பாய்ந்தான்.(33) அவனை {ராவணனைப்} பற்றி ஏறி, ஒரு கஜாரோஹன், துஷ்ட வாரணத்தை {யானையின் மேலேறும் பாகன், கெட்ட யானையை} எப்படிப் கட்டுப்படுத்துவானோ அதே போலத் தன் கூரிய நகங்களால் எங்கும் துளைத்தெடுத்தான்.(34) அவனது பிருஷ்டத்தை அலகால் கொத்தி, நகங்களால் பிளந்தான். நகங்கள், சிறகுகள், அலகு போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவனது கேசத்தையும் பிய்த்தெறிந்தான்.(35) கிருத்ர ராஜனால் மீண்டும் மீண்டும் இவ்வாறு எரிச்சலடைந்தவனின் {ராவணனின்} உதடுகள் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நடுங்கின. கடும் நடுக்கத்துடன் கூடிய அந்த ராக்ஷசன், தன் வலப்பக்கம் திரும்பினான்.(36) குரோதத்தில் ஆழ்ந்த ராவணன், இடது விலாவில் வைதேஹியை உறுதியாகப் பற்றிக் கொண்டு, வேகமாக {பின்புறமிருந்து கொத்திக் கொண்டிருந்த} ஜடாயுவை {தன் வலது} உள்ளங்கையால் அடித்தான்.(37) 

அப்போது, ககாதிபனும் {பறவைகளின் தலைவனும்}, அரிந்தமனுமான {பகைவரை அழிப்பவனுமான} ஜடாயு, அவனைத் {ராவணனைத்} தாண்டி வந்து அலகால் அவனது இடது கைகள் பத்தையும் துண்டித்தெறிந்தான்.(38) கைகள் வெட்டப்பட்டவனுக்கு, வல்மீகத்திலிருந்து {எறும்புப்புற்றில் இருந்து} விஷ ஜுவாலைகளை கக்கியபடியே வெளிவரும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல உடனே கைகள் முளைத்தன.(39)  அப்போது வீரியவனான தசக்ரீவன், சீதையை விட்டுவிட்டு, தன் முஷ்டிகளாலும், கால்களாலும் கிருத்ரராஜனை குரோதத்துடன் தாக்கினான்.(40) பிறகு, ராக்ஷசர்களில் முக்கியனும், பக்ஷிகளில் முதன்மையானவனுமான அந்த ஒப்பற்ற வீரர்கள் இருவரும் ஒரு முஹூர்த்தம் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(41) கட்கத்தை {வாளை} உயர்த்திய அந்த ராவணன், ராமனுக்காகப் போராடிக் கொண்டிருந்தவனது {ஜடாயுவின்} சிறகுகளையும், கால்களையும், விலாப்பக்கங்களையும் வெட்டினான்.(42) ரௌத்திர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசனால் சிறகுகள் வெட்டப்பட்ட அந்த மஹா கிருத்ரன் {கழுகான ஜடாயு}, உடனே அற்ப ஜீவிதத்துடன் {குற்றுயிருடன்} கூடியவனாக தரணியில் விழுந்தான்[5][6].(43) 

[5] தேசிராஜு ஹனுந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜடாயுவின் பாத்திரம், மரண காலத்தில் ராமனுக்கு செய்தியைச் சொல்ல அறிமுகப்படுத்தப்படும் பாத்திரமல்ல. 3-14-34ல் "நீ விரும்பினால் உன் வசிப்பிடத்தில் சஹாயனாக இருப்பேன். கடப்பதற்கரிய இந்த காந்தாரம் {கானகம்} மிருகங்களாலும், ராக்ஷசர்களாலும் சேவிக்கப்படுகிறது. தாதா {ஐயா}, லக்ஷ்மணனுடன் நீ வெளியே செல்லும்போது சீதையை நான் ரக்ஷிப்பேன்" என்று ராமனை முதன்முதலாகச் சந்தித்தபோது சொன்னான் ஜடாயு. அந்த உறுதிமொழியை இங்கே தயக்கமின்றி நிறைவேற்றுகிறான். இந்த தன்னலமற்ற தொண்டும், ராவணனினடம் அவன் கூறிய அறிவுரைகளும் நிச்சயம் முன்மாதிரியாகத் திகழக்கூடியவை. இதுவே தாஸ்ய பக்தி என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜடாயு நமக்கொரு பாடத்தைக் கற்பிக்கிறான்" என்றிருக்கிறது.

[6] வலியின்தலை தோற்றிலன் மாற்ற 
அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும்
வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் 
விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஒர் 
குன்றின் வீழ்ந்தான்.

- கம்பராமாயணம் 3444ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்

பொருள்: தடுத்தற்கரிய தெய்வ வாளால், எவரது தலையும் அழியும் என்பதல்லாமல், வாழ்க்கை நாளும் குறைவுபடும் என்பதால், யாருக்கும் வலிமையில் தோற்காத ஜடாயு, தேவர் தலைவன் வஜ்ரத்தை வீச சிறகு இழந்து விழுந்த மலையைப் போல விழுந்தான்.

வைதேஹி, பூமியில் விழுந்து, ரத்தத்தில் நனைந்து கொண்டிருந்த அந்த ஜடாயுவைக் கண்டு துக்கமடைந்து, சொந்த பந்துவிடம் {உறவினரிடம் விரைவதைப்} போல அவனை நோக்கி ஓடினாள்.(44) இலங்காதிபதி {ராவணன்}, நீல மேகத்திற்கு ஒப்பாக ஒளிர்ந்தவனும், மிக வெளுத்த மார்பைக் கொண்டவனும், வீரமிக்கவனுமான அந்த ஜடாயுவை சாந்தமடைந்த காட்டுத் தீயைப் போலப் பிருத்வியில் கண்டான்.(45) அப்போது சசியைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்டவளும், ஜனகாத்மஜையுமான சீதை, ராவணனின் வேகத்தில் அடங்கி மஹீதலத்தில் விழுந்து கிடக்கும் அந்த பத்ரரதனை {சிறகுகள் படைத்த ரதமான ஜடாயுவை} மீண்டும் மீண்டும் எடுத்து {தழுவி} அழுது கொண்டிருந்தாள்.(46)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Saturday, 8 April 2023

விட்டு ஏகுதி | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 50 (28)

Leave and go | Aranya-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைத் திருப்பி அனுப்புமாறு ராவணனிடம் மன்றாடிய ஜடாயு...

Ravana and Jatayu

தூங்கிக் கொண்டிருந்த ஜடாயு, அந்த சப்தத்தைக் கேட்ட பிறகு, சீக்கிரம் பார்வையைச் செலுத்தி, ராவணனையும், வைதேஹியையும் கண்டான்.(1) அப்போது பர்வத சிருங்கம் {மலைச்சிகரம்} போல் ஒளிர்ந்து கொண்டிருந்தவனும், கூரிய அலகுடன் கூடியவனும், வனஸ்பதியில் {ஆல் / அரச மரத்தில்} அமர்ந்திருக்கும் உத்தம பறவையுமான அந்த ஸ்ரீமான், இந்த நற்சொற்களைச் சொன்னான்:(2) "சகோதரா[1], தசக்ரீவா, இப்போது  நீ செய்யும் நிந்திக்கத்தக்க செயல் உனக்குத் தகாது. நிறைவான தர்மத்தைப் பின்பற்றுகிறவனும், சத்திய விரதனுமான நான், ஜடாயு என்ற பெயரில் அறியப்படும் மஹாபலவானான கிருத்ரராஜா {கழுகுகளின் மன்னன்} ஆவேன்.(3,4அ) தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பாக உலகத்தாரின் நன்மையில் ஈடுபடும் சர்வலோக ராஜா ஆவான்.(4ஆ,5அ) சீதை என்ற பெயரைக் கொண்ட எவளை, நீ இப்போது கவர்ந்து செல்ல இச்சிக்கிறாயோ, அந்தச் சிறந்த பெண்மணி, புகழ்மிக்க அந்த லோகநாதனின் தர்மபத்தினியாவாள்.(5ஆ,6அ)

[1] இந்த சுலோகத்தில் "பிராதா {சகோதரா}" என்று தொடங்கும் இந்த இரண்டாம் அடி, அதாவது, "சகோதரா, இப்போது  நீ செய்யும் நிந்திக்கத்தக்க செயல் உனக்குத் தகாது" என்ற அடி முழுமையாக தேசிராஜுஹனுமந்தராவ், மன்மதநாததத்தர் ஆகிய இரண்டு பதிப்புகளைத் தவிர ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் உள்ளிட்ட வேறு ஆங்கிலப் பதிப்புகள் எதனிலும் இல்லை. தமிழில் எந்தப் பதிப்பிலும் இல்லை. பிராதா என்பதற்கு உடன்பிறந்தவன் என்பது பொருள். அஃது இங்கே பொருந்துவதாகத் தெரியவில்லை.

தர்மத்தைக் கடைப்பிடிப்பவனான ஒரு ராஜா, பரதாரங்களை {மாற்றான் மனைவியரை} எவ்வாறு தீண்டுவான்? மஹாபலவானே, விசேஷமாக ராஜதாரமானவள் ரக்ஷிக்கத்தகுந்தவளாவாள் {பாதுகாக்கப்பட வேண்டியவளாவாள்}.(6ஆ,7அ) நீச கதியை அடைந்து பரதாரத்தை {பிறன் மனைவியைத்} தீண்டுவதிலிருந்து பின்வாங்குவாயாக. பிறரால் நிந்திக்கப்படும் செயலை ஒரு தீரன் செய்யமாட்டான். தன் தாரங்களைப் {பிறன் தீண்டாமல் காப்பதைப்} போலவே அந்நியரின் தாரங்களையும் தீண்டாமல் ரக்ஷிக்க வேண்டும்.(7ஆ,8) பௌலஸ்தியநந்தனா {புலஸ்தியரின் வழித்தோன்றல்களை ஆனந்தங் கொள்ளச் செய்பவனே}, சாஸ்திரங்களை அறிந்த சிஷ்டர்கள் {அறிஞர்கள்}, அர்த்த, காம, தர்மங்களில் {செல்வத்தையும், இன்பங்களையும், அறத்தையும் அடைவதில்} ராஜநெறிகளின்படியே நடந்து கொள்வார்கள்.(9) தர்மம் {அறம்}, காமம் {இன்பங்கள்}, திரவியங்கள் {செல்வங்கள்} ஆகியவற்றின் உத்தமக் கொள்ளிடம் ராஜனே ஆவான். சுபத்திலும் {புண்ணியத்திலும்}, பாபத்திலும் ராஜனே தர்மத்தின் மூலமாவான் {வேராவான்}.(10) 

இராக்ஷசர்களில் சிறந்தவனே, பாப சுபாவத்தையும், சபலத்தையும் கொண்டவனும், தீய செயல்களைச் செய்பவனுமான நீ, விமானத்தைப் போன்ற ஐசுவரியத்தை எவ்வாறு அடைந்தாய்?(11) எவனுடைய சுபாவத்தையும் அவனிடம் அழிக்க விரும்புவது சாத்தியமில்லை. துஷ்டர்களின் ஆலயத்தில் ஆரியம் {வீட்டில் செழிப்பானது / இதயத்தில் நல்லெண்ணமானது} நீண்டகாலம் நிலைப்பதில்லை.(12) மஹாபலம்பொருந்தியவனும், தர்மாத்மாவுமான ராமன், உன் விஷயத்திலோ {நாட்டிலோ}, புரத்திலோ அபராதம் {தீங்கு} செய்யாத போது, அவனுக்கு எவ்வாறு நீ அபராதம் {தீமை} செய்கிறாய்?(13) சிரமமின்றி எதையும் செய்யும் ராமன், சூர்ப்பணகைக்காக அத்துமீறிய ஜனஸ்தானத்தின் கரனை பூர்வத்தில் எளிதாகக் கொன்றான்.(14) லோகநாதனான எவனுடைய பாரியாளை நீ கவர்ந்து செல்கிறாயோ அந்த ராமன் செய்த அத்துமீறல் என்ன? உள்ளபடியே நீ சொல்வாயாக.(15)

சீக்கிரம் வைதேஹியை விட்டுவிடுவாயாக. இந்திரனின் அசனி {இடி} விருத்திரனை  {கொன்றதைப்} போல, {ராமனின்} தஹிக்கும் கோரப் பார்வை உன்னை எரிக்காதிருக்கட்டும்[2].(16) கடும் விஷமிக்க சர்ப்பத்தை வஸ்திரத்தில் பொதிந்திருப்பதை உணராமலும், கழுத்தில் பூட்டப்பட்ட காலபாசத்தை {யமனின் பாசக்கயிற்றை} பார்க்காமலும் இருக்கிறாய்.(17) சௌம்யா, எது ஒரு நரனை நசுக்காதோ அந்த பாரத்தைச் சுமக்கலாம். எவ்வளவு அன்னத்தை செரிக்கமுடியுமோ அவ்வளவு அன்னத்தையே புசிக்கலாம்.(18) எந்தச் செயல்பாடு தர்மத்தையோ, கீர்த்தியையோ, பெருமையையோ ஈட்டாமல் சரீரத் துன்பத்தைத் தருமோ அந்தக் கர்மத்தை நிச்சயம் எவனும் செய்யமாட்டான்.(19)

[2] கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால் விளிகின்றிலையால்

கம்பராமாயணம் 3410ம் பாடல்

பொருள்: சுற்றத்தாருடன் கெட்டுப் போனாய். உன் வாழ்வு முழுவதையும் எரித்துக் கொண்டாய். ஏன் தொடங்கினாய்? இறந்தாய் என்று எண்ணிக் கொண்டு பத்தினியை விட்டு சென்றால் நீ இறக்கமாட்டாய்.

இராவணா, நான் பிறந்து அறுபதாயிரம் வருஷங்களாக, பித்ரு பிதாமஹர்களின் {பூட்டன், பாட்டன் வழியாக வந்த} ராஜ்ஜியத்தை முறைப்படி அனுஷ்டித்து {பரிபாலித்து} வருகிறேன்.(20) நான் முதியவன், நீ இளைஞன். இரதத்தில் கவசத்துடனும், சரங்களுடனும் கூடிய தன்வியாக {வில்லாளியாக} இருந்தாலும் வைதேஹியை எடுத்துக் கொண்டு நீ குசலமாக {நலத்துடன்} செல்ல முடியாது.(21) தகுதிக்கான நியாயம் பேசுபவர்களுக்கு ஹேதுவாக {மாற்ற முடியாத} உறுதிமிக்க வேத சுருதியைப் போல உன்னால் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வைதேஹியை பலவந்தமாகக் கடத்திச் செல்ல முடியாது.(22)

இராவணா, நீ சூரனாக இருந்தால், யுத்தம் செய்ய ஒரு முஹூர்த்தம் காத்திருப்பாயாக. பூர்வத்தில் கரனுக்கு நேர்ந்ததைப் போலக் கொல்லப்பட்டு பூமியில் புரள்வாய்.(23) எவன் எப்போதும் போரில் தைத்திய, தானவர்களைக் கொல்வானோ, அந்த மரவுரியுடுத்திய ராமன், வெகு சீக்கிரத்தில் உன்னை யுத்தத்தில் வதம் செய்வான்.(24) அந்த நிருபாத்மஜர்கள் {ராஜபுத்திரர்கள்} தூரம் சென்றிருக்கையில், நான் செய்வதற்கு சாத்தியமானதைச் செய்வேன். நீசனே, அவர்களிடம் அச்சம் கொண்ட நீ சீக்கிரம் நாசமடைவாய். அதில் சந்தேகமில்லை.(25) 

நான் ஜீவித்திருக்கும் வரை, மங்கலமானவளும், கமலபத்ராக்ஷியும் {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும்}, ராமனின் பிரிய மஹிஷியுமான இந்த சீதையை நீ கடத்திச் செல்ல இயலாது.(26) நான் என் ஜீவிதத்தை {உயிரைக்} கொடுத்தாவது, மஹாத்மாவான அந்த ராமனுக்கும், தசரதனுக்கும் பிரியமான காரியத்தை அவசியம் செய்வேன்.(27) தசக்ரீவா, ஒரு முஹூர்த்தம் நில். நிற்பாயாக. இராவணா, பார். நிசாசரா {இரவுலாவியே}, பிராணன் உள்ளவரை யுத்தமெனும் ஆதித்யத்தை {விருந்தோம்பலை} நான் தருவேன். தண்டில் பழுத்த பழத்தைப் போல உத்தம ரதத்தில் இருக்கும் உன்னைக் கொய்வேன்" {என்றான் ஜடாயு}.(28)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Wednesday, 5 April 2023

சீதா அபஹரணம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 49 (40)

Abduction of Sita | Aranya-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் தன் தேரில் சீதையைக் கடத்திச் சென்றது; கதறி, அழுது புலம்பிய சீதை; தான் கடத்தப்பட்டதை ராமனிடம் தெரிவிக்க ஜடாயுவிடம் கேட்டுக் கொண்டது...

Ravana glides to abduct Sita

பிரதாபவானான தசக்ரீவன் {பத்து கழுத்து ராவணன்}, சீதையின் சொற்களைக் கேட்டு உள்ளங்கைகளைத் தட்டி, மஹத்தான பேருடலை ஏற்றான்[1].(1) வாக்கிய கோவிதனான அவன் {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் திறன்மிக்கவனான ராவணன்}, மீண்டும் இந்த வாக்கியங்களைச் சொன்னான், "உன்மத்தம் கொண்ட {புத்தி சிதறியவளான} நீ, என் வீரியத்தையும், பராக்கிரமத்தையும் கேட்டாயில்லை என்றே நினைக்கிறேன்.(2) அம்பரத்தில் நின்று புஜங்களால் மேதினியை வஹிப்பேன் {அந்தரத்தில் நின்று கைகளால் பூமியைச் சுமப்பேன்}; சமுத்திரத்தைப் பருகுவேன்; ரணத்தில் {போரில்} நின்று மிருத்யுவையே {மரணதேவனையே} கொல்வேன்.(3) கூரிய சரங்களால் அர்க்கனை {சூரியனை} மறைப்பேன், மஹீதலத்தைப் பிளப்பேன். உன்மத்தம் கொண்டவளே {புத்தி சிதறியவளே}, காமத்தை நிறைவேற்றும் காமரூபியான பதியாக {ஆசையை நிறைவேற்றுபவனும், ஆசைப்பட்ட வடிவத்தை ஏற்கவல்லவனுமான கணவனாக} என்னைப் பார்ப்பாயாக" {என்றான் ராவணன்}.(4)

[1] கைத்தட்டி மாயங்களை நிகழ்த்தும் பழைய திரைப்பட "மாயாவிகளுக்கு" இந்த சுலோகத்தில் வரும் ராவணனே ஆதியாக இருக்க வேண்டும். கைத்தட்டியவுடன் ரூபம் மாறுகிறான்.

குரோதத்துடன் இவ்வாறு சொன்ன ராவணனின், சிகை பிரகாசித்தது; கரியனவாக இருந்த கடைக்கண்கள் சிவப்பாக மாறின.(5) வைஷ்ரவணானுஜனான {குபேரனின் தம்பியான} அந்த ராவணன், உடனே அந்த சௌம்ய {மென்மையான பிராமண} ரூபத்தைக் கைவிட்டு கடுமையான சொந்த ரூபமான கால ரூபத்தை ஏற்றான்.(6) மஹத்தான குரோதத்தை அடைந்து, ரத்தம் போன்ற நயனங்களுடன் {கண்களுடன்} கூடிய ஸ்ரீமானும், புடம்போட்ட காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், நீல மேகத்தைப் போல ஒளிர்பவனுமான அந்த க்ஷணதாசரன் {இரவுலாவி}, பத்து முகங்களுடனும், இருபது புஜங்களுடனும் கூடியவனாக மாறினான்.(7,8அ) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், {நாடோடி துறவியின்} பரிவ்ராஜகத் தோற்றத்தைத் துறந்து, சுயரூபத்தை அப்போது வெளிப்படுத்தினான். செவ்வாடை உடுத்தியிருந்த அந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்}, ஸ்திரீரத்தினமான மைதிலியைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான்.(8ஆ,9) 

அந்த ராவணன், வெளுப்பில்லாத {கருத்து அடர்ந்த} கேசநுனிகளைக் கொண்டவளும், பாஸ்கரனின் பிரபையை {சூரியனின் ஒளியைப்} போன்ற வஸ்திர ஆபரணங்களைத் தரித்தவளுமான அந்த மைதிலியிடம் {பின்வருமாறு} பேசினான்:(10) "அழகிய இடையைக் கொண்டவளே, மூன்று உலகங்களிலும் புகழுடைய பர்த்தாவை நீ இச்சித்தால், என்னை அடைவாயாக. நான் உனக்குப் பொருத்தமான பதியாக இருப்பேன்.(11) பத்ரே {நற்பேறுள்ள பெண்ணே}, நீ நீண்ட காலம் என்னுடன் இணக்கமாக இருப்பாயாக. நான் உனக்கு சிலாகிக்கத்தகுந்த பதியாக இருப்பேன். நான் ஒருபோதும் உனக்குப் பிரியமற்றதைச் செய்ய மாட்டேன். மானுஷ பாவத்தை {இயல்பைக்} கைவிட்டு என் பாவத்திற்குத் திரும்புவாயாக.(12,13அ) மூடே {மூடப்பெண்ணே}, பண்டிதமானினியே {பண்டிதையாக உன்னைக் கருதிக் கொள்பவளே}, துர்மதியைக் கொண்டவனும், ஸ்திரீயின் பேச்சைக் கேட்டுத் தன் நட்பு ஜனங்களையும், ராஜ்ஜியத்தையும் விட்டு, காட்டுவிலங்குகள் திரியும் இந்த வனத்தில் வசிக்க ராஜ்ஜியத்திலிருந்து வீழ்ந்து, தன் நோக்கம் நிறைவேறாதவன் எவனோ அந்த அற்ப ஆயுள் கொண்ட ராமனை {அவனிடமுள்ள} எந்த குணங்களினால் பின்தொடர்கிறாய்?" {என்று கேட்டான் ராவணன்}(13ஆ-15அ)

காம மோஹிதமடைந்த துஷ்டாத்மாவான ராக்ஷசன் ராவணன், இந்த வாக்கியங்களைச் சொல்லி பிரியத்துடன் மைதிலியிடம் பிரியவாதம் செய்துவிட்டு, அவளை நெருங்கி வந்து, ஆகாயத்தில் புதன் ரோஹிணியை {பீடிப்பதைப்} போல சீதையைப் பற்றினான்.(15ஆ,16) அவன், பத்மங்களைப் போன்ற கண்களைக் கொண்ட சீதையின் கூந்தலை இடது கரத்தாலும், தொடைகளை வலது கரத்தாலும் பற்றித் தூக்கினான்.(17) மிருத்யுவுக்கு {யமனுக்கு} ஒப்பான கூரிய பற்களைக் கொண்டவனும், மஹாபுஜனும் {பெரும் தோள்களைக் கொண்டவனும்}, கிரி சிருங்கத்தை {மலைச்சிகரத்தைப்} போல ஒளிர்பவனுமான அவனைக் கண்டு வன தேவதைகளும் பயந்து ஓடினர்.(18) 

{அப்போது}, மாயாமயமானதும், திவ்யமானதும், கோவேறு கழுதைகள் பூட்டப்பெற்றதும், கழுதைகளின் ஒலியுடன் கூடியதும், பொன்சக்கரங்களைக் கொண்டதுமான ராவணனின் மஹாரதம் முன்னே தோன்றியது.(19) பிறகு அந்தப் பெருங்குரல் படைத்தவன் {ராவணன்}, கடும் வாக்கியங்களால் அந்த வைதேஹியை மிரட்டிக் கொண்டே {அவளது} இடுப்பைப் பிடித்துத் தூக்கி அந்த ரதத்தில் ஏறினான்.(20) இராவணனால் கைப்பற்றப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான அந்த சீதை, துக்கத்துடன் கூடியவளாக, வனத்தில் தூரத்தில் இருந்த ராமனை நினைத்து "இராமரே" என்று கதறினாள்.(21) அப்போது, காமத்தால் பீடிக்கப்பட்டவனான அந்த ராவணன், விருப்பமற்ற பன்னகேந்திரனின் {பாம்புகளின் தலைவனுடைய} மனைவியைப் போலத் துடித்துக் கொண்டிருந்த அவளை தூக்கிக் கொண்டு உயரக் கிளம்பினான்[2].(22) 

[2] அண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
தீண்டான் அயன் மேல் உரை சிந்தைசெயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள்வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்
கொண்டான் உயர் தேர்மிசை கோல் வளையாள்
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால்
மண்தான் உறும் மின்னின் மயங்கினளால்
விண்தான் வழியா எழுவான் விரைவான்

- கம்பராமாயணம் 3390, 3391ம் பாடல்கள், இராவணன் சூழ்ச்சிப் படலம்

பொருள்: அப்போது அங்கே அந்தத் தீயவன் {இராவணன்} அணிகலன்கள் அணிந்தவளை {சீதையைத்} தீண்டாமல், பிரம்மன் முன்னுரைத்த சாபத்தை சிந்தையில் கொண்டு, தூண் என்றே சொல்லும்படியான தன் தோள் வலிமையால், {சீதை இருந்த} பூமியின் கீழேயும் பக்கங்களிலும் என ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.{3390} உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான். அழகிய வளையல் அணிந்தவள் {சீதை} அதைக் கண்டாள். தன்னுடைய ஆருயிரைக் கண்டாளில்லை. மேகத்தைவிட்டு தரையில் விழுந்த மின்னலைப் போல மயங்கினாள். அப்போது விண் வழியே அவன் {ராவணன்} எழுந்து விரைந்து சென்றான்.{3391} அதாவது கம்பராமாயணத்தில் ராவணன் சீதையைத் தன் கைகளால் தீண்டாமல் பூமியோடு பெயர்த்தெடுத்துச் செல்கிறான்.

அந்த ராக்ஷசேந்திரன், இவ்வாறு அவளை {சீதையைக்} கவர்ந்து ஆகாயத்தில் எழுந்தபோது, துக்கத்துடன் உள்ளங்கலங்கி பைத்தியம் போல் வெறி கொண்டவளாக {பின்வருமாறு} கதறினாள்:(23) "மஹாபாஹுவே, குரு சித்தத்தைத் திளைக்கச் செய்பவரே {பெரியோரை இதயம் மகிழச் செய்பவரே}, ஹா லக்ஷ்மணரே, காமரூபியான ராக்ஷசன் அபகரிப்பதை {விரும்பிய வடிவை ஏற்கவல்ல இந்த ராட்சசன் என்னைக் கவர்ந்து செல்வதை} அறியமாட்டீரா?(24) ஜீவிதத்தையும், சுகத்தையும், அர்த்தங்களையும் {செல்வங்களையும்} தர்மத்திற்கு ஏதுவாக துறப்பவரே, ராகவரே, இந்த அதர்மனால் கவர்ந்து செல்லப்படும் என்னை நீர் பார்க்கவில்லையா?(25) பரந்தபரே {பகைவரை எரிப்பவரே}, அடங்காதவரை அடக்குபவரான நீர் இவ்விதம் பாபம் இழைக்கும் ராவணனை ஏன் கொல்லாமலிருக்கிறீர்?(26) அடங்காத {ஆணவச்} செயல்களுக்கான பலன் உடனே தெரியாது. பயிர் {விளைந்த பிறகே} பக்குவப்படுத்தப்படுவதை {சமைக்கப்படுவதைப்} போல இதில் காலமும் ஓர் அங்கமாகிறது {காரணமாகிறது}.(27) 

காலத்தால் புத்தி கெட்டு இந்தச் செயலைச் செய்யும் நீ, ஜீவிதத்திற்கு முடிவை விளைவிக்கும் கோரமான விசனத்தை {துன்பத்தை} ராமரால்  அடைவாய்.(28) தர்மத்தையே காமுறும் {அறத்தில் ஆசையுள்ள} புகழ்பெற்றவரின் தர்ம பத்தினியான நான் கடத்தப்படுகிறேன், ஐயோ, இதோ பந்துக்களுடன் கூடிய கைகேயியின் ஆசை நிறைவேறுகிறது.(29)  ஜனஸ்தானத்தின் புஷ்பித்த கர்ணீகாரங்களே {கோங்கு மரங்களே}, உங்களை வேண்டுகிறேன், "ராவணன் சீதையை அபகரித்தான்" என்று சீக்கிரம் ராமரிடம் சொல்வீராக[3].(30) ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, சாரசங்களால் {நாரைகளால்} ஒலிக்கப்பெறும் கோதாவரி நதியே, உன்னை வணங்குகிறேன், "ராவணன் சீதையை அபகரித்துச் செல்கிறான்" என்று நீ சீக்கிரம் ராமரிடம் சொல்வாயாக[4].(31) 

[3] ஆங்கிலத்தில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும், தமிழில் தாதாசாரியர் பதிப்பிலும், இதற்குப் பின் ஓர் அதிக சுலோகம் வருகிறது. அதன் பொருள் பின்வருமாறு: "மால்யவந்த சிகரமே, பிரஸ்ரவண கிரியே நான் உங்களை வணங்குகிறேன், "ராவணன், சீதையை அபகரித்துச் செல்கிறான்" என நீங்கள் சீக்கிரம் ராமரிடம் சொல்லுங்கள்" என்றிருக்கிறது. 

[4] கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய்
ஓதாது உணர்வாருழை ஓடினை போய்
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ

- கம்பராமாயணம் 3396ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப் படலம்

பொருள்: "கோதாவரியே, குளிர்ந்தவளே, இளகும் இயல்புடையவளே, மாதாவைப் போன்றவளே, தெளிந்த மனம் கொண்டவளே, நூல்கள் ஓதாமலே எல்லாம் உணர்ந்தவரிடம் {ராமரிடம்} ஓடியே போய் எனக்கு நேர்ந்ததை நீ தான் சொல்ல மாட்டாயா?" {என்றாள் சீதை}.

விதவிதமான மரங்களுடன் கூடிய இந்த வனத்தில் திரியும் தைவதங்கள் யாவரோ அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன் {வனதேவதைகளே நான் உங்களை வணங்குகிறேன்}, நான் அபகரிக்கப்பட்டதை என் பர்த்தாவிடம் {கணவரிடம்} சொல்வீராக.(32) இங்கே வசித்து வரும் சிற்றுயிர்கள் அனைத்தையும், மிருக, பக்ஷி கணங்களையும் நான் சரணடைகிறேன் {தஞ்சமடைகிறேன்}.(33) பிராணனைவிட மதிப்புமிக்கவள் கடத்தப்பட்டாள், பிரியமானவளும், ஆதரவற்றவளுமான சீதை ராவணனால் அபகரிக்கப்பட்டாள் என்பதை என் பர்த்தாவிடம் {கணவரிடம்} சொல்வீராக.(34) வைவஸ்வதனே {மரணதேவனான யமனே} என்னைக் கடத்தினாலும் மஹாபலம் பொருந்திய அந்த மஹாபாஹு {ராமர்} அறிந்தால், அங்கிருந்தும் பராக்கிரமத்துடன் மீட்பார்" {என்றாள் சீதை}.(35)

அப்போது பரிதாபகரமான சொற்களில் அழுது புலம்பிக் கொண்டிருந்த அந்த அகன்ற விழியாள், வனஸ்பதியில்[4] அமர்ந்திருக்கும் கிரிதரனை {கழுகான ஜடாயுவைக்} கண்டாள்.(36) இராவணன் வசமிருந்தவளும், மெல்லிடையாளும், பயத்தால் பீடிக்கப்பட்டவளுமான அவள் {சீதை}, அவனை {ஜடாயுவைக்} கண்டதும் துக்கத்துடன் தழுதழுத்த குரலில் {பின்வருமாறு சொல்லி} அலறினாள்:(37) "ஆரியரே {மதிப்புமிக்கவரே}, ஜடாயுவே, பாப கர்மங்களைச் செய்யும் இந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்}, பரிதாபத்திற்குரியவளும், அநாதையுமான {நாதனற்றவளுமான} என்னைக் கடத்திச் செல்வதைப் பார்ப்பீராக.(38) குரூரனும், வலிமைமிக்கவனும், ஆயுத வெற்றியில் பிரகாசிப்பவனும், துர்மதியாளனுமான இந்த நிசாசரனை {இரவுலாவியை} நீர் தடுக்கும் சக்தரல்லர்.(39) ஜடாயுவே, நான் கடத்தப்படுவதில் உள்ளபடியே நடக்கும் அனைத்திலும் எதையும் விட்டுவிடாமல் முழுமையாக ராமரிடமும், லக்ஷ்மணரிடமும் சொல்வீராக" {என்றாள் சீதை}[5].(40)

[4] வனஸ்பதி என்பதற்கு, காட்டின் தலைவன் என்றும் பூக்காமல் காய்க்கும் மரம் என்று இரண்டு பொருள்கள் சொல்லப்படுகின்றன. இந்தச் சொல் {மரம்} ஏற்கனவே பாலகாண்டம் 52:5, அயோத்தியா காண்டம் 52:102, அயோத்தியா காண்டம் 55:26 ஆகிய இடங்களில் இருக்கிறது. அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் பூவாமல் காய்ப்பவையே. வனஸ்பதி என்பதற்கு காடுகளின் தலைவன் என்றும் பொருள் இருப்பதால் இஃது ஆல மரமாகவும் இருக்கலாம். இல்லை ஒருவேளை மரங்களின் மன்னன் என்று அழைக்கப்படும் அரச மரமாகவும் இருக்கலாம். 

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுள்ளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே 

- நல்வழி - ஔவையார்

பொருள்: பூவாமல் காய்க்கும் மரங்களைப் போல மக்கள் நடுவில், "இதைச் செய்" என்று ஏவப்படாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை அபஹரண அத்தியாயத்தைக் கேட்பதன் மூலம், அல்லது படிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை அறிவோம். "பூமியில் தீமையை அழிக்கும் சீதை அபஹரண சர்க்கத்தைக் கேட்கும் சிறந்த மனிதர்களுக்கு மங்கலமில்லாதவையும், தீமையானவையுமான ஏதும் ஒருபோதும் நடக்காது" என்று ஸ்கந்த புராணம் சொல்கிறது" என்றிருக்கிறது.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள்: 40

Previous | Sanskrit | English | Next

Wednesday, 8 March 2023

ஜடாயு | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 14 (36)

Jataayu | Aranya-Kanda-Sarga-14 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜடாயுவைச் சந்தித்த ராமன்; தன் இனம் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் பிறப்பைக் குறித்துச் சொன்ன ஜடாயு...

Seeing Jataayu

பிறகு அந்த ரகுநந்தனன், பஞ்சவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் பேருடல் படைத்ததும், பீமபராக்கிரமமுடையதுமான {பயங்கரப் பேராற்றல் படைத்ததுமான} ஒரு கழுகை அடைந்தான்.(1) மஹாபாக்கியசாலிகளான அந்த ராமலக்ஷ்மணர்கள், வனத்தில்[1] அந்த பக்ஷியைக் கண்டு, அதை ராக்ஷசனாக நினைத்து, "யார் நீ" என்று கேட்டனர்.(2) அது, மதுரமான, மென்மையான சொற்களில், "வத்ஸா {குழந்தாய்}, நான் உன் பிதாவின் நண்பன் என்று அறிவாயாக" என்று பிரியமாகப் பேசியது.(3) அந்த ராகவன், அதைத் தன் பிதாவின் நண்பனாக ஏற்றுப் பூஜித்த பிறகு, அவன் {ராமன்} அவசரமில்லாமல் அதன் குலம், நாமம் ஆகியவற்றைக் கேட்டான்.(4)

[1] வேறு பதிப்புகளில் "ஆலமரத்தில்" என்றிருக்கிறது.

இராமனின் சொற்களைக் கேட்ட அந்தப் பறவை, சர்வ பூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} உற்பத்தியையும், தன் குலத்தைக் குறித்தும் அவனிடம் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கியது:(5) "மஹாபாஹுவே, பூர்வகாலத்தில் இருந்த பிரஜைகளின் பதிகள் {பிரஜாபதிகள் / உயிரினங்களின் தலைவர்கள்} அனைவரையும் நான் சொல்கிறேன். நான் சொல்வதைத் தொடக்கத்தில் இருந்து கேட்பாயாக.(6) அவர்களில் கர்த்தமர் பிரதமர் {முதல்வர்}, அவருக்குப் பின் விச்ருதர், சேஷர், சம்ச்ரயர், வீர்யவானான பகுபுத்திரர்,{7} ஸ்தாணு, மரீசி, அத்திரி, மஹாபலனான கிரது, புலஸ்தியர், ஆங்கிரஸ், பிரசேதஸ், புலஹர்,{8} தக்ஷர், அடுத்தவன் விவஸ்வான், அரிஷ்டநேமி, ராகவா, அவர்களில் இறுதியானவர் மஹாதேஜஸ்வியான கசியபர் ஆவார்.(7-9) 

புகழ்மிக்கவனான ராமா, பிரஜாபதியான தக்ஷனுக்கு, புகழ்பெற்ற அறுபது மகள்கள் இருந்தனர் என்று நான் கேள்விப்படுகிறோம்.(10) கசியபர், அவர்களில் மெல்லிடை கொண்டோரான அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவசை, மனு, அனலை ஆகிய எட்டுபேரை {மனைவிகளாக} ஏற்றுக் கொண்டார்.(11,12அ) கசியபர், பிரீதியடைந்தவராக அந்தக் கன்னிகைகளிடம் சொன்னார், "மூவுலகங்களையும் ஆதரிப்பதற்காக எனக்கு சமமான புத்திரர்களைப் பெறுவீராக" {என்றார் கசியபர்}.(12ஆ,13அ) இராமா, அவர்களில் அதிதி, திதி, காளிகை, தனு ஆகியோர் அதை ஏற்றுக் கொண்டனர், மற்றவர்கள் அதில் மனம் வைக்காமல் இருந்தனர்.(13ஆ,14அ) அரிந்தமா, பரந்தபா, தேவர்களான {பனிரெண்டு} ஆதித்யர்கள்,  {எட்டு} வசுக்கள், {பதினோரு} ருத்திரர்கள், {இரண்டு} அசுவினிகள் உள்ளிட்ட முப்பத்து மூன்று தேவர்களும் அதிதியிடம் பிறந்தனர்.(14ஆ,15அ) தாதா {குழந்தாய்}, திதி, நன்கறியப்படும் தைத்தியர்களை புத்திரர்களாகப் பெற்றாள். பூர்வத்தில் வனமும், கடலும் சூழ்ந்த இந்த வசுமதி {பூமி} என அனைத்தும் அவர்களுக்கே {திதியின் மைந்தர்களான தைத்தியர்களுக்கே} உரியவையாக இருந்தன.(15ஆ,16அ) 

அரிந்தமா, தனுவுக்கு அசுவக்ரீவனும் {ஹயக்ரீவனும்}, காளிகைக்கு நரகனும், காலகனும் புத்திரர்களாகப் பிறந்தனர்.(16ஆ,17அ) தாம்ரைக்கு கிரௌஞ்சி, பாஸீ, சியேனி, திருதராஷ்ட்ரி, சுகி என்ற புகழ்பெற்ற பஞ்ச கன்னிகைகள் {ஐந்து பெண்கள்} பிறந்தனர்.(17ஆ,18அ) அதில் கிரௌஞ்சீ கோட்டான்களை {ஆந்தைகளைப்} பெற்றாள், பாசீ கோழிகளைப் பெற்றாள், சியேனி மிகக் கூரிய அலகுகளைக் கொண்ட கழுகுகளையும், பருந்துகளையும் பெற்றாள். திருதராஷ்ட்ரீ ஹம்சங்களையும் {அன்னப்பறவைகளையும்}, இன்னும் அழகிய நீர்ப்பறவைகளையும் பெற்றாள்.(18ஆ,19) அந்த பாமினி {திருதராஷ்டிரீ} சக்கரவாகங்களையும் பெற்றாள், சுகி, நதையைப் பெற்றாள், அந்த நதையின் மகள் விநதையாவாள்.(20) இராமா, மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமந்தை, மாதங்கி, சார்த்தூலி, சுவேதை, சுரபி, சர்வ லக்ஷணங்களும் பொருந்திய சரஸை, கத்ரு என்கிற பத்து மகள்களை குரோதவசை பெற்றாள்.(21,22) நரவரோத்தமா {சிறந்த மனிதர்களில் உத்தமனே}, மிருகங்கள் {மான்கள்} அனைத்தும் மிருகிக்குப் பிறந்தவை. ரிக்ஷங்கள் {கரடிகள்}, சிருமரமெனும் மான் வகை, சமரியெனும் மான் வகை ஆகியன மிருகமந்தைக்குப் பிறந்தவை.(23) 

பத்திரமந்தை, ஐராவதி என்ற பெயரைக் கொண்ட மகளைப் பெற்றாள். லோகநாதனான ஐராவதமெனும் மஹாகஜம் அவளது புத்திரனே.(24) ஹரயங்களையும்  {சிங்கங்களையும்}, வலிமைமிக்க வானரங்களையும் ஹரி பெற்றாள். சார்த்தூலி, கோலாங்கூலங்களையும் {குரங்குகளையும்}, வியாகரங்களையும் {புலிகளையும்} மகன்களாகப் பெற்றாள்.(25) மனுஜரிஷபா {மனிதர்களில் காளையே}, மாதங்கங்களை {யானைகளை} மாதங்கி பெற்றாள். காகுத்ஸ்தா, சுவேதை திசைகஜங்களைப் பெற்றாள்.(26) ரோகிணி, கந்தர்வி என்ற பெயர்களைக் கொண்ட புகழ்பெற்ற இரண்டு மகள்களை சுரபி பெற்றாள். புகழ்பெற்றவனே, நீ சுகமாக இருப்பாயாக. (27) ரோஹிணி பசுக்களைப் பெற்றாள், கந்தர்வி வாஜிகளை {குதிரைகளைப்} பெற்றாள். சுரஸை பலதலை நாகங்களைப் பெற்றாள். இராமா, கத்ரு பன்னகங்களைப் பெற்றாள்.(28) மனுஜரிஷபா, மனுவானவள் மஹாத்மாவான கசியபரிடம் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களான மனுஷ்யர்களைப் பெற்றாள்.(29) முகத்திலிருந்து பிராமணர்களும், மார்பில் இருந்து க்ஷத்திரியர்களும், தொடைகளில் இருந்து வைசியர்களும், பாதங்களில் இருந்து சூத்திரர்களும் பிறந்தனர் என்பது சுருதி {என்பது கேள்வி / வேதம்}[2].(30) 

[2] பல பதிப்புகளில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது.

Jatayu lineage  - Family Tree

புண்ணியப் பழங்களை {பலன்களைச்} சுமக்கும் சர்வ விருக்ஷங்களையும் {மரங்கள் அனைத்தையும்} அனலை பெற்றாள். சுகியின் பௌத்திரியான {பேத்தியான} வினதை, சுரஸையின் தங்கையான கத்ரு குறித்தும் இனி சொல்கிறேன்.(31) ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தரணீதரனுமான நாகத்தை {உலகத்தைத் தாங்குபவனுமான ஆதிசேஷனை} கத்ரு பெற்றாள். வினதையோ கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்களைப் பெற்றாள்[3].(32) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, அந்த அருணனுக்குப் பிறந்த நானும், என் அண்ணன் சம்பாதியும் சியேனியின் புத்திரர்களாவோம். எனவே, ஜடாயு என்று என்னை நீ அறிவாயாக[4].(33) அத்தகையவனான நான், நீ விரும்பினால் உன் வசிப்பிடத்தில் சஹாயனாக இருப்பேன். கடப்பதற்கரிய இந்த காந்தாரம் {கானகம்} மிருகங்களாலும், ராக்ஷசர்களாலும் சேவிக்கப்படுகிறது. தாதா, லக்ஷ்மணனுடன் நீ வெளியே செல்லும்போது சீதையை நான் ரக்ஷிப்பேன்" {என்றான் ஜடாயு}.(34)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கருடன் விஷ்ணுதேவனின் கழுகு வாகனமாவான், தொடைகளற்றவனான அருணன் ஏழு குதிரைகளைக் கொண்ட சூரியத்தேரின் சாரதியாவான். சூரியனின் ஏழு குதிரைகளே வானவில்லின் ஏழு வண்ணங்களாகும்.  அருணனும், கருடனும் வேகம் மற்றும் உந்துசக்தியை இயல்பாகக் கொண்ட பறவைப் பிறவிகளாகும். ஜடாயுவும், சம்பாதியும் அந்தக் குலத்தைச் சார்ந்தவர்களே" என்றிருக்கிறது.

[4] அருணன்தன் புதல்வன்யான் அவன் படரும் 
உலகு எல்லாம் படர்வேன் ஆழி
இருள்மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன்
உயிர்த் துணைவன் இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே 
வந்து உதித்தேன் கழுகின் மன்னன்
தருணம்கொள் பேர் ஒளியீர் 
சம்பாதிபின் பிறந்த சடாயு என்றான்

- கம்பராமாயணம் 2714ம் பாடல்

பொருள்: "அருணனின் மகனான நான், அவன் செல்லும் உலகங்களுக்கெல்லாம் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவன். பகை இருளின் வலிமை கெட ஆணைச் சக்கரம் செலுத்திய தயரதனுக்கு இன்னுயிர் நண்பன். மற்ற உயிரினங்களை வகைப்படுத்திய பொழுதில் நானும் பிறந்தேன். இளமை பூண்ட பெரும் ஒளியுடையவர்களே, சம்பாதிக்குப் பின் பிறந்த தம்பியான சடாயு நான்" என்றான்.

இராகவன், ஜடாயுவுக்குப் பிரதிபூஜை செய்து, மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டு, பணிந்து நின்றான். அந்த ஆத்மவான் {ராமன்}, பிதாவின் {தன் தந்தை தசரதனின்} நட்பை ஜடாயு மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டான்.(35) பிறகு, மைதிலியான சீதையை அழைத்துக் கொண்டு, லக்ஷ்மணனுடனும், அதிபலமிக்க அந்த  பக்ஷியுடனும் {ஜடாயுவுடனும்}, வெட்டுக்கிளிகளுக்கு {விட்டிற்பூச்சிகளுக்கு} நெருப்பைப் போல சத்ருக்களை எரிக்கும் நோக்கில் அந்தப் பஞ்சவடிக்குச் சென்றான்.(36)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 14ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை