Jambumali killed | Sundara-Kanda-Sarga-44 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானைக் கணைகளால் துளைத்த ஜம்புமாலி; பெரும் பாறையையும், பெரும் சால மரத்தையும், பரிகத்தையும் வீசி ஜம்புமாலியைக் கொன்ற ஹனுமான்...
இராக்ஷசேந்திரனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} ஆணையிடப்பட்டவனும், பலவானும், பெரும்கோரைப்பற்களைக் கொண்டவனும், பிரஹஸ்தனின் மகனுமான ஜம்புமாலி, தனுவை {வில்லை} எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.{1} செந்நிற மாலைகளையும், ஆடைகளையும் தரித்தவனும், காதுகளில் அழகிய குண்டலத்தை அணிந்தவனும், பேருடல் படைத்தவனும், உருண்டையான நயனங்கள் {கண்கள்} அமையப்பெற்றவனும், சண்டனும் {கடுமை நிறைந்தவனும்}, சமரில் துர்ஜயனுமான அவன் {போரில் வெல்லப்பட முடியாதவனுமான ஜம்புமாலி}{2}, சக்ரனின் தனுவுக்கு {இந்திரனின் வில்லுக்கு} ஒப்பானதும், வஜ்ரத்திற்கும், அசனிக்கும் சமமான ஸ்வனமுடைய அழகிய சாயகத்துடன் {கணையுடன்} கூடியதுமான மஹத்தான தனுவை {வில்லை} வேகமாக வளைத்தான்.(1-3) அந்த தனுசை வளைத்ததால் உண்டான மஹத்தான கோஷமானது {நாணொலியானது}, திசைகளையும், பிரதிசைகளையும் {திசைகளின் மூலைகளையும்}, ஏன் நபத்தையும் {வானத்தையும்} கூட திடீரென நிறைத்தது[1].(4)
