Showing posts with label அகஸ்தியர். Show all posts
Showing posts with label அகஸ்தியர். Show all posts

Friday, 26 September 2025

ஆதித்ய ஹிருதயம் | யுத்த காண்டம் சர்க்கம் – 105 (31)

The heart of Athiti's son, the sun-god Surya | Yuddha-Kanda-Sarga-105 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வெற்றியை அடைவதற்கு, சூரிய தேவனைத் துதிக்கும் ஆதித்ய ஹிருதய சுலோகங்களை உரைக்கும்படி ராமனை அறிவுறுத்திய அகஸ்தியர்...

Rama and Surya

அப்போது, யுத்தத்தில் சோர்வடைந்து, சமர்க்களத்தில் சிந்தனையுடன் நின்றிருந்த ராவணனைத் தன் முன்னால் கண்டு, யுத்தத்திற்கு ஆயத்தமானான் {ராமன்}.{1}  தைவதங்களுடன் சேர்ந்து, ரணத்தை {போரைக்} காண வந்திருந்த பகவான் {வணக்கத்திற்குரிய} அகஸ்திய ரிஷி, ராமனை அணுகி {பின்வருமாறு} கூறினார்:(1,2) "வத்ஸா {குழந்தாய்}, ராமராமா {விருப்பத்திற்குரிய ராமா}, மஹாபாஹோ, சமரில் எதனால் சர்வ அரீக்களையும் அழித்து, விஜயமடைவாயோ, அந்த ஸநாதனமான குஹ்யத்தைக் கேட்பாயாக {பகைவர் அனைவரையும் அழித்து, வெற்றியை அளிக்கும் தொன்மையான ரகசியத்தைக் கேட்பாயாக}[1].(3) ஆதித்யஹ்ருதயம் புண்ணியமானது; சர்வசத்ருக்களை நாசமடையச் செய்வது; ஜயத்தை விளைவிப்பது; நித்யம் ஜபிக்க வேண்டியது; அக்ஷயமானது {வற்றாமல் தருவது}; பரமமானது {மேன்மையானது}; சிவமானது {மங்கலமானது};{4} சர்வ மங்கல மாங்கல்யமானது {மங்கலங்கள் அனைத்திலும் மங்கலமானது}; சர்வ பாபங்களையும் நாசம் செய்வது; சிந்தனை, சோகங்களை {கவலையையும், துக்கத்தையும்} போக்கவல்லது; ஆயுள் வளர்ப்பதில் உத்தமமானது.(4,5)

Thursday, 23 March 2023

கர வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 30 (41)

Khara killed | Aranya-Kanda-Sarga-30 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கரனைக் கொன்ற ராமன்; அவனைப் புகழ்ந்து, பூஜித்த தேவர்கள்; லக்ஷ்மணனும், சீதையும் குகையைவிட்டு வெளியே வந்தது...

Seetha hugging Rama, after he killed Khara

தர்மவத்ஸலனான {தர்மத்தில் விருப்பமுள்ள} ராகவன், பாணங்களால் கதையை {அந்த கதாயுதத்தைத்} துண்டித்துவிட்டு, குழப்பத்தில் {படபடப்புடன்} இருந்த கரனிடம் சிரித்தவாறே  இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(1) "இராக்ஷசாதமா {ராட்சசர்களில் இழிந்தவனே}, உன் பலம் முழுவதும் இவ்வளவுதான் என்பது காட்டப்பட்டுவிட்டது. என்னிலும் சக்தியில் குறைந்தவனான நீ  தேவையில்லாமல் பிதற்றினாய்.(2) இந்த கதை, பிதற்றுவதில் சமர்த்தனாகிய உன் நம்பிக்கையை அழிக்கும் வகையில் பாணங்களால் சிதறுண்டு பூமிதலத்தை அடைந்தது.(3) "முற்றாக அழிந்த ராக்ஷசர்களால் உண்டான இந்தக் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன்" என்று நீ சொன்ன அந்தச் சொற்களும் பொய்யாகின.(4) 

நீசனும், சீலத்தில் {ஒழுக்கத்தில்} இழிந்தவனும், பொய் விருத்தம் {நடத்தை} கொண்டவனும், இராக்ஷசனுமான உன் பிராணனை, கருடன் அம்ருதத்தை {கவர்ந்து சென்றதைப்} போல நான் அபஹரிக்கப்போகிறேன்.(5) இதோ என் பாணங்கள் உன் கண்டத்தை {தொண்டையைச்} சிதைக்கப் போகின்றன.  நுரைக் குமிழிகளுடன் பெருகும் உன் ரத்தத்தை மஹீ {பூமி} பருகப் போகிறாள்.(6) உன் அங்கமெங்கும் புழுதியால் பூசப்பட்டு, புஜங்கள் இரண்டும் {பூமியில்} தளர்ந்து, அடைதற்கரிய பெண்ணைப் போல பூமியை அணைத்துக் கொண்டு, நீ {நித்திய} உறக்கம் கொள்ளப் போகிறாய்.(7) இராக்ஷசர்களில் இழிந்தவனே, நீ {நித்தியமான} நல்ல நித்திரையில் இருக்கும்போது, இந்த தண்டகம் சரண்யம் வேண்டுபவர்களுக்கு சரண்யமாக {புகலிடம் வேண்டும் தவசிகளுக்குப் புகலிடமாகத்} திகழும்.(8)

இராக்ஷசா, என் சரங்களால் ஜனஸ்தானத்தில் உன் ஸ்தானம் அழிந்ததும், முனிவர்கள் பயமற்றவர்களாக இந்த வனம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.(9) பிறரை பயமுறுத்தும் ராக்ஷசிகள், பந்துக்கள் கொல்லப்பட்டு, கண்ணீரால் நனைந்த வதனங்களுடன் பயத்தால் தீனமடைந்து மிக விரைவில் {இங்கிருந்து} தப்பி ஓடப் போகிறார்கள்.(10)  உன்னைப் போன்ற அருவருக்கத்தக்கவனைப் பதியாக {தலைவனாக / கணவனாக} அடைந்தவர்களும், உன் குலத்திற்குத் தகுந்தவர்களுமான அந்தப் பத்தினிகள், இனி அர்த்தமற்ற சோக ரசத்தை {சோகத்தின் சுவையை} அனுபவிக்கப் போகிறார்கள்.(11) சீலத்தில் கொடியவனே, குணத்தில் அற்பனே, நித்தியம் பிராமணர்களுக்கு கண்டகனே {முள்ளாய் இருப்பவனே}, உன் செயல்களின் மீது கொண்ட ஐயத்துடனேயே {அச்சத்தால் நடுங்கியவாறே} அந்த முனிவர்கள் ஹவிஸ்ஸை அக்னியில் இடுகிறார்கள்" {என்றான் ராமன்}.(12)

இவ்வாறு வனத்தில் {போரில்} பெருங்கோபத்துடன் பேசிய அந்த ராகவனிடம், ரோஷத்துடன் கூடிய அந்தக் கரன், கழுதை போன்ற கடுங்குரலில் {பின்வருமாறு} நிந்திக்கத் தொடங்கினான்:(13) "பயத்திலும் {ஆபத்திலும்} கூட பயமில்லாமல் திடமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதால், மிருத்யு வசமடைந்த நீ பேசத்தக்கதையும், பேசத்தகாததையும் உன் புத்தியில் வாங்காமல் இருக்கிறாய்.(14) காலபாசத்தில் சிக்கிக் கொண்ட புருஷர்களே {மானிடர்களே}, ஆறு இந்திரியங்களும்[1] செயல் இழந்தவர்களாகி, காரியாகாரியங்களை {செய்யத்தக்கதையும், செய்யத்தகாததையும்} அறியாதவர்களாக இருப்பார்கள்" {என்றான் கரன்}.(15)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐம்புலன்களும், மனமும் சேர்ந்து இங்கே ஆறு இந்திரியங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன" என்றிருக்கிறது.

அந்த நிசாசரன் {இரவுலாவி}, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, தன் புருவங்களை நெரித்து, போரில் தாக்குதல் தொடுக்கக்கூடிய எதுவும் அருகிலெங்கும் இல்லாததைக் கவனித்து, மஹா சாலம் {பெரிய ஆச்சா மரம்} ஒன்றைக் கண்டான்.(16,17அ) அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அதைப் பெயர்த்தெடுத்தான். அந்த மஹாபலன், அதை {அந்த ஆச்சா மரத்தை} இருகைகளாலும் வலுவுடன் உயரத் தூக்கி, உரக்க கத்தியபடியே ராமன் மீது வீசி, "நீ அழிந்தாய்" என்று கூச்சலிட்டான்.(17ஆ,18) பிரதாபவானான ராமன், தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அதை {அந்த ஆச்சா மரத்தை} பாணத் தாரைகளால் துண்டித்து, அந்த சமரில் தீவிரமான கோபத்தை அடைந்து, கரனைக் கொல்லத் தீர்மானித்தான்.(19) 

அப்போது ராமன், கோபத்தால் உடல் வியர்க்க, கடைக்கண்கள் சிவக்க, ஆயிரம் பாணங்களால் அந்தப் போரில் கரனைத் துளைத்தான்.(20) பாணங்கள் தைத்த அவனது உடலில் இருந்து நுரையுடன் கூடிய ரத்தம், பிரஸ்ரவண கிரியின்[2] நீர்த்தாரைகளைப் போல பூமியில் வேகமாக நிரம்பி வழிந்தது.(21) போரில் ராமபாணங்களால் மதிகலங்கிய அந்தக் கரன், உதிர கந்தத்தால் {ரத்த மணத்தால்} வெறிபிடித்து அவனை {ராமனை} நோக்கி வேகமாக ஓடினான்.(22) பராக்கிரமம் நிறைந்தவனும், அஸ்திரங்களில் நிபுணனுமான அவன் {ராமன்}, உதிரத்தில் {ரத்தத்தில்} நனைந்து ஆவேசத்துடன் எதிர்த்து வருபவனை {கரனைக்} கண்டு வேகத்துடன் சற்றே விலகி நின்றான்[3].(23)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவனின் உதவிக்காகக் காத்திருக்கும்போது மழைக்காலத்தைப் புகழ்ந்து இந்த பிரஸ்ரவண மலையை எண்ணி வியக்கிறான்" என்றிருக்கிறது. "பிரஸ்ரவணம்" என்ற சொல் "அருவி" என்ற பொருளைக் கொண்டது. எனவே இந்த வாக்கியத்திற்கு "மலை அருவியின் நீர்த்தாரைகளைப் போல" என்று நேரடியாகவும் பொருள் கொள்ளலாம்.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதனை செய்தவன் ராமன். அவன் இன்னும் சிறப்பாகத் தாக்குவதற்காகவே இரண்டு, அல்லது மூன்று அடிகள் பின்வாங்குகிறான்" என்றிருக்கிறது.

அப்போது ராமன், கரனைப் போரில் வதைப்பதற்காக, பாவகனை {நெருப்பைப்} போல ஒளிர்வதும், பிரம்மதண்டம் போன்றதுமான மற்றொரு சரத்தை அந்த சமரில் எடுத்தான்.(24) அந்த தர்மாத்மா, மதிமிக்கவனும், ஸுரராஜனுமான மகவானால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்டதை {அந்தக் குறிப்பிட்ட பாணத்தைப்}[4] பூட்டி உடனே அதைக் கரன் மீது தொடுத்தான்.(25) இராமன், தனுவை வளைத்து விடுத்த அந்தப் மஹாபாணம், இடிபோல் முழங்கியபடியே கரனின் மார்பில் பாய்ந்தது.(26) அந்த சர அக்னியில் கொளுத்தப்பட்ட கரன், ஸ்வேதாரண்யத்தில் {திருவெண்காட்டில்} ருத்திரனால்  முற்றாக எரிக்கப்பட்ட அந்தகனைப் போலப் பூமியில் விழுந்தான்.(27) அந்தக் கரன், வஜ்ரத்தால் விருத்திரன் போலவும், நுரையால் நமுசி போலவும், இந்திரனின் அசனியால் {இடியினால்} பலன் {பலாசுரன்} போலவும் {அந்த பாணத்தால்} மாண்டு விழுந்தான்.(28)

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகஸ்தியர் மூலம் கொடுக்கப்பட்டது" என்று இருக்கிறது. ஆரண்ய காண்டம் 12ம் சர்க்கத்தில் அகஸ்தியர் ராமனுக்கு ஆயுதங்கள் பலவற்றை வழங்குகிறார். 

அதே நேரத்தில், தேவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக, சாரணர்களுடன் சேர்ந்து துந்துபி முழக்கி, வியப்படைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ராமனின் மீது புஷ்ப வருஷத்தை வர்ஷித்து {மலர் மாரியைப் பொழிந்து},(29,30அ) தங்களுக்குள் {பின்வருமாறு} பேசிக் கொண்டனர்: "கரனையும், தூஷணனையும் முக்கியர்களாகக் கொண்ட காம ரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ராமனின் கூரிய சரங்களால் ஒன்றரை முஹூர்த்த காலத்தில் கொல்லப்பட்டனர்[5].(30ஆ,31) விதிதாத்மாவான {தன்னை அறிந்த புத்திசாலியான} ராமன் செய்தது மஹத்தான கர்மமாகும். அஹோ பெருமை, அஹோ வீரியம், அஹோ மனோதிடம் {என்னே இவனது பெருமை, என்னே இவனது வீரம், என்னே இவனது மனோதிடம்}. இவன் {இந்த வீரம், மனோதிடம், பெருமை ஆகியவற்றுடன் கூடிய ராமன்} விஷ்ணுவைப் போலவே காணப்படுகிறான்[6]" {என்றனர்}. தேவர்கள் அனைவரும் இவ்வாறு சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றனர்.(32,33அ)

[5] ஒரு நாள் என்பது முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அதாவது பகலில் 15 முஹூர்த்தங்களையும், இரவில் 15 முஹூர்த்தங்களையும் கொண்டது ஒரு நாளாகும். ஒரு முஹூர்த்தம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்களாகும். எனவே, ஒன்றரை முஹூர்த்தம் என்றால் 72 நிமிடங்களாகும். அதாவது. கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

[6] ஒரு சில பதிப்புகளில்  முனிவர்கள் பேசுவது முதலில், தேவர்கள் பேசுவது அடுத்ததாகவும் வருகிறது. அதாவது இந்தக் குறிப்பிட்ட பத்தி {அதாவது 29 முதல் 33அ வரையுள்ளது} அடுத்த பத்திக்கு {அதாவது 33ஆ முதல் 37அ சுலோகம் வரையுள்ள பகுதிக்கு} அடுத்ததாக வருகிறது. இராமாயணத்தில் வரும் இது போன்ற இடங்களே ராமனை மானிட நிலையிலிருந்து விஷ்ணுவின் நிலைக்கு உயர்த்துகின்றன.  

அப்போது ராஜரிஷிகளும், பரமரிஷி கூட்டத்துடன் கூடிய அகஸ்தியரும்[7] சேர்ந்து பெரும் மகிழ்ச்சியடைந்து, ராமனைப் புகழ்ந்து, இதைச் சொன்னார்கள்:(33ஆ,34அ) "பாகசாசனனும் {பாகன் என்ற அசுரனைக் கொன்றவனும்}, மஹாதேஜஸ்வியும், புரந்தரனுமான {அசுரர் நகரைப் பிளந்தவனுமான} மஹேந்திரன், இதற்காகவே புண்ணிவானான சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்திருந்தான்[8].(34ஆ,35அ) பாப கர்மங்களைச் செய்யும் சத்ருக்களான இந்த ராக்ஷசர்களை வதைப்பதற்கான உபாயமாகவே இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} உன்னை மஹரிஷிகள் அழைத்து வந்தனர்.(35ஆ,36அ) தசரதாத்மஜா, எங்களுடைய இந்தக் காரியம் உன்னால் செய்து முடிக்கப்பட்டது. எனவே, மஹரிஷிகள் இனி தண்டகவனத்திலேயே தங்கள் ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவார்கள் {கடமையைச் செய்வார்கள்}" {என்றனர்}.(36ஆ,37அ)

[7] பல பதிப்புகளில் இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படவில்லை. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் மட்டுமே இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படுகிறார்.

[8] ஆரண்ய காண்டம் 5ம் சர்க்கத்தில் இந்நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது.  அங்கே ராமனே இந்திரனைக் காண்கிறான். இந்திரன் ராமனைக் காண மறுத்து சரபங்கரின் ஆசிரமத்தில் இருந்து விரைந்து சென்று விடுகிறான். எனவே, ராமனும், இந்திரனும் நேரடியாக சந்தித்துக் கொண்ட நிகழ்வு இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சர்க்கத்தின் 25ம் சுலோகத்தில், "தேவராஜனான இந்திரனால் கொடுக்கப்பட்ட பாணத்தை வில்லில் பூட்டினான் ராமன்" என்று சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட {34ஆ முதல்37அ சுலோகம் வரையுள்ள} வாக்கியத்தை அகஸ்தியர் ராமனிடம் குறிப்பிடுவதாகக் கொண்டால், "இந்திரன் இந்த ஆயுதங்களை சரபங்கரிடம் கொடுத்தான், சரபங்கர் அவற்றை சுதீக்ஷ்ணரிடம் கொடுத்து வைத்திருந்தார். சுதீக்ஷ்ணர் என்னிடம் கொடுத்தார். அவற்றையே நான் உன்னிடம் கொடுத்தேன்" என்ற பொருள் தொக்கி நிற்கும். 35ஆ,36அ சுலோகத்திற்கான பொருளும் அப்போது தெள்ளெனத் துலங்கும்.

அதே நேரத்தில், வீரனான லக்ஷ்மணன், சீதையை அழைத்துக் கொண்டு, அடைதற்கரிய கிரி துர்கத்தில் {மலைக் குகையில்} இருந்து வெளியே வந்து, சுகமாக ஆசிரமத்தில் நுழைந்தான்[9].(37ஆ,38அ) அப்போது மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்ட விஜயீவீரனான {வெற்றிபெற்ற வீரனான} ராமன், லக்ஷ்மணனாலும் பூஜிக்கப்பட்டவனாக அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(38ஆ,39அ) மஹரிஷிகளின் சுகத்திற்காக, சத்ருக்களை வதம் செய்த தன் பர்த்தாவை {கணவன் ராமனைக்} கண்ட வைதேஹி {சீதை}, பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனைத் தழுவிக் கொண்டாள்.(39ஆ,40அ) அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, இராக்ஷச கணங்கள் {கூட்டம்} கொல்லப்பட்டதைக் கண்டும், ராமன் சோர்வடையாததைக் கண்டும் அதிக மகிழ்ச்சியடைந்து உள்ளம் பூரித்தவள் ஆனாள்.(40ஆ,இ) பிறகு, மகிழ்ச்சியான முகத்துடன் கூடிய அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, ராக்ஷச சங்கத்தை அழித்ததால் மகிழ்ச்சியடைந்த முனிவர்களால் பூஜிக்கப்பட்டவனை {ராமனை} மீண்டும் தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தாள்[10].(41)

[9] விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.

- கம்பராமாயணம் 3062ம் பாடல், கரன் வதைப்படலம்

பொருள்:  போரில் இறந்து விண்ணை அடைந்த கொடியவரின் {அரக்கரின்} உடலில் ஏற்பட்ட புண்ணின் இரத்தமும், தூசிகளும் நீங்கிவிடும்படி பெருமைமிக்க வீரனாகிய ராமனின் பாதங்களை, அவனது தம்பியும் {இலக்ஷ்மணனும்}, அன்னமும் {சீதையும்} தங்கள் கண்களின் நீரால் கழுவினர்.

[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தெய்வத்தால் தீய சக்தி அழிக்கப்படும்போதெல்லாம், அதைப் படிப்பதன், அல்லது கேட்பதன் பலன் இறுதியில் சொல்லப்படும். கரவதத்திற்கும் அப்படியொரு பல சுருதி இருப்பதை மஹேசுவர தீர்த்தர் குறிப்பிடுகிறார். அது பின்வருமாறு.

ஷ்²ருத்வா ஷ்²ரீ ராம விஜயம் பாப ப³தா⁴த் ப்ரமுச்யதே .
ததை²வ ஸ்ருʼந்க²லா ப³ந்தா⁴த் ருʼண ப³ந்தா⁴த் விமுச்யதே .
ஷ்²ருத்வா புஷ்பவதீ நாரீ தநயம் வம்ஷ² வர்த⁴நம் .
லப⁴தே ராக⁴வேந்த்³ரஸ்ய ப்ரஸாதா³த் கீர்தி வர்த⁴நம் .. ஸ்காந்த³ புராண

"இராமவிஜயத்தை {இராமனின் வெற்றியைக்} கேட்கும் ஒருவன் தன் பாபச்சங்கிலிகளில் இருந்தும், வதை {தண்டனைச்} சங்கிலிகளில் இருந்தும், கடன் சிக்கல்களில் இருந்தும் விடுபடுகிறான். இதைக் கேட்கும் புஷ்பவதியான ஒரு நாரீ பெண், வம்சத்தை விருத்தி செய்யும் தனயனை {மகனைப்} பெறுவாள். இராகவனின் அருளால் செழுமையும், புகழும் பெருகும்" - ஸ்கந்த புராணம்.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 41

Previous | Sanskrit | English | Next

Tuesday, 21 March 2023

இராமகர்மம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 28 (33)

The deed of Rama | Aranya-Kanda-Sarga-28 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கும், கரனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கரன்; தேவர்களும், முனிவர்களும் ராமனின் செயலைக் கொண்டாடியது...

Khara's chariot destroyed by Rama

போரில் தூஷணனும், திரிசிரஸும் கொல்லப்பட்டதைக் கண்டும், ராமனின் விக்கிரமத்தை {ஆற்றல்வீரத்தைக்} கண்டும் கரன் அச்சமடைந்தான்.(1) அந்தக் கரன், எதிர்க்கப்பட முடியாத மஹாபலமுள்ள ராக்ஷச சைனியமும், திரிசிரஸ், தூஷணன் ஆகியோரும் ராமன் ஒருவனாலேயே அழிந்ததைக் கண்டு,{2} அந்த ராக்ஷச பலம் {படை} முற்றிலும் அழிந்ததைக் கவனித்து மனம் வருந்தி, இந்திரனை நோக்கிச் சென்ற நமுசியைப் போல ராமனை நெருங்கினான்.(2,3) 

கரன், வில்லை வலுவுடன் வளைத்து, விஷமிக்க பாம்பைப் போன்று சீற்றமிக்கவையும், ரத்தத்தையே போஜனமாக {தங்கள் உணவாகக்} கொண்டவையுமான நாராசங்களை {இரும்புக் கணைகளை} ராமனின் மீது ஏவினான்.(4) இரதத்தில் இருந்த கரன், தன் சிக்ஷையால் {பயிற்சியால்} நாண்கயிற்றைச் சுண்டி, சஸ்திரங்களை {ஆயுதங்களை} அசைத்து சமரில் சரங்களுடன் பல்வேறு மார்க்கங்களில் திரிந்தான் {பலவிதமான கதிகளைச் செய்து காட்டினான்}.(5)  மஹாரதனானவன் {கரன்}, சர்வ திசைகளையும், உபதிசைகளையும் பாணங்களால் பூர்ணமாக நிரப்பினான். இராமனும் அவனைப் பார்த்து அதிமஹத்தான தனுவை முழுமையாக வளைத்து,{6} பர்ஜன்யன் {மேகதேவன்} மழைத்தாரைகளால் மறைப்பதைப் போல அக்னிப் பொறிகளுடன் கூடிய, {நெருப்பு போன்று} சகிக்க முடியாத சாயகங்களால் நாபத்தை {பாணங்களால் ஆகாயத்தை} இடைவெளியற்றதாகச் செய்தான்.(6,7) கரனும், ராமனும் ஏவிய கூர்மையான பாணங்களால் அந்த ஆகாசத்தைச் சுற்றிலும் இடைவெளியின்றி எங்கும் சர மயமானது.(8) 

ஒருவரையொருவர் வதம் செய்யும் ஆவலில் இருவரும் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சர ஜாலத்தால் {அம்புவலையால்} மறைக்கப்பட்டு சூரியன் பிரகாசித்தானில்லை.(9) அப்போது கரன், தோமரத்தால் மஹாதிவிபத்தை {ஈட்டியால் பெரும் யானையைக்} குத்துவதைப் போல அந்தப் போரில் நாளீகங்கள், நாராசங்கள், கூரிய முனைகளைக் கொண்ட விகர்ணிகள் ஆகியவற்றால் ராமனைத் தாக்கினான்.(10) இரதத்தில் தனுஷ்பாணியாக நின்ற அந்த ராக்ஷசன் {கரன்}, சர்வ பூதங்களுக்கும் பாசஹஸ்தனான அந்தகனை {அனைத்து உயிரினங்களுக்கும் பாசக்கயிற்றுடன் கூடிய யமனைப்} போலத் தெரிந்தான்.(11)

சர்வ சைனியத்தையும் ஆண்மையுடன் சளைக்காமல் அழித்த பெரும் வலிமைமிக்க ராமன் இப்போது முழுமையாக சோர்வடைந்திருப்பதாகக் கரன் கருதினான்.(12) சிங்கத்திற்கு ஒப்பான பராக்கிரமத்தையும், சிங்கத்தின் நடையையும் கொண்டவனை {கரனைக்} கண்ட ராமன், அற்ப மிருகத்தைக் கண்ட சிங்கத்தைப் போல கலங்காதிருந்தான்.(13)  பிறகு கரன், சூரியனைப் போலப் பிரகாசிக்கும் மகத்தான ரதத்தில் ஏறி, பாவகனை அடையும் பதங்கத்தை {அக்னியை அடையும் அந்துப்பூச்சியைப்} போல ராமனை நோக்கிச் சென்றான்.(14) 

அப்போது ஹஸ்த லாகவத்தை {கைகளின் நளினத்தை} வெளிப்படுத்திய கரன், மஹாத்மாவான அந்த ராமனின் சரம்பூட்டிய வில்லைக் கைப்பிடியில் முறித்தான்.(15) இன்னும் கோபமடைந்தவன் {கரன்}, சக்ரனின் இடிக்கு {இந்திரனின் வஜ்ரத்திற்கு} ஒப்பான பிரகாசத்துடன் கூடிய ஏழு சரங்களை எடுத்து {ராமனின்} போர்க்கவசத்தைத் தாக்கினான்.(16) பிறகு கரன், ஒப்பற்ற வலிமை கொண்ட ராமனின் மீது ஆயிரம் சரங்களை ஏவித் துன்புறுத்தி அந்த சமரில் மஹாநாதம் செய்தான்.(17) பிறகு கரன், நல்ல கணுக்களை உடைய பாணங்களை ஏவியபோது, ஆதித்தியனின் பிரகாசத்தைக் கொண்ட ராமனின் கவசம் முற்றாக அழிந்து பூமியில் விழுந்தது.(18) 

அங்கங்கள் அனைத்திலும் சரங்களால் தாக்கப்பட்ட அந்த ராகவ ராமன், குரோதமடைந்து புகையின்றி எரியும் அக்னியைப் போன்ற சீற்றத்துடன் அந்த சமரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19) அப்போது, சத்ருக்களை அழிப்பவனான ராமன், கம்பீர முழக்கம் செய்யும் மற்றொரு மஹத்தான தனுவை எடுத்து, பகைவனை அழிப்பதற்காக அதில் நாணேற்றினான்.(20) பிறகு, மஹரிஷியால் {அகஸ்தியரால்} வெகுமதியாக அளிக்கப்பட்டதும், சிறந்ததுமான அந்த மஹத்தான வைஷ்ண தனுவை உயர்த்தியபடியே கரனை நோக்கி விரைந்து சென்றான்[1].(21) அப்போது குரோதத்துடன் கூடிய ராமன், கனக புங்கங்களுடனும் {தங்க இறகுகளுடனும்}, வளைந்த முனைகளுடன் கூடிய சரங்களால் சமரில் அந்தக் கரனின் துவஜத்தை வெட்டி வீழ்த்தினான்.(22) காண்பதற்கு இனிய அந்த காஞ்சனத்வஜம் {கொடிமரம்}, தேவதைகளின் ஆணையால் தரணியில் இறங்கிய சூரியனைப் போலச் சிதறி விழுந்தது.(23)

[1] இங்கே கம்பராமாயணத்தில், "இராமன் வில்லொடிந்து நின்றதும், ஆகாயாத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வருணன் ஒரு வில்லை அளித்தான்" என்றிருக்கிறது. அது பின்வருமாறு:

என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான்
மன்னன் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான்.
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தடக்கையில் அத்துணை
பண்டு போர் மழுவாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன்.

- கம்பராமாயணம் 3051, 3052ம் பாடல்கள், கரன் வதைப்படலம்

பொருள்: {அவ்வாறு அந்த வில் ஒடிந்த} மாத்திரத்தில் மன்னர்மன்னன் தசரதனின் மகனான ராமன், தான் ஏந்திய கார்முகம் {வில்} துண்டிக்கப்படவும், தனித்திருப்பதை சிந்தியாமல், மரபின்படி தன் நீண்ட கையைப் பின்புறம் நீட்டினான்.(3051) வருணதேவன் இதைக் கண்டு நின்று, அதன் கருத்தை உணர்ந்து, பண்டைய போர்க் கோடரியைக் கொண்டவனிடமிருந்து {பரசுராமரிடமிருந்து} உரிமையால் பெற்றுக்கொண்ட {வைஷ்ணவ} வில்லை, தேவர்களின் தலைவனான ராமனின் நெடுங்கையிலே கொடுத்தான்.(3052)

சினங்கொண்டவனும், மர்மங்களை {யுக்திகளை} அறிந்தவனுமான கரன், தோமரத்தால் மாதங்கத்தை {ஈட்டியால் யானையைக்} குத்துவதைப் போல, நான்கு கணைகளால் ராமனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்த ராமன், கரனின் கார்முகத்திலிருந்து {வில்லில் இருந்து} ஏவப்பட்ட பல்வேறு பாணங்களால் காயமடைந்து, உதிரத்தால் நனைந்த அங்கங்களுடன் கடும் எரிச்சலடைந்தான்.(25) தன்விகளில் {வில்லாளிகளில்} சிறந்தவனும், பரம வில்லைக் கொண்டவனுமான அவன் {ராமன்}, அந்தப் பெரும்போரில் தன் தனுவை எடுத்து, இலக்கை நோக்கி குறி பார்த்து, ஆறு சரங்களை ஏவினான்.(26) ஒரு பாணத்தால் சிரஸையும், அடுத்த இரண்டால் கைகளையும் தாக்கினான். அதற்கடுத்து மூன்று அர்த்தச்சந்திர பாணங்களால் மார்பைத் தாக்கினான்.(27) பிறகு குரோதமடைந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, அந்த ராக்ஷசனைக் கொல்வதற்காக, பாஸ்கரனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று நாராசங்களை எடுத்தான்.(28)

சமரில் இந்திரனுக்கு சமமான பலவானான ராமன், சிரித்துக் கொண்டே அந்தப் போரில் ஒன்றால் அவனது ரதத்தின் யுகத்தையும் {ஒரு பாணத்தால் கரனின் தேரின் நுகத்தடியையும்}, நான்கால் அவனது குதிரைகளையும் தாக்கினான். ஆறால் கரனின் சாரதியுடைய சிரத்தையும் {தலையையும்}, மூன்றால் திரிவேணுவையும் {ஏர்க்காலையும்}, இரண்டால் {அந்தத் தேரின்} அச்சையும் வெட்டி வீழ்த்தினான். பிறகு, பனிரெண்டு பாணங்களால் சரம்பூட்டப்பட்ட கரனின் தனுவை முறித்தான். அந்த மஹாபலன் {ராமன்}, வஜ்ரத்துக்கு ஒப்பான பதிமூன்றால் {பதிமூன்று பாணங்களால்} கரனைத் துளைத்தான்.(29-31) தனு முறிந்தது, ரதம் அழிந்தது, அசுவங்கள் கொல்லப்பட்டன, சாரதியும் கொல்லப்பட்டான். அப்போது கீழ குதித்த கரன் கதாபாணியாக பூமியில் நின்றான்.(32) 

விமானங்களில் இருந்த தேவர்களும், மஹரிஷிகளின் கூட்டமும் ஒன்றாக சேர்ந்து, பெரும் மகிழ்ச்சியடைந்து, கைகளைக் கூப்பிக் கொண்டு மஹாரதனான ராமனின் அந்தக் கர்மத்தைப் பூஜித்தனர்.(33)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Tuesday, 7 March 2023

பஞ்சவடி | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 13 (25)

Panchavati | Aranya-Kanda-Sarga-13 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு அகஸ்தியர் கூறிய அறிவுரை; பஞ்சவடியில் வசிக்குமாறு ராமனிடம் சொன்னது...

Go to Panchavati said Agastya to Rama

{அகஸ்தியர்}, "இராமா[1], நான் உன்னில் பிரீதி அடைகிறேன். நீ பத்ரமாக {நலமாக} இருப்பாயாக. இலக்ஷ்மணா, நீங்கள் இருவரும், சீதையுடன் வந்து என்னை வணங்கியதில் நிறைவடைகிறேன்.(1) வழிநடந்த சிரமத்தின் அதிக களைப்பு உங்கள் இருவரையும் வருத்துகிறது {என்பதை உங்கள் மேல்கழுத்து [மேல்கழுத்தில் உள்ள வியர்வை] வெளிப்படுத்துகிறது}[2]; இளைப்பாற ஆவலுற்றிருக்கும் ஜனகாத்மஜையான மைதிலியிடம் உங்கள் இருவரையும்விட அதிகமாகத் தெரிகிறது.(2) சுகுமாரியும் {மென்மையானவளும்}, துன்பத்தால் பீடிக்கப்படாதவளுமான இவள், பர்த்தாவிடமுள்ள சினேகத்தால் {கணவனிடமுள்ள அன்பால்} தூண்டப்பட்டு எல்லையற்ற தோஷங்களை {துன்பங்களை / குற்றங்களைக்} கொண்ட வனத்திற்கு வந்திருக்கிறாள்.(3) இராமா, இந்த சீதை இங்கே எப்படி மகிழ்ந்திருப்பாளோ அப்படியே நீ செயல்படுவாயாக {அவள் இங்கே மகிழ்ந்திருக்கும் வகையில் நீ செயல்படுவாயாக}. வனத்திற்கு உன்னைப் பின்தொடர்ந்து வந்தது இவள் செய்த செயற்கரிய காரியமாகும்.(4) 

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில் மட்டும் இதற்கு முன் தண்டகவனத்தின் முன்வரலாற்றைச் சொல்லும் 39 சுலோகங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவை வேறு எந்தப் பதிப்பிலும் காணப்படவில்லை.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் "உத்கண்டம்" என்ற சொல்லுக்கு, இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். முகத்தின் பக்கவாட்டில் கழுத்துக்குமேல் என்பது ஒரு பொருள், ஓய்வெடுப்பதற்கான ஆவல் என்பது மற்றொரு பொருள். எனவே, அவர்கள் வியர்வையால் நனைந்திருந்தனர் என்றோ, காட்டில் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஓய்வுக்காக ஏங்கினர் என்றோ பொருள் கொள்ளலாம்.

இரகுநந்தனா, சீராக {கணவர்கள் வளமாக} இருக்கையில் அனுபவிப்பார்கள், சீரற்று {வளமற்று} இருக்கையில் கைவிடுவார்கள்; சிருஷ்டி முதலே ஸ்திரீகளின் இயல்பு இவ்வாறே இருக்கிறது.(5) பெண்கள், நூற்றுக்கணக்கில் மின்னும் இடியின் பாய்ச்சலையும் {மின்னலின் நிலையாமையையும்}, ஆயுதங்களின் கூர்மையையும், கருடன், வாயு ஆகியோரின் வேகத்தையும் கொண்டவர்கள்[3].(6) உன் பாரியை {உன் மனைவியான சீதை} இந்த தோஷங்களேதும் இல்லாதவள். அருந்ததி தேவியைப் போல சிலாகிக்கப்படவும் {மெச்சப்படவும்}, போற்றப்படவும் தகுந்தவள்[4].(7) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, ராமா, சௌமித்ரியுடனும், இந்த சீதையுடனும் நீ எங்கே வாழ்ந்தாலும் அந்த தேசம் {அந்த இடம் பாக்கியத்தால்} அலங்கரிக்கப்பட்டதாக இருக்கும்" {என்றார் அகஸ்தியர்}.(8)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இடியின் மின்னல்கள் தங்கள் நிலையாமைக்குப் புகழ்பெற்றவை, அவ்வாறே மின்னல்வேக இதயங்களைக் கொண்ட பெண்களின் மனப்போக்கையும் கணிக்க இயலாது. நீண்ட நெடிய நட்பையும் கத்தி போன்ற தங்கள் கூரிய மனோபாவத்தால் துண்டித்துக் கொள்வார்கள். அவர்கள் சுகமாக இல்லையென்றால் கழுகு அல்லது காற்றின் வேகத்தில் பல உறவுகளை வெட்டிவிடுவார்கள்" என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அருந்ததி தேவி வசிஷ்ட முனிவரின் மனைவியாவாள். கணவனிடம் கொண்ட பக்திக்காகப் போற்றப்படும் அவள், அந்த பக்தியின் விளைவாகவே வானில் ஒரு நக்ஷத்திரமாகத் திகழ்கிறாள். திருமணங்களிலும், அனைத்துக் காரியங்களின் நிறைவிலும், அது நடுப்பகல் வேளையாக இருப்பினும், கணவன் மனைவி பக்தியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக வானில் உள்ள இந்த நக்ஷத்திரம் இன்றளவிலும் {மணமக்களுக்குக்} காட்டப்படுகிறது" என்றிருக்கிறது.

முனிவர் இவ்வாறு சொன்னதும், ராகவன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அனலனைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த ரிஷியிடம் இந்த வாக்கியங்களைப் பணிவுடன் பேசினான்:(9) "உடன் பிறந்தானுடனும், பாரியையுடனும் கூடிய என் குணத்தில் என் குருவான முனிபுங்கவர் நிறைவடைந்ததால், நான் அனுக்கிரகம் பெற்ற தன்யனானேன்.(10) ஆனால், ஆசிரமபதம் எழுப்பி எங்கே சுகமாக நான் வசிக்க முடியுமோ அத்தகையதும், நீருடனும், கானகங்கள் பலவற்றுடனும் கூடியதுமான தேசத்தை எனக்குக் காட்டுவீராக" {என்று கேட்டான் ராமன்}.(11)

அப்போது, தர்மாத்மாவும், தீரருமான அந்த முனிசிரேஷ்டர் {அகஸ்தியர்}, ராமன் சொன்ன சொற்களைக் கேட்டு, ஒரு முஹூர்த்த காலம் தியானம் செய்து, தீரமிக்க இந்த சொற்களைச் சொன்னார்:(12) "தாதா {ஐயா}, ஏராளமான கிழங்குகளும், பழங்களும், நீரும் கொண்டதும், மான்கள் பலவற்றைக் கொண்டதும், செழிப்புமிக்கதும், புகழ்பெற்றதுமான பஞ்சவடி என்ற தேசம் {இடம்} இங்கிருந்து இரண்டு யோஜனைகள் {18.18 மைல் / 29.25 கி.மீ} தொலைவில் இருக்கிறது.(13) நீ, சௌமித்ரி சகிதனாக அங்கே சென்று ஆசிரமபதம் எழுப்பி, உன் பிதா சொன்ன வாக்கியத்திற்கு இணக்கமாக அங்கே இன்புற்றிருப்பாயாக[5].(14) 

[5] வ.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இதற்கடுத்து இன்னும் இரண்டு சுலோகங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அப்பதிப்பில் இந்த சர்க்கம் 27 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவ்விரு சுலோகங்களின் பொருள் பின்வருமாறு: "இராகவா, நரேந்திரன் {தசரதன்} உனக்கான காலம் என எதை நிர்ணயித்தானோ அந்தக் காலம் வெகுவாகக் கடந்துவிட்டது. காகுத்ஸ்தா, பிரதிஜ்ஞையை முழுமையாக நிறைவேற்றிவிட்டு உன் ராஜ்ஜியத்தில் நீ சுகமாக வசித்திருப்பாய். இரகுநந்தனா, ராமா, உன்னைப் போன்ற மூத்த மகனைப் பெற்ற உன் பிதா {தசரதன்}, மன்னன் யயாதியைப் போல அருளப்பட்டவனாகவும், விடுபட்டவனாகவும் இருக்கிறான்". 

அனகா {பாவமற்றவனே}, நான் செய்த தபத்தின் பிரபாவத்தாலும், தசரதனிடம் கொண்ட சினேகத்தாலும் உன்னைக் குறித்த விருத்தாந்தங்கள் {கதைகள்} அனைத்தையும் நான் அறிவேன்.(15) நான் உன்னை என்னுடன் இந்த தபோவனத்தில் வசிக்கச் சொல்லியிருந்தாலும், உன் ஹிருதயத்தில் உள்ள உறுதியையும் என் தபத்தால் அறிவதால், நான் சொல்வது போல பஞ்சவடிக்குச் செல்வாயாக.(16,17அ) இராகவா, அந்த வனோதேசம் {வனப்பகுதி} ரம்மியமானது. சிலாகிக்கத்தகுந்த அந்த தேசம் {இடம்} இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. மைதிலியும் அங்கே மகிழ்ந்திருப்பாள்.(17ஆ,18அ) மஹாபாஹுவே, ஏகாந்தமானதும் {தனிமையானதும்}, புண்ணியம் நிறைந்ததும் ரம்மியமானதுமான அவ்விடத்தில், ஏராளமான கிழங்குகள், பழங்கள், நானாவித பறவைக்கூட்டங்களுடன் கூடிய கோதாவரியின் சமீபத்தில் மைதிலி மகிழ்ந்திருப்பாள்.(18ஆ,19) இராமா, நல்ல ஆசாரத்தையும், ரக்ஷிக்கும் சக்தியையும் கொண்ட நீ, தபஸ்விகளை பரிபாலித்துக் கொண்டு அங்கே வசித்திருப்பாயாக.(20) வீரா, இந்த மஹத்தான மதூக மர வனத்திற்கு {இலுப்பை மரக்காட்டிற்கு} வடக்கில் உள்ள ஓர் ஆலமரத்தை நோக்கிச் செல்வாயாக.(21) அங்கே உள்ள மேட்டு ஸ்தலத்தில் ஏறினால், பர்வதத்தின் அருகில், நித்தியம் புஷ்பித்திருக்கும் கானகத்துடன் கூடிய புகழ்பெற்ற பஞ்சவடி இருக்கிறது[6]" {என்றார் அகஸ்தியர்}.(22) 

[6] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பின் அடிக்குறிப்பில், "வீர, இலுப்பை விருக்ஷங்களினது பெரிய காடு இதோ காணப்படுகிறது. ஆலமரத்திற்குக் கொண்டு போய்விடும் இதனது வடக்கு வழியாலே போக வேண்டும். அங்கிருந்து ஓர் உயர்ந்த பூமியை ஏறி மலையின் சமீபத்தில் எக்காலத்திலும் புஷ்பிக்கும் மரங்களுடையதென பிரசித்தபெற்ற இடம் பஞ்சவடியென்பது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இதோ இலுப்பைமரக் காடு தோற்றுகின்றதே, இதற்கு வடக்காக அதோ பெரிய ஆலமரத்தைச் சேரும் வழிபற்றிச் செல்வீர்களாகில் அந்த மலையின் சமீபத்தில் பெரிய மேடு எதிர்ப்படும்; அதன் மேலேறிச் செல்க; அவ்விடத்திலேயே பஞ்சவடியென்பது இருக்கின்றது; அது எப்பொழுதும் மலர்கள் மலர்ந்தும், கனிகள் பழுத்தும், தளிர்கள் தளிர்த்தும், தழைத்தும் விளங்குமென்றுரைசெய்தனர்" என்றிருக்கிறது. அகஸ்தியர் சுட்டும் இடம் அவரது ஆசிரமத்தில் இருந்து இரண்டு யோஜனைகள் தொலைவில் இருப்பதாக 13ம் சுலோகத்தில் அவரே சொல்கிறார். அதாவது 18.08 மைல்கள், அதாவது 29.25 கி.மீ.. இங்கே அகஸ்தியர் ராமனை வடக்கில் செல்லச் சொல்வதால் ராமன் தெற்கில் அதிக தூரம் செல்லவில்லை. இராமாயணம் சொல்லும் இலங்கையே தெற்கில் இல்லை. மேற்கில் குஜராத்தின் அருகில் இருக்கிறது என்றும், வடக்கில் எங்கோ இருக்கிறது என்றும், மத்திய இந்தியாவில் எங்கோ இருக்கிறது சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அந்தக் கருத்தை அடைவதற்கான முக்கிய புள்ளிகளில்  இந்த சுலோகமும் ஒன்றாகும்.

அகஸ்தியர் இவ்வாறு சொன்னதும், சௌமித்ரி சகிதனான ராமன், சத்தியவாதியான அந்த ரிஷியை நன்கு கௌரவித்து விடைபெற்றுக் கொண்டான்.(23) அவர் அனுமதி கொடுத்ததும், அவரை {அகஸ்தியரை} வணங்கிய அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, சீதை சகிதராக அந்த ஆசிரமத்தில் இருந்து பஞ்சவடியை நோக்கிச் சென்றனர்.(24) போரில் அச்சமற்றவர்களும், நராதிபாத்மஜர்களுமான {ராஜகுமாரர்களுமான} அவர்கள், விற்களை எடுத்துக் கொண்டும், தூணிகளைக் கட்டிக் கொண்டும், அந்த மஹரிஷி உபதேசித்த பாதையில் தீர்மானமாக பஞ்சவடிக்குச் சென்றனர்.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 13ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Sunday, 5 March 2023

படைக்கலம் நல்கிய அகஸ்தியர் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 12 (37)

Agastya gave arms | Aranya-Kanda-Sarga-12 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோருக்கு விருந்தோம்பல் செய்த அகஸ்தியர்; அவரிடம் இருந்து தெய்வீக வில்லையும், பல்வேறு ஆயுதங்களையும் பெற்றுக் கொண்ட ராமன்...

Rama receives weapons from Agastya

இராகவனின் தம்பியான லக்ஷ்மணன் அந்த ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்து, அகஸ்தியரின் சிஷ்யரை அணுகி, இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(1) "தசரதர் என்ற பெயரைக் கொண்ட ராஜாவின் மூத்த மகனும், பலவானுமான ராமர், தன் பாரியையான சீதை சஹிதராக {அகஸ்திய} முனிவரைக் காண்பதற்கு வந்திருக்கிறார்.(2) அவருடன் பிறந்த தம்பியும், அவரது ஹித அனுகூலனும் {நலன்விரும்பியும்}, பக்தனுமான என் பெயர் லக்ஷ்மணன். இஃது உமது செவிகளை எட்டியிருக்கலாம் {உமக்கும் இவை தெரிந்திருக்கலாம்}.(3) இத்தகைய நாங்கள், பிதாவின் சாசனத்தால் {ஆணையால்} இந்த உக்கிர வனத்திற்குள் பிரவேசித்தோம். நாங்கள் அனைவரும் {அகஸ்திய} பகவானைக் காண விரும்புகிறோம் என்று {அவரிடம்} தெரிவிப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(4)

அந்த தபோதனர் {அகஸ்தியரின் சிஷ்யர்}, லக்ஷ்மணனின் அந்தச் சொற்களைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, அதைத் தெரிவிப்பதற்காக அக்னி சரணத்திற்குள் {அக்னிஹோத்ர ஆலயத்திற்குள்} பிரவேசித்தார்.(5) அகஸ்தியருக்கு சம்மதமுள்ள {ஏற்புடைய} சிஷ்யரான அவர், விரைந்து பிரவேசித்து, செய்த தபத்தால் {கண்ணெடுத்துப்} பார்க்கவும் முடியாதவராக விளங்கும் அந்த முனிசிரேஷ்டரிடம் {சிறந்த முனிவரான அகஸ்தியரிடம்} கைகளைக் கூப்பிக் கொண்டு, ராமனின் வரவைக் குறித்து லக்ஷ்மணன் சொன்னதைப் போலவே இவ்வாறு சொன்னார்:(6,7அ) "பாரியையான சீதை சஹித ராமன், லக்ஷ்மணன் என்ற தசரத புத்திரர்கள் இருவரும் ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்திருக்கின்றனர்.(7ஆ,8அ) அந்த அரிந்தமர்கள் {பகைவரை அழிப்பவர்களான அவர்கள்} உமக்குத் தொண்டாற்றும் நோக்கில், உம்மைக் காண இங்கே வந்திருக்கிறார்கள். அனந்தரம் {அடுத்து} என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணையிடுவதே உமக்குத் தகும்" {என்றார் அந்த சிஷ்யர்}.(8ஆ,9அ)

அந்த சிஷ்யரின் மூலம் ராமன், லக்ஷ்மணன், மஹாபாக்யவதியான வைதேஹி ஆகியோரின் வரவைக் கேட்டவர் {அகஸ்தியர்}, இந்தச் சொற்களைச் சொன்னார்:(9ஆ,10அ) "உண்மையில் என் மனம் நீண்ட  காலமாக எவனது வரவுக்காக ஏங்கியதோ, அந்த ராமன் இன்று என்னைக் காண வந்திருப்பது நற்பேறே.(10ஆ,11அ) அவர்களை ஏன் பிரவேசிக்கச் செய்யவில்லை? செல்வாயாக. ராமனையும், அவனது பாரியாளையும் {மனைவியையும்}, லக்ஷ்மணனையும் வரவேற்று என் சமீபத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக" {என்றார் அகஸ்தியர்}. (11ஆ,12அ)

தர்மஜ்ஞரும், மஹாத்மாவுமான அந்த முனிவர் இவ்வாறு சொன்னதும், அந்த சிஷ்யர் கைகளைக் கூப்பி வணங்கி, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார்.(12ஆ,13அ) பிறகு, குழப்பத்துடன் {பரபரப்புடன்} வெளிப்பட்ட அந்த சிஷ்யர், லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னார், "இந்த ராமர் எங்கே? முனிவர் காண ஹேதுவாக தானே பிரவேசிக்கட்டும்" {என்றார்}.(13ஆ,14அ) 

பிறகு லக்ஷ்மணன், அந்த சிஷ்யருடன் வெளியே ஆசிரமபதத்திற்குச் சென்று, காகுத்ஸ்தனையும் {ராமனையும்}, ஜனகாத்மஜையான சீதையையும் அவருக்குக் காட்டினான்.(14ஆ,15அ) சிஷ்யர், அகஸ்தியரின் வாக்கியங்களைப் பணிவுடன் சொல்லி, வரவேற்புக்குத் தகுந்தவனான அவனை {ராமனை} நன்கு வரவேற்று, தகுந்த முறையில் பிரவேசிக்கச் செய்தார்.(15ஆ,16அ) இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் சாந்தமான மான்கள் நிறைந்த அந்த ஆசிரமத்தைப் பார்த்தபடியே {ஆசிரமத்திற்குள்} பிரவேசித்தனர்.(16ஆ,17அ) 

அங்கே அவன் பிரம்ம ஸ்தானம் {பிரம்மனின் ஆலயம்}, அதே போல அக்னி ஸ்தானம்,{17ஆ} விஷ்ணு ஸ்தானம், மஹேந்திர {இந்திர} ஸ்தானம், அதேபோல விவஸ்வத {சூரிய} ஸ்தானம், சோம {சந்திரன்} ஸ்தானம், பக {சிவ / செல்வதேவ} ஸ்தானம், குபேர ஸ்தானம்,{18} தாதா விதாதா ஸ்தானம், அதேபோல வாயு ஸ்தானம், மஹாத்மாவும், பாசஹஸ்தனுமான வாருண ஸ்தானம் {கைகளில் பாசக் கயிற்றைக் கொண்டவனுமான வருணனின் ஆலயம்}, அதே போல காயத்ரீ ஸ்தானம், வஸுக்கள் ஸ்தானம், நாகராஜ {ஆதிசேஷ} ஸ்தானம், கருட ஸ்தானம்,{20 கார்த்திகேய ஸ்தானம், தர்மஸ்தானம் ஆகியவற்றைக் கண்டான்[1].(17ஆ-21அ) அப்போது, சிஷ்யர்களால் சூழப்பட்டவராக அம்முனிவர் {அகஸ்தியர்} விரைந்து வந்து கொண்டிருந்தார். தேஜசால் ஒளிர்ந்து கொண்டிருந்த ராமனும், எதிரில் வந்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டான்.(21ஆ,22அ) அந்த வீரன் {ராமன்}, லக்ஷ்மிவர்தனனான {செல்வத்தை / செல்வாக்கை அதிகரிப்பவனான} லக்ஷ்மணனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "இலக்ஷ்மணா, பகவானான அகஸ்திய ரிஷி இதோ வருகிறார். தகைமைமிக்க இவரை நான் தபங்களின் கொள்ளிடமாகக் கருதுகிறேன்" {என்றான் ராமன்}.(22ஆ,23)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சரணாலயங்கள், குறிப்பிட்ட தெய்வங்களை வழிபட அவர்களை இருப்புக்கு அழைப்பதற்கென ஆசிரமங்களில் அமைந்திருக்கும் புனித இடங்களாகும் {கோவில்களாகும்}. வேத கோட்பாட்டின்படி, பொதுவாக இவை எண்ணிக்கையில் பதினேழாக இருக்கும். இந்த இடங்கள் அனைத்தையும் கடந்த பிறகே ஹோம குண்டம், அதாவது வேள்விப்பீடம் வரும். எனவே, ஆசிரமங்களுக்குள்ளே வேறு எவரையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் ஆசிரமபதம் என்றழைக்கப்படும் ஆசிரம வாயிலிலேயே / முகப்புப் பகுதியிலேயே இருக்க வேண்டும். அதனாலேயே ராமன் ஆசிரமத்திற்குள் நுழைவதற்கான அனுமதியை வேண்டி நின்றான்" என்றிருக்கிறது. இந்த நடைமுறையை அகஸ்தியரிடம் மட்டும் பின்பற்றுவதற்கான நோக்கம் என்ன என்பதற்கு விடையில்லை என்றாலும், இந்த சர்க்கத்தின் 32 முதல் 36ம் சுலோகம் வரையிலுள்ள செய்தியின் பொருள் இதற்கான மறைமுக பதிலைச் சொல்லுவதாகவும் இருக்கக்கூடும். இராமாயணத்தின் செம்பதிப்பைத் தழுவிய பிபேக்திப்ராய் பதிப்பில், "பிரம்மா, அக்னி, விஷ்ணு, மஹேந்திரன், விவஸ்வான், சோமன், பகன், குபேரன், தாதா விதாதா, வாயு" ஆகியோருக்கான 10 ஆலயங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. இங்கே குறிப்பிடப்படும் ஆலங்களில் சிவனுக்கென்ற ஓராலயம் இல்லையே என்று பல பதிப்புகளின் அடிக்குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இங்கே சுட்டப்படும் பகன் என்பது ஓர் ஆதித்யனைக் குறித்தாலும், ருத்ர வடிவத்தையும் குறிக்கும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், இந்த இடத்தில், "பகரென்னும் சிவபெருமான் ஆலயத்தையும்" என்று வருகிறது.

மஹாபாஹுவான அந்த ரகுநந்தனன், சூரியப் பிரகாசம் கொண்ட அகஸ்தியரைக் குறித்து இவ்வாறு சொல்லிவிட்டு, {நெடுஞ்சாண்கிடையாகத் தரையில்} விழுந்து அவரது பாதங்களை பற்றிக் கொண்டான்.(24) தர்மாத்மாவான அந்த ராமன், வைதேஹியான சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் சேர்ந்து அவரை வணங்கிவிட்டு, கைகளைக் கூப்பியபடி நின்றான்.(25) ஆசனமும் {இருக்கையும்}, நீரும் கொடுத்து காகுத்ஸ்தனை {ராமனை} வரவேற்று, குசலம் விசாரித்தவர் {அகஸ்தியர்}, "அமர்வாயாக" என்று சொன்னார்.(26) அதிதி பூஜை செய்து {விருந்தினரை வரவேற்று}, அக்னிக்குக் காணிக்கை அளித்தவர் {அகஸ்தியர்}, அர்க்கியம் கொடுத்து, வானப்ரஸ்த தர்மத்திற்குகந்த போஜனத்தையும் {உணவையும்} அவர்களுக்குக் கொடுத்தார்.(27) தர்மஜ்ஞரான அந்த முனிபுங்கவர் {அகஸ்தியர்}, தமது ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர், கைகளைக் கூப்பி நின்றிருந்த தர்மகோவிதனான ராமனிடம் {தர்மத்தை அறிந்தவர்களில் சிறந்தவனான ராமனிடம் பின்வருமாறு} சொன்னார்:(28) "காகுத்ஸ்தா, அக்னிக்குக் காணிக்கையளித்து, அர்க்கியம் கொடுத்து, அதிதி பூஜை செய்தவன் {விருந்தோம்பல் செய்தவன்}[2], தபஸ்விகளுக்கான நடைமுறையில் இருந்து மாறுபட்டால், போலி சாக்ஷியை {பொய் சாட்சி அளித்தவனைப்} போன்று பரலோகத்தில் தன் மாமிசத்தையே பக்ஷிப்பான் {தன் சதையையே உண்பான்}.(29)  சர்வலோகத்தின் ராஜாவும், தர்மசாரியும் {அறவழியில் நடப்பவனும்}, மஹாரதனும் {பெரும் போர்வீரனும்}, பூஜைக்கும், மதிப்புக்கும் தகுந்தவனுமான நீ, பிரிய அதிதியாக {அன்புக்குரிய விருந்தினனாக} வந்திருக்கிறாய்" {என்றார் அகஸ்தியர்}[3].(30)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு விருந்தினன், விருந்து அளிப்பவனை சொர்க்கங்களுக்குத் தகுந்தவனாக்குகிறான். "அக்னி வழிபாட்டிற்குப் பிறகும், உணவு உண்பதற்கு முன்பும் வருபவன் {விருந்தாளி} அன்புக்குரியவனாகவோ, இகழத்தகுந்தவனாகவோ, மூடனாகவோ, அறிஞனாகவோ இருப்பினும் விருந்தளிப்பவனை அவன் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறான்" என்று பராசர சூத்திரம் சொல்கிறது. போலி சான்றளிக்கும் எந்த போலி சாட்சியும், நரகத்திற்கு மட்டும் செல்லாமல், தன் சதையையே உண்ணும் நிலைக்கும் ஆளாவான். விருந்தோம்பல் செய்பவனின் விஷயத்திலும் இதே நிலைதான்" என்றிருக்கிறது. அதாவது, போலியாக உபசரிப்பவனின் நிலையும் இதேதான் என்பது பொருள்.

[3] 30ம் சுலோகத்தை முதலிலும், 29ம் சுலோகத்தை அதற்கடுத்தும் படித்தால் பொருள் சரியாக விளங்கும்.

இவ்வாறு சொன்ன அகஸ்தியர், ராகவனை {ராமனைப்} பூஜித்து, அவனது விருப்பத்திற்குரிய பழங்கள், கிழங்குகள், புஷ்பங்கள் மற்றும் பிற பொருட்களையும் கொடுத்த பிறகு {பின்வருமாறு} சொன்னார்:(31) "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, ஹேம வஜ்ரங்களால் {பொன்னாலும், வைரங்களாலும்} அலங்கரிக்கப்பட்டதும், மஹத்தானதும், திவ்யமானதுமான இந்த வைஷ்ணவ வில்லை {விஷ்ணுவின் வில்லை}[4] விசுவகர்மன் நிர்மாணித்தான். சூரியப் பிரகாசம் கொண்டவையும், அமோகமானவையுமான {வீணாகாதவையுமான} இந்த உத்தம சரங்களை பிரம்மன் தத்தம் செய்தான்.(32,33அ) வற்றாதவையும், பாவகனை {அக்னியைப்} போல ஜுவலிக்கும் கூரிய பாணங்கள் நிறைந்தவையுமான இந்தத் தூணிகளையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், பொன்னுறையுடன் கூடியதுமான இந்த வாளையும் மஹேந்திரன் எனக்கு தத்தம் செய்தான்.(33ஆ,34) இராமா, பூர்வப் போரொன்றில், இந்த தனுசைக் கொண்டே மஹாசுரர்களைக் கொன்று, திவோகஸர்களின் {சொர்க்கவாசிகளின்} செழிப்பையும், பிரகாசத்தையும் விஷ்ணு மீட்டான்.(35) மாநதா {கௌரவத்தை அளிப்பவனே, ராமா},  இந்த தனுவையும், தூணிகளையும் {அம்பறாத்தூணிகள் இரண்டையும்}, சரங்களையும், கட்கத்தையும் {வாளையும்}, ஜயத்துக்காக வஜ்ரத்தை ஏந்தும் வஜ்ரதாரிப் போல {வெற்றி அடைவதற்காக வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரனைப் போலப்} பெற்றுக் கொள்வாயாக[5]" {என்றார் அகஸ்தியர்}.(36) 

[4] தாதாசாரியர் பதிப்பில், "இங்கே பாராய், இந்த வில் விஸ்வகர்மனா லியற்றப்பட்ட ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய கோதண்டம்" என்றிருக்கிறது. இராமனை கோதண்டபாணி {கோதண்ட வில்லைத் தரித்தவன்} என்பார்கள். மூலத்தில் வைஷ்ணவில் {விஷ்ணுவின் வில்} என்றே இருக்கிறது.

[5] விழுமியது சொற்றனை இவ்வில் இது இவன் மேல்நாள்
முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும்
வழிபட இருப்பது இது தன்னை வடிவாளிக்
குழு வழு இல் புட்டிலொடு கேடி என நல்கி
இப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் 
முப்புரம் எரித்த தனி மொய்க்கணையும் நல்கா

- கம்பராமாயணம் 2685, 2686ம் பாடல்கள், அகத்தியப்படலம்

பொருள்: "சிறப்பானவற்றைச் சொன்னாய். இவ்விடத்திலுள்ள இந்த வில் முற்காலத்தில் முழுமுதல்வன் {திருமால் / விஷ்ணு} வைத்திருந்தது; மூவுலகும் நானும் வழிபட இருப்பது, இவ்வில்லையும், கூர்மையான வாளிகளுடன் {அம்புகளுடன்} கூடிய இந்தக் குற்றமில்லா அம்புப்புட்டியோடு எடுத்துக் கொள்வாயாக" என்று சொல்லிக் கொடுத்தவர் {அகஸ்தியர்}, இந்த புவனம் முழுவதையும் ஒரு தராசுத் தட்டில் வைத்தாலும் ஒப்பானது என்று சொல்வதற்கு இயலாத அரிதான வாளையும், வெப்பத்தை உருவமாகக் கொண்ட அரன் மஹாமேரு மலையை வில்லாகக் கொண்டு, திரிபுரம் எரித்த ஒப்பிலாத வலிய கணையையும் கொடுத்தார்.

மஹாதேஜஸ்வியான பகவான் அகஸ்தியர் இவ்வாறு சொல்லிவிட்டு, அந்தச் சிறந்த ஆயுதங்கள் அனைத்தையும் ராமனுக்குத் தத்தம் செய்துவிட்டு, மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்.(37)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 12ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Friday, 3 March 2023

அகஸ்தியரின் மகிமை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 11 (94)

The Glory of Agastya | Aranya-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தர்மபிருத முனிவர்; மாண்டகர்ணி முனிவரும் பஞ்சாப்சரஸ் தடாகமும்; வனவாசத்தில் பத்து வருடங்கள் கடந்தது; மீண்டும் சுதீக்ஷ்ணர்; அகஸ்தியரின் தம்பி; இல்வலன் வாதாபி; அகஸ்தியர் மஹிமை...

Mandakarni and Five apsaras

இராமன் முன்னே செல்ல, நடுவில் அழகிய இடையுடைய சீதையும், அவர்களுக்குப் பின்னால் தனுஷ்பாணியான {கையில் வில்லுடன் கூடிய} லக்ஷ்மணனும் பின்தொடர்ந்து சென்றனர்.(1) சீதை சகிதராகச் சென்ற அவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், விதவிதமான சைல வரிசைகளையும் {மலை வரிசைகளையும்}, விதவிதமான வனங்களையும், ரம்மியமான நதிகளையும் கண்டபடியே சென்றனர்.(2) நதிகளின் கரைகளில் திரியும் சாரஸங்களையும் {கொக்குகளையும்}, சக்கரவாகங்களையும், பத்மங்களுடனும் {தாமரைகளுடனும்}, ஜலத்தில் ஜனித்த பறவைகளுடனும் கூடிய சரஸ்களையும் {ஓடைகளையும்},(3) மான் கூட்டங்களையும், கொம்புகளுடன் கூடிய மதங்கொண்ட மஹிஷங்களையும் {எருமைக்கடாக்களையும்}, வராஹங்களையும் {பன்றிகளையும்}, மரங்களின் வைரிகளான நாகங்களையும் {மரங்களை அழிக்கும் யானைகளையும்} கண்டனர்.(4) 

ஒருங்கே வெகு தூரம் கடந்த அவர்கள், திவாகரன் {சூரியன் மேற்கில்} சாயும்போது, ஒரு யோஜனை அகலமுடையதும், சிவப்பு, வெள்ளை பத்மங்களால் {செந்தாமரைகளாலும், வெண்தாமரைகளாலும்} அலங்கரிக்கப்பட்டதும், கஜ மந்தைகள் {யானைகள்} விளையாடிக் கொண்டிருப்பதும், சாரஸங்கள் {கொக்குகள்}, ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, காதம்பங்கள் {வாத்துகள்} போன்ற நீர்ப்பறவைகளால் நிறைந்ததுமான ரம்மியமான தடாகம் ஒன்றைக் கண்டனர்.(5,6) தெளிந்த நீரைக் கொண்ட அந்த ரம்மியமான ஸரஸில், கீத வாத்திய கோஷங்கள் கேட்டனவென்றாலும் எவரும் காணப்படவில்லை.(7)

அப்போது, மஹாரதனான லக்ஷ்மணனுடன் கூடிய ராமன், தர்மபிருதர் என்ற பெயருடைய முனிவரிடம் இது குறித்து ஆர்வமுடன் {பின்வருமாறு} கேட்கத் தொடங்கினான்:(8) "மஹாமுனிவரே, இந்த அதி அற்புதத்தைக் கேட்கும் எங்கள் அனைவருக்கும் மஹத்தான குதூஹலம் உண்டாகிறது. இஃது ஏன் என்பதைச் சொல்வீராக. {பிரபுவே, விப்ரரே, இதுகுறித்து பெரும் ரகசியமேதுமில்லையென்றால் வெளிப்படுத்துவீராக[1]" என்று கேட்டான் ராமன்}.(9)

[1] { } என்ற அடைக்குறிக்குள் உள்ள செய்தி தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளிலும், பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயம்} தமிழ்ப் பதிப்பிலும் இல்லை. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி ஆங்கிலப் பதிப்பிலும், தாதாசாரியரின் தமிழ்ப் பதிப்பிலும் இருக்கிறது.

இராகவன் {இராமன்} இவ்வாறு கேட்டபோது, தர்மாத்மாவான அந்த முனிவர், அந்த ஸரஸின் பிரபாவத்தை {அந்தத் தடாகத்தின் மேன்மையைச்} சொல்லத் தொடங்கினார்:(10) "பஞ்சாப்ஸரஸ் என்ற பெயருடையதும், சர்வகாலத்திற்கானதுமான {எப்போதும் நீர் நிறைந்ததுமான} இந்தத் தடாகம், மாண்டகர்ணி முனிவரின் தபத்தால் நிர்மாணிக்கப்பட்டது.(11) மஹாமுனிவரான அந்த மாண்டகர்ணி, வாயுபக்ஷணம் செய்து {காற்றை மட்டுமே உண்டு}, ஜலத்தில் நின்று பத்தாயிரம் வருடங்கள் தீவிர தபம் செய்தார்.(12)  அப்போது, அக்னியை முதன்மையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் பெரிதும் குழப்பமடைந்தனர். ஓரிடத்தில் ஒன்றுகூடிய அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் {பின்வரும்} சொற்களைச் சொன்னார்கள்:(13) அந்த திரிதிவவாசிகள் {சொர்க்கவாசிகள்} அனைவரும், "இந்த முனி {மாண்டகர்ணி}, நம்மில் எவரோ ஒருவருடைய ஸ்தானத்திற்காகவே இவ்வாறு பிரார்த்திக்கிறான்" என்று சொல்லி மனம் கலங்கினர்.(14) 

எனவே அந்த சர்வதேவர்களும், அவரது தபத்திற்கு விக்னம் விளைவிப்பதற்காக, ஒளியில் மின்னலைப் போன்று பிரகாசிக்கும் பிரதான அப்சரஸ்களை நியமித்தனர்(15). பராபரங்களை {இம்மையும், மறுமையும்} அறிந்தவரான அந்த முனிவரை {மாண்டகர்ணி}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற வந்த அந்த அப்ரசஸ்கள் மதன வசியம் செய்தனர்.(16) இவ்வாறே அந்த பஞ்ச {ஐந்து} அப்சரஸ்களும் முனிவரின் பத்தினிகளானார்கள். அவர் இந்தத் தடாகத்தின் உள்ளே {மறைவாக} அவர்களுக்கான கிருஹத்தை நிர்மாணித்தார்.(17) அங்கே சுகமாக வசிக்கும் பஞ்ச அப்சரஸ்களும், தப யோகத்தால் யௌவனத்தை {இளமையை} அடைந்த அந்த முனிவருடன் இன்புற்றிருக்கின்றனர்.(18) அங்கே விளையாடும் அவர்களின் ஆபரண ஒலியும், வாத்தியங்களின் ஒலியும் கலந்து வெளிப்படும் கீதத்தின் சப்தமே இப்படி மனோஹரமாகக் கேட்கிறது" {என்றார் தர்மபிருதர்}.(19) 

பெரும்புகழ்பெற்றவனும்,  உடன்பிறந்தானுடன் கூடியவனுமான ராகவன் {ராமன்}, "இஃது ஆச்சரியம்தான்" என்று சொல்லித் தன்னை உணர்ந்த அந்த ஆத்மாவின் {தர்மபிருதரின்} சொற்களை,  ஏற்றுக் கொண்டான்.(20) இவ்வாறு சொன்ன ராமன், பிறகு, குசப்புற்களாலும் {தர்ப்பைகளாலும்}, மரவுரிகளாலும் சூழப்பட்டவையும், எங்கும் பிரம்ம அருளால் நிறைந்திருந்தவையுமான ஆசிரம மண்டலத்தை {ஆசிரமங்களின் வரிசையைக்} கண்டு, வைதேஹி, லக்ஷ்மணன் சஹிதனாக அங்கே பிரவேசித்தான்.(21,22அ) அந்தக் காகுத்ஸ்தன், செழிப்பான அந்த ஆசிரம மண்டலத்தில், மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்டவனாக சுகமாக வசித்திருந்தான். மஹா அஸ்திரவித்தான {பெரும் அஸ்திரங்களைப் பயன்படுத்துவதில் நிபுணனான} அவன், அருகருகே வசித்த தபஸ்விகளின் ஆசிரமங்களுக்கு பூர்வத்திலும் {ஒருமுறையும்}, மறுமுறையும் {என மாறிமாறிச்} சென்றான்.(22ஆ-24அ) 

இராகவன், சிலவற்றில் {சில ஆசிரமங்களில்} சுமார் பத்து மாசங்களும், சிலவற்றில் ஒரு வருடமும், சிலவற்றில் நான்கு மாசங்களும், சிலவற்றில் ஐந்து மாசங்களும், வேறு சிலவற்றில் ஆறு மாசங்களும், சிலவற்றில் ஒரு மாசம் அதிகமாகவும் {ஏழு மாதங்களும்}, சிலவற்றில் ஒன்றரை மாசத்திற்கு அதிகமாகவும் {ஏழரை மாதம் / ஒன்றரை மாதம்}, சிலவற்றில் மூன்று மாசங்களோ, எட்டு மாசங்களோவென சுகமாக வாழ்ந்துவந்தான்.(24ஆ-26அ) அந்த முனிவர்களின் ஆசிரமங்களில் இவ்வாறு மகிழ்ச்சியாக வசித்து வந்த அந்தப் பத்து வருடங்களும் அவனுக்கு அனுகூலமாகவே கடந்து சென்றன[2].(26ஆ,27அ) தர்மஜ்ஞனான ஸ்ரீமான் ராகவன், சீதை சஹிதனாக இவ்வாறே மீண்டும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(27ஆ,28அ) அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} அந்த ராமன், அந்த ஆசிரமத்தை அடைந்ததும், முனிவர்களால் பூஜிக்கப்பட்டவனாக சிறிது காலம் அங்கேயே வசித்திருந்தான்.(28ஆ,29அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேற்சொன்ன கணக்கின்படி 60 மாதங்கள், அதாவது ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இங்கே பத்து வருடங்கள் சுகமாகக் கழிந்ததாகச் சொல்லப்படுகிறது. மேற்சொன்ன மாதங்களில் எண்ணிக்கையைக் கூட்டுவதில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் பத்து வருடங்கள் என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த வனவாச காலம் பதினான்கு ஆண்டுகளாகும். அதில் இங்கே பத்து வருடங்கள் கழிந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்திரகூடத்தில் இரண்டு வருடங்கள் கழிந்தன. சீதையைத் தேடுவதற்கும், இறுதிப் போருக்கும் இரு வருடங்கள் ஆகும்" என்றிருக்கிறது. மேலே அதிகமெனச் சொல்லுமிடங்களிலெல்லாம் 15 நாட்களைக் கூட்டினாலும் 58 மாதங்கள்தான் வருகின்றன. மீண்டும் சுதீக்ஷ்ணரிடம் 2 மாதங்கள் என்று கொண்டால் 60 மாதங்கள் வருகின்றன. ஒவ்வொரு முனிவரின் ஆசிரமத்திலும் இருமுறை சென்றான் என்ற பொருளில் 22-24ம் சுலோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த ஆசிரம வரிசையில் ஒவ்வொரு ஆசிரமமாக வசித்துச் சென்று, மீண்டும் அதே வரிசைக்கிரமத்தில் ஒவ்வொரு ஆசிரமமாக மீண்டும் வசித்து வருகிறான். அதை உறுதி செய்வது போல் பின்வரும் 27ம் சுலோகத்தில் மீண்டும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்திற்குத் திரும்பும் செய்தி இருக்கிறது. அவ்வாறு கொண்டால் "எந்தத் தொல்லையுமின்றி பத்துவருடங்கள் கடந்த சென்றன" என்பது சரியாகவே வரும். 
 ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மாதவர்
சிந்தை எண்ணி அகத்தியற் சேர்க என
இந்து நன்னுதல் தன்னொடும் ஏகினார்.

- கம்பராமாயாணம் 2656ம் பாடல், அகத்தியப்படலம்

பொருள்: இராமலக்ஷ்மணர்கள் அவ்விடத்தில் பத்து ஆண்டுகள் துன்பமேதும் இல்லாமல் அமைதியாக வசித்திருந்தனர். பெருந்தபஸ்விகளான முனிவர்கள், ஆலோசித்து, "அகத்தியரிடம் செல்க" எனச் சொல்லவும், சந்திரனைப் போன்ற நெற்றியுடையவளுடன் {சீதையுடன்} சேர்ந்து அவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} புறப்பட்டனர்.

அந்த ஆசிரமத்தில் காகுத்ஸ்தன் தங்கியிருந்தபோது, ஒருநாள் தன்னருகில் அமர்ந்திருந்த மஹாமுனிவரான சுதீக்ஷ்ணரிடம் வினயத்துடன் {பணிவுடன்} இதைச் சொன்னான்:(29ஆ,30அ) "பகவானே, முனிசத்தமரான அகஸ்தியர் இந்த அரண்யத்தில் வசிப்பது குறித்த கதைகள் சொல்லப்படுவதை நித்தியம் கேள்விப்படுகிறேன்.(30ஆ,31அ) ஆனால் இந்த மஹத்தான வனத்தில், மதிமிக்கவரான அந்த மஹரிஷியின் புண்ணிய ஆசிரமபதம் இருக்கும் அந்த தேசத்தை {இடத்தை} நான் அறியமாட்டேன்.(31ஆ,32அ) பகவானே, உமது அருளால், தம்பியுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சீதையுடனும் அங்கே சென்று அகஸ்திய முனிவரை வணங்க விரும்புகிறேன்.(32ஆ,33அ) "அந்த முனிவரரை {சிறந்த முனிவரை} நானே நேரடியாக சேவிக்க முடியுமா?" என்ற இந்த மஹத்தான மனோரதம் என் ஹிருதயத்தில் மீண்டும் மீண்டும் எழுகிறது" {என்று கேட்டான்}.(33ஆ,34அ) 

அந்த சுதீக்ஷ்ண முனிவர், தர்மாத்மாவான ராமனின் இந்தச் சொற்களைக் கேட்டுப் பிரீதியடைந்து, அந்த தசரதாத்மஜனிடம் இதைச் சொன்னார்:(34ஆ,35அ) "இராகவா, நானுங்கூட, இவ்வாறு லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் அகஸ்தியரிடம் நீ செல்ல வேண்டுமென்பதையே சொல்ல விரும்பினேன்.(35ஆ,36அ) நல்லவேளையாக அதே அர்த்தத்தில் நீயே இப்போது என்னிடம் சொல்லிவிட்டாய். இராமா, அகஸ்திய மஹாமுனிவர் எங்கே இருக்கிறார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்[3].(36ஆ,37அ) தாதா {ஐயா}, இந்த ஆசிரமத்தில் இருந்து தெற்கு நோக்கி நான்கு யோஜனைகள்[4] சென்றால், அகஸ்தியருடன் பிறந்த மஹானின் {அகஸ்தியருடைய தம்பியின்} அழகிய ஆசிரமம் இருக்கும்.(37ஆ,இ) புஷ்பங்கள், பழங்கள் பலவற்றுடன் கூடிய அடர்ந்த பிப்பலிகளால் {அத்திமரங்களால்} அலங்கரிக்கப்பட்டதும், நானாவித பறவைகளால் ஒலிக்கப்பெற்றதுமான அந்த வனத்தின் மேட்டு ஸ்தலத்தில்,(38) தெளிந்த நீர் கொண்டவையும், புண்ணியமானவையும், ஹம்ஸங்களாலும் {அன்னப்பறவைகளாலும்}, காரண்டவங்களாலும் {நீர்க்காக்கைகளாலும்} நிரம்பியவையும், சக்கிரவாகங்களால் சோபிப்பவையுமான {பிரகாசிப்பவையுமான} விதவிதமான பத்மின்யங்கள் {தாமரையோடைகள்} இருக்கும். இராமா, அங்கேயே {அகஸ்தியருடைய தம்பியின் ஆசிரமத்திலேயே} ஓரிரவைக் கழித்துவிட்டு விடியலில் புறப்படுவாயாக.(39,40அ) தக்ஷிண {தென்} திசையை நோக்கி ஒரு யோஜனை தொலைவு {9.09 மைல் / 14.63 கி.மீ} சென்றால், அங்கே அடர்ந்த வனத்துடன் கூடிய அகஸ்தியரின் ஆசிரமபதம் இருக்கும்.(40ஆ,41அ) இரமணீயமான மரங்களால் சோபிக்கும் அந்த வனதேசத்தில் {வனப்பகுதியில்} வைதேஹியுடனும், லக்ஷ்மணனுடனும் நீ இன்புற்றிருப்பாயாக. பல்வேறு மரங்கள் நிறைந்த அந்த வனதேசம் உண்மையில் ரம்மியமானதாகும்.(41ஆ,42) மஹாமதிமிக்கவனே, அகஸ்திய மஹாமுனிவரை தரிசிக்கும் புத்தி ஏற்பட்டால், இன்றே செல்லும் தீர்மானமான புத்தியை அடைவாயாக" {என்றார் சுதீக்ஷ்ணர்}.(43)

[3] நல்லதே நினைத்தாய் அது நானும் முன் 
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ
செல்தி ஆண்டு அவற் சேருதி சேர்ந்தபின்
இல்லை நின்வயின் எய்தகில்லாதவே
அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்றுகாறும் நின்று ஏமுறுமால் அவற்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய்
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா

- கம்பராமாயணம் 2664, 2665ம் பாடல்கள், அகத்தியப்படலம்

பொருள்: "சிறந்தவனே, நீ நல்லதே நினைத்தாய். அதையே நானும் முன்பே சொல்லத் துணிந்தேன். அங்கே சென்று அம்முனிவரைச் சேர்ந்தபின் நீ அடைய முடியாத பேறுகள் ஏதும் இருக்காது.(2664) அன்றியும், உன் வரவை விரும்பி இன்றுவரை எதிர்பார்த்து இருந்தவர் {அகஸ்தியர்} மகிழ்வாராதலால் நீ அவரிடம் போய்ச் சேர்வாயாக. சிறந்தவனே, அவரைச் சேர்வது தேவருக்கும் நல்லது, மற்ற யாவருக்கும் நன்று" என்றார் {சுதீக்ஷ்ணர்}.

[4] கௌடில்யரின் அர்த்தசாஸ்திரப்படி, 1 யோஜனை 9.09 மைல்கள் என்றால், நான்கு யோஜனைகள் 36.36 மைல்களாகும், அதாவது சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில் இருந்து அகஸ்தியரின் தம்பியுடைய ஆசிரமம் வரைக்குமான தொலைவு 58.51 கி.மீ. ஆகும்.

முனிவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட ராமன், தன்னுடன் பிறந்தானுடன் சேர்ந்து அவரை வணங்கி, அகஸ்தியரை உத்தேசித்து தன்னைப் பின்தொடர்வானுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சீதையுடனும் புறப்பட்டான்.(44) அந்தப் பாதை மார்க்கமாகச் செல்லும்போது சித்திரவனங்களையும், மேகங்களைப் போன்ற பர்வதங்களையும், சரஸ்களையும் {தடாகங்களையும்}, ஆறுகளையும் கண்டு,{45} சுதீக்ஷ்ணர் சுட்டிக்காட்டிய பாதையைப் பின்பற்றியே சுகமாகச் சென்று, பரம மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(45,46) "புண்ணிய கர்மங்கள் செய்த மஹாத்மாவும், அகஸ்தியருடன் பிறந்தவருமான அந்த முனிவரின் {அகஸ்தியர் தம்பியின்} ஆசிரமபதம் இதுவே என்பது நிச்சயம் தெரிகிறது.(47) ஏராளமான பழங்கள், புஷ்பங்கள் ஆகியவற்றின் பாரத்தால் இந்த வனத்தின் பாதையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்திருப்பது என்னிடம் {சுதீக்ஷ்ணரால்} சொல்லப்பட்டது போலவே தெரிகிறது.(48) பக்குவமான பிப்பலிகளின் {கனிந்த அத்திப்பழங்களின்} புளித்தமணம் காற்றில் திடீரென எழுகிறது. இந்த கந்தம் {மணம்} இந்த வனத்தில் இருந்தே வருகிறது.(49) அடுக்கிவைக்கப்பட்ட விறகுகளின் குவியல்கள் ஆங்காங்கே தெரிகின்றன. வைடூரியம் {மரகதம்} போலப் பிரகாசிக்கும் தர்ப்பைகள் எங்கும் காணப்படுகின்றன.(50) ஆசிரமத்தில் இருந்து வெளிப்படும் பாவகனுடைய தூமத்தின் நுனி {வேள்வி நெருப்பின் புகை நுனி}, கருத்த மேகத்திற்கும், சிகரத்திற்கும் நிகராக வனத்தின் மத்தியில் எழுவது தெரிகிறது.(51) புனித தீர்த்தத்தில் நீராடிய துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்}, தாங்களே கொணர்ந்த மலர்களைக் கொண்டு,[5] புஷ்ப உபகாரம் {மலர் அர்ச்சனை} செய்து கொண்டிருக்கின்றனர்.(52) எனவே, சௌம்யா {மென்மையானவனே லக்ஷ்மணா}, இவை சுதீக்ஷ்ணரின் சொற்களில் நான் கேட்டது போலவே இருக்கிறது. இது நிச்சயம் அகஸ்தியருடன் பிறந்தவரின் {அகஸ்தியர் தம்பியின்} ஆசிரமமாகவே இருக்க வேண்டும்.(53) அந்தப் புண்ணிய கர்மங்களைச் செய்தவருடன் பிறந்தவரே {அகஸ்தியரே}, உலக நன்மையை விரும்பி, மரணத்தைத் தம் மஹிமையால் {தவசக்தியால்} தடுத்து, இந்தத் திக்கை  சரண்யமாக {தென்திசையை வாழத்தகுந்ததாகச்} செய்தார்.(54)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வழிபாட்டுக்கான மலர்களை வேறு எவரிடம் இருந்து பெற்றாலும், அந்த வழிபாட்டால் கிட்டும் புண்ணியத்தில் பாதியை அந்த மலர்களைக் கொடுத்தவரே அடைவர். எனவே, மலர்களை வழிபாட்டாளர்களே பறிக்க வேண்டும், அதிலும் குறிப்பாகத் தங்கள் பூந்தோட்டத்தில் இருந்து கொணர வேண்டும். அவற்றை களவு செய்தோ, பிச்சையெடுத்தோ, கைகளில் சுமந்தோ, மேலாடையில் சுமந்தோ கொண்டு வராமல் பெரிய இலையில் வைத்துக் கொண்டு வர வேண்டும். புஷ்பங்களைத் தாங்களே கொண்டு வருவது சிறந்தது, காட்டில் பறிப்பது மத்திமம், விலை கொடுத்து வாங்குவது இழிந்தது, பிறரால் கொடுக்கப்படுவது மிக இழிந்தது" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில் குரூரமானவர்களான வாதாபியும், இல்வலனும் ஒன்றாக இருந்தனர். உடன்பிறந்த மஹா அசுரர்களான அவர்கள், பிராமணர்களை இங்கே கொன்று வந்தனர் என்று சொல்கிறார்கள்.(55) கருணையற்றவனான இல்வலன், பிராமண ரூபம் தரித்து, சிராத்தக் காணிக்கை அளிப்பவன் போல் சம்ஸ்கிருதம் {நயமாகப்} பேசி[6] விப்ரர்களை அழைத்து வருவான் {கல்விமான்களான பிராமணர்களிடம், சிராத்தம் செய்து உணவளிப்பவன் போல் நயமாகப் பேசி அழைத்து வருவான்}.(56) பிறகு, தன்னுடன் பிறந்தானை மேஷ ரூபமாக்கி சம்ஸ்கிருதமாகச் செய்து, சிராத்த சடங்கு கர்மங்களின்படி அந்த துவிஜர்களுக்கு போஜனமாகக் கொடுப்பான் {தன் சகோதரன் வாதாபியை ஆட்டுக்கடாவின் வடிவிலாக்கி, அந்த இறைச்சியை நன்றாகச் சமைத்து, சிராத்த சடங்கு விதிகளின்படி அந்த இருபிறப்பாளர்களுக்கு உணவாகக் கொடுப்பான்}.(57) அந்த விப்ரர்கள் அதனை உண்டபிறகு, இல்வலன் மஹத்தான ஸ்வரத்தில் கதறியபடியே, "வாதாபே {வாதாபியே}, வெளியே வா" என்று கூறுவான்.(58) அப்போது, தன்னுடன் பிறந்தானின் {இல்வலனின்} சொற்களைக் கேட்கும் வாதாபி, மேஷம் போல கத்திக் கொண்டே அந்தப் பிராமணர்களின் சரீரங்களைக் கிழித்தபடியே வெளியே வருவான்.(59) பரந்தபா {பகைவரை அடக்குபவனே}, பிசிதாசனர்களும், காமரூபிகளுமான {பச்சை மாமிசம் உண்பவர்களும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} அவர்கள் இருவரும், இவ்வாறே நித்தியம் ஆயிரக்கணக்கான பிராமணர்களைக் கொன்று வந்தனர் {என்று சொல்லப்படுகிறது}.(60)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "இங்கே சம்ஸ்கிருதம் என்ற சொல், "இல்வலன், தூய்மையான சம்ஸ்கிருத மொழி பேசினான்" என்ற பெருளில் ஏற்கப்படும்போது, உரையாசிரியர்களின் விவாதத்திற்குரிய ஓர் அம்சமாகிறது. இஃது ஒரு கோணம். மற்றொன்று, "அதிநவீன மொழியில் பேசினான்" என்ற கோணமாகும். ஆனால், ராக்ஷசர்கள் அனைவரும் வேத பண்டிதர்களாகவே காணப்படுவதால், அவர்கள் பேசும் தூய சம்ஸ்கிருதத்தில் எந்த முரணும் தெரியவில்லை. எனவே, அவர்கள் பிராமணர்களைக் கவர்ந்திருக்க, கவர்ச்சியான, அதிநவீன மொழியில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. "சம்ஸ்கிருதம்" என்ற சொல்லுக்கு "தூய்மையானது" என்ற பொருளும் உண்டு" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு மெருகூட்டப்பட்ட சொற்கள் என்று பொருள். சம்ஸ்கிருத மொழியில் பேசுவது என்றும் பொருள் கொள்ளலாம். எனினும், சம்ஸ்கிருதம் என்ற சொல் மொழிக்கு பயன்படுவது மிகப் பிற்காலத்தில்தான் என்பதால் இதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. முற்காலத்தில் அந்த மொழி வெறுமனே பாஷா {பாஷை} என்றே குறிப்பிடப்பட்டது" என்றிருக்கிறது. "சம்ஸ்கிருதம்" என்றால் "நன்றாகச் செய்யப்பட்டது" என்பதே பொருள். எனவே, இங்கே "இல்வலன் நன்றாகப் பேசி பிராமணர்களை அழைத்தான்" எனப் பொருள்கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக வரும் 57ம் சுலோகத்திலும் ஆடு "நன்றாகச் சமைக்கப்பட்டது" என்பது, "சம்ஸ்கிருதமாகச் செய்யப்பட்டது" என்று வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Ilvala Vatapi as sheep and Agastya

பிறகு, தேவர்களால் பிரார்த்திக்கப்பட்ட அகஸ்திய மஹரிஷி, சிராத்தத்தின் அனுகூலத்தால் அந்த மஹா அசுரனை பக்ஷித்தார் {உண்டார்} என்று சொல்கின்றனர்.(61) இல்வலன், கைக்கழுவுவதற்கான நீரைக் கொடுத்தபோது, {அகஸ்தியரிடம்} "முடிந்ததா?" என்று கேட்டுவிட்டு, தன்னுடன் பிறந்தானிடம் {வாதாபியிடம்}, "வெளியே வா" என்று சொன்னான்.(62) மதிமிக்க முனிசத்தமரான அகஸ்தியர், தன்னுடன் பிறந்தானிடம் {வாதாபியிடம்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்த விப்ரகாதியை {கல்விமான்களான பிராமணர்களைக் கொல்லும் இல்வலனை} பரிகசிக்கும் வகையில் {சிரித்துக் கொண்டே பின்வருமாறு} சொன்னார்:(63) "மேஷரூப ராக்ஷசனை நான் ஜீரணித்துவிட்டேன் {ஆட்டுக்கடாவின் வடிவில் இருந்த ராக்ஷசன் வாதாபியை நான் உண்டு செரித்துவிட்டேன்}. யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்ட உன்னுடன் பிறந்தானுக்கு வெளியே வரும் சக்தியேது?" {என்று கேட்டார் அகஸ்தியர்}[7].(64)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகஸ்தியரின் இந்த வாசகம் இன்று வரை {சுருங்கச் சொல்லும்} ஒரு குறுமொழியாக நீடிக்கிறது. இராக்ஷசன் இல்வலன், "வாதாபே" என்று அழைத்தான். அதற்கு அகஸ்தியர், "ஜீர்ணம்" என்று சொன்னார். இப்படியே சிறிது நேரம் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டதால், அந்தக் கேள்வி பதில்களே, "வாதாபி செரிக்கப்பட்டான்" என்ற பொருளில், "ஜீர்ணம், ஜீர்ணம், வாதாபி ஜீர்ணம்" என்ற வாக்கியமாக அமைந்தது. தாய்மாரின் பாரம்பரிய வளர்ப்பில், குழந்தைகளுக்குப் பாலோ, வேறு ஊட்டப்பொருள்களோ கொடுத்த பிறகு, மென்மையான உடற்பயிற்சியைக் கொடுத்தவாறே, "ஜீர்ணம், ஜீர்ணம், வாதாபி ஜீர்ணம்" என்று பலமுறை சொல்வார்கள். செரிக்கப்படாத உணவையோ, உடல்நலத்தைக் கெடுக்கும் உணவையோ அந்தக் குழந்தைகள், அகஸ்தியரைப் போலச் செரிக்க வேண்டும் என்றுவிரும்பியே அந்தத் தாய்மார்கள் அவ்வாறு சொல்வார்கள். அதுமுதல் பிராமணர்களுக்கு எந்த வகையான இறைச்சியையும் அகஸ்தியர் தடை செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைச்சி உணவு பிராமணர்களின் வயிற்றை ஆட்டின் கொம்புகளைப் போல வெட்டும் என்று சபிக்கும் பொருளில் அவ்வாறு சொன்னார். பிராமணர்கள் பலதரப்பட்டவர்களாக இருக்குமாறு, "ப்³ராஹ்மணாநாம் அநேகத்வம்", அதாவது "பிராமணர்கள் எவரும் மற்ற பிராமணருடன் ஒத்துப் போகமாட்டார்கள்" என்று சபித்ததாகவும் சொல்லப்படுகிறது. அகஸ்தியர் வாதாபியைச் செரித்த கதை மஹாபாரதம், வனபர்வம் பகுதி 99ல் விரிவாகச் சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில், வனபர்வம் 95ம் பகுதி முதல் 99ம் பகுதி வரையும், பிறகு, 103ம் பகுதி முதல் 105ம் பகுதி வரையும் ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் இந்த சர்க்கத்தில் வரும் அகஸ்தியரின் கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. 

அந்தச் சொற்களைக் கேட்டு தன்னுடன் பிறந்தவன் இறந்ததை உறுதி செய்த அந்த நிசாசரன் {இரவுலாவி}, குரோதமடைந்தவனாக அந்த முனிவரைத் தாக்க ஆரம்பித்தான்.(65) அவன், அந்த துவிஜேந்திரரை {இருபிறப்பாளர்களின் தலைவரான அகஸ்தியரை} நோக்கிப் பாய்ந்த போது, தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்த அந்த முனிவரின், அனலனுக்கு {நெருப்புக்கு} ஒப்பான கண்களால் எரிக்கப்பட்டு இறந்தான்.(66) தடாகங்களாலும், வனத்தாலும் சோபிக்கும் இதுவே, விப்ரர்கள் மீது கொண்ட கருணையால் சாத்தியமற்ற இந்தச் சாதனையைச் செய்தவருடன் பிறந்தவரின் {அகஸ்தியருடைய சகோதரரின்} ஆசிரமமாகும்" {என்றான் ராமன்}.(67)

இராமன் இவ்வாறு சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொல்லிக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த கதி அடைந்து, சந்தியா காலமும் நெருங்கி வந்தது.(68) அவன் தன்னுடன் பிறந்தானுடன் விதிப்படி மேற்கு சந்தியை உபாசித்து, ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்து, அந்த ரிஷியை {அகஸ்தியரின் தம்பியை} வணங்கினான்.(69) இராகவன், அந்த முனிவரின் முறையான வரவேற்பை ஏற்று, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, அன்றைய ஓரிரவு அங்கேயே வசித்திருந்தான்.(70) அந்த ராத்திரியும் கடந்து, ரவி மண்டலம் {சூரியன்} உதித்ததும், அந்த அகஸ்தியருடன் பிறந்தவரிடம் {அகஸ்தியரின் தம்பியிடம்} ராகவன் விடைபெற்றுக் கொள்ளும் வகையில்,(71) "பகவானே, இரவில் நாங்கள் சுகமாக வசித்தோம். குருவான உமது அண்ணனை {அகஸ்தியரைக்} காணச் செல்வதால், நான் உம்மை வணங்கி விடைபெற்றுக் கொள்கிறேன்" {என்றான் ராமன்}.(72)

அவர் {அகஸ்தியரின் தம்பி}[8], "அவ்வாறே செல்வாயாக" என்று சொன்னதும், ரகுனந்தனன், அந்த வனத்தைக் கண்டு, தனக்குச் சொல்லப்பட்ட மார்க்கத்தில் பயணித்தான்.(73) காட்டு தானியப் புற்களையும் {விளைவிக்காத நெல்வயல்களையும்}, பலா, சாலம், அசோகம், வஞ்சி, தவம், சிறிவில்வம், மதூகம் {இருப்பை}, வில்வம், திந்துகம் போன்றவற்றையும் {போன்ற மரங்களையும்},(74) யானைகளின் துதிக்கைகளால் நொறுங்கியவையும், வானரங்களால் {குரங்குகளால்} நன்கு சோபிப்பவையும், மதங்கொண்ட நூற்றுக்கணக்கான பறவைக்கூட்டங்களால் எதிரொலிப்பவையும், புஷ்பித்த நுனிகளுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், தானே புஷ்பித்தவையுமான நூற்றுக்கணக்கான காட்டுமரங்களை ராமன் கண்டான்.(75,76)

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் அகஸ்தியரின் தம்பி சுதர்சனராவார். ஆனால் எவரும் அவரை அப்பெயரில் அழைக்காமல், அகஸ்தியருடன் பிறந்தவர் என்ற வகையில் "அகஸ்தியபிராதா" என்றே அழைக்கின்றனர்" என்றிருக்கிறது. இணையத்தில் அகஸ்தியரின் தம்பி குறித்த விவாதம் எழுந்த ஓர் ஆய்வுத் தளத்தில் {https://hinduism.stackexchange.com/questions/7979/who-is-agastyas-brother-in-the-ramayana}, "அகஸ்தியரும், வசிஷ்டரும், நட்பின் தேவனான மித்ரனுக்கும், கடலின் தேவனான வருணனுக்கும் பிறந்த மகன்கள் என்று ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அகஸ்தியருடன் பிறந்தவர் வசிஷ்டரே ஆவார். நிச்சயம் ராமன் இங்கே சந்திப்பது வசிஷ்டரை அல்ல. அவ்வாறெனில் அகஸ்தியருக்கு மற்றொரு தம்பி எப்படி இருக்க முடியும்? ஸ்கந்த புராணம், சேது மஹாத்மியத்தில், அகஸ்தியரின் தம்பி ஒருவரின் இறப்பு சொல்லப்படுகிறது. அகஸ்தியரின் தம்பி சிவனிடம் மோக்ஷம் வேண்டுகிறார். சிவன் அவர் முன்பு தோன்றி, ராமேசுவரத்தின் அருகில் உள்ள, தற்போது ஏகாந்தராமர் கோவிலில் உள்ள அம்ருதவாபி தீர்த்தத்தில் நீராடச் சொல்கிறான். இவ்வாறே அவர் மோக்ஷம் அடைகிறார். ஆனால் ஸ்கந்த புராணத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. "குடத்தில் பிறந்த முனிவரின் தம்பி" என்றே அங்கும் அழைக்கப்படுகிறார். ஸ்ரீமத் பாகவதம் 4:1:36ல், "புலஸ்தியர், தமது மனைவியான ஹவிர்புவியிடம் அகஸ்தியரைப் பெற்றார், அவர் அடுத்த ஜன்மத்தில் தஹ்ராக்னி என்ற பெயருடையவரானார். அப்போது அவரைத் தவிர புலஸ்தியருக்கு விஸ்ரவஸ் என்ற பெயரில் ஒரு மஹாதபஸ்வி மற்றொரு மகனாக இருந்தார் என்றிருக்கிறது. ஒருவேளை இந்த விஸ்ரவஸ்தான் ராமன் சந்தித்த அகஸ்தியரின் தம்பியாக இருந்தால், அவன் தன் எதிரியான ராவணனின் தந்தையைச் சந்தித்திருக்கிறான் என்று பொருளாகிறது. விஸ்ரவஸின் மகன்களே குபேரனும், ராவணனுமாவர்" என்றிருக்கிறது. புலஸ்தியர், பத்து பிரஜாபதிகளிலும், பிரம்மனின் மானஸ புத்திரர்களிலும், சப்தரிஷிகளுள்ளும் ஒருவராவார். உத்திரகாண்டத்தில், "புலஸ்தியருக்கும் மனினிக்கும் பிறந்தவர் விச்ரவஸ், விச்ரவஸுக்கு இளவிதை மூலம் பிறந்தவன் வைச்ரவணன் {குபேரன்}. விச்ரவஸின் இரண்டாம் மனைவியான கைகேசிக்குப் பிறந்தவர்கள், இராவணன், சூர்ப்பணகை, கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோராவர்" என்று அகஸ்தியரே ராமனிடம் சொல்கிறார். உத்தரகாண்டத்தைத் தவிர்த்துப் பார்த்தாலும், மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில், "புஷ்போத்கதை, ராகை, மாலினி என்ற ராக்ஷசப் பெண்கள் மூவரையும் குபேரன் தன் தந்தையான விஸ்வரஸின் பணிவிடைக்காக அனுப்பி வைத்தான். இராவணன், கும்பகர்ணன்  ஆகிய இருவரும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். விபீஷணன் மாலினிக்குப் பிறந்தான். கரனும், சூர்ப்பனகையும்  இரட்டைப் பிள்ளைகளாக ராகைக்குப் பிறந்தனர்" என்றிருக்கிறது. அவ்வாறெனில், மேற்கண்ட வலைத்தளத்தில் எழுந்தது போல் ராமன் கண்ட அகஸ்தியரின் தம்பி அந்த விச்வரஸாக இருந்தால், ராமன் இங்கே ராவணனின் தந்தையைக் காண்கிறான் என்றே பொருளாகிறது. இருப்பினும் பல்வேறு புராணங்களில் கிட்டும் இதுபோன்ற தரவுகள் வெவ்வேறு காலங்களில் பல்வேறு அகஸ்தியர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கின்றன. அவ்வாறெனில், இங்கே ராமன் சந்திப்பது எந்த அகத்தியரை என்ற கேள்வியும், எந்த அகத்தியரின் தம்பியை அவன் சந்திக்கிறான் என்ற கேள்வியும் சேர்ந்தே எழும். 

அப்போது ராஜீவலோசனனான {தாமரைக் கண்ணனான} ராமன், தன்னைப் பின்தொடர்பவனும், வீரனும், லக்ஷ்மிவர்தனனுமான {செழிப்பை அதிகரிப்பவனுமான} லக்ஷ்மணனின் அருகில் சென்று {பின்வருமாறு} சொன்னான்:(77) "இங்கே மரங்கள் பளபளவென்று தழைத்திருப்பதாலும், மிருகங்களும், பறவைகளும் சாந்தமாக இருப்பதாலும் ஆத்மஞானியான அந்த மஹரிஷியின் {அகஸ்தியரின்} ஆசிரமம் அதிக தூரத்தில் இல்லையெனத் தோன்றுகிறது.(78) உலகத்தில் தம் செயலால் அகஸ்தியர் {விந்திய மலையின் வளர்ச்சியைத் தடுத்தவர்} என்று நன்கறியப்படுபவரின் ஆசிரமம், சிரமப்படுவோரின் களைப்பைப் போக்குவதாகத் தோன்றுகிறது.(79) இந்த வனம் வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகையால் சூழப்பட்டிருக்கிறது; இங்கே மரவுரிகள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன; சாந்தமான மான்கூட்டங்களால் நிறைந்தும், நானாவித பறவைகளின் ஒலியை எதிரொலித்துக் கொண்டும் இருக்கிறது.(80) 

எவர் புண்ணிய கர்மங்களைச் செய்து, உலக நன்மையை விரும்பி, மரணத்தைத் தம் மஹிமையால் {தவசக்தியால்} தடுத்து[9], தக்ஷிண திக்கை சரண்யமாக {தென்திசையை வாழத்தகுந்ததாகச்} செய்தாரோ[10].(81) எவருடைய பிரபாவத்தால் {மேன்மையால்} ராக்ஷசர்கள் அச்சத்துடன் {தொலைவில் இருந்து} பார்த்தாலும் இந்த தென் திக்கை அனுபவிக்காமல் இருக்கிறார்களோ அவருடைய {அந்த அகஸ்தியரின்} ஆசிரமபதம் இது.(82) அந்த புண்ணிய கர்மத்தைச் செய்தவர், இந்த திக்கை எப்போது அடைந்தாரோ அப்போதிருந்தே ரஜனிசரர்கள் வைரமற்றவர்களாகி சாந்தமடைந்தனர் {அந்த இரவுலாவிகள் பகையற்று அமைதியடைந்தனர்}.(83) {அகஸ்திய} பகவானின் நாமத்திற்கு மிகத் தகுந்த இந்த தக்ஷிண திக்கு, மூன்று உலகங்களிலும் குரூர கர்மங்களைச் செய்பவர்களால் அணுகப்படமுடியாததாக புகழ்பெற்றிருக்கிறது[11].(84)

[9] முனிவர்களின் மரணத்தைத் தடுத்த அகஸ்தியரின் கதை மஹாபாரதம், வனபர்வம் பகுதி 103ல் விரிவாகச் சொல்லப்படுகிறது.

[10] கிட்டத்தட்ட இந்த சர்க்கத்தின் 54ம் சுலோகத்தையே இஃது ஒத்திருக்கிறது.

[11] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தென்திசை தக்ஷிணம் என்று அறியப்படுகிறது. தக்ஷ /தக்ஷிண என்ற சொல்லுக்கு சாதித்தவர் எனப் பொருள்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இம்மஹா முனிவரால் இத்தென்திசை பீடையற்றிருக்கின்றமையின், இது அகஸ்திய திசையென்றே கூறப்படுகின்றது" என்றிருக்கிறது.

எவருடைய ஆணைக்கிணங்க உத்தம அசலமான {மலையான} விந்திய சைலம், ஒருபோதும் பாஸ்கரனின் {சூரியனின்} மார்க்கத்தை தடுக்காதவாறு தன் வளர்ச்சியை நிறுத்தியதோ[12], தம் செயல்களால் உலகில் புகழ்பெற்றவரும், தீர்க்க ஆயுள் கொண்டவருமான அந்த ஸ்ரீமான் அகஸ்தியரின் ஆசிரமமான இது, நன்னடத்தை கொண்ட மிருகங்களாலும், ஜனங்களாலும் நன்கு சேவிக்கப்படுகிறது.(85,86) உலகத்தால் அர்ச்சிக்கப்படுபவரும், நித்தியம் நல்லவர்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறவருமான அந்த சாது {அகஸ்தியர்}, அங்கே செல்லும் நமக்கான நன்மையை நம்மிடம் சேர்ப்பார்.(87) பிரபுவே, சௌம்யா {மென்மையானவனே}, நான் மஹாமுனிவரான அந்த அகஸ்தியரை ஆராதிக்கவும், எஞ்சிய வனவாசத்தை அங்கேயே கழிக்கவும் விரும்புகிறேன்.(88) 

[12] விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியரின் கதை மஹாபாரதம் வன பர்வம் பகுதி 104ல்  விரிவாகச் சொல்லப்படுகிறது.

தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும், நியதமான ஆஹாரத்துடன் {உணவுக்கட்டுப்பாட்டுடன்} கூடிய அகஸ்தியரிடம் சென்று, அங்கேயே அவரை உபாசித்துக் கொண்டிருக்கின்றனர்.(89) பொய்யனோ, குரூரனோ, வேறு எந்த வஞ்சகனோ, மனிதரைத் துன்புறுத்துபவனோ, பாபநடத்தை கொண்டவனோ அங்கே ஜீவிக்க {வாழ} இயலாது. இதுவே அந்த முனிவரின் விதமாகும் {இயல்பாகும்}.(90) தேவர்களும், யக்ஷர்களும், நாகங்களும், பறவைகளும் நியதமான ஆஹாரத்துடன், தர்மத்தையே ஆராதித்தபடி அங்கே வசித்து வருகின்றனர்.(91) சித்தியடைந்த மஹாத்மாக்களான பரமரிஷிகள், அங்கே தங்கள் தேகங்களைக் கைவிட்டு, நவ தேகங்களுடன் {புதிய உடல்களுடன்} சூரியப் பிரகாசம் கொண்ட விமானங்களில் ஏறி ஸ்வர்க்கத்தில் திரிகிறார்கள்.(92) அங்கே சுப பூதங்களால் {நல்ல உயிரினங்களால்} வழிபடப்படும் தேவர்கள், யக்ஷத்வம் {யக்ஷரெனும் தெய்வீகநிலை}, அமரத்வம் {சாகாநிலை}, விதவிதமான ராஜ்ஜியங்கள் ஆகியவற்றைக் கொடுக்கிறார்கள்.(93) சௌமித்ரியே, {அகஸ்தியருடைய} ஆசிரமபதத்தின் அருகில் வந்துவிட்டோம். முதலில் பிரவேசித்து, சீதை சஹிதனாக நான் இங்கே வந்திருப்பதை அந்த ரிஷியிடம் {அகஸ்தியரிடம்} சொல்வாயாக[13]" {என்றான் ராமன்}.(94)

[13] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "எப்போதும் {மூவரும்} ஒன்றாக நுழையும் வழக்கம் இங்கே கைவிடப்படுகிறது. இது கவனத்தில் கொள்ளத்தக்கது" என்றிருக்கிறது. இராமன் இங்கே ஒரு ராஜாவைப் போல் நடந்து கொள்வதாகத் தெரிகிறது. இதற்கு முன் முனிவர்களின் ஆசிரமங்களுக்குள் நுழையும்போது இந்த ராஜநடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக முந்தைய சர்க்கங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 11ல் உள்ள சுலோகங்கள்: 94

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை