Mahaparshva killed | Yuddha-Kanda-Sarga-098 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மஹாபார்ஷ்வனைத் தாக்கிய அங்கதனும், ஜாம்பவானும்; மஹாபார்ஷ்வனின் குதிரைகளைக் கொன்று, ரதத்தை பங்கம் செய்த ஜாம்பவான்; அங்கதனின் முஷ்டியால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன்...
மஹாபலவானான மஹாபார்ஷ்வன்[1], சுக்ரீவனால் மஹோதரன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்து, அங்கதனின் சம்முவை {படையைத்} தன் பயங்கரக் கணைகளால் கலங்கடித்தான்.(1,2அ) காம்பிலிருந்து பழங்களை {வீழ்த்தும்} அநிலனை {காற்றைப்} போல அவன் {மஹாபார்ஷ்வன்}, சர்வ வானர முக்கியர்களின் உத்தம அங்கங்களை காயங்களிலிருந்து வீழ்த்தினான் {தலைகளை அவர்களின் உடல்களிலிருந்து வீழ்த்தினான்}.(2ஆ,3அ) பிறகு விரைவாக அந்த ராக்ஷசன், தன் கணைகளைக் கொண்டு சில வானரர்களின் கைகளைத் துண்டித்தான், மேலும் சிலரின் பக்கவாட்டுகளை வெட்டினான்.(3ஆ,4அ) மஹாபார்ஷ்வனின் பாணவேகத்தால் வேதனையடைந்த அந்த சர்வ வானரர்களும், வேதனையை எதிர்கொள்ள முடியாமல் நனவிழந்தவர்கள் ஆனார்கள்.(4ஆ,5அ)



