Rama will come | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சம்பாதிக்கு ஆறுதல் சொன்ன முனிவர்; ராக்ஷசர்களையும், அவர்களது மன்னன் ராவணனையும் அழிக்க ராமன் வருவதைக் குறித்துச் சொன்ன நிசாகரர்...
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம் |
இவ்வாறு {சம்பாதி, நிசாகரர் என்ற அந்தச் சிறந்த முனிவரிடம்} முனிசிரேஷ்டரிடம் சொல்லிவிட்டுப் பெரும் துக்கத்தில் அழுது கொண்டிருந்தபோது, அந்த பகவான் {நிசாகரர்}, ஒரு முஹூர்த்தம் தியானித்துவிட்டு, இதைச் சொன்னார்:(1) “உனக்கு மீண்டும் வேறு சிறகுகளும், நல்ல இறகுகளும் உண்டாகும். உன் கண்பார்வையும், பிராணன்களும், விக்கிரமும், பலமும் திரும்பக்கிடைக்கும்.(2) மஹத்தான காரியம் நடக்கப் போகிறதென்று கேள்விப்பட்டேன். என் தபத்தினாலும் அவ்வாறே உணர்ந்தேன். நான் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்வாயாக.(3)
தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகுவர்த்தனனான {இக்ஷ்வாகு குலத்தை வளர்ப்பவனான} எவனோ ஒரு ராஜா இருக்கிறான். அவனுக்கு ராமன் என்ற பெயரில் மஹாதேஜஸ்ஸுடன் கூடிய புத்திரன் உண்டாவான்.(4) அந்த சத்தியப் பராக்கிரமன் {ராமன்}, பிதாவால் {தசரதனால்} நியமிக்கப்பட்ட அர்த்தத்திற்காக, உடன்பிறந்த லக்ஷ்மணன் சகிதனாக அரண்யம் செல்வான்.(5) ஜனஸ்தானத்தில் இருந்து, அவனது பாரியையை {சீதையை}, ராக்ஷசேந்திரனும், ஸுரர்களாலும், தானவர்களாலும் வதம் செய்யப்பட முடியாதவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு நைர்ருதன் {ராக்ஷசன்} கடத்திச் செல்வான்.(6)
மஹாபாக்கியவதியும், புகழ்பெற்றவளுமான அந்த மைதிலி, பக்ஷணங்கள், போஜனங்களை {ஆசையைத் தூண்டும் வகையில்} காட்டினாலும், அவற்றை பக்ஷிக்காமல் துக்கத்தில் மூழ்கியிருப்பாள்.(7) இதை வாசவன் {இந்திரன்} அறிந்து, ஸுரர்களுக்கும் கிடைப்பதற்கரியதும், அம்ருதம் என்றும் எந்த அன்னம் அறியப்படுமோ அந்தப் பரம அன்னத்தை வைதேஹிக்குக் கொடுப்பான்.(8) மைதிலி, அந்த அன்னத்தை அடைந்ததும், “இஃது இந்திரனுடையது” என்பதை அறிந்து, முதல் கவளத்தை எடுத்து, ராமனுக்காக பூதலத்தில் வைத்து,(9) “என் பர்த்தாவும் {ராமரும்}, மைத்துனரான லக்ஷ்மணரும் ஜீவித்திருந்தாலும், அல்லது தேவத்வத்தை அடைந்திருந்தாலும், அவ்விருவருக்குமே இந்த அன்னம்” என்பாள்.(10)
விஹங்கமா {வானில் பறப்பவனே, சம்பாதி}, ராம தூதர்களாக அனுப்பப்படும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள், சீதையைத் தேடி} அங்கே வருவார்கள். நீ அவர்களிடம் ராமனின் மஹிஷியை {சீதையைக்} குறித்துச் சொல்வாயாக.(11) எங்கும் போகாதே. இவ்வகையிலான நீ எங்கே செல்ல விரும்புவாய்? தேசத்திற்காகவும், காலத்திற்காகவும் காத்திருந்தால், உன் சிறகுகள் இரண்டையும் மீண்டும் அடைவாய்[1].(12) இப்போதே உனக்குச் சிறகுகளைக் கொடுக்கும் உற்சாகம் எனக்கில்லை. எனவே, நீ இங்கேயே இருந்து, உலகங்களுக்கு ஹிதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பாயாக[2].(13)
[1] கம்பராமாயணத்தில் முனிவர் நிசாகரர் அல்லாமல், இந்த வரத்தை சூரியனே கொடுப்பதாக வருகிறது. அது பின்வருமாறு:மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமர் பேரைஎண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான்- கம்பராமாயணம் 4703ம் பாடல், சம்பாதிப் படலம்பொருள்: மண்ணில் விழுந்த என்னை, வானத்தில் விளங்குகின்ற வள்ளல் {சூரியன்}, தன் கண்களால் நோக்கி, என் மீது கொண்ட இரக்கத்தால், “சனகனின் அன்பு மகளின் இடையீட்டால் {சீதை அபகரிக்கப்பட்ட பிறகு} வரும் வானர வீரர்கள், ராமன் பெயரை மனத்தில் எண்ணி உச்சரிக்குங்காலத்தில், நீ மீண்டும் சிறகுகள் பெற்று எழுவாய்” என்றான்.
[2] இந்த இடத்தில், “இப்போதைக்கு உனக்கு நல்ல சிறிய சிறகுகளைக் கொடுக்கிறேன்” என்று சில பதிப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
அந்த நிருப புத்திரர்கள் {இளவரசர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவருக்காகவும், பிராமணர்களுக்காகவும், குருக்களுக்காகவும், முனிக்களுக்காகவும், வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} அந்தக் காரியத்தை நீ செய்வாயாக.(14) உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் நானும் காண விரும்பினாலும், நீண்ட காலம் பிராணன்களைத் தரித்துக் கொள்வதில் {எனக்கு} விருப்பமில்லை. களேவரத்தை {பூதவுடலைக்} கைவிடப் போகிறேன்” {என்றார் நிசாகரர்}. தத்துவார்த்தங்களைக் கண்டுணர்ந்த மஹரிஷி {நிசாகரர்} இதை இவ்வாறே சொன்னார்” {என்று அங்கதனிடம் சொன்னான் சம்பாதி}.(15)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள்: 15
Previous | | Sanskrit | | English | | Next |