Showing posts with label ருமை. Show all posts
Showing posts with label ருமை. Show all posts

Saturday, 16 September 2023

இலக்ஷ்மணனின் கோபம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 34 (19)

Wrath of Lakshmana | Kishkindha-Kanda-Sarga-34 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனைச் சந்தித்த லக்ஷ்மணன்; ராமனுக்கு அளித்த உறுதிமொழியை நினைவுகூரியது...

Sugreeva drunk Lakshmana waiting outside

சுக்ரீவன், தடுக்கப்பட முடியாதவனாகப் பிரவேசித்தவனும், குரோதம் நிறைந்தவனும், புருஷரிஷபனும் {மனிதர்களிற் காளையுமான} அந்த லக்ஷ்மணனைக் கண்டு இந்திரியங்கள் {ஐம்புலன்கள்} கலங்கிப் போனான்.(1) பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவனும், நெருப்பைப் போன்ற தேஜஸ்ஸைக் கொண்டவனும், உடன்பிறந்தவனின் {ராமனின்} விசனத்தால் வேதனையில் மூழ்கியவனுமான அந்த தசரதாத்மஜனை {லக்ஷ்மணனைக்} கண்ட{2} ஹரிஸ்ரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த சுக்ரீவன்}, நன்கலங்கரிக்கப்பட்டதும், மஹேந்திரனுக்குரியதுமான மஹத்தான துவஜத்தை {கொடியைப்} போலத் தன் சுவர்ணாசனத்தில் {பொன்னாசனத்தில்} இருந்து எழுந்தான்.(2,3) ககனத்தில் தாரா கணங்களுடன் {வானத்தில் நட்சத்திரங்களுடன்} குதித்தெழும் பூர்ணச் சந்திரனைப் போல, ருமையுடன் கூடிய பிற ஸ்திரீகளுடன் சேர்ந்து சுக்ரீவன் குதித்தெழுந்தான்.(4) ரத்தம் போன்ற நயனங்களை {சிவந்த கண்களைக்} கொண்டவனான அந்த ஸ்ரீமான் {சுக்ரீவன்}, கைகளைக் கூப்பியபடியே முன்னேறி, மஹாகல்பக விருக்ஷம் {பெருங் கற்பக மரம்} போல அங்கே அசையாமல் நின்றிருந்தான்.(5) 

தாரைகளுடன் கூடிய சசியை {நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரனைப்} போல ருமையுடன் ஜோடியாக நாரீகளின் {பெண்களின்} மத்தியில் நிலைத்திருந்த சுக்ரீவனிடம், குரோதத்துடன் லக்ஷ்மணன் {பின்வருமாறு} சொன்னான்:(6) "நற்குணம் கொண்டவனும், நற்குலத்தில் பிறந்தவனும், அருளுடையவனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, கிருதஜ்ஞனும் {செய்நன்றியுள்ளவனும்}, சத்தியவாதியுமான ராஜாவே உலகத்தில் போற்றப்படுகிறான்.(7) எந்த ராஜா, அதர்மத்தில் நிலைத்து, உபகாரம் செய்த மித்ரர்களிடம் {நண்பர்களிடம்} போலி பிரதிஜ்ஞைகள் செய்வானோ {போலி வாக்குறுதிகள் அளிப்பானோ} அவனைவிடக் கொடியவன் எவன்?(8) ஒரு புருஷன் {மனிதன்}, ஓர் அஷ்வத்திற்காக {குதிரைக்காகப்} பொய் வாக்குறுதி அளித்தால், அதில் நூற்றை {நூறு குதிரைகளைக்} கொன்றதாகும்[1], ஒரு பசுவிற்காகவெனில் {பொய் சொன்னால்} ஆயிரமும் {ஆயிரம் பசுக்களையும்}, ஒரு புருஷனுக்காகவெனில் {மனிதனுக்காகப் பொய் சொன்னால்} ஆத்மாவையும் {தன்னையும்}, தன் ஜனத்தையும் கொன்றதாகும்.(9) பிலவகேசுவரா {தாவிச்செல்லும் குரங்குகளின் தலைவனான சுக்ரீவா}, பூர்வத்தில் கிருதார்த்தனான {காரியம் நிறைவேறிய} எவன், மித்ரர்களுக்கு {நண்பர்களுக்கு} உண்டான பிரதியை {கைம்மாறைச்} செய்யவில்லையோ, அத்தகைய கிருதக்னன் {வஞ்சகன்}, சர்வ பூதங்களாலும் {அனைத்து உயிரினங்களாலும்} கொல்லத்தக்கவனாவான்.(10) 

[1] அதாவது, "ஒரு மனிதன் ஒரு குதிரையைக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுக் கொடுக்காமல் போனால் நூறு குதிரைகளைக் கொன்ற பாபம் சம்பவிக்கும். ஒரு பசுவைக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுக் கொடுக்காமல் போனால், ஆயிரம் பசுக்களைக் கொன்ற பாபம் சம்பவிக்கும். ஒரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய கைம்மாறைச் செய்யாமல் இருந்தால் அவன் தன்னையும், தன் மக்களையும் அழித்துக் கொள்வான்" என்பது பொருளாகும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரகலாதனுக்கும், சூதன்வானுக்கும் இடையில் நடந்த உரையாடலை, மஹாபாரதம், உத்யோக பர்வம் (5:35) குறிப்பிடுகிறது. "உயிருடன் இருப்பவர்களைக் கொல்வதையும், தற்கொலை செய்து கொள்வதையும்விட ஏற்கனவே இறந்து போன முன்னோரைக் கொல்வது குறைந்த பாபமே ஆகும்.

பிலவங்கமா {தாவிச்செல்பவனே, அத்தகைய} வஞ்சகனைக் கண்டு, சர்வலோகத்தாலும் நமஸ்கரிக்கப்படுபவனும், கோபம் நிறைந்தவனுமான பிரம்மன் {பின்வரும்} இந்த சுலோகத்தை கீதம் செய்தான் {பாசுரத்தைப் பாடினான்} என்பதை அறிவாயாக:(11) "கோக்களை {பசுக்களைக்} கொல்பவர்கள், சுரா {பானம்} பருகுபவர்கள், சௌரர்கள் {கள்வர்கள்}, அதே போல விரதபங்கம் செய்பவர்கள் ஆகியோருக்கே கல்விமான்கள் நிவர்த்தியை விதித்திருக்கிறார்களேயன்றி, வஞ்சகர்களுக்கு {செய்நன்றி கொன்றவர்களுக்கு} நிவர்த்தி என்பதே கிடையாது" {என்பது பிரம்மன் சொன்ன பாசுரம்}.(12) 

வானரா, பூர்வத்தில் கிருதார்த்தனான {முதலில் காரியம் நிறைவேறியவனான} நீ, ராமருக்கான பிரதிகாரியத்தைச் செய்யாமல் இருப்பது எதற்காக? எனவே, நீ அநார்யன் {உன்னதமற்றவன்}; கிருதக்னன் {செய்நன்றி மறந்தவன் / வஞ்சகன்}; மித்யவாதியுமாகிறாய் {பொய் உரைப்பவனும் ஆகிறாய்}.(13) வானரா, கிருதார்த்தனும் {காரியம் நிறைவேறியவனும்}, ராமரின் காரியத்தை இச்சிப்பவனுமான {ராமரின் காரியத்தைச் செய்ய வேண்டுமென விரும்புகிறவனுமான} நீ, சீதையின் மார்க்கத்தைக் காணும் யத்னத்தை {முயற்சியைச்} செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதல்லவா?(14) பொய் வாக்குறுதி அளித்தவனான நீ, கிராம்ய {அற்ப} போகங்களில் மூழ்கிக் கிடக்கிறாய். சர்ப்பம் போல் கத்தும் மண்டூகமென {தவளையென} உன்னை ராமர் அறிந்தாரில்லை.(15)

மஹாபாக்கியவானும், மஹாத்மாவும், கருணாவேதியுமான {கருணை நிறைந்தவருமான} ராமராலேயே, பாபியும், துராத்மாவுமான நீ ஹரிக்களின் {குரங்குகளின்} ராஜ்ஜியத்தை அடைந்திருக்கிறாய்.(16) மஹாத்மாவான ராகவரால் செய்யப்பட்டதை நீ அறியாதிருந்தால், இப்போதே கூர்மையான பாணங்களால் கொல்லப்பட்டு வாலியைக் காண்பாய்.(17) சுக்ரீவா, சமயத்திற்கேற்ப வாலி கொல்லப்பட்டு எந்த கதியை அடைந்தானோ, அந்தப் பாதை இன்னும் அடைக்கப்பட்டுவிடவில்லை. வாலியின் பாதையில் பின்தொடர்ந்து செல்லாதே[2].(18) இக்ஷ்வாகுக்களில் சிறந்தவர் {ராமர்}, தம் கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து}, வஜ்ரத்திற்கு ஒப்பாக ஏவப்போகும் சரங்களை நீ பார்க்கவில்லை. எனவே, சுகமாகவும், சுகத்தால் சேவிக்கப்பட்டும் மனத்தில் ராமரின் காரியத்தை நீ நினைக்கிறாயில்லை." {என்றான் லக்ஷ்மணன்}.(19)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் 4:30:81ல் வரும் ராமனின் சொற்களைப் போலவே இருக்கிறது. இலக்ஷ்மணன் அதையே இங்கு திரும்பவும் கூறுகிறான்" என்றிருக்கிறது.

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Wednesday, 13 September 2023

தாரையின் சமாதானம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 33 (66)

Reconciliation of Tara | Kishkindha-Kanda-Sarga-33 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் அரண்மனைக்குள் நுழைந்த லக்ஷ்மணன்; இலக்ஷ்மணனைத் தணிவடையச் செய்யுமாறு தாரையிடம் வேண்டிய சுக்ரீவன்...

Fury of Lakshmana

அப்போது, உள்ளே அழைக்கப்பட்டவனும், பரவீரர்களை {பகைவீரர்களை} அழிப்பவனுமான லக்ஷ்மணன், ராமசாசனத்தின் {ராமனுடைய ஆணையின்} பேரில் கிஷ்கிந்தையின் ரம்மியமான குகைக்குள் பிரவேசித்தான்.(1) அங்கே துவாரத்தில் {வாயிலில்} நிற்கும் மஹாகாயர்களும் {பேருடல் படைத்தவர்களும்}, மஹாபலவான்களுமான ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும், லக்ஷ்மணனைக் கண்டதும் கூப்பிய கைகளுடன் பின்வாங்கி நின்றனர்.(2) ஹரயர்கள் {அந்தக் குரங்குகள்}, பெருமூச்சுவிட்டுக் கொண்டு கோபத்துடன் இருக்கும் அந்த தசரதாத்மஜனை {தசரதனின் மகனான லக்ஷ்மணனைக்} கண்டு, அச்சமடைந்து அவனைச் சூழாதிருந்தனர் {அவனை அணுகாமலும், தடுக்காமலும் இருந்தனர்}.(3)

ஸ்ரீமானானவன் {லக்ஷ்மணன்}, ரத்தினமயமானதும், திவ்யமானதுமான புஷ்பித்த கானகங்களுடன் கூடியதும், ரத்தினங்களால் மறைக்கப்பட்டதும், ரம்மியமானதும், மஹத்தானதுமான அந்தக் குகையானது,(4) மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவும், நானாவித ரத்தினங்களால் விளங்குவதாகவும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பழங்களையும் தரவல்லவையும், புஷ்பித்திருப்பவையுமான விருக்ஷங்களுடனும் சோபித்துக் கொண்டிருப்பதாகவும் கண்டான்.(5) தேவ, கந்தர்வர்களின் புத்திரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, திவ்ய மாலைகளையும், ஆடைகளையும் அணிந்தவர்களும், பிரிய தரிசனந்தருபவர்களுமான வானரர்களுடன் அது {அந்தக் குகை} சோபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(6) சந்தனம், அகில், பத்மங்களின் {தாமரைகளின்} இனிய மணத்தாலும், மைரேயங்கள் {பூவில் இருந்து எடுக்கப்படும் மது வகைகள்}, {பழங்களில் இருந்து எடுக்கப்படும்} மதுவகைகளின் கந்தங்களாலும் பெரிதும் களித்திருக்கும் மஹாபாதைகளையும்,(7) பூமியில் ஓரடுக்காக இல்லாமல் {பல அடுக்குகளில்}, விந்தியம், மேரு கிரிகளுக்கு ஒப்பாக இருக்கும் அரண்மனைகளையும், தெளிவான கிரி நதிகளையும் {மலையருவிகளையும்} ராகவன்  {லக்ஷ்மணன்} அங்கே கண்டான்.(8) அங்கதனின் ரம்மியமான கிருஹத்தையும், மைந்தன், துவிவிதன், கவயன், கவாக்ஷன், கஜன், சரபன்,{9} வித்யுன்மாலி, சம்பாதி, சூர்யாக்ஷன், ஹனூமன், வீரபாகு, சுபாகு, மஹாத்மாவான நளன் ஆகியோருடையவையும்,{10} அதே போல, குமுதன், ஸுஷேணன், தாரன், ஜாம்பவான், ததிவக்த்ரன், நீலன், சுபாடலன், சுநேத்ரன்{11} உள்ளிட்ட கபி முக்கியர்களான மஹாத்மாக்களுக்குரியவையும் {மஹாத்மாக்களான அந்த முக்கிய குரங்குகளுக்குரியவையும்}, ராஜமார்க்கத்தில் இருப்பவையும், மஹாசாரம் நிறைந்தவையுமான முக்கிய கிருஹங்களையும் லக்ஷ்மணன் கண்டான்.(9-12) வெண்மேகங்களைப் போல் பிரகாசிப்பவையும், மாலைகளுடன் நறுமணங்கமழ்பவையும், தன தானியங்கள் நிறைந்தவையுமான அவை {அந்த மாளிகைகள்} ஸ்திரீரத்தினங்களைப் போல விளங்கிக் கொண்டிருந்தன.(13)

வெண்மையான சைலங்களால் {மலைகளால்} சூழப்பட்டதும், அடைதற்கரியதுமான மஹேந்திரனின் சதனத்திற்கு {மாளிகைக்கு} ஒப்பாக ரம்மியமாகத் திகழ்ந்த வானரேந்திரனின் {சுக்ரீவனின்} கிருஹமானது,{14} கைலாச சிகரத்திற்கு ஒப்பான வெண்மையான அரண்மனைகளெனும் சிகரங்களைக் கொண்டும், விரும்பிய பழங்கள் அனைத்தையும் தரவல்லவையும், புஷ்பித்தவையுமான மரங்களால் சோபித்துக் கொண்டும்,{15} மஹேந்திரனால் தத்தம் செய்யப்பட்டவையும் {இந்திரனால் கொடுக்கப்பட்டவையும்}, செழிப்பானவையும், நீல மேகங்களுக்கு ஒப்பானவையும், திவ்யமான புஷ்பங்களையும், பழங்களையும் தரவல்லவையும், குளிர்ந்த சாயைகளைக் கொண்டவையும் {நிழலுள்ளவையும்}, மனத்தைக் கொள்ளை கொள்பவையுமான விருக்ஷங்களுடனும் {மரங்களுடனும்},{16} அழகு வாய்ந்த சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கையிலேந்திய ஹரிக்களால் {குரங்குகளால்} காவல் காக்கப்பட்ட துவாரத்துடனும் {வாயிலுடனும்}, திவ்ய மாலைகள் புனையப் பெற்றும், பிரகாசமான புடம்போட்ட காஞ்சன {தங்கத்} தோரணங்களுடனும் இருந்தது.{17} {இத்தகைய} இரம்மியமான சுக்ரீவனின் கிருஹத்திற்குள், மஹாபலவானான சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, பெரும் மேகத்திரளில் பாஸ்கரனை {நுழையும் சூரியனைப்} போலத் தடையின்றி பிரவேசித்தான்.(14-18)

அந்த தர்மாத்மா {லக்ஷ்மணன்}, யானங்களும் {சிவிகைகளும்}, ஆசனங்களும் நிறைந்த ஏழு கட்டுகளைக் கடந்து சென்று, பெரும் பாதுகாவலுடன் கூடிய, மஹத்தான அந்தப்புரத்தைக் கண்டான்.{19} ஹைமராஜத பர்யங்கங்களும் {பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட காதற்படுக்கைகளும்}, பெரும் விலைமதிப்புமிக்க விரிப்புகளும், சிறந்த ஆசனங்கள் ஏராளமானவையும் ஆங்காங்கே நிறைந்திருந்தன.(19,20) அவன் பிரவேசித்தவுடனேயே, தந்திவாத்தியங்களும், கீதமும் கலந்த, சமமான தாள, பத, அக்ஷரங்களுடன் {தாளம், சொல், எழுத்து ஆகியவற்றுடன்} தொடர்ந்து வரும் மதுரமான சுவனம் {இன்னொலி} காதுகளை எட்டியது.(21) அந்த மஹாபலவான் {லக்ஷ்மணன்}, பல்வேறு தன்மைகளைக் கொண்டவர்களும், ரூபத்தாலும், யௌவனத்தாலும் {இளமையாலும்} கர்வம் கொண்டவர்களுமான ஏராளமான ஸ்திரீகளை அந்த சுக்ரீவ பவனத்தில் கண்டான்.(22) அங்கே, தகுந்த குலத்தில் பிறந்து, மலர்களாலான மாலைகளைச் சூடிக்கொண்டு, சிறந்த மாலைகளை எடுத்துக் கொண்டு, உத்தம ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களைக் கண்டு,{23} சுக்ரீவனை அனுசரிப்பவர்களில் {சுக்ரீவனுக்குத் தொண்டாற்றுபவர்களில்} திருப்தியடையாதவரோ, களைப்படைந்தவரோ, மதிப்புமிக்க உடுப்புகளை உடுத்தாதவரோ எவரும் இல்லை என்பதையும் கவனித்தான் லக்ஷ்மணன்[1].(23,24) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் பின்னர் 25 முதல் 62ம் சுலோகம் வரையுள்ள செய்தி ராமாயணத்தின் செம்பதிப்பில் இல்லை" என்றிருக்கிறது.

அதன்பிறகு, ஸ்ரீமானான அந்த சௌமித்ரி {சுமித்திரையின் மகன் லக்ஷ்மணன்}, நூபுரங்களின் கூஜிதத்தையும் {சிலம்புகளின் சிணுங்கொலிகளையும்}, அதேபோல ஒட்டியாணங்களின் ஒலியையும் கேட்டு லஜ்ஜை {நாணம்} அடைந்தான்.(25) ஆபரண சுவனத்தைக் கேட்ட வீரன் {லக்ஷ்மணன்}, கோப வேகத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக, சப்தத்தால் திசைகளை நிறைத்த நாணொலியை எழுப்பினான்.(26) இராம சோகத்தால் பீடிக்கப்பட்டவனும், மஹாபாஹுவுமான லக்ஷ்மணன், நடக்கும் காரியங்களில் அருவருப்படைந்து ஏகாந்த நிலையில் {தனியாக} நின்றான்[2].(27) 

[2] ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந்தேர் சுற்ற
வேற் கண்வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது
பேர்க்க அருஞ் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அப்பனையினும் பெரிய தோளன்.

- கம்பராமாயணம் 4315ம் பாடல், கிட்கிந்தைப் படலம்

பொருள்: ஆரவாரம் செய்யும் சிலம்புகள் பேரிகைகளாக முழங்க அல்குலெனும் பெரிய தேர் சுற்ற, கண்கள் வேல் படையாகவும், கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படையாகவும் மகளிர் வளைந்தபோது, பனையைவிட உயர்ந்த தோள்களைக் கொண்டவன் {லக்ஷ்மணன்}, யாராலும் மாற்றமுடியாத சீற்றம் தணிய, முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு ஒதுங்கி நின்றதோடல்லாமல் {அந்தப் பெண்களைப்} பார்க்கவும் அஞ்சினான்.

அப்போது, பிலவகாதிபனான {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான} அந்த சுக்ரீவன், அந்த வில்லின் நாணொலியால் {லக்ஷ்மணனின்} வரவை அறிந்து, அச்சமடைந்து, தன் சிறந்த ஆசனத்தில் இருந்து துடித்தெழுந்தான்.(28) "பூர்வத்தில் அங்கதன் என்னிடம் தெரிவித்தபடியே பிராத்ருவத்ஸலரான சௌமித்ரி {உடன்பிறந்தானிடம் பாசம் கொண்டவரும், சுமித்திரையின் மகனுமான லக்ஷ்மணர்} இங்கே வந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது" {என்று சொல்லிக் கொண்டான்}.(29) அங்கதன் சொன்னபடியே அந்த வானரன் {சுக்ரீவன்} நாணொலியால் எழுந்தான். இலக்ஷ்மணன் வந்துவிட்டதை உணர்ந்தவனது முகம் வாட்டமடைந்தது.(30)

அப்போது அச்சமடைந்தவனும், மனம் குழம்பியவனும், ஹரிசிரேஷ்டனுமான {குரங்குகளில் சிறந்தவனுமான} சுக்ரீவன், பிரிய தரிசனந்தரும் தாரையிடம், கலக்கமில்லாமல் ஹிதமாக {பின்வருமாறு} பேசினான்:(31) "ஸுப்ரு {அழகிய புருவங்களைக் கொண்டவளே}, இயல்பில் மிருதுவான மனங்கொண்ட இந்த ராகவானுஜர் {ராமரின் தம்பி}, எதனால் கோபத்திலிருப்பவரைப் போல ஆகிவிட்டார்? உண்மையில் அதற்கான காரணமென்ன?(32) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, குமாரரின் கோபத்திற்கான ஸ்தானமென {அடிப்படையென} எதைப் பார்க்கிறாய்? நரபுங்கவர் {மனிதர்களிற் சிறந்தவரான லக்ஷ்மணர்} காரணமில்லாமல் கோபமடையமாட்டார்.(33) நாம் இவருக்குக் கிஞ்சித்தும் பிரியமற்றதை {விருப்பமில்லாத ஏதேனுமொன்றையாவது} செய்திருக்கிறோமென நீ கருதினால், அதை உடனே புத்தியால் தீர்மானித்துக் கொண்டு, சீக்கிரமே {நான்} அறியச்செய்வாயாக.(34) அல்லது, பாமினி {அழகிய பெண்ணே}, அவரை ஸ்வயமாக {நீயே நேரடியாகச்} சென்று காண்பதே உனக்குத் தகும். தணிவடையச் செய்வதற்குப் பொருத்தமான சொற்களைப் பேசி, அருள்புரியச் செய்வதே உனக்குத் தகும்.(35) உயர்வான அந்த சுத்தாத்மா {லக்ஷ்மணர்}, உன்னை தரிசித்தால் கோபமடையமாட்டார். மஹாத்மாக்கள் ஒருபோதும் ஸ்திரீகளிடம் பயங்கரமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.(36) {சொற்களால்} தணிவடையச் செய்ய நெருங்கும் உன்னால், அவரது இந்திரியங்களும், மனமும் அமைதியடைந்த பிறகே, அரிந்தமரான கமலபத்ராக்ஷரை {பகைவரைக் கொல்பவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான லக்ஷ்மணரை} நான் காண்பேன்" {என்றான் சுக்ரீவன்}.(37)

மதத்தில் மூழ்கும் {குடிமயக்கத்தில் செருகும்} கண்களுடனும், ஒலிக்கும் ஒட்டியாணங்களுடனும், நழுவிய ஹேமசூத்திரத்துடனும் {பொன் அரைஞாணுடனும்} கூடியவளும், லக்ஷணங்கொண்டவளும், குனிந்து வணங்கும் உடலுடன் கூடியவளுமான அந்தத் தாரை, தள்ளாடி நடந்தபடியே லக்ஷ்மணனின் சந்நிதானத்தை அடைந்தாள்.(38) மஹாத்மாவான அந்த மனுஜேந்திர புத்திரன் {லக்ஷ்மணன்}, ஹரிஈசபத்தினியானவளை {குரங்கு மன்னனின் மனைவியான தாரையைக்} கண்டு, உதாசீனத்துடனும் {விருப்புவெறுப்பற்ற அலட்சிய நிலையிலும்}, ஸ்திரீயின் அருகாமையில் இருந்ததால், கோபம் ஒழித்து, முகம் கவிழ்த்தும் {தலை குனிந்தும்} நின்றான்.(39) 

பானயோகத்தாலும் {குடியின் விளைவாலும்}, நரேந்திரபுத்திரனின் அருள்நிறைந்த திருஷ்டியாலும் {பார்வையாலும்}, லஜ்ஜையைத் துறந்த அந்தத் தாரை, மஹா அர்த்தம் பொதிந்ததும், பரிசாந்தரூபமுடையதும் {முழுமையாகத் தணிவடையச் செய்யவல்லதுமான பின்வரும்} வாக்கியத்தை நட்புடனும், துணிவுடனும் சொன்னாள்:(40) "மனுஜேந்திர புத்திரரே, கோபத்தின் மூலம் {வேர்} யாது? உமது வாக்கின் ஆணையைப் பின்பற்றாதவர் யாவர்? உலர்ந்த விருக்ஷங்களுடன் கூடிய வனத்தைப் பற்றியிருக்கும் தவாக்னியை {காட்டுத்தீயை} எவர் தயக்கமின்றி நெருங்குவார்?" {என்று கேட்டாள்}.(41)

அந்த லக்ஷ்மணன், தணிப்பதையே முதலாகக் கொண்டதும், மீண்டும் நட்பைக் காட்டும் அர்த்தம் பொதிந்ததுமான அவளது சொற்களைக் கேட்டு சந்தேகத்திற்கிடமில்லாத {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(42) "பர்த்தாவின் ஹிதத்திற்குத் துணை நிற்பவளே, உன் பர்த்தாவானவன் {உன் கணவன் சுக்ரீவன்} காமவிருத்தமடைந்து, தர்மார்த்தங்களை முற்றிலும் மறந்திருக்கிறான். அவனை ஏன் நீ உள்ளபடியே அறியாதிருக்கிறாய்?(43) தாரே {தாரையே},  அமைச்சர்களுடன் கூடியவன், ராஜ்ஜிய அர்த்தத்தையோ, சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களையோ சிந்திக்காமல் காமத்தில்[3] மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(44) அந்தப் பிலவகேஷ்வரன் {சுக்ரீவன்}, சதுர்மாசங்களைப் பிரமாணமாகக் கொண்டும், கட்டுக்கடங்காத மதத்தில் {குடிமயக்கத்தில்} திளைத்து காலங்கடந்துவிட்டதை உணராமல் இருக்கிறான்.(45) தர்மார்த்தங்களை {அறம், பொருளை} அடையும் நோக்கில் இவ்வாறான பானம் {குடி} மெச்சத்தக்கதல்ல. பானத்தால் தர்மார்த்தகாமங்கள் {அறம், பொருள், இன்பம் ஆகியன} அழிவடையும்.(46) செயலுக்கான பிரதி {கைம்மாறு} செய்யாதவனுக்கு, அதனாலேயே தர்மத்திற்குப் பேரழிவு உண்டாகும். குணவானான மித்திரனின் நாசத்தால் பொருளுக்கும் பேரழிவு உண்டாகும்.(47) சத்தியத்தையும், தர்மத்தையும் பின்பற்றும் மித்திரனே {நண்பனே}, அர்த்தத்தின் நோக்கிலான குணங்களில் சிறந்தவனாவான். இவ்விரண்டையும் {அர்த்தத்தையும், குணத்தையும்} கைவிட்டவன் தர்மத்திலும் நிலை கொள்ளமாட்டான்.(48) காரியங்களின் தத்துவங்களை அறிந்தவளே, தற்போதைய காரியம் இவ்வாறிருக்கையில் இதற்கு மேல் எங்கள் காரியாகாரியங்களை {நாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை} நீயே சொல்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(49) 

[3] இங்கே ஒரு சில பதிப்புகளில் "காமம்" என்றும், வேறு பதிப்புகளில் "பானம்" என்றும் இருக்கிறது. பானம் என்பதை எடுத்துக் கொண்டால் "குடியில் மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்" என்ற பொருள் வரும்.

அந்தத் தாரை, தர்மார்த்தத்திற்கும் {அறம், பொருளுக்கும்}, சமாதானத்திற்கும் பொருத்தமானவையும், மதுர ஸ்வபாவம் கொண்டவையுமான அவனது {லக்ஷ்மணனின்} வாக்கியங்களைக் கேட்டு, அர்த்தம் தொலைந்த மனுஜேந்திரனின் {ராமனின்} காரியத்தில் விசுவாசம் {நம்பிக்கை} உண்டாகும்படி அவனிடம் {லக்ஷ்மணனிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னாள்:(50) "க்ஷிதிபாலபுத்திரரே {புவியாண்டவரின் மகனே}, இது கோபமடைவதற்கான காலமல்ல. சொந்த ஜனங்களிடம் கோபம் அடைவது தகாது. வீரரே, உங்கள் அர்த்தத்தை {காரியம் நிறைவேறுவதை} விரும்பும் அந்த ஜனங்களின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வதே உமக்குத் தகும்.(51) குமாரரே, குணத்தில் மேன்மையானவரால் எவ்வாறு மேன்மையற்றவரிடம் கோபமடைய முடியும்? நன்னடைக்கும், தபசுக்கும் மூலமாகத் திகழும் உம் விதமானவர் எவர்தான் கோபவசமடைவார்?(52) ஹரிவீரபந்துவின் {குரங்குத் தலைவர் சுக்ரீவரின் நண்பரான ராமரின்} கோபத்தை அறிவேன். காரியத்திற்கான காலம் தாமதமாவதையும் அறிவேன். உங்களால் எங்களுக்கு எது செய்யப்பட்டதோ அந்தக் காரியத்தையும், இப்போது ஆக வேண்டிய காரியத்தையும் அறிவேன்.(53) நரசிரேஷ்டரே, சரீரத்தில் பிறக்கும் பலத்தை {காமத்தின் வலுவை} எப்படி சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் அறிவேன். எந்த ஜனங்கள் {பெண்கள்} சுக்ரீவருடன் இடையறாமல் இப்போது காமத்தில் கட்டுண்டிருக்கின்றனர் என்பதையும் அறிவேன்.(54) நீர் எப்படி கோபவசமடைந்தீரோ, அப்படி உமது புத்தி காம தந்திரங்களில் நிலைக்கவில்லை. காமத்தில் திளைத்திருக்கும் மனுஷ்யன், தேசம், காலம், அர்த்தம், தர்மம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளமாட்டான்.(55) பரவீரஹந்தரே {பகை வீரர்களை அழிப்பவரே}, காமவிருத்தமடைந்தவரும், என் அருகில் காமவெறியால் லஜ்ஜை இழந்தவரும் {வெட்கத்தைத் துறந்தவரும்}, உம்முடன் பிறந்தவரைப் போன்றவருமான வானர வம்ச நாதரை பொறுத்துக் கொள்வீராக {சுக்ரீவரை மன்னிப்பீராக}.(56) தபங்களிலும், தர்மங்களிலும் திளைத்திருக்கும் மஹரிஷிகளே கூட, காமத்தைக் கோரி, மோகத்தில் கட்டுண்டு {மயங்கிக்} கிடக்கும் நிலையில், இயல்பிலேயே சபலங்கொண்ட கபியான {குரங்கான} இந்த ராஜா {சுக்ரீவர்}, எவ்வாறு சுகத்தில் மூழ்காதிருப்பார்?" {என்றாள் தாரை}.(57)

மதமயக்கம் கொண்ட கண்களுடன் கூடிய அந்த வானரீ {தாரை}, கணிப்புக்கு அப்பாற்பட்ட லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, வேதனையுடனும், பர்த்தாவின் ஹிதம் கருதியும் மஹா அர்த்தம் பொதிந்த சொற்களை மீண்டும் இந்த வாக்கியங்களில் சொன்னாள்:(58) "நரோத்தமரே, சுக்ரீவர் காமத்தில் மூழ்கியிருந்தாலும், உமது அர்த்தத்திற்கான பிரதி சாதனை உத்யோகத்தை {நீங்கள் செய்த காரியத்திற்குக் கைம்மாறு செய்வதற்கான முயற்சிகளை} முன்பே ஆணையிட்டிருக்கிறார்.(59) மஹாவீரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, பல்வேறு மலைகளில் வசிப்பவர்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், கோடிக்கணக்கிலுமான ஹரயர்கள் {குரங்குகள்} வந்துவிட்டனர்.(60) மஹாபாஹுவே, {உள்ளே} வருவீராக. உமது சாரித்ரத்தை ரக்ஷித்துக் கொண்டீர் {உள்ளே வராமல் உமது மரபைக் காத்துக் கொண்டீர்}. நல்லோர் மித்ரபாவத்துடன் {நண்பர்களின்} தாரங்களைப் பார்ப்பதால் நடைநயமற்றுப் போகாது" {என்றாள் தாரை}.(61) அரிந்தமனான அந்த மஹாபாஹு {பகைவரைக் கொல்பவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணன்} தாரையால் வரவேற்கப்பட்டும், {காரியத்தின்} அவசரத்தால் தூண்டப்பட்டும் உள்ளே {மாளிகைக்குள்} பிரவேசித்தான்.(62) 

அப்போது சுக்ரீவன், பெரும் மதிப்புமிக்க ஆஸ்தரணங்களுடன் {விரிப்புகளுடன் / மெத்தைகளுடன்} கூடிய காஞ்சனப் பரம ஆசனத்தில் {உயர்ந்த பொன்னாசனத்தில்} ஆதித்யனுக்கு ஒப்பான ஒளியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.{63} திவ்ய ஆபரணங்கள் பூண்ட சித்திர அங்கங்களுடனும், திவ்யரூபத்துடனும் கூடியவனும், புகழ்பெற்றவனும், திவ்ய மாலைகளையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்தவனும், மஹேந்திரனைப் போன்றவனுமான அந்த வெல்லப்பட முடியாதவன் {சுக்ரீவன்},{64} திவ்ய ஆபரணங்களும், மாலைகளும் சூடிய பிரமதைகளால் {பெண்களால்} சூழப்பட்டிருந்ததால், பெருங்கோபத்தில் கண்கள் சிவந்து அந்தகனுக்கு ஒப்பானவனானான் {லக்ஷ்மணன்}.(63-65) ருமையை இறுகத் தழுவியபடியே சிறந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தவனும், சிறந்த ஹேம வர்ணனும் {உயர்ந்த பொன்வண்ணம் கொண்டவனும்}, விசால நேத்திரனுமான அந்த வீரன் {அகன்ற விழிகளும் கொண்டவனான சுக்ரீவன்}, அதீனசத்வனும் {சலியாத தின்மைபெற்றவனும்}, விசாலநேத்திரனுமான சௌமித்ரியைக் கண்டான்.(66)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 66

Previous | Sanskrit | English | Next

Friday, 11 August 2023

பிரஸ்ரவண மலை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 27 (48)

Mount Prasravana | Kishkindha-Kanda-Sarga-27 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஸ்ரவண மலையை அடைந்த ராமனும், லக்ஷ்மணனும்; அவர்கள் வசித்த மலைக்குகை குறித்த வர்ணனை...

Lakshmana and Rama in Prasavana Mountain

வானரனான சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டு, குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்த பிறகு, ராமன் தன்னுடன் பிறந்தான் {தம்பி லக்ஷ்மணன்} சகிதனாகப் பிரஸ்ரவண கிரியை {பிரசிரவணம் என்ற மலையை} அடைந்தான்.(1)

அது {பிரஸ்ரவண மலையானது}, சார்தூலங்களாலும் {புலிகளாலும்}, மிருகங்களால் {மான்களாலும்} ஒலிக்கப்பெற்றும், பயங்கரமாக முழங்கும் சிங்கங்களால் நிறையப்பெற்றும், நானாவித குல்மங்களாலும், லதைகளாலும் {புதர்களாலும், கொடிகளாலும்} மறைக்கப்பட்டும், ஏராளமான மரங்களால் அடர்ந்தும்,{2} கரடிகள், வானரங்கள், கோபுச்சங்கள் ஆகியவற்றாலும், பூனைகளாலும் சேவிக்கப்பெற்றும், மேகக்குவியலுக்கு ஒப்பாக, நித்தியம் தூய நீரூற்றுகளுடன் கூடியதுமாக இருந்தது.(2,3) இராமன், சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்} சகிதனாக அந்த சைலத்தின் {மலையின்} சிகரத்தில், அகலமான பெருங்குகை ஒன்றைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டான்.(4) 

அனகனும் {களங்கமற்றவனும்}, உடன்பிறந்தவனும், சுக்ரீவனிடம் {ராவண வதத்திற்கேற்ற} சமயம் குறித்த ஏற்பாட்டைச் செய்து கொண்டவனுமான ரகுநந்தனன் {ராமன்}, விநீதனும் {பணிவுள்ளவனும்}, லக்ஷ்மிவர்தனனுமான {செழிப்பை அதிகரிப்பவனுமான} தன்னுடன் பிறந்தானிடம் {லக்ஷ்மணனிடம்}, காலத்திற்குப் பொருத்தமான {பின்வரும்} மஹத்தான வாக்கியங்களை சொன்னான்:(5,6அ) "அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, சௌமித்ரியே {சுமித்திரையின் மகனே, லக்ஷ்மணா}, ரம்மியமான இந்த கிரியின் குகை விசாலமாக இருக்கிறது. மாருதத்திற்கும் {காற்றுக்கும்}, மழைக்கால ராத்திரிகளுக்குப் பொருத்தமான இவ்விடத்திலேயே நாம் வசிக்கலாம்.(6ஆ,7அ) பார்த்திவாத்மஜா {மன்னரின் மகனே}, ரம்மியமாகத் திகழும் இந்த உத்தம கிரி சிருங்கத்தில்,{7ஆ} வெளுத்தவையும், கரியவையும், சிவந்தவையுமான பாறைகள் சோபித்து {ஒளிர்ந்து} கொண்டிருக்கின்றன; நானாவித தாதுக்கள் பரவிக் கிடக்கின்றன; நதிகளும், அருவிகளும் நிறைந்திருக்கின்றன.{8} விதவிதமான விருக்ஷங்கள் அடர்ந்திருக்கின்றன; அழகிய, அற்புதமான கொடிகளும் இருக்கின்றன; நானாவித பறவைகள் எதிரொலிக்கின்றன. மயூரங்களின் நாதம் {மயில்களின் அகவல்கள்} நிறைந்திருக்கிறது.{9} மாலதி, மல்லிகை ஆகியவற்றின் புதர்களாலும், சிந்துவாரங்களும் {வெண்ணொச்சி}, ஸ்ரீசகைகளாலும் {குறிஞ்சி}, புஷ்பித்தவையான கடம்ப, அர்ஜுன {மருது}, சர்ஜங்களாலும் {ஆச்சா மரங்களாலும்} இது {பிரஸ்ரவண மலை} சோபிக்கிறது.(7ஆ-10) 

நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, பூத்த பங்கஜங்கள் {தாமரைகள்} சூழ்ந்ததும், ரம்மியமானதுமான இந்த நளினி {தாமரைத்தடாகம்} நம் குகையில் இருந்து அதிக தூரத்தில் இல்லை.(11) சௌம்யா {மென்மையானவனே}, இந்த குகையின் வடகிழக்கு தேசம் {பகுதி} நன்றாகத் தாழ்ந்திருக்கிறது. மேற்கு உயர்ந்து வாதமில்லாமல் {காற்றில்லாமல்} இருக்கிறது.(12) சௌமித்ரியே, குகை துவாரத்தில் {வாயிலில்} சம தலமானதும், மழுமழுவென்ற அஞ்சன {மைக்} குவியலுக்கு ஒப்பானதும், கரியதும், அகன்றதுமான  கல் அழகுடன் திகழ்கிறது.(13) தாதா {ஐயா}, இதோ பார். வடக்கில் மழுமழுப்பான அஞ்சன மைக் குவியலின் வடிவில் உதித்திருப்பதும், நீர்த்தாரையைப் போன்றதும், சுபமானதுமான இந்த கிரி சிருங்கத்தையும் {மலைச்சிகரத்தையும்},(14) தக்ஷிண {தென்} திசையில் திடமாக இருப்பதும், நானாவித தாதுக்கள் நிறைந்ததும், வெண்மையானதும், கைலாச சிகரத்தைப் போன்றதுமான மற்றொன்றையும் {மற்றொரு மலையையும்},(15) சந்தனம், திலகம், சாலம் {ஆச்சா}, தமாலம், அதிமுக்தகம் {குருக்கத்தி}, பத்மகம், சரளம் ஆகியவற்றுடனும், அசோகத்துடனும் சோபித்தபடியே, திரிகூடத்து ஜாஹ்னவியை {கங்கையைப்} போல இந்த குகையின் அகலத்திற்குக் கிழக்கு நோக்கிப் பாயும் இந்த நதியையும் {துங்கபத்திரை ஆற்றையும்} பார்[1].(16,17) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் இப்போது கிஷ்கிந்தையில் இருக்கின்றனர். திரிகூடமோ இமயமலைத்தொடரில் இருக்கிறது. அங்கே இருக்கும் கங்கையாறு இங்கே பிரஸ்ரவண {மால்யவத} மலையில் இருக்கும் துங்கபத்திரையுடன் இணக்கமாக நினைவுகூரப்படுகிறது" என்றிருக்கிறது. திரிகூடம் இலங்கையில் உள்ளது என்று ராமாயணத்தில் வேறு சில இடங்களில் வருகிறது. மூன்று மலைகளுக்கு மத்தியில் லங்காபுரி இருந்ததால் அந்த நகரமே திரிகூடம் என்று அழைக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

தீரத்தில் {ஆற்றங்கரையில்} பிறந்தவையும், நானாவித ரூபங்களைக் கொண்டவையும், அங்கேயும், இங்கேயும் இருப்பவையுமான வானீரங்கள், திமிதங்கள், வகுளங்கள் {மகிழங்கள்}, கேதகங்கள் {பேரீச்சைகள்}, ஹிந்தாலங்கள், தினிசங்கள், நீபங்கள் {கடம்பு}, வேதசங்கள், கிருதமாலகங்கள் ஆகிய மரங்களால் இது {ஆறு} வஸ்திர ஆபரணங்களுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {பெண்மணியைப்} போல சோபிக்கிறது.(18,19) நானாவித நாதங்களை எழுப்பும் நூற்றுக்கணக்கான பக்ஷிசங்கங்களால் {பறவைக் கூட்டங்களால்} ஒலிக்கப்பெறுவதும், ஒன்றோடொன்று அன்புள்ள சக்ரவாகங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{20} அதிரம்மியமான மணற்திட்டுகளுடனும், ஹம்சங்கள், சாரஸங்கள் ஆகிவற்றுடனும் கூடிய இது {துங்கபத்திரை ஆறு}, சிரித்துக் கொண்டிருக்கும் நாரீரத்ன விபூஷிதையை {அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்ணைப்} போலத் தெரிகிறது.(20,21) சில இடங்களில் நீலோத்பலங்களாலும் {கருநெய்தல்களாலும்}, சில இடங்களில் ரக்தோத்பலங்களாலும் {செங்கழுநீர்மலர்களாலும்} மறைக்கப்பட்டிருக்கும் இது, சில இடங்களில் வெண்மையானவையும், திவ்யமானவையுமான குமுத {ஆம்பல்} மொட்டுகளுடனும் பிரகாசிக்கிறது.(22) நூற்றுக்கணக்கான நீர்ப்பறவைகள் திரிவதும், மயில்கள், கிரௌஞ்சங்கள் {அன்றில்கள்} ஆகியவற்றின் நாதங்களை எதிரொலிப்பதும், முனிசங்கங்களால் சேவிக்கப்படுவதுமான இந்த நதி ரமணீயமாக இருக்கிறது.(23) 

சந்தன விருக்ஷங்களின் வரிசைகள் உண்டாக்கும் ஈர்ப்பைப் பார். சமகாலத்தில் மனத்தில் உதித்ததைப் போல, ககுபங்களும் {மருத மரங்களின் வரிசைகளும்} இங்கே புலப்படுகின்றன.(24) சத்ருநிசூதனா, சௌமித்ரியே, அஹோ, இந்த தேசம் ரமணீயமாக இருக்கிறது. இங்கே நன்றாக வசித்திருப்போம். திடமான மகிழ்ச்சியை அடைவோம்.(25) நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, சித்திரக் கானகங்களுடன் கூடியதும், ரம்மியமானதும், சுக்ரீவனின் புரியுமான அந்த கிஷ்கிந்தை இங்கிருந்து அதிக தூரத்தில் இல்லை.(26) ஜெயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, கீத வாத்தியங்களின் கோஷங்களும், ஆடம்பர மிருதங்கங்களுடன் கூடிய வானரர்களின் நாதமும் கேட்கின்றன.(27) கபிவரனான {குரங்குகளில் சிறந்தவனான} சுக்ரீவன், தன் பாரியையை {ருமையை} மீண்டும் அடைந்து, ராஜ்ஜியமும் வாய்க்கப்பெற்று, மஹத்தான செழிப்பை அடைந்திருக்கிறான். நிச்சயம் அவன் நண்பர்களால் சூழப்பட்டு ஆனந்தமாக இருக்க வேண்டும்" {என்றான் ராமன்}.(28) 

இராகவன் இவ்வாறு சொல்லிவிட்டு, காண்பதற்கினிய ஏராளமான குகைகளுடன் கூடிய அந்தப் பிரஸ்ரவண கிரியில் லக்ஷ்மணனுடன் வசித்திருந்தான்.(29) நல்ல சுகத்துடனும், ஏராளமான திரவியத்துடனும் அந்த தரணீதரத்தில் வசித்திருந்தபோது, அந்த ராமன், அற்ப மகிழ்ச்சியிலுங்கூட நாட்டங்கொள்ளாதிருந்தான்.(30) விசேஷமாக, உதய மலையில் உதிக்கும் சஷாங்கனை {நிலவைக்} கண்டு, கடத்தப்பட்டவளும், பிராணனைவிட விலைமதிப்பற்றவளுமான தன் பாரியையை {சீதையை} நினைவுகூர்ந்து மனஞ்சோர்ந்திருந்தான்.(31) அந்த சோகத்தில், பொங்கும் கண்ணீருடனும், துடிக்கும் நனவுடனும், நிசியில் {இரவில்} சயனத்தை அடைந்தவனுக்கு நித்திரையும் வசப்படவில்லை.(32)

வருந்திக் கொண்டிருந்தவனும், நித்யம் சோகத்தில் ஆழ்ந்திருந்தவனுமான அந்த காகுத்ஸ்தனை {ராமனைத்} தேற்றியவனும், அதே அளவு துக்கத்தில் இருந்தவனும், உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணன் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(33) "வீரரே, வருந்தியது போதும். உமக்கு சோகம் தகாது. சோகத்தில் இருப்பவனின் சர்வ அர்த்தங்களும் {காரியங்கள் அனைத்தும்} மூழ்கிப் போகும் என்பதை நீர் அறிவீர்.(34) இராகவரே, உலகத்தில் காரியங்களைச் செய்பவர் நீர்; தேவர்களிடம் அர்ப்பணிப்புள்ள ஆஸ்திகரும், தர்மசீலரும், வியவசாயியும் {முயற்சியில் ஈடுபடுபவரும்} நீர்.(35) {இத்தகைய வெற்றிநடை கொண்ட} விக்ரமரான நீர், முயற்சியற்றவராக இருந்தால், கொடுங்காரியங்களைச் செய்யும் சத்ருக்களை, விசேஷமாக ராக்ஷசனானவனை {ராவணனைப்} போரில் கொல்லும் சமர்த்தராகமாட்டீர்.(36) 

உமது சோகத்தை வேரோடு களைந்துவிட்டு, முயற்சியில் திடமடைந்த பிறகு, பரிவாரங்களுடன் சென்று அந்த ராக்ஷசனைக் கொல்வதே தகும்.(37) காகுத்ஸ்தரே,  சாகரங்கள் {கடல்கள்}, வனங்கள் {காடுகள்}, அசலங்கள் {மலைகள்} ஆகியவற்றுடன் கூடிய பிருத்வியையும் {பூமியையே} தலைகீழாக்கும் சக்தி கொண்டவர் நீர் எனும்போது, அந்த ராவணனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(38) கனமழைக்குரிய காலம் இதோ வந்துவிட்டது. சரத் காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, ராஷ்டிரம், கணங்களுடன் {நாடு, தொண்டர்களுடன்} கூடிய அந்த ராவணனை அழிப்பீராக.(39) ஆகுதிகளைக் கொண்டு மூட்டப்பட்டு, பஸ்மத்தில் மறைந்திருக்கும் அனலனை {நீறுபூத்த நெருப்பைப்} போல உறங்கிக் கொண்டிருக்கும் உமது வீரியத்தை உரிய காலத்திலேயே நான் தூண்டுகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(40)

இராகவன், ஹிதமாகவும், சுபமாகவும் லக்ஷ்மணன் சொன்ன அந்த வாக்கியங்களுக்குப் பிரதிபூஜை செய்யும்வகையில், நல்ல ஹிருதயமும், சினேகிதமும் கொண்டவனிடம் {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(41) "இலக்ஷ்மணா, அன்பையும், சினேகத்தையும், ஹிதத்தையும் விரும்பும் சத்தியவிக்கிரமயுக்தன் {உண்மையான பராக்கிரமம் கொண்டவன்} எந்தச் சொற்களைச் சொல்வானோ, அதையே நீ சொன்னாய்.(42) சர்வ காரியங்களையும் சாதகமற்றதாக்கும் இந்த சோகத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு, விக்கிரமங்களில் தடுக்கமுடியாத தேஜஸ்ஸை நான் ஊக்குவிக்கப் போகிறேன்.(43) சுக்ரீவனும், நதியும் அருள்வதற்காகக் காத்தும் சரத்காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்தும், உன் சொற்களில் நான் திடமாக நிலைத்திருப்பேன்.(44) உபகாரம் {உதவி} பெற்ற வீரன், பிரதிகாரம் {கைம்மாறு} செய்ய வேண்டும். நன்றி மறந்து பதிலுதவி செய்யாதவன், சத்வவதர்களின் {நல்லவர்களான சான்றோரின்} மனங்களைப் புண்படுத்துகிறான்" {என்றான் ராமன்}.(45)

இலக்ஷ்மணன் அதையே {ராமனால் சொல்லப்பட்டதையே} பொருத்தமானதாக ஆலோசித்து, கைகளைக் கூப்பி, அந்த பாஷிதத்திற்கு {பேச்சுக்கு} பிரதிபூஜை செய்து, தன்னுடைய நன்னோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, அழகிய தோற்றம் கொண்டவனான ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(46) "நரேந்திரரே, நீர் சொன்னது போல், வானரன் {சுக்ரீவன்} விரைவாக இல்லையெனினும் உமது விருப்பத்திற்குரிய அனைத்தையும் செய்வான். ரிபு நிக்ரஹத்தில் {பகைவனை அழிப்பதில்} திடமாகவும், சரத் காலத்தை எதிர்பார்த்தும் இருந்து, இந்த ஜலப் பிரபாதங்களை {கனமழையைப்} பொறுத்துக் கொள்வீராக.(47) சத்ருவதத்திற்கு சமர்த்தரான நீர், கோபத்தைப் பொறுத்துக் கொண்டு, சரத்காலத்தை {கூதிர்காலத்தை/ இலையுதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, சதுர் மாசங்களை {நான்கு மாதங்களைக்} கழித்து, மிருகங்களால் சேவிக்கப்படும் ராஜாவை {சிங்கத்தைப்} போல இந்த அசலத்தில் {மலையில்} என்னுடன் வசித்திருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(48)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 48

Previous | Sanskrit | English | Next

Thursday, 3 August 2023

சுக்ரீவ பட்டாபிஷேகம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 26 (42)

Coronation of Sugreeva | Kishkindha-Kanda-Sarga-26 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் பட்டாபிஷேகம்; அங்கதன் இளவரசனாக்கப்பட்டது...

Rama Sugreeva Hanuman

அப்போது, சோகத்தில் தபித்துக் கொண்டிருந்தவனும், நனைந்த ஆடைகளுடன் கூடியவனுமான சுக்ரீவன், சாகை மிருக மஹாமாத்ரர்களின் {கிளையில் வாழும் விலங்குகளுடைய அமைச்சர்களின்} பரிவாரத்தால் சூழப்பட்டிருந்தான்.(1) அவர்கள் அனைவரும், பிதாமகனை {நோக்கிச் செல்லும்} ரிஷிகள் போல, மஹாபாஹுவும், இடையூறேதுமின்றி காரியங்களைச் செய்பவனுமான ராமனை நோக்கிச் சென்று கைகளைக் கூப்பி நின்றனர்.(2) 

காஞ்சன சைலத்தை {பொன்மலையைப்} போன்றவனும், தருணார்க்கனின் {இளஞ்சூரியனின்} ஒளியை முகத்தில் கொண்டவனும், மாருதாத்மஜனுமான {வாயு தேவனின் மகனுமான} ஹனுமான், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(3) "பிரபுவே, காகுத்ஸ்தரே, நல்ல பற்களைக் கொண்டவர்களும், நிறைவான பலசாலிகளும், மஹாத்மாக்களுமான வானரர்கள், பித்ருபைதாமஹர்களுக்குரியதும் {தந்தை, பாட்டன்மாருக்கு உரியதும்}, மகத்தானதும், அடைதற்கரியதுமான இந்த ராஜ்ஜியத்தை உமது அருளால் கிடைக்கப்பெற்றனர்.(4,5அ) நல்ல ஹிருதயம் கொண்ட நட்பு கணத்துடன் {நண்பர்களுடன்} கூடிய இவர் {சுக்ரீவர்}, உமது நல்லனுமதியின் பேரில், சுபமான நகருக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்து, விதவிதமான கந்தங்களாலும் {நறுமணப் பொருட்களாலும்}, ஔஷதிகளாலும் {மூலிகைகளாலும்} விதிப்படி ஸ்நானம் செய்து {மன்னனாக அபிஷேகம் செய்து கொண்டு}, சர்வ காரியங்களையும் நல்ல முறையில் செயல்படுத்தட்டும்.(5ஆ,6) மாலைகளாலும், ரத்தினங்களாலும் விசேஷமாக உம்மை அர்ச்சிக்கட்டும். நீர் ரம்மியமான இந்த கிரி குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} செல்வதே தகும். ஸ்வாமியின் {தலைவரான சுக்ரீவரின்} சம்பந்தத்தை ஏற்படுத்தி வானரர்களை மகிழ்விப்பீராக" {என்றான் ஹனுமான்}.(7,8அ)

ஹனுமான் இவ்வாறு சொன்னதும், பகைவீரர்களைக் கொல்பவனும், வாக்கிய கோவிதனும் {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனும்}, புத்திமானுமான ராகவன் {ராமன்}, ஹனூமந்தனுக்கு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8ஆ,9அ) "சௌம்யா {மென்மையானவனே}, ஹனுமானே, பிதாவின் ஆணைக்கிணங்க, சதுர்தச {பதினான்கு} வருடங்கள் கிராமத்திலோ, அதன் புறத்திலோ {அதைப் போன்ற வேறு எங்குமோ}, புரத்திலோ {நகரத்திலோ} பிரவேசிக்கமாட்டேன்.(9ஆ,10அ) வீரனும், வானரரிஷபனுமான {வானரர்களில் காளையுமான} சுக்ரீவன், நல்ல வளமிக்க திவ்ய குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்ததும், சீக்கிரம் ராஜ்ஜியத்தில் விதிப்படி {மன்னனாக} அபிஷேகிக்கப்படட்டும்" {என்றான் ராமன்}.(10ஆ,11அ) 

விருத்தம் {நடைமுறை} அறிந்தவனான ராமன், ஹனூமந்தனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, விருத்தசம்பன்னனும் {நடைமுறை அறிவில் நிறைவானவனும்}, வலிமையுடனும், வீரத்துடனும் செயல்படுபவனான சுக்ரீவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(11ஆ,12அ) "வீரனான இந்த அங்கதனும் யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படட்டும் {இளவரசனாக முடிசூட்டப்படட்டும்}. மூத்தவனின் {வாலியின்} மூத்த மகனும், விக்கிரமத்தில் அவனுக்கு {வாலிக்கு} ஒப்பானவனும், அதீன ஆத்மாவுமான {சோர்வில்லாதவனுமான} இந்த அங்கதன் யௌவராஜ்ஜியத்தில் நன்கு பொருந்துபவன்.(12ஆ,13) சௌம்யா, வார்ஷிகமென {மழைக்காலமாகக்} குறிப்பிடப்படும் சத்வார மாசங்கள் {நான்கு மாதங்கள்} தொடங்குகின்றன[1]. நீர் பொழியும் சிராவணம் மழைக்காலத்தின் முதல் மாசமாகும்.(14) 

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வர்ஷாகாலம் இரண்டு மாதங்களே. ஆயினும் கீழ்ச்சென்ற ஆடிமாதத்தையும், மேல்வரும் அற்பிசிமாதத்தையும் கூட்டிக் கொண்டு இந்நான்கு மாதங்களும் யுத்தத்திற்குத் தகாதவையாகையால் நான்கென்று இங்குச் சொல்லப்பட்டன. அன்றியே - "பக்ஷாவைமாஸாம்" என்கிற ச்ருதியின்படி பக்ஷங்கள் {அரைமாதங்கள்} மாஸங்களென்னப்படுகையால் நான்கு மாதங்கள் நான்கு பக்ஷங்களென்று சிலர் கருதுகின்றனர்" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் ஐப்பசிமாதமே அற்பிசிமாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சிராவணம் என்பது ஆடி அமாவாசை முதல், ஆவணி அமாவாசை வரையுள்ள காலமாகும். இந்த 14ம் சுலோகத்தில், "மழைக்காலத்தின் நான்கு மாதங்கள் தொடங்குகின்றன" என்றும், இதே சர்க்கத்தின் 17ம் சுலோகத்தில், "கார்த்திகை மாதம் நெருங்கும்போது நீ ராவண வதத்திற்கு முயற்சிக்க வேண்டும்" என்றும் ராமன் சொல்கிறான். கார்த்திகைக்கு முந்தைய நான்கு மாதங்கள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகியனவாகும். எனவே, சிராவண காலம் ஆடியிலும், ஆவணியிலும் இருந்தாலும் இங்கே குறிப்பிடப்படும் வார்ஷிக சத்வார மாசங்களின் முதல் மாதம் ஆடியாகவே இருக்க வேண்டும்.

சௌம்யா, இஃது உத்யோகத்திற்கான {அலுவலுக்கான} சமயமல்ல. நீ சுபமான புரீக்குள் {மங்கலமான கிஷ்கிந்தை நகரத்திற்குள்} பிரவேசிப்பாயாக. இலக்ஷ்மணனுடன் நான் இந்தப் பர்வதத்தில் {மலையில்} வசித்திருப்பேன்.(15) சௌம்யா, இந்த கிரியின் குகை ரம்மியமாகவும், விசாலமாகவும், மாருதத்திற்குத் தகுந்ததாகவும் {காற்றோட்டம் நிறைந்ததாகவும்}, ஏராளமான நீருடனும், ஏராளமான கமலங்களுடனும் {தாமரைகளுடனும்}, உத்பலங்களுடனும் {கருங்குவளைகளுடனும்} இருக்கிறது.(16) கார்த்திகை நன்கு நெருங்கும் பிராப்தத்தில், நீ ராவண வதத்திற்கு முயற்சிக்க வேண்டும். அதுவே {கார்த்திகை மாதமே} நமக்கு ஏற்ற சமயமாகும்[2]. சௌம்யா, நீ உன் ஆலயத்தில் பிரவேசிப்பாயாக. இராஜ்ஜியத்தில் அபிஷேகமும் செய்து கொண்டு, நல்ல ஹிருதயம் கொண்டவர்களை {நண்பர்களை} முழுமையாக மகிழ்ச்சியடையச் செய்வாயாக" {என்றான் ராமன்}.(17,18அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்குக் கார்த்திகை ஸமீபித்து வருகையைச் சொல்லுகையால் அற்பிசிமாதத்தின் கடைசியைச் சொல்லுகிறது. ராமனே இந்த ஏற்பாட்டை அற்பிசிமாதமீறாகச் சொல்லியிருக்கின்றனன். புறப்படுவது மார்கழி மாதத்தில். தான் ஏற்பாடு பண்ணின கார்த்திகை மாதத்தைக் கடக்கையால் ராமனுக்கு ஸுக்ரீவன் மேல் கோபமும் லக்ஷ்மணனை அனுப்பினதும். ஆகையால் கார்த்திகை மாதங்கடந்து மார்கழி மாதத்திலேயே வானரர்க்ள புறப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் அவர்கள் ஸீதையைத் தேடச் சென்று, ஸ்வயம்ப்ரபையின் பிலத்தில் வெகுகாலமிருந்து, அதினின்று வெளிப்பட்டு வரும்பொழுது, வஸந்தகாலத்தில் புஷ்பிப்பதற்குத் தொடக்கமான இலையுதிர்காலமாகிய பங்குனி மாதத்தைப் பற்றியதால், பக்ஷாந்தரத்தில் பங்குனியும், சித்திரையும் வஸந்த ருது வென்றதைப் பற்றியதால். இவ்விடத்தில் இங்ஙனம் க்ரமங்கொள்ள வேணும். அதெப்படியெனில், சித்திரை மாதத்தில் ராமன் அயோத்யையினின்று புறப்பட்டனன். அகஸ்த்யாசிரமத்திற்கு வருவதன் முன்னம் பத்து ஸம்வத்ஸரங்களாயினவென்று சொல்லப்பட்டது. பிறகு பஞ்சவடியில் மூன்று ஸம்வத்ஸரங்கள் கடந்து சித்திரை மாதம் வருகையில் சூர்ப்பணகையின் காது மூக்குகளையறுத்ததும், கராதிகளின் வதமும் நடந்ததாகத் தெரியவருகின்றது. ராவணன் மாரீசனுடைய போதனத்தினால் கொஞ்சம் தாமதித்து அந்தச் சைத்ரமாதத்திலேயே ஸீதையைக் கொண்டுபோயினன். ஸீதாவிரஹத்தினால் ராமன் வருந்தி, வஸந்தருதுவை வர்ணிக்கும்க்ரமத்தில் சித்திரை மாதத்து மந்தமாருதத்தை வர்ணித்தானாகையாலும், ஸீதை லங்கையில் ஸம்வத்ஸரம் இருந்ததாகச் சொல்லியிருக்கையாலும், சித்திரை மாதத்திலேயே ஸீதை அபஹரிக்கப்பட்டனள். மீளவும் பங்குனி மாதத்தில் ராவண வதம். சரத்ருதுவில் ஸேனையைக் கட்டினது. மார்கழியில் வானரர்கள் புறப்படுதல். ஸ்வயம்ப்ரபையின் பிலத்தில் வெகுகாலம் கடந்தது. பிலத்தினின்று வெளிப்பட்ட பின்பு பங்குனி மாதத்தின் சுக்லபக்ஷ த்ரயோதசியினன்று ஹனுமான் ஸமுத்ரத்தைத் தாண்டுதல். சதுர்தசியினன்று மீளவும் தாண்டி வருதல். பூர்ணிமையன்று யுத்த யாத்ரை. மற்றவை யுத்தகாண்டத்திற் சொல்லப்படும்" என்றிருக்கிறது.

இவ்வாறு ராமன் நல்லனுமதியளித்ததும், வானரரிஷபனான சுக்ரீவன், வாலி பாலிதம்  செய்து {ஆண்டு} வந்த ரம்மியமான கிஷ்கிந்தாபுரீக்குள் பிரவேசித்தான்.(18ஆ,19அ) வானரேஷ்வரன் {வானரர்களின் தலைவனான சுக்ரீவன் அவ்வாறு} பிரவேசித்ததும், எங்குமிருந்து ஆயிரக்கணக்கான வானரர்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் பிலவகேஷ்வரனை {தாவிச்செல்பவர்களான தலைவனான சுக்ரீவனைச்} சூழ்ந்து நின்றனர்.(19ஆ,20அ) பிறகு, பிரகிருதிகள் {குடிகள்} அனைவரும் ஹரிகணேஷ்வரனை {குரங்குக் கூட்டத் தலைவனான சுக்ரீவனைக்} கண்டு, தலையால் வணங்கி, சமாஹிதத்துடன் {கவனமாக} வசுதையில் {பூமியில்} பணிந்தனர்.(20ஆ,21அ) வீரியவானும், மஹாபலவானுமான சுக்ரீவன், பிரகிருதிகள் {குடிகள்} அனைவரையும் எழுப்பிப் பேசிவிட்டு, உடன்பிறந்தவனின் சௌம்யமான {வாலியின் அழகிய} அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தான்.(21ஆ,22அ) பீமவிக்ராந்தனும் {பயங்கர வீரனும்}, வானரரிஷபனுமான சுக்ரீவன் {அந்தப்புரத்திற்குள்} பிரவேசித்துத் திரும்பியதும், நல்ல ஹிருதயம் கொண்டவர்கள் {நண்பர்கள்}, அமரர்கள் சஹஸ்ராக்ஷனுக்கு {தேவர்கள் இந்திரனுக்கு அபிஷேகம் செய்து வைத்ததைப்} போல அபிஷேகம் செய்து வைத்தனர்.(22ஆ,23அ)

ஹேமத்தால் {பொன்னால்} மேன்மையாக அலங்கரிக்கப்பட்ட வெண்குடையையும், ஹேமதண்டத்தையும் {பொன்னாலான செங்கோலையும்}, புகழை அதிகரிக்கும் வெண்சாமரத்தையும் அவனுக்குக் கொண்டு வந்தனர்.{23ஆ,24அ} அதேபோல, அனைத்து ரத்தினங்களையும், வித்துகள் {நவதானியங்கள்}, ஔஷதிகள் {மூலிகைகள்} அனைத்தையும்,{24ஆ} பாலுள்ள விருக்ஷங்கள் {மரங்கள்}, தளிர்கள், மலர்கள், வெள்ளை வஸ்திரங்கள், வெண்மையான அங்கராகம் {கற்பூரம், வெண்சந்தனம்},{25} சுகந்தமான மாலைகள், பூமியில் பூத்த அம்புஜங்கள் {நிலத்தாமரைகள்}, திவ்யமான சந்தனம், ஏராளமான விதவித கந்தங்கள்,{26} அக்ஷதை {புனிதமான மஞ்சளரிசி}, ஜாதரூபம் {தங்கம்}, பிரியாங்கு {ஞாழல் கொடி / யவதானியம்}, மது {தேன்}, நெய், தயிர், வியாகரசர்மம் {புலித்தோல்}, {பன்றித் தோலினால் செய்யப்பட்ட} மதிப்புமிக்க பாதுகைகள் இரண்டு ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்,{27} மேனியெங்கும் முழுமையாகப் பூசிக்கொள்ளும் களிம்பு {மெய்க்கூண்டு}, கோரோசனம் {அரிதாரம்}, மனோசிலை {திலகம்} ஆகியவற்றுடன் பதினாறு சிறந்த கன்னியர் மகிழ்ச்சியுடன் அங்கே வந்தனர்.(23ஆ-28) பிறகு, ரத்தினங்கள், வஸ்திரங்கள், பக்ஷியங்கள் ஆகியவற்றைக் கொடுத்து துவிஜரிஷபர்களை {இருபிறப்பாளர்களில் காளைகளைத்} திருப்தியடையச் செய்தவர்கள், விதிப்படி அந்தச் சிறந்த வானரனுக்கு {சுக்ரீவனுக்கு} அபிஷேகம் செய்தனர்.(29) அப்போது மந்திரவித ஜனங்கள் {மந்திரங்களை அறிந்த அறிஞர்கள்}, குசப்புற்களைப் பரப்பி, வேள்விநெருப்பை மூட்டி, மந்திரங்களால் புனிதமடைந்த ஹவிசுடன் {ஆகுதியுடன்) ஹோமம் செய்தனர்.(30)

பிறகு, பிராசாதத்தின் சிகரத்தில் ஹேமப் பிரதிஷ்டானத்தை {உயர்ந்த பீடத்தின்மேல் பொன்னாலான கால்களைக்} கொண்டதும், மேலான மெத்தை பரப்பப்பெற்றதும், சித்திர மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும்,{31} ரம்மியமானதும், சிறந்ததுமான ஆசனத்தில் {அரியணையில்}, மந்திரங்களுடன் விதிப்படி {சுக்ரீவனை} கிழக்கு முகமாக ஸ்தாபித்து {இருக்கச் செய்து}, நதிகள் {கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்}, நதங்கள் {மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்} ஆகியவற்றில் இருந்தும், எங்குமுள்ள தீர்த்தங்களில் இருந்தும் நீரைச் சேகரித்து,{32} சர்வ சமுத்திரங்களில் இருந்தும் விமலமான ஜலத்தை {மாசற்ற நீரைக்} கொண்டு வந்த வானரரிஷபர்கள் {வானரர்களில் காளைகள்}, கனகக் கும்பங்களிலும் {பொற்குடங்களிலும்},{33} சுபமான ரிஷப சிருங்கங்களிலும் {காளைகளின் கொம்புகளிலும்}, காஞ்சனக் கலசங்களிலும், சாஸ்திர நோக்கில் மஹரிஷிகளால் விதிக்கப்பட்ட விதிகளின்படியே {நீரை} இட்டனர்.{34} கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், துவிவிதன், ஹனூமான், ஜாம்பவான் ஆகியோர்,{35} சுத்தமானதும், நறுமணமிக்கதுமான அந்த நீரைக் கொண்டு, வசுக்கள் சஹஸ்ராக்ஷனான வாசவனுக்கு {வசுக்கள் ஆயிரம் கண் படைத்த இந்திரனுக்கு அபிஷேகம் செய்வித்தது} போல சுக்ரீவனுக்கு அபிஷேகஞ்செய்தனர்[3].(31-36)

[3] மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை (4118)
மறையோர் ஆசி வழங்க வானுளோர்
நறைதோய் நாள்மலர் தூவ நல்நெறிக்கு
இறையோன்தன் இளையோன் அவ்வேந்தலை
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான் (4119)

- கம்பராமாயணம், 4118, 4119ம் பாடல்கள், அரசியல் படலம்

பொருள்: நீராட்டுவதற்குரிய புனித நீரும், மதிப்புமிக்க பொன்னாலான மணிமுடி முதலிய யாவையும் வந்து சேர்ந்ததும், சிறந்தவனின் தம்பியும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனும்}, பெருமைக்குரியவனுக்கு {சுக்ரீவனுக்குத்} தவறாமல் செய்ய வேண்டிய செயல்களைச் செய்து,(4118) வேதம் அறிந்தவர்கள் வாழ்த்துக் கூற, தேவர்கள் தேன்நிறைந்தவையும், அன்று மலர்ந்தவையுமான மலர்களைத் தூவ, நன்னெறிக்குத் தலைவனின் தம்பி {சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனின் தம்பி லக்ஷ்மணன்} அந்தப் பெருமைக்குரியவனுக்கு {சுக்ரீவனுக்கு}, நெறிமுறைகளில் வல்லவர்கள் கூறிய நூல்களில் உள்ளபடி முடிசூட்டினான். கம்பராமாயணத்தில் லக்ஷ்மணன், சுக்ரீவனுக்கு முடிசூட்டியதாக வருகிறது. வால்மீகியில் லக்ஷ்மணன், ராமனுடன் மலையிலேயே தங்கிவிடுகிறான். முக்கிய வானரர்களே சுக்ரீவனுக்கு முடிசூட்டுகின்றனர். 
 
Sugreeva's coronation

சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்த மஹாத்மாக்களான சர்வ வானரபுங்கவர்களும் {சிறந்த வானரர்களும்} மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.(37) ஹரிபுங்கவனான சுக்ரீவன், ராமனின் சொற்களுக்குக் கீழ்ப்படியும் வண்ணம், அங்கதனை ஆரத்தழுவிக்கொண்டு யௌவராஜ்ஜிய அபிஷேகம் செய்து வைத்தான் {அங்கதனை இளவரசனாக முடிசூட்டினான்}.(38) அங்கதனும் அபிஷேகிக்கப்பட்டதும், அவனிடம் இரக்கம் கொண்ட மஹாத்மாக்களான பிலவங்கமர்கள் {தாவிக் குதிப்பவர்களான குரங்குகள்}, "சாது {நன்று}, சாது {நல்லது}" என்று சொல்லி சுக்ரீவனைப் பூஜித்தனர்.(39) அங்கே அவ்வாறு நடந்த போது பிரீதியடைந்த அனைவரும், மஹாத்மாவான ராமனையும், லக்ஷ்மணனையும் மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(40) கிரி குகைகளுடன் இருந்ததும், பதாகைகளாலும், துவஜங்களாலும் சோபித்ததும், ரம்மியமானதுமான கிஷ்கிந்தா நகரம், மகிழ்ச்சிமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான ஜனங்களால் நிறைந்திருந்தது.(41) பிறகு, வீரியவானான கபிவாஹினீபதி {குரங்குப் படைத் தலைவனுமான சுக்ரீவன்}, மஹாத்மாவான ராமனிடம் மஹா அபிஷேகத்தைக் குறித்துத் தெரியப்படுத்தி, பாரியையான ருமையை மீட்டு, திரிதசாதிபனை {தேவர்களின் தலைவனைப்} போல ராஜ்ஜியத்தை அடைந்தான்.(42)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 42

Previous | Sanskrit | English | Next

Saturday, 8 July 2023

தாரையின் புலம்பல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 20 (26)

Tara's lamentation | Kishkindha-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விழுந்து கிடக்கும் வாலியைக் கண்டு கதறிய தாரையின் புலம்பல்...

Tara Angada Lakshmana Rama Vali Sugreeva Hanuman

தாராதிபனின் {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனின்} முகம் படைத்த தாரை, ராமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டதும், அந்தகனைப் போன்றதுமான சரத்தால் வீழ்ந்து, பூமியில் கிடக்கும் தன் பர்த்தாவை {கணவன் வாலியைக்} கண்டாள்.(1) அந்த பாமினி {பெண்மணி}, குஞ்சரத்திற்கு {யானைக்கு} ஒப்பானவனும், கணையால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தவனுமான வானரன் வாலியை அணுகி அணைத்துக் கொண்டாள்.(2) பர்வதேந்திரனுக்கு {பெரும் மலைக்கு} ஒப்பானவன், வேரறுந்த மரத்தைப் போலக் கிடப்பதைக் கண்ட தாரை, துன்பமடைந்தவளாக சோகத்தால் தபிக்கும் மனத்துடன் {பின்வருமாறு சொல்லி} கதறி அழுதாள்:(3) "போரில் பயங்கரரே, விக்ராந்தரே {வெற்றியாளரே}, சிறந்த வீரரே, பிலவதாம்வரரே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவரே}, தீனமானவளும் {பரிதாப நிலையில் இருப்பவளும்}, ஒன்றும் அறியாதவளுமான என்னிடம் இப்போது நீர் ஏன் பேசாதிருக்கிறீர்?(4) 

ஹரிசார்தூலரே {குரங்குகளில் புலியே}, எழுவீராக. உத்தம சயனத்தில் {சிறந்த படுக்கையில்} படுப்பீராக. சிறந்த நிருபர்கள் {மன்னர்கள்} இவ்விதம் பூமியில் படுப்பதில்லை.(5) வசுதாதிபரே {பூமியின் தலைவரே}, உண்மையில் வசுதையே {பூமியே} உமக்குப் பிரியமிக்கவளோ? உயிர் துறந்தும் என்னைவிட்டு காத்திரங்களால் {உமது அங்கங்களால்} அவளை சேவிக்கிறீர்.(6) வீரரே, தர்மத்தின்படி செயல்படுபவரான நீர் இப்போது கிஷ்கிந்தையைப் போன்ற ரம்மியமான புரியை ஸ்வர்க்க மார்க்கத்தில் நிர்மாணித்திருப்பது தெளிவாகிறது.(7) 

மதுகந்தம் {தேன்மணம்} வீசும்  வனங்களில், அந்தந்த காலங்களில் நீர் எங்களுடன் கூடி விளையாடுவதை எல்லாம் இத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்.(8) யூதபர்களில் மஹாயூதபரே {குழுத்தலைவர்களில் பெருந்தலைவரே}, நீர் பஞ்சத்வத்தை அடைந்ததால் {இறந்ததால்} நான் ஆனந்தமிழந்து, ஆசையிழந்து {நம்பிக்கையிழந்து} சோக சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்[1].(9) நீர் கொல்லப்பட்டு புவியில் கிடப்பதைக் கண்ட சோகத்தால் பீடிக்கப்பட்டும், இன்னும் ஆயிரந்துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால் என் ஹிருதயம் {கல்லைப் போல} மிக திடமானதுதான்.(10) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்றிருக்கிறது.

பிலவகாதிபரே {தாவிச் செல்பவையான குரங்குகளின் தலைவரே}, எதற்காக சுக்ரீவரின் பாரியையை {ருமையை} அபகரித்து, அவரையும் {சுக்ரீவரையும் கிஷ்கிந்தையில் இருந்து} விரட்டினீரோ, அதற்காகவே இந்த விளைவை நீர் அடைந்தீர்.(11) வானரேந்திரரே, {உமது} நலத்தில் விருப்பத்துடன் கூடிய ஹிதைஷிணியாக {நலம்விரும்பியாக} நான் உமக்கு ஹிதமான {நன்மைபயக்கும்} வாக்கியத்தைச் சொன்னாலும், மோஹத்தால் {அறியாமையால்} நீர் என்னை நிந்தித்தீர்.(12) மாநதரே {மதிப்பளிப்பவரே}, ஆரியரே, ரூபத்தாலும், யௌவனத்தாலும் {வடிவழகாலும், இளமையாலும்} செருக்குற்றவர்களும், தக்ஷிணைகளுமான {[காதல் விளையாட்டுகளில்] திறன்மிக்கவர்களுமான} அப்சரஸ்களின் சித்தங்களை நிச்சயம் நீர் கொள்ளை கொள்ளப் போகிறீர்[2].(13) எவன் வசமில்லாத உம்மை, பலாத்காரமாக சுக்ரீவரின் வசம் அடையச் செய்தானோ அந்தக் காலனே நிச்சயம் உமக்கு ஜீவிதாந்தகன் {உயிருக்கு முடிவை ஏற்படுத்தியவன்}. இதில் சந்தேகமில்லை.(14) வேறொருவருடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வாலியை {உம்மை}, முறையற்ற, பழிக்கத்தக்க வகையில்  கொன்றும், காகுத்ஸ்தன் {ராமன்} வருந்தாமல் இருக்கிறான்[3].(15) 

[2] தர்மாலயப் பதிப்பில், "உமக்கு இப்பொழுது உயிருக்கு முடிவை விளைவிக்கிறதாகிய காலமிது. இதற்கையமின்று. எவர் கையிலுமகப்படாத நீர் அதனால் பிடிவாதமாய் சுக்ரீவனது கையில் சிக்கிக் கொண்டீர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நீ எவர்க்கும் ஸ்வாதீனப்படாதவன். இப்படிப்பட்ட உன்னைத் தனது ஸாமர்த்யத்தினால் மனமயங்கச் செய்து ஸுக்ரீவன் வசம் அகப்படும்படி செய்தது, உன் ப்ராணன்களைக் கொள்ளும் பொருட்டு வந்த ம்ருத்யுவேயன்றி வேறன்று" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இக்காலம் தேவருடைய ஆயுளை மாய்க்குங்காலந்தான்போலும், இல்லாவிடின் இந்த ஸுக்ரீவனுக்கு வசமாகி இப்படி யழிந்திருப்பீரோ?" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் செம்பதிப்பு, கிழக்கு பாடம் முதலிய சில பதிப்புகளில் இல்லை" என்றிருக்கிறது. தாரையின் புலம்பலில் இந்த சுலோகம் தொடர்பின்றி ஒட்டாமல் வருவதாகவே தெரிகிறது. இறந்து போகும் வாலியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வேறு யாரிடமோ தாரை பேசுவதைப் போலாகிவிடுகிறது. இந்த சுலோகத்தில் "வாலி" என்று வரும் இடத்தில் "உம்மை" என்ற சொல் வந்தால் தாரையின் புலம்பல் சரியாக இருக்கும்.

பூர்வத்தில் {இதற்குமுன்} கிருபைக்குரியவளாகவோ, துக்கப்படுபவளாகவோ இல்லாதவள், இப்போது சோகத்தில் மூழ்கியவளாக அநாதையைப் போல கிருபைக்குரிய வைதவ்யத்தை {கைம்மையை / விதவைத் தன்மையை} அடைந்திருக்கிறேன்.(16) செல்லமாக வளர்க்கப்பட்டவனும், சுகுமாரனும், வீரனுமான என் அங்கதன், குரோதத்தில் மூர்ச்சித்திருக்கும் பிதாவின் தம்பியிடத்தில் {சிற்றப்பன் சுக்ரீவரிடத்தில்} என்ன அவஸ்தையை அனுபவிக்கப் போகிறானோ?(17) {இவ்வளவு நேரம் வாலியிடம் பேசிக் கொண்டிருந்தவள், மகனான அங்கதன் பக்கம் திரும்பி}, புத்திரா {அங்கதா}, தர்மவத்ஸலரான உன் பிதாவை {தந்தையை} நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. வத்ஸா {குழந்தாய்}, இந்த தரிசனம் இனி கிடைப்பது துர்லபமாகும் {இனி கிடைக்காது}.(18) {அங்கதனிடம் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் வாலியிடம்}, மறுமையில் வசிக்கப் புறப்பட்டுவிட்ட நீர், உமது புத்திரனை ஆசுவாசப்படுத்துவீராக. உச்சியை முகர்ந்து இவனுக்கான செய்தியைச் சொல்வீராக.(19) 

உண்மையில் ராமன் உம்மை வீழ்த்தி மஹத்தான கர்மத்தைச் செய்திருக்கிறான். சுக்ரீவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கடனற்ற நிலையை அடைந்துவிட்டான் {தன் கடமையைச் செய்துவிட்டான்}.(20) {வாலியிடம் இதைச் சொல்லிவிட்டு சுக்ரீவனின் பக்கம் திரும்பி} சுக்ரீவரே, ஆசை நிறைவேறிய நீர், உமது ருமையிடம் திரும்பிச் சென்று, கவலையேதுமின்றி ராஜ்ஜியத்தை அனுபவிப்பீராக. உடன்பிறந்த உமது பகைவர் {வாலி} கொல்லப்பட்டார்.(21) {சுக்ரீவனிடம் இதைச் சொன்ன தாரை, மீண்டும் வாலியிடம்}, வானரேஷ்வரரே {வானரங்களின் தலைவரான வாலியே}, இவ்வாறு நான் அழுதுகொண்டிருக்கும்போது, பிரியத்துடன் என்னிடம் ஏன் நீர் பேசாதிருக்கிறீர்? உமது பாரியைகளில் சிறந்தவர்கள் பலரும் இதோ இருக்கின்றனர்; பார்ப்பீராக" {என்றாள் தாரை}.(22) 

சுற்றிலும் இருந்த வானரிகள், அவளது {தாரையின்} புலம்பலைக் கேட்டு, தீனமடைந்த அங்கதனை அணைத்துக் கொண்டு, துக்கத்துடன் பரிதாபகரமாகக் கதறி அழுதனர்.(23) {தாரை, மேலும் தன் புலம்பலைத் தொடர்ந்தாள்}, "அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட வலிமைமிக்க கரங்களைக் கொண்ட வீரரே, பிரிய புத்திரன் அங்கதனைக் கைவிட்டு, நெடும்பயணம் செல்வதேன்? உமது குணங்களுடன் கூடியவனும், பிரியத்திற்குரிய அழகிய வேஷத்தில் {தோற்றத்தில்} இருப்பவனுமான பிரிய புத்திரனைக் கைவிட்டு இவ்வாறு செல்வது யுக்தமன்று {முறையல்ல}.(24) {பிரியமானவரே, அழகிய வேஷம் பூண்ட வீரரே, நாதரே, அங்கதனுடன் என்னைக் கைவிட்டு, நெடும்பயணம் புறப்படும் உமக்கு, நானோ, நம் மகன் அங்கதனோ பிரியமற்ற எதைச் செய்துவிட்டோம்? ஏன் செல்கிறீர்[4]} தீர்க்கபாஹுவே {நீண்ட கரங்களைக் கொண்டவரே}, ஹரிவம்ச நாதரே {குரங்குகளின் வம்சத்தலைவரே}, வீரரே, அறியாமல் நான் உமக்கு பிரியமற்ற எதையும் செய்திருந்தால், என்னை அதற்காகப் பொறுத்துக் கொள்வீராக. என் தலை உமது பாதத்தைத் தீண்டுகிறது {உம்மை வணங்குகிறேன்}" {என்று புலம்பினாள் தாரை}[5].(25) 

[4] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இருந்து இந்த அதிக சுலோகம் எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும் இந்த அதிகசுலோகம் இருக்கிறது.

[5] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என்வயின் ஊனம் யாவதோ

- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "'மலை போன்ற தோள்கள் புழுதி படிய தரையில் கிடப்பவனே, நீ அடைந்த கதியும் இதுவோ?' என்று கரைந்துருகாமல் நான் கதறுவதைக் கண்டும் ஒன்றும் உரைக்காமல் இருக்கிறாய். என்னிடம் உள்ள குற்றம் என்ன?" {என்றாள் தாரை}.

நிந்திக்கத்தகாத வர்ணம் {புகழத்தக்க மேனி நிறத்தைக்} கொண்டவளான தாரை, {மற்ற} வானரிகள் சகிதமாக பர்த்தாவின் {கணவன் வாலியின்} சமீபத்தில் இவ்வாறு கருணைக்குரிய வகையில் அழுதுபுலம்பி, வாலி எங்கே இருந்தானோ அந்த புவியிலேயே அமர்ந்து பிராயம் {மரணத்தை நாடி உணவைத் தவிர்க்கும் நடைமுறையை} மேற்கொள்ளத் தீர்மானித்தாள்.(26)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Thursday, 29 June 2023

இராமனின் மறுமொழி | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 18 (66)

Rama answers | Kishkindha-Kanda-Sarga-18 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் வாலியிடம் மன்னர்கள் தர்மப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றதற்கான நியாயம் கற்பித்தது; அங்கதனைப் பாதுகாக்குமாறு ராமனை வேண்டிய வாலி...

Rama's converse with Vali

கொல்லப்படும் வகையில் தாக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த வாலி, தர்மத்துடனும், அர்த்தத்துடனும் கூடியவையும், ஹிதமானவையும் {நலம் பயப்பவையும்}, பணிவுடனும், கடுமையுடனும் கூடியவையுமான வாக்கியங்களை ராமனிடம் இவ்வாறே சொன்னான்.(1)  அப்போது ராமன், குற்றஞ்சாட்டுபவனும், பிரபையற்ற ஆதித்தியனை {ஒளியற்ற சூரியனைப்} போன்றவனும், நீரைப் பொழிந்துவிட்ட மேகத்தைப் போன்றவனும், அணைக்கப்பட்ட அனலனை {நெருப்பைப்} போன்றவனும், ஹரிசிரேஷ்டனும், ஹரேஷ்வரனுமான {குரங்குகளில் சிறந்தவனும், குரங்குகளின் தலைவனுமான} வாலியிடம், உத்தமமானவையும், தர்மமும், அர்த்தமும், குணமும்  நிறைந்தவையுமான வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2,3) "தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றையும், லௌகிகம் {சமூக மரபுகள்}, சமயம் {நேரம்} ஆகியவற்றையும் முற்றும் உணராமல் இப்போது பால்யனைப் போல என்னை இதில் எவ்வாறு பழிக்கிறாய்?(4) சௌம்யா {மென்மையானவனே}, புத்தியுடன் கூடியவர்கள், ஆசாரியர்களாக ஏற்கப்படும் பெரியவர்கள் ஆகியோரிடம் கேட்காமல் வானர சாபல்யத்துடன் {குரங்கின் குறுகுறுப்புடன்} நீ இங்கே பேச விரும்புகிறாய்.(5)

சைலங்கள், வனங்கள், கானகங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்த பூமியில் உள்ள மிருக, பக்ஷி, மனுஷ்யர்களை நிக்ரஹம் செய்வதும் {தண்டிப்பதும்}, அனுக்ரஹம் {அருள்} செய்வதும் இக்ஷ்வாகுக்களுக்குரியவை.(6) தர்மாத்மாவும், சத்தியவானும், நேர்மையாளனும், தர்ம, காம, அர்த்த {அறம், பொருள், இன்பங்களின்} தத்துவங்களை அறிந்தவனும், நிக்ரஹ, அனுக்ரஹங்களைச் செய்பவனுமான பரதன் அவளை பாலிக்கிறான் {பூமியை ஆட்சி செய்கிறான்}.(7) எவனிடம் நயமும் {நேர்மையும்}, விநயமும் {இணக்கமும்}, சத்தியமும், ஸ்திதமும் {உறுதியும்}, விக்ரமமும் {வீரமும்} காணப்படுகின்றனவோ, அவனே {அந்த பரதனே} தேசத்தையும், காலத்தையும் அறிந்த ராஜாவாக இருக்கிறான்.(8) அவனது தர்மத்தால் ஆணையிடப்பட்ட நாங்களும், வேறு பார்த்திபர்களும் {மன்னர்களும்} தர்ம சந்தானத்தை இச்சித்து வசுதையெங்கும் {தர்மம் நல்ல முறையில் தொடர்வதை விரும்பி பூமியெங்கும்} அலைந்து கொண்டிருக்கிறோம்.(9) நிருபதி சார்தூலனும் {மன்னர்களில் புலியும்}, தர்மவத்சலனுமான அந்த பரதன், அகில பிருத்வியையும் பாலிக்கும்போது, எவன் தர்மத்திற்குப் பிரியமற்ற வழியில் நடப்பான்?(10)

மிக உயர்ந்த ஸ்வதர்மத்தில் {கடமையில்} பற்றுடைய நாங்கள், பரதனின் ஆணையைக் கருத்தில் கொண்டே, மார்க்கத்தில் இருந்து விலகியோரை விதிப்படி நிக்ரஹஞ் செய்கிறோம் {தண்டிக்கிறோம்}.(11) நீயோ தர்மந்தவறி நிந்திக்கத்தகுந்த கர்மங்களைச் செய்து, காம தந்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு ராஜநெறியைப் பின்பற்றாதவனாக இருக்கிறாய்.(12) தர்மத்தின் பாதையில் நடப்பவனுக்கு, ஜேஷ்டன் {அண்ணன்}, பிதா, வித்யை புகட்டுபவர் {ஆசான்} ஆகியோர் மூன்று பிதாக்கள் என்றே அறியப்படுகிறார்கள்.(13) தம்பி, புத்திரன், நற்குணங்களைக் கொண்ட சிஷ்யன் ஆகிய மூவரும் ஒருவனுக்கு புத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள். இவற்றுக்கு தர்மம் மட்டுமே காரணமாக இருக்கிறது.(14) பிலவங்கமா {தாவிக் குதிக்கும் குரங்கினத்தைச் சேர்ந்தவனே}, நல்லோரின் தர்மம் சூக்ஷ்மமானது; புரிந்து கொள்ள கடினமானது. சர்வபூதங்களின் ஹிருதயங்களிலும் உள்ள ஆத்மாவே சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} அறியும்.(15) பிறவிக் குருடர்களுடன் {ஆலோசிக்கும்} பிறவிக் குருடனை போல, சபலனான {மனம் போன போக்கில் தடுமாறுபவனான} நீ, கட்டுப்பாடில்லா ஆத்மாக்களைக் கொண்ட உன்னைப் போன்ற சபல வானரர்களுடன் ஆலோசிப்பதன் மூலம் என்ன காண முடியும்?(16) நான் இந்த சொற்களைத் தெளிவாக உனக்குச் சொல்கிறேன். நீ கேவலம் {வெறும்} கோபத்தால் என்னைக் குறை கூறுவது உனக்குத் தகாது.(17) 

உன்னை எந்த அர்த்தத்தில் நான் கொன்றேன் என்பதன் காரணத்தைப் பார். சநாதன தர்மத்தைக் கைவிட்டு, உடன்பிறந்தவனின் பாரியையுடன் {உன் தம்பி சுக்ரீவனின் மனைவியான ருமையுடன்} வாழ்கிறாய்[1].(18) மஹாத்மாவான இந்த சுக்ரீவன், உயிருடன் இருக்கையில் பாபகர்மம் செய்பவனான நீ, காமத்துடன் உன் மருமகளான ருமையுடன்[2] வாழ்ந்து வருகிறாய்.(19) எனவே வானரா, தர்மந்தவறி காமவிருத்தமடைந்த {ஆசை வழியில் நடக்கும்} நீ, உடன்பிறந்தவனான இவனது பாரியையை {மனைவி ருமையைத்} தீண்டியதால் இந்த தண்டனையை அடைந்தாய்.(20) ஹரியூதபா {குரங்குக் குழுவின் தலைவா}, உலகத்திற்கு முரண்பட்டு, உலக நடைமுறையில் இருந்து பிறழ்ந்தவனை நிக்ரஹச் செய்வதை {அடக்குவதை / அழிப்பதைத்} தவிர வேறு தண்டனையை உண்மையில் நான் காணவில்லை.(21) நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியனான என்னால், உன்னுடைய பாபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எந்த நரனும், தன் மகளுடனோ, பகினியுடனோ {உடன்பிறந்த சகோதரியுடனோ}, அனுஜனின் பாரியையுடனோ {தம்பியின் மனைவியுடனோ} காமத்தில் ஈடுபட்டால், அவனுக்கு வதமே தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கிறது.(22,23அ)

[1] தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியை
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

- கம்பராமாயணம் 4043ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "தர்மம் இன்ன தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படும் தகுதியையும், இம்மை மறுமை ஆகிய இரண்டின் பயன்களையும் தெரிந்து எண்ணவில்லை. எண்ணியிருந்தால் அருமையானவனான உன் தம்பியின் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கியவனாக அடையப் பெறுவாயோ?" {என்றான் ராமன்}

[2] தம்பி என்பவன் மகனைப் போன்றவன் என்று இந்த சர்க்கத்தின் 14ம் சுலோகத்தில் ராமன் சொல்கிறான். எனவே வாலியின் மகனைப் போன்றவனான சுக்ரீவனின் மனைவி, வாலிக்கு மருமகளாகிறாள். இங்கே குறிப்பிடப்படும் ருமையே சுக்ரீவனின் மனைவி. தாரை வாலியின் மனைவி. வாலியின் மறைவுக்குப் பிறகு சுக்ரீவனுடன் இருக்கிறாள்.

மஹீபாலனான பரதனின் கட்டளைகளைப் பின்பற்றும் நாங்கள், தர்மத்தை மீறிய உன்னைப் புறக்கணிப்பது எவ்வாறு சாத்தியம்?(23ஆ,24அ) பிராஜ்ஞனும் {நல்லறிவுடையவனும்}, குருவும் {மேன்மையானவனும்}, தர்மத்தின் மூலம் ஆட்சி செய்பவனுமான பரதன், தர்மத்தை மீறி காம வழியில் நடப்பவர்களை நிக்ரஹஞ் செய்வதில் {அடக்குவதில் / அழிப்பதில்} திடமாக இருக்கிறான்.(24ஆ,25அ) ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, பரதனின் ஆணைகளை விதியாக ஏற்றுச் செயல்படும் நாங்களோ, மரியாதைகளைக் குலைக்கும் உன் விதமானவர்களை நிக்ரஹஞ் செய்வதில் திடமாக இருக்கிறோம்.(25ஆ,இ) சுக்ரீவனுடனான என் சக்யம் {நட்பு}, லக்ஷ்மணனுடன் எப்படியோ அப்படியே தாரம், ராஜ்ஜியம் நிமித்தமாக ஏற்பட்டது. அவன் {சுக்ரீவன்} எனக்கு நலம் புரிவான்[3].(26) அப்போது நான், வானரர்களின் முன்னிலையில் பிரதிஜ்ஞையை தத்தம் செய்தேன் {உறுதியளித்தேன்}. என் விதமானவன், பிரதிஜ்ஞையை மதிக்காமல் இருப்பது எவ்வாறு சாத்தியம்?[4](27) எனவே, தர்மத்திற்கு இணக்கமானவையும், அனைத்திலும் மஹத்தானவையுமான இந்தக் காரணங்களால் ஏற்பட்ட உனக்கான சாசனம் எதுவோ அது யுக்தமானதே {உனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதே} என்பதை நீ ஏற்க வேண்டும்.(28) உன்னுடைய நிக்ரஹம் அனைத்து வகையிலும் தர்மம் என்றே காணப்பட வேண்டும். தர்மத்தைப் பின்பற்றுபவன், தன் நண்பனுக்கான உதவியைச் செய்ய வேண்டும்.(29) 

[3] இங்கே, "என் மனைவியான சீதையை மீட்பதற்காகவும், சுக்ரீவனின் ராஜ்ஜியத்தை மீட்பதற்காகவும் லக்ஷ்மணனிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாக எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இப்போது நான் உன்னைக் கொன்று சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்பதில் உதவியதால், இனி அவன் சீதையை மீட்பதில் எனக்கு உதவி நலம்புரிவான்" என்பது பொருள்.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரண்ய காண்டத்தில் {3:10:18}, என் உயிரையும் துறப்பேனேயன்றி, அளித்த பிரிதிஜ்ஞையை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று சீதையிடம் சொல்கிறான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது. 

தர்மத்தையே பின்பற்றியிருந்தால் உன்னிடமும் அந்தக் காரியம் சாத்தியமே. சாரித்ர வத்ஸலர்களுக்கான {நல்லொழுக்கத்தை விரும்புகிறவர்களுக்கான} இரண்டு சுலோகங்களை மனு கீதம் செய்ததாக {மனு பாடியதாக நாம்} கேள்விப்படுகிறோம். தர்மகுசலர்கள் {நல்ல தர்மவான்கள்} இவற்றை ஏற்கின்றனர். நானும் அவற்றின் படியே நடந்திருக்கிறேன்.(30) பாபங்களைச் செய்யும் மாநவர்களுக்கு {மனிதர்களுக்கு}, ராஜாக்கள் தண்டனையை விதித்தால், அவர்கள் நிர்மலமடைந்து {களங்கமற்றவர்களாகி} நற்செயல்களுடன் கூடிய நல்லோரைப் போல ஸ்வர்க்கத்தை அடைவார்கள்.(31) ஒரு திருடன் சாசனத்தின் {தீர்ப்பின்} மூலமோ, விடுதலையின் மூலமோ பாபத்தில் இருந்து விடுபடுகிறான். சாசனத்தை செயல்படுத்தாத ராஜாவோ, அந்த பாபியின் களங்கத்தால் பீடிக்கப்படுகிறான்[5].(32) நீ எப்படி பாபம் இழைத்தாயோ, அப்படி ஒரு சிரமணர் {துறவி} இழைத்தபோது, என் ஆரியரான {மதிப்பிற்குரிய மூதாதையான} மாந்தாதா, தன் விருப்பத்திற்கேற்ப கோரமான விசனத்தை {துன்பத்தை / தண்டனையை} அளித்தார்.(33) பிறர் பாபம் இழைப்பதை அறியாத வசுதாதிபர்களால் {மன்னர்களால்} பிராயச்சித்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அந்த ரஜம் {களங்கம்} மட்டுப்படும்.(34) எனவே வானரசார்தூலா {வானரர்களில் புலியே}, பரிதாபம் போதும். வதம் தர்மத்துடன் விதிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல.(35) 

[5] 31, 32 ஆகிய சுலோகங்களே மனு பாடியதாக ராமன் கேள்விப்பட்ட கீதம்.

மஹத்தான வீரா, ஹரிபுங்கவா {குரங்குகளில் உயர்ந்தவனே}, மேலும் மற்றொரு காரணத்தையும் கேட்பாயாக. அந்த மகத்தானதைக் கேட்டு, நீ கோபமடைவது தகாது.(36) அதில் {உன்னைக் கொன்றதில்} எனக்கு மனஸ்தாபமோ, கோபமோ இல்லை. ஹரிபுங்கவா, நரர்கள் {மனிதர்கள்}, வலைகளையும், கயிறுகளையும் கொண்டும், எண்ணற்ற கூடங்களின் {பொறிகளின்} மூலமும் மறைவாகவோ, புலப்படும்படியோ ஏராளமான மிருகங்களைப் பிடிக்கின்றனர்.(37,38அ) மாமிசம் உண்ணும் நரர்கள், அவை வேகமாகத் தாவிச் செல்லும்போதும், பயமில்லாமல் திரியும்போதும், உறுதியாக நிற்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும், கவனமற்று இருக்கும்போதும், பாரா முகமாக இருக்கும்போதும் {அந்த விலங்குகளை} மறுப்பிற்கிடமில்லாமல் கொல்கின்றனர். அதில் தோஷம் ஏதும் இல்லை.(38ஆ,39) இங்கே தர்மகோவிதர்களான ராஜரிஷிகளும் வேட்டையாடச் செல்கின்றனர். வானரா, யுத்தம் செய்யவில்லை என்றாலும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் நீ சாகை மிருகம் {கிளையில் வாழும் விலங்கு} என்பதாலேயே யுத்தம் செய்து கொண்டிருந்த உன்னை பாணம் எய்து கொன்றேன்.(40) வானர சிரேஷ்டா, ராஜாக்கள் அடைதற்கரிய தர்மத்தையும், சுபமான ஜீவிதங்களையும் {சாதகமான வாழ்க்கை முறைகளையும்} அருள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(41) மானுஷ ரூபத்தில், மஹீதலத்தில் திரியும் தேவர்களான அவர்களை ஹிம்சிப்பதோ, நிந்திப்பதோ, இகழ்ந்துரைப்பதோ, பிரியமற்ற வகையில் பேசுவதோ கூடாது.(42) நீயோ தர்மத்தை அறிந்து கொள்ளாமல், கேவலம் {வெறும்} கோபத்தின் ஆதிக்கத்தில் பித்ரு பிதாமஹர்களின் தர்மத்தில் திடமாக நிற்கும் என்னை தூஷிக்கிறாய் {தூற்றுகிறாய்}" {என்றான் ராமன்}.(43)

இராமன் இவ்வாறு கூறியதும், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான வாலி, தர்மம் குறித்த நிச்சயத்தை அடைந்து, ராகவனிடம் தோஷம் ஏதும் காணாதிருந்தான்.(44) பிறகு அந்த வானரேஷ்வரன் {வாலி}, கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} ராமனுக்கு மறுமொழி கூறினான்; "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நீ எதைச் சொன்னாயோ, அஃது அவ்வாறே இருக்கிறது. அதில் சந்தேகமேதும் இல்லை.(45) இராகவா, மேன்மையானவர்களிடம், மேன்மையற்றவர்கள் மறுமொழி கூறுவதற்கு இயன்றவர்களல்ல. நான் பூர்வத்தில் அறியாமையால் சொன்ன முறையற்ற, பிரியமற்ற வாக்கியங்களை அப்படியே கொள்ள வேண்டாம். அதற்காக என்னிடம் தோஷம் காண்பது உண்மையில் உனக்குத் தகாது.(46,47அ) நீயே அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்தவனாகவும், பிரஜைகளுக்கு நன்மை செய்ய விரும்புகிறவனாகவும், களங்கமில்லா புத்தி கொண்டவனாகவும், காரிய, காரணங்களில் தெளிவான சித்தம் கொண்டவனாகவும் இருக்கிறாய்.(47ஆ,இ)  தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, தர்மத்தை அறியத் தவறியவர்களில் முதன்மையான என்னை தர்மத்திற்கு சம்மதமான சொற்களால் பரிபாலிப்பாயாக" {என்றான் வாலி}.(48) 

சேற்றில் சிக்கிய துவீபத்தை {யானையைப்} போன்ற வாலி, கண்ணீரால் முழுமையாக அடைக்கப்பட்ட கண்டத்துடன் {தொண்டையுடன்}, துன்புற்ற குரலில் ராமனைப் பார்த்து {பின்வருமாறு} மெதுவாகப் பேசினான்:(49) "குணசிரேஷ்டனும் {குணங்களில் சிறந்தவனும்}, கனக {பொன்} அங்கதம் பூண்டவனுமான புத்திரன் அங்கதனுக்காக எப்படியோ {எப்படி வருந்துகிறேனோ}, அப்படி எனக்காகவோ, தாரைக்காகவோ, பந்துக்களுக்காகவோ வருந்தவில்லை.(50) பால்யம் முதல் செல்லமாக வளர்ந்த அவன் {அங்கதன்}, என்னைக் காணாமல்,  நீரில்லாமல் வற்றிய தடாகத்தைப் போலவே உலர்ந்தவனாகப் பெரிதும் இளைத்துப் போவான்.(51) இராமா, பாலனும் {சிறுவனும்}, புத்தி முதிராதவனும் {சிறுபிள்ளைகளுக்குரிய புத்தியைக் கொண்டவனும்}, என் பிரியத்திற்குரிய ஏக புத்திரனும் {ஒரே மகனும்}, மஹாபலவானுமான தாரேயனை {தாரையின் மகனான அங்கதனை} நீ ரக்ஷிக்க வேண்டும்.(52) சுக்ரீவனிடமும், அங்கதனிடமும் உத்தம மதியை வெளிப்படுத்துவாயாக. காரியாகாரியங்களின் {செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றின்} விதங்களில் திடமான நீயே பாதுகாவலனாகவும், தண்டிப்பவனாகவும் இருக்கிறாய்.(53) 

நரபதியே, ராஜாவே, பரதனிடமும், லக்ஷ்மணனிடமும் உன் அணுகுமுறை எப்படியோ, அப்படி சுக்ரீவனையும், அங்கதனையும் சிந்திப்பதே உனக்குத் தகும்.(54) என் தோஷத்தால் தோஷமடைந்தவளும், தபஸ்வினியுமான அந்த தாரையை சுக்ரீவன் எப்படி அவமதிக்காமல் இருப்பானோ, அப்படிப் பார்த்துக் கொள்வதே உனக்குத் தகும்.(55) உன் அனுகிரஹத்தைப் பெற்றவனுக்கு, உன் வசம் கட்டுப்பட்டு, உன் சித்தத்தைப் பின்பற்றுவதன் மூலம், ராஜ்ஜியத்தை நடத்தும் சாத்தியத்துடன், வசுதையை {மொத்த பூமியையும்} ஆளவும், திவத்தை {சொர்க்கத்தை} ஈட்டவுங்கூட சாத்தியப்படும்.(56,57அ) தாரையினால் தடுக்கப்பட்டும், உன்னால் வதம் செய்யப்பட விரும்பியவனைப் போல, உடன்பிறந்தவனான சுக்ரீவனுடன் நான் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டேன்" {என்றான் வாலி}. ஹரேஷ்வரனான அந்த வாலி, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு மௌனமானான்.(57ஆ,58)

தெளிந்த பார்வை கொண்டவனான அந்த ராமன், தர்மத்தின் சாரத்துடன், அர்த்தம் பொதிந்த சொற்களால் வாலியானவனை {பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தினான்:(59) "பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, இந்த அர்த்தத்திற்காக {காரணத்திற்காக} நீ வருந்த வேண்டியதில்லை. ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, நீ எங்களைக் குறித்தும், உன்னைக் குறித்தும் சிந்திக்க வேண்டியதில்லை. உன்னைப் பொறுத்தவரையில் விசேஷமாக நாங்கள் தர்மத்தின்படியே நிச்சயம் செயல்பட்டோம்.(60) எவன் தண்டிக்க வேண்டியவனுக்கு தண்டனையை விதிக்கிறானோ, எவன் தண்டனைக்குரியவனாக இருந்து தண்டனையைப் பெறுகிறானோ அவர்கள் இருவரின் காரிய, காரணங்களும் அர்த்தத்துடன் சித்தியடைவதால் வருந்த வேண்டியதில்லை.(61) எனவே, நீ இந்த தண்டனையின் யோகத்தால் களங்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறாய். தர்மத்துடன் விதிக்கப்பட்ட பாதையில், தர்மத்துடன் கூடிய உன் இயல்பை அடைந்து விட்டாய்.(62) குரங்குகளில் உயர்ந்தவனே, ஹிருதயத்தில் திடமாக உள்ள சோகம், மோஹம், பயம் ஆகியவற்றைக் கைவிடுவாயாக. விதியை மீறுவது உனக்கு சாத்தியமில்லை.(63) வானரேஷ்வரா, அங்கதன் உன்னிடம் எப்படி நடந்து கொண்டானோ,  அப்படியே சுக்ரீவனிடமும், என்னிடமும் எப்போதும் நடந்து கொள்வான் என்பதில் சந்தேகமில்லை" {என்றான் ராமன்}.(64)

மஹாத்மாவும், தர்மத்தின் பாதையைப் பின்பற்றுபவனும், போரில் முற்றிலும் {எதிரியை} நொறுக்குபவனுமான அந்த ராமனின் சமாஹிதமான மதுர {ஐயத்திற்கிடமில்லாத இனிமையான} வாக்கியங்களைக் கேட்ட அந்த வானரன் {வாலி, பின்வரும்} நல்ல முறையிலான சொற்களைச் சொன்னான்:(65) "விபுவே {தலைவா}, மஹேந்திரனுக்கு ஒப்பானவனே, பீம விக்கிரமா {பயங்கர வீரம் கொண்டவனே}, நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, சரங்களின் வெப்பத்தில் நனவு மயங்கியவனான நான், அறியாமையால் உன்னை அதிகம் தூஷித்துவிட்டேன். அதைப் பொறுத்துக் கொண்டு, நீ எனக்கு அருள்புரிய வேண்டும்" {என்றான் வாலி}.(66)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 66

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை