Leave and go | Aranya-Kanda-Sarga-50 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைத் திருப்பி அனுப்புமாறு ராவணனிடம் மன்றாடிய ஜடாயு...
தூங்கிக் கொண்டிருந்த ஜடாயு, அந்த சப்தத்தைக் கேட்ட பிறகு, சீக்கிரம் பார்வையைச் செலுத்தி, ராவணனையும், வைதேஹியையும் கண்டான்.(1) அப்போது பர்வத சிருங்கம் {மலைச்சிகரம்} போல் ஒளிர்ந்து கொண்டிருந்தவனும், கூரிய அலகுடன் கூடியவனும், வனஸ்பதியில் {ஆல் / அரச மரத்தில்} அமர்ந்திருக்கும் உத்தம பறவையுமான அந்த ஸ்ரீமான், இந்த நற்சொற்களைச் சொன்னான்:(2) "சகோதரா[1], தசக்ரீவா, இப்போது நீ செய்யும் நிந்திக்கத்தக்க செயல் உனக்குத் தகாது. நிறைவான தர்மத்தைப் பின்பற்றுகிறவனும், சத்திய விரதனுமான நான், ஜடாயு என்ற பெயரில் அறியப்படும் மஹாபலவானான கிருத்ரராஜா {கழுகுகளின் மன்னன்} ஆவேன்.(3,4அ) தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பாக உலகத்தாரின் நன்மையில் ஈடுபடும் சர்வலோக ராஜா ஆவான்.(4ஆ,5அ) சீதை என்ற பெயரைக் கொண்ட எவளை, நீ இப்போது கவர்ந்து செல்ல இச்சிக்கிறாயோ, அந்தச் சிறந்த பெண்மணி, புகழ்மிக்க அந்த லோகநாதனின் தர்மபத்தினியாவாள்.(5ஆ,6அ)
[1] இந்த சுலோகத்தில் "பிராதா {சகோதரா}" என்று தொடங்கும் இந்த இரண்டாம் அடி, அதாவது, "சகோதரா, இப்போது நீ செய்யும் நிந்திக்கத்தக்க செயல் உனக்குத் தகாது" என்ற அடி முழுமையாக தேசிராஜுஹனுமந்தராவ், மன்மதநாததத்தர் ஆகிய இரண்டு பதிப்புகளைத் தவிர ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் உள்ளிட்ட வேறு ஆங்கிலப் பதிப்புகள் எதனிலும் இல்லை. தமிழில் எந்தப் பதிப்பிலும் இல்லை. பிராதா என்பதற்கு உடன்பிறந்தவன் என்பது பொருள். அஃது இங்கே பொருந்துவதாகத் தெரியவில்லை.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனான ஒரு ராஜா, பரதாரங்களை {மாற்றான் மனைவியரை} எவ்வாறு தீண்டுவான்? மஹாபலவானே, விசேஷமாக ராஜதாரமானவள் ரக்ஷிக்கத்தகுந்தவளாவாள் {பாதுகாக்கப்பட வேண்டியவளாவாள்}.(6ஆ,7அ) நீச கதியை அடைந்து பரதாரத்தை {பிறன் மனைவியைத்} தீண்டுவதிலிருந்து பின்வாங்குவாயாக. பிறரால் நிந்திக்கப்படும் செயலை ஒரு தீரன் செய்யமாட்டான். தன் தாரங்களைப் {பிறன் தீண்டாமல் காப்பதைப்} போலவே அந்நியரின் தாரங்களையும் தீண்டாமல் ரக்ஷிக்க வேண்டும்.(7ஆ,8) பௌலஸ்தியநந்தனா {புலஸ்தியரின் வழித்தோன்றல்களை ஆனந்தங் கொள்ளச் செய்பவனே}, சாஸ்திரங்களை அறிந்த சிஷ்டர்கள் {அறிஞர்கள்}, அர்த்த, காம, தர்மங்களில் {செல்வத்தையும், இன்பங்களையும், அறத்தையும் அடைவதில்} ராஜநெறிகளின்படியே நடந்து கொள்வார்கள்.(9) தர்மம் {அறம்}, காமம் {இன்பங்கள்}, திரவியங்கள் {செல்வங்கள்} ஆகியவற்றின் உத்தமக் கொள்ளிடம் ராஜனே ஆவான். சுபத்திலும் {புண்ணியத்திலும்}, பாபத்திலும் ராஜனே தர்மத்தின் மூலமாவான் {வேராவான்}.(10)
இராக்ஷசர்களில் சிறந்தவனே, பாப சுபாவத்தையும், சபலத்தையும் கொண்டவனும், தீய செயல்களைச் செய்பவனுமான நீ, விமானத்தைப் போன்ற ஐசுவரியத்தை எவ்வாறு அடைந்தாய்?(11) எவனுடைய சுபாவத்தையும் அவனிடம் அழிக்க விரும்புவது சாத்தியமில்லை. துஷ்டர்களின் ஆலயத்தில் ஆரியம் {வீட்டில் செழிப்பானது / இதயத்தில் நல்லெண்ணமானது} நீண்டகாலம் நிலைப்பதில்லை.(12) மஹாபலம்பொருந்தியவனும், தர்மாத்மாவுமான ராமன், உன் விஷயத்திலோ {நாட்டிலோ}, புரத்திலோ அபராதம் {தீங்கு} செய்யாத போது, அவனுக்கு எவ்வாறு நீ அபராதம் {தீமை} செய்கிறாய்?(13) சிரமமின்றி எதையும் செய்யும் ராமன், சூர்ப்பணகைக்காக அத்துமீறிய ஜனஸ்தானத்தின் கரனை பூர்வத்தில் எளிதாகக் கொன்றான்.(14) லோகநாதனான எவனுடைய பாரியாளை நீ கவர்ந்து செல்கிறாயோ அந்த ராமன் செய்த அத்துமீறல் என்ன? உள்ளபடியே நீ சொல்வாயாக.(15)
சீக்கிரம் வைதேஹியை விட்டுவிடுவாயாக. இந்திரனின் அசனி {இடி} விருத்திரனை {கொன்றதைப்} போல, {ராமனின்} தஹிக்கும் கோரப் பார்வை உன்னை எரிக்காதிருக்கட்டும்[2].(16) கடும் விஷமிக்க சர்ப்பத்தை வஸ்திரத்தில் பொதிந்திருப்பதை உணராமலும், கழுத்தில் பூட்டப்பட்ட காலபாசத்தை {யமனின் பாசக்கயிற்றை} பார்க்காமலும் இருக்கிறாய்.(17) சௌம்யா, எது ஒரு நரனை நசுக்காதோ அந்த பாரத்தைச் சுமக்கலாம். எவ்வளவு அன்னத்தை செரிக்கமுடியுமோ அவ்வளவு அன்னத்தையே புசிக்கலாம்.(18) எந்தச் செயல்பாடு தர்மத்தையோ, கீர்த்தியையோ, பெருமையையோ ஈட்டாமல் சரீரத் துன்பத்தைத் தருமோ அந்தக் கர்மத்தை நிச்சயம் எவனும் செய்யமாட்டான்.(19)
[2] கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம்சுட்டாய் இது என்னை தொடங்கினை நீபட்டாய் எனவே கொடு பத்தினியைவிட்டு ஏகுதியால் விளிகின்றிலையால்கம்பராமாயணம் 3410ம் பாடல்பொருள்: சுற்றத்தாருடன் கெட்டுப் போனாய். உன் வாழ்வு முழுவதையும் எரித்துக் கொண்டாய். ஏன் தொடங்கினாய்? இறந்தாய் என்று எண்ணிக் கொண்டு பத்தினியை விட்டு சென்றால் நீ இறக்கமாட்டாய்.
இராவணா, நான் பிறந்து அறுபதாயிரம் வருஷங்களாக, பித்ரு பிதாமஹர்களின் {பூட்டன், பாட்டன் வழியாக வந்த} ராஜ்ஜியத்தை முறைப்படி அனுஷ்டித்து {பரிபாலித்து} வருகிறேன்.(20) நான் முதியவன், நீ இளைஞன். இரதத்தில் கவசத்துடனும், சரங்களுடனும் கூடிய தன்வியாக {வில்லாளியாக} இருந்தாலும் வைதேஹியை எடுத்துக் கொண்டு நீ குசலமாக {நலத்துடன்} செல்ல முடியாது.(21) தகுதிக்கான நியாயம் பேசுபவர்களுக்கு ஹேதுவாக {மாற்ற முடியாத} உறுதிமிக்க வேத சுருதியைப் போல உன்னால் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வைதேஹியை பலவந்தமாகக் கடத்திச் செல்ல முடியாது.(22)
இராவணா, நீ சூரனாக இருந்தால், யுத்தம் செய்ய ஒரு முஹூர்த்தம் காத்திருப்பாயாக. பூர்வத்தில் கரனுக்கு நேர்ந்ததைப் போலக் கொல்லப்பட்டு பூமியில் புரள்வாய்.(23) எவன் எப்போதும் போரில் தைத்திய, தானவர்களைக் கொல்வானோ, அந்த மரவுரியுடுத்திய ராமன், வெகு சீக்கிரத்தில் உன்னை யுத்தத்தில் வதம் செய்வான்.(24) அந்த நிருபாத்மஜர்கள் {ராஜபுத்திரர்கள்} தூரம் சென்றிருக்கையில், நான் செய்வதற்கு சாத்தியமானதைச் செய்வேன். நீசனே, அவர்களிடம் அச்சம் கொண்ட நீ சீக்கிரம் நாசமடைவாய். அதில் சந்தேகமில்லை.(25)
நான் ஜீவித்திருக்கும் வரை, மங்கலமானவளும், கமலபத்ராக்ஷியும் {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும்}, ராமனின் பிரிய மஹிஷியுமான இந்த சீதையை நீ கடத்திச் செல்ல இயலாது.(26) நான் என் ஜீவிதத்தை {உயிரைக்} கொடுத்தாவது, மஹாத்மாவான அந்த ராமனுக்கும், தசரதனுக்கும் பிரியமான காரியத்தை அவசியம் செய்வேன்.(27) தசக்ரீவா, ஒரு முஹூர்த்தம் நில். நிற்பாயாக. இராவணா, பார். நிசாசரா {இரவுலாவியே}, பிராணன் உள்ளவரை யுத்தமெனும் ஆதித்யத்தை {விருந்தோம்பலை} நான் தருவேன். தண்டில் பழுத்த பழத்தைப் போல உத்தம ரதத்தில் இருக்கும் உன்னைக் கொய்வேன்" {என்றான் ஜடாயு}.(28)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |