Showing posts with label ரிஷ்யசிருங்கர். Show all posts
Showing posts with label ரிஷ்யசிருங்கர். Show all posts

Thursday, 5 August 2021

விஷ்ணு அவதாரம் | பால காண்டம் சர்க்கம் - 15 (34)

Vishnu Avatar | Bala-Kanda-Sarga-15 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ரிஷ்யசிருங்கரின் தலைமையில் புத்ரகாமேஷ்டி யஜ்ஞம்; ஆகுதிகளைப் பெறத் திரண்ட தேவர்கள்; பிரம்மனிடம் தேவர்களின் வேண்டுதல்; ராவணனை அழிப்பதாகச் சொன்ன விஷ்ணு...

Lord Vishnu on Garuda

மேதாவியும், வேதமறிந்தவருமான ரிஷ்யசிருங்கர், சிறிது நேரம் தியானித்து, உபாயத்தை அறிந்து மன்னனிடம் {தசரதனிடம்},(1) "புத்ர காரணத்துக்காக அதர்வத்தின் தோற்றுவாயில் மந்திரங்களுடன் சொல்லப்பட்டுள்ள புத்ரீய {புத்திரர்களை ஈய/ பிள்ளைகளைப் பெறுவதற்கான} இஷ்டி சடங்கை {புத்ரகாமேஷ்டி யஜ்ஞத்தை} முறையாகச் செய்யப்போகிறேன்" என்றார்.(2) பிறகு அந்தத் தேஜஸ்வி {ஒளிமிக்க ரிஷ்யசிருங்கர்}, மந்திரங்களுடன் கூடிய கர்மங்களைச் செய்து, அக்னியில் ஹோமமும் செய்து புத்ர காரணத்திற்கான புத்ரீய இஷ்டி சடங்கைத் தொடங்கினார்.(3)

அப்போது தேவர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் ஆகுதிகளில் தங்கள் பாகத்தைப் பெற விதிப்படி அங்கே கூடினர்[1].(4) முறைப்படி அந்தக் கூட்டத்தில் கூடிய தேவர்கள், லோக கர்த்தனான பிரம்மனிடம் இந்தச் சொற்களில்,(5) "பகவானே, ராவணன் என்ற பெயர்படைத்த ராக்ஷசன், உம்முடைய அருளாலும், தன்னுடைய வீரியத்தினாலும் எங்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்துகிறான். எங்களால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.(6) பகவானே, அவனது தவத்தை மெச்சி உம்மால் கொடுக்கப்பட்ட வரங்களை மதித்து எப்போதும் அவன் செய்யும் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறோம்.(7) துர்மதி படைத்த அவன் மூன்று உலகங்களையும் கொடுமைப்படுத்துகிறான்; திக் பாலர்களை வெறுக்கிறான்; திரிதசராஜனான சக்ரனை {தேவர்களின் மன்னனான இந்திரனைத்} தாக்க விரும்புகிறான்.(8) வெல்லப்பட முடியாதவனான அவன், தான் பெற்ற வரத்தின் மோஹத்தால் ரிஷிகளையும், யக்ஷர்களையும், கந்தர்வர்களையும், அசுரர்களையும், பிராமணர்களையும் கொடுமைப்படுத்துகிறான்.(9) சூரியன் அவனை வாட்டுவதில்லை, மாருதன் {வாயு} அவன்மீது வேகமாக வீசுவதில்லை, அலைகளின் தலைவனான சமுத்திரனும் அவனைக் கண்டு அலைபாய்வதில்லை.(10) அந்தக் காரணத்தால் கோரத்தோற்றமுடைய அந்த ராக்ஷசன், எங்களுக்கு மஹாபயத்தை ஏற்படுத்துகிறான். பகவானே, அவனது அழிவுக்கான உபாயத்தை ஏற்படுத்த கருதுவீராக" என்றனர்.(11)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "முக்தியை அடைந்து தெய்வீக வசிப்பிடங்களில் வாழும் இந்த தெய்வீகர்கள், மனிதர்களின் உலகில் நுழைவதில்லை. அவர்கள் பூமியில் எங்கெல்லாம் யஜ்ஞம் நடைபெறுகிறதோ அங்கே ஆகுதிகளில் தங்கள் பாகத்தைப் பெறுவதற்காக அக்னி பீடத்திற்கு மேல் ஆகாயத்தில் கூடுகின்றனர்" என்றிருக்கிறது.

ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் இவ்வாறு சொன்னதும், சிறிது நேரம் சிந்தித்த அவன் {பிரம்மன்}, "அந்த துராத்மாவின் {துர் ஆத்மா/ கெட்டவனின்} வதத்திற்கான உபாயம் இதுவே.(12) அவன் {ராவணன்}, 'கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, தேவர்களாலோ, ராக்ஷசர்களாலோ கொல்லப்படக்கூடாது' என்று கேட்டான். நானும், 'அவ்வாறே ஆகட்டும்' என்று சொன்னேன்.(13) அந்த ராக்ஷசன் மானிடர்கள் மீது கொண்ட அவமதிப்பால் அவர்களைக் குறித்துச் சொல்லவில்லை. எனவே அவன் மானிடராலேயே கொல்லப்பட வேண்டும். அவனுக்கு வேறு மிருத்யு {மரணம்} இல்லை" என்றான் {பிரம்மன்}.(14)

பிரம்மனால் சொல்லப்பட்ட இந்த இனிய வாக்கியத்தைக் கேட்ட தேவர்களும், மஹரிஷிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(15) அதேவேளையில் பேரொளி படைத்தவனும், சங்கு சக்கரக் கதா பாணியும், பீதாம்பரம் தரித்தவனும், புடம்போட்ட தங்கத்தாலான கேயூரம் அணிந்தவனும், ஜகத்பதியுமான {அண்டத்தின் தலைவனுமான} விஷ்ணு, உத்தம ஸுரர்களால் துதிக்கப்பட்டவனாகவும், நீரைக் கொடுப்பவன் {கருமேகத்தின்} மீதிருக்கும் சூரியனைப் போலவும் வைனதேயன் {கருடன்} மீதேறி வந்து,(16,17) பிரம்மனைச் சந்தித்து, அங்கே நின்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஸுரர்கள் அனைவரும் அவனைப் பணிந்து துதித்து,(18) "விஷ்ணுவே, தர்மவானும், புகழ்பெற்றவனும், மஹரிஷிகளைப் போன்ற தேஜஸ் படைத்தவனுமான தசரத ராஜன், ஹ்ரீ ஸ்ரீ கீர்த்தி[2] ஆகியோருக்கு ஒப்பான மூன்று பாரியைகளை {மனைவிகளைக்} கொண்டிருக்கிறான். அந்த அயோத்தியாதிபதியின் தலைவனான விஷ்ணுவே, நீ உன்னை நான்காகப் பிரித்துக் கொண்டு அவர்களின் புத்திரர்களாகப் பிறப்பாயாக.(19,20,21அ) அவர்களில் {தசரதனின் மனைவிகளுக்குப் பிறந்து} நீ மானிடராவதன் மூலம், ஓ! விஷ்ணுவே, உலகங்களுக்கு முள்ளாய் இருப்பவனும், எரிச்சலூட்டுபவனும், தேவர்களால் கொல்லப்பட முடியாதவனுமான ராவணன் சமரின் {போரில்} கொல்லப்படுவான்.(21ஆ,22அ) அந்த மூர்க்க ராக்ஷசன், தன்னுடைய வீரிய மிகுதியால் தேவர்களையும், கந்தர்வர்களையும், சித்தர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வருகிறான்.(22ஆ,23அ) ரௌத்திரத்துடன் கூடிய அவன், ரிஷிகளையும், நந்தனவனத்தில் மகிழ்ந்திருக்கும் கந்தர்வர்களையும், அப்ஸரஸ்களையும் முழுமையாக {சொர்க்கங்களில் இருந்து} வீழ்த்துகிறான்.(23ஆ,24அ) சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்களாகிய நாங்கள் முனிகளுடன் சேர்ந்து உண்மையில் அவனை வதம் செய்யும் காரியத்திற்காக உன்னிடம் சரணாகதி அடைகிறோம்.(24ஆ,25அ) பரந்தபா, தேவா, தேவர்களின் சத்ருக்களை வதம் செய்வதில் எங்கள் பரமகதியாக இருக்கும் நீ, மனிதர்களின் உலகத்தில் பிறக்க மனங்கொள்வாயாக" என்றனர்.(25ஆ,26அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி என்போர் தக்ஷப்ரஜாபதியின் மகள்களாவர். அதில் ஹ்ரீ அற மனம் படைத்த ஹிருலேகையாவாள். இராமனைப் பெற்ற ராணி கௌசல்யை அவளது குணத்தைக் கொண்டவள். ஸ்ரீ அனைத்திலும் செழிப்பான ஸ்ரீகாரையாவாள். ராணி சுமித்திரை அவளது குணத்தைக் கொண்டவள் என்பதாலேயே லக்ஷ்மணனை ராமனுடன் காட்டுக்குச் செல்ல அறிவுறுத்துகிறாள். கீர்த்தி என்பவள் புகழ் ஆவாள். கைகேயியின் புகழ் நன்கறியப்பட்டதே. கைகேயி இல்லாமல் இந்தக் காவியத்தைக் கற்பனையும் செய்ய முடியாது. எனவே அவள் எதிர்மறையாகத் தெரிந்தாலும் மகிமைமிக்கவளே" என்றிருக்கிறது.

திரிதஷபுங்கவனும் {தேவர்களில் உயர்ந்தவனும்}, சர்வலோகநமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் மதிக்கப்படுபவனும்}, தேவேசனுமான {தேவர்களின் ஈசனுமான) விஷ்ணு இவ்வாறு துதிக்கப்பட்டபோது, தர்மத்திற்குக் கட்டுப்பட்ட அந்தக் கூட்டத்தில் பிதாமஹனை {பிரம்மனை} முன்னிட்டுக் கொண்டு தேவர்கள் அனைவரிடமும் பேசும் வகையில்,(26ஆ,27) "பயம் வேண்டாம். நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள். குரூரனும், துராத்மாவும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பயத்தை உண்டாக்குபவனுமான ராவணனை, அவனது புத்திரர்கள், பௌத்திரர்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடனும்}, மித்ரர்கள் {நண்பர்கள்}, ஞாதிக்கள் {உற்றார்}, பந்துக்களுடனும் {உறவினருடனும்} யுத்தத்தில் அழித்து, பத்தாயிரம் ஆண்டுகளும், இன்னும் ஆயிரம் வருடங்களும் {அதாவது பதினோராயிரம் ஆண்டுகள்} பிருத்வியை {பூமியை} ஆண்டவாறே மானுடலோகத்தில் வசித்திருப்பேன்" என்றான் {விஷ்ணு}.(28,29,30அ)

ஆத்மாவானான {அன்பு மனம் கொண்ட} விஷ்ணு தேவன், இவ்வாறு தேவர்களுக்கு வரத்தை அளித்து விட்டு, தான் மனிதனாகப் பிறக்கப் போகும் ஜன்மபூமியை {தான் பிறக்கப் போகும் இடத்தைக்} குறித்து மனத்தில் சிந்தித்தான்.(30ஆ,31அ) அந்தத் தாமரைக்கண்ணன் {விஷ்ணு}, தன்னை நான்காகப் பிரித்துக் கொண்டு தசரத மன்னனைத் தந்தையாக ஏற்க நினைத்தான்.(31ஆ,32அ)

அப்போது திவ்யரூபம் கொண்ட தேவ, ரிஷி, கந்தர்வ, ருத்ர, அப்சரஸ் கணங்கள் அந்த மதுசூதனனை {விஷ்ணுவைத்} துதிக்கத் தொடங்கி(32ஆ,இ) "தற்புகழ்ச்சி செய்பவனும், உக்ரதேஜஸ் கொண்டவனும், ஆணவம் அதிகரித்தவனும், தேவர்களின் தலைவனை {இந்திரனை} வெறுப்பவனும், அனைவரையும் ஓலமிடச் செய்பவனும், தவசிகளுக்கு முள்ளாய் இருப்பவனும், தவசிகளை அச்சுறுத்துபவனுமான ராவணனை அழிப்பாயாக.(33) வெட்டிப் பெருமை பேசும் உக்ரனான ராவணனை, அவனது படைகள், சுற்றத்தார் அனைவருடன் கொல்வாயாக. அமளியின்றி நீண்ட காலத்திற்குப் பிறகு மன வருத்தம் தீர்ந்து, தோஷங்களேதும் இல்லாமல் குற்றங்குறைகளற்ற சுவர்லோகத்தை {வைகுண்டத்தை} அடைவாயாக" என்றனர்.(34)

பாலகாண்டம் சர்க்கம் –15ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Wednesday, 4 August 2021

அஷ்வமேதம் | பால காண்டம் சர்க்கம் - 14 (60)

Ashwamedha | Bala-Kanda-Sarga-14 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அஷ்வமேத யஜ்ஞம் தொடங்கியது; யஜ்ஞம் செய்யப்பட்ட முறை; கௌசல்யை வேள்விக் குதிரையை வெட்டியது; அஷ்வமேதம் நிறைவடைந்தது...

Ashvamedha Yajna

இன்னுமொரு வருடம் முடிந்து வேள்விக் குதிரையும் திரும்பியபிறகு,[1] சரயுவின் உத்தரதீரத்தில் {சரயு ஆற்றின் வடகரையில்} ராஜன் {தசரதன்} யஜ்ஞத்தைத் தொடங்கினான்.(1) நல்ல மஹாத்மாவான அந்த ராஜனின் அஷ்வமேத மஹாயஜ்ஞத்தில் ரிஷ்யசிருங்கரை முன்னிட்டுத் துவிஜரிஷபர்கள் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்கள்} கர்மங்களைத் தொடங்கினர்.(2) யஜ்ஞங்கள் செய்வதை நன்கறிந்த வேதபாரகர்கள் சடங்குகளுக்குரிய விதிமுறைகளின்படியும், சாஸ்திரங்களின்படியும் பணிகளைச் செய்தனர்.(3) உபசத சடங்கைப் போன்று சாத்திரங்களில் விதிக்கப்பட்ட பிரவர்க்கியச்[2] சடங்கை விதிப்படி செய்த துவிஜர்கள், சாஸ்திரப்படியான மேலதிக கர்மங்கள் அனைத்தையும் செய்தனர்.(4) பிறகு தன்னடக்கத்துடன் கூடிய அந்த முனிபுங்கவர்கள் அனைவரும், அந்தந்த கர்மங்களுக்குரிய தேவர்களைப் பூஜித்து அதிகாலையில் சவனப்பூர்வமான கர்மங்களையும், தொடர்புடைய துணை சடங்குகளையும் செய்தனர்.(5) இந்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டியது {அவிர்ப்பாகம்} முறையாகக் கொடுக்கப்பட்டு, குற்றமற்ற ராஜன் {தசரதன்} ஸோமலதையைப்[3] பிழிந்ததும் அதன் தொடர்ச்சியாக மத்தியான வேளையிலும் {இரண்டாம்} சவனச் சடங்கு நடைபெற்றது.(6) அதே போலவே பிராமணபுங்கவர்கள் சாஸ்திர நோக்கத்துடன் நல்லமஹாத்மாவான அந்த ராஜனுக்கு மூன்றாம் சவனச் சடங்கையும் செய்தனர்.(7)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத யாகத்தில், நெற்றியில் ஒரு சின்னத்துடன் நன்கலங்கரிக்கப்பட்ட வேள்விக் குதிரை விடுவிக்கப்படும். அந்தக் குதிரையைக் கைப்பற்றும் எந்த மன்னனும் அதை விடுவித்து அனுப்பும் மன்னனின் கோபத்துக்கு உள்ளாவான் என்ற அறைகூவலுடன் அந்தச் சின்னம் அதன் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் கைப்பற்றும் மன்னன், அதை விடுவிக்கும் மன்னனுடன் போரிட வேண்டும். கைப்பற்றப்படாவிட்டால் விடுவிக்கும் மன்னனின் வெல்லப்பட முடியாத வீரம் நிறுவப்பட்டு அவன் முறையாக அந்தச் சடங்கைச் செய்வான். இங்கே மன்னன் தசரதனால் ஒருவருடத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்ட குதிரை எவராலும் கைப்பற்றப்படாமல் திரும்பி வந்து அவனது கொற்றத்தை நிறுவியிருப்பதால் அந்தச் சடங்கு முறையாகத் தொடங்குகிறது" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ரவர்க்யம் - ப்ரவர்க்ய ப்ராஹ்மணத்திற் சொல்லப்பட்ட கர்மவிசேஷம். உபஸதம் - அஃது ஓர் இஷ்டி விசேஷம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவை சோம வேள்விக்குத் தொடர்புடைய குறிப்பிட்ட சடங்குகள்" என்றிருக்கிறது.

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸோமலதை-ஆட்லாங்கொடி" என்றிருக்கிறது.

ரிஷ்யசிருங்கரும், பிறரும் நன்கு பயிலப்பட்ட சொற்களால் அமைந்த மந்திரங்களைச் சொல்லி சக்ரனையும் {இந்திரனையும்}, சிறந்த தேவர்கள் பிறரையும் அவ்விடத்தில் இருப்புக்கு அழைத்தனர்.(8) ஹோதாக்கள் மதுரமான கீதங்களைப் பாடியும், தகுந்த மந்திரங்களைச் சொல்லியும் அவிர்ப்பாகங்களை ஏற்கும் தேவர்களை வரவேற்றனர்.(9) அங்கே ஆகுதி எரியாத நிலையோ, சிறு தவறு ஏற்படும் நிலையோ நேரிடவில்லை. அனைத்தும் மந்திரம் சார்ந்தவையாகவே தோன்றின, உண்மையில் அனைத்தும் போதுமான பாதுகாப்புடன் செய்யப்பட்டன.(10) {வேள்வி நடந்த} அந்த நாட்களில் களைத்தவரையோ, பசித்தவரையோ, கல்வி அறிவில்லாத பிராமணரையோ அங்கே காண முடியவில்லை, அதேபோலவே நூறு தொண்டர்கள் இல்லாத {பிராமணர்} எவரையும் அங்கே காண முடியவில்லை.(11)

பிராமணர்கள், நாதவந்தர்கள் {தலைவனைக் கொண்ட பணியாட்கள்}, தவசிகள் ஆகியோரும், {போக்குவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கொள்ளாத} சிரமணர்களும் {புனிதப் பயணிகளும்}[4] எப்போதும் அங்கே புசித்துக் கொண்டிருந்தனர்.(12) முதிர்ந்தவர்கள், வியாதியுற்றவர்கள், ஸ்திரீகள், பாலர்கள் ஆகியோரும் {சுவைமிக்க உணவை} உண்பதில் திருப்தி அடையாமல்[5] எப்போதும் புசித்துக் கொண்டிருந்தனர்.(13) "அன்னத்தைக் கொடுப்பீராக, விதவிதமான ஆடைகளைக் கொடுப்பீராக" என அங்கே அனேக வழிகளில் ஏவல்கள் கேட்கப்பட்டன.(14) இவ்வாறே அங்கே விதிப்படி அன்னக்கூடங்கள் குவிக்கப்பட்டன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து மலைகளைப் போலத் தோன்றின.(15) அந்த மஹாத்மாவின் {தசரதனின்} யஜ்ஞத்திற்கு நானாதேசங்களில் {பற்பல நாடுகளில்} இருந்து {கூட்டங்கூட்டமாக} வந்திருந்த புருஷர்களும், ஸ்திரீகளும் நன்கு நிறைவடையும் வகையில் அவர்களுக்கு அன்னபானங்கள் கொடுக்கப்பட்டன.(16) விதிப்படி முறையாகச் சமைக்கப்பட்ட சுவைமிக்க அன்னத்தை துவிஜரிஷபர்கள் பாராட்டி, "அஹோ ராகவா {ரகுவின் வழித்தோன்றலான தசரதா}, திருப்தியடைந்தோம் பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பாயாக" என்று சொன்னது அங்கே கேட்டுக் கொண்டே இருந்தது.(17) நன்கு அலங்கரிக்கப்பட்ட புருஷர்கள், பிராமணர்களுக்கு உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தனர், ஒளிபொருந்திய மணி குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பிறரும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.(18)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பௌத்தத் துறவிகளில் திரிந்து கொண்டே இருப்போரைக் குறிக்கும் சிரமணர் முதலிய சொற்களைக் கண்டு அறிஞர்கள் சிலர் ராமாயாணம் பௌத்த காலத்திற்குப் பிறகே எழுதப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். சிரவணர் என்ற சொல்லுக்கு ஸம்ஸ்கிருதத்தில் புனிதப் பயணி என்ற பொருள் மட்டுமே உண்டு. இந்திரன் பயணிகளின் நண்பன் என்பதால் புனிதப் பயணம் என்பது முக்திக்கான ஒரு வழிமுறையாக விதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஐத்ரேய பிராஹ்மணத்தில் காணலாம். பௌத்த சிரமணர்கள் மதம் மாற்றுவதற்காகத் திரிந்து கொண்டிருந்தவர்கள், இந்து சிரமணர்களோ முக்தி நாடித் திரியும் தூய சந்நியாசிகள் மட்டுமே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில் சிரமணர் என்பதற்குப் பதில் திகம்பரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில் துறவிகள் என்ற சொல் இருக்கிறது.

[5] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் எவ்வளவு உண்டாலும் அரசனுக்கும் திருப்தியுண்டாகவில்லை என்றும் இதில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அவர்கள் இப்படி இடைவீடின்றிச் சாப்பிட்டபோதும் அந்நபாநத்தின் சுவையினால் திருப்தி உண்டாகவில்லை. அவர்கள் எவ்வளவு புசிக்கிலும் அரசனுக்குந் திருப்தி பிறக்கவில்லை" என்றிருக்கிறது.

வாதிடுவதில் சிறந்த தீர விப்ரர்கள், பணிகளுக்கிடையில் பரஸ்பரம் {ஒருவரையொருவர்} வெல்ல அறிவுசார்ந்த பல வாதங்களைச் செய்தனர்.(19) சடங்குகளைச் செய்வதில் நிபுணர்களான துவிஜர்கள் நாளுக்கு நாள் அங்கே {வசிஷ்டராலும், பிறராலும்} ஊக்கமளிக்கப்பட்டவர்களாக சாஸ்திரப்படி பணிகள் அனைத்தையும் செய்து வந்தனர்.(20) ஷட் அங்கங்களை {வேதங்களின் ஆறு கிளைகளை}[6] அறியாதவர்கள், விரதங்களை நோற்காதவர்கள், பல கேள்விகளை {சாத்திரங்களைக்} கேட்டறியாதவர்கள் என அங்கே ஒருவரும் இல்லை. உண்மையில் அந்த ராஜனின் சடங்கில் வாதம்புரிவதில் நிபுணமற்றவர்கள் எவரும் இல்லை.(21)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேதங்களின் ஆறு அங்கங்கள்: 1) சிக்ஷை - ஒலியியல் 3) வியாகரணம் - இலக்கணம், 3) சந்தஸ் - யாப்பு {பொருத்தமான உச்சரிப்பு} 4) நிருக்தம் - சொல்லியல் {சொற்பிறப்பியல்} 5) ஜ்யோதிஷம் - வானியல் 6) கல்பம் - சடங்குச் செயல்கள் ஆகியனவாகும்" என்றிருக்கிறது.

யூபங்கள் {மரத்தூண்/பலிபீடத்திற்கு அருகே நாட்டப்படும் கொடிக்கம்பம்} நாட்டப்படும் வேளை வந்த போது, வில்வ மரத்தில் செய்யப்பட்டவை ஆறும், காதிரை {கருங்காலி} மரத்தில் செய்யப்பட்டவை அதே எண்ணிக்கையிலும் {ஆறும்}, பர்ணின {பலாச} மரத்தில் செய்யப்பட்டவை அதே எண்ணிக்கையிலும் {ஆறும்}, சிலேஷ்மாதக {நறுவிலி} மரத்தில் செய்யப்பட்ட ஒன்றும், தேவதாரு மரத்தில் செய்யப்பட்டவை இரண்டுமென அவை {இருபத்தோரு யூபங்கள்} ஒவ்வொன்றும் அகலவிரித்த கைகளின் இடைவெளிகளில் அந்தந்த மரங்களிலேயே ஆன ஸ்தம்பங்களில் நாட்டப்பட்டன.(22,23) சாஸ்திர ஞானம் கொண்டவர்களாலும், யஜ்ஞம் செய்வதில் அறிஞர்களாலும் அவை {யூபங்கள்} அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. அந்த யஜ்ஞத்தின் நேர்த்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அவை தங்கப்பட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(24) இருபத்தோரு முழம் உயரம் கொண்டவையான அந்த இருபத்தோரு யூபங்களும் இருபத்தோரு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(25) உறுதிமிக்கவையாகவும், எட்டுப்பட்டைகளும், மழுமழுவென்ற மென்மையும் கொண்டவையாகவும் சிற்பிகளால் {தச்சர்களால்} நன்கு செதுக்கப்பட்டிருந்த அவை அனைத்தும் இவ்வாறே விதிப்படி ஊன்றப்பட்டன.(26) துணிகளால் சுற்றப்பட்டு, புஷ்பங்கள் {மலர்கள்}, கந்தங்கள் {நறுமணப் பொருட்கள்} ஆகியவற்றைக் கொண்டு பூஜிக்கப்பட்ட அவை வானில் சப்தரிஷிகள்[7] ஒளிர்வதைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(27)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சப்த ரிஷிகளின் பெயர்கள்: 1) அத்ரி, 2) அங்கீரஸ், 3) புலஸ்தியர், 4)புலஹர், 5) கிரது, 6) மரீசி, 7) வசிஷ்டர். வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்களில் இஃது உர்ஸா மேஜர் Ursa Major அல்லது பெருங்கரடி என்றழைக்கப்படுகிறது." என்றிருக்கிறது. 

அங்கே பிராமணர்களால் அடுக்கப்பட்ட அக்னிபீடத்திற்கான செங்கற்கள் {சுல்ப நூலைக் கொண்டு அளக்கப்படும்} நிலையான அளவுகளின் படியும் விதிகளின்படியும் சில்பக்காரர்களால் கட்டமைக்கப்பட்டன[8].(28) நிபுணத்துவம் வாய்ந்த துவிஜர்களால் பொன்சிறகுகளுடனும், {பிற சடங்குகளுக்கான பீடங்களைவிட} மூன்று மடங்கு அதிக அளவில் பதினெட்டு பிரிவுகளுடனும் {பிரஸ்தாரங்களுடன்}, கருடனின் வடிவில் செய்யப்பட்ட அந்த ராஜசிம்மத்தின் {தசரதனின்} அக்னி பீடத்தில் எப்போதும் எரியும் நெருப்பு மூட்டப்பட்டது[9].(29) பசவங்கள் {விலங்குகள்}, உரகங்கள் {பாம்புகள்}, பக்ஷிகள் {பறவைகள்} ஆகியன சாஸ்திரம் சொல்லும்படி அந்தந்த தேவர்களுக்கென உத்தேசித்து அங்கே {அந்தந்த யூபஸ்தம்பங்களில்} கட்டப்பட்டன.(30) விலங்கு வேள்விகளுக்குத் தேவையான குதிரை, நீர்வாழ் உயிரினங்கள் முதலிய அனைத்தும் சாத்திரவிதிப்படி ரிஷிகளால் கட்டப்பட்டன[10].(31) அங்கே அவ்வாறு முன்னூறு விலங்குகளும், உத்தம ரத்தினம் போன்ற ராஜனின் {தசரதனின்} ஒரு குதிரையும் யூபங்களில் கட்டப்பட்டன.(32)

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்னிப்பீடக் கட்டுமானமே கூட இஷ்டிகசயனம் என்றழைக்கப்படும் ஒரு சடங்காகும். அதில் ஒவ்வொரு செங்கல்லும், மந்திரங்களால் புனிதமாக்கப்படும். தேவையான வடிவில் செங்கற்கள் அடுக்கப்பட்ட பிறகு அந்தப் பீடத்தின் செங்கற்கட்டுமானத்தில் பாலும், பிற தூய நீர் வகைகளும் ஊற்றப்பட்டு வேத மந்திரங்கள் ஓத அபிஷேகமெனும் புனித நீராடல் அதற்குச் செய்யப்படும்" என்றிருக்கிறது.

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடன், வேகமான சிறகுகளைப் படைத்த தெய்வீகக் கழுகாவான். அவனே ஒரு காலத்தில் அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயை அடிமைத்தளையில் இருந்து விடுவித்தான். எனவே, அக்னிபீடம் தெய்வீகக் கழுகின் வடிவைப் பெறுகிறது. அதன் சிறகுகளும், வால் பகுதியும் நீண்டிருக்கும், தலை கீழ் நோக்கியிருக்கும், கண்கள் கிழக்கு நோக்கி இருக்கும். சுபர்ணன் அதாவது நல்ல சிறகுகளைப் படைத்தவன் தன் பொற்சிறகுகளுடன் சொர்க்கத்திற்கு ஆகுதிகளைச் சுமந்து செல்வதால் யஜ்ஞத்திற்கும் சுபர்ணம் என்ற பெயருண்டு. தசரதனின் அஷ்வமேதயஜ்ஞத்திற்கான இந்தப் பீடம் வழக்கமாகச் செய்யப்படும் பீடங்களைவிட மூன்று மடங்கு பெரிதாகச் செய்யப்படுகிறது" என்றிருக்கிறது.

[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத வேள்வியில் பல விலங்குகள் பலியிடப்படும். ஆனால் அதற்கு முன்பு அவை காட்டு விலங்குகள் என்றும், வீட்டு விலங்குகளென்றும் தனித்தனியாகப் பிரிக்கப்படும். அவற்றில் காட்டு விலங்குகள் பலவும் அக்னிபிரதக்ஷிண நமஸ்காரமெனும் முறைப்படி நெருப்பை வலம் வந்த பிறகு விடுவிக்கப்படும். வீட்டு விலங்குகள் வேள்வியில் பலியிடப்படும். எதை விடுவது, எதை வைத்துக் கொள்வது என்பதைப் புரோஹிதர்கள் தீர்மானிப்பார்கள்" என்றிருக்கிறது. கட்டமுடியாத உயிரினங்கள், கூண்டிலடைக்கப்பட்டு யூபங்களில் கட்டப்பட்டும்.

அப்போது, பெரும் மகிழ்ச்சியுடன் அந்தக் குதிரையிடம் வந்த கௌசல்யை மதிப்புடன் வலமும், இடமுமாகச் சென்று மூன்று கத்திகளைக் கொண்டு அதை வெட்டினாள்[11].(33) அமைதியான இதயத்துடன் கூடிய கௌசல்யை தர்மத்தை {வேள்வியின் நல்விளைவுகளை} விரும்பி மனவெறுப்பில்லாமல் {அங்கே சவமாகக் கிடந்த} அந்தக் குதிரையுடன் ஓரிரவு வசித்தாள்.(34) ஹோதா, அத்வர்யு, உத்காதா ஆகியோர் {தக்ஷிணையாகக் கொடுக்கப்பட்ட} மஹிஷி {பட்டத்துராணி}, பரிவ்ருத்தி {புறக்கணிக்கப்பட்ட மனைவி}, வாவாதை {ஆசை நாயகி} ஆகியோரின் கைகளைப் பற்றினர்[12].(35) பரமஞானம் கொண்டவரும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவருமான ரித்விக் குதிரையின் {வயிற்றுப் பகுதியில் உள்ள} கொழுப்பை எடுத்து சாத்திரப்படி சமைத்தார்.(36) காலநியாயப்படி அந்த நராதிபன் {தசரதன்}, தன் பாவத்தைக் கழுவிக் கொள்ள அந்தக் கொழுப்பில் புகையும் தூமகந்தத்தை {புகையின் மணத்தை} நுகர்ந்தான்.(37) {வேள்வியின்} பதினாறு ரித்விஜர்களும் சேர்ந்து, குதிரையின் எஞ்சிய உடற்பாகங்கள் அனைத்தையும் விதிப்படி அக்னியில் நைவேத்தியமாக இட்டனர்.(38)

[11] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேள்விகளில் ராணிகள் விலங்குகளைக் கொல்வதில்லை. அந்த ராணிகள் ஏற்கனவே கொல்லப்பட்ட குதிரையிடம் வந்து மூன்று தங்க ஊசிகளால் அதைத் துளைப்பார்கள். வேள்வி செய்பவனின் மனைவியர் அனைவரும் இதைச் செய்ய வேண்டுமென சாத்திரம் சொல்கிறது. எனவே, தசரதனின் மூன்று ராணிகளும் குதிரையை மும்மூன்று ஊசிகளால் துளைத்திருப்பார்கள்" என்றிருக்கிறது.

[12] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பட்டாபிஷேகம் பெற்றவள் மஹிஷி என்றும், அரசன் ஸம்போகித்து உபேக்ஷிக்கப்பெற்றவள் பரிவ்ருத்தியென்றும், ராஜவேசயை வாவதையென்றும், ராஜாவுக்குப் பாத்ரங் கொடுப்பவள் பாலாகலியென்றும் அறிக. இந்நால்வரில் மஹிஷியை ப்ரஹ்மாவுக்கும், பரிவ்ருத்தியை உத்காதாவுக்கும், வாவாதையை ஹோதாவுக்கும், பாலாகலியை அத்வர்யுவுக்கும் அரசன் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும். பின்பு அந்த ருத்விக்குக்களும் அவர்களுக்குப் பதிலாக த்ரவ்யத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கொடுத்துவிடுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹிஷி என்பவள் பட்டத்து ராணியாவாள், பரிவிருத்தி என்பவள் முன்பு பிடித்தமானவள், ஆனால் இப்போது புறக்கணிக்கப்பட்டவள். வாவதை என்பவள் பிடித்தமான மனைவி. பாலாகலி என்பவள் ஒரு மன்னனுக்கு உரிமையுள்ள நான்கு மனைவியரில் இறுதியானவள். சில வேளைகளில் மஹிஷி க்ஷத்திரிய மனைவி என்றும், வாவதை வைசிய மனைவி என்றும், பரிவிருத்தி சூத்திர மனைவி என்றும் சொல்லப்படுக்கிறார்கள். ஆனால் இங்கே முன் சொன்ன பொருளே பொருந்தும்" என்றிருக்கிறது.

மற்ற யஜ்ஞங்களில் ஹவிஸானது பிலாக்ஷ கிளைகளின் {இரலிக் கிளைகளின்} மூலம் காணிக்கையளிக்கப்படும். அஷ்வமேத யஜ்ஞத்தில் வைதசக் கொடியால் {நீர்வஞ்சிக் கொடியால்} காணிக்கையளிக்கப்படும்.(39) பிராஹ்மணங்களின் மூலமும், கல்பசூத்திர விதிகளின் படியும் அஷ்வமேதம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாளில் சதுஷ்டோமம் ஏற்பாடு செய்யப்படும்.(40) இரண்டாம் நாள் உக்தியமும், அதற்கு அடுத்த நாள் {மூன்றாம் நாள்} அதிராத்ரமும் இன்னும் சாத்திர நோக்கில் விதிக்கப்படும் காரியங்கள் பலவும் செய்யப்படும்[13].(41) அவ்வாறே ஜ்யோதிஷ்டோமம் {அக்னிச் சடங்கு}, ஆயுர்யாகம் {ஆயுள் சடங்கு}, அதிராத்ரம், அபிஜித், விச்வஜித், அப்தோர்யாம மஹாயஜ்ஞங்கள் ஆகியனவும் செய்யப்பட்டன.(42)

[13] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத யாகம் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் தசரதன் சந்ததி பெற தேவர்களைத் தணிவடையச் செய்யும் ஆவலில் அதனுடன் தொடர்புடைய பல்வேறு சடங்குகளையும் பல நாட்கள் செய்கிறான்" என்றிருக்கிறது.

தன் குலத்தைப் பெருகச் செய்பவனான ராஜா {தசரதன்}, கிழக்குத் திசையை ஹோதாவுக்கும், மேற்கை அத்வர்யுவுக்கும், தென் திசையைப் பிரம்மாவுக்கும், வட திசையை உத்காதாவுக்கும் கொடையளித்தான். பூர்வத்தில் ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} விதிக்கப்பட்ட படியே அந்த அஷ்வமேத மஹாயஜ்ஞத்தில் இவை யாவும் கொடையளிக்கப்பட்டன.(43,44) குலவர்தனனும், புருஷரிஷபனுமான ராஜா {தசதரன்}, சடங்குகளை முடித்துவிட்டு நியாயப்படி அந்த நிலங்களை ரித்விக்குகளுக்குத் தானமளித்தான்.(45) ஸ்ரீமானான இக்ஷ்வாகு குலநந்தனன் {தசரதன்} இவ்வாறு தத்தம் செய்து மகிழ்ந்தாலும், பாவங்களைக் கழுவிக் கொண்டவனான அந்த ராஜனிடம் ரித்விஜர்கள் அனைவரும்,(46) "மொத்த பூமியையும் ரக்ஷிக்கவல்லவன் {காக்கவல்லவன்} நீ மட்டுமே. பூமியால் எங்களுக்குக் காரியமேதும் இல்லை; நாங்கள் ஆளவல்லவர்களுமல்ல.(47) நாங்கள் எப்போதும் கல்வி கற்பதிலும், போதிப்பதிலும் ஈடுபடுகிறோம். பூமிபதியே, இந்நோக்கில் நீ எளியவையேதும் எங்களுக்குக் கொடுப்பாயாக.(48) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, மணி, ரத்னம், சுவர்ணம், பசுக்கள் ஆகியவற்றையோ, இருக்கும் வேறு எதையுமோ நீ எங்களுக்குக் கொடுக்கலாம். பூமியால் எங்களுக்குப் பிரயோஜனம் ஏதும் இல்லை" என்றனர்.(49)

நரபதியான அந்த மன்னன், வேதபாரகர்களான பிராமணர்களால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும், பத்து, நூறு, ஆயிரமென {அல்லது பத்து லட்சம்} பசுக்களையும், தசகோடி {பத்து கோடி} சுவர்ணங்களையும், அதனிலும் நான்கு மடங்கு {நாற்பது கோடி} வெள்ளியையும் அவர்களுக்குக் கொடையளித்தான்[14].(50,51அ) அந்த ரித்விஜர்கள் அனைவரும் அந்தச் செல்வத்தை மொத்தமாகத் திரட்டி முனிவர்களான ரிஷ்யசிருங்கரிடமும், வசிஷ்டரிடமும் கொடுத்தனர்.(51ஆ,52அ) இதயத்தில் நிறைவடைந்த துவிஜர்கள் அனைவரும் {ரிஷ்யசிருங்கரிடமும், வசிஷ்டரிடமும் கொடுத்த} அவற்றைத் தங்களுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொண்டு, "பெரும் மகிழ்சியடைந்திருக்கிறோம்" என்றனர்.(52ஆ,53அ) பிறகு அந்த வேள்வியைக் காண வந்த பிராமணர்களுக்கு ஒரு கோடி ஜம்பூநதப் பொன் {ஜம்பூ ஆற்றில் கிடைத்த தங்கம்} கொடையளிக்கப்பட்டது.(53ஆ,54அ) அப்போது அந்த ராகவனந்தனன் {ராகவனின் வழித்தோன்றலான தசரதன்}, வேண்டி வந்த ஏழை பிராமணன் ஒருவருக்குத் தன்னுடைய ஹஸ்தாபரணத்தை {கைவளையைக்} கொடையளித்தான்.(54ஆ,55அ)

[14] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இத்தகைய வேள்விகளில் வெள்ளியைக் கொடையளிப்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால் இங்கே நிலங்களுக்கு மாற்றாகக் கொடுக்கப்படுவதால் இந்தக் கொடை ஏற்கப்படுகிறது" என்றிருக்கிறது.

துவிஜ வத்சலனான {பிராமணர்களின் புரவலனான} அவன், துவிஜர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தபோது, மகிழ்ச்சிபொங்கும் புலன்களுடனும், கடமையுணர்வுடனும் அவர்களைக் கௌரவித்தான்.(55ஆ, 56அ) பிறகு அந்த வீர மன்னன், தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவர்களை வணங்கினான், அந்தப் பிராமணர்களும் அவனுக்குப் பல்வேறு ஆசிகளைக் கூறினர்[15].(56ஆ,57அ) பாவங்களை அகற்றுவதும், பார்த்திப ரிஷபர்களாலும் {மன்னர்களில் சிறந்தவர்களாலும்} செய்வதற்குக் கடினமானதும், உத்தமமானதுமான அந்த யஜ்ஞம் நிறைவடைந்ததில் ராஜனின் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(57ஆ,58அ) அப்போது ராஜா தசரதன் ரிஷ்யசிருங்கரிடம், "நல்ல விரதங்களை நோற்பவரே, என் குலவர்தனத்திற்குரிய {என் குலம் பெருகுவதற்குரிய} யஜ்ஞத்தைச் செய்ய நீரே தகுந்தவர்" என்றான்.(58ஆ,59அ)

[15] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆசிகள் வேத மந்திரங்களாகவும், வேத மந்திரங்களின் குறிப்பிட்ட பகுதிகளாகவும் ஆசீர்வசன மந்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட நிகழ்வில் உதிர்க்கப்படும். ஒரு பிராமணப் புரோஹிதரை அழைத்து வீட்டுச் சடங்குகளைச் செய்யவைத்து ஆசி பெறும் இந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. உண்மையில் இஃது அந்தப் பிராமணப் புரோஹிதர்களின் ஆசிகளாக இல்லாமல், வேதங்களின் ஆசியாகவே அமையும்" என்றிருக்கிறது.

"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தத் துவிஜ ஸத்தமர் {ரிஷ்யசிருங்கர்}, மீண்டும் அந்த ராஜனிடம், "ராஜா, உமது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்யும் நான்கு சுதன்கள் {மகன்கள்} உமக்குப் பிறப்பார்கள்" என்றார்.(59ஆ,இ) அவரது மதுரமான வாக்கியத்தைக் கேட்ட மஹாத்மாவான அந்த நிருபேந்திரன் {மன்னர்களின் மன்னனான தசரதன்}, பெருமகிழ்ச்சியடைந்தவனாகி அவரை வணங்கினான். ரிஷ்யசிருங்கர் மீண்டும் அவனிடம் பேசத் தொடங்கினார்.(60)

பாலகாண்டம் சர்க்கம் –14ல் உள்ள சுலோகங்கள்: 60

Previous | Sanskrit | English | Next

Monday, 2 August 2021

யஜ்ஞத்திற்கான முயற்சி | பால காண்டம் சர்க்கம் - 12 (22)

Preparing for Yajna | Bala-Kanda-Sarga-12 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: முனிவர்களை யாகம் செய்யத் தூண்டிய தசரதன்; ஸம்பாரங்களைத் திரட்ட அமைச்சர்களைத் தூண்டியது...

Dasharatha

சில காலம் கழிந்த பிறகு, ஒரு வசந்த காலத் தொடக்கத்தில் ராஜன் {தசரதன்} யஜ்ஞம் செய்ய மனத்தில் விரும்பினான்.(1) அப்போது தேவனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த விப்ரரிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} சென்று தலைவணங்கி குலசந்தானத்திற்கான யஜ்ஞம் செய்ய அவரை வேண்டினான்.(2) ராஜனால் இவ்வாறு நன்கு கௌரவிக்கப்பட்ட அவரும் அவனிடம், "சம்பாரங்களைத் திரட்டி உமது வேள்விக் குதிரையை விடுவிப்பீராக. சரயுவின் வடதீரத்தில் யஜ்ஞ பூமி விதிக்கப்படட்டும்" என்றார்.(3,4அ)

அப்போது அந்த மன்னன், மந்திரிகளிற்சிறந்த சுமந்திரனிடம், இந்தச் சொற்களில், "ஸுயஜ்ஞர், வாமதேவர், ஜாபாலி, காசியபர் உள்ளிட்ட பிரம்மவாதிகள், ரித்விஜர்கள், புரோஹிதர் வசிஷ்டர் ஆகியோரையும், இன்னும் உள்ள துவிஜஸத்தர்களையும் {பிராமணர்களையும்} விரைந்து அழைப்பீராக" என்றான்.(4ஆ,5,6அ)

துரிதமாகச் செயல்படும் சுமந்திரனும், விரைந்து சென்று சமஸ்தானத்தின் வேதபாரகர்கள் அனைவரையும் அழைத்து வந்தான். தர்மாத்மாவான தசரத ராஜன் அவர்கள் அனைவரையும் பூஜித்து, {மனத்திற்பதியும் வண்ணம்} அறம், பொருளுடன் கூடிய {பின்வரும்} மென்மையான வசனத்தைச் சொன்னான்.(6ஆ,7,8அ) "புத்திரர்கள் இல்லாததால் என் மனம் அமைதியின்றிக் கலங்குகிறது. எனவே வேதவழிபாட்டுடன் கூடிய ஹயமேதத்தை {அஷ்வமேதத்தைச்} செய்ய நான் நினைக்கிறேன். சாஸ்திரங்கள் காட்டும் கர்மங்களுடன் அந்தச் சடங்கைச் செய்ய விரும்புகிறேன். ரிஷிபுத்திரரின் {ரிஷ்யசிருங்கரின்} பிரபாவத்தால் {மகிமையால்} என் விருப்பம் நிறைவேற இச்சிக்கிறேன்" {என்றான் தசரதன்}.(8ஆ,9,10அ)

அந்தப் பிராமணர்களும், "இந்த வாக்கியம் நன்று" என்று சொல்லி மன்னனுக்குப் பிரதிபூஜை செய்தனர். வசிஷ்டரும், பிரமுகர்கள் அனைவரும் பார்த்திபனின் {பார்/உலகின் அதிபன் தசரதனின்} முகத்தில் இருந்து வெளிவந்த சொற்களை மெச்சி, ரிஷ்யசிருங்கரை முன்னிட்டுக் கொண்டு நிருபதியிடம் {நரபதி/ நர அதிபதி/ மனிதர்களின் மன்னனுக்குப்} பதிலளிக்குவகையில்,(10ஆ,11) "தார்மீக புத்தியால் இவ்வகையில் புத்திரர்களைப் பெற விரும்பும் உனக்கு அனைத்து வகையிலும் அளவற்ற வீரம் கொண்ட நான்கு புத்திரர்கள் பிறப்பார்கள். ஸம்பாரங்கள் திரட்டப்படட்டும், உன் வேள்விக் குதிரை விடுவிக்கப்படட்டும். சரயுவின் வட தீரத்தில் யஜ்ஞபூமி விதிக்கப்படட்டும்" என்றனர்.(12,13)

அப்போது ராஜன் அந்தத் துவிஜர்கள் சொன்னதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தான். பிறகு அந்த ராஜன் அந்த நற்சொற்களால் மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் அமாத்யர்களிடம் {அமைச்சர்களிடம் பின்வருமாறு} பேசினான்.(14) "குருக்களின் வசனத்தால் சீக்கிரமாக சம்பாரங்கள் திரட்டப்படட்டும். ஸமர்தாதிஷ்டர்களுடனும் {பாதுகாப்பை வழங்கும் துணிச்சல்மிக்கவர்களுடனும்}, நல்ல உபாத்யாயர்களுடனும் அஷ்வம் {குதிரை} விடுவிக்கப்படட்டும்.{15} சரயுவின் வடதீரத்தில் யஜ்ஞபூமி விதிக்கப்படட்டும். மரபின்படியும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட படியும் சாந்தி நிலவட்டும்.{16} இந்த யஜ்ஞத்தைச் செய்வது கஷ்டமானது. இந்தப் பெருஞ்சடங்கு அபராதமின்றிச் செய்யக்கூடியதெனில் பூமியின் மன்னர்கள் அனைவரும் செய்திருப்பார்கள்.{17} வித்வாம்சம் பொருந்திய பிரம்மராக்ஷசர்கள், இதில் குற்றங்குறைகளைத் தேடுவார்கள். யஜ்ஞவிதிகளின்படி இது செய்யப்படாவிட்டால் கர்த்தன் {வேள்வி செய்பவன்} அழிவடைவான்.{18} எனவே, விதிப்பூர்வமாக இந்தச் சடங்கு நிறைவடையும் வகையில் சமர்த்தர்கள் இக்காரியத்தைச் செய்ய வேண்டும்" என்றான்.{19}(15-19)

மந்திரிகள், "அவ்வாறே ஆகட்டும்" என்று பார்த்திபேந்திரனிடம் {தசரதனிடம்} சொல்லி அவனுக்குப் பிரதிபூஜை செய்துவிட்டு {மன்னனால்} ஆணையிடப்பட்டவாறே அனைத்தையும் செய்தனர்.(20)

அப்போது துவிஜர்கள் அனைவரும், தர்மம் அறிந்த அந்தப் பார்த்திபரிஷபத்தின் {தசரதனின்} அனுமதியின் பேரில், தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(21) முக்கியத் துவிஜர்கள் சென்ற பிறகு பேரொளி படைத்தவனான அந்த நராதிபன் {தசரதன்}, மந்திரிகளுக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் வசிப்பிடத்திற்குள் பிரவேசித்தான்[1].(22)

[1] இந்த 12வது சர்க்கம் கிட்டத்தட்ட 8ம் சர்க்கத்தில் உள்ள அனைத்தையும் திரும்பச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது.

பாலகாண்டம் சர்க்கம் –12ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Thursday, 29 July 2021

அயோத்தியில் ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 11 (31)

Rishyasringa's arrival at Ayodhya | Bala-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதனை அறிவுறுத்திய சுமந்திரன்; ரிஷியசிருங்கரையும், அவரது மனைவியையும் அயோத்திக்கு அழைத்து வந்த தசரதன்...


Rishyashringa travels to Ayodhya

{சுமந்திரன் தொடர்ந்தான்}, "இராஜேந்திரரே, தேவர்களில் சிறந்தவரான அவர் {சனத்குமாரர்}, எவ்வாறு கதையைச் சொன்னாரோ அவ்வாறே நான் மீண்டும் சொல்லப் போகும் ஹிதமான சொற்களைக் கேட்பீராக.(1) {சனத்குமாரர் தொடர்ந்தார்}, "தர்மவானும், ஸ்ரீமானும், சத்தியத்தில் நிலைநிற்பவனுமான ஒருவன் தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகு குலத்தில் பிறப்பான்.(2) அந்த ராஜன் {தசரதன்}, அங்கராஜனுடன் நட்பு கொள்வான். அவனுக்கு[1] சாந்தை என்ற பெயரில் மஹாபாக்யவதியான ஒரு கன்னிகை இருப்பாள்.(3) அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்ற பெயரில் அறியப்படுவான். பெரும்புகழ் படைத்த தசரத ராஜன் அவனை {ரோமபாதனை} அணுகி,(4) "தர்மாத்மாவே {ரோமபாதா}, நான் பிள்ளையற்றவனாக இருக்கிறேன். சாந்தையின் பர்த்தா {கணவர் ரிஷ்யசிருங்கர்} உன் ஆணையின் பேரில் என் குல சந்ததிக்காகச் செய்யப்படும் வேள்விக்குத் தலைமை தாங்கட்டும்" என்று கேட்பான்.(5) ஆத்மவானான ரோமபாதன், அந்த ராஜாவின் {தசரதனின்} வாக்கியத்தைக் கேட்டு, மனத்தில் சிந்தித்து, புத்திரவந்தத்திற்காக[2] சாந்தையின் பர்த்தாவைக் கொடுப்பான்.(6) அந்த ராஜன் {தசரதன்}, அந்த விப்ரரை {ரிஷ்யசிருங்கரை} அழைத்துச் சென்று, பிணி விலகியவனாக அந்தராத்மாவில் மகிழ்ச்சியடைந்து அந்த யஜ்ஞத்தைச் செய்வான்.(7)

[1] இங்கே குறிப்பிடப்படுவது தசரதனா, அங்கராஜனா என்பதில் மொழிபெயர்ப்புப் பதிப்புகளுக்கிடையில் பெருங்குழப்பம் இருக்கிறது. இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்றிருக்கிறது. எனவே, இங்கே அங்கராஜனின் மகள் சாந்தை என்று கொண்டால், அவள் ரோமபாதனுக்குத் தமக்கை ஆவாள். ஆனால், இதே சர்க்கத்தின் 19ம் ஸ்லோகத்தில் தசரதன் ரோமபாதனிடம் பேசும்போது உன் மகள் சாந்தை என்று சொல்கிறான். அவ்வாறெனில் சாந்தை ரோமபாதனின் மகளாவாள்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், ப்ரதா³ஸ்யதே புத்ரவந்தம் என்பது, "ஏற்கனவே மகனைக் கொண்டிருந்த ரிஷ்யசிருங்கர்" என்று சில மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது. மற்ற மொழிபெயர்ப்புகளிலோ, "புத்ரகாமேஷ்டி சடங்கின் மூலம் சந்ததியை அளிக்கும் முனிவர்" என்று காணப்படுகிறது. மஹாபாரதத்தில் விபாண்டர் ரிஷ்யசிருங்கரிடம் ஒரு மகனைப் பெறும் வரை அங்க நாட்டில் இருந்து விட்டுத் திரும்பி வந்துவிடு என்பார். இதைக் கொண்டு ரிஷ்யசிருங்கருக்கு ஒரு மகன் இருந்தான் என்று சிலர் சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. மஹாபாரதம் வனபர்வம் பகுதி 113ல் விபாண்டகர் ரிஷ்யசிருங்கரிடம் சொன்ன செய்தி இருக்கிறது.

வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவனும், தர்மம் அறிந்தவனும், நரேஷ்வரனுமான {மக்களின் தலைவனுமான} தசரத ராஜன், யஜ்ஞார்த்தத்திற்காகவும் {வேள்வியைச் செய்வதற்காகவும், அதன் மூலம் அமையும்} பிரசவார்த்தத்திற்காகவும் {சந்ததியைப் பெறுவதற்காகவும்}, ஸ்வர்க்கார்த்தத்திற்காகவும் {வீடு பேற்றுக்காகவும்} அந்தத் துவிஜ சிரேஷ்டரான {இருபிறப்பாளர்களில் சிறந்தவரான} ரிஷ்யசிருங்கரிடம் கைகளைக் கூப்பி வேண்டுவான். அந்த விஷாம்பதி {பூமியின் திக்குகள் அனைத்திற்கும் பேரரசனான தசரதன்}, அந்தத் துவிஜமுக்கியரின் {ரிஷ்யசிருங்கரின்} மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வான்.(8,9) அவனுக்கு வீரம் நிறைந்த நான்கு புத்திரர்கள் பிறந்து வம்சத்தின் மதிப்பை உயர்த்தி உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் புகழுடன் இருப்பார்கள்" {என்றார் சனத்குமாரர்}.(10) தேவர்களில் மேலானவரும், பகவானும், பிரபுவுமான அந்தச் சனத்குமாரர் பூர்வத்தில், தேவ யுகத்தில் {கிருத யுகத்தில்} இவற்றை உரைத்தார்.(11) எனவே, புருஷர்களில் புலியே, மஹாராஜா {தசரதரே}, தனிப்பட்ட முறையில் பரிவாரத்துடன் நீரே சென்று, வாகனத்தில் அவரை {ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வந்து துதிப்பீராக" {என்றான் சுமந்திரன்}.(12)

சுமந்திரனின் சொற்களைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சியடைந்தான். அந்தச் சூதனின் மொழியை வசிஷ்டரையும் கேட்கச் செய்து, அவரது அனுமதியையும் பெற்றான். பிறகு அவன் சாந்தபுரத்தை {அந்தப்புரத்தைச்} சேர்ந்தவர்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடன்} சேர்ந்து, அந்தத் துவிஜர் இருந்த இடத்திற்குப் பிரயாணம் செய்தான்.(13,14அ) மெல்ல மெல்ல வனங்களையும், ஆறுகளையும் கடந்து சென்று, அந்த முனிபுங்கவர் இருக்கும் தேசத்திற்குள் நுழைந்தான்.(14ஆ,15அ) அந்தத் துவிஜ சிரேஷ்டர் {ரிஷ்யசிருங்கர்}, ரோமபாதனின் அருகில் வேள்வி நெருப்பைப் போல ஒளிர்வதைக் கண்டான்.(15ஆ,16அ)

அப்போது அந்த ராஜா {ரோமபாதன்}, அந்தராத்மாவில் பெரும் மகிழ்ச்சியடைந்து, முறைப்படியும், நட்பின் அடிப்படையிலும் அந்த ராஜனை {தசரதனை} விசேஷமாகப் பூஜித்தான்.(16ஆ,17அ) ரோமபாதன், தங்கள் நட்பையும், உறவையும் ஞானமிக்க ரிஷிபுத்திரரிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னான். அப்போது அவரும் அவனுக்கு {தசரதனுக்குப்} பிரதிபூஜை செய்தார்.(17ஆ,18அ) நரரிஷபனான {மனிதர்களில் காளையான} அந்த ராஜன் {தசரதன்}, இவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏழு, எட்டு நாட்கள் கழிந்த பிறகு அந்த ராஜனிடம் {ரோமபாதனிடம்}, இவ்வாறு {பின்வருமாறு} பேசினான்,(18ஆ,19அ) "விஷாம்பதியே {விஷயங்களின் தலைவனான ரோமபாதா}, உன் மகள் சாந்தை தன் பர்த்தாவுடன் என் நகரத்திற்கு {அயோத்திக்கு} வர வேண்டும். ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய உத்தேசித்திருக்கிறேன்" {என்றான் தசரதன்}.(19ஆ,20அ) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அந்த ராஜன் {ரோமபாதன்}, நுண்ணறிவுமிக்க அந்த விப்ரரும் {ரிஷ்யசிருங்கரும்} ஏற்றுக் கொண்ட பிறகு அவரிடம், "நீர் உமது பார்யையுடன் {மனைவியுடன்} செல்வீராக" என்று சொன்னான்.(20ஆ,21அ) அப்போது அந்த ரிஷிபுத்திரர், "அவ்வாறே ஆகட்டும்" என்று அவனிடம் மறுமொழி கூறினார். அவர் அவனால் அனுமதிக்கப்பட்டுத் தன் பார்யையுடன் புறப்பட்டுச் சென்றார்.(21ஆ,22அ)

அந்த வீரியவான்கள் இருவரும் {ரோமபாதனும், தசரதனும்} அன்யோன்ய அஞ்சலி செய்தும், ஸ்னேகத்தால் மார்புறத் தழுவிக் கொண்டும் மகிழ்ச்சியடைந்தனர்.(22ஆ,23அ) ரகுநந்தனனான {ரகுவின் வழித்தோன்றலான} தசரதன் அந்த நல்லிதயம் கொண்டவனிடம் {ரோமபாதனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்ற போது, சீக்கிரமாகச் செல்பவர்களை {தூதர்களை} நகரவாசிகளிடம் {அயோத்திபுரிவாசிகளிடம்} அனுப்பி,(23ஆ,24அ) "நகரம் முழுவதும் சீக்கிரமாக நல்லலங்காரத்துடன் {நறுமண} தூபமிட்டு, {சாலைகள்} தூய்மைப்படுத்தப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு, பதாகைகளால் அலங்கரிக்கப்படட்டும்" {என்று அறிவிக்கச் செய்தான்}.(24ஆ,25அ) ராஜனின் வரவைக் கேட்ட குடிமக்கள் மகிழ்ச்சியடைந்து, அந்த ராஜனால் ஆணையிடப்பட்ட பணிகளைச் செய்தனர்.(25ஆ,26அ)

அப்போது, ராஜா {தசரதன்} அந்தத் துவிஜரிஷபரை {இருபிறப்பாளர்களில் காளையான ரிஷ்யசிருங்கரைத்} தனக்கு முன்னிட்டுக் கொண்டு, சங்கு, துந்துபிகளின் ஒலிகளை எதிரொலித்ததும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான அந்த நகரத்திற்குள் {அயோத்திக்குள்} விரைவாகப் பிரவேசித்தான்.(26ஆ,27அ) நகரவாசிகள் அனைவரும் ஆயிரம் கண்களைக் கொண்ட சூரேந்திரனால் {இந்திரனால்} அழைத்து வரப்படும் காசியபரின் மகனை {வாமனனைப்} போல நன்கு கௌரவிக்கப்பட்டு நரேந்திரனுடன் {தசரதனுடன்} பிரவேசிக்கும் அந்தத் துவிஜரை {ரிஷ்யசிருங்கரைக்} கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(27ஆ,28) அவர் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்ததும், சாஸ்திரங்கள்படி பூஜித்த அவன் {தசரதன்}, அவரை அழைத்து வந்த உடனேயே தன் விருப்பம் நிறைவேறியதாக நம்பினான்.(29) அந்தப்புரத்து ஸ்திரீகள் அனைவரும், இவ்வாறு பர்த்தாவுடன் வரும் விசாலாக்ஷியான {நீள் விழியாளான} சாந்தையைக் கண்ட பிரீதியால் {பாசத்தால்} ஆனந்தம் அடைந்தனர்.(30) அவள் {சாந்தை} அவர்களாலும், தசரதனாலும் விசேஷமாகப் பூஜிக்கப்பட்டுச் சிறிது காலம் அங்கே அந்த ரித்விஜருடன் {ரிஷ்யசிருங்கருடன்} சுகமாக வசித்திருந்தாள்.(31)
 

பாலகாண்டம் சர்க்கம் –11ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Wednesday, 28 July 2021

அங்கநாடு சென்ற ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 10 (33)

Rishyasringa's arrival at Anga | Bala-Kanda-Sarga-10 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அங்க நாட்டுக்கு ரிஷ்யசிருங்கரின் வருகை; ரோமபாதனின் மகள் சாந்தையை மணந்து கொண்ட ரிஷ்யசிருங்கர்...

Rishyashringa lured into AngaDesha by Dancing Girls

இவ்வாறு ராஜனால் கேட்கப்பட்ட சுமந்திரன், இவ்வாறு மொழிந்தான், "ரிஷ்யசிருங்கர், எந்த உபாயங்களைக் கொண்டு மந்திரிகளால் அழைத்துவரப்பட்டார் என்பதைச் சொல்கிறேன், நான் சொல்பவை அனைத்தையும் உமது மந்திரிகளுடன் சேர்ந்து கேட்பீராக.(1)

புரோஹிதர்களுடன் கூடிய அந்த அமைச்சர்கள், {அங்க மன்னன்} ரோமபாதனிடம் இவ்வாறு {பின்வருமாறு} சொன்னார்கள், "அபாயமில்லாத இந்த உபாயத்தை நாங்கள் சிந்தித்திருக்கிறோம்.(2) வனவாசியான ரிஷ்யசிருங்கர் தவத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடுகிறாரேயன்றி, நாரீகளையோ {பெண்களையோ}, உலக விஷயங்களையோ, சுகத்தையோ அறிவாரில்லை.(3) நரர்களின் {ஆண்களின்} சித்தத்தை அமைதியடையச் செய்பவையும், இந்திரியங்களால் விரும்பப்படுபவையுமான அவற்றைக் கொண்டு அவரை நகரத்திற்கு அழைத்துவர விரும்புகிறோம். இது குறித்து உடனே தீர்மானிக்கப்படட்டும்.(4) {உம்மால்} வெகுவாகக் கொடையளிக்கப்பட்டவர்களும், அழகிகளும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கணிகையர் அங்கே சென்று பலவித உபாயங்களால் அவரை இங்கே கொண்டு வருவார்கள்" என்றனர்.(5)

இதைக் கேட்ட ராஜன், தன் புரோஹிதரிடம் {"அவ்வாறே ஆகட்டும்" என்று} மறுமொழி கூறிய பிறகு புரோஹிதர்களும், மந்திரிகளும் அவ்வாறே {ஏற்கனவே சொன்னது போலவே} செயல்பட்டனர்.(6) அதை {மன்னனின் ஆணையைக்} கேட்ட சிறந்த கணிகையர்[1] சிலர், அந்த மஹாவனத்திற்குள் பிரவேசித்து, எப்போதும் ஆசிரமத்திலேயே வசிக்கும் அந்த தீரரைத் தரிசிப்பதற்காக, அந்த ஆசிரமத்திற்கு அருகிலேயே வசித்து அந்த ரிஷி புத்ரரைக் காண முயற்சி செய்தனர்.(7,8அ) தந்தையின் ஆசிரமத்தில் எப்போதும் நிறைவுடன் இருந்த அந்தத் தவசி, {ஆசிரமத்தைவிட்டு} வெளியே வராதவர் என்பதால், நகரத்து, ராஷ்டிரத்து ஸ்திரீகளையோ, புருஷர்களையோ[2], வேறு எதையுமோ அதற்கு முன்பு கண்டவரில்லை.(8ஆ,9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எந்த அகராதியும் கணிகையர் என்பதற்குப் பரத்தை, விலைமகள் என்ற பொருளையே கொடுக்கும். ஆனால் இந்தியப் பின்புலத்தில் கணிகையரை விலைமகளாகவோ, பரத்தையாகவோ இழிந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஒரு வகைக் கலைஞர்கள். இசை, நடனம் ஆகியவற்றில் பெரும் திறமை கொண்டவர்கள்" என்றிருக்கிறது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஃதாவது ஆண்பெண் பாகுபாட்டை அவர் அறிந்தவரில்லை. சுகமேதும் கண்டவருமில்லை. உயர்ந்த கதியை அடைவதற்காகத் தமது தந்தையால் அந்தப் பக்குவத்தில் வளர்க்கப்பட்டிருந்தார்" என்றிருக்கிறது.

விபாண்டகரின் மகனான அவர் {அந்த ரிஷ்யசிருங்கர்}, ஒருகாலத்தில் {தற்செயலாக} அந்த இடத்திற்கு வந்து, அந்த அழகிய பெண்களைக் கண்டார்.(10) சித்திரவேஷம் பூண்ட அந்த மடந்தையர் யாவரும், மதுரஸ்வரத்தில் கானம் செய்தபடியே அந்த ரிஷிபுத்ரரின் அருகில் வந்து இந்தச் சொற்களைப் பேசினர்,(11) "பிராமணரே, நீர் யார்? ஜனங்களற்ற இந்தக் கோர வனத்தில் தனியாகத் திரிந்து கொண்டிருக்கிறீரே? ஏன் இவ்வாறு திரிகிறீர்? இதை நாங்கள் அறிய விரும்புகிறோம் சொல்வீராக" {என்றனர்}.(12)

காமரூபம் {விரும்பத்தக்க வடிவம்} கொண்ட அந்த ஸ்திரீகளைப் போன்ற ரூபங்களை அந்த வனத்தில் கண்டவரில்லை என்பதால், தம் மதியில் பிறந்த நட்புடன் தமது தந்தையைக் குறித்த விபரங்களைச் சொல்லும் வகையில், அவர்,(13) "என் தந்தை விபாண்டகர், நான் அவருடைய ஔரஸசுதன் {உண்மையான மகன்}, ரிஷ்யசிருங்கன்[3] என்ற பெயரில் இப்புவி என்னை அறியும்.(14) காண்பதற்கு இனியவர்களே, எங்கள் ஆசிரமம் இங்கே சமீபத்தில் இருக்கிறது. அங்கே உங்கள் அனைவரையும் விதிப்பூர்வமாகப் பூஜிக்க விரும்புகிறேன்" என்றார்.(15)

[3] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அவர் தலையின் உச்சியில் கொம்புடன் பிறந்தவர். கொம்புடன் பிறந்த ரிஷி என்பதால் ரிஷ்யசிருங்கன் என்ற அவருடைய பெயர் பூமியில் புகழ்பெற்றிருந்தது" என்றிருக்கிறது.

ரிஷிபுத்திரரின் சொற்களைக் கேட்ட அவர்கள் அனைவரும் அந்த ஆசிரமத்தைக் காண மனத்தில் ஆசை கொண்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கே சென்றனர்.(16) அந்த ரிஷிபுத்திரர் அங்கே சென்றதும் அவர்களைப் பூஜித்து, "இதோ அர்க்கியம் {வாய் மற்றும் கை கழுவும் நீர்}, இதோ பாத்யம் {கால் கழுவும் நீர்}, இதோ கனிகளும், கிழங்குகளும்" என்றார்.(17) அவர்கள் அனைவரும் நல்ல உற்சாகத்துடன் அந்தப் பூஜையை ஏற்றுக் கொண்டாலும் ரிஷியிடம் {விபாண்டகரின் வரவை எண்ணி} பீதியடைந்து சீக்கிரமாகச் சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தவர்களாக.(18) "துவிஜரே, முக்கியமான இந்தக் கனிகளை எடுத்துக் கொள்வீராக. பத்திரமாக இருப்பீராக. விரைவில் இவற்றை உண்பீராக" என்றனர்.(19)

பிறகு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை ஆலிங்கனம் செய்து மோதகங்கள் {லட்டுகள்}, விதம் விதமான சிறந்த பக்ஷ்யங்கள் {பணியாரம் போன்ற இனிப்பு வகைகள்} ஆகியவற்றை அவருக்குக் கொடுத்தனர்.(20) வனத்திலேயே நித்தியம் வசிக்கும் அந்தத் தேஜஸ்வி {பேரொளி படைத்தவர்}, இதற்கு முன்பு அவற்றைச் சுவைத்ததில்லை என்பதால் அவற்றை உண்டதும் கனிகள் என்றே அவற்றை நினைத்தார்.(21) அப்போது அந்த ஸ்திரீகள், அவரது தந்தையிடம் கொண்ட பீதியில் செல்பவர்களாக இருந்தாலும், விரதங்களும், நிவேத்யமும் {அறக்கடமைகளைச்} செய்ய வேண்டும் என்ற பாசாங்குடன் அந்த விப்ரரிடம் விடைபெற்றுச் சென்றனர்.(22)

காசியபரின் பேரரான அந்தத் துவிஜர், அவர்கள் அனைவரும் சென்ற பிறகு இதயம் கலங்கியவராகத் துக்கத்துடன் இருந்தார்.(23) அதற்கு அடுத்த நாளில், வீரியவானும், ஸ்ரீமானுமான அந்த விபாண்டகசுதன் {ரிஷ்யசிருங்கர்}, மனத்துக்கு இனியவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்த வாரமுக்யர்களை {கணிகையரைத்} தமது மனத்தில் மீண்டும் மீண்டும் சிந்தித்து, {முன்தினம்} அவர்களை எங்கே கண்டாரோ அதே இடத்திற்குச் சென்றார்.(24,25அ) அந்த விப்ரர் அங்கே வந்ததைக் கண்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு, "சௌம்யரே {நல்லியல்பைக் கொண்டவரே}, எங்கள் ஆசிரமத்திற்கு வாரும்" என்ற இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(25ஆ,26) {மேலும் அவர்கள்}, "அங்கே மிகச்சிறந்த கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன, அங்கே உண்மையில் விசேஷமான விருந்தோம்பல் நிச்சயம் நடக்கும்" என்றனர்.(27)

இதயத்திற்கு நிறைவைத் தரும் அவர்கள் அனைவருடைய சொற்களையும் கேட்டு அவர் அங்கே செல்ல நினைத்தார்; அந்த ஸ்திரீகளும் அவரை {அங்க தேசத்திற்கு} அழைத்துச் சென்றனர்[4].(28) மஹாத்மாவான அந்த விப்ரர் அங்கே அழைத்துச் செல்லப்பட்ட உடனேயே, ஜகத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் {மழை} தேவன் மழையைப் பொழிந்தான்.(29) நராதிபன் {ரோமபாதன்}, மழையுடன் தன் தேசத்திற்கு வந்து கொண்டிருக்கும் விப்ரமுனியிடம் தன்னடக்கத்துடன் சென்று, தலையால் தரையைத் தீண்டி வணங்கி[5], விதிப்படி அர்க்கியம் கொடுத்து, {தன் வஞ்சனையைக் கருதி} அந்த விப்ரேந்திரர் {ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர்} கோபமடையாமல் இருக்க அவரிடம் வரத்தை வேண்டினான்.(30,31)

[4] மஹாபாரதம் வனபர்வம் பகுதி 111ல் ஒரேயொரு கணிகை ரிஷ்யசிருங்கரை அழைத்துச் சென்றதாக இருக்கிறது. மஹாபாரதத்தில் இந்தப் பகுதி இன்னும் விரிவாக இருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வழிபடப்படும் தேவனிடம் முழுச் சரணாகதியை அடைந்ததை வெளிப்படுத்தும் பொருட்டு உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தீண்டும் வகையில் வணங்குவது சாஷ்டாகப் பிரணாமம் {சாஷ்டாக நமஸ்காரம்} என்றழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே ரோமபாதன் ரிஷ்யசிருங்கரின் முன் தன் தலை மட்டும் தரையைத் தீண்டும் வகையில் வணங்குகிறான்.

அந்த ராஜன் {ரோமபாதன்}, {நகருக்குச் சென்று} அந்தப்புரத்திற்குள் பிரவேசித்துக் கன்னிகை சாந்தையை விதிப்படி அவருக்கு {மணமுடித்துக்} கொடுத்து, {மனக்கவலை தீர்ந்து} மன அமைதியை அடைந்து மகிழ்ந்திருந்தான்.(32) மஹாதேஜஸ்வியான ரிஷ்யசிருங்கர், இவ்வாறே தம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வழிபடப்பட்டவராகத் தன் பார்யையான {மனைவியான} சாந்தையுடன் அங்கே {அங்க தேசத்தில்} வாழ்ந்திருந்தார். {என்றான் சுமந்திரன்}.(33)
 

பாலகாண்டம் சர்க்கம் –10ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Tuesday, 27 July 2021

ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 09 (20)

Rishyasringa | Bala-Kanda-Sarga-09 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : ரிஷ்யசிருங்கரை வேள்விக்கு அழைக்க வேண்டுமென தசரதனிடம் சொன்ன சுமந்திரன்...

Dasharatha and Sumantra

இவையனைத்தையும் கேள்விப்பட்ட சூதன் {எட்டாவது அமைச்சனான தேரோட்டி சுமந்திரன்}[1], ராஜனிடம் {தசரதனிடம்} ரகசியமாக வந்து, "நான் மொத்த புராணத்தையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) ராஜா, ரித்விக்குகள் உமக்கு உபதேசித்தார்கள். பகவான் ஸனத்குமாரர்உமக்குப் புத்திரர்கள் பிறப்பதைக் குறித்துப் பூர்வத்தில் சொன்னதை நான் கேட்டேன்.(2,3அ)

[1] இந்தச் சர்க்கத்தின் 20ம் ஸ்லோகத்தில், இவனது பெயர் சுமந்திரன் என்று சொல்லப்படுகிறது. 8ம் சர்க்கத்தின் 3வது சுலோகத்தில் அமைச்சர்களின் பட்டியிலில் எட்டாவதாக வருபவனும், இங்கே சொல்லப்படும் சூதனும் ஒருவர் என்றே மொழிபெயர்ப்பாளர்கள் பலராலும் ஏற்கப்படுகிறது.

அவர் {ஸனத்குமாரர்}, "காசியபருக்கு விபாண்டகன் என்று அறியப்படும் ஒரு புத்திரன் இருக்கிறான், அவனுக்கு ரிஷ்யசிருங்கன்[2] என்ற புகழ்வாய்ந்த மகன் பிறப்பான். அந்த முனிவன் {ரிஷ்யசிருங்கன்} எப்போதும் வனத்தில் வளர்ந்து வரும் வனவாசியாக இருப்பான்.(3ஆ,4) அந்த விப்ரேந்திரன் {பிராமணர்களி தலைவன்/இந்திரன்,  ரிஷ்யசிருங்கன்}, வேறு ஒருவரையும் அறியாதவனாக எப்போதும் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்து இருவகையான பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பான்[3]" என்றார்.(5)

[2] மஹாபாரதம், வனபர்வம் அத்தியாயம் 110 முதல் 113 வரை இந்த ரிஷ்யசிருங்க முனிவரின் கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் த்வைவித்யம் என்பது விரதித்வம், பிரஜாபத்யம் என்ற இருவகைப் பிரம்மசரியத்தைக் குறிப்பிடுகிறது. ஒன்று திருமணம் செய்வதற்கு முன்பு உள்ள நிலையாகும். அடுத்தது திருமணம் செய்த பின்பு முழுநிலவு, புதுநிலவு, கிரஹண காலங்கள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மனைவி விட்டுப் பிரிந்திருக்கும் நிலையாகும். இங்கே இந்தச் சொல் தடையேற்படல் என்ற பொருளையும் கொள்கிறது. இருவகைப் பிரம்மச்சரியத்திற்கும் தடை ஏற்படும் நிலை என்று பொருள் தரும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அம்முனி இவ்வண்ணஞ்செய்து கொண்டிருக்கையில், ப்ரஹ்மசர்யத்திற்குப் பங்கம் வந்து இல்லறத்திற்கு வருவார்" என்றிருக்கிறது. அதே போலவே, ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும், "அக்னி காரியங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ரிஷிபுத்திரனுடைய பிரஹ்மசரிய விரதத்திற்குச் சிலகாலத்திற்குப் பின் கெடுதி நேரும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உலகத்தில் பிரசித்தமான பிரமசரியம் (அதாவது, முஞ்சி, மான்தோல் பலாசங்கொம்பு முதலானவைகளைத் தரித்துக் கொண்டு வேதமோதுதல்) பெண்களோடு சேராமலிருப்பதாகிய பரமசரியமாகி இவ்விரண்டும் அவரிடத்திலுண்டாயிருக்கும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட "ரிஷ்யசிருங்கர் இருவகைப் பிரம்மசரியத்தைப் பின்பற்றுவார்" என்றிருக்கிறது.

{தசரத} ராஜாவே, மேலும் அவர் {ஸனத்குமாரர்}, "அவன் {ரிஷ்யசிருங்கன்} விப்ரர்களால் புகழப்பட்டு, உலகப் புகழ் பெற்றிருப்பான், இவ்வாறான ஒழுக்கத்திலேயே காலம் கடக்கும்.(6) அவன் அக்னிக்கும், தன் தந்தைக்கும் தொண்டு செய்து செழிப்பான். அதேவேளையில், அங்க நாட்டின் பிரதாபவானான ராஜா ரோமபாதன் மஹாபலவானாக அங்கே புகழ்பெற்றிருப்பான்.(7,8அ) அந்த ராஜாவின் அறமீறலினால் அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தைத் தரும் பஞ்சம் ஏற்படும்.(8ஆ,9அ) {அவ்வாறு} பஞ்சமேற்படும்போது துக்கத்தால் பீடிக்கப்படும் ராஜா {ரோமபாதன்}, சாத்திரங்களை நன்கறிந்தவர்களான பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(9ஆ,10அ) "நீங்கள் அனைவரும் சடங்குகளை நன்கறிந்தவர்களாகவும், உலகச் சரித்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். {இதற்கான} பிராயசித்தத்திற்கு என்ன செய்ய வேண்டும்?" {என்று கேட்பான்}.(10ஆ,11அ)

ராஜன் அவர்களிடம் இவ்வாறு சொன்னதும், பிராமண அறிஞர்களும், பிராமண வேதபாரகர்களும், அந்த மன்னனிடம், "ராஜாவே, விபாண்டகரின் மகனை சர்வ உபாயங்களினால் {அனைத்து வழிமுறைகளினாலும்} இங்கே அழைத்து வருவாயாக.(11ஆ,12) மஹீபாலா {பூமியைக் காப்பவனே / ரோமபாதா}, விபாண்டகரின் மகனான ரிஷ்யசிருங்கரை அழைத்துவந்து, கவனமாக அவரைக் கௌரவித்து, விதிப்படி சாந்தையென்ற {உன்} கன்னிகையை வேதபாரகரான அந்தப் பிராமணருக்கு {மணமுடித்துக்} கொடுப்பாயாக" என்பார்கள்.(13)

அவர்களின் மொழியைக் கேட்கும் ராஜா {ரோமபாதன்}, "அந்த வீரியவானை {புலன்களை வென்றவரான ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வருவதற்கான வழிமுறைகளென்ன?" எனச் சிந்திப்பான்.(14) ஆத்மவானான அந்த ராஜா, மந்திரிகளுடன் ஆலோசித்து, புரோஹிதர்களையும், அமைச்சர்களையும் அனுப்புவதாகச் சொல்வான்.(15)

ஆனால் ராஜனின் மொழியைக் கேட்டுப் பீதியடைந்து முகம் கவிழும் அவர்கள், "அந்த ரிஷியிடம் பீதியடைகிறோம், நாங்கள் அங்கே செல்லமாட்டோம்" என்று அவனிடம் கெஞ்சுவார்கள்.(16) பிறகு மீண்டும் சிந்தித்து, ஓர் உபாயத்தைக் கண்டறியும் அவர்கள், "நாங்கள் அந்த விப்ரரை அழைத்து வருகிறோம். எந்தத் தோஷமும் நேராது" என்பார்கள்.(17)

இவ்வாறு அந்த அங்காதிபனாலும் {அங்க நாட்டு மன்னன் ரோமபாதனாலும்}, கணிகையராலும் அந்த ரிஷிமகன் அழைத்துவரப்படுவான். தேவர்கள் மழையைப் பொழிவார்கள், சாந்தையும் அவனுக்கு {ரிஷ்யசிருங்கனுக்குக்} கொடுக்கப்படுவாள்" என்றார் {ஸனத்குமாரர்}.(18)

{ரோமபாதனின்} மருமகனான[4] அந்த ரிஷ்யசிருங்கரே, உமக்குப் புத்திரர்களை அருள்வார். என்னால் சொல்லப்படும் இவையாவும் ஸனத்குமாரர் சொன்னவையாகும்" என்றான் {சூதன் / சுமந்திரன்}.(19)

[4] தாதாசாரியர் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "சாந்தை என்பவள் தசரதருக்கு மகள். அவளை ரோமபாதர் தத்துவாங்கிக் கொண்டார். அதனாலே தான் கலைக்கோட்டு முனியை {ரிஷ்யசிருங்கரை} உமக்கும் மருமகன் என்றது" என்றிருக்கிறது. முன் ஸ்லோகம் அங்காதிபனைக் குறிப்பதால். சாந்தை ரோமபாதனின் மகள் என்றே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொள்கின்றன. இனி வரப்போகும் 11ம் சர்க்கம் 3ம் ஸ்லோகத்திலும் இத்தகைய குழப்பம் நேர்கிறது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த தசரதன், மீண்டும் சுமந்திரனிடம், "ரிஷியசிருங்கர் எவ்வாறு {அந்த அங்கநாட்டுக்கு} அழைத்துவரப்பட்டார் என்பதை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(20)
 

பாலகாண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை