The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...
நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்}, பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)
