Showing posts with label ஆரண்ய காண்டம். Show all posts
Showing posts with label ஆரண்ய காண்டம். Show all posts

Tuesday, 2 May 2023

பம்பை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 75 (35)

Pampa | Aranya-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பம்பைக் கரையை அடைந்து இயற்கை எழிலை எண்ணி வியந்த ராமனும், லக்ஷ்மணனும்...

Rama and Lakshmana at the banks of Pampa lake

அந்த சபரி, தன் சொந்த தேஜஸ்ஸுடன் திவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்ற போது, இராகவன் தன் உடன் பிறந்த லக்ஷ்மணனுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(1) தர்மாத்மாவான ராகவன், மஹாத்மாக்களின் பிரபாவத்தைக் குறித்துச் சிந்தித்து, ஒரே மனத்துடன் தன் நலனை விரும்புகிறவனான லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "சௌம்யா, மிருக சார்தூலங்கள் விசுவாசத்துடன் {மான்களும், புலிகளும் நம்பிக்கையுடன்} ஒன்றாக வாழ்வதும், நானாவித பறவைகள் வசிப்பதும், ஆச்சரியமிக்கதுமான இந்த {மதங்க} ஆசிரமத்தைக் கண்டோம்.(3) இலக்ஷ்மணா, இந்த சப்த சமுத்திரங்களின் தீர்த்தங்களில் நீராடி, பித்ருக்களுக்குக் காணிக்கைச் செலுத்தி விதிப்படி தர்ப்பணம் செய்தோம்.(4) 

நமக்கு எது அசுபமோ, அதை முழுமையாக விலக்கிவிட்டோம். இலக்ஷ்மணா, நன்மை விளைவிப்பன முன்னே வருகின்றன. இப்போது என் மனம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. நரவியாகரா {மனிதர்களில் புலியே}, ஹிருதயத்தில் சுபமானது தோன்றும்.(5,6அ) எனவே, தர்மாத்மாவும், அம்சுமானின் {சூரியனின்} மகனுமான சுக்ரீவன், நித்யம் வாலியிடம் கொண்ட பயத்தால் அச்சமடைந்து, நான்கு வானரர்களுடன் எங்கே வசிக்கிறானோ, எங்கே அந்த ரிச்யமூக கிரி அருகாமையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த பிரிய தரிசனம் தரும் பம்பையிடம் செல்வோம் வா.(6ஆ-8அ) வானரரிஷபனான அந்த சுக்ரீவனைக் காண நான் விரைய வேண்டும். சீதையைத் தேடும் என் காரியம், அவனது ஆதீனத்திலேயே {அவனைச் சார்ந்தே} இருக்கிறது.(8ஆ,9அ)

இவ்வாறு சொன்ன அந்த வீரனிடம் {ராமனிடம்} சௌமித்ரி இதைச் சொன்னான், "என் மனமும் அவசரப்படுகிறது. துரிதமாக அங்கே செல்வோம்" என்றான்.(9ஆ,10அ) பிறகு, விசாம்பதியான {மக்கள் தலைவனான} அந்தப் பிரபு, அந்த ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டு அங்கிருந்து லக்ஷ்மணனுடன் சேர்ந்து பம்பைக்குச் சென்றான்.(10ஆ,11அ) அந்த ராமன், அந்த மஹத்தான வனத்தில், எங்கும் புஷ்பங்கள் அடர்ந்த பெரும் மரங்களையும், விதவிதமான விருக்ஷங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது, கோயஷ்டிகள் {நாரைகள்}, அர்ஜுனகங்கள் {மயில்கள்}, சதபத்ரங்கள் {கொக்குகள்}, கீரகைகள் {குருவிகள்} மற்றும் பலவகை பறவைகளால் ஒலிக்கப்பெறும் விதவிதமான சரஸ்களை {ஓடைகளைக்} கண்டவாறே, உத்தமமான அந்த ஹிரதத்தை {தடாகத்தை} அடைந்தான்.(11ஆ-13) அந்த ராமன், நீர்க்கொள்ளிடமான அவளை {பம்பையை} தூரத்தில் இருந்து கண்டவாறே, மதங்க சரஸ் என்ற பெயரைக் கொண்ட ஹிரதத்திற்குள் {தடாகத்திற்கு} நுழைந்தான் {நீராடினான்}[1].(14) அந்த ராகவர்கள், சாந்த மனத்துடன் அங்கிருந்து சென்றனர். தசரதாத்மஜனான அந்த ராமன், {பம்பையைக் கண்டதும்} சோகத்தால் சூழப்பட்டான்.(15)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கிருந்தே சுலோகங்களின் வரிசையில் பெருங்குழப்பம் நேர்கிறது. எந்த இரண்டு பதிப்புகளிலும் ஒரேமாதிரியான வரிசையில் இந்த சுலோகங்கள் வருவதில்லை. சில பதிப்புகளில் கிஷ்கிந்தா காண்டத்திலுள்ள சுலோகங்களும் இங்கே சேர்க்கப்படுகின்றன" என்றிருக்கிறது.

திலகம், அசோகம், புன்னாகம் {புன்னை}, பகுளம் {மகிழ்}, உத்தாலம் ஆகியவற்றுடன் ஒளிர்வதும், பங்கஜங்களுடன் கூடியதுமான அந்த ரம்மியமான நளினிக்குள் {தாமரைத் தடாகத்திற்கு} நுழைந்தான்.(16) இரம்மியமான உபவனங்களுடன் கூடியதும், பத்மங்கள் நிறைந்த நீருடன் கூடியதும், ஸ்படிகம் போன்று தெளிந்த நீரைக் கொண்டதும், எங்கும் மென்மையான மணற்படுகைகளைக் கொண்டதும்.(17) மத்ஸ்யங்கள் {மீன்கள்}, ஆமைகள் நிறைந்ததும், சம்யுக்த சகியை {தோழியைப்} போல தழுவிக் கொள்ளும் கொடிகளுடன் கூடிய மரங்களால் பிரகாசிக்கும் தீரங்களைக் கொண்டதும்,(18) கின்னர, உரக, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷசர்களால் சேவிக்கப்படுவதும், நானாவித மரங்களும், கொடிகளும் நிறைந்ததும், சுபநிதியாக குளிர்ந்த நீரைக் கொண்டதும்,(19) பத்ம கந்தம் கொண்டதும், தாமிர {சிவப்பு}, சுக்கில {வெள்ளை} வண்ண குமுத மண்டலங்களுடனும், நீலக் குவளைக் குவியல்களுடனும் கூடியதும், பலவண்ணங்களிலான யானைத் துணியைப் போல இளஞ்சிவப்பு தாமரைகளாலும், வெண் பத்மங்களாலும் நிறைந்ததும், புஷ்பித்த ஆம்ரவனத்தால் {மாந்தோப்புகளால்} சூழப்பட்டதும், மயில்களால் சுற்றிலும் ஒலிக்கப் பெறுவதுமான,(20,21) அந்தப் பம்பையைக் கண்டு, சௌமித்ரியுடன் கூடியவனும், தசரதாத்மஜனும், தேஜஸ்வியுமான அந்த ராமன், காமத்தால் பீடிக்கப்பட்டு அழுது புலம்பினான்.(22)

திலகம், மாதுளை, ஆல் போன்ற மரங்களாலும், வெண்மையான வேறு மரங்களாலும், புஷ்பித்த கோங்கு, புன்னை ஆகியவற்றாலும், புஷ்பித்த அலரி, முல்லை, குந்தம் போன்ற கொடிகளுடன் கூடிய மரங்களாலும், நீர்நொச்சிகள், அசோகங்கள் ஏழிலைப்பாலை மரங்களாலும், தாழைகளாலும், அதிமுக்த, மாதவி மரங்களாலும், மற்றுமுள்ள பல மரங்களாலும் அது {பம்பை} பிரகாசித்துக் கொண்டிருந்தது.(23-25அ) பூர்வத்தில் {கபந்தன்} சொன்னது போலத் தாது மண்டலங்களுடனும், சித்திரமாகப் புஷ்பித்த மரங்களுடனும் கூடிய ரிச்யமூக பர்வதம், அந்த தீரத்தில் இவ்வாறே பிரகாசித்துக் கொண்டிருந்தது.(25ஆ,26அ)

ரிக்ஷரஜஸ் என்ற பெயரைக் கொண்ட மஹாத்மாவான அந்தக் குரங்கின் புத்திரனும், மஹாவீரன் என்று புகழ்பெற்றவனுமான சுக்ரீவன் அதில்தான் வசித்திருந்தான்.(26ஆ,27அ) அந்த நரரிஷபன் {ராமன்}, "நீ வானரேந்திரனான சுக்ரீவனிடம் செல்" என்றான், மீண்டும் சத்யவிக்கிரமனான லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியத்தையும் சொன்னான், "இலக்ஷ்மணா, சீதை இல்லாமல் நான் ஜீவிப்பது எவ்வாறு சாத்தியம்?" {என்றான்}.(27ஆ,28) மதனனால் பீடிக்கப்பட்டவன், நனவில் வேறெதையும் கொள்ளாமல் லக்ஷ்மணனிடம் இதையே சொல்லிக் கொண்டு, சோகத்துடன் பேசிக் கொண்டும் இருந்தான். பிறகு மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் உத்தம நளினியை {தாமரை ஓடையை} அடைந்து, அந்த பம்பையின் அருகில் சென்றான்.(29) இராமன், லக்ஷ்மணனுடன் அடிமேல் அடியெடுத்துச் சென்று வனத்தை ஆர்வத்துடன் கண்டு {திரும்பிப் பார்த்து}, சுப தரிசனந்தரும் கானகத்தில் நானாவித பக்ஷிகள் கூட்டமாக நுழையும் பம்பையை தரிசித்தான்.(30)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 75ல் உள்ள சுலோகங்கள்: 30

*******ஆரண்ய காண்டம் முற்றும்*******

Previous | Sanskrit | English | Next

Monday, 1 May 2023

சபரி | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 74 (35)

Shabari | Aranya-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சபரியின் விருந்தோம்பல்; மதங்க முனிவரின் ஆசிரமம்; சொர்க்கத்திற்குச் சென்ற சபரி...

Shabari offering fruits to Rama and Lakshmana

நரவராத்மஜர்களான அவர்கள் இருவரும், வனத்தின் பிரதீசீ {மேற்குத்} திசையை நோக்கி கபந்தனால் காட்டப்பட்ட அந்த பம்பை மார்க்கத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(1) இராமலக்ஷ்மணர்களான அவர்கள் இருவரும் சைலங்களில் {மலைகளில்} தேனுக்கு ஒப்பான பழங்களுடன் பூத்து அடர்ந்திருக்கும் மரங்களைக் கண்டபடியே சுக்ரீவனைக் காணச் சென்றனர்.(2) இராகவநந்தனர்களான அந்த ராகவர்கள் இருவரும் சைல உச்சிகளில் {சாரல்களில்} தங்கிச் சென்று பம்பையின் பஷ்சிம தீரத்துக்கு {மேற்குக் கரைக்குச்} சென்றனர்.(3) பிறகு அவர்கள் இருவரும் பம்பா புஷ்கரணியின் பஷ்சிம தீரத்தை {மேற்குக்கரையை} அடைந்து அங்கே சபரியின் ரம்மியமான ஆசிரமத்தைக் கண்டனர்.(4) அவர்கள் இருவரும், பல்வேறு மரங்கள் சூழ்ந்த அந்த ரம்மியமான ஆசிரமத்தை அடைந்து சபரியை நெருங்கினர்.(5)

அப்போது அவர்களைக் கண்ட அந்த சித்தை {பெண் சித்தரான சபரி}, கைகளைக் கூப்பி எழுந்து, ராமன், மதிமிக்க லக்ஷ்மணன் ஆகியோரின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள்.(6) பாத்யம் {கால் கழுவுவதற்கான நீர்}, ஆசமனீயங்களையும் {வாய் அலம்புவதற்கான நீர்} என விதிப்படியான அனைத்தையும் அவள் கொடுத்தாள். அப்போது, தர்மத்தை உறுதியாகப் பின்பற்றுபவளான அந்த சிரமணியிடம் {பெண்துறவியான சபரியிடம், பின்வருமாறு} ராமன் சொன்னான்:(7) "தபோதனையே {தபத்தையே செல்வமாகக் கொண்டவளே}, உன் விக்னங்களை {இடையூறுகளை} முழுமையாக வென்றுவிட்டாயா?  உன் தபம் வளர்கிறதா? உன் கோபமும், ஆஹாரமும் நியதமாக {கட்டுப்பாட்டில்} இருக்கின்றனவா?(8) சாருபாஷிணியே {அழகாகப் பேசுபவளே}, உன் நியமங்கள் நிறைவேறினவா? உன் மனம் சுகமாக இருக்கிறதா? உன் குருக்களுக்கு செய்த தொண்டு பலனளித்ததா?" {என்று கேட்டான் ராமன்}.(9)

இராமன் இவ்வாறு வினவியதும், சித்தையும் {பெண் சித்தரும்}, சித்தர்களுக்குத் தொண்டாற்றிய தபசியும், விருத்தையுமான {முதிர்ந்தவளுமான} அந்த சபரி, எதிரில் வந்து ராமனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(10) "இப்போது உன் இனிய தரிசனத்தால் நான் தப சித்தி பிராப்தமடைந்தவளானேன் {தவத்தின் பயன் எனக்கு வாய்த்திருக்கிறது}. இப்போது என் ஜன்மம் பலனடைந்தது; குருக்களும் நிறைவாகப் பூஜிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(11) புருஷரிஷபா, தேவர்களில் சிறந்தவனே, உன்னை பூஜிக்கிறேன். இராமா, இப்போது என் தபத்தின் பலத்தால் ஸ்வர்க்கத்தை அடையப் போகிறேன்.(12) சௌம்யா {மென்மையானவனே}, உன் மென்மையான கண்களால் {அருட்பார்வையால்} நான் புனிதமடைந்தேன். அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, மதிப்பை அளிப்பவனான உன் அருளால் அழிவற்ற உலகங்களுக்கு நான் செல்ல விரும்புகிறேன்.(13) 

நான் யாவருக்கு பரிசாரம் {தொண்டு} செய்தேனோ, அவர்கள் {மதங்க முனிவரின் சிஷ்யர்கள்}, நீ சித்திரகூடம் சென்றபோது ஒப்பற்ற பிரகாசத்துடன் கூடிய விமானங்களில் இங்கிருந்து {பம்பையிலிருந்து / உலகத்திலிருந்து} திவத்திற்கு {சொர்க்கத்திற்கு} உயர்ந்துவிட்டனர்.(14) தர்மத்தை அறிந்தவர்களும், மஹாபாக்கியவான்களுமான அந்த மஹரிஷிகள் என்னிடம் {பின்வருமாறு} சொன்னார்கள், "இராமன், உன் புண்ணிய ஆசிரமத்திற்கு சௌமித்ரி {லக்ஷ்மணன்} சஹிதனாக வருவான். அவனை உன் அதிதியாக {விருந்தினனாக} ஏற்று முறையாக வரவேற்பாயாக. அவனைக் கண்டதும், அழிவற்ற சிறந்த உலகங்களை அடைவாய்" {என்று சொன்னார்கள்}.(15,16) புருஷரிஷபா, அந்த மஹாபாக்கியவான்கள் அவ்வாறு சொன்னதில் இருந்து, புருஷவியாகரா, புருஷரிஷபா, விதவிதமான வனப்பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, பம்பா தீரத்தில் உனக்காகக் காத்திருக்கிறேன்" {என்றாள் சபரி}.(17,18அ)

சபரி இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான அந்த ராகவன், நித்தியம் விஜ்ஞானத்தில் இருந்து ஒதுக்கப்படாதவளான அந்த சபரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(18ஆ,19அ) "மஹாத்மாவான தனுவிடம் {கபந்தனிடம்}, சாக்ஷாத் உன் பிரபாவம் குறித்த தத்துவத்தை {உள்ளபடியே உன் மகிமை குறித்த உண்மையைக்} கேட்டிருக்கிறேன். நீ இவ்வாறு நினைத்தால் பிரத்யக்ஷம் பார்க்க விரும்புகிறேன்"[1] {என்றான் ராமன்}.(19ஆ,20அ)

[1] தர்மாலயப் பதிப்பில், "ஸ்ரீராமரோ சாச்வதமாய் கீழ்மக்களில் பிறந்தவளென்று தள்ளிவைக்கப்படாதவளாகிவிட்ட அந்த சபரியைப் பார்த்துப் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார், "பிரம்மஞானம் பெற்றவளே, மகாத்மாவாகிய தனு கபந்தனிடமிருந்து உனது தவமகிமை உள்ளபடி என்னால் கேட்கப்பட்டது. நீ இஷ்டப்படுகிறாயாகில் நேரில் பார்க்க விரும்புகிறேன்" என்றிருக்கிறது. கம்பராமாயணத்தில் சபரி என்ற பெயர் சவரி என்று சொல்லப்படுகிறது. அதற்கு வேட்டுவக் குலப்பெண் என்று பொருளும் சொல்லப்படுகிறது. சபரி தான் உண்டு பார்த்து சுவையுள்ள கனிகளை ராமனுக்குக் கொடுத்தாள் என்று சொல்லப்படும் கதை மூலத்திலும் இல்லை, கம்பராமாயணத்திலும் இல்லை.

இராமனின் வாயிலிருந்து உதிர்ந்த அந்த சொற்களைக் கேட்ட சபரி, அவர்கள் இருவருக்கும் அந்த வனத்தைக் காட்டத் தொடங்கி {பின்வருமாறு சொன்னாள்}:(20ஆ,21அ) இரகுநந்தனா, மேகக் கூட்டங்களுக்கு ஒப்பான மிருக, பக்ஷி கூட்டங்களுடன் கூடியதும், நன்கறியப்பட்டதுமான இந்த மதங்க வனத்தைப் பார்ப்பாயாக. ஒளிமிக்கவனே, பாவித ஆத்மாக்களான என் குருக்கள் {பரமாத்மா ஞானம் கொண்ட மதங்கரின் சிஷ்யர்கள்} இங்கே மந்திரங்களின் சக்தியால் மந்திரங்களைச் சொல்லி பூஜித்து, தீர்த்தத்தைக் கொண்டு வந்து அக்னிக்கு காணிக்கை அளித்தனர் {யாகத்தைச் செய்தார்கள்}.(21ஆ,22) என் நற்சேவையைப் பெற்ற அவர்கள், எங்கே சிரமத்துடனும், நடுங்கும் கைகளுடனும் புஷ்ப உபகாரம் செய்தனரோ அந்த பிரத்யக்ஸ்தலீ என்ற {மேற்குப் பக்கமாக நிர்மாணிக்கப்பட்ட அந்த} வேதி இதுவே.(23) இரகோத்தமா, அவர்களுடைய தபத்தின் பிரபாவத்தால், ஒப்பற்ற பிரபையுடன் {பிரகாசத்துடன்} கூடிய வேதி இதோ மகத்தாக சர்வ திசைகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் பார்.(24) 

உபவாசம், தியானம் ஆகியவற்றின் சிரமத்தால் தளர்ந்து, நடக்கவும் சக்தியற்றவர்களான அவர்கள், சிந்தனையின் மூலம் திரண்டு சென்று சப்த சாகரத்தையும் {ஏழு கடல்களையும்} கண்டனர்.(25) இரகுநந்தனா, இங்கே அபிஷேகங்களைச் செய்த {நீராடிய} அவர்கள், இந்தப் பிரதேசத்தின் மரங்களில் வைத்துச் சென்ற மரவுரிகள் இன்னும் முழுமையாகக் காயாமல் இருக்கின்றன.(26) தேவகாரியங்களைச் செய்தபோது குவளைகளுடன் {கருநெய்தல்களுடன்} கூடிய புஷ்பங்களால் செய்யப்பட்டவை {மாலைகள்}, இதோ இங்கே வாடி வதங்காமல் இருக்கின்றன.(27) நீ இந்த வனத்தில் காணவேண்டியவற்றைக் கண்டாய், கேட்க வேண்டியவற்றைக் கேட்டாய். எனவே உன் அனுமதியுடன் இந்த உறையை {உடலைக்} கைவிட நான் விரும்புகிறேன்.(28) இந்த ஆசிரமத்தில் எந்த முனிவர்களுக்கு நான் பரிசாரிணியாக {தொண்டு செய்பவளாக} இருந்தேனோ, அந்த பாவிதாத்மர்களின் சமீபத்தை அடைய நான் விரும்புகிறேன்" {என்றாள் சபரி}[2].(29)

[2] அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள்

- கம்பராமாயணம் 3704ம் பாடல், சவரி பிறப்பு நீங்கு படலம்

பொருள்: குற்றம் இல்லாதவனாகிய ராமனும், லக்ஷ்மணனும் அன்றைக்கு அந்த மதங்காசிரமத்திலே தங்கியிருந்தபின் இருவினைப் பயனும் நீங்குவதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சபரி, அவர்களை மெய்யன்புடன் பார்த்து, வெப்பம் கொண்டதும், விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரைச் செலுத்தும் கதிரவனின் மைந்தன் {சுக்ரீவன்} இருந்த அழிவில்லா ருசியமுகம் எனும் குன்றத்தை நினைப்பதற்கரியதும், ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக்கூடியதும் ஆகிய வழி முழுவதையும் எண்ணிப் பார்த்துச் சொன்னாள்.

இலக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், அந்த தர்மிஷ்டையின் சொற்களைக் கேட்டு, ஒப்பற்ற பிரகாசத்தை அடைந்து, "இஃது ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொன்னான்.(30) அப்போது ராமன், விரதத்தில் உறுதியுடன் இருந்த அந்த சபரீயிடம் {பின்வருமாறு} சொன்னான், "பத்ரே, நான் உன்னால் அர்ச்சிக்கப்பட்டேன் {பூஜிக்கப்பட்டேன்}. நீ விரும்பியபடியே சுகமாகச் செல்வாயாக" {என்றான் ராமன்}.(31)

இவ்வாறு சொன்னதும், ஜடை தரித்திருந்தவளும், மரவுரி உடுத்தியிருந்தவளும், கருப்பு மான்தோலை உடையாகக் கொண்டிருந்தவளுமான அவள், ராமனின் அனுமதியுடன் ஹுதாசனத்தை {நெருப்பை} மூட்டி ஜுவலிக்கும் பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பானவளாகி ஸ்வர்க்கத்தை அடைந்தாள்.(32,33அ) திவ்ய ஆபரணங்களுடன் கூடியவளாகவும், திவ்ய மாலைகளை அணிந்தவளாகவும், திவ்ய ஆடைகளைத் தரித்தவளாகவும், ஒளிவீசும் மின்னற்கொடியைப் போல அந்த தேசத்தையே {இடத்தையே} ஒளிரச் செய்து அங்கே பிரிய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.(33ஆ,34) ஆத்ம சமாதி அடைந்தவளான அந்த சபரி, நற்செயல்களைச் செய்த ஆத்மாக்களான அந்த மஹரிஷிகள் எங்கே சென்றனரோ அந்த புண்ணிய ஸ்தானத்தையே அடைந்தாள்.(35)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 74ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Sunday, 30 April 2023

பம்பையும், ரிச்யமூகமும் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 73 (46)

Pampa and Rishyamuka | Aranya-Kanda-Sarga-73 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரிச்யமூக மலைக்குச் செல்லும் திசையைச் சொன்ன கபந்தன்; பம்பையின் இயற்கை வர்ணனை...

Kabandha in gandharva form speaking to Rama and Lakshmana

அர்த்தம் அறிந்தவனான கபந்தன், சீதையை மீட்கும் வழியைக் காட்டிவிட்டு, மீண்டும் சரியான அர்த்தங்களைக் கொண்ட {பின்வரும்} வாக்கியங்களை ராமனிடம் சொன்னன்:(1) இராமா, பிரதீசீம் திசையை ஆசரித்து {மேற்குத் திசையைத் தொடர்ந்து}[1] பிரகாசமாகவும், மனோஹரமாகவும், எங்கே புஷ்பித்த மரங்கள் இருக்குமோ, அதுவே  சிவ பந்தமாகும் {மங்கலப் பாதையாகும்}.(2) ஜம்பூ {நாவல்}, பிரியாளம் {வேங்கை}, பனசம் {பலா}, பிலக்ஷம் {இரளி}, நியக்ரோதம் {ஆல்}, திந்துகம் {தும்பை}, அஷ்வத்தம் {அரசு}, கர்ணீகாரம் {கோங்கு / சரக்கொன்றை}, சூதம் {ஒட்டுமா}, பாதபம் {வேல்},(3) தன்வம் {மருதம்}, நாக விருக்ஷம், திலகம், நக்தமாலகம் {புங்கு}, நீல அசோகம், கடம்பு, புஷ்பித்த கரவீரம் {அரளி},(4) அக்னிமுகம் {அதிமுத்தம்}, அசோகம், ஸுரக்தம், பரிபத்திரம் ஆகியவை {ஆகிய மரங்கள்} இருக்கும்.(5அ) அவற்றில் ஏறியோ, பலத்தால் அவற்றை பூமிவரை வளைத்தோ, அமிருதத்துக்கு ஒப்பான பழங்களை பக்ஷித்து முன்னேறிச் செல்வீராக.(5ஆ,6அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "மேற்கு நோக்கிச் செல்" என்றும், பிறகு மரங்களின் பெயர்கள் அனைத்தையும் சொன்னதன் பிறகு, "அதுவே உனக்கு நம்பிக்கை தரும் பாதையாகும்" என்றும் இருக்கிறது. வி.வி.சுப்பையா-பி.கீர்வானி பதிப்பில், "மேற்குநோக்கிச் செல்லும் இனிய பாதை உனக்கு மங்கலமானது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "எங்கே மேற்கிற்கு அழகூட்டும்..... மரங்கள் இருக்கின்றனவோ அதுவே ரிக்ஷ்யமுக மலைக்கு வழிவகுக்கும் பாதையாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "இந்த மங்கலப் பாதையில் மேற்குத் திசையை நாடிச் செல்வாயாக" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "வேறு மரங்கள் எந்த மேற்கு திக்கை அடைந்து விளங்குகின்றவோ இதுதான் சிரமமின்றி போகும் வழி" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இங்கே மேல்திசையில்...... பற்பல மரங்களடர்ந்து மலர்ந்திருக்கின்றனவே, அவ்வழியாகச் சென்று" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "கண்ணைக் கவரும் வண்ணம், பூத்துக் குலுங்கும் மரங்கள் காணப்படும் இந்த மேற்கு வழிப்பாதை உங்களுக்குச் சௌகரியமானது" என்றிருக்கிறது.

காகுத்ஸ்தா, புஷ்பித்த மரங்களைக் கொண்ட அந்த வனத்தைக் கடந்து, உத்தர குருவில் இருக்கும் நந்தனத்தைப் போன்ற மற்றொன்றை {மற்றொரு வனத்தை} அடைவீராக.(6ஆ,7அ) எங்கே சர்வ காலமும் பழங்களைத் தரும் மரங்கள் மதுரத்தைப் பொழியுமோ, அந்த வனம் சர்வ ருதுக்களுடன் {பருவ காலங்கள் அனைத்துடன்} கூடிய {குபேரனின்} சைத்ரரதத்தைப் போன்றதாகும்.(7ஆ,8அ) அங்கே பழங்களின் பாரத்தால் வளைந்தவையும், மேகங்களுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்பவையும், பெருங்கிளைகளைத் தரித்தவையுமான மரங்கள் எங்கேயும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(8ஆ,9அ) இலக்ஷ்மணா, அவற்றில் நீ ஏறினாலோ, சுகமாக பூமியை நோக்கி வளைத்தாலோ, அம்ருதத்திற்கு நிகரான பழங்களை உனக்குக் கொடுக்கும்.(9ஆ,10அ)

வீரர்களே, சிறந்த தேசங்களையும் {இடங்களையும்}, சைலத்திலிருந்து {மற்றொரு} சைலத்தையும், வனத்தில் இருந்து {மற்றொரு} வனத்தையும் கடந்து சென்ற பிறகு பம்பை என்ற பெயரைக் கொண்ட புஷ்கரணியை {குளத்தை} நீங்கள் அடைவீர்கள்.(10ஆ,11அ) இராமா, கற்களற்றதும், வழுக்காததும், சமதீர்த்தங்களைக் கொண்டதும், பாசியற்றதும், மென்மையான மணற்படுகைகளைக் கொண்டதுமான அதில் தாமரைகளும், அல்லிகளும் நிறைந்திருக்கின்றன.(11ஆ,12அ) 

அங்கே பம்பையின் நீரில் வசிக்கும் ஹம்சங்களும் {அன்னப்பறவைகளும்}, பிலவங்களும் {வாத்துகளும்}, கிரௌஞ்சங்களும், குரரங்களும் {மீன்கொத்திப் பறவைகளும்} அழகிய ஸ்வரத்தில் கூவிக்கொண்டிருக்கும்.(12ஆ,13அ) வதங் குறித்து அறியாத சுபமானவையும், நரர்களைக் கண்டு பதறாதவையும், நெய்ப்பிண்டத்திற்கு ஒப்பாகக் கொழுத்தவையுமான அந்த துவிஜங்களை {பறவைகளை} நீங்கள் பக்ஷிக்கலாம்.(13ஆ,14அ) இராகவராமா, அங்கே பம்பையில், முட்கள் அதிகம் இல்லாதவையான ரோகிதம் {கெண்டை}, வக்ரதுண்டம் {வளைந்து மழுங்கிய மூக்கைக் கொண்ட மீன்}, நளம் {அயிரை} போன்ற சிறந்த மீனங்களைக் கணையால் கொன்று, செதில்களையும், துடுப்புகளையும் நீக்கி, இரும்பிலிட்டு சுட்டு, லக்ஷ்மணன் பக்தியுடன் உனக்குக் கொடுப்பான்.(14ஆ-16) புஷ்பங்கள் நிறைந்த இடத்தில் அந்த மீன்களை நீ நிறைவாக உண்ணும் வேளையில், பத்ம கந்தம் {தாமரைமணம்} கொண்டதும், தூய்மையானதும், சுகமாகக் குளிர்ந்திருப்பதும், அநாமயமானதும் {ஆரோக்கியமானதும்}, வெள்ளிக்கும், பளிங்குக்கும் ஒப்பாக எப்போதும் தெளிவாக இருப்பதுமான நீரை, லக்ஷ்மணன் புஷ்கரபர்ணத்தில் {தாமரை இலையில்} கொண்டு வந்து உனக்குக் கொடுப்பான்.(17,18அ)

நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, ராமா, ஸ்தூலமானவையும், கிரிகளின் குகைகளில் சயனிப்பவையும், வனத்தில் திரிபவையும், காளைகளைப் போல கத்துபவையும், நீரைப் பருகும் ஆசையில் அங்கே {தடாகத்திற்கு} வருபவையும், அழகிய ரூபத்தைக் கொண்டவையுமான வராகங்கள் {பன்றிகள்} சாயங்காலத்தில் பம்பையில் திரிவதை லக்ஷ்மணன் உனக்குக் காட்ட, நீ பார்ப்பாய்.(18ஆ-20அ) இராமா, சாயங்காலத்தில் திரியும்போது, மாலைகள் தரித்த {பூக்கள் மலர்ந்த} மரங்களையும், பம்பையின் நல்ல நீரையும் கண்டு நீ சோகத்தைக் கைவிடுவாய்.(20ஆ,21அ) இராகவா, அங்கே மனத்தைக் கவரும் வகையில் பரவியிருக்கும் திலகங்களும் {மஞ்சாடி மரங்களும்}, நக்தமாகங்களும் {பவளமல்லி மரங்களும்}, மலர்ந்த உத்பலங்களும் {ஆம்பல்களும்}, பங்கஜங்களும் {தாமரைகளும்} இருக்கின்றன.(21ஆ,22அ) இராகவா, அங்கே அவற்றை மாலையை அணிந்து கொள்ள நரர்கள் யாருமில்லை என்றாலும், அவை வாடி வதங்குவதுமில்லை; உதிர்வதுமில்லை.(22ஆ,23அ)

அங்கே, அமைதிநிலையில் நிலைத்திருந்த மதங்கரின் சிஷ்யர்களான ரிஷிகள், தங்கள் குருவுக்காக வனப்பொருட்களை {மதங்க முனிவரின் சடங்குகளுக்கான விறகுகள், மலர்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றைக்} கொண்டு வரும்போது, பாரத்தால் அதிகம் களைத்த அவர்களின் சரீரத்தில் இருந்து, ஸ்வேத பிந்துக்கள் துரிதமாக மஹீயில் {வியர்வைத் துளிகள் வேகமாக பூமியில்} விழுந்தன. பிறகு அவை அனைத்தும் முனிவர்களின் தபத்தால் மாலைகளாக மாறின[2]. இராகவா, ஸ்வேத பிந்துகளில் {வியர்வைத் துளிகளில்} இருந்து உண்டானதால், அவை {அந்த மலர்கள்} அழிவடைவதில்லை.(23ஆ-25) காகுத்ஸ்தா, அவர்கள் சென்றதும் பரிசாரிணியும், {பணிப்பெண்ணும்}, சிரஞ்ஜீவினியும் {நீண்ட ஆயுள் கொண்டவளும்}, சபரி என்ற பெயரைக் கொண்டவளுமான சிரமணி {துறவி} இன்றும் அங்கே காணப்படுகிறாள்.(26) இராமா, நித்தியம் தர்மத்தில் நிலைத்திருப்பவளான அவள் {சபரி}, சர்வபூதங்களாலும் நமஸ்கரிக்கப்படுபவனும், தேவனைப் போன்றவனுமான உன்னைக் கண்டதும் ஸ்வர்க்கலோகம் செல்லப்போகிறாள்[3].(27) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேற்கூறிய வகையில் 'வியர்வைத்துளிகள் மரங்களின் மீது விழுந்தன' என்பது கோவிந்தராஜர் உரை. 'தரையில் விழுந்த அந்த வியர்வைத் துளிகளில் மரங்கள் வளர்ந்து, உதிராத மலர்களை மலரச் செய்தன' என்றும் மற்றொரு வகையில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

[3] ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணி
தீயவர்ச் சேர்க்கிலாது செவ்வியோர்ச் சேர்த்து செய்தல்
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி

- கம்பராமாயணம், 3696ம் பாடல், கபந்தன் படலம்

பொருள்: ஆகவேண்டிய நல்ல செய்கை என்பது, அறநெறியை எண்ணி தீயவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல், செம்மையானவர்களைத் துணைவராகக் கொண்டு செயல்படுவதாகும். உயிரினங்களுக்குத் தாயைவிட அதிக உதவி செய்யும் சபரியைச் சந்தித்து, அவள் சொல்லும் வழியில் சென்று ரிச்யமூக மலையில் ஏறி...

காகுத்ஸ்த ராமா, அதன் பிறகு, பம்பையின் பஷ்சிம தீரத்தை {மேற்குக் கரையை} அடைந்தால், அங்கே ஒப்பற்ற ரகசிய ஆசிரமஸ்தானத்தைப் பார்க்கலாம்.(28) அங்கே நாகங்களாலும் {யானைகளாலும்} அந்த ஆசிரமத்தைத் தாக்க இயலாது. அந்தக் கானகம் {மதங்கவனம்} அவ்வாறே மதங்கரிஷியால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.(29) இரகுநந்தனா, நந்தனத்திற்கு ஒப்பாக நானாவித பறவைகள் நிறைந்ததும், தேவாரண்யத்திற்கு ஒப்பானதுமான அந்த மதங்க வனம் இப்படியே இவ்வாறே புகழ்பெற்றிருக்கிறது. இராமா, அந்த வனத்தில் மனக்கவலையின்றி இன்புற்றிருப்பாயாக.(30,31அ)

பம்பைக்கு எதிரே புஷ்பித்த மரங்களுடன் கூடியதும், எளிதில் ஏற முடியாததும், சிசுநாகங்களால் ரக்ஷிக்கப்பட்டதும் {யானைக்குட்டிகளால் சுற்றிலும் பாதுகாக்கப்பட்டதும்}, வளம் நிறைந்ததும், பூர்வ காலத்தில் பிரம்மனால் நிர்மாணிக்கப்பட்டதுமான ரிச்யமூகம் அங்கே இருக்கிறது[4].(31ஆ,32) இராமா, அந்த சைல மூர்த்தத்தில் சயனிக்கும் புருஷன் ஸ்வப்னத்தில் {அந்த மலையின் உச்சியில் படுத்துறங்கும் மனிதன் கனவில்} எந்த செல்வத்தை ஈட்டுவானோ விழித்ததும் நிச்சயம் அதை அடைவான்.(33) விஷம ஆசாரத்துடன் பாப கர்மத்தைச் செய்யும் எவனும் அதில் ஏறினால், தூங்கிக் கொண்டிருக்கும் அவனை ராக்ஷசர்கள் அங்கேயே தாக்குவார்கள் {கொன்றுவிடுவார்கள்}.(34)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்ரீவனுக்கு மட்டுமே ஆன புகலிடமாக பிரம்மன் அந்த மலையைப் படைத்தான். அங்கே இருக்கும் மலர்கள் எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். நாடு கடந்திருக்கும் சுக்ரீவனும், நான்கு வானரங்களும் உண்பதற்காகவே கனிகள் அங்கே விளைந்தன" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

இராமா, விளையாடும் மதங்க ஆசிரமவாசிகளான சிசுநாகங்களின் {யானைக்குட்டிகளின்} பெரும் பிளிறல் அங்கேயும் {ரிச்யமூக மலையிலும்}, பம்பையிலும் கேட்கப்படும்.(35) மேகவர்ணம் கொண்டவையும், கொழுத்தவையுமான பரம துவீபங்கள் {சிறந்த யானைகள்} ஒன்றோடு ஒன்று மோதி உதிரத்தாரையால் நனைந்து, தனித்தனியே பிரிந்து செல்லும்.(36) அங்கே {பம்பையில்} வனத்தில் திரிபவையான அவை, களங்கமற்றதும், அழகுடன் விளங்குவதும், மிக சுகமான ஸ்பரிசம் கொண்டதும், சர்வ கந்தங்களும் {அனைத்து நறுமணங்களும்} நிறைந்ததுமான தண்ணீரைப் பருகி தாகம் தணிந்து வனத்திற்குள் மீண்டும் செல்லும்.(37,38அ) கரடிகளையும், புலிகளையும், நீலக் கோமள ஒளியுடன் கூடியவையும், தோல்வியை அறியாதவையுமான ருருக்களையும் {மான்களையும்} கண்டு சோகத்திலிருந்து விலகுவாய்.(38ஆ,39அ)

காகுத்ஸ்த ராமா, அந்த சைலத்தில், பாறைகளால் மறைக்கப்பட்ட {சிலாபிதானம் என்ற பெயரைக் கொண்ட} மஹத்தான குகை விளங்குகிறது. அதில் பிரவேசிப்பதும் துக்கமாகும் {அந்தக் குகையில் நுழைவது கஷ்டம்}.(39ஆ,40அ) அந்தக் குகையின் கிழக்கு துவாரத்தில் {வாயிலில்}, குளிர்ந்த நீரையும், ஏராளமான கிழங்குகளையும், பழங்களையும் கொண்டதும், ரம்மியமானதும், நானாவித மரங்களால் நிறைந்ததுமான மஹா ஹ்ரதம் {மடு} ஒன்று இருக்கிறது.(40ஆ,41அ) சுக்ரீவன், நான்கு வானரர்களுடன் சேர்ந்து அங்கேதான் {அந்தக் குகையில்தான்} வசிக்கிறான். சிலநேரங்களில் அவன் {சுக்ரீவன்} அந்த பர்வதத்தின் சிகரத்தில்கூட இருப்பான்" {என்றான் கபந்தன்}.(41ஆ,42அ)

வீரியவானும், மாலை அணிந்தவனுமான கபந்தன், ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, வானத்தில் பாஸ்கர வர்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(42ஆ,43அ) இராமலக்ஷ்மணர்களான அவர்கள் இருவரும், வானத்தில் நின்று கொண்டிருந்தவனும், மஹாபாக்யவானுமான கபந்தனின் அருகில் சென்று, "நீ செல்லலாம்" என்ற வாக்கியத்தைச் சொன்னார்கள்.(43ஆ,44அ) அப்போது புறப்படத் தயாராக இருந்த கபந்தனும், மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, "காரியம் சித்திக்கட்டும். புறப்படுவீராக" என்று சொன்னான்.(44ஆ,45) அந்தக் கபந்தன், அந்த ரூபத்தை மீண்டும் அடைந்து, அழகால் ஒளிர்பவனாக சூரியனுக்கு ஒப்பான ஒளியுடைய தேகத்துடன் வானத்தில் நின்று, ராமனைப் பார்த்து, {ரிச்யமூகம் இருக்கும் திக்கை}[5] சுட்டிக் காட்டி, "நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக" என்று மீண்டும் சொன்னான்.(46)

[5] ஜடாயுவைக் கண்ட இடத்தில் கோதாவரியின் கரையில் இருந்து சற்றே மேற்குத் திசையில் சென்று {3:69:1}, உடனே தெற்கு திசைக்குத் திரும்பி {3:69:2} தண்டகாரண்யத்தைக் கடந்தனர். பிறகும் மூன்று குரோச தூரம் {11 கி.மீ.} கடந்து {3:69:5} கிரௌஞ்சாரண்யத்தில் இருந்து கிழக்கு நோக்கி 3 குரோச தூரம் {11 கி.மீ.} சென்று {3:69:8-10} அயோமுகி எனும் ராக்ஷசியைக் கண்டனர். அவளை அங்கபங்கம் செய்துவிட்டு மீண்டும் வனத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து எவ்வளவு தூரம் சென்று கபந்தனை அடைந்தனர் என்பது சொல்லப்படவில்லை. இந்த சர்க்கத்தில் கபந்தனும் ரிக்ஷ்யமுக மலைக்கு மேற்கு வழியில் செல்லச் சொல்கிறானே ஒழிய தொலைவைச் சொல்கிறானில்லை. கம்பராமாயணத்தில் பஞ்சவடியில் இருந்து கபந்த வனம் ஐஐந்துக்கும் இரட்டிப்பான யோசனை என்று இருக்கிறது. அது 20 யோசனை எனக் கொண்டால் 293 கி.மீ. யிலிருந்து, 50 யோசனை என்று கொண்டால் 731 கி.மீ.வரை வருகிறது. 

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 73ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Saturday, 29 April 2023

கதிரவன் சிறுவன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 72 (27)

Son of Surya | Aranya-Kanda-Sarga-72 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கபந்தன் தகனம் செய்யப்பட்டது; அவன் மீண்டும் வானில் தோன்றியது; சுக்ரீவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுபடி ராமனைக் கேட்டுக் கொண்ட கபந்தன்...

Kabandha regained the Gandharva form

கபந்தன் இவ்வாறு சொன்னதும், நரேஷ்வரர்களான அந்த வீரர்கள் இருவரும், கிரியின் பிளவை அடைந்து, {கபந்தனை அதற்குள் வீசி எறிந்து} பாவகனுக்கு {அக்னிக்குக்} கொடுத்தனர் {கொடுக்க சிதையடுக்கி ஆயத்தம் செய்தனர்}.(1) இலக்ஷ்மணன், மஹா உல்கங்களை {எரிநட்சத்திரங்களைப்} போன்ற {பெரிய} கொள்ளிக் கட்டைகளால் சிதையெங்கும் தீ மூட்டினான். அஃது அனைத்துப் பக்கங்களிலும் {புகையின்றி} எரியத் தொடங்கியது[1].(2) அந்த சரீரம் மஹத்தான நெய்ப்பிண்டத்திற்கு ஒப்பானதாக இருந்தாலும், எரிந்து கொண்டிருந்த கபந்தனின் மேதஸ்ஸை பாவகன் மந்தமாகவே தஹித்தான் {கபந்தனின் கொழுப்பை நெருப்பு மெதுவாகவே எரித்தது}.(3)

[1] தர்மாலயப் பதிப்பில், இங்கே இன்னும் 3 சுலோகங்கள் இருக்கின்றன. "சாமர்த்தியசாலியாகிய தனுஷ்பாணியான லக்ஷ்மணர் அந்த நாற்புறம் பற்றி எரியும் சிதையைப் பார்த்து, ஆச்சரியங்கொண்டவராய் ஸ்ரீராமருக்கு பின்வரும் சொல்லை சொன்னார், "சீதப்பிராட்டியாரை தேடுகின்ற தேவரீரால், முதலில் ஜடாயு தகனஞ்செய்யப்பட்டார். இரண்டாவதாய் இவன் இப்பொழுது தகனஞ்செய்யப்பட்டான். எதை மூன்றவதாய் அருளிச் செய்யப் போகிறீரோ?" பெருங்கொள்ளிக் கட்டைகளால் மூண்ட அந்த அக்னியானது, பெரும் மேகத்தையும், மலைச் சிகரத்தையும் நிகர்த்த கபந்தனையும் ஆகாயத்தையும் மறைத்தது" என்றிருக்கிறது. இந்தச் செய்தியும், வசனங்களும் வேறெந்த பதிப்பிலும் இல்லை.

அந்த மஹாபலன் {கபந்தன்}, களங்கமற்ற வஸ்திரங்களையும், திவ்ய மாலைகளையும் தரித்துக் கொண்டு, சிதையில் அசைந்து, வேகமாக தூமமற்ற அக்னியை {புகையற்ற அக்னியைப்} போல எழுந்தான்.(4) அப்போது பிரகாசித்துக் கொண்டிருந்தவன் {கபந்தன்}, களங்கமற்ற உடைகளை உடுத்தியவனாக, பெரும் மகிழ்ச்சியுடன், ஒவ்வொரு அங்கத்திலும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாக விரைந்து சிதையில் இருந்து வேகமாக {மேலே} உயர்ந்தான்.(5) 

அந்தக் கபந்தன், அந்தரிக்ஷத்தை {ஆகாயத்தை} அடைந்து, ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்} பூட்டப்பட்டதும், புகழைத் தருவதும், பிரகாசிப்பதுமான விமானத்தில் அமர்ந்து, மஹாதேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து, பத்து திசைகளில் ஒளிவீசியபடியே ராமனிடம், {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(6,7அ) "இராகவா, சீதையை எப்படி அடைவாய் என்ற தத்துவத்தை {உண்மையைக்} கேட்பாயாக. இராமா, உலகில் சர்வமும் சோதிக்கப்படும் ஆறு யுக்தங்கள் {தர்க்கங்கள்} இருக்கின்றன[2]. அதனால் தீண்டப்பட்ட தசையின் அந்தத்திலுள்ளவன் {சோதனையான காலக்கட்டத்தின் முடிவில் இருப்பவன்}, அந்த தசையால் பீடிக்கப்பட்ட மற்றொருவனால் சேவிக்கப்படுவான்[3].(7ஆ,8) இராமா, லக்ஷ்மணனுடன் சேர்ந்து நீ தசையின் சோதனையை அடைந்ததாலேயே,  {ராஜ்ஜியம், அரச சுகம் போன்ற} இழப்புகளைச் சந்தித்து, உன் தாரம் அவமதிக்கப்பட்டு {கடத்தப்பட்டு}, விசனத்தை {துன்பத்தை} அனுபவிக்கிறாய்.(9) நல்லிதயம் கொண்டோரில் {நண்பர்களில்} சிறந்தவனே, அத்தகையவனான நீ அவசியம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில், நீ சித்தியடைவதை {காரியம் சாதிப்பதை} நான் சிந்தித்தாலும் உண்மையில் என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை.(10)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அரசாட்சியில் உள்ள அரசர்களால் பயன்படுத்தப்படும் ஆறு தகுமுறைகள் {கொள்கைகள்} பின்வருவன: 1) சந்தி - பகை மன்னர்களிடம் உடன்படுதல், 2) விக்ரஹம் - பகையைத் தொடர்தல், 3) யானம் - போர்த் தொடுத்தல், 4) ஆசனம் - உரிய காலத்திற்காக காத்திருத்தல், 5) துவைதீ பாவம் - பகை அணியினருள் குழப்பங்களையும், பிளவுகளையும் உண்டாக்குதல், 6) சமாஷ்ரயம் - தனக்குச் சமமானவனிடம் சரணடைதல்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "கூட்டணி, பகை, போர், காத்திருப்பு, பகைவரிடம் பிளவு உண்டாக்கல், சமமானவனிடம் உதவி நாடுதல்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "1) பிரத்யக்ஷம் - நாமே நேரில் காணல், 2) அனுமானம் - தெரிந்த விஷங்களைக் கொண்டு இதர தீர்மானங்களையடைதல் {யூகிப்பது}, 3) உபமானம் - ஸ்திருசமானவைகளால் {உவமைகளால்} அறிதல், 4) சப்தம் - வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல், 5) அனுபலப்தி - காணாமையால் இல்லையென அறிதல், 6) அர்த்தாபத்தி - பார்த்தவைகள் கேட்டவைகள் இவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்" என்றும், அதன் பின், "சில வியாக்கியானங்களில்" இப்படி கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மேற்கண்ட பதிப்புகளின் அடிக்குறிப்புகளில் காணப்படுபவையும் சொல்லப்படுகின்றன.

[3] "சோதனையின் முடிவை அடைந்தவனுக்கு, சோதனையால் வஞ்சிக்கப்பட்டவன் தொண்டு செய்வான்" என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒருவன் சோதனையால் தீண்டப்பட்டால் அவன் அத்தகைய சோதனைக்கு ஆட்பட்ட ஒருவனை வணங்க வேண்டும்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "அதிஷ்டம் இல்லாதவர்களால் மட்டுமே ஒரு துரதிருஷ்டசாலிக்கு உதவ முடியும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையால் தீண்டப்பட்ட ஒருவன் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மற்றொருவருடன் நட்பு கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "மிக மோசமான துரதிர்ஷ்டத்தில் வீழ்ந்தவர், தன்னைப் போன்ற யாரிடமாவது ஆறுதல் பெறலாம்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எவனொருவன் விஷயத்தில் கஷ்டத்தை அனுபவித்து கஷ்டத்தின் அந்திபாகத்தை அடைந்த ஒருவனால் நட்பு பெற்றவன் பேருதவி புரியப்படுவான்" என்றிருக்கிறது.

இராமா, நான் சொல்வதைக் கேட்பாயாக. சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்ட வானரனானவன், இந்திரனின் மகனும், சினங்கொண்டவனும், உடன்பிறந்தவனுமான வாலியால்  விரட்டப்பட்டவன் ஆவான்.(11) ஆத்மவானான அந்த வீரன் {தன்மானம் கொண்ட வீரனான அந்த சுக்ரீவன்}, பம்பை வரை பரந்து விளங்கும், ரிச்யமூகமெனும் சிறந்த கிரியில் நான்கு வானரர்களுடன் இருக்கிறான்.(12) அவன், வானரேந்திரர்களில் {வானரத் தலைவர்களில்} மஹாவீரியன்; தேஜோவான் {ஆற்றல்மிக்கவன்}; அளவில்லா பிரகாசம் கொண்டவன்; சத்தியசந்தன்; வினீதன் {புலனடக்கமுள்ளவன்}; மதிமான்; மஹான்.(13) இராமா, திறனும், துணிவும் மிக்கவனும், வீரனும், மஹாபலவானும், பராக்கிரமமிக்கவனுமான அவன் {சுக்ரீவன்}, உடன்பிறந்தோனால் {வாலியால்} ராஜ்ஜியத்தின் பொருட்டு விரட்டப்பட்டான்.(14) இராமா, அவன் {சுக்ரீவன்} உன் மித்ரனாகவும் {நண்பனாகவும்}, சீதையைத் தேடுவதில் சஹாயனாகவும், ஹிதம் செய்பவனாகவும் {உதவிசெய்பவனாகவும், உனக்கு நன்மை செய்பவனாகவும்} இருப்பான். சோகத்தில் மனத்தைச் செலுத்தாதே.(15)

இக்ஷ்வாகு சார்தூலா {இக்ஷ்வாகுக்களில் புலியே}, எது இங்கே நடக்க வேண்டுமோ, அது வேறாக நடக்க சாத்தியமில்லை. காலத்தை மீறுவது இயலாது.(16) வீரா, இங்கே இருந்து சீக்கிரமாக, மஹாபலம் பொருந்திய அந்த சுக்ரீவனிடம் செல்வாயாக. இராகவா, இப்போதே இங்கிருந்து சீக்கிரமாகச் சென்று, துரோஹமில்லாத தோழமையுடன், ஒளிரும் நெருப்பைப் போன்ற அவனை வயஸ்யனாக {சமகாலத்தவனாக / சமவயதுடையவனாக / நண்பனாக} ஏற்றுக் கொள்வாயாக[4].(17,18அ) கிருதஜ்ஞனும் {நன்றிமறவாதவனும்}, காமரூபியும் {விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவனும்}, சஹாயத்தை நாடியிருப்பவனும், வீரியவானும், வானராதிபனுமான அந்த சுக்ரீவனை நீ அவமதிக்கக்கூடாது. (18ஆ,19அ) நீங்கள் இருவரும் அவன் நினைத்திருக்கும் காரியத்தை இப்போதே செய்யவல்லவர்கள். காரியம் நிறைவேறினாலும், காரியம் நிறைவேறாவிட்டாலும் அவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான்.(19ஆ,20அ)

[4] மன்மதநாததத்தர் பதிப்பில், "விரைவாகப் புறப்பட்டு வலிமையும் ஆற்றலுங் கொண்ட சுக்ரீவனிடம் இன்றே சென்று, "ஒருவருக்கு ஒருவர் துரோஹம் செய்வதில்லை" என்று தழல்விடும் நெருப்பின் முன் உறுதி ஏற்றுக் கொண்டு, நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அக்னியை சாட்சியாகக் கொண்டு ஒவ்வொரு புனிதச் சடங்கையும் செய்வது கிழக்கத்திய பழக்கமாகும். இந்துக்கள் தங்கள் ஒவ்வொரு விழாவிலும், நிகழ்விலும், சடங்கிலும் அக்னியைப் பெரும் மதிப்புடன் வணங்குவார்கள்" என்றிருக்கிறது.

இரிக்ஷரஜஸின் புத்திரனும், பாஸ்கரனின் ஔரச {சூரியனின் நேரடி} புத்திரனுமான[5] அவன் {சுக்ரீவன்}, வாலியால் பகைக்கப்பட்டு, {அந்த ஆபத்துக்கஞ்சி} சந்தேகத்துடன் பம்பையில் சுற்றித் திரிந்து வருகிறான்.(20ஆ,21அ) இராகவா, ஆயுதத்தை அருகில் வைத்து விட்டு[6], வனசாரியாக {வனத்தில் திரிபவனாக} ரிச்யமூகத்தை ஆலயமாகக் கொண்ட கபியிடம் {குரங்கிடம்} சென்று, சீக்கிரம் சத்திய வயஸ்யனாக {சமகாலத்தவனாக / சமவயதுடையவனாக / உண்மையான நட்பை} ஏற்படுத்திக் கொள்வாயாக.(21ஆ,22அ) கபிகுஞ்சரனான அவன் {குரங்குகளில் யானை போன்ற சுக்ரீவன்}, உலகில் உள்ள நரமாமிச உண்ணிகள் அனைவரின் ஸ்தானங்களையும் {இருப்பிடங்களையும்} முழுமையான நிபுணத்துவத்துடன் அறிந்திருக்கிறான்.(22ஆ,23அ) அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, ராகவா, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் எதுவரை ஒளிவீசுவானோ, அதுவரையுள்ள உலகில் உண்மையில் அவனுக்குத் தெரியாதது யாதொன்றும் இல்லை[7].(23ஆ,24அ)

[5] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாலி, சுக்ரீவன் ஆகியோரின் தந்தை ரிக்ஷரஜஸ் ஆவான். ஆனால் க்ஷேத்ரஜ்ஞ மகன்களை, அதாவது தந்தையின் களம் (தாய்) மூலம், ஆனால் உயிரியல் விதிப்படி வேறு தந்தை மூலம் பிறக்கும் மகன்களைப் பெறுவது வழக்கம். ரிக்ஷரஜஸ் தற்காலிகமாக பெண்ணாக மாறியபோது, பெண்வடிவில் இருந்த அவனுக்கு இந்திரன் மூலம் வாலியும், சூரியன் மூலம் சுக்ரீவனும் பிறந்தனர்" என்றிருக்கிறது.

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "'ஆயுதத்தை அருகில் வைத்துவிட்டு' என்ற கூட்டுச் சொற்களுக்கு, "ஆயுதங்களை ஆயத்தமாக்கிக் கொண்டு" என்றும், "ஆயுதத்தின்மீது உறுதியேற்றுக் கொண்டு" என்றும் வெவ்வேறு பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

[7] கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட
வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்
அதிர் கழல் வீரர்தாமும் அன்னதே அமைவது ஆனார்

- கம்பராமாயணம் 3697ம் பாடல், கவந்தன் படலம்

பொருள்: "பொன்போல் ஒளிபொருந்திய நிறம் கொண்ட சூரியனின் மகனை {சுக்ரீவனை} எதிர் எதிர் கொண்டு தழுவி, நட்பில் இனிமையாகப் பொருந்தி, அவன் உதவியால் விரைவாக, மூங்கில் போன்ற தோள் கொண்டவளை {சீதையைத்} தேடுவது சிறந்தது" என்றான் {கபந்தன்}. ஒலிக்கும் வீரக்கழல் {காலணி} அணிந்த வீரர்களும் {ராமலக்ஷ்மணர்களும்} அதற்கு உடன்பட்டார்கள்.

அவன் {சுக்ரீவன்}, வானரர்களுடன் சேர்ந்து விபுலமான {பெரிய} நதிகள், சைலங்கள் {மலைகள்}, கிரிதுர்கங்கள் {மலைக்குகைகள்}, பிலவங்கள் {நிலக்குடைவுகள்} ஆகியவற்றில் தேடித்திரிந்து உன் பத்தினியைக் கண்டுபிடிப்பான்.(24ஆ,25அ) இராகவா, உன்னைப் பிரிந்த சோகத்தில் இருக்கும் சீதையைத் தேட, மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்களை திசைகள் அனைத்திற்கும் அனுப்புவான். இராவணனின் ஆலயத்தையும், அழகிய இடை கொண்ட மைதிலியையும் தேடுவான்.(25ஆ,26) பிலவங்கமர்களில் ரிஷபனான அவன் {குதித்துப் பறக்கும் குரங்குகளில் காளையான சுக்ரீவன்}, நிந்திக்கத்தகாதவளான உன் பிரியை {காதலி சீதை}, மேருசிருங்கத்திற்கே சென்றிருந்தாலும், பாதாளதலத்தையே அடைந்திருந்தாலும், அங்கே பிரவேசித்து, ராக்ஷசர்களை அழித்து, {அவளை} மீட்டுத் தருவான்" {என்றான் கபந்தன்}[8].(27)

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "'அழுதுபுலம்புகிறவன், அழுதுபுலம்பும் மற்றொருவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்' என்று சொல்லும் கபந்தனின் கருத்து, புராணக் கருத்துகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. கபந்தனுக்கு ராவணனையோ, அவனது செயல்பாடுகளையோ குறித்துத் தெரியவில்லையென்றாலும், அவன் சொல்லும் கதையின்படியே கூட, அவன் வாலியையும், சுக்ரீவனையும் நன்கறிந்திருக்கிறான். எனவே, சுக்ரீவனுக்குப் பதிலாக, அதிக சக்தியுடைய வாலியை நண்பனாக்கிக் கொள்ளவே அவன் ராமனுக்குப் பரிந்துரைத்திருக்க வேண்டும். இதையே பின்னர் வாலியும் ராமனிடம் சொல்கிறான். கபந்தனுக்கு அழியாத ஞானம் வாய்த்திருக்கும்போது, "சரியான பாதையிலேயே ராமன் செல்ல வேண்டும்" என்று கருதுகிறான். இவ்வாறு தர்மகூடத்தில் இருக்கிறது" என்றிருக்கிறது.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 72ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Thursday, 27 April 2023

கபந்தனின் முன்வினை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 71 (34)

Kabandha's acts done before | Aranya-Kanda-Sarga-71 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கபந்தன் தன் கதையைச் சொல்லிவிட்டு, சீதையைக் கண்டுபிடிப்பதில் ராமனுக்கு உதவுவதாக உறுதி அளித்தது; தன்னை தகனம் செய்யுமாறு ராமனிடம் வேண்டிய கபந்தன்...

Danu's son Kabandha gets boon from Brahma and fights with Indra

{கபந்தன் தொடர்ந்தான்}, "மஹாபாஹுவே, மஹாபலவானே, பராக்கிரமனே, ராமா, பூர்வத்தில் சூரியனுக்கும், சோமனுக்கும் {சந்திரனுக்கும்}, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} எப்படிப்பட்ட வபு {உடல்} உண்டோ, அப்படியே சிந்தனைக்கு எட்டாத வகையில் திரிலோகங்களிலும் புகழ்பெற்றதாக என் ரூபம் இருந்தது.(1,2அ) இராமா, அத்தகைய நான், உலகத்தை அச்சுறுத்தும் வகையில் மஹத்தான இந்த ரூபத்தை ஏற்று, ஆங்காங்கே வனத்தில் திரியும் ரிஷிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தேன்.(2ஆ,3அ) அப்போது {ஒரு நாள்}, விதவிதமான வனப்பொருட்களை {கனிகளையும், கிழங்குகளையும், விறகுகளையும்} திரட்டுவதற்காக வந்த ஸ்தூலசிரர் என்ற பெயரைக் கொண்ட மஹரிஷி, என்னுடைய இந்த ரூபத்தை தரிசித்து {அச்சமடைந்து} என்னிடம் கோபமடைந்தார்.(3ஆ,4அ) என்னைக் கண்டதும், அவர் என்னிடம் இவ்வாறு சொன்னார், "மிகக் கொடூரமான, அருவருக்கத்தக்க இந்த ரூபமே {உன்னில்} நிலைத்திருக்கட்டும்" என்று கோரமாக சபித்தார் {ஸ்தூலசிரஸ்}.(4ஆ,5அ)

குரோதத்தால் அவர் சபித்துவிட்டாலும், இந்த சாபத்திற்கான அந்தத்தை {முடிவை} நான் யாசித்தபோது, அவர் {ஸ்தூலசிரஸ்} இந்தச் சொற்களைச் சொன்னார்:(5ஆ,6அ) "இராமன், உன் கைகளை வெட்டி, உன்னை ஜனங்களற்ற வனத்தில் தகனம் செய்யும்போது, நீ உனக்குரிய விபுல சுப ரூபத்தை {மகத்தான மங்கல வடிவை} மீண்டும் அடைவாய்" {என்றார் ஸ்தூலசிரஸ்}.(6ஆ,7அ)

இலக்ஷ்மணா, அழகுடன் செழித்திருந்த, தனுவின் புத்திரனான எனக்கு, போர்க்களத்தில் இந்திரனின் கோபத்தால் இந்த ரூபம் வாய்த்தது என்பதை நீ அறிவாயாக[1].(7ஆ,8அ) உக்கிர தபத்தால் நான் பிதாமஹரை {பிரம்மதேவனை} நிறைவடையச் செய்தேன். அவர் எனக்கு தீர்காயுளை {வரமாக} அளித்தார். பிறகு என்னை மாயம் {குழப்பம்} பற்றியது[2].(8ஆ,9அ) "எனக்கு தீர்க்க ஆயுள் வாய்த்திருக்கும்போது, சக்ரன் {இந்திரன்} என்னை என்ன செய்துவிடுவான்" என்று அடைந்த புத்தியை நம்பி ரணத்தில் சக்ரனை {போரில் இந்திரனைத்} தாக்கினேன்.(9ஆ,10அ) அவனது {இந்திரனின்} கையில் இருந்து ஏவப்பட்ட, நூறு கணுக்களுள்ள வஜ்ரத்தால் தொடைகளும், சிரமும் சரீரத்திற்குள் பிரவேசித்தன.(10ஆ,11அ) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு முன்பு, சாபத்திற்கான காரணம் சொல்லப்பட்டது. இப்போது அந்த சாபத்தின் விளைவு எப்படி வாய்த்தது என்பது சொல்லப்படுகிறது.

[2] தர்மாலயப் பதிப்பில், "அப்பொழுது முதல் என்னை மனதுக்கு வந்தபடி எதையும் செய்தலென்பது பற்றிற்று" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "எனக்கு வரமாக நீண்ட ஆயுளைத் தந்தார். அதைப் பெற்றவுடன் என் மனம் பேதலித்தது" என்றிருக்கிறது.

நான் யாசித்தபோதும், யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பாதவன் {இந்திரன்}, "அந்தப் பிதாமஹரின் {பிரம்மரின்} சொற்கள் சத்தியமாகட்டும்" என்று என்னிடம் சொன்னான்[3].(11ஆ,12அ) "வஜ்ரத்தால் தாக்கப்பட்டு, தொடைகளும், சிரமும், முகமும் {வாயும்} முறிந்த நிலையில், ஆஹாரமேதும் இல்லாமல் மிக நீண்ட காலம் ஜீவிப்பது எப்படி சாத்தியம்?" {என்று கேட்டேன்}.(12ஆ,13அ) 

[3] இந்திரனின் வஜ்ரம் என் தொடைகளையும், தலையையும் என் உடலுக்குள் செருகியது.

நான் இதைச் சொன்னபோது, சக்ரன் {இந்திரன்}, யோஜனை நீளக் கைகளைப் படைத்து, கூரிய பற்களையுடைய வாயையும் என் தொந்தியில் உண்டாக்கினான்.(13ஆ,14அ) அத்தகைய மிக நீண்ட கைகளுடன் கூடிய நான், இந்த வனத்தில் எங்கும் திரிந்து, சிம்ஹங்கள், துவீபங்கள் {யானைகள்}, மிருகங்கள் {மான்கள்}, வியாகரங்கள் {புலிகள்} ஆகியவற்றைப் பிடித்திழுத்து பக்ஷித்துவருகிறேன்.(14ஆ,15அ) அந்த இந்திரன் என்னிடம் சொன்னான், "எப்போது ராமனும், லக்ஷ்மணனும் சமரில் உன் கைகளை வெட்டுகிறார்களோ, அப்போது ஸ்வர்க்கம் செல்வாய்" {என்று சொன்னான்}.(15ஆ,16அ)

இராஜசத்தமா {வலிமைமிக்க மன்னா}, தாதா {ஐயா}, இந்த வபுவுடன் {உடலுடன்} கூடிய நான், {அதுமுதல்} இந்த வனத்தில் எதையெதை பார்க்கிறேனோ, அவை அனைத்தையும் பிடித்து இழுப்பதையே முறையாக விரும்பினேன்.(16ஆ,17அ) 'இராமன் அவசியம் கிரஹணத்தை நெருங்குவான் {நம் கைகளில் அகப்படுவான்}' என்று நான் நினைத்தேன். இந்த புத்தியில் நம்பிக்கை வைத்தே தேஹத்தை ஒழிப்பதற்காக {அவ்வாறு} சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.(17ஆ,18அ) இராகவா, அத்தகைய ராமனான நீ, நலமாக இருப்பாயாக. "என்னை அந்நியன் {வேறு ஒருவன்} கொல்வது சாத்தியமில்லை" என்று மஹரிஷி சொன்னபடியே நடந்துள்ளது.(18ஆ,19அ) நரரிஷபா, நான் உங்கள் இருவராலும் அக்னியில் சம்ஸ்கிருதமடைந்தால் {நெருப்பில் தூய்மையடைந்தால் / சிதையில் தகனம் செய்யப்பட்டால்}[4], என் மதியின் உதவியையும், மித்ரனையும் {நண்பனையும்} அடைவதற்கு ஆலோசனை சொல்வேன்" {என்றான் கபந்தன்}.(19ஆ,20அ)

[4] கபந்தன் தன்னை எரிக்கச் சொல்வதும், ராகவர்கள் அவனை எரிப்பதும் கம்பராமாயணத்தில் இல்லை.

தனுவின் மகனானவன்[5] இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான ராகவன், லக்ஷ்மணன் அருகில் கேட்டுக் கொண்டிருக்க, இந்தச் சொற்களைச் சொன்னான்:(20ஆ,21அ) "என் பாரியையும் {மனைவியும்}, புகழ்பெற்றவளுமான சீதையை ராவணன் சுகமாகக் கடத்திச் சென்ற பிறகு, நான் என்னுடன்பிறந்தானுடன் ஜனஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தேன்.(21ஆ,22அ) அந்த ராக்ஷசனின் பெயரை மாத்திரமே நான் அறிவேன். அவனது ரூபத்தையோ, வசிப்பிடத்தையோ, பிரபாவத்தையோ நாங்கள் அறியமாட்டோம்.(22ஆ,23அ) சோகத்தால் பீடிக்கப்பட்ட அநாதைகளாக இவ்வாறு எங்கும் அலைந்து திரிந்தும், பிறருக்கு உபகாரம் {உனக்கு உதவி} செய்பவர்களிடம் காருண்யம் {கருணை} காட்டுவதே உனக்குத் தகும்.(23ஆ,24அ) வீரா, காலத்தில் குஞ்சரங்களால் {எப்போதோ யானைகளால்} பிளக்கப்பட்ட உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து, பெரிய குழியை ஏற்பாடு செய்து, நாங்கள் உன்னை எரித்து சாம்பலாக்குவோம்.(24ஆ,25அ) இத்தகைய நீ, எவன், எங்கே சீதையைக் கடத்திச் சென்றான் என்பதை உள்ளபடியே அறிந்தால் தெளிவாகச் சொல்வாயாக. நீ அதிக நன்மையை {பேருதவியைச்} செய்தவனாவாய்" {என்றான் ராமன்}[6].(25ஆ,26அ)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தக் கபந்தன் குறித்தும், அவனது குலம் குறித்தும் பல்வேறு இடங்களில், பலவாறாக ஓரிரு சொல் மாறுபாடுகளுடன் சொல்லப்படுகின்றன. இலக்கணவாதிகளுக்கே புதிராக இருப்பவை அவை. இவன் கந்தர்வத் தன்மை அருளப்பட்ட ராக்ஷசன் என்பதையும், பிறகு ராக்ஷசத் தன்மையை அடைந்தான் என்பதையும், பிறகு ராமனின் அருளால் மீண்டும் கந்தர்வனாகி சொர்க்கத்தை அடைந்தான் என்பதையும் மட்டும் நாம் அறிவோம்" என்றிருக்கிறது.

[6] "நாங்கள் நிச்சயம் உன்னை தகனம் செய்வோம். நீ எரிந்து விட்டால் உனக்குத் தெரிந்ததை எப்படிச் சொல்வாய்? எனவே, இப்போதே சொல்" என்று கேட்கிறான் ராமன்.

இராமன் இவ்வாறு சொன்னதும், நன்கு பேசக்கூடியவனான தனு {தனுவின் மகன் கபந்தன்}, நன்கு பேசக்கூடிய ராகவனிடம் {பின்வரும்} உத்தம வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னான்:(26ஆ,27அ) "எனக்கு திவ்ய ஞானம் கிடையாது. மைதிலியையும் நான் அறியமாட்டேன். எரிந்த பிறகு, சுயரூபத்தை அடைந்ததும், எவன் அவளை {சீதை கடத்தப்பட்டதை} அறிவானோ, அவனை வெளிப்படுத்துவேன்.(27ஆ,28அ) பிரபுவே, எவன் உன்னுடைய சீதையைக் களவாடினானோ, அந்த வீரியமிக்க ராக்ஷசனை அறிவது, எரிக்கப்படாத எனக்கு சாத்தியமில்லை. இராமா, உண்மையில் அதன் {எரித்த} பிறகே, எவனால் அந்த ராக்ஷசனை அறியச் செய்ய முடியுமோ, அவனை நான் வெளிப்படுத்துவேன்.(28ஆ,29) இராகவா, சாபதோஷத்தால் விஜ்ஞானத்தை {நல்லறிவை} இழந்துவிட்டேன். என் வினையால், உலகத்தால் வெறுக்கப்படும் ரூபத்தை நான் அடைந்தேன்.(30) ஆனால், ராமா, சவிதன் {சூரியனின்} களைத்த வாஹனத்துடன் அஸ்தம் {களைத்துப் போன குதிரைகளுடன் அஸ்த மலையை} அடைவதற்கு முன், விரைவாக என்னைக் குழிக்குள் தள்ளி, விதிப்படி தஹனம் செய்வாயாக[7].(31) மஹாவீரா, ரகுநந்தனா, என்னை நீ நியாயப்படி குழிக்குள் இட்டு, தஹனம் செய்த பிறகு, எவன் அந்த ராக்ஷசனை அறிவானோ, அவனைக் குறித்துத் தெரியப்படுத்துவேன்.(32) இராகவா, நியாய விருத்தம் {நியாயமான நடத்தை} கொண்ட அவனிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக. அந்த லகுவிக்கிரமன் {வேகமும், வலிமையும் கொண்டவனான அவன்} பிரீதியுடன் உனக்கு சகாயத்தைச் செய்வான்.(33) இராகவா, பூர்வத்தில் ஒரு காரணத்தால் சர்வலோகங்களையும் சுற்றிவந்தவனாதலால், திரிலோகங்களிலும் அவனறியாதது ஏதுமில்லை[8]" {என்றான் கபந்தன்}.(34)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பிலுள்ள சாரம் பின்வருவது, "கபந்தன், எனக்கு அறிவில்லை... நான் பகுத்தறிவை இழந்துவிட்டேன்... போன்ற வசனங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், ராமனுக்கு உதவி செய்ய யாரோ இருக்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் மறைக்கிறான். சூரியனின் குதிரைகள் ஒருபோதும் களைப்பதில்லை. ஆனால், ராமனுக்கு ஏதோ செய்தியைச் சொல்ல விதிக்கப்பட்ட கபந்தனின் கோரவுடல்தான் களைத்திருக்கிறது. மறையும் சூரியனைக் குறிப்பிடப்படுகையில், உதிக்கும் சூரியனும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. அதே போல, கபந்தன் தகனத்திற்குப் பிறகு, ராமனுக்கு செய்தியைச் சொல்லும் வாஹனமாக மீண்டெழுவான் என்பது இங்கே உவமை. இதை ராமன் புரிந்து கொள்கிறான்".

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "இறுதிவரை அது சுக்ரீவன் என்பதைச் சொல்ல மறுக்கிறான் கபந்தன். ஒருவேளை சொல்லியிருந்தால் ராமன் கபந்தனை எரிக்காமல் விடவும் வாய்ப்புண்டு என்பதால் இவ்வாறு செய்கிறான். இறக்காத உயிரினங்களை எரிப்பது மனிதவழக்கமல்ல".

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 71ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Wednesday, 26 April 2023

கபந்தன் கரபங்கம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 70 (19)

Kabandha arms mutilated | Aranya-Kanda-Sarga-70 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கபந்தனின் கைகளை வெட்டிய ராமனும், லக்ஷ்மணனும்; கபந்தனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது; இராமலக்ஷ்மணர்களை வரவேற்ற கபந்தன்...

Rama Lakshmana Kabandha

கைகளெனும் பாசத்தில் {கயிற்றில்} முழுமையாகக் கட்டப்பட்டு அங்கே நிற்கும் சகோதரர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கண்டு, கபந்தன் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "க்ஷத்திரிய ரிஷபர்களே {க்ஷத்திரியர்களில் காளைகளே}, பசியால் துன்புற்றிருந்த என்னைக் கண்டும் நனவிழந்தவர்களாக ஏன் நீங்கள் நிற்கிறீர்கள்? தைவத்தால் ஆஹாரமாகவே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்" {என்றான் கபந்தன்}.(2)

இலக்ஷ்மணன் அதைக் கேட்டு துயரத்தால் பீடிக்கப்பட்டு, விக்கிரமத்தை {வலிமையை} வெளிப்படுத்த நிச்சயித்துக் கொண்டு, பிராப்த காலத்திற்கு ஹிதமான {சமயத்திற்கு ஏற்ற நன்மை பயக்கும் பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(3) "இந்த ராக்ஷசாதமன் {ராக்ஷசர்களில் இழிந்தவன்} துரிதமாக உம்மையும், என்னையும் முன்பே பற்றிவிட்டான் {இவன் நம்மை விழுங்கும் முன்பே} இவனுடைய நீண்ட கரங்களை வாள்களால் வேகமாக வெட்டுவோம்.(4) பயங்கரமானவனும், மஹாகாயனும் {பேருடல் படைத்தவனும்}, புஜவிக்கிரமனுமான {வலிமையான கரங்களைக் கொண்டவனுமான} இந்த ராக்ஷசன் உலகத்தை வென்ற பிறகே இங்கே நம்மைக் கொல்ல இச்சிக்கிறான்.(5) இராகவ ராஜரே, வேள்விச்சாலையின் மத்தியில் கொண்டு வரப்படும் பசுக்களை {விலங்குகளைப்} போல, சலனமற்றவர்களை {தீங்கிழைக்காதவர்களைக்} கொல்லும் ஜகதீபதிகளே {மன்னர்களே} நிந்திக்கத் தகுந்தவர்கள்[1]" {என்றான் லக்ஷ்மணன்}[2].(6)

[1] இந்த சுலோகம் பல்வேறு பதிப்புகளில் பல்வேறு வகைகளில் இருக்கிறது. இங்கே 5, 6ம் சுலோகங்களில் உள்ள இந்த வசனங்கள் பிபேக்திப்ராய் பதிப்பில் முற்றிலும் இல்லை. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், பல்வேறு உரைகளை ஒப்பாய்ந்து பின்வருமாறு நான்கு வகைகளில் இந்த சுலோகத்திற்குப் பொருள் உரைக்கப்பட்டிருக்கிறது, "(1) தொடக்கத்திலேயே வேள்விக்கென ஆயத்தம் செய்யப்படாமல் வேள்விச்சாலைக்குக் கொண்டு வரப்படும் விலங்குகள்; (2) தீங்கிழைக்காமலேயே வேள்விச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட விலங்குகள்; (3) காட்டு விலங்குகளைக் கொண்டு வருதல்; (4) யூபத்தில் கட்டப்படாத விலங்கைக் கொண்டு வருதல்" என்றிருக்கிறது. "வேள்விச்சாலைகளின் மத்தியில் தீங்கற்ற விலங்குகள் கொல்லப்படுவதைப் போல ஜகதீபதிகளும் தீங்கற்றவர்களை {சாதாரண விலங்குகளைப் போலக்} கொன்றால் அது நிந்திக்கத்தக்கது" என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும். இங்கே வேள்வி பலி நிந்திக்கப்படுவதாகத் தெரியவில்லை. மன்னர்கள் அப்பாவிகளைக் கொல்வதே நிந்திக்கப்படுகிறது.

[2] தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இத்தகை வாளால்
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான்

- கம்பராமாயணம் 3675ம் பாடல், கவந்தன் படலம்

பொருள்: "விஷம் போல் எரிக்கும் இந்த பூதம், இன்று இந்தத் தகுதிமிக்க வாளால் வெட்டித் துணிக்கத்தக்கது இல்லை என்றால் வேறு எந்த வகையிலும் மதிப்பிடத் தகுந்ததில்லை. பிடிக்கும் எல்லைக்குள் சிக்கியவற்றையெல்லாம் எறியும் கையையும், {அவ்வாறு எறிந்ததை ஏற்கும்} குகை போன்ற வாயையும் குறி தப்பாமல் துண்டாக்கிப் பிளக்கும் தன்மையைக் காண்பீராக. துன்பத்தைத் துறப்பீராக" என்றான் {லக்ஷ்மணன்}

அப்போது அவர்களின் உரையாடலைக் கேட்டுக் குரோதமடைந்த ராக்ஷசன், ரௌத்திரத்துடன் வாயைத் திறந்து, அவர்களை பக்ஷிப்பதற்கான {உண்பதற்கான} முயற்சியை ஆரம்பித்தான்.(7) அப்போது, தேசகாலம் அறிந்தவர்களான அந்த ராகவர்கள், பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாகத்[3] தங்கள் கட்கங்களால் {வாள்களால்} அவனது கைகளைத் தோள்ப்பூட்டுகளிலிருந்து துண்டித்தனர்.(8) தக்ஷிணனான {வலக்கைப் பக்கம் இருந்த} ராமன் பொறுத்துக் கொள்ள முடியாத வேகத்துடன் தக்ஷிண பாஹுவையும் {வலது கரத்தையும்}, வீரனான லக்ஷ்மணன் இடது கரத்தையும் தங்கள் வாள்களால் வெட்டினர்.(9) மஹாபாஹுவான அவன் {நீண்ட கைகளைக் கொண்ட கபந்தன்}, கைகள் வெட்டப்பட்டதும், ஜலதனை {மழை தரும் மேகத்தைப்} போல வானத்திலும், பூமியிலும், திசைகளிலும் எதிரொலிக்கும் வகையில் பெருங்கூச்சலிட்டபடியே கீழே விழுந்தான்.(10) அந்த தானவன் {கபந்தன்}, வெட்டப்பட்ட கைகளில் குருதி பெருகிப் பாய்வதைக் கண்டு, தீனமாக {பரிதாபகரமாக} அவர்கள் இருவரிடமும், "வீரர்களான நீங்கள் இருவரும் யாவர்?" என்று கேட்டான்.(11)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோவிந்தராஜர், மஹேஷ்வரத் தீர்த்தர் உரைகளின் படி இங்கே, "பெரிதும் கலக்கமடைந்தவர்களாக" என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது.

அவன் இவ்வாறு கேட்டதும், சுபலக்ஷணங்களைக் கொண்டவனான லக்ஷ்மணன், அந்த மஹாபலவானிடம் {கபந்தனிடம்}, காகுத்ஸ்தனை {ராமனைக்} குறித்து {பின்வருமாறு} சொன்னான்:(12) "இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவரான இவரை ராமர் என்ற பெயரில் ஜனங்கள் அழைப்பார்கள்.  நான் இவரது தம்பியான லக்ஷ்மணன் என்று அறிவாயாக.(13) இராஜ்ஜியத்தில் இருந்து மாதாவால் விரட்டப்பட்ட இந்த ராமர், வனத்திற்கு அனுப்பப்பட்டவராக என்னுடனும், பாரியையுடனும் {மனைவியுடனும்} மஹத்தான வனத்தில் திரிந்து வந்தார்.(14) ஜனங்களற்ற வனத்தில் வசித்து வந்தபோது, தேவ பிரபாவங்கொண்ட இவரது பாரியை {மனைவி} ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டாள். அவளை {மீட்க} விரும்பியே இங்கே வந்தோம்.(15) கபந்தம் {தலையற்ற முண்டம்} போன்றிருக்கும் நீ யார்? ஒளிரும் மார்பில் வாயுடனும், முறிந்த கெண்டைக்காலுடனும் வனத்தில் எதற்காக புரண்டு கொண்டிருக்கிறாய்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(16)

இலக்ஷ்மணனால் இவ்வாறு கேட்கப்பட்ட கபந்தன், அப்போது இந்திரனின் சொற்களை நினைவுகூர்ந்து, பரமபிரீதியடைந்து, இந்தச் சொற்களை மறுமொழியாக சொன்னான்:(17) "நரவியாகரர்களே {மனிதர்களில் புலிகளே}, உங்களுக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. நான் அதிர்ஷ்டவசத்தால் உங்களை பார்க்கிறேன். அதிர்ஷ்டவசத்தாலேயே நீங்கள் இருவரும் என்னுடைய இந்தத் கைப்பூட்டுகள் இரண்டையும் வெட்டினீர்கள்.(18) நரவியாகரா {ராமா}, என்னுடைய இந்த ரூபம் எவ்வாறு சிதைந்தது என்பதை உனக்கு உள்ளபடியே சொல்கிறேன். அதை என்னிடம் இருந்து கேட்பாயாக" {என்றான் கபந்தன்}.(19)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 70ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

அயோமுகியும், கபந்தனும் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 69 (51)

Ayomukhi and Kabandha | Aranya-Kanda-Sarga-69 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைத் தேடிப் புறப்பட்ட ராமனும், லக்ஷ்மணனும்; கிரௌஞ்சாரண்யம்; அயோமுகியை தண்டித்த லக்ஷ்மணன்; இராமனையும், லக்ஷ்மணனையும் பிடித்த கபந்தன்; இலக்ஷ்மணனின் புலம்பல்; இராமனின் வேதனை...

Lakshmana Rama Kabandha

இவ்வாறு அவனுக்கு நீர்க்காணிக்கையளித்த ராகவர்கள், பஷ்சிம திசை {மேற்கு திசையை} நோக்கிப் புறப்பட்டு, வனத்தில் சீதையைத் தேடிச் சென்றனர்[1].(1) சரங்கள், விற்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்ட ஐக்ஷ்வாகுக்கள் இருவரும் அந்த தக்ஷிண {தென்} திசையை அடைந்து, அதிகம் மிதிபடாத {பயன்படுத்தப்படாத} பாதையை அடைந்தனர்.(2) பல குல்மங்கள் {புதர்கள்}, விருக்ஷங்கள் {மரங்கள்}, லதைகள் {கொடிகள்} ஆகியவற்றால் அடர்ந்ததாகவும், முற்றிலும் கடப்பதற்கு அரியதாகவும், மிகக் கொடியதாகவும், பார்க்க கோரமாகவும் அஃது {அந்தப் பாதை} இருந்தது.(3) மஹாபலர்கள் இருவரும், தக்ஷிண திசையில் {தென்திசையில்} சென்று, பயங்கரமான அந்த மஹா அரண்யத்தை {தண்டகாரண்யத்தை} வேகமாக நடந்து கடந்தனர்[2].(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜடாயு சொன்ன தெற்கு திசை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முதலில் மேற்கே செல்ல வேண்டியிருந்தது, அடுத்த சுலோகத்திலேயே தெற்கு நோக்கிச் செல்வதும் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. சில பதிப்புகளில், இந்த இடத்தில் மேற்குத் திசை என்று சொல்லாமல் தென்மேற்குத் திசையில் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்தில் மேற்கு குறிப்பிடப்படுகிறது, அடுத்த சுலோகத்தில் தெற்கு சொல்லப்படுகிறது. எனவே இங்கே சொல்லப்படும் மேற்கு, தென்மேற்கையே குறிப்பிடுகிறது" என்றிருக்கிறது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், கோரக்பூர் பதிப்புகளிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் "தென் திசையில் சென்று" என்ற சொற்கள் இல்லை. ஆனால் இறுதியில் தென்திசை குறிப்பிடப்படுகிறது. அங்கே, "மஹாபலர்கள் இருவரும், வியாலங்களும் {பாம்புகளும்}, சிம்ஹங்களும் சேவிக்கும் மிகப் பயங்கரமான அந்த மஹாரண்யத்தை வேகமாக நடந்து கடந்தனர்" என்றிருக்கிறது. செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில், "தென்திசையைத் தேர்ந்தெடுத்துச் சென்ற அந்த மஹாபலவான்கள் இருவரும், அந்த மஹாவனத்தில் இந்த பயங்கரமான பகுதியை வேகமாக நடந்து கடந்தனர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்பில், முதலில் உள்ள தென்மேற்குத் திசை என்பதைத் தாண்டி மற்ற இரண்டு இடங்களில் வரும் தென்திசை குறிப்பிடப்படவில்லை.

அதன்பிறகு, பெருஞ்சீற்றம் கொண்ட அந்த ராகவர்கள் இருவரும், ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோசங்கள் சென்று கடப்பதற்கரிய கிரௌஞ்ச அரண்யத்திற்குள் நுழைந்தனர்[3].(5) சீதை களவாடப்பட்டதால் துக்கத்தில் இருந்த அவர்கள் இருவரும், வைதேஹியைக் காணும் ஆவலில், ஆங்காங்கே நின்று, பல மேக கணங்களுக்கு ஒப்பானதும், எங்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடியதும், நானாவித வர்ணங்களிலான சுபமான புஷ்பங்களாலும், பக்ஷி கணங்களாலும், மிருகங்களாலும் நிறைந்ததுமான அந்த வனத்தில் தேடித் திரிந்தனர்.(6,7) பிறகு, தசரதாத்மஜர்களான அந்த உடன்பிறப்புகள் இருவரும், அங்கிருந்து கிழக்கு நோக்கி 3 குரோசம் சென்று[4], கிரௌஞ்சாரண்யத்தைக் கடந்து, மதங்காசிரமத்திற்கு இடையில் கோரமானதும், பல பயங்கரமான மிருகங்களும், துவிஜங்களும், கடப்பதற்கு அரிதாக எங்கும் அடர்ந்த விருக்ஷங்களை {மரங்களைக்} கொண்டதுமான அந்த வனத்தைக் கண்டு, அதில் ஒரு கிரியில், பாதாளத்துக்கு சமமான கம்பீரமான இருளால் எங்கும் அடர்ந்த ஒரு குகையைக் கண்டனர்.(8-10)

[3] தண்டகாரண்யத்தைக் கடந்தனர் என்று 4ம் சுலோகத்தில் சொல்லிவிட்டு, ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோச தொலைவில் உள்ள கிரௌஞ்சாரண்யம் என்று சொல்லப்படுகிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தொலைவுக்கான பண்டைய இந்திய அளவுமுறைகளைச் சொல்லும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தின்படி" என்று ஆரம்பித்து, சில அளவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிக்குறிப்பின் இறுதியில், "பிரிட்டிஷ் வருவாய்த்துறை ஒரு யோஜனையை 5 மைல்கள் {8.04 கி.மீ.} எனக் கொண்டது. பாரம்பரியமாக ஒரு யோஜனை என்பது 10 மைல்க்கள் {16.09 கி.மீ.} தூரம் என்று கணக்கிடப்படுகிறது" என்று இருக்கிறது. அந்த அடிக்குறிப்பில், சில இடங்களில் குத்துமதிப்பாகவும், சில இடங்களில் பிழையாகவும் கணக்கிடப்பட்டிருக்கும் அளவுகள் திருத்தப்பட்டுப் பின்வருமாறு தரப்படுகின்றன. ஒரு அங்குலம் = இன்றைய முக்கால் இன்ச் {19.05mm} ஆகும். 4 அங்குலங்கள் = 1 தனுகிரஹம் {வில்லின் கைப்பிடி அளவு} = 3 இன்ச் {76.2 mm}. 8 அங்குலங்கள் = 1 தனுர்முஷ்டி {கட்டைவிரல் உயர்த்தப்பட்ட உள்ளங்கையின் அளவு} = 6 இன்ச் {152.4mm}. 12 அங்குலங்கள் = 1 விதஸ்தை {உள்ளங்கைகளை விரித்தால் கட்டைவிரல் நுனியில் இருந்து சிறுவிரல் நுனி வரையுள்ள அளவு / அதாவது ஒரு சாண்} = 9 இஞ்ச் {228.6mm}. 2 விதஸ்தைகள் = 1 அரத்னி / ஹஸ்தம் {ஒரு முழம்} = 18 இன்ஞ் {457.2mm}. 4 அரத்னிகள் = 1 தண்டம் / 1 தனுஸ் {வில்லின் அளவு} = 6 அடி {1828.8 mm / 1.8288 m}. 10 தண்டங்கள் = 1 ரஜ்ஜு = 60 அடி {18.288m}. 2 ரஜ்ஜுக்கள் = 1 பரிதேசம் = 120 அடி {36.576m}. 2000 தண்டங்கள் / தனுஸ்கள் = 1 குரோசம் = 12,000 அடி = 2.2727 மைல்கள் = 3.6576 கி.மீ. 4 குரோசங்கள் = 1 யோஜனை = 48,000 அடி = 9.0909 மைல்கள் = 14.6304 கி.மீ ஆகும். ஜிஜித் நடுமுறி ரவி அவர்களின் "ஜியோகிரபி ஆஃப் ராமாயணா" புத்தகத்தில், "13ம் எண் கொண்ட அசோக மௌரியனின் கல்வெட்டு, "பாடலிபுத்திரத்தில் இருந்து யோனா மன்னன் ஆளும் அந்தியோகம் 600 யோஜனைகள் தொலைவு கொண்டது" என்று குறிப்பிடுகிறது. அந்தியோகம், மன்னன் அந்தியோகஸ் 1ம் சோடர் ஆண்ட பாபிலான் நகரம் என்று அடையாளம் காணப்படுகிறது. பாடலிபுத்திரத்தில் இருந்து பாபிலான் 4000 கி.மீ. தொலைவாகும் {இது இன்றைய பீகாரின் பாட்னாவில் இருந்து, இன்றைய ஈராக்கின் ஹில்லா நகரம் [அன்றைய பாபிலான்] வரை ராவணன் போல் நேரடியாக விமானம் மூலம் சென்றால் மட்டுமே வரும் 4004 கி.மீ. தொலைவாகும்}. அவ்வாறெனில் 1 யோஜனை 7 கி.மீ. {சரியாகச் சொன்னால் 6.673 கி.மீ. ஆகும்}. சூரிய சித்தாந்தம், ஆரியபாட்டியம் ஆகியவை ஒரு யோஜனை 8 கி.மீ. என்று வரையறுக்கின்றன. 14ம் நூற்றாண்டின் பரமேஷ்வரர், 12-13 கி.மீ. என்று கணக்கிடுகிறார். சில புராணப்படைப்புகளின் படி 12.2 முதல் 14.6 கி.மீ. வரை சொல்லப்படுகிறது. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஒரு யோஜனை என்பது 8 முதல் 9 மைல்கள் என்கிறார். சீன அளவுமுறைகளுடன் ஒப்பிட்டால் அது 6.7 - 8.2 மைல்கள் (10.8 - 13.2 கி.மீ.) என்றும் அவர் சொல்கிறார்" என்று சொல்லிவிட்டு, பின்னர், "நமது புத்தகத்தில் யோஜனை என்பதற்கு இரண்டு அளவுகோல்களை வைத்துக் கொள்கிறோம். நீள, அகல, உயரங்களைக் குறிப்பிடும் பகுதிகளில் 1 குறும் யோஜனை {s-Yojana} என்பது 120 மீட்டராகக் கொள்ளப்படுகிறது. தொலைவுகளைக் குறிப்பிடும் பகுதிகளில் 1 நெடும் யோஜனை {b-Yojana} என்பது 48 கி.மீ. யாகக் கொள்ளப்படுகிறது. 1 குறுங்குரோசம் {s-Krosa} என்பது 120 மீட்டராகவும், 1 நெடுங்குரோசம் {b-Krosa} என்பது 12 கி.மீ.யாகக் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது. ஆக, கௌடில்யர் சொல்லும் 1 பரிதேசம், அதாவது 120 அடிகளை 120 மீட்டராக மாற்றி ஒரு குறும்யோஜனை என்றும், அதுவேதான் ஒரு குறுங்குரோசமும்கூட என்றும், 48000 அடிகளை 48 கி.மீட்டராக மாற்றி ஒரு நெடும்யோஜனை என்றும், நூறு பரிதேசங்களைக் கொண்ட ஒரு குரோசத்தின் 12000 அடிகளை 12 கி.மீ. கொண்ட நெடுங்குரோசமாகவும் ஜிஜித் நடுமுறி அவர்கள் தன் ஆய்வுக்காக மாற்றிக் கொள்கிறார். இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லைதான். இருப்பினும் இந்த அளவுகளில் எதையேனும் கொண்டே இதிஹாச புராண ஆய்வுகள் செய்யப்படுகின்றன. புராணங்கள் பலவற்றையும், அவற்றைக் கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் பலவற்றையும் படிப்பவர்களுக்கும் இஃது உதவக்கூடும் என்றே இவ்வளவு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் மூன்று குரோசங்கள் என்பது கௌடில்யரின் கணக்குப்படி 36,000 அடிகளாகும்; அதாவது 6.18 மைல்களாகும்; அதாவது 10.9728 கி.மீ.ஆகும். ஜனஸ்தானத்தில் இருந்து கிரௌஞ்ச அரண்யம் தொடங்கும் பகுதி இவ்வளவு {11 கி.மீ.} தொலைவில் இருந்திருக்க வேண்டும்.

[4] கிழக்கு முகமாக 3 குரோச தொலைவைக் கடந்து, கிரௌஞ்சாரண்யத்திற்கும் மதங்க ஆசிரமத்திற்கும் இடையில் ஒரு காட்டை அடைந்து அங்கே ஒரு மலையில் ஒரு குகையைக் காண்கின்றனர். தேசிராஜு ஹனுமந்தராவ், வி.வி.சுப்பையா-பி.கீர்வானி, மன்மதநாததத்தர், தாதாசாரியர், கோரக்பூர் பதிப்புகளில் இவ்வாறே இருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் பதிப்புகளில் கிழக்குத் திசை என்பது சுட்டப்படவில்லை. தர்மாலயப் பதிப்பில், "க்ரௌஞ்சாரண்யத்தை தாண்டி, அதிலிருந்து மதங்காச்ரமத்திற்கு முந்தியே ஆறுமைல் சென்று இடையில்"..., "அந்த வனத்தையும்"...., "குகையையும் கண்டனர்" என்றிருக்கிறது. அதாவது கிழக்குத் திசை என்பதற்குப் பதில் மதங்காசிரமத்திற்கு முந்தியே என்றிருக்கிறது. மூலத்தில், "பூர்வேண" என்றிருக்கிறது. இதற்கு, "கிழக்குத் திசை" என்றும், "பூர்வத்தில்" என்றும் இரு பொருள்களைக் கொள்ளலாம் போலும்.

அந்த நரவியாகரர்கள் {மனிதர்களில் புலிகள்}, அந்தக் குகையை அடைந்ததும், அதன் அருகிலேயே மஹாரூபம் கொண்டவளும், விகார முகம் படைத்தவளுமான ஒரு ராக்ஷசியைக் கண்டனர்.(11) அப்போது உடன்பிறப்புகளான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும், அற்ப துணிவைக் கொண்டவர்களுக்கு பயத்தை விளைவிப்பவளும், அருவருப்பானவளும், ரௌத்திரத் தோற்றத்தையும், சரிந்த நீண்ட வயிற்றையும், கூரிய பற்களையும் கொண்டவளும், முதிர்ந்தவளும், கடினமான தோலைக் கொண்டவளும், பயங்கர மிருகங்களைப் பக்ஷிப்பவளும் {உண்பவளும்}, விகாரமான இடுப்பையும், விரிந்த கூந்தலையும் கொண்டவளுமான அவளை அங்கே கண்டனர்.(12,13) அவள், வீரர்களான அவ்விருவரின் அருகே வந்து, "வா, இன்புறலாம்" என்று சொல்லி, தமையனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த லக்ஷ்மணனை இறுக அணைத்துக் கொண்டாள்.(14)

அவள் {அயோமுகி}, சௌமித்ரியை {லக்ஷ்மணனை} இறுகப் பற்றிக் கொண்டு, அவனிடம் {இந்தச்} சொற்களைச் சொன்னாள், "நான் அயோமுகி என்ற பெயரைக் கொண்டவள். என்னை நீ அடைந்தாய். நீ என் பிரியன் {காதலன்}. வீரா, நாதா, இந்த ஆயுள் நெடுக பர்வதகூடங்களிலும், நதிகளிலும், மணற்கரைகளிலும் என்னுடன் நீ இனி இன்புற்றிருப்பாயாக" {என்றாள்}[5].(15,16)

[5] பேசினன் அங்கு அவள் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்
நேசம் இல் அன்பினளாயினும் நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள்.

- கம்பராமாயணம் 3592ம் பாடல், ஆயோமுகிப் படலம்

பொருள்: {இலக்ஷ்மணன் இவ்வாறு} பேசியதும், அங்கு ஊசலாடி, வருந்தி அழிகின்ற மனத்தை உடைவளும், {லக்ஷ்மணன்} தன்னை ஏற்பானோ, மாட்டானோ என்று தடுமாறும் சிந்தனை உடையவளுமான அவள், பழைய உறவு ஏதும் இல்லாத அன்புடையவள் ஆனாலும், தன் ஆசையை தானே சொல்ல நாணமடையாதவளாக, "உன்னிடம் ஆசையினால் வந்த அயோமுகி நான்" என்றாள்.

இவ்வாறு சொல்லப்பட்டதும் அரிசூதனனான லக்ஷ்மணன் கோபமடைந்து, கட்கத்தை {வாளை} உயர்த்தி, அவளது காதையும், நாசியையும், ஸ்தனத்தையும் வெட்டினான்.(17) கோரத் தோற்றம் கொண்ட அந்த ராக்ஷசி, காதும், நாசியும் வெட்டப்பட்ட பிறகு, உயர்ந்த சுவரத்தில் கதறிக் கொண்டே வந்த வழியே திரும்பி ஓடினாள்[6].(18) அவள் சென்ற பிறகு, அரிமித்ரக்னர்களும் {பகைவரின் நண்பர்களை அழிப்பவர்களும்}, தைரியத்துடன் முன்னேறிச் செல்பவர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் இருவரும், அடர்ந்த வனத்திற்குள் நுழைந்தனர்[7].(19)

[6] அயோமுகி என்றால் இரும்பினாலான முகத்தைக் கொண்டவள் என்று பொருள். சுலோகம் 11 முதல் 19 வரையுள்ள பகுதி செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இல்லை. அயோமுகி என்ற ராக்ஷசியைப் பற்றிச் சொல்லும் இந்தப் பகுதி கம்பராமாயணத்தில் அயோமுகிப் படலம் என்று 102 பாடல்களில் அமைந்திருக்கிறது. கம்பராமாயணத்தில், ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்த பின்பு, சீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராமன், லக்ஷ்மணனிடம் நீர் கொண்டுவருமாறு கேட்கிறான். இலக்ஷ்மணன் நீர் தேடிச் சென்றபோது, அயோமுகி அவன் மீது காதல் கொண்டு, தன் மந்திர வலிமையால் அவனை மயக்கி எடுத்துச் செல்கிறாள். அயோமுகி லக்ஷ்மணனைத் தழுவிய உடனேயே அந்த மாயம் நீங்கியதும், அவன் அவளை அங்கபங்கம் செய்து ராமனிடம் திரும்பிச் செல்கிறான். இதற்குள் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் கடந்து விட்டதாக அங்கே குறிப்பிருக்கிறது. இந்தப் படலத்தின் தொடக்கத்தில் சீதையை மீட்க முடியாமலும், படலத்தின் இறுதியில் லக்ஷ்மணனைக் காண இயலாமலும் இராமன் வருந்தும் பாடல்கள் கவிச்சுவைமிக்கவை.

[7] ஐஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடையுடுத்த
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எவ்வுயிரும்
கையின் வளைத்து வயிற்றின் அடக்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

- கம்பராமாயணம் 3643ம் பாடல், கவந்தன் படலம்

பொருள்: "ஐஐந்துக்கும் இரட்டிப்பான யோசனை தூரத்தில், காடுகளால் சூழப்பட்ட நிலப்பகுதியில் அவர்கள் திரிந்தனர். சூரியனும் நடுப்பகுதியை அடைந்தான், எய்யும் கணை பொருந்திய வில்லை ஏந்திய கைகளை உடைய {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும்  சென்று, தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கைகளை மட்டுமே நீட்டி தன் எல்லைக்குள் சிக்கும் எந்த உயிரினத்தையும் வளைத்துப் பிடித்துத் தன் வயிற்றில் திணித்துச் செரிக்கும் கவந்தன் வனத்தைக் கண்டனர்" என்பது பொருள். இங்கே ஐஐந்து என்பதை 25 எனக் கொண்டால் இரட்டிப்பாகும்போது வரும் 50 யோஜனைகள், 454 மைல் / 731 கி.மீ. ஆகும். ஐந்தும் ஐந்தும் 10 எனக் கொண்டால், இரட்டிப்பாகும்போது 20 யோஜனைகள், 181.8 மைல் / 292.57 கி.மீ ஆகும்.

மஹாதேஜஸ்வியும், சத்வவானும் {தைரியசாலியும்}, சீலவானும் {ஒழுக்கமுள்ளவனும்}, தூய்மையானவனுமான {நல்லெண்ணம் கொண்டவனுமான} லக்ஷ்மணன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன்னுடன் பிறந்தானிடம் {ராமனிடம், இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(20) "என் {இடது} கை திடமாகத் துடிக்கிறது. என் மனம் கலவரமடைவதைப் போலத் தெரிகிறது. பெரும்பாலும் அனிஷ்ட நிமித்தங்களே {விரும்பத்தகாத சகுனங்களே} தென்படுகின்றன.(21) எனவே, ஆரியரே, நீர் ஆயத்தமாக இருப்பீராக. {நன்மை பயக்கத்தக்க} ஹிதமான சொற்களைக் கேட்பீராக. நிமித்தங்கள், உடனே விளையப்போகும் ஆபத்தையே என்னிடம் தெரிவிப்பது போலத் தெரிகிறது.(22) பரமதாருணரே {படுபயங்கரமானவரே}, வஞ்சுலகம் என்ற பெயர் கொண்ட இந்தப் பக்ஷி யுத்தத்தில் நமக்கான விஜயத்தை முன்னறிவிப்பதைப் போல உரக்க கூவுகிறது" {என்றான் லக்ஷ்மணன்}.(23)

அவர்கள் அவ்வழியில் அந்த வனம் முழுவதும் தைரியமாகத் தேடிக் கொண்டிருந்தபோது, அந்த வனத்தையே முழுமையாக முறிப்பது போன்ற ஒரு பெரிய சப்தத்தைக் கேட்டனர்.(24) காற்றினால் முற்றிலும் பீடிக்கப்பட்ட ஆகாயத்தைப் போல, அந்த வனத்தின் சப்தமானது அந்த வனம் எங்கும் பரவியது.(25) தம்பியுடன் இருந்த ராமன், கையில் வாளுடன் அந்த சப்தத்தை அறியும் எண்ணங்கொண்ட போது, {அந்த வனத்தின்} ஒரு பகுதியில் {அடர்ந்த புதரில்}, மஹாகாயம் {மிகப்பெரும் உடலைப்} படைத்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான ஒரு ராக்ஷசனைக் கண்டான்.(26) 

அப்போது அவ்விருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, அங்கே எதிரில் நிற்பவனும், நெடிய தோற்றம் கொண்டவனும், சிரமும் {தலையும்}, கிரீவமும் {கழுத்தும்} இல்லாதவனும், வயிற்றில் முகத்தை {வாயைக்} கொண்டவனுமான கபந்த {தலையற்ற} ராக்ஷசனை அடைந்தனர்.(27) அடர்ந்து, மடியாத ரோமங்களுடன் {மயிருடன்}, மஹாகிரியைப் போல {பெரும் மலைக்கு ஒப்பாக} வளர்ந்தவனும், நீலமேகத்திற்கு ஒப்பானவனும், ரௌத்திரனும், மேகத்திற்கு ஒப்பான குரலைக் கொண்டவனும்,(28) மார்பில் அமையப்பெற்ற நெற்றியில் அக்னிஜுவாலைக்கு ஒப்பாக ஜொலிப்பதும், பெரிய இமைகளைக் கொண்டதும், பழுப்பு நிறத்திலானதும், மிக அகன்றதும், நீண்டதும், கூரிய பார்வை கொண்டதும், கோரமானதுமான ஏக நேத்திரத்துடன் {ஒரே ஒரு கண்ணுடன்} கூடியவனும், பெரும்பற்களைக் கொண்டவனும், நாக்கை நீட்டி அடிக்கடி நக்கிக் கொண்டிருப்பவனும், மஹா முகமுள்ளவனுமான அவன் {ராக்ஷசன் கபந்தன்},(29,30) மஹாகோரமான ரிக்ஷங்கள் {கரடிகள்}, சிம்ஹங்கள், மிருகங்கள் {மான்கள்}, துவீபங்கள் {யானைகள்} ஆகியவற்றை பக்ஷித்துக் கொண்டிருந்தான். 

ஒரு யோஜனை நீளும் கோரமான புஜங்கள் இரண்டையும் விரித்து,(31) ரிக்ஷங்களையும் {கரடிகளையும்}, விதவிதமான பக்ஷிகணங்களையும் {பறவைக் கூட்டத்தையும்},  அனேக மிருகங்களையும் {விலங்குகளையும்}, சிறந்த மான்கள் பலவற்றைத் தன்னிரு கரங்களாலும் பற்றி {வாய்க்குள்} வீசியபடியே, அங்கே எதிரில் வரும் அந்த உடன்பிறப்புகளின் பாதையை மறைத்து நின்று கொண்டிருந்தான்.(32,33அ) பிறகு ஒரு குரோசம் மாத்திரம் நடந்து சென்று, வலிமைமிக்கவனும், கொடியவனும், பயங்கரனும், கபந்தத்தை {தலையற்ற உடலைப்} போன்ற தன் வடிவில் இருந்து விரியும் புஜங்களைக் கொண்டவனும், கோரத் தோற்றம் கொண்டவனுமான கபந்தனைக் கண்டனர்[8].(33ஆ,34) மஹாபாஹுவான அவன் {நீண்ட கைகளைக் கொண்ட அந்தக் கபந்தன்}, தன் அகன்ற தோள்களை விசாலமாக விரித்து, அருகருகே இருந்த ராகவர்கள் இருவரையும் பலத்தால் பீடித்து இறுகப் பற்றினான்.(35) 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னர் அவர்கள் கபந்தனை வனத்தின் ஒரு பகுதியில் {அடர்ந்த புதரில்} கண்டதாகச் சொல்லப்பட்டது. இப்போதோ அவர்கள் 2.27 மைல்கள் தொலைவில் அவனைக் காண்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அவனைக் காண்பதால், கபந்தனின் உயரம் இங்கே நிறுவப்படுகிறது. தொலைவிலிருந்தே குன்றைக் காண்பது போல அவனைக் காண முடிந்திருக்கிறது. அவர்கள் செல்லக்கூடிய பாதை இதுமட்டுந்தான், அதுவும் இந்த ராக்ஷசனால் அமைக்கப்பட்டது" என்றிருக்கிறது. 

வாள்களுடன் கூடியவர்களும், திடமான தனுக்களைக் கொண்டவர்களும், தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்தவர்களும், மஹாபுஜர்களும், மஹாபலவான்களும், உடன்பிறந்தவர்களுமான அவ்விருவரும், வசமில்லாதவர்களாக அவனை அடைந்து இழுக்கப்பட்டனர்.(36) அப்போது சூரனான ராகவன் {ராமன்}, தைரியத்துடன் சலியாதிருந்தான். இலக்ஷ்மணனோ, பால்யத்தினால் புகலிடமற்ற நிலையை உணர்ந்து கவலையடைந்தான். அந்த ராகவானுஜன் {ராமனின் தம்பியான லக்ஷ்மணன்}, துன்புற்றவனாக ராகவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(37,38அ) "வீரரே, வசமில்லாதவனாக ராக்ஷசன் வசமடைந்த என்னைப் பார்ப்பீராக. இராகவரே, என்னை மட்டும் விட்டுவிட்டு, உம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்வீராக.(38ஆ,39அ) என்னை பூதபலியாக தத்தம் செய்தால் {உயிர்ப்பலியாகக் காணிக்கை அளித்தால்}, சுகத்தை அடைந்து, குறுகிய காலத்தில் வைதேஹியை நீர் அடையலாம் என்று நான் நினைக்கிறேன்.(39ஆ,40அ) காகுத்ஸ்தரே, ராமரே, பித்ரு பைதாமஹர்களின் மஹீயை {தந்தை, பாட்டன் வழி வந்த நிலத்தை} மீண்டும் அடைந்து அங்கே ராஜ்ஜியத்தில் அமர்ந்து எப்போதும் என்னை நினைத்திருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}[9].(40ஆ,41அ)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புகலிடமற்றவனாக உணர்ந்தான் லக்ஷ்மணன் என்ற இந்த சுய அனுதாபம் இந்தத் துயர்நிலையிலும் பொருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்தொடரும் அவனது வசனத்துடன் சேர்த்துப் பார்த்தால் சரியாகவே தெரிகிறது. அவன், சகோதரனுக்காகத் தன்னைத் தியாகம் செய்து, {தியாகத்தில்} ஜடாயுவை விஞ்ச விரும்புகிறான். சிறுபிள்ளைத்தனம் என்பது, இந்த காண்டத்தின் தொடக்க சர்க்கங்களில், விராதனை அவர்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை மறந்துவிட்டு லக்ஷ்மணன் பேசுவதால் சொல்லப்படுகிறது. இங்கே தன்னை பலி கொடுத்தாவது தன் சகோதரனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அவனது ஒட்டுமொத்த எண்ணமாகும்" என்றிருக்கிறது. 36 முதல் 42ஆம் சுலோகம் வரையுள்ள செய்தி செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இல்லை.

இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், ராமன் சௌமித்ரியிடம் சொன்னான், "வீரா, வீணாக அச்சமடையாதே. உன்னைப் போன்றவன் இவ்வாறு திகைக்கக்கூடாது" {என்றான் ராமன்}.(41ஆ,42அ) அதே வேளையில், குரூர தானவனும், உத்தம மஹாபாஹுவுமான {பெருந்தோள்களைக் கொண்டவர்களில் சிறந்தவனுமான} கபந்தன், உடன்பிறப்புகளான ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(42ஆ,43அ) விருஷப ஸ்கந்தர்களும் {எருது போன்ற தோள்பட்டைகளைக் கொண்டவர்களும்}, மஹாகட்கத்தையும், தனுவையும் {பெரும் வாளையும், வில்லையும்} தரித்தவர்களுமாக, கோரமான இந்த தேசத்திற்குள் {இடத்திற்குள்} வந்திருக்கும் நீங்கள் இருவரும் யாவர்? தைவத்தால் என் கண்களின் முன்பு உத்தம பக்ஷணமாக {சிற்றுண்டியாக} வாய்த்திருக்கிறீர்கள்.(43ஆ,44அ) இங்கே உங்கள் காரியத்தையும், என்ன காரணத்தினால் நீங்கள் இங்கே வந்தீர்கள் என்பதையும் சொல்வீராக. பசியால் துன்புற்று இங்கே நான் அமர்ந்திருக்கும் இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} வந்திருக்கிறீர்கள்.(44ஆ,45அ) கூரிய சிருங்கங்களைக் கொண்ட ரிஷபங்களைப் போல {கூரிய கொம்புகளைக் கொண்ட காளைகளைப் போல}, பாணங்கள், விற்கள், கட்கங்கள் ஆகியவற்றுடன் என் {வாயின்} அருகே வந்திருக்கிறீர்கள். உங்கள் ஜீவிதம் மீள்வது சாத்தியமில்லை" {என்றான் கபந்தன்}.(45ஆ,46அ)

துராத்மாவான கபந்தன் சொன்ன அந்த சொற்களைக் கேட்ட ராமன் வாடிய முகத்துடன் லக்ஷ்மணனிடம் {இதைச்} சொன்னான்:(46ஆ,47அ) "சத்தியவிக்கிரமா, துன்பத்தின் மேல் துன்பத்தை அடைந்து, பிரியத்திற்குரியவளைக் காணாத நிலையில், ஜீவிதாந்தத்திற்காக {வாழ்வின் முடிவிற்காக} இந்த பயங்கர விசனம் {துன்பம்} வாய்த்திருக்கிறது.(47ஆ,48அ) நரவியாகரா, லக்ஷ்மணா, சர்வபூதங்களிடமும் காலத்தின் வீரியம் மஹத்தானது. விசனங்களில் மோஹித்திருப்பவர்களான {துன்பங்களில் திகைத்திருக்கும்} உன்னையும், என்னையும் பார்ப்பாயாக.(48ஆ,49அ) இலக்ஷ்மணா, சர்வ பூதங்களிடமும் தைவத்திற்கு {காலத்திற்கு} பாரமானது எதுவுமில்லை. சூரர்களும், பலவான்களும், ரணக்களங்களில் {போர்க்களங்களில்} அஸ்திரங்களில் நிபுணர்களும் காலத்தை வெல்லமுடியாமல் வாலுகசேதுவை {மணல் அணைகளைப்} போல கஷ்டத்தால் கரைந்து போகிறார்கள்" {என்றான் ராமன்}.(49ஆ,50)

திடமானவனும், சத்தியவிக்கிரமனும் {வீண்போகாத வீரம் படைத்தவனும்}, பெரும் புகழ்பெற்றவனும், பிரதாபவானுமான அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன்} இவ்வாறு சொல்லிவிட்டு, சினம் தூண்டப்பட்டவனான சௌமித்ரியைக் கண்டு, ஸ்திரமான தன் சொந்த மதியைத் தன்னில் நிலைக்கச் செய்தான்.(51)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 69ல் உள்ள சுலோகங்கள்: 51

Previous | Sanskrit | English | Next

Tuesday, 25 April 2023

ஜடாயு மோக்ஷம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 68 (38)

Salvation of Jatayu | Aranya-Kanda-Sarga-68 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடன் நடந்த மோதலையும், சீதை கடத்தப்பட்டதையும் ராமனிடம் சொன்ன ஜடாயு; ஜடாயுவின் மரணமும், தகனமும்...

Rama and Lakshmana offer water for Jatayu

இராமன், ரௌத்திரமாகப் புவியில் வீழ்த்தப்பட்ட அந்த கிருத்ரனை {கழுகான ஜடாயுவைக்} கண்டு, மித்ர சம்பன்னனான {நட்புடன் கூடிய} சௌமித்ரியிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "எனக்காக முயற்சி செய்கையில், இந்த விஹங்கமர் {வானுலாவி} போரில் ராக்ஷசனால் கொல்லப்பட்டிருக்கிறார். நிச்சயம் எனக்காகவே தன் பிராணனைத் துறந்திருக்கிறார்.(2) இலக்ஷ்மணா, இந்த சரீரத்தில் பிராணன் அதிபலவீன நிலையில் உள்ளதால், இவரது சுவரம் மந்தமாக இருக்கிறது; கடுந்துன்பத்துடன் காணப்படுகிறார்.(3) ஜடாயுவே, மீண்டும் வாக்கியங்களைச் சொல்ல முடியுமானால், சீதையைக் குறித்தும், உமது வதை குறித்தும் சொல்வீராக. உமக்கு நன்மை விளையட்டும்.(4) 

இராவணன் எதன் நிமித்தம் ஆரியையைக் கடத்தினான்? நான் அவனுக்குச் செய்த எந்த அபராதத்தை நோக்கில் கொண்டு எனக்குப் பிரியமானவளை ராவணன் கடத்தினான்?(5) துவிஜோத்தமரே {பறவைகளில் சிறந்தவரே}, சந்திரனுக்கு ஒப்பானதும், மனோஹரமானதுமான {மனத்தைக் கவர்வதுமான} அந்த முகம் எப்படி இருந்தது? அந்தக் காலத்தில் சீதை என்ன சொன்னாள்?(6) அந்த ராக்ஷசனின் வீரியம் எப்படிப்பட்டது? ரூபம் எத்தகையது? கர்மங்கள் {அவன் செய்த செயல்கள்} என்னென்ன? அவனது பவனம் {வசிப்பிடம்} எங்கே இருக்கிறது? தாதா {ஐயா}, இவற்றைக் கேட்கும் எனக்குச் சொல்வீராக" {என்றான் ராமன்}.(7)

தர்மாத்மாவான அவன் {ஜடாயு}, அநாதையைப் போல அழுது புலம்புபவனை {ராமனை} நிமிர்ந்து பார்த்துக் கலங்கிய குரலுடன் ராமனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(8) "துராத்மாவான ராக்ஷசேந்திரன் ராவணன், வாதத்துடன் {காற்றுடன்} கூடிய இந்த துர்தினம் கலக்கமுறப் பெரும் மாயையைச் செய்து அவளைக் கடத்திச் சென்றான்.(9) தாதா {ஐயா}, அந்த நிசாசரன் {இரவுலாவி}, களைத்துப் போயிருந்த என் சிறகுகள் இரண்டையும் வெட்டிவிட்டு, வைதேஹியான சீதையை எடுத்துக் கொண்டு தக்ஷிண முகமாக {தெற்கை நோக்கிச்}[1] சென்றான்.(10) இராகவா, என் பிராணன் துடிக்கிறது; பார்வை தடுமாறுகிறது, உசீரத்தை {வெட்டிவேரை / விலாமிச்சம் வேரைத்}[2] தலைமயிராகக் கொண்ட சுவர்ண விருக்ஷங்களை {பொன்மரங்களை} நான் பார்க்கிறேன்.(11) காகுத்ஸ்தா, ராவணன் எந்த முஹூர்த்தத்தில் சீதையைக் கொண்டு போனானோ, அது முற்றான தன நஷ்டத்தை ஏற்படுத்துவதும், "விந்தம்" என்ற பெயரைக் கொண்டதுமான முஹூர்த்தமாகும்[3]. சுவாமி {உரிமையாளன்} எவனோ, அவன் சீக்கிரமே அதை {தன்னைவிட்டுப் போனதை / அபகரிக்கப்பட்டதை} மீண்டும் அடைவான். அவன் {ராவணன்} அதை அறிவானில்லை.(12,13அ) இராக்ஷசேஷ்வரனான ராவணன், உனக்குப் பிரியமானவளைக் களவு செய்து, தூண்டில் முள்ளை {கவ்வும்} மீனைப் போலப் பற்றிவிட்டான். சீக்கிரமே அவன் நாசமடைவான்.(13ஆ,இ) ஜனகனின் மகளை நோக்கி நீ கவலையின்றிச் செல்வாயாக. இரணமூர்த்தத்தில் {போர்முனையில்} சீக்கிரமே அவனைக் கொன்று, வைதேஹியுடன் நீ ரமித்திருப்பாய் {இன்புற்றிருப்பாய்}" {என்றான் ஜடாயு}.(14)

[1] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும், தர்மாலயம், கோரக்பூர் பதிப்புகளிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும், "தென் திசையில் சென்றான்" என்றே இங்கே இருக்கிறது. 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெட்டிவேர் என்பது நறுமணமிக்கதும், நார்ச்சத்து மிக்கதுமான இந்தியப் புல்வகையைச் சார்ந்தது. இந்தப் புல்லானது விசிறிகள், திரைகள் ஆகியவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இலைகளுக்குப் பதிலாக புற்களைக் கொண்ட பொன்மரங்கள் மரணத்திற்கான சகுனமாகும்" என்றிருக்கிறது.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முஹூர்த்தம் என்பது, இருபத்துநான்கு மணி நேரங்களைக் கொண்ட {இன்றைய} கால அளவில், நாற்பத்தெட்டு நிமிடங்களாகும். ஒரு நாள் முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அவற்றில் சில நன்மைபயப்பவையாகவும், சில கெடுதலை விளைவிப்பவையாகவும் கருதப்படுகின்றன. தரப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய பட்டியலில் விந்தம் என்ற முஹூர்த்தம் இன்னதென்பதை அறியமுடியவில்லை. விந்தம் என்பது ஒரு நாளின் பதினோராவது முஹூர்த்தத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கெட்டதாகவும் கருதப்படுகிறது. இன்றைய நாட்களில் இது விஜயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது ஜடாயுவின் ஜோதிட அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. "வித்" {"ஈட்டுதல்"}, என்ற வேர்ச்சொல்லில் இருந்து விந்தியம் என்ற பதம் உண்டாகிறது. இந்தக் கணம் இழந்தவனுக்கு சாதகமாகவும், அபகரித்தவனுக்கு சாதகமில்லாமலும் இருக்கிறது. எனவே,  ராவணன் இந்தக் கணத்தில் சீதையை அபகரித்தது அழிவையே தரும்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எந்த வேளையில் ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு சென்றானோ, இதுதான் விந்தமென்கிற (அல்லது விஜயமென்கிற) நல்ல வேளை. ஆனது பற்றி காணாமல் போன பொருளை சீக்கிரமே சுவான்தார் திரும்பி அடைகிறான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ராவணன் சீதையை எடுத்தோடின முகூர்த்தம் விந்தமென்னும் பெயருடையது; அதில் பறிகொடுத்த பொருளை யஜமானன் மீளவும் பெறுவான்; ராவணன் அதனை யறியாமல் சீதையைப் பறித்தனன்" என்றிருக்கிறது.

மரிக்கும்போதும் மயக்கமடையாமல் ராமனிடம் பேசிக் கொண்டிருந்த கிருத்ரனின் அலகில் {கழுகானவனின் வாயில்} இருந்து சதை கலந்த உதிரம் வழிந்தது.(15) "{இராவணனென்பவன்} விஷ்ரவஸின் புத்திரன், சாக்ஷாத் வைஷ்ரவணனுடன் {குபேரனுடன்} பிறந்தவன்" என்பதைச் சொல்லிவிட்டு அந்த பதகேசுவரன் {பறவைகளின் தலைவனான ஜடாயு}, அரிதான தன் பிராணனை விட்டான்.(16) இராமன், தன் கைகளைக் கூப்பி, "சொல்லும், சொல்வீராக" என்று பேசிக் கொண்டிருந்தாலும், கிருத்ரனின் பிராணன் சரீரத்தைத் துறந்து விஹத்திற்குள் சென்றது[4].(17) அவன் {ஜடாயு}, அப்போது சிரத்தை {தலையைப்} பூமியில் சாய்த்து, கால்களை நீட்டி, தன் சரீரத்தை {உடலை} பரப்பியபடியே தரணீதலத்தில் விழுந்தான்.(18)

[4] கழுகான ஜடாயுவின் உயிர், உடலைத் துறந்து வானத்திற்குள் சென்றது.

துக்கங்கள் பலவற்றால் தீனமடைந்த ராமன், தாமிரம் போன்ற கண்களைக் கொண்ட அந்த கிருத்ரன் {கழுகானவன்}, உயிர் போய், அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பாகக் கிடப்பதைக் கண்டு, சௌமித்ரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) "இராக்ஷசர்கள் வசிக்கும் தண்டகாரண்யத்தில் சுகமாக பல வருஷங்கள் வாழ்ந்த இந்த பக்ஷியானவர் {நமக்காக} உயிரைவிட்டுவிட்டார்.(20) அனேக வயது வரை, எவர் வெகுகாலம் குறைவின்றி  வாழ்ந்து வந்தாரோ, அவர் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறார். காலத்தை மீறுவது கடினம் {சாத்தியமில்லை}.(21) இலக்ஷ்மணா, எனக்கு உபகாரம் செய்ய சீதையை மீட்கச் சென்ற இந்த கிருத்ரரை {கழுகானவரை}, பலவந்தமாக ராவணன் கொன்றிருப்பதைப் பார்.(22) இந்த பதகேஷ்வரர் {பறவைகளின் மன்னர்}, தமது பித்ருபிதாமஹர்களுக்குரிய மஹத்தான கிருத்ர ராஜ்ஜியத்தைக் கைவிட்டு, எனக்கு ஹேதுவாக பிராணனைக் கொடுத்திருக்கிறார்.(23) சௌமித்ரியே, திர்யக் யோனிகளுக்குள் சென்றவர்களிலும் {விலங்குகள், பறவைகளின் கருவறைகளுக்குள் சென்றவர்களிலும்}, சூரர்கள், சரண்யர்கள் {பிறருக்கு அடைக்கலம் தருபவர்கள்}, தர்மசாரிகள் {தர்ம வழியில் நடப்பவர்கள்}, சாத்வர்கள் {நல்லவர்கள்} எங்கும் காணப்படுகின்றனர்.(24) 

பரந்தபா, சௌம்யா, என் நிமித்தம் நேர்ந்த கிருத்ரரின் அழிவு ஏற்படுத்தும் துக்கத்தை, சீதை கடத்தப்பட்டபோதுகூட நான் அனுபவிக்கவில்லை.(25) பெரும்புகழ்மிக்கவரும், ஸ்ரீமானுமான ராஜா தசரதர் எப்படியோ, அப்படியே இந்த பதகேஷ்வரரும் {பறவைகளின் மன்னரும்} என்னால் பூஜிக்கப்படவும், மதிக்கப்படவும் தகுந்தவர்.(26) சௌமித்ரியே, விறகுக்கட்டைகளைக் கொண்டு வந்து, பாவகனைக் கடைந்தெடுப்பாயாக {நெருப்பை உண்டாக்குவாயாக}[5]. எனக்காக இறந்து போன கிருத்ர ராஜாவை {கழுகு மன்னர் ஜடாயுவை} தஹனம் செய்ய விரும்புகிறேன்.(27) சௌமித்ரியே, ரௌத்திரமான ராக்ஷசனால் கொல்லப்பட்ட இந்தப் பதகலோகநாதனை {பறவைகள் உலகின் தலைவரான இந்த ஜடாயுவை} சிதையில் ஏற்றி தஹனம் செய்ய விரும்புகிறேன்[6].(28) 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சடங்குகளில் உண்டாக்கப்படும் அக்னி, "அரணி" என்று அழைக்கப்படும் {அதற்குப் பயன்படும் கட்டைகள் அரணிக் கட்டைகள் என்று அழைக்கப்படும்}. ஒரு கட்டையில் குழிவை உண்டாக்கி, மறுகட்டையின் கூர்முனையை அதில் வைத்துக் கடையும்போது, அந்தக் கட்டைகளின் உராய்வில் நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பைப் பஞ்சில் எடுத்து, அதைக் கொண்டே பெரும் சிதையில் நெருப்பு உண்டாக்கப்படும்" என்றிருக்கிறது.

[6] தர்மாலயப் பதிப்பில் இங்கே அதிக சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றின் பொருள் பின்வருமாறு, "வீர! புண்யமான கோதாவரியின் கரையில் சிதையை ஏற்படுத்து". வீரரும், பெரும்புகழ் படைத்தவரும், ஸர்வசரண்யரும், ஸ்ரீமானும், தர்மாத்மாவுமாகி ஸ்ரீராமர் லக்ஷ்மணரை பார்த்து இவ்விஷயத்தில் மேற்கண்டவாறு ஆக்ஞாபித்துவிட்டு ஜடாயுவை எடுத்துக் கொண்டு கோதாவரியின் கரையை நோக்கி அவ்விடத்தினின்று சென்று, புனிதமான தர்ப்பைகள் நிறைந்த அதன் கரையில் இறக்கி வைத்து அதன் மேல் உடனே லக்ஷ்மணனால் கொண்டுவரப்பட்ட கட்டைகளால் சிதையைச் செய்து அக்னியை கடைந்தெடுத்து" என்றிருக்கிறது. அதன்பின் மற்ற பதிப்புகளில் வருவது போலவே தொடர்கிறது. தர்மாலயப் பதிப்பில் இருக்கும் இந்தப் பகுதி, தாதாசாரியர், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் இல்லை.

மஹாசத்வரான கிருத்ர ராஜாவே {பெரும் வலிமைமிக்க கழுகு மன்னரே}, என்னால் அனுமதிக்கப்படும் {விடைகொடுத்து அனுப்பப்படும்} நீர், யஜ்ஞசீலர்களின் {யாகங்களைச் செய்பவரின்} கதியை அடைவீராக; வேள்வி நெருப்பை மூட்டுபவர்களின், போரில் புறமுதுகிடாதவர்களின், பூமியைக் காணிக்கையளிப்போரின் கதியை அடைவீராக. என்னால் {உத்தரக்கிரியை செய்யப்பட்டு} தூய்மையடைந்து, உத்தமமான உலகங்களுக்குச் செல்வீராக[7]" {என்றான் ராமன்}.(29,30)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த தகனச்சடங்கு குறித்த அடிக்குறிப்பு மிக நீண்டதாக இருக்கிறது. அதில் உள்ள முக்கிய பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு, "ஒரு வேதச்சடங்கைச் செய்தால் விளைவது நிச்சயம் புண்ணியமே ஆகும். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்தச் சடங்குகளைச் செய்ய வேண்டியதில்லை. அவை சொர்க்கத்தையோ, முக்தியையோ அடையப்போவதில்லை. இப்பிறவியில் செய்த பாபபுண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவியையே அடையப் போகின்றன. ஆனால் ஜடாயு சொர்க்கத்திற்குத் தகுதியான செயல்களைச் செய்திருக்கிறான். எனவே பல்வேறு பிறவிகளை அடைந்து ஈட்டப்படும் முக்தியை இந்தக் குறுக்கு வழியில் அடைந்துவிடுகிறான். அதனால் தான் ராமன் இங்கே, "என்னால் அனுமதிக்கப்பட்டு, என்னால் தூய்மைப்படுத்தப்பட்டு" என்ற சொற்களைப் பயன்படுத்துகிறான்" என்றிருக்கிறது.

தர்மாத்மாவான ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, பதகேஷ்வரனை சிதையில் ஏற்றி, தன் பந்துவுக்கு {தன் உறவினருக்கு மூட்டுவது} போல நெருப்பை மூட்டி துக்கத்துடன் தகனம் செய்தான்[8].(31) பிறகு, வீரியவானான ராமன், சௌமித்ரியுடன் சேர்ந்து வனத்திற்குள் சென்று, ஸ்தூலமான மஹாரோஹிகளை {கொழுத்த பெரும் மான்களைக்} கொன்று, அந்த துவிஜத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு}  காணிக்கையாகப் பரப்பி வைத்தான்.(32) பெரும்புகழ்பெற்றவனான ராமன், ரோஹி மாமிசத்தை {மான் இறைச்சியை} எடுத்துக் கவளங்களாக {பிண்டங்களாக} உருட்டி, ரம்மியமான பசும்புல் தரையில் சகுனத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு} தத்தம் செய்தான்.(33) எதை துவிஜாதியினர் {இருபிறப்பாளர்கள்}, பிரேதமான மானுடன் ஸ்வர்க்கம் செல்வதற்காகச் சொல்வார்களோ அந்த பித்ருக்களுக்குரியதையே சீக்கிரமாக ராமனும் ஜபித்தான்[9].(34) 

[8] ஏந்தினன் இரு கைதன்னால் ஏற்றினன் ஈமம்தன்மேல்
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன் முறை கடவாவண்ணம்
தேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்

- கம்பராமாயணம்  3537ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்

பொருள்: நிறைந்த நல்ல நூல்களான சாத்திரங்களில் வல்லவனான ராமன், தன்னிரு கைகளாலும் உடலை ஏந்தி, ஈமச்சிதையில் ஏற்றி, நீரையும், சந்தனத்தையும், மலரையும் தூவி, தலைப்பக்கத்தில் எரிகிற நெருப்பை மூட்டி, செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தான்.

[9] தர்மாலயப் பதிப்பில், "பிராமணர்கள் மானிட பிணத்திற்கு பிதுருகர்மாவாகிறதும், ஸ்வர்க்கத்தை யடைவிக்கிறதுமான எந்த ஒன்றை ஜபிக்கிறார்களோ, அதை ஸ்ரீராமர் அதற்கும் (ஜடாயுவுக்கும்) ஜபித்தருளினார்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இறந்தவர்களை வானேற்றத்தக்க யாமயஸூக்தம் முதலிய மந்திரங்களை ஜபித்து, கோதாவரிக்குச் சென்று, தம்பியுடன் நீரிலாடி ஜடாயுவைக் குறித்துத் தருப்பணஞ் செய்து முடித்தருளினர்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன், இத்தகைய ஈமச்சடங்குகளில் பிராமணர்கள் பொதுவாக ஜபிக்கும் ஆபஸ்தம்ப சூத்திரங்கள் என்றழைக்கப்படும் யாமய சூக்தம், நாராயண சூக்தம் என்ற இரண்டு வேத மந்திரங்களை ஜபித்தான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

பிறகு நரவராத்மஜர்களான {மனிதர்களில் சிறந்த தசரதனின் மகன்களான} அவர்கள் இருவரும், கோதாவரி நதிக்குச் சென்று அந்த கிருத்ர ராஜனுக்காக {கழுகு மன்னன் ஜடாயுவுக்காக} நீருக்குள் இறங்கினர்.(35) அப்போது, ராகவர்கள் இருவரும், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட விதிப்படியே அந்த கிருத்ரத்திற்காக ஜலஸ்நானம் செய்து {கழுகான ஜடாயுவுக்காக நீரில் குளித்து}, அந்த கிருத்ர ராஜனுக்கு {கழுகு மன்னனுக்கு} நீர்க்காணிக்கை அளித்தனர்.(36) இரணத்தில் {போரில்} செய்யமுடியாத அற்புத காரியத்தைச் செய்து, வீழ்ந்த அந்த கிருத்ர ராஜா {கழுகு மன்னன் ஜடாயு}, அப்போது, மஹரிஷிக்கு இணையானவன் {ராமன்} மூலம் தூய்மை அடைந்து, புண்ணியமான சுப கதியை அடைந்தான்.(37) பக்ஷிசத்தமனுக்காக உதக காரியங்களைச் செய்த {பறவைகளில் சிறந்த ஜடாயுவுக்காக நீர்க் காணிக்கைகளை அளித்த} அவ்விருவரும், ஸ்திர புத்தியை அடைந்து, சீதையை அடைவதற்காக மனத்தால் பிரவேசித்து, விஷ்ணு, வாசவனை {இந்திரனைப்} போன்ற ஸுரேந்திரர்களை {தேவர்களின் தலைவர்கள் இருவரைப்} போல வனத்திற்குள் சென்றனர்.(38)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை