Showing posts with label ஸ்வயம்பிரபை. Show all posts
Showing posts with label ஸ்வயம்பிரபை. Show all posts

Thursday, 2 November 2023

பிலம் புக்கு நீங்கல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 52 (32)

Enter and leave from cavity | Kishkindha-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களின் நோக்கத்தையும், மலைப்பிளவிற்குள் நுழைந்ததற்கான காரணத்தையும் சொன்ன ஹனுமான்; பிலத்திலிருந்து வானரர்களை வெளியே கொண்டு வந்து விட்ட ஸ்வயம்பிரபை...

Swayamprabha rescues the vanaras, including Hanuman from the cavity
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம்

அப்போது, தர்மசாரிணியும், ஒருப்பட்ட மனம் கொண்டவளுமான அந்த தபஸ்வினி {ஸ்வயம்பிரபை}, ஓய்ந்திருந்த சர்வ ஹரியூதபர்களிடமும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரிடமும்} இந்த வசனத்தைச் சொன்னாள்:(1) “வானரர்களே, பழங்களை பக்ஷித்ததன் மூலம், உங்கள் களைப்பு நீங்கியிருந்தால், என்னால் கேட்கத் தகுந்த அனைத்துக் கதைகளையும் நான் கேட்க விரும்புகிறேன்[1]” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(2)

[1] உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்றேன்
அண்ணல் அவை முற்றும் அறவிட்டு வினை வெல்வான்
எண்ண அரிய பல் பகல் இருந்தவம் இழைத்தேன்
ஐய இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன்
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் 
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள்.

- கம்பராமாயணம் 4584, 4585ம் பாடல்கள், பிலம் புக்கு நீங்கு படலம்

பொருள்: "{பழம், கிழங்கு முதலிய} உண்பதற்குரிய பொருள்கள் உள்ளன, {சந்தனம் முதலிய} பூசுவதற்குரிய பொருள்கள் உள்ளன, {மாலைகள் முதலிய} சூடுவதற்குரிய பொருள்கள் உள்ளன. இவையில்லாமல் இன்னும் உள்ளன. இவை அனைத்தையும் நான் பெற்றிருக்கிறேன். இவற்றையும் அனுபவிக்காமல், பற்றுகளை நீக்கி, தீவினையை வெல்ல எண்ணி, அரிய நெடுங்காலம் பெருந்தபம் செய்து வந்தேன்.{4584} ஐயா, இந்த மலைப்பிளவு நூறு யோசனை விரிந்திருக்கிறது. மேலுலகம் ஏறிச் செல்லும் வழியை நான் அறிய மாட்டேன். உதவி செய்வீர்கள் என்றால், நான் ஈடேறும் வழி ஏற்படும் உபாயத்திற்கான வழிவகையை உங்கள் மனத்தில் சிறிதாவது கருதுங்கள்" என்றாள் {சுயம்பிரபை}.

மாருதாத்மஜனான {வாயு மைந்தனான} ஹனுமான், அவளது அந்த வசனத்தைக் கேட்டுப் பணிவுடன் உள்ளபடியே {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(3) “சர்வலோகராஜாவும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பானவரும், தாசரதியுமான {தசரதரின் மகனுமான} ஸ்ரீமான் ராமர், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணருடனும், தன் பாரியையான {மனைவியான} வைதேஹியுடனும் தண்டகவனத்தில் பிரவேசித்தார். அவரது பாரியை {ராமரின் மனைவியான சீதை} ஜனஸ்தானத்தில் இருந்து ராவணனால் பலவந்தமாகக் கடத்தப்பட்டாள்.(4,5) 

வீரரும், வானரமுக்கியர்களின் ராஜாவும், சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்டவருமான வானரர், அந்த ராஜாவின் சகா {ராமரின் தோழர்} ஆவார். அவரே எங்களிடம் பிரஸ்தாபித்தார் {இவ்வாறு செல்லும்படி சொன்னார்}.(6) “அகஸ்தியர் சஞ்சரிப்பதும், யமனால் ரக்ஷிக்கப்படுவதுமான தக்ஷிணத்திற்கு {தென்திசைக்கு}, அங்கதன் முதலான பிரமுகர்களான நீங்கள், இந்த முக்கிய வானரர்களுடன் சேர்ந்து,{7} காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவனான} ராக்ஷசர்கள் அனைவருடன் கூடிய ராவணனையும், வைதேஹியான சீதையையும் தேடிச் செல்வீராக” என்று ஆணையிட்டார் {சுக்ரீவர்}.(7,8)

நாங்கள் அனைவரும், {சமுத்திரம் வரையில் உள்ள} தக்ஷிண திசை முழுதிலும் தேடினோம். பசியால் பீடிக்கப்பட்ட நாங்கள் அனைவரும், ஒரு விருக்ஷத்தின் {மரத்தின்} அடியில் தஞ்சமடைந்தோம்.(9) வர்ணமிழந்த வதனத்துடன் கூடிய அனைவரும், சர்வ தியான பராயணர்களாக, சிந்தனையெனும் மஹார்ணவத்தில் மூழ்கி, மறுகரைக்குக் கடந்து செல்ல முடியாதவர்களாக இருந்தோம்[2].(10) கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தபோது, கொடிகளும், மரங்களும் அடர்ந்து, இருள் சூழ்ந்திருந்த மஹாபிலத்தைக் கண்டோம்.(11) அங்கிருந்து {அந்த பிலத்திலிருந்து} நீர்த்துளிகளுடன் கூடிய சிறகுகளைக் கொண்டவையும், ஜலத்தில் நனைந்தவையுமான ஹம்சங்களும், குரரங்களும், சாரஸங்களும், வேறு பறவைகளும் வெளியே வந்து கொண்டிருந்தன.(12) “நல்லது, அங்கே பிரவேசிப்போம்” என்று நான் பிலவங்கமர்களிடம் {தாவிச் செல்லும் குரங்குகளிடம்} சொன்னேன். அவர்கள் அனைவருங்கூட அந்த அனுமானத்தையே அடைந்திருந்தனர்.(13)
 
[2] நிறம் மங்கிய முகங்களுடன் கூடிய அனைவரும், திட்டமிடுவதிலேயே முழுழையாக ஆழ்ந்து, சோகமெனும் பெருங்கடலில் மூழ்கி, அக்கரையை அடைய முடியாதவர்களாக இருந்தோம்” என்பது இங்கே பொருள்.  

பிறகு, காரியத்தின் அவசரத்தால் தூண்டப்பட்ட நாங்கள் அனைவரும், {இந்த பிலத்தின்} கீழிறங்கி, பரஸ்பரம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, இங்கே இறங்கி வந்தோம்.(14) இருள் சூழ்ந்த இந்த பிலத்திற்குள் உடனே பிரவேசித்தோம். இவ்வளவே எங்கள் காரியம். இத்தகைய செயல்களின் மூலமே நாங்கள் இங்கே வந்தோம். பசித்து, மனம் தளர்ந்தவர்களாகவே நாங்கள் உன்னிடம் வந்தோம்.(15,16அ) பசியால் பீடிக்கப்பட்ட நாங்கள், உன் ஆதித்ய தர்ம தத்தத்தினால், கிழங்குகளையும், பழங்களையும் உண்டோம்[3].(16ஆ,17அ) பசியுடன் மரணத்தின் வாயிலில் இருந்த எங்கள் அனைவரையும் நீ ரக்ஷித்ததற்குப் பிரதியுபகாரமாக வானரர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” {என்றான் ஹனுமான்}.(17ஆ,18அ)

[3] “விருந்தோம்பும் அறம் செய்யும் நீ தந்த கிழங்குகளையும், கனிகளையும் நாங்கள் பக்ஷித்தோம்” என்பது இங்கே பொருள்.

வானரர்கள் இவ்வாறு சொன்னபோது, சர்வஜ்ஞையான {அனைத்தையும் அறிந்தவளான} ஸ்வயம்பிரபை, சர்வ வானரயூதபர்களிடமும் {அங்கே இருந்த குரங்குக் குழுத்தலைவர்கள் அனைவரிடமும்} இவ்வாறு மறுமொழி கூறினாள்:(18ஆ,19அ) “வலிமைமிக்க சர்வ வானரர்களிடமும் நான் மகிழ்ச்சியடைகிறேன். தர்மத்துடன் நடந்து கொள்ளும் எனக்கு, {உங்களால் செய்ய முடிந்த} எந்தக் காரியமும் இங்கே இல்லை” {என்றாள் ஸ்வயம்பிரபை}[4].(19ஆ,20அ)

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இராமாயணத்தின் பிற பதிப்புகளில் இந்த சர்க்கம் இந்த சுலோகத்துடனேயே {4:19} நிறைவடைகிறது. இதன் பின்வரும் செய்திகள், அடுத்து வரும் சர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது. ஆங்கிலத்தில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், தமிழில் தர்மாலயப்பதிப்பிலும், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும் இந்த இடத்திலேயே, அதாவது 19ஆ,20அ சுலோகத்திலேயே இந்த சர்க்கம் நிறைவடைகிறது. இந்த சர்க்கத்தில் எஞ்சிய பகுதி, அடுத்த சர்க்கத்தில் தொடர்கிறது. ஆங்கிலத்தில், தேசிராஜுஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகள் இரண்டிலும்கூட இங்கே காணும் வகையிலேயே இந்த சர்க்கம் 32 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது.

இவ்வாறு அந்த தபஸ்வினி, தர்மத்திற்கு சம்மதமான, சுபமான வாக்கியத்தை ஹனுமானிடம் சொன்னபோது, அவன் நிந்திக்கத்தகாத கண்களைக் கொண்டவளிடம் {ஸ்வயம்பிரபையிடம், பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(20ஆ,21அ) “தர்மசாரிணியான உன்னை நாங்கள் சரணடைந்தோம். மஹாத்மாவான சுக்ரீவர், எங்களுக்கு எந்த சமயத்தை {கெடுவாகக்} கொடுத்தாரோ, அந்தக் காலம் பிலத்தில் திரிந்து கொண்டிருந்தபோதே கடந்துவிட்டது.(21ஆ,22) அத்தகையவளான {தர்மசாரிணியான} உனக்கு, அந்த சுக்ரீவ வசனத்தை மீறித் தொலைந்தும், ஆயுசுடன் இருக்கும் எங்களை, இந்த பிலத்திலிருந்து கடக்கச் செய்வதே தகும்.(23) தர்மசாரிணியே, சுக்ரீவரிடம் கொண்ட பயத்தால், தயங்கும் எங்கள் அனைவரையும், {இங்கிருந்து} கொண்டு செல்வதே {காப்பாற்றுவதே} உனக்குத் தகும். நாங்கள் செய்ய வேண்டிய மஹத்தான காரியம் இருக்கிறது. இங்கே இருந்தால், எங்களால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது” என்றான் {ஹனுமான்}.(24,25அ)

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், அந்த தபஸ்வினி {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள், “{இந்த பிலத்தில்} பிரவேசித்தால் ஜீவனுடன் திரும்புவது அரிது என்றே நினைத்திருந்தேன்.(25ஆ,26அ) நியமங்களினாலும், தபத்தின் பிரபாவத்தினாலும், இந்த வானரர்கள் அனைவரையும் இந்த பிலத்திலிருந்து கொண்டு செல்ல விரும்புகிறேன்.(26ஆ,27அ) கண்களை மூடாமல் வெளியேற முயல்வது சாத்தியமில்லை. சர்வ வானரபுங்கவர்களே, கண்களை இமைக்காதீர்கள் {மூடுங்கள்}” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(27ஆ,28அ)

அப்போது செல்ல விரும்பியவர்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் இமைக்காமல் இருந்து, மென்மையான அங்கங்களின் {கைவிரல்களின்} துணையுடன் விழிக்காமல் இருந்தனர்.(28ஆ,29அ) பிறகு, கைகளால் மறைக்கப்பட்ட முகங்களுடன் கூடியவர்களும், மஹாத்மாக்களுமான வானரர்கள், இமைப்பொழுதில் மாத்திரமே இவ்வாறு பிலத்திலிருந்து வெளியே வந்தனர்[5].(29ஆ,30அ) 

[5] இந்த ரிக்ஷபிலமே கொல்லி மலையிலுள்ள ஓர் மலைக்குடைவென்றும், இந்த "ஸ்வயம்பிரபையே, கொல்லிப்பாவை" என்றும் அந்த வட்டார மக்களால் நம்பப்படுகிறது.

Swayamprabha release vanaras including Hanuman from the mountain cavity

அங்கே அவர்கள் அனைவரிடமும் பேசிய தர்மசாரிணியான அந்த தபஸ்வினி {ஸ்வயம்பிரபை}, விஷமத்திலிருந்து வெளிவந்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் {பின்வருமாறு} சொன்னாள்:(30ஆ,31அ) “நானாவித மரங்களாலும், கொடிகளாலும் சூழப்பட்டது ஸ்ரீமான் விந்திய கிரியாகும்.{31ஆ} இது பிரஸ்ரவண சைலமாகும் {அருவிகளுடன் கூடிய மலையாகும்}. பெரும் நீரைக் கொண்ட இந்த சாகரத்திலும் உங்களுக்கு நன்மையே விளையட்டும். வானரரிஷபர்களே {வானரர்களில் சிறந்தவர்களே, என்னுடைய} பவனத்திற்கு {வீட்டிற்குச்} செல்கிறேன்” என்று சொன்ன ஸ்வயம்பிரபை, {அந்த வானரர்களை பிலத்திற்கு வெளியே விட்டுவிட்டு} ஸ்ரீமானான அந்த பிலத்திற்குள்ளேயே {மீண்டும்} பிரவேசித்தாள்.(31ஆ,32)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Wednesday, 1 November 2023

ஸ்வயம்பிரபை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 51 (19)

Swayamprabha | Kishkindha-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பொன்மாளிகையின் கதையை ஹனுமானுக்குச் சொன்னது; குகைக்குள் நுழைந்த வானரர்கள் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்த ஸ்வயம்பிரபை...

Swayamprabha giving fruits and tuber to Hanuman
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம்

இவ்வாறு கேட்ட ஹனுமான், அங்கே கிருஷ்ணார்ஜிதம் {கருப்பு மான்தோல்} அணிந்திருந்தவளும், தர்மசாரிணியும், மஹாபாக்கியவதியுமான அந்த தபஸ்வினியிடம் {ஸ்வயம்பிரபையிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னான்:(1) ”பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டுக் களைப்புடன் எங்கும் திரிந்து, பிலத்தின் இருளில் மூழ்கியிருக்கும் இவ்விடத்தில் திடீரெனப் பிரவேசித்தோம்.(2) தரணியின் மஹத்தான பிளவுக்குள் பிரவேசித்த நாங்கள், இவற்றையும், இவ்வித பாவத்தையும் {உணர்வையும்} அடைந்து, ஒப்பிட அற்புதமான விதவிதமானவற்றையும் {உவமை சொல்வதற்கரிய பலவகையானவற்றையும்} கண்டு, {அசுர மாயையோ என்று} பெரிதும் கலக்கமுற்று, நனவிழந்தவர்களானோம். 

இளம் ஆதித்யனின் ஒளியுடன் கூடிய இந்த காஞ்சன விருக்ஷங்கள் {பொன் மரங்கள்} யாருடையவை?(3,4) தூய்மையானவையும், உண்ணத்தகுந்தவையுமான கிழங்குகளும், பழங்களும், காஞ்சன விமானங்களுடனும், புடம்போட்ட தங்கச் சாளரங்களுடனும் கூடியவையும், மணிஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெள்ளியாலானவையுமான கிருஹங்களும்,(5,6அ) புஷ்பித்தவையும், பழங்கள் நிறைந்தவையும், புண்ணிய நறுமணம் கமழ்பவையும், ஜம்பூநதமயமானவையுமான இந்த மரங்களும் யாருடைய தேஜஸ்ஸால் விளைந்தன?(6ஆ,7அ) விமலமான ஜலத்தில் ஜனித்த பத்மங்கள் {தெளிந்த நீரில் பிறந்த தாமரைகள்} காஞ்சனமாகவும், மத்ஸ்யங்களும் {மீன்களும்}, ஆமைகளும் சுவர்ணமாகவும் காணப்படுவது எவ்வாறு?(7ஆ,8அ) உன் மஹிமையையும், இஃது எவருடைய தபோ பலம் என்பதையும் அறியாதவர்களான எங்கள் அனைவருக்கும், அனைத்தையும் விவரிப்பதே உனக்குத் தகும்” {என்றான் ஹனுமான்}.(8ஆ,9அ)

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், தர்மசாரிணியான அந்த தபஸ்வினி, சர்வ பூதங்களின் நலத்திலும் {அனைத்து உயிரினங்களின் நலனிலும்} அர்ப்பணிப்புள்ள ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினாள்:(9ஆ,10அ) “மயன் என்ற பெயரைக் கொண்டவனும், மஹாதேஜஸ்வியும், மாயாவியுமான தானவரிஷபனே, தன் மாயையின் மூலம் இந்தக் காஞ்சன வனம் அனைத்தையும் நிர்மாணித்தான்.(10ஆ,11அ) எவன் காஞ்சனமயமானதும், திவ்யமானதுமான இந்த உத்தம பவனத்தை நிர்மாணித்தானோ, அவனே {மயனே} முன்பு தானவ முக்கியர்களின் விஷ்வகர்மனாக {அசுரத்தச்சனாக} இருந்தான்.(11ஆ,12அ) 

அவன் {மயன்}, மஹத்தான இந்த வனத்தில், ஆயிரம் வருஷங்கள் தபம் பயின்று, சர்வ ஔஷஸன தனத்தையும் பிதாமஹரிடம் வரமாகப் பெற்றான்[1].(12ஆ,13அ) சர்வத்தையும் வகைப்படுத்தி, சர்வ காமேஷ்வரனாக {தான் விரும்பிய அனைத்தையும் ஆள்பவனாக} இருந்த அந்த பலவான், இந்த மஹாவனத்திலேயே கொஞ்ச காலம் சுகமாக வசித்திருந்தான்.(13ஆ,14அ) அவன் {மயன்}, அப்சரஸ் ஹேமையுடன் கூடியிருந்தபோது, ஈசனான புரந்தரன், அசனியை {வஜ்ராயுதத்தை / இடியை} ஏவி, அந்த தானவபுங்கவனை {மயனைக்} கொன்றான்.(14ஆ,15அ) சாஸ்வதமான காம போகங்களுடன் கூடிய {ஆசைப்படும் இன்பங்களைத் தரவல்ல} ஹிரண்யமயமான இந்தக் கிருஹமும், இந்த உத்தமவனமும் அந்த ஹேமைக்கு பிரம்மனால் தத்தம் செய்யப்பட்டவையாகும்.(15ஆ,16அ)

[1] “உசனஸ் என்றும் அழைக்கப்படும் சுக்ராசாரியரின், சிற்ப சாஸ்திரக் கல்வி எனும் செல்வத்தையும் பிரம்மதேவனிடம் வரமாகப் பெற்றான்” என்பது இங்கே பொருள். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சுக்கிராசாரியர், அசுரர்களின் குருவும், புரோஹிதருமாவார். அவர், வெறுங்காற்றில் பொருட்களை வருவித்து, திவ்யமான கட்டுமானங்களை உருவாக்கும் கட்டடக் கலை பொறியியலை முறைப்படுத்தியவராவார். அதுபோலவே, சில மனிதர்களும் தாங்கள் சிறிதும் கஷ்டப்படாமல் செல்வத்தைப் பெறத் தங்களுக்கு நெருக்கமான தேவர்களிடம் மன்றாடுகின்றனர். சுக்ராசாரியரால் வெற்றுவெளியில் இருந்து தேவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியுமென்றால், இந்தச் செயல்பாடுகளைத் தவிர வேறேதும் இல்லாத தேவர்களாலும் தங்களுக்கு வேண்டிய வளங்களை அளிக்க முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. எனவே, இந்த மயன் ஓர் அசுரனாக இருப்பதால், தங்கள் அசுரப் புரோஹிதரான சுக்ராசாரியரின் செல்வத்தை, அதாவது கட்டுமானப் பொறியியல் ஞானத்தைக் கொள்ளையிட விரும்பினான். பிரம்மனும் தேவர்களுக்கு நன்மைசெய்ய இந்தக் குறுக்குவழியில் அதை வழங்கினான்” என்றிருக்கிறது.

Swayamprabha giving a fruit to a vanara

வானரோத்தமா {வானரர்களில் உயர்ந்தவனே}, மேருசாவர்ணியின் மகளும், ஸ்வயம்பிரபையுமான {ஸ்வயம்பிரபை என்ற பெயரைக் கொண்டவளுமான} நான், ஹேமையின் இந்த பவனத்தை ரக்ஷித்து வருகிறேன்.(16ஆ,17அ) என் பிரியசகியும் {விருப்பத்திற்குரிய தோழியும்}, நிருத்தகீதவிசாரதையுமான {ஆடல், பாடல்களில் வல்லவளுமான} ஹேமை, இந்த மஹாபவனத்தை ரக்ஷிக்கும் வரத்தை எனக்கு தத்தம் செய்தாள்.(17ஆ,18அ) என்ன காரியத்திற்காக, அல்லது எதற்கு ஹேதுவாக {என்ன காரணத்திற்காக} காந்தாரங்களில் திரிகிறீர்கள்? மேலும், கடப்பதற்கரிய இந்த வனத்தை நீங்கள் அனைவரும் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?(18ஆ,19அ) உண்ணத்தகுந்த, தூய்மையான கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, பானங்களையும் பருகிவிட்டு, சர்வத்தையும் என்னிடம் சொல்வதே உனக்குத் தகும்” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(19ஆ,இ)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Tuesday, 31 October 2023

ரிக்ஷபிலம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 50 (41)

Riksha cavity | Kishkindha-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் ரிக்ஷபிலத்திற்குள் புகுந்தது; ஸ்வயம்பிரபையைச் சந்தித்தது...

Tapaswini Swayamprabha and Lord Hanuman
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு

கபியான {குரங்கான} ஹனுமான்... தாரன், அங்கதன் ஆகியோருடன் சேர்ந்து, விந்தியத்தின் குகைகளிலும், கஹனங்களிலும் {ஆழமான காடுகளிலும்} தேடினான்.(1) பிறகு, சுற்றிலும் சிம்ஹங்களும், சார்தூலங்களும் {புலிகளும்} நிறைந்த குகைகளிலும், அந்த நகேந்திரத்தின் {மலையரசான விந்தியத்தின்} பாறைக்கூர்முகடுகளிலும், மஹாபிரஸ்ரவணங்களிலும் {பேரருவிகளிலும்} தேடினான்.(2) அந்த சைலத்தின் தென்மேற்கு கோடியை {சிகரத்தை} அடைந்தவர்கள், அங்கேயே வசித்திருந்தபோது, அந்த {தவணைக்} காலமும் வேகமாகக் கடந்தது.(3) குகைகளுடனும், அடைதற்கரிய பெருங்காடுகளுடனும் கூடிய அந்த தேசம் {இடம்}, தேடுதற்கரியதாக இருப்பினும், வாயு சுதன் {ஹனுமான்}, அங்கேயுள்ள சர்வ பர்வதங்களிலும் தேடினான்.(4)

பரஸ்பரம் பிரிந்து தூரமாகச் சென்றுவிடாதபடி அன்யோன்யமாக கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன் ஆகியோரும்,{5} மைந்தனும், துவிவிதனும், ஹனுமானும், ஜாம்பவானும், யுவராஜனான அங்கதனும், வனகோசரனான {வனத்தில் திரிபவனான} தாரனும்,{6} கிரிஜாலங்களால் {மலைத்தொடர்களால்} சூழப்பட்ட தேசங்களைத் தொடர்ந்து, தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடினார்கள். அப்போது அங்கே மிகப் பெரிய பிலம் {மலைப்பிளவு / குகை} ஒன்றைக் கண்டனர்.{7} அடைவதற்கரியதும், ரிக்ஷ பிலம் {கரடிக் குகை} என்ற பெயரைக் கொண்டதுமான அஃது, {மயன் என்ற} ஒரு தானவனால் நன்றாக ரக்ஷிக்கப்பட்டு வந்தது.(5-8அ) 

பசி, தாகத்தால் பீடிக்கப்பட்டுக் களைப்படைந்தவர்களும், பருகத் தண்ணீர் தேடியவர்களுமான அவர்கள், லதைகள், விருக்ஷங்களால் {கொடிகளாலும், மரங்களாலும்} சூழப்பட்ட அந்த மஹத்தான பிலத்தைக் கண்டனர்.(8ஆ,9அ) கிரௌஞ்சங்களும், ஹம்சங்களும், சாரஸங்களும், ஜலத்தில் நனைந்தவையும், பத்மரேணுக்களால் {தாமரைத் தாதுக்களால்} சிவந்த அங்கங்களுடன் கூடியவையுமான சக்கரவாகங்களும் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தன.(9ஆ,10அ) அப்போது அந்த வானரரிஷபர்கள் {வானரர்களில் சிறந்தவர்கள்}, சுகந்தமானதும், அடைதற்கரியதுமான அந்த பிலத்தை நெருங்கி, வியப்படைந்து, மனத்தில் பெரிதும் ஆச்சரியமடைந்தனர்.(10ஆ,11அ) தேஜோவான்களும், மஹாபலவான்களுமான அந்த பிலவக உத்தமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் மேலானவர்கள்}, பொதுவாக சந்தேகத்தை அடைந்தாலும், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த பிலத்தை நோக்கிச் சென்றனர்.(11ஆ,12அ) நானாவித உயிரினங்கள் திரிவதும், தைத்தியேந்திரனின் நிலயத்திற்கு {அசுரமன்னனின் வசிப்பிடத்திற்கு} ஒப்பானதுமான அது, காணக்கூடாததைப் போல கோரமானதாகவும், எல்லாவகையிலும் புகுவதற்கரிதானதாகவும் இருந்தது.(12ஆ,13அ)

அப்போது, பர்வத உச்சிக்கு ஒப்பான பளபளப்புடன் கூடியவனும், காந்தார வன கோவிதனும் {ஆழமான காட்டுப் பகுதிகளை நன்கறிந்தவனும்}, மாருதாத்மஜனுமான {வாயுவின் மைந்தனுமான} ஹனுமான், கோரமடைந்த வானரர்களிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13ஆ,14அ) “நாம் அனைவரும், தக்ஷிண {தெற்குத்} திசையில் கிரிஜாலங்களால் {மலைத்தொடர்களால்} சூழப்பட்ட தேசங்களில் தேடிக் களைத்தும், மைதிலியை இன்னும் கண்டோமில்லை.(14ஆ,15அ) இந்த பிலத்தில் இருந்து ஹம்சங்களும், கிரௌஞ்சங்களும், சாரஸங்களும்,{15ஆ} ஜலத்தில் நனைந்த சக்கரவாகங்களும் எங்கும் திரிந்து கொண்டிருக்கின்றன. இங்கே நீருடன் கூடிய கூபமோ {கிணறோ}, ஹிரதமோ {மடுவோ} நிச்சயம் இருக்க வேண்டும்.{16} அதேபோல இந்த பிலத்தின் துவாரத்தில் {குகையின் வாயிலில்} மரங்கள் செழித்திருக்கின்றன” {என்றான் ஹனுமான்}.(15ஆ-17அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும், இருள் சூழ்ந்த அந்த பிலத்திற்குள் நுழைந்த ஹரயர்கள் அனைவரும், சந்திர, சூரியர்கள் இல்லாததைக் கண்டு ரோமஹர்ஷணமடைந்தனர் {மயிர்ச்சிலிர்ப்பை அடைந்தனர்}. (17ஆ,18அ) அங்கே அந்த ஹரிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்}, சிம்ஹங்களையும், அதே போன்ற மிருக, பக்ஷிகளையும் {விலங்குகளையும், பறவைகளையும்} கண்டவாறே இருள் சூழ்ந்த பிலத்திற்குள் பிரவேசித்தனர்.(18ஆ,19அ) அவர்களுக்குப் பார்வையோ, தேஜஸ்ஸோ, பராக்கிரமமோ இல்லாமல் போகவில்லை. அவர்களின் கதியானது வாயுவைப் போல இருந்தது. இருளிலும் பார்வை பெற்றவர்களாக இருந்தனர்.(19ஆ,20அ) அந்த பிலத்திற்குள் வேகமாகப் பிரவேசித்த அந்த கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள்}, பிரகாசமானதும், அதியழகுடையதுமான உத்தம தேசம் {இடம்} ஒன்றைக் கண்டனர்.(20ஆ,21அ) அப்போது அந்த பயங்கரர்கள் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} இறுகத் தழுவிக்கொண்டு, நானாவித மரங்கள் அடர்ந்த அந்த பிலத்தில் ஒரு யோஜனை தூரம் நடந்தனர்.(21ஆ,22அ) நனவிழந்து, தாகமடைந்து, பெரிதும் குழப்பமடைந்த நிலையில் நீரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள், சோர்வில்லாமல் அந்த பிலத்தில் கொஞ்ச காலம் தாவித்திரிந்தனர்.(22ஆ,23அ) தளர்ச்சியடைந்த தீனவதனத்துடன் {மெலிந்த பரிதாபமான முகத்துடன்} கூடியவர்களும், களைப்படைந்தவர்களுமான அந்த வீர பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, ஜீவிதத்தில் நிராசை அடைந்தபோது {வாழ்வதில் ஆசையை இழந்தபோது}, ஓர் ஒளியைக் கண்டனர்.(23ஆ,24அ)

பின்னர், இருளற்ற வனத்துடன் கூடிய தேசத்தை {ஓரிடத்தை} அடைந்த அந்த சௌம்யர்கள் {வானரர்கள்},{24ஆ} ஒளிமிக்க வைஷ்வானரப் பிரபையுடன் {வேள்வி நெருப்பின் பிரகாசத்துடன்} கூடிய காஞ்சன விருக்ஷங்களையும் {பொன்மரங்களையும்}, சாலங்கள் {ஆச்சா மரங்கள்}, தாலங்கள் {பனை மரங்கள்}, தமாலங்கள் {மருத மரங்கள்} ஆகியவற்றையும், புன்னாகங்கள் {புன்னை மரங்கள்}, வஞ்சுளங்கள் {மகிழ மரங்கள்}, தவங்கள்,{25} சம்பகங்கள், நாக விருக்ஷங்கள், புஷ்பித்த கர்ணீகாரங்கள் {கோங்கு / சரக்கொன்றை மரங்கள்}, சித்திரமான காஞ்சன {பொன்} மலர்மாலைகளையும், சிவந்த தளிர்களையும்{26} மணிமுடியாகக் கொண்ட லதைகள் {கொடிகள்} ஆகியவற்றையும், ஹேம ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டவையும், இளம் ஆதித்யனின் ஒளியுடன் கூடியவையும், வைடூர்யமயமான வேதிகைகள்,{27} ஒளிரும் வடிவங்களுடனும், ஹிரண்யமயமான {பொன்மயமான} பெரும் மரங்களையும், நீல வைடூர்ய வர்ணத்துடனும் கூடிய பத்மினிகளையும், அவற்றைச் சுற்றித் திரியும் பறவைகளையும்,{28} பால அர்க்கனின் {சூரியனின்} ஒளிக்கு ஒப்பான மஹத்தான காஞ்சன விருக்ஷங்களையும் {பெரும் பொன்மரங்களையும்} கண்டனர்.(24ஆ-29அ) பிறகு, ஜாதரூபமயமான மத்ஸ்யங்களையும் {மீன்களையும்}, மஹத்தான பங்கஜங்களையும் {தாமரைகளையும்}, தெளிவான நீரையும் கொண்ட நளினிகளையும் அவர்கள் கண்டனர்.(29ஆ,30அ) 

அங்கே காஞ்சனம் {தங்கம்}, அதே போல ராஜதம் {வெள்ளி} ஆகியவற்றாலான விமானங்களுடனும்,{30ஆ} பொன்மயமான கவாக்ஷங்களுடனும் {சாளரங்களுடனும்}, முத்துச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஹைம, ராஜத பௌமங்களுடனும் {தங்கத்தாலும், வெள்ளியாலுமான பல்லடுக்குத் தளங்களுடனும்} கூடியவையும், வைடூரியங்களும், மணிகளும் பதிக்கப்பட்டவையுமான{31} முக்கியமான கிருஹங்களை {வீடுகளை} அந்த ஹரயர்கள் {குரங்குகள்} அங்கே எங்கும் கண்டனர்.(30ஆ-32அ) மணிப்ரவாளங்களின் {பவளமணிச்சரங்களின்} ஒளிக்கு ஒப்பான புஷ்பங்களுடனும், பழங்களுடனும் கூடிய விருக்ஷங்களையும், பொன் தேனீக்களையும், எங்குமுள்ள தேனையும்,{32ஆ,33அ) மணிகளாலும், காஞ்சனத்தாலும் ஆனவையும், சித்திரமானவையும், விசாலமானவையுமான பல்வேறு சயனங்களையும், ஆசனங்களையும் {படுக்கைகளையும், இருக்கைகளையும்}, பொன்னாலும், வெள்ளியாலும் ஆன பாத்திரங்களின் குவியல்களையும் எங்கும் கண்டனர்.(33ஆ,34) திவ்யமான அகருக்களையும் {அகில்கட்டைகள்}, சந்தனங்களின் {சந்தனக்கட்டைகளின்} குவியல்களையும், தூய்மையானவையும், உண்ணத்தக்கவையுமான கிழங்குகளையும், பழங்களையும்,(35) உயர் ரக பானங்களையும், ரசமிக்க மதுவையும் {சுவைமிக்க தேனையும்}, திவ்யமானவையும், உயர்ரகம்  சார்ந்தவையுமான ஆடைகளின் குவில்களையும், சித்திரமான கம்பளங்கள், மான்தோல்கள் ஆகியவற்றின் குவியல்களையும்,{36,37அ} ஆங்காங்கே நிறுவப்பட்டவையும், வைஷ்வானரப்ரபையுடன் {வேள்வி நெருப்பின் பிரகாசத்துடன்} ஒளிர்பவையும், தூய்மையானவையுமான ஜாதரூபத்தின் {தங்கக்} குவியல்களையும் அந்த வானரர்கள் கண்டனர்[1].(37ஆ,38அ) 

[1] அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனித்தண் தேறலும்
இமிழ் கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பது
கன்னி நெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்
இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார்.

- கம்பராமாயணம் 4557,4558ம் பாடல்கள், பிலம் புக்கு நீங்கு படலம்

பொருள்: அமுதத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும், தமிழ்மொழிக்கு நிகரான இனிய தேனும், ஒப்பற்ற குளிர்ந்த மதுவும், இனிய பழங்களின் திரட்சியும், இவைபோன்ற இன்னும் பிற உணவுப் பொருள்களும் மணம்வீசுமாறு நிறைந்துள்ள எல்லையற்றுப் பெருமைவாய்ந்த அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தைக் கண்ணெதிரே கண்டனர். “இந்நகரே பகைவன் ராவணனின் ஊர்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தவர்களாக, பொன்மயமாக நீண்டு அகன்றிருக்கும் நகரத்து வாயிலில் இனிதே நுழைந்தனர்.

மஹாபிரபையுடன் கூடியவர்களும், சூரர்களுமான வானரர்கள், அந்த பிலத்தில் ஆங்காங்கே தேடிக் கொண்டிருந்தபோது, அருகிலேயே யாரோவொரு ஸ்திரீயைக் கண்டனர்[2].(38ஆ,39அ) மரவுரியும், மான்தோலும் உடுத்தியவளும், நியதமான ஆஹாரம் கொண்டவளும், தேஜஸ்ஸில் ஜொலிப்பவளுமாக அங்கே அந்த தபஸ்வினியை அவர்கள் கண்டனர்.(39ஆ,40அ) ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும் அங்கே வியப்படைந்து நின்றபோது, ஹனுமான், “நீ யார்? இந்த பிலம் யாருடையது?” என்று கேட்டான்.(40ஆ,இ)

[2] எக்குறியொடு எக்குணம் எடுத்து இவண் உரைக்கேன்
இக்குறியுடைக் கொடி இராமன் மனையாளோ
அக்கு வடம் முத்தமணி ஆரமதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான்

- கம்பராமாயணம் 4571ம் பாடல், பிலம் புக்கு நீங்கு படலம்

பொருள்: "{சீதைக்குறிய} அடையாளங்களில் எந்த குணம் இவளிடம் இருப்பதாகச் சொல்வேன்? கொடி போன்ற அடையாளத்தைக் கொண்ட இவளே ராமனின் மனைவியோ? இந்த மாலை முத்தினாலான மாலையோடு ஒப்பாகுமென்றால், இவளும் அவளுக்கு ஒப்பானவளாகவே இருப்பாள்" என ஹனுமான் உரைத்தான்.

Tapaswini Swayamprabha and Lord Hanuman

கிரிக்கு ஒப்பாக ஒளிர்ந்த ஹனூமான், கைகளைக் கூப்பிக் கொண்டு அந்த முதிர்ந்தவளை வணங்கிவிட்டு, “நீ யார்? பிலத்திலுள்ள பவனங்களும் {வீடுகளும்}, இந்த ரத்தினங்களும் யாருடையவை? சொல்வாயாக” என்று கேட்டான்.(41)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 41

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை