Showing posts with label இடம். Show all posts
Showing posts with label இடம். Show all posts

Saturday, 5 October 2024

அழகிய லங்கை | யுத்த காண்டம் சர்க்கம் - 039 (29)

Beautiful Lanka | Yuddha-Kanda-Sarga-039 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரவில், சுவேல மலையின் உச்சியில் இருந்து லங்கையின் காடுகள், அழகிய தோட்டங்கள், பூங்காக்கள், அரண்மனைகள் ஆகியவற்றைக் கண்டது...

Rama seeing Lankapuri in the peak of Trikuta mountain from Suvela Mountain


வீர ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் முதன்மையானவர்கள்}, அங்கே சுவேலத்தில் அந்த ராத்திரியில் விழித்திருந்து லங்கையின் வனங்களையும், உபவனங்களையும் கண்டனர்.(1) சமமான நிலப்பரப்பு, விசாலமாகவும், ரம்மியமாகவும், நீண்டு தொடரும் சரணாலயமாகவும் கண்களுக்கு விருந்தளிப்பதைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர்.(2) சம்பகம் {செண்பகம்}, அசோகம், புன்னாகம் {புன்னை}, சாலம் {ஆச்சா / மராமரம்}, தாலம் {பனை} ஆகியவற்றால் நிறைந்ததும், தமால {பச்சிலை மர} வனங்களால் மறைக்கப்பட்டதும், நாகமாலை {நாகேசர} மரங்களால் சூழப்பட்டதும்,{3} ஹிந்தாலம் {சீதாள மரம்}, அர்ஜுனம் {மருத மரம்}, முழுமையாகப் புஷ்பித்த நீபம் {கடம்பு}, சப்தபர்ணம் {ஏழிலைப்பாலை}, திலகம் {மஞ்சாடி}, கர்ணிகாரம் {கோங்கு / சரக்கொன்றை}, பாடலம் {பாதிரி} ஆகியவற்றுடன் கூடியதும்,{4}  நுனிகள் புஷ்பித்த, கொடிகள் படர்ந்த, திவ்யமான, பலவிதமான மரங்களுடனும் கூடிய லங்கை இந்திரனின் அமராவதியைப் போலிருந்தது.{5} விசித்திர மலர்களும், சிவந்த இளந்தளிர்களும் நிறைந்த மரங்களுடனும், நீல வண்ணமிக்க பசும்புல் தரையுடனும் அது {லங்கை} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(3-6)

Friday, 30 August 2024

வானர சேனையைக் கண்ட ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 026 (48)

Ravana looks at the vanara army | Yuddha-Kanda-Sarga-026 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாளிகையின் உச்சிக்குச் சென்று ராமனின் படையைப் பார்த்த ராவணன்; படையில் உள்ள முக்கிய வானரர்களை ராவணனுக்குச் சுட்டிக்காட்டிய சாரணன்...

Ravana watching Vanaras from his palace terrace


சாரணன் தயக்கமில்லாமல் சொன்ன அந்த பத்தியமான {நலம்பயக்கும்} சொற்களைக் கேட்ட ராஜா ராவணன், சாரணனிடம் {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "தேவ, கந்தர்வ, தானவர்களே என்னுடன் யுத்தம் செய்தாலும், சர்வலோகமும் எனக்கு பயத்தை விளைவித்தாலும் சீதையை நான் கொடுக்க மாட்டேன்[1].(2)  சௌம்யா, ஹரிக்களால் {குரங்குகளால்} அதிகம் பீடிக்கப்பட்டதால் பயத்தில் இவ்வாறு, 'சீதையைத் திருப்பித் தருவது நல்லது' என்று நீ நினைக்கிறாய்.(3) சமரில் என்னை வெல்லத்தகுந்த பகைவன் எவன்?"  என்ற கடும் வாக்கியத்தைச் சொன்னான் ராக்ஷசாதிபன் ராவணன்.{4}

Wednesday, 6 March 2024

திருவாழி | சுந்தர காண்டம் சர்க்கம் - 36 (47)

Signet Ring given | Sundara-Kanda-Sarga-36 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையிடம் மோதிரத்தை ஒப்படைத்த ஹனுமான்; சீதையின் நம்பிக்கை...

Hanuman speaking to Seetha

மஹாதேஜஸ்வியும், பவனாத்மஜனுமான ஹனுமான், சீதையின் நம்பிக்கையைப் பெறும் காரணத்திற்காக மீண்டும் {பின்வரும்} வாக்கியத்தைப் பணிவுடன் பேசினான்:(1) “மஹாபாக்யவதியே, வானரனான நான், மதிமிக்க ராமரின் தூதனாவேன். தேவி, ராம நாமம் பொறிக்கப்பட்ட இந்த அங்குலியை {கணையாழியைப்} பார்.(2) உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் மஹாத்மாவான அவரால் {ராமரால்} தத்தம் செய்யப்பட்டதைக் கொண்டு வந்தேன். சமாதானம் அடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. துக்கத்தின் பலத்திலிருந்து விடுபடுவாயாக[1]” {என்றான் ஹனுமான்}.(3) 

Saturday, 2 March 2024

ஹனுமான் சொன்ன வரலாறு | சுந்தர காண்டம் சர்க்கம் - 35 (89)

The history said by Hanuman | Sundara-Kanda-Sarga-35 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்களின் அடையாளங்களை சீதை கேட்க, அவற்றையும், உள்ளபடியே நடந்தவற்றையும், லங்கையை அடைந்ததையும், தான் பிறந்த வரலாற்றையும் சொன்ன ஹனுமான்...

Seetha begins to trust Hanuman

வானரரிஷபனிடம் {வானரர்களில் சிறந்த ஹனுமானிடம்} இருந்து அந்த ராமகதையைக் கேட்ட வைதேஹி, மதுரமான குரலில் சாந்தமாக இந்த வசனத்தைச் சொன்னாள்:(1) “இராமருடன் உனக்கு தொடர்பு எங்கே ஏற்பட்டது? இலக்ஷ்மணரை எப்படி அறிந்தாய்? வானரர்களுக்கும், நரர்களுக்கும் இடையிலான சந்திப்பு எப்படி ஏற்பட்டது?(2) வானரா, ராமருக்கும், லக்ஷமணருக்கும் உரிய லிங்கங்கள் {அடையாளங்கள்} எவையோ, அவற்றை எனக்குச் சொல்வாயாக. மீண்டும் சோகம் என்னை அணுகாதிருக்கட்டும்.(3) அந்த ராமருக்கும், லக்ஷமணருக்கும் உரிய தோற்றம் எவ்வகையானது? ரூபம் எவ்வகையானது? தொடைகள் எப்படிப்பட்டவை? கைகள் எப்படிப்பட்டவை? எனக்குச் சொல்வாயாக” {என்றாள் சீதை}.(4)

Friday, 23 February 2024

ஹனுமானின் மதுர வாக்கியம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 31 (19)

Sweet words of Hanuman | Sundara-Kanda-Sarga-31 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் மகிமையை உரைத்த ஹனுமான்; இதில் மகிழ்ச்சியடைந்த சீதை, மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஹனுமானைக் கண்டது...

Seetha saw Hanuman in the tree branch

இவ்வாறு பலவிதங்களில் சிந்தையில் சிந்தித்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, வைதேஹிக்கு {மட்டும்} கேட்கும் அளவில் {பின்வரும்} மதுரமான வாக்கியத்தைப் பேசினான்[1]:(1) “தசரதன் என்ற பெயருடைய ராஜா, ரதங்கள், குஞ்சரங்கள, வாஜிகள் {தேர்கள், யானைகள், குதிரைகள்} ஆகியவற்றைக் கொண்டவராகவும், இக்ஷ்வாகுக்களில் பெரும்புகழ்பெற்றவராகவும், புண்ணியசீலராகவும், மஹாகீர்த்தியுடையவராகவும்,(2) இராஜரிஷிகளில் குணசிரேஷ்டராகவும், தபத்தில் ரிஷிகளுக்கு சமமானவராகவும், சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவராகவும், பலத்தில் புரந்திரனுக்கு {இந்திரனுக்கு} சமமானவராகவும்,(3) அஹிம்சையை விரும்புகிறவராகவும், பெருந்தன்மை உள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், சத்தியபராக்கிரமராகவும், இக்ஷ்வாகு வம்சத்தில் முக்கியமானவராகவும், லக்ஷ்மீவானாகவும், லக்ஷ்மிவர்தனராகவும்,(4) பார்த்திபர்களுக்குரிய பண்புகளுடன் {ராஜலட்சணங்களுடன்} கூடியவராகவும், செல்வப்பெருக்கு உடையவராகவும், பார்த்திபரிஷபராகவும் {மன்னர்களில் சிறந்தவராகவும்}, சதுரந்தங்களால் {நான்கு எல்லைகளால்} சூழப்பட்ட பிருத்வியில் புகழ்பெற்றவராகவும், சுகத்தைக் கொடுப்பவராகவும் சுகமாக இருந்தார்.(5)

[1] சென்ற சர்க்கத்தில் சீதையுடன் சம்ஸ்கிருதத்தில் பேச வேண்டாம் என்று தீர்மானித்த ஹனுமான், மனிதர்களுக்குப் புரியும் இனிய மொழியில் பேசினான் என்பதற்குப் பொருள் கொள்ளும் முயற்சியில், அம்மொழி தமிழாகவே இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சிலர் சொல்கிறார்கள். “சம்ஸ்கிருதம் பேசினால் ராவணன் பேசுகிறான்” என்று சீதை ஐயுறுவாள் என்று நினைத்த ஹனுமான், ஒரு காலத்தில் லங்கையின் பொதுவான வழக்கு மொழி என்று கருதப்படும் “தமிழில் பேசினால், லங்கையிலேயே வாழ்ந்து வரும் ராட்சசிகள் தமிழைப் புரிந்து கொள்வார்கள்” என்று ஐயுறமாட்டானா? என்பது மாற்றுத்தரப்பின் வாதம். ஹனுமான் சம்ஸ்கிருதத்தில் பேசியிருக்க மாட்டான் என்பது, முன்சென்ற சர்க்கத்தில் வரும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படுகிறது. வால்மீகியில், இதுவரை வந்துள்ள சர்க்கங்களில், ஹனுமான் சீதையிடம் என்ன மொழியில் பேசினான் என்பதற்கான நேரடிக் குறிப்புகளேதும் இல்லை. இதே காண்டத்தின் 36ம் சர்க்கம் 9ம் சுலோகத்தில், பிராக்ருதம், சம்ஸ்கிருதம் குறித்த ஒப்பீடு இருக்கிறது. ஒருவேளை இங்கே ஹனுமான் பேசுவது பிராக்ருத மொழியாகவும் இருக்கலாம்.

அத்தகையவருக்கு {அந்த தசரதருக்கு}, பிரியத்திற்குரியவராகவும், தாராதிபனுக்கு ஒப்பான முகம் கொண்டவராகவும், விசேஷஜ்ஞராகவும் {சிறப்புகளை அறிந்தவராகவும்}, தனுசு தரித்தவர்களில் சிரேஷ்டராகவும்,  ராமன் என்ற பெயரைக் கொண்ட ஜ்யேஷ்ட புத்திரன் {மூத்த மகன்} இருந்தார்.(6) தன் விருத்தத்தை {நடத்தையை} ரக்ஷிப்பவரும், தன் ஜனங்களை ரக்ஷிப்பவரும், ஜீவலோகத்தை ரக்ஷிப்பவரும், தர்மத்தை ரக்ஷிப்பவரும், பரந்தபரும் {பகைவரை எரிப்பவரும்},(7) சத்தியத்தைப் பேசுபவருமான அந்த வீரர், விருத்தரான {முதிர்ந்தவரான} பிதாவின் வசனத்தால், பாரியையுடனும், பிராதாவுடனும் {மனைவியுடனும், உடன்பிறந்தவருடனும்} நாடு கடந்து வனத்திற்குச் சென்றார்.(8) அந்த மஹாரண்யத்தில் மிருகங்களை வேட்டையாடுகையில், சூரர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ராக்ஷசர்கள் பலர் அவரால் கொல்லப்பட்டனர்.(9) கரதூஷணர்கள் ஹதத்தையும், ஜனஸ்தான வதத்தையும் {பதினான்காயிரம் ராக்ஷசர்கள் கொல்லப்பட்டதையும்} கேட்டுக் கோபமடைந்த ராவணனால் ஜானகி அபகரிக்கப்பட்டாள்.{10} வனத்தில் மாயா மிருக ரூபத்தால் {மாயமான் வடிவத்தில் வந்த மாரீசனால்} ராமர் வஞ்சிக்கப்பட்டார்.(10,11அ)

அந்த ராமர், அநிந்திதையான அந்த சீதா தேவியை வனத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவர் என்ற பெயருடைய வானரரைச் சந்தித்து மித்ரராக்கி {நண்பராக்கிக்} கொண்டார்.(11ஆ,12அ) பிறகு, பரபுரஜயரும் {பகைவரின் நகரங்களை வெல்பவரும்}, மஹாபலவானுமான அந்த ராமர், வாலியைக் கொன்று, சுக்ரீவரிடம் அந்தக் கபிராஜ்ஜியத்தை {குரங்குகளின் ராஜ்ஜியத்தைக்} கொடுத்தார்.(12ஆ,13அ) சுக்ரீவரால் அனுப்பப்பட்டவர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ஆயிரக்கணக்கான ஹரயர்கள் {குரங்குகள்}, சர்வ திக்குகளிலும் அந்த தேவியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.(13ஆ,14அ) வேகவானான நான், சம்பாதியின் வசனத்தால், அந்த விசாலாக்ஷிக்காக {நீள்விழியாளான சீதைக்காக} நூறு யோஜனைகள் நீளங்கொண்ட சாகரத்தைத்[2] தாண்டினேன்.(14ஆ,15அ) அவள் {சீதை} எப்படிப்பட்ட ரூபமும், எப்படிப்பட்ட வர்ணமும், எப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களும் கொண்டவள் என ராகவரிடம் இருந்து கேட்டேனோ, அத்தகையவள் என்னால் காணப்பட்டாள்” {என்றான் ஹனுமான்}.(15ஆ,16அ)

[2] நூறு யோஜனைகள் என்றால் கிட்டத்தட்ட 800 கி.மீ. வரும். இன்றைய தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையுள்ள ஆகாய மார்க்கத் தொலைவு வெறும் 27 கி.மீ. ஆகும். தனுஷ்கோடியில் இருந்து இன்று லங்கையில் அசோக வனம் என்று சொல்லப்படும் இடம் வரையுள்ள ஆகாய மார்க்கத் தொலைவும் 200 கி.மீ. தான் வருகிறது. இதைப் போன்ற சுலோகங்களில் வரும் குறிப்புகளைக் கொண்டுதான் சில ஆய்வாளர்கள் ராமாயண லங்காபுரி, இன்றைய இலங்கை இல்லை என்று வாதிடுகின்றனர். இதே சுலோகத்தை "நூறு யோஜனைகளையும், சாகரத்தையும் தாண்டி வந்தேன்" என்று மொழிபெயர்த்தால் இதன்பொருள் மாறிவிடும். கிஷ்கிந்தை {இன்றைய ஹம்பி} முதல் தனுஷ்கோடி வரையுள்ள தொலைவு 740 கி.மீ. ஆகும். ஒரு யோஜனை எட்டு கிலோமீட்டர் என்று கொண்டால், 92.5 யோஜனைகள் வருகிறது. தனுஷ்கோடி முதல் அசோகவனம் வரையுள்ள தொலைவு 25 யோஜனைகள். ஆக, நாம் கொள்ளும் யோஜனை அளவில் கொஞ்சம் குறைத்தாலே சற்றேறக்குறைய 100 யோஜனைகள் தொலைவு வந்துவிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வானரபுங்கவன் {வானரர்களில் சிறந்த ஹனுமான்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதைக் கேட்ட ஜானகியும் பரம வியப்பில் ஆழ்ந்தாள்.(16ஆ,17அ) பிறகு கிலேசத்தில் {கவலையில்} மூழ்கிய நனவுடன் கூடியவளும், சுருண்ட கேசம் கொண்டவளும், பயந்தவளுமான அவள், சிம்சுப விருக்ஷத்தை நோக்கி தன் வதனத்தை {முகத்தை} உயர்த்தினாள்.(17ஆ,18அ) கபி வசனத்தை {குரங்கான ஹனுமானின் சொற்களைக்} கேட்டு, சர்வ திசைகளையும், உபதிசைகளையும் நோக்கிய சீதை, சர்வாத்மனான ராமனை நினைவுகூர்ந்து பரம மகிழ்ச்சியை அடைந்தாள்.(18ஆ,இ,ஈ,உ) அக்கம்பக்கமும், மேலும், கீழும் பார்த்தவள், சிந்தனைக்கு அப்பாற்பட்ட புத்தியைக் கொண்டவனும், உதய மலைக்குப் பின்னெழும் சூரியனைப் போன்ற பிங்காதிபதியின் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவனின்} அமைச்சனுமான வாதாத்மஜனை {வாயு தேவனின் மகனான ஹனுமானைக்} கண்டாள்.(19) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள்: 19


Previous | Sanskrit | English | Next

ஹனுமானின் ஆலோசனை | சுந்தர காண்டம் சர்க்கம் - 30 (44)

Counsel of Hanuman | Sundara-Kanda-Sarga-30 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதைக்கு ஆறுதல் சொல்வதா, வேண்டாமா என்று குழம்பிய ஹனுமான்; சீதையின் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில், இன்குரலில் ராமனைப் புகழ முடிவெடுத்தது...

Hanuman thinking what to do next after seeing Seetha's plight

விக்ராந்தனான {வீரமிக்க} ஹனுமானும், ராக்ஷசிகளின் அச்சுறுத்தல், திரிஜடை பேசியது, சீதை பேசியது என அனைத்தையும் உண்மையில் கேட்டான்.(1) அப்போது, நந்தனத்தின் தேவதையைப் போல அந்த தேவியை {சீதையைக்} கண்ட வானரன் {ஹனுமான்}, பல்வேறு விதங்களில் சிந்தையில் சிந்தித்தான்.(2) “எவள் மிகப்பல ஆயிரங்களிலான, அயுதங்களிலான  கபிகளால் {பதினாயிரங்களிலான குரங்குகளால்} சர்வ திக்குகளிலும் தேடப்படுகிறாளோ, அத்தகையவளை நான் கண்டுகொண்டேன்.(3) {சுக்ரீவரால்} சாரணனாக {ஒற்றனாகப்} பொருத்தமாக நியமிக்கப்பட்ட நான், கமுக்கமாகச் சென்று, சத்ருக்களின் சக்தியை உறுதி செய்து கொண்டு, இதையும் கண்டிருக்கிறேன்.(4) இராக்ஷசர்களின் விசேஷங்களையும், இந்தப் புரீயையும் {லங்காபுரி நகரத்தையும்}, ராக்ஷசாதிபதியான ராவணனின் பிரபாவத்தையும் கண்டிருக்கிறேன்.(5)

Thursday, 30 November 2023

இலங்கையை அடைந்தது | சுந்தர காண்டம் சர்க்கம் - 01 (210)

Lanka attained | Sundara-Kanda-Sarga-01 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சாரணர்களின் பாதையில் பயணித்த ஹனுமான்; மைனாக மலையுடன் பேசியது; தடையேற்படுத்திய சுரசையும், சிம்ஹிகையும்; பெருங்கடலைக் கடந்து, லங்கையை அடைந்த ஹனுமான்...

Hanuman against Simhika
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

பிறகு அந்த சத்ருகர்ஷனன் {பகைவரை அழிப்பவனான ஹனுமான்}, ராவணனால் கொண்டு செல்லப்பட்ட சீதை இருக்கும் இடத்தைத் தேட, சாரணர்கள் சஞ்சரிக்கும் பாதையில் செல்ல விரும்பினான்.(1) செய்வதற்கரிய நிகரில்லா கர்மத்தைத் தடைகளேதுமின்றி செய்ய விரும்பிய அந்த வானரன், தலையையும், கழுத்தையும் உயர்த்திக் கொண்டு, கவாம்பதியை {பசுவின் தலைவனான காளையைப்} போலக் காட்சியளித்தான்.(2) பிறகு, மஹாபலவானான அந்த தீரன், குளிர்ந்த நீரை ஒத்த வைடூரிய வர்ணப் புல்வெளிகளில் சுகமாகத் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்த மதிமிக்கவன் {ஹனுமான்}, பறவைகளை அச்சுறுத்திக் கொண்டும், தன் மார்பால் மரங்களை சாய்த்தும், பல மிருகங்களை உதைத்தபடியும் கேசரியை {சிங்கத்தைப்} போல் நடந்து கொண்டிருந்தான்.(4) 

கருப்பு, வெள்ளை, நீலம், லோகிதம் {சிவப்பு}, மஞ்சள், மற்றும் இலை வர்ணங்களில் இயல்பாக அமைந்திருக்கும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{5} காமரூபிகளும் {விரும்பிய வடிவம் ஏற்கவல்லவர்களும்}, குடும்பத்துடன் கூடியவர்களுமான யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்களாலும், தேவர்களையொத்த பன்னகர்களாலும் {தெய்வீகப் பாம்புகளாலும்} நிறைந்ததும்,{6} சிறந்த நாகங்களை {யானைகளைக்} கொண்டதுமான அந்த கிரிவரத்தலத்தில் {சிறந்த மலையின் அடியில்}, அந்தக் கபிவரன் {சிறந்த குரங்கான ஹனுமான்}, ஹிரதத்தில்  உள்ள நாகத்தை {மடுவில் உள்ள யானையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(5,6,7)

அவன், சூரியனுக்கும், மஹேந்திரனுக்கும், பவனனுக்கும் {வாயுவுக்கும்}[1], ஸ்வயம்புவுக்கும் {பிரம்மனுக்கும்}, பூதங்களுக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு, புறப்படுவதில் தன் மதியைச் செலுத்தினான்.(8) கிழக்கு முகமாக நின்று, தன் பிறப்புக்குப் பொறுப்பான பவனனுக்கு {வாயு தேவனுக்கு} அஞ்சலி செலுத்தியபிறகு, தக்ஷிண {தென்} திசையில் செல்ல தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(9) சிறந்த பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்கள்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தாவுவதற்கு நிச்சயம் செய்து கொண்டு, ராமனின் வெற்றிக்காக, பர்வகால {அமாவசை, பௌர்ணமி கால} சமுத்ரத்தைப் போலப் பெருகினான்.(10) 

[1] மன்மதநாததத்தர் பதிப்பில் இந்த இடத்தில் "காற்று" என்று மொழிபெயர்த்துவிட்டு, அதன் அடிக்குறிப்பில், "பவனன் என்றால், சிந்திப்பவர்களுக்கு அறிவைப் புகட்டுவதன் மூலம், அவர்களைத் தூய்மைப்படுத்துபவன் என்று பொருள்" என்றிருக்கிறது. இந்தச் சொல்லும், பொருளும் வாயு தேவனைக் குறிப்பன.

அளவிடமுடியாத பிரமாணமுள்ள சரீரத்துடன் பெருங்கடலைத் தாண்ட விரும்பி, பர்வதத்தை {மலையைத்} தன் கைகளாலும், கால்களாலும் அழுத்தினான்.(11) கபியால் பீடிக்கப்பட்ட அந்த அசலம் {மலை}, ஒரு முஹூர்த்தம் சலசலத்ததில், புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்கள், தங்கள் புஷ்பங்கள் அனைத்தையும் உதிர்த்தன.(12) அந்த மரங்கள் உதிர்த்த சுகந்தமான புஷ்பக்கொத்துகளால் மறைக்கப்பட்ட சைலம் {மலை}, {மலர்த்தோட்டம் போல} சர்வம் புஷ்பமயமாகக் காட்சியளித்தது.(13) அந்தப் பர்வதம், அந்த உத்தம வீரனால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானையின் மதத்தைப் போல நீரைப் பெருக்கியது.(14) அந்த பலவானால் {ஹனுமானால்} பீடிக்கப்பட்ட மஹேந்திர பர்வதத்தில்[2] காஞ்சனம் {தங்கம்}, அஞ்சனம் {மை}, வெள்ளி ஆகியவற்றின் ரேகைகள் வெளிப்பட்டன.(15) அந்த சைலம், மத்திமத் தழல்களுடன் கூடிய அனலனின் தூமராஜியை {நெருப்பின் புகைத் தூண்களைப்} போலப் பாறைகளையும், விசாலமான கந்தகப் பாறைகளையும் உதிர்த்தது.(16) 

[2] இது தமிழகத்தில் உள்ள மலய மலைத்தொடரில் உள்ள தெக்குமலைச் சிகரம் என்று நம்பப்படுகிறது

குகைகளில் வாழும் பூதங்கள் {உயிரினங்கள், ஹனுமானால்} பீடிக்கப்பட்ட கிரியால், அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டுப் பரிதாபக் குரல்களில் கதறின.(17) சைலம் பீடிக்கப்பட்டதால் உண்டான அந்த மஹத்தான நாதம், பிருத்வியையும், திசைகளையும், உபவனங்களையும் {தோப்புகளையும்} நிறைத்தது.(18) தெளிவான ஸ்வஸ்திக லக்ஷணையுடன் கூடிய சர்ப்பங்கள், தங்கள் பெருந்தலைகளில் இருந்து கோரமான பாவகத்தை {நெருப்பைக்} கக்கியபடியே, பற்களால் பாறைகளைக் கடித்தன.(19) கோபத்துடனும், நஞ்சுடனும் கூடிய அவற்றால் கடிக்கப்பட்டபோது, நெருப்பால் பற்றப்பட்டு எரிந்த பெரும்பாறைகள், ஆயிரந்துண்டுகளாகப் பிளந்து விழுந்தன.(20) அந்தப் பர்வதத்தில் வளர்ந்த ஔஷதஜாலங்கள் {மூலிகை வரிசைகள்}, விஷத்தை முறிக்கக்கூடியவையாக இருந்தாலும், அந்த நாகங்களின் விஷத்தை முறிக்கும் சக்தியற்றவையாகின.(21)

தபஸ்விகள், “இந்த கிரியை பூதங்கள் பிளக்கின்றன” என்று நினைத்து பயந்தோடினார்கள். வித்யாதரர்களும் அவ்வாறே அச்சமடைந்தவர்களாக ஸ்திரீகணங்களுடன் {தங்கள் பெண்களுடன்} சேர்ந்து,{22} பானபூமியில் {மது பருகிக் கொண்டிருந்த இடத்தில்} தங்கத்தாலான மதுக்குடங்கள், பாத்திரங்கள், பொன்வண்ணத்திலான குடுவைகள்,{23} உயர்தரமான லேகியங்கள் {துவையல்கள்}, பக்ஷணங்கள், விதவிதமான மாமிசங்கள், எருதுத் தோல்களாலான கேடயங்கள், தங்கக் கைப்பிடியுடன் கூடிய கட்கங்கள் {வாள்கள்} ஆகியவற்றை விட்டுவிட்டு பயந்தோடினர்.(22-24) சிவந்த மாலைகளைக் கழுத்தில் சூடியிருந்தவர்களும், மேனியில் சந்தனம் பூசியிருந்தவர்களும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவர்களும், குடிவெறியால் கண்கள் சிவந்தவர்களுமான அவர்கள் ககனத்திற்கு {வானத்திற்குத்} திரும்பிச் சென்றனர்.(25) ஹாரம், நூபுரம் {சிலம்பு}, கேயூரம் {தோள்வளை}, பாரிஹாரம் {கைவளை}[3] ஆகியவற்றைத் தரித்திருந்த ஸ்திரீகள், ஆச்சரியப் புன்னகையுடன் ரமணர்கள் {தங்கள் காதலர்கள்} சகிதராக ஆகாசத்தில் நின்று கொண்டிருந்தனர்.(26) வித்யாதரர்களும், மஹரிஷிகளும், தங்கள் மஹாவித்யையை வெளிப்படுத்தும் வகையில் ஆகாசத்தில் ஒன்றாக நின்று கொண்டு அந்தப் பர்வதத்தைப் பார்த்தனர்.(27)

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பாரிஹாரம் என்பதற்கு கட்கர், "சிறப்பு" என்று பொருள் கொள்கிறார். தீர்த்தரோ, "கைவளை" என்று பொருள் கொள்கிறார். நான் தீர்த்தரையே பின்பற்றுகிறேன்" என்றிருக்கிறது.

அப்போது {அந்த வித்தியாதரர்களும் ரிஷிகளும்}, விமல அம்பரத்தில் {தெளிந்த வானில்} வசித்திருக்கும் தூய ஆத்மாக்களான சாரணர்கள், சித்தர்கள் மற்றும் ரிஷிகளின் {பின்வரும்} சப்தத்தைக் கேட்டனர்:(28) “பர்வதசங்காசனும், மாருதாத்மஜனுமான {மலைக்கு ஒப்பானவனும், வாயுவின் மைந்தனுமான} இந்த ஹனுமான், மகராலயமான {முதலைகள், சுறாக்களின் வசிப்பிடமான} சமுத்திரத்தை மஹாவேகத்துடன் கடக்க விரும்புகிறான்.(29) இராமனின் அர்த்தத்திற்காகவும், வானரர்களின் அர்த்தத்திற்காகவும் செயற்கரிய கர்மத்தைச் செய்யத் தீர்மானித்து, அடைவதற்கரிய சமுத்திர மறு கரையை அடைய விரும்புகிறான்” {என்றனர்}.(30)

இவ்வாறான அந்த மஹாத்மாக்களின் வார்த்தைகளைக் கேட்ட வித்யாதரர்கள், ஒப்பற்றவனான அந்த வானரரிஷபனைப் பர்வதத்தில் கண்டனர்.(31) அசலத்திற்கு ஒப்பானவன் {மலைக்கு ஒப்பான ஹனுமான்}, மயிர்சிலிர்ப்பை உண்டாக்கும் வகையில் குலுங்கி, பெரும் மேகத்தைப் போல மஹத்தான நாதம் செய்தான்.(32) 

குதிக்கும் முன், பக்ஷிராஜா உரகத்தை {பறவையரசான கருடன் பாம்பைச் சுழற்றி வீசுவதைப்} போல, மயிரால் மறைந்திருக்கும் தன் லாங்கூலத்தை {வாலை} மேலும், கீழுமாகச் சுழற்றி உதறினான்.(33) வேகத்தை அடைந்த அவனது வாலானது, கருடனால் அபகரிக்கப்பட்ட மஹா உரகத்தைப் போல முதுகில் சுருண்டு காணப்பட்டது.(34) கபியானவன் {அந்தக் குரங்கானவன்}, மஹாபரிகங்களுக்கு ஒப்பான கைகளை ஊன்றி, இடையை குறுக்கி, சரணங்களை {கால்களை} அழுத்தினான்.(35) ஸ்ரீமானும், வீரியவானுமான அவன் {ஹனுமான்}, தோள்களையும், கழுத்தையும் வளைத்துச் சுருக்கி, தேஜஸ், வலிமை, வீரியம் ஆகியவற்றைப் பெருக்கினான்.(36) கண்களை மேலுருட்டி, தூரத்திலிருந்து மார்க்கத்தைக் கண்டு, ஆகாசத்தை நோக்கி, பிராணனை ஹிருதயத்தில் அடக்கினான்.(37) 

கபிகுஞ்சரனும் {குரங்குகளில் யானையும்}, மஹாபலவானும், வானரசிரேஷ்டனுமான {வானரர்களில் சிறந்தவனுமான} அந்த ஹனுமான், குதிக்கும் முன், பாதங்களை திடமாக ஊன்றிக்  கொண்டு, காதுகளை வளைத்து, வானரர்களிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(38) “இராகவர் விடும் சரம், காற்றின் வேகத்தில் எப்படி செல்லுமோ, அப்படியே ராவணனால் பாலிதம் செய்யப்படும் லங்கைக்குச் செல்வேன்.{39} இலங்கையில் அந்த ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைப்} பார்க்காவிட்டால், அதே வேகத்தில் ஸுராலயத்திற்கு {தேவர்களின் வசிப்பிடத்திற்குச்} செல்வேன்.{40} திரிதிவத்திலும் {சொர்க்கத்திலும்} சீதையைப் பார்க்காவிட்டால், சிரமமேதுமின்றி ராக்ஷசராஜாவான ராவணனைப் பிடித்துக்கட்டிக் கொண்டுவருவேன்.{41} எவ்வகையிலேனும் காரியம் நிறைவேறியவனாக, சீதையுடன் திரும்பிவருவேன். அல்லது, ராவணனுடன் கூடிய லங்கையை அடியோடு பெயர்த்துக் கொண்டு வருவேன்” {என்றான் ஹனுமான்}.(39-42)

வானரோத்தமனான ஹனுமான், வானரர்களிடம் இவ்வாறே சொன்னான்.{43} சுபர்ணனை {கருடனைப்} போலத் தன்னைக் கருதியவனும், மஹாவேகவானுமான அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, சிந்திக்காமல் வேகமாகத் துள்ளிக் குதித்தான்.(43,44) அவன், வேகத்துடன் குதித்து ஏறியபோது, அந்த மலையில் முளைத்த மரங்கள் யாவும், கிளைகள் அனைத்தையும் இழுத்துக் கொண்டு மேலெழுந்தன.(45) அவன், புஷ்பங்களுடன் ஒளிர்ந்த மரங்களைத் தன் தொடைகளின் வேகத்தால் தன்னுடன் இழுத்துக் கொண்டு, மதங்கொண்ட நாரைகளுடன் அம்பரத்தில் {வானத்தில்} உயர்ந்து சென்றான்.(46) தொடைகளின் வேகத்தால் எழுந்த விருக்ஷங்கள், தீர்க்கமார்க்கத்தில் {நீண்ட வழியில்} புறப்பட்டுச் செல்லும் பந்துவை {உறவினரைப் பின்தொடர்ந்து செல்லும் மற்றொரு} பந்துவைப் போல[4] ஒரு முஹூர்த்தம் அந்தக் கபியை {குரங்கான ஹனுமானைப்} பின்தொடர்ந்து சென்றன.(47) தொடைகளின் வேகத்தால் எழுந்த சாலங்களும், வேறு உத்தம மரங்களும், மஹீபதியை {பின்தொடர்ந்து செல்லும்} சைனியத்தைப் போல ஹனூமந்தனைப் பின்தொடர்ந்து சென்றன.(48) கபியான ஹனுமான், புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்களால் சூழப்பட்ட பர்வதத்தின் தோற்றத்தில் அற்புத தரிசனத்தை அளித்தான் {அற்புதமாகக் காட்சியளித்தான்}.(49) அதன் பிறகு, சாரம் நிறைந்தவையான விருக்ஷங்கள், மஹேந்திரனிடம் கொண்ட பயத்தால் வருணாலயத்தில் {மூழ்கிய} பர்வதங்களைப் போல உப்புநீரில் மூழ்கின.(50)

[4] “நெடுந்தூரம் செல்லும் உறவினரைச் சிறிது தூரம் பின்தொடர்ந்து செல்லும் மற்றொரு உறவினரைப் போல அந்த மரங்கள் ஹனுமானைப் பின்தொடர்ந்து சென்றன” என்பது பொருள்.

மேகத்திற்கு இணையான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, நானாவிதமான மலர்களாலும், மொட்டுக்களாலும், தளிர்களாலும் மறைக்கப்பட்டவனாக, விட்டிற்பூச்சிகளுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(51) அவனது வேகத்தால் விடுபட்ட அந்த மரங்கள், புஷ்பங்களை உதிர்த்து, நண்பர்கள் திரும்பிச் செல்வதைப் போல நீரில் விழுந்தன.(52) வாயுவால் இயக்கப்பட்ட அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய விசித்திரமான {பல வண்ணங்களிலான} மரங்களை சாகரத்தில் விழச்செய்தபோது, தாரைகளால் நிறைந்த ஆகாசத்தைப் போல மஹார்ணவமும் {பெருங்கடலும்} ஒளிர்ந்தது.(53,54அ) நானாவித வர்ணங்களிலான புஷ்பங்களுடன் கூடிய அந்த வானரன், மின்னல்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்து மேகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(54ஆ,இ) அவனது வேகத்தால் விழுந்த புஷ்பங்களுடன் கூடிய நீரானது, காண்பதற்கினிய தாரைகள் உதிக்கும் அம்பரத்தை {வானத்தைப்} போல தென்பட்டது.(55,56அ) அந்த அம்பரத்தில் உள்ளவனின் விரிந்த கைகள், பர்வதத்தின் உச்சியில் இருந்து வெளிப்படும் ஐந்து தலை பன்னகத்தை {பாம்பைப்} போலத் தென்பட்டன.(56ஆ,57அ) அலைகளை மாலையாகக் கொண்ட மஹார்ணவத்தை {பெருங்கடலைப்} பருகிவிடுபவனைப் போல அந்த மஹாகபி ஒளிர்ந்தான். ஆகாசத்தையே பருகிவிடுபவனைப் போலவும் தெரிந்தான்.(57ஆ,58அ) 

வாயுமார்க்கத்தை அனுசரித்துச் சென்றவனின் நயனங்கள் {கண்கள்}, பர்வதத்தில் ஈரனலன்களை {இரண்டு அக்னிகளைப்} போல, மின்னலின் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன[5].(58ஆ,59அ) செம்பழுப்புக் கண்களைக் கொண்டவர்களில் முக்கியமானவனின் {ஹனுமானின்} கண்கள், செம்பழுப்பாகவும், அகலமாகவும், உருண்டையாகவும், உதிக்கும் சந்திர சூரியர்களைப் போலவும் இருந்தன.(59ஆ,60அ) சிவந்த முகத்துடனும், சிவந்த நாசியுடனும் கூடியவன் {ஹனுமான்}, சந்தியின் செம்மையால் தீண்டப்பட்ட சூரிய மண்டலத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(60ஆ,61அ) அம்பரத்தில் {வானத்தில்} மிதந்த வாயுபுத்திரனின் வாலானது, நேராக நிற்கும் சக்ரத்வஜத்தை {இந்திரனின் கொடிமரத்தைப்} போல எழுந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.(61ஆ,62அ) மஹானும், வெண்பற்களைக் கொண்டவனும், மஹாபிராஜ்ஞனும் {அனைத்தையும் அறிந்தவனும்}, சக்கர வடிவ வாலால் சூழப்பட்டவனுமான அநிலாத்மஜன் {வாயுவின் மைந்தன் ஹனுமான்}, பாஸ்கரனை {சூரியனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(62ஆ,63அ) சிவந்து விளங்கும் வாலின் அடிப்பகுதியுடன் கூடிய அந்த மஹாகபி, பிளக்கப்பட்டு, மஹத்தான கைரிக தாதுக்கள் {காவிக் கற்கள்} தெரியும் கிரியைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(63ஆ,64அ) சாகரத்தைத் தாண்டும் அந்த வானர சிம்ஹத்தின் கக்கத்தில் வாயுவானது மேகத்தைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தது.(64ஆ,65அ) 

[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மலையில் இரண்டு நெருப்புகள் என்பது, ஒரு மலையில் உள்ள எரிமலைவாய்கள் இரண்டைக் குறிப்பிடுகிறது. குறைந்தபட்சம் இந்த உரையானது, இலக்கியத்தில் ஒப்புநோக்க அரிதான இந்த பத்திக்கு, அதன் உட்பொருளின் மதிப்பைத் தவறாமல் அளிக்கிறது. இருப்பினும் உரையாசிரியரோ, "காட்டுத்தீ" என்று இந்தச் சொல்லுக்குப் பொருள் கொள்கிறார்" என்றிருக்கிறது.

எப்படி வடக்கு முனையிலிருந்து வானத்தில் பெரும் வேகத்துடன் உல்கங்கள் {விண்கற்கள்} பாய்ந்து வருமோ அப்படியே அந்த கபிகுஞ்சரனும் {குரங்குகளில் யானையான ஹனுமானும்} காணப்பட்டான்.(65ஆ,66அ) பதத்பதங்கனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவனும், வேகம் கொண்டவனும், நெடியவனுமான அந்த கபி {குரங்கான ஹனுமான்}, கயிற்றால் கட்டப்படும்போது அளவில் பெருகும் மாதங்கத்தை {யானையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(66ஆ,67அ) அப்போது அந்த கபி, மேல் செல்லும் சரீரத்தால் கீழுள்ள சாகரத்தில் நிழலைக் கலந்து, மாருதனால் இயக்கப்படும் ஓடத்தைப் போலத் தெரிந்தான்.(67ஆ,இ)

சமுத்திரத்தின் எந்தெந்த தேசத்தில் அந்த மஹாகபி சென்றானோ, அந்தந்த இடங்கள் அவனது தொடைகளின் வேகத்தால் கலக்கமடைந்து காணப்பட்டன.(68) மஹாவேகமுள்ள அந்தக் கபி, சைலத்தைப் போன்ற உடல் படைத்த சாகரத்தின் அலை ஜாலங்களைத் தன் மார்பால் மோதியபடி பாய்ந்து சென்றான்.(69) பலவானான அந்த கபியினால் உண்டான காற்றும், மேகங்களில் இருந்து வந்த காற்றும் பயங்கரவொலியுடன் சாகரத்தைப் பெரிதும் கலக்கின.(70) அந்தக் கபிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, உப்புநீரின் பெரும் அலைஜாலங்களை இழுத்துச் சென்று, வானத்தையும் பூமியையும் பிரிப்பதைப் போல் பாய்ந்து சென்றான்.(71) அந்த மஹாவேகன், மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} எழுந்தவையும், மேருவுக்கும், மந்தரத்திற்கும் இணையானவையுமான அலைகளை எண்ணுபவனைப் போலக் கடந்து சென்றான்.(72) அப்படி அவனது வேகத்தால் எழும்பிய நீர்மேகமானது, சரத்கால மேகம் போலப் பரந்து விரிந்து அம்பரத்தில் {வானத்தில்} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(73) 

அப்போது, திமிங்கலங்கள், முதலைகள், மீன்கள், ஆமைகள் ஆகியன, வஸ்திரங்கள் அகன்ற சரீரங்களின் அங்கங்களைப் போலத் திறந்த நிலையில் காணப்பட்டன.(74) பிறகு, சாகரத்தை ஆலயமாகக் கொண்ட புஜகங்கள் {பாம்புகள்} வானில் பாய்ந்து செல்லும் அந்த கபிசார்தூலனைக் கண்டு, “சுபர்ணன் {கருடன்}” என்று நினைத்தன.(75) அந்த வானரசிம்ஹத்தின் {வானரர்களில் சிங்கமான ஹனுமானின்} நிழலானது, பத்து யோஜனை விஸ்தீரணமும், முப்பது யோஜனை நீளமும் கொண்டதாக ஜலத்தில் அழகாகத் தெரிந்தது.(76) வாயுபுத்திரனைப் பின்தொடர்ந்த அந்த நிழல், வெண்மேகங்களின் அடர்த்தியான வரிசை போல, உப்பு நீரில் படர்ந்து பிரகாசித்தது.(77) 

அந்த மஹாகபி, மஹாகாயம்  {பேருடல்} கொண்ட மஹாதேஜஸ்வி, ஆதாரமில்லாத வாயுமார்க்கத்தில் செல்லும் சிறகுகளுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(78) பலவானான அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, எந்த மார்க்கத்தில் சென்றானோ, அஃது ஆர்ணவத்தில் {கடலில்} பள்ளம் போல உடனே தோன்றியது.(79) பக்ஷிராஜனை {பறவைகளின் அரசனான கருடனைப்} போல பக்ஷிகளின் பாதையில் சென்ற ஹனுமான், மாருதனைப் போலவே மேகஜாலங்களைத் தன்னுடன் இழுத்துச் சென்றான்.(80) வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த பெரும் மேகங்கள், அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} இழுத்துச் செல்லப்பட்டன.(81) மேகஜாலங்களுக்குள் மீண்டும் மீண்டும் பிரவேசிப்பவனாகவும், வெளிவருபவனாகவும் தென்பட்டவன், சந்திரனைப் போல மறைக்கப்பட்டவனாகவும், பிரகாசிப்பவனாகவும் தெரிந்தான்.(82) அப்போது, துரிதமாகப் பாய்ந்து செல்லும் அந்தப் பிலவங்கமனைக் {தாவிச் செல்பவனான ஹனுமானைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்.(83) இராமனின் காரியசித்திக்காகப் பாய்ந்து செல்லும் அந்த வானரோத்தமனைச் சூரியன் எரிக்கவில்லை; வாயுவும் குளிர்ந்து சேவித்தான்.(84) வானில் தாவிச் செல்லும் அந்த பெரும் பிரகாசம் கொண்டவனை ரிஷிகள் புகழ்ந்தனர்; தேவர்களும், கந்தர்வர்களும் அவனைப் புகழ்ந்து பாடினர்.(85) நாகர்களும், யக்ஷர்களும், ராக்ஷசர்களும், விபுதர்களும், பறவைகளும் என அனைவரும், சோர்வின்றிச் செல்லும் கபிவரனை {சிறந்த குரங்கைக்} கண்டு புகழ்ந்தனர்.(86,87அ) 

பிலவகசார்தூலனான அந்த ஹனூமதன், தாவிச் செல்லும்போது, இக்ஷ்வாகு குல மானத்திற்காக, சாகரன் {பின்வருமாறு} சிந்தித்தான்:(87ஆ,88அ) “நான் வானரேந்திரனான ஹனூமதனுக்கு சகாயம் செய்யவில்லையென்றால், {தவறாகப்} பேச விரும்புகிறவர்களின் அனைத்து வகை {தவறான} பேச்சுகளுக்கும் ஆளாவேன்.(88ஆ,89அ) நான், இக்ஷ்வாகு நாதனான சகரனால் வளர்க்கப்பட்டேன். இக்ஷ்வாகுவுக்கு உதவும் இவன் வீழ்வது தகாது.(89ஆ,90அ) எப்படி இந்த கபி ஓய்வெடுக்க முடியுமோ அப்படி நான் நடந்து கொள்ள வேண்டும். என்னில் ஓய்வெடுத்த பிறகு எஞ்சியதை {மீதமுள்ள தொலைவை} சுகமாகக் கடந்து செல்லட்டும்” {என்று நினைத்தான்}.(90ஆ,91அ)

Sagara speaking to Mainaka

இவ்வாறான நன்மதியுடன் கூடிய சமுத்திரன், நீரில் மறைந்திருப்பவனும், ஹிரண்யநாபனும் {உந்தியில் தங்கத்தைக் கொண்டவனும்}, கிரிசத்தமனுமான மைனாகனிடம் {மலைகளில் உயர்ந்தவனுமான மைனாக மலையிடம், பின்வருமாறு} சொன்னான்:(91ஆ,92அ) “கிரிசிரேஷ்டா {மலைகளில் சிறந்தவனே}, பாதாளவாசிகளான அசுரர்களின் கூட்டத்திற்குத் தடையாகவே தேவேந்திரனால் நீ இங்கே நிலைநிறுத்தப்பட்டாய்.(92ஆ,93அ) மீண்டும் எழும்ப முயல்பவர்களும், ஜாதவீரியர்களுமான இவர்களுக்கு {பிறப்பால் வீரம் நிறைந்தவர்களுமான அசுரர்களுக்கு} அளக்கமுடியாத பாதாளத்தின் துவாரத்தை {வாயிலை} அடைத்தபடியே நீ நின்றிருக்கிறாய்.(93ஆ,94அ) சைலமே, உயர்வாகவும், தாழ்வாகவும், அகலமாகவும் வளரும் சக்தி உனக்குண்டு. எனவேதான் உன்னைத் தூண்டுகிறேன்; கிரிசத்தமா {மலைகளில் உயர்ந்தவனே}, நீ எழுவாயாக.(94ஆ,95அ) 

கபிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, வீரியவானும், ராம காரியத்தை நிறைவேற்ற இத்தகைய பீம கர்மத்தைச் செய்பவனுமான இந்த ஹனுமான், வானத்தில் பறந்து உன் மேல் வருகிறான்.(95ஆ,96அ) இக்ஷ்வாகு குல வர்த்தினனான {தொண்டனான} இவனுக்கு இப்போது நான் சகாயம் செய்ய வேண்டும். இக்ஷ்வாகுக்கள் என்னால் பூஜிக்கத்தகுந்தவர்கள்; உன்னாலும் அதிகம் பூஜிக்கப்படத்தகுந்தவர்கள்.(96ஆ,97அ) நமக்கு நன்மையைச் செய்வாயாக. நம் காரியம் தவறக்கூடாது. செய்யப்பட வேண்டிய காரியம், செய்யப்படாமல் போனால் நல்லோரிடம் கடுமை அதிகரிக்கும்.(97ஆ,98அ) நீருக்கு மேல் எழுவாயாக. இந்தக் கபி பிலவர்களில் சிறந்தவன், அதிதியாக {விருந்தினராக} நம்மால் பூஜிக்கப்படத்தகுந்தவன் ஆவான். உன்னில் அவன் நிற்கட்டும்.(98ஆ,99அ) சாமீகரமஹாநாபா {உந்தியில் அதிகம் தங்க வண்ணத்தைக் கொண்டவனே}, தேவகந்தர்வ சேவிதா {தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் தொண்டாற்றுபவனே}, ஹனுமான் உன்னில் இளைப்பாறிய பிறகு எஞ்சியதைக் கடந்து செல்லட்டும்.(99ஆ,100அ) காகுத்ஸ்தனின் {ராமனின்} கொடுமையின்மையையும், மைதிலி கடத்தப்பட்டதையும், பிலவகேந்திரனின் {தாவிச் செல்பவர்களின் தலைவனான ஹனுமானின்} சிரமத்தையும் கண்டு உதிப்பதே உனக்குத் தகும்” {என்றான் சமுத்ரன் / சாகரன்}.(100ஆ,101அ)

ஹிரண்யநாபனான {உந்தியில் தங்கத்தைக் கொண்டவனான} மைனாகன், லவணாம்பசன் {உப்புநீர் கொள்ளிடமான சமுத்திரன்} சொன்னதைக் கேட்டு, பெரும் மரங்களுடனும், கொடிகளுடனும் ஜலத்திலிருந்து துரிதமாக உதித்தெழுந்தான்.(101ஆ,102அ) அப்போது அவன் {மைனாக மலையானவன்}, திவாகரன் ஒளிரும் கதிர்களால் மேகங்களைக் கிழிப்பதைப் போல, சாகரஜலத்தைக் கிழித்தபடி உதித்தெழுந்தான்.(102ஆ,103அ) சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருந்த அந்த மஹாத்மா {மைனாக மலையானவன்}, சாகரனின் தூண்டுதலால் ஒரு முஹூர்த்தத்திற்குள் சிருங்கங்களுடன் வெளிப்பட்டு,{103ஆ,104அ} கின்னரர்களுடனும், மஹா உரகர்களுடனும், தங்கமயமான சிருங்கங்களுடனும், அம்பரத்தைத் தீண்டி ஆதித்யனுக்கு ஒப்பாக ஒளிர்ந்தான்.(103ஆ-105அ) சஸ்திரத்திற்கு ஒப்பான ஒளியுடன் {வாளின் நீல நிறத்துடன்} கூடிய ஆகாசம், தப்தஜாம்பூநதத்தை {புடம்போட்ட தங்கத்தைப்} போல உதித்த பர்வதத்தின் சிருங்கங்களால் காஞ்சனப் பிரபையுடன் கூடியதானது {பொன்வண்ணமானது}.(105ஆ,106அ) அந்த கிரிசத்தமன், ஜாதரூபமயமானவையும் {பொன்மயமானவையும்}, ஸ்வயம்பிரபையால் {தன்னொளியால்} ஒளிர்ந்தவையுமான சிருங்கங்களுடன் நூறு ஆதித்யர்களுக்கு இணையாகப் பிரகாசித்தான்.(106ஆ,107அ) 

ஹனுமான், உப்புநீரின் மத்தியில், {மைனாக மலை}தன் முன் திடீரென எழுந்து நின்றதைத் தடையென நிச்சயித்தான்.(107ஆ,108அ) மஹாவேகமுள்ள அந்த மஹாகபி, மாருதன் மேகத்தை {தள்ளுவதைப்} போல, அங்கே நெடிதுயர்ந்திருந்ததைத் தன் மார்பால் வீழ்த்தினான்.(108ஆ,109அ) அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} இவ்வாறு வீழ்த்தப்பட்ட அந்தப் பர்வதோத்தமன் {உத்தம மலையான மைனாகன்}, அந்தக் கபியின் வேகத்தை உணர்ந்து வியந்து ஆனந்தமடைந்தான்.(109ஆ,110அ) 

ஆகாயத்தில் எழுந்த பர்வதன் {மைனாகன்}, பிரீதியுடனும், மகிழ்ச்சியான மனத்துடனும், மானுஷ ரூபத்தைத் தரித்து சிகரத்தில் நின்று, ஆகாசத்தில் சென்று கொண்டிருந்த அந்த வீரக்கபியை {ஹனுமானை} அணுகி, {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(110ஆ,111) “வானரோத்தமா, இந்தச் செயற்கரிய கர்மத்தைச் செய்த நீ, என் சிருங்கங்களில் இறங்கி சுகமாக இளைப்பாறுவாயாக.(112) இராகவனின் குலத்தில் பிறந்தவர்களால் உததி {பெருங்கடல்} விரிவடைந்தது. அந்த சாகரன் {பெருங்கடலானவன்}, ராமனின் ஹிதத்தில் {ராமனுக்கான நன்மையில்} ஈடுபட்டுள்ள உன்னை {பின்வருமாறு சொல்லி} வழிபடுகிறான்:(113) “செய்த நன்றிக்குக் கைம்மாறு செய்ய வேண்டும்”. இதுவே சநாதன தர்மமாகும். கைம்மாறைச் செய்ய விரும்பும் அத்தகையவன், உன் சம்மானத்திற்கு {மதிப்புக்குத்} தகுந்தவனாவான்.(114) “நூறு யோஜனைகளைத் தாண்டும் இந்தக் கபி {குரங்கு}, உன் தாழ்வரைகளில் இளைப்பாறிவிட்டு எஞ்சியதை {மீதமுள்ள தொலைவைக்} கடக்கட்டும்” என்று உன் நிமித்தம் உண்டான பஹுமானத்தால் {பெரும்நன்மதிப்பால்} என்னைத் தூண்டியவன் அவனே {அந்த சமுத்ரனே}[6]. ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, நீ சற்றே தங்கி, என்னில் இளைப்பாறிச் செல்வாயாக.(115,116) 

[6] கார்மேகவண்ணன் பணிபூண்டனன் காலின்மைந்தன்
தேர்வான்வருகின்றனன் சீதையைத் தேவர் உய்யப்
பேர்வான் அயல்சேறி இதில் பெறும் பேறு இல் என்ன
நீர்வேலையும் என்னை உரைத்தது நீதிநின்றாய்

- கம்பராமாயணம், 4796ம் பாடல், கடல் தாவு படலம்

பொருள்: நீதிவழி நிற்பவனே, “கார்மேகவண்ணனின் {ராமனின்} பணியை மேற்கொண்டுள்ள வாயு மைந்தன் {ஹனுமான்}, தேவர் மேன்மைபெற சீதையைத் தேடி வருகின்றான். பெரும் வானின் பக்கத்தில் சேர்வாயாக. இதைவிடப் பெரும்பேறு வேறேதுமில்லை” என்று என்னிடத்தில் நற்பண்பு வாய்ந்த கடலும் உரைத்தது.

ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, அதற்காகவே இங்கே ஏராளமான கிழங்குகளும், பழங்களும், நறுமணமும், இன்சுவையும் மிக்க இன்னும் பலவும் இருக்கின்றன. அவற்றை உண்டு இளைப்பாறிய பிறகு செல்வாயாக.(117) கபி முக்கியா {குரங்குகளில் முக்கியமானவனே}, மூவுலகங்களிலும் நன்கறியப்பட்ட மஹாகுணங்களின் அடிப்படையிலான சம்பந்தம் உன்னிடம் எங்களுக்கும் இருக்கிறது.(118) மாருதாத்மஜா {வாயுவின் மகனே}, கபிகுஞ்சரா {குரங்குகளில் யானையே}, தாவுவதில் வேகவான்களுக்கு மத்தியில் முக்கியமானவனாக உன்னை நான் நினைக்கிறேன்.(119) தர்மத்தை அறிய விரும்புகிறவனாலோ, அறிந்தவனாலோ, ஓர் அதிதி {விருந்தினர்} சாதாரணனாக இருந்தாலும் பூஜிக்கப்படத்தகுந்தவனே. உன்னைப் போன்ற மஹான்களைக் குறித்து மீண்டும் என்ன சொல்வது?(120) கபிகுஞ்சரா, நீ மஹாத்மாவும், தேவவரிஷ்டனும் {தேவர்களில் சிறந்தவனுமான} மாருதனின் புத்திரன் ஆவாய். வேகத்தில் அவனுக்கே நீ இணையாவாய்.(121) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ பூஜிக்கப்பட்டால், மாருதனே பூஜிக்கப்படுகிறான். எனவேதான் நீ எனக்குப் பூஜிக்கப்படத்தகுந்தவன் ஆகிறாய். இதில் காரணத்தைக் கேட்பாயாக.(122)

Indra and krita yuga mountains

தாதா {ஐயா}, பூர்வத்தில், கிருத யுகத்தில் பர்வதங்கள் சிறகுகள் படைத்தவையாக இருந்தன. அவை, கருடனுக்கும், அநிலனுக்கும் {காற்றுக்கும்} இணையான வேகத்தில் சர்வதிசைகளிலும் சென்றன.(123) அவை அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, ரிஷிகளுடன் சேர்ந்த தேவசங்கமும், பூதங்களும் {உயிரினங்களும்} அவற்றின் வீழ்ச்சியில் ஏற்பட்ட {அந்த மலைகள் விழுந்து அழிவு ஏற்படும் என்ற} சந்தேகத்தில் பயத்தை அடைந்தனர்.(124) சதக்ரதுவான சஹஸ்ராக்ஷன் {நூறு வேள்விகளைச் செய்தவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன்}, குரோதமடைந்தபோது, ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் இருந்த பர்வதங்களின் சிறகுகளைத் தன் வஜ்ரத்தால் வெட்டினான்.(125) அந்த தேவராதன் {இந்திரன்}, என்னை அணுகி, குரோதத்துடன் வஜ்ரத்தை உயர்த்தினான். அப்போது மஹாத்மாவான ஸ்வஸனனால் {வாயு தேவனால்} நான் தூக்கி வீசப்பட்டேன்.(126)

பிலவகோத்தமா {தாவிச் செல்பவர்களில் மேலானவனே}, இந்த உப்பு நீரில் தூக்கிவீசப்பட்டு, முழுமையான சிறகுகளுடன் காக்கப்பட்டேன். நான் உன் பிதாவாலேயே ரக்ஷிக்கப்பட்டேன்.(127)  கபிமுக்கியா, மாருதர் என் மதிப்புக்குரியவர் ஆவார். எனவேதான் நான் உன்னை மதிக்கிறேன். எனக்கு உன்னுடனான இந்த சம்பந்தம் மஹாகுணங்கள் பொருந்தியது.(128) மஹாகபியே, இக்காரியத்தில் இவ்வாறு செல்லும் நீ, பிரீதியுடன் சாகரனுக்கும், எனக்கும் மகிழ்ச்சியளிக்கத் தகுந்தவனாக இருக்கிறாய்.(129) கபிசத்தமா, {எங்கள்} பூஜையையும், பஹுமானத்தையும், பிரீதியையும் ஏற்றுக் கொண்டு சிரமத்தைப் போக்கிக் கொள்வாயாக. உன் தரிசனத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” {என்றான் மைனாகன்}.(130)

இவ்வாறு சொல்லப்பட்ட கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, அந்த நகோத்தமனிடம் {மலைகளில் சிறந்தவனான மைனாகனிடம், பின்வருமாறு} சொன்னான், “நான் பிரீதியடைகிறேன். ஆதித்யம் {விருந்தோம்பல்} செய்யப்பட்டது. இந்தக் கோபம் விலகட்டும்[7].(131) காரியத்திற்கான காலம் என்னைத் துரிதப்படுத்துகிறது. பகற்பொழுதும் கடக்கிறது. இங்கே நடுவில் நிற்பதில்லை என்று நான் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(132)

[7] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மைனாகனின் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளாததால் அவனிடம் விளையும் சினம்" என்றிருக்கிறது.

Hanuman and Mainaka

வீரியவானான அந்த ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான ஹனுமான்} இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த {மைனாக} சைலத்தைத் தன் கைகளால் தீண்டிவிட்டு, புன்னகையுடன் வானத்தில் புகுந்து சென்றான்.(133) அந்த அநிலாத்மஜன் {வாயு மைந்தன்}, பர்வதத்தாலும், சமுத்திரத்தாலும் பஹுமானத்துடன் பார்க்கப்பட்டான்; தகுந்த ஆசிகளாலும் பூஜிக்கப்பட்டான்.(134) சைலத்தையும், மஹார்ணவத்தையும் விட்டு வெகு தூரம் பாய்ந்து, விமலமான அம்பரத்தில் தன் பிதாவின் {மாசற்ற வானில், தன் தந்தையான வாயுவின்} பாதையைப் பின்பற்றிச் சென்றான்.(135) உயர்ந்த கதியையடைந்த வாயுமைந்தன், அந்த கிரியை மீண்டும் பார்த்தவாறே ஆதாரமற்ற விமலமான அம்பரத்தில் {மாசற்ற வானில்} சென்றான்.(136)

ஹனுமதன், அந்த செய்வதற்கரிய இரண்டாம் கர்மத்தைச் செய்ததைக் கண்ட சர்வ ஸுரர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் {அவனைப்} போற்றினர்.(137) அங்கிருந்த தேவர்களும், சஹஸ்ராக்ஷனான வாசவனும் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனும்}, அந்தக் காஞ்சனனான சுநாபனின் {தங்கமயமான மைனாக மலையானவனின்} கர்மத்தால் மகிழ்ச்சியடைந்தனர்.(138) மதிமிக்க சசிபதி {சசியின் கணவனான இந்திரன்}, பர்வதசிரேஷ்டனான சுநாபனால் உண்டான பெரும் மகிழ்ச்சியில் தழுதழுத்த குரலில் {பின்வரும்} சொற்களை ஸ்வயமாக {தானே முன்வந்து} பேசினான்:(139) “ஹிரண்யநாபா, சைலேந்திரா, உன்னைக் குறித்துப் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சௌம்யா, உனக்கு அபயம் அளிக்கிறேன். சுகமாக இருப்பாயாக.(140) பயப்படக்கூடியதாக இருந்தாலும் பயம் இல்லாமல் நாறு யோஜனைகளைக் கடக்கப் போகும் விக்கிராந்தனான ஹனூமதனுக்கு நீ மஹத்தான சஹாயத்தைச் செய்திருக்கிறாய்.(141) தாசரதியான ராமனின் ஹிதத்திற்காக {நன்மைக்காக} சென்று கொண்டிருக்கும் இந்த ஹரிக்கு {குரங்கான ஹனுமானுக்கு} நற்காரியம் செய்த உன்னிடம் உறுதியான மகிழ்ச்சியை அடைகிறேன்” {என்றான் இந்திரன்}.(142)

தேவர்களின் பதியான சதக்ரது {இந்திரன்} மகிழ்ச்சியடைந்ததைக் கண்டபோது, அந்தப் பர்வதோத்தமனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(143) அப்போது வரம் தத்தம் செய்யப்பட்ட அந்த சைலம் {மைனாகம்} அங்கேயே நிலைநின்றது. ஹனுமானும் ஒரு முஹூர்த்தத்தில் சாகரத்தை {கடலின் அந்தப் பகுதியைக்} கடந்தான்.(144)

அதன்பிறகு, தேவர்களுடன் கூடிய கந்தர்வர்களும், பரமரிஷிகளும், சூரியனுக்கு ஒப்பான பிரகாசம் கொண்டவளும், நாகங்களின் மாதாவுமான ஸுரஸையிடம் {பின்வருமாறு} பேசினார்கள்:(145) வாதாத்மஜனும் {வாயுவின் மைந்தனும்}, ஹனுமான் என்ற பெயரைக் கொண்டவனுமான இந்த ஸ்ரீமான், சாகரத்தைத் தாண்டிச் செல்கிறான். ஒரு முஹூர்த்த காலம் நீ அவனுக்கு விக்னத்தை {தடையை} ஏற்படுத்துவாயாக.{146} கோரமானதும், பர்வதத்திற்கு ஒப்பானதுமான ராக்ஷச ரூபத்தை அடைவாயாக. அஞ்சத்தக்க பற்களுடையதும், செம்பழுப்புக் கண்களுடையதும், வானத்திற்குச் சமமானதுமான முகத்தைக் கொள்வாயாக.(146,147) அவனது பலத்தையும், பராக்கிரமத்தையும், உபாயத்தையும் {நாங்கள்} அறிய விரும்புகிறோம். உன்னை வெல்வான்? அல்லது விஷாதத்தை {துன்பத்தை} அடைவான்” {என்றனர்}.(148) 

Hanuman going inside the mouth of Surasa

அந்த தேவி, தைவதங்களால் {தேவர்களால்} இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, கௌரவிக்கப்பட்டாள். சமுத்திரத்தின் மத்தியில் அந்த ஸுரஸை ராக்ஷசத் தோற்றம் பூண்டாள்.{149} விகாரமான, பயங்கர ரூபத்தில் அனைத்துக்கும் பயத்தை உண்டாக்கியவள், தாவிச் செல்லும் ஹனூமந்தனிடம் இதைச் சொன்னாள்:(149,150) “வானரரிஷபா {வானரர்களில் காளையே}, நீ ஈசுவரர்களால் என் உணவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறாய். நான் உன்னை பக்ஷிக்க விரும்புகிறேன். என்னுடைய இந்த வாய்க்குள் பிரவேசிப்பாயாக” {என்றாள் ஸுரஸை}.(151)

ஸுரஸையால் இவ்வாறு சொல்லப்பட்ட ஸ்ரீமான் வானரரிஷபன், மகிழ்ச்சிமிக்க வதனத்துடனும், கூப்பிய கைகளுடனும் இந்த வசனத்தைச் சொன்னான்:(152) “இராமன் என்ற பெயரைக் கொண்ட தாசரதி {தசரதனின் மகன் ராமர்}, தம்முடன் பிறந்த லக்ஷ்மணருடனும், தன் பாரியையான {மனைவியான} வைதேஹியுடனும் தண்டகவனத்திற்குள் பிரவேசித்தார்.(153) இராக்ஷசர்களிடம் கடும் வைரம் கொண்டவர், வேறு காரியத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது பாரியையும், புகழ்பெற்றவளுமான சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான்.(154) ராம காரணத்திற்காக நான் அவளிடம் தூதனாகச் செல்கிறேன். விஷயவாசினியே {[ராமனின்] குடிமகளே}, ராமருக்கு சஹாயம் செய்வதே உனக்குத் தகும்.(155) அல்லது, மைதிலியையும், தொல்லைகளை இல்லாமலாக்கும் ராமரையும் கண்ட பிறகு, உன் வாயை அடைவேன். உனக்கு சத்தியமாகப் பிரதிஜ்ஞை செய்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(156)

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், காமரூபிணியான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான} ஸுரஸை {பின்வருமாறு} சொன்னாள், “எவராலும் என்னைக் கடந்து செல்ல முடியாது. இஃது என்னுடைய வரமாகும்” {என்றாள் ஸுரஸை}.(157) மேலும், நாகமாதாவான ஸுரஸை, பிரயாணித்துக் கொண்டிருந்த ஹனூமதனின் பலத்தை அறிய விரும்பி இந்த வாக்கியத்தையும் சொன்னாள்:(158) “வானரோத்தமா, இப்போது என் வதனத்திற்குள் பிரவேசித்த பிறகே நீ செல்ல முடியும். இந்த வரத்தைப் பூர்வத்தில் தாத்ரா {பிரம்மா} எனக்கு தத்தம் செய்தார்” என்றவள்,{159} விரைவாகத் தன் வாயை அகலத்திறந்து, மாருதியின் முன்னிலையில் நின்றாள்.(159,160அ) 

ஸுரஸை இவ்வாறு சொன்னபோது, குரோதமடைந்த வானரபுங்கவன் {ஹனுமான்}, “என்னைத் தாங்கிக் கொள்ளும் வகையில் உன் வாயைத் திறப்பாயாக” என்றான்.(160ஆ,161அ) குரோதமடைந்த ஹனுமான், ஸுரஸையிடம் இவ்வாறு சொன்னபிறகு, பத்து யோஜனைகள் நெடியவனாகவும், பத்து யோஜனைகள் விஸ்தாரமானவனாகவும் வளர்ந்தான்.(161ஆ,162அ) பத்து யோஜனைகள் அகன்ற மேகத்திற்கு ஒப்பாக அவனைக் கண்ட ஸுரஸையும், தன் வாயை இருபது யோஜனைகள் விரித்தாள்.(162ஆ,163அ) அதன்பிறகு, குரோதமடைந்த ஹனுமானும், முப்பது யோஜனைகள் அகன்றான். ஸுரஸையோ, அதே போல நாற்பது யோஜனைகள் வாயை வளர்த்தாள். வீரனான ஹனுமான், ஐம்பது யோஜனைகள் நெடியவனானான்.(163ஆ,164) ஸுரஸை, தன் வாயை அறுபது யோஜனைகள் விரித்தாள். வீரனான ஹனுமான் அதேபோல எழுபது யோஜனைகள் வளர்ந்தான்.(165) ஸுரஸை, தன் வாயை எண்பது யோஜனைகள் வளர்த்தாள். அசலம் {மலை} போன்றவனான ஹனுமான் தொண்ணூறு யோஜனைகள் வளர்ந்தான்.(166)

{ஸுரஸையோ, தன் வாயை நூறு யோனைகள் அகன்றதாகச் செய்து கொண்டாள்}[8]. புத்திமானான வாயுபுத்திரன் {ஹனுமான்}, நீண்ட நாவுடன் கூடியதும், ஸுரஸையால் திறக்கப்பட்டதுமான அந்த வாயை, நரகத்திற்கு ஒப்பாக கோரமானதாகக் கண்டு, தன் உடலைப் பெரிதும் சுருக்கிக் கொண்டு கட்டைவிரல் அளவுள்ளவனானான்.(167,168அ) பெரும் வேகம் கொண்ட அந்த ஸ்ரீமான் {ஹனுமான்}, அந்த வாயை அடைந்து, வெளியேறி வந்து அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} நின்று, இந்த வசனத்தைச் சொன்னான்:(168ஆ,இ) “தாக்ஷாயிணி {தக்ஷனின் மகளே}, நான் உன் வாய்க்குள் பிரவேசித்துவிட்டேன். உன்னை வணங்குகிறேன். வைதேஹி இருக்குமிடத்திற்குச் செல்லப் போகிறேன். உன் வரமும் சத்தியமானது” என்றான்.(169)

[8] துர்கா-கிஷோர் கோபல்லேவின் {கே.எம்.கே.மூர்த்தியின்} பதிப்பில், இந்த வரி மட்டும் விடுபட்டிருக்கிறது. மற்ற பதிப்புகள் அனைத்திலும் இருக்கிறது. பதங்கள் பிரித்துப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வால்மீகி ராமாயணப் பதிப்பைக் கொண்ட https://valmikiramayan.net/ வலைத்தளத்தில், பாலகாண்டம், ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகியவை அமரர் தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்களாலும், அயோத்தியாகாண்டம், யுத்தகாண்டம் ஆகியவை திரு.கே.எம்.கே.மூர்த்தி அவர்களாலும், சுந்தரகாண்டத்தின் சில பகுதிகள் திருமதி.துர்காநாகதேவி, திரு.வாசுதேவ கிஷோர் ஆகியோராலும், சில பகுதிகள் திரு.கே.எம்.கே.மூர்த்தி அவர்களாலும் செய்யப்பட்டன. 

Surasa and Hanuman

இராஹுவின் முகத்தில் இருந்து {விடுபட்ட} சந்திரனைப் போல, அந்த வானரம் தன் வதனத்தில் இருந்து விடுபட்டதைக் கண்ட ஸுரஸாதேவி, சுயரூபமெடுத்து {பின்வருமாறு} பேசினாள்:(170) “சௌம்யா {மென்மையானவனே}, ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, சுகமாகச் சென்று அர்த்த சித்தியடைவாயாக. மஹாத்மாவான ராகவனுடன் வைதேஹியைச் சேர்த்து வைப்பாயாக” {என்றாள்}.(171)

ஹனுமதன், அந்த செய்வதற்கரிய மூன்றாம் கர்மத்தைச் செய்ததைக் கண்டபோது, பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும், “சாது, சாது {நன்று, நல்லது}” என்று சொல்லி அந்த ஹரியைப் புகழந்தன.(172) வேகத்தில் கருடனுக்கு ஒப்பானவனோ {ஹனுமானோ}, வருணாலயமான சாகரத்தை நெருங்கி, ஆகாசத்தில் புகுந்து சென்றான்.(173)

வாரிதாராபிகளால் {நீர்த்தாரைகளால் / மேகங்களால்} சேவிக்கப்படுவதும், பறவைகளால் சேவிக்கப்படுவதும், கைசிகாசாரியர்களால் {தும்புரு முதலிய சங்கீத, நாட்டிய ஆசிரியர்களால்}, சஞ்சரிக்கப்படுவதும், ஐராவதத்தால் சேவிக்கப்படுவதும்,{174} சிம்ஹங்கள், குஞ்சரங்கள், சார்தூலங்கள், பறவைகள், உரகங்கள் போன்றவற்றை வாகனங்களாகக் கொண்டவையும், பெரும் வேகத்தில் செல்பவையுமான விமலமான {மாசற்ற} விமானங்களால் நன்கலங்கரிக்கப்பட்டதும்,{175} பாவகங்கள் {நெருப்புகள்}, வஜ்ரத்திற்கு இணையான அசனிகள் {இடிகள்} ஆகியவற்றால் ஒளிர்வதும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்கள், மஹாபாக்கியவான்கள், ஸ்வர்க்கஜித்கள் {சொர்க்கத்தை வென்றவர்கள்} ஆகியவர்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{176} அதிகப்படியான ஹவ்யங்களைச் சுமக்கும் சித்திரபானுவால் {அக்னிதேவனால்} சேவிக்கப்படுவதும், கிரஹங்கள், நக்ஷத்திரங்கள், சந்திரன், அர்க்கன் {சூரியன்}, தாரகைகள் {நக்ஷத்திரங்கள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும்,{177} மஹரிஷிகள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்களின் கூட்டங்களால் நிறைந்ததும், இனிமையாக, மாசற்றதாக எங்கும் பரந்து விரிந்ததும், {கந்தர்வ மன்னன்} விஷ்வாவசுவால் சேவிக்கப்படுவதும்,{178} தேவராஜனின் கஜங்கள் சஞ்சரிப்பதும், சந்திரசூரியர்கள் செல்லும் பாதையானதும், மங்கலமானதும், பிரம்மனால் நிர்மாணிக்கப்பட்ட ஜீவலோகத்தின் பரந்த விதானமும்,{179} வீரர்களில் சிறந்த வித்யாதர கணங்களால் பல்வேறு வகைகளில் சேவிக்கப்படுவதுமான வாயுமார்க்கத்தில் கருத்மானை {கருடனைப்} போல மாருதி {மருதனின் மகனான ஹனுமான்} சென்றான்.(174-180) மாருதாத்மஜனான ஹனுமான், ஆதாரமில்லாத அம்பரத்தை அடைந்து, நீண்ட சிறகுகளைக் கொண்ட அத்ரிராட்டை {மலைகளின் அரசனைப்} போல எங்கும் தென்பட்டான்.(181) 

சிம்ஹிகை என்ற பெயரைக் கொண்டவளும், காமரூபிணியுமான ஒரு ராக்ஷசி[9], அளவில் பெரியவனாக மிதந்து செல்பவனைக் கண்டு, தன் மனத்திற்குள் {பின்வருமாறு} சிந்தித்தாள்:(182) “நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த மஹத்தான உயிரினம் என் வசம் வாய்த்திருக்கிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உணவை உண்ணப் போகிறேன்” {என்று நினைத்தாள்}.(183) இப்படி மனத்தில் நினைத்துக் கொண்டே அவனது {ஹனுமானின்} நிழலைப் பற்றி இழுத்தாள். அந்த நிழல் பற்றப்பட்டபோது வானரன் {ஹனுமான், பின்வருமாறு}  சிந்தித்தான்:(184) “சாகரத்தில்  எதிராகவீசும் வாதத்தால் மஹாநவத்தை {எதிர்க்காற்றால் தள்ளப்படும் பெரும் ஓடத்தைப்} போல, பராக்கிரமம் குன்றியவனாக நான் பலவந்தமாக இழுக்கப்படுகிறேன்” {என்று நினைத்தான்}.(185) அப்போது மேலும், கீழும், பக்கவாட்டிலும் நோக்கிய அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, லவணாம்பசத்தில் {உப்புநீரில்} உதித்திருக்கும் மஹத்தான உயிரினத்தைக் கண்டான்.(186) அந்த வக்கிர முகத்தைக் கண்ட மாருதி {ஹனுமான்}, “அற்புத தரிசனத்துடனும், மஹாவீரியத்துடனும், நிழலை கிரஹிக்கும் உயிரினமென இதையே கபிராஜர் {சுக்ரீவர்} குறிப்பிட்டிருக்கிறார். இதில் சந்தேகம் இல்லை” என்று சிந்தித்தான்[10].(187)

[9] வெங்கார்நிறப் புணரி வேறேயும் ஒன்றப்
பொங்கு ஆர்கலிப் புனல்தரப் பொலிவதே போல்
இங்கு ஆர்கடத்திர் எனை என்னா எழுந்தாள்
அங்கார தாரை பெரிது ஆலாலம் அன்னாள்

- கம்பராமாயணம் 4815ம் பாடல், கடல் தாவு படலம்

பொருள்: பெரிய ஆலகால விஷத்தைப் போன்ற அங்காரதாரை என்பவள், பொங்கும் புனலைப் பெற்றுள்ள அந்தக் கடல், தன்னிலும் வேறுபட்ட ஒரு வெப்பமான, கரிய நிறம் பெற்ற கடலைப் பெற்றெடுத்துப் பொலிவதைப் போல “என்னை இங்கே எவர் தாண்டிப் போகிறீர்” என்று கூறி வளர்ந்து எழுந்தாள்.

[10] 4:41:10ல் சுக்ரீவன் இவளைக் குறித்துச் சொல்லும்போது, "அந்த தக்ஷிண சமுத்திரத்தின் மத்தியில், நிழலைக் கொண்டு தன் இரையை ஈர்த்து உண்பவளும், அங்காரகை என்று நன்கறியப்பட்டவளுமான ராக்ஷசி இருக்கிறாள்" என்று சொல்கிறான். சுக்ரீவன் அங்கே அங்காரகை என்று சொல்லும் ராக்ஷசியே, இங்கே சிம்ஹிகை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள்.

Hanuman killing Simhika

மதிமானான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, அது சிம்ஹிகை என்பதை சரியாகப் புரிந்து கொண்டு, மழைக்காலத்துப் பெரும் மேகம் போன்ற பேருடலாக வளர்ந்தான்.(188) மஹாகபியின் உடல் வளர்வதைக் கண்டவள் {சிம்ஹிகை}, பாதாள அந்தரத்திற்கு {பாதாளத்தின் ஆழத்திற்கு} இணையாக வாயை விரித்தாள்.(189,190அ) அடர்ந்த மேகத்தைப் போல கர்ஜித்தபடியே வானரனை நோக்கி விரைந்தாள். அப்போது, மேதாவியான மஹாகபி, தன்னுடலுக்கும், மர்மங்களுக்கும் இணையாக அவள் தன் மஹத்தான வாயை விரித்திருப்பதைக் கண்டான்.(190ஆ,191) மஹாபலவானும், வஜ்ரத்திற்கு இணையான கடுமையைக் கொண்டவனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மீண்டும் தன்னைச் சுருக்கிக் கொண்டு, அவளது விரிந்த வாய்க்குள் விழுந்தான்.(192) சித்தர்களும், சாரணர்களும், ராஹுவால் விழுங்கப்படும் பர்வகால {பௌர்ணமியின்} பூர்ணச் சந்திரனைப் போல அவளது வாய்க்குள் மூழ்குபவனைக் கண்டனர்.(193) பிறகு, அந்த வானரன், தன் கூரிய நகங்களால் அவளது மர்மங்களைப் பிளந்தான். பிறகு மனத்திற்கு இணையான வேகத்துடனும், விக்கிரமத்துடனும் மேலே உயர்ந்தான்.(194) ஆத்மவானான {தற்கட்டுப்பாடுள்ள} அந்த கபிபிரவரன், தன் திருஷ்டியாலும் {பார்வையாலும் / அறிவினாலும்}, திடத்தாலும் {தைரியத்தாலும்}, தாக்ஷிண்யத்தாலும் {வலிமையாலும்} அவளை வீழ்த்தி, மீண்டும் வேகமாக வளர்த்தான்.(195) 

ஹனுமதனால் ஹிருதயம் பிளக்கப்பட்டவள், பரிதாபமாக நீரில் விழுந்தாள். ஆகாசசாரிணிகளான பூதங்கள் {வானில் திரியும் உயிரினங்கள்}, வானரனால் சிம்ஹிகை ஹதம் செய்யப்பட்டதைக் கண்டு, அந்தப் பிலவகோத்தமனிடம் {தாவிச் செல்பவர்களின் மேன்மையான ஹனுமானிடம், பின்வருமாறு} பேசினர்:(196) “பிலவதாம்வரா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, மஹத்தான உயிரினத்தை நீ கொன்று இப்போது பீமகர்மத்தைச் செய்திருக்கிறாய். நீ எண்ணும் மங்கல அர்த்தத்தை {காரியத்தைச்} சாதிப்பாயாக.(197,198அ) வானரேந்திரா, திருதி {மனவலிமை / பொறுமை}, திருஷ்டி {பார்வை / அறிவு}, மதி {புத்திசாலித்தனம்}, தாக்ஷியம் {திறன் / சாமர்த்தியம்} என்ற இந்த நான்கிலும் உன்னைப் போல எவன் இருப்பானோ, அவன் கர்மங்களில் தொலைந்து போகமாட்டான்.(198ஆ,199அ)

பூஜிக்கத்தகுந்தவனான அந்தக் கபி, அவர்களால் மதிக்கப்பட்டு, இலக்கை அடையும் பிரயோஜனத்துடன் ஆகாசத்தில் நுழைந்து, பன்னகாசனனை {பாம்புகளைக் கொல்பவனான கருடனைப்} போலச் சென்றான்.(199ஆ,200அ) நூறு யோஜனைகளின் அந்தத்தில் {முடிவில்} கிட்டத்தட்ட மறுகரையை அடைந்தவன், சுற்றிலும் பார்வையைச் செலுத்தி, வனவரிசையைக் கண்டான்.(200ஆ,201அ) சாகை மிருகங்களில் சிரேஷ்டனானவன் {கிளைகளில் வாழும் மிருகங்களில் சிறந்த ஹனுமான்} கீழே இறங்கி, ஒரு துவீபத்தையும் {தீவையும்}, விதவிதமான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மலயோபவனங்களையும் {மலய மலையின் உப வனங்களையும்} கண்டான்.(201ஆ,202அ) ஆத்மவானும், மதிமானுமானவன் {ஹனுமான்}, சாகரத்தையும், சாகரானூபத்தையும், சாகரானூபத்தில் ஜனித்த மரங்களையும் {கடலையும், கழிக்கரையையும், கழிக்கரையில் முளைத்திருக்கும் மரங்களையும்}, சாகரனுடைய பத்தினிகளின் முகங்களையும் {கடலின் மனைவிகளான ஆறுகளின் கழிமுகங்களையும்} பார்த்து, தானே ஆகாயத்தைத் மறைக்கும் பெரும் மேகத்திற்கு ஒப்பானவனாக இருப்பதைக் கண்டான்.(202ஆ-204அ) 

அந்த மஹாகபி, “என் பேருடலையும், வேகத்தையும் கண்டால் ராக்ஷசர்கள் கௌதூஹலம் {ஆவல் / ஆர்வம்} அடைவார்கள்” என்று நினைத்தான்.(204ஆ,205அ) எனவே மஹீதரம் {மலை} போன்ற அந்த சரீரத்தைக் குறைத்துக் கொண்டு, மோஹத்தில் இருந்து விடுபடும் ஆத்மவானைப் போல இயல்புநிலையை அடைந்தான்.(205ஆ,206அ) ஹனுமான், அந்த ரூபத்தைப் பெரிதும் சுருக்கி, மூன்றடிகளால் பலியின் வீரியத்தை அழித்த விக்கிரமனான ஹரியை {விஷ்ணுவை / வாமனனைப்} போன்ற இயல்பான நிலையை அடைந்தான்.(206ஆ,207அ) நானாவித அழகிய ரூபங்களைத் தரிக்கவல்லவனும், பகைவர்களால் வீழ்த்தப்பட முடியாதவனுமான அவன், சமுத்திரத்தின் மறுதீரத்தை அடைந்து, தன்னை உணர்ந்து, அர்த்தத்தை நிச்சயித்துக் கொண்டு, ரூபம் மீண்டான்.(207ஆ,இ,ஈ,உ)

Hanuman looking at Lanka from Lamba mountain

பிறகு, பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பான அந்த மஹாத்மா, விசித்திர கூடங்களுடன் {முகடுகளுடன்} கூடியதும், கேதகம் {தாழை}, உத்தாலகம் {நறுவிலி}, நாளிகேரம் {தென்னை} ஆகியவை நிறைந்ததுமான லம்பம் என்ற கிரியின் கூடத்தில் {முகட்டில்} இறங்கினான்[11].(208) 

[11] இஃது இன்றைய இலங்கையில் உள்ள பைபிள் ராக் மலை (Bible Rock - 763m) என்று நம்பப்படுகிறது. இது படலேகலா (Batlegala) என்றும் லம்பேகோடா (Lambegoda) என்ற மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மேற்குக் கடற்கரையில் (Negomboவில்) இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

அந்தக் கபி, சமுத்திர தீரத்தை அடைந்தபோது, கிரியின் உச்சியில் இருந்து லங்கையைக் கண்டு, ரூபத்தைக் கைவிட்டு, மிருகங்களையும், பறவைகளையும் பீடித்தபடியே அந்த பர்வதத்தில் இறங்கினான்.(209) தானவர்களும், பன்னகர்களும் {பாம்புகளும்} நிறைந்ததும், பேரலைகளை மாலைகளாகக் கொண்டதுமான சாகரத்தை பலத்தால் கடந்து, பெருங்கடலின் தீரத்தில் அவன் இறங்கியபோது, {தேவர்களின் தலைநகரான} அமராவதி போலிருக்கும் லங்கையைக் கண்டான்.(210)

சுந்தர காண்டம் சர்க்கம் – 01ல் உள்ள சுலோகங்கள்: 210


Previous | Sanskrit | English | Next

Monday, 13 November 2023

சம்பாதி கொடுத்த குறிப்புகள் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 58 (37)

The indications given by Sampaati | Kishkindha-Kanda-Sarga-58 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதி தன் கதையை வானரர்களிடம் சொன்னது; இராவணன் சீதையை லங்கைக்குக் கொண்டு சென்றதைச் சொன்னது...

Sampaati speaking to vanaras

ஜீவிதத்தைத் துறந்த வானரர்கள், இவ்வாறான கருணைக்குரிய வாக்கியத்தைச் சொன்னபோது, மஹாஸ்வனம் கொண்ட கிருத்ரன் {பெருங்குரல் படைத்த கழுகான சம்பாதி}, கண்ணீருடன் வானரர்களிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) “வானரர்களே, எவன் பலவானான ராவணனால் யுத்தத்தில் கொல்லப்பட்டானெனச் சொல்லப்படுகிறானோ, அந்த ஜடாயு என்ற பெயருடையவன் என்னுடன் பிறந்த இளையவனாவான்.(2) அதைக் கேட்டாலும், விருத்தபாவத்தாலும் {முதுமையாலும்}, சிறகுகள் இல்லாததாலும் நான் பொறுத்திருக்கிறேன். இப்போது என்னிடம் உடன்பிறந்தானின் வைரியை {பகைவனை} எதிர்க்கும் சக்தி இல்லையே.(3)

பூர்வத்தில் விருத்திர வதம் நடைபெற்றபோது, அவனும் {ஜடாயுவும்}, நானும் ஜயம் கொள்ள {உயரப் பறப்பதில் ஒருவரையொருவர் வெல்ல} விரும்பினோம். ஜுவலிக்கும் கதிர்களை மாலையாகக் கொண்ட ஆதித்யனை {சூரியனை} நாங்கள் நெருங்கினோம்.(4) பரந்த ஆகாச மார்க்கத்தில், பெரும் வேகத்துடன் சென்று கொண்டிருந்த போது, மத்திய பிராப்த {நடுப்பகல் வேளைச்} சூரியனால் ஜடாயு கீழே இறங்கினான்.(5) உடன்பிறந்தவன் சூரியக் கதிர்களால் வேதனையடைவதைக் கண்டு, பரம வருத்தமடைந்த நான், சினேகத்தால் என்னிரு சிறகுகளால் {அவனை} மறைக்கத் தொடங்கினேன்.(6) வானரரிஷபர்களே, நான் முழுமையாக எரிந்த சிறகுகளுடன் விந்தியத்தில் விழுந்தேன்[1]. இங்கே வசித்திருக்கும்போது நான் என்னுடன்பிறந்தானின் அனுபவங்களைக் கவனியாதிருந்துவிட்டேன்” {என்றான் சம்பாதி}.(7)

[1] முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி
வந்ததெனன் மறைத்தலொடும் மற்று அவன் மறையப் போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தெனன் விளிகிலாதேன்

- கம்பராமாயணம் 4702ம் பாடல், சம்பாதி படலம்

பொருள்: எனக்குமுன் மேலே சென்ற என் தம்பியின் {சடாயுவின்} மேனியை எரிக்கும் நெருப்பு விரைவாகச் சுட்டெரிக்கும் காலத்தில், "என் தந்தையே நீ என்னைக் காப்பாற்று" என்றான். நானும் பெரிய என்னிரு சிறகுகளையும் பரப்பி வந்து மறைக்கவே அவன் {தன்மேல் வெப்பம் படாதபடி} மறைந்து சென்றான். {நான்} உடல் வெந்து, இறகுகள் கருகியும் உயிர் அழியாதவனாக விழுந்தேன்.

ஜடாயுவுடன் பிறந்த சம்பாதி, இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, மஹாபிராஜ்ஞனும் {பேரறிவாளனும்}, யுவராஜாவுமான அங்கதன் அதற்கு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) “நீர் சொன்னதை நான் கேட்டேன். ஜடாயுவுடன் பிறந்தவரான நீர், அந்த ராக்ஷசனின் நிலயத்தை அறிந்திருந்தால் சொல்வீராக.(9) தீர்க்க தரிசனமற்ற ராக்ஷச அதமனான அந்த ராவணன் அருகிலோ, தூரத்திலோ இருப்பதை நீர் அறிந்தால், எங்களுக்குச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(10)

அப்போது ஜடாயுவுடன் பிறந்த மூத்தவனான அந்த மஹாதேஜஸ்வி {சம்பாதி}, வானரர்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதும், தனக்குத் தகுந்ததுமான {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(11) “பிலவங்கமர்களே {தாவிச் செல்லும் குரங்குகளே}, முழுமையாக எரிந்த சிறகுகளுடன் கூடியவனும், வீரியம் இல்லாத கிருத்ரனுமான {கழுகுமான} நான், வாக்கில் மாத்திரமே ராமனுக்கான உத்தம சகாயத்தைச் செய்ய இயன்றவனாக இருக்கிறேன்.(12) வாருண லோகம் தொடர்பாக, திரைவிக்கிரம விஷ்ணுவையும் {மூன்றடியில் உலகை அளந்த வாமனனையும்}, தேவாசுரப் போர்களையும், அம்ருத மந்தனத்தையும் {அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்டதையும்} நான் அறிவேன்.(13) இராமனுக்கு எது இங்கே காரியமோ அதுவே நான் பிரதமமாக {முதன்மையாகச்} செய்ய வேண்டியதாகும். முதுமையினால் என் தேஜஸ் குன்றியது; பிராணன்களும் தளர்ந்திருக்கின்றன.(14) 

ரூபசம்பன்னையும் {வடிவத்தையே செல்வமாகக் கொண்டவளும்}, சர்வ ஆபரண பூஷிதையுமான {அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான} ஓர் இளம்பெண்ணை, துராத்மாவான ராவணன் கடத்திச் செல்வதை நான் கண்டேன்.{15}, “இராமரே, ராமரே” என்றும், “இலக்ஷ்மணரே” என்றும் கதறியவளும், மேனியெல்லாம் நடுங்கியவளுமான அந்த பாமினி {அழகிய பெண்}, தன் பூஷணங்களை {ஆபரணங்களை} வீசி எறிந்துக் கொண்டிருந்தாள்.(15,16) கரிய ராக்ஷசனிடம் {ராவணனின் இடையில்} இருந்த அவளது உத்தம கௌஷேயம் {பட்டாடை}, சைலத்தின் உச்சியில் சூரியப்பிரபையைப் போலவோ, மேகத்தில் மின்னலைப் போலவோ பிரகாசித்துக் கொண்டிருந்தது.(17) இராமனின் கீர்த்திகளை அவள் சொல்லிக் கொண்டிருந்ததால், அவளே சீதை என்று நான் நினைக்கிறேன். நான் அந்த ராக்ஷசனின் நிலயத்தைச் சொல்கிறேன், கேட்பீராக.(18)

விஷ்ரவஸின் புத்திரனும், சாக்ஷாத் வைஷ்ரவணனுடன் {குபேரனுடன்} பிறந்தவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன் லங்கை என்ற நகரை ஆள்கிறான்[2].(19) இங்கிருந்து சம்பூர்ணமாக நூறு யோஜனை தொலைவில், சமுத்திர த்வீபம் {கடற்தீவு ஒன்று} இருக்கிறது. அதில் விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்ட ரம்மியமான லங்காபுரி இருக்கிறது[3].(20) ஜாம்பூநதமயமான சித்திர துவாரங்களுடனும் {தங்கமயமான அழகிய வாயில்களுடனும்}, காஞ்சன வேதிகைகளுடனும், ஹேம வர்ணத்துடனும் கூடிய மஹத்தான பிராசாதங்கள் {பெரும் மாளிகைகள்} அங்கே சமமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அர்க்கனின் {சூரியனின்} வர்ணத்திலான மஹத்தான பிராகாரங்களால் {மதில்களால்} அது நன்றாக சூழப்பட்டிருக்கிறது.(21,22அ) தீனமானவளும், கௌஷேய வாசினியுமான {பட்டு வஸ்திரம் அணிந்தவளுமான} வைதேஹி, அங்கே ராவணனின் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு, ராக்ஷசிகளால் காவல் காக்கப்படுபவளாக வசித்து வருகிறாள். அங்கே ராஜா ஜனகனின் மகளான மைதிலியைக் காணலாம்.(22ஆ,23) சுற்றிலும் சாகரத்தால் சூழப்பட்ட லங்கையை, சாகரத்தின் அந்தத்திலிருந்து சம்பூர்ணமாக நூறு யோஜனை தொலைவில் அடையலாம்.{24} பிலவங்கமர்களே, தக்ஷிண தீரத்தை {கடலின் தென் கரையை} அடையும்போது ராவணனைக் காணலாம்[4]. காலதாமதமின்றி அங்கே துரிதமாகத் தாண்டிச் சென்று வெல்வீராக.(24,25)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே வால்மீகியின் நடை போற்றப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் இந்த சுலோகத்தின் முதல் வரியை அப்படியே ஜடாயு சொல்கிறான், ஆனால் இரண்டாம் வரியைச் சொல்வதற்குள் இறக்கிறான் {3:68:16}. ஜடாயு மேற்கண்டவாறு, “கடத்தியவன் ராவணன்; அவன் இலங்கையில் இருக்கிறான்” என்ற இரண்டாம் வரியையும் சொல்லியிருந்தால், ராமன் நேரடியாக லங்கைக்குச் சென்றிருப்பான் என்பதால் கிஷ்கிந்தா காண்டமோ, சுந்தரகாண்டமோ தேவைப்படாது. வாலியோ, சுக்ரீவனோ, ஹனுமானோ தேவைப்படமாட்டார்கள். இராமாயணம் இன்றும் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக ஜீவிப்பதற்கு, பல சந்தர்ப்பங்களில் இந்த வகையில் அமையும் உணர்ச்சிமிகுந்த பகுதிகளே காரணமாகும்” என்றிருக்கிறது.

[3] சம்பாதி இருப்பது விந்தியம் என்றும், அங்கதன் தென் கடற்கரையில் பிராயத்தில் அமர்ந்திருக்கிறான் என்பதையும், தென் கடற்கரையில் இருந்து நூறு யோஜனை தொலைவில் ஒரு சமுத்திர த்வீபத்தில் லங்காபுரி இருக்கிறது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தெற்கிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் கூட விந்தியம்தான் என்று கொண்டாலும், அங்கதன் தற்போது இருக்கும் தென் கடற்கரையில் இருந்து லங்காபுரி நூறு யோஜனை என்ற தொலைவில் ஒரு யோஜனை என்பது 8 கி.மீ என்று கொண்டாலும் 800 கி.மீ. தொலைவில் இருக்கிறது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய இலங்கைத் தீவின் சுற்றளவு 1,340 கி.மீ. ஆகும். தலைமன்னாரில் இருந்து ஹம்பன்தொட்டா வரை 500 கி.மீ ஆகும்.  மற்றொரு சாத்தியக்கூறும் இருக்கிறது. குஜராத்தில் உள்ள விந்திய மலைத்தொடரின் தெற்கேயும் கடல் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ராமேஸ்வரம் வரையிலான தூரமே கிட்டத்தட்ட 2000 கி.மீ. ஆகும். அதாவது 250 யோஜனைகளாகும். இந்தக் குழப்பத்தினாலேயே சில ஆய்வாளர்கள் ராமாயண கால லங்காபுரி இன்றைய இலங்கைத் தீவல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர்.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த சர்க்கத்தின் இறுதிக்குறிப்பில், “பிரம்மனின் மானஸபுத்திரர்களில் ஒருவர் புலஸ்தியராவார். அவர், தமது மனைவியான ஹவிர்புக்கிடம் அகஸ்தியர், விஷ்வஸ்ரஸ் {விஷ்ரவஸ்} என்ற மகன்களைப் பெறுகிறார். இந்த விஷ்வரஸுக்கு நான்கு மனைவியர் இருந்தனர். அவரது முதல் மனைவி இளபிதை {இளவிதை / இடபிடை / ஸ்வேதாதேவி} ஆவாள். அவளிடமே விஷ்வஸ்ரஸ் குபேரனை மகனாகப் பெறுகிறான். இரண்டாம் மனைவியானவள், சுமாலியின் மகள் கைகசி {கைகேசி} ஆவாள். இந்தக் கைகசி ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். விஷ்ரவஸின் மூன்றாம் மனைவி, கைகசியின் தங்கையான புஷ்போதகையாவாள். இந்த புஷ்போதகையே யுத்த காண்டத்தில் நாம் சந்திக்கப் போகும் மஹோதரன், பார்ஷ்வாதன் மற்றும் பிறரைப் பெற்றாள். விஷ்ரவஸின் நான்காம் மனைவி, கைகசியின் மற்றொரு தங்கையான ராகை ஆவாள். அவளே சூர்ப்பணகையைப் பெற்றவளாவாள். இராவணனின் மனைவியும், லங்கையின் பேரரசியுமான மண்டோதரி, திதியின் மகனான மயனின் மகளாவாள். மண்டோதரியானவள், சீதை, சாவித்ரி, அனசூயை, திரௌபதி உள்ளிட்ட பெரும் பெண்மணிகளுக்கு சமமாக ஒப்பிடத்தக்கவளாவாள். மந்த உதரி என்றால் மந்தமான கருப்பையைக் கொண்டவள் என்று பொருள் எனவே அவள் மெதுவாகக் கருவுறும் பெண்ணாகக் கருதப்படுகிறாள். மண்டோதரியின் மகன் இந்திரஜித் ஒருவனே ஆவான்” என்றிருக்கிறது.

நீங்கள் {சீதையைக்} கண்டுவிட்டுத் திரும்பி வருவதை நிச்சயம் ஞானத்தால் காண்கிறேன். குலிங்கங்களும் {ஊர்க்குருவிகளும்}, தானியங்களில் ஜீவிக்கும் பிறவும் {பிற பறவைகளும், பூமிக்கு சமீபமான} முதல் பாதையிலும், எஞ்சியவற்றை உண்பவையும் {காக்கைகளும்}, விருக்ஷங்களின் பழங்களை உண்பவையும் {அதற்கு மேல்} இரண்டாம் பாதையிலும், பாசங்கள் {மீன்கொத்திப் பறவைகள்}, குரரங்கள் {ராஜாளிகள்}, கிரௌஞ்சங்கள் ஆகியன மூன்றாம் பாதையிலும், சியேனங்கள் {பருந்துகள்} நான்காம் பாதையிலும், கிருத்ரங்கள் {கழுகுகள்} ஐந்தாம் பாதையிலும் பறக்கின்றன.(26-28அ) பலமும், வீரியமும் நிறைந்தவையும், ரூபத்திலும், யௌவனத்திலும் {வடிவத்திலும், இளமையிலும்} பிரகாசிப்பவையுமான ஹம்சங்களுக்கு {அன்னப்பறவைகளுக்கு} ஆறாம் பாதை. அடுத்தது {ஏழாம் பாதை} வைனதேயனின் {கருடனின்} கதியாகும். வானரரிஷபர்களே, எங்கள் அனைவரின் ஜன்மமும் வைனதேயர்களிடம் {வினதையின் மகன்களான அருணன், கருடன் ஆகியோரிடம்} இருந்து உண்டானதே[5].(28ஆ,29)

[5] 3:14:32,33ல் ஜடாயு, “அருணனும், கருடனும் வினதையின் மகன்கள்” என்றும், “தானும், சம்பாதியும் அருணனின் புதல்வர்கள்” என்றும் ராமனிடம் சொல்கிறான். “சம்பாதி ஆகிய நான், ஜடாயு உள்ளிட்ட எங்கள் குலத்தவர் அனைவருக்கும் ஏழாம் பாதை உண்டு” என்பது இங்கே கருத்து. 

எவனால் இகழத்தக்க கர்மம் செய்யப்பட்டதோ அந்த பிசிதாசனன் {பச்சை மாமிசம் உண்பவன்}, என்னுடன் பிறந்தவனுடன் கொண்ட வைரத்திற்குப் பிரதிகாரியம் {பகைக்கான கைம்மாறு} நிச்சயம் விளையும்.(30) இங்கிருந்தே நான் ராவணனையும், அதேபோல ஜானகியையும் தெளிவாகப் பார்க்கிறேன். எங்களுக்கும் சுபர்ணருக்குரிய {கருடனுக்குரிய} திவ்ய பார்வையும், பலமும் உண்டு.(31) வானரர்களே, எனவே நாங்கள் எங்கள் ஆஹாரத்தை வீரியத்தினாலும், பிறவிப்பயனாலும் நூறு யோஜனை தொலைவிலும் நித்தியம் பார்க்கிறோம்.(32) எங்களின் வாழ்வாதாரம் பிறவிப்பயனால் தூரத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. சரணயோதினங்களுக்கு {கால்களால் சண்டையிடும் கோழிகளுக்கு} பாத மூலத்தில் {காலடியில்} வாழ்வாதாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.(33) லவண அம்பசத்தை {உப்பு நீரைத்} தாண்டுவதற்கு ஏதாவது உபாயத்தைக் கண்டு, வைதேஹியை நோக்கிச் சென்று, நோக்கம் நிறைவேறியவர்களாகத் திரும்புவீராக.(34) உங்களின் மூலம் வருணாலயமான சமுத்திரத்தை அடைய விரும்புகிறேன். ஸ்வர்க்கம் சென்றவனும், மஹாத்மாவுமான உடன் பிறந்தவனுக்கு {என் தம்பி ஜடாயுவுக்கு} நீர்க்காணிக்கைக் கொடுக்கப் போகிறேன்” {என்றான் சம்பாதி}.(35)

மஹா ஓஜசர்களான வானரர்கள் {பெரும் வலிமைமிக்க குரங்குகள்}, முற்றிலும் எரிந்த சிறகுகளுடன் கூடிய சம்பாதியை அப்போது நதநதிபதியின் தீரம் இருக்கும் தேசத்திற்கு {நதங்களுக்கும், நதிகளுக்கும் கணவனான கடல் இருக்கும் இடத்திற்கு} அழைத்துச் சென்றனர். {சம்பாதி நீர்க்காணிக்கை அளித்ததும், அவன் வசிப்பிடம் இருந்த} அந்த தேசத்திற்கே அந்தப் பதகேஷ்வரனை {பறவைகள் அரசனைத்} திரும்பக் கொண்டு வந்து சேர்த்தனர். அந்த வானரர்களும் {சீதை பற்றிய} குறிப்புகளை அறிந்து கொண்டதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(36,37)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 58ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Saturday, 4 November 2023

பிராயோபவேசம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 53 (27)

Fast unto death | Kishkindha-Kanda-Sarga-53 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காலம் கடந்ததற்காக வருந்தியும், தண்டனைக்கு அஞ்சியும் சாகும்வரை உண்ணாநோன்பை முன்மொழிந்த அங்கதன்; சீதையில்லாமல் திரும்புவதைவிட இறப்பதே தகுந்ததென முடிவு செய்த வானரர்கள்...

Tara Hanuman Angada
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு

பிறகு அவர்கள், கோரமானதும், மறுகரை தெரியாத வருணாலயமும், கர்ஜிப்பதும், கோரமான அலைகளுடன் கலங்கிக் கொண்டிருப்பதுமான சாகரத்தைக் கண்டனர்.(1) அவர்கள் மயனின் மாயையால் ஏற்பட்ட கிரிதுர்கத்தில் தேடியபோதே, ராஜா {சுக்ரீவன்} எதை சமயம் என்று {கெடு} வைத்தானோ அந்த மாசமும் கடந்துவிட்டது.(2) அப்போது அந்த மஹாத்மாக்கள், நன்கு புஷ்பித்த மரங்களுடன் கூடிய விந்திய கிரியின் அடியில்[1] அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினர்.(3) பிறகு, புஷ்பங்களின் அதிபாரத்துடன் கூடிய உச்சிகளைக் கொண்டவையும், நூற்றுக்கணக்கான லதைகளால் {கொடிகளால்} சூழப்பட்டவையுமான வசந்த கால மரங்களைக் கண்டு பயத்தையும், சந்தேகத்தையும் அடைந்தனர்.(4) அவர்கள் வசந்தம் வந்ததென பரஸ்பரம் அறிந்து கொண்டு, சந்தேகத்தையும் {செய்தியையும் / ஆணையையும்}, காலத்தின் அர்த்தத்தையும் இழந்தவர்களாக தரணீதலத்தில் விழுந்தனர்[2].(5)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “”ஹிமவத் விந்த்⁴ய ஷை²லாப்⁴யாம் ப்ராயோ வ்யாப்தா வஸுந்த⁴ரா” - பே⁴ஷஜ கல்பம். அதாவது, விந்திய மலைத்தொடர் இமயத்திலிருந்து தென்கடல் வரை பரந்தது” என்றிருக்கிறது. பேஷஜ கல்பம் என்பது, பரத்வாஜ சம்ஹிதையில் ஆயுர்வேதம் குறித்து வரும் ஒரு சிறு பகுதியாகும். மேற்கண்ட சுலோகத்தின் பொருள், “பூமியானது கிட்டத்தட்ட ஹிமயம் மற்றும் விந்திய மலைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது” என்பதாகும். இதுபோன்ற சுலோகங்களைக் கொண்டுதான் ஆய்வாளர்கள் ராமாயண கால லங்கை, இன்றைய ஸ்ரீலங்கா அல்ல என்று வாதிடுகின்றனர். விந்திய மலைத்தொடர் என்பது, மேற்கே குஜராத்தில் இருந்து கிழக்கே சத்தீஷ்கர் வரையிலும், வடக்கே உத்திரபிரதேசம் முதல் தெற்கே மத்தியபிரதேசம் வரையிலும் இருக்கிறது; கிஷ்கிந்தை, அதாவது ஹம்பி இன்றைய கர்னாடகத்தில் உள்ளது. வானரர்கள் புகுந்த ரிக்ஷபிலம் கொல்லி மலையில் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதை முந்தைய சர்க்கத்தின் 5ம் அடிக்குறிப்பில் கண்டோம். இங்கே முதல் சுலோகத்திலேயே வானரர்கள் கடலைக் கண்டனர் என்று இருக்கிறது. இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மா முதலிய மரங்கள், பிப்ரவரி - ஏப்ரலில் வரும் பின்பனிக் காலத்தில் மலர்ந்து, ஏப்ரல் - ஜூனில் வரும் வசந்த காலத்தில் விளையும். மலர்கள் மலர்வதைக் கண்ட அவர்கள், வசந்தகாலம் வந்ததெனக் கவலையடைந்தனர். சுக்ரீவன், சரத் கால முடிவில், அதாவது அக்டோபர் - டிசம்பர் காலத்தில் மார்கசிர {மார்கழி} மாதத்தில் படைகளை அழைத்து, கிட்டத்தட்ட புஷ்ய {தை} மாதத்தை, அதாவது ஜனவரி - பிப்ரவரி மாதத்தை காலக்கெடுவாக வைக்கிறான். அவர்கள் தெற்கே உள்ள இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோதே புஷ்ய {தை} மாதம் கடந்துவிட்டது, அடுத்தது மாக {மாசி} மாதம், கிட்டத்தட்ட மார்ச் மாதத்தில் அவர்கள் பிலத்தில் இருந்தனர். எனவே இது கிட்டத்தட்ட பால்குன {பங்குனி} மாதமாகவே இருக்க வேண்டும். அதிகமாக இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதால் அவர்கள் சுக்ரீவனுக்கு அஞ்சுகிறார்கள்” என்றிருக்கிறது.

பிறகு, சிம்ஹ ரிஷப ஸ்கந்தனும் {சிங்கம் போன்றோ, காளையைப் போன்றோ கழுத்துப் பகுதியைக் கொண்டவனும்}, வலிமைமிக்க நீண்ட கைகளைக் கொண்டவனும், யௌவராஜனும் {இளவரசனும்}, மஹாபிராஜ்ஞனும் {பேரறிஞனும்}, கபியுமான {குரங்குமான} அந்த அங்கதன், அந்தக் கபிக்களில் விருத்தர்களிடமும் {முதிய குரங்குகளிடமும்}, வேறு வன ஓகஸர்களிடமும் {வனத்தில் திரியும் குரங்குகளிடமும்}, மதுரமான வார்த்தைகளில் பேசி, மதித்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(6,7) “ஹரயர்களே {குரங்குகளே}, நாம் அனைவரும், கபி ராஜாவின் சாசனத்தின்படி புறப்பட்டு வந்தோம். பில ஸ்தானத்திலேயே மாசம் பூர்ணமானதை ஏன் புத்தியில் கொள்ளாதிருக்கிறீர்கள்?(8) ஆஷ்வயுஜ {ஐப்பசி} மாசத்தில் காலக்கணக்கீட்டை ஏற்பாடு செய்து கொண்டே நாம் அனுப்பப்பட்டோம். அதுவும் {அந்தக் காலமும்} கடந்துவிட்டது. எனவே, அடுத்து செய்ய வேண்டிய காரியமென்ன?(9) நம்பிக்கைக்குரியவர்களும், நீதிமார்க்க விசாரதர்களுமான {நீதி வழியில் நிபுணர்களுமான} நீங்கள், தலைவரின் {சுக்ரீவரின்} நலனை விரும்புகிறவர்களாகவும், சர்வ கர்மங்களிலும் {செயல்கள் அனைத்திலும்} ஈடுபடுத்தப்படுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(10) 

Hanuman sees Angadha addressing the vanaras

கர்மங்களில் ஒப்பற்றவர்களும், பௌருஷத்திற்காக {ஆண்மைக்காக} திக்குகள் அனைத்திலும் புகழ்பெற்றவர்களுமான நீங்கள், இளஞ்சிவப்புக் கண்களைக் கொண்டவரால் {சுக்ரீவரால்} தூண்டப்பட்டு, என்னை முன்னிட்டுக் கொண்டு புறப்பட்டு வந்தீர்கள்.(11) இப்போதுவரை காரியம் நிறைவேறாததற்காக நாம் {சுக்ரீவரின் கைகளில்} சாகவே வேண்டும். இதில் சந்தேகம் இல்லை. ஹரிராஜர் {குரங்குகளின் மன்னரான சுக்ரீவர்} சொன்னதைச் செய்யாமல் எப்படி சுகமாக இருக்க முடியும்?(12) சுக்ரீவர் நிர்ணயித்த அந்தக் காலம் கடந்துவிட்டதால் வன ஓகஸர்கள் அனைவரும், சுயமாக பிராயோபவேசம் செய்வதே {சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதே} தகுந்தது.(13) சுக்ரீவர் இயல்பிலேயே கூர்மையானவர் {கடுமையானவர்}; {இப்போது} ஸ்வாமி {தலைவன்} பாவத்தில் நிலைபெற்றிருப்பவர்; திரும்பிச் செல்பவர்கள் அபராதம் செய்தவர்களென நம்மில் எவரையும் பொறுத்துக்கொள்ளமாட்டார்.(14) சீதையைக் குறித்து அறியாத அளவில் பாபத்தையே {நம்மைக் கொல்லவே} செய்வார். எனவே, புத்திரர்களையும், தாரங்களையும், தனங்களையும், கிருஹங்களையும் கைவிட்டு, இங்கேயே, இப்போதே பிராயோபவேசத்தில் புகுவதே ஏற்றது.(15,16அ) இராஜா, இங்கிருந்து திரும்பிச் செல்லும் நம் அனைவரையும் நிச்சயம் ஹிம்சிப்பார்; ஒப்பற்ற ரூபங்களில் வதம் செய்வார். நாம் இங்கேயே மரணிப்பதே சிறந்தது.(16ஆ,17அ)

நான் சுக்ரீவரால் யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படவில்லை. கஷ்டமின்றி கர்மங்களைச் செய்பவரான நரேந்திரர் ராமரே எனக்கு அபிஷேகம் செய்து வைத்தார்.(17ஆ,18அ) பூர்வ வைரத்தால் கட்டப்பட்டிருக்கும் அந்த ராஜா {சுக்ரீவர்}, மீறலைக் கண்டதும், நிச்சயம் செய்து கொண்டு எனக்குக் கூர்மையான {கடுமையான} தண்டனையைக் கொடுக்கவே விரும்புவார்.(18ஆ,19அ) ஜீவித அந்தரத்தில் என் விசனத்தைப் பார்க்கப் போகும் நண்பர்களால் ஆகப்போவது என்ன? இங்கேயே புண்ணிய சாகரத்தின் கரையில் பிராயத்தில் {சாகும் வரை உண்ணாவிரதத்தில்} அமரப் போகிறேன்” {என்றான் அங்கதன்}[3].(19ஆ,இ)

[3] இங்கேயும் கடற்கரையில் அமரப்போகிறேன் என்கிறான் அங்கதன். இது தற்போது இந்தியப்பெருங்கடல் என்றழைக்கப்படும் தென்கடலா? அல்லது விந்தியத்தின் அருகில் உள்ள மேற்குக் கடலா? அதவாது அரபிக்கடலா? இந்த சந்தேகத்தில்தான் ஆய்வாளர்கள் ராமாயாண கால லங்கை இன்றைய ஸ்ரீலங்கா அல்ல என்று வாதிடுகின்றனர்.

யுவராஜனான குமாரனால் {அங்கதனால்} சொல்லப்பட்ட அனைத்தையும் கேட்ட அந்த சர்வ வானர சிரேஷ்டர்களும் {குரங்குகளில் சிறந்தவர்கள் அனைவரும்} கருணையை வரவழைக்கும் வகையில் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார்கள்:(20) “சுக்ரீவன் இயல்பிலேயே கடுமையானவன். இராகவரும் பிரியையிடம் {சீதையிடம்} அன்பு கொண்டவராக இருப்பதால், வைதேஹியைக் காணாமல், அந்தக் காலமும் கடந்து, காரியம் நிறைவேற்றாமல் செல்பவர்களைக் கண்டால், ராகவருக்கு {ராமருக்குப்} பிரியத்தைச் செய்வதாகக் கண்டு {நம்மைக்} கொல்லவே விரும்புவான் என்பதில் சந்தேகமில்லை.(21,22) அபராதம் செய்தவர்கள் ஸ்வாமியின் {தலைவனின்} அருகில் செல்வது பொறுத்துக் கொள்ளத்தக்கதல்ல. நாம் சுக்ரீவனால் ஒன்றாக அனுப்பப்பட்டவர்களில் பிரதானபூதர்களாவோம் {முதன்மையானவர்கள் ஆவோம்}.(23) சீதையைத் தேடி, செய்திகளை அறிந்து கொண்டு அந்த வீரனிடம் நாம் செல்வோம். அல்லது இங்கேயே யமக்ஷயத்தை {மரணம் எனும் யமனின் ஆட்சிப்பகுதியை} நாம் அடைவோம்” {என்றனர்}.(24)

தாரன், பயத்தால் பீடிக்கபட்ட பிலவங்கமர்களின் {தாவிச் செல்லும் குரங்குகளின்} வார்த்தைகளைக் கேட்டு இதைச் சொன்னான், “மனத் தளர்ச்சி போதும். நீங்கள் விரும்பினால் நாம் அனைவரும் பிலத்திற்குள் பிரவேசித்து வாழ்வோம்.(25) {மயனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், விருக்ஷங்களும், நீரும், உண்ணத்தக்கவையும், பருகத்தக்கவையும் நிறைந்ததுமான இஃது {இந்த பிலம்} அடைவதற்கரியதாகும். இங்கே நமக்குப் புரந்தரனாலும் {இந்திரனாலும்} பயம் உண்டாகாது எனும்போது, ராகவராலும் {ராமராலும்} ஏற்படாது; வானரராஜாவாலும் {சுக்ரீவனாலும்} ஏற்படாது” {என்றான் தாரன்}.(26) அங்கதனின் சொற்களைக் கேட்டு, அதில் நம்பிக்கை கொண்ட சர்வ ஹரயர்களும் {குரங்குகள் அனைவரும்}, "எந்த விதத்தில் கொல்லப்படாமல் இருப்போமோ அந்த விதத்தில் இப்போதே உடனடியாக செயல்படுவீராக” என்றனர்.(27)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை