Showing posts with label பிரஹஸ்தன். Show all posts
Showing posts with label பிரஹஸ்தன். Show all posts

Monday, 17 February 2025

பிரஹஸ்த வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 058 (61)

Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...

Prahasta coming for war

அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)

Tuesday, 11 February 2025

பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 057 (46)

Prahasta | Yuddha-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தலைமைத் தளபதியான பிரஹஸ்தனைப் போர்க்களத்திற்கு அனுப்பிய ராவணன்...

Ravana and Prahastha Speaking

அகம்பனன் வதம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, சற்றே தீன முகத்துடன் தன் அமைச்சர்களைப் பார்த்தான்.(1) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, மந்திரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, முற்பகலில்,{2} சர்வ குல்மங்களையும் {படைகள் அனைத்தையும்} பார்வையிட்டபடியே லங்காம்புரீயைச் சுற்றி வந்தான்.(2,3அ) ஏராளமான குல்மங்களால் {படைகளால்} சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசகணங்கள், பதாகைகள், துவஜங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட லங்கா நகரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான்.(3ஆ,4அ) 

Monday, 30 September 2024

வாயிற்காவல் | யுத்த காண்டம் சர்க்கம் - 036 (22)

Gates guard | Yuddha-Kanda-Sarga-036 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மால்யவானின் அறிவுரையைப் புறக்கணித்து, அவனை நிந்தித்த ராவணன், பிரஹஸ்தனையும், பிறரையும் வாயில்களைக் காக்கப் பணித்தது...

Ravana condemning his grandfather Malyavan


துஷ்டாத்மாவும், காலனின் வசத்தை அடைந்தவனுமான தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன், தன் தாய்வழி தாத்தனான} மால்யவதன் சொன்ன அந்த வாக்கியத்தைப் பொறுத்துக் கொண்டானில்லை.(1) குரோதவசமடைந்த அவன், பொறுமையின்றித் தன் புருவங்களை நெரித்து, கண்களை உருட்டியபடியே மால்யவானிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பகைவரின் தரப்பைச் சேர்ந்து, ஹிதபுத்தியுடன் சொல்வது போல, நீர் என்னிடம் சொன்ன ஹிதமற்ற கடுஞ்சொற்கள் அனைத்தும் என் செவிகளில் ஏறவில்லை.(3) கிருபைக்குரிய மானுஷனும், ஏகனும் {தனியொருவனும்}, சாகைமிருகங்களின் {கிளைகளில் வசிக்கும் விலங்குகளான குரங்குகளின்} உதவியைப் பெற்றவனும், பிதாவால் கைவிடப்பட்டவனும், வனத்தையே ஆலயமாக {வசிப்பிடமாகக்} கொண்டவனுமான ராமனை எவ்வாறு சமர்த்தனாக நினைக்கிறீர்?(4) தேவர்களுக்குப் பயங்கரனும், சர்வ விக்ரமங்களிலும் குறைவற்றவனும், ராக்ஷசர்களின் ஈஷ்வரனுமான என்னை எவ்வாறு ஹீனனாக {குறைந்தவனாக} நினைக்கிறீர்?(5)

Thursday, 1 August 2024

விபீஷணன் பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 014 (22)

Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-014 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் கணைகள், ராக்ஷசர்களைத் துளைப்பதற்கு முன், சீதையை அவனிடம் கொடுத்துவிடும்படி ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...

Vibheeshana advising Ravana

நிசாசரேந்திரனின் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனின்} வாக்கியத்தையும், கும்பகர்ணனின் கர்ஜனையையும் கேட்ட அந்த விபீஷணன், ஹிதமானதும், அர்த்தம் நிறைந்ததுமான வாக்கியத்தை ராக்ஷசராஜர்களில் முக்கியனிடம் {ராவணனிடம் பின்வருமாறு} சொன்னான்:(1) "இராஜரே, தோள்களுக்கு இடைப்பட்ட பகுதியை {மார்பைப்} படமாகவும், சிந்தையை {கவலையை} விஷமாகவும், புன்சிரிப்பைக் கூரிய பற்களாகவும், ஐந்து விரல்களை ஐந்து தலைகளாகவும் கொண்ட சீதை என்ற பேருடல் படைத்த பெரும்பாம்பை நீர் என்னவென்று {நினைத்து} விரும்புகிறீர்?(2) 

Tuesday, 30 July 2024

கும்பகர்ணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 012 (40)

Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-012 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகரத்தைப் பாதுகாக்குமாறு பிரஹஸ்தனுக்கு ஆணையிட்ட ராவணன்; கும்பகர்ணன், ராவணனின் தகாத செயலைக் கண்டித்தாலும், அவனது எதிரிகளைக் கொல்வதாக உறுதியளித்தது...

Kumbhakarna speaking to Ravana

அப்போது, சமிதிஞ்ஜயனான அவன் {ராவணன்}, அந்த பரிஷதத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, வாஹினிபதியான பிரஹஸ்தனிடம்[1] {சபைகளில் / போர்களில் வெற்றி பெறுபவனான ராவணன், அந்த சபையின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, படைத்தலைவனான பிரஹஸ்தனிடம் பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "சேனாபதே, வித்தைகளில் தேர்ந்தவர்களும், {யானைப்படை / குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு படைப்பிரிவுகளில் உள்ள} நான்கு விதமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள் நகரத்தை ரக்ஷிக்க எப்படி நிறுத்தப்பட வேண்டுமோ அப்படியே நியமிப்பீராக" என்றான்.(2)

Sunday, 28 July 2024

சபா பிரவேசம் | யுத்த காண்டம் சர்க்கம் - 011 (32)

Entering the Hall | Yuddha-Kanda-Sarga-011 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விபீஷ்ணன், பிரஹஸ்தன் முதலியோர் பின்தொடர அரச சபைக்குள் நுழைந்த ராவணன்...

Ravana entering his hall

மைதிலியின் மீது காம மோஹிதம் அடைந்தவனும், பாபியுமான அந்த ராஜா {ராவணன்}, தன் பாபக் கர்மங்களாலும், நல்லிதயம் கொண்டோரால் இகழப்பட்டதாலும் {நாணிக்} குறுகினான்.(1) அதீத சமயம் ஆகிவிட்டதாலும், யுத்த காலம் வாய்த்திருக்கிறது என்பதாலும், அஃது அமைச்சர்களுடனும், நலம் விரும்பிகளுடனும் ஆலோசிப்பதற்கான காலமென ராவணன் நினைத்தான்[1].(2)

Wednesday, 24 July 2024

இராக்ஷசர்களின் உறுதிமொழி | யுத்த காண்டம் சர்க்கம் - 008 (24)

Assurance of Rakshasas | Yuddha-Kanda-Sarga-008 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தன், துர்முகன், வஜ்ரதம்ஷ்டிரன், நிகும்பன், வஜ்ரஹனு ஆகியோர் ராமனையும், பிறரையும் கொல்வதாக ராவணனிடம் உறுதியளித்தது...

Rakshasa assuring victory to Ravana

பிறகு, அப்போது, சூரனும், சேனாபதியும், நீலமேகம் போல் தெரிந்தவனும், பிரஹஸ்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சர்வ தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், பதகர்கள், உரகர்கள் {பறவைகள், பாம்புகள்} ஆகியோரும் போரில் உம்மைத் தாக்கவல்லவர்களல்லர்.  வானரர்களை {குரங்குகளைக்} குறித்து என்ன சொல்வது?(2) அனைவரும் கவனக்குறைவாக விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} இருந்தபோது, ஹனூமதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். நான் ஜீவித்திருக்கையில் அந்த வனகோசரன் ஜீவனுடன் {திரும்பிச்} செல்லமாட்டான்.(3) சாகரம் வரை பரந்ததும், சைலங்கள், வனங்கள், கானனங்களுடன் {சோலைகளுடன்} கூடியதுமான சர்வ பூமியையும் வானரரற்றதாகச் செய்வேன். நீர் எனக்கு ஆணையிடுவீராக.(4) இரஜனீசரரே {இரவுலாவியான ராவணரே}, வானரங்களிடம் இருந்து {லங்கையை} ரக்ஷிக்கும் ஏற்பாட்டைச் செய்கிறேன். நீர் செய்த அபராதத்தால்[1] உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது" {என்றான் பிரஹஸ்தன்}.(5)

Tuesday, 30 April 2024

பிரஹஸ்தனின் விசாரணை | சுந்தர காண்டம் சர்க்கம் - 50 (19)

Prahasta's enquiry | Sundara-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானை விசாரித்த பிரஹஸ்தன்; இராமனின் தூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹனுமான்...

Hanuman enquired by Ravana and Prahasta

மஹாபாஹுவும், உலகத்தை ராவணஞ் செய்ய {கதறி அழ} வைப்பவனுமான அந்த ராவணன், தன் எதிரில் நிற்கும் அந்த பிங்காக்ஷனை {மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட ஹனுமானைப்} பார்த்து, மஹத்தான கோபத்தை அடைந்தான். தேஜஸ்ஸால் நிறைந்த கபீந்திரனைக் குறித்த சந்தேகத்தால் மனம் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} ஆலோசித்தான்:(1,2அ) "சாக்ஷாத் நந்தி பகவானே இங்கே வந்திருக்கிறானா என்ன? பூர்வத்தில் கைலாசத்தை நான் அசைத்தபோது, எவன் என்னை சபித்தானோ அவனா {அதே நந்தியா} இவன்? அல்லது மஹாசுரன் பாணன் {பாணாசுரன்} வானர மூர்த்தியாக வந்திருக்கிறானா என்ன?" {என்று நினைத்தான் ராவணன்}.(2ஆ,3)

Wednesday, 3 April 2024

ஜம்புமாலி வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 44 (20)

Jambumali killed | Sundara-Kanda-Sarga-44 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானைக் கணைகளால் துளைத்த ஜம்புமாலி; பெரும் பாறையையும், பெரும் சால மரத்தையும், பரிகத்தையும் வீசி ஜம்புமாலியைக் கொன்ற ஹனுமான்...

Hanuman fights with Jambumali

இராக்ஷசேந்திரனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} ஆணையிடப்பட்டவனும், பலவானும், பெரும்கோரைப்பற்களைக் கொண்டவனும், பிரஹஸ்தனின் மகனுமான ஜம்புமாலி, தனுவை {வில்லை} எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.{1} செந்நிற மாலைகளையும், ஆடைகளையும் தரித்தவனும், காதுகளில் அழகிய குண்டலத்தை அணிந்தவனும், பேருடல் படைத்தவனும், உருண்டையான நயனங்கள் {கண்கள்} அமையப்பெற்றவனும், சண்டனும் {கடுமை நிறைந்தவனும்}, சமரில் துர்ஜயனுமான அவன் {போரில் வெல்லப்பட முடியாதவனுமான ஜம்புமாலி}{2}, சக்ரனின் தனுவுக்கு {இந்திரனின் வில்லுக்கு} ஒப்பானதும், வஜ்ரத்திற்கும், அசனிக்கும் சமமான ஸ்வனமுடைய அழகிய சாயகத்துடன் {கணையுடன்} கூடியதுமான மஹத்தான தனுவை {வில்லை} வேகமாக வளைத்தான்.(1-3) அந்த தனுசை வளைத்ததால் உண்டான மஹத்தான கோஷமானது {நாணொலியானது}, திசைகளையும், பிரதிசைகளையும் {திசைகளின் மூலைகளையும்}, ஏன் நபத்தையும் {வானத்தையும்} கூட திடீரென நிறைத்தது[1].(4) 

Sunday, 31 March 2024

கிங்கர ஹதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 42 (43)

Kinkaras killed | Sundara-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை விசாரித்து, ராவணனிடம் தகவல் தெரிவித்த ராக்ஷசிகள்; ராவணன் அனுப்பிய கிங்கரர்கள்; எண்பதாயிரம் கிங்கரர்களைக் கொன்ற ஹனுமான்...

Hanuman attacking Kinkaras

அப்போது, பக்ஷிகளின் {பறவைகளின்} நாதத்தையும், விருக்ஷங்கள் {மரங்கள்} முறியும் ஸ்வனத்தையும் கேட்ட சர்வ லங்காவாசிகளும் திகிலுடன் கூடிய குழப்பத்தையடைந்தனர்.(1) பயத்தால் திகிலடைந்து, அங்குமிங்கும் ஓடிய மிருகபக்ஷிகள் கூச்சலிட்டன. இராக்ஷசர்களின் முன்னிலையில் குரூரமான நிமித்தங்கள் {கொடிய சகுனங்கள்} தோன்றின.(2) நித்திரையில் ஆழ்ந்திருந்தவர்களும், விகார முகம் படைத்தவர்களுமான ராக்ஷசிகள், வீரனான அந்த மஹாகபியால் {பெருங்குரங்கான ஹனுமானால்} பங்கமடைந்த அந்த வனத்தைக் கண்டனர்.(3) மஹாபாஹுவும், மஹாசத்வனும், மஹாபலவானுமான அவன் {பெரும் தோள்களையும், பெருந்துணிவையும், பெரும்பலத்தையும் கொண்டவனான ஹனுமான்}, அந்த ராக்ஷசிகளைக் கண்டு, அவர்களை பயமுறுத்தும் வகையிலான மஹத்தான ரூபத்தை ஏற்றான்.(4)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை