Nishakara | Kishkindha-Kanda-Sarga-60 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விந்தியத்தில் விழுந்ததையும், நிசாகரர் என்ற ரிஷியை அடைந்ததையும் வானரர்களிடம் விளக்கிச் சொன்ன சம்பாதி...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு |
அப்போது, ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத்தலைவர்கள்}, நீர்க்காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்நானம் செய்து வந்த அந்த கிருத்ரனை {கழுகான சம்பாதியைச்} சூழ்ந்தபடி அந்த ரம்மியமான கிரியில் அமர்ந்தனர்.(1) அந்த ஹரிக்கள் {குரங்குகள்} அனைவரும் சூழத் தன் அருகில் அமர்ந்திருந்த அங்கதனிடம் நம்பிக்கை கொண்ட சம்பாதி, மகிழ்ச்சியுடன் மீண்டும் {பின்வருமாறு} பேசினான்:(2) “ஹரயர்களே {குரங்குகளே}, மைதிலியைக் குறித்து எப்படி அறிந்தேன் என்ற உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நிசப்தம் அடைந்தவர்களாக {அமைதியாக}, ஒரே கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பீராக.(3)
அனகா {களங்கமற்ற அங்கதா}, பூர்வத்தில் சூரியக் கதிர்களால் முழுமையாக எரிந்து, சூரியனின் வெப்பம் பரவிய அங்கங்களுடன் இந்த விந்தியத்தின் சிகரத்தில் நான் விழுந்தேன்.(4) ஆறு ராத்திரிகள் கழிந்ததும், உணர்வை அடைந்தாலும், வெறி கொண்டவனைப் போல வசமிழந்து, சர்வ திசைகளிலும் பார்த்தும், எதையும் அறிந்தேனில்லை.(5) பிறகு, சர்வ சாகரங்கள், சைலங்கள், நதிகள், சரஸ்கள், வனங்கள், பிரதேசங்கள் ஆகியவற்றையும் கண்ட பிறகே மதியில் உரைத்தது.(6) மகிழ்ச்சியான பக்ஷிகணங்களால் {பறவைக் கூட்டங்களால்} சூழப்பட்டதும், தக்ஷிணத்தில் உள்ள உததியின் {தெற்கே உள்ள நீர்க்கொள்ளிடத்தின் / கடலின்} தீரத்தில் அமைந்ததும், இடையிடையே குகைகள், கூடங்கள் {முகடுகள்} ஆகியவற்றைக் கொண்டதுமான இது விந்தியம் என்ற நிச்சயத்தை அடைந்தேன்.(7)
இங்கே ஸுரர்களால் {தேவர்களால்} நன்கு பூஜிக்கப்படும் ஒரு புண்ணிய ஆசிரமம் இருக்கிறது. அதில் நிசாகரர் என்ற பெயரைக் கொண்டவரும், உக்ர தபம் மேற்கொள்பவருமான ஒரு ரிஷி இருந்தார்.(8) தர்மஜ்ஞரான {தர்மத்தை அறிந்தவரான} நிசாகரர் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். அந்த ரிஷி இல்லாமல் இந்த கிரியில் வசித்து வரும் எனக்கு எட்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.(9)
{அப்படி நான் விழுந்த காலத்தில்}, சீரற்ற சாரல்களைக் கொண்ட விந்தியத்தின் உச்சியில் இருந்து மெதுவாகவும், சிரமத்துடனும் இறங்கி, கூரிய தர்ப்பைகளுடன் கூடிய வசுமதியை {பூமியை} துக்கத்துடன் மீண்டும் அடைந்தேன்.(10) அந்த ரிஷியை {நிசாகரரைக்} காண ஆசைப்பட்ட நான், பெரும் துக்கத்துடன் அணுகினேன். ஜடாயுவும், நானும் பலமுறை அவரை அணுகியிருக்கிறோம்.(11) அவரது ஆசிரமபதத்தின் அருகில் சுகந்தமான வாதம் {நறுமணமிக்க தென்றல்} வீசிக்கொண்டிருந்தது. அங்கே புஷ்பங்களற்ற விருக்ஷமேதும் காணப்படவில்லை; பழமற்றதும் இல்லை.(12) அந்தப் புண்ணிய ஆசிரமத்தின் அருகே சென்றதும், ஒரு விருக்ஷத்தின் அடியில் தஞ்சமடைந்து, பகவான் நிசாகரரைக் காணும் ஆசையில் காத்திருந்தேன்.(13)
அப்போது, அபிஷேகம் செய்துவிட்டு {நீராடிவிட்டு}, ஜுவலிக்கும் தேஜஸ்ஸுடன் வடக்குமுகமாகத் திரும்பி வந்து கொண்டிருப்பவரும், வெல்லப்படமுடியாதவருமான ஒரு ரிஷியை தூரத்தில் பார்த்தேன்.(14) பிராணிகள் தாதாவின் {உயிரினங்கள் பிரம்மனின்} பின் வருவதைப் போல, அவரைச் சுற்றிலும் ரிக்ஷங்கள், சிருமாரங்கள், வியாகரங்கள், சிம்ஹங்கள், நானாவித சரீசிருபங்கள் {கரடிகள், மான்கள், புலிகள், சிங்கங்கள், பலவகையான யானைகள், பாம்புகள்} ஆகியனப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.(15) இராஜன் பிரவேசித்ததும், சர்வ அமைச்சர்களும், படைகளும் {செல்வதைப்} போல ரிஷி {நிசாகரர், தமது ஆசிரமத்திற்கு} வந்து சேர்ந்ததை அறிந்த அந்தந்த உயிரினங்களும் சென்றுவிட்டன.(16)
என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த ரிஷி {நிசாகரர்}, ஆசிரமத்திற்குள் பிரவேசித்த பிறகு, மீண்டும் ஒரு முஹூர்த்த மாத்திரத்தில் வெளியே வந்து, காரியத்தைக் குறித்து {பின்வருமாறு} கேட்டார்:(17) “சௌம்யா {மென்மையானவனே}, உன் ரோமம் விகல்யமாக இருப்பதால் {மயிர்கள் குறைந்திருப்பதால்}, அடையாளம் கண்டு அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சிறகுகள் இரண்டும் அக்னியால் எரிக்கப்பட்டிருக்கின்றன, சரீரத்தில் பிராணன்கள் மட்டுமே இருக்கின்றன.(18) கிருத்ரர்களின் {கழுகுகளின்} ராஜாக்களும், வேகத்தில் மாதரிஷ்வனுக்கு {அக்னிக்கு} சமமானவர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, உடன்பிறந்த கிருத்ரர்களுமான {கழுகுகளுமான} உங்கள் இருவரையும் பூர்வத்தில் நான் கண்டிருக்கிறேன்.(19) சம்பாதி, நீயே ஜ்யேஷ்டன் {மூத்தவன்}. உன் அனுஜன் {தம்பி} ஜடாயு. மானுஷ ரூபம் தரித்து வந்து, என் சரணங்களைப் பற்றிக் கொள்வீர்களே.(20) உனக்கு வியாதியை விளைவித்தது எது? சிறகுகள் எப்படி விழுந்தன? அல்லது, எவனால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது? கேட்பவனுக்கு {கேட்கும் எனக்கு} அனைத்தையும் சொல்வாயாக” {என்று நிசாகரர் சொன்னதாக அங்கதனிடம் சொன்னான் சம்பாதி}.(21)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள்: 21
Previous | | Sanskrit | | English | | Next |