Wednesday 5 April 2023

சீதா அபஹரணம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 49 (40)

Abduction of Sita | Aranya-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் தன் தேரில் சீதையைக் கடத்திச் சென்றது; கதறி, அழுது புலம்பிய சீதை; தான் கடத்தப்பட்டதை ராமனிடம் தெரிவிக்க ஜடாயுவிடம் கேட்டுக் கொண்டது...

Ravana glides to abduct Sita

பிரதாபவானான தசக்ரீவன் {பத்து கழுத்து ராவணன்}, சீதையின் சொற்களைக் கேட்டு உள்ளங்கைகளைத் தட்டி, மஹத்தான பேருடலை ஏற்றான்[1].(1) வாக்கிய கோவிதனான அவன் {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் திறன்மிக்கவனான ராவணன்}, மீண்டும் இந்த வாக்கியங்களைச் சொன்னான், "உன்மத்தம் கொண்ட {புத்தி சிதறியவளான} நீ, என் வீரியத்தையும், பராக்கிரமத்தையும் கேட்டாயில்லை என்றே நினைக்கிறேன்.(2) அம்பரத்தில் நின்று புஜங்களால் மேதினியை வஹிப்பேன் {அந்தரத்தில் நின்று கைகளால் பூமியைச் சுமப்பேன்}; சமுத்திரத்தைப் பருகுவேன்; ரணத்தில் {போரில்} நின்று மிருத்யுவையே {மரணதேவனையே} கொல்வேன்.(3) கூரிய சரங்களால் அர்க்கனை {சூரியனை} மறைப்பேன், மஹீதலத்தைப் பிளப்பேன். உன்மத்தம் கொண்டவளே {புத்தி சிதறியவளே}, காமத்தை நிறைவேற்றும் காமரூபியான பதியாக {ஆசையை நிறைவேற்றுபவனும், ஆசைப்பட்ட வடிவத்தை ஏற்கவல்லவனுமான கணவனாக} என்னைப் பார்ப்பாயாக" {என்றான் ராவணன்}.(4)

[1] கைத்தட்டி மாயங்களை நிகழ்த்தும் பழைய திரைப்பட "மாயாவிகளுக்கு" இந்த சுலோகத்தில் வரும் ராவணனே ஆதியாக இருக்க வேண்டும். கைத்தட்டியவுடன் ரூபம் மாறுகிறான்.

குரோதத்துடன் இவ்வாறு சொன்ன ராவணனின், சிகை பிரகாசித்தது; கரியனவாக இருந்த கடைக்கண்கள் சிவப்பாக மாறின.(5) வைஷ்ரவணானுஜனான {குபேரனின் தம்பியான} அந்த ராவணன், உடனே அந்த சௌம்ய {மென்மையான பிராமண} ரூபத்தைக் கைவிட்டு கடுமையான சொந்த ரூபமான கால ரூபத்தை ஏற்றான்.(6) மஹத்தான குரோதத்தை அடைந்து, ரத்தம் போன்ற நயனங்களுடன் {கண்களுடன்} கூடிய ஸ்ரீமானும், புடம்போட்ட காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், நீல மேகத்தைப் போல ஒளிர்பவனுமான அந்த க்ஷணதாசரன் {இரவுலாவி}, பத்து முகங்களுடனும், இருபது புஜங்களுடனும் கூடியவனாக மாறினான்.(7,8அ) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், {நாடோடி துறவியின்} பரிவ்ராஜகத் தோற்றத்தைத் துறந்து, சுயரூபத்தை அப்போது வெளிப்படுத்தினான். செவ்வாடை உடுத்தியிருந்த அந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்}, ஸ்திரீரத்தினமான மைதிலியைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான்.(8ஆ,9) 

அந்த ராவணன், வெளுப்பில்லாத {கருத்து அடர்ந்த} கேசநுனிகளைக் கொண்டவளும், பாஸ்கரனின் பிரபையை {சூரியனின் ஒளியைப்} போன்ற வஸ்திர ஆபரணங்களைத் தரித்தவளுமான அந்த மைதிலியிடம் {பின்வருமாறு} பேசினான்:(10) "அழகிய இடையைக் கொண்டவளே, மூன்று உலகங்களிலும் புகழுடைய பர்த்தாவை நீ இச்சித்தால், என்னை அடைவாயாக. நான் உனக்குப் பொருத்தமான பதியாக இருப்பேன்.(11) பத்ரே {நற்பேறுள்ள பெண்ணே}, நீ நீண்ட காலம் என்னுடன் இணக்கமாக இருப்பாயாக. நான் உனக்கு சிலாகிக்கத்தகுந்த பதியாக இருப்பேன். நான் ஒருபோதும் உனக்குப் பிரியமற்றதைச் செய்ய மாட்டேன். மானுஷ பாவத்தை {இயல்பைக்} கைவிட்டு என் பாவத்திற்குத் திரும்புவாயாக.(12,13அ) மூடே {மூடப்பெண்ணே}, பண்டிதமானினியே {பண்டிதையாக உன்னைக் கருதிக் கொள்பவளே}, துர்மதியைக் கொண்டவனும், ஸ்திரீயின் பேச்சைக் கேட்டுத் தன் நட்பு ஜனங்களையும், ராஜ்ஜியத்தையும் விட்டு, காட்டுவிலங்குகள் திரியும் இந்த வனத்தில் வசிக்க ராஜ்ஜியத்திலிருந்து வீழ்ந்து, தன் நோக்கம் நிறைவேறாதவன் எவனோ அந்த அற்ப ஆயுள் கொண்ட ராமனை {அவனிடமுள்ள} எந்த குணங்களினால் பின்தொடர்கிறாய்?" {என்று கேட்டான் ராவணன்}(13ஆ-15அ)

காம மோஹிதமடைந்த துஷ்டாத்மாவான ராக்ஷசன் ராவணன், இந்த வாக்கியங்களைச் சொல்லி பிரியத்துடன் மைதிலியிடம் பிரியவாதம் செய்துவிட்டு, அவளை நெருங்கி வந்து, ஆகாயத்தில் புதன் ரோஹிணியை {பீடிப்பதைப்} போல சீதையைப் பற்றினான்.(15ஆ,16) அவன், பத்மங்களைப் போன்ற கண்களைக் கொண்ட சீதையின் கூந்தலை இடது கரத்தாலும், தொடைகளை வலது கரத்தாலும் பற்றித் தூக்கினான்.(17) மிருத்யுவுக்கு {யமனுக்கு} ஒப்பான கூரிய பற்களைக் கொண்டவனும், மஹாபுஜனும் {பெரும் தோள்களைக் கொண்டவனும்}, கிரி சிருங்கத்தை {மலைச்சிகரத்தைப்} போல ஒளிர்பவனுமான அவனைக் கண்டு வன தேவதைகளும் பயந்து ஓடினர்.(18) 

{அப்போது}, மாயாமயமானதும், திவ்யமானதும், கோவேறு கழுதைகள் பூட்டப்பெற்றதும், கழுதைகளின் ஒலியுடன் கூடியதும், பொன்சக்கரங்களைக் கொண்டதுமான ராவணனின் மஹாரதம் முன்னே தோன்றியது.(19) பிறகு அந்தப் பெருங்குரல் படைத்தவன் {ராவணன்}, கடும் வாக்கியங்களால் அந்த வைதேஹியை மிரட்டிக் கொண்டே {அவளது} இடுப்பைப் பிடித்துத் தூக்கி அந்த ரதத்தில் ஏறினான்.(20) இராவணனால் கைப்பற்றப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான அந்த சீதை, துக்கத்துடன் கூடியவளாக, வனத்தில் தூரத்தில் இருந்த ராமனை நினைத்து "இராமரே" என்று கதறினாள்.(21) அப்போது, காமத்தால் பீடிக்கப்பட்டவனான அந்த ராவணன், விருப்பமற்ற பன்னகேந்திரனின் {பாம்புகளின் தலைவனுடைய} மனைவியைப் போலத் துடித்துக் கொண்டிருந்த அவளை தூக்கிக் கொண்டு உயரக் கிளம்பினான்[2].(22) 

[2] அண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
தீண்டான் அயன் மேல் உரை சிந்தைசெயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள்வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்
கொண்டான் உயர் தேர்மிசை கோல் வளையாள்
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால்
மண்தான் உறும் மின்னின் மயங்கினளால்
விண்தான் வழியா எழுவான் விரைவான்

- கம்பராமாயணம் 3390, 3391ம் பாடல்கள், இராவணன் சூழ்ச்சிப் படலம்

பொருள்: அப்போது அங்கே அந்தத் தீயவன் {இராவணன்} அணிகலன்கள் அணிந்தவளை {சீதையைத்} தீண்டாமல், பிரம்மன் முன்னுரைத்த சாபத்தை சிந்தையில் கொண்டு, தூண் என்றே சொல்லும்படியான தன் தோள் வலிமையால், {சீதை இருந்த} பூமியின் கீழேயும் பக்கங்களிலும் என ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.{3390} உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான். அழகிய வளையல் அணிந்தவள் {சீதை} அதைக் கண்டாள். தன்னுடைய ஆருயிரைக் கண்டாளில்லை. மேகத்தைவிட்டு தரையில் விழுந்த மின்னலைப் போல மயங்கினாள். அப்போது விண் வழியே அவன் {ராவணன்} எழுந்து விரைந்து சென்றான்.{3391} அதாவது கம்பராமாயணத்தில் ராவணன் சீதையைத் தன் கைகளால் தீண்டாமல் பூமியோடு பெயர்த்தெடுத்துச் செல்கிறான்.

அந்த ராக்ஷசேந்திரன், இவ்வாறு அவளை {சீதையைக்} கவர்ந்து ஆகாயத்தில் எழுந்தபோது, துக்கத்துடன் உள்ளங்கலங்கி பைத்தியம் போல் வெறி கொண்டவளாக {பின்வருமாறு} கதறினாள்:(23) "மஹாபாஹுவே, குரு சித்தத்தைத் திளைக்கச் செய்பவரே {பெரியோரை இதயம் மகிழச் செய்பவரே}, ஹா லக்ஷ்மணரே, காமரூபியான ராக்ஷசன் அபகரிப்பதை {விரும்பிய வடிவை ஏற்கவல்ல இந்த ராட்சசன் என்னைக் கவர்ந்து செல்வதை} அறியமாட்டீரா?(24) ஜீவிதத்தையும், சுகத்தையும், அர்த்தங்களையும் {செல்வங்களையும்} தர்மத்திற்கு ஏதுவாக துறப்பவரே, ராகவரே, இந்த அதர்மனால் கவர்ந்து செல்லப்படும் என்னை நீர் பார்க்கவில்லையா?(25) பரந்தபரே {பகைவரை எரிப்பவரே}, அடங்காதவரை அடக்குபவரான நீர் இவ்விதம் பாபம் இழைக்கும் ராவணனை ஏன் கொல்லாமலிருக்கிறீர்?(26) அடங்காத {ஆணவச்} செயல்களுக்கான பலன் உடனே தெரியாது. பயிர் {விளைந்த பிறகே} பக்குவப்படுத்தப்படுவதை {சமைக்கப்படுவதைப்} போல இதில் காலமும் ஓர் அங்கமாகிறது {காரணமாகிறது}.(27) 

காலத்தால் புத்தி கெட்டு இந்தச் செயலைச் செய்யும் நீ, ஜீவிதத்திற்கு முடிவை விளைவிக்கும் கோரமான விசனத்தை {துன்பத்தை} ராமரால்  அடைவாய்.(28) தர்மத்தையே காமுறும் {அறத்தில் ஆசையுள்ள} புகழ்பெற்றவரின் தர்ம பத்தினியான நான் கடத்தப்படுகிறேன், ஐயோ, இதோ பந்துக்களுடன் கூடிய கைகேயியின் ஆசை நிறைவேறுகிறது.(29)  ஜனஸ்தானத்தின் புஷ்பித்த கர்ணீகாரங்களே {கோங்கு மரங்களே}, உங்களை வேண்டுகிறேன், "ராவணன் சீதையை அபகரித்தான்" என்று சீக்கிரம் ராமரிடம் சொல்வீராக[3].(30) ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, சாரசங்களால் {நாரைகளால்} ஒலிக்கப்பெறும் கோதாவரி நதியே, உன்னை வணங்குகிறேன், "ராவணன் சீதையை அபகரித்துச் செல்கிறான்" என்று நீ சீக்கிரம் ராமரிடம் சொல்வாயாக[4].(31) 

[3] ஆங்கிலத்தில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும், தமிழில் தாதாசாரியர் பதிப்பிலும், இதற்குப் பின் ஓர் அதிக சுலோகம் வருகிறது. அதன் பொருள் பின்வருமாறு: "மால்யவந்த சிகரமே, பிரஸ்ரவண கிரியே நான் உங்களை வணங்குகிறேன், "ராவணன், சீதையை அபகரித்துச் செல்கிறான்" என நீங்கள் சீக்கிரம் ராமரிடம் சொல்லுங்கள்" என்றிருக்கிறது. 

[4] கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய்
ஓதாது உணர்வாருழை ஓடினை போய்
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ

- கம்பராமாயணம் 3396ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப் படலம்

பொருள்: "கோதாவரியே, குளிர்ந்தவளே, இளகும் இயல்புடையவளே, மாதாவைப் போன்றவளே, தெளிந்த மனம் கொண்டவளே, நூல்கள் ஓதாமலே எல்லாம் உணர்ந்தவரிடம் {ராமரிடம்} ஓடியே போய் எனக்கு நேர்ந்ததை நீ தான் சொல்ல மாட்டாயா?" {என்றாள் சீதை}.

விதவிதமான மரங்களுடன் கூடிய இந்த வனத்தில் திரியும் தைவதங்கள் யாவரோ அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன் {வனதேவதைகளே நான் உங்களை வணங்குகிறேன்}, நான் அபகரிக்கப்பட்டதை என் பர்த்தாவிடம் {கணவரிடம்} சொல்வீராக.(32) இங்கே வசித்து வரும் சிற்றுயிர்கள் அனைத்தையும், மிருக, பக்ஷி கணங்களையும் நான் சரணடைகிறேன் {தஞ்சமடைகிறேன்}.(33) பிராணனைவிட மதிப்புமிக்கவள் கடத்தப்பட்டாள், பிரியமானவளும், ஆதரவற்றவளுமான சீதை ராவணனால் அபகரிக்கப்பட்டாள் என்பதை என் பர்த்தாவிடம் {கணவரிடம்} சொல்வீராக.(34) வைவஸ்வதனே {மரணதேவனான யமனே} என்னைக் கடத்தினாலும் மஹாபலம் பொருந்திய அந்த மஹாபாஹு {ராமர்} அறிந்தால், அங்கிருந்தும் பராக்கிரமத்துடன் மீட்பார்" {என்றாள் சீதை}.(35)

அப்போது பரிதாபகரமான சொற்களில் அழுது புலம்பிக் கொண்டிருந்த அந்த அகன்ற விழியாள், வனஸ்பதியில்[4] அமர்ந்திருக்கும் கிரிதரனை {கழுகான ஜடாயுவைக்} கண்டாள்.(36) இராவணன் வசமிருந்தவளும், மெல்லிடையாளும், பயத்தால் பீடிக்கப்பட்டவளுமான அவள் {சீதை}, அவனை {ஜடாயுவைக்} கண்டதும் துக்கத்துடன் தழுதழுத்த குரலில் {பின்வருமாறு சொல்லி} அலறினாள்:(37) "ஆரியரே {மதிப்புமிக்கவரே}, ஜடாயுவே, பாப கர்மங்களைச் செய்யும் இந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்}, பரிதாபத்திற்குரியவளும், அநாதையுமான {நாதனற்றவளுமான} என்னைக் கடத்திச் செல்வதைப் பார்ப்பீராக.(38) குரூரனும், வலிமைமிக்கவனும், ஆயுத வெற்றியில் பிரகாசிப்பவனும், துர்மதியாளனுமான இந்த நிசாசரனை {இரவுலாவியை} நீர் தடுக்கும் சக்தரல்லர்.(39) ஜடாயுவே, நான் கடத்தப்படுவதில் உள்ளபடியே நடக்கும் அனைத்திலும் எதையும் விட்டுவிடாமல் முழுமையாக ராமரிடமும், லக்ஷ்மணரிடமும் சொல்வீராக" {என்றாள் சீதை}[5].(40)

[4] வனஸ்பதி என்பதற்கு, காட்டின் தலைவன் என்றும் பூக்காமல் காய்க்கும் மரம் என்று இரண்டு பொருள்கள் சொல்லப்படுகின்றன. இந்தச் சொல் {மரம்} ஏற்கனவே பாலகாண்டம் 52:5, அயோத்தியா காண்டம் 52:102, அயோத்தியா காண்டம் 55:26 ஆகிய இடங்களில் இருக்கிறது. அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் பூவாமல் காய்ப்பவையே. வனஸ்பதி என்பதற்கு காடுகளின் தலைவன் என்றும் பொருள் இருப்பதால் இஃது ஆல மரமாகவும் இருக்கலாம். இல்லை ஒருவேளை மரங்களின் மன்னன் என்று அழைக்கப்படும் அரச மரமாகவும் இருக்கலாம். 

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுள்ளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே 

- நல்வழி - ஔவையார்

பொருள்: பூவாமல் காய்க்கும் மரங்களைப் போல மக்கள் நடுவில், "இதைச் செய்" என்று ஏவப்படாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை அபஹரண அத்தியாயத்தைக் கேட்பதன் மூலம், அல்லது படிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை அறிவோம். "பூமியில் தீமையை அழிக்கும் சீதை அபஹரண சர்க்கத்தைக் கேட்கும் சிறந்த மனிதர்களுக்கு மங்கலமில்லாதவையும், தீமையானவையுமான ஏதும் ஒருபோதும் நடக்காது" என்று ஸ்கந்த புராணம் சொல்கிறது" என்றிருக்கிறது.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள்: 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை