Straw cottage | Aranya-Kanda-Sarga-15 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பஞ்சவடியில் ஓலைக்குடில் கட்டிய லக்ஷ்மணன்; புதுமனை புகுவிழா; பஞ்சவடியையும், கோதாவரியையும் சுற்றிலும் அமைந்த இயற்கை அழகின் வர்ணனை...
பின்பு நானாவித கொடிய மிருகங்கள் நிறைந்த பஞ்சவடிக்குச் சென்றதும், தேஜஸ்ஸில் ஒளிரும் தன்னுடன் பிறந்தானான லக்ஷ்மணனிடம் ராமன் {பின்வருமாறு} சொன்னான்:(1) "சௌம்யா {மென்மையானவனே}, முனிவர் {அகஸ்தியர்} குறிப்பிட்ட தேசத்தை {இடத்தை} அடைந்து விட்டோம். புஷ்பித்திருக்கும் கானகங்களைக் கொண்ட இந்த தேசமே {இடமே} பஞ்சவடி.(2) நமக்கு சம்மதமான எந்த தேசத்தில் {இடத்தில்} ஆசிரமத்தைக் கட்டலாம் என்பதை முடிவு செய்ய கானகம் முழுவதிலும் உன் பார்வையைச் செலுத்துவாயாக. இதில் நிபுணன் நீ.(3) எங்கே நீயும், நானும், வைதேஹியும் மகிழ்ந்திருப்போமோ, எங்கே வனம் ரம்மியமாக இருக்கிறதோ, எங்கே ஸ்தலமும் ரம்மியமாக இருக்கிறதோ, எங்கே சமித்துகளும் {விறகுகளும்}, புஷ்பங்களும், குசப்புற்களும், நீரும் கிடைக்கின்றனவோ, எங்கே அருகிலேயே நீர்க்கொள்ளிடம் {குளம்} இருக்கிறதோ அத்தகைய தேசத்தை {இடத்தைக்} கண்டுபிடிப்பாயாக" {என்றான் ராமன்}.(4,5)
இராமன் இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, சீதையின் முன்னிலையில் அந்தக் காகுத்ஸ்தனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(6) "காகுத்ஸ்தரே, சதவருஷங்கள் {நூறாண்டுகள்} ஆனாலும் நான் உம்மையே சார்ந்திருப்பேன் என்பதால் உமக்கு மகழ்ச்சியைத் தரும் தேசத்தை {இடத்தை} நீரே காட்டி, "{இங்கே} கட்டப்படட்டும்" என்று எனக்குச் சொல்வீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(7)
மஹா ஒளிமிக்க லக்ஷ்மணனின் வாக்கியத்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவன் {ராமன்}, தான் நாடிய சர்வ குணங்களும் பொருந்திய ஓரிடத்தைக் கண்டான்.(8) அந்த ராமன், சௌமித்ரியின் கைகளைத் தன் கைகளால் பற்றி அந்த அழகிய தேசத்தில் {இடத்தில்} கட்டப்போகும் ஆசிரமத்திற்கான கர்மங்களைக் கொடுக்கும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(9) "சௌம்யா, மென்மையானவனே, புஷ்பித்த மரங்களால் சூழப்பட்ட இந்த தேசம் சமமானதாகவும், செழிப்பாகவும் இருக்கிறது. இங்கேயே முறைப்படி ஆசிரமபதத்தை நீ கட்டுவாயாக.(10) பத்மங்களால் சோபிக்கும் ரம்மியமான பத்மின்யம் {தாமரைத் தடாகம்} வெகுதொலைவிலில்லை. அது ஆதித்யனுக்கு ஒப்பானவையும், நறுமணமிக்கவையுமான பத்மங்களால் நிறைந்திருக்கிறது.(11)
இரம்மியமாகப் புஷ்பித்திருக்கும் மரங்களால் சூழப்பட்டதும், ஹம்சங்கள், காரண்டவங்கள் விரவிக் கிடப்பதும், சக்கரவாகங்களால் அழகூட்டப்படுவதுமான இந்த கோதாவரி, ஆத்மாவை உணர்ந்தவரான அகஸ்திய முனிவர் சொன்னதைப் போலவே இருக்கிறது.(12,13அ) சௌம்யா, மிருகக்கூட்டங்கள் {மான்கள்} திரிபவையும், மயூர நாதத்தால் {மயில்களின் அகவல்களால்} ஒலிக்கப்பெறுபவையும், நன்கு புஷ்பித்த மரங்களால் சூழப்பட்டவையும், ரம்மியமானவையும், உயரத்தில் பல குகைகளுடன் கூடியவையுமான கிரிகளும் அதிக தூரத்தில் இல்லை.(13ஆ,14) தேசதேசங்களில் {ஆங்காங்கே} தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய தாதுக்களுடன் கூடிய அவை {மலைகள்}, அழகிய கீற்றுகளுடன் கூடி சாளரங்களைப் போலவும், கஜங்களைப் போலவும் அருமையாக விளங்குகின்றன.(15)
சாலம் {ஆச்சா}, தமாலம், தாலம் {பனை}, ஈச்சம், பலா, மா, நீவாரம் {காட்டுநெல்}, திமிசை {வேங்கை}, புன்னாகம் {புன்னை} ஆகிய மரங்களால் அழகுவாய்ந்து விளங்குகின்றன.{16} சூதை {இனிப்பு மா}, அசோகம், திலகம், கேடகம், சம்பகம், புஷ்பங்களோடும், குல்மங்களோடும் {புதர்களோடும்}, லதைகளோடும் {கொடிகளோடும்} கூடிய தாழைகள்,{17} சந்தனம், ஸ்பந்தனம், நீபம் {கடம்பு}, பர்ணாஸம், எலுமிச்சை, தவம், அசுவகர்ணம், கதிரை {கருங்காலி}, வன்னி, முள்முருங்கை, பாதிரி ஆகியவற்றாலும் இன்னும் பல மரங்களாலும் விளங்குகின்றன.(16-18) ஏராளமான மிருகங்களுடனும், பறவைகளுடனும் கூடிய இந்தப் புண்ணிய இடம் ரம்மியமாக இருக்கிறது. சௌமித்ரியே, இந்த பக்ஷியுடன் {ஜடாயுவுடன்} சேர்ந்து இங்கேயே நாம் வசிப்போம்" {என்றான் ராமன்}.(19)
இராமன் இவ்வாறு சொன்னதும், பகைவனின் வீரத்தை அழிப்பவனும், மஹாபலனுமான லக்ஷ்மணன் தாமதம் செய்யாமல் தன்னுடன் பிறந்தானுக்கான ஆசிரமத்தைக் கட்டினான்.(20) அந்த மஹாபலன் {லக்ஷ்மணன்}, நன்கு தோண்டி சமம் செய்யப்பட்டதும், மண்ணால் எழுப்பப்பட்டதும், ஸ்தம்பங்களுடன் {தூண்களுடன்} கூடியதும், நீண்ட மூங்கில்களால் பிணைக்கப்பெற்றதும், சமி {வன்னி} மரக் கிளைகளைப் பரப்பிக் கயிறுகளால் கெட்டியாகக் கட்டப்பெற்றதும், குசப்புற்கள், வைக்கோல், இலைகள் ஆகியவற்றால் நன்றாகக் கூரை வேயப்பட்டதும், சமதரையுடன் கூடியதும், கண்களுக்கு இனிமையாக ரம்மியமாக அகன்று இருப்பதுமான ஒரு பர்ணசாலையை {ஓலைக்குடிலை} வசிப்பிடமாக அமைத்தான்.(21-23) ஸ்ரீமானான அந்த லக்ஷ்மணன், கோதாவரி நதிக்குச் சென்று, நீராடி, பத்மங்களையும், பழங்களையும் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தான்.(24) புஷ்ப பலி {மலர்க்காணிக்கைக்} கொடுத்து, விதிப்படி சாந்தி செய்த பிறகு, தான் கட்டிய ஆசிரமபதத்தை அவன் ராமனுக்குக் காட்டினான்[1].(25)
[1] அயோத்தியா காண்டம் 56ம் சர்க்கத்தில் சித்திரகூடத்தில், மால்யவதி நதியின் அருகில் கட்டப்பட்ட பர்ணசாலைக்கு அடுத்து, இங்கே கோதாவரியின் அருகில் பர்ணசாலையைக் கட்டுகின்றனர்.
சௌமியமாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஆசிரமத்தை சீதை சகிதனாகக் கண்ட ராகவன், அந்த பர்ணசாலை குறித்துப் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.(26) அவ்வாறு பெரும் மகிழ்ச்சியடைந்தவன், தன்னிரு கைகளாலும் லக்ஷ்மணனை ஆரத்தழுவிக் கொண்டு அதி சினேகிதமான இந்தச் சொற்களைச் சொன்னான்:(27) "பிரபோ, மகத்தான கர்மத்தைச் செய்திருக்கும் உன்னிடம் பிரீதியடைகிறேன். அதன் நிமித்தமாகவே உன்னை ஆரத்தழுவிக் கொண்டேன்.(28) இலக்ஷ்மணா, பாவங்களை {உணர்வுகளை} அறிந்தவனும், திறன்களை அறிந்தவனும், தர்மத்தை அறிந்தவனுமான உன்னை புத்திரனாக அடைந்த தர்மாத்மாவான நம் பிதா இறக்கவில்லை" {என்றான் ராமன்}.(29)
லக்ஷ்மிவர்தனனும், புலனடக்கம் கொண்டவனுமான அந்த ராகவன் {ராமன்}, லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ஏராளமான பழங்களுடன் கூடிய அந்த தேசத்திலேயே {இடத்திலேயே} சுகமாக வசித்திருந்தான்.(30) சீதையாலும், லக்ஷ்மணனாலும் தொண்டாற்றப்பட்ட அந்த தர்மாத்மா {ராமன்}, ஸ்வர்க்கலோகத்தில் அமரனைப் போலே அங்கே சில காலம் வசித்திருந்தான்.(31)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 15ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |