Showing posts with label சூர்ப்பணகை. Show all posts
Showing posts with label சூர்ப்பணகை. Show all posts

Saturday, 23 August 2025

இராக்ஷசிகளின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் - 094 (41)

The lament of Rakshasis | Yuddha-Kanda-Sarga-094 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் இறந்து போன தங்கள் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள் ஆகியோருக்காக அழுத ராக்ஷசிகளின் புலம்பல்...

Rakshasis crying for their deceased relatives

ஆரோஹணம் செய்தவர்களுடன் கூடிய {தங்கள் மீது ஏறியிருந்தவர்களுடன் கூடிய} அந்த ஆயிரக்கணக்கான நாகங்களுடனும், வாஜிகளுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும்}, அக்னி வர்ணங்கொண்டவையும், துவஜங்களுடன் கூடியவையுமான ஆயிரக்கணக்கான ரதங்களுடனும்,{1} கதை, பரிகங்களைக் கொண்டு போரிடுபவர்களும், சித்திரமான காஞ்சன துவஜங்களுடன் கூடியவர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்களும்}, சூரர்களுமான ஆயிரக்கணக்கான  ராக்ஷசர்களும்,{2} ராவணனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களும், சிரமமின்றி கர்மங்களைச் செய்யக்கூடிய ராமனின், தப்த காஞ்சன பூஷணத்துடன் கூடிய {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} கூரிய சரங்களால் கொல்லப்பட்டனர்.(1-3) 

Friday, 16 February 2024

கொல்மின், தின்மின் | சுந்தர காண்டம் சர்க்கம் - 24 (48)

Kill and eat | Sundara-Kanda-Sarga-24 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சசி, அருந்ததி, ரோஹிணி முதலியோர் தங்கள் தங்கள் கணவனிடம் கொண்ட அர்ப்பணிப்பைக் குறிப்பிட்ட சீதை; ராக்ஷசிகள் சீதையைக் கொன்று உண்ணப்போவதாக அச்சுறுத்தியது...

Rakshasis threatening Seetha to kill and eat her

பிறகு, கொடிய முகங்களையும், கடும் இயல்பையும் கொண்ட ராக்ஷஸ நாரியைகள் {ராக்ஷசப் பெண்கள்}, அந்த சீதையை நெருங்கி, கடுமைமிக்க, பிரியமற்ற வாக்கியத்தைப் பேசினார்கள்:(1) “சீதே, பெருஞ்சிறப்புடைய மஹத்தான சயனங்களுடன் {படுக்கைகளுடன்} கூடியதும், சர்வபூதங்களுக்கும் மனோஹரமானதுமான {அனைத்து உயிரினங்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதுமான} அந்தப்புரத்தில் வசிப்பதை நீ ஏற்க மறுப்பதேன்?(2) மானுஷியான நீ, ஒரு மானுஷ்யனின் பார்யத்வத்தை பஹுமானிக்கிறாய் {மனிதப்பெண்ணான நீ, மனிதனின் மனைவி என்ற நிலையை உயர்வாக மதிக்கிறாய்}. இராமனிடம் இருந்து மனத்தை விலக்குவாயாக. இல்லையெனில் நீ இல்லாமல் போவாய்.(3) மூவுலகங்களின் சுபமான செல்வங்களை அனுபவிக்கும் ராக்ஷசேஷ்வரர் ராவணரை ஏற்று, பர்த்தாவாக்கி {கணவராக்கிக்} கொண்டு விரும்பியபடி சுகமாக இருப்பாயாக.(4) சோபனே {அழகிய பெண்ணே}, அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, நீ மானுஷியாக இருப்பதால், ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டவனும், வெற்றியடையாததால் வருந்தும் மானுஷனுமான அந்த ராமனை இச்சிக்கிறாய் {விரும்புகிறாய்}” {என்றனர் அந்த ராக்ஷசிகள்}.(5)

Sunday, 26 March 2023

ஊடாட்டம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 34 (26)

Interaction | Aranya-Kanda-Sarga-34 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் குறித்து ராவணனிடம் சொன்ன சூர்ப்பணகை; சீதையை அபகரித்து, மனைவியாக்கிக் கொள்ளும்படி ராவணனைத் தூண்டியது...

Ravana and Shurpanaka

அப்போது, அமைச்சர்களின் மத்தியில் சூர்ப்பணகை கடும் சொற்களில் பேசுவதைக் கண்டு கோபமடைந்த ராவணன் {பின்வருமாறு} கேட்டான்:(1) "இராமன் என்பவன் எவன்? அவனது வீரியம் எத்தகையது? ரூபம் என்ன? பராக்கிரமம் என்ன? அடைதற்கரிய தண்டகாரண்யத்தில் அவன் பிரவேசிப்பதற்கான அர்த்தம் {நோக்கம்} என்ன?(2) இராக்ஷசர்களையும், கரன், தூஷணன், திரிசிரன் ஆகியோரையும் போரில் கொல்ல ராமன் பயன்படுத்திய ஆயுதம் என்ன? மநோஜ்ஞாங்கியே {மனங்கவரும் அங்கங்களைக் கொண்டவளே}, உன்னை விரூபிதையாக்கியவன் {உன் வடிவத்தைச் சிதைத்தவன்} எவன்?[1] அதை நீ சொல்வாயாக" {என்று கேட்டான் ராவணன்}.(3,4அ)

[1] சூர்ப்பணகை ராவணனின் இடத்திற்கு வந்த போது அங்கே இருந்தவர்கள் இந்த அங்கபங்கம் குறித்து என்ன நினைத்தனர் என்பது குறித்து கம்பராமாயணத்தில் வரும் இந்தக் குறிப்பிட்ட பாடல் கவனிக்கத்தக்கது. அது பின்வருமாறு:

சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ
இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்
கற்பு இறந்தாள் என கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர்

- கம்பராமாயணம் 3098ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

பொருள்: "புகழக்கூடிய உயர்குடி பிறந்த பெண்களுக்கு இச்செயல் துணிந்து செய்யக்கூடியதா? இல்லை. நற்குடி பிறந்தவர்களுக்கு பொருந்திய செயலை இவள் செய்யவில்லை. கற்பு நெறி தவறினாள் என்று இவளுடன் பிறந்த கரன் இவளது அழகை அழியும்படி செய்தான் போலும் எனச் சில அரக்கர்கள் சொன்னார்கள். சூர்ப்பணகை ராவணனிடம் வந்ததைக் கண்ட ராக்ஷசர்கள், "கரனே, தன் தமக்கை கற்புநெறி தவறினாள் என்று அறிந்து இவள் அழகை அழித்தான் போலும்" என்று சொல்வதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

அந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், குரோதத்தில் மூர்ச்சித்த அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, அதன்பிறகு ராமனைக் குறித்து நியாயப்படி விவரிக்கத் தொடங்கினாள்:(4ஆ,5அ) "தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} அந்த ராமன், தீர்க்கபாஹு {நீண்ட கைகளைக் கொண்டவன்}; விசாலாக்ஷன் {நீண்ட விழிகளைக் கொண்டவன்}; மரவுரியையும், கிருஷ்ணாஜினத்தையும் {கருப்பு மான் தோலையும்} உடையாகக் கொண்டவன்; கந்தர்பனுக்கு {காதல் தேவனான மன்மதனுக்கு} சமமான ரூபம் கொண்டவன்.(5ஆ,6அ) சக்ரனின் வில்லை {இந்திரவில்லை / வானவில்லைப்} போன்ற பொலிவையும், கனக அங்கதத்தையும்  {பொற்பூணையும்} கொண்ட வில்லை வளைத்து, மஹாவிஷங்கொண்ட சர்ப்பங்களைப் போன்ற கூரிய நாராசங்களை அவன் ஏவினான்.(6ஆ,7அ) மஹாபலம் பொருந்தியவனான அந்த ராமன், போர்க்களத்தில் {தூணிகளில் இருந்து} கோரமான சரங்களை எடுப்பதையும் நான் உணர்ந்தேனில்லை, கார்முகத்தை {வில்லை} வளைப்பதையும், நாண்கயிற்றில் இருந்து {அவற்றை} ஏவுவதையும் நான் கண்டேனில்லை.(7ஆ,8அ) இந்திரனின் ஆலங்கட்டி மழையால் அழிக்கப்பட்ட பயிரைப் போல அவனது சரமாரியால் அந்த உத்தம சைனியத்தின் {சிறந்த படையின்} அழிவை மட்டுமே நான் கண்டேன்.(8ஆ,9அ) 

பாதசாரியும் {காலாட்படை வீரனும்}, தனியொருவனுமான அவனது கூரிய சரங்களால், பீம வீரியங்கொண்ட {பயங்கர வீரத்துடன் கூடிய} ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், தூஷணனும், கரனும்  ஒன்றரை முஹூர்த்த காலத்திற்குள்[1] கொல்லப்பட்டனர்.(9ஆ,10) இரிஷிகளுக்கு அபயம் தத்தம் செய்யப்பட்டது {ரிஷிகள் பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்}. தண்டகமும் க்ஷேமம் மீண்டது {முனிவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக ஆக்கப்பட்டது}.(11) மஹாத்மாவும், விதிதாத்மனும் {விதிகளை அறிந்தவனும்}, ஸ்திரீ வதத்தை வெறுப்பவனுமான ராமன், தனியொருத்தியான என்னை அவமதித்து எப்படியோ விட்டுவிட்டான்[2].(12) அவனுடன் பிறந்தவனும், லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவனுமான மஹாதேஜஸ்வி, துணிவெனும் குணத்தில் ராமனுக்கு இணையான வீரியவானும், அவனைப் பின்பற்றுபவனும், அவனது பக்தனும் ஆவான்.(13) எளிதில் எரிச்சலடைபவனும், வெல்லப்பட முடியாத வெற்றியாளனும், விக்கிராந்தனும் {வீரனும்}, புத்திமானுமான அந்த பலவான் {லக்ஷ்மணன்}, நித்தியம் ராமனின் வலது கையாகவும், வெளியில் திரியும் அவனது {ராமனின்} பிராணனாகவும் செயல்படுகிறான்.(14)

[1] ஒரு முஹூர்த்தம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்கள் ஆகும். எனவே இங்கே குறிப்பிடும் காலம் 72 நிமிடங்களாகும்.

[2] இங்கே சூர்ப்பணகை, அரக்கர்களை வதைத்த பிறகே, ராமன் தன்னை அவமதித்து அனுப்பியதாகச் சொல்கிறாள். இந்த சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் லக்ஷ்மணன் தன்னை விரூபியாக்கியதை {தன் காதுகளையும் மூக்கையும் அரிந்து அனுப்பியதைச்} சொல்கிறாள்.

விசாலாக்ஷியும் {அகன்ற விழிகளைக் கொண்டவளும்}, பூர்ண இந்துவுக்கு ஒப்பான முகத்தைக் கொண்டவளுமான ராமனின் தர்மபத்தினி {சீதை}, பர்த்தாவுக்குப் பிரியமானவளாக நித்தியம் பிரிய ஹிதத்திலேயே {கணவனின் விருப்பத்திற்குரியவற்றிலும், கணவனின் நலத்திற்குரியவற்றிலும் மட்டுமே} ஈடுபடுகிறாள்[3].(15) நீளமான கேசத்தையும், நல்ல நாசியையும், தொடைகளையும், அழகிய ரூபத்தையும் கொண்ட அந்தப் புகழ்பெற்றவள், வனதேவதையைப் போலவும், மற்றொரு ஸ்ரீயை {லக்ஷ்மி தேவியைப்} போலவும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள்.(16) புடம்போட்ட காஞ்சன வர்ணம் {பொன் நிறம்} கொண்டவளும், ரத்தம் போன்று சிவந்து உயர்ந்த நகத்தைக் கொண்டவளுமான அந்த மங்கல வைதேஹி {விதேஹ நாட்டு இளவரசி}, சிறந்த நிதம்பங்களையும் {பின்புறத்தையும்}, மெல்லிய இடையையும், சீதை என்ற பெயரையும் கொண்டவளாவாள்.(17) அத்தகைய ரூபத்தை தேவியரிடத்திலும் பூர்வத்தில் நான் கண்டதில்லை. கந்தர்விகளிடத்திலும் இல்லை, யக்ஷிகளிடத்திலும் இல்லை, கின்னரிகளிடத்திலும் இல்லை, மஹீதலத்தின் நாரிகளிடத்திலும் {மனிதப் பெண்களிடத்திலும்} கண்டதில்லை.(18) 

[3] ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழித்
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய்குலிகச் செப்பு
பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்

- கம்பராமாயணம் 3134ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

பொருள்: {ராவணன்}, "யார் அவள்" என்று கேட்டதும், அந்த அரக்கியும் {சூர்ப்பணகையும்}, "ஐயா, அவள் அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும், கொங்கை செம்பொன்னால் செய்யப்பட்ட குங்குலியச் செப்பு போலும், அவளது பாதம் பட பூமியே புண்ணியம் செய்தது போலும், அம்மா {ஐயோ}, அவள் பேர் சீதை" என அவளது அழகைச் சொல்லத் தொடங்கினாள். 

எவனுக்கு சீதை பாரியையாகிறாளோ {மனைவியாகிறாளோ}, எவனை மகிழ்ச்சியாகத் தழுவிக் கொள்கிறாளோ அவனே சர்வலோகத்திலும் புரந்தரனைவிட அதிஜீவியாவான் {இந்திரனைவிட மகத்தாக வாழ்வான்}.(19) சுசீலையும் {நல்ல குணம் கொண்டவளும்}, சிலாகிக்கத்தகுந்த உடலமைப்பைக் கொண்டவளுமான அவள், ரூபத்தால் புவியில் ஒப்பற்றவளாகத் திகழ்கிறாள். அவள் உனக்கே பாரியையாகத் தகுந்தவள். நீயே அவளுக்குச் சிறந்த பதியாகத் திகழ்வாய்.(20) மஹாபுஜா {பெருந்தோள்களைக் கொண்டவனே}, விஸ்தீரண நிதம்பங்களையும் {பின்புறத்தையும்}, பருத்துப் புடைத்த பாற்குடங்களையும், சிறந்த முகத்தையும் கொண்ட அவளை உன் பாரியை {மனைவி} ஆக்கும் நோக்கில் கொண்டு வரத் துணிந்த என்னை, குரூரனான அந்த லக்ஷ்மணன் விரூபிதையாக்கினான்[4].(21,22அ) பூர்ணச் சந்திரனைப் போல் ஒளிரும் முகத்தைக் கொண்ட அந்த வைதேஹியை நீ இப்போது பார்த்தாலும், மன்மதனின் சரங்களுக்கு  இரையாகிவிடுவாய்.(22ஆ,23அ) அவளை உன் பாரியையாக்கிக் கொள்வதில் உனக்கு அபிப்ராயம் உண்டானால் இப்போதே ஜயார்த்தத்துடன் {வெற்றி நோக்குடன்} உன் தக்ஷிண பாதத்தை {வலது பாதத்தை} சீக்கிரம் எடுத்து வைப்பாயாக[5].(23ஆ,இ) இராக்ஷசேசுவரா, ராவணா, என்னுடைய இந்த வாக்கியங்கள் உனக்குப் பிடித்திருந்தால் சங்கை {ஐயம் / தயக்கம்} ஏதுமின்றி என் சொற்களின்படி செயல்படுவாயாக[6].(24)

[4] சூர்ப்பணகை லக்ஷ்மணன் தன்னை அங்கபங்கம் செய்தான் என்று ராவணனிடம் சொல்லவில்லை என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கே சூர்ப்பணகை குறிப்பிடுவது கிட்டத்தட்ட எல்லா பதிப்புகளிலும் இருக்கின்றன. செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் மட்டுமே இல்லை. எனவே மேற்கண்ட ஆய்வுகள் அந்தச் செம்பதிப்பைக் கொண்டே செய்யப்பட்டிருக்க வேண்டும். செம்பதிப்பிலும் இந்தக் குறிப்பிட்ட சுலோகம் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

[5] வி.வி.சுப்பராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் ஆங்கிலப் பதிப்புகளிலும், தமிழ்ப் பதிப்புகள் அனைத்திலும் இங்கே இன்னும் சில செய்திகள் சொல்லப்படுகின்றன. இங்கே விடுபட்டிருக்கும் அந்த சுலோகங்களில் உள்ள செய்தி பின்வருமாறு, "இராக்ஷசேசுவரா, இத்தகைய கொடூரனும், ஆசிரமவாசியுமான ராமனை வதைத்து {இறந்து போன} அந்த ராக்ஷசர்களுக்கு ஆசையை நிறைவேற்றுவாயாக.{23} மஹாரதனான லக்ஷ்மணனையும் கூரிய சரங்களால் கொன்ற பிறகு, நாதனையும் {சீதையின் கணவனான ராமனையும்} கொன்று, சீதையுடன் சுகமாக விரும்பியபடி போகித்திருப்பாயாக.{24}" என்று இருக்கிறது. இந்த அதிக செய்தியால் இந்த சர்க்கம் சில பதிப்புகளில் 27 சுலோகங்களைக் கொண்டதாகவும், சில பதிப்புகளில் 28 சுலோகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.

[6] மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடும் கூந்தால் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வாள் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்

- கம்பராமாயணம் 3145ம் பாடல்

பொருள்: மேகலையை அணிந்திருக்கும் உலக மக்கள், மீன்களைத் தன்னகத்தே கொண்டு அசையும் கடலைப் புகழும் வண்ணம், வண்டுகள் நாடும் மணமுள்ள கூந்தலையும், சிற்றிடையையும் கொண்டவளும், மான் போன்றவளுமான சீதையை நீ அடைந்து, அவளுடன் இன்புற்றிருந்து, நான் அடைந்து இன்புற்றிருக்கும் வண்ணம் இராமனை என்னிடம் கொடுத்து உன் வாளின் ஆற்றலை உலகம் காணும்படிச் செய்வாயாக
.
இராக்ஷசேசுவரா, மஹாபலவானே, உன் சக்தியை உணர்ந்து, வர்ணிக்கமுடியாத {குற்றமற்ற} அங்கங்களைக் கொண்டவளான சீதைக்கு உன் பார்யாத்வத்தை அளிப்பதில் ஈடுபடுவாயாக {சீதையை உன் மனைவியாக்கிக் கொள்ள அவளை அபகரிப்பாயாக}.(25) இராமன், ஜனஸ்தானத்தில் நிலைத்திருந்த நிசாசரர்களை {இரவுலாவிகளைக்} கோணலற்ற {நேராகச் செல்லும்} தன் சரங்களால் கொன்றான் என்பதை மனத்தில் உணர்ந்தும், தூஷணனும், கரனும் கொல்லப்பட்டதைக் கண்டும் இப்போதே செயல்படுவதே உனக்குத் தகும்" {என்றாள் சூர்ப்பணகை}.(26)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Saturday, 25 March 2023

இராவண நிந்தை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 33 (24)

Ravana taunted | Aranya-Kanda-Sarga-33 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய சூர்ப்பணகை; அவள் ராமனின் திறமைகளைப் போற்றிவிட்டு, நல்லரசனின் குணங்களை விவரித்தது...

Surpanakha taunts Ravana

அப்போது பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்த சூர்ப்பணகை, குரோதமடைந்து, உலகங்களை ராவணம் செய்ய {கதற} வைக்கும் ராவணனிடம் அமாத்தியர்களுக்கு மத்தியில் {பின்வரும்} கடுமையான வாக்கியங்களைப் பேசினாள்[1]:(1) "அங்குசமில்லாமல் {வழிநடத்தப்படாமல்} கட்டுப்பாடற்ற காமத்திலும், போகங்களிலும் மதங்கொள்வதை {ஆசையிலும், இன்பங்களிலும் மூழ்குவதை} அறிந்து கொள்ளாமலும், கோரமான பயம் எழுவதை புரிந்து கொள்ளாமலும் இருக்கிறாய்.(2) ஒரு மஹீபதி, அற்ப போகங்களுக்கு அடிமையாகி, விரும்பியபடி செயல்படும் லுப்தனாக {பேராசைக்காரனாக} இருந்தால், சுடலையில் உள்ள அக்னியை {சுடுகாட்டுத் தீயைப்} போலப் பிரஜைகள் {குடிமக்கள்} அவனை மதிக்கமாட்டார்கள்.(3) 

[1] தங்கையும் அவ்வழி தலையில் தாங்கிய
செங்கையள் சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள் மூக்கிலள் குழையின் காதிலள்
மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள்

- கம்பராமாயணம் 3090ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

பொருள்: அந்த இடத்தில் {ராவணனின்} தங்கையும், தலை மேல் சுமந்த சிவந்த கைகளைக் கொண்டவளும், வெள்ளமாகச் சிவந்து பெருகும் இரத்தத்துடன் கூடிய மார்பைக் கொண்டவளும், மூக்கிலாதவளும், குழை அணிந்த காதுகளை இழந்தவளுமானவள் {சூர்ப்பணகை}, மேகத்தின் இடி முழக்கம் தோற்கும்படி வாயைத் திறந்து ஓலமிட்டாள் .

எந்தப் பார்த்திபன் {மன்னன்}, உரிய காலத்தில் காரியங்களை சுயமாகத் தீர்க்காமல் இருக்கிறானோ, அவன் தன்னுடைய ராஜ்ஜியத்துடன் சேர்ந்து அந்தக் காரியங்களின் நிமித்தமே நாசத்தை அடைவான்.(4) நதியில் சேற்றைத் தவிர்க்கும் திவிபங்களை {யானைகளைப்} போலவே நரர்களும், சாரர்களை {ஒற்றர்களை} அடைதற்கரியவனும், காணற்கரியவனும், சுவாதீனம் {தன் வசம்} இல்லாதவனுமான நராதிபனை {மனிதர்களின் தலைவனை} தூரத்திலேயே தவிர்த்துவிடுவார்கள்.(5) சுவாதீனம் {தன் வசம்} இல்லாமலும், விஷயத்தை {நாட்டைக்} காக்காமலும் உள்ள நராதிபர்கள், சாகரத்தில் உள்ள கிரியை {கடலில் உள்ள மலையைப்} போலத் தங்கள் புத்தியால் ஒருபோதும் பிரகாசிக்கமாட்டார்கள்.(6) 

நல்லறிவுள்ள தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோருடன் போரிட்டு {அவர்களைப் பகைத்துக் கொண்டு}, சாரர்களுமின்றி {ஒற்றர்களும் இன்றி}, சபலக்காரனாய் இருக்கும் நீ எவ்வாறு ராஜாவாக விளங்குகிறாய்?(7) இராக்ஷசா, பால ஸ்வபாவத்துடன் {சிறுபிள்ளைத்தனத்துடன்} கூடியவனும், புத்தியற்றவனும், அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் இருப்பவனுமான நீ எவ்வாறு ராஜாவாக விளங்குகிறாய்?(8) ஜயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, சாரர்களும் {ஒற்றர்களும்}, கோசமும் {கருவூலமும்}, நயமும் {நீதியும்} தன் வசமில்லாத நரேந்திரர்கள் {மனிதர்களின் தலைவர்கள்} சாதாரண ஜனங்களுக்கு சமமானவர்களே.(9) நராதிபா, தொலைதூரத்தில் உள்ள சர்வ அர்த்தங்களையும் {விஷயங்கள் அனைத்தையும்} சாரர்கள் மூலம் அறியவல்ல ராஜர்களே தீர்க்கதரிசிகளென அழைக்கப்படுகிறார்கள்.(10) 

சொந்த ஜனங்களும், ஜனஸ்தானமும் அழிந்துவிட்டதை உணராதிருக்கும் உன்னை, சாரர்கள் இல்லாதவன் என்றும், பயனற்ற மந்திரிகளால் சூழப்பட்டவன் என்றும் நினைக்கிறேன்.(11)  பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்யும் ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், தூஷணன், கரன் ஆகியோரும் ராமன் என்ற தனியொருவனால் கொல்லப்பட்டனர்.(12) களைப்பில்லாமல் காரியங்களைச் செய்பவனான ராமன், ரிஷிகளுக்கு அபயத்தை தத்தம் செய்து {பாதுகாப்பளித்து}, தண்டகத்தை க்ஷேமமுள்ளதாக்கி {பாதுகாத்து அவர்களுக்கு நன்மையுள்ளதாக்கி}, ஜனஸ்தானத்தையும் முறியடித்தான்.(13) இராவணா, லுப்தனும் {தன்னலம் கொண்ட பேராசைக்காரனும்}, பிரமத்தனும் {கவனக்குறைவுள்ள மூர்க்கனும்}, பராதீனனுமான {பிறரைச் சார்ந்திருப்பவனுமான} நீ உன் விஷயத்தில் {நாட்டில்} எழுந்திருக்கும் இந்த பயத்தை உணராமல் இருக்கிறாய்.(14) 

கடுமையானவனும், அற்ப தானம் செய்பவனும், கவனக்குறைவுள்ள மூர்க்கனும், கர்வியும், நம்பகத்தன்மை அற்றவனுமான ஒரு பார்த்திபனை {மன்னனை} நோக்கி துன்ப காலத்தில் சர்வ பூதங்களும் {எந்த உயிரினமும்} விரைவதில்லை.(15) ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆணவம், சுயநலம், துவேஷம் ஆகியவற்றைக் கொண்ட மஹீபதியை {மன்னனை}, துன்பகாலத்தில் சொந்த உற்றார் உறவினரே அழித்து விடுவார்கள்.(16) செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமலும், பயப்பட வேண்டியவற்றுக்குப் பயப்படாமலும் இருப்பவன், சீக்கிரமே ராஜ்ஜியத்திலிருந்து வீழ்ந்து, புல்லுக்கு இணையான இழிந்த நிலையை அடைவான்.(17) காய்ந்த விறகுகளுக்கும், துரும்புகளுக்கும், தூசிகளுக்கும் கூடக் காரியம் இருந்தாலும், தங்கள் ஸ்தானத்திலிருந்து நழுவிய வசுதாதிபர்களுக்கு {பூமியின் தலைவர்களுக்குக்} காரியம் ஏதும் இல்லை.(18) பயன்படுத்தப்பட்ட ஆடை, கசங்கிய மலர்மாலை ஆகியவற்றைப் போலவே ராஜ்ஜியத்தில் இருந்து வீழ்ந்தவன் சமர்த்தனாக இருப்பினும் பயனற்றவனே ஆவான்.(19) 

எந்த ராஜா மூர்க்கமில்லாதவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும், இந்திரியங்களை {புலன்களை} வென்றவனாகவும், நன்றியுடையவனாகவும், தர்மசீலனாகவும் இருப்பானோ, அந்த ராஜாவே நீண்ட காலம் நிலைத்திருப்பான்.(20) நயனங்கள் {கண்கள்} இரண்டால் உறங்கிக் கொண்டிருந்தாலும், நயமெனும் {நீதியெனும்} கண்களால் விழித்திருக்கும் ராஜா, கோபமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் ஜனங்களால் பூஜிக்கப்படுகிறான்.(21) இராவணா, துர் புத்தி கொண்டவனான நீ, இத்தகைய குணங்கள் ஏதும் இல்லாதவனாக இருக்கிறாய். எனவேதான், மஹத்தான ராக்ஷசர்களின் படுகொலையை சாரர்கள் மூலம் அறியாமல் இருக்கிறாய்.(22) பிறரை அவமதிப்பவனும், அற்ப சுகங்களில் மூழ்கியவனும், கால தேச வித்தியாசத்தை அறியாதவனும், குண தோக்ஷங்களை நிச்சயிப்பதில் {நன்மை தீமைகளைப் பகுத்தறிவதில்} புத்தியைச் செலுத்தாதவனுமான நீ சீக்கிரத்தில் ராஜ்ஜியத்தை இழந்து துன்பத்தை அடையப் போகிறாய்" {என்றாள் சூர்ப்பணகை}.(23) 

க்ஷணதாசரேசுவரனும் {இரவுலாவிகளின் தலைவனும்}, தனம், பெருமை, பலம் ஆகியவற்றைக் கொண்டவனுமான அந்த ராவணன், இவ்வாறு அவள் {சூர்ப்பணகை} எடுத்துரைத்த பரிகீர்த்திகளில் தன் தோஷங்களை {கெடுபுகழுக்குக் காரணமான தன் குறைகளை} புத்தியில் நிறுத்தி, சிறிது நேரம் சிந்தனை செய்தான்.(24)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

இராவணன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 32 (25)

Ravana | Aranya-Kanda-Sarga-32 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் ஆட்டம், ஆடம்பரம், தனித்துவம், அவனது வெற்றிகள், பொறாமைகள், பேராசைகள் ஆகியவற்றின் சித்தரிப்பு; இராவணனை நெருங்கிய சூர்ப்பணகை...

Ravana Lifts Mount Kailasa depicted in Virupaksha temple Pattadakal Karnataka

பிறகு சூர்ப்பணகை, பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்தவர்களான பதினான்காயிரம் ராக்ஷசர்கள், தனியொருவனான ராமனால் கொல்லப்பட்டதைக் கண்டும், திரிசிரன், தூஷணன், கரன் ஆகியோரும் அவ்வாறே ரணத்தில் {போரில்} கொல்லப்பட்டதைக் கண்டும் மீண்டும் மேகத்திற்கு ஒப்பாகப் பெரும் முழக்கம் செய்தாள்.(1,2) வேறு எவராலும் செய்ய இயலாத கர்மத்தை ராமன் செய்திருப்பதைக் கண்ட அவள், பரம கலக்கமடைந்து ராவணன் பாலிக்கும் {ஆட்சி செய்யும்} லங்கைக்குச் சென்றாள்.(3) மருத்துகளின் மத்தியில் உள்ள வாசவனை {இந்திரனைப்} போல, அருகருகே அமர்ந்திருக்கும் அமைச்சர்களுடன், விமானத்தின் மேல்[1] தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ராவணனை அவள் கண்டாள்.(4) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராவணன் அமர்ந்திருக்கும் இடம் பல அடுக்குகளைக் கொண்ட மாளிகையின் மேல்தளம் என்று சொல்லலாம். விமானம் என்பதற்கு "உச்சி" என்ற ஓர் அர்த்தமும் உண்டு. அது புஷ்பக விமானம் என்று சொல்லலாம்" என்றிருக்கிறது.

சூரியனுக்கு ஒப்பானதும், காஞ்சனத்தாலானதுமான பரம {தங்கத்தாலானதுமான உயர்ந்த} ஆசனத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவன், ருக்ம வேதியில் {தங்கத்தாலான வேள்விப் பீடத்தில்} ஏராளமாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் ஜுவலிக்கும் பாவகனை {அக்னியைப்} போலிருந்தான்.(5) தேவர்களாலும், கந்தர்வர்களாலும், பூதங்களாலும் {வேறு உயிரினங்களாலும்}, மஹாத்மாக்களான ரிஷிகளாலும் போரில் வெல்லப்படாதவனான அவன், அகன்ற வாயைக் கொண்ட அந்தகனைப் போன்று கோரமானவனாக இருந்தான்.(6) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் வஜ்ரத்தால் ஏற்பட்ட ரணங்களுடனும் {காயங்களுடனும்} கூடிய அவன், ஐராவதத்தின் தந்தங்களால் ஏற்பட்ட வடுக்களை மார்பில் கொண்டிருந்தான்.(7) இருபது புஜங்களையும், பத்து கிரீவங்களையும் {தொண்டைகளையும் / முகங்களையும்}, காண்பதற்கினிய வெண்குடையையும், விசாலமான மார்பையும்[2], வீரத்தையும் கொண்டவன், ராஜலக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(8) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நாரதீய ஜைமினி ராமாயணத்தில், 11ம் அதிகாரம், 75ம் சுலோகத்தில், ராவணன் நான்கு கால்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். "த³ஷ² ஆஸ்யம் விம்ʼஷ²தி பு⁴ஜம் பி⁴ந்ந அந்ஜந சயமோபமம். பாதை³꞉ சதுர் அதி உக்³ரம் தாம்ரோஷ்டம்" (நா.ஜை.ரா.11:7)" என்றிருக்கிறது.

பர்வதத்திற்கு ஒப்பான அவன், வைடூரியப் பிரகாசத்துடனும், புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும் {தங்கக் காதணிகளுடனும்}, நல்ல புஜங்களுடனும் {பலமான கைகளுடனும்}, விரிந்த வாயுடனும், வெண்மையான பற்களுடனும் கூடியவனாக இருந்தான்.(9) தேவர்களுடனான போர்களில், விஷ்ணுவின் சக்கரத்தால் நூறுமுறை தாக்கப்பட்டும், மஹா யுத்தங்களில் பிற சஸ்திரங்களின் {ஆயுதங்களின்} தாக்குதலாலும் பீடிக்கப்பட்டும் உடலில் வடுக்களை கொண்டிருந்தான்.(10) அதேபோல, தேவர்கள் தொடுத்த தாக்குதல் அனைத்திலும் சிதையாத அங்கம் கொண்டவனான அவன், கலங்காத சமுத்திரத்தையும் கலக்கமடையச் செய்யும் துரித செயல்பாடுகளைக் கொண்டவனாவான்.(11) பர்வத உச்சிகளைப் பந்தாடுபவனான அவன், ஸுரர்களை வெகுவாக ஒடுக்குபவனாகவும், தர்மங்களை வேரோடு அழிப்பவனாகவும், பரதாரங்களை {மாற்றான் மனைவியரைத்} துன்புறுத்துபவனாகவும் இருந்தான்.(12) 

சர்வ திவ்ய அஸ்திரங்களையும் பயன்படுத்த வல்லவனும், சதா யஜ்ஞங்களுக்கு விக்னம் {இடையூறு} விளைவிப்பவனுமான அவன் {ராவணன்}, போகவதி புரிக்குச் சென்று {பாம்புகளின் மன்னனான} வாசுகியை வென்று, தக்ஷகனின் பிரியத்திற்குரிய பாரியையை {அன்புக்குரிய மனைவியை} அபஹரித்தான்[3].(13,14அ) அவன், கைலாச பர்வதத்திற்குச் சென்று, நரவாகனனை {மனிதர்களை வாகனமாகக் கொண்ட குபேரனை} வென்று, அவனது விருப்பத்திற்குரிய புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டான்.(14ஆ,15அ) அந்த வீரியவான் {ராவணன்}, திவ்ய வனமான சைத்ரரதத்தையும், நளினியையும் {தாமரைப் பொய்கையையும்}, தேவர்களின் உத்யானவனமான நந்தனத்தையும் குரோதத்துடன் அழித்தான்.(15ஆ,16அ) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "போகவதி என்பது நாகர்களின் தலைநகரமாகும். வாசுகி, நாகர்களின் மன்னனாவான். தக்ஷகன் ஒரு நாகன், தக்ஷசீலம் அவனது பெயராலேயே அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் இந்த தக்ஷகனின் மனைவியை அர்ஜுனன் கொல்கிறான்" என்றிருக்கிறது.  தக்ஷகனின் மனைவி செய்த தந்திரம், தக்ஷகனின் மகன் அஸ்வசேனன் ஆகியோரைக் குறித்து மஹாபாரதத்தில் ஆதி பரவம் பகுதி 229ல் படிக்கலாம். இந்த அஸ்வசேனன் தான் அர்ஜுனனின் மீது கொண்ட தீராப்பகையால் கர்ணனின் அம்பறாத்தூணியில் நாகாஸ்திரமாக ஒளிந்திருந்தவன். இந்தப் பகுதியை கர்ண பர்வம் பகுதி 90ல் படிக்கலாம். இராமாயண காலத்தில் ராவணனால் கடத்தப்பட்ட தக்ஷகனின் அந்தக் குறிப்பிட்ட மனைவியே, மஹாபாரத காலத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவளாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

சைலசிகரத்திற்கு {மலைகளின் சிகரத்திற்கு} ஒப்பானவனும், பகைவரை தஹிக்கச் செய்பவனுமான அந்த மஹாபாஹு, உதிக்கும் சந்திர சூரியர்களையும் தடுத்தவனாவான்.(16ஆ,17அ) அந்த தீரன், பூர்வத்தில் மஹாவனத்தில் பத்தாயிரம் வருஷங்கள் கடுந்தபம் செய்து, ஸ்வயம்பூவுக்கு {பிரம்மனுக்கு} தன் சிரங்களை {தலைகளைக்} காணிக்கையளித்தான்[4].(17ஆ,18அ) அவன் {ராவணன்}, போரில் மானுஷர்களைத் தவிர, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், படகங்கள், உரகங்கள் ஆகியவற்றால் நேரும் மிருத்யுவில் இருந்து {மரணத்தில் இருந்து பிரம்மனால்} அபயம் அளிக்கப்பட்டவனாவான்.(18ஆ,19அ) அந்த மஹாபலவான், வேள்விகளில் ஹவிர் தானத்திற்குத் தகுந்த இடங்களில் பயன்படுத்தப்படுவதும், புண்ணிய மந்திரங்களை ஓதி துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால்} பிரித்தெடுக்கப்படுவதுமான சோமத்தை {சோமச்சாற்றை} தூய்மையற்றதாக்கினான் {அபகரித்தான்}.(19ஆ,20அ) துஷ்ட, குரூர காரியங்களைச் செய்யும் கடுமையானவனான அந்த பிரஹ்மக்னன் {பிராமணர்களைக் கொல்பவனான ராவணன்}, இதயமற்றவனாக யஜ்ஞத்தின் நிறைவில் இடையூறு விளைவிப்பான். பிரஜைகளிடம் இரக்கமற்றவனாகவும், அவர்களின் நலத்திற்கு எதிராகச் செயல்படுபவனாகவும் அவன் {அந்த ராவணன்} இருந்தான்.(20ஆ,21அ) அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, சர்வ பூதங்களையும் ராவணம் செய்ய வைப்பவனும் {உயிரினங்கள் அனைத்தையும் ஓலமிடச் செய்பவனும்}[5], சர்வலோகங்களையும் பயத்தால் பீடிப்பவனும், குரூரனும், மஹாபலம் பொருந்தியவனுமான தன்னுடன் பிறந்தானை {ராவணனைக்} கண்டாள்.(21ஆ,22அ)

[4] இச்சம்பவம் மஹாபாரதம், வனபர்வம் பகுதி 273ல் குறிப்பிடப்படுகிறது. மேலதிக தகவலாக, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்ற ராக்ஷசப் பெண்கள் மூவரையும் குபேரன் தன் தந்தையான விஸ்வரஸின் பணிவிடைக்காக அனுப்பி வைத்தான். இராவணன், கும்பகர்ணன்  ஆகிய இருவரும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். விபீஷணன் மாலினிக்குப் பிறந்தான். கரனும், சூர்ப்பனகையும்  இரட்டைப் பிள்ளைகளாக ராகைக்குப் பிறந்தனர்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன் என்பது தசக்ரீவன், அல்லது தசகண்டன், அல்லது தசானனன், அல்லது தசகந்தரன் என்பவனின் செல்லப்பெயர் {காரணப் பெயர்} ஆகும். இராவணன், தன் இருபது கைகளால், சிவன், பார்வதி, நந்தி, பிரமத கணங்கள் ஆகியோர் இருக்கும் கைலாச மலையை உயர்த்த முயன்றபோது, சிவன் தன் காலின் கட்டைவிரலால் கைலாசத்தை அழுத்தினார். இராவணனின் இருபது கைகளும் அந்த மலைக்கு அடியில் அகப்பட்டன. இவ்வாறே ஆயிரம் வருடங்கள் கதறியபடியே அவன் உலகங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தான். பிறகு, தன்னுடைய அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில், தண்டகம் என்ற துதியால் சிவனைத் துதித்தான். "இராவண கிருத தண்டகம்" என்ற பெயரில் அந்தத் துதி இன்று வரை நிலைத்திருக்கிறது. அதன்பிறகே சிவன், ராவணனின் கைகளை விடுவித்தான். அதுமுதலே அவன் ராவணன் என்ற பெயரில் புகழடைந்தான். இது ராமாயணத்தின் ஏழாம் நூலான உத்தரகாண்டத்தில் இருக்கிறது. "ராம பத்நீம் நஸ்தா²ம் நிநாய" அதாவது, "இராமனின் பத்தினியை வனத்தில் இருந்து அபகரித்தவன் என்ற பொருளிலும் ராவணன் என்ற பெயர் அமையும்" என்று மந்திரசஸ்திரம் சொல்கிறது. ரவணனின் {[விஸ்]ரவஸின்} மகன் ராவணன் என்று மற்றொரு மந்திரம் சொல்கிறது" என்றிருக்கிறது.

அவன், திவ்ய வஸ்திரங்களையும், ஆபரணங்களையும், திவ்ய மாலைகளையும் சூடி, பிரகாசத்துடன், காலனுக்கே காலனாக எழுபவனைப் போல எடுப்பாக ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.(22ஆ,23அ) இராக்ஷசேந்திரனும், மஹாபாக்கியவானும், புலஸ்திய குல நந்தனனும் {புலஸ்திய குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும்}, சத்ருஹந்தனும் {பகைவரை அழிப்பவனும்}, மந்திரி பரிவாரங்களால் சூழப்பட்டவனுமான ராவணனை நெருங்கிய அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பயத்தால் கலக்கமடைந்தவளாக இந்த வாக்கியங்களைச் சொன்னாள்.(23ஆ,24)  பயமில்லாமல் திரிபவளும், மஹாத்மாவால் {லக்ஷ்மணனால்} விரூபியாக்கப்பட்டவளுமான {அங்கபங்கம் செய்யப்பட்டவளுமான} சூர்ப்பணகை, பயம், லோபம் {பேராசை} ஆகியவற்றால் மோகமடைந்து, தன் {அவல} நிலையை காட்டி ஒளிரும் விசாலமான கண்களுடன் அவனிடம் இந்த பயங்கர வாக்கியங்களைச் சொன்னாள்.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Wednesday, 15 March 2023

மிரட்டல் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 21 (22)

Intimidation | Aranya-Kanda-Sarga-21 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகையைத் தணிவடையச் செய்த கரன்; இராமனை எதிர்க்குமாறு கரனை மிரட்டிய சூர்ப்பணகை...

Shurpanaka complaining to Khara

கரன், மீண்டும் தன் முன் விழுந்த சூர்ப்பணகையைக் கண்டு, அர்த்தம் விளங்காத நிலையில், தெளிவான சொற்களில் குரோதத்துடன் {பின்வருமாறு} கேட்டான்:(1) "பிசிதாசனர்களும் {பச்சை மாமிசம் உண்பவர்களும்}, சூரர்களுமான அந்த ராக்ஷசர்களை நியமித்து உனக்கு விருப்பமானதை நான் செய்த பிறகும் மீண்டும் ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்?(2) என்னையும், என் நலத்தையும் எப்போதும் விரும்புகிறவர்களும், பக்தர்களும், தாக்குதல்களில் கொல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் என் சொற்களை ஒருபோதும் செயல்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.(3) "ஹா நாதா" என்று பெருங்கூச்சலிட்டு சர்ப்பம் {பாம்பு} போல எதற்காக நீ தரையில் புரள்கிறாய்? இதன் காரணம் என்ன? அதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நாதனாக {தலைவனாக} நான் இருக்கையில் ஏன் நீ அனாதையைப் போலப் புலம்புகிறாய்? எழு, எழுவாயாக. இனியும் இவ்வகையில் குழப்புவதைத் தவிர்ப்பாயாக" {என்றான் கரன்}.(5)

வெல்லப்பட முடியாதவனான கரன் இவ்வாறு சொன்னதும் சூர்ப்பணகை ஆறுதல் அடைந்தாள். பிறகு அவள், தன் நயனங்களின் {கண்களின்} நீரைத் துடைத்துக் கொண்டு தன் சகோதரனான கரனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(6) "காதுகளும், மூக்கும் வெட்டப்பட்டுப் பெருகும் ரத்தத்தில் முழுமையாக நனைந்த நான், சற்று நேரத்திற்கு முன் இங்கே உன்னிடம் வந்து முழுமையான ஆறுதல் அடைந்தேன்.(7) சூரா, கோரனான ராகவனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் கொல்லும் என் விருப்பத்திற்காக பதினான்கு ராக்ஷசர்களை நீ அனுப்பிவைத்தாய்.(8) பெருங்கோபத்துடன் கைகளில் சூலங்களையும், பட்டிசங்களையும் தரித்து வந்த அவர்கள் அனைவரும் போரில் ராமனின் கணைகளால் மர்மங்கள் பிளக்கப்பட்டு மாண்டனர்.(9) மஹாஜவான்களான {பெரும் வேகம் கொண்டவர்களான} அவர்கள், ராமனின் மகத்தான கர்மத்தால் க்ஷணப்பொழுதில் பூமியில் விழுந்ததைக் கண்டதும் எனக்குப் பேரச்சம் ஏற்பட்டது.(10) நிசாசரா {இரவுலாவியே}, எங்கும் பயத்தையே கண்டு பீதியடைந்த நான், மனம் நொந்தவளாக, துக்கத்துடன் மீண்டும் உன்னிடம் அடைக்கலம் நாடி வந்திருக்கிறேன்.(11)

துயரமெனும் முதலைகள் திரிவதும், பயமெனும் அலை மாலைகள் புரள்வதுமான மிகப்பெரிய சோகசாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் என்னை ஏன் நீ காக்காதிருக்கிறாய்?(12) பிசிதாசனர்களான {பச்சை மாமிசம் உண்பவர்களான} அந்த ராக்ஷசர்கள் என் பாதையில் பின்தொடர்ந்து வந்து, கூரிய சரங்களைக் கொண்ட ராமனால் பூமியில் வீழ்த்தப்பட்டனர்.(13) நிசாசரா {இரவுலாவியே}, என்னிடத்திலாவது, அந்த ராக்ஷசர்களிடத்திலாவது உனக்கு இரக்கம் உண்டானால், உனக்கு சக்தியும், துணிவும் உண்டானால், ராக்ஷசர்களுக்கு கண்டகமாய் {முள்ளாய்} தண்டகத்தில் குடியிருக்கும் ராமனை ஒழிப்பாயாக.(14,15அ) அமித்ரக்னனான {நட்பற்றவர்களைக் கொல்பவனான} ராமனை நீ இனி கொல்லாவிட்டால் தயக்கமேதும் இல்லாமல் இப்போதே உன் எதிரிலேயே நான் என் பிராணனை விடுவேன்.(15ஆ,16அ ) 

உன் படைகள் பெரும்போரின் களத்தில் ராமனை எதிர்த்து நிற்கும் சக்தி கொண்டவையல்ல; சூரனென எண்ணிக்கொண்டாலும் நீ சூரனல்ல; இல்லாத பராக்கிரமத்தை இருப்பதாகக் கருதுபவன் என்றே புத்தியால் நான் முன்னுணர்கிறேன்.(16ஆ,17) நீ, மானுஷர்களான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் போரில் கொல்லும் சக்தி கொண்டவனல்ல. குலபாம்சனா {குலத்திற்கு இழிவைத் தேடித்தருபவனே}, ஆண்மையற்று, அல்ப வீரியத்துடன் மூடனைப் போல இங்கே வசிப்பது உனக்குத் தகாது. ஜனஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து பந்துக்களோடு உடனே புறப்படுவாயாக[1].(18,19) தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} அந்த ராமன் மஹாபராக்கிரமசாலி. நீயும் ராமனின் தேஜஸ்ஸால் {பராக்கிரமத்தால்} பீடிக்கப்பட்டு சிக்கிரமாக நாசமடைவாய்.(20) அவனுடன் பிறந்த மஹாவீரியவானாலேயே {லக்ஷ்மணனாலேயே} நான் விரூபியாக்கப்பட்டேன்" {என்றாள் சூர்ப்பணகை}.

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "16 முதல் இதுவரையுள்ள சுலோகங்கள் பல்வேறு பதிப்புகளில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் கருத்து அல்லது பொருள் இதுதான். இஃது ஒரு வகையான மிரட்டல். கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோரை ஜனஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் நியமித்தவன் ராவணன். எனவே, அவர்கள் சூர்ப்பணகையைக் காக்க வரவில்லையென்றால், ராவணன் அவர்களை அந்தப் பதவியில் இருந்து தூக்கி வீசக்கூடும்" என்றும், "கரன் என்ற பெயர் ஆண் கழுதையைக் குறிக்கும்" என்றும் இருக்கிறது. கரனும், சூர்ப்பணகையும் ராகை என்பவளுக்கும், விஸ்வரஸுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

பெரும்வயிறு படைத்தவளான அந்த ராக்ஷசி, சகோதரனின் சமீபத்தில் {கரனின் அருகில்} சோகத்தால் பீடிக்கப்பட்டும், இவ்வாறு பலவகையில் புலம்பியும், பெருந்துயருற்று இரு கைகளாலும் தன் வயிற்றில் அடித்துக் கொண்டும் கதறியபடியே நினைவிழந்தாள்.(21,22)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 21ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Tuesday, 14 March 2023

அரக்கர் வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 20 (25)

Demons eliminated | Aranya-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பதினான்கு ராக்ஷசர்களையும் கொன்ற ராமன்; அந்தப் படுகொலையை கரனிடம் அறிவித்த சூர்ப்பணகை...

Shurpanaka showing Rama and Lakshmana to the fourteen rakshasas

கோரமான அந்த சூர்ப்பணகை, ராகவனின் ஆசிரமத்தை அடைந்ததும்,  அவ்விரு உடன்பிறந்தோரையும் {ராமலக்ஷ்மணர்களையும்}, சீதையையும் அந்த ராக்ஷசர்களுக்குக் காட்டினாள்.(1) அவர்கள், பர்ணசாலையில் லக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டு சீதையுடன் அமர்ந்திருக்கும் மஹாபலம் பொருந்திய ராமனைக் கண்டனர்.(2) ஸ்ரீமான் ராகவன், அங்கே வந்திருப்பவர்களையும், அந்த ராக்ஷசியையும் கண்டான். அப்போது ராமன், தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(3) "சௌமித்ரியே,  இவளது {சூர்ப்பணகையின்} பாதையைப் பின்பற்றி இங்கே வந்திருக்கும் இவர்களை நான் வதம் செய்ய விரும்புவதால், ஒரு முஹூர்த்தம் சீதையின் பின் இருப்பாயாக" {என்றான் ராமன்}.(4)

அப்போது லக்ஷ்மணன், தன்னை அறிந்தவனான ராமனின் இந்த வாக்கியத்தைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி ராமனின் வாக்கியத்திற்கு மதிப்பளித்தான்.(5) தர்மாத்மாவான ராகவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான வில்லை எடுத்து நாண்பூட்டி,[1] அந்த ராக்ஷசர்களிடம் {முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் பின்வருமாறு} சொன்னான்:(6) "தசரதனின் புத்திரர்களும், உடன்பிறந்தோருமான நாங்கள் இருவரும் ராமலக்ஷ்மணர்கள். கடப்பதற்கரிய தண்டகவனத்திற்குள் சீதையுடன் பிரவேசித்திருக்கிறோம்.(7) பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன் தர்மவழியில் நடந்து, தண்டகாரண்யத்தில் வசிக்கும் தாபஸ்விகளான எங்களை ஏன் நீங்கள் ஹிம்சிக்கிறீர்கள்?(8) உங்களைப் போன்ற பாப ஆத்மாக்களையும், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்களையும் பெரும்போரில் கொல்ல வேண்டுமெனும் ரிஷிகளுக்குக் கட்டுப்படும் வகையில் வில்லுடனும், சரங்களுடனும் இங்கே நான் வர வாய்த்திருக்கிறது.(9) நிசாசரர்களே {இரவுலாவிகளே}, நிறைவுடன் இருந்தால் திரும்பாமல் அங்கேயே இருப்பீராக. அல்லது, பிராணனின் பயன் வேண்டுமென்றால் விலகிச் செல்வீராக" {என்றான் ராமன்}.(10)

[1] ஏத்து வாய்மை இராமன் இளவலை
காத்தி தையலை என்று தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்
ஆத்த நாணின் அருவரை வாங்கினான்.

- கம்பராமாயணம் 2891ம் பாடல்

பொருள்: அனைவரும் புகழும் வாய்மையுடைய ராமன், தன் தம்பியிடம், "பெண்ணைக் காப்பாயாக" என்று சொல்லி, பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற ஒப்பிலாத தன்னுடைய பெரிய கைகளால் கட்டப்பட்ட நாண்கயிற்றைக் கொண்ட மலை போன்ற வில்லை எடுத்தான்.

பிரம்மக்னர்களும் {பிராமணர்களைக் கொல்பவர்களும்}, சூலபாணிகளுமான அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், அவனது சொற்களைக் கேட்டுப் பெருங்கோபம் அடைந்தனர். செவ்வரியோடிய கண்களைக் கொண்டவனும், மதுரமாகப் பேசுபவனுமான ராமனின் பராக்கிரமத்தை அறியாதவர்கள், குரோதத்தால் சிவந்த இரத்தக் கண்களுடனும், மகிழ்ச்சியுடனும் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னார்கள்:(11,12) "எங்கள் தலைவரும், மஹாத்மாவுமான கரனின் குரோதத்தைத் தூண்டிய நீயே, இப்போது யுத்தத்தில் எங்களால் கொல்லப்பட்டுப் பிராணனை விடப்போகிறாய்.(13) பலரான எங்கள் முன் தனியாக போர் முனையில் நிற்கும் சக்தி உனக்கேது? போரில் நீ போரிடுவதைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(14) எங்கள் கரங்களால் நாங்கள் பரிகங்களையும், சூலங்களையும், பட்டிசங்களையும் வீசும்போது, பிராணனையும், வீரியத்தையும், கையில் பிடித்திருக்கும் அந்த தனுவையும் நீ கைவிடுவாய்" {என்றனர் அந்த ராக்ஷசர்கள்}.(15)

கோபத்துடன் இதைச் சொன்ன அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், தயக்கமில்லாமல் தங்கள் ஆயுதங்களை உயர்த்தியபடியே, தனியாக நின்று கொண்டிருந்த ராமனிடம் விரைந்து சென்று, தடுக்கப்பட முடியாதவனான அந்த ராகவனை நோக்கி தங்கள் சூலங்களை ஏவினர்.(16,17அ) காகுத்ஸ்தன் அந்தப் பதினான்கு சூலங்களையும் அதே எண்ணிக்கையிலானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான சரங்களால் முழுமையாகத் துண்டாக்கினான்.(17ஆ,18அ) அடுத்ததாக, பரம குரோதத்துடன் கூடிய அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையுமான பதினான்கு நாராசங்களை எடுத்தான்.(18ஆ,19அ) அப்போது அந்த ராகவன், வில்லை எடுத்து, ராக்ஷசர்களை இலக்காக்கி, அதை வளைத்து, சதக்ரது {இந்திரன் ஏவும்} வஜ்ரத்தைப் போல அந்த பாணங்களை ஏவினான்.(19ஆ,20அ)

அவை வேகத்துடன் சென்று அந்த ராக்ஷசர்களின் மார்புகளைத் துளைத்து, உதிரஞ்சொட்ட வேகமாக வெளியேறி, எறும்புப் புற்றில் புகும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல பூமிக்குள் புதைந்தன.(20ஆ,21அ) அவற்றால் ஹிருதயங்கள் பிளவுண்டு, குருதியில் நனைந்து, சிதைந்து, உண்மையில் தங்கள் உயிர்களை இழந்து, வேரறுக்கப்பட்ட மரங்களைப் போல அவர்கள் பூமியில் விழுந்தார்கள்.(21ஆ,22அ) குரோதத்துடன் கூடிய அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பூமியில் விழுந்தவர்களைக் கண்டு மூர்ச்சித்து, நடுங்கி, பெருங்கூச்சலிட்டவாறே திரும்பிச் சென்று, சற்றே காய்ந்த ரத்தத்துடன் பிசின் கட்டிய வல்லரி {ஆனைவணங்கி} மரம் போல் கரன் முன்னிலையில் மீண்டும் விழுந்தாள்.(22ஆ,23) 

அப்போது அவள், தன்னுடன் பிறந்தானின் {கரனின்} சமீபத்தில், வதனத்தின் வர்ணமிழந்து, பெருங்குரலில் கதறி, மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதாள்.(24) கரனின் தமக்கையான சூர்ப்பணகை, போரில் வீழ்ந்த ராக்ஷசர்களைக் கண்டு, அங்கிருந்து தப்பியோடி, அந்த ராக்ஷசர்கள் கொல்லப்பட்டது குறித்த அனைத்தையும் {அவனிடம்} அறிவித்தாள்.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

கரனின் ஆணை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 19 (27)

The order of Khara | Aranya-Kanda-Sarga-19 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அங்கம் சிதைந்த சூர்ப்பணகையைக் கண்டு கோபமடைந்த கரன்; இராமன், லக்ஷம்ணன், சீதை குறித்த சூர்ப்பணகையின் வர்ணனை. இராமனைத் தாக்க பதினான்கு ராக்ஷசர்களை அனுப்பிய கரன்...

Shurpanaka reporting to Khara

இராக்ஷசன் கரன், தன் தமக்கை விரூபமாக இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு, குரோதத்தால் எரிந்தவனாக {பின்வருமாறு} கேட்டான்:(1) "எழுவாயாக. உன் மோஹத்தையும் {மயக்கத்தையும்},  குழப்பத்தையும்விட்டு, உன் ரூபத்தை இவ்வாறு விரூபமாக்கியவன் எவன் என்பதைத் தெளிவாகச் சொல்வாயாக.(2) விஷப்பல்லுடன் கூடியதும், தாக்குதல் தொடுக்காமல் மிக அருகிலேயே கிடப்பதுமான கிருஷ்ணசர்ப்பத்தை {கரும்பாம்பை} விரல் நுனியால் விளையாட்டாகச் சீண்டியவன் எவன்?(3) உன் அருகே வந்து மோஹத்தால் உத்தம விஷத்தை அருந்தியவனும், இப்போது அறியாமையால் தன் கழுத்தைச் சுற்றிக் காலபாசத்தை {யமனின் பாசக்கயிற்றைப்} போட்டுக் கொண்டவனும் எவன்?(4) பலமும், பராக்கிரமும் நிறைந்தவளும், காமரூபிணியும் {விரும்பிய வடிவந்தரித்து விரும்பிய இடத்தில் திரிபவளும்} அந்தகனுக்கு சமமானவளுமான உன்னை இந்த அவஸ்தைக்கு ஆளாக்கியவன் எவன்?(5) தேவர்கள், கந்தர்வர்கள், பூதங்கள், ரிஷிகள் உள்ளிட்ட மஹாத்மாக்களில் உன்னை இவ்வாறு சிதைத்து விரூபியாக்கும் அளவு மஹாவீர்யம் படைத்தவன் எவன்?(6) 

சகஸ்ராக்ஷனும், பாகசாசனனுமான {ஆயிரம் கண்களைக் கொண்டவனும், பாகனைக் கொன்றவனுமான} மஹேந்திரன் உள்ளிட்ட அமரர்களில் எனக்கு விருப்பமில்லாததைச் செய்யக்கூடிய எவனையும் இந்த உலகத்தில் நான் காணவில்லை.(7) நீர் கலந்திருக்கும் பாலை குடிக்கும் சாரஸத்தை {கொக்கை / அன்னப்பறவையைப்} போல இப்போதே ஜீவிதத்தை முடிக்கும் கணைகளை ஏவி {அவனது உடலில் இருந்து} பிராணனைப் பறிக்கப் போகிறேன்.(8) சரங்களால் மர்மங்கள் பிளக்கப்பட்டு என்னால் போரில் வீழ்த்தப்பட்டு, மேதினி பருக விரும்பும் நுரையுடன் கூடிய உதிரத்தைக் கொண்டவன் எவன்?(9) போரில் என்னால் கொல்லப்பட்டு, மாமிசத்தைப் பக்ஷிக்க விரும்பும் பறவைக் கூட்டங்கள் மகிழ்ச்சியாகக் கொத்தப் போகும் காயத்தை {உடலைக்} கொண்டவன் எவன்?(10) இஹத்தில் போரில் என்னால் இழுக்கப்படும் அந்த ஆதரவற்றவனைக் காக்க தேவர்களோ, பிசாசங்களோ, கந்தர்வர்களோ, ராக்ஷசர்களோ சக்தர்களல்லர்.(11) மெதுவாக உணர்வு மீள்வாயாக. எவன் உன்னை வனத்தில் தாக்கி வீழ்த்தினானோ, அந்த துர்விநீதனை {ஒழுக்கங் கெட்டவனைக்} குறித்து என்னிடம் சொல்வாயாக" {என்றான் கரன்}.(12)

அப்போது, விசேஷமான குரோதத்துடன் இருக்கும் தன்னுடன் பிறந்தானின் இந்தச் சொற்களைக் கேட்ட சூர்ப்பணகை, கண்ணீருடன் இந்த வாக்கியங்களைச் சொன்னாள்:(13) "இளைஞர்களும், வடிவழகர்களும், சுகுமாரர்களும் {மென்மையான மேனியுள்ளவர்களும்}, மஹாபலவான்களும், தாமரை இதழைப் போன்ற நீள்விழிகளைக் கொண்டவர்களும், மரவுரிகளையும், கருப்பு மான் தோலை உடுத்தியவர்களும்,{14} பழங்கள், கிழங்குகள் உண்பவர்களும், அமைதியான தபஸ்விகளும், பிரம்மசாரிகளும் {பிரம்மத்தைப் பின்பற்றி நடப்பவர்களும்}, தசரதனின் புத்திரர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் எனும் இருவர் அங்கே இருக்கின்றனர்[1].(14,15) கந்தர்வ ராஜர்களுக்கு இணையான பார்த்திபத் தன்மைகளுடன் {ராஜலக்ஷணங்களுடன்} கூடிய அவ்விருவரும், தேவர்களா, தானவர்களா என்பதை என்னால் அறியமுடியவில்லை[2].(16)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சூர்ப்பணகை, "மன்னன் தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள் இருவர்" என்று சாதாரணமாகச் சொல்லாமல் "இளைஞர்கள்", "வடிவழகர்கள்", "மென்மையான மேனி கொண்டவர்கள்" என்றெல்லாம் சொல்வதை உரையாசிரியர்கள் மூன்று வகைகளில் பொருள் கொள்கின்றனர். 1) காமம் நிறைந்த பெண்ணின் பார்வை. 2) இராமலக்ஷ்மணர்களின் ஆற்றலை சிறுமையாக் சொல்லி கரனின் பெருமையை அதிகமாகச் சொல்லும் பார்வை 3) கரனின் வீரத்தைப் பரிகாசம் செய்து ராமலக்ஷ்மணர்களுடன் போரிடத் தூண்டும் பார்வை" என்றும், மேற்கண்ட மூன்று வகை பார்வைகளுக்கான சொல்சொல்லான விரிவான விளக்கங்களும் இருக்கின்றன.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகளில் "தானவர்களா?" என்பதற்குப் பதில் "மானுஷர்களா?" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் கரன் அவர்களை மனிதர்கள் என்றே குறிப்பிடுகிறான். தானவர்களாலோ, தேவர்களாலோ தன் குலத்திற்குத் தீங்கிழைக்க முடியாது என அவன் நம்புகிறான்" என்றிருக்கிறது.

அங்கே அவர்கள் இருவரின் மத்தியில் இளமை நிறைந்தவளும், வடிவழகியும், சர்வ ஆபரண பூஷிதையும் {ஏராளமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்}, நல்லிடை கொண்டவளுமான ஒரு நாரீயை {பெண்ணை} நான் கண்டேன்.(17) அந்தப் பிரமதையை {அழகிய பெண்ணை} முன்னிட்டே அவர்கள் இருவரும் சேர்ந்து ஓர் அநாதாசதியை {நாதனற்ற, நெறிவழுவிய பெண்ணைப்} போல என்னை இந்த அவஸ்தைக்கு உள்ளாக்கினார்கள்.(18)  போர்முனையில் அவர்கள் இருவரும், அந்த நேர்மையற்றவளும் கொல்லப்பட்டு, சிந்தப் போகும் நுரையுடன் கூடிய உதிரத்தை நான் பருக விரும்புகிறேன்.(19) நீ அங்கே செய்யும் செயலால் போரில் அவளும், அவர்களும் சிந்தும் உதிரத்தை நான் பருக வேண்டும். இதுவே என் பிரதம {முதன்மையான} ஆசையாகும்" {என்றாள் சூர்ப்பணகை}[3].(20)

[3] கண்டு நோக்க அருங்காரிகையாள்தனைக்
கொண்டு போனவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்குஎனச் சொல்லினாள்.

- கம்பராமாயாணம் 2881ம் பாடல், கரன் வதைப்படலம்

பொருள்: காணற்கரிய அழகுடைய இப்பெண்ணைக் கண்டு, "இலங்கையரின் மன்னனுக்கு {ராவணனுக்குக்} கொண்டு போவேன்" என்றுசொல்லி அவள் மேல் நான் பாய்ந்தபோது சினமடைந்த அவர்கள் என் மூக்கை அறுத்தார்கள் என்று சொன்னாள் {சூர்ப்பணகை}.

அவள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே குரோதமடைந்த கரன், மஹாபலவான்களும், அந்தகனுக்கு ஒப்பானவர்களுமான சதுர்தச {பதினான்கு} ராக்ஷசர்களிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்.(21) "சஸ்திர சம்பன்னர்களும் {ஆயுதபாணிகளும்}, மரவுரியும், கருப்பு மான்தோலும் உடுத்தியவர்களுமான மானுஷ்யர்கள் இருவர், கோரமான தண்டகாரண்யத்திற்குள் ஒரு பிரமதையுடன் {அழகிய பெண்ணுடன்} பிரவேசித்திருக்கின்றனர்.(22) அவர்கள் இருவரையும், கெட்ட நடத்தை கொண்ட அவளையும் கொன்ற பிறகு திரும்புங்கள். என் பகினியான {தமக்கையான} இவள் அவர்களின் உதிரத்தைப் பருக வேண்டும்.(23) இராக்ஷசர்களே, அங்கே சென்று உங்கள் தேஜஸ்ஸால் அவர்கள் இருவரையும், அந்தப் பிரமதையையும் கொன்று என்னுடைய பகினியான {தமக்கையான} இவள் இஷ்டப்படும் மனோரதத்தை நிறைவேற்றுவீராக.(24) உடன்பிறந்தவர்களான அவர்கள் இருவரையும் போரில் நீங்கள் கொல்வதைக் கண்ட பிறகு மகிழ்ச்சியடையும் இவள் போர்க்களத்தில் வேடிக்கையாக {அவர்களின்} உதிரத்தைப் பருகுவாள்" {என்றான் கரன்}.(25)

இவ்வாறான ஆணையைப் பெற்ற அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், பலமான காற்றால் வழிநடத்தப்படும் கரிய மேகங்களைப் போல அவளுடன் அங்கே {சூர்ப்பணகையுடன் பஞ்சவடிக்குச்} சென்றனர்.(26) ஆனால் இவ்வாறு அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} கூரிய ஆயுதங்களுடன் சென்றாலும், உதித்து ஜுவலிக்கும் அக்னியை {எரியும் காட்டுத் தீயைக்} கடக்க முடியாத வனதுவிபத்தை {காட்டு யானையைப்} போல ராமனை ஒடுக்க இயலாதவர்களானார்கள்.(27)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Saturday, 11 March 2023

அங்கபங்கம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 18 (26)

Mutilation of organs | Aranya-Kanda-Sarga-18 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகையை லக்ஷ்மணனிடம் அனுப்பிய ராமன்; இலக்ஷ்மணனை அணுகிய சூர்ப்பணகை; அவளது மூக்கையும், காதுகளையும் அரிந்த லக்ஷ்மணன்...

Surpanaka's ears and nose cut off by Lakshmana

இராமன், காமபாசத்தில் {வலையில் / கயிற்றில்} கட்டுண்ட அந்த சூர்ப்பணகையிடம் தெளிவான, மென்மையான குரலில் புன்னகைத்தவாறே {பின்வருமாறு} சொன்னான்:(1) "பவதி {மதிப்பிற்குரியவளே}, எனக்கு தாரமிருக்கிறாள். இவளே {சீதையே} என் அன்புக்குரிய பாரியையாவாள் {மனைவியாவாள்}. உன்னைப் போன்ற நாரீகளுக்கு {பெண்களுக்கு} சக்களத்தியுடன் இருப்பது துக்கத்தைத் தரும்.(2) சீலவானும் {நல்லொழுக்கம் கொண்டவனும்}, பிரிய தரிசனனும் {அழகிய தோற்றமுள்ளவனும்}, ஸ்ரீமானும், வீரியவானும், இலக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவனும், என்னுடன் பிறந்த தம்பியுமான இவன் தாரமில்லாதவன் {மனைவியில்லாதவன்}.(3) இளைஞனும், பிரிய தரிசனனும், பாரியை வேண்டுபவனும், அபூர்வியுமான {முன்னவள் இல்லாதவனுமான / மனைவியற்றவனுமான} இவன், உன் ரூபத்திற்கு ஏற்ற ரூபத்தில் பர்த்தாவாகத் தகுந்தவன்[1].(4) விசாலாக்ஷியே {நீள்விழியாளே}, அழகிய இடையைக் கொண்டவளே, என்னுடன் பிறந்தவனான இவனை, அர்க்கனின் பிரபை {சூரிய ஒளியை வேண்டும்} மேருவைப் போல பர்த்தாவாக வேண்டி, சக்களத்தியற்றவளாக இருப்பாயாக" {என்றான் ராமன்}.(5)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் நோக்கில் "அபூர்வி" என்ற சொல்லுக்கு, "நீண்ட காலமாக மனைவியின் துணையை இழந்தவன்" என்பது பொருள், ஆனால் அதுவே சூர்ப்பணகையின் நோக்கில், "நீண்ட காலமாக எந்த மனைவியின் துணையும் இல்லாதிருப்பவன்" என்பது பொருள். மற்றொரு பொருளில் கொண்டால், "அபூர்வி" என்பது, "மனைவியின் சுகம் இல்லாதவன்" என்றும், "பிரம்மசாரி" என்றும் வெவ்வேறு வகையில் பொருள்படும்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

இராமன் இவ்வாறு சொன்னதும், காம மோஹிதையான அந்த ராக்ஷசி {காம மயக்கத்தில் இருந்த அந்த சூர்ப்பணகை}, ராமனை விட்டுவிட்டு, திடீரென லக்ஷ்மணனிடம் சென்று {பின்வருமாறு} சொன்னாள்:(6) "வரவர்ணினியான {சிறந்த நிறம் கொண்டவளான} நான் இந்த ரூபத்தையுடைய உனக்குத் தகுந்த பாரியையாவேன். என்னுடன் சுகமாக தண்டகத்தில் திரிவாயாக" {என்றாள் சூர்ப்பணகை}.(7)

அந்த ராக்ஷசி இவ்வாறு சொன்னதும், வாக்கிய கோவிதனும், சௌமித்ரியுமான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனும், சுமித்ரையின் மகனுமான} லக்ஷ்மணன், புன்னகைத்தவாறே சூர்ப்பணகையிடம் பொருத்தமானவற்றை {பின்வருமாறு} சொன்னான்:(8) "கமலவர்ணினியே {தாமரை நிறத்தவளே}, என்னைப் போன்ற தாசனின் பாரியையாகி {அடிமையின் மனைவியாகி}, ஏன் தாசியாக {அடிமைப்பெண்ணாக} விரும்புகிறாய்? நான் இந்த ஆரியரின் உடன் பிறந்த அடியவனாவேன்.(9) விசாலாக்ஷியே, அமலவர்ணினியே {நீள்விழியாளே, களங்கமற்ற நிறம் கொண்டவளே}, நீ ஏராளமான பொருள் படைத்த {செல்வந்தரான} இந்த {ராமரின்} ஆரியரின் இளைய பாரியையாகி {இளைய மனைவியாகி}, நோக்கம் நிறைவேறி, மகிழ்ச்சி அடைவாயாக.(10) இவர் விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும்,  வெற்று வயிற்றைக் கொண்டவளும், கிழவியுமான தன் பாரியாளைக் {சீதையைக்} கைவிட்டு உன்னையே துதித்திருப்பார்.(11) வரவர்ணினியே {சிறந்த நிறம் கொண்டவளே}, அழகிய இடை கொண்டவளே, பகுத்தறிவுள்ள எவன்தான், சிறந்த இத்தகைய உன் ரூபத்தை விட்டு மனுஷிகளிடம் தன் மனத்தைச் செலுத்துவான்?" {என்றான் லக்ஷ்மணன்}.(12)

இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், சரிந்த வயிற்றுடன் கூடிய அந்தக் கொடூரி {சூர்ப்பணகை}, பரிஹாசத்தை அறியும் பகுத்தறிவற்றவளாக அந்தச் சொற்களை உண்மை என்று நினைத்தாள்.(13) காமமோஹிதையான அவள், சீதையுடன் பர்ணசாலையில் அமர்ந்திருந்தவனும், பரந்தபனும் {பகைவரை எரிப்பவனும்}, வெல்லப்பட முடியாதவனுமான  ராமனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(14) "விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும்,  வெற்று வயிற்றைக் கொண்டவளுமான இந்தக் கிழவியைப் பாரியாளாகக் கொண்ட நீ  என்னை அதிகம் மதிக்கவில்லை.(15) இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த மானுஷியை நான் பக்ஷிக்க விரும்புகிறேன். பிறகு, சக்களத்தி இல்லாமல் நான் உன்னுடன் சுகமாகத் திரிவேன்" {என்றாள் சூர்ப்பணகை}.(16)

தணல் போன்ற கண்களைக் கொண்டவள் {சூர்ப்பணகை} இவ்வாறு சொல்லிவிட்டு, மான்போன்ற கண்களைக் கொண்ட சீதையை நோக்கி, ரோஹிணியுடன் மோத விரையும் மஹா உல்கத்தை {ரோகிணி நக்ஷத்திரத்தை நோக்கி விரையும் பெரும் விண்கல்லைப்} போலப் பெருங்குரோதத்துடன் விரைந்து சென்றாள்.(17) மஹாபலவானான ராமன், மிருத்யுவின் பாசம் {யமனின் சுருக்குக் கயிற்றைப்} போலப் பாயும் அவளை சினத்துடன் தடுத்து, லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(18) "சௌம்யா, சௌமித்ரியே, குரூரிகளிடமும், அநாரியைகளிடமும் எக்காலத்திலும் பரிஹாசம் செய்ய வேண்டாம். பார், எப்படியோ வைதேஹி ஜீவித்திருக்கிறாள்.(19) புருஷவியாகரா, விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, அதிமதம் கொண்டவளும் {வெறிபிடித்தவளும்}, பெரும் வயிற்றைக் கொண்டவளுமான இந்த ராக்ஷசியை விரூபியாக்குவதே {வடிவம் சிதைப்பதே} உனக்குத் தகும்" {என்றான் ராமன்}.(20)

இவ்வாறு சொன்னதும் மஹாபலவானான லக்ஷ்மணன், குரோதத்துடன் வாளை எடுத்து, ராமன் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவளது கர்ணங்களையும், நாசியையும் {காதுகளையும், மூக்கையும்} அறுத்தான்[2][3].(21) காதுகளும், மூக்கும் ஆறுபட்டு கோரமான அந்த சூர்ப்பணகை, பெருங்குரலில் அலறியவாறே வந்த வழியே வனத்திற்குள் ஓடினாள்.(22) விரூபியும், மஹாகோரமானவளும், குருதியில் நனைந்தவளுமான அந்த ராக்ஷசி, வர்ஷகால {கார்கால} மேகத்தைப் போல பல்வேறு வகைகளில் கதறினாள்.(23) காண்பதற்கு கோரமான அவள், ஏராளமாகப் பெருகிய ரத்தத்தைத் தன் கைகளால் பொத்திக் கொண்டு[4] கர்ஜித்தவாறே மஹாவனத்திற்குள் பிரவேசித்தாள்.(24) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நாசிக் என்ற நகரம், இந்நிகழ்வாலேயே {லக்ஷ்மணன் சூர்ப்பணகையின் நாசியை அறுத்த நிகழ்வாலேயே} அந்தப் பெயரைப் பெற்றது என்று நம்பப்படுகிறது" என்றிருக்கிறது.

[3] நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான்
வில் எடாது அவள் வயங்கு ஏரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங்கையில் திருகுறப் பற்றி 
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்று வாள் உருவி
ஊக்கித் தாங்கி, விண்படர்வென் என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா
மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால்
போக்கி போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான்.

- கம்பராமாயணம் 2824, 2825ம் பாடல்கள்

பொருள்: "அடியே நில்" என்று அதட்டி விரைந்தான். இவள் ஒரு பெண் என்று எண்ணினான். தன்னுடைய வில்லை எடுக்காமல் , அவளது தீப்போன்ற பரந்த செந்நிறம் கொண்ட கூந்தலைத் தன் சிவந்த கைகளால் சுருட்டிப் பற்றி, விரைவில் இழுத்து உதைத்து ஒளி விளங்கும் தன் வாளை உருவியபோது,(2824) "முயன்று இவனையும் எடுத்துக் கொண்டு வான்வழி செல்வேன்" என்று எழுந்தவளை எளிதில் கீழே தள்ளி "கொடுந்தொழில் செய்யாதே" என்று சொல்லி, மூக்கையும், காதுகளையும், மார்புக்காம்புகளையும் அடுத்தடுத்து அறுத்தெறிந்து சினத்தைவிட்டு முறுக்கிப் பிடித்த அவளது கூந்தலையும் விட்டான்.

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, தன் காதுகளையும், மூக்கையும் தன் கைகளால் மறைத்துக் கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.

அந்த விரூபிதை {வடிவம் சிதைந்தவள்}, ராக்ஷச சங்கத்தால் {கூட்டத்தால்} சூழப்பட்ட ஜனஸ்தானத்தை அடைந்து, உக்கிர தேஜஸ்ஸுடன் கூடியவனும், தன்னுடன் பிறந்தவனுமான கரனை நெருங்கி, ககனத்தில் {வானத்தில்} இருந்து விழும் இடியைப் போல பூமியில் விழுந்தாள்.(25) அப்போது பயமோஹத்தால் மூர்ச்சித்த அந்த கரபாகினி {கரனின் தமக்கை}, ரத்தத்தில் நனைந்தபடியே, பாரியையோடும், லக்ஷ்மணனோடும் ராகவன் வனத்திற்கு வந்திருப்பது, தன் வடிவத்தை சிதைத்தது என அனைத்தையும் சொன்னாள்.(26)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

சூர்ப்பணகை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 17 (29)

Shurpanakha | Aranya-Kanda-Sarga-17 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனைச் சந்தித்த சூர்ப்பணகை; அவனது மனைவியாகும் விருப்பத்தை வெளிப்படுத்தியது...

Rama Seetha Shurpanaka Lakshmana

இராமன், சீதை, சௌமித்ரி {லக்ஷ்மணன்} ஆகியோர் நீராடிவிட்டு, கோதாவரி தீரத்தில் இருந்து தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(1) இலக்ஷ்மணனும், ராகவனும் அந்த ஆசிரமத்தை அடைந்து அதிகாலைச் சடங்குகளைச் செய்து, பர்ணசாலைக்குள் நுழைந்தனர்.(2) இராமன் மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்டு அங்கே சுகமாக இருந்தான். பர்ணசாலைக்குள் சீதையுடன் அமர்ந்து, உடன் பிறந்தவனான லக்ஷ்மணனுடன் விதவிதமான கதைகளைப் பேசிக்கொண்டிருந்த அந்த மஹாபாஹு, சித்திரையின் {சித்திரை நக்ஷத்திரம் நேரும் நாளில் ஒளிரும்} சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்[1].(3,4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சித்திரை நட்சத்திரமே நீல வானின் பின்புலத்திற்கு எதிராக தெளிவான வெண்ணிறத்தில் இருக்கும். அதனாலேயே அது "சித்ர மௌக்திகம் ஏகம்", அதாவது "சித்திரை நட்சத்திரமும், முத்தும் ஒரே நிறத்திலானவை" என்று சொல்லப்படுகிறது. வான் நீல வண்ணனான ராமனே சந்திரன் எனவும், சீதை முத்தைப் போன்று வெண்மையான சித்திரை நட்சத்திரம் எனவும் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.

இராமன் கதைகளில் மூழ்கிய மனத்துடன் அங்கே அமர்ந்திருந்தபோது, ஒரு ராக்ஷசி யதேச்சையாக அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} வந்தாள்.(5) இராக்ஷசன் தசக்ரீவனின் பகினியும் {ராவணனின் தங்கையும்}, சூர்ப்பணகை என்ற பெயரைக் கொண்டவளுமான அவள், திரிதசனை {சொர்க்கவாசியைப்} போன்ற ராமனை நெருங்கிக் கண்டாள்[2].(6) ஒளிபொருந்திய முகத்தையும், {சிங்கம் போன்ற மார்பையும்}, நீண்ட கைகளையும், தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளையும் கொண்டவனும், {முழங்கால் வரை நீளும் கைகளைக் கொண்டவனும், காண்பதற்கு இனியவனும்}, கஜத்தின் நடை கொண்டவனும், ஜடாமண்டலம் தரித்தவனும், சுகுமாரனும், பெரும் பலவானும், பார்த்திபர்களுக்குரிய குணங்களைக் கொண்டவனும், நீலோத்பலம் போன்ற நிறம் கொண்டவனும், கந்தர்பனை {மன்மதனைப்} போன்ற ஒளியுடன் கூடியவனும், இந்திரனுக்கு ஒப்பானவனுமான ராமனைக் கண்டதும் அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை} காமமோஹிதம் அடைந்தாள்[3].(7-9அ) 

[2] இராமனைக் காண வரும் சூர்ப்பணகையின் நடையழகு கம்பராமாயணத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.

- கம்பராமாயணம் 2762ம் பாடல்

பொருள்: பஞ்சு விளங்கும் மிக செழித்த தளிர்களும் வருந்துபடி, நிறைந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்களுடன் அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும், அன்னம் போலவும், மின்னும் வஞ்சிக் கொடி போலவும், கொடிய விஷம் போன்ற அந்த வஞ்சமகள் வந்தாள்.

[3] இந்த இடத்தில் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் 7ம் சுலோகத்தில் அரை சுலோகம் அதிகம் வருகிறது. அதிலுள்ள செய்திகள் மேலே, {சிங்கம் போன்ற மார்பையும்} என்றும், {முழங்கால் வரை நீளும் கைகளைக் கொண்டவனும், காண்பதற்கு இனியவனும்} என்றும் (7-9அ) சுலோகத்திற்குள் { } என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸுமுகனை துர்முகியும் {நல்ல முகம் கொண்டவனை, கெட்ட முகம் கொண்டவளும்}, மத்திம இடையைக் கொண்டவனை மஹோதரியும் {பானை வயிற்றைக் கொண்டவளும்}, விசாலாக்ஷனை விரூபாக்ஷியும் {நீள்விழியானைக் கோணல் விழியாளும்}, நற்கேசம் கொண்டவனைச் செம்பட்டை மயிர் கொண்டவளும், பிரிய ரூபம் கொண்டவனை விரூபம் கொண்டவளும் {அழகிய வடிவம் கொண்டவனை, கொடிய வடிவம் கொண்டவளும்}, நல்ல சுவரம் கொண்டவனை பயங்கரக் குரல் கொண்டவளும், இளமையானவனைப் பயங்கரக் கிழவியும், இனிமையாகப் பேசுபவனை, பிதற்றிப் பேசுபவளும், நியாயமான ஒழுக்கம் கொண்டவனை தீய ஒழுக்கம் கொண்டவளும் என அப்ரிய தரிசனம் கொண்ட அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பிரிய தரிசனம் கொண்டவனைக் கண்டு, சரீரஜனால் {மன்மதனால்} முற்றுகையிடப்பட்டு ராமனிடம் {இவ்வாறு} சொன்னாள்:(9ஆ-12அ) "நீ ஜடை தரித்திருக்கிறாய், பாரியையுடன் இருக்கிறாய். சரங்களையும், வில்லையும் கையாள்கிறாய், தபஸ்வி ரூபத்தில் இருக்கிறாய். இராக்ஷசர்களால் சேவிக்கப்படும் இந்த தேசத்திற்கு எப்படி வந்தாய்? நீ வந்த காரியமென்ன என்பதைச் சொல்வதே உனக்குத் தகும்" {என்றாள் சூர்ப்பணகை}.(12ஆ,13)

இராக்ஷசி சூர்ப்பணகை இவ்வாறு சொன்னதும், அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான ராமன்}, நேரடியாகப் புத்தியில் இருந்து அனைத்தையும் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(14) "திரிதச விக்கிரமரும் {வீரத்தில் தேவர்களைப் போன்றவரும்}, தசரதர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு ராஜா இருந்தார். நான் அவரது மூத்த மகன். இராமன் என்ற பெயரில் ஜனங்கள் என்னைக் கேட்டிருக்கின்றனர் {கேள்விப்பட்டு அறிந்திருக்கின்றனர்}.(15) இவன் பெயர் லக்ஷ்மணன். என் தம்பி. என்னைப் பின்தொடர்ந்து வருகிறான். வைதேஹியான இவள் என் பாரியை. சீதை என்று நன்கறியப்படுபவள்.(16) நரேந்திரரான பிதா, மாதா ஆகியோரின் ஆணையால் செலுத்தப்பட்டு, தர்மத்தை நிறுவ விரும்பியும், தர்மத்தின் அர்த்தத்திற்காகவும் {கடமைக்காகவும்} இங்கே வனத்தில் வந்து வசிக்கிறேன்.(17) உன்னைக் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன். நீ யார் {உன் பெயரென்ன}? நீ யாருடையவள் {யாருடைய மகள்? யாருடைய மனைவி?}. மிக வசீகரமான நீ எனக்கு ராக்ஷசியாகவே தெரிகிறாய்[4].(18) எதன் நிமித்தமாக இங்கே நீ வந்திருக்கிறாய்? உண்மையைச் சொல்வாயாக" {என்றான் ராமன்}

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதுவரையில் சூர்ப்பணகையின் வடிவழகு கூறப்படவில்லை. ஆனால், ராமன் இங்கே அழகிய பெண் என்று சொல்லி அவளைப் பகடி செய்கிறான் என்று சில உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சில பதிப்புகளில் இவ்வளவு நேரமும் சூர்ப்பணகை அழகிய வடிவம் தாங்கி வந்தாள் என்று குறிப்பிடப்படுகிறது. இராமனின் அவசியமற்ற பகடியை மறுப்பதற்காக சிலர் அவள் அழகிய வடிவத்துடன் வந்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே முந்தைய சுலோகங்களில் அவளைக் குறித்து எதிர்மறையாகச் சொன்னவற்றையெல்லாம் புலமையுடன் நேர்மறையாக மாற்றிக் கொள்கிறார்கள். வேறு சில பதிப்புகளில், இராமன் ஆற்றில் இருந்து திரும்பிவந்ததும், ஜடாயு தன் உறவினங்களைக் கண்டு வரச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டதாகவும், ஜடாயு அங்கில்லாததை அறிந்தே சூர்ப்பணகை வந்தாள் என்றும், ஜடாயு இருந்தால் எந்த ராக்ஷசர்களாலும் ராமனின் குடிலை நெருங்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அழகிய அங்கங்களை உடையவளாய் காணப்படவில்லை. எனக்கு நீ அரக்கியெனத் தோற்றுகின்றனை" என்று பகடியேதும் இல்லாமல் நேரடியாகவே இருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உன்னுருவம் மிகவழகுற்றிருக்கின்றமையின், நீ அரக்கியல்லளென வெண்ணுகின்றேன்" என்றிருக்கிறது. செம்பதிப்பான பிபேக்திப்ராயின் பதிப்பில், அவளது அழகைக் குறித்து பகடியாகவோ, நேரடியாகவோ இங்கே ராமனால் எதுவும் சொல்லப்படவில்லை. கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை எழில் வடிவந்தரித்து வருபவளாகவே காட்டப்படுகிறாள். [2]ம் அடிக்குறிப்பும் இங்கே பொருந்தும்.

இந்த சொற்களைக் கேட்டு மதனனால் துன்புறுத்தப்பட்ட அந்த ராக்ஷசி {பின்வருமாறு} சொன்னாள்:(19) "இராமா, நான் சொல்லப் போகும் தத்வார்த்தமான {உண்மையான} சொற்களை கேட்பாயாக. நான் சூர்ப்பணகை என்ற பெயரைக் கொண்டவளும், காமரூபிணியுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளுமான} ராக்ஷசியாவேன். அனைவருக்கும் பயத்தை உண்டாக்கியபடி இந்த அரண்யத்தில் தனியாகத் திரிந்து வருகிறேன்.(20,21அ) பலவானும், வீரனும், விஷ்ரவஸின் புத்திரனும், ராக்ஷஸேசுவரனுமான ராவணன் என்னுடன் பிறந்தவனாவான். எப்போதேனும் இஃது உன் செவிகளை எட்டியிருக்கலாம்.(21ஆ,22அ) எப்போதும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் மஹாபலன் கும்பகர்ணனும் அவ்வாறே {உடன் பிறந்தவனே}, ராக்ஷச நடத்தையற்ற தர்மாத்மாவான விபீஷணனும் அவ்வாறே {உடன்பிறந்தவனே}, போரில் புகழ்பெற்ற வீரர்களான கரதூஷணர்கள் இருவரும் உடன் பிறந்தவர்களே.(22ஆ,23) 

இராமா, நான் அவர்களையெல்லாம் மீறியவள். புருஷோத்தமனான உன்னை கண்டது முதல் பர்த்தாவாக பாவித்தே {கணவனாக உணர்ந்தே} உன் சமீபத்தில் வந்தேன்.(24) நான் பிரபாவத்துடன் கூடியவள் {சக்திவாய்ந்தவள்}, என் மனம்போல் திரியும் பலகாமினி {விரும்பிய இடங்களுக்கெல்லாம் சுதந்திரமாகத் திரியும் சிறந்த பலசாலி}, நெடுங்காலம் நீ என் பர்த்தாவாக இருப்பாயாக. இந்த சீதையுடன் நீ என்ன செய்யப்போகிறாய்?(25) சிதைந்தவளும், வடிவழகற்றவளுமான இவள் உனக்குத் தகுந்தவளல்ல. நானே உனக்குத் தகுந்தவள். என்னையே பாரியை ரூபமாகப் பார்ப்பாயாக {என்னை உன் மனைவியாகக் கருதுவாயாக}.(26) விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும்,  வெற்று வயிற்றைக் கொண்டவளுமான இந்த மானுஷியையும், உன்னுடன் பிறந்த இவனையும் நான் பக்ஷிக்க {உண்ண} விரும்புகிறேன்.(27) அதன் பிறகு பல்வேறு பர்வத சிருங்கங்களையும் {மலையுச்சிகளையும்}, வனங்களையும் கண்டு என்னுடன் காமத்தை அனுபவித்தபடியே தண்டகத்தில் திரிவாயாக" {என்றாள் சூர்ப்பணகை}[5].(28)

[5] தாதாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சூர்ப்பணகை காமரூபிணி யாதலின், பெருமாளைக் கண்டவுடன் காமுற்று, அவர் தன்னைக் கண்டு காமுற வேண்டுமென்று நல்லுருவங் கொண்டாளென்றறிக, கவியவளுக் கியல்பாயுள்ள உருவத்தையே வர்ணனை செய்தனரென்றனர் வியாக்கியரதர். சூர்ப்பணகை காமாதிசயத்தால் மதிமயங்கி, ராக்ஷபுத்தியால் தன்னையே அழகினளாக ஒண்டை வேம்பினையே மதுரமாக வெண்ணுவதுபோல எண்ணி, அவ்வுருவத்தோடே வந்தனள் ராக்ஷஸரூபத்தையே தீதென்றறிந்தவளாயின், பிராட்டியாரை இகழ்வாளோ? இவளும் அவளைப் போலன்றோ? உருவங்கொண்டிருப்பவள், "நீ யழகிய உருவமுடையாளல்லை; ஆதலின், நீ எனக்கு ராக்ஷஸியாகவே தோற்றுகின்றனை"யென்று பொருள் கூற வேண்டும்; இவள் தன்னை இகழ்ந்து துறவாமைக்காகவும், தன்னுடன் பிறந்தோர்களைப் புகழ்ந்தனள். சூர்ப்பணகை என்பது; முறம்போன்ற நகமுடையளென்று காரணவிடுகுறிப் பெயராகின்றது" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கிய விசாரதனான அந்தக் காகுத்ஸ்தன் {பேச்சில் வல்லவனான ராமன்}, சிரித்துக் கொண்டே அந்த மதிரேக்ஷணையிடம் {வெறியுடன் கூடிய கண்களைக் கொண்டவளிடம்} இந்தச் சொற்களைப் பேச ஆரம்பித்தான்.(29)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை