Feats of Ravana and Indrajith | Yuddha-Kanda-Sarga-007 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்கள் அனைவரும், ராவணனின் வலிமையைப் புகழ்ந்து அவனுக்கு நம்பிக்கை ஊட்டி, வானரர்களின் படையை அழிப்பதற்கும், ராமனைக் கொல்வதற்கும் இந்திரஜித் ஒருவனே போதுமானவன் என்றது...
இராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், மஹாபலவான்களான ராக்ஷசர்கள் அனைவரும், ராக்ஷசேஷ்வரனான ராவணனிடம் கைக்கூப்பியபடியே பேசினார்கள்.{1} நீதிக்குப் புறம்பானவர்களும், புத்தியில்லாதவர்களும், பகைவரின் தரப்பை அறியாதவர்களுமான அவர்கள்,(1,2அ) "இராஜரே, பரிகங்கள் {இரும்பு முள் பதித்த கதாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, ரிஷ்டிகள் {கத்திகள்}, சூலங்கள், பட்டசங்கள் {குறுக்குக் கத்திகள்} நிறைந்த நம் பலம் {படை} மகத்தானது. நீர் ஏன் வருந்துகிறீர்?(2ஆ,3அ) போகவதியை {பாதாளத்திலுள்ள போகவதி நகரை} அடைந்து பன்னகர்களுடனான யுத்தத்தில் நீர் வென்றீர்.{3ஆ} கைலாச சிகரவாசியும், யக்ஷர்கள் பலரால் சூழப்பட்டவனுமான தனதன் {குபேரன்}, மஹத்தான போரைச் செய்த உமக்கு வசப்பட்டான்.(3ஆ,4) விபுவே {தலைவரே}, மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} கொண்ட நட்பினால், லோகபாலன் என்றும், மஹாபலவான் என்றும் செருக்கிலிருந்த அவன் {குபேரன்}, உம்மால் போரில் வீழ்த்தபட்டான்.(5) யக்ஷர்களைக் கூட்டங்கூட்டமாகக் கொன்றும், நடுங்கச் செய்தும், சிறையில் வைத்தும், கைலாச சிகரத்தில் இருந்து இந்த {புஷ்பக} விமானத்தை நீர் அபகரித்தீர்.(6)
