Showing posts with label கரன். Show all posts
Showing posts with label கரன். Show all posts

Tuesday, 8 July 2025

மகராக்ஷன் | யுத்த காண்டம் சர்க்கம் - 078 (21)

Makaraksha | Yuddha-Kanda-Sarga-078 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போர்க்களம் செல்ல மகராக்ஷனைப் பணித்த ராவணன்; மகராக்ஷன் போர்க்களம் நோக்கிச் சென்றது...

Makarasha commanding other rakshasas

நிகும்பன் ஹதம் செய்யப்பட்டதையும் {கொல்லப்பட்டதையும்}, கும்பன் வீழ்த்தப்பட்டதையும் கேட்ட ராவணன், பெரிதும் கோபமடைந்து, அனலனை {நெருப்பைப்} போல எரிந்தான்.(1) குரோதம், சோகம் ஆகிய இரண்டிலும் நீக்கமற நிறைந்த நைர்ருதன் {ராக்ஷசன் ராவணன்}, கரபுத்ரனும், விசாலாக்ஷனுமான {கரனின் மகனும், அகன்ற விழிகளைக் கொண்டவனுமான} மகராக்ஷனிடம்,(2) "புத்ரா {மகனே}, என் ஆஜ்ஞையின் {ஆணையின்} பேரில், பலத்தால் {படையால்} சூழப்பட்டவனாகச் செல்வாயாக. வனௌகசர்களுடன் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களுடன்} கூடிய ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் ஆகிய இருவரையும் கொல்வாயாக" {என்றான் ராவணன்}.(3)

Thursday, 23 March 2023

கர வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 30 (41)

Khara killed | Aranya-Kanda-Sarga-30 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கரனைக் கொன்ற ராமன்; அவனைப் புகழ்ந்து, பூஜித்த தேவர்கள்; லக்ஷ்மணனும், சீதையும் குகையைவிட்டு வெளியே வந்தது...

Seetha hugging Rama, after he killed Khara

தர்மவத்ஸலனான {தர்மத்தில் விருப்பமுள்ள} ராகவன், பாணங்களால் கதையை {அந்த கதாயுதத்தைத்} துண்டித்துவிட்டு, குழப்பத்தில் {படபடப்புடன்} இருந்த கரனிடம் சிரித்தவாறே  இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(1) "இராக்ஷசாதமா {ராட்சசர்களில் இழிந்தவனே}, உன் பலம் முழுவதும் இவ்வளவுதான் என்பது காட்டப்பட்டுவிட்டது. என்னிலும் சக்தியில் குறைந்தவனான நீ  தேவையில்லாமல் பிதற்றினாய்.(2) இந்த கதை, பிதற்றுவதில் சமர்த்தனாகிய உன் நம்பிக்கையை அழிக்கும் வகையில் பாணங்களால் சிதறுண்டு பூமிதலத்தை அடைந்தது.(3) "முற்றாக அழிந்த ராக்ஷசர்களால் உண்டான இந்தக் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன்" என்று நீ சொன்ன அந்தச் சொற்களும் பொய்யாகின.(4) 

நீசனும், சீலத்தில் {ஒழுக்கத்தில்} இழிந்தவனும், பொய் விருத்தம் {நடத்தை} கொண்டவனும், இராக்ஷசனுமான உன் பிராணனை, கருடன் அம்ருதத்தை {கவர்ந்து சென்றதைப்} போல நான் அபஹரிக்கப்போகிறேன்.(5) இதோ என் பாணங்கள் உன் கண்டத்தை {தொண்டையைச்} சிதைக்கப் போகின்றன.  நுரைக் குமிழிகளுடன் பெருகும் உன் ரத்தத்தை மஹீ {பூமி} பருகப் போகிறாள்.(6) உன் அங்கமெங்கும் புழுதியால் பூசப்பட்டு, புஜங்கள் இரண்டும் {பூமியில்} தளர்ந்து, அடைதற்கரிய பெண்ணைப் போல பூமியை அணைத்துக் கொண்டு, நீ {நித்திய} உறக்கம் கொள்ளப் போகிறாய்.(7) இராக்ஷசர்களில் இழிந்தவனே, நீ {நித்தியமான} நல்ல நித்திரையில் இருக்கும்போது, இந்த தண்டகம் சரண்யம் வேண்டுபவர்களுக்கு சரண்யமாக {புகலிடம் வேண்டும் தவசிகளுக்குப் புகலிடமாகத்} திகழும்.(8)

இராக்ஷசா, என் சரங்களால் ஜனஸ்தானத்தில் உன் ஸ்தானம் அழிந்ததும், முனிவர்கள் பயமற்றவர்களாக இந்த வனம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.(9) பிறரை பயமுறுத்தும் ராக்ஷசிகள், பந்துக்கள் கொல்லப்பட்டு, கண்ணீரால் நனைந்த வதனங்களுடன் பயத்தால் தீனமடைந்து மிக விரைவில் {இங்கிருந்து} தப்பி ஓடப் போகிறார்கள்.(10)  உன்னைப் போன்ற அருவருக்கத்தக்கவனைப் பதியாக {தலைவனாக / கணவனாக} அடைந்தவர்களும், உன் குலத்திற்குத் தகுந்தவர்களுமான அந்தப் பத்தினிகள், இனி அர்த்தமற்ற சோக ரசத்தை {சோகத்தின் சுவையை} அனுபவிக்கப் போகிறார்கள்.(11) சீலத்தில் கொடியவனே, குணத்தில் அற்பனே, நித்தியம் பிராமணர்களுக்கு கண்டகனே {முள்ளாய் இருப்பவனே}, உன் செயல்களின் மீது கொண்ட ஐயத்துடனேயே {அச்சத்தால் நடுங்கியவாறே} அந்த முனிவர்கள் ஹவிஸ்ஸை அக்னியில் இடுகிறார்கள்" {என்றான் ராமன்}.(12)

இவ்வாறு வனத்தில் {போரில்} பெருங்கோபத்துடன் பேசிய அந்த ராகவனிடம், ரோஷத்துடன் கூடிய அந்தக் கரன், கழுதை போன்ற கடுங்குரலில் {பின்வருமாறு} நிந்திக்கத் தொடங்கினான்:(13) "பயத்திலும் {ஆபத்திலும்} கூட பயமில்லாமல் திடமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதால், மிருத்யு வசமடைந்த நீ பேசத்தக்கதையும், பேசத்தகாததையும் உன் புத்தியில் வாங்காமல் இருக்கிறாய்.(14) காலபாசத்தில் சிக்கிக் கொண்ட புருஷர்களே {மானிடர்களே}, ஆறு இந்திரியங்களும்[1] செயல் இழந்தவர்களாகி, காரியாகாரியங்களை {செய்யத்தக்கதையும், செய்யத்தகாததையும்} அறியாதவர்களாக இருப்பார்கள்" {என்றான் கரன்}.(15)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐம்புலன்களும், மனமும் சேர்ந்து இங்கே ஆறு இந்திரியங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன" என்றிருக்கிறது.

அந்த நிசாசரன் {இரவுலாவி}, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, தன் புருவங்களை நெரித்து, போரில் தாக்குதல் தொடுக்கக்கூடிய எதுவும் அருகிலெங்கும் இல்லாததைக் கவனித்து, மஹா சாலம் {பெரிய ஆச்சா மரம்} ஒன்றைக் கண்டான்.(16,17அ) அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அதைப் பெயர்த்தெடுத்தான். அந்த மஹாபலன், அதை {அந்த ஆச்சா மரத்தை} இருகைகளாலும் வலுவுடன் உயரத் தூக்கி, உரக்க கத்தியபடியே ராமன் மீது வீசி, "நீ அழிந்தாய்" என்று கூச்சலிட்டான்.(17ஆ,18) பிரதாபவானான ராமன், தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அதை {அந்த ஆச்சா மரத்தை} பாணத் தாரைகளால் துண்டித்து, அந்த சமரில் தீவிரமான கோபத்தை அடைந்து, கரனைக் கொல்லத் தீர்மானித்தான்.(19) 

அப்போது ராமன், கோபத்தால் உடல் வியர்க்க, கடைக்கண்கள் சிவக்க, ஆயிரம் பாணங்களால் அந்தப் போரில் கரனைத் துளைத்தான்.(20) பாணங்கள் தைத்த அவனது உடலில் இருந்து நுரையுடன் கூடிய ரத்தம், பிரஸ்ரவண கிரியின்[2] நீர்த்தாரைகளைப் போல பூமியில் வேகமாக நிரம்பி வழிந்தது.(21) போரில் ராமபாணங்களால் மதிகலங்கிய அந்தக் கரன், உதிர கந்தத்தால் {ரத்த மணத்தால்} வெறிபிடித்து அவனை {ராமனை} நோக்கி வேகமாக ஓடினான்.(22) பராக்கிரமம் நிறைந்தவனும், அஸ்திரங்களில் நிபுணனுமான அவன் {ராமன்}, உதிரத்தில் {ரத்தத்தில்} நனைந்து ஆவேசத்துடன் எதிர்த்து வருபவனை {கரனைக்} கண்டு வேகத்துடன் சற்றே விலகி நின்றான்[3].(23)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவனின் உதவிக்காகக் காத்திருக்கும்போது மழைக்காலத்தைப் புகழ்ந்து இந்த பிரஸ்ரவண மலையை எண்ணி வியக்கிறான்" என்றிருக்கிறது. "பிரஸ்ரவணம்" என்ற சொல் "அருவி" என்ற பொருளைக் கொண்டது. எனவே இந்த வாக்கியத்திற்கு "மலை அருவியின் நீர்த்தாரைகளைப் போல" என்று நேரடியாகவும் பொருள் கொள்ளலாம்.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதனை செய்தவன் ராமன். அவன் இன்னும் சிறப்பாகத் தாக்குவதற்காகவே இரண்டு, அல்லது மூன்று அடிகள் பின்வாங்குகிறான்" என்றிருக்கிறது.

அப்போது ராமன், கரனைப் போரில் வதைப்பதற்காக, பாவகனை {நெருப்பைப்} போல ஒளிர்வதும், பிரம்மதண்டம் போன்றதுமான மற்றொரு சரத்தை அந்த சமரில் எடுத்தான்.(24) அந்த தர்மாத்மா, மதிமிக்கவனும், ஸுரராஜனுமான மகவானால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்டதை {அந்தக் குறிப்பிட்ட பாணத்தைப்}[4] பூட்டி உடனே அதைக் கரன் மீது தொடுத்தான்.(25) இராமன், தனுவை வளைத்து விடுத்த அந்தப் மஹாபாணம், இடிபோல் முழங்கியபடியே கரனின் மார்பில் பாய்ந்தது.(26) அந்த சர அக்னியில் கொளுத்தப்பட்ட கரன், ஸ்வேதாரண்யத்தில் {திருவெண்காட்டில்} ருத்திரனால்  முற்றாக எரிக்கப்பட்ட அந்தகனைப் போலப் பூமியில் விழுந்தான்.(27) அந்தக் கரன், வஜ்ரத்தால் விருத்திரன் போலவும், நுரையால் நமுசி போலவும், இந்திரனின் அசனியால் {இடியினால்} பலன் {பலாசுரன்} போலவும் {அந்த பாணத்தால்} மாண்டு விழுந்தான்.(28)

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகஸ்தியர் மூலம் கொடுக்கப்பட்டது" என்று இருக்கிறது. ஆரண்ய காண்டம் 12ம் சர்க்கத்தில் அகஸ்தியர் ராமனுக்கு ஆயுதங்கள் பலவற்றை வழங்குகிறார். 

அதே நேரத்தில், தேவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக, சாரணர்களுடன் சேர்ந்து துந்துபி முழக்கி, வியப்படைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ராமனின் மீது புஷ்ப வருஷத்தை வர்ஷித்து {மலர் மாரியைப் பொழிந்து},(29,30அ) தங்களுக்குள் {பின்வருமாறு} பேசிக் கொண்டனர்: "கரனையும், தூஷணனையும் முக்கியர்களாகக் கொண்ட காம ரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ராமனின் கூரிய சரங்களால் ஒன்றரை முஹூர்த்த காலத்தில் கொல்லப்பட்டனர்[5].(30ஆ,31) விதிதாத்மாவான {தன்னை அறிந்த புத்திசாலியான} ராமன் செய்தது மஹத்தான கர்மமாகும். அஹோ பெருமை, அஹோ வீரியம், அஹோ மனோதிடம் {என்னே இவனது பெருமை, என்னே இவனது வீரம், என்னே இவனது மனோதிடம்}. இவன் {இந்த வீரம், மனோதிடம், பெருமை ஆகியவற்றுடன் கூடிய ராமன்} விஷ்ணுவைப் போலவே காணப்படுகிறான்[6]" {என்றனர்}. தேவர்கள் அனைவரும் இவ்வாறு சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றனர்.(32,33அ)

[5] ஒரு நாள் என்பது முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அதாவது பகலில் 15 முஹூர்த்தங்களையும், இரவில் 15 முஹூர்த்தங்களையும் கொண்டது ஒரு நாளாகும். ஒரு முஹூர்த்தம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்களாகும். எனவே, ஒன்றரை முஹூர்த்தம் என்றால் 72 நிமிடங்களாகும். அதாவது. கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

[6] ஒரு சில பதிப்புகளில்  முனிவர்கள் பேசுவது முதலில், தேவர்கள் பேசுவது அடுத்ததாகவும் வருகிறது. அதாவது இந்தக் குறிப்பிட்ட பத்தி {அதாவது 29 முதல் 33அ வரையுள்ளது} அடுத்த பத்திக்கு {அதாவது 33ஆ முதல் 37அ சுலோகம் வரையுள்ள பகுதிக்கு} அடுத்ததாக வருகிறது. இராமாயணத்தில் வரும் இது போன்ற இடங்களே ராமனை மானிட நிலையிலிருந்து விஷ்ணுவின் நிலைக்கு உயர்த்துகின்றன.  

அப்போது ராஜரிஷிகளும், பரமரிஷி கூட்டத்துடன் கூடிய அகஸ்தியரும்[7] சேர்ந்து பெரும் மகிழ்ச்சியடைந்து, ராமனைப் புகழ்ந்து, இதைச் சொன்னார்கள்:(33ஆ,34அ) "பாகசாசனனும் {பாகன் என்ற அசுரனைக் கொன்றவனும்}, மஹாதேஜஸ்வியும், புரந்தரனுமான {அசுரர் நகரைப் பிளந்தவனுமான} மஹேந்திரன், இதற்காகவே புண்ணிவானான சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்திருந்தான்[8].(34ஆ,35அ) பாப கர்மங்களைச் செய்யும் சத்ருக்களான இந்த ராக்ஷசர்களை வதைப்பதற்கான உபாயமாகவே இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} உன்னை மஹரிஷிகள் அழைத்து வந்தனர்.(35ஆ,36அ) தசரதாத்மஜா, எங்களுடைய இந்தக் காரியம் உன்னால் செய்து முடிக்கப்பட்டது. எனவே, மஹரிஷிகள் இனி தண்டகவனத்திலேயே தங்கள் ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவார்கள் {கடமையைச் செய்வார்கள்}" {என்றனர்}.(36ஆ,37அ)

[7] பல பதிப்புகளில் இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படவில்லை. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் மட்டுமே இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படுகிறார்.

[8] ஆரண்ய காண்டம் 5ம் சர்க்கத்தில் இந்நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது.  அங்கே ராமனே இந்திரனைக் காண்கிறான். இந்திரன் ராமனைக் காண மறுத்து சரபங்கரின் ஆசிரமத்தில் இருந்து விரைந்து சென்று விடுகிறான். எனவே, ராமனும், இந்திரனும் நேரடியாக சந்தித்துக் கொண்ட நிகழ்வு இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சர்க்கத்தின் 25ம் சுலோகத்தில், "தேவராஜனான இந்திரனால் கொடுக்கப்பட்ட பாணத்தை வில்லில் பூட்டினான் ராமன்" என்று சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட {34ஆ முதல்37அ சுலோகம் வரையுள்ள} வாக்கியத்தை அகஸ்தியர் ராமனிடம் குறிப்பிடுவதாகக் கொண்டால், "இந்திரன் இந்த ஆயுதங்களை சரபங்கரிடம் கொடுத்தான், சரபங்கர் அவற்றை சுதீக்ஷ்ணரிடம் கொடுத்து வைத்திருந்தார். சுதீக்ஷ்ணர் என்னிடம் கொடுத்தார். அவற்றையே நான் உன்னிடம் கொடுத்தேன்" என்ற பொருள் தொக்கி நிற்கும். 35ஆ,36அ சுலோகத்திற்கான பொருளும் அப்போது தெள்ளெனத் துலங்கும்.

அதே நேரத்தில், வீரனான லக்ஷ்மணன், சீதையை அழைத்துக் கொண்டு, அடைதற்கரிய கிரி துர்கத்தில் {மலைக் குகையில்} இருந்து வெளியே வந்து, சுகமாக ஆசிரமத்தில் நுழைந்தான்[9].(37ஆ,38அ) அப்போது மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்ட விஜயீவீரனான {வெற்றிபெற்ற வீரனான} ராமன், லக்ஷ்மணனாலும் பூஜிக்கப்பட்டவனாக அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(38ஆ,39அ) மஹரிஷிகளின் சுகத்திற்காக, சத்ருக்களை வதம் செய்த தன் பர்த்தாவை {கணவன் ராமனைக்} கண்ட வைதேஹி {சீதை}, பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனைத் தழுவிக் கொண்டாள்.(39ஆ,40அ) அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, இராக்ஷச கணங்கள் {கூட்டம்} கொல்லப்பட்டதைக் கண்டும், ராமன் சோர்வடையாததைக் கண்டும் அதிக மகிழ்ச்சியடைந்து உள்ளம் பூரித்தவள் ஆனாள்.(40ஆ,இ) பிறகு, மகிழ்ச்சியான முகத்துடன் கூடிய அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, ராக்ஷச சங்கத்தை அழித்ததால் மகிழ்ச்சியடைந்த முனிவர்களால் பூஜிக்கப்பட்டவனை {ராமனை} மீண்டும் தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தாள்[10].(41)

[9] விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.

- கம்பராமாயணம் 3062ம் பாடல், கரன் வதைப்படலம்

பொருள்:  போரில் இறந்து விண்ணை அடைந்த கொடியவரின் {அரக்கரின்} உடலில் ஏற்பட்ட புண்ணின் இரத்தமும், தூசிகளும் நீங்கிவிடும்படி பெருமைமிக்க வீரனாகிய ராமனின் பாதங்களை, அவனது தம்பியும் {இலக்ஷ்மணனும்}, அன்னமும் {சீதையும்} தங்கள் கண்களின் நீரால் கழுவினர்.

[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தெய்வத்தால் தீய சக்தி அழிக்கப்படும்போதெல்லாம், அதைப் படிப்பதன், அல்லது கேட்பதன் பலன் இறுதியில் சொல்லப்படும். கரவதத்திற்கும் அப்படியொரு பல சுருதி இருப்பதை மஹேசுவர தீர்த்தர் குறிப்பிடுகிறார். அது பின்வருமாறு.

ஷ்²ருத்வா ஷ்²ரீ ராம விஜயம் பாப ப³தா⁴த் ப்ரமுச்யதே .
ததை²வ ஸ்ருʼந்க²லா ப³ந்தா⁴த் ருʼண ப³ந்தா⁴த் விமுச்யதே .
ஷ்²ருத்வா புஷ்பவதீ நாரீ தநயம் வம்ஷ² வர்த⁴நம் .
லப⁴தே ராக⁴வேந்த்³ரஸ்ய ப்ரஸாதா³த் கீர்தி வர்த⁴நம் .. ஸ்காந்த³ புராண

"இராமவிஜயத்தை {இராமனின் வெற்றியைக்} கேட்கும் ஒருவன் தன் பாபச்சங்கிலிகளில் இருந்தும், வதை {தண்டனைச்} சங்கிலிகளில் இருந்தும், கடன் சிக்கல்களில் இருந்தும் விடுபடுகிறான். இதைக் கேட்கும் புஷ்பவதியான ஒரு நாரீ பெண், வம்சத்தை விருத்தி செய்யும் தனயனை {மகனைப்} பெறுவாள். இராகவனின் அருளால் செழுமையும், புகழும் பெருகும்" - ஸ்கந்த புராணம்.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 41

Previous | Sanskrit | English | Next

Wednesday, 22 March 2023

கதை பிளந்தது | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 29 (28)

Mace Splintered | Aranya-Kanda-Sarga-29 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சோர்வடைந்ததாகக் கருதி அவனைப் போரிடத் தூண்டிய கரன். கரன் எறிந்த பெரும் கதாயுதம், விண்ணில் பாய்ந்து கொண்டிருக்கும்போதே அதைத் துண்டாக்கிய ராமன்...

Rama at war with khara

மஹாதேஜஸ்வியான ராமன், ரதமில்லாமல் கதாபாணியாக எதிரே நின்ற கரனிடம் முதலில் மிருதுவாகவும், பின்பு கடுமையான வாக்கியங்களையும் {பின்வருமாறு} சொன்னான்:(1) "கஜ, அசுவ, ரதங்கள் {யானைகள், குதிரைகள், தேர்கள்} நிறைந்த மஹத்தான படையுடன் கூடிய உன்னால் உலகம் யாவிலும் அருவருக்கத்தக்க மிகக் கொடிய கர்மங்கள் {இந்த தண்டகாரண்யத்தில்} செய்யப்பட்டன.(2) பூதங்களுக்குத் தீங்கிழைக்கும் பாப கர்மங்களைச் செய்யும் கொடியவன், மூன்று உலகங்களுக்கும் ஈசுவரனாக இருப்பினும் நிலைக்க மாட்டான்.(3) க்ஷணதாசரா {இரவுலாவியே}, உலகிற்கு எதிரான கர்மங்களை {செயல்களைச்} செய்யும் பயங்கரன், துஷ்ட சர்ப்பத்தைப் போல சர்வ ஜனங்களாலும் கொல்லப்படுவான்.(4) லோபத்தாலோ, காமத்தாலோ {பேராசையாலோ, ஆசையாலோ} பாபங்களைச் செய்யும் புத்தியற்ற ஒருவன், ஆலங்கட்டியால் மகிழ்ச்சியடையும் பிராஹ்மணியை {அரணையைப்} போல அவற்றின் பலனை அனுபவிப்பான்[1].(5)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிராஹ்மணி என்றழைக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட பல்லி வகைக்கு {அரணைக்கு} ஆலங்கட்டிகள் நஞ்சுமிக்கவையாகும். ஒருவன் சுயமாக ஈட்டியவற்றில் சிறிய பகுதியையும் பிரியாமல் இருக்க ஏங்குதல் லோபமாகும், முற்றிலும் கிடைக்காதவற்றைக் குறித்து ஏங்குவது மோகமாகும். {இங்கே காமம் என்று குறிப்பிடப்படுவது ஆசையாகும்}. மக்கள் தாங்கள் சுயமாக ஈட்டியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், கிடைக்காத பொருள்களையும் ஈட்ட முயற்சிக்கும்போது பாபம் செய்கிறார்கள். இரண்டுமே தவறுதான் என்று உணர்ந்த பிறகும், எவரேனும் இந்தத் தீமைகளைத் தொடர்ந்து செய்தால் அது மன்னிக்கமுடியாத குற்றமாகிறது. இங்கே குறிப்பிடப்படும் சிவப்பு வால் பல்லியின் {அரணையின்} உருவகம், பழைய பதிப்புகளில் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் வேறு பதிப்புகளில் மற்றுமொரு வேறுபாடாக, "சுயமதிப்பை இழந்த பிராமணன்" என்ற உவமை இங்கே சொல்லப்படுகிறது. அடுத்து கரன் {மனத்தில்} கேட்கக்கூடிய கேள்வியான, "நான் என்ன பாபம் செய்தேன்?" என்பதற்கு அடுத்த சுலோகத்தில் ராமன் பதில் சொல்கிறான்" என்று இருக்கிறது.

இராக்ஷசா, தண்டாகரண்யத்தில் வசிக்கும் மஹாபாக்கியவான்களும்,  தர்மசாரிகளுமான தபஸ்விகளைக் கொன்று, நீ என்ன பலனை அடையப் போகிறாய்?(6) உலகத்தால் அருவருக்கத்தக்க பாப கர்மங்களைச் செய்யும் குரூரர்கள் ஐசுவரியத்தை அடைந்தாலும், வேரறுந்த மரங்களைப் போல நீண்ட காலம் நிலைக்க மாட்டார்கள்.(7) மரங்களில் தோன்றும் பருவகால புஷ்பங்களைப் போல பாப கர்மத்தின் கர்த்தா {பாபச் செயல் புரிந்தவன், சரியான} காலம் வரும்போது கோர பலனை நிச்சயம் அடைவான்.(8) க்ஷணதாசரா {இரவுலாவியே}, விஷங்கலந்து புசிக்கப்பட்ட அன்னத்தால் {விளையும் பலனைப்} போலவே உலகத்தில் பாப கர்மங்களின் பலன் சீக்கிரமே அடையப்படுகிறது.(9) 

நிசாசரா {இரவுலாவியே}, உலகம் விரும்பாததைச் செய்ய விரும்பி கோர பாபம் செய்பவர்களின் பிராணனைப் பறிக்கும் ராஜ ஆணையுடனே நான் வந்திருக்கிறேன்.(10) இப்போது நான் ஏவப்போகும் காஞ்சனபூஷண சரங்கள், வல்மீகத்தில் இருந்து வரும் பன்னகத்தை {பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அம்புகள், புற்றிலிருந்து வரும் பாம்பைப்} போல உன்னைப் பிளந்து வெளியேறும்.(11) இப்போது போரில் கொல்லப்படும் நீயும், உன் சைனியமும், தண்டகாரண்யத்தில் உன்னால் புசிக்கப்பட்ட தர்மசாரிகளைப் பின்பற்றிச் செல்வீராக.(12) பூர்வத்தில் உன்னால் கொல்லப்பட்ட பரமரிஷிகள், விமானங்களில் இருந்து கொண்டு, இப்போது பாணங்களால் கொல்லப்பட்டு, நரகத்திற்கு செல்லப் போகும் உன்னைப் பார்க்கட்டும்.(13) குலாதமா {குலத்தில் இழிந்தவனே}, நீ விரும்பியபடியே போரிடும் முயற்சியைச் செய்வாயாக. பனம்பழத்தைப் போல இப்போது நான் உன் சிரத்தைக் கொய்யப் போகிறேன்" {என்றான் ராமன்}.(14)

இவ்வாறு ராமன் சொன்னதும், குரோதமடைந்தவன் {கரன்}, ரத்தம் போன்று சிவந்த கண்களுடன் சிரித்துக் கொண்டே, குரோதத்தால் மெய்மறந்தவனாக ராமனிடம் {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(15) "தசரதாத்மஜா {தசரதனின் மகனே}, யுத்தத்தில் சாதாரண ராக்ஷசர்களைக் கொன்றுவிட்டு புகழுக்குத் தகாத உன்னை நீயே எவ்வாறு புகழ்ந்து கொள்கிறாய்?(16) விக்ராந்தர்களும் {வெற்றியாளர்களும்}, பலவந்தர்களுமான நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}, தங்கள் சொந்த தேஜஸ்ஸை {வலிமையைக்} குறித்த எதையும் கர்வத்துடன் சொல்ல மாட்டார்கள்.(17) இராமா, உலகில் விவேகமும், கண்ணியமுமற்ற, அற்ப க்ஷத்ரியர்களே நீ பிதற்றுவதைப் போல அர்த்தமில்லாத பெருமை பேசுவார்கள்.(18) சமரில், அதுவும் மிருத்யு {மரணம்} வருங்காலத்தில், எந்த வீரனும் தன் குலம் குறித்துப் பேசமாட்டான். அந்நேரத்தில் தேவையில்லாமல் தன்னைத் தானே எவன் புகழ்ந்து கொள்வான்?(19) 

அக்னியில் உள்ள குசப்புல்லானது, புடம்போட்ட சுவர்ண ரூபத்தில் தெரிவதைப் போல தற்புகழ்ச்சி செய்து கொண்டு எல்லா வகையிலும் உன் லகுத்வத்தையே {அற்பத்தனத்தையே} நீ வெளிப்படுத்துகிறாய்.(20) கதை {கதாயுதம்} தரித்து இங்கே நிற்கும் என்னை, தாதுக்களால் மறைக்கப்பட்டு, தரணியைத் தாங்கும் பர்வதத்தைப் போல அசைக்கப்பட முடியாதவனாக நீ காணவில்லை இல்லையா?(21) மூவுலகங்களுக்கும் பாசஹஸ்தனான அந்தகனை {மூவுலக உயிரினங்களின் உயிரையும், தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் பறிக்கும் யமனைப்} போல கதாபாணியான நானே ரணத்தில் {போரில்} உன் பிராணனை அழிக்க வல்லவன்.(22) உன்னிடம் சொல்வதற்கு உண்மையில் நிறைய இருக்கின்றன. எனினும் நான் சொல்லப் போவதில்லை. சவிதன் {சூரியன்} அஸ்தமனமாகிறான். யுத்தத்திற்கு விக்னம் நேரலாகாது {இடையூறு உண்டாகலாகாது}.(23) பதினான்காயிரம் ராக்ஷசர்களை நீ கொன்றிருக்கிறாய். உன்னை முற்றாக அழித்துவிட்டு இன்றே அவர்களால் உண்டான கண்ணீரை நான் துடைக்கப் போகிறேன்" {என்றான் கரன்}.(24)

பரம அங்கதங்களுடன் கூடிய {சிறந்த தோள்வளைகளை அணிந்திருந்த} கரன், இவ்வாறு சொல்லிவிட்டு, பரம குரோதம் அடைந்து, அசனியை {இடியைப்} போல ஒளிரும் அந்த கதையை {கதாயுதத்தை} ராமன் மீது வீசினான்.(25) கரனின் கைகளில் இருந்து ஏவப்பட்டதும், ஒளிமிக்கதுமான அந்த மஹத்தான கதை, விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்} ஆகியவற்றை பஸ்மமாக்கிவிட்டு {சாம்பலாக்கிவிட்டு} அவனது சமீபத்தை அடைந்தது.(26) இராமன், தன்னை நோக்கி வருவதும், மிருத்யுபாசத்திற்கு ஒப்பானதுமான அந்த மஹத்தான கதை, அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} வந்து கொண்டு இருக்கும்போதே சரங்களால் துண்டுகளாக வெட்டினான்.(27) மந்திர ஔஷதங்களின் {மூலிகைகளில்} பலத்தால் வீழ்த்தப்பட்ட வியாளியை {பெண்பாம்பைப்} போல, சரங்களால் பிளக்கப்பட்ட அந்த கதையானது, முற்றிலும் நொறுங்கி தரணீதலத்தில் விழுந்தது.(28)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Tuesday, 21 March 2023

இராமகர்மம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 28 (33)

The deed of Rama | Aranya-Kanda-Sarga-28 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கும், கரனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கரன்; தேவர்களும், முனிவர்களும் ராமனின் செயலைக் கொண்டாடியது...

Khara's chariot destroyed by Rama

போரில் தூஷணனும், திரிசிரஸும் கொல்லப்பட்டதைக் கண்டும், ராமனின் விக்கிரமத்தை {ஆற்றல்வீரத்தைக்} கண்டும் கரன் அச்சமடைந்தான்.(1) அந்தக் கரன், எதிர்க்கப்பட முடியாத மஹாபலமுள்ள ராக்ஷச சைனியமும், திரிசிரஸ், தூஷணன் ஆகியோரும் ராமன் ஒருவனாலேயே அழிந்ததைக் கண்டு,{2} அந்த ராக்ஷச பலம் {படை} முற்றிலும் அழிந்ததைக் கவனித்து மனம் வருந்தி, இந்திரனை நோக்கிச் சென்ற நமுசியைப் போல ராமனை நெருங்கினான்.(2,3) 

கரன், வில்லை வலுவுடன் வளைத்து, விஷமிக்க பாம்பைப் போன்று சீற்றமிக்கவையும், ரத்தத்தையே போஜனமாக {தங்கள் உணவாகக்} கொண்டவையுமான நாராசங்களை {இரும்புக் கணைகளை} ராமனின் மீது ஏவினான்.(4) இரதத்தில் இருந்த கரன், தன் சிக்ஷையால் {பயிற்சியால்} நாண்கயிற்றைச் சுண்டி, சஸ்திரங்களை {ஆயுதங்களை} அசைத்து சமரில் சரங்களுடன் பல்வேறு மார்க்கங்களில் திரிந்தான் {பலவிதமான கதிகளைச் செய்து காட்டினான்}.(5)  மஹாரதனானவன் {கரன்}, சர்வ திசைகளையும், உபதிசைகளையும் பாணங்களால் பூர்ணமாக நிரப்பினான். இராமனும் அவனைப் பார்த்து அதிமஹத்தான தனுவை முழுமையாக வளைத்து,{6} பர்ஜன்யன் {மேகதேவன்} மழைத்தாரைகளால் மறைப்பதைப் போல அக்னிப் பொறிகளுடன் கூடிய, {நெருப்பு போன்று} சகிக்க முடியாத சாயகங்களால் நாபத்தை {பாணங்களால் ஆகாயத்தை} இடைவெளியற்றதாகச் செய்தான்.(6,7) கரனும், ராமனும் ஏவிய கூர்மையான பாணங்களால் அந்த ஆகாசத்தைச் சுற்றிலும் இடைவெளியின்றி எங்கும் சர மயமானது.(8) 

ஒருவரையொருவர் வதம் செய்யும் ஆவலில் இருவரும் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சர ஜாலத்தால் {அம்புவலையால்} மறைக்கப்பட்டு சூரியன் பிரகாசித்தானில்லை.(9) அப்போது கரன், தோமரத்தால் மஹாதிவிபத்தை {ஈட்டியால் பெரும் யானையைக்} குத்துவதைப் போல அந்தப் போரில் நாளீகங்கள், நாராசங்கள், கூரிய முனைகளைக் கொண்ட விகர்ணிகள் ஆகியவற்றால் ராமனைத் தாக்கினான்.(10) இரதத்தில் தனுஷ்பாணியாக நின்ற அந்த ராக்ஷசன் {கரன்}, சர்வ பூதங்களுக்கும் பாசஹஸ்தனான அந்தகனை {அனைத்து உயிரினங்களுக்கும் பாசக்கயிற்றுடன் கூடிய யமனைப்} போலத் தெரிந்தான்.(11)

சர்வ சைனியத்தையும் ஆண்மையுடன் சளைக்காமல் அழித்த பெரும் வலிமைமிக்க ராமன் இப்போது முழுமையாக சோர்வடைந்திருப்பதாகக் கரன் கருதினான்.(12) சிங்கத்திற்கு ஒப்பான பராக்கிரமத்தையும், சிங்கத்தின் நடையையும் கொண்டவனை {கரனைக்} கண்ட ராமன், அற்ப மிருகத்தைக் கண்ட சிங்கத்தைப் போல கலங்காதிருந்தான்.(13)  பிறகு கரன், சூரியனைப் போலப் பிரகாசிக்கும் மகத்தான ரதத்தில் ஏறி, பாவகனை அடையும் பதங்கத்தை {அக்னியை அடையும் அந்துப்பூச்சியைப்} போல ராமனை நோக்கிச் சென்றான்.(14) 

அப்போது ஹஸ்த லாகவத்தை {கைகளின் நளினத்தை} வெளிப்படுத்திய கரன், மஹாத்மாவான அந்த ராமனின் சரம்பூட்டிய வில்லைக் கைப்பிடியில் முறித்தான்.(15) இன்னும் கோபமடைந்தவன் {கரன்}, சக்ரனின் இடிக்கு {இந்திரனின் வஜ்ரத்திற்கு} ஒப்பான பிரகாசத்துடன் கூடிய ஏழு சரங்களை எடுத்து {ராமனின்} போர்க்கவசத்தைத் தாக்கினான்.(16) பிறகு கரன், ஒப்பற்ற வலிமை கொண்ட ராமனின் மீது ஆயிரம் சரங்களை ஏவித் துன்புறுத்தி அந்த சமரில் மஹாநாதம் செய்தான்.(17) பிறகு கரன், நல்ல கணுக்களை உடைய பாணங்களை ஏவியபோது, ஆதித்தியனின் பிரகாசத்தைக் கொண்ட ராமனின் கவசம் முற்றாக அழிந்து பூமியில் விழுந்தது.(18) 

அங்கங்கள் அனைத்திலும் சரங்களால் தாக்கப்பட்ட அந்த ராகவ ராமன், குரோதமடைந்து புகையின்றி எரியும் அக்னியைப் போன்ற சீற்றத்துடன் அந்த சமரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19) அப்போது, சத்ருக்களை அழிப்பவனான ராமன், கம்பீர முழக்கம் செய்யும் மற்றொரு மஹத்தான தனுவை எடுத்து, பகைவனை அழிப்பதற்காக அதில் நாணேற்றினான்.(20) பிறகு, மஹரிஷியால் {அகஸ்தியரால்} வெகுமதியாக அளிக்கப்பட்டதும், சிறந்ததுமான அந்த மஹத்தான வைஷ்ண தனுவை உயர்த்தியபடியே கரனை நோக்கி விரைந்து சென்றான்[1].(21) அப்போது குரோதத்துடன் கூடிய ராமன், கனக புங்கங்களுடனும் {தங்க இறகுகளுடனும்}, வளைந்த முனைகளுடன் கூடிய சரங்களால் சமரில் அந்தக் கரனின் துவஜத்தை வெட்டி வீழ்த்தினான்.(22) காண்பதற்கு இனிய அந்த காஞ்சனத்வஜம் {கொடிமரம்}, தேவதைகளின் ஆணையால் தரணியில் இறங்கிய சூரியனைப் போலச் சிதறி விழுந்தது.(23)

[1] இங்கே கம்பராமாயணத்தில், "இராமன் வில்லொடிந்து நின்றதும், ஆகாயாத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வருணன் ஒரு வில்லை அளித்தான்" என்றிருக்கிறது. அது பின்வருமாறு:

என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான்
மன்னன் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான்.
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தடக்கையில் அத்துணை
பண்டு போர் மழுவாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன்.

- கம்பராமாயணம் 3051, 3052ம் பாடல்கள், கரன் வதைப்படலம்

பொருள்: {அவ்வாறு அந்த வில் ஒடிந்த} மாத்திரத்தில் மன்னர்மன்னன் தசரதனின் மகனான ராமன், தான் ஏந்திய கார்முகம் {வில்} துண்டிக்கப்படவும், தனித்திருப்பதை சிந்தியாமல், மரபின்படி தன் நீண்ட கையைப் பின்புறம் நீட்டினான்.(3051) வருணதேவன் இதைக் கண்டு நின்று, அதன் கருத்தை உணர்ந்து, பண்டைய போர்க் கோடரியைக் கொண்டவனிடமிருந்து {பரசுராமரிடமிருந்து} உரிமையால் பெற்றுக்கொண்ட {வைஷ்ணவ} வில்லை, தேவர்களின் தலைவனான ராமனின் நெடுங்கையிலே கொடுத்தான்.(3052)

சினங்கொண்டவனும், மர்மங்களை {யுக்திகளை} அறிந்தவனுமான கரன், தோமரத்தால் மாதங்கத்தை {ஈட்டியால் யானையைக்} குத்துவதைப் போல, நான்கு கணைகளால் ராமனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்த ராமன், கரனின் கார்முகத்திலிருந்து {வில்லில் இருந்து} ஏவப்பட்ட பல்வேறு பாணங்களால் காயமடைந்து, உதிரத்தால் நனைந்த அங்கங்களுடன் கடும் எரிச்சலடைந்தான்.(25) தன்விகளில் {வில்லாளிகளில்} சிறந்தவனும், பரம வில்லைக் கொண்டவனுமான அவன் {ராமன்}, அந்தப் பெரும்போரில் தன் தனுவை எடுத்து, இலக்கை நோக்கி குறி பார்த்து, ஆறு சரங்களை ஏவினான்.(26) ஒரு பாணத்தால் சிரஸையும், அடுத்த இரண்டால் கைகளையும் தாக்கினான். அதற்கடுத்து மூன்று அர்த்தச்சந்திர பாணங்களால் மார்பைத் தாக்கினான்.(27) பிறகு குரோதமடைந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, அந்த ராக்ஷசனைக் கொல்வதற்காக, பாஸ்கரனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று நாராசங்களை எடுத்தான்.(28)

சமரில் இந்திரனுக்கு சமமான பலவானான ராமன், சிரித்துக் கொண்டே அந்தப் போரில் ஒன்றால் அவனது ரதத்தின் யுகத்தையும் {ஒரு பாணத்தால் கரனின் தேரின் நுகத்தடியையும்}, நான்கால் அவனது குதிரைகளையும் தாக்கினான். ஆறால் கரனின் சாரதியுடைய சிரத்தையும் {தலையையும்}, மூன்றால் திரிவேணுவையும் {ஏர்க்காலையும்}, இரண்டால் {அந்தத் தேரின்} அச்சையும் வெட்டி வீழ்த்தினான். பிறகு, பனிரெண்டு பாணங்களால் சரம்பூட்டப்பட்ட கரனின் தனுவை முறித்தான். அந்த மஹாபலன் {ராமன்}, வஜ்ரத்துக்கு ஒப்பான பதிமூன்றால் {பதிமூன்று பாணங்களால்} கரனைத் துளைத்தான்.(29-31) தனு முறிந்தது, ரதம் அழிந்தது, அசுவங்கள் கொல்லப்பட்டன, சாரதியும் கொல்லப்பட்டான். அப்போது கீழ குதித்த கரன் கதாபாணியாக பூமியில் நின்றான்.(32) 

விமானங்களில் இருந்த தேவர்களும், மஹரிஷிகளின் கூட்டமும் ஒன்றாக சேர்ந்து, பெரும் மகிழ்ச்சியடைந்து, கைகளைக் கூப்பிக் கொண்டு மஹாரதனான ராமனின் அந்தக் கர்மத்தைப் பூஜித்தனர்.(33)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

திரிசிர வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 27 (20)

Trishira killed | Aranya-Kanda-Sarga-27 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: திரிசிரனுடன் போரிட்ட ராமன்; திரிசிரனின் மரணம்...

Rama slays the demon Trishiras

திரிசிரஸ் என்ற பெயரைக் கொண்டவனும், வாஹினிபதியுமான {படைத்தலைவனுமான} ராக்ஷசன், இராமனை நோக்கிச் செல்லும் கரனுக்குக் குறுக்கில் வந்து இதைச் சொன்னான்:(1) "விக்ராந்தரே {வெற்றியாளரே}, சாஹஸத்தைவிட்டு {இந்தத் துணிச்சலை விட்டு} விலகுவீராக. இப்பணியில் என்னை ஈடுபடுத்துவீராக. மஹாபாஹுவான ராமன் போரில் வீழ்வதைப் பார்ப்பீராக.(2) நான் உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். சர்வ ராக்ஷசர்களின் நிமித்தம் {அல்லது ராக்ஷசர்கள் அனைவராலும்} வதம் செய்யப்படத் தகுந்தவனான ராமனை வதம் செய்யும் விருப்பத்துடன் ஆயுதத்தைத் தீண்டுகிறேன்.(3) இரண உற்சாகத்தில் {போரிடும் ஆவலில்} இருந்து விலகுவீராக. போரில் நான் அவனுக்கு மிருத்யு ஆவதையோ, சமரில் அவன் எனக்கு அவ்வாறு ஆவதையோ ஒரு முஹூர்த்த காலம் {ஒரு கணம்} சாட்சியாக {நடுவராகக்}  காண்பீராக.(4) இராமன் கொல்லப்பட்டால் பெரும்மகிழ்ச்சியுடன் ஜனஸ்தானத்திற்குத் திரும்புவீராக. ஒருவேளை நான் கொல்லப்பட்டால், ராமனுடன் போரிட நீர் முயல்வீராக" என்றான் {திரிசிரன்}.(5)

மிருத்யு லோபத்தால் {மரணத்தை அடையும் ஆவலுடன் கூடிய} அந்த திரிசிரஸ், கரனை சமாதானம் செய்துவிட்டு, "யுத்தமிடச் செல்" என்று இவ்வாறு அனுமதியைப் பெற்றுக் கொண்டு ராகவனை எதிர்த்துச் சென்றான்.(6) ஆடம்பர ரதத்தில் குதிரைகளைப் பூட்டிக் கொண்ட திரிசிரஸ், திரிசிருங்க பர்வதம் போல {மூன்று சிகரங்களைக் கொண்ட மலையைப் போல} போரில் ராமனிடம் விரைந்து சென்றான்.(7) மஹாமேகத்தைப் போன்றவனான அவன், சரத்தாரைகளின் கூட்டத்தை {திரளான அம்புகளின் ஓடையை} ஏவி, ஜலத்தில் நனைந்து ஈரமான துந்துபியைப் போன்ற ஒலியை எழுப்பினான் {முழக்கமிட்டான்}.(8) 

இராக்ஷசன் திரிசிரஸ் வருவதைக் கண்ட ராகவன், கூரிய சாயகங்களை {அம்புகளை} ஏவி தனுசால் அவனை வரவேற்றான்.(9) அதிபலவான்களான ராமனுக்கும், திரிசிரஸுக்கும் இடையில் மூண்ட அந்த யுத்தம், சிங்கத்திற்கும், யானைக்கும் இடையில் நடப்பதைப் போன்று ஆரவாரமிக்கதாக இருந்தது.(10) பின்னர், திரிசிரஸ், மூன்று பாணங்களை ஏவி நெற்றியில் தாக்கியபோது, பொறுத்துக் கொள்ள முடியாமல் சினங்கொண்ட ராமன் உக்கிரமாக இதைச் சொன்னான்:(11) "அஹோ விக்ரம சூரா, புஷ்பங்களைப் போன்ற சரங்களால் நெற்றியில் நான் தாக்கப்பட்டேன். ராக்ஷச பலம் இதுதானா?(12) என் வில்லின் நாண்கயிற்றில் இருந்து பாயும் சரங்களை இனி நீ ஏற்றுக் கொள்வாயாக" என்று சொன்னான்.

பிறகு அவன் {ராமன்}, அளவு கடந்த குரோதத்துடன், விஷங்கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான பதினான்கு சரங்களால் திரிசிரஸின் மார்பைத் தாக்கினான்.(13,14அ) அந்த தேஜஸ்வி {வலிமைமிக்கவனான ராமன்}, கொக்கி போன்று வளைந்த முனைகளுடன் கூடியதும், நேராகச் செல்லக்கூடியதுமான நான்கு சரங்களால், வேகமாகச் செல்லக்கூடிய அவனது {திரிசிரனின்} நான்கு குதிரைகளை வீழ்த்தினான்.(14ஆ,15அ) பிறகு எட்டு சாயகங்களால் ரதத்தின் இருக்கையில் {தேர்த்தட்டில்} இருந்து சூதனை வீழ்த்திய ராமன், ஒரு பாணத்தால் அவனது {திரிசிரனின்} உயர்ந்த துவஜத்தை வெட்டித் தள்ளினான்[1].(15ஆ,16அ)

[1] தேர் அழிந்து அவ்வழி திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழிக்
கார் இழிந்தாலென கணை வழங்கினான்.

- கம்பராமாயணம் 3005ம் பாடல், கரன் வதைப்படலம்

பொருள்: அங்கே தன் தேர் அழிந்து திரிசிரஸ் என்ற தன் பெயர் அழிந்ததெனினும் வீரம் நீங்காமல், ஆகாயத்திலிருந்து மேகங்கள் பொழிவதைப் போல, நீளம் குறைந்த அம்புகளை வெளியிடும் வில்லிலிருந்து  கணை மழையைப் பொழிந்தான்.

நொறுங்கிய ரதத்தில் இருந்து அந்த நிசாசரன் {இரவுலாவியான திரிசிரஸ்} எழுந்தபோது, பாணங்களைச் செலுத்தி ஹிருதயத்தைப் பிளந்து அவனை அசைவற்றவனாக்கினான்.(16ஆ,17அ) மதிப்பிட முடியாத ஆத்மாவைக் கொண்டவனும், எரிச்சலடைந்தவனுமான அவன் {ராமன்}, வேகமாகச் செல்லக்கூடிய கூரிய சாயகங்கள் மூன்றினால் அந்த ராக்ஷசனின் மூன்று சிரங்களையும் {தலைகளையும்} வீழ்த்தினான்.(17ஆ,18அ) இராமபாணத்தால் பீடிக்கப்பட்ட அந்த நிசாசரன் {திரிசிரஸ்}, புகையும், ரத்தமும் கக்கியபடியே ஏற்கனவே விழுந்த சிரங்களுடன் சேர்ந்து விழுந்தான்[2].(18ஆ,19அ)

[2] கம்பராமாயணத்தில் முதலில் இந்த திரிசிரஸே  வீழ்கிறான். பிறகுதான் தூஷணன் வீழ்வதாக வருகிறது.

அப்போது கரனிடம் தஞ்சமடைந்து கொல்லப்பட்டவர்களைத் தவிர எஞ்சிய ராக்ஷசர்கள், வியாகரத்திற்கு அஞ்சும் மிருகங்களை {புலிக்குப் பயந்தோடும் மான்களைப்} போல நிற்காமல் ஓடினர்.(19ஆ,20அ) இவ்வாறு ஓடுபவர்களைக் கண்டு கோபமடைந்த கரன், துரிதமாக அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டு, சந்திரனை நோக்கிச் செல்லும் ராஹுவைப் போல ராமனை எதிர்த்துச் சென்றான்.(20ஆ,இ)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Monday, 20 March 2023

தூஷண வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 26 (38)

Dushana killed | Aranya-Kanda-Sarga-26 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுடன் உண்டான கடும்போரில் தூஷணனும், அவனது படைத்தலைவர்களும் கொல்லப்பட்டது; அழிவை அடைந்த ராக்ஷசப் படை...

Rama fights with Khara and Dushana

மஹாபாஹுவான {பெருங்கைகளைக் கொண்ட} தூஷணன், தன் சைனியம் கொல்லப்படுவதைக் கண்டு, பீமவேகம் {பயங்கர வேகம்} கொண்டவர்களும், நிசாசரர்களும் {இரவுலாவிகளும்}, சமரில் பின்வாங்காதவர்களுமான ஐயாயிரம் ராக்ஷசர்களை ஏவினான்.(1,2அ) அவர்கள், சூலங்கள், பட்டிசங்கள், கட்கங்கள் ஆகியவற்றையும், சிலாவர்ஷத்தையும் {பாறை மழையையும்}, மரங்கள் மற்றும் சரவர்ஷத்தையும் {மர, சரமாரியையும்} இடையறாமல் பொழிந்து அவனை {ராமனை} முழுமையாக மறைத்தனர்.(2ஆ,3அ) 

தர்மாத்மாவான ராகவன், பிராணனைப் பறிக்க வல்லவையும், மஹத்தானவையுமான அந்த மரமாரியையும், சிலாமாரியையும் நெருப்பு போன்ற சாயகங்களால் {மரத்தாலான மழையையும், பாறைகளாலான மழையையும் கூர்மையான அம்புகளால்} எதிர்கொண்டான்.(3ஆ,4அ) இராமன், மழையில் கண்களை மூடிக் கொள்ளும் ரிஷபத்தை {காளையைப்} போல {பொறுமையாக தாக்குதல்களைப் பொறுத்துக் கொண்டு} அந்த ராக்ஷசர்கள் அனைவரின் வதத்திற்காக பரம குரோதமடைந்தான்.(4ஆ,5அ) தேஜஸ்ஸில் எரிவதைப் போன்ற குரோதத்துடன் நீடித்தவன் {ராமன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தூஷணன் மீதும், அவனது சைனியத்தின் மீதும் சரங்களை ஏவினான்.(5ஆ,6அ)

சேனாதிபதியும், சத்ருதூஷணனுமான {பகைவரை நிந்திப்பவனுமான} அந்த தூஷணன், குரோதத்துடன் இடிக்கு ஒப்பான சரங்களால் அப்போது அந்த ராகவனைத் தாக்கினான்.(6ஆ,7அ) சமரில் வீரனான ராமன், ஒரு க்ஷுரேணத்தால் {அம்பால்} அவனது மஹத்தான தனுவையும், நான்கால் {நான்கு அம்புகளால்} நான்கு அசுவங்களையும் {குதிரைகளையும்} குரோதத்துடன் வெட்டி வீழ்த்தினான்.(7ஆ,8அ) கூரிய சரங்களால் அந்த அசுவங்களைக் கொன்றபிறகு, அர்த்தசந்திர பாணத்தால் சாரதியின் சிரத்தை வாங்கி, மூன்றால் அந்த ராக்ஷசனின் {தூஷணனின்} மார்பையும் தாக்கினான்.(8ஆ,9அ) 

தனு முறிந்து, ரதம் ஒழிந்து, அசுவம் கொல்லப்பட்டு, சாரதியும் கொல்லப்பட்டவன் {தூஷணன்}, கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} நிகரானதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், காஞ்சனப் பட்டைகளால் {பொன்கட்டுகளால்} கட்டப்பட்டதும், தேவ சைனியத்தையே தாக்கவல்லதும், கூரான இரும்பு ஆணிகளால் மறைக்கப்பட்டதும், பகைவரின் கொழுப்பில் தோய்ந்ததும், வஜ்ரத்தையும், இடியையும் நிகர்த்த ஸ்பரிசங் கொண்டதும், அந்நியர்களின் கோபுரங்களைப் பிளக்கவல்லதுமான பரிகம் ஒன்றை எடுத்தான்.(9ஆ-11) குரூர கர்மம் செய்பவனும் {கொடுஞ்செயல் புரிபவனும்}, நிசாசரனுமான {இரவுலாவியுமான} அந்த தூஷணன், போரில் மஹா உரகத்திற்கு {பாம்புக்கு} ஒப்பான அந்த பரிகத்தை எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(12)

அந்த ராகவன், தன்னை நோக்கிவந்து கொண்டிருந்தவனும், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்த தூஷணனின் கைகளை இரண்டு சரங்களால் வெட்டினான்.(13) போர்முனையில் கைகள் வெட்டப்பட்ட அவனது பேருடலில் இருந்து, சக்ரத்வஜம் போல {இந்திரனின் கொடியைப் போல} அந்தப் பரிகம் நழுவி முன்னே விழுந்தது.(14) கைகள் வெட்டப்பட்ட தூஷணன், தந்தங்கள் முறிக்கப்பட்ட செருக்கு நிறைந்த மஹாகஜத்தைப் போலப் புவியில் விழுந்தான்.(15) போரில் வீழ்த்தப்பட்டு பூமியில் விழுந்த தூஷணனைக் கண்ட சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்}, "சாது, சாது இதி {நல்லது, இது நல்லது}" என்று சொல்லி அந்தக் காகுத்ஸ்தனை {ராமனைப்} பூஜித்தன[1].(16)

[1] தேவர்கள் அர்த்து எழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க்கடல் முழக்கு என ஓங்க
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று
ஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான்.

- கம்பராமாயணம் 3035ம் பாடல், கரன் வதைப் படலம்

பொருள்: தேவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ய, திசையெங்கும் முனிவர்கள் ஆரவாரம் செய்ய, ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஒலி கரிய கடலின் முழக்கம் போல் ஓங்க, "நீ வல்லமையுள்ளவனென்றால் இதைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்" என்று சொல்லி, கணை ஒன்றை ஏவினான் {இராமன்}. அவன் {தூஷணன்}, கோர தந்தங்களைக் கொண்ட தன் பெரிய தலையை இழந்தான்.

இதற்கிடையில், குரோதம் நிறைந்தவர்களும், சேனைத் தலைவர்களுமான மஹாகபாலன், ஸ்தூலாக்ஷன், மஹாபலனான பிரமாதி ஆகிய மூவரும், மிருத்யு பாசத்தால் {யமனின் சுருக்குக்கயிற்றால்} கட்டப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து ராமனை நோக்கி விரைந்தனர்.(17,18அ) மஹாகபாலன் நீளமான சூலத்தை உயர்த்திக் கொண்டும், ராக்ஷசன் ஸ்தூலாக்ஷன் பட்டிசத்தை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொண்டும், பிரமாதி பரசுடனும் {கோடரியுடனும்} விரைந்தனர்.(18ஆ,19அ) எதிர்த்து வரும் அவர்கள் தன்னை நெருங்கி விட்டதைக் கண்ட ராமன், அகாலத்தில் வந்த அதிதிகளை {விருந்தினர்களைப்} போல அவர்களை கூர்த்தீட்டப்பட்ட முனைகளுடன் கூடிய சாயகங்களால் {பாணங்களால்} வரவேற்றான்.(19ஆ,20அ) 

அந்த ரகுநந்தனன் {ராமன்}, மஹாகபாலனின் சிரத்தை {தலையை} வெட்டித் தள்ளிவிட்டு, இன்னும் கணக்கற்ற சரங்களால் பிரமாதியை நிர்மூலமாக்கினான்.{20ஆ,21அ} ஸ்தூலாக்ஷனின் தடித்த கண்களைக் கூரிய சாயகங்களால் {அம்புகளால்} நிரப்பினான். க்ஷணப் பொழுதில் கொல்லப்பட்ட அவன் {ஸ்தூலாக்ஷன்} கிளைகளுடன் கூடிய பெரும் மரம் ஒன்றைப் போல பூமியில் விழுந்தான்.{21ஆ,22அ} சினங்கொண்டவனான அவன் {ராமன்}, தூஷணனைப் பின்தொடர்ந்து வந்த ஐயாயிரம் பேரையும், ஐயாயிரம் சரங்களால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(20ஆ-23அ) 

தூஷணனும், அவனைப் பின்தொடர்ந்தவர்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதமடைந்த கரன், மஹாபலவான்களான தன் சேனை அதிகாரிகளிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்:(23ஆ,24அ) "இந்த தூஷணன், தன்னைப் பின்தொடர்ந்து சென்றவர்களுடன் சேர்ந்து போரில் கொல்லப்பட்டான். சர்வ ராக்ஷசர்களும் மஹத்தான சேனையுடன் சென்று யுத்தத்தில் நானாவித வடிவமைப்புகளுடன் கூடிய சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கொண்டு தீய மானுஷனாம் ராமனைக் கொல்வீராக" {என்றான் கரன்}.(24ஆ,25)

இவ்வாறு சொன்ன கரன், குரோதத்துடன் ராமனை நோக்கி விரைந்து சென்றான். சியேனகாமி, பிருதுக்ரீவன், யஜ்ஞசத்ரு, விஹங்கமன்,{26} துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், காலகார்முகன், ஹேமமாலி {மேகமாலி}, மஹாமாலி, ஸர்பாஸ்யன், ருதிராசனன்{27} என்ற மஹாவீரர்களான பன்னிரெண்டு படை அதிகாரிகள்[2] அந்த சைனியத்துடன் சேர்ந்து உத்தம சரங்களை ஏவியபடியே ராமனை நோக்கி விரைந்து சென்றனர்.(26-28) அப்போது அந்த தேஜஸ்வி {ராமன்}, எஞ்சியிருக்கும் அந்த சைனியத்தை, பாவகனை {அக்னியைப்} போன்றவையும், ஹேம வஜ்ரங்களால் {தங்கம், வைரங்களால்} அலங்கரிக்கப்பட்டவையுமான சாயகங்களால் {கணைகளால்} வதைத்தான்.(29) ருக்ம புங்கத்துடன் கூடியவையும் {தங்கத்தாலான கட்டுகளைக் கொண்டவையும்}, புகையுடன் கூடிய அக்னியைப் போல ஒளிர்பவையுமான அந்தக் கூரியவை {பாணங்கள்}, பெரும் மரங்களை {வீழ்த்தும்} வஜ்ரத்தைப் போல அந்த ராக்ஷசர்களை வீழ்த்தின.(30)

[2] இந்த ராக்ஷசர்களின் பெயர்களும், இந்த சர்க்கத்தின் 17 முதல் 20ம் சுலோகம் வரை சொல்லப்பட்ட மூவரின் பெயர்களும் ஏற்கனவே ஆரண்ய காண்டம் 23ம் சர்க்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

போர்முனையில் ராமன், நூறு ராக்ஷசர்களை நூறு கர்ணிகளாலும் {கணைகளாலும்}, ஆயிரம்பேரை ஆயிரத்தாலும் {பாணங்களாலும்} தாக்கினான்.(31) அவற்றால் {அந்தக் கர்ணிகளால்}, கவசங்களும், ஆபரணங்களும் உடைந்து, சரங்களும், விற்களும் சின்னாபின்னமாகி, ரத்தத்தால் பூசப்பட்டவர்களாக அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} தரணியில் விழுந்தனர்.(32) கேசம் தளர்ந்து {தலைமயிர் அவிழ்ந்து}, ரத்தம் பெருக சமரில் விழுந்து கிடந்த அவர்களால் வசுதை {பூமி} முற்றும் குசப் புற்கள் பரவிய விஸ்தீரணமான மஹாவேதியை {பெரும் யாகசாலையைப்} போலிருந்தது.(33) கொல்லப்பட்ட ராக்ஷசர்களுடன் கூடிய அந்த வனம், மாமிசமும், ரத்தமும் கலந்த சேற்றுடன், க்ஷணப்பொழுதில் நரகத்திற்கு ஒப்பாக மஹா கோரமானது.(34) 

பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவர்களான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், மானுஷனும், பதாதியுமான {காலாட்படை வீரனுமான} ராமன் ஒருவனாலேயே கொல்லப்பட்டனர்.(35) அந்த சைனியம் மொத்தத்திலும் மஹாரதனான கரனைத் தவிர, ராக்ஷசன் திரிசிரஸும், {மற்றபடி} ரிபுசூதனனான {பகைவரைக் கொல்பவனான} ராமனும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.(36) மஹாவீர்யவான்களும், கோரமானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ராக்ஷசர்கள் அனைவரும் அந்த லக்ஷ்மணாக்ரஜனால் ரணமூர்த்தத்தில் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனால் போர்முனையில்} இவ்வாறே கொல்லப்பட்டனர்.(37) அப்போது கரன், அந்தப் பெரும்போரில் பலவனான ராமனால் அந்த பயங்கரப் படை அழிக்கப்பட்டதைக் கண்டு, அசனியை {இடியை / வஜ்ரத்தை} உயர்த்திய இந்திரனைப் போல அங்கிருந்த மஹத்தான ரதத்தில் ஏறிக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(38)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Sunday, 19 March 2023

பார்மகள் நெளிவுற | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 25 (47)

Goddess Earth made to twitch | Aranya-Kanda-Sarga-25 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கரனும், அவனது படையும் ராமனைத் தாக்கியது; பதில் தாக்குதல் தொடுத்து ராக்ஷசர்களைக் கொன்ற ராமன்...

Rama Fights Khara Dushana Demons army

முன் செல்பவர்களுடன் கூடிய கரன், அந்த ஆசிரமத்தை அடைந்ததும், பகைவரைக் கொல்பவனான அந்த ராமன் கைகளில் தனுவை ஏந்தி குரோதத்துடன் இருப்பதைக் கண்டான்.(1)  அவனைக் கண்ட கரன், நாண்பொருத்தப்பட்ட வில்லை உயர்த்தி, "இராமனின் எதிரில் செல்வாயாக" என்று சூதனிடம் {சாரதியிடம்} சொன்னான்.(2) அந்த சூதனும், கரனின் ஆணையின் பேரில், மஹாபாஹுவும், தனியாக நின்று தன் தனுவை அசைத்துக் கொண்டிருந்தவனுமான ராமன் நிற்கும் இடத்திற்கு குதிரைகளைச் செலுத்தினான்.(3) இவ்வாறு சென்று கொண்டிருந்தவனைக் {கரனைக்} கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்ற சர்வ ரஜனீசரர்களும் {இரவுலாவிகள் அனைவரும்} மஹாநாதத்துடன் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(4) அந்த யாதுதானர்களுக்கு {ராக்ஷசர்களுக்கு} மத்தியில் ரதத்தில் இருந்த கரன், தாரைகளின் மத்தியில் {நக்ஷத்திரங்களின் நடுவில்} உதிக்கும் லோஹிதாங்கனை {செவ்வாயைப்} போல விளங்கினான்.(5)

அப்போது கரன், ஒப்பற்ற பலவானான ராமனை அந்தப் போரில் ஆயிரக்கணக்கான சரங்களால் தாக்கிவிட்டு மஹாநாதம் செய்தான்.(6) பின்னர் குரோதமுடைய நிசாசரர்கள் {இரவுலாவிகள்} அனைவரும், பயங்கர வில்லாளியும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ராமன் மீது நானாவித சஸ்திரங்களை {ஆயுதங்களைப்} பொழிந்தனர்.(7) ஏற்கனவே கோபத்திலிருந்த ராக்ஷசர்கள் அந்தப் போரில் ராமனை முத்கரங்கள் {உலக்கைகள்}, பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, சூலங்கள், பராசங்கள் {ஈட்டிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, பரசுகள் {கோடாரிகள்} ஆகியவற்றால் தாக்கினர்.(8) நீருண்ட மேகத்திற்கு ஒப்பானவர்களும், மஹாகாயம் {பேருடல்} படைத்தவர்களுமான அந்த மஹாபலவான்கள், யுத்தத்தில் ராமனைக் கொல்ல விரும்பி, ரதங்கள், வாஜிகள் {குதிரைகள்}, பர்வத சிகரங்களுக்கு {மலைச்சிகரங்களுக்கு} ஒப்பான கஜங்கள் {யானைகள்} ஆகியவற்றுடன் அந்தக் காகுத்ஸ்தனை எதிர்த்து விரைந்து சென்றனர்.(9,10அ)

அந்த ராக்ஷச கணங்கள், சைலேந்திரன் {மலைகளின் மன்னனான இமயத்தின்} மீது {மழைத்} தாரைகளைப் பொழியும் மஹா மேகங்களைப் போல இராமன் மீது சரங்களைப் பொழிந்தனர். (10ஆ,11அ) திதிகளில் {குறிப்பிட்ட நாட்களில்} பரிவார கணங்களால் சூழப்பட்ட மஹாதேவனை {சிவனைப்} போலக் குரூரத்தோற்றமுடைய அந்த ராக்ஷசக் கூட்டத்தால் ராமன் சூழப்பட்டிருந்தான்.(11ஆ,12அ) அந்த ராகவன், நதியின் வேகத்தைத் தனதாக்கிக் கொள்ளும் சாகரத்தைப் போல அந்த யாதுதானர்களால் {ராக்ஷசர்களால்} ஏவப்பட்ட சஸ்திரங்களை {ஆயுதங்களைத்} தன் கணைகளால் தடுத்துக் கொண்டிருந்தான்.(12ஆ,13அ) வஜ்ரங்கள் {இடிகள்} பலவற்றால் தாக்கப்பட்டாலும் ஜுவலிக்கும் மஹா அசலத்தை {மேரு மலையைப்} போலவே, கோரமான ஆயுதங்களால் தாக்கப்பட்ட அங்கங்களுடைய ராமனும் சோர்வடைந்தானில்லை.(13ஆ,14அ) இராகவனான {ரகு குலத்தைச் சேர்ந்தவனான} அந்த ராமன், அங்கமெங்கும் காயமடைந்து, ரத்தத்தால் பூசப்பட்டவனாக இருப்பினும், சந்தியா காலத்து மேகங்களால் மறைக்கப்படும் திவாகரனை {சூரியனைப்} போல விளங்கினான்.(14ஆ,15அ)

அப்போது, பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்து தனி ஒருவனைத் தாக்குவதைக் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகள் ஆகியோர் வருத்தமடைந்தனர்.(15ஆ,16அ) பிறகு, கோபமடைந்த ராமன், தன் கார்முகத்தை மண்டலமாகச் செய்து {வில்லை வட்டமாக வளைத்து}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூரிய பாணங்களை ஏவினான்.(16ஆ,17அ) அந்தப் போரில் ராமன், தடுக்க முடியாதவையும், சகிக்க முடியாதவைவும், காலபாசத்திற்கு ஒப்பானவையும், கழுகிறகுடன் கூடியவையும், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டவையுமான பாணங்களை விளையாட்டாக ஏவினான்.(17ஆ,18அ) இவ்வாறு விளையாட்டாக சத்ரு சைனியங்களின் மீது ராமன் ஏவிய அந்தச் சரங்கள், காலனால் வீசப்பட்ட பாசங்களைப் போல, அந்த ராக்ஷசர்களின் பிராணனைப் பறித்தன.(18ஆ,19அ) அந்த சரங்கள் அந்த ராக்ஷசர்களின் தேகங்களைப் பிளந்து, ரத்தத்தில் தோய்ந்தவையாக, கொழுந்து விட்டெரியும் அக்னிக்கு இணையான தேஜஸ்ஸுடன் ஒளிர்பவையாக ஆகாயத்தில் எழுந்தன.(19ஆ,20அ)

இராமனின் சாபமண்டலத்தில் {வட்டமான வில்லில்} இருந்து கணக்கின்றி ஏவப்பட்ட அதி உக்கிரமான கணைகள் அந்த ராக்ஷசர்களின் பிராணனை அபகரித்தபடியே வெளியே விழுந்தன.(20ஆ,21அ) இராமன் அந்தப் போரில், அத்தகைய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி தனுக்களையும் {விற்களையும்}, துவஜங்களின் {கொடிகளின்} துணிகளையும், தோல்களையும் {கவசங்களையும்}, சிரங்களையும் {தலைகளையும்}, ஆபரணங்களணிந்த கைகளையும், கரிகரங்களை {யானைகளின் துதிக்கைகளை} நிகர்த்த தொடைகளையும் அறுத்து எறிந்தான்.(21ஆ-22) இராமபாண குணத்தில் ஏவப்பட்டவை {அந்தக் கணைகள்}, காஞ்சன சேணத்துடன் {தங்க சேணத்துடன்} ரதத்தில் பூட்டப்பட்ட ஹயங்களை {குதிரைகளை} சாரதிகளுடனும், கஜங்களை {யானைகளை} பாகர்களுடனும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்களையும், காலாட்களையும் போரில் கொன்று யமனின் வீட்டிற்கு அனுப்பின.(23,24)

அப்போது அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகளான ராக்ஷசர்கள்}, கூர்முனைகளுடன் கூடிய நாளீகம், நாராசம், விகர்ணி போன்றவற்றால் {போன்ற கணைகளால்} சிதைக்கப்பட்டு, பயங்கரமான குரலில் கதறினார்கள்.(25) இராமன் ஏவிய கூரிய பாணங்களால் மர்மங்கள் {இதயங்கள்} பிளக்கப்பட்டுத் துன்புற்ற அந்த சைனியம், தீயால் தகிக்கும் வறண்ட காட்டைப் போல மகிழ்ச்சியைக் காணாதிருந்தது.(26) பயங்கர பலசாலிகளும், சூரர்களுமான ரஜனீசரர்களில் {இரவுலாவிகளில்} சிலர், பரம குரோதத்துடன் ஈட்டிகள், சூலங்கள், பரசுகள் {கோடரிகள்} ஆகியவற்றை ராமன் மீது ஏவினர்.(27)  மஹாபாஹுவான அந்த வீரியவான் {ராமன்}, போரில் அவர்களின் சஸ்திரங்களைத் தன் பாணங்களால் தடுத்து, அவர்களின் சிரங்களை {தலையை} வெட்டி பிராணனைப் பறித்தான்.(28) சிரம் துண்டிக்கப்பட்டவர்களும், கவசங்கள் அறுக்கப்பட்டவர்களும், விற்கள் வெட்டப்பட்டவர்களுமான அவர்கள் சுபர்ணன் {கருடன்} எழுப்பும் காற்றால் கலக்கமடைந்த மரங்களைப் போல பூமியில் விழுந்தனர்.(29) அதில் எஞ்சிய நிசாசரர்கள் {இரவுலாவிகள், ராமனின்} சரங்களால் தாக்கப்பட்டு, வேதனையடைந்தவர்களாக விரைந்து சென்று கரனிடம் தஞ்சமடைந்தனர்.(30)

அவர்கள் அனைவரையும் தேற்றி, {மீண்டும்} அழைத்துக் கொண்ட தூஷணன், குரோதத்துடன் {ருத்திரனிடம்} விரைந்து செல்லும் அந்தகனை {யமனைப்} போல, தனுவை எடுத்துக் கொண்டு குரோதத்துடன் ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(31) தூஷணனிடம் தஞ்சமடைந்தவர்கள் அனைவரும் பயமின்றி மீண்டும் திரும்பி, சாலம் {ஆச்சா மரம்}, தாலம் {பனைமரம்}, சிலம் {பாறை} ஆகியவற்றை ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றனர்.(32) சூலங்கள், முத்கரங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றைக் கையில் கொண்டவர்களும், பாசங்களை {கயிறுகளைக்} கையில் கொண்டவர்களும், மஹாபலவான்களுமான அந்த ராக்ஷசர்கள், சரமாரிகளையும் {அம்புகளாலான மழையையும்}, சஸ்திரமாரிகளையும் {அயுதங்களாலான மழையையும்}, மரமாரிகளையும் {மரங்களாலான மழையையும்}, சிலாமாரிகளையும் {பாறைகளாலான மழையையும்} அந்தப் போரில் பொழிந்தனர்.(33,34அ) 

இராமனுக்கும், அந்த ராக்ஷசர்களுக்கும் இடையில் மறுமுறை நேர்ந்த அந்த அற்புத யுத்தம், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மஹாகோரமானதாக இருந்தது.(34ஆ,35அ) பெருங்குரோதத்துடன் கூடிய அவர்கள், மீண்டும் ராகவனைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அப்போது அந்த மஹாபலவான் {ராமன்}, சர்வ திசைகளிலும், உபதிசைகளிலும் மீண்டும் தோன்றி சரமாரிகளைப் பொழிந்தபடியே எங்கும் சூழ்ந்திருக்கும் சர்வ ராக்ஷசர்களையும் கண்டு, பைரவ நாதம் {இடிமுழக்கம்} செய்து, அந்த ராக்ஷசர்களை நோக்கி பரம பாஸ்வரம் நிறைந்த {பெரும் பிரகாசத்துடன் கூடிய} காந்தர்வ அஸ்திரத்தை ஏவினான்.(35ஆ-37) அப்போது அந்த சாபமண்டலத்திலிருந்து {வட்டமாக வளைந்திருந்த அந்த வில்லில் இருந்து} ஆயிரக்கணக்கான சரங்கள் வெளிப்பட்டன. ஒன்றுசேர்ந்து வெளிப்பட்ட அந்த பாணங்களால் பத்து திசைகளும் முழுமையாக நிறைந்தன.(38) 

சரங்களால் கோரமாகத் தாக்கப்பட்ட ராக்ஷசர்கள், அந்தச் சரங்கள் எடுக்கப்படுவதையோ, தொடுக்கப்படுவதையோ, அந்த உத்தமச் சரங்கள் விடுக்கப்படுவதையோ கண்டார்களில்லை.(39) சரங்களைக் கக்குபவன் போல ராமன் நின்று கொண்டிருந்த போது, அந்தச் சரங்களால் உண்டான அந்தகாரம் {இருள்}, திவாகரனையும் {சூரியனையும்}, ஆகாசத்தையும் மறைத்தது.(40) ஒரே நேரத்தில் விழுபவர்களாலும், ஒரே நேரத்தில் கொல்லப்பட்டவர்களாலும், ஒரே நேரத்தல் வீழ்ந்தவர்களாலும் வசுதையானது {பூமி} நீள அகலங்களில் முற்றிலும் நிறைந்தது[1].(41) அந்த ராக்ஷசர்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்களாக, விழுந்து கிடப்பவர்களாக, காயமடைந்தவர்களாக, குத்தப்பட்டவர்களாக, சிதறுண்டவர்களாக, பிளவுண்டவர்களாகக் காணப்பட்டனர்.(42)

[1] சொரிந்த பல்படை துணிபட துணிபட சரத்தால்
அரிந்து போந்தன சிந்திட திசை திசை அகற்றி
நெரிந்து பார்மகள் நெளிவுற வனம் முற்றும் நிறைய
விரிந்த செம்மயிர்க் கருந்தலை மலை வீழ்த்தான்.

- கம்பராமாயணம் 2960ம் பாடல், கரன் வதைப் படலம்

பொருள்: {இராக்ஷசர்கள்} பொழிந்த பலவகை ஆயுதங்களையும், பல துண்டுகளாகத் துண்டித்து, சரத்தால் அறுத்துத் தள்ளி, அதற்கு மேலும் வந்தவற்றை திசைகள் அனைத்திலும் சிதறச் செய்து, அகற்றி, பூமாதேவி நெரிந்து அதிக பாரத்தால் நெளியவும் அந்த வனம் முழுவதும் நிறையவும், விரிந்த செம்பட்டை மயிர்களுடையவையும், மலையைப் போன்றவையுமான பெரிய கருந்தலைகளைக் கீழே வீழ்த்தினான்.

அந்தச் சமரில் {போரில்} ராமனுடைய பாணங்களால் வெட்டப்பட்ட தலைப்பாகையுடன் கூடிய தலைகள், துண்டிக்கப்பட்ட தோள்வளைகளுடன் கூடிய புஜங்கள், தொடைகள், முழங்கால்கள், நானாவித ரூபங்களில் எண்ணற்ற ஆபரணங்களை அணிந்த ஹயங்கள் {குதிரைகள்}, முக்கிய துவிபங்கள் {யானைகள்}, பலவாறாய் பிளவுண்ட ரதங்கள், பலவித சாமரங்கள், குடைகள், நானாவித துவஜங்கள், சூலங்கள், பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, துண்டிக்கப்பட்ட கட்கங்கள் {வாள்கள்}, ஈட்டிகள், சிதறிக் கிடக்கும் கோடரிகள், பலவாறாகத் துண்டிக்கப்பட்டப் பலவிதமான பராசங்கள் {கணைகள்}, துகள்களாக்கப்பட்ட பாறைகள் ஆகியவற்றால் நீள அகலங்களில் நிறைந்திருந்த பூமி பயங்கரமானதாகத் தெரிந்தது.(43-46) {எஞ்சியிருந்த} சர்வ ராக்ஷசர்களும், கொல்லப்பட்டவர்களைக் கண்டு, உற்சாகமிழந்து, பகைவரின் தலைநகரைக் கைப்பற்றக்கூடிய ராமனை நோக்கி நகர முடியாதவர்களாக இருந்தனர்.(47)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 25ல் உள்ள சுலோகங்கள்: 47

Previous | Sanskrit | English | Next

Friday, 17 March 2023

அபசகுனங்கள் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 23 (34)

Evil Omens | Aranya-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தீய சகுனங்களைக் கண்ட கரன்; அவற்றைப் பொருட்படுத்தாமல் ராக்ஷசப்படைக்கு உற்சாகமளித்தது...

Khara sees bad omens

கழுதை போன்ற செம்பட்டை நிறத்துடன் கூடிய பெரும் மேகமானது, கொந்தளித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்த அந்த சைனியத்தின் மீது ரத்தம் தோய்ந்த மங்கலமற்ற மழையைப் பொழிந்தது.(1) அவனது {கரனின்} ரதத்தில் பூட்டப்பட்டிருந்த மஹாவேகமுள்ள குதிரைகள், ராஜமார்க்கத்தில், புஷ்பங்கள் நிறைந்த சமமான தேசத்தில் {இடத்தில்} தற்செயலாக இடறி விழுந்தன.(2) சிவந்த முனைகளுடன் கூடிய ஒரு கரிய வட்டம், கொள்ளியைப் போன்ற வட்ட வடிவத்தில் திவாகரனை {சூரியனைச்} சூழ்ந்து கொண்டது.(3) அப்போது, பேருடல் படைத்ததும், பயங்கரமானதுமான கழுகொன்று, உயர்த்தப்பட்டதும் ஹேமதண்டத்துடன் கூடியதும் {தங்கஸ்தம்பமுடையதுமான} துவஜத்தை அணுகி அங்கே அமர்ந்தது.(4) மாமிசங்களை உண்ணும் மிருகங்களும், பக்ஷிகளும் கொடுங்குரலுடன் ஜனஸ்தானத்தின் அருகிலேயே விதவிதமான சுவரங்களில் பலத்த கூச்சல் இட்டன.(5)

கோரமானவையும், பெருங்குரல் படைத்தவையுமான நரிகள் ஒளியூட்டப்படும் {கிழக்குத்} திசையில் அந்த யாதுதானனுக்கு {ராக்ஷசனுக்கு / கரனுக்கு}[1] எதிராக மங்கலமற்ற வகையில் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(6) ரத்த ஜலத்தைத் தரித்த மதங்கொண்ட யானைகளைப் போல {ரத்தஜலத்துடன் சிதறிய மலைகளைப் போல} பயங்கர மேகங்கள் பெரும் நீரைச் சுமந்தவாறே ஆகாயத்தில்  பிரகாசத்துடன் அச்சுறுத்திக் கொண்டிருந்தன.(7) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான கோரமான இருள் சூழ்ந்தது.  திசைகளும், உபதிசைகளும் தெளிவாகத் தெரியவில்லை.(8) அகாலத்தில் நேர்ந்த சந்திப்பொழுது, ரத்தம் நனைந்த பொருள்களுக்கு ஒப்பாக விளங்கியது. அப்போது கோர மிருகங்களும், பறவைகளும் கரனுக்கு எதிரில் இருந்து கூச்சலிட்டன. ஆபத்தை முன்னறிவிக்கும் வகையில் பருந்துகளும், நரிகளும், கழுகுகளும் அலறின.(9,10அ) யுத்தத்தில் எப்போதும் அமங்கலத்தை ஏற்படுத்துபவையும், கோர நிதர்சனத்தை {ஆபத்தை} அறிவிப்பவையும், ஜுவாலையைக் கக்கும் தங்கள் வாய்களுடன் கூடியவையுமான {பெண்} நரிகள், அந்தப் படையின் எதிரில் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(10ஆ,11அ)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் யாதுதானன் என்பதாகும். இது தீய ஆவிகளை அல்லது ராக்ஷசர்களை குறிப்பதாகும்" என்றிருக்கிறது. "யாதுதானன், கசியபர் மற்றும் சுரஸையின் மகனாவான். அவனது பத்து மகன்களும் சூரிய தேவனைப் பின்பற்றும் ராக்ஷசர்களாவர். மஹாபாரதம், அஸ்வமேதபர்வம் பகுதி 8, 6ம் சுலோகத்தில் சிவவழிபாட்டாளர்களாக இந்த யாதுதானர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்" என்று விஸ்டம் லைப்ரரி வலைத்தளத்தில், https://www.wisdomlib.org/definition/yatudhana என்ற சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாஸ்கரனின் {சூரியனின்} அருகில் பரிகம் போன்ற கபந்தம் {தலையற்ற முண்டம்} காணப்பட்டது. கொடியவனும், மஹாகிரஹமுமான சுவர்பானு {ராகு} சூரியனைப் பற்றிக் கொண்டான் {கிரஹணம் பீடித்தது}. மாருதன் சீக்கிரமாக {காற்று வேகமாக} வீசிக் கொண்டிருந்தான்; திவாகரன்  பிரபையற்றிருந்தான் {சூரியன் ஒளியிழந்திருந்தான்}.(11ஆ,12) இரவு நேராமலேயே தாரைகள் {நக்ஷத்திரங்கள்} மின்மினிப் பூச்சிகளைப் போல மின்னி மறைந்தன. அந்த க்ஷணத்தில் தடாகங்களில் மீன்களும், நீர்ப்பறவைகளும் மறைந்து, வாடிய பங்கஜங்களே {தாமரைகளே} இருந்தன. மரங்கள் புஷ்பங்களையும், பழங்களையும் இழந்தவையாக இருந்தன.(13,14அ) காற்றின்றியே புழுதியானது, ஜலதாரியை {மேகத்தைப்} போல் சிவந்து, படர்ந்து, எழும்பியது[2]. அங்கே சாரிகைகளும் {மைனாக்களும்}, "கீ, கீ, கூ, கீ" என்று {குழப்பத்துடன்} கீச்சிட்டுக் கொண்டிருந்தன.(14ஆ,15அ) இடியுடன் கோர தரிசனந்தரும் உல்கங்களும் {எரிநக்ஷத்திரங்களும்} விழுந்தன. சைலங்கள் {மலைகள்}, வனங்கள் {காடுகள்}, கானகங்கள் {சோலைகள்} ஆகியவற்றுடன் கூடிய மஹீயும் {பூமியும்} நடுங்கினாள்.(15ஆ,16அ) 

[2] அசும்புறு மத கரி புரவி ஆடகத்
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர
விசும்புறு தூளியால் வெண்மை மேயின
பசும்பரி பகலவன் பைம்பொன் தேரரோ

- கம்பராமாயணம் 2927ம் பாடல்

நீரூற்று போன்று பெருகுகின்ற மதநீருடைய யானைகளும், குதிரைகளும், பொன்னாலான கலசத்துடன் கூடிய சயந்தனங்களும் {தேர்களும்}, அரக்கர்களும் கால் வைத்து நடந்தமையால் வானத்தில் போய்ப் படிந்த புழுதிகளால் சூரியனுடைய பச்சைக் குதிரைகளும் பசும்பொன்னிறமான தேரும் வெண்ணிறத்தை அடைந்தன.

ரதத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்தவனும், மதிமிக்கவனுமான கரனின் இடது தோள் துடித்தது. அவனது குரலும் கம்மியது.(16ஆ,17அ) எங்கும் பார்வையைச் செலுத்தும் அவனது கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நெற்றி வலித்தது. ஆயினும் மோஹத்தால் {அறிவின்மையால்} அவன் திரும்பினானில்லை.(17ஆ,18அ) அந்தக் கரன், மயிர்க்கூச்சத்தை உண்டாக்கும் அந்த மஹா உத்பாதங்களை {அந்தப் பெரும் அபசகுனங்களைக்} கண்டு சிரித்து, ராக்ஷசர்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(18ஆ,19அ) "பலமற்றவனை {பொருட்படுத்தாத} பலவானைப் போல, வீரியனான நானும், கோர தரிசனம் தரும் வகையில் எழும் இந்த மஹா உத்பாதங்கள் அனைத்தையும் பொருட்படுத்தமாட்டேன்.(19ஆ,20அ) என் கூரிய சரங்களால் தாரைகளையும் {நக்ஷத்திரங்களையும்} ஆகாயத்திலிருந்து விழச் செய்வேன். நான் குரோதமடைந்தால் மிருத்யுவையும் மரண தர்மத்தில் சேரச் செய்வேன் {யமனை மரணமடையச் செய்வேன்}.(20ஆ,21அ) 

பலத்தால் செருக்குற்றிருக்கும் அந்த ராகவனையும் {ராமனையும்}, அவனுடன் பிறந்த லக்ஷ்மணனையும் கூரிய அம்புகளால் கொல்லாமல் திரும்புவதில் நான் உற்சாகங் கொள்ள மாட்டேன்.(21ஆ,22அ) இராமலக்ஷ்மணர்களுக்கு ஆபத்து நேரக் காரணமான என் பகினி {தமக்கை} அவ்விருவரின் உதிரத்தையும் பருகி ஆசை நிறைவேறுவாள்.(22ஆ,23அ) நான் போர்களில் ஒருபோதும் தோற்றவனல்ல. நான் பொய் சொல்பவனுமல்ல. இதை நீங்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.(23ஆ,24அ) நான் குரோதமடைந்தால், மத்தஐராவதத்தில் {மதங்கொண்ட ஐராவதத்தில்} ஏறிச் செல்லும் வஜ்ரஹஸ்தனான தேவராஜாவையும் {வஜ்ரத்தைக் கைகளில் கொண்ட தேவேந்திரனையும்} கூடப் போரில் கொன்றுவிடுவேன். அற்ப மானுஷர்களான அவ்விருவரும் எனக்கு எம்மாத்திரம்?" {என்றான் கரன்}(24ஆ,25அ)

மிருத்யுவின் {யமனின்} பாசக்கயிற்றில் சிக்கிக் கொண்ட அந்த ராக்ஷசர்களின் மஹா சம்முவானது {பெரும்படையானது}, அவனது {கரனின்} கர்ஜனையைக் கேட்டு ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்தது.(25ஆ,26அ) மஹாத்மாக்களான ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் யுத்தத்தை தரிசிக்கும் ஆவலுடன் அங்கே ஒன்றுகூடினர்.(26ஆ,27அ) புண்ணிய கர்மங்களைச் செய்தோரான அவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி அன்யோன்யம் {ஒருவரோடொருவர்} பின்வருமாறு பேசிக் கொண்டனர்: "உலகத்தால் மதிக்கப்படும் கோக்களுக்கும் {பசுக்களுக்கும்}, பிராமணர்களுக்கும் நன்மை உண்டாகட்டும்.(27ஆ,28அ) சக்கரஹஸ்தனான {சக்கரபாணியான} விஷ்ணு, யுத்தத்தில் சர்வ அசுரர்களையும் கொன்றதைப் போல ராகவனும் பௌலஸ்தியர்களான இந்த ரஜனீசரர்களை {இரவுலாவிகளை} வெல்லட்டும்" {என்றனர்}.(28ஆ,29அ) அங்கே விமானங்களில் இருந்த தேவர்களும், பரமரிஷிகளும் இப்படியும் அப்படியும், இன்னும் பலவாறாகவும் ஆவலுடன் பேசிக் கொண்டே ஆயுள் தீர்ந்த அந்த ராக்ஷச வாஹினியை {ராட்சசப் படையைக்} கண்டனர்.(29ஆ,30)

கோபத்துடன் கூடிய கரன், சைனியத்தின் முன் ரதத்தில் வேகமாகச்  சென்றான். அப்போது அந்த ராக்ஷசனைக் கண்ட ராக்ஷசர்கள் இன்னும் அதிகமாக பெருகி நெருங்கினார்கள். சியேனகாமீ, பிருதுக்ரீவன், யஜ்ஞசத்ரு, விஹங்கமன், துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், காலகார்முகன், ஹேமமாலி {மேகமாலி}, மஹாமாலி, ஸர்ப்பாஸ்யன், ருதிராசனன் என்ற பனிரெண்டு மஹாவீரர்கள் கரனைச் சூழ்ந்து நின்றனர்.(31-33அ) மஹாகபாலன், ஸ்தூலாக்ஷன், பிரமாதி, திரிசிரன் என்ற நால்வரும் சேனையின் முன்னிலையில் தூஷணனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(33ஆ,இ) அதிவேகமுடையதும், போரில் ஆசை கொண்டதும், கொடியதுமான அந்த ராக்ஷச வீரசேனை, சந்திர சூரியர்களை நெருங்கும் கிரஹங்களின் மாலையை {கிரஹங்களுடைய வரிசையைப்} போலவே அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் விரைவில் நெருங்கிற்று.(34)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Thursday, 16 March 2023

தூஷணன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 22 (24)

Dushana | Aranya-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கரன், தன் படைத்தளபதியான தூஷணனையும், தன் படையையும் போருக்கு ஆயத்தப்படுத்தியது; பதினான்காயிரம் ராக்ஷசர்களுடன் புறப்பட்டது...

Khara urging his charioteer

சூர்ப்பணகை, இவ்வாறு ராக்ஷசர்களுக்கு மத்தியில் வைத்து இழித்துரைத்தபோது, சூரனான கரன் குரோதத்துடன் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னான்[1]:(1) "உனக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக எனக்குண்டான அளவில்லா குரோதம், {செரிக்காததும், உவர்ப்பு நிறைந்ததுமான} கடும் உப்புநீரைப் போல தரிக்க இயலாததாக இருக்கிறது.(2) க்ஷீண ஜீவிதம் கொண்ட மானுஷனும் {அற்ப ஆயுள் கொண்ட மனிதனும்}, தன் தீச்செயல்களால் இப்போது வதைக்கப்பட்டு பிராணனை விடப்போகிறவனுமான ராமனின் வீரியத்தை நான் அறிய வேண்டியதில்லை.(3) கண்ணீரை அடக்குவாயாக. இந்தக் கலக்கத்தைக் கைவிடுவாயாக. இராமனையும், அவனுடன் பிறந்தானையும் {லக்ஷ்மணனையும்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்.(4) இராக்ஷசியே, பரசால் {கோடரியால்} வெட்டப்பட்டு, மந்தப் பிராணனுடன் {குற்றுயிராகக்} கிடக்கும் ராமனின் சிவந்த உதிரத்தை உஷ்ணத்துடன் {சுடச்சுட} நீ பருகுவாய்" {என்றான் கரன்}.(5)

[1] அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என
பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக
வெங்கரப் பெயரோன் வெகுண்டான் விடைச்
சங்கரற்கும் தடுப்பு அருந்தன்மையான்.

- கம்பராமாயணம் 2896ம் பாடல்

பொருள்: காளை வாகனமுடைய சங்கரனாலும் தடுக்க முடியாத தன்மை கொண்டவனும், கொடியவனுமான கரன் என்ற பெயரைக் கொண்டவன், அங்கு அரக்கர் இறந்து அழிந்தனர் என {சூர்ப்பணகைச் சொல்லக்} கேட்டு இரத்தம் பொங்க, விழிகள் வெளியே வர வெகுண்டான்.

கரனின் வதனத்திலிருந்து விழுந்த சொற்களைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தவள் {சூர்ப்பணகை}, மூடத்தனத்தால், "இராக்ஷசர்களில் {நீயே} சிறந்தவன்" என்று சொல்லித் தன்னுடன் பிறந்தனை மீண்டும் மீண்டும் புகழ்ந்தாள்.(6) முன்பு அவளால் {சூர்ப்பணகையால்} பழித்துரைக்கப்பட்டாலும், மீண்டும் இவ்வாறு புகழப்பட்ட கரன், அப்போது தூஷணன் என்ற பெயருடைய சேனாதிபதியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(7) "என் சித்தம் போல் {என் விருப்பப்படி} நடப்பவர்களும், போரில் திரும்பாதவர்களும், பயங்கர வேகம் கொண்டவர்களுமான பதினான்காயிரம் ராக்ஷசர்கள் இருக்கிறார்கள்.(8) கருநீல மேகத்தின் வண்ணத்தினரான அவர்கள் கோரமானவர்கள்;  கொடுஞ்செயல் புரிபவர்கள்;  உலகத்தாரை ஹிம்சித்துத் திரிபவர்கள்; பலசாலிகள்; உக்ரதேஜஸ் படைத்தவர்கள்.(9) சௌம்யா {மென்மையானவனே, தூஷணா}, என் ரதத்தையும், தனுவையும், சரங்களையும், சித்திரமான கட்கத்தையும் {வாளையும்}, விதவிதமான கூரிய சக்திகளையும் {வேல்களையும்} சீக்கிரம் என் முன்னால் கொண்டுவருவாயாக.(10) இரணகோவிதா {போரில் திறன்படைத்தவனே}, துர்விநீதனான {ஒழுக்கங்கெட்டவனான} ராமனை வதம் செய்வதற்காக பௌலஸ்தியர்களில் {புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராக்ஷசர்களில்} மஹாத்மாக்களுக்கு முன் நான் புறப்பட விரும்புகிறேன்" {என்றான் கரன்}.(11)

அவன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே அந்த தூஷணன், பல்வேறு வண்ணங்களிலான நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், சூரிய வர்ணம் கொண்டதுமான மஹாரதம் வருவதை அறிவித்தான்.(12) மேருவின் சிகர வடிவம் கொண்டதும், புடம்போட்ட காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், ஹேமச்சக்கரங்கள் {பொன்னாலான சக்கரங்கள்} பொருத்தப்பட்டதும், விசாலமானதும், வைடூர்யத்தாலான கூபரத்தை {நுகத்தடியைக்} கொண்டதும், காஞ்சனத்தாலான {பொன்னாலான} மீன்கள், புஷ்பங்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, சந்திர சூரியர்கள், மங்கலமான பக்ஷி சங்கங்கள் {பறவைக் கூட்டங்கள்}, தாரைகள் {நக்ஷத்திரங்கள்} ஆகியவற்றால் எங்கும் சூழப்பட்டதும், துவஜம், கத்தி ஆகியவற்றைக் கொண்டதும், கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதுமான அதில் {அந்த ரதத்தில்} கரன் பொறுத்துக் கொள்ளமுடியாத கோபத்துடன் ஏறினான்.(13-15) இரதங்கள், தோல்கள் {தோலாலான கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்கள் {கொடிகள்} ஆகியவற்றுடன் கூடிய அந்த மஹத்தான சைனியத்தையும், சர்வராக்ஷசர்களையும், தூஷணனையும் கண்ட கரன், "நடப்பீராக" என்றான்.(16)

The army of Khara and Dushana

தோல்கள் {கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்களுடன் கூடிய கோரமான அந்த ராக்ஷச சைனியம், மஹாநாதத்துடனும், மஹாவேகத்துடனும் ஜனஸ்தானத்தில் இருந்து புறப்பட்டது.(17) கைகளில் முத்கரங்கள் {இரும்புத் தடிகள்}, பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, சூலங்கள், மிகக்கூரிய பரசுகள் {கோடரிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, சக்கரங்கள், பளபளக்கும் தோமரங்கள்,{18} சக்திகள் {வேல்கள்}, கோரமான பரிகங்கள், மிகப் பெரிய விற்கள், கதைகள், கத்திகள், முசலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றோடும், வஜ்ராயுதங்களோடும்,{19} மிகப் பயங்கரர்களும், கரனின் சித்தம்போல் நடப்பவர்களுமான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ஜனஸ்தானத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார்கள்.(18-20)

பயங்கரத் தோற்றமுடைய அந்த ராக்ஷசர்கள், மிக வேகமாக விரைந்து கொண்டிருந்தனர். கரனின் ரதம் சற்றே அவர்களுக்குப் பின்னால் சென்றது.(21) அப்போது சாரதி, {அவர்களுக்கு முன்னால் செல்ல வேண்டும் என்ற} கரனின் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு, புடம்போட்ட காஞ்சனத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டவைகளும், பல வர்ணமுள்ளவைகளுமான அசுவங்களை {குதிரைகளை} வேகமாக செலுத்தினான்.(22) இவ்வாறே, பகைவரைக் கொல்லும் கரனால் சீக்கிரமாகச் செலுத்தப்பட்ட ரதத்தின் சப்தம், திசைகளையும், உபதிசைகளையும் நிரப்பியது.(23) மஹாபலவானும், {கழுதை போன்ற} கொடிய குரல் உடையவனுமான கரன், கோபாவேசங்கொண்டு பகைவனைக் கொல்வதில் அந்தகனைப் போல் துரிதமடைந்து, கல்மழை பொழியும் மேகத்தைப் போல, சாரதியை மீண்டும் மீண்டும் அவசரப்படுத்தியபடியே கர்ஜித்துக் கொண்டிருந்தான்.(24)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Wednesday, 15 March 2023

மிரட்டல் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 21 (22)

Intimidation | Aranya-Kanda-Sarga-21 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகையைத் தணிவடையச் செய்த கரன்; இராமனை எதிர்க்குமாறு கரனை மிரட்டிய சூர்ப்பணகை...

Shurpanaka complaining to Khara

கரன், மீண்டும் தன் முன் விழுந்த சூர்ப்பணகையைக் கண்டு, அர்த்தம் விளங்காத நிலையில், தெளிவான சொற்களில் குரோதத்துடன் {பின்வருமாறு} கேட்டான்:(1) "பிசிதாசனர்களும் {பச்சை மாமிசம் உண்பவர்களும்}, சூரர்களுமான அந்த ராக்ஷசர்களை நியமித்து உனக்கு விருப்பமானதை நான் செய்த பிறகும் மீண்டும் ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்?(2) என்னையும், என் நலத்தையும் எப்போதும் விரும்புகிறவர்களும், பக்தர்களும், தாக்குதல்களில் கொல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் என் சொற்களை ஒருபோதும் செயல்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.(3) "ஹா நாதா" என்று பெருங்கூச்சலிட்டு சர்ப்பம் {பாம்பு} போல எதற்காக நீ தரையில் புரள்கிறாய்? இதன் காரணம் என்ன? அதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நாதனாக {தலைவனாக} நான் இருக்கையில் ஏன் நீ அனாதையைப் போலப் புலம்புகிறாய்? எழு, எழுவாயாக. இனியும் இவ்வகையில் குழப்புவதைத் தவிர்ப்பாயாக" {என்றான் கரன்}.(5)

வெல்லப்பட முடியாதவனான கரன் இவ்வாறு சொன்னதும் சூர்ப்பணகை ஆறுதல் அடைந்தாள். பிறகு அவள், தன் நயனங்களின் {கண்களின்} நீரைத் துடைத்துக் கொண்டு தன் சகோதரனான கரனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(6) "காதுகளும், மூக்கும் வெட்டப்பட்டுப் பெருகும் ரத்தத்தில் முழுமையாக நனைந்த நான், சற்று நேரத்திற்கு முன் இங்கே உன்னிடம் வந்து முழுமையான ஆறுதல் அடைந்தேன்.(7) சூரா, கோரனான ராகவனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் கொல்லும் என் விருப்பத்திற்காக பதினான்கு ராக்ஷசர்களை நீ அனுப்பிவைத்தாய்.(8) பெருங்கோபத்துடன் கைகளில் சூலங்களையும், பட்டிசங்களையும் தரித்து வந்த அவர்கள் அனைவரும் போரில் ராமனின் கணைகளால் மர்மங்கள் பிளக்கப்பட்டு மாண்டனர்.(9) மஹாஜவான்களான {பெரும் வேகம் கொண்டவர்களான} அவர்கள், ராமனின் மகத்தான கர்மத்தால் க்ஷணப்பொழுதில் பூமியில் விழுந்ததைக் கண்டதும் எனக்குப் பேரச்சம் ஏற்பட்டது.(10) நிசாசரா {இரவுலாவியே}, எங்கும் பயத்தையே கண்டு பீதியடைந்த நான், மனம் நொந்தவளாக, துக்கத்துடன் மீண்டும் உன்னிடம் அடைக்கலம் நாடி வந்திருக்கிறேன்.(11)

துயரமெனும் முதலைகள் திரிவதும், பயமெனும் அலை மாலைகள் புரள்வதுமான மிகப்பெரிய சோகசாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் என்னை ஏன் நீ காக்காதிருக்கிறாய்?(12) பிசிதாசனர்களான {பச்சை மாமிசம் உண்பவர்களான} அந்த ராக்ஷசர்கள் என் பாதையில் பின்தொடர்ந்து வந்து, கூரிய சரங்களைக் கொண்ட ராமனால் பூமியில் வீழ்த்தப்பட்டனர்.(13) நிசாசரா {இரவுலாவியே}, என்னிடத்திலாவது, அந்த ராக்ஷசர்களிடத்திலாவது உனக்கு இரக்கம் உண்டானால், உனக்கு சக்தியும், துணிவும் உண்டானால், ராக்ஷசர்களுக்கு கண்டகமாய் {முள்ளாய்} தண்டகத்தில் குடியிருக்கும் ராமனை ஒழிப்பாயாக.(14,15அ) அமித்ரக்னனான {நட்பற்றவர்களைக் கொல்பவனான} ராமனை நீ இனி கொல்லாவிட்டால் தயக்கமேதும் இல்லாமல் இப்போதே உன் எதிரிலேயே நான் என் பிராணனை விடுவேன்.(15ஆ,16அ ) 

உன் படைகள் பெரும்போரின் களத்தில் ராமனை எதிர்த்து நிற்கும் சக்தி கொண்டவையல்ல; சூரனென எண்ணிக்கொண்டாலும் நீ சூரனல்ல; இல்லாத பராக்கிரமத்தை இருப்பதாகக் கருதுபவன் என்றே புத்தியால் நான் முன்னுணர்கிறேன்.(16ஆ,17) நீ, மானுஷர்களான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் போரில் கொல்லும் சக்தி கொண்டவனல்ல. குலபாம்சனா {குலத்திற்கு இழிவைத் தேடித்தருபவனே}, ஆண்மையற்று, அல்ப வீரியத்துடன் மூடனைப் போல இங்கே வசிப்பது உனக்குத் தகாது. ஜனஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து பந்துக்களோடு உடனே புறப்படுவாயாக[1].(18,19) தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} அந்த ராமன் மஹாபராக்கிரமசாலி. நீயும் ராமனின் தேஜஸ்ஸால் {பராக்கிரமத்தால்} பீடிக்கப்பட்டு சிக்கிரமாக நாசமடைவாய்.(20) அவனுடன் பிறந்த மஹாவீரியவானாலேயே {லக்ஷ்மணனாலேயே} நான் விரூபியாக்கப்பட்டேன்" {என்றாள் சூர்ப்பணகை}.

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "16 முதல் இதுவரையுள்ள சுலோகங்கள் பல்வேறு பதிப்புகளில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் கருத்து அல்லது பொருள் இதுதான். இஃது ஒரு வகையான மிரட்டல். கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோரை ஜனஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் நியமித்தவன் ராவணன். எனவே, அவர்கள் சூர்ப்பணகையைக் காக்க வரவில்லையென்றால், ராவணன் அவர்களை அந்தப் பதவியில் இருந்து தூக்கி வீசக்கூடும்" என்றும், "கரன் என்ற பெயர் ஆண் கழுதையைக் குறிக்கும்" என்றும் இருக்கிறது. கரனும், சூர்ப்பணகையும் ராகை என்பவளுக்கும், விஸ்வரஸுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

பெரும்வயிறு படைத்தவளான அந்த ராக்ஷசி, சகோதரனின் சமீபத்தில் {கரனின் அருகில்} சோகத்தால் பீடிக்கப்பட்டும், இவ்வாறு பலவகையில் புலம்பியும், பெருந்துயருற்று இரு கைகளாலும் தன் வயிற்றில் அடித்துக் கொண்டும் கதறியபடியே நினைவிழந்தாள்.(21,22)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 21ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Tuesday, 14 March 2023

அரக்கர் வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 20 (25)

Demons eliminated | Aranya-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பதினான்கு ராக்ஷசர்களையும் கொன்ற ராமன்; அந்தப் படுகொலையை கரனிடம் அறிவித்த சூர்ப்பணகை...

Shurpanaka showing Rama and Lakshmana to the fourteen rakshasas

கோரமான அந்த சூர்ப்பணகை, ராகவனின் ஆசிரமத்தை அடைந்ததும்,  அவ்விரு உடன்பிறந்தோரையும் {ராமலக்ஷ்மணர்களையும்}, சீதையையும் அந்த ராக்ஷசர்களுக்குக் காட்டினாள்.(1) அவர்கள், பர்ணசாலையில் லக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டு சீதையுடன் அமர்ந்திருக்கும் மஹாபலம் பொருந்திய ராமனைக் கண்டனர்.(2) ஸ்ரீமான் ராகவன், அங்கே வந்திருப்பவர்களையும், அந்த ராக்ஷசியையும் கண்டான். அப்போது ராமன், தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(3) "சௌமித்ரியே,  இவளது {சூர்ப்பணகையின்} பாதையைப் பின்பற்றி இங்கே வந்திருக்கும் இவர்களை நான் வதம் செய்ய விரும்புவதால், ஒரு முஹூர்த்தம் சீதையின் பின் இருப்பாயாக" {என்றான் ராமன்}.(4)

அப்போது லக்ஷ்மணன், தன்னை அறிந்தவனான ராமனின் இந்த வாக்கியத்தைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி ராமனின் வாக்கியத்திற்கு மதிப்பளித்தான்.(5) தர்மாத்மாவான ராகவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான வில்லை எடுத்து நாண்பூட்டி,[1] அந்த ராக்ஷசர்களிடம் {முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் பின்வருமாறு} சொன்னான்:(6) "தசரதனின் புத்திரர்களும், உடன்பிறந்தோருமான நாங்கள் இருவரும் ராமலக்ஷ்மணர்கள். கடப்பதற்கரிய தண்டகவனத்திற்குள் சீதையுடன் பிரவேசித்திருக்கிறோம்.(7) பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன் தர்மவழியில் நடந்து, தண்டகாரண்யத்தில் வசிக்கும் தாபஸ்விகளான எங்களை ஏன் நீங்கள் ஹிம்சிக்கிறீர்கள்?(8) உங்களைப் போன்ற பாப ஆத்மாக்களையும், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்களையும் பெரும்போரில் கொல்ல வேண்டுமெனும் ரிஷிகளுக்குக் கட்டுப்படும் வகையில் வில்லுடனும், சரங்களுடனும் இங்கே நான் வர வாய்த்திருக்கிறது.(9) நிசாசரர்களே {இரவுலாவிகளே}, நிறைவுடன் இருந்தால் திரும்பாமல் அங்கேயே இருப்பீராக. அல்லது, பிராணனின் பயன் வேண்டுமென்றால் விலகிச் செல்வீராக" {என்றான் ராமன்}.(10)

[1] ஏத்து வாய்மை இராமன் இளவலை
காத்தி தையலை என்று தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்
ஆத்த நாணின் அருவரை வாங்கினான்.

- கம்பராமாயணம் 2891ம் பாடல்

பொருள்: அனைவரும் புகழும் வாய்மையுடைய ராமன், தன் தம்பியிடம், "பெண்ணைக் காப்பாயாக" என்று சொல்லி, பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற ஒப்பிலாத தன்னுடைய பெரிய கைகளால் கட்டப்பட்ட நாண்கயிற்றைக் கொண்ட மலை போன்ற வில்லை எடுத்தான்.

பிரம்மக்னர்களும் {பிராமணர்களைக் கொல்பவர்களும்}, சூலபாணிகளுமான அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், அவனது சொற்களைக் கேட்டுப் பெருங்கோபம் அடைந்தனர். செவ்வரியோடிய கண்களைக் கொண்டவனும், மதுரமாகப் பேசுபவனுமான ராமனின் பராக்கிரமத்தை அறியாதவர்கள், குரோதத்தால் சிவந்த இரத்தக் கண்களுடனும், மகிழ்ச்சியுடனும் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னார்கள்:(11,12) "எங்கள் தலைவரும், மஹாத்மாவுமான கரனின் குரோதத்தைத் தூண்டிய நீயே, இப்போது யுத்தத்தில் எங்களால் கொல்லப்பட்டுப் பிராணனை விடப்போகிறாய்.(13) பலரான எங்கள் முன் தனியாக போர் முனையில் நிற்கும் சக்தி உனக்கேது? போரில் நீ போரிடுவதைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(14) எங்கள் கரங்களால் நாங்கள் பரிகங்களையும், சூலங்களையும், பட்டிசங்களையும் வீசும்போது, பிராணனையும், வீரியத்தையும், கையில் பிடித்திருக்கும் அந்த தனுவையும் நீ கைவிடுவாய்" {என்றனர் அந்த ராக்ஷசர்கள்}.(15)

கோபத்துடன் இதைச் சொன்ன அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், தயக்கமில்லாமல் தங்கள் ஆயுதங்களை உயர்த்தியபடியே, தனியாக நின்று கொண்டிருந்த ராமனிடம் விரைந்து சென்று, தடுக்கப்பட முடியாதவனான அந்த ராகவனை நோக்கி தங்கள் சூலங்களை ஏவினர்.(16,17அ) காகுத்ஸ்தன் அந்தப் பதினான்கு சூலங்களையும் அதே எண்ணிக்கையிலானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான சரங்களால் முழுமையாகத் துண்டாக்கினான்.(17ஆ,18அ) அடுத்ததாக, பரம குரோதத்துடன் கூடிய அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையுமான பதினான்கு நாராசங்களை எடுத்தான்.(18ஆ,19அ) அப்போது அந்த ராகவன், வில்லை எடுத்து, ராக்ஷசர்களை இலக்காக்கி, அதை வளைத்து, சதக்ரது {இந்திரன் ஏவும்} வஜ்ரத்தைப் போல அந்த பாணங்களை ஏவினான்.(19ஆ,20அ)

அவை வேகத்துடன் சென்று அந்த ராக்ஷசர்களின் மார்புகளைத் துளைத்து, உதிரஞ்சொட்ட வேகமாக வெளியேறி, எறும்புப் புற்றில் புகும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல பூமிக்குள் புதைந்தன.(20ஆ,21அ) அவற்றால் ஹிருதயங்கள் பிளவுண்டு, குருதியில் நனைந்து, சிதைந்து, உண்மையில் தங்கள் உயிர்களை இழந்து, வேரறுக்கப்பட்ட மரங்களைப் போல அவர்கள் பூமியில் விழுந்தார்கள்.(21ஆ,22அ) குரோதத்துடன் கூடிய அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பூமியில் விழுந்தவர்களைக் கண்டு மூர்ச்சித்து, நடுங்கி, பெருங்கூச்சலிட்டவாறே திரும்பிச் சென்று, சற்றே காய்ந்த ரத்தத்துடன் பிசின் கட்டிய வல்லரி {ஆனைவணங்கி} மரம் போல் கரன் முன்னிலையில் மீண்டும் விழுந்தாள்.(22ஆ,23) 

அப்போது அவள், தன்னுடன் பிறந்தானின் {கரனின்} சமீபத்தில், வதனத்தின் வர்ணமிழந்து, பெருங்குரலில் கதறி, மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதாள்.(24) கரனின் தமக்கையான சூர்ப்பணகை, போரில் வீழ்ந்த ராக்ஷசர்களைக் கண்டு, அங்கிருந்து தப்பியோடி, அந்த ராக்ஷசர்கள் கொல்லப்பட்டது குறித்த அனைத்தையும் {அவனிடம்} அறிவித்தாள்.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை