The gestures of Rama | Yuddha-Kanda-Sarga-114 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனால் பணிக்கப்பட்ட விபீஷணன் சீதையை ராமன் முன்பு அழைத்து வந்தது; லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் ஆகியோர் ராமனின் இங்கிதங்களைக் கண்டு வருந்துவது...
மஹாபிராஜ்ஞனான பிலவங்கம் {பெரும் புத்திசாலியும், தாவிச் செல்பவனுமான ஹனுமான்}, சர்வதனுஷ்மதர்களில் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனும், வசனமர்த்தஜ்ஞனுமான {வசனங்களின் பொருளை அறிந்தவனுமான} அந்த ராமனை அணுகி {பின்வருமாறு} சொன்னான்:(1) "எவளின் நிமித்தம் இந்தக் கர்மங்களை ஆரம்பித்தீரோ, எவளுக்கான பலன் கிடைத்திருக்கிறதோ, அந்த மைதிலி தேவியின் சோகசந்தாபத்தை நீர் காண்பதே தகும்.(2) கண்ணீர் நிறைந்த கண்களுடன் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த மைதிலி, உமது விஜயத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.(3) பூர்வத்தில் என் மீது கொண்ட பற்றுறுதியில் விளைந்த விசுவாசத்தால் அவள் என்னிடம், "கிருதார்த்தரும் {காரியம் நிறைவேறியவரும்}, லக்ஷ்மணருடன் கூடியவருமான என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்று கூறினாள்" {என்றான் ஹனுமான்}.(4)



















