Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...
மஹாத்மாவான வானரனால் {ஹனுமனால்} மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைக் கைப்பற்றும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4)
