The bridge constructed by Nala | Yuddha-Kanda-Sarga-022 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் முன் வெளிப்பட்ட சமுத்திரன்; நளனால் கட்டப்பட்ட பாலத்தைத் தாங்கியது; இலக்ஷ்மணனுடனும், படையுடனும் கூடியவனாக ராமன் சமுத்திரத்தைக் கடந்தது...
பிறகு ரகுசிரேஷ்டன் {ரகு குலத்தில் சிறந்தவனான ராமன்}, சாகரத்திடம் {பின்வரும்} கடுஞ்சொற்களைக் கூறினான், "மஹார்ணவா {பெருங்கடலே}, இன்று நான் உன்னை பாதாள லோகத்திற்குள் செல்லும்படி வற்றச் செய்யப்போகிறேன்.(1) சாகரா, என் சரங்களால் உன் நீர் வற்றிப் போகும் போது, என்னால் அழிவடையும் உயிரினங்களால் பெரும் மணற்பரப்பு உண்டாகப் போகிறது.(2) சாகரா, என் கார்முகத்திலிருந்து {வில்லில் இருந்து} ஏவப்படும் சர மழையால் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்} பாத நடையாகவே மறுகரையை அடையப் போகிறார்கள்.(3) தானவாலயா {தானவர்களின் வசிப்பிடமாகத் திகழ்பவனே}, என் பௌருஷத்தையோ {ஆண்மையையோ}, விக்ரமத்தையோ {ஆற்றலையோ} நீ அறிந்தாயில்லை. எவ்வளவு சிந்தித்தாலும் என்னால் விளையப் போகும் சந்தாபத்தை {வேதனையை} நீ அறியப்போகிறதுமில்லை" {என்றான் ராமன்}.(4)
