Showing posts with label கும்பகர்ணன். Show all posts
Showing posts with label கும்பகர்ணன். Show all posts

Sunday, 13 April 2025

மயங்கி விழுந்த ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 068 (24)

Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...

Ravana crying

கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)

Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

Thursday, 20 March 2025

கும்பகர்ணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 065 (57)

Kumbhakarna set out | Yuddha-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹோதரனின் திட்டங்களைக் கண்டித்து, தீய சகுனங்களைப் பொருட்படுத்தாமல் போருக்குப் புறப்பட்ட கும்பகர்ணன்; அவனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்...

Kumbhakarna Ravana Mahodhara from right to left

இவ்வாறு சொன்ன மஹோதரனை {அவ்வாறு சொல்லக்கூடாது என்று} கண்டித்த கும்பகர்ணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசசிரேஷ்டனுமான ராவணனிடம் {ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம் பின்வருமாறு} பேசினான்:(1) “துராத்மாவான அந்த ராமனை வதம் செய்வதன் மூலம், கோரமான உமது பயத்தை இன்று போக்குவேன். வைரம் {பகைமை} இன்றி சுகமாக இருப்பீராக.(2) ஜலமற்ற மேகத்தைப் போல, சூரர்கள் வீணாக கர்ஜிப்பதில்லை. யுத்தத்தில் கர்மத்தை நிறைவேற்றும்போது என் கர்ஜனையைப் பார்ப்பீர்.(3) தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வதில் சூரர்கள் ஈடுபடமாட்டார்கள்; அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்வதற்கரிய கர்மத்தை அவர்கள் செய்வார்கள்.(4) 

Tuesday, 18 March 2025

மஹோதரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 064 (36)

Mahodhara | Yuddha-Kanda-Sarga-064 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரிடாமல் ராமனை வெல்வதற்கான ஓர் உத்தியை ராவணனிடம் சொன்ன மஹோதரன்...

Mahodhara Kumbhakarna Ravana

மஹோதரன்[1], அதிகாயனும், பாஹுசாலியும் {பேருடல் படைத்தவனும், பெருங்கரங்களைக் கொண்டவனும்}, பலம்வாய்ந்தவனுமான கும்பகர்ணன் சொன்ன அந்த வசனத்தைக் கேட்டு,  {பின்வருமாறு} சொன்னான்:(1) “கும்பகர்ணரே, நற்குலத்தில் பிறந்தும், சாதாரணத் தோற்றம் கொண்டவன் திமிருடன் பேசுவதைப் போலத் துடுக்காகப் பேசுகிறீர். எங்கும் செய்யப்படுவனவற்றை நீர் அறியவில்லை.(2) கும்பகர்ணரே, நியாயாநியாயங்களை ராஜர் அறியமாட்டாரா {நியாயங்களையும், அநியாயங்களையும் ராஜா ராவணர் அறியமாட்டாரா}? கேவலம் குழந்தைத்தனமான துடுக்குடன் பேச விரும்புகிறீர்[2].(3) தேசகாலங்களை {ஏற்ற இடம், நேரம் ஆகியவற்றை} அறிந்தவரான ராக்ஷசரிஷபர் {ராக்ஷசர்களில் காளை ராவணர்}, தன்னுடைய, பகைவருடைய விருத்தி {ஆதிக்கம்}, குறை, ஸ்தானங்களை {நிலை ஆகியவற்றைச் சரியாகப்} புரிந்து வைத்திருக்கிறார்.(4)

Friday, 7 March 2025

கும்பகர்ணனின் அன்பு | யுத்த காண்டம் சர்க்கம் - 063 (58)

The affection of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-063 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கும்பகர்ணன்; ராவணனின் கடுஞ்சொற்கள்; ராமனுடன் போரிடுவதாக உறுதியளித்த கும்பகர்ணன்...

Kumbhakarna

அந்த ராக்ஷசராஜனின் புலம்பலைக் கேட்டு உரக்கச் சிரித்த கும்பகர்ணன், இந்த வசனத்தை மொழிந்தான்:(1) “உமது ஹிதத்தை விரும்புகிறவர்களை அலட்சியம் செய்தீர். பூர்வத்தில் நடந்த மந்திரநிர்ணயத்தில் {ஆலோசனைக்கூட்டத்தில்} எந்த தோஷம் எங்களால் காணப்பட்டதோ, அதையே நீர் அடைந்திருக்கிறீர்.(2) எப்படி தீய கர்மங்களைச் செய்பவன் நரகங்களில் வீழ்வானோ, அப்படியே பாப கர்மத்தின் பலன் சீக்கிரமே உம்மை அடைந்திருக்கிறது.(3) மஹாராஜாவே, இந்தச் செயல்பாட்டைக் குறித்து நீர் பிரதமமாக சிந்திக்கவில்லை; கேவலம் வீரியத்தில் செருக்கு கொண்டதால் விளைவைக் குறித்துச் சிந்திக்கவில்லை.(4) ஐஷ்வரியத்தில் நிலைபெற்ற எவன் ஒருவன், பூர்வத்தில் செய்ய வேண்டிய காரியங்களைப் பின்னரும், பின்னர் செய்ய வேண்டிய காரியங்களை பூர்வத்திலும் செய்வானோ, அவன் நியாயாநியாங்களை {நியாய அநியாயங்களை} அறியமாட்டான்.(5) 

Friday, 28 February 2025

இராவணனின் வேண்டுகோள் | யுத்த காண்டம் சர்க்கம் - 062 (23)

The request of Ravana | Yuddha-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் மீது கொண்ட பயத்தைக் கும்பகர்ணனிடம் வெளிப்படுத்தி, ராமனை அழிக்குமாறு அவனைத் தூண்டிய ராவணன்...

Ravana speaks with Kumbhakarna

விபுலவிக்கிரமனான அந்த ராக்ஷசசார்தூலன் {பேராற்றல் வாய்ந்தவனும், ராக்ஷசர்களில் புலியுமான கும்பகர்ணன்}, நித்திரையினாலும், மதத்தினாலும் {மதுவெறியினாலும்} ஆட்கொள்ளப்பட்டவனாக, அழகுடன் விளங்கும் ராஜமார்க்கத்தில் நடந்து சென்றான்.(1) பிறகு, அந்தப் பரமதுர்ஜயன் {வெல்வதற்கரிய கும்பகர்ணன்}, கிருஹங்களில் இருந்து புஷ்பவர்ஷம் {மலர்மாரி} பொழிய, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாகச் சென்றான்.(2) ஹேமஜாலங்களால் {பொற்சாளரங்களால்} நிறைந்ததும், பெரியதும், பானுவை {சூரியனைப்} போன்ற பிரகாசத் தோற்றம் கொண்டதுமான ராக்ஷசேந்திர நிவேசனத்தை அவன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வசிப்பிடத்தைக் கும்பகர்ணன்} கண்டான்.(3) மேகத்திரளுக்குள் சூரியனைப் போல ரக்ஷோதிபதியின் நிவேசனத்திற்குள் பிரவேசித்தவன், ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வயம்பூவை சக்ரன் போல {பிரம்மனைக் கண்ட இந்திரனைப் போல} ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராவணனை} தூரத்தில் இருந்தே கண்டான்.(4)

Thursday, 27 February 2025

ஆறுமாத நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 061 (40)

Six months of sleep | Yuddha-Kanda-Sarga-061 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் குறித்து ராமனிடம் சொன்ன விபீஷணன்; இராமனின் ஆணையின் பேரில் லங்கையின் நுழைவாயில்களில் நிலைநின்ற வானரர்கள்...

Brahma curses Kumbhakarna

அப்போது, மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான ராமன், தன் தனுவை {வில்லை} எடுத்துக் கொண்டு, பேருடலுடனும், கிரீடத்துடனும் கூடியவனான கும்பகர்ணனைக் கண்டான்.(1) 

Wednesday, 26 February 2025

கும்பகர்ண நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 060 (97)

Slumber of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி ராக்ஷசர்களிடம் கேட்ட ராவணன்; இராட்சசர்களின் பெரும்முயற்சியால், உறக்கத்திலிருந்து எழுந்த கும்பகர்ணன்...

Kumbakarna sleeping

இராமபாணங்களால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா {ராவணன்}, லங்காம்புரீக்குள் பிரவேசித்த பிறகு, தன் செருக்கு பங்கமடைந்து, இந்திரியங்கள் கலங்கியவனானான்.(1) சிம்ஹத்தால் மாதங்கத்தை {யானையைப்} போலவும், கருடனால் பன்னகத்தை {பாம்பைப் போலவும்} மஹாத்மாவான ராகவனால் அந்த ராஜா சிறுமையை அடைந்தான் {வெற்றிகொள்ளப்பட்டான்}.(2) இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையும், பிரம்ம தண்டத்திற்கு ஒப்பானவையுமான ராகவ பாணங்களை நினைத்து வேதனையடைந்தான்.(3) 

Tuesday, 30 July 2024

கும்பகர்ணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 012 (40)

Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-012 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகரத்தைப் பாதுகாக்குமாறு பிரஹஸ்தனுக்கு ஆணையிட்ட ராவணன்; கும்பகர்ணன், ராவணனின் தகாத செயலைக் கண்டித்தாலும், அவனது எதிரிகளைக் கொல்வதாக உறுதியளித்தது...

Kumbhakarna speaking to Ravana

அப்போது, சமிதிஞ்ஜயனான அவன் {ராவணன்}, அந்த பரிஷதத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, வாஹினிபதியான பிரஹஸ்தனிடம்[1] {சபைகளில் / போர்களில் வெற்றி பெறுபவனான ராவணன், அந்த சபையின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, படைத்தலைவனான பிரஹஸ்தனிடம் பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "சேனாபதே, வித்தைகளில் தேர்ந்தவர்களும், {யானைப்படை / குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு படைப்பிரிவுகளில் உள்ள} நான்கு விதமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள் நகரத்தை ரக்ஷிக்க எப்படி நிறுத்தப்பட வேண்டுமோ அப்படியே நியமிப்பீராக" என்றான்.(2)

Saturday, 16 December 2023

இராக்ஷசேந்திரன் நிவேசனம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 06 (45)

The house of the Rakshasa Chief | Sundara-Kanda-Sarga-06 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வீடுவீடாக சீதையைத் தேடிய ஹனுமான்; இலங்கை செல்வத்தால் நிறைந்திருந்தது; இராவணனின் பெரும் மாளிகையில் நுழைந்த ஹனுமான்; அந்த அரண்மனை குறித்த வர்ணனை...

Hanuman jumping from house to house in Lanka
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

காமரூபந்தரிக்கவல்லவன் {விரும்பிய வடிவை ஏற்கவல்ல ஹனுமான்}, மாடமாளிகைகளில் விசனமடைந்து {சீதையைத் தேடுவதில் மனச்சோர்வடைந்து}, லாகவத்துடன் கூடியவனாக லங்கையில் மீண்டும் திரிந்தான்.(1) பிறகு அந்த லக்ஷ்மீவான், அர்க்கனின் {சூரியனின்} வர்ணத்தில் ஒளிர்வதும், பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} சூழப்பட்டதுமான ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை {ராவணனின் மாளிகையை} நெருங்கினான்.(2) சிம்ஹங்களால் {பாதுகாக்கப்படும்} மஹாவனத்தைப் போல, பீமர்களான {பயங்கரர்களான} ராக்ஷசர்களால் ரக்ஷிக்கப்படும் பவனத்தை {இல்லத்தை} ஆராய்ந்தபடி அந்தக் கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(3) 

அது {ராவணனின் மாளிகை}, வெள்ளியாலானவையும், ஹேமத்தால் {பொன்னால்} சித்திரமாக அலங்கரிக்கப்பட்டவையுமான தோரணங்களுடனும் {நுழைவாயில்களுடனும்}, விசித்திரமான நுழைவுகளுடனும் {படிகளுடனும்}, அழகிய துவாரங்களுடனும் {வாயில்களுடனும்} இருந்தது.(4) கஜத்திலிருக்கும் சூரர்களான மஹாமாத்ரர்களாலும் {யானைப்பாகர்களாலும்}, களைப்பற்றவையும், தடுக்கப்படமுடியாதவையுமான குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் இருந்த சாரதிகளாலும் அடர்ந்திருந்தது.(5) சிங்கம், புலி ஆகியவற்றின் தோல்களாலான கவசங்களுடன் கூடியவையும், தந்தம், காஞ்சனம், வெள்ளி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், பெருங்கோஷத்துடன் கூடியவையுமான விசித்திரமான ரதங்கள் சதா அங்கே திரிந்து கொண்டிருந்தன.(6) ஏராளமான ரத்தினங்களுடனும், விலைமதிப்புமிக்க ஆசனங்கள், பாஜனங்களுடனும் {கலன்களுடனும்}, மஹா ஆசனங்களுடன் கூடிய மஹாரதங்களுடனும், மஹாரதர்களின் {பெரும் வீரர்களின்} வசிப்பிடமாக அது திகழ்ந்தது.(7) 

அந்தந்த விதவிதமான, காண்பதற்கு அழகிய, ஆயிரக்கணக்கான மிருகபக்ஷிகளால் பரிபூர்ணமாக அது {ராவணனின் அரண்மனை} நிறைந்திருந்தது.(8) நல்ல பயிற்சி கொண்ட ராக்ஷசர்களால் நன்கு ரக்ஷிக்கப்பட்ட முக்கியமான உள்ளரங்கம், சிறந்த ஸ்திரீகளால் எங்கும் நிறைந்திருந்தது.(9) மகிழ்ச்சிமிக்க பிரமதைகளை {பெண்களைக்} கொண்ட ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தில் {ராவணனின் வீட்டில்} ஒலித்த சிறந்த ஆபரணங்களின் கிங்கிணி மணி ஒலி, சமுத்திரத்தின் ஒலிக்கு ஒப்பாக இருந்தது.(10) முக்கிய ராஜகுணங்கள் நிறைந்ததும், அகில், சந்தனங்களுடன் கூடியதுமானது {ராவணனின் அரண்மனை}, சிம்ஹங்களுடன் கூடிய மஹத்தான வனத்தைப் போல மஹாஜனங்களால் நிறைந்திருந்தது.(11) பேரிகைகள், மிருதங்கங்கள், சங்குகளின் நாத எதிரொலியுடனும், விழாச்சடங்குகளுடனும், நித்திய அர்ச்சனைகளுடனும் ராக்ஷசர்கள் சதா பூஜித்துக் கொண்டிருந்தனர்.(12)

சமுத்திரம் போல் கம்பீரமானதும், சமுத்திரம் போல் ஓசையுள்ளதுமான அந்த மஹாத்மாவின் {ராவணனின்} மஹத்தான வேஷ்மம் {வசிப்பிடம்}, மஹாரத்தினங்கள் பதிக்கப்பட்டும், மஹாரத்தினங்களால் நிறைந்தும் இருப்பதை அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான்.(13,14அ) அது கஜங்கள் {யானைகள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, ரதங்களால் {தேர்களால்} நிறைந்து, லங்கையின் ஆபரணம் போல் ஒளிர்வதாக அவன் நினைத்தான். அங்கே ராவணனின் சமீபத்திலேயே {ராவணனின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே} ஹனுமான் திரிந்து கொண்டிருந்தான்.(14ஆ,15) இராக்ஷசர்களின் கிருஹத்திலிருந்து கிருஹத்திற்குத் திரிந்தவன், பூந்தோட்டங்களையும், பிராசாதங்களையும் {முற்றங்களையும்} அச்சமின்றி ஆராய்ந்து பார்த்தான்.(16) 

மஹாவேகம் கொண்ட அந்த மஹாவீரியன் {ஹனுமான்}, பிரஹஸ்தனின் நிவேசனத்திற்குத் தாவிச் சென்று, அங்கிருந்து மஹாபார்ஷ்வனுக்குரிய மற்றொரு வேஷ்மத்திற்குத் தாவிச் சென்றான்.(17) பிறகு அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, மேகத்திற்கு ஒப்பானவையும், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோருக்குரியவையுமான நிவேசனங்களுக்கும் தாவிச் சென்றான்[1].(18) அதே போல, அந்த மஹாகபி, மஹோதரன், விரூபாக்ஷன், வித்யுத்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன் ஆகியோரின் பவனங்களுக்கும் தாவிச் சென்றான்.(19,20அ) அதேபோல, மஹாதேஜஸ்வியான அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத்தலைவனான ஹனுமான்}, மதிமிக்க சுகன், ஸாரணன், இந்திரஜித் ஆகியோரின் கிருஹங்களுக்கும் சென்றான்.(20ஆ,இ) அதே போல, அந்த ஹரியூதபன், ஜம்புமாலி, ஸுமாலி ஆகியோருக்குரியவற்றுக்கும் {அவரவரின் வீடுகளுக்கும்} சென்றான்.{21} அதேபோல, அந்த மஹாகபி, ரஷ்மிகேது, சூரியசத்ரு, வஜ்ரகாயன் ஆகியோரின் பவனங்களுக்கும் தாவிச் சென்றான்.(21,22) அந்த மாருதாத்மஜன் {ஹனுமான்}, தூம்ராக்ஷன், ஸம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன் ஆகியோரின் பவனங்களுக்கும்,{23} சுகநாபன், வக்ரன், ஷடன், விகடன், பிரம்ஹகர்ணன், தம்ஷ்டிரன், ராக்ஷசன் ரோமசன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும்,{24} யுத்தோன்மத்தன், மத்தஸ்யன், துவஜகிரீவன், நாதி, வித்யுஜ்ஜிஹ்வன், இந்திரஜிஹ்வன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும், அதே போல ஹஸ்திமுகன்,{25} கராளன், பிசாசன், சோணிதாக்ஷன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும் {அவரவருக்குரிய வீடுகளுக்கும்},(23-26அ) மாருதாத்மஜனான அந்த ஹனுமான், அடுத்தடுத்து சென்றான்.{26ஆ}

[1] கம்பராமாயணத்தில் கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோரின் வசிப்பிடங்களைக் குறித்து விரிவாகச் சொல்லப்படுகிறது. அதில் ஹனுமான் கும்பகர்ணனைக் கண்டு, இவனே ராவணன் என்று ஐயுற்றதாக வருவது குறிப்பிடத்தகுந்தது.

பெரும் புகழ்பெற்றவனான அந்த மஹாகபி {ஹனுமான்}, அந்தந்த சிறந்த பவனங்களிலும், செல்வந்தர்களான அவரவரின் {அந்தந்த ராக்ஷசர்களின்} செல்வத்தைக் கண்டான்.(26ஆ,27) அந்த லக்ஷ்மீவான் {ஹனுமான்}, அவர்கள் அனைவரின் பவனங்களையும் கடந்து சென்றபிறகு, ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை {வசிப்பிடத்தை} அடைந்தான்.(28) ஹரிசார்தூலனான {குரங்குகளில் புலியான} அந்த ஹரிசத்தமன் {குரங்குகளில் மேன்மையான ஹனுமான்}, இவ்வாறு சுற்றி வந்தபோது, விகாரமான கண்களைக் கொண்ட ராக்ஷசிகள், ராவணனின் சமீபத்தில் {ராவணனின் வீட்டருகே} உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்[2].{29} சூலங்கள், முத்கரங்கள் {சம்மட்டிகள்}, ஆகியவற்றைக் கையில் கொண்டவர்களும், சக்திகள் {ஈட்டிகள்}, தோமரங்கள் {வேல்கள்} ஆகியவற்றைத் தரித்தவர்களும்,(29,30அ) பேருடல் படைத்தவர்களும், நானாவித ஆயுதங்களை ஏந்தியவர்களும், விதவிதமான குல்மங்களை {படைப்பிரிவைச்}[3] சேர்ந்தவர்களுமான ராக்ஷசர்களையும், அந்த ராக்ஷசபதியின் கிருஹத்தில் {ராவணனின் வீட்டில்} கண்டான்.(30ஆ,இ)

[2] இத்திறத்து அரக்கிமார்கள் ஈரிருகோடி ஈட்டம்
பத்தியர் உறையும் பத்திப் படர்நெடுந்தெருவும் பார்த்தான்
சித்தியர் உறையும் மாடத்தெருவும் பின்னாகச் சென்றான்
உத்திசை விஞ்சை மாதர் உறையுளைமுறையின் உற்றான்

- கம்பராமாயணம், 5025ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: இப்படிப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நான்கு கோடிபேருமான அரக்கிமார்கள் காதலுடையவர்களாகத் தங்கியுள்ள விரிந்த, வரிசையான நெடுந்தெருவையும் பார்த்துவிட்டு, சித்தர் குலப் பெண்கள் தங்கியிருக்கும் மாடங்களைப் பெற்ற தெருவுக்கும் பின்னர் சென்றான். இடைப்பட்ட திசையில் வித்யாதரிகள் தங்கியுள்ள வீடுகளையும் முறைப்படி அடைந்தான்.

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே குல்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படையின் அடிப்படை பிரிவு 250 மனிதர்களைக் கொண்ட பட்டியாகும். மூன்று பட்டிகளைக் கொண்ட பிரிவு குல்மம் ஆகும். பத்து குல்மங்கள் ஒரு கணமாகும்” என்றிருக்கிறது. மஹாபாரதம், ஆதிபர்வம், 2ம் அத்தியாயத்தில், 19 முதல் 26ம் சுலோகம் வரை படைப்பிரிவுகளின் வகையும் எண்ணிக்கையும் சொல்லப்பட்டுள்ளன. அதில் 19-21 சுலோகங்களில், “ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரைகள் ஒரு பட்டியை அமைக்கின்றன. மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகத்தை அமைக்கின்றன. மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் ஒரு கணமென அழைக்கப்படுகிறது. மூன்று கணங்கள் ஒரு வாஹினியாகும்” என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 34ம் சுலோகத்தில் வாஹினியும் குறிப்பிடப்படுகிறது {1:2:19-26}.  மஹாபாரதம், உத்யோக பர்வத்தில், 156ம் அத்தியாயத்தில், “இருநூற்றைம்பது மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும். மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்றழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும் என்றிருக்கிறது {5:156}

சிவப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான குதிரைகளையும்,{31} நற்குலத்தில் பிறந்தவையும், அழகிய ரூபம் கொண்டவையும், பகைவரின் கஜங்களை {யானைகளை} அடக்கவல்லவையும், கஜங்களைப் பயிற்றுவிப்பதில் திறம்பெற்றவையும், {இந்திரனின் யானையான} ஐராவதத்திற்கு இணையானவையும்,{32} யுத்தத்தில், பகைவரின் சைனியங்களை அழிக்கவல்லவையுமான கஜங்களை அந்தக் கிருஹத்தில் கண்டான். அவை, மழைமேகங்களைப் போல, எப்போதும் நீரைப் பொழியும் {அருவிகளுடன் கூடிய} கிரிகளைப் போல மதம் பெருக்கின.{33} இடி மேகம்போல கோஷிப்பவையும், சமரில் பகைவரால் வெல்லப்பட முடியாதவையும்,(31-34அ) ஜாம்பூநதத்தால் {பொன்னால்} அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்தவையுமான ஆயிரக்கணக்கான வாஹினிகள் {படைப்பிரிவுகள்},{34ஆ} ஹேமஜாலங்களால் {பொன் வலைகளால்} மறைக்கப்பட்டு,  இளம் ஆதித்யனுக்கு ஒப்பாக ராக்ஷசேந்திரன் ராவணனின் நிவேசனத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.(35)

மாருதாத்மஜனான அந்தக் கபி {வாயுமைந்தனும், குரங்குமான ஹனுமான்}, விதவிதமான வடிவங்களிலான சிபிகைகளையும் {பல்லக்குகளையும்}, சித்திரமான லதாகிருஹங்களையும் {கொடிமாடங்களையும்}, சித்திரசாலை கிருஹங்களையும்,{36} வேறு கிரீடகிருஹங்களையும் {விளையாட்டு அரங்கங்களையும்}, மரத்தாலான பர்வதங்களையும் {செய்குன்றுகளையும்}, காமத்திற்கான கிருஹங்களையும், ரம்மியமான திவாகிருஹத்தையும் {மனமகிழ் மன்றங்களையும்},{37} ராக்ஷசேந்திரன் ராவணனின் நிவேசனத்தில் கண்டான்.(36-38அ) மந்தரகிரிக்கு ஒப்பானதும், மயூரங்களின் கூட்டங்களால் நிறைந்ததும்,{38ஆ} கொடிஸ்தம்பங்கள் மிகுந்ததுமாக அந்த உத்தம பவனத்தைக் கண்டான். அனேக ரத்தினங்களாலும், நிதிஜாலங்களாலும் {செல்வக் குவியல்களாலும்} நிறைந்ததும்,{39}  தீரர்களால் நிர்வகிக்கப்பட்டதுமான அது, பூதபதியின் {சிவனின் / குபேரனின்} கிருஹத்தைப் போலிருந்தது.(38ஆ-40அ)

அந்த வேஷ்மம், ரத்தினக் கதிர்களாலும், சூரியக் கதிர்களைப் போன்ற ராவணனின் தேஜஸ்ஸாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(40ஆ,41அ) அங்கே, ஜாம்பூநதத்தாலான {பொன்னாலான} சயனங்களையும் {மஞ்சங்களையும்}, ஆசனங்களையும், முக்கியமான பாத்திரங்களையும் அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத் தலைவன் ஹனுமான்} கண்டான்.(41ஆ,42அ) மது அசவத்தில் {தேனில் செய்யப்பட்ட மதுவில்} நனைந்தவையும், மணியாலானவையுமான பாத்திரங்களால் நிறைந்ததாகவும்,{42ஆ} குபேரனின் பவனத்தைப் போல மனோஹரமானதாகவும், நெரிசலற்றதாகவும், நூபுரங்களின் {சிலம்புகளின்} கோஷங்களாலும், மேகலைகளின் ஒலியாலும்,{43} ஆழ்ந்த ஒலியெழுப்பும் மிருதங்கங்கள், கைத் தாளங்களின் கோஷத்தாலும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஸ்திரீ ரத்தினங்களால் {சிறந்த பெண்களால்} நிறைந்த பிராசாதங்களுடன் {முற்றங்களுடன்} கூடியதாகவும், அழகிய நீண்ட கட்டுகளைக் கொண்டதாகவும் இருந்த,{44} அந்த மஹாகிருஹத்திற்குள் ஹனுமான் பிரவேசித்தான்.(42ஆ-45)

சுந்தர காண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 45


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை