Showing posts with label மயன். Show all posts
Showing posts with label மயன். Show all posts

Tuesday, 23 July 2024

இராவணன், இந்திரஜித் சாகசங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 007 (25)

Feats of Ravana and Indrajith | Yuddha-Kanda-Sarga-007 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்கள் அனைவரும், ராவணனின் வலிமையைப் புகழ்ந்து அவனுக்கு நம்பிக்கை ஊட்டி, வானரர்களின் படையை அழிப்பதற்கும், ராமனைக் கொல்வதற்கும் இந்திரஜித் ஒருவனே போதுமானவன் என்றது...

Rakshasas praising Ravana

இராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், மஹாபலவான்களான ராக்ஷசர்கள் அனைவரும், ராக்ஷசேஷ்வரனான ராவணனிடம் கைக்கூப்பியபடியே பேசினார்கள்.{1} நீதிக்குப் புறம்பானவர்களும், புத்தியில்லாதவர்களும், பகைவரின் தரப்பை அறியாதவர்களுமான அவர்கள்,(1,2அ) "இராஜரே, பரிகங்கள் {இரும்பு முள் பதித்த கதாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, ரிஷ்டிகள் {கத்திகள்}, சூலங்கள், பட்டசங்கள் {குறுக்குக் கத்திகள்} நிறைந்த நம் பலம் {படை} மகத்தானது. நீர் ஏன் வருந்துகிறீர்?(2ஆ,3அ) போகவதியை {பாதாளத்திலுள்ள போகவதி நகரை} அடைந்து பன்னகர்களுடனான யுத்தத்தில் நீர் வென்றீர்.{3ஆ} கைலாச சிகரவாசியும், யக்ஷர்கள் பலரால் சூழப்பட்டவனுமான தனதன் {குபேரன்}, மஹத்தான போரைச் செய்த உமக்கு வசப்பட்டான்.(3ஆ,4) விபுவே {தலைவரே}, மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} கொண்ட நட்பினால், லோகபாலன் என்றும், மஹாபலவான் என்றும் செருக்கிலிருந்த அவன் {குபேரன்}, உம்மால் போரில் வீழ்த்தபட்டான்.(5) யக்ஷர்களைக் கூட்டங்கூட்டமாகக் கொன்றும், நடுங்கச் செய்தும், சிறையில் வைத்தும், கைலாச சிகரத்தில் இருந்து இந்த {புஷ்பக} விமானத்தை நீர் அபகரித்தீர்.(6) 

Wednesday, 1 November 2023

ஸ்வயம்பிரபை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 51 (19)

Swayamprabha | Kishkindha-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பொன்மாளிகையின் கதையை ஹனுமானுக்குச் சொன்னது; குகைக்குள் நுழைந்த வானரர்கள் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்த ஸ்வயம்பிரபை...

Swayamprabha giving fruits and tuber to Hanuman
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம்

இவ்வாறு கேட்ட ஹனுமான், அங்கே கிருஷ்ணார்ஜிதம் {கருப்பு மான்தோல்} அணிந்திருந்தவளும், தர்மசாரிணியும், மஹாபாக்கியவதியுமான அந்த தபஸ்வினியிடம் {ஸ்வயம்பிரபையிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னான்:(1) ”பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டுக் களைப்புடன் எங்கும் திரிந்து, பிலத்தின் இருளில் மூழ்கியிருக்கும் இவ்விடத்தில் திடீரெனப் பிரவேசித்தோம்.(2) தரணியின் மஹத்தான பிளவுக்குள் பிரவேசித்த நாங்கள், இவற்றையும், இவ்வித பாவத்தையும் {உணர்வையும்} அடைந்து, ஒப்பிட அற்புதமான விதவிதமானவற்றையும் {உவமை சொல்வதற்கரிய பலவகையானவற்றையும்} கண்டு, {அசுர மாயையோ என்று} பெரிதும் கலக்கமுற்று, நனவிழந்தவர்களானோம். 

இளம் ஆதித்யனின் ஒளியுடன் கூடிய இந்த காஞ்சன விருக்ஷங்கள் {பொன் மரங்கள்} யாருடையவை?(3,4) தூய்மையானவையும், உண்ணத்தகுந்தவையுமான கிழங்குகளும், பழங்களும், காஞ்சன விமானங்களுடனும், புடம்போட்ட தங்கச் சாளரங்களுடனும் கூடியவையும், மணிஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெள்ளியாலானவையுமான கிருஹங்களும்,(5,6அ) புஷ்பித்தவையும், பழங்கள் நிறைந்தவையும், புண்ணிய நறுமணம் கமழ்பவையும், ஜம்பூநதமயமானவையுமான இந்த மரங்களும் யாருடைய தேஜஸ்ஸால் விளைந்தன?(6ஆ,7அ) விமலமான ஜலத்தில் ஜனித்த பத்மங்கள் {தெளிந்த நீரில் பிறந்த தாமரைகள்} காஞ்சனமாகவும், மத்ஸ்யங்களும் {மீன்களும்}, ஆமைகளும் சுவர்ணமாகவும் காணப்படுவது எவ்வாறு?(7ஆ,8அ) உன் மஹிமையையும், இஃது எவருடைய தபோ பலம் என்பதையும் அறியாதவர்களான எங்கள் அனைவருக்கும், அனைத்தையும் விவரிப்பதே உனக்குத் தகும்” {என்றான் ஹனுமான்}.(8ஆ,9அ)

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், தர்மசாரிணியான அந்த தபஸ்வினி, சர்வ பூதங்களின் நலத்திலும் {அனைத்து உயிரினங்களின் நலனிலும்} அர்ப்பணிப்புள்ள ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினாள்:(9ஆ,10அ) “மயன் என்ற பெயரைக் கொண்டவனும், மஹாதேஜஸ்வியும், மாயாவியுமான தானவரிஷபனே, தன் மாயையின் மூலம் இந்தக் காஞ்சன வனம் அனைத்தையும் நிர்மாணித்தான்.(10ஆ,11அ) எவன் காஞ்சனமயமானதும், திவ்யமானதுமான இந்த உத்தம பவனத்தை நிர்மாணித்தானோ, அவனே {மயனே} முன்பு தானவ முக்கியர்களின் விஷ்வகர்மனாக {அசுரத்தச்சனாக} இருந்தான்.(11ஆ,12அ) 

அவன் {மயன்}, மஹத்தான இந்த வனத்தில், ஆயிரம் வருஷங்கள் தபம் பயின்று, சர்வ ஔஷஸன தனத்தையும் பிதாமஹரிடம் வரமாகப் பெற்றான்[1].(12ஆ,13அ) சர்வத்தையும் வகைப்படுத்தி, சர்வ காமேஷ்வரனாக {தான் விரும்பிய அனைத்தையும் ஆள்பவனாக} இருந்த அந்த பலவான், இந்த மஹாவனத்திலேயே கொஞ்ச காலம் சுகமாக வசித்திருந்தான்.(13ஆ,14அ) அவன் {மயன்}, அப்சரஸ் ஹேமையுடன் கூடியிருந்தபோது, ஈசனான புரந்தரன், அசனியை {வஜ்ராயுதத்தை / இடியை} ஏவி, அந்த தானவபுங்கவனை {மயனைக்} கொன்றான்.(14ஆ,15அ) சாஸ்வதமான காம போகங்களுடன் கூடிய {ஆசைப்படும் இன்பங்களைத் தரவல்ல} ஹிரண்யமயமான இந்தக் கிருஹமும், இந்த உத்தமவனமும் அந்த ஹேமைக்கு பிரம்மனால் தத்தம் செய்யப்பட்டவையாகும்.(15ஆ,16அ)

[1] “உசனஸ் என்றும் அழைக்கப்படும் சுக்ராசாரியரின், சிற்ப சாஸ்திரக் கல்வி எனும் செல்வத்தையும் பிரம்மதேவனிடம் வரமாகப் பெற்றான்” என்பது இங்கே பொருள். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சுக்கிராசாரியர், அசுரர்களின் குருவும், புரோஹிதருமாவார். அவர், வெறுங்காற்றில் பொருட்களை வருவித்து, திவ்யமான கட்டுமானங்களை உருவாக்கும் கட்டடக் கலை பொறியியலை முறைப்படுத்தியவராவார். அதுபோலவே, சில மனிதர்களும் தாங்கள் சிறிதும் கஷ்டப்படாமல் செல்வத்தைப் பெறத் தங்களுக்கு நெருக்கமான தேவர்களிடம் மன்றாடுகின்றனர். சுக்ராசாரியரால் வெற்றுவெளியில் இருந்து தேவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியுமென்றால், இந்தச் செயல்பாடுகளைத் தவிர வேறேதும் இல்லாத தேவர்களாலும் தங்களுக்கு வேண்டிய வளங்களை அளிக்க முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. எனவே, இந்த மயன் ஓர் அசுரனாக இருப்பதால், தங்கள் அசுரப் புரோஹிதரான சுக்ராசாரியரின் செல்வத்தை, அதாவது கட்டுமானப் பொறியியல் ஞானத்தைக் கொள்ளையிட விரும்பினான். பிரம்மனும் தேவர்களுக்கு நன்மைசெய்ய இந்தக் குறுக்குவழியில் அதை வழங்கினான்” என்றிருக்கிறது.

Swayamprabha giving a fruit to a vanara

வானரோத்தமா {வானரர்களில் உயர்ந்தவனே}, மேருசாவர்ணியின் மகளும், ஸ்வயம்பிரபையுமான {ஸ்வயம்பிரபை என்ற பெயரைக் கொண்டவளுமான} நான், ஹேமையின் இந்த பவனத்தை ரக்ஷித்து வருகிறேன்.(16ஆ,17அ) என் பிரியசகியும் {விருப்பத்திற்குரிய தோழியும்}, நிருத்தகீதவிசாரதையுமான {ஆடல், பாடல்களில் வல்லவளுமான} ஹேமை, இந்த மஹாபவனத்தை ரக்ஷிக்கும் வரத்தை எனக்கு தத்தம் செய்தாள்.(17ஆ,18அ) என்ன காரியத்திற்காக, அல்லது எதற்கு ஹேதுவாக {என்ன காரணத்திற்காக} காந்தாரங்களில் திரிகிறீர்கள்? மேலும், கடப்பதற்கரிய இந்த வனத்தை நீங்கள் அனைவரும் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?(18ஆ,19அ) உண்ணத்தகுந்த, தூய்மையான கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, பானங்களையும் பருகிவிட்டு, சர்வத்தையும் என்னிடம் சொல்வதே உனக்குத் தகும்” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(19ஆ,இ)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Wednesday, 12 April 2023

அஷ்ட ராக்ஷசர்கள் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 54 (30)

Eight Rakshasas | Aranya-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு மத்தியில் சில ஆபரணங்களை வீசி எறிந்த சீதை; பெருங்கடலைக் கடந்த ராவணன்; சீதையை அடைத்து வைத்தது; எட்டு ராக்ஷசர்களை ஜனஸ்தானத்தில் நியமித்தது...

Sita threw some of her jewels towards the monkeys when Ravana abducted her

கடத்தப்படும் வைதேஹி, நாதன் {காப்பவர்} யாரையும் காணாதவளாக, கிரி சிருங்க ஸ்தானத்தில் {ஒரு  மலையின் உச்சியில்} ஐந்து வானர புங்கவர்களை தரிசித்தாள்.(1) அகன்ற விழிகளையும், அழகிய இடையையும் கொண்ட அந்த பாமினி {அழகிய பெண்}, கனகத்தின் பிரகாசத்துடன் கூடிய பட்டு உத்தரீயத்துடன் {பொன்னிறத்தாலான பட்டு மேலாடையுடன்} மங்கல ஆபரணங்களையும், "இராமருக்கு அறிவிப்பார்கள்" என்று {நினைத்து} அவர்களின் மத்தியில் போட்டாள்[1].(2,3அ) பூஷணங்களுடன் கூடிய வஸ்திரத்தை அவர்களின் மத்தியில் {அந்த ஐந்து வானரர்களின் மத்தியில் அவள்} விட்டெறிந்தபோது, கலக்கத்தில் இருந்த தசக்ரீவன் அந்த கர்மத்தை {சீதையின் செயலை} உணர்ந்தானில்லை.(3ஆ,4அ) இளஞ்சிவப்புக் கண்களுடன் கூடிய வானர ரிஷபர்கள், அப்போது அழுது கொண்டிருந்தவளும், விசாலாக்ஷியுமானன அந்த சீதையை நிமிஷமற்ற நேத்திரங்களுடன் தரிசித்தனர் {சிமிட்டாத கண்களுடன் கண்டனர்}.(4ஆ,5அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை தன் மேலாடையைக் கிழித்து, அதில் ஆபரணங்களைப் பொதிந்து போட்டாள் என்று சிலரும், மேலாடை முழுவதையும், ஆபரணங்களையும் போட்டாள் என்று சிலரும், ஆபரணங்கள் பொதியப்பட்ட மொத்த மேலாடையையும் போட்டாள் என்று சிலரும் சொல்கிறார்கள். இன்றைய வேட்டியைப் போன்றே அன்றைய பெண்கள் சீலை உடுத்தினார்கள். ஆனால் தங்கள் மார்புகளை மறைக்க மேலாடையும் அணிந்தார்கள். வேட்டி போன்ற சீலை, மார்புக்கச்சை, அதற்கு மேல் மார்பை மறைக்கும் மேலாடை என்று மூன்று துண்டுகளாக ஆடைகளை அணிந்தார்கள். ஆண்கள் தங்கள் தோள்களில் மேலாடை {துண்டு} அணிவார்கள்" என்றிருக்கிறது.

அந்த ராக்ஷசேசுவரன், அழுது கொண்டிருந்த மைதிலியை எடுத்துக் கொண்டு பம்பையைக் கடந்து, லங்காபுரியை நோக்கிச் சென்றான்.(5ஆ,6அ) இராவணன், மஹாவிஷத்தையும் கூரிய பற்களையும் கொண்ட புஜகீயை {பெண்பாம்பைத்} தன் மடியில் வைத்துக் கொள்வதைப் போல, தன் மரணத்தின் வடிவமாகத் திகழ்பவளைக் கடத்திச் செல்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான்.(6ஆ,7அ) அவன், வில்லில் இருந்து ஏவப்படும் சரத்தைப் போல சீக்கிரமாக வனங்களையும், சரிதங்களையும் {ஆறுகளையும்}, சைலங்களையும் {மலைகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்} ஆகாய வழியில் கடந்து சென்றான்.(7ஆ,8அ) திமிங்கலங்களும், முதலைகளும் வசிக்கும் வருணாலயமும் {வருணனின் இடமும்}, அக்ஷயமானதும் {வற்றாததும்}, சரிதங்களின் சரண்யமுமான {ஆறுகளின் புகலிடமுமான} சாகரத்தை அடைந்து, நன்றாக {விரைவாகக்} கடந்து சென்றான்.(8ஆ,9அ) வைதேஹி கடத்தப்படும்போது கலக்கமடைந்த வருணாலயம் {பெருங்கடல்}, தன் அலைகளை மேலெழும்பச் செய்து திருப்பிக் கொண்டது. மீன்களும், மஹா உரகங்களும் {பெரும்பாம்புகளும்} தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன[2].(9ஆ,10அ) அப்போது அந்தரீக்ஷத்தில் {வானத்தில்} சென்ற சாரணர்கள், "தசக்ரீவனின் அந்தமிது {முடிவு இது}" என்ற சொற்களைச் சொன்னார்கள், சித்தர்களும் அவ்வாறே சொன்னார்கள்.(10ஆ,11அ)

[2] 7அ முதல் 10அ வரையுள்ள சுலோகங்களின் பொருள், ராவணன் சென்ற வழியைக் குறிப்பிடுகிறது. இராவணன் பஞ்சவடியில் இருந்து கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சீதையைக் கடத்திச் சென்று ஜடாயுவை சந்தித்தது வரை எவ்வளவு தொலைவு? ரதம் தகர்ந்த பிறகு, சென்ற சர்க்கத்தில் சீதை அழுது புலம்பி, பின்பு சோர்ந்து போன சமயம் வரை கடந்தது எவ்வளவு தொலைவு? அங்கிருந்து இந்த வானரங்கள் இருக்கும் மலை வரை எவ்வளவு தொலைவு? இங்கே குறிப்பிடப்படும் பம்பை எங்கிருக்கிறது? வானரங்கள் இருந்த மலைக்கும் இங்கே குறிப்பிடப்படும் பம்பைக்கும் எவ்வளவு தொலைவு? பம்பைக்குப் பிறகு பல காடுகள், ஆறுகள், மலைகள், தடாகங்கள் ஆகியவற்றைக் கடந்து சாகரத்தை அடைந்ததாக இங்கே குறிப்பிருக்கிறது. ஆனால் இதுவரை பஞ்சவடியில் இருந்து ராவணன் எந்தத் திசையில் பயணித்தான் என்ற குறிப்பில்லை. ஒரு வேளை பிறகு வரக்கூடும். முதலைகள் கடலில் வசிக்காது என்பது சிலரின் வாதம். ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் உப்பு நீர் முதலைகள் இன்றும் கடலோரங்களில் இருக்கின்றன. ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய நிலை என்னவோ? இந்த சர்க்கமும் ராவணனின் லங்காபுரி எங்கிருந்தது என்பதைக் கணிப்பதற்கான தகவல்களைத் தரும் அத்தியாயமாகும். இவை யாவும் ராமாயணம் உண்மையாக நடந்த நிகழ்வே என்று சாதிக்க விரும்புகிறவர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய செய்திகள் ஆகும். இராவணனின் லங்காபுரி, மத்தியப்ரதேசித்தில் இருந்தது, குஜராத்தின் அருகில் இருந்தது, இன்றைய இலங்கைத் தீவில் இருந்தது என்று நிறுவ முற்படுபவர்களுக்காகவே, அவர்களின் ஆய்வுக்காகவே இங்கே இந்தப் பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதிகாசங்களில் உள்ள நெறிகளும், தத்துவங்களும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை ஈட்டும் வழிமுறைகளும்தான் முக்கியம் என்பவர்களுக்கு இத்தகவல்கள் அனைத்தும் அவசியமற்றவையே.

அந்த ராவணன், தனக்கான மிருத்யு ரூபிணியும் {தன் மரணத்திற்கான வடிவமாகத் திகழ்பவளும்}, துடித்துக் கொண்டிருப்பவளுமான சீதையை விலாவில் எடுத்துக் கொண்டு லங்காபுரிக்குள் பிரவேசித்தான்.(11ஆ,12அ) நன்கு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட மஹாபாதைகளுடன் கூடிய லங்காபுரியை அடைந்தவன், நல்ல காவல் நிறைந்த வாயில்கள் பலவற்றைக் கொண்ட தன் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தான்.(12ஆ,13அ) இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் மாயா அசுரியை {வைத்ததைப்} போல வைத்தான் {இறக்கி விட்டான்}[3].(13ஆ,14அ) 

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், மேற்கண்ட ஒருவடிவிலும், "இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் ஹேமை என்ற தன் காதலியை மாயமான கருந்துளைக்குள் வைத்ததைப் போல வைத்தான்" என்றும், "இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் தன் குருவான சுக்கிராசாரியரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட மாய சாஸ்திரங்களை ஒரு மாயத்துளைக்குள் வைத்ததைப் போல வைத்தான்" என்றும் மூன்று வடிவங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Sita in garden and Ravana with eight Rakshasas

தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, கோரத்தோற்றம் கொண்ட பிசாசிகளிடம் {பின்வருமாறு} சொன்னான், "என் ஒப்புதலில்லாத எந்த புமானும் {ஆணும்}, ஸ்திரீயும் இந்த சீதையை எவ்வழியிலும் பார்க்கக்கூடாது.(14ஆ,15அ) முத்துக்கள், மணிகள் {ரத்தினங்கள்}, சுவர்ணங்கள், வஸ்திரங்கள், ஆபரணங்கள் என எதை எதை இவள் இச்சித்தாலும் அவை அனைத்தையும் இவளுக்கு என் விருப்பப்படியே {எந்த தயக்கமுமின்றி} கொடுப்பீராக.(15ஆ,16அ) எவள்[4], அறியாமலோ, அறிந்தோ வைதேஹிக்குப் பிரியமற்ற சொற்கள் எதையும் சொல்வாளோ அவளுக்கு ஜீவிதம் பிரியமற்றுப் போகும்" {என்றான் ராவணன்}[5].(16ஆ,17அ)

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அங்கே இருந்த காவலர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் இங்கே பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றிருக்கிறது. 

[5] வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய்
செஞ்சவே திரு உருத் தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை
சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ

- கம்பராமாயணம் 3461ம் பாடல், சடாயு உயிர் நீத்த படலம்

பொருள்: வஞ்சிக் கொடி போன்ற சீதையை அரக்கன் ராவணன் விரைவாக எடுத்துக் கொண்டு போய் சீதையின் திருவுருவத்தை நேரடியாகத் தீண்ட அஞ்சியவனாக தன் வீட்டிற்கு இடையில் இருந்த வனத்தில் நஞ்சின் இயல்பைக் கொண்ட அரக்கியரின் நடுவே சிறை வைத்தான்.

பிரதாபவானான ராக்ஷசேந்திரன் அந்த ராக்ஷசிகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு அந்த அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்து, "{இனி} என்ன செய்வது" என்று சிந்தித்து, மஹா வீரியவான்களும், பிசிதாசனர்களுமான {பச்சை மாமிசம் உண்பவர்களுமான} எட்டு ராக்ஷசர்களைப் பார்த்தான்.(17ஆ,18) மஹாவீரியனும், வரதானத்தில் மோஹித்திருந்தவனுமான அவன் {தான் பெற்ற வரத்தினால் உண்டான மயக்கத்தில் இருந்த ராவணன்}, பலத்தாலும், வீரியத்தாலும் புகழப்படுபவர்களை {அந்த எட்டு ராக்ஷசர்களைக்} கண்டு, அவர்களிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(19) "நானாவித படைக்கலங்களை {ஆயுதங்களைத்} துரிதமாக எடுத்துக் கொண்டு, இதற்கு முன்பு கரனின் ஆலயமாக இருந்து {தற்போது} ஹதஸ்தானமான {கொலைக்களமான} ஜனஸ்தானத்திற்கு இங்கிருந்து சீக்கிரமாகச் செல்வீராக.(20) அச்சத்தை தூரமாக வீசியெறிந்துவிட்டு, ராக்ஷசர்கள் கொல்லப்பட்டு சூனியமாகி இருக்கும் அந்த ஜனஸ்தானத்தில் உங்கள் பௌருஷத்தையும் {ஆண்மையையும்}, பலத்தையும் நம்பி வசித்திருப்பீராக.(21) 

மஹாவீரியம் பொருந்திய பல சைனியங்கள் ஜனஸ்தானத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், யுத்தத்தில் ராமனின் சாயகங்கள் {கணைகள்} தூஷணனுடனும், கரனுடனும் {அவற்றை} மொத்தமாக அழித்தன.(22) எனவே, அபூர்வமான {எப்போதும் இல்லாத} குரோதமும், தைரியமும் என்னிடம் பெருகுகின்றன. பொறுக்க முடியாத மஹத்தான வைரம் {பகை} ராமன் மீது உண்டாகிறது.(23) என் பகைவனிடம் அந்த வைரத்தைச் செலுத்த இச்சிக்கிறேன். போரில் பகைவனைக் கொல்லாமல் உண்மையில் நான் நித்திரையை அடைய மாட்டேன்.(24) கர தூஷணர்களைக் கொன்ற அந்த ராமனை நான் இப்போது கொன்றால், தனமற்றவன் தனத்தை அடைவதைப் போன்ற மகிழ்ச்சியை அடைவேன்.(25) நீங்கள் ஜனஸ்தானத்தில் வசித்திருக்கும்போது, ராமன் என்ன செய்யப் போகிறான் என்ற செயல்பாட்டைச் சரியாக {என்னிடம்} கொண்டு வருவீராக.(26) சர்வ நிசாசரர்களும் {இரவுலாவிகளும்} இவ்வாறு அலட்சியமின்றி சென்று, ராகவனை வதம் செய்வதற்கான பிரயத்னங்களையும் {முயற்சிகளையும்} சதா செய்து கொண்டிருப்பீராக.(27) இரணமூர்த்தங்களில் {போர்முனைகளில்} பலமுறை உங்கள் பலத்தை அறிந்திருப்பதால் மட்டுமே உங்களை அந்த ஜனஸ்தானத்தில் நியமிக்கிறேன்" {என்றான் ராவணன்}.(28)

பிரியமானவையும், மஹா அர்த்தங்களைக் கொண்டவையுமான வாக்கியங்களை அப்போது கேட்ட அஷ்ட ராக்ஷசர்களும், ராவணனை வணங்கிவிட்டு, ஒன்று சேர்ந்தவர்களாக, {ஒருவருக்கும்} புலப்படாத தோற்றத்தை ஏற்று, லங்கையை விட்டு ஜனஸ்தானம் எங்கிருக்கிறதோ அங்கே சென்றனர்.(29) பிறகு, ராக்ஷசனான அந்த ராவணன், சீதையைக் கண்டதிலும், அந்த மைதிலியைக் கைப்பற்றியதிலும் பெரும் மகிழ்ச்சியடைந்தான். இராமனிடம் உத்தம வைரத்தை உறுதி செய்தும்கூட, மோஹத்தால் {மூட மயக்கத்தால்} மகிழ்ந்திருந்தான்.(30)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை