Viradha | Aranya-Kanda-Sarga-02 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனையும், லக்ஷ்மணனையும் தாக்கி, சீதையை அபகரித்த விராதன்...
அந்த ஆதித்யத்தை {விருந்தோம்பலை} ஏற்றுக் கொண்ட ராமன், சூரியன் உதிக்கும் முன்னர், சர்வ முனிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு வனத்திற்குள் நுழைந்தான்.(1) நானாவித மிருக கணங்கள் {விலங்குக் கூட்டங்கள்} நிறைந்ததும், ரிக்ஷங்களாலும், சார்தூலங்களாலும் {கரடிகளாலும், புலிகளாலும்} சேவிக்கப்பட்டதும், அழிந்த விருக்ஷங்கள் {பட்டுப்போன / முறிக்கப்பட்ட மரங்கள்}, கொடிகள், புதர்கள் நிறைந்ததும், காண்பதற்கரிய நீர்மடுக்களைக் கொண்டதும்,{2} பறவைகளின் ஒலிகள் இல்லாததும், நீர்க்கோழிகளால் ஒலிக்கப்பெற்றதுமான வனமத்தியை {நடுக்காட்டை} லக்ஷ்மணனுடன் கூடிய ராமன் கண்டான்[1].(2,3)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன் இப்போது திரிந்து வரும் தண்டகவனம், தன் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியே என்றாலும் அது கைவிடப்பட்ட வனமாகும். இக்ஷ்வாகுவின் கடைசி மகன் தண்டன், தன் ராஜ்ஜியத்திற்குள் அரக்கத்தனமான செயல்களைச் செய்து வந்தான். அவனது தந்தையான இக்ஷ்வாகு, தண்டன் குறித்த பல புகார்களைக் குடிமக்களிடமிருந்து கேட்டதால் கோபமடைந்து, தன் மகன் தண்டனை நாடு கடத்தினான். தண்டன், விந்திய மலைத்தொடரில் தஞ்சமடைந்து, தனக்காக மதுமந்தம் {மதுமதி} என்ற அழகிய தலை நகரை அமைத்துக் கொண்டான். அவன் அசுரர்களுடன் தோளோடு தோள் நின்றதால், அசுரகுரு சுக்ராசாரியரின் சீடனானான். ஒருநாள் முனிவர் சுக்கிராசாரியர் ஆசிரமத்தில் இல்லாதபோது, சுக்ரரின் மூத்த மகள் அரஜையைக் கண்டு, அவளது எதிர்ப்புகள் பலவற்றையும் மீறி அவளைத் துன்புறுத்தினான். பின்னர் இதைக் குறித்து அறிந்த போது, கோபமடைந்த சுக்கிராசாரியர், அடுத்தடுத்த ஏழுநாட்களில் தலைநகரான மதுமந்தத்தைச் சுற்றி எழும் மணற்புயலில் மொத்த ராஜ்ஜியத்துடன் சேர்ந்து வீழுமாறு அவனைச் சபித்தார். அடுத்தடுத்த ஏழு நாட்களில் நேர்ந்த மணற்புயலில் மொத்த ராஜ்ஜியமும் மண்ணுக்கடியில் சென்ற பின்னர் "தண்டகம்" {தண்டனின் வீடு} என்றழைக்கப்பட்ட வனமானது. சாபத்திற்கு அஞ்சிய மக்கள், அந்த மதுமந்தத்தில் இருந்து மேலும் தெற்கில் தப்பி ஓடி சேர்ந்த இடம் "ஜனஸ்தானம்" {மக்களின் இடம்} என்றழைக்கப்பட்டது. மிகப் பிற்காலத்தில் ராமனின் ஆதிக்கம் தொடங்கிய போது, தண்டக வனம், ஜனஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் ராவணனின் ஆதிக்கத்திற்குச் சென்றது. இராவணன், கரன் என்ற பெயர் கொண்ட ஒரு ராட்சசனை ஜனஸ்தானத்தின் பாதுகாவலனாக நியமித்திருந்தான். அங்கே ராமன் தன் ஆசிரமத்தைக் கட்டியதும், சூர்ப்பணகை வந்ததுமான இடம் பஞ்சவடி {இன்றைய நாசிக்} {ஐந்து ஆலமரங்கள் இருக்கும் இடம்} ஆகும். அங்கிருந்தே சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். காட்டில் வசிக்கும் முனிவர்களிடம், வாழ்வதற்கான அமைதியான இடம் குறித்து ராமன் கேட்கும் போதெல்லாம், அவன் ஜனஸ்தானத்தை அடையும் வரை மேலும் மேலும் தெற்கு நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தார்கள் தண்டகவனத்தின் முனிவர்கள். ஒருகாலத்தில் ராமனின் {ராமனுடைய மூதாதையரின்} ராஜ்ஜியப் பகுதிகளாக இருந்த அவ்விடங்களில் ராக்ஷசர்களின் ஆதிக்கத்தை அழிப்பதற்காக அவ்வாறு அவர்கள் மறைமுகமாகச் செயல்பட்டனர்" என்றிருக்கிறது.
சீதை சகிதனான காகுத்ஸ்தன் {ராமன்}, மிருகங்களில் கோரமானவனும், கிரி சிருங்கத்திற்கு {மலைச் சிகரத்திற்கு} ஒப்பானவனும், புருஷாதகனும் {மனித மாமிசம் உண்பவனும்}, பேரொலி படைத்தவனுமான ஒருவனைக் கண்டான்.(4) ஆழ்ந்துநோக்கும் கண்களையும், பெரும் வாயையும், சீரற்று நீண்டு பெருத்த பொல்லாத தொந்தியையும், மிக கோரமான வடிவத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(5) கொழுப்பால் நனைந்து, உதிரஞ்சொட்டும் புலித்தோலுடுத்தியவனும், அந்தகனைப் போன்ற அகன்ற வாயைக் கொண்டவனுமான அவன், சர்வ பூதங்களுக்கும் {அனைத்து உயிரினங்களுக்கும்} அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.(6) மூன்று சிம்ஹங்கள் {சிங்கங்கள்}, நான்கு வியாகரங்கள் {புலிகள்}, இரண்டு விருகங்கள் {ஓநாய்கள்}, பத்து புள்ளி மான்கள், தந்தங்களும், மதமுங் கொண்ட மஹத்தான கஜத்தின் சிரசு {யானையின் தலை} ஆகியவைகோர்க்கப்பட்ட இரும்பு சூலத்தைக் கொண்டவன், செவிமடுக்க முடியாத குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான்.(7,8அ) அவன், இராமலக்ஷ்மணர்களையும், மைதிலியான சீதையையும் கண்டு, பிரஜைகளை நோக்கியோடும் காலாந்தகனைப் போல பெருங் குரோதத்துடன் அவர்களை நோக்கியோடினான்.(8ஆ,9அ)
பயங்கர முழக்கம் செய்த அவன், மேதினியை அசைக்கப் போகிறவனைப் போல வைதேஹியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு அப்பால் சென்று இதைச் சொன்னான்:(9ஆ,10அ) "அற்ப ஆயுள் கொண்டவர்களே, நீங்கள் இருவரும் {தபஸ்விகளைப் போல} மரவுரி தரித்திருந்தாலும், {போர் வீரர்களைப் போல} சரமும், வில்லும், வாளும் தரித்துக் கொண்டு பாரியை சகிதராக தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்திருக்கிறீர்கள்.(10ஆ,11அ) பெண் சகிதராக வசிக்கும் நீங்கள் எப்பேர்ப்பட்ட தபஸ்விகளாக இருப்பீர்கள்? அதர்மசாரிகளே, பாபிகளே, முனிதூஷகர்களான {முனிவர்களுக்கு இழிவை ஏற்படுத்துபவர்களான} நீங்கள் இருவரும் யார்?(11ஆ,12அ) விராதன் என்ற நாமத்தைக் கொண்ட ராக்ஷசனான நான்[2], நித்தியம் ரிஷிகளின் மாமிசத்தை உண்டு, கடப்பதற்கரிய இந்த வனத்தில் ஆயுதத்துடன் திரிந்து வருகிறேன்.(12ஆ,13அ) நல்லிடையைக் கொண்ட இந்த நாரீ {பெண்}, என் பாரியை ஆவாள்[3]. பாபிகளே, போரில் உங்கள் இருவரின் உதிரத்தையும் நான் பருகப் போகிறேன்" {என்றான் ராக்ஷசன் விராதன்}.(13ஆ,14அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த விராதன் என்ற அரக்கனால் முதல் நோக்கில் அவர்களை அடையாளங்காண முடியவில்லை. அவர்களின் உடல் அமைப்பாலும், விற்கள், கணைகள், வாள்கள் முதலியவற்றைச் சுமந்து செல்வதாலும் அவர்கள் போர்வீரர்களைப் போலத் தெரிகிறார்கள். ஆடை, தலையலங்காரம் ஆகியவற்றால் முனிவர்களைப் போலத் தெரிகிறார்கள். இவன் பரசுராமரைப் போன்று போரிடும் முனிவர்களைக் கண்டதில்லை. விராதன் என்றால் அன்பற்றவன் என்று பொருள். இவன் அரக்கனாகும்படி சபிக்கப்படுவதற்கு முன் லக்ஷ்மி தேவியைத் துதித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த தேவியை சீதையில் கண்டதும் அவன் அவளை ஒரு குழுந்தையைப் போலத் தன் கையில் எடுத்துக் கொள்கிறான். இந்த அரக்கன் அடுத்த வரிகளில் தன்னைக் குறித்தும் சொல்கிறான்" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே விராதன், சீதை தன் "பாரியையாகப்போகிறாள்" என்று சொல்வதை வழக்கமான வகையில் மொழிபெயர்த்தால் "மனைவியாக்கப் போகிறான்" என்ற பொருள் வரும். விராதன் லக்ஷ்மி தேவியின் பக்தன் என்று சொல்லப்படுகிறான். அத்தகைய பக்தனுக்கு இது தகாது. ராமாயணத்தின் மற்றொரு பதிப்பான ஆசாரிய ராமாயணத்தில் பாரியை என்பதற்கு பா - ஒளிமிக்கவள், ஆரியை - துதிக்கத்தக்கவள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது "இந்த ஒளிமிக்கவள் என்னால் துதிக்கத்தகுந்தவள்" என்ற பொருள் வரும். மேலும் 3-2-16ன் படி இவன் சீதையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தையைப் போலக் கையாள்கிறான். சீதை, செல்வத்தின் தலைமை தெய்வமான லக்ஷ்மி தேவி என்பதாலேயே விராதன், ராவணன் போன்ற வெறியர்கள் மிக விரைவாக அபகரிக்கிறார்கள்" என்றிருக்கிறது.
அந்த ஜனகாத்மஜை {ஜானகி / சீதை}, இவ்வாறு கர்வத்துடன் பேசிய துராத்மாவான அந்த விராதனின் துஷ்ட வாக்கியங்களைக் கேட்டுக் கலக்கமடைந்தாள்.(14ஆ,15அ) புயலில் அகப்பட்ட கதலியை {வாழை மரத்தைப்} போல அச்சத்தில் சீதை நடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த மங்கலமானவள் விராதனின் விலாவில் {இடுப்பில்} இருப்பதைக் கண்ட ராகவன் {ராமன்}, வாடிய முகத்துடன் லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(15ஆ,16) "சௌம்யா {மென்மையானவனே}, நரேந்திரரான ஜனகருக்குப் பிறந்தவளும், சுகமாக வளர்ந்தவளும், மங்கல ஆசாரம் கொண்ட என் பாரியையுமான புகழ்மிக்க ராஜபுத்திரி விராதனின் விலாவில் {இடுப்பில்} வைக்கப்பட்டிருப்பதைப் பார்.(17,18அ) நமது நோக்கம் எதுவோ, நமக்கு நடக்க வேண்டுமென வரங்களின் மூலம் கைகேயி பிரியத்துடன் கேட்டது எதுவோ அஃது இன்றே சீக்கிரமாக நடக்கிறது.(18ஆ,19அ) தீர்க்கதரிசனியும் {தொலையோக்குப் பார்வை கொண்டவளும்}, புத்திரனுக்கான ராஜ்ஜியத்தால் {மட்டுமே} திருப்தியடையாதவளும், சர்வ பூதங்களுக்கும் பிரியனான {அனைத்து உயிரினங்களின் விருப்பத்திற்குரியவனான} என்னை வனத்திற்கு அனுப்பியவளுமான என் மத்திய மாதா {கைகேயி} இன்று ஆசை நிறைவேறியவள் ஆவாள்[4].(19ஆ,20) சௌமித்ரி {லக்ஷ்மணா}, பிதா மறைந்ததை விடவும், என் ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்டதை விடவும் வைதேஹியைப் பிறன் ஸ்பரிசிப்பது {தீண்டுவது} எனக்கு அதிக துக்கத்தைத் தருகிறது" {என்றான் ராமன்}.(21)
[4] மனைவி மீது கொள்ளும் மாளாக்காதல் மரியாதைக்குரிய மனிதர்களில் உத்தமனான ராமனையும் இவ்வாறு பேச வைக்கிறது. வேறு எங்கும் ராமன் கைகேயியை விட்டுக் கொடுப்பதில்லை. உண்மையில் ராமன் சாதாரண மனிதனாகத் தெரியும் இத்தகைய இடங்களும், சாதாரணர்கள் மகோன்னதர்களாகத் தெரியும் வேறு சில இடங்களும்தான் மனித மனத்தின் நுட்பங்களை வெளிப்படுத்தி ராமாயணத்தைப் பெருங்காப்பியமாக்குகின்றன.
அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, சோகத்தால் கண்ணீர் பெருக்கியபடியே இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணன் குரோதத்தால் நாகத்தைப் போல் சீறியபடியே {பின்வருமாறு} சொன்னான்:(22) "காகுத்ஸ்தரே, வாசவனுக்கு ஒப்பான பூதநாதரான நீர் {இந்திரனுக்கு ஒப்பானவரும், உயிரினங்களின் தலைவருமான நீர்}, அடியவனான நான் இருக்கும்போது அநாதையைப் போல ஏன் வருந்துகிறீர்?(23) குரோதமடைந்திருக்கும் நான், இப்போது ஏவப்போகும் சரத்தால் கொல்லப்பட்டு உயிரிழக்கும் ராக்ஷசன் விராதனின் சோணிதத்தை {ரத்தத்தை} பூமி உண்மையில் பருகப் போகிறது.(24) பரதன் ராஜ்ஜியத்தில் ஆசை கொண்ட போது, என்னுள் நிறைந்த குரோதத்தை, வஜ்ரீ வஜ்ரத்தை அசலத்தில் {இந்திரன் வஜ்ரத்தை மலைமேல் செலுத்தியதைப்} போல இந்த விராதன் மீது நான் செலுத்தப் போகிறேன்.(25) என் புஜபலத்தின் வேகத்தால் தூண்டப்படும் மஹாசரம் இவனது பெரும் மார்பில் பாய்ந்து, உடலின் உயிரைப் பறித்ததும், இவன் பூமியில் சுழன்று விழப் போகிறான்" {என்றான் லக்ஷ்மணன்}.(26)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 02ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |