Showing posts with label ஜாபாலி. Show all posts
Showing posts with label ஜாபாலி. Show all posts

Monday, 23 January 2023

இராமனின் நாஸ்திக மறுப்பு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 109 (39)

Rama rejects atheism | Ayodhya-Kanda-Sarga-109 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தர்மம், வாய்மை ஆகியவற்றின் மேன்மையைப் பின்பற்றுவதற்காக நாத்திகம் மறுத்து தர்மத்தை உரைத்த ராமன்...

Rama reproachin Jabali

சத்தியாத்மர்களில் {வாய்மையை ஆன்மாவாகக் கொண்டவர்களில்} சிறந்தவனான ராமன், ஜாபாலியின் சொற்களைக் கேட்டு, பக்தியுடனும், கலக்கமடையாத சுயபுத்தியுடனும் {பின்வருமாறு} சொன்னான்:(1) "என்னிடம் கொண்ட பிரியத்தினால் இப்போது நீர் சொன்ன சொற்கள், செய்யத்தக்க காரியங்கள் போன்று தோன்றினாலும் செய்யத்தகாதனவாகும். ஏற்புடையவை போன்று தோன்றினாலும் ஏற்கமுடியாதவையாகும்.(2) மரியாதையில்லாதவனும், பாபச் செயலுக்கு உடன்படுபவனும், கெட்ட பெயர் கொண்டவனும், தான் காணும் அனைத்திலும் பேதங்காண்பவனுமான புருஷன் {வேறுபாட்டைக் காண்பவனுமான மனிதன்}, நேர்மையானோரிடம் மதிப்பை ஈட்டமாட்டான்.(3) ஒருவன் நற்குலத்தில் பிறந்தவனா? கெட்ட குலத்தில் பிறந்தவனா? வீரனா? ஆண்மகன் என்ற வெற்றுச் செருக்குள்ளவனா? தூயவனா? தூய்மையற்றவனா? என்பதை அவனது நடத்தையே விளங்கச் செய்யும்.(4)

அனார்யனாக {இழிந்தவனாக} இருந்து, ஆரியனை {உன்னதமானவனைப்} போலும், நேர்மையற்றவனாகவும், தூய்மையற்றவனாகவும், நற்குணங்களற்றவனாகவும் இருந்து, நற்குணங்களைக் கொண்டவனைப் போலும், கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்து, நன்னடத்தையாளனைப் போலும், சுபமானவற்றை {நன்மையைக்} கைவிட்டு, தர்மவானைப் போலும், உலகத்தில் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு, அதர்மத்தையே {அநீதியைப்} பின்பற்றி, கிரியா விதிகளை {ஒழுக்கவிதிகளை} நான் புறக்கணித்தால், காரியாகாரியங்களில் {தக்கன தகாதனவற்றில்} வேறுபாடு காணத் தெரிந்த {பகுத்தறிவுள்ள} எந்த மனிதன்தான் இவ்வுலகில் என்னை மதிப்பான்?(5-7) இவ்வாறு நான் செய்த பிரதிஜ்ஞையை முறித்தால், {சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும் நல்ல} நடத்தையை நான் எவனுக்குச் சொல்ல முடியும்? நான் எப்படி ஸ்வர்க்கத்தை அடைவேன்?(8) 

இராஜாக்கள் எந்நடத்தையில் நடந்து கொள்கிறார்களோ, அவ்வாறே பிரஜைகளும் நடப்பார்கள் என்பதால் இவ்வுலகத்தார் அனைவரும் தாங்கள் விரும்பியபடியே நடந்து கொள்வார்கள் {உலகத்தோர் யாவரும் விரும்பியவாறு நடக்கத் தொடங்குவார்கள்}.(9) கொடுமையின்மையும் {அஹிம்சையும்}, சத்தியமுங் கூடியதே சனாதன ராஜ நடை {தொன்மையான அரசவொழுக்கம்} என்பதால், ராஜ்ஜியமானது, சத்தியத்தையே தன் சாரமாகக் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்திலேயே உலகம் நிலைத்திருக்கிறது.(10) ரிஷிகளும், தேவர்களுங் கூட சத்தியத்தை மட்டுமே மதிக்கின்றனர். சத்தியவாதி {வாய்மை பேசுபவன்} இவ்வுலகில் பரம நிலையை {உயர்ந்த நிலையை} அடைகிறான்.(11) இவ்வுலகில் பொய் பேசும் நரனை ஸர்ப்பத்தைப் போலக் கண்டு {மக்கள்} நடுங்குகிறார்கள். சத்தியமே பரதர்மம் {வாய்மையே உயர்ந்த அறம்} என்றும், ஸ்வர்க்கத்தின் மூலம் {பிறப்பிடம்} என்றும் சொல்லப்படுகிறது.(12) உலகத்தில் சத்தியமே {வாய்மையே} ஈசுவரன். சத்தியத்தில்தான் பத்மை {அதிர்ஷ்டதேவி} எப்போதும் குடியிருக்கிறாள். அனைத்தும் சத்தியத்தையே தங்கள் மூலமாக {ஆதாரமாகக்} கொண்டிருக்கின்றன. சத்தியத்தைவிட பரமநிலை வேறெதும் இல்லை.(13)

கொடைகள், யாகங்கள், ஹோமங்கள், தபங்கள், வேதங்கள் ஆகியன சத்தியத்தையே தங்கள் பிரதிஷ்டானமாக {அடித்தளமாகக்} கொண்டிருப்பதால், ஒருவன் சத்தியத்திற்கே முற்றாக அடிபணிய வேண்டும் {வாய்மையை ஒருபோதும் கைவிடலாகாது}.(14) {பயிலப்படும் வாய்மையின்படியே} ஒருவன் உலகை பாலிக்கிறான் {ஆள்கிறான்}, ஒருவன் குலத்தை பாலிக்கிறான், மற்றொருவன் நரகில் மூழ்குகிறான், இன்னொருவன் ஸ்வர்க்கத்திற்கு உயர எழுகிறான்.(15) சத்தியத்திற்கு உண்மையாக இருப்பவனான நான், சத்தியத்தைப் பயின்றவரான என் பிதாவின் ஆணையை ஏன் நிறைவேற்றக் கூடாது?(16) சத்தியத்திற்கு உண்மையாக இருக்கும் என்னால், லோபத்தாலோ {பேராசையாலோ}, மோஹத்தாலோ {மயக்கத்தாலோ}, தமோ குணத்துடன் சேர்ந்த அஞ்ஞானத்தாலோ குருவின் சத்திய சேதுவைத் தகர்க்க முடியாது. {என் தந்தையிடம் செய்து கொடுத்த உறுதி மொழியை உடைக்க முடியாது}.(17) அசத்தியசந்தர்கள் {வாய்மையற்றவர்கள்}, நிலையற்றவர்கள், மனத்தில் உறுதியற்றவர்கள் ஆகியோரின் காணிக்கைகளை தேவர்களோ, பித்ருக்களோ ஏற்க மாட்டார்கள். இதுவே நமக்குக் கற்பிக்கப்பட்டது.(18)

சத்தியத்தின் வடிவிலான இந்த தர்மமே அந்தராத்மாவென நான் கருதுகிறேன். எனவேதான், அந்த பாரம் சத்புருஷர்களால் ஆதரிக்கப்படும் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது.(19) தர்மமென்ற போர்வையில் இழிந்தவர்களாலும், கொடூரர்களாலும், லுப்தர்களாலும் {பேராசைக்காரர்களாலும்}, பாபகர்மிகளாலும் {பாபச் செயல்புரியும் மனிதர்களாலும்} சேவிக்கப்படும் அதர்மமான க்ஷாத்ர தர்மத்தை {க்ஷத்திரியனின் கடமை எனச் சொல்லப்படுமறத்தை} நான் துறக்கிறேன்.(20) மனத்தால் உணர்ந்த பிறகே, காயத்தால் {உடலால்} பாபம் செய்யப்படுகிறது; நாவால் பொய்ம்மை பேசப்படுகிறது. இந்தப் பாதக கர்மம் {பாதகச் செயல் - உடல், மனம், நாவைச் சார்ந்து} மூன்று வகையானது.(21) பூமி {நிலம்}, கீர்த்தி {புகழ்}, வளம், லக்ஷ்மி {நற்பேறு} ஆகியவை உண்மையில் மனிதனைக் கவர்ந்திழுக்கின்றன. அவை எப்போதும் சத்தியத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன; எனவே, சத்தியத்தையே உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.(22) நீர் என்னிடம், "இந்த நல்லதைச் செய்" என்று சிறந்தவையாக சொன்னவை உண்மையில் அனாரியமானவை {தகுதியற்றவை}.(23)

இந்த வனவாசம் குறித்து என் குருவிடம் {தந்தை தசரதரிடம்} பிரதிஜ்ஞை செய்துவிட்டு {உறுதியளித்துவிட்டு}, அந்த குருவின் சொற்களை அலட்சியம் செய்து, பரதனுடைய சொற்களின்படி எப்படி நான் செயல்படுவேன்?(24) குருசந்நிதானத்தில் நான் ஸ்திரமான பிரதிஜ்ஞையை ஏற்ற போது {என் தந்தையின் முன்னிலையில் நான் திடமான உறுதிமொழியை ஏற்றபோது}, கைகேயி தேவி பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.(25) நான் இவ்வகையில் வனவாசத்தை ஏற்றுக் கொண்டு, உலக யாத்திரையை மேற்கொண்டு {என் உலகப் பயணத்தைத் தொடர்ந்து, மனத்தளவிலும், உடலளவிலும்} தூய்மையானவனாக, போஜன நியமத்துடன் {உணவுக் கட்டுப்பாட்டுடன்}, புண்ணியமான கிழங்குகள், புஷ்பங்கள், பழங்கள் ஆகியவற்றைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளித்து, பஞ்சவர்க்கத்தை அடக்கி {ஐம்புலன் அடக்கத்துடன்}, வஞ்சனையில்லாமலும், முழுமையான அர்ப்பணிப்புடனும், காரியாகாரியங்களைப் பகுத்துணர்ந்து செயல்படுவேன் {எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற பகுத்தறிவுடனேயே என் காலத்தைக் கழிப்பேன்}.(26,27) இந்தக் கர்ம பூமியை {செயற்களத்தை} அடைந்தவன் சுப கர்மங்களையே செய்ய வேண்டும். அக்னியும் {நெருப்பானவனும்}, வாயுவும் {காற்றானவனும்}, சோமனும் {நிலவானவனும்} தங்கள் கர்மங்களுக்கான பலனையே தங்கள் பாகமாகப் பெறுகின்றனர்.(28) தேவராதன் {இந்திரன்} நூறு வேள்விகளைச் செய்துவிட்டுத் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான். மஹரிஷிகள் கடுந்தபங்களைச் செய்தே திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தனர்" {என்றான் ராமன்}.(29)

உக்கிர தேஜஸ்ஸுடன் கூடிய {பேரொளியுடன் கூடிய} அந்த நிருபதி தனயன் {இளவரசன் ராமன், ஜாபாலியால்} அங்கே சொல்லப்பட்ட நாஸ்திக வாக்கியங்களைக் கேட்ட பிறகு, அவர் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் மீண்டும் நிந்திக்கும் வகையில் அவரிடம்,(30) "சத்தியம், தர்மம், பராக்கிரமம், பூதங்களிடம் {உயிரினங்களிடம்} கருணை, பிரியவாதம் {இன்சொல்}, துவிஜர்களையும், தேவர்களையும், அதிதிகளையும் பூஜித்தல் {இருபிறப்பாளர்களையும், தேவர்களையும், எதிர்பாரா விருந்தினர்களையும் வழிபடுதல்} ஆகியவை திரிதிவத்திற்கான {சொர்க்கத்திற்கான} பாதைகளென நல்லோர் சொல்கின்றனர்.(31) எனவே, எதில் அர்த்தம் {பொருள் / பெரும்பயன்} உள்ளது என்பதை நன்கறிந்த விப்ரர்கள் {கல்விமான்கள் / பிராமணர்கள்}, தங்கள் நோக்கத்தைப் பின்பற்றித் தங்கள் தர்மம் சகலத்தையும் {கடமையை முழுமையும்}, முறையாகவும், கவனமாகவும் நிறைவேற்றி, லோகாகமங்களை {உயர்ந்த உலகங்களை} நாடுகின்றனர்.(32) 

இவ்வாறாக தர்மத்தின் பாதையில் இருந்து விலகிய புத்தியுடைய உறுதியான நாஸ்திகரும், விஷமத்தனமான {தவறான வழிவகுக்கும்} புத்தியைக் கொண்டவருமான உம்மைப் பணிக்கு ஏற்றுக் கொண்டதில் என் பிதாவின் கர்மத்தை {என் தந்தை செய்த செயலை} நான் நிந்திக்கிறேன்.(33) சோர புத்தனே {கள்ள புத்தியைக் கொண்ட போலி அறிவாளியே} நாஸ்திகனென அறிவதற்கு இஃது ஏற்றது. எனவே, ஒரு புத்தன்[1] {புத்திமான்} மக்கள் நலனில் ஐயங்கொண்ட நாஸ்திகனுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது.(34) உமக்கும் முன்பே வாழ்ந்த ஜனங்கள், இஹம், பரம் {இம்மை, மறுமை ஆகியவற்றில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள்} அனைத்தையும் கைவிட்டு சுபகர்மங்கள் {மங்கலச் செயல்கள்} பலவற்றைச் செய்திருக்கின்றனர். எனவேதான், துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} புனித நெருப்பில் ஹோமம் செய்து, உன்னத காரியங்களைச் செய்கிறார்கள்.(35) தர்மத்தில் அர்ப்பணிப்புள்ள முனிவர்கள், ஏராளமான தானங்களைச் செய்பவர்களும், அஹிம்சையைப் பின்பற்றுபவர்களும், தேஜஸ்விகளுமான சத்புருஷர்களுடன் {நல்ல மனிதர்களுடன்} சேர்ந்து, தங்கள் களங்கங்களில் இருந்து விடுபட்டு உலகத்தால் பூஜிக்கப்படுகிறார்கள்" {என்றான் ராமன்}.(36)

[1] கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "நாம் அறிவாற்றல் என்றழைக்கும் அறைகூவலுக்குப் பதிலளிக்கும் சொல் இது. சத்தியமும், தெய்வமும் மிக நுட்பமானவை. சொற்கள், அல்லது வாதங்களின் வலையில் சிக்கிய மனத்தால் சத்தியத்தையோ, தெய்வத்தையோ புரிந்து கொள்ள முடியாது" என்றிருக்கிறது. "யதா² ஹி சோர꞉ ஸ ததா² ஹி பு³த்³த⁴ | ஸ்ததா²க³தம் நாஸ்திகமத்ர வித்⁴ஹி | தஸ்மாத்³தி⁴ ய꞉ ஶங்க்யதம꞉ ப்ரஜாநாம் | ந நாஸ்தி கேநாபி⁴முகோ² பு³த⁴꞉ ஸ்யாத் 2-109-34" என்பது மூலம். முதல் பத்தியில் வரும் "பு³த்³த⁴" என்பதற்கு நல்லபுத்தி என்றும் "சோர" என்பதற்குக் களவு என்றும் பொருள் கொள்ள வேண்டும். "நல்லபுத்தி கொண்டவன் போன்ற கள்வன்" என்பது பொருள். அதுவே இங்கே கள்ள புத்தன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளை மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அத்தியாயத்தில் ஏற்கனவே 5-7 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை மீண்டும் பார்க்கவும். இந்த சுலோகத்தின் இறுதி பத்தியில் வரும் "பு³த⁴꞉" புத்தன் என்பதற்கு "நல்லோன்" என்பது பொருள். இங்கே பௌத்தம் குறித்தோ, புத்தம் குறித்தோ, சார்வாகம் குறித்தோ ஏதும் சொல்லப்பட வில்லை. அறத்தில் நம்பிக்கையற்ற நாத்திகத்திற்கே பதில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இது போன்ற அச்சமில்லா புத்தியைக் கொண்டவனும், கோபம் நிறைந்த சொற்களைப் பேசியவனுமான அந்த மஹாத்மாவிடம் {ராமனிடம்} அந்த விப்ரர் {ஜாபாலி}, சத்தியத்துடன் கூடிய தகுந்த சொற்களில் ஆஸ்திகத்தைச் சொல்லும் வகையில், பணிவுடன்(37) "நான் நாஸ்திர்களின் சொற்களைப் பேசவில்லை. நான் நாஸ்திகனுமல்லேன். {பரலோகம்} ஏதுமில்லை என்று நான் சொல்லவில்லை. காலத்தை {ஆபத்து காலத்தை} உணர்ந்தே நான் ஆஸ்திகனாகவும், மீண்டும் நாஸ்திகனாகவும் இருப்பேன்.(38) இராமா, அந்தக் காலமும், இந்தக் காலமும் மெல்லத் தானாக வந்து சேர்கிறது. என் வாயிலிருந்து வெளிப்பட்டு, நான் சொன்ன நாஸ்திகச் சொற்கள், உன்னைத் தணிவடையச் செய்து, {அயோத்திக்குத்} திரும்ப வைக்க வேண்டும் என்ற நோக்கில் உன் நிமித்தமாகவே சொல்லப்பட்டன" {என்றார் ஜாபாலி}.(39)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 109ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Sunday, 22 January 2023

ஜாபாலியின் நாத்திக வாதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 108 (18)

Jabali's Atheism | Ayodhya-Kanda-Sarga-108 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாட்டை ஆள ராமனை சமாதானப்படுத்த ஜாபாலி செய்த முயற்சிகள். அவர் வேத நடைமுறைகளில் நம்பிக்கையற்றோரின் கோட்பாட்டை ஆதரித்துப் பேசியது...

Jabali and Rama

பிராமணோத்தமரான ஜாபாலி, பரதனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவனும், தர்மத்தை அறிந்தவனுமான ராமனிடம், தர்மத்திற்கு மாறான இந்தச் சொற்களை {பின்வருமாறு} சொன்னார்:(1) "இராகவா, ஆரியபுத்திக்கும், உயர்ந்த மனத்திற்கும் புகழ்பெற்றவனான நீ, சாதாரண நரனைப் போல புத்தி மோகத்திற்கு ஆளாகாதே.(2) எந்த புருஷன் எவனுக்கு பந்து {உறவினன்}? ஒவ்வொரு ஜந்துவும் {உயிரினமும்} தனியாகவே பிறந்து, தனியாகவே இறக்கிறது என்பதால், எவன், எதனை, எவனிடம் இருந்து அடையப் போகிறான்?(3) எனவே, ராமா, "இவன் என் பிதா, இவள் என் மாதா" என்ற பற்று கொள்ளும் நரன் உன்மத்தனாகவே {பைத்தியக்காரனாகவே} அறியப்பட வேண்டும். எவனும் எவனுக்கும் இல்லை {உரியவனல்ல / உறவினனல்ல}.(4) காகுத்ஸ்தா {ராமா}, கிராமங்களைக் கடந்து செல்லும் எந்த நரனும், எங்கோ வசித்து, அடுத்த நாள் அவ்விடத்தை விட்டுப் பயணத்தைத் தொடர்வான். அதைப் போலவே, மாதா, பிதா ஆகியோரும், கிருஹம் {இல்லம்}, உடைமைகள் {செல்வம்} ஆகியவையும் மனுஷ்யர்களின் வசிப்பிடங்கள் மாத்திரமே. ஸத்ஜனங்கள் {விவேகிகள்} இவற்றில் ஒருபோதும் பற்று கொள்வதில்லை.(5,6)

நரோத்தமா {மனிதர்களில் முதன்மையானவனே}, துக்கம் நிறைந்ததும், {பயணிக்கக்} கடினமானதும், முட்கள் நிறைந்ததுமான தனிமையான காட்டில் வசிப்பதற்காக, உன் பிதாவின் ராஜ்ஜியத்தைக் கைவிடுவது விவேகமாகாது; அஃது உனக்குத் தகாது.(7) செழிப்பான அயோத்தியில் நீ அபிஷேகம் செய்து கொள்வாயாக. அந்த நகரம், {ஒரு பதிவிரதையைப் போல} ஒற்றைப் பின்னலுடன் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.(8) பார்த்திவாத்மஜா {இளவரசே}, உனக்குத் தகுந்த ராஜபோகத்தை அனுபவிப்பாயாக. சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைப்} போல நீ அயோத்தியில் விளையாடித் திரிவாயாக.(9)

உனக்கு தசரதனும், அவனுக்கு நீயும் {உறவெனக் கொள்ள} ஏதுமில்லை. அந்த ராஜனும், நீயும் வெவ்வேறானவர்கள். எனவே, {நான்} சொன்னதைச் செய்வாயாக.(10) ஒரு ஜந்துவுக்கு {ஓர் உயிரினத்திற்குப்} பிதாவானவன், {அதன்} வித்தாக மாத்திரமே இருக்கிறான். மாதாவிடம் சரியான நேரத்தில் கலக்கும் உதிரசுக்லமே {வெண்குருதியே / விந்தணுவே} இஹத்தில் {இம்மையில்} புருஷனாக {மனிதனாகப்} பிறக்கிறது.(11) அந்த நிருபதி {தசரத மன்னன்} எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்றுவிட்டான். இதுவே {இவ்வாறு செல்வதே} அனைத்தின் விதியாகும். நீ இன்னும் வருந்திக் கொண்டிருப்பது தேவையற்றது.(12)

எவரெவர் அர்த்தத்திலும் {பொருளிலும்}, தர்மத்திலும் அர்ப்பணிப்புடன் இருந்து இஹத்தில் {உலகில்} துக்கத்தை அனுபவித்து, பிரேதமாகி அழிவடைகிறார்களோ அவர்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேனேயன்றி {காமத்தில் / இன்பத்தில் அர்ப்பணிப்புள்ள} மற்றவர்களுக்காக அல்ல {நான் வருந்தவில்லை}.(13) இந்த ஜனங்கள், "எட்டாம் நாளில் பித்ருதைவத்யம் {பித்ருக்களுக்கான சிராத்தம் செய்யப்பட வேண்டும்}" என்று சொல்கின்றனர். அன்னத்திற்கு உண்டாகும் உபத்ரவத்தைப் பார் {உணவு வீணாவதைப் பார்}. மரித்தவன் எதை உண்பான்?(14) இஹத்தில் எவனாலும் புசிக்கப்பட்டது {உண்ட உணவு} மற்றொருவனின் தேஹத்தை {உடலை} அடையுமென்றால், நெடும்பயணம் மேற்கொள்வோருக்கும் சிராத்தம் அளிக்கலாமே. அஃது {அந்த சிராத்தம்} அவர்களின் பாதையில் உணவாகப் பயன்படாதா? {இது பலனளிக்கும் என்றால் பயணிகள் வழியில் உணவு தேடாமல், நாம் இங்கிருந்தே உண்டு அவர்களுக்கு  அளிக்கலாமே}.(15)

"வேள்விகளைச் செய், கொடையளி, தீக்ஷை பெறு, தபம் செய், அனைத்தையும் துற" என்ற கிரந்தங்கள் {உரைகள்} பிறர் தானம் செய்வதற்காகவே மேதாவிகளால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.(16) மதிமிக்கவனே, பரம் {மறுமை} என்ற ஏதுமிங்கில்லை {இஹத்தைத் தவிர வேறேதும் இல்லை} என்ற புத்தியை அடைவாயாக. புலன்களால் உணர்வனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றில் இருந்து விலகிச் செல்வாயாக.(17) உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த புத்தியை முன்னிட்டு, பரதனின் வேண்டுதலுக்கு இணங்கி ராஜ்ஜியத்தை ஏற்பாயாக" {என்றார் ஜாபாலி முனிவர்}.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 108ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Friday, 16 September 2022

அராஜக ஜனபதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 067 (38)

A territory without a king | Ayodhya-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரசற்ற நிலையிலிருக்க நாட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பல்வேறு தீமைகளைச் சொன்ன அமைச்சர்கள். அயோத்தியில் ராஜனின் வாரிசை நியமிக்கும்படி வசிஷ்டரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டது...

Ministers speak to Vasishtha

ஆனந்தமற்று அழுது கொண்டிருந்ததும், கண்ணீர் கம்மிய தொண்டைகளுடன் கூடிய மக்களால் நெருக்கப்பட்டதுமான அயோத்தியில் அந்த நீண்ட இரவு மெல்லக் கடந்து சென்றது.(1) அந்த இரவும் கடந்து, ஆதித்தியன் உதிக்கும் நேரத்தில், ராஜகர்த்தாரர்களான {ராஜனை அரியணையில் அமர்த்தக்கூடியவர்களான} துவிஜர்கள் ஒன்று கூடி சபைக்குச் சென்றனர்.(2) 

மார்க்கண்டேயர், மௌத்கல்யர், வாமதேவர், காசியபர், காத்யயனர், கௌதமர், பெரும்புகழ் பெற்ற ஜாபாலி ஆகியோரும்,(3) அந்த துவிஜர்களும், அமார்த்தியர்களும் {அமைச்சர்களும்}, சிறந்த ராஜபுரோகிதரான வசிஷ்டரை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பி ஒவ்வொருவராக இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(4) "இந்தப் பார்த்திபன் புத்திரசோகத்தால் பஞ்சத்வத்தை அடைந்த {மரணத்தை அடைந்த} அளவில் நமக்கு சதவருஷங்களுக்கு {நூறு வருடங்களுக்குச்} சமமான இந்த இரவு துக்கத்துடனே கழிந்தது.(5) மஹாராஜா ஸ்வர்க்கத்தை அடைந்துவிட்டார். இராமனும் அரண்யம் சென்றுவிட்டான். தேஜஸ்வியான லக்ஷ்மணனும் ராமனுடன் சென்றுவிட்டான்.(6) பரந்தபர்களான {பகைவரை அழிப்பவர்களான} பரதசத்ருக்னர்கள் இருவரும், கைகேயத்தின் ராஜகிருஹபுரியில், தங்கள் மாதாமஹரின் {தாய்வழி பாட்டனின்} ரம்மியமான வீட்டில் வசிக்கின்றனர்.(7) இங்கே நம் ராஷ்டிரத்தில், இக்ஷ்வாகுக்களில் எவரையேனும் இன்றே விதிப்படி ராஜாவாக்க வேண்டும். அராஜகம் {ராஜனற்ற நிலை} நிச்சயம் நாசத்தையே விளைவிக்கும்.(8) 

அராஜக ஜனபதத்தில் {அரசனில்லாத நாட்டில்} மின்னல்களை மாலைகளாகக் கொண்ட மேகங்கள், பேரொலியுடன் திவ்யமான நீரை மஹீயில் {பூமியில்} மழையாகப் பொழியாது.(9) அராஜக ஜனபதத்தில், கைப்பிடியளவு விதையும் விதைக்கப்படாது. அராஜகத்தில், பிதாவின் வசத்தில் புத்திரனோ, பாரியையோ {மகனோ, மனைவியோ} இருக்க மாட்டார்கள்.(10) அராஜகத்தில் தனம் நாஸ்தியாகும் {இல்லாமல் போகும்}, அராஜகத்தில் பாரியை நாஸ்தியாவாள், இன்னும் அதிக தீங்குகளை விளைவிக்கும் அராஜகத்தில் சத்தியம் எங்கே இருக்க முடியும்?(11) அராஜக ஜனபதத்தில், நரர்கள் மகிழ்ச்சி தரும் சபைகளையோ, ரம்மியமான உத்தியானங்களையோ {தோட்டங்களையோ}, புண்ணியகிருஹங்களையோ {கோவில்களையோ} அமைக்க மாட்டார்கள்.(12) அராஜக ஜனபதத்தில் யஜ்ஞசீலர்களும் {யாகங்களைச் செய்யும் நல்லவர்களும்}, தன்னடக்கமுள்ள பிராமணர்களும், கடும் விரதங்களைக் கடைப்பிடிக்கும் துவிஜர்களும் {இருபிறப்பாளர்களும்} சத்ராணங்களை {சோம வேள்விகளை} நடத்த மாட்டார்கள்.(13) அராஜக ஜனபதத்தில், செல்வங்கொழித்த பிராமணர்கள் கூட, மஹாயஜ்ஞங்களில் யஜ்வனர்களுக்கு {வேள்வியை நடத்துபவர்களுக்கு} ஆப்த தக்ஷிணைகளை {தாராளமான கொடைகளைக்} கொடுக்க மாட்டார்கள்.(14) 

அராஜக ஜனபதத்தில், நடர்களும், நர்த்தகர்களும் {நடிகர்களும், நடனக் கலைஞர்களும்} நிறைந்த உத்சவங்களும், ராஷ்டிரத்தை மேன்மையுறச் செய்யும் சமாஜங்களும் {கூட்டங்களும்} நடைபெறாது.(15) அராஜக ஜனபதத்தில், வியவஹாரிகள் {வழக்காடுபவர்கள்} தங்கள் வழக்குகளில் தீர்வுகளைப் பெற மாட்டார்கள், கதாசீலர்கள் தங்கள் கதைகளால் கதாபிரியர்களுக்கு நிறைவை ஏற்படுத்தமாட்டார்கள்.(16) அராஜக ஜனபதத்தில், ஹேமபூஷிதைகளான குமாரிகள் {தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கன்னிப்பெண்கள்} ஒன்றுகூடி விளையாடுவதற்கு சாயங்காலத்தில் உத்யானங்களுக்கு {தோட்டங்களுக்குச்} செல்ல மாட்டார்கள்.(17) அராஜக ஜனபதத்தில், காமம் நிறைந்த நரர்கள், நாரீகளுடன் சேர்ந்து சீக்கிரமாகச் செல்லும் வாஹனங்களில் ஏறி அரண்யங்களுக்குச் செல்லமாட்டார்கள்.(18) அராஜக ஜனபதத்தில், கிருஷியாலும் {பயிரிடுவதாலும்}, கோரக்ஷணத்தாலும் {பசுவைப் பாதுகாப்பதாலும்} ஜீவிக்கும் தனவந்தர்கள், வாயில்களைத் திறந்து வைத்துக் கொண்டு பாதுகாப்பாக உறங்கமுடியாது.(19) 

அராஜக ஜனபதத்தில், கழுத்தைச் சுற்றி மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, தந்தங்களுடன் கூடிய அறுபது வயது குஞ்சரங்கள் {யானைகள்} ராஜமார்க்கங்களில் திரியாது.(20) அராஜக ஜனபதத்தில், அஸ்திரப் பயன்பாட்டு உபாசனையில் {பயிற்சியில்} சரங்களை ஏவும் வில்லாளிகளின் உள்ளங்கைகள் நாணிழுக்கும் இடைவிடாத கோஷங்கள் கேட்காது.(21) அராஜக ஜனபதத்தில், பல்வேறு வாணிபப் பொருள்களுடன் தூரமான இடங்களுக்குச் செல்லும் வணிஜர்கள் {வணிகர்கள்},  க்ஷேமமாக {பாதுகாப்பாகப்} பாதையில் செல்ல முடியாது.(22) அராஜக ஜனபதத்தில், புலனடக்கத்துடன் தனியாக சஞ்சரித்து, தன் ஆத்மாவை தியானித்து, சாயங்காலம் நேரும் இடத்தையே வசிப்பிடமாக்கிக் கொள்ளும் முனி எவரும் சஞ்சரிக்கமாட்டார்.(23) அராஜக ஜனபதத்தில் யோகக்ஷேமம் நேராது {ஆதாயமும், பாதுகாப்பும் இருக்காது}, அராஜகத்தில் சேனைகள் சத்ருக்களைப் போரில் வெல்லாது.(24) 

அராஜக ஜனபதத்தில், நரர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டும், மகிழ்ச்சியுடனும் பரமவாஜிகளிலும் {சிறந்த குதிரைகளிலும்}, ரதங்களிலும் வேகமாகச் செல்லமாட்டார்கள்.(25) அராஜக ஜனபதத்தில் சாஸ்திர விசாரதர்களான {நிபுணர்களான} நரர்கள், விவாதிப்பதற்காக வனங்களிலும், உபவனங்களிலும் ஒன்று சேர்ந்து அமர முடியாது.(26) அராஜக ஜனபதத்தில், நியமத்துடன் கூடிய ஜனங்கள், தேவர்களை வழிபடுவதற்கான மாலைகளையும், மோதகங்களையும், தக்ஷிணைகளையும் ஏற்பாடு செய்யமாட்டார்கள்.(27) அராஜக ஜனபதத்தில், ராஜபுத்திரர்கள் சந்தனம் அகில் பூசியவர்களாக, வசந்த கால மரங்களைப் போல ஒளிரமாட்டார்கள்.(28) நீரில்லா நதிகளைப் போலவும், புல்வெளியில்லா வனத்தைப் போலவும், கோபாலனில்லா காவங்களை {பசுக்களைப்} போலவும் அராஜக ராஷ்டிரம் இருக்கும்.(29)

துவஜம் ரதத்திற்கு அடையாளம், தூமம் விபாவசுவுக்கு {புகை நெருப்புக்கு} அடையாளம், நம்மைப் போன்றோருக்கு துவஜத்தைப் போன்ற அந்த ராஜா இங்கிருந்து தேவத்வத்தை அடைந்துவிட்டான்.(30) அராஜக ஜனபதத்தில், எவருக்கும் சொந்த உடைமைகள் ஏதும் கிடையாது. மத்ஸ்யங்களை {மீன்களைப்} போல நரர்களும் எப்போதும் ஒருவரையொருவர் உண்பார்கள்.(31) மரியாதைகளின் எல்லைகளை அலட்சியப்படுத்தும் எந்த நாஸ்திகர்கள் ராஜதண்டனையால் பீடிக்கப்படுவார்களோ அவர்கள் இனி அச்சம் விலகியவர்களாக தங்கள் ஸ்வபாவத்தை வெளிப்படுத்துவார்கள்.(32) 

எவ்வாறு திருஷ்டியானது {கண்பார்வையானது, நல்வழியையும், தீய வழியையும் காட்டி} எப்போதும் சரீரத்தை சீராக இயங்கச் செய்கிறதோ அவ்வாறு நரேந்திரனே ராஷ்டிரத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைக்கச் செய்வான்.(33) இராஜாவே, சத்தியமும், தர்மமும் ஆவான். குலத்தில் அவனே உன்னத குலம். இராஜாவே மாதாவும், பிதாவும் ஆவான். இராஜாவே மக்களுக்கு ஹிதம் செய்வான்.(34) எனவே, மஹத்தான நடத்தை கொண்ட நரேந்திரன், {தண்டிக்கும்} யமனையும், {தனங்கொடுக்கும்} வைஷ்ரவணனையும் {குபேரனையும்}, {ஆட்சி செய்யும்} சக்ரனையும் {இந்திரனையும்}, {நன்னடத்தை போதிக்கும்} மஹாபலங் கொண்ட வருணனையும் விஞ்சி நிற்கிறான்.(35)

அஹோ, உலகத்தில் நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்ப்பதற்கு ராஜனில்லாவிட்டால் இவ்வுலகம் இருளாக இருக்கும், எதுவும் தெளிவாகப் புலப்படாது.(36) மஹாராஜா ஜீவித்திருக்கும்போது நாங்கள் அனைவரும் கரையைத் தாண்டாத சாகரத்தைப் போல உமது சொற்களை மீறி நடந்ததில்லை.(37) சிறந்த துவிஜரே, {இருபிறப்பாளரே, வசிஷ்டரே}, நிருபன் இல்லாத ராஜ்ஜியம் அரண்யமாகும் சூழலைக் கருத்தில் கொண்டு பெருந்தன்மையுள்ள இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த குமாரனை இங்கே ராஜாவாக நீரே அபிஷேகம் செய்வீராக" {என்றனர்}.(38)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 067ல் உள்ள சுலோகங்கள் : 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை