Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Monday, 31 July 2023

சுக்ரீவனின் புலம்பல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 24 (44)

Sugreeva laments | Kishkindha-Kanda-Sarga-24 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன்னைப் பழித்து, வாலியைப் புகழ்ந்த சுக்ரீவன்; நெருப்பில் நுழைய ராமனின் அனுமதியை வேண்டியது; ராமன் சொன்ன ஆறுதல்; தன்னைக் கொல்லுமாறு ராமனிடம் கெஞ்சிய தாரை...

Sugreeva laments

கடக்க முடியாத சோக மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} வேகமாகவும், விரைவாகவும் மூழ்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபோது, வலிமைமிக்கவனான வாலியின் அனுஜன் {வாலியின் தம்பி சுக்ரீவன்}, தன்னுடன் பிறந்த ஒப்பற்றவனின் {தன் அண்ணன் வாலியின்} வதத்திற்காக வேதனை அடைந்தான்.(1) மனஸ்வியான அவன் {சுயமதிப்பு கொண்டவனான சுக்ரீவன்}, மனம் நொந்து, ஒரு க்ஷணம் {தாரையைப்} பார்த்தபோது, கண்ணீர் நிறைந்த முகத்துடனும், துக்கமடையும் மனத்துடனும், தொண்டர்களால் சூழப்பட்டவனாக, மெதுவாக ராமனின் சமீபத்தை அடைந்தான்.(2) கையில் வில்லையும், விஷமிக்க பாம்புக்கு நிகரான பாணத்தையும் பிடித்திருப்பவனும், உத்தமனும், புகழ்மிக்கவனும், லக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டவனும், அருகில் இருப்பவனுமான அந்த ராகவனை நெருங்கியவன் {ராமனை நெருங்கிய சுக்ரீவன்} இதைச் சொன்னான்:(3) "நரேந்திரரே, நீர் பிரதிஜ்ஞை செய்தபடியே, இதோ காணும் பலனுக்கான கர்மத்தைச் செய்தீர். நரேந்திரரின் மகனே, கொல்லப்பட்ட ஜீவிதத்துடன் கூடிய என் மனம் இதோ போகங்களில் இருந்து விலகி இருக்கிறது.(4) 

இராமரே, நிருபர் {மன்னர் வாலி} கொல்லப்பட்டதும், இந்த மஹிஷி {ராணி தாரை} துக்கத்தில் எரிந்து பெரிதும் கதறி அழுகிறாள்; புரமும் {கிஷ்கிந்தையும்} பெரிதும் பரிதபிக்கிறது; அங்கதனின் நிலையும் சந்தேகத்திற்கிடமாக உள்ள நிலையில் என் மனம் ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சிகொள்ளவில்லை.(5) இக்ஷ்வாகுக்களில் சிறந்தவரே, முதலில் கோபத்தினாலும், பொறுமையின்மையினாலும், அதிகமாக அடைந்த அவமானத்தினாலும், உடன் பிறந்தோனின் வதத்தை நான் அனுமதித்துவிட்டாலும், இப்போது ஹரியூதபர் {குரங்குக் குழு தலைவரான வாலி} கொல்லப்பட்டதும், அதிகமாகப் பரிதபிக்கிறேன்.(6) இப்போது என் விருத்தம் எப்படியோ அப்படியே {காலங்}கழித்து, முக்கிய சைலமான அந்த ரிச்யமூகத்திலேயே எப்போதும் வசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இவரைக் கொன்றதில் திரிதிவமே {சொர்க்கமே} கிட்டினும் லாபமில்லை.(7) இராமரே, மஹாத்மாவும், மதிமிக்கவருமான இவர் {வாலி}, "உன்னைக் கொல்ல இஷ்டமில்லை; போ" என்று என்னிடம் சொன்ன அந்தச் சொல் {நல்லவரான} அவருக்கே உரியது. இந்தச் சொல்லும், கர்மமும் {தீயவனான} எனக்கே உரியன.(8)

இராமரே, வீரரே, காமத்தை {ஆசையை} முன்னிட்டு, உடன்பிறந்தவருக்குரிய ராஜ்ஜியத்தையோ, மஹாகுணம் பொருந்திய உடன்பிறந்தவரின் வதம் எனும் துக்கத்தின் சாரத்தையோ சிந்திக்கையில் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்?(9) அவர் {வாலி}, தம் மஹாத்மியத்தை {பெருந்தன்மையை} மீறாததால், என் வதத்தை {நான் கொல்லப்படுவதை வாலி} ஏற்கவில்லை. என் புத்தியின் துராத்மியத்தால் {இழிந்த தன்மையால்} பிராணனைப் பறிக்கும் மீறல் விளைந்தது.(10) மரத்தின் சாகையால் {கிளையால்} புடைக்கப்பட்டதும், ஒரு முஹூர்த்தம் சிணுங்கி {துடித்து தத்தளித்துக்} கொண்டிருந்த நான், "மீண்டும் செய்யாதே. {இனி} செய்ய மாட்டாய்" என்றவரால் {வாலியால்} தேறுதல் அடைந்தேன்.(11) 

சகோதரத்துவத்தையும், ஆரியபாவத்தையும் {மேன்மையும்}, தர்மத்தையும் அவர் ரக்ஷித்தார் {பாதுகாத்தார்}. குரோதத்தையும், காமத்தையும், கபித்துவத்தையும் {குரங்குத்தன்மையையும்} நான் வெளிக்காட்டினேன்.(12) வயஸ்யரே {நண்பரே}, உடன்பிறந்தவரின் வதத்தால், துவாஷ்டிரனை {துவஷ்டாவின் [விஷ்வகர்மாவின்] மகனான விஷ்வரூபனை} வதைத்த இந்திரனைப் போல[1], சித்திக்க முடியாததும், முற்றிலும் தவிர்க்க முடியாததும், விரும்பத்தகாததும், காணத்தகாததுமான பாபத்தை அடைந்துவிட்டேன்.(13) இந்திரனின் பாபத்தை, மஹீயும் {மண்ணும்}, ஜலமும் {நீரும்}, விருக்ஷங்களும் {மரங்களும்}, ஸ்திரீகளும் {பெண்களும்} வாங்கிக் கொண்டனர்[2]. சாகை மிருகமான என்னுடைய இந்த பாபத்தைப் பெயரளவுக்கும் எவன்தான் சகித்துக் கொள்வான்? {அதை எப்படிப்} பெற்றுக் கொள்ள விரும்புவான்?(14)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புராண உவமை: ஒருமுறை வியாழனும் {குருவெனும் கிரகமாக இருப்பவரும்}, இந்திரனின் தெய்வீக ஆலோசகருமான பிருஹஸ்பதி, இந்திரன் மீது எரிச்சலடைந்து, சில நாட்கள் தலைமறைவானார். அப்போது தேவர்கள் துவஷ்டாவின் {விஷ்வகர்மாவின்} மகனும், பிரம்மனின் மானஸபுத்திரனுமான விஷ்வரூபனை {திரிசிரனை} அழைத்து வந்து, பிருஹஸ்பதியின் உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தனர். அசுரர்களிடம் பட்சபாதம் கொண்ட இந்த விஷ்வரூபன், {தேவர்களுக்குரிய} ஆகுதிகளில் அசுரர்களுக்குப் பங்கு கொடுத்து வந்தான். இதை அறிந்த இந்திரன் விஷ்வரூபனைக் கொன்றதால், பிராமணனைக் கொன்ற பிரம்ம பாதக பாபம் என்ற பாபத்தை அடைந்தான்" என்றிருக்கிறது. மஹாபாரதம் உத்யோக பர்வம் பகுதி 9ம் அத்தியாயத்தில் இந்தக்கதை சொல்லப்படுகிறது 

[2] மஹாபாரதம் சாந்தி பர்வம் 282ம் அத்தியாயத்தில் இது விரிவாகச் சொல்லப்படுகிறது. 

இராகவரே, அதர்மத்துக்குத் தகுந்ததும், குலநாசத்திற்குத் தகுந்ததுமான இவ்வித கர்மத்தைச் செய்த நான், பிரஜைகளின் {குடிமக்களின்} இந்த சன்மானத்திற்குத் தகாதவன். யௌவராஜ்ஜியத்திற்குத் தகாத நான், ராஜ்ஜியத்திற்கு எவ்வாறு தகுந்தவனாவேன்?(15) உலகத்தால் நிந்திக்கப்படுவதும், இழிந்ததும், உலகத்திற்குப் பெருந்தீங்கிழைப்பதுமான பாபத்தைச் செய்த என்னை நோக்கி, மஹத்தான இந்த சோகம் மழைநீரின் வேகத்துடன் பாய்ந்து வருவதைப்போலத் தெரிகிறது.(16) சோதரன் கொலை எனும் வாலுடன் கூடிய பின்புறத்தைக் கொண்டதும், சந்தாபம் {பரிதாபம்} எனும் ஹஸ்தத்தையும் {துதிக்கையையும்}, கண்களையும், சிரத்தையும் {தலையையும்}, தந்தங்களையும் கொண்டதும், கோபவெறி கொண்டதும், பெரிதும் வளர்ந்ததுமான ஹஸ்தியானது {பெருகிய பாபத்தையே வடிவமாகக் கொண்ட யானையானது}, கரை {தாக்கும்} நதியைப் போல என்னை இடைவிடாது தாக்குகிறது.(17) 

நிருவரரே {மன்னர்களில் சிறந்தவரே}, ராகவரே, அக்னியில் முழுமையாக உருக்கப்பட்டு, வர்ணமிழந்த ஜாதரூபம் {தங்கம்} மாசை பொறுத்துக் கொள்ளாமல் உதிர்ப்பதைப் போல நன்னடையுடன் கூடிய என் ஹிருதயம், இந்த பாதகத்தை சகிப்பதில் இருந்து விலகுகிறது.(18) இராகவரே, என் நிமித்தமும், இந்த சோகத்தில் தபிக்கும் அங்கதனாலும், மஹாபலவான்களும், இந்த குலத்தைச் சேர்ந்தவர்களுமான ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்}, பாதி பிராணனுடனே நிலைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.(19) அங்கதனுக்கு ஒப்பாக பேதமில்லாமல் அனைவருடனும் பழகுபவனும், சொன்னபடி தவறாமல் கேட்கும் புத்திரனைப் பெறுவது சுலபமில்லை. வீரரே, சோதரனின் அருகாமை நிலைக்கும் அத்தகைய தேசத்தையும் {இடத்தையும்} காண முடிவதில்லை.(20)

இப்போது சிறந்த வீரனான அங்கதன் ஜீவிக்காமல் போனால், {அவனைப்} பரிபாலிக்க ஜீவித்திருக்கும் மாதாவும் {தாரையும்} புத்திரன் இல்லாமல், பரிதாபமாக, தீனமாக ஜீவிக்க மாட்டாள் என்பதே என் நிச்சயம் {தீர்மானம்}.(21) இத்தகையவனான நான் {சுக்ரீவனாகிய நான்}, உடன்பிறந்தவருடனும் {வாலியுடனும்}, புத்திரனுடனும் {அங்கதனுடனும்} நல்லுறவை நாடி அதிகம் ஒளிரும் அக்னிக்குள் பிரவேசிக்க இச்சிக்கிறேன். இந்தச் சிறந்த ஹரிவீரர்கள் {குரங்கு வீரர்கள்}, உமது ஆணையை ஏற்று சீதையைத் தேடிச் செல்வார்கள்.(22) மனுஜேந்திரபுத்திரரே, ராமரே, நான் இறந்தாலும் உமது காரியம் அனைத்தும் குறையேதுமின்றி நிறைவேறும். குலத்தை அழித்தவனும், ஜீவிக்கத்தகாதவனும், தவறு இழைத்தவனுமான எனக்கு அனுமதி அளிப்பீராக" {என்றான் சுக்ரீவன்}.(23)

ரகுக்களில் சிறந்த வீரனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான ராமன், வாலிக்கு அடுத்துப் பிறந்தவன் {சுக்ரீவன்}, வருத்தத்துடன் இவ்வாறு சொன்னவற்றைக் கேட்டதில் பிறந்த கண்ணீருடன் ஒரு முஹூர்த்தம் மனமுடைந்த நிலையில் இருந்தான்.(24) பூமியைப் போன்ற பொறுமை கொண்டவனும், புவனத்தைப் பாதுகாப்பவனுமான அந்த ராமன், அந்த க்ஷணத்தில் கவலையுடன் மீண்டும் மீண்டும் சுற்றிலும் பார்வையைச் செலுத்துபவளும், விசனத்தில் {துக்கத்தில்} மூழ்கி அழுது கொண்டிருப்பவளுமான தாரையைப் பார்த்தான்.(25) சாருநேத்ரம் {அழகிய விழிகளைக்} கொண்டவளும், கபிசிம்மத்தை நாதனாக {குரங்குகளில் சிங்கமான வாலியைத் தன் கணவனாகக்} கொண்டவளும், தன் பதியை இறுக அணைத்துக் கிடந்தவளும், இயல்பு பிறழாதவளும், கபிராஜனின் பத்தினியுமான அவளை மந்திரி பிரதானிகள் எழுப்பத் தொடங்கினர்.(26) 

அணைத்துக் கொண்டிருந்த நிலையில், பர்த்தாவின் சமீபத்தில் {கணவனின் நெருக்கத்தில்} இருந்து பிரிக்கப்பட்டவள் {தாரை}, பெரிதும் நடுக்கத்துடன் கூடியவளாக, சரத்தையும், வில்லையும் கையில் கொண்டு, தன் தேஜஸ்ஸால் சூரியனைப் போல ஜ்வலித்துக் கொண்டிருந்த ராமனைக் கண்டாள்.(27) மான்கன்றின் விழிகளைக் கொண்டவள் {தாரை}, முழுமையான பார்த்திப லக்ஷணங்களையும், அழகிய கண்களையும் கொண்டவனும், இதுவரை காணப்படாத புருஷபிரதானனுமான அவனே அந்த காகுத்ஸ்தன் {ராமன்} என்பதை அறிந்து கொண்டாள்.(28) ஆரியையும், வருத்தத்துடன் கூடியவளும், விசனத்தில் அகப்பட்டவளுமான தாரை, மிகவும் நடுங்கியபடியே, இந்திரனுக்கு ஒப்பானவனும், அடைதற்கரியவனும், மஹானுபாவனுமான அவனது சமீபத்தை மிகத் துரிதமாக அடைந்தாள்.(29)

Angada Sugreeva Hanuman Tara Rama Lakshmana Vali

சோகத்துடனும், நடுங்கும் சரீர பாவத்துடன் கூடியவளும், மனஸ்வினியுமான {சுயமதிப்பு மிக்கவளுமான} அந்த தாரை, மிக சுத்தமான இயல்பைக் கொண்டவனும், போரில் இலக்கைத் துல்லியமாக அடைபவனுமான அந்த ராமனை நெருங்கி, {இந்த} வாக்கியங்களைச் சொன்னாள்:(30) "நீ அளவிடற்கரியவன்; அடைதற்கரியவன்; ஜிதேந்திரியன் {புலன்களை வென்றவன்}; தர்மவான்களில் உத்தமன்; அழிவற்ற கீர்த்தி படைத்தவன்; பகுத்தறிவுள்ளவன்; பூமியைப் போன்ற பொறுமையுள்ளவன்; ரத்தத்திற்கு ஒப்பான {சிவந்த} கண்களைக் கொண்டவன்.(31) கைகளில் பாணாசனத்தையும் {பாணம் பொருத்தும் வில்லையும்}, பாணங்களையும் எடுத்தவன்; மஹாபலவான்; சமமான அங்கங்களைக் கொண்டவன்; நீ மனுஷ்ய தேஹத்தின் மகிமையை விட திவ்ய தேஹத்தின் மகிமைக்குத் தகுந்தவன்[3].(32) வீரா, எந்த பாணத்தால் என் பிரியரை {காதலர் வாலியைக்} கொன்றாயோ, அதே பாணத்தின் மூலமே நானும் சென்று, கொல்லப்பட்டவரின் சமீபத்தை அடைய விரும்புகிறேன். நான் இல்லாமல் வாலி மகிழ்ச்சியடையமாட்டார்.(33) 

[3] தாரை சொல்லும் இவ்விரு வசனங்களுக்குப் பண்டிதர்கள் பலர் பல விளக்கவுரைகளைச் சொல்வதாகக் கூறும் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், ராமனை தெய்வமாகக் காட்டுவதற்கான நெடும் விளக்கங்கள் அடிக்குறிப்புகளாக இருக்கின்றன. படைப்பைவிட விளக்கத்தின் விரிவுக்கு அஞ்சியும், வலிந்து விளக்குவதற்கான அவசியமின்மையினாலும் இங்கே அவை தவிர்க்கப்படுகின்றன. 

களங்கமற்ற பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர் {வாலி}, ஸ்வர்க்கத்தை அடைந்தாலும், சுற்றிலும் பார்த்து என்னைக் காணாவிட்டால், அதிகமாகவும், குறைவாகவும் சிவந்த கேசங்களுடனும், விசித்திர வேஷங்களுடனும் {தோற்றங்களுடனும்} கூடிய அப்சரஸ்களுடனும் சேரமாட்டார்.(34) வீரா, விதேஹ கன்னிகை {வைதேஹி / சீதை} இல்லாமல் நீ நகேந்திரத்தின் {சிறந்த மலையான ரிச்யமூகத்தின்} ரம்மியமான தாழ்வரைகளில் எப்படி இருப்பாயோ, அப்படியே வாலியும் ஸ்வர்க்கத்தை அடைந்தாலும், நான் இல்லாமல் சோகமடைந்து, வர்ணம் இழந்து போவார்.(35) குமார புருஷன் {இளைஞன் ஒருவன்}, வனிதை இல்லாமல் எப்படி துக்கத்தை அடைவான் என்பதை நீ அறிவாய். எனவே, உண்மையை அறியும் நீ என்னையும் கொல்வாயாக. வாலி, என்னைக் காணாததால் உண்டாகும் துக்கத்தை அடைய வேண்டாம்.(36) மனுஜேந்திரப் புத்திரா, மஹாத்மாவான உனக்கு, என்னால் ஸ்திரீகாததோஷம் {பெண்ணைக் கொல்லும் பாபம்} உண்டாகாது. அவ்வாறு நீ நினைத்தாலும், "இவள் அவனது {தாரையானவள் வாலியின்} ஆத்மா" என்று {நினைத்து} என்னை நீ கொன்றால் ஸ்திரீவதம் உண்டாகாது.(37) 

சாஸ்திரங்களில் பிரயோகிக்கப்படும் விதவிதமான வேத வாக்கியங்கள், "தாரம், புருஷனின் அன்னிய ரூபமில்லை {மனைவியே கணவனின் ஆத்மா}" என்கின்றன. உலகத்தில் தாரமே பிரதானம். வேறு தானங்களை ஞானவான்களும் கண்டவரல்லர்.(38) வீரா, நீயும் தர்மத்தை ஆராய்ந்து, என்னை என் பிரியரிடம் {காதலரான வாலியிடம்} அளிப்பாயாக. வீரா, இந்த தானத்திற்காக என்னைக் கொல்வதன் மூலம், அதர்மத்தின் தீண்டலை நீ அடையமாட்டாய்.(39) நரேந்திரா {மனிதர்களின் தலைவா, ராமா}, வருந்திக் கொண்டிருப்பவளும், அநாதையும், {கணவனிடம் இருந்து} பிரிந்தவளுமான என்னைக் கொல்லாதிருப்பது உனக்குத் தகாது. மாதங்கத்தின் {யானையின்} உற்சாக நடையைக் கொண்டவரும், மதிமிக்கவரும், சிறந்ததும், பகட்டானதுமான உத்தம ஹேமமாலை அணிந்தவருமான அந்த பிலவங்கம ரிஷபர் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையான வாலி} இல்லாமல் நீண்டகாலம் ஜீவிக்கும் சக்தி எனக்கில்லை" {என்றாள் தாரை}.(40)

இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாத்மாவான அந்த விபு {தலைவன் ராமன்}, தாரையை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} ஹிதமாகப் பேசினான், "வீரனின் பாரியையே {வீரன் வாலியின் மனைவியான தாரையே},  மதியற்றவளாகாதே {அசட்டு எண்ணத்திற்கு இடங்கொடாதே}. சர்வலோகமும் விதாதாவால் {படைத்தவனால் / பிரம்மனால்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) அந்த சுகதுக்கங்களின் யோகத்தையும் {சேர்க்கையையும் / சுகதுக்கங்களை அனுபவிப்பதையும்}, சர்வத்தையும் அவனே {பிரம்மனே} விதிக்கிறான் என்று உலகத்தார் சொல்கின்றனர். அவனது வசப்பட்ட மூவுலகங்களும் விதிக்கப்பட்ட விதியை மீறுவதில்லை.(42) பரம பிரீதியின் பிராப்தத்தை {தாரையான} நீயும், யௌவராஜ்ஜியத்தின் பிராப்தத்தை {அங்கதனான} உன் புத்திரனும் அடைவீர்கள். அவ்வகையிலேயே தாதா {விஷ்வகர்மன்} விதித்திருக்கிறான். சூரனின் பத்தினிகள் வருத்தமடையமாட்டார்கள்" {என்றான் ராமன்}.(43) 

பிரபாவத்திற்குத் தகுந்தவனும், பகைவரை எரிப்பவனும், மஹாத்மாவுமானவனால் {ராமனால்} ஆசுவாசப்படுத்தப்பட்டவளும், வீரபத்தினியும், உரத்த முகத்துடன் கூடியவளும், ரூபத்திற்குத் தகுந்த நல்ல வேஷம் {தோற்றம்} கொண்டவளுமான அந்த தாரை {தன் புலம்பலை} நிறுத்திக் கொண்டாள்.(44)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 24ல் உள்ள சுலோகங்கள்: 44

Previous | Sanskrit | English | Next

Friday, 28 July 2023

மீண்டும் தாரையின் புலம்பல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 23 (30)

Tara laments again | Kishkindha-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வாலியின் விதியை நினைத்து வருந்திப் புலம்பிய தாரை; வாலியின் அவலநிலையைக் காணும்படி அங்கதனை அழைத்தது...

Vali instructing Angada

அப்போது, உலகத்தால் நன்கு அறியப்பட்டவளான தாரை, கபிராஜனின் {குரங்குகளின் மன்னனான வாலியுடைய} அந்த முகத்தின் சமீபம் சென்று முகர்ந்து, மரித்த பதியிடம் {இறந்து போன தன் கணவன் வாலியிடம், பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(1) "வீரரே, என் சொற்களின்படி செயல்படாத நீர், சமமற்றதும், கற்கள் பரப்பப்பட்டதும், மிகக் கடினமானதுமான வசுதாதலத்தில் {தரையில்} கிடக்கிறீர்.(2) வானரேந்திரரே {வானரர்களின் தலைவரே}, மஹீயே {நிலமகளே} உமக்கு என்னைவிட பிரியமானவள் என்பது நிச்சயம். அதனாலேயே, எனக்கு மறுமொழி ஏதும் கூறாமல் அவளைத் தழுவிக் கிடக்கிறீர்.(3) வீரரே, சாஹஸப்பிரியரே, நீர் சுக்ரீவரின் வசம் அடைந்தீர்; சுக்ரீவரே விக்ராந்தரானார் {வெற்றியடைந்தார்}. அஹோ, இதுவே விதியானது.(4) 

இரிக்ஷவானர முக்கியர்கள் {கரடிகள், குரங்குகள் ஆகியோரில் முக்கியமானவர்கள்} பலியை {வழிபடத்தகுந்தவரைப்} போல உம்மை முழுமையாக உபாசிக்கின்றனர் {வழிபடுகின்றனர்}. அவர்களின் பரிதாபகரமான புலம்பல்களையும், அங்கதனின் அழுகையையும், என்னுடைய இந்தக் கதறலையும் கேட்டும் ஏன் நீர் விழித்தெழாமல் இருக்கிறீர்?(5,6அ) உம்மாலே பூர்வத்தில் அழிக்கப்பட்ட ரிபுக்கள் {பகைவர்} எங்கே சாய்க்கப்பட்டனரோ அந்த வீரசயனத்திலேயே இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறீர்.(6ஆ,7அ) சுத்தமான சத்வ குலத்தில் ஜனித்தவரே, யுத்தப்பிரியரே, மானத்தைக் காப்பவரே, என் அன்புக்குரியவரே, நீர் என்னைத் தனிமையில் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டீர்.(7ஆ,8அ) 

விவேகிகள், கன்னியை சூரனுக்குக் கொடுக்கக்கூடாது. கொல்லப்பட்ட சூரரின் பாரியையான நான், விதவையாகிவிட்டதை இப்போது பார்க்கலாம்.(8ஆ,9அ) என் மானம் பங்கமடைந்தது. என் சாஷ்வதகதி பங்கமடைந்தது {நன்னிலையும், இன்பமும் பாழானது}. ஆழமானதும், பெரியதுமான சோக சாகரத்தில் நான் மூழ்குகிறேன்[1].(9ஆ,10அ) கொல்லப்பட்ட பர்தாவை {கணவர் வாலியைக்} கண்டும், எது நூறாகப் போகாமல் {சிதறாமல்} திடமாக இருக்கிறதோ, அத்தகைய என் ஹிருதயம் நிச்சயம் கல்லின் சாரத்தாலானதாக இருக்க வேண்டும்.(10ஆ,11அ) இயல்பிலேயே எனக்குப் பிரியமானவரும், நண்பரும், பர்த்தாவும், போர்களில் பராக்கிரமருமான சூரர் பஞ்சத்வத்தை[2] {ஐந்தாம் நிலையான மரணத்தை} அடைந்துவிட்டார்.(11ஆ,12அ) புத்திரிணியாக {பிள்ளைகளைப் பெற்றவளாக} இருந்தாலும், தனம், தானியம், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், பதியை இழந்த எந்த நாரீயையும் ஜனங்கள் {எந்தப் பெண்ணையும் மக்கள்} விதவை என்றே அழைப்பார்கள்.(12ஆ,13அ)

[1] வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை காண்கிலேன்
உரை சேர் ஆருயிரே என் உள்ளமே
அரைசே யான் இது காண அஞ்சினேன்

- கம்பராமாயணம் 4098ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: மலையினை ஒத்த உமது தோள்களில் சேர்ந்து எந்நாளும் இன்புற்றிருந்த நான் கரை காணாத துன்பக்கடலின் எல்லையைக் காணாதிருக்கிறேன். புகழ்பொருந்திய என் ஆருயிரே, என் உள்ளமே, அரசே, நான் இதைக் காண அஞ்சினேன் {நீர் இறந்து கிடக்கும் இந்தத் துன்பக் காட்சியைக் காண அஞ்சினேன்}.

[2] "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்று கிஷ்கிந்தா காண்டம் 20ம் சர்க்கம் 9ம் சுலோகத்திற்கான அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார்.

வீரரே, உமது காத்திரங்களில் {உறுப்புகளில்} இருந்து வெளிப்பட்ட உதிர மண்டலத்தில், இந்திரகோபப் பூச்சியின் {சிவப்பு} வண்ணத்திலான உமது சயனத்தில் கிடப்பது போல் கிடக்கிறீர்.(13ஆ,14அ) பிலவகரிஷபரே {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையே}, புழுதியும், குருதியும் படிந்த உமது காத்திரங்களை {அங்கங்களை} என் இரு கைகளாலும் முழுமையாகத் தழுவிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை[3].(14ஆ,15அ) அதிபயங்கரமான இந்த வைரத்தில் {உமக்கும், சுக்ரீவருக்கும் இடையிலான இந்தப் பகையில்} இதோ சுக்ரீவர் காரியத்தை நிறைவேற்றிவிட்டார். இராமன் ஏவிய ஒரே கணையில் அவரது {சுக்ரீவரின்} பயம் தீர்ந்தது.(15ஆ,16அ) நீர் பஞ்சத்வத்தை அடைந்தீர். உமது ஹிருதயத்தில் தைத்திருக்கும் சரத்தால் தடுக்கப்பட்டு, உமது காத்திரங்களை {அங்கங்களை} ஸ்பரிசிக்க முடியாமல் உம்மைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" {என்றாள் தாரை}.(16ஆ,17அ)

[3] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என் வயின் ஊனம் யாவதோ?

- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: மலைகள் போன்ற உமது தோள்கள் புழுதி படிய தரை மேல் கிடப்பவரே, "நீர் அடைந்த கதியும் இதுவோ?" என்று கரைந்துருகாமல் கதறும் என் அழுகையைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீரே; என்னிடம் உள்ள குற்றம் என்ன?

அப்போது நீலன் {என்ற வானரன்}, அவனது காத்திரத்தில் {வாலியின் மார்பில்} பாய்ந்த சரத்தை, மலைப்பிளவில் உறுதியாகப் பற்றிக் கொண்டு பளபளக்கும் விஷப்பாம்பைப் போலப் பிடுங்கினான்.(17ஆ,18அ) பிடுங்கியபோது அந்த பாணம், தினகரனில் இருந்து வந்து அஸ்தமலையைத் தாக்கி முழுமையாகத் தடுக்கப்பட்டும் {அஸ்தமனக்} கதிர்களைப்போல மின்னியது.(18ஆ,19அ) தராதரத்தில் {பூமியால் தாங்கப்படும் மலையில்} இருந்து {பெருகும்} தாமிரகைரிகம் {செந்தாது} கலந்த தாரைகளைப் {நீர்த்தாரைகளைப்} போலவே அவனது புண்களில் இருந்து ரத்தத் தாரைகள் எங்கும் பெருகின.(19ஆ,20அ) போர்ப்புழுதியால் எங்கும் பூசப்பட்டிருந்த பர்த்தாவை {கணவன் வாலியைத்} துடைத்து, அஸ்திரத்தால் தாக்கப்பட்ட சூரனைத் தன் நயனத்தில் ஜனித்த கண்ணீரால் நனைத்தாள்.(20ஆ,21அ)

அங்கனையான {அழகிய பெண்ணான} தாரை, கொல்லப்பட்டு, உதிரத்தால் சர்வ அங்கங்களும் நனைந்த பதியைக் கண்டு, சிவந்த கண்களுடன் கூடிய புத்திரன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(21ஆ,22அ) "புத்திரா, பிதாவின் கொடூரமான பஷ்சிம {மேற்கு / மறையும் / மரண} அவஸ்தையைப் பார். பாப கர்மங்களால் பற்றப்பட்ட வைரம் அந்தகதியடைந்தது {பகை முடிவை அடைந்தது}.(22ஆ,23அ) புத்திரா, பாலசூரியனின் பிரகாச உடலைக் கொண்டவரும், யமனின் வசிப்பிடத்திற்குப் பிரயாணம் செய்பவரும், கௌரவமளிக்கும் ராஜாவுமான பிதாவை வணங்குவாயாக" {என்றாள் தாரை}.(23ஆ,24அ)

இவ்வாறு சொல்லப்பட்டவன், வேகமாக எழுந்து, "நான் அங்கதன்" என்று சொல்லி, பருத்தவையும், உருண்டவையுமான தன்னிரு கைகளாலும் பிதாவின் சரணங்களைப் பற்றிக் கொண்டான்.(24ஆ,25அ) {அப்போது தாரை}, "உம்மை வணங்கும் அங்கதனிடம், முன்பு போல, 'புத்திரா, ஆயு பவ {பல்லாண்டு வாழ்க}' என்று நீர் சொல்லாமல் இருப்பது என்ன அர்த்தம்?(25ஆ,26அ) சிம்மத்தால் கோவிருஷம் {காளை} வீழ்த்தப்பட்டதும், வத்சத்துடன் கூடிய கோவைப் போல {கன்றுடன் கூடிய பசுவைப் போல}, இதோ புத்திரனின் சகாயத்துடன் கூடிய நான், சேதனமிழந்த {நனவு போன} உம்மை உபாசிக்கிறேன் {உமக்குத் தொண்டாற்றுகிறேன்}.(26ஆ,இ) சங்கிராம யஜ்ஞம் {போர் வேள்வி} செய்துவிட்டு, பத்தினியான என்னை விட்டுவிட்டு, ராமனின் ஆயுதமெனும் நீரில் எவ்வாறு அவப்ருத[4] ஸ்நானம் {நீராடும் சடங்கைச்} செய்தீர்?(27) 

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவப்ருதம் என்பது யாகத்தின் மிக முக்கியமான இறுதி அங்கமாகும். இது வேள்வியின் இறுதியில் நீராடும் சடங்காகும். வாலியின் வாழ்வின் கடைசி நீராடலாக இங்கே குறிப்பிடப்படும் அவப்ருதம் மரணத்தைக் குறிக்கிறது. போரானது இவ்வாறு ஒரு வேள்வியுடன் ஒப்பிடப்படும்போது, அவப்ருதம் என்ற சொல் அந்த உரையில் பயன்படுத்தப்படுகிறது. எந்த யாகத்தையும், அதைத் தொடர்ந்த நீராடலையும் மனைவியுடனேயே செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் திருப்தியடைந்த தேவராஜன் {இந்திரன்}, எதை உமக்கு தத்தம் செய்தானோ, எது உமக்குப் பிரியமானதோ, அந்தப் பொன்மயமான மாலை இப்போது ஏன் காணப்படவில்லை?(28) கௌரவங்களை அளிப்பவரே, சைலராஜனை {மலைகளின் மன்னனான மேரு மலையை} வலம் வரும் சூரியனின் பிரபையைப் போலவே ராஜ்ஜியஸ்ரீயும் {ராஜலக்ஷ்மியும்} உயிர் போனாலும் உம்மைவிட்டு போகமாட்டாள்.(29) நான் சொன்ன பத்தியமான சொற்களின்படி நீர் செயல்படவில்லை. உமக்கு நிவாரணம் செய்யும் {உம்மைத் தடுக்கும்} சக்தியும் எனக்கில்லை. போரில் நீர் கொல்லப்பட்டதும், புத்திரனுடன் நானும் கொல்லப்பட்டவளானேன். உம்முடன் சேர்ந்து ஸ்ரீயும் {செழிப்பின் தேவியான லக்ஷ்மியும்} என்னைக் கைவிட்டுவிட்டாள் {என்றாள் தாரை}.(30)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Wednesday, 26 July 2023

வாலியின் மரணம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 22 (32)

Death of Vali | Kishkindha-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அங்கதனையும், தாரையையும் பார்த்துக் கொள்ளும்படி சுக்ரீவனைக் கேட்டுக் கொண்ட வாலி; பொன்னாரத்தை ஒப்படைத்தது; அங்கதனுக்கு உபதேசித்தது; வாலி மாண்டது...

Vali dies and Tara laments

மந்தமான உயிருடன், மந்தமாக சுவாசித்தபடியே எங்கும் தன் பார்வையைச் செலுத்தியவன் {வாலி}, தன் முன் இருந்தவனும், அனுஜனுமான {தம்பியுமான} சுக்ரீவனை முதலில் கண்டான்.(1) வாலி, பிராப்த விஜயமடைந்தவனும் {வெற்றி வாய்த்தவனும்}, பிலவகேஷ்வரனும் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனும்}, உரையாடத்தகுந்தவனுமான அந்த சுக்ரீவனிடம், சினேகத்துடன் கூடிய தெளிவான சொற்களில் இதைச் சொன்னான்:(2) "சுக்ரீவா, பலத்தால் நேரும் புத்தி மோஹத்தினால் இழுக்கப்பட்டு கில்பிஷம் {தவறு} செய்த என்னை எதிர்காலத்தில் தோஷங்களால் {குற்றங்களால்} அறிவது உனக்குத் தகாது.(3) தாதா {குழந்தாய்}, நாம் இருவரும் ஒரே நேரத்தில் சுகமாக இருக்க விதிக்கப்பட்டவர்களென நான் கருதவில்லை. எனவே, உடன் பிறந்தவர்களிடம் காணப்படும் ஸௌஹார்தத்திற்கு {நல்லுறவுக்கு} மாறான இந்த நிலை உண்டானது.(4) 

நீ இப்போதே இந்த வனௌகசர்களின் {வனவாசிகளின்} ராஜ்ஜியத்தை ஏற்பாயாக. நானும் வைவஸ்வதனின் {மரணதேவனின்} வசிப்பிடத்தை இதோ அடையப்போகிறேன் என்பதை அறிவாயாக[1].(5) இவ்வாறு ஜீவிதத்தையும், ராஜ்ஜியத்தையும் ஏராளமான செல்வத்தையும், பழிக்கத்தகாத புகழையும் விட்டு இதோ நான் துரிதமாக விலகப் போகிறேன்.(6) வீரா, ராஜாவே, இந்த அவஸ்தையில் நான் எந்த சொல்லைச் சொல்லப்போகிறேனோ, அது செய்வதற்கரிதாக இருந்தாலும், அதைச் செய்வதே உனக்குத் தகும்.(7) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாலியின் மேன்மை அவனோடு அழியப்போவதில்லை. இங்கேயும் அவன் ஓர் உயர் நிலையை அடைகிறான். வெறுப்போ, கோபமோ இன்றி இரண்டு காரியங்களுக்காக அவனே சுக்ரீவனுக்கு அரசபதவியைக் கொடுக்கிறான். ஒன்று, சுக்ரீவனே வெற்றி பெற்றவன் என்பதால் அவனே ராஜ்ஜியத்தை அடைவானேயன்றி, ஹனுமான் முன்மொழிந்ததுபோல அங்கதனல்ல. அடுத்தது, சுக்ரீவன் தன் தம்பியாக இருப்பதாலும், ஒருகாலத்தில் இளவரசனாக இருந்தவன் என்பதாலும் அவனே அரசபதவிக்கு அங்கதனைவிட சிறந்த தேர்வாக இருக்க முடியும். எவ்வாறிருப்பினும், இறந்து கொண்டிருக்கும் வாலி, நிகரற்ற வெற்றியாளனாகவும், மூத்த சகோதரனாகவும் தன் உயர்ந்த பண்பை இங்கே மேலும் அதிகரித்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.

சுகத்திற்குத் தகுந்தவனும், நன்கு சுகமாக வளர்க்கப்பட்டவனும், பாலனாக இருப்பினும் பாலனல்லாதவனும் {சிறுவனாக இருப்பினும் முதிர்ச்சியடைந்தவனும்}, கண்ணீர் நிறைந்த முகத்துடன், பூமியில் கிடப்பவனுமான இந்த அங்கதனைப் பார்.(8) என் பிராணன்களைவிடப் பிரியமான புத்திரன் என்னை இழந்ததும் ஓர் ஔரசப் புத்திரனைப் போல எவ்வகையிலும் அர்த்தங்குறையாமல் இவனை பரிபாலிப்பாயாக {உன் மடியில் பிறந்த மகனைப் போல ஒரு குறையும் இல்லாதபடி இவனைக் காப்பாயாக}.(9) பிலவகேஷ்வரா {தாவிச்செல்லும் குரங்குகளின் தலைவா}, நான் எப்படியோ அப்படியே நீயும் இவன் பிதாவாக, தாதையாக {கொடுப்பவனாக}, பயத்தில் இருந்து அபயமளித்து, அனைத்து வகையிலும் முழுமையாகப் பாதுகாப்பாயாக.(10) ஸ்ரீமானும், உனக்கு நிகரான பராக்கிரமம் கொண்டவனுமான இந்த தாராத்மஜன் {தாரையின் மகன் அங்கதன்}, அந்த ராக்ஷசர்களை வதைப்பதில் உனக்கு முன் நிற்பான்.(11) பலவானும், தாரேயனும் {தாரையின் மகனும்}, வேகமுள்ள இளைஞனுமான இந்த அங்கதன், ரணங்களில் விக்கிரமத்துடன் {போர்களில் வெற்றிநடையுடன்} ஒப்பற்ற கர்மங்களைச் செய்வான்.(12)

ஸுஷேணனின் மகளான இவளும் {இந்தத் தாரையும்}, சூக்ஷ்ம அர்த்தங்களை நிச்சயிப்பதிலும், விதவிதமான உத்பாதங்களிலும் {ஆபத்துகளிலும்}, அனைத்துவகை ஆராய்ச்சிகளிலும் திறன்மிக்கவள்[2].(13) இவள் எதை நல்லது என்று சொன்னாலும், சந்தேகமில்லாமல் அந்தக் காரியத்தைச் செய்யலாம். தாரையின் மதம் {தாரையின் அனுமதி பெற்ற கருத்து} கிஞ்சித்தும் முரண்பட்டு வேறாக நடப்பதில்லை.(14) இராகவனுக்கான உனது காரியத்தையும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிறைவேற்றுவாயாக. அதைச் செய்யாமல் இருப்பது அதர்மமாகும்; மதிக்காத உனக்கு ஹிம்சையும் நேரும்[3].(15) சுக்ரீவா, காஞ்சனத்தாலான இந்த மாலையையும் {இப்போதே} சூடிக் கொள்வாயாக. {ஏனெனில்} இதிலுள்ள உதாராஸ்ரீ {பெருஞ்செழிப்பின் தேவி / வெற்றியின் தேவி / பேரொளி}, நான் மரித்துவிட்டால் இதைவிட்டு முற்றிலும் அகன்றுவிடுவாள்[4]" {என்றான் வாலி}.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தாரையின் தந்தை என்று அழைக்கப்படும் சுஷேணனைக் குறித்து ஓர் உவமை இங்கே கூறப்படுகிறது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்ததன் விளைவாக உதித்தவள் தாரை என்று கூறப்படுகிறது. அப்போது அந்தப் பாற்கடலில் இருந்து உண்டான பலவற்றில் ஒருத்தியாக தாரையும் வெளிப்பட்டாள். வாலியும், சுஷேணனும் அவளைக் கண்டதும், அவள் வியாழன் கிரகமான பிருஹஸ்பதியின் வழித்தோன்றல் என்பதை அறிந்து அவளது கரங்களைப் பற்றினர். வாலி அவளது வலது கையையும், சுஷேணன் அவளது இடது கையையும் பற்றிக் கொண்டு, அவள் யாருக்கு உரியவள் என்பதில் சச்சரவு செய்யத் தொடங்கினர். அப்போது முதிர்ந்த முனிவர்களும், தேவர்களும் தலையிட்டு, வலது கையைப் பிடித்தவன் கணவன் என்றும், இடது கையைப் பிடித்தவன் தந்தை என்றும் தீர்மானித்தனர். இவ்வாறே சுஷேணன் தாரையின் தந்தையானதாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.

[3] அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன்
மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும்
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா

- கம்பராமாயணம் 4078ம் பாடல், வாலி வதைப்படலம்

பொருள்: ஆட்சிப் பொறுப்பில் ஏற்படும் மனங்களிப்பால் அறிவு மயங்கி இகழாமல், ஐயனின் {ராமனின்} தாமரை மலர்ப் பாதங்களை விட்டு நீங்காமல் வாழ்வாயாக. மன்னர்கள் என்போர் பற்றி எரியும் நெருப்புக்கு உவமையானவர்கள் என்றே நினைத்துக் கொள்வாயாக. {மன்னர்கள் [ராமன்]} எண்ணிய எண்ணம் யாவும் {அரசர்கள் விரும்பும் காரியங்கள் யாவற்றையும்} செய்வாயாக. தொண்டு புரிபவர்கள் செய்யும் குற்றங்களைப் {மன்னர்கள் [ராமன்]} பொறுத்துக் கொள்வார்கள் என்று எண்ணாதே.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெற்றியைத் தரும் இந்த மாலையில் இருந்து சுக்ரீவனுக்கு வெல்லப்பட முடியாதவனாகும் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் வாலி, தன் சடலத்தைத் தீண்டும் அவமானத்தில், அதாவது சவ ஸ்பரிச தோஷத்தில் சிக்காமல் அந்தக் காஞ்சன மாலையைப் பாதுகாக்க வேண்டும். அங்கதனுக்கே முன்னுரிமை என்றாலும், சுக்ரீவனுக்கு அதைக் கொடுக்கிறான் வாலி" என்றிருக்கிறது.

உடன்பிறந்த வாஞ்சையுடன் வாலி இவ்வாறு சொன்னபோது, சுக்ரீவன், மகிழ்ச்சியைக் கைவிட்டு, {ராகு} கிரகத்தால் உண்ணப்படும் உடுராட்டை {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனைப்} போல மீண்டும் தீனமடைந்தான் {பரிதாப நிலையை அடைந்தான்}.(17) அவன் {சுக்ரீவன்}, வாலியின் சொற்களால் சாந்தமடைந்து, அக்கறையுடன் முறையான காரியத்தைச் செய்யும் வகையில், {வாலியால்} அனுமதிக்கப்பட்டதும், காஞ்சனத்தாலானதுமான அந்த மாலையை எடுத்துக் கொண்டான்.(18)

காஞ்சனத்தாலான அந்த மாலையை தத்தம் செய்துவிட்டு, பிரேத பாவமடைவதற்கு சித்தம் அடைந்த {உயிரைவிட ஆயத்தமான} வாலி, அங்கே நின்று கொண்டிருந்த ஆத்மஜனை {தன் மகனைக்} கண்டான். சினேகத்துடன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) "இனி பிரியாபிரியங்களை {விருப்பு, வெறுப்புகளைப்} பொறுத்துக் கொண்டும், தேசகாலங்களை {இடம், காலம் ஆகியவற்றைக்} கருத்தில் கொண்டும், காலத்திற்கேற்ப நேரும் சுகதுக்கங்களை {சமமென எண்ணி அவற்றைத்} தாங்கிக் கொண்டும் சுக்ரீவனின் வசத்தை அடைந்திருப்பாயாக {சுக்ரீவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பாயாக}[5].(20) மஹாபாஹுவே, நீ எப்படி நடந்து கொண்டாலும், நான் எவ்வாறு சதா சீராட்டி வளர்த்தேனோ அவ்வாறு உன்னை சுக்ரீவன் மதிப்பான் என்று நினைக்காதே.(21) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, இவனது அமித்ரர்களிடம் {நண்பர்களல்லாதவர்களிடம்} சேராதே, சத்ருக்களிடமும் செல்லாதே. தலைவனின் அர்த்தங்களை {சுக்ரீவனின் நோக்கங்களைக்} கருத்தில் கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் சுக்ரீவனின் வசத்தை அடைந்திருப்பாயாக.(22) அதிகமான பற்றுடனோ, பற்றின்மையுடனோ செயல்படாதே. இவ்விரண்டும் மஹாதோஷங்களாகும். எனவே, இவற்றுக்கு இடைப்பட்ட நிலையில் நடந்து கொள்வாயாக" {என்றான் வாலி}.(23)

[5] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தப் பிரியாவிடை சொல்லும் தெளிவான செய்தி பின்வருவது: "இனி நீ சுக்ரீவனின் வசத்தை அடைந்திருக்கும்போது, சுதந்திரமானவன் அல்ல என்பதாலும், உன் தலையீட்டுரிமையில் காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி நீ நடந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அவனது ஆணைகள் உனக்கு விருப்பத்திற்குரியனவாகவோ, வெறுப்புக்குரியனவாகவோ இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அவற்றை நீ செய்து முடிக்கவே வேண்டும்; அவனது உத்தரவின் பேரில் ஏற்படும் சுகதுக்கங்களையும் நீ தாங்கிக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் போனபின்பு நீ தேசத்தையும் காலத்தையும் அறிந்து ப்ரியத்தையாவது அப்ரியத்தையாவது ப்ரபு சொல்வானாயின் ப்ரியத்தைப்போலவே அப்ரியத்தையும் துக்ககாலத்தில் ஸுகத்தையும் ஸுககாலத்தில் துக்கத்தையும் பொறுத்துக் கொண்டு ஸுக்ரீவனுக்கு உட்பட்டு வர்த்திப்பாயாக" என்றிருக்கிறது.

பெருஞ்சரத்தால் பெரிதாகப் பீடிக்கப்பட்டவன் {வாலி}, இவ்வாறு சொன்ன பிறகு, கண்கள் சுழல, திறந்த வாயுடன் பற்கள் வெளியே தெரிய, பயங்கர நிலையில் அவனது ஜீவிதம் சிறகுகளை அடைந்தது {உயிர் பறந்து சென்றது}.(24) பிலவகசத்தமர்களும் {தாவிச்செல்லும் குரங்குகளில் சிறந்தவர்களும்}, கொல்லப்பட்ட யூதபனுடன் கூடியவர்களுமான அந்த வானரர்கள் அனைவரும், {பின்வருமாறு} புலம்பத் தொடங்கி கதறி அழுதனர்:(25) "வானரேஷ்வரன் {வானரர்களின் தலைவனான வாலி} ஸ்வர்கத்திற்குச் சென்றதால் கிஷ்கிந்தை இப்போது சூன்யமாகிவிட்டது {வெறுமையடைந்தது}. உத்யானங்களும் {சோலைகளும்}, பர்வதங்களும் {மலைகளும்}, கானகங்களும் சூன்யமாகிவிட்டன. பிலவகசார்தூலன் கொல்லப்பட்டதும் வானரர்கள் தங்கள் பிரபையை இழந்துவிட்டனர்.(26,27அ) எவனது மகத்தான வேகத்தால் கானகங்களும், வனங்களும் புஷ்பகணங்களுடன் பின்தொடர்ந்து செல்லுமோ அதை இனி எவன் செய்யப் போகிறான்?[6](27ஆ,28அ) மஹாத்மா {வாலி}, மஹாபாஹுவான கோலபன் எனும் கந்தர்வனுடன் தசபஞ்ச வருஷங்கள் {பதினைந்து ஆண்டுகள்} எந்த மஹத்தான யுத்தம் செய்தானோ, அந்த யுத்தம் ராத்திரிகளிலும், பகலிலும் நடைபெறாமல் இருக்கவில்லை.(28ஆ,29) அதன்பிறகு, பதினாறாவது வருஷத்தில் கோலபன் கீழே வீழ்த்தப்பட்டான். கோரைப் பற்களுடன் கூடிய வாலி, தீய மனம் கொண்ட அவனை {கோலபனைக்} கொன்றுவிட்டு, நமக்கு அனைத்து வகையிலும் அபயமளித்தான். அப்படிப்பட்ட வாலி எவ்விதம் வீழ்ந்தான்?" {என்று புலம்பினர்}.(30)

[6] வனங்களும், மரங்களும், மலர்களும் வாலியின் பின்னே செல்வது போல தோற்றமளிப்பதாகச் சொல்லப்படுவது, வாலியின் பெரும் வேகத்தை காட்சிரூபமாக எடுத்துக்காட்டுவதற்காகச் சொல்லப்படுகிறது

வீரனான பிலவகாதிபதி {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான வாலி} கொல்லப்பட்டதும், வனசரர்களான அந்த பிலவங்கமர்கள் {வனத்தில் திரிபவர்களும், தாவிச் செல்பவர்களுமான அந்தக் குரங்குகள்}, மஹாவனத்தில் சிம்மத்தை எதிர்த்த கவாம்பதி {காளை} மாண்டதும் {கலவரமடையும்} பசுக்களைப் போல அமைதியை இழந்தனர்.(31) அப்போது தாரையானவளோ, விசன ஆர்ணவத்தில் {சோகக் கடலில்} மூழ்கியவளாக, மரித்த பர்த்தாவின் வதனத்தையே {முகத்தையே} பார்த்துக் கொண்டிருப்பவளாக, வெட்டி வீழ்த்தப்பட்ட பெரும் மரத்தைச் சுற்றியிருக்கும் லதையை {கொடியைப்} போல வாலியைத் தழுவியபடி பூமியில் விழுந்தாள்.(32)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Saturday, 8 July 2023

தாரையின் புலம்பல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 20 (26)

Tara's lamentation | Kishkindha-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விழுந்து கிடக்கும் வாலியைக் கண்டு கதறிய தாரையின் புலம்பல்...

Tara Angada Lakshmana Rama Vali Sugreeva Hanuman

தாராதிபனின் {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனின்} முகம் படைத்த தாரை, ராமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டதும், அந்தகனைப் போன்றதுமான சரத்தால் வீழ்ந்து, பூமியில் கிடக்கும் தன் பர்த்தாவை {கணவன் வாலியைக்} கண்டாள்.(1) அந்த பாமினி {பெண்மணி}, குஞ்சரத்திற்கு {யானைக்கு} ஒப்பானவனும், கணையால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தவனுமான வானரன் வாலியை அணுகி அணைத்துக் கொண்டாள்.(2) பர்வதேந்திரனுக்கு {பெரும் மலைக்கு} ஒப்பானவன், வேரறுந்த மரத்தைப் போலக் கிடப்பதைக் கண்ட தாரை, துன்பமடைந்தவளாக சோகத்தால் தபிக்கும் மனத்துடன் {பின்வருமாறு சொல்லி} கதறி அழுதாள்:(3) "போரில் பயங்கரரே, விக்ராந்தரே {வெற்றியாளரே}, சிறந்த வீரரே, பிலவதாம்வரரே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவரே}, தீனமானவளும் {பரிதாப நிலையில் இருப்பவளும்}, ஒன்றும் அறியாதவளுமான என்னிடம் இப்போது நீர் ஏன் பேசாதிருக்கிறீர்?(4) 

ஹரிசார்தூலரே {குரங்குகளில் புலியே}, எழுவீராக. உத்தம சயனத்தில் {சிறந்த படுக்கையில்} படுப்பீராக. சிறந்த நிருபர்கள் {மன்னர்கள்} இவ்விதம் பூமியில் படுப்பதில்லை.(5) வசுதாதிபரே {பூமியின் தலைவரே}, உண்மையில் வசுதையே {பூமியே} உமக்குப் பிரியமிக்கவளோ? உயிர் துறந்தும் என்னைவிட்டு காத்திரங்களால் {உமது அங்கங்களால்} அவளை சேவிக்கிறீர்.(6) வீரரே, தர்மத்தின்படி செயல்படுபவரான நீர் இப்போது கிஷ்கிந்தையைப் போன்ற ரம்மியமான புரியை ஸ்வர்க்க மார்க்கத்தில் நிர்மாணித்திருப்பது தெளிவாகிறது.(7) 

மதுகந்தம் {தேன்மணம்} வீசும்  வனங்களில், அந்தந்த காலங்களில் நீர் எங்களுடன் கூடி விளையாடுவதை எல்லாம் இத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்.(8) யூதபர்களில் மஹாயூதபரே {குழுத்தலைவர்களில் பெருந்தலைவரே}, நீர் பஞ்சத்வத்தை அடைந்ததால் {இறந்ததால்} நான் ஆனந்தமிழந்து, ஆசையிழந்து {நம்பிக்கையிழந்து} சோக சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்[1].(9) நீர் கொல்லப்பட்டு புவியில் கிடப்பதைக் கண்ட சோகத்தால் பீடிக்கப்பட்டும், இன்னும் ஆயிரந்துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால் என் ஹிருதயம் {கல்லைப் போல} மிக திடமானதுதான்.(10) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்றிருக்கிறது.

பிலவகாதிபரே {தாவிச் செல்பவையான குரங்குகளின் தலைவரே}, எதற்காக சுக்ரீவரின் பாரியையை {ருமையை} அபகரித்து, அவரையும் {சுக்ரீவரையும் கிஷ்கிந்தையில் இருந்து} விரட்டினீரோ, அதற்காகவே இந்த விளைவை நீர் அடைந்தீர்.(11) வானரேந்திரரே, {உமது} நலத்தில் விருப்பத்துடன் கூடிய ஹிதைஷிணியாக {நலம்விரும்பியாக} நான் உமக்கு ஹிதமான {நன்மைபயக்கும்} வாக்கியத்தைச் சொன்னாலும், மோஹத்தால் {அறியாமையால்} நீர் என்னை நிந்தித்தீர்.(12) மாநதரே {மதிப்பளிப்பவரே}, ஆரியரே, ரூபத்தாலும், யௌவனத்தாலும் {வடிவழகாலும், இளமையாலும்} செருக்குற்றவர்களும், தக்ஷிணைகளுமான {[காதல் விளையாட்டுகளில்] திறன்மிக்கவர்களுமான} அப்சரஸ்களின் சித்தங்களை நிச்சயம் நீர் கொள்ளை கொள்ளப் போகிறீர்[2].(13) எவன் வசமில்லாத உம்மை, பலாத்காரமாக சுக்ரீவரின் வசம் அடையச் செய்தானோ அந்தக் காலனே நிச்சயம் உமக்கு ஜீவிதாந்தகன் {உயிருக்கு முடிவை ஏற்படுத்தியவன்}. இதில் சந்தேகமில்லை.(14) வேறொருவருடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வாலியை {உம்மை}, முறையற்ற, பழிக்கத்தக்க வகையில்  கொன்றும், காகுத்ஸ்தன் {ராமன்} வருந்தாமல் இருக்கிறான்[3].(15) 

[2] தர்மாலயப் பதிப்பில், "உமக்கு இப்பொழுது உயிருக்கு முடிவை விளைவிக்கிறதாகிய காலமிது. இதற்கையமின்று. எவர் கையிலுமகப்படாத நீர் அதனால் பிடிவாதமாய் சுக்ரீவனது கையில் சிக்கிக் கொண்டீர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நீ எவர்க்கும் ஸ்வாதீனப்படாதவன். இப்படிப்பட்ட உன்னைத் தனது ஸாமர்த்யத்தினால் மனமயங்கச் செய்து ஸுக்ரீவன் வசம் அகப்படும்படி செய்தது, உன் ப்ராணன்களைக் கொள்ளும் பொருட்டு வந்த ம்ருத்யுவேயன்றி வேறன்று" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இக்காலம் தேவருடைய ஆயுளை மாய்க்குங்காலந்தான்போலும், இல்லாவிடின் இந்த ஸுக்ரீவனுக்கு வசமாகி இப்படி யழிந்திருப்பீரோ?" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் செம்பதிப்பு, கிழக்கு பாடம் முதலிய சில பதிப்புகளில் இல்லை" என்றிருக்கிறது. தாரையின் புலம்பலில் இந்த சுலோகம் தொடர்பின்றி ஒட்டாமல் வருவதாகவே தெரிகிறது. இறந்து போகும் வாலியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வேறு யாரிடமோ தாரை பேசுவதைப் போலாகிவிடுகிறது. இந்த சுலோகத்தில் "வாலி" என்று வரும் இடத்தில் "உம்மை" என்ற சொல் வந்தால் தாரையின் புலம்பல் சரியாக இருக்கும்.

பூர்வத்தில் {இதற்குமுன்} கிருபைக்குரியவளாகவோ, துக்கப்படுபவளாகவோ இல்லாதவள், இப்போது சோகத்தில் மூழ்கியவளாக அநாதையைப் போல கிருபைக்குரிய வைதவ்யத்தை {கைம்மையை / விதவைத் தன்மையை} அடைந்திருக்கிறேன்.(16) செல்லமாக வளர்க்கப்பட்டவனும், சுகுமாரனும், வீரனுமான என் அங்கதன், குரோதத்தில் மூர்ச்சித்திருக்கும் பிதாவின் தம்பியிடத்தில் {சிற்றப்பன் சுக்ரீவரிடத்தில்} என்ன அவஸ்தையை அனுபவிக்கப் போகிறானோ?(17) {இவ்வளவு நேரம் வாலியிடம் பேசிக் கொண்டிருந்தவள், மகனான அங்கதன் பக்கம் திரும்பி}, புத்திரா {அங்கதா}, தர்மவத்ஸலரான உன் பிதாவை {தந்தையை} நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. வத்ஸா {குழந்தாய்}, இந்த தரிசனம் இனி கிடைப்பது துர்லபமாகும் {இனி கிடைக்காது}.(18) {அங்கதனிடம் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் வாலியிடம்}, மறுமையில் வசிக்கப் புறப்பட்டுவிட்ட நீர், உமது புத்திரனை ஆசுவாசப்படுத்துவீராக. உச்சியை முகர்ந்து இவனுக்கான செய்தியைச் சொல்வீராக.(19) 

உண்மையில் ராமன் உம்மை வீழ்த்தி மஹத்தான கர்மத்தைச் செய்திருக்கிறான். சுக்ரீவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கடனற்ற நிலையை அடைந்துவிட்டான் {தன் கடமையைச் செய்துவிட்டான்}.(20) {வாலியிடம் இதைச் சொல்லிவிட்டு சுக்ரீவனின் பக்கம் திரும்பி} சுக்ரீவரே, ஆசை நிறைவேறிய நீர், உமது ருமையிடம் திரும்பிச் சென்று, கவலையேதுமின்றி ராஜ்ஜியத்தை அனுபவிப்பீராக. உடன்பிறந்த உமது பகைவர் {வாலி} கொல்லப்பட்டார்.(21) {சுக்ரீவனிடம் இதைச் சொன்ன தாரை, மீண்டும் வாலியிடம்}, வானரேஷ்வரரே {வானரங்களின் தலைவரான வாலியே}, இவ்வாறு நான் அழுதுகொண்டிருக்கும்போது, பிரியத்துடன் என்னிடம் ஏன் நீர் பேசாதிருக்கிறீர்? உமது பாரியைகளில் சிறந்தவர்கள் பலரும் இதோ இருக்கின்றனர்; பார்ப்பீராக" {என்றாள் தாரை}.(22) 

சுற்றிலும் இருந்த வானரிகள், அவளது {தாரையின்} புலம்பலைக் கேட்டு, தீனமடைந்த அங்கதனை அணைத்துக் கொண்டு, துக்கத்துடன் பரிதாபகரமாகக் கதறி அழுதனர்.(23) {தாரை, மேலும் தன் புலம்பலைத் தொடர்ந்தாள்}, "அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட வலிமைமிக்க கரங்களைக் கொண்ட வீரரே, பிரிய புத்திரன் அங்கதனைக் கைவிட்டு, நெடும்பயணம் செல்வதேன்? உமது குணங்களுடன் கூடியவனும், பிரியத்திற்குரிய அழகிய வேஷத்தில் {தோற்றத்தில்} இருப்பவனுமான பிரிய புத்திரனைக் கைவிட்டு இவ்வாறு செல்வது யுக்தமன்று {முறையல்ல}.(24) {பிரியமானவரே, அழகிய வேஷம் பூண்ட வீரரே, நாதரே, அங்கதனுடன் என்னைக் கைவிட்டு, நெடும்பயணம் புறப்படும் உமக்கு, நானோ, நம் மகன் அங்கதனோ பிரியமற்ற எதைச் செய்துவிட்டோம்? ஏன் செல்கிறீர்[4]} தீர்க்கபாஹுவே {நீண்ட கரங்களைக் கொண்டவரே}, ஹரிவம்ச நாதரே {குரங்குகளின் வம்சத்தலைவரே}, வீரரே, அறியாமல் நான் உமக்கு பிரியமற்ற எதையும் செய்திருந்தால், என்னை அதற்காகப் பொறுத்துக் கொள்வீராக. என் தலை உமது பாதத்தைத் தீண்டுகிறது {உம்மை வணங்குகிறேன்}" {என்று புலம்பினாள் தாரை}[5].(25) 

[4] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இருந்து இந்த அதிக சுலோகம் எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும் இந்த அதிகசுலோகம் இருக்கிறது.

[5] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என்வயின் ஊனம் யாவதோ

- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "'மலை போன்ற தோள்கள் புழுதி படிய தரையில் கிடப்பவனே, நீ அடைந்த கதியும் இதுவோ?' என்று கரைந்துருகாமல் நான் கதறுவதைக் கண்டும் ஒன்றும் உரைக்காமல் இருக்கிறாய். என்னிடம் உள்ள குற்றம் என்ன?" {என்றாள் தாரை}.

நிந்திக்கத்தகாத வர்ணம் {புகழத்தக்க மேனி நிறத்தைக்} கொண்டவளான தாரை, {மற்ற} வானரிகள் சகிதமாக பர்த்தாவின் {கணவன் வாலியின்} சமீபத்தில் இவ்வாறு கருணைக்குரிய வகையில் அழுதுபுலம்பி, வாலி எங்கே இருந்தானோ அந்த புவியிலேயே அமர்ந்து பிராயம் {மரணத்தை நாடி உணவைத் தவிர்க்கும் நடைமுறையை} மேற்கொள்ளத் தீர்மானித்தாள்.(26)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Sunday, 2 July 2023

தாரையின் வருகை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 19 (28)

Tara's arrival | Kishkindha-Kanda-Sarga-19 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மகனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாரை; அங்கதனை மன்னனாக்கும்படி அவளிடம் வேண்டிய குரங்குகள்; இறந்து கிடக்கும் வாலியைக் கண்டு மயங்கிவிழுந்த தாரை...

Tara and Angada meets vanaras on the way

சரத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்த அந்த வானர மஹாராஜன் {வாலி}, பதில் சொல்ல ஹேதுவான வாக்கியங்கள் இன்றி மறுமொழி கூறாதிருந்தான்.(1) ஏராளமான பாறைகளாலும், மரங்களாலும் பலமாகத் தாக்கப்பட்டு, அங்கங்கள் சிதைந்து, ராம பாணத்தால் வீழ்ந்தவன் ஜீவிதாந்த {வாழ்வின் இறுதி} மயக்கத்தில் வீழ்ந்தான்.(2)

பிலவக சார்தூலனான {தாவிச் செல்லும் குரங்குகளில் புலியான} அந்த வாலி, போரில் ராமன் தத்தம் செய்த பாண மோக்ஷத்தால் {ராமன் ஏவிய கணையால்} அழிந்தான் என்று அவனது பாரியையான தாரை கேள்விப்பட்டாள்.(3) புத்திரனுடன் {அங்கதனுடன்} கூடிய அவள் {தாரை}, தன் பர்த்தா பயங்கரமாகவும், பிரியமற்ற வகையிலும் வதம் செய்யப்பட்டதைக் கேட்டு, பெரும் துக்கமடைந்து, அந்த கிரிகந்தரத்திலிருந்து {மலைக்குகையில் இருந்து} வெளியே வந்தாள்.(4) அங்கதனின் பரிவாரத்தில் எவர்கள் மஹாபலவான்களோ அந்த வானரர்கள், கார்முகத்துடன் {வில்லுடன்} கூடிய ராமனைக் கண்டு அச்சமடைந்து {அங்கிருந்து} தப்பி ஓடினர்.(5) அப்போது அவள், யூதபன் {குழு தலைவன்} கொல்லப்பட்ட உடனேயே, யூதத்தில் {குழுவில்} இருந்து ஓடிச் செல்லும் மிருகங்களைப் போல அச்சத்துடன் {தன்னை நோக்கி} விரைந்து ஓடிவரும் ஹரிக்களை {குரங்குகளைக்} கண்டாள்.(6)

அவள் {தாரை}, துக்கத்தில் இருந்தவர்களும், கணைகளால் கட்டப்பட்டதைப் போல ராமனிடம் பேரச்சம் கொண்டவர்களுமான அவர்கள் நெருங்கி வந்ததும், துக்கத்துடன் {பின்வருமாறு} பேசினாள்:(7) "வானரர்களே, நீங்கள் அனைவரும் எந்த ராஜசிம்ஹத்தின் முன்னே சென்றீர்களோ அவரை {அந்த வாலியைக்} கைவிட்டு, பேரச்சத்துடன் கூடிய துர்கதியில் ஏன் ஓடுகிறீர்கள்?(8) உடன்பிறந்த கொடியவர் {சுக்ரீவர்}, தன்னுடன் பிறந்தவரை {வாலியை}, ராஜ்ஜியத்தின் நிமித்தம், தூரத்தில் இருக்கும் ராமனைக் கொண்டு, தூரம் செல்லக்கூடிய மார்கணைகளை {கொடுங்கணைகளை} ஏவச் செய்து வீழ்த்தியிருந்தால்? {என்ன செய்வீர்கள்?}" {என்று கேட்டாள்}[1].(9) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்தில் இலக்கண ரீதியான பிரச்சனை ஒன்றிருக்கிறது. "சேத்" என்ற சொல்லை, "இருந்தால்" என்ற பொருளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். அப்போது இந்த சுலோகத்தின் பொருள், "இராஜ்ஜியத்திற்காக ஒரு சகோதரன், தன் சகோதரனை வீழ்த்தினால் என்ன? அதனால் உங்களுக்கு என்ன பயம்?" என்று இருக்கும். ஆனால் இது தாரையின் நயத்தக்க இயல்புக்கு நியாயம் கற்பிக்காது. ஆனால் "சேத்" என்பதை, வினாச் சொல்லாகப் பொருள் கொண்டால், வாலி உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக தாரை கேட்பதாகப் பொருள் கொள்ள முடியும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் வேதனையுடன் விசாரிப்பதே இயல்பு. "எதுவானாலும்" என்ற பொருளைப் பயன்படுத்துவது சரியாக இருக்கக் கூடும், ஏனெனில் "இல்லை" என்பதற்கான பதில் கேள்வியாகவும் அஃது அமையும். "இருந்தால்" என்ற பொருளைப் பயன்படுத்தினால் "அறியாமையின் இருக்கலாம்" என்ற பொருள் வருமேயன்றி, இல்லை என்ற "நிச்சயத்தன்மையோ’, "வாய்ப்பிருக்கலாம் என்ற பொருளோ" வராது. எவ்வாறிருப்பினும், அவள் தகவலிலும், குரங்குகளின் ஒழுங்குமுறையற்ற தன்மையிலும் கவலை கொள்கிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "வானரர்களே, பயங்கரனாகிய தம்பி ஸுக்ரீவன் அண்ணனாகிய வாலியை ராஜ்ஜியத்தின் நிமித்தமாக ராமனைக் கொண்டு வெகுதூரஞ் செல்லவல்ல கொடிய பாணங்களைத் தொடுக்கச் செய்து கொன்றுவிட்டானாயின் உங்களுக்கு என்ன பயம்? உங்களைக் கொல்விப்பதற்கு உங்களுக்கு ராஜ்யம் இல்லையே? வாலியைப் போல் உங்களுக்கும் பயம் ஏன்? நீங்கள் எவனுடைய வேலைக்காரர்களோ அப்படிப்பட்ட ராஜஸ்ரேஷ்டனாகிய வாலியைக் கைவிட்டுத் திக்கற்று மிகவும் திகிலுற்று இப்படி ஏன் ஓடி வருகின்றீர்கள்" என்றிருக்கிறது.

காமரூபம் {விரும்பிய வடிவங்களை} ஏற்கவல்லவர்களான கபிக்கள் {குரங்குகள்}, கபிபத்னியின் {குரங்கான வாலியின் மனைவியான தாரையின்} சொற்களைக் கேட்டு, பிராப்த காலத்திற்குப் பொருந்திய சொற்களை அந்த அங்கனையிடம் {தாரையிடம் பின்வருமாறு} பேசினார்கள்:(10) "ஜீவபுத்ரனுடன் {உயிருடன் கூடிய மகனுடன்} திரும்பிச் செல்வாயாக. உன் புத்திரன் அங்கதனை ரக்ஷிப்பாயாக. இராமன் ரூபத்திலுள்ள அந்தகன், வாலியைக் கொன்று கொண்டு போகிறான்.(11) {சுக்ரீவனால்} வீசப்பட்ட விருக்ஷங்களையும், பெரும்பாறைகளையும் கலங்கடித்த வாலி, வஜ்ரத்திற்கு சமமான ராமனின் பாணங்களால் தாக்கப்பட்டு வஜ்ரத்தைப் போலவே வீழ்ந்தான்[2].(12) சக்ரனுக்கு {இந்திரனுக்கு} சமமான பிரபையை {ஒளியைக்} கொண்ட அந்த பிலவகசார்தூலன் {தாவிச் செல்லும் குரங்குகளில் புலியான வாலி} கொல்லப்பட்டதும் இந்த வானர பலம் {படை} சர்வமும் வீழ்த்தப்பட்டு ஓடுகிறது.(13) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே, 'பாணங்கள்' என்று பன்மையில் சொல்லப்படுவது தென்படுகிறது. இராமன் ஒரு கணையையே வாலியின் மீது ஏவியிருந்தாலும், ஒவ்வொரு குரங்கும் அந்த ஒரு பாணத்தைப் பல பாணங்களாகப் பெருக்கிச் சொல்கின்றன. வதந்திகள் இவ்வாறே பெருகுகின்றன" என்றிருக்கிறது. வதந்தி எவ்வாறு பெருகும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் {4:19:11ல்} ராமன் வாலியைக் கொன்று அவனைக் கொண்டு போகிறான் என்றும் அந்தக் குரங்குகள் சொல்கின்றன.

நகரம் சூரர்களால் ரக்ஷிக்கப்படட்டும்; அங்கதன் அபிஷேகம் செய்யப்படட்டும். பதத்தில் நிலைக்கும் வாலி புத்திரனை பிலவங்கமர்கள் {அரியணையில் நிலைக்கும் அங்கதனை வானரர்கள்} வழிபட்டு நிற்பார்கள்.(14) இல்லையெனில், நீ இங்கே இருப்பது நல்லதல்ல. அழகிய முகம் படைத்தவளே, {சுக்ரீவனின்} வானரர்கள் இப்போதே சீக்கிரமாக துர்கங்களுக்குள் {கோட்டைகளுக்குள் / குகைகளுக்குள்} நுழைந்துவிடுவார்கள்.(15) பாரியை {மனைவி} இல்லாதவர்களும், பாரியையுடன் கூடியவர்களுமான வனசாரிகள் அங்கே இருக்கின்றனர். இலுப்தர்களும் {பேராசைக்காரர்களும்}, விப்ரலப்தர்களுமான {ஏமாற்றம் அடைந்தவர்களுமான} அவர்களால் நமக்கு மஹத்தான பயம் உண்டாகும்[3]"{என்றனர் அந்த வானரர்கள்}.(16)

[3] தேசிராஜு ஹனுமாந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தலைநகரிலும் பலர் பிறர் மனைவியரை சிறைப்படுத்துவதில் வாலியின் நடைமுறையைப் பின்பற்றினர். இப்போதோ சுக்ரீவன் போரில் வென்றிருப்பதால் வாலியின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களைத் தாக்கக்கூடும். இந்த பயத்தையே இவர்கள் தாரையிடம் தெரிவிக்கின்றனர்" என்றிருக்கிறது.

அற்ப தூரமே சென்றிருந்தாலும், அந்தச் சொற்களைக் கேட்டவளும், சாருஹாசினியுமான அந்த அங்கனை {அழகிய புன்னகை உடையவளுமான அந்தப் பெண் தாரை}, தன் தகுதிக்குத் தகுந்தவற்றைப் {பின்வருமாறு} சொன்னாள்:(17) "கபி சிம்மமும் {குரங்குகளில் சிங்கமும்}, மஹாபாக்கியவானுமான அந்த பர்த்தாவே நசியும்போது {என் கணவரே சாகும்போது} எனக்குப் புத்திரனாலென்ன ராஜ்ஜியத்தாலென்ன என்னாலென்ன ஆகப்போகிறது?(18) எவர் ராமன் ஏவிய சரத்தால் வீழ்ந்தாரோ, அந்த மஹாத்மாவின் {கணவர் வாலியின்} பாதமூலத்தையே நான் அடைய விரும்புகிறேன்" {என்றாள் தாரை}.(19)

இவ்வாறு சொன்னவள், சோகத்தில் மூர்ச்சித்து அழுதவாறும், துக்கத்துடன் தலையிலும், மார்பிலும் இரு கைகளால் அடித்துக் கொண்டும் விரைந்து சென்றாள்.(20) அவள் விரைந்து சென்றபோது, {மாயாவி, துந்துபி உள்ளிட்ட} தானவேந்திரர்களை அழித்தவனும், சமர்களில் ஒருபோதும் பின்வாங்காதவனுமான தன் பதி {கணவன் வாலி} பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டாள்.(21) வஜ்ரங்களை {வீசும்} வாசவனை {இந்திரனைப்} போல பர்வதேந்திரங்களை {மலைகளை} வீசியெறிபவனும், மஹாவாதத்திற்கு {பெருங்காற்றுக்கு} சமமான வலிமை கொண்டவனும், மஹா மேகக் கூட்டம் போல முழங்குபவனும்,(22) சக்ரனுக்கு இணையான பராக்கிரமம் கொண்டவனும், கர்ஜிப்பவர்களில் பயங்கரமாக கர்ஜிப்பவனும், சூரர்களை வீழ்த்தும் சூரனுமான அவன் {வாலி}, மாமிசத்திற்காகப் புலியால் கொல்லப்பட்ட மிருகராஜனைப் போலவும், பெரும் மழையைப் பொழிந்து அமைதியடைந்த மேகத்தைப் போலவும்,(23) சர்வலோகத்தாலும் அர்ச்சிக்கப்படுவதும், பதாகைகள் {கொடிகள்}, வேதிகைகளுடன் {வேள்விப்பீடங்களுடன்} கூடியதும், நாகத்திற்காக சுபர்ணனால் {பாம்பிற்காக கருடனால்} சிதைக்கப்பட்டதுமான சைத்யத்தை {கோவிலைப்} போலவும் {தன் கணவன் கிடப்பதைக் கண்டாள்}.(24)

வலிமைமிக்க தனுவை உறுதியாகப் பற்றி நிற்கும் ராமனையும், ராமானுஜனையும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனையும்}, தன் பர்த்தாவின் அனுஜனையும் {தன் கணவனின் தம்பியான சுக்ரீவனையும்} அவள் கண்டாள்.(25) அவர்களைக் கடந்து சென்றவள், ரணத்தில் {போரில்} கொல்லப்பட்ட பர்த்தாவை {கணவன் வாலியை} அடைந்து, {அவனை} நெருக்கமாகக் கண்டு, கவலையிலும், குழப்பத்திலும் மூழ்கி பூமியில் விழுந்தாள்[4].(26) 

[4] வாலியும் ஏக யார்க்கும் வரம்பிலா உலகில் இன்பம்
பாலிய முன்னர் நின்ற பரிதி சேய் செங்கை பற்றி
ஆல் இலைப் பள்ளியானும் அங்கதனோடும் போனான்
வேல் விழித் தாரை கேட்டாள் வந்து, அவன் மேனி வீழ்ந்தாள்

- கம்பராமாயணம் 4095ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "வாலியும் மேலுலகை அடைய, யாருக்கும் எல்லையில்லா இன்பத்தை வழங்குபனான ஆலிலையைப் படுக்கையாகக் கொண்டவனும் {இராமனும்}, தன் முன் நின்ற சூரியன் புதல்வனின் சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு அங்கதனுடன் போனான்" என்று வேல்விழியாளான தாரை கேட்டு அங்கே வந்து அவன் {வாலி} மேனியில் விழுந்தாள்.

தூங்கியவளைப் போல இருந்தவள், மீண்டும் எழுந்து, "ஆரிய புத்திரரே" என்று சொல்லி மிருத்யுவின் {மரணத்தின்} கயிறுகளில் கட்டப்பட்டிருந்த பதியைக் கண்டு கதறி அழுதாள்.(27) சுக்ரீவன், குராரியை {அன்றில் பறவையைப்} போலக் கதறுபவளை {தாரையைக்} கண்டும், அங்கே வந்த அங்கதனையும் கண்டும் கஷ்டத்தையும், மனச் சோர்வையும் அடைந்தான்.(28)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Thursday, 29 June 2023

இராமனின் மறுமொழி | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 18 (66)

Rama answers | Kishkindha-Kanda-Sarga-18 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் வாலியிடம் மன்னர்கள் தர்மப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றதற்கான நியாயம் கற்பித்தது; அங்கதனைப் பாதுகாக்குமாறு ராமனை வேண்டிய வாலி...

Rama's converse with Vali

கொல்லப்படும் வகையில் தாக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த வாலி, தர்மத்துடனும், அர்த்தத்துடனும் கூடியவையும், ஹிதமானவையும் {நலம் பயப்பவையும்}, பணிவுடனும், கடுமையுடனும் கூடியவையுமான வாக்கியங்களை ராமனிடம் இவ்வாறே சொன்னான்.(1)  அப்போது ராமன், குற்றஞ்சாட்டுபவனும், பிரபையற்ற ஆதித்தியனை {ஒளியற்ற சூரியனைப்} போன்றவனும், நீரைப் பொழிந்துவிட்ட மேகத்தைப் போன்றவனும், அணைக்கப்பட்ட அனலனை {நெருப்பைப்} போன்றவனும், ஹரிசிரேஷ்டனும், ஹரேஷ்வரனுமான {குரங்குகளில் சிறந்தவனும், குரங்குகளின் தலைவனுமான} வாலியிடம், உத்தமமானவையும், தர்மமும், அர்த்தமும், குணமும்  நிறைந்தவையுமான வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2,3) "தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றையும், லௌகிகம் {சமூக மரபுகள்}, சமயம் {நேரம்} ஆகியவற்றையும் முற்றும் உணராமல் இப்போது பால்யனைப் போல என்னை இதில் எவ்வாறு பழிக்கிறாய்?(4) சௌம்யா {மென்மையானவனே}, புத்தியுடன் கூடியவர்கள், ஆசாரியர்களாக ஏற்கப்படும் பெரியவர்கள் ஆகியோரிடம் கேட்காமல் வானர சாபல்யத்துடன் {குரங்கின் குறுகுறுப்புடன்} நீ இங்கே பேச விரும்புகிறாய்.(5)

சைலங்கள், வனங்கள், கானகங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்த பூமியில் உள்ள மிருக, பக்ஷி, மனுஷ்யர்களை நிக்ரஹம் செய்வதும் {தண்டிப்பதும்}, அனுக்ரஹம் {அருள்} செய்வதும் இக்ஷ்வாகுக்களுக்குரியவை.(6) தர்மாத்மாவும், சத்தியவானும், நேர்மையாளனும், தர்ம, காம, அர்த்த {அறம், பொருள், இன்பங்களின்} தத்துவங்களை அறிந்தவனும், நிக்ரஹ, அனுக்ரஹங்களைச் செய்பவனுமான பரதன் அவளை பாலிக்கிறான் {பூமியை ஆட்சி செய்கிறான்}.(7) எவனிடம் நயமும் {நேர்மையும்}, விநயமும் {இணக்கமும்}, சத்தியமும், ஸ்திதமும் {உறுதியும்}, விக்ரமமும் {வீரமும்} காணப்படுகின்றனவோ, அவனே {அந்த பரதனே} தேசத்தையும், காலத்தையும் அறிந்த ராஜாவாக இருக்கிறான்.(8) அவனது தர்மத்தால் ஆணையிடப்பட்ட நாங்களும், வேறு பார்த்திபர்களும் {மன்னர்களும்} தர்ம சந்தானத்தை இச்சித்து வசுதையெங்கும் {தர்மம் நல்ல முறையில் தொடர்வதை விரும்பி பூமியெங்கும்} அலைந்து கொண்டிருக்கிறோம்.(9) நிருபதி சார்தூலனும் {மன்னர்களில் புலியும்}, தர்மவத்சலனுமான அந்த பரதன், அகில பிருத்வியையும் பாலிக்கும்போது, எவன் தர்மத்திற்குப் பிரியமற்ற வழியில் நடப்பான்?(10)

மிக உயர்ந்த ஸ்வதர்மத்தில் {கடமையில்} பற்றுடைய நாங்கள், பரதனின் ஆணையைக் கருத்தில் கொண்டே, மார்க்கத்தில் இருந்து விலகியோரை விதிப்படி நிக்ரஹஞ் செய்கிறோம் {தண்டிக்கிறோம்}.(11) நீயோ தர்மந்தவறி நிந்திக்கத்தகுந்த கர்மங்களைச் செய்து, காம தந்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு ராஜநெறியைப் பின்பற்றாதவனாக இருக்கிறாய்.(12) தர்மத்தின் பாதையில் நடப்பவனுக்கு, ஜேஷ்டன் {அண்ணன்}, பிதா, வித்யை புகட்டுபவர் {ஆசான்} ஆகியோர் மூன்று பிதாக்கள் என்றே அறியப்படுகிறார்கள்.(13) தம்பி, புத்திரன், நற்குணங்களைக் கொண்ட சிஷ்யன் ஆகிய மூவரும் ஒருவனுக்கு புத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள். இவற்றுக்கு தர்மம் மட்டுமே காரணமாக இருக்கிறது.(14) பிலவங்கமா {தாவிக் குதிக்கும் குரங்கினத்தைச் சேர்ந்தவனே}, நல்லோரின் தர்மம் சூக்ஷ்மமானது; புரிந்து கொள்ள கடினமானது. சர்வபூதங்களின் ஹிருதயங்களிலும் உள்ள ஆத்மாவே சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} அறியும்.(15) பிறவிக் குருடர்களுடன் {ஆலோசிக்கும்} பிறவிக் குருடனை போல, சபலனான {மனம் போன போக்கில் தடுமாறுபவனான} நீ, கட்டுப்பாடில்லா ஆத்மாக்களைக் கொண்ட உன்னைப் போன்ற சபல வானரர்களுடன் ஆலோசிப்பதன் மூலம் என்ன காண முடியும்?(16) நான் இந்த சொற்களைத் தெளிவாக உனக்குச் சொல்கிறேன். நீ கேவலம் {வெறும்} கோபத்தால் என்னைக் குறை கூறுவது உனக்குத் தகாது.(17) 

உன்னை எந்த அர்த்தத்தில் நான் கொன்றேன் என்பதன் காரணத்தைப் பார். சநாதன தர்மத்தைக் கைவிட்டு, உடன்பிறந்தவனின் பாரியையுடன் {உன் தம்பி சுக்ரீவனின் மனைவியான ருமையுடன்} வாழ்கிறாய்[1].(18) மஹாத்மாவான இந்த சுக்ரீவன், உயிருடன் இருக்கையில் பாபகர்மம் செய்பவனான நீ, காமத்துடன் உன் மருமகளான ருமையுடன்[2] வாழ்ந்து வருகிறாய்.(19) எனவே வானரா, தர்மந்தவறி காமவிருத்தமடைந்த {ஆசை வழியில் நடக்கும்} நீ, உடன்பிறந்தவனான இவனது பாரியையை {மனைவி ருமையைத்} தீண்டியதால் இந்த தண்டனையை அடைந்தாய்.(20) ஹரியூதபா {குரங்குக் குழுவின் தலைவா}, உலகத்திற்கு முரண்பட்டு, உலக நடைமுறையில் இருந்து பிறழ்ந்தவனை நிக்ரஹச் செய்வதை {அடக்குவதை / அழிப்பதைத்} தவிர வேறு தண்டனையை உண்மையில் நான் காணவில்லை.(21) நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியனான என்னால், உன்னுடைய பாபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எந்த நரனும், தன் மகளுடனோ, பகினியுடனோ {உடன்பிறந்த சகோதரியுடனோ}, அனுஜனின் பாரியையுடனோ {தம்பியின் மனைவியுடனோ} காமத்தில் ஈடுபட்டால், அவனுக்கு வதமே தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கிறது.(22,23அ)

[1] தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியை
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

- கம்பராமாயணம் 4043ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: "தர்மம் இன்ன தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படும் தகுதியையும், இம்மை மறுமை ஆகிய இரண்டின் பயன்களையும் தெரிந்து எண்ணவில்லை. எண்ணியிருந்தால் அருமையானவனான உன் தம்பியின் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கியவனாக அடையப் பெறுவாயோ?" {என்றான் ராமன்}

[2] தம்பி என்பவன் மகனைப் போன்றவன் என்று இந்த சர்க்கத்தின் 14ம் சுலோகத்தில் ராமன் சொல்கிறான். எனவே வாலியின் மகனைப் போன்றவனான சுக்ரீவனின் மனைவி, வாலிக்கு மருமகளாகிறாள். இங்கே குறிப்பிடப்படும் ருமையே சுக்ரீவனின் மனைவி. தாரை வாலியின் மனைவி. வாலியின் மறைவுக்குப் பிறகு சுக்ரீவனுடன் இருக்கிறாள்.

மஹீபாலனான பரதனின் கட்டளைகளைப் பின்பற்றும் நாங்கள், தர்மத்தை மீறிய உன்னைப் புறக்கணிப்பது எவ்வாறு சாத்தியம்?(23ஆ,24அ) பிராஜ்ஞனும் {நல்லறிவுடையவனும்}, குருவும் {மேன்மையானவனும்}, தர்மத்தின் மூலம் ஆட்சி செய்பவனுமான பரதன், தர்மத்தை மீறி காம வழியில் நடப்பவர்களை நிக்ரஹஞ் செய்வதில் {அடக்குவதில் / அழிப்பதில்} திடமாக இருக்கிறான்.(24ஆ,25அ) ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, பரதனின் ஆணைகளை விதியாக ஏற்றுச் செயல்படும் நாங்களோ, மரியாதைகளைக் குலைக்கும் உன் விதமானவர்களை நிக்ரஹஞ் செய்வதில் திடமாக இருக்கிறோம்.(25ஆ,இ) சுக்ரீவனுடனான என் சக்யம் {நட்பு}, லக்ஷ்மணனுடன் எப்படியோ அப்படியே தாரம், ராஜ்ஜியம் நிமித்தமாக ஏற்பட்டது. அவன் {சுக்ரீவன்} எனக்கு நலம் புரிவான்[3].(26) அப்போது நான், வானரர்களின் முன்னிலையில் பிரதிஜ்ஞையை தத்தம் செய்தேன் {உறுதியளித்தேன்}. என் விதமானவன், பிரதிஜ்ஞையை மதிக்காமல் இருப்பது எவ்வாறு சாத்தியம்?[4](27) எனவே, தர்மத்திற்கு இணக்கமானவையும், அனைத்திலும் மஹத்தானவையுமான இந்தக் காரணங்களால் ஏற்பட்ட உனக்கான சாசனம் எதுவோ அது யுக்தமானதே {உனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதே} என்பதை நீ ஏற்க வேண்டும்.(28) உன்னுடைய நிக்ரஹம் அனைத்து வகையிலும் தர்மம் என்றே காணப்பட வேண்டும். தர்மத்தைப் பின்பற்றுபவன், தன் நண்பனுக்கான உதவியைச் செய்ய வேண்டும்.(29) 

[3] இங்கே, "என் மனைவியான சீதையை மீட்பதற்காகவும், சுக்ரீவனின் ராஜ்ஜியத்தை மீட்பதற்காகவும் லக்ஷ்மணனிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாக எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இப்போது நான் உன்னைக் கொன்று சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்பதில் உதவியதால், இனி அவன் சீதையை மீட்பதில் எனக்கு உதவி நலம்புரிவான்" என்பது பொருள்.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரண்ய காண்டத்தில் {3:10:18}, என் உயிரையும் துறப்பேனேயன்றி, அளித்த பிரிதிஜ்ஞையை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று சீதையிடம் சொல்கிறான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது. 

தர்மத்தையே பின்பற்றியிருந்தால் உன்னிடமும் அந்தக் காரியம் சாத்தியமே. சாரித்ர வத்ஸலர்களுக்கான {நல்லொழுக்கத்தை விரும்புகிறவர்களுக்கான} இரண்டு சுலோகங்களை மனு கீதம் செய்ததாக {மனு பாடியதாக நாம்} கேள்விப்படுகிறோம். தர்மகுசலர்கள் {நல்ல தர்மவான்கள்} இவற்றை ஏற்கின்றனர். நானும் அவற்றின் படியே நடந்திருக்கிறேன்.(30) பாபங்களைச் செய்யும் மாநவர்களுக்கு {மனிதர்களுக்கு}, ராஜாக்கள் தண்டனையை விதித்தால், அவர்கள் நிர்மலமடைந்து {களங்கமற்றவர்களாகி} நற்செயல்களுடன் கூடிய நல்லோரைப் போல ஸ்வர்க்கத்தை அடைவார்கள்.(31) ஒரு திருடன் சாசனத்தின் {தீர்ப்பின்} மூலமோ, விடுதலையின் மூலமோ பாபத்தில் இருந்து விடுபடுகிறான். சாசனத்தை செயல்படுத்தாத ராஜாவோ, அந்த பாபியின் களங்கத்தால் பீடிக்கப்படுகிறான்[5].(32) நீ எப்படி பாபம் இழைத்தாயோ, அப்படி ஒரு சிரமணர் {துறவி} இழைத்தபோது, என் ஆரியரான {மதிப்பிற்குரிய மூதாதையான} மாந்தாதா, தன் விருப்பத்திற்கேற்ப கோரமான விசனத்தை {துன்பத்தை / தண்டனையை} அளித்தார்.(33) பிறர் பாபம் இழைப்பதை அறியாத வசுதாதிபர்களால் {மன்னர்களால்} பிராயச்சித்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அந்த ரஜம் {களங்கம்} மட்டுப்படும்.(34) எனவே வானரசார்தூலா {வானரர்களில் புலியே}, பரிதாபம் போதும். வதம் தர்மத்துடன் விதிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல.(35) 

[5] 31, 32 ஆகிய சுலோகங்களே மனு பாடியதாக ராமன் கேள்விப்பட்ட கீதம்.

மஹத்தான வீரா, ஹரிபுங்கவா {குரங்குகளில் உயர்ந்தவனே}, மேலும் மற்றொரு காரணத்தையும் கேட்பாயாக. அந்த மகத்தானதைக் கேட்டு, நீ கோபமடைவது தகாது.(36) அதில் {உன்னைக் கொன்றதில்} எனக்கு மனஸ்தாபமோ, கோபமோ இல்லை. ஹரிபுங்கவா, நரர்கள் {மனிதர்கள்}, வலைகளையும், கயிறுகளையும் கொண்டும், எண்ணற்ற கூடங்களின் {பொறிகளின்} மூலமும் மறைவாகவோ, புலப்படும்படியோ ஏராளமான மிருகங்களைப் பிடிக்கின்றனர்.(37,38அ) மாமிசம் உண்ணும் நரர்கள், அவை வேகமாகத் தாவிச் செல்லும்போதும், பயமில்லாமல் திரியும்போதும், உறுதியாக நிற்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும், கவனமற்று இருக்கும்போதும், பாரா முகமாக இருக்கும்போதும் {அந்த விலங்குகளை} மறுப்பிற்கிடமில்லாமல் கொல்கின்றனர். அதில் தோஷம் ஏதும் இல்லை.(38ஆ,39) இங்கே தர்மகோவிதர்களான ராஜரிஷிகளும் வேட்டையாடச் செல்கின்றனர். வானரா, யுத்தம் செய்யவில்லை என்றாலும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் நீ சாகை மிருகம் {கிளையில் வாழும் விலங்கு} என்பதாலேயே யுத்தம் செய்து கொண்டிருந்த உன்னை பாணம் எய்து கொன்றேன்.(40) வானர சிரேஷ்டா, ராஜாக்கள் அடைதற்கரிய தர்மத்தையும், சுபமான ஜீவிதங்களையும் {சாதகமான வாழ்க்கை முறைகளையும்} அருள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(41) மானுஷ ரூபத்தில், மஹீதலத்தில் திரியும் தேவர்களான அவர்களை ஹிம்சிப்பதோ, நிந்திப்பதோ, இகழ்ந்துரைப்பதோ, பிரியமற்ற வகையில் பேசுவதோ கூடாது.(42) நீயோ தர்மத்தை அறிந்து கொள்ளாமல், கேவலம் {வெறும்} கோபத்தின் ஆதிக்கத்தில் பித்ரு பிதாமஹர்களின் தர்மத்தில் திடமாக நிற்கும் என்னை தூஷிக்கிறாய் {தூற்றுகிறாய்}" {என்றான் ராமன்}.(43)

இராமன் இவ்வாறு கூறியதும், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான வாலி, தர்மம் குறித்த நிச்சயத்தை அடைந்து, ராகவனிடம் தோஷம் ஏதும் காணாதிருந்தான்.(44) பிறகு அந்த வானரேஷ்வரன் {வாலி}, கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} ராமனுக்கு மறுமொழி கூறினான்; "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நீ எதைச் சொன்னாயோ, அஃது அவ்வாறே இருக்கிறது. அதில் சந்தேகமேதும் இல்லை.(45) இராகவா, மேன்மையானவர்களிடம், மேன்மையற்றவர்கள் மறுமொழி கூறுவதற்கு இயன்றவர்களல்ல. நான் பூர்வத்தில் அறியாமையால் சொன்ன முறையற்ற, பிரியமற்ற வாக்கியங்களை அப்படியே கொள்ள வேண்டாம். அதற்காக என்னிடம் தோஷம் காண்பது உண்மையில் உனக்குத் தகாது.(46,47அ) நீயே அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்தவனாகவும், பிரஜைகளுக்கு நன்மை செய்ய விரும்புகிறவனாகவும், களங்கமில்லா புத்தி கொண்டவனாகவும், காரிய, காரணங்களில் தெளிவான சித்தம் கொண்டவனாகவும் இருக்கிறாய்.(47ஆ,இ)  தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, தர்மத்தை அறியத் தவறியவர்களில் முதன்மையான என்னை தர்மத்திற்கு சம்மதமான சொற்களால் பரிபாலிப்பாயாக" {என்றான் வாலி}.(48) 

சேற்றில் சிக்கிய துவீபத்தை {யானையைப்} போன்ற வாலி, கண்ணீரால் முழுமையாக அடைக்கப்பட்ட கண்டத்துடன் {தொண்டையுடன்}, துன்புற்ற குரலில் ராமனைப் பார்த்து {பின்வருமாறு} மெதுவாகப் பேசினான்:(49) "குணசிரேஷ்டனும் {குணங்களில் சிறந்தவனும்}, கனக {பொன்} அங்கதம் பூண்டவனுமான புத்திரன் அங்கதனுக்காக எப்படியோ {எப்படி வருந்துகிறேனோ}, அப்படி எனக்காகவோ, தாரைக்காகவோ, பந்துக்களுக்காகவோ வருந்தவில்லை.(50) பால்யம் முதல் செல்லமாக வளர்ந்த அவன் {அங்கதன்}, என்னைக் காணாமல்,  நீரில்லாமல் வற்றிய தடாகத்தைப் போலவே உலர்ந்தவனாகப் பெரிதும் இளைத்துப் போவான்.(51) இராமா, பாலனும் {சிறுவனும்}, புத்தி முதிராதவனும் {சிறுபிள்ளைகளுக்குரிய புத்தியைக் கொண்டவனும்}, என் பிரியத்திற்குரிய ஏக புத்திரனும் {ஒரே மகனும்}, மஹாபலவானுமான தாரேயனை {தாரையின் மகனான அங்கதனை} நீ ரக்ஷிக்க வேண்டும்.(52) சுக்ரீவனிடமும், அங்கதனிடமும் உத்தம மதியை வெளிப்படுத்துவாயாக. காரியாகாரியங்களின் {செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றின்} விதங்களில் திடமான நீயே பாதுகாவலனாகவும், தண்டிப்பவனாகவும் இருக்கிறாய்.(53) 

நரபதியே, ராஜாவே, பரதனிடமும், லக்ஷ்மணனிடமும் உன் அணுகுமுறை எப்படியோ, அப்படி சுக்ரீவனையும், அங்கதனையும் சிந்திப்பதே உனக்குத் தகும்.(54) என் தோஷத்தால் தோஷமடைந்தவளும், தபஸ்வினியுமான அந்த தாரையை சுக்ரீவன் எப்படி அவமதிக்காமல் இருப்பானோ, அப்படிப் பார்த்துக் கொள்வதே உனக்குத் தகும்.(55) உன் அனுகிரஹத்தைப் பெற்றவனுக்கு, உன் வசம் கட்டுப்பட்டு, உன் சித்தத்தைப் பின்பற்றுவதன் மூலம், ராஜ்ஜியத்தை நடத்தும் சாத்தியத்துடன், வசுதையை {மொத்த பூமியையும்} ஆளவும், திவத்தை {சொர்க்கத்தை} ஈட்டவுங்கூட சாத்தியப்படும்.(56,57அ) தாரையினால் தடுக்கப்பட்டும், உன்னால் வதம் செய்யப்பட விரும்பியவனைப் போல, உடன்பிறந்தவனான சுக்ரீவனுடன் நான் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டேன்" {என்றான் வாலி}. ஹரேஷ்வரனான அந்த வாலி, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு மௌனமானான்.(57ஆ,58)

தெளிந்த பார்வை கொண்டவனான அந்த ராமன், தர்மத்தின் சாரத்துடன், அர்த்தம் பொதிந்த சொற்களால் வாலியானவனை {பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தினான்:(59) "பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, இந்த அர்த்தத்திற்காக {காரணத்திற்காக} நீ வருந்த வேண்டியதில்லை. ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, நீ எங்களைக் குறித்தும், உன்னைக் குறித்தும் சிந்திக்க வேண்டியதில்லை. உன்னைப் பொறுத்தவரையில் விசேஷமாக நாங்கள் தர்மத்தின்படியே நிச்சயம் செயல்பட்டோம்.(60) எவன் தண்டிக்க வேண்டியவனுக்கு தண்டனையை விதிக்கிறானோ, எவன் தண்டனைக்குரியவனாக இருந்து தண்டனையைப் பெறுகிறானோ அவர்கள் இருவரின் காரிய, காரணங்களும் அர்த்தத்துடன் சித்தியடைவதால் வருந்த வேண்டியதில்லை.(61) எனவே, நீ இந்த தண்டனையின் யோகத்தால் களங்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறாய். தர்மத்துடன் விதிக்கப்பட்ட பாதையில், தர்மத்துடன் கூடிய உன் இயல்பை அடைந்து விட்டாய்.(62) குரங்குகளில் உயர்ந்தவனே, ஹிருதயத்தில் திடமாக உள்ள சோகம், மோஹம், பயம் ஆகியவற்றைக் கைவிடுவாயாக. விதியை மீறுவது உனக்கு சாத்தியமில்லை.(63) வானரேஷ்வரா, அங்கதன் உன்னிடம் எப்படி நடந்து கொண்டானோ,  அப்படியே சுக்ரீவனிடமும், என்னிடமும் எப்போதும் நடந்து கொள்வான் என்பதில் சந்தேகமில்லை" {என்றான் ராமன்}.(64)

மஹாத்மாவும், தர்மத்தின் பாதையைப் பின்பற்றுபவனும், போரில் முற்றிலும் {எதிரியை} நொறுக்குபவனுமான அந்த ராமனின் சமாஹிதமான மதுர {ஐயத்திற்கிடமில்லாத இனிமையான} வாக்கியங்களைக் கேட்ட அந்த வானரன் {வாலி, பின்வரும்} நல்ல முறையிலான சொற்களைச் சொன்னான்:(65) "விபுவே {தலைவா}, மஹேந்திரனுக்கு ஒப்பானவனே, பீம விக்கிரமா {பயங்கர வீரம் கொண்டவனே}, நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, சரங்களின் வெப்பத்தில் நனவு மயங்கியவனான நான், அறியாமையால் உன்னை அதிகம் தூஷித்துவிட்டேன். அதைப் பொறுத்துக் கொண்டு, நீ எனக்கு அருள்புரிய வேண்டும்" {என்றான் வாலி}.(66)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 66

Previous | Sanskrit | English | Next

Tuesday, 27 June 2023

வாலியின் நிந்தனை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 17 (54)

The reproach of Vali | Kishkindha-Kanda-Sarga-17 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வஞ்சகம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டி, பல்வேறு வகைகளில் அவனைப் பழித்த வாலி...

Vali hit by Rama

போரில் கடுமைமிக்கவனான வாலி, ராமனின் சரத்தால் தாக்கப்பட்டபோது, வெட்டப்பட்ட மரத்தைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தான்.(1) தப்த காஞ்சன பூஷணனான அவன் {புடம்போட்ட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வாலி}, கயிறுகளில் இருந்து விடுபட்ட தேவராஜனின் துவஜத்தை {இந்திரனின் கொடியைப்} போல சர்வ அங்கங்களும் பூமியில் படக் கீழே விழுந்தான்.(2) ஹரிரிக்ஷகணேஷ்வரன் {குரங்கு, கரடிக் கூட்டங்களின் தலைவனான வாலி} பூமியில் விழுந்தபோது, மேதினி, சந்திரனை இழந்த வானத்தைப் போலப் பிரகாசமற்றிருந்தாள்.(3) 

பூமியில் விழுந்தாலும் அந்த மஹாத்மாவின் தேஹம் அழகையோ, பிராணனையோ, தேஜஸ்ஸையோ, பராக்கிரமத்தையோ கைவிடாதிருந்தது.(4) சக்ரனால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்ட சிறப்புவாய்ந்த மாலையானது, அந்த ஹரிமுக்யனின் {குரங்குகள் தலைவனான வாலியின்} பிராணனையும், தேஜஸ்ஸையும், அழகையும் தக்க வைத்துக் கொண்டிருந்தது.(5) ஹரியூதபனான அந்த வீரன் {குரங்குகள் கூட்டத்தின் குழுத்தலைவனும், வீரமிக்கவனுமான வாலி}, அந்த ஹேம மாலையை அணிந்திருந்ததால், முனைகளைச் சுற்றிலும் சந்தியாகால நிறம் கொண்ட நீருண்ட மேகத்தைப் போலத் தெரிந்தான்.(6) கீழே விழுந்தாலும் அவனது மாலையும், தேகமும், மர்மத்தைப் பிளந்த அந்த சரத்துடன் சேர்ந்து மூன்று பாகங்களாக {தனித்தனியாகப்} பிரகாசித்துக் கொண்டிருந்தன.(7) 

ஸ்வர்க்க மார்க்க பிரபாவம் கொண்ட ராம பாண ஆசனத்தில் {ராமனின் வில்லில் கணை பொருத்தும் நாண்கயிற்றில்} இருந்து ஏவப்பட்ட அந்த அஸ்திரம், அந்த வீரனுக்கு பரமகதியை உண்டாக்கியது.(8) இலக்ஷ்மணன் பின்தொடர வந்த ராமன், தழல்கள் இல்லாத அனலனை {நெருப்பைப்} போலவும், புண்ணியம் தீர்ந்து தேவலோகத்தில் இருந்து விழுந்த யயாதியைப் போலவும்[1], யுகாந்தத்தில் {யுக முடிவில்} பூமியில் விழுந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும், போரில் இவ்வாறு விழுந்தவனும், வெல்லப்பட முடியாத மஹேந்திரனைப் போன்றவனும், தாங்கிக் கொள்ள முடியாத உபேந்திரனைப் போன்றவனும், மஹேந்திரனின் புத்திரனும், ஹேம மாலை {பொன்னாரம்} பூண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், மஹாபாஹுவும், பிரகாசிக்கும் முகத்தைக் கொண்டவனும், ஹரிலோசனனுமான {பச்சை நிறக் கண்களைக் கொண்டவனுமான} அந்த வாலியைக் கண்டு நெருங்கினான்.(9-12அ) அந்த வீரன், தழல்களற்ற நெருப்பைப் போல விழுந்ததை மெதுவாகக் கண்டு, அந்த வீரனைக் கௌரவிப்பதற்காக மஹாவீரர்களும், உடன்பிறந்தவர்களுமான அந்த ராமலக்ஷ்மணர்கள் வந்தனர்.(12ஆ,13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "யயாதி, புகழ்மிக்க மன்னனான நஹுஷனின் மகனாவான். கடுந்தவத்திற்குப் பின்னர் அவன் சொர்க்கத்தை அடைந்தான். தற்புகழ்ச்சி செய்து கொண்டதால் அவன் சொர்க்கத்திலிருந்து இந்திரனால் தள்ளப்பட்டான். வாலியும் அதே போலத் தன் பலத்தில் கொண்ட தற்பெருமையால் இப்போது விழுந்தான்" என்றிருக்கிறது. யயாதியின் கதை மஹாபாரதம், ஆதிபர்வம் 75 முதல் 93ம் அத்தியாயம் வரையிலும், மீண்டும் உத்யோக பர்வம் 106 முதல் 122ம் அத்தியாயம் வரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.  

தாக்குதலில் நனவை இழந்து, அற்ப தேஜஸ்ஸுடன் பூமியில் கிடந்த அந்த வாலி, ரணகர்விதனான {போரில் செருக்குள்ளவனான} அந்த ராகவனையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும் கண்டு, அர்த்தம் பொதிந்த சொற்களில், வசைப் பாங்குடனும், மதிப்புடனும் கூடியவையும், தர்மத்திற்கு இணக்கமானவையுமான {பின்வருமாறு} வாக்கியங்களை கர்வத்துடன் சொன்னான்:(14,15) "நராதிபதியின் {மனிதர்களின் தலைவனான தசரதரின்} புத்திரனும், புகழ்பெற்றவனும், பிரிய தரிசனம் தருபவனுமான நீ, பாராமுகமாக இருந்தவனை இவ்வாறு வதம் செய்ததில் என்ன குணத்தை {புண்ணியத்தை} அடைந்துவிட்டாய்? யுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த எனக்கு, எவ்வகை மரணத்தை நீ அளித்துவிட்டாய்?(16) இராமன், நற்குலத்தில் பிறந்தவன், வலிமையைக் கொடையாகக் கொண்டவன், தேஜஸ்வி, விரதங்களை நோற்பவன், கருணையுள்ளவன், பிரஜைகளின் ஹிதத்தை {மக்களின் நன்மையை} எப்போதும் விரும்புகிறவன், பரிவுடையவன், மஹா உற்சாகன், சமயத்தை அறிந்தவன், திட விரதன், புகழ்பெற்றவன் என்றிவ்வாறே புவியில் உள்ள சர்வ பூதங்களும் {உலகின் உயிரினங்கள் அனைத்தும்} சொல்கின்றன.(17,18) 

இராஜாவே, தமம் {புலனடக்கம்}, ஷமம் {மன அடக்கம்}, க்ஷமம் {பொறுமை}, தர்மம் {அறம்}, திருதி {மனோவுறுதி}, சத்தியம் {வாய்மை}, பராக்கிரமம் {ஆற்றல்}, அபகாரிகளின் தண்டம் {குற்றம் இழைத்தவர்களை தண்டித்தல்} ஆகியவையே பார்த்திபர்களின் குணங்களாகும்.(19) அந்த {ராஜ} குணங்களையும், உன் உன்னத வம்சத்தையும் கருத்தில் கொண்டதாலேயே தாரை தடுத்தும் நான் சுக்ரீவனை எதிர்கொண்டேன்.(20) புலப்படாமல் இருந்த நீ, அந்நியனை {வேறொருவனை} எதிர்கொள்பவனும், கவனிக்காதவனுமான எனக்குத் தீங்கிழைத்தது தகாது. இதுவே என் புத்தியில் தோன்றுகிறது {இதுவே என் கருத்து}.(21) நீ சுயத்தை அழித்துக் கொண்டவன் என்றும், தர்ம துவஜத்துடன் {தர்மக் கொடியுடன்} கூடிய அதார்மிகன் என்றும், பாபநடத்தை கொண்டவன் என்றும், புற்களால் மறைக்கப்பட்ட கிணற்றைப் போன்றவன் என்றும் நான் அறிந்தேனில்லை.(22) சாம்பலால் மறைக்கப்பட்ட பாவகனை {நெருப்பைப்} போல, தர்மப் போர்வையில் மறைந்து, நல்லோன் வேஷம் தரித்த பாபி என்றும் உன்னை நான் அறிந்தேனில்லை.(23) 

உன் நாட்டிலோ, புரத்திலோ {நகரிலோ} ஒருபோதும் நான் பாபம் செய்தவனல்ல; உன்னையும் பழித்தவனல்ல. {எனவே}, குற்றமற்றவனும், நித்தியம் பழங்களையும், கிழங்குகளையும் உண்பவனும், வனத்தில் தனியாகத் திரியும் வானரனும், {உன்னுடன்} யுத்தத்தில் ஈடுபடாதவனும், அன்னியனை {வேறொருவனை} எதிர்கொண்டிருப்பவனுமான என்னை எதற்காக நீ ஹிம்சித்தாய்?[2](24,25) இராஜாவே, பிரிய தரிசனந் தருபவனாகவும், நராதிபதியின் புத்திரனாகவும் புகழ்பெற்றவனான நீ, உன் தர்மத்திற்கு இணக்கமான லிங்கத்துடனே {குறியீடுகளுடனே} இப்போதும் காட்சியளிக்கிறாய்.(26) க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவனும், கல்விமானும், {நன்மை தீமைகளில்} கருத்து மயக்கம் தெளிந்தவனும்,  தர்மலிங்கம் போர்த்தியவனுமான {தர்மக் குறியீடுகளைப் பூண்டவனுமான} எவன் {இத்தகைய} குரூர கர்மத்தைச் செய்வான்?(27) இராமா, ராகவ குலத்தில் பிறந்து, தர்மவான் என்று புகழ்பெற்றிருந்தாலும், பவ்யமற்றவனான நீ பவ்ய ரூபத்தில் திரிவது என்ன அர்த்தம்?(28) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நீ குற்றமற்றவர்களைக் கொல்பவனல்ல, ஆனாலும், நீ வரும்வரை நான் அறியாத வகையில் என் செயல்களில் ஏதோ குற்றம் இருப்பதால் என்னைக் கொன்றிருக்கிறாய் என்பது மறைபொருள்" என்றிருக்கிறது.

இராஜாவே, சாமம் {இணக்கம்}, தானம், க்ஷமம் {பொறுமை}, தர்மம், சத்தியம், திருதி {மனோவுறுதி}, பராக்கிரமம் {ஆற்றல்}, அபகாரிகளின் தண்டம் {குற்றம் இழைத்தவர்களை தண்டித்தல்} ஆகியவை பார்த்திபர்களின் குணங்கள்[3].(29)  இராமா, கிழங்குகளையும், பழங்களையும் உண்பவர்களான நாங்கள், வனத்தில் திரியும் மிருகங்கள் ஆவோம். இஃது எங்கள் இயல்பு. நீயோ புருஷன் {மனிதன்}; நரேஷ்வரன் {மனிதர்களின் தலைவன்}.(30) 

[3] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸாமம், தானம், பேதம், தண்டம் என்ற நான்கு உபாயங்களில் முதல் உபாயமாகிய ஸாமம், அதாவது சமாதானம் செய்து கொண்டுவிடல். மேற்கண்ட உபாயங்களில் இரண்டாவது உபாயமாகிய தானமென்பது, அதாவது லஞ்சம் கொடுத்து சத்ருவை வசமாக்கிக் கொள்ளுதல். க்ஷமை என்பது நம்மாலாவது ஒன்றுமில்லையென வந்ததை அனுபவித்துப் பொறுத்திருத்தல்" என்றிருக்கிறது. 

பூமி, ஹிரண்யம் {தங்கம்}, வெள்ளி ஆகியவை அழிவுக்கான காரணங்களாகும். இவ்வாறிருக்க என் வனத்திலோ, பழங்களிலோ உனக்கு என்ன லோபம் {பேராசை}?(31) நயம் {நேர்மை} விநயம் {இணக்கம்}, நிக்ரஹம் {அழித்தல்} அனுக்ரஹம் {அருள்தல்} என்ற இரட்டைகள் கலவாததே ராஜவிருத்தமாகும் {அரசநடையாகும்}. நிருபர்கள் காமவிருத்தம் கொள்வதில்லை {மன்னர்கள் ஆசையின் வழி நடப்பதில்லை}.(32) நீயோ காமத்தை {ஆசையைப்} பிரதானமாகக் கொண்டவனாகவும், கோபம் கொண்டவனாகவும், தடுமாற்றம் கொண்டவனாகவும், ராஜவிருத்தங்களைக் கலந்து செய்பவனாகவும், சராசன பராயணனாகவும் {கணை பொருத்தும் இடத்தை [நாண்கயிற்றைப்] பயன்படுத்தும் வேட்டைக்காரனாகவும்} இருக்கிறாய்.(33) 

மனுஜேஷ்வரா, உனக்கு தர்மத்தில் அர்ப்பணிப்பு இல்லை. அர்த்தத்தில் உறுதியான புத்தியில்லை. இந்திரியங்களால் ஈர்க்கப்பட்ட காம விருத்தத்தின்படி {மனம் போன போக்கில்} செயல்படுகிறாய்[4].(34) காகுத்ஸ்தா, அபராதம் செய்யாதவனான என்னை இதோ பாணத்தால் கொன்று, இழிசெயல் செய்துவிட்டு நல்லோர் மத்தியில் என்ன சொல்லப் போகிறாய்?(35) இராஜாவைக் கொன்றவன், பிராமணனைக் கொன்றவன், பசுவைக் கொன்றவன், பிராணிகளை வதம் செய்தவன், சோரன் {கள்வன்}, நாஸ்திகன், பரிவேத்தன் {அண்ணன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே திருமணம் செய்து கொள்பவன்} ஆகியோர் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள்.(36) சூசகன் {கோள் பேசுபவன்}, கதர்யன் {கருமி}, மித்ரக்னன் {நண்பனைக் கொல்பவன்}, குருதல்பகன் {குருவின் படுக்கையில் நுழைபவன் / குருவின் மனைவியை அபகரிப்பவன்} போன்றோர் பாப ஆத்மாக்களின் உலகங்களுக்குச் செல்வார்கள்.(37) 

[4] வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ

- கம்பராமாயணம் 4026ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: {நீ செய்த செயல்} வீரமன்று; விதியும் அன்று, மெய்ம்மைச் சார்ந்ததும் அன்று. உன் நிலத்தில் என் உடல் சுமையானதும் அன்று, {உனக்கும் எனக்கும்} பகையுமன்று, {அவ்வாறிருக்க} பண்பு அழிந்து இரக்கமற்று நீ இச்செயலைச் செய்தது எதற்காக?

என் சருமம் {தோல்} தரிக்கத்தக்கதல்ல, ரோமங்களும், அஸ்தியும் {எலும்புகளும்} நல்லோருக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. உன் விதமான தர்மசாரிகளுக்கு மாமிசமும் பக்ஷிக்கத்தக்கதல்ல[5].(38) இராகவா, பஞ்சநகம் {ஐந்து நகங்களைக்} கொண்டவைகளில், சல்யகம் {முள்ளம்பன்றி}, சுவாவிதம் {காட்டுப்பன்றி}, கோதம் {உடும்பு}, சசம் {முயல்}, ஐந்தாவதாக கூர்மம் {ஆமை} ஆகிய ஐந்தும் {ஐந்து விலங்குகளும்} பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணத்தக்கவை.(39) இராஜாவே, உணர்வுள்ள மக்கள் என் சருமத்தையும், எலும்புகளையும் தொடமாட்டார்கள். மாமிசத்தை பக்ஷிக்கமாட்டார்கள், பஞ்சநகனான நான் ஹதம் செய்யப்பட்டிருக்கிறேன் {கொல்லப்படத் தாக்கப்பட்டிருக்கிறேன்}.(40) 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புலித்தோல் விரிப்பாகவும், அதன் பற்கள் ஆரங்களில் பயன்படுத்தக்கூடியவையாகவும், அதன் உடல் பகுதிகள் மருத்துவத் தன்மை வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. எனவே புலிகள் வேட்டையாடப்படுகின்றன. அதேபோல் யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் போன்ற பல விலங்குகள் தோல், மயிர், எலும்புகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. ஆனால் குரங்குகள் அவ்வாறு உணவுக்காகவோ, உடைக்காகவோ, விளையாட்டுக்காகவோ வேட்டையாடப்படுவதில்லை என்பதை வாலி இங்கே குறிப்பிடுகிறான்" என்றிருக்கிறது.

சர்வஜ்ஞையான {அனைத்தையும் அறிந்தவளான} தாரை, சத்திய ஹித {உண்மையில் நன்மை பயக்கும்} வாக்கியங்களை என்னிடம் சொன்னாள். அதையும் மீறியே காலவசப்பட்டவனாக வந்தேன்.(41) காகுத்ஸ்தா, உன்னை நாதனாக அடைந்த வசுந்தரை {பூமி}, தர்மபதியில்லாத {அறத்துடன் கூடிய கணவனில்லாத} சம்பூர்ண சீலமுடைய {நல்லொழுக்கம் நிறைந்த} பெண்ணைப் போல, நாதனற்றவளாக இருக்கிறாள்[6].(42) வஞ்சகனும், நேர்மையற்றவனும், அற்பமானவனும், போலிப் பணிவு கொண்டவனும், பாபியுமான நீ, மஹாத்மாவான தசரதருக்கு எப்படி பிறந்தாய்?(43) நன்னடத்தையெனும் சங்கிலியை நொறுக்கி, நல்லோரின் தர்மவரம்புகளை மீறி, தர்மத்தின் அங்குசத்தை விலக்கிவிட்ட {பாகனை மீறிய} ராமன் எனும் ஹஸ்தியால் {யானையால்} நான் கொல்லப்பட்டேன்[7].(44) நல்லோரால் நிந்திக்கப்படும் இவ்வகை செயலைச் செய்துவிட்டு, நல்லோருடன் கூடும்போது {நல்லோரைச் சந்திக்கும்போது} இஃது அசுபமானது, யுக்தமன்று {தகுதியற்றது} என்று சொல்வாயா?(45) 

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னனே நிலத்தின் தலைவனாவான். விஷ்ணு, பூதேவியின் கணவனாவான். இங்கே ராமன் மன்னனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறான். "நேர்மையற்ற கணவனைப் போலல்லாமல், நிலத்தின் தலைவனாகவும், நல்ல கணவனாகவும் அனைத்துப் பண்புகளைக் கொண்டிருப்பவன் நிலத்தை உண்மையாக பாதுகாப்பான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

[7] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மதங்கொண்ட யானை கட்டுக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஸாதுவான யானைகளின் மர்யாதையைக் கடந்து மாவெட்டியையும் பொருள் செய்யாமல் அகப்பட்டவர்களை அடிப்பது போல், நீ நன்னடத்தையைத் துறந்து அபராதஞ் செய்தவர்களை மாத்ரமே தண்டிக்க வேண்டுமென்னும் ஸாதுக்களது மர்யாதையைக் கடந்து, தர்மத்திற்குட்படாமல் என்னைக் கொன்றனை" என்றிருக்கிறது.

இராமா, உதாசீனப்படுத்திய எங்களிடம் எவ்வகை விக்கிரமத்தைக் காட்டினாயோ, அத்தகைய விக்கிரமத்தை உன் அபகாரிகளிடமும் {உனக்குத் தீங்கிழைத்த ராவணனிடமும்} நான் பார்க்கவில்லை[8].(46) நிருபாத்மஜா {மன்னர்மகனே}, யுத்தத்தில் புலப்படுபவனாக நீ என்னுடன் யுத்தம் செய்திருந்தால், என்னால் கொல்லப்பட்டு இப்போதே வைவஸ்வத தேவனை {யமனைப்} பார்த்திருப்பாய்.(47) பானவசமடைந்து {குடிமயக்கத்தில்} நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் நரனை {தீண்டும்} பன்னகத்தை {பாம்பைப்} போலப் போரில் புலப்படாதவனான நீ, வெல்லப்பட முடியாதவனான என்னைக் கொன்றுவிட்டாய்.(48) 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விக்ரமம் என்ற சொல்லுக்கு வெற்றி என்றும், நடை என்றும் இரு பொருள்கள் உள்ளன. இங்கே ராமனின் நடை சொல்லப்படுகிறது" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

சுக்ரீவனின் பிரிய காமத்தை {விருப்பத்திற்குரிய ஆசையை} நிறைவேற்றும் வகையில், உன்னால் நான் எதற்காக கொல்லப்பட்டேனோ அந்த அர்த்தத்தை {பொருளை / ராவணனை} நீ பூர்வத்தில் என்னிடமே வேண்டியிருந்தால், நான் ஒரே நாளில் உன் பாரியையை அபகரித்த துராத்மாவான ராக்ஷசன் ராவணனை போரில் கொல்லாமல், கண்டத்தில் கட்டி {கழுத்தில் சுருக்கிட்டு இழுத்து} வந்து உன்னிடம் கொடுத்திருப்பேன். மைதிலியையும் அவ்வாறே கொண்டு வந்திருப்பேன்.(49,50) சாகரத்தின் நீரிலோ, பாதாளத்திலோ மைதிலியை வைத்திருந்தாலும், உன் ஆணையின் பேரில் சுவேத அசுவத்தைப் போல நான் கொண்டு வந்திருப்பேன்[9](51) 

[9] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, அசுரர்களாகிய மதுகைடபர்களால் வெள்ளைக் குதிரை ரூபமாக்கி திருடிப் போகப்பட்டதை, விஷ்ணு பகவான் ஹயக்ரீவ உருவங்கொண்டு மீட்டி வந்தது எவ்விதமோ அவ்விதமே" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸ்வேதாஷ்வதர உபநிஷத் என்று ஓர் உபநிஷத் வெள்ளை பெண்குதிரையின் வடிவில் இருந்தபோது, அசுரர்களான மதுகைடபர்கள் அதை அபகரித்தனர். பின்னர் விஷ்ணு தன் மற்றொரு அவதாரமான ஹயக்ரீவனாக அதை மீட்டான்" என்றிருக்கிறது.

நான் சொர்க்கத்திற்குச் சென்றதும் சுக்ரீவன் {ராஜ்ஜியத்தை} அடைவது யுக்தமானது {பொருத்தமானது / நியாயமானது}. நான் ரணத்தில் உன்னால் அதர்மமாகக் கொல்லப்பட்டதோ யுக்தமன்று {பொருத்தமற்றது / அநியாயமாகும்}.(52) காலத்தின் விதியை உலகம் இவ்விதமே ஏற்கிறது. மறைந்திருந்து நீ செய்தது சரியென்றால், பொருத்தமான மறுமொழியைக் கவனமாகச் சிந்திப்பாயாக" {என்றான் வாலி}.(53)

சரம் துளைத்த வேதனையில் இருந்தவனும், மஹாத்மாவுமான வானரராஜன் மகன் {வாலி}, இரவியை {சூரியனைப்} போல் பிரகாசிக்கும் ராமனைக் கண்டு இவ்வாறு சொல்லிவிட்டு, வாய் வறண்டவனாக அமைதியடைந்தான்.(54)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை