Showing posts with label தசரதன். Show all posts
Showing posts with label தசரதன். Show all posts

Monday, 12 September 2022

அந்தப்புர ஸ்திரீகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 065 (29)

The women of gynaecium | Ayodhya-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதன் இறந்ததைக் கண்டுபிடித்த பெண்கள்; தசரதனின் மனைவியர் அனைவரும் பரிதாபமாக அழுதது...

Dasaratha's death

அந்த ராத்திரி கடந்து விடியத் தொடங்கிய அடுத்த நாளில், உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களும், உத்தம கல்வியைக் கற்றவர்களுமான சூதர்களும், மங்கல ஆசிகளை உதிர்ப்பவர்களும், துதிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களுமான காயகர்களும் {பாடகர்களும்}, பல்வேறு வகைகளில் தங்கள் வாழ்த்துகளைச் சொல்பவர்களான வந்திகளும் அந்த பார்த்திப நிவேசனத்திற்கு {ராஜமாளிகைக்குத்} தனித்தனியாக வந்தனர்.(1,2) அவர்களின் துதிகளும், ராஜனைக் குறித்த உரத்த குரல் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அந்த மாளிகையின் உள்ளரங்குகளை நிறைக்கும் வண்ணம் முற்றாகப் பரவியது.(3) அந்த சூதர்கள் துதித்ததும், சில பாணிவாதகர்கள் {கைத்தாளமிடும் பாடகர்கள்}, அவனது {தசரதனின்} செயல்களைப் புகழ்ந்து கைத்தாளத்துடன் பாடிக்கொண்டிருந்தனர்.(4) 

இராஜகுல கோசரங்களிலும் {ராஜமாளிகை வசிப்பிடங்களிலும்}, மரக்கிளைகளிலும், கூண்டுகளிலும் இருந்த பறவைகள் அவ்வொலியால் விழித்தெழுந்து கீச்சொலி எழுப்பத் தொடங்கின.(5) வீணையின் ஒலியுடன் வெளிப்பட்ட புண்ணிய சப்தங்களும், பூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய காதானங்களும் {புனிதப் பாடல்களும்} அந்த வேஷ்மத்தை {மாளிகையை} நிரப்பின.(6) பூர்வத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் தூய நடைமுறைகளைப் பராமரித்தவர்களும், கோவின் {அரசனின்} தொண்டில் திறம்படைத்தவர்களுமான பெண்களும், அலிகளும் அங்கே தொண்டாற்ற வந்தனர்.(7) 

ஸ்நானத்தை {நீராடலைக்} குறித்து அறிந்தவர்கள், உரிய காலத்திலும், உரிய விதிப்படியும் மஞ்சள், சந்தனம் கலந்த நீரைக் காஞ்சன கடங்களில் {பொற்குடங்களில்} அங்கே கொண்டு வந்தனர்.(8) அவ்வாறே ஸ்திரீகுமாரிகளும் {கன்னிப் பெண்களும்}, மேனியில் பூசிக் கொள்வதற்கான மங்கல பொருட்களையும், சிற்றுண்டிகளையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.(9) அவனருகே கொண்டு வரப்பட்ட சர்வமும், விதிப்படி மதிப்புடன் அங்கே வைக்கப்பட்டன. சர்வ லக்ஷணங்களும் பொருந்திய அவை அனைத்தும் சுகுணலக்ஷ்மீகரமாக {பேரருள் நிறைந்தவையாக} இருந்தன.(10) அதன்பிறகு பெரும் பரபரப்புடன் வந்த அவர்கள் அனைவரும், "இஃது என்ன" என்ற ஐயத்துடன் சூரியோதயம் வரையில் அவனை நெருங்காமல் அங்கேயே நின்றனர்.(11)

பிறகு அந்தக் கோசலேந்திரனின் {கோசல நாட்டுத் தலைவனான தசரதனின்} சயனம் வரை தடையில்லாமல் செல்லக்கூடிய ஸ்திரீகள் மட்டும் ஒன்றுகூடிச் சென்று, தங்கள் பர்த்தாவை நெருங்கி {தலைவனை / கணவனை நெருங்கி, மெதுவான வாக்கியங்களைச் சொல்லி} அவனை எழுப்பினர்.(12) விநயத்திலும், நயத்திலும் {பணிவிலும், அறிவிலும்}  உசிதமான நடத்தை கொண்ட அவர்களும், அவனது சயனத்தை ஸ்பரிசிக்காததால் எதையும் உணராமலிருந்தனர்.(13) உறக்கத்தில் கனவு காணும்போதான உடலின் நிலை, அங்க அசைவுகள் போன்றவற்றை அறிந்தவர்களான அந்த ஸ்திரீகள், ராஜனின் பிராணனைக் குறித்த அச்சத்தில், பிரவாஹத்தை {நீரோட்டத்தை} எதிர்த்து நிற்கும் நீர்வஞ்சிப்புல் நுனிகளைப் போல நடுங்கிக் கொண்டிருந்தனர்.(14,15அ) எதிர்வரப்போகும் பாபத்தை நினைத்து அஞ்சிக் கொண்டிருந்த அந்த ஸ்திரீகளின் சந்தேக மனங்கள், அந்தப் பார்த்திபனை {மன்னன் தசரதனை} இவ்வாறு கண்டதும் ஒரு நிச்சயத்தையடைந்தன.(15ஆ,16அ)

புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவர்களும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுமான கௌசல்யையும், சுமித்திரையும் காலனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போல விழிக்காமல் கிடந்தனர்.(16ஆ,17அ) பிரகாசமிழந்தவளும், வர்ணமிழந்தவளும் {நிறம் மங்கியவளும்}, சோகத்தாலும், சன்னதத்தாலும்  {மயக்கத்தாலும்} மெலிந்திருந்தவளுமான கௌசல்யை, இருளில் மூழ்கிய தாரையை {நட்சத்திரத்தைப்} போல ஒளியிழந்திருந்தாள்.(17ஆ,18அ) ராஜனுக்கு அருகிலேயே இருந்த கௌசல்யா தேவியும், அவளது அருளில் இருந்த சுமித்திரையும் சோகக்கண்ணீரில் மறைந்த முகத்துடன், {முன்பு போல} ஒளிராமல் இருந்தனர்.(18ஆ,19அ) சுபர்களான அந்த தேவிகள் உறங்குவதையும், நிருபனின் நிலையையும் கண்ட அந்தப்புரத்தினர், உறக்கத்திலேயே அவனது பிராணன் போயிருக்க வேண்டுமென மனத்தில் நினைத்தனர்.(19ஆ,20அ) பிறகு பரிதாபத்திற்குரிய அந்த வராங்கனைகள் {பெண்கள்}, அரண்யத்தின் ஸ்தானத்தில் இருந்து விலக்கப்பட்ட கரேணங்களை {பெண் யானைகளைப்} போல உரத்த குரலில் அழுதனர்.(20ஆ,21அ)

அவர்களின் அலறலைக் கேட்ட கௌசல்யையும், சுமித்திரையும் உடனே நித்திரையில் இருந்து விடுபட்டு சுயநனவை அடைந்தனர்.(21ஆ,22அ) அப்போது அந்தப் பார்த்திபனைக் கண்டும், ஸ்பரிசித்தும் பார்த்த கௌசல்யையும், சுமித்திரையும், "ஹா நாதரே" என்று அலறியவாறே தரணீதலத்தில் {பூமியின் தரையில்} விழுந்தனர்.(22ஆ,23அ) மஹீதலத்தில் {பூமியின் தரையில்} உருண்டு, புரண்ட அந்த கௌசல்யேந்திரன் மகள் {கௌசல்யை}, ககனத்திலிருந்து விழுந்த தாரையை {வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தைப்} போலப் பிரகாசிக்காமல் இருந்தாள்.(23ஆ,24அ) அந்த நிருபன் குணமழிந்தவனான போது {இறந்த பிறகு}, கொல்லப்பட்டு விழுந்த நாகவதுவை {பெண்யானையைப்} போலப் புவியில் விழுந்த கௌசலையை அந்த ஸ்திரீகள் அனைவரும் கண்டனர்.(24ஆ,25அ)

அதன்பிறகு, கைகேயீ பிரமுகர்களும் {கைகேயியைச் சார்ந்தவர்களும்}, நரேந்திரனின் ஸ்திரீகள் அனைவரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே சுயநனவு அகன்று விழுந்தனர்.(25ஆ,26அ) அழுது கொண்டிருந்தவர்களால் உண்டான பலத்த சந்நாதத்துடன் {ஓங்கி ஒலித்த ஒலியுடன்} இவர்களின் ஒலியும் இணைந்து, அந்தக் கிருஹத்தையே {வீட்டையே} பிளக்கும் பேரொலியானது.(26ஆ,27அ) திஷ்டாந்தத்தை {இறுதி முடிவை} அடைந்த அந்த நரதேவனின் சத்மம் {மன்னனின் அந்தப்புரம்}, மனவேதனையுற்று திகிலடைந்த ஜனாகுலத்தால் {மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததாகவும், முற்றிலும் கலக்கமுற்றதாகவும், சுற்றிலும் கலங்கிய பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடியதாகவும், துன்பத்தாலும், விரக்தியாலும் ஆனந்தம் இழந்ததாகவும் காணப்பட்டது.(27ஆ-29அ) புகழ்பெற்றவனான அந்த பார்த்திபரிஷபன் {மன்னர்களில் காளையான தசரதன்} காலமானதை அறிந்த அவனது பத்தினிகள் {மனைவியர்}, பெருந்துக்கத்துடன் அவனைச் சூழ்ந்து, அநாதைகளைப் போல ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு பரிதாபகரமாக அழுது புலம்பினர்.(29ஆ-29உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Sunday, 21 August 2022

கௌசல்யையின் வருத்தம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 062 (21)

Kaushalya repents | Ayodhya-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தவறுக்கு வருந்தி மன்னனைத் தேற்றிய கௌசல்யை; துன்புற்ற தசரதன் உறக்கத்தில் ஆழ்ந்தது...

Kausalya Dasaratha Sumitra

சோகத்தில் பீடிக்கப்பட்ட ராமனின் மாதாவால் {கௌசல்யையால்} இவ்வாறு கோபத்துடன் சொல்லப்பட்ட கடும் வாக்கியங்களைக் கேட்ட ராஜா {தசரதன்} துக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) இவ்வாறு சிந்தித்த  அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, இந்திரியங்கள் கலங்கியவனாக மோஹமடைந்தான் {பொறிகள் கலங்கி மூர்ச்சித்தான்}. அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான தசரதன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகே தன் நினைவை அடைந்தான்.(2) 

அவன் {தசரதன்}, தன் நினைவு மீண்டதும், தீர்க்க உஷ்ண {நீண்ட வெப்பப்} பெருமூச்சைவிட்டான். தன் அருகில் நிற்கும் கௌசலையைக் கண்டு மீண்டும் {வருந்தி} சிந்திக்கத் தொடங்கினான்.(3) அவ்வாறு அவன் சிந்தித்த போது, சப்தத்தைக் கொண்டு துளைப்பவனாக {ஒலியைக் கொண்டே குறியை எய்பவனாகப்} பூர்வத்தில் அஞ்ஞானத்தால் {அறியாமையால்} தான் செய்த தீச்செயலை நினைத்தான்.(4) பிரபுவான அந்த மஹாராஜா {தசரதன்}, இந்த சோகத்தாலும், ராமனைக் குறித்த சோகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாக இரட்டை சோகங்களால் மனம் தளர்ந்தான்.(5)

இந்த சோகங்களால் பீடிக்கப்பட்ட அந்த பூபதி {நிலத்தலைவன் தசரதன்}, மெய்நடுங்கி, தலை கவிழ்ந்து கைக்கூப்பிக் கொண்டு, கௌசல்யையின் அருள் வேண்டி இதைச் சொன்னான்:(6) "கௌசல்யா, உன் அருளை வேண்டியே நான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன் {கைக்கூப்பிக் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக் கொள்வாயாக}. பிறரிடம் கூட நீ நித்தியம் வாத்சல்யத்துடனும் {பாசத்துடனும்}, அன்புடனும் இருந்து வருகிறாய்.(7) தேவி, தர்மத்தை உள்ளபடியே அறியும் நாரீகளுக்கு {பெண்களுக்கு}, பர்த்தா {கணவன்} குணவானாகவோ, நிர்குணனாகவோ {குணமற்றவனாகவோ} இருந்தாலும், உண்மையில் அவனே அவர்களுக்குப் பிரத்யக்ஷ தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(8) உலகத்திலுள்ள நன்மை தீமைகளைப் புரிந்து, நித்தியம் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நீ துக்கமடைந்திருந்தாலும், துக்கத்திலிருக்கும் என்னிடம் பிரியமற்ற {விரும்பத்தகாத} சொற்களைப் பேசக்கூடாது" {என்றான் தசரதன்}.(9)

கௌசல்யை, தீனனான ராஜனால் பரிதாபமாகச் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, வாய்க்காலில் பெருகி ஓடும் புது மழைநீரைப் போலக் கண்ணீர் வடித்தாள்.(10) தாமரை மலர் போலக் கூப்பியிருந்த ராஜனின் கைகளைக் குவித்துத் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் {கௌசல்யை}, அழுது கொண்டே, பயத்துடன் கூடிய அவசரமான சொற்களைக் குழப்பத்துடன் சொன்னாள்:(11) "தேவா, சிரம்பணிந்து உம்மை யாசிக்கிறேன். பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறேன். என்னைக் கேடு பீடித்தது. என்னிடம் நீர் பொறுமை காக்க வேண்டியதில்லை.(12) வீரரே, போற்றத்தகுந்தவனும், புத்திசாலியுமான கணவனால் எந்தப் பெண் வேண்டப்படுவாளோ, அவளுக்கு இரு உலகங்களும் இல்லை {இம்மையையும், மறுமையையும் இல்லை. இவ்வுலகத்திலுள்ளவர்களும் அவளை நிந்திப்பார்கள், பரலோகத்திலும் அவள் தண்டிக்கப்படுவாள்}.(13) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் தர்மங்களை அறிவேன். நீர் சத்தியவாதி என்பதையும் அறிவேன். ஆயினும் புத்திரசோகத்தில் தவித்த நான் மொழிதற்கரிய மொழிகளை மொழிந்தேன்.(14) 

சோகம் தைரியத்தை நாசம் செய்யும், சோகம் கேள்வியை {கல்வியை} நாசம் செய்யும், சோகம் அனைத்தையும் நாசம் செய்யும். சோகத்துக்கு இணையான ரிபு {எதிரி} வேறேதும் இல்லை.(15) எதிரியின் கையிலிருந்து விழும் அடியைத் தாங்கிக் கொள்ள முடியும். திடீரென நேரும் சூக்ஷ்ம {சிறு} சோகத்தையுந் தாங்கிக் கொள்ளவே முடியாது.(16) வீரரே, தர்மத்தை அறிந்தவர்களும், சுருதிகளைக் கற்றவர்களும், தர்மார்த்தங்களில் {அறம், பொருள்களில்} உள்ள சிறு ஐயங்களிலும் தெளிவடைந்தவர்களுமான யதிகளுங் கூட சோகத்தால் மனம் பீடிக்கப்படும்போது வழிதவறுகிறார்கள்.(17) இராமன் வனவாசம் சென்று இன்றோடு பஞ்சராத்திரிகள் {ஐந்து இரவுகள்} ஆகின்றன. சோகத்தால் மகிழ்ச்சி அழிந்த எனக்கு, அது பஞ்ச வருஷங்களை {ஐந்து ஆண்டுகளைப்} போன்றது.(18) நான் அவனை {ராமனைக்} குறித்து சிந்திக்கையில், வேகமான நதிகளால் பெருகும் மஹத்தான சமுத்திர நீரைப் போல என் ஹிருதய சோகம் வளர்கிறது {என்றாள் கௌசல்யை}.(19)

கௌசல்யை இந்த சுபச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் மந்தமடைந்தான் {ஒளிமங்கினான் / மறைந்தான்}; இரவும் ஆனது.(20) இவ்வாறு கௌசல்யா தேவியால் மகிழ்ந்த அந்த நிருபன், சோகத்தைக் கடந்து நித்திரையின் வசமடைந்தான்.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Saturday, 20 August 2022

கௌசல்யை நிந்தனை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 061 (27)

The censure of Kausalya | Ayodhya-Kanda-Sarga-061 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை நாடு கடத்தும் தசரதனின் தீச்செயலை நிந்தித்த கௌசல்யை; பெருந்துயரில் மூர்ச்சித்து விழுந்த தசரதன்...

Kausalya Dasaratha Sumitra

தர்மத்திற் சிறந்தவனும், மகிழ்ச்சியளிப்பவர்களில் சிறந்தவனுமான ராமன் வனத்திற்குச் சென்றதால் வேதனையடைந்த கௌசல்யை, அழுது கொண்டே தன் பர்த்தாவிடம் {கணவன் தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) "இராகவர் {தசரதர்} கருணையுள்ளவர், தாராள மனம் படைத்தவர், பிரியவாதி {அன்புடன் பேசுபவர்} என்று மூவுலகங்களிலும் உமது மகத்தான புகழ் பரவியிருந்தாலும் {என்ன பயன்?},(2) நரவரசிரேஷ்டரே {முதன்மையான மனிதர்களில் சிறந்தவரே}, சுகமாக வளர்ந்து, துக்கத்தில் பீடிக்கப்பட்டவர்களான உமது புத்திரர்கள் இருவரும், சீதையும் எவ்வாறு வன துக்கத்தை சகிப்பார்கள்?(3) சியாம தாருணியும் {இளமையின் உச்சத்தில் இருப்பவளும்}[1], சுகுமாரியும், சுகத்திற்கே தகுந்தவளுமான அந்த மைதிலி உஷ்ணத்தையும், சீதத்தையும் {வெப்பத்தையும், குளிரையும்} உண்மையில் எவ்வாறு சகித்துக் கொள்வாள்?(4) சுவைமிக்க குழம்புடன் கூடிய சுப உணவை உண்டவளும், விசாலாக்ஷியுமான {நீள்விழியாளுமான} சீதை, வன அரிசியில் உண்டான ஆஹாரத்தை எவ்வாறு உண்பாள்?(5) சுபமான கீத வாத்திய மென் கோஷங்களை {நல்ல பாடல், இசைக்கருவிகளின் மெல்லிசையைக்} கேட்ட அந்த நிந்திக்கத்தகாதவள், ஊனுண்ணும் விலங்குகள், சிங்கங்கள் ஆகியவற்றின் கொடுஞ்சத்தத்தை எவ்வாறு கேட்பாள்?(6)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சியாமம் என்ற சொல்லை நாம் தெரிந்தே மொழிபெயர்க்காமல் விட்டிருக்கிறோம். இதன் வழக்கமான பொருள் கருமை என்பதாகும். ஆனால் சியாமம் என்பது பிள்ளை பெறாத பெண்ணையும் குறிக்கும். இந்த இரண்டாம் பொருளே இங்கே பொருந்தும்" என்றிருக்கிறது.

மஹாபுஜனும், மஹேந்திரனின் துவஜத்தை {இந்திரனின் கொடியைப்} போல மிளிர்பவனுமான அந்த மஹாபலன் {வலிமைமிக்கவனான ராமன்}, பரிகத்தைப் போன்ற தன் புஜங்களையே தலையணையாகக் கொண்டு எங்கே படுத்திருக்கிறானோ?(7) பத்ம வர்ணத்தையும் {தாமரையின் நிறத்தையும்}, அழகிய கேசத்தையும் {தலைமுடியையும்}, பத்ம நறுமண சுவாசத்தையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டதும், உத்தமமானதுமான ராமனின் வதனத்தை {முகத்தை} நான் எப்போது காண்பேன்?(8) அவனைக் காணாமலும் ஆயிரம் துண்டுகளாக பிளக்காமலிருக்கும் என் ஹிருதயம் நிச்சயம் வஜ்ரசாரமயமானதே {வஜ்ரத்தாலானதே}. இதில் ஐயமேதுமில்லை.(9) சுகத்திற்குத் தகுந்தவர்களும், என் ஆப்த பந்துக்களுமான அவர்கள், உம்மால் கருணையின்றி விரட்டப்பட்டுப் பரிதாபத்திற்குரியவர்களாக வனத்தில் திரிகிறார்கள்.(10) 

பஞ்சதச வருஷத்தில் {பதினைந்தாம் ஆண்டில்} ராகவன் திரும்பிவந்தாலும், பரதன் ராஜ்ஜியத்தையும், கோஷத்தையும் {கருவூலத்தையும்} கைவிடுவானென நினைக்கலாகாது.(11) சிலர் சிராத்தங்களிலும் தங்கள் பந்துக்களுக்கே போஜனம் {உணவு} அளிப்பார்கள், காரியம் முடிந்த பின்னரே துவிஜரிஷபர்களை {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களைத்} தேடுவார்கள்.(12) குணவான்களும், வித்வாம்சம் கொண்டவர்களும் {கல்விமான்களும்}, ஸுரர்களுக்கு {தேவர்களுக்கு} ஒப்பானவர்களுமான  துவிஜர்கள் {தேவர்களுக்கு ஒப்பான இருபிறப்பாளர்கள்}, அமுதமாகவே இருப்பினும் பிறருக்கு {பிறர் உண்ட} பிறகு அதை ஏற்க மாட்டார்கள்.(13) {அவ்வாறு உண்டது} நிறைவடைந்தது பிராமணர்களாகவே இருப்பினும், கொம்புகள் ஒடிக்கப் பொறாத ரிஷபங்களைப் போன்ற ஞானமுள்ள துவிஜரிஷபர்கள் அதை உண்ண மாட்டார்கள்.(14) விஷாம்பதியே {உலகத் தலைவரே}, உடன்பிறந்தவர்களில் சிறந்த ஜேஷ்டன் {சகோதரர்களில் சிறந்தவனான மூத்தவன்}, உடன்பிறந்தவர்களில் இளையவனால் அனுபவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை ஏன் மறுக்க மாட்டான்?(15) வேறொன்றால் உண்ணப்பட்ட பக்ஷியத்தை உண்ண விரும்பாத வியாகரத்தை {புலியைப்} போலவே, அந்த நரவியாகரனும் {மனிதர்களில் புலியான ராமனும்}, ஏற்கனவே அனுபவிக்கப்பட்டதை ஏற்க மாட்டான்.(16) {வேள்வியில்} ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஹவிஸ், நெய், புரோடசம் {பிண்டம்}, குசம் {தர்ப்பை}, காதிரை {கருங்காலி} மரத்தால் செய்யப்பட்ட யூபஸ்தம்பங்கள் ஆகியவற்றை மறுமுறை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.(17) அவ்வாறே ராமனும், சாரம் போன சுராபானத்தைப் போலவோ, சோமம் இல்லாத வேள்வியைப் போலவோ, பிறரால் அபகரிக்கப்பட்ட இந்த ராஜ்ஜியத்தை ஏற்கமாட்டான்[2].(18) 

[2] சில பதிப்புகளில் இதன்பிறகு இன்னும் மூன்று சுலோகங்கள் இருக்கின்றன. நரசிம்மாசாரியர் பதிப்பில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவாறு அவற்றின் பொருளைப் பின்வருமாறு கொள்ளலாம்: "ராமன் மிகவும் கோபித்துக் கொண்டிருப்பானாயின், இப்படிப்பட்ட அவமானத்தை அவன் அடைந்தேயிருக்கமாட்டான். அவன் கோபித்துக் கொள்வானாயின், தீக்ஷ்ணங்களாகிய தனது பாணங்களால் மந்தரபர்வதத்தையும் இரு பிளவாகப் பிளந்துவிடுவான்.{19} தான் இப்படிப்பட்ட மஹானுபாவனாயினும், அவன் உன்னை மாத்ரம் தந்தையென்கிற கௌரவத்தைப் பற்றி அடிக்க முயலான். ராமன் கோபமுறுவானாயின், சந்த்ர ஸூர்யர்களோடும் நக்ஷத்ரங்களோடுங் கூடிய ஆகாயத்தையாயினும் ஸ்வர்க்கத்தையாயினும் அறுத்துத் தள்ளிவிடுவான்.{20} நூறு நூறாகப் பர்வதங்கள் நிரம்பிய பூமண்டலம் முழுவதையும் கலங்கடித்து வெல்லவும் வல்லமையுள்ளவன். அப்படிப்பட்ட ஸமர்த்தனாயினும் அவன் உன்னை மாத்ரம் உல்லங்கனஞ் செய்யாதிருக்கின்றனன்.{21}" என்றிருக்கிறது. இவற்றையுஞ் சேர்த்தால் இந்த சர்க்கத்தில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கை 30 ஆகும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பு, தாதாசாரியர் பதிப்பு ஆகிய தமிழ்ப்பதிப்புகளிலும், கே.எம்.கே.மூர்த்தி, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் ஆங்கிலப்பதிப்புகளிலும் இந்த மூன்று சுலோகங்களும் விடுபட்டிருக்கின்றன. தமிழில் நரசிம்மாசாரியரின் பதிப்பில் அடைப்புக்குறிக்குள்ளும், ஆங்கிலத்தில் வி.வி.சுப்பாராவ் பதிப்பிலும் இவை இருக்கின்றன.

வாலைத் தீண்டவும் பொறுக்காத பலமிக்க சார்தூலத்தை {புலியைப்} போலவே, ராகவனும் {ராமனும்} அவ்விதமான அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்.(19) உலகங்கள் ஒன்றுகூடி பெரும்போரில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனிடம் பயத்தை உண்டாக்க முடியாது. அந்த தர்மாத்மா, அதர்மமான இந்த உலகத்திற்கு தர்மத்தைச் செய்வான்.(20) மஹாபுஜங்களைக் கொண்ட அந்த மஹாவீரன் {ராமன்}, யுகாந்தத்தில் {யுகமுடிவில்} போலவே, தன் காஞ்சனபாணங்களால் {பொற்கணைகளால்} பூதங்கள் அனைத்தையும், சாகரத்தையும் {கடலையுங்கூட} நிச்சயம் எரித்துவிடுவான்.(21) அத்தகைய சிம்மபலங்கொண்டவனும், ரிஷபத்தின் கண்களைக் கொண்டவனுமான அந்த நரரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, ஜலஜேனத்தால் {மீனால்} கொல்லப்படும் {மீன்}குஞ்சுகளைப் போலத் தன் பிதாவாலேயே கொல்லப்பட்டான்.(22) தர்மத்தைப் பின்பற்றும் புத்திரன் உம்மால் நாடுகடத்தப்பட்டான். இஃது உமக்கு சாஸ்திரங்களில் காணப்படும் தர்மமா? அல்லது துவிஜர்களால் பின்பற்றப்படும் சனாதனமா {தொன்மையான, அழிவில்லாத நித்திய நடைமுறையா}?[3](23) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "துவிஜன் என்பது, ஒரு வகை இரண்டாம் பிறப்பாகும், அதாவது அவன் கல்வி முடித்து உபநயன சடங்கைச் செய்து இரு பிறப்பாளன் ஆனவன். துவிஜன் என்பது பிராமணரைக் குறிப்பதாக அடிக்கடி பொருள் கொள்ளப்பட்டாலும், முதல் மூன்று வர்ணத்தாரும் பூணூல் அணியும் துவிஜர்களே" என்றிருக்கிறது.

ராஜரே, ஒரு நாரியைக்கு {பெண்ணுக்கு} பதியே முதன்மையான கதியாவான், ஆத்மஜன் {மகன்} இரண்டாம் கதி, ஞாதிகள் {நெருக்கமான உறவினர்கள்} மூன்றாம் கதி, இங்கே {இவ்வுலகில்} நான்காவது கதியேதும் கிடையாது.(24) இவற்றில் {இந்த மூன்றில்} நீர் இல்லை, ராமனும் வனத்தில் தஞ்சம் புகுந்தான். நான் வனத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அனைத்து வழிகளிலும் உம்மால் நான் அழிந்தேன்.(25) இந்த ராஜ்ஜியமும், ராஷ்டிரங்களும் உம்மால் அழிக்கப்பட்டன. நீரும், மந்திரிகளும் அழிந்துவிட்டீர்கள். புத்திரனுடன் நானும் அழிந்தேன். நகரவாசிகளும் அழிந்தனர். உமது சுதனும் {உமது மகன் பரதனும்}, பாரியையும் {உமது மனைவியான கைகேயியும்} மகிழ்ச்சியாக இருக்கட்டும்" {என்றாள் கௌசல்யை}.(26)

கொடுஞ்சொற்களுடன் கூடிய இந்தக் ஒலியைக் கேட்ட ராஜா, துக்கத்தில் மோஹமடைந்தான் {மூர்ச்சை அடைந்தான்}. அதன்பிறகு அந்தப் பார்த்திபன் {மண்ணின் தலைவன்}, தன் தீச்செயலை மீண்டும் நினைத்து சோகத்தில் விழுந்தான்.(27)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 061ல் உள்ள சுலோகங்கள் : 27

Previous | Sanskrit | English | Next

Sunday, 14 August 2022

தசரதன் புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 059 (34)

The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-059 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்தியில் படிந்த சோகநிழலை விளக்கிய சுமந்திரன்; இராமனை நினைத்து அழுத தசரதன் விரைவில் மயங்கி விழுந்தது...

Dasharatha's Lament

{சுமந்திரன் தொடர்ந்தான்},[1] "இராமன் வனத்திற்குப் புறப்பட்டதும் திரும்பி வரும்போது என்னுடைய அச்வங்கள் {குதிரைகள்} உஷ்ணமான கண்ணீர் வடித்து மேலும் நகராமல் இருந்தன.(1) அதன்பிறகு நான் அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் கைக்கூப்பி வணங்கி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டேன்.(2) இராமன், என்னை மீண்டும் அழைப்பான் என்ற நம்பிக்கையில், குஹனுடன் அங்கேயே பல நாட்கள் {மூன்று நாட்கள்}[2] வசித்திருந்தேன்.(3) 

[1] சில பதிப்புகளில் இதற்கு முன்பு 4 சுலோகங்கள் இருக்கின்றன. முக்கியமான பதிப்புகள் அனைத்திலும் இந்த நான்கு சுலோகங்களும் தவிர்க்கப்பட்டிருப்பதால் இங்கும் அவ்வாறே தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், அவற்றின் பொருள் பின்வருமாறு: "இவ்வாறு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்த சுமந்திரனிடம், இன்னும் வேறு எதையும் உள்ளதை விடாமல் சொல்லுமாறு தசரதன் ஆணையிட்டான்.{1} சுமந்திரன் அந்த ஆணையைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் ராமனைக் குறித்த செய்திகள் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.{2} "ராஜரே, மரவுரி உடுத்தியிருந்த அவ்விருவரும் சடைகளைத் தரித்துக் கொண்டனர். இராமனுக்கு வழிகாட்டிக் கொண்டு முதலில் லக்ஷ்மணன் சென்றான். அவன் பின்னால் சீதை சென்றாள். அவ்விருவருக்கும் பின்னால் ரகுகுல ராமன் சென்றான். அவ்வாறு செல்லும் அவர்களைக் கண்டு நான் அப்போது கவலையுடன் திரும்பினேன.{3,4}" அதற்குப் பிறகு பின்வரும் செய்திகள் அப்படியே தொடர்கின்றன. 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாஸ்தவமாகப் பார்க்கில் - செடியின் கீழ் ஒரு நாள், பரத்வாஜாச்ரமத்தில் இரண்டாவது நாள், யமுனைக் கரையில் மூன்றாவது நாள், நான்காவது நாள் சித்ரகூட ப்ரவேசம், ஐந்தாவது நாள் குஹனுடைய சாரர்கள் ராமவ்ருத்தாந்தம் தெரிவித்தல், ஆறாவது நாள் ஸூதன் அயோத்யைக்குப் புறப்படுதல். ஆகையால் ஆறுதினங்கள் ஆயின. அல்லது இரண்டாவது நாள் பரத்வாஜாசிரமத்தில் ராமன் சித்ரகூடத்திற்குப் போவதாக நிச்சயிக்கையால், அது தெரிந்து சாரர்கள் மூன்றாவது நாள் வந்து ஸுமந்தரனுக்குத் தெரிவிக்க, நான்காவது நாள் ஸுமந்த்ரன் புறப்பட்டானென்று நினைக்கலாமாயின், கங்காதீரத்தில் மூன்று தினங்கள் இருந்ததாகத் தெரிய வருகின்றது. ஆகையால் பல தினங்கள் என்றால் மூன்று தினங்களென்று கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. மேலும், பின்வரும் அயோத்தியா காண்டம் 62:18ல் {அயோத்தியா காண்டம் 62ம் சர்க்கம், 18ம் சுலோகத்தில்} ராமன் சென்று ஐந்து இரவுகள் கழிந்துவிட்டன என்று கௌசல்யை தசரதனிடம் சொல்லும் செய்தியையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

மஹாராஜாவே, உமது ஆட்சிப்பகுதியில் உள்ள மரங்கள், ராமனின் பிரிவால், புஷ்பங்களும், தளிர்களும், மொட்டுகளும் மலராமல் வாடியிருந்தன.(4) நதிகளிலும், குளங்களிலும், சரஸ்களிலும் {தடாகங்களிலும் / குட்டைகளிலும்} நீர் கொதித்துக் கொண்டிருந்தது, வனங்களிலும், உபவனங்களிலும் மரங்கள் இலைகளின்றி இருந்தன.(5) இராமனின் பிரிவால் நேர்ந்த சோகத்தில் உயிரினங்கள் அசையாமலும், காட்டு விலங்குகள் திரியாமலும் வனங்கள் அமைதியடைந்திருந்தன.(6) நரேந்திரரே, தாமரை இலைகள் மறைந்திருக்கும் நீரைக் கொண்ட பத்மின்யங்கள் {தாமரையோடைகள்},  வாடிய பத்மங்களுடனும் {தாமரைகளுடனும்}, மீனங்களும், நீர்க்கோழிகளும் இன்றி புழுதி நிறைந்த நீருடன் இருந்தன.(7) ஜலத்தில் பிறக்கும் புஷ்பங்களும், ஸ்தலங்களில் {நிலங்களில்} பிறக்கும் மலர்களும் அற்ப கந்தத்தையே {குறைந்த மணத்தையே} பரப்பின. பழங்களும் முன்பு போல் சுவையாகத் தெரியவில்லை.(8) 

மனுஜரிஷபரே, இங்கேயுள்ள உத்யானங்களும் சூன்யமாக {தோட்டங்கள் வெறுமையாக} இருக்கின்றன. பறவைகள் இல்லாத தோட்டங்கள் அழகாகத் தெரியவில்லை.(9) அயோத்திக்குள் பிரவேசிக்கும்போது ஒருவரும் என்னை வரவேற்கவில்லை. இராமனைக் காணாத நரர்கள் {மனிதர்கள்} மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) தேவரே, ராமனில்லாமல் ராஜரதம் இங்கே வந்திருப்பதைக் கண்டு, ராஜமார்க்கத்தில் சென்ற சர்வ ஜனங்களும் துக்கத்தில் உண்டான கண்ணீரால் முகம் நிறைந்தனர்.(11) மாடமாளிகைகளிலும், விமானங்களிலும் {ஏழடுக்கு மாளிகைகளிலும்}, அரண்மனைகளிலும் இருந்த நாரியைகள் {பெண்கள்}, இரதம் வருவதைக் கண்டு, ராமன் இல்லாததை உணர்ந்து, "ஹா, ஹா" என்று நொந்து கொண்டனர்.(12) அதிக வேதனையடைந்த ஸ்திரீகள், கண்ணீரில் பெருகி வழிந்து, பிரகாசிக்கும் தங்கள் நீள்விழிகளால் அன்யோன்யம் அவியக்தமாக {ஒருவரையொருவர் மறைமுகமாக} பார்த்துக் கொண்டனர்.(13) மித்ரர்களாகவோ {நண்பர்களாகவோ}, அமித்ரர்களாகவோ {நட்பில்லாதவர்களாகவோ}, உதாசீன ஜனங்களாகவோ {நடுத்தர மக்களாகவோ} இருந்தாலும் அவர்களின் துன்பத்தில் எந்த விசேஷத்தையும் {வேறுபாட்டையும்} நான் கவனிக்கவில்லை.(14) மகிழ்ச்சியற்ற மனிதர்களையும், களைப்பினால் உரக்கக் கதறி, பெருமூச்சு விட்டு தீனமடைந்த நாகங்களையும், துரங்கங்களையும் {யானைகளையும், குதிரைகளையும்} கொண்டதும், ஓலம் நிறைந்ததுமான அயோத்தியானது, மஹாராஜாவே, ராமனை நாடு கடத்தியதால் புத்திரனை இழந்த கௌசல்யையைப் போல ஆனந்தமற்றிருப்பதாக எனக்குத் தெரிகிறது" {என்றான் சுமந்திரன்}.(15,16)

இராஜா {தசரதன்}, அந்த சூதன் {சுமந்திரன்} சொன்னதைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட பரம தீனமான குரலில் அந்த சூதனிடம் இதைச் சொன்னான்:(17) "பாபப்பிறவியும், பாப நோக்கமும் கொண்ட கைகேயிக்கு இணங்கிய என்னால், ஆலோசனைகள் சொல்வதில் அனுபவமுள்ளவர்களிடமோ, விருத்தர்களிடமோ {பெரியோரிடமோ} முன்கூட்டியே கலந்தாலோசிக்க முடியவில்லை.(18) நண்பர்களிடம் ஆலோசிக்காமலும், அமாத்யர்களிடமோ, நைகமர்களிடமோ {அமைச்சர்களிடமோ, புனித உரைகளுக்கு விளக்கம் சொல்பவர்களிடமோ} ஆலோசிக்கமாலும்,  மோஹத்தினாலும், ஸ்திரீ ஹேதுவினாலும் {பெண்ணுக்காகவும்} அவசரகதியில் நான் இந்தச் செயலைச் செய்துவிட்டேன்.(19) 

சூதரே, இந்த மஹத்தான விசனம் இந்தக் குலத்தின் அழிவுக்காக எதேச்சையாகவோ {தற்செயலாகவோ} நிச்சயமாகவோ தவிர்க்க முடியாத விளைவாக நேர்ந்திருக்கிறது.(20) சூதரே, நான் ஏதோ ஒரு நன்மையையாவது உமக்குச் செய்திருந்தால் என்னை உடனே ராமனிடம் அழைத்துச் செல்வீராக. பிராணன் {உயிர் மூச்சு} என்னை துரிதப்படுத்துகிறது.(21) இப்போதும் எல்லையற்ற அதிகாரம் எனக்கிருந்தால் ராகவனைத் திரும்ப அழைத்து வருவீராக. இராமன் இல்லாமல் என்னால் ஒரு கணமும் ஜீவிக்க முடியாது.(22) ஒருவேளை அந்த மஹாபாஹு {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட ராமன்} வெகுதூரம் சென்றிருந்தால், ரதத்தில் ஏற்றிச் சென்று சீக்கிரமாக என்னை ராமனுக்குக் காட்டுவீராக.(23) உருண்ட பற்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்த லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} எங்கே? அவனும், சீதையும் நன்றாக இருப்பதைக் கண்டால் நான் ஜீவித்திருப்பேன்.(24) சிவந்த கண்களையும், நெடுங்கைகளையும் கொண்டவனும், ஆமுக்த மணிகுண்டலங்களுடன் கூடியவனுமான ராமனைக் காணாவிட்டால் யமலோகத்திற்கே நான் செல்வேன்.(25) இந்த அவஸ்தையை அடைந்திருக்கும் எனக்கு, இக்ஷ்வாகு குலநந்தனனான ராகவனை இங்கே காண முடியாததைவிட என்ன துக்கம் ஏற்பட முடியும்?(26) ஹா ராமா, ஹா ராமானுஜா {ராமனின் தம்பியான லக்ஷ்மணா}, ஹா தபஸ்வினியான வைதேஹி, அநாதையைப் போல துக்கத்துடன் நான் சாகப்போவதை நீங்கள் அறியமாட்டீர்களே" {என்றான் தசரதன்}.(27)

துக்கத்தில் பெரிதும் விரக்தியடைந்தவனும், கடப்பதற்கு மிகக் கடினமான சோக சாகரத்தில் மூழ்கியவனுமான அந்த ராஜா {தசரதன், மீண்டும் பின்வருமாறு} சொன்னான்:(28)  "தேவி, கௌசலையே, நான் மூழ்கியிருக்கும் இந்த சோக சாகரத்தில் ராம சோகமே மஹாபாகமாகும் {பெரும்பகுதியாகும்}, சீதையைப் பிரிவதே மறுகரையாகும். துன்பப் பெருமூச்சுகளே இதன் அலைகளும், பெருஞ்சுழல்களுமாகும். கண்ணீரே இதில் நுரைகளுடன் கலங்கியிருக்கும் ஜலமாகும். கைகளின் வீச்சுகளே துள்ளும் மீன் கூட்டங்களாகும். பேரோலங்களே இதன் பெருங்கோஷமாகும். கலைந்த தலைமுடியே வேலம்பாசிகளாகும். கைகேயியே எனக்குக் கண்ணீரை வரவழைக்கும் வடவாக்னியாவாள் {நீறுபூத்த நெருப்பாவாள்}. குப்ஜையின் {கூனியின்} சொற்கள் பெரும் முதலைகளாகும். அந்தக் கொடூரி {கைகேயி} கேட்ட வரங்களே இதன் கரைகளாகும். இராமனை தொலைதூரம் அனுப்பியதன் மூலம் இது மிக விசாலமடைந்திருக்கிறது {நீண்டிருக்கிறது}. இராமன் இல்லாமல் என்னால் உயிருடன் இந்த சோக சாகரத்தைக் கடக்க முடியாது" {என்றான் தசரதன்}.(29-32)

பெரும்புகழ்படைத்தவனான அந்த ராஜா, "இராகவனையும், லக்ஷ்மணனையும் இப்போதே காண விரும்பினாலும், இங்கே என்னால் அவர்களைக் காண முடியவில்லை. அவர்களை இங்கே கொண்டு வரவும் முடியவில்லை. இது நல்லதல்ல" என்று புலம்பியவாறே, தன் சயனத்தில் மூர்ச்சித்து விழுந்தான்.(33) ராமனின் பொருட்டு புலம்பியதைவிட இரண்டு மடங்கு பரிதாபமாகப் புலம்பிய அவனது வசனங்களைக் கேட்டும், பார்த்திபன்  விழுந்ததைக் கண்டும் {கௌசல்யா} தேவி மீண்டும் பயமடைந்தாள்[3].(34)

[3] முதல் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டதைப் போல, அந்த நான்கு சுலோகங்களையும் சேர்த்தால் இந்த சர்க்கத்தின் சுலோக எண்ணிக்கை 38 ஆகும்.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 059ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Tuesday, 9 August 2022

ஊழ்வினை வரும் துயர் நிலை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 058 (37)

State of suffering caused by fate | Ayodhya-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ராமனும், லக்ஷ்மணனும் சொல்லி அனுப்பிய செய்திகளைச் சொன்ன சுமந்திரன்...

Lakshmana Rama and Sita

அதன்பிறகு, {தசரத} ராஜன் மோஹத்திலிருந்து மீண்டு, மூச்சை மீண்டும் அடைந்ததும், அந்த சூதனை {சுமந்திரனை} அழைத்து ராம விருத்தாந்த காரணத்தை {ராமன் குறித்த செய்திகளைக்} கேட்டான்.(1) அப்போது தன் கைகளைக் கூப்பியபடியே அந்த சூதன், ராமனையே எண்ணி வருந்தி, துக்கத்தாலும், சோகத்தாலும் நிறைந்தவனும், புதிதாய் பிடிபட்ட துவிபத்தை {யானையைப்} போல பெருமூச்சுவிட்டு வேதனையடைந்தவனும், பிணி கொண்ட குஞ்சரத்தை {யானையைப்} போலச் சிந்தித்துக் கொண்டிருந்த விருத்தனுமான மஹாராஜனை {முதியவனுமான தசரதனை} அணுகினான்.(2,3) 

பரம வேதனையில் இருந்த அந்த ராஜா {தசரதன்}, புழுதியால் அங்கம் மறைந்தவனும், கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடியவனும், தன்னை நெருங்கி வரும் தீனனுமான அந்த சூதனிடம் {பின்வருமாறு} பேசினான்:(4) "சூதரே, விருக்ஷத்தின் வேரடியை அண்டி வாழும் அந்த தர்மாத்மா {ராமன்} எங்கே வசித்திருக்கிறான்? சுகங்களை அனுபவித்தவனான அந்த ராமன் என்ன உண்கிறான்?(5) சுமந்திரரே, பூமிபாலனின் ஆத்மஜனாக {மகனாக} உசிதமான சயனங்களுக்குப் பழகியவன், துக்கத்துடன் ஓர் அநாதையைப் போல எவ்வாறு பூமியில் {வெறுந்தரையில்} கிடக்கிறான்?(6) எவன் பயணித்தால் பாதாதி ரத குஞ்சரங்களும் {காலாட்படையும், தேர்களும், யானைகளும்} பின்தொடருமோ அந்த ராமன், ஜனங்களற்ற வனத்தில் தஞ்சம்புகுந்து எப்படி வாழ்கிறான்?(7) 

காட்டு மிருகங்கள் திரிவதும், கிருஷ்ணசர்ப்பங்கள் {கரும்பாம்புகள்} வசிப்பதுமான வனத்தை குமாரர்களும், வைதேஹியும் எவ்வாறு அடைந்தனர்?(8) சுமந்திரரே, ராஜபுத்திரர்கள் இருவரும், பரிதபிப்பவளும், சுகுமாரியுமான சீதையும் ரதத்தில் இருந்து இறங்கி எவ்வாறு பாதநடையாகச் சென்றனர்?(9) சூதரே, மந்தர மலையில் நுழையும் அஸ்வினிகளைப் போல வனத்தின் எல்லைக்குள் பிரவேசிக்கும் என் ஆத்மஜர்களை நீர் கண்டிருப்பதால் சித்தார்த்தரானீர் {பலன்கள் அனைத்தையும் அடைந்தவரானீர்}.(10) சுமந்திரரே, வனத்தை அடைந்ததும் ராமன் சொன்ன சொற்களென்ன? இலக்ஷ்மணன் சொன்னவை என்ன? மைதிலி சொன்னவை என்ன?(11) சூதரே, ராமன் எங்கெங்கே அமர்ந்தான், உறங்கினான், உண்டான் என்பதைச் சொல்வீராக. அதன் மூலம், சாதுக்களின் மத்தியில் வாழ்ந்த யயாதிப் போல[1] நானும் ஜீவித்திருப்பேன்" {என்றான் தசரதன்}.(12)

[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில், மன்னன் யயாதி, சொர்க்கத்தில் இருந்து விழும் நிலை தனக்கு ஏற்பட்ட போது "சாதுக்களின் மத்தியில் நான் விழ வேண்டும்" என்று இந்திரனை வேண்டினான். அதன்படியே அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமான், சிபி ஆகிய நான்கு தவசிகளும் பூமியில் தவம்பயின்றுவந்த இடத்தில் விழுந்து அவர்களுடன் உரையாடினான்" என்றிருக்கிறது. ஆதிபர்வம் பகுதிகள் 87 முதல் 93 வரை சொர்க்கத்தில் இருந்து யயாதி விழுந்த கதை இருக்கிறது. மஹாபாரதத்தின் வன, உத்யோக, அநுசாஸன பர்வங்களிலும் மீண்டும் சொல்லப்படுகிறது. 

நரேந்திரனால் {தசரதனால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், அந்த சூதன் {சுமந்திரன்}, கண்ணீர் அடைக்கும் நடுங்கிய குரலில் அந்த ராஜனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13) "மஹாராஜாவே, தர்மத்தையே பின்பற்றுபவனான ராகவன் {ராமன்}, தன் கைகளைக் கூப்பி, {உமக்குத்} தலை வணங்கி {உம்மிடம் சொல்லுமாறு} என்னிடம் {பின்வருமாறு} சொன்னான்:(14) "சூதரே, ஆத்மாவை அறிந்த மஹாத்மாவும், வணங்கப்படத் தகுந்தவருமான என் தாதையின் பாதங்களை என் சொற்களின் மூலம் தலையால் வணங்குகிறேன்.(15) சூதரே, எங்கள் ஆரோக்கியத்தையும், உரிய வணக்கத்தையும் வேற்றுமையின்றி மொத்த அந்தப்புரத்திற்கும் என் சொற்களில் நீர் சொல்வீராக.(16) 

என் மாதாவிடம் {கௌசல்யையிடம்} என் நலத்தையும், என் வணக்கத்தையும், ஊக்கத்தையும் என் சொற்களில் சொல்வீராக.(17) "தேவி, தர்மத்தில் நிலைத்திருந்து, உரிய காலங்களில் அக்னி யாகங்களைச் செய்து, தேவரைப் போன்ற தேவரின் {தசரதரின்} பாதங்களை பரிபாலிப்பாயாக {ஆராதிப்பாயாக}.(18) அம்ப, மற்ற மாதாக்களிடம் பெருமையையும், மதிப்பையும் விட்டுவிட்டுப் பழகுவாயாக. ஆரியையான கைகேயியை, ராஜருக்கு அனுசரணையாக நடந்து கொள்ளச் செய்வாயாக.(19) குமாரனான {இளையவனான} பரதனிடம், ராஜனிடம் நடந்து கொள்வது போல மதிப்புடன் நடந்து கொள்வாயாக. ராஜர்கள் அர்த்தத்தில் ஜேஷ்டர்கள் {செல்வத்தில் பெரியவர்கள்}. ராஜதர்மத்தை நினைவில் கொள்வாயாக" {என்று என் அன்னை கௌசல்யையிடம் சொல்வீராக}.(20) 

பரதனிடம் குசலம் {அவனது நலத்தை} விசாரித்துவிட்டு, "மாதாக்கள் அனைவரிடமும் நியாயப்படியான நன்னடத்தையைப் பின்பற்றுவாயாக" என்று என் சொற்களில் சொல்வீராக.(21) மேலும், இக்ஷ்வாகு குல நந்தனனான அந்த மஹாபாஹுவிடம் {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பரதனிடம்}, "யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்ட நீ, ராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டிருக்கும் நம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்வாயாக.(22) ராஜர் வயது முதிர்ந்தவர். எனவே நீ அவரைத் தடுக்காதே. அவரது ஆணைகளை ஏற்றுக் கொண்டு ராஜகுமாரனாக {இளவரசனாக} நீ வாழ்வாயாக" {என்று பரதனிடம் சொல்வீராக என [சுமந்திரனான] என்னிடம் சொன்னான் ராமன்}.(23)

மேலும் அவன் {ராமன்}, அதிக கண்ணீர் சிந்தியபடியே என்னிடம் {பின்வருமாறும்} சொன்னான்: "புத்திரனுக்காக ஏங்கும் என் மாதாவை உன் மாதாவாகவே நீ பார்த்துக் கொள்வாயாக" {என்றும் பரதனிடம் சொல்லச் சொன்னான்}.(24) மஹாராஜாவே, தாமரை போன்ற சிவந்த கண்களைக் கொண்டவனும், பெரும் புகழ் படைத்தவனுமான ராமன், இவ்வாறு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதிகமாகக் கண்ணீர் வடித்தான்.(25)

பெரும் கோபமடைந்த லக்ஷ்மணனோ, பெருமூச்சுவிட்டபடியே {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்: "இந்த ராஜபுத்திரர் என்ன அபராதத்துக்காக {ராமர் என்ன குற்றத்திற்காக} நாடு கடத்தப்பட்டார்?(26) ராஜரும், கைகேயியின் லகு சாசனத்தை ஆசரித்து ஓர் அகாரியத்தை காரியமாகச் செய்ததால் {தசரதரும், கைகேயியின் இழிந்த ஆணையைப் பின்பற்றி செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததால்} நாங்கள் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.(27) லோப காரணத்தாலோ {ராஜ்ஜியத்தின் மீது கொண்ட கைகேயியின் பேராசையினாலோ}, வரதான நிமித்தமாகவோ {தரசரதர் கொடுத்த வரத்தினாலோ} ராமர் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், முற்றிலும் தவறாகவே அது செய்யப்பட்டிருக்கிறது.(28) காமத்தினாலோ {அசையினாலோ}, ஈச்வர செயலாலோ இது செய்யப்பட்டிருந்தாலும், ராமரைக் கைவிடுவதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(29) ஆலோசிக்காமலும், புத்தி லாகவத்தாலும் {அவசர புத்தியாலும்}, ராகவரை நாடு கடத்தியது ஜனங்களிடம் சீற்றத்தையே விளைவிக்கும்.(30) நான் மஹாராஜரைப் பிதாவாகக் காணவில்லை {தசரதரை நான் தந்தையாகக் கருதவில்லை}. ராகவரே எனக்கு அண்ணனும், தலைவரும், பந்துவும் {உறவினரும்}, பிதாவும் ஆவார் {என்று சொன்னான் லக்ஷ்மணன்}.(31) 

{பிறகு தசரதரான உமக்குச் சொல்லும் வகையில்}, சர்வலோகஹிதத்தில் விருப்பமுள்ளவரும், சர்வலோகபிரியருமான அவரை {அனைத்துலக நன்மையில் விருப்பமுள்ளவரும், மக்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவருமான ராமரைக்} கைவிட்ட இந்தக் கர்மத்தால் சர்வலோகமும் உம்மை எவ்வாறு அனுசரிக்கும்?(32) பிரஜைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் தார்மிகரான ராமரை நாடுகடத்தியும், இந்த சர்வ லோகத்தையும் எதிர்த்தும் எவ்வாறு நீர் ராஜராக இருப்பீர்?" {என்றான் லக்ஷம்ணன்}.(33)

மஹாராஜாவே,  பரிதாபத்திற்குரிய ஜானகி, பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போல பெருமூச்சுவிட்டபடியே, தன்னிருப்பை மறந்து, அசைவற்றவளாக நின்று கொண்டிருந்தாள்.(34) புகழ்பெற்றவளும், பூர்வத்தில் தீயூழேதும் காணாதவளுமான அந்த ராஜபுத்திரி {சீதை}, துக்கத்துடன் அழுது கொண்டே இருந்ததால் என்னிடம் எதையும் சொல்ல முடியாதவளாக இருந்தாள்[2].(35) 

[2] ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்முதல் வணங்கிய தனித்திண் தேர்வலான்
ஊழ்வினை வரும் துயர் நிலை என்று உன்னுவான்
வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான்

- கம்பராமாயணம் 1877ம் பாடல்

பொருள்: "பணியாளன் செய்ய வேண்டிய செயல் தலைவனின் கட்டளைக்கு மாறுபட்டு நடத்தலன்று" என்று கருதி {இராமனின்} பாதங்களில் வணங்கி எழுந்தவனும், வலிய தேரைச் செலுத்த வல்லவனுமான சுமந்திரன், "ஊழ்வினையால் வருகின்ற துன்பத்தின் நிலை இது" என்று கருதி உலக இன்ப வாழ்வுக்குக் காரணமானவளை {சீதையை} வணங்கி நோக்கினான்.

நான் புறப்படுவதைக் கண்டதும், வாடிய முகத்துடன் தன் பர்த்தாவை நிமிர்ந்து பார்த்து, திடீரெனக் கண்ணீர் வடித்தாள்.(36) இலக்ஷ்மணனுடைய கைகளின் பாதுகாப்பில் இருந்த ராமன் அவ்வாறே கண்ணீர் நிறைந்த முகத்துடன் கைகளைக் கூப்பினான். அதேபோல தபஸ்வினியான சீதை, ராஜரதத்தையும், என்னையும் கண்டு அழுதுகொண்டே இருந்தாள்" {என்றான் சுமந்திரன்}.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 058ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

Wednesday, 3 August 2022

இரதம் வந்து உற்றது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 057 (34)

The chariot returned | Ayodhya-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குகனிடம் விடைபெற்று, அயோத்திக்குத் திரும்பி தசரதனிடம் செய்தியைச் சொன்ன சுமந்திரன்; தசரதனும், கௌசல்யையும் மயங்கி விழுந்தது...

Kaushalya Dasharatha Sumitra Sumantra

இராமன் தென்கரையில் இறங்கியபோது, குஹன் சுமந்திரனிடம் நெடுநேரம் பேசிவிட்டு, பெருந்துக்கத்துடன் தன் கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(1) {இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர்} பரத்வாஜரைச் சந்தித்தது, பிரயாகையில் அவருடன் தங்கியது, கிரிக்கு {சித்திரகூட மலைக்குச்} சென்றது ஆகியவற்றை அங்கே இருந்தவர்கள் குறிப்பிட்டனர்[1].(2) 

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவர்களுடைய பரத்வாஜ முனிவரின் தரிசனமும், பிரயாகையில் கூடி வசித்ததும், சித்திரகூட மலைக்கு எழுந்தருளியதும் அங்கு வாஸம் செய்பவர்களால் அறிந்து கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ஷ்ருங்கிபேரபுரத்திலுள்ள சாரர்கள், ராமதிகள் பரத்வாஜமுனிவரிடம் போவது, ப்ரயாகக்ஷேத்ரத்தில் அம்முனிவருடன் கூடியிருப்பது முதலாக சித்ரகூடபர்வதத்திற்குப் போகும் வரையிலும் நடந்த வ்ருத்தாந்தங்களெல்லாவற்றையும் ஸுமந்திரனுக்குத் தெரிவித்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "காட்டிலடிக்கடி ஸஞ்சரிக்கின்றவர்கள் முகமாய்ப் பெருமாள் பரத்துவாஜாச்ரமத்துக் கெழுந்தருளியதையும், அங்கிருந்து பிரயாகக்ஷேத்திரஞ் சேர்ந்ததையும், அங்கிருந்து திருச்சித்திர கூடம் வரையி லெழுந்தருளி யதையுங் கேட்டுணர்ந்து, அல்லும் பகலும் ஸ்ரீராமச்சந்திரரையே நினைத்துக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.

அதன் பிறகு {செல்வதற்கு} அனுமதிக்கப்பட்ட சுமந்திரன், உத்தம ஹயங்களை {சிறந்த குதிரைகளைத் தேரில்} பூட்டி, மனவேதனையுடன் அயோத்தி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(3) அவன் {சுமந்திரன்}, சுகந்தமான வனங்களையும் {நறுமணம் கமழும் காடுகளையும்}, சரிதங்களையும் {ஆறுகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்}, கிராமங்களையும், நகரங்களையும்  கண்டு சீக்கிரமாக {அவற்றைக்} கடந்து சென்றான்.(4) அதன் பிறகு மூன்றாம் நாள் சாயுங்காலத்தில் {மாலை நேரத்தில்} அயோத்தியை அடைந்த அந்த சாரதி {சுமந்திரன்}, அஃது ஆனந்தமற்றிருப்பதைக் கண்டான்.(5)

அது சூனியமாகவும், நிசப்தமாகவும் இருப்பதைக் கண்ட சுமந்திரன், பரம துக்கத்தில் மூழ்கி, பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(6) "கஜங்களுடனும், அச்வங்களுடனும், ஜனங்களுடனும், ஜனாதிபனுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும், மக்களுடனும், மக்கள் தலைவனுடனும்} இருந்த நகரம், ராமனை நினைத்து உண்டான துக்கத்தால் சோகாக்னியில் எரிந்து விட்டதோ?" {என்று நினைத்தான்}.(7)

இவ்வாறான சிந்தனையில் தொலைந்த அந்த சூதன், வேகமாகச் செல்லும் வாஜிகளில் {குதிரைகளில்} நகரதுவாரத்தை {நகரவாயிலை} அடைந்து, துரிதமாக அதற்குள் பிரவேசித்தான்.(8) சூதனான அந்த சுமந்திரன், அதன்பிறகு, "இராமன் எங்கே?" என்று கேட்டவாறே தன்னை நோக்கி ஓடிவந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரர்களை {மனிதர்களை} நெருங்கினான்.(9) அவன் அவர்களிடம், "மஹாத்மாவும், தார்மீகனுமான ராகவனால் {ராமனால்} கங்கையில் அனுமதி கொடுக்கப்பட்டபிறகு, அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்தேன்" என்று மறுமொழி கூறினான்.(10)

அவர்கள் {ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கையைக்} கடந்து விட்டனர் என்பதை அறிந்த அந்த ஜனங்களின் முகங்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர்கள், பெருமூச்சுவிட்டபடியே, "அஹோ"  என்றும், "சீ, சீ" என்றும், "ஹா, ராமா" என்றும் சொல்லி உரக்க அழுதனர்.(11) 

அவன் {சுமந்திரன்}, கூட்டங்கூட்டமாக நின்றிருந்த அவர்களின் {இவ்வாறான} சொற்களையும் கேட்டான், "இங்கே ராகவனைக் காணாத நாம் நிச்சயம் கெட்டொழிந்தோம்.(12) தானம், யாகம், விவாஹம், மஹத்தான சமாஜ {பெருங்கூட்டமாகக் கூடும்} நிகழ்ச்சிகளிலும் இனி ஒருபோதும் தார்மீகனான ராமனை நாம் காணமாட்டோம்.(13) சுகத்தை அளிக்கும் வகையில், இந்த ஜனங்களுக்குப் பிரியமானவற்றைத் தகுந்த முறையில் செய்து, பிதாவை {ஒரு தந்தையைப்} போல இந்நகரத்தை ராமன் பரிபாலித்தான்" {என்று சொல்லி அந்த மக்கள் அழுதனர்}.(14)

கடைகளின் வழியாகச் செல்லும்போது, ராமனை நினைத்து சோகமாக வருந்திக் கொண்டிருக்கும் ஸ்திரீகளின் புலம்பல்களை சாளரங்களின் {ஜன்னல்களின்} வழியாக இவ்வாறே அவன் {சுமந்திரன்} கேட்டுச் சென்றான்.(15) அந்த சுமந்திரன், தன் முகத்தை மறைத்துக் கொண்டு {முக்காடிட்டுக் கொண்டு} ராஜமார்க்கத்தின் மத்தியில் தசரத ராஜன் இருந்த கிருஹத்திற்குச் சென்றான்.(16) அவன் ரதத்தில் இருந்து இறங்கி, ராஜவேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} சீக்கிரமாகப் பிரவேசித்து, மஹாஜனகுலங்களால் {பெரும் மக்கள் கூட்டத்தால்} நிறைந்திருந்த ஏழு உள்கட்டுகளையும் கடந்து சென்றான்.(17) 

அவன் {சுமந்திரன்} வருவதைக் கண்டு, மாளிகைகளிலும், விமானங்களிலும், பிராசாதங்களிலும் {அரண்மனைகளிலும்} இருந்த நாரியைகள் {பெண்கள்}, ராமனைக் காணாமல் சோர்ந்து, "ஹா", "ஹா" என்று அலறினர்.(18) கண்ணீரால் நிறைந்த பிரகாசமான கண்களுடன் கூடிய ஸ்திரீகள் வேதனையை வெளிக்காட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(19) 

ராமனை நினைத்து சோகத்தில் தவித்த தசரதனின் ஸ்திரீகளுக்குரிய அந்தந்த பிராசாதங்களில் {அரண்மனைகளில்} இருந்து வெளிப்படும் மெல்லிய கிசுகிசுப்புகளையும் அவன் {சுமந்திரன்} கேட்டான்.(20) "இராமனுடன் சென்று, இங்கே அவனில்லாமல் திரும்பியிருக்கும் இந்த சூதன் {சுமந்திரன்}, அழுது கொண்டிருக்கும் கௌசல்யையிடம் என்ன சொல்லப் போகிறான்?(21) புத்திரன் வெளியே சென்றுவிட்ட பிறகும் தொடர்ந்து ஜீவித்திருக்கும் கௌசல்யையின் இந்த துர்ஜீவிதம் நிச்சயம் எளிதானதல்ல {வாழ்வது கடினம்}[2] என்றே நான் நினைக்கிறேன்" {என்று மக்கள் பேசுவதை சுமந்திரன் கேட்டான்}.(22) ராஜனின் ஸ்திரீகள் சொன்ன சத்திய ரூபமான அந்த வாக்கியங்களைக் கேட்டவாறு, சோகத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றிய அந்த கிருஹத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(23)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசல்யை பலவந்தமாகப் பிழைத்திருக்கிறாளென்பது மிகவும் கஷ்டமாயிருப்பது. இப்படி துக்கப் பிழைப்பாகப் பிழைத்திருப்பது மற்றொருவருக்கும் தரமன்றென்று நிஜமாக எனக்குத் தோன்றுகின்றது என்பது மஹேஸ்வரதீர்த்தர் உரை" என்றிருக்கிறது.

எட்டாவது கட்டுக்குள் நுழைந்த அவன் {சுமந்திரன்}, அந்த வெண்கிருஹத்திற்குள் தீனனாகவும், புத்திரசோகத்தில் வருந்தி முகம் வாடியவனாகவும் இருக்கும் {தசரத} ராஜனைக் கண்டான்.(24) சுமந்திரன், அங்கே அமர்ந்திருந்த அந்த நரேந்திரனை நெருங்கி வணங்கி, ராமன் சொல்லி அனுப்பியவற்றை உள்ளபடியே சொன்னான்.(25) அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ராஜன், ராமன் இல்லாத துயரத்தில் மூழ்கி மனம் குழம்பியவனாக பூமியில் மூர்ச்சித்து விழுந்தான்.(26) அந்தப் பிருத்வீபதி மூர்ச்சித்ததும் அந்தப்புரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த நிருபதி தரையில் விழும்போதே தங்கள் கைகளை உயர்த்திக் கதறி அழுதனர்.(27)

சுமித்ரை சகிதம் வந்த கௌசல்யை, விழுந்து கிடக்கும் தன் பதியைத் தூக்கிவிட்டு, இந்த சொற்களையும் சொன்னாள்:(28) "மஹாபாக்யவானே, கடினமான காரியங்களைச் செய்து வனவாசமிருப்பவனிடமிருந்து {ராமனிடமிருந்து} வந்த தூதரிடம் ஏன் ஏதும் பேசாமலிருக்கிறீர்?[3](29) இராகவரே, நயமற்றதைச் செய்துவிட்டு இப்போது வெட்கப்படுகிறீர். எழுவீராக. அஃது உமக்கு நற்செயலாகவே ஆகட்டும். சோகத்தால் சஹாயம் கிட்டாது {துன்புறுவதால் எந்தப் பயனும் இல்லை}.(30) தேவா, யாருக்குப் பயந்து ராமனைக் குறித்து இந்த சாரதியிடம் நீர் விசாரிக்காமலிருக்கிறீரோ, அந்தக் கைகேயி இங்கே இல்லை. அச்சமின்றி பேசுவீராக" {என்றாள் கௌசல்யை}.(31)

[3] இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரமமாதவனைக் கண்டான் வீரன் வந்தனனோ என்றான்.

- கம்பராமாயணம் 1896ம் பாடல்

பொருள்:  {காடு சென்ற} தேர் வந்து சேர்ந்தது என்று அங்குள்ள அனைவரும் சொன்னதும், "வரதன் {ராமன்} வந்து விட்டான்" என்று கருதிய {தசரத} மன்னனும் மயக்கம் தீர்ந்தான். குற்றமற்ற தாமரை மலர் போன்ற கண்கள் பொருக்கென விழித்து நோக்கி, விரதம் நோற்ற சிறந்தவனிடம் "வீரன் {ராமன்} வந்தனனோ?" என்று கேட்டான்.

சோகத்தாலும், ஏக்கத்தாலும் கண்ணீர் பெருக மஹாராஜனிடம் இவ்வாறு பேசிய அந்தக் கௌசல்யை வேகமாகத் தரையில் விழுந்தாள்.(32) இவ்வாறு அழுது கொண்டே புவியில் விழும் கௌசலையையும், அவளது பதியையும் கண்டு சர்வ ஸ்திரீகளும் உரக்கக் கதறி அழுதனர்.(33) அந்தப்புரத்தில் எழும் ஒலியைக் கேட்டு முதியவர்களும், இளைஞர்களும், ஸ்திரீகளும் என மனிதர்கள் அனைவரும் சுற்றிலும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அந்த நகரம் மீண்டும் கலக்கமடைந்தது.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Tuesday, 31 May 2022

கௌசல்யை புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 043 (21)

The lament of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-043 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யையின் அழுகையும், புலம்பலும்...

Kaushalya and Dasharatha

பிறகு, புத்ரசோகத்தால் பீடிக்கப்பட்ட கௌசல்யை, சோகத்தில் தளர்ந்து கிடக்கும் பார்த்திபனை {மன்னன் தசரதனைக்} கண்டு, அந்த மஹீபதியிடம் {பூமியின் தலைவனான தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) “புருஷசார்தூலனான ராகவனிடம் {மனிதர்களிற்புலியான ராமனிடம்} விஷத்தை கக்கிய அரவம் போன்ற கைகேயி, தோலுரித்த பன்னகியை {பெண் பாம்பைப்} போல {சுதந்திரமாகத்} திரிவாள்.(2) ராமனை விரட்டியதில் ஆசை நிறைவேறிய அந்த நற்பேறு பெற்றவள் {கைகேயி}, வீட்டில் துஷ்ட அரவத்தைப் போல என்னைப் பீடித்து அச்சுறுத்தப் போகிறாள்.(3) என் ஆத்மஜனை தாசனாக {என் மகன் ராமனை அடிமையாக} தத்தம் செய்திருந்தாலும் சிறந்தது. அப்போது என் மகன் நகரத்தில் திரிந்து பிச்சையெடுத்தாவது, {கைகேயி} விரும்பிய காரியத்தைச் செய்தவாறு கிருஹத்தில் {வீட்டில்} வசித்திருப்பான்.(4) 

அக்னியை வளர்க்கும் ஒருவன் பர்வ காலத்தில் பாகத்தை {அமாவாசையிலோ, பௌர்ணமியிலோ தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்ப்பாகத்தை}  ராக்ஷசர்களுக்குக் கொடுப்பது போலவே, கைகேயியும் தன் விருப்பப்படி ராமனை ஸ்தானத்தில் இருந்து இறக்கி விட்டாள்.(5) மஹாபாஹுவான அந்த வீரன் {பெருந்தோள்களைக் கொண்ட வீரனான ராமன்}, தன் பாரியையுடனும் {மனைவியான சீதையுடனும்}, லக்ஷ்மணனுடனும், தனுதரனாக கஜராஜ கதியில் {கையில் வில்லுடனும் யானைகளின் மன்னனுடைய நடையுடனும்} நிச்சயம் வனத்தில் நுழைந்திருப்பான்.(6) கைகேயியின் விருப்பப்படி வனவாசம் செய்ய உம்மால் அனுப்பப்பட்டவர்களும், இதுவரை துக்கத்தைக் காணாதவர்களுமான அவர்களுக்கு வனத்தில் என்ன அவஸ்தை ஏற்படுமோ?(7) பாலகாலத்தில், ரத்தினங்களற்றவர்களாக நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞர்கள், பரிதாபத்திற்குரியவர்களாகப் பழங்களையும், கிழங்குகளையும் உண்டு எவ்வாறு பிழைப்பார்கள்?(8) 

இந்த சோகத்திற்கான முடிவைக் கொண்டு வரும் அந்தக் காலமும் எப்போது எனக்கு வாய்க்கும்? சகோதரனுடனும், பாரியையுடனும் கூடிய ராகவனை இனி எப்போது நான் காண்பேன்?(9) அந்த வீரர்கள் இருவரும் திரும்புவதைக் கேட்டுப் பரவசமடையும் மக்களாலும், உயர்ந்த துவஜங்களாலும் {கொடிகளாலும்}, மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டதாக இந்தப் புகழ்வாய்ந்த அயோத்தி எப்போது மாறப்போகிறது?(10) அரண்யத்தில் இருந்து திரும்பி வரும் அந்த நரவியாகரர்களை {மனிதர்களில் புலிகளான ராமனையும், லக்ஷ்மணனையும்} கண்டு பர்வகாலத்தில் {பௌர்ணமியில்} பொங்கும் சமுத்திரத்தைப் போல எப்போது இந்த நகரம் மகிழ்ச்சியடையப் போகிறது?(11) மஹாபாஹுவான அந்த வீரன் {ராமன்}, ரதத்தில் சீதையை முன்னிட்டுக் கொண்டு, கோவைப் பின்தொடரும் ரிஷபத்தை {பசுவைப் பின்தொடரும் காளையைப்} போல எப்போது அயோத்தியாபுரிக்குள் பிரவேசிப்பான்?(12)

ராஜமார்க்கத்தில் நகருக்குள் நுழையும் அரிந்தமர்களான என் ஆத்மஜர்களின் {பகைவரை வெல்பவர்களான என் மகன்களின்} மீது எப்போது ஆயிரக்கணக்கான பிராணிகளும் பொரிகளை பொழியும்? {எப்போது ஆயிரக்கணக்கான மக்களும் அக்ஷதைகளைப் பொழிவார்கள்?}(13) நல்ல குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், சிறந்த விற்களையும், வாள்களையும் தரித்தவர்களுமான அவர்கள், சிகரங்களை மகுடமாகக் கொண்ட பர்வதங்களைப் போல அயோத்திக்குள் பிரவேசிப்பதை நான் எப்போது காண்பேன்?(14) துவிஜர்களும் {இரு பிறப்பாளர்களும்}, கன்னிகையரும் மலர்களையும், பழங்களையும் கொடுக்க, எப்போது அவர்கள் இந்த நகரை மகிழ்ச்சியுடன் பிரதக்ஷிணம் செய்வார்கள் {வலம் வருவார்கள்}?[1].(15) புத்தியில் கனிந்தவனும், வயதில் அமரனைப் போல் ஒளிர்பவனுமான அந்த தர்மஜ்ஞன் {தர்மத்தை அறிந்த ராமன், உலகிற்கு} ஊட்டத்தை அளிக்கும் திரிவர்ஷத்தை {மும்மாரியைப்} போல எப்போது என்னிடம் திரும்பி வருவான்?(16)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "பிராமணக்ஷத்ரிய வைசிய ஜாதிகளின் ஸுமங்கலிகள் மனமகிழ்ச்சி கொண்டவர்களாய் நகரில் நன்மலர்களையும், கனிகளையும் அர்ப்பணஞ்செய்கின்றவர்களாய் மங்கலஹாரத்தியை எப்பொழுது செய்வார்களோ" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராமன் வந்தானென்னும் மங்கல வார்த்தையைக் கேட்டு ஸந்தோஷமடைந்த ப்ராஹ்மண கன்னிகைகள் புஷ்பங்களையும் பழங்களையும் கொடுத்துக்கொண்டு எப்பொழுது நகரத்தை ப்ரதக்ஷிணஞ் செய்யப் போகிறார்களோ?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நல்வேதியர்களும், கன்னியர்களும், நன்மலர்களையும், கனிகளையும் மகிழ்ந்து, உபகாரமாகக் கொடுக்க என்னருஞ்செல்வமைந்தர்கள் அவைகளையுவகை கொண்டு அங்கீகரித்து ஆனந்தமுற்று, இத்திருவயோத்தியை எக்காலம் வலஞ்செய்வர்கொல்லோ?" என்றிருக்கிறது.

வீரரே {தசரதரே}, பூர்வத்தில் {முற்பிறவிகளில்} குழந்தைகள் பருக ஆவலுடன் இருந்த மாதாக்களின் ஸ்தனங்களை நான் நிச்சயம் அறுத்திருப்பேன்.(17) புருஷவியாகரரே {மனிதர்களிற்புலியே},  கன்றை விரும்பும் பசுவைப் போன்ற நான், சிங்கத்தால் இளங்கன்றை இழந்த பசுவைப் போல கைகேயியால் பலவந்தமாகப் பிள்ளையற்றவளாக்கப்பட்டேன்.(18) குணங்கள் அனைத்தாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சர்வ சாஸ்திரங்களையும் நன்கறிந்தவனும், ஏக புத்திரனுமான {ஒரே மகனுமான} என் புத்திரனில்லாமல் நான் ஜீவிக்க விரும்பவில்லை.(19) மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, மஹாபலம் படைத்தவனுமான என் பிரிய புத்திரனைக் காணாமல் இங்கே ஜீவிப்பதற்கான சாமர்த்தியம் கற்பனையிலும் என்னிடம் கிஞ்சித்தும் இல்லை.(20) பெரும் பிரபை கொண்ட பகவான் திவாகரன் {சூரியன்}, கோடை காலத்தில் தன் கதிர்களால் இந்த மஹீயை {பூமியை} எரிப்பதைப் போல, என் மகனால் உண்டான இந்த சோக நெருப்பு என்னைத் துன்புறுத்துகிறது” {என்றாள் கௌசல்யை}.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 043ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Friday, 27 May 2022

தசரதன் புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 042 (34)

The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-042 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: துக்கத்தால் பீடிக்கப்பட்டு உணர்விழுந்து தரையில் விழுந்த தசரதன். கைகேயியைப் பழித்துவிட்டு கௌசல்யையின் மாளிகையை அடைந்தது...

Kaikeyi Sumitra Dasharatha and Kaushalya

அவன் {ராமன்} சென்ற புழுதி தென்பட்ட வரை, அந்த இக்ஷ்வாகுக்களில் சிறந்தவன் {தசரதன்} தன் கண்களை விலக்காமல் {பார்த்துக் கொண்டே} இருந்தான்.(1) அந்த ராஜா {தசரதன்},  தார்மிகமிக்கவனான தன் பிரிய புத்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த வரை, அவன் தன் புத்திரனைக் காணும் வகையில் தரணியில் புழுதி  எழுந்து கொண்டே இருந்தது.(2) இராமன் சென்ற புழுதி தென்படாதபோது, அந்த பூமிபதி {தசரதன்} விசனத்தால் பீடிக்கப்பட்டவனாக தரணியில் விழுந்தான்.(3) அங்கனையான {அவனது மனைவியான} கௌசல்யை, அவனது வலப்பக்கம் சென்றாள், பரதனின் அன்புக்குரியவளான கைகேயி அவனது இடப்பக்கம் சென்றாள் {இருவரும் சேர்ந்து விழுந்து கிடந்த தசரதனைக் தூக்கினர்}.(4)

நேர்மை, தர்மம், விநயம் {அடக்கம்} ஆகியவற்றைக் கொண்ட ராஜா {தசரதன்}, அந்தக் கைகேயியைக் கண்டதும் இந்திரியங்கள் கலங்கியவனாக {இதைச்} சொன்னான்:(5) "கைகேயி, துஷ்டசாரிணியே {தீய வழியில் நடப்பவளே}, என் அங்கங்களைத் தொடாதே. உன்னைக் காண நான் விரும்பவில்லை. நீ என் பாரியையுமில்லை {மனைவியுமில்லை}, பந்துவுமில்லை {உறவுக்காரியுமில்லை}.(6) உன்னை அனுசரிப்பவர்களுக்கு {சார்ந்தவர்களுக்கு} என்னிடம் ஏதுமில்லை. எனக்கும் அவர்களால் ஏதுமில்லை. பேராசையால் தர்மத்தைக் கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன்.(7) உன் கைகளைப் பற்றி அக்னியை வலம் வந்ததன் மூலம் உண்டான அனைத்தையும் இம்மையிலும், மறுமையிலும் நான் கைவிடுகிறேன்.(8) ஒருவேளை பரதன் அழிவில்லாத இந்த ராஜ்ஜியத்தை அடைந்ததும் மகிழ்ச்சியடைந்தால், பித்ரார்த்தமாக {ஈமச்சடங்குகளின் மூலம்} அவனால் தத்தம் செய்யப்படும் எதுவும் என்னை அடையாமல் போகட்டும்" {என்றான் தசரதன்}.(9)

அப்போது சோகத்தில் மூழ்கியிருந்த கௌசல்யாதேவி, புழுதியில் மறைந்திருந்த அந்த நராதிபனை {மனிதர்களின் தலைவனான தசரதனைத்} தூக்கிவிட்டுத் திரும்பினாள்.(10) அந்த தர்மாத்மா, தபஸ்வியின் உடையில் இருந்த தன் புத்திரனை நினைத்து, தெரிந்தே பிராமண ஹதம் செய்தவனை {பிராமணனைக் கொன்றவனைப்} போன்றும், கையால் அக்னியைத் தீண்டியவனைப் போன்றும் வருந்தினான்.(11) இரதத்தின் தடங்களை நோக்கி மீண்டும் மீண்டும் திரும்பிய மன்னனின் முகம், ராகுவால் விழுங்கப்பட்ட அம்சுமானை {சூரியனைப்} போல துக்கத்தால் ஒளியிழந்தது.(12)

தனக்குப் பிரியமான புத்திரனை நினைத்தவன், துக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கதறி அழுதான். அதன்பிறகு தன் புத்திரன் நகர எல்லையை எட்டினான் என்பதை உணர்ந்ததும் {இவ்வாறு} சொன்னான்:(13) "என் மகனைச் சுமந்து சென்ற முக்கிய குதிரைகளின் காலடித்தடங்கள் பாதையில் தென்படுகின்றனவேயன்றி அந்த மஹாத்மா தென்படவில்லையே.(14) சந்தனம் பூசிக் கொண்டு, மிகச் சிறந்த ஸ்திரீகளால் சாமரம் வீசப்பட்டு, சுகமாக மெத்தைகளில் உறங்கிய என் உத்தம சுதன் {மகன்} ராமன், இனிமேல் எங்கோவொரு விருக்ஷத்தின் {மரத்தின்} வேரடியில் கிடப்பான், அல்லது மரக்கட்டையிலோ, கல்லிலோ சயனிப்பான் {படுப்பான்}.(15,16) அந்தப் பரிதாபத்திற்குரியவன், மலையருவிகளின் அருகில் {எழும்} கரேணுக்களின் ரிஷபத்தைப் போல {பெண் யானைகளின் தலைவனான ஆண் யானையைப் போலப்} புழுதிபடிந்தவனாக பெருமூச்சுவிட்டபடியே மேதினியில் விழித்தெழுவான்.(17) வனத்தில் திரியும் புருஷர்கள், தீர்க்கபாஹுவும் {நீண்ட கைகளைக் கொண்டவனும்}, லோகநாதனுமான ராமன் {அவ்வாறு} விழித்தெழுந்து, அநாதையைப் போலத் திரிவதை இனி காண்பார்கள்.(18) சுகத்திற்கே பழக்கப்பட்டவளான ஜனகனின் அன்புக்குரிய மகள் {சீதை}, இனி, கல்லும், முள்ளும் நிறைந்த வனத்தில் களைப்புடன் திரிவாள்.(19) வனம் குறித்து அறிமுகமில்லாத அவள், இனி மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் காட்டுவிலங்குகளின் கம்பீர ஒலிகளைக் கேட்டு பயப்படப் போகிறாள்.(20) கைகேயி, உன் விருப்பம் நிறைவேறட்டும். இந்த ராஜ்ஜியத்தில் விதவையாக வசிப்பாயாக. அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்} இல்லாமல் ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை" {என்றான் தசரதன்}.(21)

இவ்வாறு புலம்பிய ராஜா, ஜனக்கூட்டத்தால் சூழப்பட்டவனாக, உபஸ்நானம் செய்தவனின் {இறந்தவர்களுக்காக இறுதி நீராடல் செய்தவனின்} வீட்டைப் போலிருந்த தன் உத்தம நகருக்குள் பிரவேசித்தான்.(22) சூன்யமான நாற்சந்திகள், மாளிகைகள், மூடப்பட்ட கடைகள், கோவில்கள், துக்கத்தால் பீடிக்கப்பட்டு பலமற்றவர்களாக இருந்த மக்கள், நெரிசலற்ற மஹாபாதைகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த நகரத்தையும் கண்ட அந்த ராஜா, ராமனையே நினைத்து புலம்பியபடி மேகத்திற்குள் சூரியனைப் போல அதற்குள் {அந்த நகரத்திற்குள்} பிரவேசித்தான்.(23) இராமன், வைதேஹி, லக்ஷ்மணன் ஆகியோரில்லாத அந்த மாளிகை, சுவர்ணனால் உரகங்களற்றதாக {கருடனால் பாம்புகளற்றதாகச்} செய்யப்பட்ட, கலங்கலற்ற பெருந்தடாகத்தைப் போலத் தெரிந்தது.(24)

புலம்பிக் கொண்டிருந்த அந்த வசுதாதிபன் {பூமியின் தலைவன் தசரதன்}, மிருதுவான, தீனமான, ஸ்வரமற்ற, மந்தமான, அர்த்தமற்ற சொற்களை கடகட சப்தத்துடன் {பின்வருமாறு} சொன்னான்:(25) "என்னை சீக்கிரமாக ராமனின் மாதாவான கௌசல்யையின் கிருஹத்திற்கு அழைத்துச் செல்வீராக. உண்மையில் வேறெங்கும் என் ஹிருதயம் ஆசுவாசத்தை {என் மனம் தேறுதலை} அடையாது" {என்றான்}.(26)

வாயிற்காவலர்கள், ராஜா சொன்னதுபோலவே கௌசல்யையின் கிருஹத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே அவன் {மஞ்சத்தில்} மென்மையாகக் கிடத்தப்பட்டான்.(27) கௌசல்யையின் வீட்டிற்குள் பிரவேசித்தும், சயனத்தில் கிடத்தப்பட்டும்கூட அவனது மனக்கலக்கம் அடங்கவில்லை.(28) அந்த ராஜா, புத்திரர்கள் இருவர் இல்லாமலும், மருமகள் சென்றும் சந்திரனில்லாத அம்பரத்தை {வானத்தைப்} போலிருக்கும் அந்த பவனத்தை கண்டான்.(29) வீரியமிக்க அந்த மஹாராஜா, அதைக் கண்டு, தன் புஜத்தை உயர்த்தி உச்ச ஸ்வரத்துடன் {பின்வருமாறு} அழுதான்: "ஆ, ராகவா, எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்.(30) ஐயோ, அந்தக் காலம் வரை {பதினான்கு ஆண்டுகள்} ஜீவித்திருந்து, ராமன் திரும்பி வருவதைக் கண்டு, அவனைத் தழுவி சுகிப்பவர்களே நரோத்தமர்கள் {மகிழ்பவர்களே உத்தம மனிதர்கள்}" {என்றான் தசரதன்}.(31)

அதன்பிறகு, அவனுக்கு காலராத்திரியைப் போன்ற அந்த  ராத்திரி வந்தபோது, அர்த்தராத்திரியில் {நடுராத்திரியில்} தசரதன் கௌசல்யையிடம் இதைச் சொன்னான்:(32) "கௌசல்யா, ராமனுடன் சென்ற என் பார்வை திரும்பவில்லை. இப்போதும் என்னால் உன்னை சரியாகப்பார்க்க முடியவில்லை. உன் கைகளால் என்னைத் தீண்டுவாயாக" {என்றான்}.(33)

சயனத்தில் இருந்த அந்த நரேந்திரன் {மனிதர்களின் தலைவன் தசரதன்}, ராமனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த அந்த தேவி {கௌசல்யை}, அதிக மன உளைச்சலுடன் அவனருகே அமர்ந்து, பெருமூச்சுவிட்டபடியே துக்கத்துடன் புலம்பத் தொடங்கினாள்.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 042ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Sunday, 22 May 2022

வனத்திற்குப் புறப்பட்ட ரதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 040 (51)

The chariot out to forest | Ayodhya-Kanda-Sarga-040 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் வனத்திற்குப் புறப்பட்டது; குடிமக்கள், அரசிகள், அரசன் ஆகியோர் அழுது புலம்பியது...

Rama Sita Lakshmana set to forest

அப்போது, தீனர்களான ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் {தசரத} ராஜனின் பாதங்களைத் தொட்டு வணங்கி, கைகளைக் கூப்பியவாறே அவனை பிரதக்ஷிணம் செய்தார்கள் {வலம் வந்தார்கள்}.(1) தசரதனிடம் விடைபெற்றுக் கொண்டவனும், தர்மத்தை அறிந்தவனும், சோகத்தில் கலங்கியிருந்தவனுமான ராகவன், சீதை சகிதனாக தன் அன்னையை {கௌசலையை} வணங்கினான்.(2) தம்பியான லக்ஷ்மணன் அவனை உடனே பின்தொடர்ந்து சென்று கௌசலையை வணங்கிவிட்டு, தன் மாதாவான சுமித்ரையின் பாதத்தைப் பற்றினான்.(3) 

அவனது ஹிதத்தை விரும்பிய அவனது மாதா {சுமித்திரை}, மஹாபாஹுவும், தன்னை வணங்குபவனுமான லக்ஷ்மணனின் உச்சி முகர்ந்து, அழுது கொண்டே அந்த சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} சொன்னாள்:(4) "அன்புக்குரியவனிடம் {ராமனிடம்} பெரும்பற்று கொண்ட உன்னை வனவாசம் செய்ய அனுமதிக்கிறேன்[1]. புத்திரா, இவ்வாறு செல்லும் உன் அண்ணன் ராமனை ஒருபோதும் புறக்கணிக்காதே.(5) அனகா {பாவமற்றவனே}, வறுமையிலும், செழிப்பிலும் அவனே உனக்கு கதியாக இருக்கிறான். ஜேஷ்டனுக்கு {மூத்தவனுக்கு} வசப்பட்டு நடப்பதே இந்த உலகத்தில் நல்லோரின் தர்மமாக இருக்கிறது.(6) தானம் செய்வது, யஜ்ஞ தீக்ஷை எடுப்பது {வேள்வி தொடங்கும் சடங்கைச் செய்வது}, போர்களில் உடலைத் தியாகம் செய்வது ஆகியவை இந்தக் குலத்திற்கு உசிதமான சநாதன நடைமுறைகளாகும்" {என்றாள் சுமித்திரை}.(7)

[1] வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப் பதிப்பில், "அன்புக்குரியவர்களிடம் பெரும்பற்றுக் கொண்டிருந்தாலும் நீ வனத்தில் வசிக்கப் பிறந்தவன். புத்திரா, வழியில் செல்லும் உன் அண்ணன் ராமனிடம் ஒருபோதும் கவனம் இல்லாமல் இருந்துவிடாதே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "உன் நலம் விரும்பியிடம் நீ அர்ப்பணிப்பு கொண்டவன் என்பதால் நான் உன்னை வனத்தில் வசிக்க அனுமதிக்கிறேன். மகனே, வனத்திற்குப் புறப்படும் உன் அண்ணன் ராமனைக் கவனித்துக் கொள்வதில் தவறிவிடாதே" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "குழந்தாய் நீ வனவாஸம் செய்வதின் பொருட்டே பிறந்தவன். சகல பிரஜைகளுக்கும் அன்பனும், தமையனும், வெளிப்பிரதேசங்களிலிருக்கின்றவனுமான ஸ்ரீராமனிடத்தில், அபூர்வ பக்தியுடையவனாய் அபராதமென்பதற்கே இடங்கொடாதே" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அடா என்னருமை நற்புதல்வா, உலகமனைத்துக்கு முறவாகிய ஸ்ரீராமபிரானிடத்தில் பத்திதலைக் கொண்டு கணப்பொழுதும் பிரியாமல் அவர்க்குக் குற்றேவல் செய்வதன் பொருட்டே நீ பிறந்திருக்கின்றமையால், அவருடன் வனவாஸஞ் செய்வதன் பொருட்டு என்னாலும் விடைகொடுக்கப்பட்டவனாகின்றனை" என்றிருக்கிறது.

இராகவனால் விரும்பப்பட்டவனும், {புறப்படத்} தயாராக இருந்தவனுமான லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொன்ன சுமித்திரை, மீண்டும் அவனிடம்,"புறப்படுவாயாக,(8) ராமனை தசரதராக {தந்தையாக} அறிவாயாக. ஜனகன் மகளை {சீதையை} நானாகவே {தாயாக} அறிவாயாக. ஐயா, அடவியை {காட்டை} அயோத்தியாகவே கருதி சுகமாகச் செல்வாயாக"[2] {என்றாள் சுமித்திரை}.(9)

[2] வி.வி.சுப்பாராவ் பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் மஹேஸ்வர தீர்த்தர் உரையில், "அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருப்பதே தர்மமாகும். இராமனை உன் தந்தையாகவும், சீதையை உன் அன்னையாகவும், அயோத்தி நகரத்தைக் காடாகவும் அறிவாயாக. அல்லது, ராமனை விஷ்ணுவாகவும், சீதையை லக்ஷ்மியாகவும், காட்டை விஷ்ணுவின் வசிப்பிடமாகவும் அறிவாயாக. அல்லது, தசரதர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, கணவரின் இழப்பால் நான் என் தந்தையின் வசிப்பிடத்தில் வாழ்கிறேன் எனவும், ராமன் இல்லாத அயோத்தியைக் காடாகவும் புரிந்து கொள்வாயாக. அல்லது ராமனையும், தசரதனையும் பின்பற்றப்பட வேண்டிய இருவகை குருக்களாகவும், அவர்களில் ஒருவரை உதவுபவராகவும், மற்றொருவரை உதவ இயலாதவராகவும் அறிவாயாக. அயோத்தியைக் காடெனப் புரிந்து கொள்வாயாக. உலக இன்பங்களுக்காக ராஜ்ஜியத்தை அனுபவிப்பது, அல்லது பேரின்பத்திற்காக அண்ணனுக்குக் கீழ்படிவது ஆகியவற்றில் எது சிறந்தது?" என்றிருக்கிறது.

அப்போது பணிவுள்ளவனும், விநயமறிந்தவனுமான சுமந்திரன், கைகளைக் கூப்பியவாறு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசும் {இந்திரனின் தேரோட்டியான} மாதலியைப் போல அந்த காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(10) "பெரும் புகழ்பெற்ற ராஜபுத்திரா, ரதத்தில் ஏறி பத்ரமாக இருப்பாயாக {உனக்கு மங்கலம் உண்டாகட்டும்}. எவ்விடம் செல்லச் சொல்கிறாயோ அங்கே உன்னை சீக்கிரமாக அழைத்துச் செல்வேன்.(11) சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} நீ வனத்தில் வசிக்கப் போகிறாய். {கைகேயி} தேவியால் உன்னிடம் சொல்லப்பட்ட அந்த வருஷங்கள் இதோ தொடங்கிவிட்டதாகக் கருதுவாயாக" {என்றான் சுமந்திரன்}.(12)

அழகிய அங்கங்களைக் கொண்ட சீதை, தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு, சூரியனைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த ரதத்தில் மகிழ்ச்சியான மனத்துடன் ஏறினாள்.(13) அதன்பிறகு, சகோதரர்களான ராமலக்ஷ்மணர்களும், பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பைப் போல ஒளிர்வதுமான அதில் துரிதமாக ஏறினர்.(14) சீதையின் மாமன் {தசரதன்}, பர்த்தாவைப் பின்தொடர்ந்து செல்லும் அவள், வனவாசம் செய்யப் போகும் காலத்தைக் கணக்கில் கொண்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் அவளுக்கு தத்தம் செய்தான்.(15) அதே போல அந்த சகோதரர்களுக்கும், பல்வேறு ஆயுதங்களும், கவசங்களும், கேடயங்களும், கைகளுக்கான தோலுறைகளும் ரதத்தின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தன.(16) சீதை உள்ளிட்ட மூவரும் ஏறிவிட்டதைக் கண்ட சுமந்திரன், வாயுவேகத்திற்கு இணையாகச் செல்லக்கூடியவையும், பெரிதும் போற்றப்படுபவையுமான அஷ்வங்களை {குதிரைகளை} விரைவாகச் செலுத்தினான்.(17)

இராகவன், மஹா அரண்யத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த நகரம் பலமிழந்திருந்த ஜனங்களால் நீண்ட நேர மயக்கத்தில் ஆழ்ந்தது.(18) புலன்கலங்கிய மதங்கொண்ட யானைகளின் பிளிறல்களுடனும், {கட்டுவாரின்றி திரியும்} குதிரைகளின் ஆபரண கிங்கிணி ஒலிகளுடனும் அந்த நகரம் பெருஞ்சலசலப்பால் நிறைந்தது.(19) பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அந்நகரத்தின் பாலர்களும் {சிறுவர்களும்}, விருத்தர்களும் {முதியவர்களும்}, வெப்பத்தால் பீடிக்கப்பட்டவன் நீரை நோக்கி ஓடுவதைப் போல ராமனை நோக்கி ஓடினார்கள்.(20) 

அவனையே நோக்கியவையும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் கூடியவையுமான முகங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும், {தேருக்குப்} பின்னாலும், பக்கங்களிலும் தொங்கிக் கொண்டே அவனிடம் {சுமந்திரனிடம்} இதை உரக்கச் சொன்னார்கள்:(21) "சூதரே, குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்து மெதுமெதுவாகச் செல்வீராக. நாங்கள் காண்பதற்கரிய ராமனின் முகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்.(22) தேவர்களின் மகனுக்கு ஒப்பான ராமன் வனத்திற்குச் சென்றாலும் அவனுடைய மாதாவின் ஹிருதயம் பிளக்காமல் இருப்பதால் நிச்சயம் அஃது எஃகினாலானதாக இருக்க வேண்டும். இதில் ஐயமேதுமில்லை.(23) வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை}, அர்க்கனின் {சூரியனின்} பிரபையை விட்டகலாத மேருவைப் போல கணவனை விடாமல் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் நிழலைப் போலப் பின்தொடர்ந்து சென்று தன் கடமையைச் செய்கிறாள்.(24) இலக்ஷ்மணா, எப்போதும் பிரியத்துடன் பேசுபவனும், தேவனுக்கு இணையானவனுமான உன் அண்ணனை எப்போதும் நீ கவனித்துக் கொள்கிறாய். அஹோ, நீயே சித்தார்த்தன் {நோக்கம் நிறைவேறியவன்}.(25) இவனைப் பின்தொடர்ந்து செல்லும் உனக்கு இதுவே மகத்தான சித்தி {பெருஞ்சாதனை}, இதுவே  மகத்தான நற்பேறு, இதுவே ஸ்வர்க்கத்திற்கான மார்க்கமுமாகும்" {என்றனர் மக்கள்}.(26) வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாத அந்த நரர்கள், இவ்வாறு சொன்னவாறே இக்ஷ்வாகு நந்தனனும் {இக்ஷ்வாகுக்களை மகிழ்ச்சியடையச் செய்பவனும்}, பிரியத்திற்குரியவனுமான அவனை {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(27)

அப்போது தீனமான மனம் கொண்ட ராஜா, தன் பிரியத்திற்குரிய புத்திரனை காணப் போவதாகச் சொல்லிக் கொண்டு, தீனர்களாக இருந்த ஸ்திரீகளால் சூழப்பட்டவனாகத் தன் கிருஹத்திலிருந்து வெளியே வந்தான்.(28) மஹா குஞ்சரம் {பெரும் யானை} கட்டப்பட்டதும் பிளிறும் கரேணுக்களின் {பெண் யானைகளின்} எதிரொலியைப் போல அவன் எதிரில் ஸ்திரீகள் அழுவதன் பேரொலி கேட்டது.(29) அந்த நேரத்தில் ஸ்ரீமான் காகுத்ஸ்த {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலான தசரத} ராஜாவாக நன்கு அறியப்பட்ட அந்த பிதா, கிரஹணத்தால் மறைக்கப்பட்ட பூர்ணசசியை {முழு நிலவைப்} போலப் பொலிவிழந்தான்.(30)

அப்போது சிந்தனைக்கப்பாற்பட்ட வடிவைக் கொண்ட ஸ்ரீமான் தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்} அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்}, "துரிதமாக செலுத்துவீராக" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(31) இராமன் அந்த சூதனிடம், "செல்வீராக" என்று சொல்லவும், ஜனங்கள் அவனிடம், "நிறுத்துவீராக" என்று சொல்லவும், இரண்டையும் செய்ய முடியாமல் அந்த சூதன் நடைபாதையில் {குதிரைகளைத்} தூண்டினான்.(32) மஹாபாஹுவான ராமன் செல்லும்போது சாலையில் எழுந்த பெரும்புழுதியானது, அந்நகரத்து ஜனங்களின் கண்ணீர் படிந்து தணிந்தது.(33) இராகவன் பிரயாணப்பட்டபோது அந்த நகரம் கண்ணீரால் நனைந்து, "ஆ, ஆ" என்ற கதறல்களால் நிறைந்து, பெரும் வருத்தத்தில் மயங்கிக் கிடந்தது.(34) மீன்களின் கொந்தளிப்பில் தாமரைகளில் இருந்து சொட்டும் நீரைப் போல, ஆயாசத்தில் {வேதனையில்} பிறந்த கண்ணீர், ஸ்திரீகளின் கண்களில் இருந்து பாய்ந்தது.(35)

ஏக சிந்தையுடன் இருக்கும் அந்நகரைக் கண்ட நிருபதியான ஸ்ரீமான் {தசரதன்}, வேரறுந்த மரத்தைப் போல துக்கத்துடன் கீழே விழுந்தான்.(36) பெருந்துக்கத்தில் ராஜன் பலவீனமடைவதைக் கண்ட நரர்களின் {ஐயோவென்ற} அழுகுரல் ராமனின் பின்னால் இருந்து எழுந்தது.(37) சில ஜனங்கள், "ஆ, ராமா" என்று கதறியும், வேறு சிலர், "ராமனின் மாதாவே" என்று அழுதும் மொத்த அந்தப்புரத்தையும் அலறச் செய்தனர்.(38) திரும்பிப் பார்த்த ராமன், விசனத்துடனும், குழம்பிய மனத்துடனுமிருக்கும் ராஜாவும், தன் மாதாவும் பாதையில் பின்தொடர்ந்து வருவதைக் கண்டான்.(39) வலையில் அகப்பட்ட மான்குட்டியால் தன் தாயைக் காண முடியாததைப் போல, தர்மபாசத்தில் கட்டுண்ட அவனால் அவர்களை நேரடியாகப் பார்க்க முடியவில்லை.(40) யானங்களில் {பல்லக்குகளில்} வரத் தகுந்தவர்களும், சுகத்திற்குப் பழக்கப்பட்டவர்களும், துக்கத்திற்குத் தகாதவர்களுமான அவர்கள் பாத நடையாக வருவதைக் கண்டு, சாரதியிடம், "சீக்கிரமாக செலுத்துவீராக" என்று கேட்டுக் கொண்டான்.(41) அந்த புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்}, தன் பிதாவையும், மாதாவையும் கண்டு சகித்துக் கொள்ள இயலாமல், அங்குசத்தால் குத்தப்பட்ட துவிபத்தை {யானையைப்} போல துக்கமடைந்தான்.(42)

ram-leaving

கன்றை விரும்பும் பசுவானது, {கொட்டகையில்} கட்டப்பட்டிருக்கும் கன்றுக்காக வீட்டுக்கு வருவதைப் போலவே வாத்ஸல்யமுடைய {புத்திர பாசம் கொண்ட} இராமனின் மாதா {கௌசல்யை}  தன் பிள்ளையை நோக்கி ஓடினாள்.(43) இராமலக்ஷ்மண சீதைக்காக, கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டே, "இராமா, ராமா" என்றும், "ஆ, சீதா" என்றும், "இலக்ஷ்மணா" என்றும் கதறியவாறே ஆடுவதைப் போல ரதத்தை நோக்கி இவ்வாறு ஓடிவரும் தன் மாதா கௌசலையை மீண்டும் மீண்டும் அவன் கண்டான்.(44,45) தசரதன், "நிற்பீராக" என்று கதற, ராகவன், "செல்வீராக, செல்வீராக" என்று சொல்ல சுமந்திரனின் மனமானது, இரண்டு சக்கரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டதைப் போல் தோன்றியது.(46) 

அப்போது ராமன் அவனிடம் {சுமந்திரனிடம்} இதைச் சொன்னான், "நீண்ட கால துக்கம் பாபிஷ்டம் {அவர்கள் துன்புறுவதை நீண்ட நேரம் பார்ப்பது தவறு}. பின்னர் கடிந்து கேட்கப்பட்டாலும், {இந்த அழைப்பு} உமக்குக் கேட்கவில்லை என்று ராஜரிடம் சொல்வீராக" {என்றான் ராமன்}[3].(47)

[3] வி.வி.சுப்பாராவ் பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்ருத கடகரின் உரையில், "துன்பத்தை நீட்டிப்பது ஆபத்தானது என்பதால் ராமன் தீங்கில்லாத இந்த பொய்யைச் சொல்லத் தூண்டுகிறான்" என்றிருக்கிறது.

அந்த சாரதி {சுமந்திரன்}, ஹயங்கள் {குதிரைகள்} சென்று கொண்டிருந்தாலும், ராமனின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து, அந்த ஜனங்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, அவற்றை மேலும் விரைவாகச் செலுத்தினான்.(48) இராஜனின் ஜனங்கள், {மனத்தால்} ராமனை பிரதக்ஷிணஞ்செய்து திரும்பி வந்தனர். அந்த மனிதர்கள் தங்கள் மனங்களுடன் திரும்பி வந்தார்களில்லை. அவர்களின் கண்ணீர்ப்பெருக்கும் குறையவில்லை.(49)

அமாத்யர்கள் {அமைச்சர்கள்} மஹாராஜனிடம் இதைச் சொன்னார்கள், "எவன் திரும்பி வர வேண்டுமென விரும்புகிறோமோ அவனை நெடுந்தூரம் பின்தொடரக் கூடாது" {என்றனர்}.(50) சர்வ குணங்களும் பொருந்திய இந்த சொற்களைக் கேட்ட ராஜா, பரிதாபத்திற்குரியவனாக நின்று, அங்கம் முழுவதும் வியர்த்து, மனம் சோர்வடைந்த தோற்றத்துடன் தன் பாரியைகளுடன் {மனைவிகளுடன்} சேர்ந்து சுதனையே {மகனையே} பார்த்துக் கொண்டிருந்தான்.(51)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 040ல் உள்ள சுலோகங்கள் : 51

Previous | Sanskrit | English | Next

Saturday, 21 May 2022

கௌசல்யை நீதி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 039 (41)

The advise of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-039 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மன்னனின் ஆணையின் பேரில் தேரை ஏற்பாடு செய்த சுமந்திரன்; சீதைக்குக் கொடுக்கப்பட்ட விலைமதிப்புமிக்க ஆடை ஆபரணங்கள்; சீதைக்கு கௌசலையின் அறிவுரை; சிற்றன்னைகளிடம் விடைபெற்ற ராமன்...

Kaushalya and Seetha

பாரியைகளுடன் கூடிய அந்த ராஜா {மனைவிகளுடன் கூடிய தசரதன்}, ராமனின் சொற்களைக் கேட்டும், முனிவேஷம் தரித்திருந்த அவனைக் கண்டும் மயக்கமடைந்தான். துக்கத்தில் எரிந்தவனும், மனம் கலங்கியவனுமான அவனால், ராகவனைக் காணவும் இயலவில்லை, அவனிருந்த திசையை நோக்கி மறுமொழி கூறவும் முடியவில்லை.(1,2) மஹாபாஹுவான அந்த மஹீபதி {பெருந்தோள்களைக் கொண்ட அந்த பூமியின் தலைவன்} ஒரு முஹூர்த்த நேரம் மயங்கியிருந்தான். பிறகு ராமனை மட்டுமே நினைத்து மனம் வருந்தி துக்கமடைந்தான்.(3) 

அவன் {தசரதன்}, "பூர்வத்தில் {முற்பிறவியில்} என்னால் பலர் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது, பிராணிகள் {உயிரினங்கள் என்னால்} ஹிம்சிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் இவ்வாறு நேர்கிறதென நான் நினைக்கிறேன்.(4) காலம் நேராமல் தேஹத்திலிருந்து ஜீவிதம் விலகுவதில்லை {உடலில் இருந்து உயிர் பிரிவதில்லை}. சூக்ஷ்ம வஸ்திரங்களை {மெல்லிய ஆடைகளைக்} களைந்து, தபஸ்வியின் உடையை உடுத்தி, என் முன்னால் பாவகனின் {அக்னியின்} பிரகாசத்துடன் என் மகன் நிற்பதைக் கண்டும், கைகேயியால் துன்புறுத்தப்பட்டும் எனக்கு மிருத்யு {மரணம்} நேராதிருக்கிறது.(5,6) மறைமுகமான சுயநல எண்ணத்துடன் வஞ்சனையைப் புகலிடமாக நாடும் கைகேயியால் மட்டுமே இந்த ஜனங்கள் {யாவரும்} துன்புறுகின்றனர்" {என்றான் தசரதன்}.(7)

இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, ஒரேயொரு முறை "ராமா" என்று சொல்ல முடிந்தவனின் கண்ணீரால் இந்திரியங்கள் தடைபட்டு மேலும் அவனை பேச முடியாதவனாக்கின.(8) ஒரு முஹூர்த்தத்திற்குப் பிறகு, நனவு மீண்ட அந்த மஹீபதி {தசரதன்}, கண்கள் நிறைந்த கண்ணீருடன் சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(9) "செலுத்தத் தகுந்ததும், உத்தமஹயங்கள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்துடன் வந்து, இந்த மஹாபாகனை {பாக்கியவானை} இந்த ஜனபதத்தை {கோசலத்தைக்} கடந்து அழைத்துச் செல்வீராக.(10) சாதுவும், வீரனுமான ஒருவன், பிதாவாலும், மாதாவாலும் நாடு கடத்தப்படுவதால் இதுவே குணவானின் குணங்களுக்கான பலன் என்று சொல்லலாமென நினைக்கிறேன்" {என்றான் தசரதன்}.(11)

{தசரத} ராஜனின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்த சுமந்திரன், சீக்கிரமாக நடந்து சென்று, முறையாக அலங்கரிக்கப்பட்டு, அஷ்வங்கள் பூட்டப்பட்ட ரதத்தை அங்கே கொண்டு வந்து சேர்த்தான்.(12) அந்த சூதன் {சுமந்திரன்}, கூப்பிய கைகளுடன் அந்த ராஜபுத்திரனிடம் {ராமனிடம்}, கனகத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதும், பரம வாஜிகள் {குதிரைகள்} பூட்டப்பட்டதுமான அந்த ரதத்தைக் குறித்துச் சொன்னான்.(13) தேசகாலமறிந்தவனான அந்த ராஜா {தசரதன்}, உறுதியானவனும், அனைத்து வகையிலும் நேர்மையாளனுமான கருவூல அதிகாரியை விரைவாக அழைத்து, இதைச் சொன்னான்:(14) "இந்த {இவர்கள் வனத்தில் வசிக்கப்போகும்} வருஷங்களைக் கருத்தில் கொண்டு, பெரும் மதிப்பிலான ஆடைகளையும், உயர் தரத்திலான ஆபரணங்களையும் சீக்கிரம் வைதேஹிக்குக் கொண்டு வருவீராக" {என்றான் தசரதன்}.(15)

நரேந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கோசகிருஹத்திற்கு {கருவூலத்திற்கு} சென்றவன், அவை அனைத்தையும் போதுமான அளவுக்குக் கொண்டு வந்து சீதையிடம் கொடுத்தான்.(16) வனத்திற்குப் புறப்பட்டவளும், சுஜாதையுமான {உன்னத பிறப்பைக் கொண்டவளுமான} அந்த வைதேஹி, விசித்திர ஆபரணங்களால் தன் அழகிய உடலை அலங்கரித்துக் கொண்டாள்.(17) நன்கு அலங்கரித்துக் கொண்ட அந்த வைதேஹி, உதிக்கும் விவஸ்வானின் {சூரியனின்} பிரபையால் ஒளிரும் காலை நேர வானைப் போல அந்த வேஷ்மத்தை {வீட்டை} ஒளிரச் செய்தாள்.(18)

பரிதாபத்திற்குரியவளாக ஒரு போதும் நடந்து கொள்ளாத மைதிலியைத் தன் கைகளில் அணைத்துக் கொண்ட மாமியார் {கௌசல்யை}, அவளது நெற்றியை முகர்ந்து {பின்வருமாறு} சொன்னாள்:(19) "இந்த உலகம் முழுவதிலும் சத்தியமற்ற ஸ்திரீகள் {உண்மையில்லாத பெண்கள்}, தங்கள் அன்புக்குரியவரால் எப்போதும் துதிக்கப்பட்டாலும், {கொடும் நாட்களில்} பாதகத்தில் விழுந்த அந்த பர்த்தாவை {கணவரை} மதிப்பதில்லை.(20) பூர்வத்தில் சுகத்தை அனுபவித்து விட்டு, {பின்னர்} அற்பமான கஷ்டம் நேர்ந்து விட்டாலும், துஷ்டர்களாகி {கணவரைக்} கைவிடுவதே நாரீகளின் சுபாவம் {பெண்களின் இயல்பு}.(21) 

பாப சங்கல்பம் கொண்ட யுவதிகள் {இளம்பெண்கள்}, அசத்தியசீலைகளாகவும் {உண்மையான ஒழுக்கமற்றவர்களாகவும்}, ஆசையால் பீடிக்கப்பட்டவர்களாகவும்,  புரிந்து கொள்ளக் கடினமான ஹிருதயத்தைக் கொண்டவர்களாகவும் க்ஷண மாத்திரத்தில் மாறி வெறுப்பை அடைகிறார்கள்[1].(22) அந்த ஸ்திரீகள், குலத்தையோ, செயல்பாட்டையோ {உதவியையோ}, வித்யையோ {கல்வியையோ}, தத்தத்தையோ {கொடையையோ}, ஒற்றுமையான இணக்கத்தையோ ஹிருதயத்தில் கிரஹிக்காமல் நிலையற்ற ஹிருதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(23) 

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "யுவதசையிலிருக்கும் பெண்கள் எப்பொழுதும் நம்பிக்கை துரோகத்தால் விளையும் ஒழுக்கமுடையவர்கள். காமம், குரோதம், மதம், மாத்ஸர்யம், டம்பம், லோபம் இது முதலிய மனோவிகாரங்களுக்கு ஈடுபட்டு நடக்கின்றவர்கள். உள்ளத்திலுள்ளதை உள்ளபடி எவராலுமறியமுடியாத உள்ளம் படைக்கப்பெற்றவர்கள். அனியாயத் தொழில்களிலும் மனம் கூசாது துணிந்துவிடும் ஸ்வபாவமுடையவர்கள். ஒரு க்ஷணப்பொழுதில் பதியெனும் பந்துத்வத்தையே துறந்துவிடுபவர்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸ்திரீகளுக்குப் பொய்யுரைப்பதே இயற்கையாயிருக்கும். க்ஷணந்தோறும் மனது மாறிக்கொண்டேயிருக்கும். அவர்களது மனது இப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்வதே கஷ்டம். அவர்கள் பாபகார்யங்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய ப்ரீதி ஒரு நொடிப்பொழுதில் மாறிப்போய்விடும், ஒரு க்ஷணங்கூட நிலைநின்றிராது" என்றிருக்கிறது.

ஆனால், சத்தியத்திலும் {உண்மையிலும்}, சீலத்திலும் {ஒழுக்கத்திலும்}, ஸ்ருதியிலும் {சாத்திரங்களிலும்}, பொறுமையிலும் நிலைநிற்கும் ஸ்திரீகளுக்கு, பதி ஒருவனே {கணவன் மட்டுமே} அனைத்திலும் சிறந்த பரமபவித்ரமானவனாக இருக்கிறான்.(24) நாடு கடத்தப்பட்டவன் என்று என் புத்திரனை நீ இகழ்ந்துவிடாதே. அவன் தனவந்தனாக இருந்தாலும், தனமற்றவனாக இருந்தாலும் அவனே உன் தைவமாவான் {தெய்வமாவான்}" {என்றாள் கௌசல்யை}.(25)

தர்மத்தின் அர்த்தம் பொதிந்த அவளது {கௌசல்யையின்} சொற்களைப் புரிந்து கொண்ட சீதை, தன் முன் நின்று கொண்டிருந்த தன் மாமியாரிடம் கைகளைக் கூப்பியபடியே {பின்வரும்} மறுமொழியைக் கூறினாள்:(26) "ஆரியையான நீர் சொன்ன நெறிகள் அனைத்தின்படியும் நான் செயல்படுவேன். பர்த்தாவிடம் {கணவரிடம்} எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். இதை நான் {முன்பே} கேட்டிருக்கிறேன்.(27) ஆரியையான நீர், சத்ஜனங்களல்லாதோருடன் {தீய மனிதர்களுடன் / தீய பெண்களுடன்} என்னை இணைவைப்பது தகாது. சந்திரனிடம் உள்ள பிரபையைப் போல ஒருபோதும் நான் தர்மத்திலிருந்து விலக மாட்டேன்.(28) 

தந்திகளில்லாமல் வீணையில் வாத்தியமில்லை. சக்கரங்கள் இல்லாமல் தேர் ஓடுவதில்லை. அதேபோல நூறு பிள்ளைகள் இருந்தாலும் பதியற்றவளால் {கணவன் இல்லாதவளால்} சுகமாக வாழ இயலாது.(29) உண்மையில் பிதா மிதமாகவும் {அளவாகவும்}, மாதா மிதமாகவும், சுதன் {மகன்} மிதமாகவும் தத்தம் செய்கையில், எதையும் அளவில்லாமல் தத்தம் செய்யும் பர்த்தாவை எவள் பூஜிக்கமாட்டாள்?(30) சிரேஷ்டர்களிடம் {சிறந்த பெண்களிடம்} இருந்து, {மனைவியின்} சாமான்ய தர்மங்களையும், விசேஷ தர்மங்களையும் கேட்டிருக்கும் என்னால் எவ்வாறு இவரை இகழ முடியும்? ஆரியையே, உண்மையில் பர்த்தாவே ஸ்திரீகளுக்குத் தைவமாவார் {கணவரே பெண்களுக்கு தெய்வமாவார்}" {என்றாள் சீதை}.(31)

சீதை சொன்னதைக் கேட்டு ஹிருதயம் கனத்தவளும், தூயமனம் கொண்டவளுமான கௌசல்யை, திடீரென துக்கமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் சிந்தினாள்.(32) பரம தர்மாத்மாவான ராமன், மாதாக்களின் மத்தியில் இருந்தவளும், பெரும் மதிப்புக்குரியவளுமான தன் மாதாவிடம் {கௌசல்யையிடம்} கைகளைக் கூப்பியபடியே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(33) "அம்ப {அம்மா}, நீ துக்கமடையாதே. என் பிதாவைப் பார்த்துக் கொள்வாயாக. வனவாசத்தின் முடிந்ததும் மிக சீக்கிரமாக நான் வருவேன்.(34) உறங்கி எழுந்ததும் காண்பதைப் போல இந்த நவபஞ்ச வருஷங்களும் {பதினான்கு ஆண்டுகளும்} கடந்து, நண்பர்கள் சூழ குறைவில்லாமல் இங்கே வரும் என்னை நீ காண்பாய்" {என்றான் ராமன்}.(35)

அர்த்தத்தை உணர்ந்து இவ்வாறான சொற்களைச் சொன்னவன், ஆலோசித்தவாறே {எண்ணிக்கையில்} த்ரயசதம் சத அர்த்தமாக {மூன்றுநூறும், நூறில் பாதியுமாக / முன்னூற்றைம்பதாக} இருந்த மாதாக்களையும் கண்டான்.(36) அந்த தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்}, இவ்வாறே வருந்திக் கொண்டிருந்த மாதாக்களிடம் கைகளைக் கூப்பியவாறு தர்மத்திற்கு இணக்கமான இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(37) "சம்வாசத்தாலோ {ஒரே இடத்தில் ஒன்றாக வசிப்பதாலோ}, அறியாமையாலோ சிறு தீங்கையும் நான் செய்திருந்தால் அவற்றைப் பொறுத்து அனுமதிக்க வேண்டுகிறேன். உங்கள் அனைவரிடமும் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்" {என்றான் ராமன்}.(38)

சோகத்தால் பீடிக்கப்பட்ட மனம் கொண்ட அந்த ஸ்திரீகள் அனைவரும், தர்மத்திற்கு இணக்கமாகவும், அடக்கமாகவும் சொல்லப்பட்ட ராகவனின் இந்தச் சொற்களைக் கேட்டனர்.(39) இராகவன் இவ்வாறு பேசிய பிறகு, பெண் கிரௌஞ்சங்களின் கூச்சலைப் போல அந்த மானவேந்திரனின் பத்தினிகளிடமிருந்து {மனிதர்களின் இந்திரனான தசரதனின் மனைவியரிடமிருந்து} சன்னதம் {பேரொலி} எழுந்தது.(40) பூர்வத்தில் மேக கோஷங்களைப் போல, முரசு, பணவங்களின் தொனி நிறைந்த தசரதனின் மாளிகையில், இப்போது துன்ப காலத்தில் எழும் புலம்பலும், அழுகையும் நிறைந்திருந்தது.(41)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 039ல் உள்ள சுலோகங்கள் : 41

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை