Crossing Ganga | Ayodhya-Kanda-Sarga-052 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கங்கையைக் கடக்க ஓடத்தைக் கொண்டு வந்த குஹன்; அயோத்திக்குத் திரும்புமாறு சுமந்திரனைக் கேட்டுக் கொண்ட ராமன்; கங்கையை வழிபட்ட சீதை...
இரவு விடியலுக்கு வழிவிட்டதும், அகன்ற மார்புடையவனும், பெரும்புகழ்வாய்ந்தவனுமான ராமன், சுபலக்ஷணங்களைக் கொண்டவனும், சௌமித்ரியுமான {சுமித்திரையின் மகனுமான} லக்ஷ்மணனிடம்:(1) "ஐயா, இது பாஸ்கரோதய காலம் {சூரியன் உதிப்பதற்கான நேரம்}. பகவதியான {மங்கலமான} இரவு கழிந்தது. கருஞ்சிறகைக் கொண்ட கோகிலப் பறவை {குயில்} கூவுகிறது.(2) வனத்தில் மயில்களின் அகவல்கள் கேட்கின்றன. சௌம்யா {மென்மையானவனே}, சாகரத்திற்கு சீக்கிரமாக விரைந்து செல்பவளான இந்த ஜாஹ்னவியை {கங்கையை}[1] நாம் கடப்போமாக" {என்றான் ராமன்}.(3)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "பேரரசன் பகீரதனின் தவத்தால் சொர்க்கத்திலிருந்து பாய்ந்து வந்த கங்கையாறு, இறந்து போன அவனது முப்பாட்டன்களைத் தூய்மைப்படுத்துவதற்காக பாதாள உலகத்திற்கும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவ்வாறு அவள் செல்லும் போது மன்னன் ஜஹ்னுவின் வேள்விக் களத்தை மூழ்கடித்தாள். இதனால் கோபமடைந்த ஜஹ்னு அவளது நீர் முழுவதையும் பருகிவிட்டான். ஆனால் தேவர்களும், முனிவர்களும், குறிப்பாக பகீரதனும் அவனது கோபத்தைத் தணித்தனர். அவன் அந்த நீரைத் தன் காதுகளின் வழியே வெளியேற்ற சம்மதித்தான். அதுமுதல் அந்த ஆறு அவனது {மன்னன் ஜஹ்னுவின்} மகளாகக் கருதப்பட்டாள்" என்றிருக்கிறது. கங்கை {கங்கா}, ஜஹ்னுவின் மகள் என்பதால் ஜாஹ்னவி {ஜானவி} ஆனாள், பகீரதனின் மகள் என்ற பொருளில் பாகீரதியும் ஆனாள்.
மித்ரானந்தனனான அந்த சௌமித்ரி {நண்பர்களை மகிழ்விப்பவனான லக்ஷ்மணன்}, ராமனின் சொற்களைப் புரிந்து கொண்டு, குஹனையும், சூதனையும் {சுமந்திரனையும்} அழைத்து வந்து, தன் சகோதரன் {ராமன்} முன் நின்றான்.(4) இராமனின் வசனத்தைக் கேட்ட ஸ்தபதி {குஹன்}, அதை ஏற்றுக் கொண்டு தன் பணியாட்களைத் துரிதமாக அழைத்து இதைச் சொன்னான்:(5) "திடமாகக் கட்டப்பட்டதும், நன்கு பாயக்கூடியதும், நாவிகனுடன் {மீகாமனுடன் / படகோட்டியுடன்} கூடியதுமான ஓர் அழகிய நாவத்தை {ஓடத்தைக்} கரையில் இவருக்காக {ராமருக்காக} சீக்கிரம் கொண்டு வருவீராக" {என்றான் குஹன்}.(6)
அந்த ஆணையைக் கேட்ட குஹனின் அமைச்சர்களில் பெரியவர், ஓர் அழகிய நாவத்தைக் கொண்டு வந்து, அந்தத் தகவலை குஹனிடம் தெரிவித்தார்.(7) அப்போது குஹன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு ராகவனிடம் {இவ்வாறு} பேசினான், "தேவா, இதோ நாவம் {ஓடம்} வந்திருக்கிறது. இன்னும் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?(8) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, அமரசுதனை {தேவர்களின் மகனைப்} போன்றவனே, சாகரத்திற்குப் பாயும் இந்நதியை நீ கடப்பதற்குரிய நாவம் இது. நல்விரதம் கொண்டவனே, இதில் நீ ஆரோஹணம் செய்வாயாக {ஏறுவாயாக}" {என்றான் குஹன்}.(9)
அப்போது மஹாதேஜஸ்வியான ராமன், குஹனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "என் விருப்பம் உன்னால் நிறைவேறியது. சீக்கிரம் இதில் ஆரோஹணம் செய்வோம் {ஏறுவோம்}" {என்றான்}.(10)
பின்னர் அந்த ராகவர்கள் {ராமனும், லக்ஷ்மணனும் தங்கள்}, அம்பறாத்தூணிகளைத் தரித்துக் கொண்டும், கட்கங்களை {வாள்களைப்} பூட்டிக் கொண்டும், தனுவை {வில்லை} ஏந்திக் கொண்டும் சீதையுடன் சேர்ந்து கங்கையை நோக்கிச் சென்றனர்.(11) சூதன் {சுமந்திரன்}, பணிவுடன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, தர்மத்தை அறிந்தவனான ராமனை அணுகி, "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(12)
அப்போது அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, உத்தமமான தன் வலது கையால் சுமந்திரனைத் தீண்டி, "சுமந்திரரே, நீர் சீக்கிரமாக ராஜாவிடம் திரும்பிச் சென்று, கவனமாக இருப்பீராக.(13) எனக்கு இவ்வளவு செய்துவிட்டீர் {என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துவிட்டீர்}. இனி திரும்புவீராக. நான் ரதத்தைக் கைவிட்டு பாதநடையாகவே மஹாவனத்திற்குச் செல்வேன்" {என்றான் ராமன்}.(14)
சாரதியான சுமந்திரன், தான் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதைக் கண்டு வருந்தி, புருஷவியாகரனான அந்த ஐக்ஷ்வாகனிடம் {மனிதர்களில் புலியும், இக்ஷ்வாகு குலத்தவனுமான ராமனிடம்} இதைச் சொன்னான்:(15) "தம்பியோடும், பாரியையோடும் ஒரு சாதாரண மனிதனைப் போல வனத்தில் வாசம் செய்யப் போகிறாய். இவ்வுலகில் எந்த மனிதனும் இதை {இந்நிலையைக்} அடைந்திருக்கமாட்டான்.(16) உனக்குத் துன்பம் வருமானால், பிரம்மசரியத்தாலோ, கற்ற கல்வியாலோ, மென்மையையும், நேர்மையையும் வளர்த்துக் கொள்வதாலோ எந்தப் பலனும் இருப்பதாக நான் நினைக்கமாட்டேன்.(17) வீரா, ராகவா, வைதேஹியுடனும், தம்பியுடனும் நீ வனத்தில் வசித்தாலும், திரிலோகத்தையும் {மூன்று உலகங்களையும்} வெல்லும் கதியை அடைவாய்.(18) இராமா, உன்னாலும் வஞ்சிக்கப்பட்ட நாங்கள் உண்மையில் அழிந்தே விட்டோம். இனி பாப இயல்பைக் கொண்ட கைகேயியின் வசத்தில் விழுந்து, துக்கத்தை அடையப்போகிறோம்" {என்றான் சுமந்திரன்}.(19)
சாரதியான சுமந்திரன் இதைச் சொல்லிவிட்டு, தன் ஆத்மாவுக்கு நிகரான ராமன் தூரமாகச் செல்வதைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு நீண்ட நேரம் அழுதான்.(20) பிறகு, கண்ணீர் மறைந்து, நீரைத் தீண்டிப் பருகித் தூய்மையடைந்த அந்த சூதனிடம் மீண்டும் மீண்டும் ராமன் இந்த மதுர வாக்கியத்தைச் சொன்னான்:(21) "இக்ஷ்வாகுக்களின் நண்பர்களில் உம்மைப் போன்ற ஒருவரை நான் கண்டதில்லை. தசரத ராஜா எனக்காக வருந்தாமல் இருக்கும் வகையில் நீர் நடந்து கொள்வீராக.(22) விருத்தரான ஜகத்பதி {முதியவரான உலகின் தலைவர் தசரதர்} சோகத்தால் மனம் பீடிக்கப்பட்டவராகவும், காமபாரத்தை {ஆசை என்ற சுமையைச்} சுமந்து மனம் சோர்ந்தவராகவும் இருப்பதால் இதை உமக்குச் சொல்கிறேன்.(23)
மஹாத்மாவான அந்த மஹீபதி {தசரதர்}, கைகேயிக்குப் பிரியமான ஆசையை நிறைவேற்ற எந்தக் காரியத்தை ஆணையிட்டாலும், அதை தயக்கமேதும் இல்லாமல் செய்வீராக.(24) தங்கள் விருப்பத்திற்குரிய காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேற வேண்டும் என்ற நோக்கிலேயே நரேஷ்வரர்கள் ராஜ்ஜியங்களை ஆள்கின்றனர்.(25) சுமந்திரரே, எதை எப்படிச் செய்தால் அந்த மஹாராஜா வருந்தமாட்டாரோ, துக்கத்தால் துன்புற மாட்டாரோ அப்படியே செயல்படுவீராக.(26)
விருத்தரும் {முதிர்ந்தவரும்}, ஆரியரும் {உன்னதமானவரும்}, துக்கத்தை அறியாதவரும், ஜிதேந்திரியருமான {புலன்களை வென்றவருமான} ராஜாவை மதிப்புடன் வணங்கிய பிறகு என் பொருட்டு இந்த சொற்களை நீர் சொல்வீராக.(27) "நானோ, லக்ஷ்மணனோ, மைதிலியோ அயோத்தியிலிருந்து அப்புறப்பட்டதற்கும், வனத்தில் வசிக்கப் போவதற்கும் வருந்தவில்லை.(28) சதுர்தச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} நிறைவடைந்ததும் சீக்கிரமாகத் திரும்பி வரும் லக்ஷ்மணனையும், என்னையும், சீதையையும் மீண்டும் காண்பீர்கள்" {என்று என் சார்பாக சொல்வீராக}.(29)
சுமந்திரரே, ராஜரிடமும், என் மாதாவிடமும், வேறு தேவியர் அனைவரிடமும், கைகேயியிடமும் இதையே மீண்டும் மீண்டும் நீர் சொல்வீராக.(30) சீதையும், நானும், ஆரியனான லக்ஷ்மணனும் ஆரோக்கியமாக இருப்பதையும், நாங்கள் சொல்லும் பாதாபிவந்தனத்தையும் {பாதவணக்கத்தையும்} கௌசல்யையிடம் மீண்டும் மீண்டும் சொல்வீராக.(31)
மஹாராஜரிடமும் இதைச் சொல்வீராக. "பரதனை சீக்கிரம் அழைப்பீராக. பரதன் வந்ததும், நிருபதியான உமது விருப்பப்படியே பதத்தில் அவனை ஸ்தாபிப்பீராக.(32) பரதனைத் தழுவிக் கொண்டு யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்ததும் எங்கள் நிமித்தம் உண்டான துக்கம் உம்மை பீடிக்காது" {என்று தசரதரிடம் சொல்வீராக}.(33)
பரதனிடம் இதைச் சொல்வீராக, "மாதாக்கள் அனைவரிடமும் எந்த வேற்றுமையும் பாராமல், ராஜருக்குக் கொடுக்கும் அதே மதிப்பை {அவர்களுக்கும்} கொடுப்பாயாக. உனக்குக் கைகேயி எவ்வாறோ, அவ்வாறே சுமித்திரையும், குறிப்பாக என் மாதாவான கௌசல்யா தேவியும் இருப்பார்களாக.(35) நம் தாதையின் {தந்தையின்} விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் யௌவராஜ்ஜியத்தை நீ ஏற்றுக் கொண்டால், இரு உலகங்களிலும் {இம்மையிலும், மறுமையிலும்} உன் சுகத்தை பெருக்கிக் கொள்ளலாம்" {என்று பரதனிடம் சொல்வீராக", என்றான் ராமன்}.(36)
இராமனால் திருப்பி அனுப்பப்பட்ட சுமந்திரன், சோகத்தால் நேர்ந்த சோர்வுடன் அந்த வசனங்கள் அனைத்தையும் கேட்டு, சினேகத்துடன் அந்தக் காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இதைச் சொன்னான்:(37) "சினேகத்துடனும், விகல்பமில்லாமலும், அபசாரமில்லாமலும் {நட்புடனும், மனமாறுபாடு இல்லாமலும், நிந்தனை செய்யாமலும்} நான் எந்த வாக்கியத்தைச் சொன்னாலும், அதை பக்திமான் சொன்னதாகக் கருதி பொறுப்பதே உனக்குத் தகும்.(38) உன் பிரிவால் புத்திர சோகத்துடன் இருப்பவளைப் போலிருக்கும் அந்த நகரத்திற்கு {அயோத்திக்கு} நீ இல்லாமல் என்னால் எவ்வாறு திரும்ப முடியும்?(39)
அப்போது என் ரதத்தில் ராமன் இருப்பதைக் கண்ட ஜனங்கள், இப்போது ராமனில்லாத ரதத்தைக் கண்டால் அந்நகரமே பிளந்து சிதறும்.(40) கொல்லப்பட்ட வீரர்களைக் கொண்ட சைன்யத்தைக் காண்பதைப் போல, சூன்யமான இந்த ரதத்தில் சூதன் {தேரோட்டியான நான்} மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டால் அந்த நகரமே துயரை அடையும்.(41) நீ தூரத்தில் வாழ்ந்தாலும், தங்கள் மனங்களில் உன்னையே திடமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரஜைகள் இன்று நிச்சயம் ஆகாரமின்றி வாடிக் கொண்டிருப்பார்கள்.(42) இராமா, உன்னை நாடு கடத்தியபோது, உனக்காக மனம் சோர்ந்த பிரஜைகளுக்கு மத்தியில் எழுந்த கலக்கமான நடத்தை எவ்வகையானது என்பதை நீ கண்டாய்.(43) நீ நாடுகடத்தப்பட்ட போது நகரவாசிகளிடம் எழுந்த துயரக் கூக்குரலானது, ரதத்துடன் என்னைக் காணும்போது நூறு மடங்காக எழும்.(44)
தேவியிடம் {கௌசல்யையிடம்} நான் என்ன சொல்வேன்? "உன் சுதனை நான் மாதுல குலத்திடம் {உன் மகனை தாய்மாமன் வீட்டிற்கு} அழைத்துச் சென்றேன். வருந்தவேண்டாம்" என்று சொல்ல முடியுமா?(45) சத்தியமற்ற இத்தகைய சொற்களை என்னால் சொல்ல இயலாது. பிரியமற்ற சத்திய சொற்களைத்தான் என்னால் எவ்வாறு சொல்ல முடியும்?(46) உன்னையும் உன் பந்து ஜனங்களையும் சுமந்தவையும், எனக்குக் கீழ்ப்படிபவையுமான உத்தம ஹயங்கள் {சிறந்த குதிரைகள்} நீ இல்லாத ரதத்தை எவ்வாறு இழுத்துச் செல்லும்?(47) எனவே என்னால் அயோத்திக்குத் திரும்பிச் செல்ல முடியாது. பாவமற்றவனே, வனவாசத்தில் உன்னைப் பின் தொடர்ந்து வர என்னை அனுமதிப்பதே உனக்குத் தகும்.(48) யாசித்தும் நீ என்னைக் கைவிட்டால், அவ்வாறு கைவிடப்பட்ட மாத்திரத்திலேயே இங்கேயே ரதத்துடன் அக்னிக்குள் பிரவேசிப்பேன்.(49)
இராகவா, வனத்தில் உன் தவத்திற்கு எந்த விலங்குகள் விக்னம் விளைவிக்குமோ அந்தந்த விலங்குகளை ரதத்தில் இருந்த வண்ணம் விரட்டுவேன்.(50) {நாட்டில்} உன் ரதத்தைச் செலுத்தும் சுகம் எனக்குக் கிடைத்தது. {காட்டில்} உன் மூலம் கிட்டப் போகும் வனவாச சுகத்தையும் நான் நாடுகிறேன்.(51) கருணை புரிவாயாக. அரண்யத்தில் உன் அருகில் அணுக்கனாக வசிக்க விரும்புகிறேன். "என் அணுக்கராக இருப்பீராக" என்ற பிரீதியுடன் கூடிய உன் சம்மதத்தையே நான் விரும்புகிறேன்.(52) வீரா, வனத்தில் வசிக்கும் உனக்கான தொண்டை இந்த ஹயங்களால் {குதிரைகளால்} செய்ய முடியுமென்றால் இவை பரம கதியையே {இறுதி இலக்கான முக்தியை} அடையும்.(53) வனவாசத்தில் தலைவணங்கி உனக்கான தொண்டைச் செய்வதற்காக அயோத்தியையோ, தேவலோகத்தையோ, ஏன் அனைத்தையுங்கூட நான் கைவிடுவேன்.(54)
துஷ்ட கர்மங்களைச் செய்வோரால் மஹேந்திரனின் ராஜதானிக்குள் {இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள்} நுழைய முடியாததைப் போலவே, நீ இல்லாமல் என்னால் அந்த அயோத்திக்குள் பிரவேசிக்க முடியாது.(55) வனவாசம் நிறைவடைந்ததும், இதே ரதத்தில் நகருக்குள் உன்னை மீண்டும் அழைத்துச் செல்வதே என் மனோரதம் {விருப்பம்}.(56) வனத்தில் உன்னுடன் வசிக்கையில், சதுர்தச வருஷங்களும் {பதினான்கு ஆண்டுகளும்} எனக்கு ஒரு கணம் போல் கழிந்துவிடும், மாறாக நடந்தால் அதுவே நூறு மடங்காகப் பெருகிவிடும்.(57) சார்ந்தவர்களிடம் அன்பு கொண்டவனே {ராமா, தசரதன் என்ற} தலைவனின் மகன் நடக்கும் பாதையில் செல்பவனும், வரம்புக்குள் நிலைத்திருப்பவனும், பக்தனும், உன் அடியவனுமான என்னைக் கைவிடுவது உனக்குத் தகாது" {என்றான் சுமந்திரன்}.(58)
அடியாரிடம் இரக்கம் கொண்ட ராமன், பல்வேறு வகைகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு தீனமாக இரந்து கொண்டிருந்த சுமந்திரனிடம், இதைச் சொன்னான்:(59) "தலைவரிடம் பற்று கொண்டவரே, என்னிடம் நீர் கொண்ட பரமபக்தியை நான் அறிவேன். இங்கிருந்து நகரத்திற்கு எதற்காக உம்மை அனுப்புகிறேன் என்பதைக் கேட்பீராக.(60) நீர் நகருக்குத் திரும்பியதைக் கண்டு, என் இளைய மாதாவான கைகேயி, "ராமன் வனத்திற்குச் சென்றுவிட்டான்" என்று சமாதானமடைவாள்.(61) நான் வனவாசம் சென்றுவிட்டேன் என்பதில் பெரும் திருப்தி அடையும் அந்த தேவி, தார்மீகரான ராஜாவைப் பொய்யரென சந்தேகிக்கமாட்டாள்.(62) என் இளைய அம்பா {கைகேயி}, பரதனால் ரக்ஷிக்கப்படும் பரந்த புத்திரராஜ்ஜியத்தை அடைய வேண்டும் என்பதே என் பிரதம கல்பமாகும் {முதன்மையான விதியாகும்}.(63) எனக்கும், ராஜருக்கும் பிரியம் உண்டாவதற்காக நீர் ரதத்துடன் நகருக்குச் சென்று, உமக்குச் சொல்லப்படும் இவற்றை அந்தந்த வகையிலேயே {தசரதரிடம்} அறிவிப்பீராக" {என்றான் ராமன்}.(64)
தீரனான ராமன், அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்} இவ்வாறான சொற்களை சொல்லி மீண்டும் மீண்டும் அவனை சாந்தப்படுத்திவிட்டு, காரணங்களுடன் கூடிய இந்த சொற்களை குஹனிடம் சொன்னான்:(65) "குஹனே, ஜனங்களுடன் கூடிய வனத்தில் இவ்வாறு வசிப்பது எனக்குத் தகாது. அவசியம் ஆசிரமத்திலேயே வசிக்க வேண்டும். {காட்டில் ஆசிரமத்தில் வசிக்க வேண்டும் என்ற அந்த} விதிக்குத் தகுந்தவாறே செயல்பட வேண்டும்.(66) என் பிதாவின் ஹிதத்தை விரும்புகிறவனான நானும், சீதையும், லக்ஷ்மணனும் தபஸ்விஜனபூஷணத்தையே {தபஸ்விகளுக்குரிய ஆடை அலங்காரங்களையே} நியமப்படி ஏற்க வேண்டும் என்பதால் ஜடை தரித்துச் செல்ல விரும்புகிறோம். எனவே ஆலமரத்தின் பாலைக் கொண்டு வருவாயாக" {என்றான் ராமன்}.(67,68அ)
குஹன் சீக்கிரமாக அந்தப் பாலை ராஜபுத்திரனிடம் கொண்டு வந்தான். இராமன், அதைக் கொண்டு லக்ஷ்மணனுக்கும், தனக்கும் ஜடை தரித்தான்.(68ஆ,69அ) தீர்க்கபாஹுவான அந்த நரவியாகரன் {நீண்ட கைகளைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான ராமன்} இவ்வாறே சடை தரித்துக் கொண்டான். உடன்பிறந்தவர்களான ராமனும், லக்ஷ்மணனும் அப்போது மரவுரியும், ஜடா மண்டலமும் தரித்து ரிஷிகளைப் போலப் பிரகாசித்தனர்.(69ஆ,70) இராமன், லக்ஷ்மணன் சகிதனாக வைகானச மார்க்கத்தைப்[2] பின்பற்றி, விரதம் ஏற்று, தன் சகாவான குஹனிடம் {இதைச்} சொன்னான்:(71) "குஹனே, பலம் {படை}, கருவூலம், கோட்டை, ஜானபதம் {ஆட்சிப்பகுதி} ஆகியவற்றில் கவனத்துடன் இருப்பாயாக. இராஜ்ஜியத்தை ரக்ஷிப்பதே மிகக் கடினமானதாகக் கருதப்படுகிறது" {என்றான்}.(72)
[2] வைகானசமும், பாஞ்சராத்திரமும் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் இரண்டு ஆகமப் பிரிவுகளாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் வைகானச ஆகம நெறியினைப் பின்பற்றுபவர்கள் வைகானசர் என்றழைக்கப்படுகின்றனர். வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகளை உள்ளடக்கிய பஞ்ச சம்ஸ்கார தீட்சையை இவர்கள் ஏற்பதில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு இடப்பட்டுவிட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும். இவர்களின் நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் இவர்கள் இராமாநுசரையோ, நம்மாழ்வாரையோ தம் குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திவ்வியப் பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை. இவர்கள் வடகலை வைணவ சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அதன்பிறகு அந்த இக்ஷ்வாகுநந்தனன் {ராமன்}, குஹனுக்கு விடை கொடுத்துவிட்டு, கவனம் சிதறாமல் தன் பாரியையுடனும், லக்ஷ்மணனுடனும் துரிதமாகச் சென்றான்.(73) நதிதீரத்தில் நாவத்தை {ஆற்றங்கரையில் ஓடத்தைக்} கண்ட ராமன், வேகமாகப் பாயும் கங்கையைக் கடக்க விரும்பி, லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(74) "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, இதோ நிற்கும் நாவத்தைப் பிடித்துக் கொண்டு, உன்னதமானவளான சீதையை மெதுவாக அதில் ஏற்றிவிட்டு, நீயும் அதில் ஏறுவாயாக" {என்றான்}.(75)
அண்ணனின் சர்வசாசனத்தையும் {ஆணை முழுவதையும்} கேட்ட அந்த ஆத்மவான் {தற்கட்டுப்பாடுடைய லக்ஷ்மணன்}, மாறாகச் செயல்படாமல் முதலில் மைதிலியைப் படகில் ஏறச் செய்துவிட்டு, அதன்பிறகே தானும் ஏறினான்.(76) பிறகு தேஜஸ்வியான லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} தானாக ஏறினான். அதன்பிறகு, நிஷாதிபதியான குஹன், {ஆற்றைக் கடக்குமாறு தன் உறவினர்களுக்கு} தன் ஞாதிகளுக்கு ஆணையிட்டான்.(77)
மஹாதேஜஸ்வியான அந்த ராகவன் {ராமன்}, அந்த நாவத்திற்குள் ஏறிய பிறகு, பிரம்மவாதிகளுக்கும், க்ஷத்ரியர்களுக்கும் தகுந்ததும், தனக்கு நலன் விளைவிப்பதுமான ஜபத்தை செய்தான்.(78) சாஸ்திரப்படியும், பெரும் மகிழ்ச்சியுடனும் ஆசமனஞ்செய்து {நீரைப் பருகி}, சீதை சகிதனாக அந்த நதிக்கு அவன் {ராமன்} வணக்கஞ்செலுத்தினான். அளவற்ற பிரகாசம் கொண்ட லக்ஷ்மணனும் அதையே செய்தான்.(79) இராமன், நல்ல படையுடன் கூடிய குஹனுக்கும், சுமந்திரனுக்கும் விடைகொடுத்துவிட்டு, நாவத்தில் அமர்ந்து, நாவிகர்களுக்கு {மீகாமர்களுக்கு / படகோட்டிகளுக்கு படகைச் செலுத்துமாறு} ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.(80) சிறப்புமிக்கவர்களும், வீரியமிக்கவர்களுமான ஓடக்காரர்களால் உந்தப்பட்ட அந்த நாவம் {படகு} சீக்கிரமாக நீரின் குறுக்கில் பாய்ந்தது.(81)
அந்த பாகீரதியின் மத்தியை {கங்கையாற்றின் நடுப்பகுதியை} அடைந்ததும், களங்கமற்றவளான வைதேஹி, தன் கைகளைக் கூப்பியவாறே அந்த நதியிடம் இதைச் சொன்னாள்:(82) "கங்கையே, தசரத மஹாராஜாவின் புத்திரரான இவர் {ராமன்}, உன்னால் பாதுகாக்கப்பட்டவராக இந்தக் கட்டளையை {பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்ற இந்த ஆணையை} நிறைவேற்றுவாராக.{83} சதுர்தச வருஷங்களும் கானகத்தில் முழுமையாக வசித்த பிறகு, உடன்பிறந்தவருடனும் {லக்ஷ்மணனுடனும்}, என்னுடனும் இவர் திரும்புவாராக.{84} அருள்நிறைந்த கங்காதேவியே, {அவ்வாறு} க்ஷேமத்துடன் திரும்பியதும், மகிழ்ச்சியால் நிறையும் நான், என் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவளாக உன்னைத் துதிப்பேனாக.{85}(83-85) தேவியே, திரிபாதகையான {மூவழிகளில் செல்பவளான} நீ, பிரம்மலோகத்தையும் பார்க்கிறாய், உததி ராஜனின் பாரியையாக {சமுத்திர ராஜனின் மனைவியாக} தெளிவாகக் காணப்படும் இந்த உலகத்தையும் பார்க்கிறாய்.(86) தேவியே, நான் உன்னை போற்றுகிறேன், உன்னை வணங்குகிறேன்.
இந்த நரவியாகரர் {மனிதர்களில் புலியான ராமர்}, நல்ல முறையில் திரும்பி ராஜ்ஜியத்தை மீண்டும் அடையும்போது, உனக்கு நிறைவேற்படும் வகையில் சதசஹஸ்ர {நூறாயிரம் / ஒரு லக்ஷம்} பசுக்களையும், மென்மையான வஸ்திரங்களையும், அன்னத்தையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க நான் விரும்புகிறேன்.(87,88) தேவி, நாங்கள் மீண்டும் நகரை {அயோத்தியை} அடைந்ததும், சஹஸ்ர குடங்கள் சுராபானத்தையும் {ஆயிரங்குடங்கள் மதுபானத்தையும்}, மாமிச உணவையும் நான் உனக்குக் கொடையளிப்பேன்.(89) உன் தீரத்திலும் {கரையிலும்}, தீர்த்தங்களிலும் {புண்ணியத் தலங்களிலும்}, ஆலயங்களிலும் உள்ள தைவதங்கள் அனைவரையும் நான் வழிபடுவேன்.(90) அநகையே {பாபமற்றவளே}, இந்த மஹாபாஹு {பெரும் தோள்களைக் கொண்ட ராமர்}, உடன் பிறந்தவருடனும் {லக்ஷ்மணனுடனும்}, என்னுடனும் நலத்துடன் வனவாசத்திலிருந்து மீண்டும் அயோத்தியில் பிரவேசிப்பாராக" {என்றாள் சீதை}.(91)
திறன்மிக்கவளும், நிந்தனைக்கு அப்பாற்பட்டவளுமான சீதை இவ்வாறு சொல்லிவிட்டு, விரைந்து பாயும் தென் தீரத்தை {கங்கையின் தென் கரையை} அடைந்தாள்.(92) அந்த தீரத்தை அடைந்ததும், பரந்தபனான அந்த நரரிஷபன் {பகைவரை அடக்குபவனும், மனிதர்களில் காளையுமான ராமன்}, அந்த நாவத்தை {ஓடத்தைக்} கைவிட்டுத் தன் தம்பியுடனும், வைதேஹியுடனும் {அங்கிருந்து} புறப்பட்டான்.(93)
அப்போது அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ராமன்}, சுமித்ராநந்தனனிடம் {சுமித்திரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான லக்ஷ்மணனிடம்}, "ஜனங்களுள்ள இடங்களிலும், ஜனங்களற்ற இடங்களிலும் பாதுகாப்பை அளிக்க நீ தயாராக இருப்பாயாக.(94) ஜனங்களற்ற வனத்தில், எதிர்பாராத வகையில் ரக்ஷணத்திற்குரிய அவசிய காரியங்களைச் செய்ய வேண்டும். சௌமித்ரியே {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணா}, நீ முன்னே செல்வாயாக. சீதை உன்னைப் பின்தொடர்வாள்.(95) உன்னையும், சீதையையும் பாதுகாத்தவாறே நான் பின்தொடர்ந்து வருவேன். புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, லக்ஷ்மணா}, இங்கே நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(96) நம்மை மீறி நடைபெறும் காரியம் எதுவானாலும், அதை மீண்டும் சீராக்க இயலாது. நம்மால், வனவாசத்தின் துக்கத்தை வைதேஹி அனுபவிக்கப் போகிறாள்.(97) அடர்த்தியான ஜனங்களும், க்ஷேத்திரங்களும் {கழனிகளும்}, அராமங்களும் {தோட்டங்களும்} காணப்படாததும், சீரற்ற தன்மைகளைக் கொண்டதுமான {மேடு பள்ளங்களுடன் கூடியதுமான} வனத்திற்குள் இவள் {சீதை} பிரவேசிக்கப்போகிறாள்" {என்றான் ராமன்}.(98)
இராமனின் சொற்களைக் கேட்ட லக்ஷ்மணன் {அனைவருக்கும்} முன்னே சென்றான். உடனே சீதையும், ரகுநந்தனனான அந்த ராகவனைப் பின்தொடர்ந்தாள்.(99) தபஸ்வியான சுமந்திரன், கங்கையின் மறுகரையை விரைவாக அடைந்த ராமனை இடையறாமல் கண்டு, அவன் நெடுந்தூரத்தை அடைந்ததால் அவனைக் காண முடியாமல் கலக்கமடைந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான்.(100) லோகபாலர்களுக்கு நிகரான செல்வாக்குடையவனும், வரதனுமான {வரங்களை அளிப்பவனுமான} அந்த மஹாத்மா {ராமன்}, அந்த மஹாநதியை {கங்கையைக்} கடந்ததும், அழகிய பயிர்க்கழனிகளையே மாலையாகக் கொண்டதும், மனக்களிப்பைத் தருவதுமான வத்ஸத்தை {வத்ஸ தேசத்தை} மெல்ல மெல்ல நெருங்கினான்.(101) பசித்திருந்த இருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, வராஹம் {பன்றி}, ருஷ்யம் {கலைமான்}, பிருஷதம் {புள்ளிமான்}, மஹாருரு { கருப்பு சாரல்களுடைய பெரிய மான்} என்கிற நான்கு வகை மிருகங்களைக் கொன்று[3], அவற்றில் தூய்மையான பகுதிகளைத் துரிதமாக உண்டு, மாலை வேளையில் வசிப்பதற்காக ஒரு வனஸ்பதியை {மரத்தை} அடைந்தனர்.(102)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராமனும், லக்ஷ்மணனும் கொன்ற வராஹம் என்பது பன்றியாகவும் இருக்கலாம், மானாகவும் இருக்கலாம், ருஷ்யம் என்பது மானையும், பிருஷதம் என்பது புள்ளிமானையும், மஹாருரு என்பது பெரியவகை மானையும் குறிக்கும். மிருகம் என்ற சொல்லுக்கு மான் என்ற பொருளும், விலங்கு என்ற பொருளும் பொருந்தும். ஒருவேளை அவர்கள் நான்கு வகை மான்களைக் கொன்றிருக்கலாம். அல்லது மூன்று வகை மான்களையும், ஒரு பன்றியையும் கொன்றிருக்கலாம்" என்றிருக்கிறது.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 052ல் உள்ள சுலோகங்கள் : 102
Previous | | Sanskrit | | English | | Next |