Monday 25 July 2022

யமுனையைக் கடந்தது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 055 (34)

Crossing Yamuna | Ayodhya-Kanda-Sarga-055 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்திற்குச் செல்லும் வழி; யமுனையைக் கடந்தது; ஆற்றங்கரையில் வசிக்கத் தீர்மானித்தது; யமுனையையும், ஆலமரத்தையும் வணங்கிய சீதை; அழகிய வனம்...

Rama, Sita, Lakshmana in Yamuna forest

அரிந்தமர்களான {பகைவரை அடக்குபவரான} அந்த ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இரவில் அங்கேயே தங்கியபிறகு, {காலையில்} மஹாரிஷியை வணங்கிவிட்டு அந்த {சித்திரகூட} கிரியை நோக்கிப் புறப்பட்டனர்.(1) அந்த மஹாரிஷி {பரத்வாஜர்} ஸ்வஸ்த்யயனத்தை {அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கான சடங்கைச்} செய்து, அவர்கள் புறப்படுவதைக் கண்டு, பிதா புத்திரனுடன் செல்வதைப் போல சிறிது தூரம் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.(2) 

அப்போது, மஹாமுனியும், மஹாதேஜஸ்வியுமான அந்த பரத்வாஜர், சத்திய பராக்கிரமனான ராமனிடம் {இந்த} வசனத்தைச் சொன்னார்:(3) "மனுஜரிஷபா {மனிதர்களில் சிறந்தவனே}, கங்கா யமுனா சந்தியை அடைந்ததும், மேற்கு முகமாக காளிந்திநதியை {யமுனை ஆற்றைப்} பின்பற்றிச் செல்வாயாக.(4) இராகவா, பழங்காலத்தைச் சேர்ந்ததும், வேகமாகப் பாய்வதுமான காளிந்தி ஆபகத்தை {யமுனை ஆற்றை} அடைந்தபிறகு, பலர் நடந்து தேய்ந்த தீர்த்தத்தை {துறையைக்} காண்பாயாக.{5} அங்கே ஒரு பிலவத்தை {தெப்பத்தைச்} செய்து கொண்டு, {சூரிய தேவனின் மகளான} அந்த அம்ஷுமதி நதியை {கதிர்களைப் பிரதிபலிக்கும் யமுனை ஆற்றை} நீ கடப்பாயாக.(5,6அ) 

அதன் பிறகு, பல விருக்ஷங்களின் {மரங்களின்} மத்தியில் வளர்வதும், சியாமம் என்றழைக்கப்படுவதுமான பெரும் ஆலமரமொன்றை அடைவாயாக.{6} சீதை தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, சித்தர்களால் சேவிக்கப்படும் அதை {அந்த மரத்தை} மங்கலத் துதிகளால் துதிப்பாளாக.(6ஆ,7) அந்த விருக்ஷத்தை அடைந்து அங்கே வசிக்கவும் செய்யலாம், கடந்தும் செல்லலாம். அங்கிருந்து ஒரு குரோசம் மாத்திரம் சென்றதும், ரம்மியமான நீலக் கானகம் ஒன்றை நீ காண்பாய்.{8} அங்கே யமுனையைத் தொடும் மூங்கிற்புதர்களும், அதன் குறுக்காக பலாச {புரசு}, பதரி {இலந்தை} மரங்களும் இருக்கும்.(8,9அ) அதுவே சித்திரகூடத்திற்கான பாதையாகும். நான் அதில் பலமுறை பயணித்திருக்கிறேன்.{9} அது ரம்மியமானது; அமைதியானது; காட்டுத்தீயில் இருந்து விடுபட்டது" {என்றார் பரத்வாஜர்}.(9ஆ,10அ)

அந்த மஹாரிஷி அவ்வழியை இவ்வாறு அறிவித்ததும்,{10} இராமன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி வணங்கி, திரும்பிச் செல்லும்படி அவரைத் தூண்டி அவ்வாறே அனுப்பிவைத்தான்.(10ஆ,11அ) அந்த முனிவர் திரும்பிச் சென்றதும், ராமன் லக்ஷ்மணனிடம் {இதைச்} சொன்னான்:{11} "சௌமித்ரியே, நாம் புண்ணியம் செய்தவர்கள் என்பதாலேயே முனிவர் நம்மிடம் கருணை காட்டினார்" {என்றான்}.{11ஆ,12அ)

விவேகிகளான அந்த புருஷவியாகரர்கள் இவ்வாறே ஆலோசித்தனர்.{12} பிறகு சீதையை முன்னிட்டுக்கொண்டு காளிந்தியை {யமுனை ஆற்றை} நோக்கிச் சென்றனர்.(12ஆ,13அ) பிறகு அவர்கள் அனைவரும் வேகமாக ஓடும் காளிந்தி நதியை அடைந்து,{13} அந்த நதியின் ஜலத்தைக் கடக்கும் விருப்பத்தில் சிந்திக்கத் தொடங்கினர்.(13ஆ,14அ) அதன்பின்னர் அவ்விருவரும், காய்ந்து உலர்ந்த கட்டைகளைக் கொண்டு மஹாபிலவம் {பெரும் தெப்பம்} ஒன்றை அமைத்தனர்.{14} அதில் உலர்ந்த மூங்கில்களைப் பரப்பி, புற்களை அதில் விரித்தனர்.(14ஆ,15அ) அப்போது வீரியவானான லக்ஷ்மணன், வஞ்சிக் கிளைகளையும், நாவல் மரக்கிளைகளையும் வெட்டி சீதைக்கென சுகமான இருக்கை ஒன்றை அமைத்தான்.(15ஆ,16அ) 

தாசரதியான ராமன், லஜ்ஜையுடன் {நாணத்துடன்} கூடியவளும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவளும், ஸ்ரீக்கு ஒப்பானவளுமான தன் பிரியத்திற்குரியவள் அந்தப் பிலவத்தில் {தெப்பத்தில்} ஏறுவதற்கு உதவினான்.(16ஆ,17அ) இராமன், அந்தப் பிலவத்தில் வைதேஹியின் அருகில் வஸ்திரங்களையும் {உடைகளையும்}, பூஷணங்களையும் {ஆபரணங்களையும்}, மண்வெட்டியையும், கூடையையும், தன் ஆயுதங்களையும் வைத்தான்.(17ஆ,18அ) வீரர்களான அந்த தசரதாத்மஜர்கள் {தசரதனின் மகன்கள்}, தெப்பத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு முதலில் சீதையை ஏற்றிவிட்டு, அதன்பிறகு கவனமாகப் பயணித்தனர்.(18ஆ,19அ) 

சீதை, அந்தக் காளிந்தியின் {யமுனை ஆற்றின்} மத்தியப் பகுதியை அடைந்ததும், "தேவி, நான் உன்னைக் கடக்கிறேன். நலம் விளையட்டும். என் பதி தன் விரதத்தை நிறைவேற்றட்டும். இக்ஷ்வாகுக்களால் ஆளப்படும் நகருக்கு இந்த ராமர் நலமாகத் திரும்பும்போது, ஆயிரம் பசுக்களையும், நூறு குடங்கள் சுராபானத்தையும் கொடுத்து உன்னை வழிபடுவேன்" என்று சொல்லி வணங்கினாள்.(19ஆ-21அ)

வரவர்ணினியான {சிறந்த நிறம் கொண்டவளான} சீதை, இவ்வாறு கூப்பிய கைகளுடன் காளிந்தியை வணங்கிவிட்டு,  தக்ஷிண தீரத்தை {அந்த ஆற்றின் தென்கரையை} அடைந்தாள்.(21ஆ,22அ) அலைகளையே மாலைகளாகவும், கதிர்களையே பிரதிபலிப்பாகவும், விருக்ஷங்கள் பலவற்றைத் தன் தீரத்திலும் {கரையிலும்} கொண்டவளும், வேகமாகப் பாய்பவளுமான யமுனா நதியை இவ்வாறே அவர்கள் அந்தப் பிலவத்தின் மூலம் கடந்தனர்.(22ஆ,23அ) இவ்வாறு கடந்ததும், அந்தப் பிலவத்தை {தெப்பத்தைக்} கைவிட்டு, யமுனையின் வனத்தில் பயணித்துப் பச்சை இலைகளைக் கொண்டதும், குளுமையானதுமான சியாமம் என்ற அந்த ஆலமரத்தை அடைந்தனர்.(23ஆ,24அ)

அந்த ஆலமரத்தை நெருங்கிய வைதேஹி, "மஹாவிருக்ஷமே, உன்னை வணங்குகிறேன். என் பதி விரதத்தை நிறைவேற்றுவாராக. சிறப்புமிக்க கௌசல்யையும், சுமித்ரையையும் நான் மீண்டும் பார்ப்பேனாக" என்ற வாக்கியத்தைச் சொன்னாள். சீதை இதைச் சொல்லிவிட்டு, கூப்பிய கைகளுடன் அந்த வனஸ்பதியை {மரத்தை} வலம் வந்தாள்.(24ஆ-26அ)

அப்போது ராமன், நிந்திக்கத்தகாதவளும் {தன் அன்புக்குரியவளும்}, மனம் கோணாமல் நடந்து கொள்பவளுமான சீதை இவ்வாறு யாசிப்பதைக் கண்டு, லக்ஷ்மணனிடம் {இதைச்} சொன்னான்:(26ஆ,27அ) "பரதனுஜா {பரதனின் தம்பியே}, மனிதர்களில் சிறந்தவனே, சீதையை அழைத்துக் கொண்டு நீ முன்னே செல்வாயாக. ஆயுதங்களுடன் நான் உங்கள் பின்னால் வருகிறேன்.(27ஆ,28அ) ஜனகனின் மகள் {ஜானகி} கேட்கும் பழங்கள், புஷ்பங்கள் எதையும் கொடுப்பாயாக. வைதேஹியின் மனம் விரும்பும் எதையும் அப்போதைக்கப்போது கொடுப்பாயாக" என்றான்.(28ஆ,29அ)

அவ்விருவருக்கும் மத்தியில் நடந்து சென்ற ஜனகனின் மகள், மத்த கஜங்கள் {ஆண் யானைகள்} இரண்டிற்கு மத்தியில் செல்லும் சுப நாகத்தை {நல்ல பெண் யானையைப்} போல இருந்தாள்.(29ஆ,30அ) அந்த அபலை {பலமற்ற சீதை}, அதற்கு முன் கண்டிராத ஏதோவொரு மரத்தையோ, புதரையோ, புஷ்பங்களுடன் ஒளிரும் லதையையோ {பூக்களுடன் கூடிய கொடியையோ} காணும்போதெல்லாம் {அதுகுறித்து} ராமனிடம் விசாரித்தாள்.(30ஆ,31அ) சீதையின் சொற்களைப் புரிந்து கொண்ட லக்ஷ்மணன், மலர்கள் நிறைந்த மரங்களின் பலவிதமான கிளைகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.(31ஆ,32அ) பிறகு அந்த ஜனகராஜன் மகள் {சீதை}, விசித்திரமான மணற்குன்றுகளையும், நீரையும் கொண்டதும், ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, சாரஸங்கள் {வெண்ணாரைகள்} ஆகியவற்றின் நாதம் நிறைந்ததுமான அந்த {யமுனா} நதியைக் கண்டு மகிழ்ந்தாள்.(32ஆ,33அ)

உடன் பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள், ஒரு குரோசம் மாத்திரம் யமுனையின் வனத்தில் பயணித்துத் தூய்மையான மிருகங்கள் {மான்கள்} பலவற்றைக் கொன்று உண்டனர்.(33ஆ,34அ) மயில்களின் அகவல்கள், குயில்களின் கூவல்கள் ஆகியவற்றால் ஒலிக்கப்பட்டதும், வானரங்களும் {குரங்குகளும்}, வாரணங்களும் {யானைகளும்} நிறைந்ததுமான அந்த சுபவனத்தில் வாடாமுகத்துடன் திரிந்து, நதிக்கரையில் சமமான இடத்தைக் கண்டு, வசிப்பதற்கான ஓரிடத்தை அடைந்தனர்.(34ஆ,இ,ஈ,உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 055ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை