Showing posts with label அங்கதன். Show all posts
Showing posts with label அங்கதன். Show all posts

Friday, 12 September 2025

மஹாபார்ஷ்வ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 098 (26)

Mahaparshva killed | Yuddha-Kanda-Sarga-098 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹாபார்ஷ்வனைத் தாக்கிய அங்கதனும், ஜாம்பவானும்; மஹாபார்ஷ்வனின் குதிரைகளைக் கொன்று, ரதத்தை பங்கம் செய்த ஜாம்பவான்; அங்கதனின் முஷ்டியால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன்...

Angada fights with Mahaparshva

மஹாபலவானான மஹாபார்ஷ்வன்[1], சுக்ரீவனால் மஹோதரன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்து, அங்கதனின் சம்முவை {படையைத்} தன் பயங்கரக் கணைகளால் கலங்கடித்தான்.(1,2அ) காம்பிலிருந்து பழங்களை {வீழ்த்தும்} அநிலனை {காற்றைப்} போல அவன் {மஹாபார்ஷ்வன்}, சர்வ வானர முக்கியர்களின் உத்தம அங்கங்களை காயங்களிலிருந்து வீழ்த்தினான் {தலைகளை அவர்களின் உடல்களிலிருந்து வீழ்த்தினான்}.(2ஆ,3அ) பிறகு விரைவாக அந்த ராக்ஷசன், தன் கணைகளைக் கொண்டு சில வானரர்களின் கைகளைத் துண்டித்தான், மேலும் சிலரின் பக்கவாட்டுகளை வெட்டினான்.(3ஆ,4அ) மஹாபார்ஷ்வனின் பாணவேகத்தால் வேதனையடைந்த அந்த சர்வ வானரர்களும், வேதனையை எதிர்கொள்ள முடியாமல் நனவிழந்தவர்கள் ஆனார்கள்.(4ஆ,5அ)

Wednesday, 2 July 2025

கும்ப வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 076 (95)

Kumbha killed | Yuddha-Kanda-Sarga-076 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கம்பனன், பிரஜங்கன் ஆகியோரை அங்கதனும், சோணிதாக்ஷனை துவிவிதனும், யூபாக்ஷனை மைந்தனும், கும்பனை சுக்ரீவனும் கொன்றது...

Monkey king Sugreeva grabing the bow of rakshasa Kumbha

வீரஜனங்களுக்கு அழிவைத் தந்த அந்த கோரமான போர் நடந்து கொண்டிருந்த போது, போரில் உற்சாகம் கொண்ட அங்கதன், வீரம் மிக்க கம்பனனைத் தாக்கினான்.(1) அங்கதனை {அறைகூவி} அழைத்த அந்த கம்பனன், கதையைக் கொண்டு கோபத்துடன் வேகமாகத் தாக்கினான். கடுமையாகத் தாக்கப்பட்ட அவன் {அங்கதன்} கலக்கமடைந்தான்.(2) தேஜஸ்வியான அவன் {அங்கதன்}, நனவு மீண்டு, கிரி சிகரம் ஒன்றை வீசினான். அந்த அடியால் பீடிக்கப்பட்ட கம்பனன் புவியில் விழுந்தான்.(3) 

Thursday, 15 May 2025

நராந்தக வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 069 (96)

Narantaka killed | Yuddha-Kanda-Sarga-069 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் மகன்களான திரிசிரன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் செய்த போர். பாதுகாக்க அனுப்பப்பட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்; நராந்தகனைக் கொன்ற அங்கதன்...

Trishira, Devantaka, Narantaka Atikaya join the fight


A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image from December 1976

இவ்வாறு சோகத்தில் மூழ்கிப் புலம்பும் துராத்மாவான ராவணனின் வாக்கியங்களைக் கேட்ட திரிசிரன் {திரிசிரஸ்[1], பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "மஹாவீரியரான எங்கள் மத்தியம தாதா {நடுத்தந்தை / சிறிய தந்தையான கும்பகர்ணர்} இவ்வாறே கொல்லப்பட்டார். ஆனால், ராஜரே, சத்புருஷர்கள் {நன்மக்கள்}, உம்மைப் போல் புலம்புவதில்லை.(2) பிரபோ, நீர் திரிபுவனங்களையும் வெல்லத்தகுந்தவர். அத்தகைய நீர் பிராகிருதர்களை {சாதாரணர்களைப்} போல ஏன் புலம்புகிறீர்?(3) பிரம்மாவால் தத்தம் செய்யப்பட்ட சக்தி {வேலாயுதம்} உம்மிடம் இருக்கிறது. கவசமும், சாயகமும் {கணையும்}, தனுவும் {வில்லும்}, மேகத்திற்கு சமமான ஸ்வனத்தை எழுப்பக்கூடியதும், ஆயிரம் கழுதைகள் பூட்டப்பட்டதுமான ரதமும் இருக்கின்றன.(4) ஒருகாலத்தில் சஸ்திரங்களேதுமில்லாமலேயே தேவதானவர்களை நீர் அழித்திருக்கிறீர். அத்தகைய நீர், சர்வாயுத சம்பன்னராக, ராமனை அடக்கத்தகுந்தவராகவே இருக்கிறீர்.(5) மஹாராஜாவே, விருப்பம்போல் இருப்பீராக. நான் புறப்படுகிறேன். பன்னகங்களை {பாம்புகளை அழிக்கும்} கருடன் போல, ரணத்தில் உமது சத்ருக்களைக் களையப் போகிறேன்.(6) தேவராஜனால் சம்பரனும், விஷ்ணுவால் நரகனும்[2] எப்படியோ, அப்படியே இன்று யுத்தத்தில் ராமன் என்னால் தாக்கப்பட்டு வீழ்வான்" {என்றான் திரிசிரன்}.(7)

Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

Tuesday, 31 December 2024

வஜ்ரதம்ஷ்ட்ர வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 054 (38)

Vajradamshtra killed | Yuddha-Kanda-Sarga-054 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வஜ்ரதம்ஷ்டிரனுடன் போரிட்டு வாளால் அவனது தலையை வெட்டிக் கொன்ற அங்கதன்...

Fight between Angadha and Vajradamshtra

மஹாபலவானான ராக்ஷசன் வஜ்ரதம்ஷ்ட்ரன், தன் பலத்தின் {படையின்} அழிவாலும், அங்கதனின் வெற்றியாலும் குரோதம் அடைந்தான்.(1) அவன், சக்ரனின் அசனியை {இந்திரனின் இடியைப் போல} ஒலிக்கும் கோரமான தன் தனுவை {பயங்கரமான வில்லை} வளைத்து, வானரர்களின் அனீகத்தை {படையை} சரமாரியால் {கணைமழையால்} சிதறடித்தான்.(2) அப்போது, முக்கியர்களும், சூரர்களுமான அந்த ராக்ஷசர்கள், ரதங்களில் அமர்ந்து, நானாவித ஆயுதங்களை ஏந்தியபடியே ரணத்தில் {போர்க்களத்தில்} யுத்தம் புரிந்தனர்.(3) வானரர்களில் சூரர்களான அந்த சர்வ பிலவக உத்தமர்களும், அப்போது பாறைகளைக் கைகளில் ஏந்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் ஒன்று கூடியவர்களாக யுத்தம் புரிந்தனர்.(4)

Saturday, 28 December 2024

வஜ்ரதம்ஷ்டிரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 053 (33)

Vajradamshtra | Yuddha-Kanda-Sarga-053 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போருக்கு வஜ்ரதம்ஷ்டிரனை அனுப்பிய ராவணன்; வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த கடும்போர்...

Vajradamshtra marching for war

இராக்ஷசேஷ்வரன் ராவணன், தூம்ராக்ஷன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதைக்} கேட்டு உரகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சு விட்டு மஹா குரோதத்தில் ஆழ்ந்தான்.{1} தீர்க்கமாகவும், உஷ்ணமாகவும் பெருமூச்சுவிட்டுக் குரோதத்தில் மதிமயங்கிய அவன் {ராவணன்}, குரூரனும், மஹாபலவானுமான வஜ்ரதம்ஷ்ட்ரன்[1] என்ற ராக்ஷசனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1,2) “வீரா, ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக நீ புறப்பட்டுச் செல்வாயாக. சென்று, வானரர்களுடன் சேர்த்து தாசரதியான ராமனையும், சுக்ரீவனையும் கொல்வாயாக” {என்றான் ராவணன்}.(3)

[1] கம்பராமாயணத்தில், இந்த வஜ்ரதம்ஷ்ட்ரன், “வச்சிரத்து எயிற்றவன்” என்று குறிப்பிடப்படுகிறான். வால்மீகியில் வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்படுகிறான். கம்பனில் வச்சிரத்து எயிற்றவன் ஹனுமானால் கொல்லப்படுகிறான். கம்பனில் புகைநிறக் கண்ணன் {தூம்ராக்ஷன்} ஹனுமானால் கொல்லப்பட்ட பிறகு, மாபக்கன் என்ற ராக்ஷசனை அங்கதன் கொல்கிறான்.

“அப்படியே ஆகட்டும்” என்று ராக்ஷசேஷ்வரனிடம் சொன்ன அந்த மாயாவி {வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பரிவாரத்தைச் சேர்ந்த ஏராளமானோரால் சூழப்பட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்[2].{4} நாகங்கள், அஷ்வங்கள் {யானைகள், குதிரைகள், கோவேறு} கழுதைகள், ஒட்டகங்கள், பதாகைகள், துவஜங்களுடன் கூடிய ரதங்கள் ஆகியவற்றால் சூழப்பெற்று ஒளிர்பவனாக அவன் இருந்தான்.(4,5) அப்படியே, விசித்திரமான கேயூரங்கள், மகுடம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், கவசந்தரித்து, தனுசை ஏந்தியவனாகவும் புறப்பட்டுச் சென்றான்.(6) சம்முபதியான அவன் {படைத்தலைவனான வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தப்த காஞ்சனத்தால் {புடம்போட்ட பொன்னால்} ஜொலிப்பதுமான ரதத்தை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து} அதில் ஏறினான்.(7)


யஷ்டிகள் {தடிகள்}, சித்திரமான தோமரங்கள், சூலங்கள், முசலங்கள், பிண்டிபாலங்கள், பாசங்கள், சக்திகள்,{8} பட்டிசங்கள், கட்கங்கள் {வாள்கள்}, சக்திகள், கதைகள், கூரிய பரசுகள், ஆகிய விதவிதமான சஸ்திரங்களுடன் காலாட்படையினர் அணிவகுத்துச் சென்றனர்.(8,9) விசித்திரமான ஆடைகளை அணிந்து ஒளிர்பவர்களும், மதங்கொண்ட கஜங்களில் இருக்கும் சூரர்களுமான சர்வ ராக்ஷச புங்கவர்களும், அசையும் பர்வதங்களைப் போல அணிவகுத்துச் சென்றனர்.(10) யுத்தகுசலர்களான {போரில் தேர்ந்தவர்களான} அவர்களும், தோமரங்கள், அங்குசங்கள் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவர்களும், மஹாபலவான்களுக்குரிய லக்ஷணங்கள் பொருந்திய வேறு சிலரும் {அவ்வாறே யானைகளில்} ஏறினர்.(11) 

அப்படிப் புறப்பட்டுச் சென்ற அந்த சர்வ ராக்ஷச பலமும் {படையும்}, மழைக்காலத்தில் மின்னலுடன் நாதம் செய்யும் மேகத்தைப் போல சோபித்தபடியே,{12} யூதபன் {குழுத் தலைவன்} அங்கதன் எங்கிருந்தானோ, அந்த தக்ஷிண துவாரத்தில் {தென்வாயிலில்} வெளிப்பட்டது.(12,13அ) அவர்கள் அப்படி வெளிப்பட்ட போது, அசுபங்கள் {தீய சகுனங்கள்} தோன்றின.{13ஆ} அப்போது, மேகமற்ற ஆகாசத்திலிருந்து தீவிரமான உல்முகங்கள் {விண்கற்கள்} விழுந்தன. கோரமான நரிகள், பாவக ஜுவாலைகளை {நெருப்புச் சுடர்களைக்} கக்கியபடியே பயங்கரமாக ஊளையிட்டன.(13ஆ,14) பிறகு, கோரமான மிருகங்கள், ராக்ஷசப் போர்வீரர்களின் மரணத்தை முன்னறிவித்தன. {அவ்வாறே} புறப்பட்டுச் சென்ற போர்வீரர்களும் அச்சமடைந்து கால் இடறி விழுந்தனர்.(15)

மஹாபலவானும், தேஜஸ்வியுமான வஜ்ரதம்ஷ்டிரன் இந்த உத்பாதங்களை {அபசகுனங்களைக்} கண்டு, தைரியத்தை நம்பி ரண உற்சாகத்துடன் {போரிடும் ஆவலுடன்} புறப்பட்டுச் சென்றான்.(16) வெற்றியை விரும்புகிறவர்களான வானரர்கள், அவர்கள் {ராக்ஷசர்கள்} புறப்பட்டு வருவதைக் கண்டு, பத்துத் திசைகளையும் தங்கள் மஹாநாதத்தால் நிறைத்தனர்.(17) பிறகு, அன்யோன்யம் வதம் செய்ய {ஒருவரையொருவர் கொல்ல} விரும்பும் ஹரிக்களுக்கும் {குரங்குகளுக்கும்}, கோரர்களும், பயங்கர ரூபம் கொண்டவர்களுமான அந்த ராக்ஷசர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் மூண்டது.(18) மஹா உற்சாகத்துடன் புறப்பட்டு வந்த அவர்கள், தேகங்களும், சிரங்களும் வெட்டப்பட்டு, சர்வாங்கங்களும் உதிரத்தால் நனைந்தவர்களாக தரணீதலத்தில் {தரையில்} விழுந்தனர்.(19) சமரில் புறமுதுகிடாத சில சூரர்கள், பரிகங்களைக் கையில் ஏந்திக் கொண்டு அன்யோன்யம் {ஒருவரையொருவர்} அணுகி விதவிதமான சஸ்திரங்களை ஏவினர்.(20)

அங்கே மரங்கள், பாறைகள், சஸ்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு கோரமாக ஹிருதயங்களைப் பிளக்கும் உரத்த ஒலி போர்க்களத்தில் கேட்டது.(21) அங்கே வெளிப்பட்ட ரதங்களின் நேமிஸ்வனம் {சக்கரவொலி}, தனுசின் {வில்லின்} ஒலி கேட்டது. சங்கு, பேரிகை, மிருதங்கங்களின் ஆரவார ஸ்வனமும் கேட்டது.(22,23அ) சிலர் அஸ்திரங்களைக் கைவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு போர் செய்யாதிருந்தனர்.{23ஆ} உள்ளங்கைகள், சரணங்கள் {கால்கள்}, முஷ்டிகள் {கைமுட்டிகள்}, மரங்கள், முழங்கால்கள் {கால்முட்டிகள்} ஆகியவற்றைக் கொண்டு வானரர்களால் ஹதம் செய்யப்பட்ட {கொல்லப்பட்ட} சில ராக்ஷசர்களின் சிதைந்த தேகங்கள் பாறைகளால் நசுக்கப்பட்டன.(23ஆ-25அ)

உலக சம்ஹாரத்தின் போது பாச ஹஸ்தனான அந்தகனை {பிரளய காலத்தில் கையில் பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப்} போல வஜ்ரதம்ஷ்ட்ரன், ரணத்தில் {போரில்} தன் பாணங்களால் ஹரிக்களை {குரங்குகளை} அச்சுறுத்தியபடியே திரிந்தான்.(25ஆ,26அ) நானாவித அஸ்திரங்களைக் கொண்டவர்களும், அஸ்திரவித்துகளும், பலவான்களுமான ராக்ஷசர்கள், குரோதத்தில் மூர்ச்சித்தவர்களாக ரணத்தில் {போரில்} வானர சைனியத்தை எதிர்த்துச் சென்றனர்.(26ஆ,27அ)

அதைக் கண்ட வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன்}, சம்வர்த்தக அனலனை {பிரளய கால அக்னியைப்} போல இரு மடங்கு குரோதத்துடன், ரணத்தில் {போரில்} அந்த ராக்ஷசர்கள் அனைவரையும் கொன்றான்.(27ஆ,28அ) குரோதத்தால் கண்கள் சிவந்தவனும், வீரியவானுமான அங்கதன், ஒரு விருக்ஷத்தைப் பிடுங்கி, இழிந்த மிருகங்களை {கொல்லும்} சிம்ஹம் போல, ராக்ஷச கணத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரையும், சக்ரனுக்குத் துல்லியமான பராக்கிரமத்துடன் கோரமாகக் கொன்றான்.(28ஆ,29) பீம விக்கிரமர்களான ராக்ஷசர்கள், அங்கே அங்கதனால் தாக்கப்பட்டு, சிதைந்த சிரசுகளுடன் {தலைகளுடன்}, வெட்டப்பட்ட மரங்களைப் போல விழுந்தனர்[3].(30)

[3] மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்

- கம்பராமாயணம் 7374ம் பாடல், யுத்த காண்டம், படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்:  போரிடுபவர்களான மாபக்கனும் {வஜ்ரதம்ஷ்ட்ரனும்}, அங்கதனும் விளக்கைப் போல் எரிந்து எழும் சிவந்த கண்களையும், சினத்தையும், தூபத்தைப் போல் புகை வெளிப்படும் பெருமூச்சினையும் உடையவர்களாக ஒருவரையொருவர் கொல்ல நினைத்து {எதிரிகளை} அழித்துக் கொல்வதைத் தொடர்ந்தனர்.

அப்போது ரதங்கள், சித்திரமான துவஜங்கள் {கொடிமரங்கள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, உதிரத்தில் நனைந்த ஹரிராக்ஷசர்களின் சரீரங்கள் {ரத்தத்தில் நனைந்த குரங்குகள், ராக்ஷசர்களின் உடல்கள்} ஆகியவற்றுடன் பூமியானது பயங்கரமாகத் தெரிந்தது.(31) இரணத்தில் {போர்க்களத்தில்} பூமியானது, ஹாரங்கள், கேயூரங்கள் {கைவளைகள்}, வஸ்திரங்கள், சத்ரங்கள் {குடைகள்} ஆகியவற்றுடன் சரத்கால நிசியை {கூதிர்கால இரவைப்} போல அலங்கரிக்கப்பட்டது.(32) பவனனின் {வாயுவின்} வேகத்தால் மேகம் எப்படியோ, அப்படியே அங்கே அந்த மஹத்தான ராக்ஷச பலம் {படை} அங்கதனின் வேகத்தால் நடுக்கம் அடைந்தது.(33)

யுத்த காண்டம் சர்க்கம் – 053ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Thursday, 14 November 2024

வந்தான் கருடன் | யுத்த காண்டம் சர்க்கம் - 050 (65)

Enter Garuda | Yuddha-Kanda-Sarga-050 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு நம்பிக்கையளித்த ஜாம்பவான்; விபீஷணனின் அழுகை; சுக்ரீவன் சொன்ன ஆறுதல்; கருடன் வந்து, ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தில் இருந்து விடுவித்தது...

Eagle king Garuda Speaking to Rama

அப்போது, மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான ஹரிராஜன் {சுக்ரீவன், பின்வருமாறு} சொன்னான் “ஏன் இந்த சேனை ஜலத்தில் காற்றால் நிலைதடுமாறும் நாவத்தை {ஓடத்தைப்} போலக் கலக்கமடைகிறது?” {என்றான் சுக்ரீவன்}.(1)

சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட வாலிபுத்ரன் அங்கதன், {பின்வருமாறு} கூறினான், “இராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும் நீர் பார்க்கவில்லையா?{2} மஹாத்மாக்களும், தசரதாத்மஜர்களுமான இந்த வீரர்கள் இருவரும், சரஜாலத்தால் {கணை வலையால்} மறைக்கப்பட்டு, உதிரத்தால் நனைந்து, சரதல்பத்தில் {கணைப்படுக்கையில்} சயனிக்கின்றனர்” {என்றான் அங்கதன்}.(2,3) 

Friday, 25 October 2024

நிசாயுத்தம் | யுத்த காண்டம் சர்க்கம் - 044 (39)

Nocturnal war | Yuddha-Kanda-Sarga-044 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரவிலும் தொடர்ந்த போர்; இந்திரஜித்தை வென்ற அங்கதன்; ராமலக்ஷ்மணர்களை சர்ப்பபாசத்தில் கட்டிய இந்திரஜித்...

Angada attacking a chariot

வானர ராக்ஷசர்களான அவர்கள் இப்படி யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே ரவி அஸ்தமடைந்து {சூரியன் மறைந்து}, பிராணஹாரிணியான {உயிரைப் பறிக்கும்} ராத்திரி தொடங்கியது.(1) பிறகு அன்யோன்யம் கடும் வைரம் கொண்டவர்களும், கோரர்களும், ஜயத்தை இச்சிப்பவர்களுமான வானர ராக்ஷசர்களுக்கிடையில் நிசாயுத்தம் {இரவுப் போர்} தொடங்கியது.(2) அந்தக் காரிருளில், "நீ ராக்ஷசன்" என்று ஹரயர்களும் {குரங்குகளும்}, "நீ ஹரி" என்று ராக்ஷசர்களும் சொல்லிக் கொண்டே அன்யோன்யம் தாக்கிக் கொண்டு போரிட்டனர்.(3) அந்த சைனியத்தில், "தாக்கு", "வெட்டு", "வா" என்றும், "ஏன் ஓடுகிறாய்" என்றும் ஆரவார சப்தம் கேட்டது.(4) அந்த இருளில், காஞ்சனப் போரணிகள் பூண்ட கரிய ராக்ஷசர்கள், ஒளிரும் ஔஷதிகளை {மூலிகைகளைக்} கொண்ட வனங்களுடன் கூடிய சைலேந்திரங்களை {பெரும் மலைகளைப்} போலத் தெரிந்தனர்.(5) 

Wednesday, 23 October 2024

துவந்தங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 043 (46)

Duels | Yuddha-Kanda-Sarga-043 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த தனிப்போர்கள்...

Fight between Vanaras and Rakshasas

பிறகு, மஹாத்மாக்களான அந்த வானரர்கள் செய்த யுத்தத்தின் பயங்கரத்தைப் பொறுக்க முடியாத ராக்ஷசர்கள் பெரும் கோபம் அடைந்தனர்.(1) காஞ்சன பீடங்கள் {பொற்தவிசுகள்} பூண்ட ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, கொழுந்து விட்டு எரியும் அக்னிக்கு ஒப்பான துவஜங்களுடனும் ஆதித்யனைப் போலப் பிரகாசிக்கும் ரதங்களில், மனத்தை மயக்கும் கவசங்கள் பூண்டு,{2} பத்துத் திசைகளிலும் நாதம் செய்தபடியே ராக்ஷசப் புலிகள் சென்றனர். இராவணனின் ஜயத்தை விரும்பிய ராக்ஷசர்கள் பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்தனர்.(2,3) ஜயத்தை விரும்பும் வானரர்களின் பலமிக்க சம்முவும் {படையும்}, கோர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசர்களின் சேனையை எதிர்த்துச் சென்றது.(4) அதே நேரத்தில் அன்யோன்யம் தாக்கிக் கொண்ட அந்த ராக்ஷசர்களுக்கும் வானரர்களுக்கும் இடையில் துவந்த யுத்தம் {மற்போர்}[1] உண்டானது.(5)

Thursday, 10 October 2024

அங்கதன் தூது | யுத்த காண்டம் சர்க்கம் - 041 (100)

Angada sent as a messenger | Yuddha-Kanda-Sarga-041 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் செயலைக் கண்டித்த ராமன்; தூதனுப்பப்பட்ட அங்கதன்; அவனைக் கைப்பற்ற ஆணையிட்ட ராவணன்; கோபுரத்தைச் சிதைத்து ராமனிடம் திரும்பிய அங்கதன்...

Angada and Ravana

அப்போது லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, சுக்ரீவனிடம் நிமித்தங்களை {போரில் ஏற்பட்ட அடையாளங்களைக்} கண்டு, அவனைத் தழுவிக் கொண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(1) "என்னுடன் ஆலோசிக்காமல் இத்தகைய அந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய். ஜனேஷ்வரர்கள் {மக்கள் தலைவர்கள்} இவ்வாறான சாகசங்களைச் செய்ய மாட்டார்கள்.(2) சாகசப்பிரியா, வீரா, என்னையும், இந்தப் படையையும், விபீஷணனையும் சந்தேகத்தில் நிறுத்திவிட்டு, கஷ்டமான இந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய்.(3) அரிந்தமா {பகைவரைக் கொல்பவனே}, வீரா, இனிமேல் இவ்விதமாகச் செயல்படாதே. மஹாபாஹுவே, சத்ருக்னா {பகைவரை அழிப்பவனே}, உனக்குக் கொஞ்சம் கெடுதி விளைந்தாலும்,[1] எனக்கு, சீதையாலோ, பரதனாலோ, லக்ஷ்மணனாலோ, சத்ருக்னனாலோ, ஏன் என் சரீரத்தினாலோகூட ஆகப் போகும் காரியம் என்ன?(4,5) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் சமமானவனே, உன் வீரியத்தை நான் அறிந்தவனாக இருந்தும், பூர்வத்தில் நீ வராதபோது என் மதியில் நான் ஒன்றை நிச்சயித்துக் கொண்டேன்.{6} யுத்தத்தில் புத்திரர்கள், படை, வாஹனங்களுடன் கூடிய ராவணனைக் கொன்று, லங்கையில் விபீஷணனை அபிஷேகித்து,{7} பரதனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு என் தேஹத்தைக் கைவிடுவேன் {என்று என் மனத்தில் நிச்சயம் செய்து கொண்டேன்" என்றான் ராமன்}.(6-8அ)

Friday, 9 August 2024

ஒற்றன் சார்தூலன், தூதன் சுகன் | யுத்த காண்டம் சர்க்கம் - 020 (37)

The envoy, Suka | Yuddha-Kanda-Sarga-020 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுகனை சுக்ரீவனிடம் தூதனுப்பிய ராவணன்; சுகனைக் கைப்பற்றிய வானரர்கள்; கொல்லப்படுவதைத் தடுத்து அவனை விடுவித்த ராமன்...

Suka speaking to Sugreeva

பிறகு, வீரியவானும், சார்தூலன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், முகாமிட்டு, சுக்ரீவனால் பாலிக்கப்பட்ட துவஜனீயை {கொடிகளுடன் கூடிய படையை} நெருங்கி வந்து பார்த்தான்[1].(1) துராத்மாவான ராக்ஷசராஜன் ராவணனின் சாரனான {ஒற்றனான} அந்த ராக்ஷசன், பதற்றமின்றி அனைத்துப் பக்கங்களில் இருந்து அதை {படையைக்} கண்டு, வேகமாகத் திரும்பி,{2} லங்கையை அடைந்து, ராஜனிடம் இதைச் சொன்னான்:(2,3அ) "இரண்டாம் சாகரத்தைப் போல, ஆழம் மிகுந்ததும், அளவிடமுடியாததுமான இந்த வானர, ரிக்ஷௌகம் {வானரர்களும், கரடிகளும் அடங்கிய கூட்டம்} லங்கையை நெருங்குகிறது.(3ஆ,4அ) உத்தமர் தசரதரின் புத்திரர்களும், ரூபசம்பன்னர்களும் {அழகு நிறைந்தவர்களும்}, மனவலிமைமிக்கவர்களும், உடன்பிறந்தவர்களுமான இந்த ராமலக்ஷ்மணர்கள், சீதையின் பதம் வர, சாகரத்தை அடைந்து முகாமிட்டிருக்கின்றனர்.(4ஆ,5) மஹாராஜாவே, ஆகாசத்தில் வலம்வந்தால், பலம் {படை}, பத்து யோஜனைகள் எங்கும் பரவியிருப்பதாகத் தெரிகிறது. சீக்கிரம் தத்துவபூதத்தை {உண்மையை} அறிந்து கொள்வதே உமக்குத் தகும்.(6) மஹாராஜாவே, உம்முடைய தூதர்களை சீக்கிரமே அனுப்பி கவனித்து அறிந்து கொள்வதே தகும். இதில் தானத்தையாவது, சாமத்தையாவது, பேதத்தையாவது பயன்படுத்த வேண்டும்" {என்றான் சார்தூலன்}.(7)

Saturday, 3 August 2024

விபீஷண சரணாகதி | யுத்த காண்டம் சர்க்கம் - 017 (68)

Vibheeshana seeks refuge | Yuddha-Kanda-Sarga-017 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை நாடிச் சென்ற விபீஷணன்; அமைச்சர்களுடன் ஆலோசித்த ராமன்...

Sugreeva seeing Vibheeshana coming over the sea

இவ்வாறான கடும் வாக்கியத்தை ராவணனிடம் சொன்ன ராவணானுஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, ஒரு முஹூர்த்தத்தில் ராமனும், லக்ஷ்மணனும் இருந்த இடத்தை அடைந்தான்.(1) மஹீயில் நின்று கொண்டிருந்த அந்த வானராதிபர்கள், மேருவின் சிகரத்திற்கு ஒப்பானவனும், வானத்தில் ஒளிமிக்க மின்னலைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தவனுமான அவனை {விபீஷணனைக்} கண்டனர்.(2) அவனை அனுசரித்து வந்த நால்வரும் பயங்கர விக்கிரமர்களாக இருந்தனர். அவர்களும் சர்வ ஆயுதங்களையும் தரித்திருந்தனர், பூஷணங்களால் அலங்கரிக்கப்பட்டுமிருந்தனர்.(3) அந்த வீரன் {விபீஷணன்}, மேகங்களின் திரளைப் போன்றவனாகவும், வஜ்ராயுதத்திற்கு சமமான பிரபையைக் கொண்டவனாகவும், சிறந்த ஆயுதங்களைத் தரித்தவனாகவும், திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தான்[1].(4)

Thursday, 18 July 2024

கிஷ்கிந்தை முதல் தென்கடல் வரை | யுத்த காண்டம் சர்க்கம் - 004 (125)

Kishkindha to southern ocean | Yuddha-Kanda-Sarga-004 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படை லங்கைக்குப் புறப்பட நல்ல நேரத்தைத் தீர்மானித்து, நற்சகுனங்களைக் கண்டது. கடற்கரையை அடைந்த படை...

Rama on Hanuman and Lakshmana on Angada

மஹாதேஜஸ்வியும், சத்திய பராக்கிரமனுமான ராமன், ஹனூமதனின் வாக்கியத்தை தொடக்கம் முதல் முறையாகக் கேட்ட பிறகு {பின்வருமாறு} பேசினான்:(1) "பயங்கர ராக்ஷசனின் {ராவணனின்} எந்த லங்காம்புரீயை நீ சொன்னாயோ, அதை நான் சீக்கிரமே அழிப்பேன். இதை உனக்கு சத்தியமாகச் சொல்கிறேன் {என்று ஹனுமானிடம் சொல்லிவிட்டு, சுக்ரீவனிடம்}.(2) சக்ரீவா, திவாகரன் மத்தியத்தை {சூரியன் நடுவானை} அடைந்திருக்கிறான். விஜயத்திற்குத் தகுந்த முஹூர்த்தமான இந்த {அபிஜித்} முஹூர்த்தத்திலேயே பிரயாணம் செய்ய விரும்புகிறேன்.(3) 

Sunday, 23 June 2024

இராமனின் மகிழ்ச்சி | சுந்தர காண்டம் சர்க்கம் - 64 (41)

The joy of Rama | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானும், அங்கதனும், பிற வானரர்களும் சுக்ரீவனை அடைந்தது. சீதை காணப்பட்டதைக் குறித்து ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Dadhimukha requesting Angada and Hanuman to see Sugreeva

சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், கபியான ததிமுகன், மகிழ்ச்சியடைந்தவனாக, ராகவனையும், லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும் வணங்கினான்.(1) அவன் {ததிமுகன்}, சுக்ரீவனையும், மஹாபலவான்களான ராகவர்களையும் வணங்கிய பிறகு, சூரர்களான வானரர்கள் சகிதனாக திவத்தில் எழுந்தான் {வானத்தில் உயர்ந்தான்}.(2) பூர்வத்தில் எப்படி வந்தானோ, அப்படியே துரிதமாகச் சென்ற அவன் {ததிமுகன்}, ககனத்திலிருந்து {வானத்தில் இருந்து}, பூமியில் இறங்கி அந்த வனத்தில் பிரவேசித்தான்.(3) மதுவனத்தில் பிரவேசித்த அவன் {ததிமுகன்}, ஹரியூதபர்கள் அனைவரையும் மதத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், மதம் தெளிந்து, நீரைக் கழிப்பவர்களாகவும் கண்டான்.(4)

Thursday, 20 June 2024

மதுவனக் காவலர்கள் | சுந்தர காண்டம் சர்க்கம் - 62 (40)

Guards of Madhuvanam | Sundara-Kanda-Sarga-62 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ததிமுகன் தலைமையிலான மதுவனத்தின் காவலர்கள் சுக்ரீவனிடம் புகாரளிக்கச் சென்றது...

Dadhimukha falling in the feet of Sugreeva

ஹரிசிரேஷ்டனும், வானரரிஷபனுமான ஹனூமான், அவர்களிடம் {வானரர்களிடம், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, கலங்காத மனத்துடன் மதுவை {தேனை} அருந்துங்கள்.{1} உங்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை நான் தடுத்துநிறுத்துவேன்" {என்றான் ஹனுமான்}.(1,2அ)

Wednesday, 19 June 2024

மதுவனம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 61 (23)

Madhuvanam | Sundara-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கிஷ்கிந்தையின் புறநகரில் உள்ள மதுவனத்திற்குள் நுழைந்த வானரர்கள், மதுவெறியால் அதை அழித்தது...

Monkeys ruining Madhuvana

அப்போது, அங்கதன் முதலிய வீர வனௌகஸர்களும் {காட்டுவாசிகளும்}, மஹாகபியான ஹனுமானும் ஜாம்பவானின் வாக்கியத்தை ஏற்றுக் கொண்டனர்[1].(1)

Saturday, 15 June 2024

ஜாம்பவானின் தீர்மானம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 60 (6)

Resolution of Jambavan | Sundara-Kanda-Sarga-60 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சொன்னதைப் பின்பற்றுவதே சிறந்தது என்று அறிவுறுத்திய ஜாம்பவான்...

Angada and Jambavan conversing

அவனது {ஹனுமான் சொன்ன} அந்த வசனத்தைக் கேட்ட வாலிமகன் {அங்கதன், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, தேவியைக் கண்டபிறகும் அவள் இல்லாமல் மஹாத்மாவான ராகவரின் சமீபத்திற்கு நாம் செல்வது முறையல்ல[1].(1,2அ) 

Saturday, 8 June 2024

ஹனுமானின் கோரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 59 (37)

Appeal of Hanuman | Sundara-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் சீதையின் பரிதாப நிலையைக் குறித்துச் சொன்ன ஹனுமான்; சக வானரர்களின் வீரப் பிரதாபங்களை நினைவுகூர்ந்து அவர்களைத் தூண்டியது...

Hanuman inciting fellow vanaras

மாருதாத்மஜனான ஹனுமான், இவை யாவற்றையும் {ஜாம்பவானிடம்} சொல்லிவிட்டு, மேலும் {பிறரிடம்} பின்வரும் வசனத்தைச் சொல்லத் தொடங்கினான்:(1) "சீதையுடைய சீலத்தினால் {ஒழுக்கத்தினால்}, ராகவரின் உத்யோகமும், சுக்ரீவரின் பற்றார்வமும் பலனை அடைந்தன. என் மனம் சாய்கிறது {என் மனம் பக்தியுடன் சீதையிடம் செல்கிறது}.(2) இராக்ஷசாதிபனான இந்த ராவணன், அனைத்துவகையிலும் மேன்மைமிக்கவன்; தன் தபத்தால் உலகங்களை எரித்துவிடவல்லவன்; குரோதமடைந்தாலும் {தன் பகைவரை} எரித்துவிடுவான்.(3) அவளை {சீதையை} ஸ்பரிசித்த அவனது காத்ரம் {ராவணனின் உடல்}, அவனது தபஸ்ஸாலேயே நாசமடையவில்லை. ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, குரோதத்தால் தூண்டப்பட்டால் எதைச் செய்வாளோ, அதைக் கையால் முழுமையாக ஸ்பரிசிக்கப்பட்ட அக்னி சிகையாலும் செய்ய முடியாது.(4,5அ) இந்தக் காரியம், இந்த கதியிலேயே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. ஜாம்பவான் முதலான சர்வ மஹா ஹரிக்களிடமும் {பெருங்குரங்கினர் அனைவரிடமும்} அனுமதி பெற்றுக் கொண்டு, வைதேஹியுடன் சேர்ந்து, அந்தப் பார்த்திவாத்மஜர்கள் {ராஜகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் காண்பதே நியாயமாகும்[1].(5ஆ,6)

Friday, 24 May 2024

மீண்டும் மஹேந்திர மலை | சுந்தர காண்டம் சர்க்கம் - 57 (51)

Mahendra mountain again | Sundara-Kanda-Sarga-57 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வடகரையை அடைந்து, சீதையைக் கண்டதாக அங்கதனிடமும், ஜாம்பவானிடமும் அறிவித்த ஹனுமான். சீதையைக் குறித்த செய்தியை அறிவதில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தது...

Hanuman alighting on Mahendra Mountain

இரம்மியமானதும், சந்திரன் என்ற குமுதத்தை உடையதும் {ஆம்பலுடையதும்}, சுபமானதும், அர்க்கன் {சூரியன்} என்ற நீர்க்கோழியை உடையதும், புஷ்யம், சிரவணம் {பூசம், திருவோணம்} என்ற கதம்பங்களைக் கொண்டதும்,  மேகங்கள் என்ற செழித்த பாசிகளுடன் கூடியதும்,{1} புனர்வசு என்ற மஹாமீனத்தை {புனர்பூசம் எனும் பெரும் மீனை} உடையதும், லோஹிதாங்கன் {சிவப்பு அங்கங்களைக் கொண்ட செவ்வாய் கிரகம்} என்ற பெரிய முதலையைக் கொண்டதும், ஐராவதம் என்ற பெரும் தீவுடன் கூடியதும், ஸ்வாதி என்ற அன்னம் உலாவப் பெற்றதும்,{2} வாதத்தால் {காற்றால்} உண்டான அலைத்திரள்களைக் கொண்டதும், சந்திரக் கதிர்கள் என்ற குளிர்ந்த நீரைக் கொண்டதும், புஜங்க, யக்ஷ, கந்தர்வர்கள் என்ற கமலங்களையும் {தாமரைகளையும்}, உத்பலங்களையும் {கருநெய்தல்களையும்} உடையதுமான{3} சாகரத்தை மஹாநவம் {பெருங்கடலைப் பெரிய மரக்கலம்} எப்படியோ, அப்படியே ஹனுமான் எல்லையற்ற ககணார்ணவத்தில், மாருத கதியில் {வானம் என்ற பெருங்கடலில், வாயு வேகத்தில்} தாவிச் சென்றான்.(1-4)

Saturday, 18 November 2023

ஹனுமானை நெருங்கிய ஜாம்பவான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 65 (35)

Jambavan getting near Hanuman | Kishkindha-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தாண்டக்கூடிய தொலைவை அறிவித்தது; கடலைத் தாண்ட அங்கதனுக்குப் பதில் ஹனுமானை அனுப்ப வேண்டுமெனத் தீர்மானித்த ஜாம்பவான்...

Hanuman and Jambavan
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

அப்போது, அங்கதனின் சொற்களைக் கேட்ட கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், துவிவிதன், சுஷேணன், ஜாம்பவான் உள்ளிட்ட அந்த வானரோத்தமர்கள் அனைவரும், கிரமப்படி, அங்கிருந்து தாண்டுவதில் தங்கள் தங்கள் திறனைச் சொன்னார்கள்.(1,2)

அப்போது, கஜன், “பத்து யோஜனைகள் தாண்டுவேன்” என்றான். கவாக்ஷன், “இருபது யோஜனைகள் கடப்பேன்” என்றான்.(3) பிறகு, சரபன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “பிலவங்கமர்களே, முப்பது யோஜனைகள் கடப்பேன்” என்று சொன்னான்.{4} அங்கே ரிஷரபன் என்ற வானரன், “நாற்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்று அந்த வானரர்களிடம் சொன்னான்.{5} மஹாதேஜஸ்வியான கந்தமாதனன், “ஐம்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்றான் வானரர்களிடம்.{6} அங்கே மைந்தன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “நான் அறுபது யோஜனைகள் வரை உற்சாகமாகத் தாண்டுவேன்” என்றான்.{7} அப்போது, மஹாதேஜஸ்வியான துவிவிதன், “நான் எழுபது யோஜனைகள் கடப்பேன். சந்தேகமில்லை” என்று அங்கே பதிலளித்தான்.{8} மஹாதேஜஸ்வியும், சத்வவானும் {வலிமைமிக்கவனும்}, கபிசத்தமனுமான {குரங்குகளில் உயர்ந்தவனுமான} சுஷேணன், “என் பராக்கிரமம் எண்பது யோஜனைகள்” என்று பிரதிஜ்ஞை செய்தான்.(4-9)

அப்போது அனைவரிலும் விருத்தனான {முதிர்ந்தவனான} ஜாம்பவான், அவர்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அனைவரையும் பாராட்டிவிட்டு, {பின்வருமாறு} பதிலளித்தான்:(10) “பூர்வத்தில் எமக்கும்[1] கொஞ்சம் கதி பராக்கிரமம் இருந்தது. அத்தகைய நாம், தற்போது வயதின் அக்கரையை அடைந்துவிட்டோம் {வயது வரம்பைக் கடந்துவிட்டோம்}.(11) இஃது இப்படி இருந்தாலும், எந்த அர்த்தத்திற்காக கபிராஜாவும் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனும்}, ராமனும் பணியை நிச்சயித்து, இந்தக் காரியத்தைச் செய்ய முடிவெடுத்தார்களோ, அதைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை[2].(12) தற்போதைய காலத்தில், நாம் எந்த கதியை அடைந்திருக்கிறோமோ, அதைச் சொல்கிறோம் {கேட்பீராக}. தொண்ணூறு யோஜனைகள் கடப்போம். சந்தேகமில்லை” {என்றான் ஜாம்பவான்}.(13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “எமக்கும்” என்ற இந்தச் சொல்லின் பொருள், “எனக்கும்” என்பதாகும். இங்கே “நாம்”, “எம்” போன்றவை அரசப் பயன்பாட்டு வகையிலான சொற்களாகும்” என்றிருக்கிறது. எனினும், இந்த சர்க்கத்தில் 11 முதல் 13ம் சுலோகம் வரையே ஜாம்பவான் இந்த அரசவகைச் சொற்களைப் பயன்படுத்துகிறான்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஜாம்பவந்தன், ராவணனின் லங்கைக்குச் செல்வதைத் தவிர்க்கும் குரங்குகளை எச்சரிக்கிறான். சுக்ரீவன், இதே குரங்குகளைத் திசைகள் அனைத்திலும் அனுப்பியபோது, “நீங்கள் தடையில்லா கதியைக் கொண்டவர்கள், உங்கள் திறன்களுக்கு எல்லையே இல்லை” என்றெல்லாம் சொல்லி அனுப்புகிறான். இருப்பினும், இங்கே இந்தக் குரங்குகள் அனைவரும், ‘நூறு யோஜனைகளைத் தாண்டுவதைக் காட்டிலும், தங்கள் திறன் குறைவானது’ என்று சொல்கின்றனர். இது வெறுமனே தாண்டுவதில் உள்ள தயக்கமல்ல; ராவணன் மீதான பயமே அவர்களைத் தடுக்கிறது. எனவே, இங்கே அவர்களில் கிழவனான ஜாம்பவந்தன், “புறக்கணித்தல், அலட்சியம்” முதலிய சொற்களால் அவர்களைக் கண்டிக்கிறான்” என்றிருக்கிறது.

அந்த ஹரிசிரேஷ்டர்கள் அனைவரிடமும், ஜாம்பவான் {பின்வரும்} இதையும் சொன்னான், “என்னுடைய கடக்கும் பராக்கிரமம் இதுவரையே {தொண்ணூறு யோஜனையே} என்பது நிச்சயமல்ல.(14) பூர்வத்தில் வைரோசனன் {மஹாபலி}, யஜ்ஞங்களை கிரமப்படி செய்து கொண்டிருந்தபோது, பிரபுவும், ஸநாதன விஷ்ணுவுமான திரிவிக்கிரமரை {மூன்றடியால் உலகை அளந்த வாமனரை} நான் பிரதக்ஷிணை செய்திருக்கிறேன் {வலம் வந்திருக்கிறேன்}.(15) இப்போது விருத்தனாக {கிழவனாக} இருக்கும் நான், கடப்பதில் மந்தவிக்கிரமனாக இருக்கிறேன். அப்போது யௌவனத்தில் {இளமையில்}, என் பலம் ஒப்புயர்வற்றதாக இருந்தது.(16) தற்காலத்தில் {இந்த வயதில்}, தானாக நான் கடந்து செல்வது இவ்வளவே இப்போது சாத்தியம். இவ்வளவு அந்தக் காரியத்திற்குப் போதாது” {என்றான் ஜாம்பவான்}.(17)

அப்போது மஹாபிராஜ்ஞனான {பேரறிஞனான} அங்கதன், மஹாகபியான {பெருங்குரங்கான}[3] ஜாம்பவந்தனுக்கு மரியாதை செலுத்திய பிறகு, உயர்ந்த அர்த்தத்துடன் கூடிய {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(18) “நான் இந்த மஹத்தான நூறு யோஜனைகளையும் கடப்பேன். திரும்புவதற்கு என்னிடம் சக்தி இருக்கிறதா, இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை” {என்றான்}.(19)

[3] 4:59ல் 1ம் அடிக்குறிப்பில் இதே போலவே ஜாம்பவானைக் குரங்கு என்ற பொருளில் குறிப்பிடுவதில் உள்ள முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கே 59 முதல் 63 வரையுள்ள சர்க்கங்களே முரண்பட்ட செய்திகளைக் கொண்டவை என்று தேசிராஜுஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார். “மஹாகபி {பெருங்குரங்கு}” என்ற இந்தக் குறிப்பு இதோ 65ம் சர்க்கத்தில் வருகிறது. இங்கே இதற்கு சமாதானமாக, தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கரடியின் இயல்பும், நடத்தையும் கிட்டத்தட்ட மனிதக்குரங்குகளுக்கும், வாலில்லா குரங்குகளுக்கும், ஏன் சாதாரண குரங்குகளுக்கும்கூட இணையாக இருப்பதால், கரடியாக இருந்தாலும், ஜாம்பவான் இங்கே குரங்குகளில் ஒருவனாகவே கருதப்படுகிறான்” என்றிருக்கிறது.

வாக்கியகோவிதனான ஜாம்பவான், அந்த ஹரிசிரேஷ்டனிடம் {குரங்குகளில் சிறந்த அங்கதனிடம், பின்வருமாறு} சொன்னான், “ஹரிரிக்ஷசத்தமா {குரங்குகளிலும், கரடிகளிலும் உயர்ந்தவனே}, கடப்பதில் உன் சக்தி அறிந்ததே.(20) நீ தேவைப்பட்டால் நூறாயிரம் யோஜனைகளைக் கடந்து, திரும்பக்கூடிய சக்தி கொண்டவன். இந்த விதி உசிதமானதல்ல.(21) தாதா {ஐயா}, அனுப்பிவைக்கும் ஸ்வாமியை {தலைவனை}, எவ்வகையிலும் அனுப்பக்கூடாது. பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் உயர்ந்தவனே}, இந்த ஜனங்கள் அனைவரும் உன்னால் அனுப்பப்படத்தகுந்தவர்கள்.(22) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, ஸ்வாமி பாவத்தில் நிறுவப்பட்டிருக்கும் நீயே, எங்களின் களத்திரம் {காப்பு / நீயே எங்களால் காக்கப்பட வேண்டியவன்}. ஸ்வாமியே சைனியத்தின் களத்திரம் {காப்பு / தலைவனே படையால் காக்கப்பட வேண்டியவன்}. இதுவே கதியாகும்.(23) தாதா {ஐயா}, அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, நீயே இந்தக் காரியத்தின் மூலமாக {வேராக} இருக்கிறாய். எனவே களத்திரவானான {காக்கப்பட வேண்டியவனான} நீ சதா பாதுகாக்கப்பட வேண்டியவன்.(24) 

“அர்த்தத்தின் மூலமானது {நோக்கத்தின் / காரியத்தின் வேரானது} காக்கப்பட வேண்டும்” என்பதே காரிய விதாம் நயம் {காரியம் உணர்ந்தவர்களுக்குத் தகுந்த நீதியாகும்}. மூலம் {வேர்} இருந்தால்தான், பழங்களும், புஷ்பங்களும் விளையும்; சர்வ குணங்களும் சித்தியாகும் {நன்மைகள் அனைத்தும் நடந்தேறும்}.(25) எனவே, சத்தியவிக்கிரமா, பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, {சீதையைத் தேடும்} இந்தக் காரியத்தில் புத்தியும், விக்கிரமமும் நிறைந்த சாதனமாக {கருவியாக} நீயே இருக்கிறாய்.(26) கபிசத்தமா {குரங்குகளில் உயர்ந்தவனே}, எங்களின் குருபுத்திரனாகவும் {மதிப்புக்குரிய வாலியின் மகனாகவும்} , குருவாகவும் {மதிப்பிற்குரியவனாகவும்} நீ இருக்கிறாய். உன்னை ஆசரித்தால் {சார்ந்திருந்தால்} நாங்கள் அர்த்தத்தை சாதிப்பதில் சமர்த்தராவோம்” {என்றான் ஜாம்பவான்}.(27)

அப்போது மஹாகபியும், வாலியின் மகனுமான அங்கதன், இந்த வாக்கியத்தைச் சொன்னவனும், மஹாபிராஜ்ஞனுமான {பேரறிஞனுமான} ஜாம்பவந்தனுக்கு பதில்வாக்கியமாக {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான்:(28) “நானோ, வேறு வானரபுங்கவர்களோ கடக்கவில்லை என்றால், நாம் மீண்டும் இந்தப் பிராயோபவேசன {பட்டினி கிடந்து உயிர் துறக்கும்} காரியத்திலேயே ஈடுபடவேண்டும்.(29) மதிமிக்க அந்த ஹரிபதியின் சந்தேசத்தை {குரங்குகளின் தலைவரான சுக்ரீவரின் கட்டளையை} நிறைவேற்றாமல், அங்கே {கிஷ்கிந்தைக்குச்} சென்றாலும், பிராணன்களின் பாதுகாப்பைப் பார்க்க முடியவில்லை.(30) அந்த ஹரியேஷ்வரர் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவர்}, அருளிலும், கோபத்திலும் மிதம் மிஞ்சியவராவார். அவரது சந்தேசத்தை {கட்டளையை} மீறிச் செல்வதால் நாசமே விளையும்.(31) அந்தக் காரியத்தின் கதி அதுவே; அப்படியே. எனவே, அர்த்தத்தைக் காண்பவரான {காரியத்தின் முடிவைத் தெரிந்தவரான} நீரே, இது வேறுவகையாகிவிடாதபடி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” {என்றான் அங்கதன்}.(32)

அங்கதனால் இவ்வாறு பதில் கூறப்பட்டவனும், வீரனும், பிலவகரிஷபனுமான {தாவிச் செல்பவர்களில் காளையுமான / சிறந்தவனுமான} அந்த ஜாம்பவான், அப்போது அங்கதனிடம் உத்தமமான இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(33) “வீரா, உன்னுடைய இந்தக் காரியத்தில் குறையேதும் நேராது. இந்தக் காரியத்தை எவன் சாதிப்பானோ {நிறைவேற்றுவானோ}, அவனை நான் ஊக்கப்படுத்தப் போகிறேன்” {என்றான் ஜாம்பவான்}.(34) 

பிறகு, ஹரிபிரவீரர்களில் மேலானவன் {உயர்வான குரங்கு வீரர்களில் மேலான ஜாம்பவான்}, பிலவதர்களில் வரிஷ்டனை {தாவிச் செல்பவர்களில் ஒப்பற்றவனை} ஏகாந்தத்தில் ஆசரித்து {தனிமையில் அணுகி}, சுகமாக அமர்ந்து கொண்டிருந்த ஹரிபிரவீரனான {குரங்குகளில் உயர்ந்தவீரனான} ஹனுமந்தனை ஊக்கப்படுத்தத் தொடங்கினான்[4].(35)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஹனுமான், வெறித்தனமான குரங்களின் கூட்டத்திலிருந்து விலகி, சுகமாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹனுமான் எப்படி வசதியாக அமர முடியும். இது சந்தேகம்? “அவன், வசதியாக அமர்ந்திருந்தாலும், அவனது இதயத்தில் கடலைக் கடப்பது குறித்த எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று பதிலுக்குச் சொல்லப்படுகிறது. ஒருபுறம், ராமன் தன் தங்க மோதிரத்தை ஹனுமானிடம், இதே குரங்குகளின் முன்னிலையில்தான் கொடுத்தான். மறுபுறம் அங்கதனோ, கடலைக் கடக்கப்போவது யார் என பிற குரங்குகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். பிறகு குரங்குகளால், இந்த சந்தர்ப்பத்தில், நூறு யோஜனை தூரத்தைத் தாண்ட முடியாததாலல்ல; ராவணனிடம் கொண்ட பயத்தாலேயே ஏதோவொரு வகையில் தப்ப முயல்கின்றன என்பதை முழுமையாக அறிகிறான். ஹனுமான், ராவணனுக்கோ, அவனது கைக்கூலி அரக்கர்களுக்கோ அஞ்சவில்லை; ஆனால், அவன் தனது கடமையைக் குறித்துக் கவலைப்படுகிறான். எவரும் தாண்டுவதற்கு முன்வரவில்லையென்றாலும், துணையில்லாமலேயே அவன் லங்கைக்கு நிச்சயம் செல்ல வேண்டியிருக்கும். இதில் எதுவாக இருந்தாலும், ஹனுமானே போகவேண்டும். இதனால்தான் அந்த “வசதியும்”, “தீர்மானமான முடிவும்”. எனவேதான் அவன் தன் கடமையிலேயே குறியாக இருக்கிறான். ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு சுலோகம், “நீலோ அங்க³தோ³ ஹனூமான் ச ஜாம்ப³வான் அத² கேஸரீ . ஸமுத்³ர தீரம் ஆக³ம்ய ந ஷே²கு꞉ ஸ்பந்தி³தும் பத³ம். ராவணஸ்ய ப³லம் ஜ்ஞாத்வா தீரே நத³ நதீ³ பதே꞉ . ஸ்காந்த³ புராண” என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் இந்த அடிக்குறிப்பில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுலோகத்தின் பொருள்: “நீலன், அங்கதன், ஹனுமான், ஜாம்பவான், கேசரி ஆகியோர் கடற்கரையை அடைந்ததும், அவர்களால் கால்களை அசைக்கமுடியவில்லை. இராவணனின் வலிமையை அறிந்த அவர்கள், நத, நதிக்கரையில் வீழ்ந்தனர் என்று கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதாகும்.

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை