Jataayu | Aranya-Kanda-Sarga-14 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜடாயுவைச் சந்தித்த ராமன்; தன் இனம் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் பிறப்பைக் குறித்துச் சொன்ன ஜடாயு...
பிறகு அந்த ரகுநந்தனன், பஞ்சவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் பேருடல் படைத்ததும், பீமபராக்கிரமமுடையதுமான {பயங்கரப் பேராற்றல் படைத்ததுமான} ஒரு கழுகை அடைந்தான்.(1) மஹாபாக்கியசாலிகளான அந்த ராமலக்ஷ்மணர்கள், வனத்தில்[1] அந்த பக்ஷியைக் கண்டு, அதை ராக்ஷசனாக நினைத்து, "யார் நீ" என்று கேட்டனர்.(2) அது, மதுரமான, மென்மையான சொற்களில், "வத்ஸா {குழந்தாய்}, நான் உன் பிதாவின் நண்பன் என்று அறிவாயாக" என்று பிரியமாகப் பேசியது.(3) அந்த ராகவன், அதைத் தன் பிதாவின் நண்பனாக ஏற்றுப் பூஜித்த பிறகு, அவன் {ராமன்} அவசரமில்லாமல் அதன் குலம், நாமம் ஆகியவற்றைக் கேட்டான்.(4)
[1] வேறு பதிப்புகளில் "ஆலமரத்தில்" என்றிருக்கிறது.
இராமனின் சொற்களைக் கேட்ட அந்தப் பறவை, சர்வ பூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} உற்பத்தியையும், தன் குலத்தைக் குறித்தும் அவனிடம் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கியது:(5) "மஹாபாஹுவே, பூர்வகாலத்தில் இருந்த பிரஜைகளின் பதிகள் {பிரஜாபதிகள் / உயிரினங்களின் தலைவர்கள்} அனைவரையும் நான் சொல்கிறேன். நான் சொல்வதைத் தொடக்கத்தில் இருந்து கேட்பாயாக.(6) அவர்களில் கர்த்தமர் பிரதமர் {முதல்வர்}, அவருக்குப் பின் விச்ருதர், சேஷர், சம்ச்ரயர், வீர்யவானான பகுபுத்திரர்,{7} ஸ்தாணு, மரீசி, அத்திரி, மஹாபலனான கிரது, புலஸ்தியர், ஆங்கிரஸ், பிரசேதஸ், புலஹர்,{8} தக்ஷர், அடுத்தவன் விவஸ்வான், அரிஷ்டநேமி, ராகவா, அவர்களில் இறுதியானவர் மஹாதேஜஸ்வியான கசியபர் ஆவார்.(7-9)
புகழ்மிக்கவனான ராமா, பிரஜாபதியான தக்ஷனுக்கு, புகழ்பெற்ற அறுபது மகள்கள் இருந்தனர் என்று நான் கேள்விப்படுகிறோம்.(10) கசியபர், அவர்களில் மெல்லிடை கொண்டோரான அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவசை, மனு, அனலை ஆகிய எட்டுபேரை {மனைவிகளாக} ஏற்றுக் கொண்டார்.(11,12அ) கசியபர், பிரீதியடைந்தவராக அந்தக் கன்னிகைகளிடம் சொன்னார், "மூவுலகங்களையும் ஆதரிப்பதற்காக எனக்கு சமமான புத்திரர்களைப் பெறுவீராக" {என்றார் கசியபர்}.(12ஆ,13அ) இராமா, அவர்களில் அதிதி, திதி, காளிகை, தனு ஆகியோர் அதை ஏற்றுக் கொண்டனர், மற்றவர்கள் அதில் மனம் வைக்காமல் இருந்தனர்.(13ஆ,14அ) அரிந்தமா, பரந்தபா, தேவர்களான {பனிரெண்டு} ஆதித்யர்கள், {எட்டு} வசுக்கள், {பதினோரு} ருத்திரர்கள், {இரண்டு} அசுவினிகள் உள்ளிட்ட முப்பத்து மூன்று தேவர்களும் அதிதியிடம் பிறந்தனர்.(14ஆ,15அ) தாதா {குழந்தாய்}, திதி, நன்கறியப்படும் தைத்தியர்களை புத்திரர்களாகப் பெற்றாள். பூர்வத்தில் வனமும், கடலும் சூழ்ந்த இந்த வசுமதி {பூமி} என அனைத்தும் அவர்களுக்கே {திதியின் மைந்தர்களான தைத்தியர்களுக்கே} உரியவையாக இருந்தன.(15ஆ,16அ)
அரிந்தமா, தனுவுக்கு அசுவக்ரீவனும் {ஹயக்ரீவனும்}, காளிகைக்கு நரகனும், காலகனும் புத்திரர்களாகப் பிறந்தனர்.(16ஆ,17அ) தாம்ரைக்கு கிரௌஞ்சி, பாஸீ, சியேனி, திருதராஷ்ட்ரி, சுகி என்ற புகழ்பெற்ற பஞ்ச கன்னிகைகள் {ஐந்து பெண்கள்} பிறந்தனர்.(17ஆ,18அ) அதில் கிரௌஞ்சீ கோட்டான்களை {ஆந்தைகளைப்} பெற்றாள், பாசீ கோழிகளைப் பெற்றாள், சியேனி மிகக் கூரிய அலகுகளைக் கொண்ட கழுகுகளையும், பருந்துகளையும் பெற்றாள். திருதராஷ்ட்ரீ ஹம்சங்களையும் {அன்னப்பறவைகளையும்}, இன்னும் அழகிய நீர்ப்பறவைகளையும் பெற்றாள்.(18ஆ,19) அந்த பாமினி {திருதராஷ்டிரீ} சக்கரவாகங்களையும் பெற்றாள், சுகி, நதையைப் பெற்றாள், அந்த நதையின் மகள் விநதையாவாள்.(20) இராமா, மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமந்தை, மாதங்கி, சார்த்தூலி, சுவேதை, சுரபி, சர்வ லக்ஷணங்களும் பொருந்திய சரஸை, கத்ரு என்கிற பத்து மகள்களை குரோதவசை பெற்றாள்.(21,22) நரவரோத்தமா {சிறந்த மனிதர்களில் உத்தமனே}, மிருகங்கள் {மான்கள்} அனைத்தும் மிருகிக்குப் பிறந்தவை. ரிக்ஷங்கள் {கரடிகள்}, சிருமரமெனும் மான் வகை, சமரியெனும் மான் வகை ஆகியன மிருகமந்தைக்குப் பிறந்தவை.(23)
பத்திரமந்தை, ஐராவதி என்ற பெயரைக் கொண்ட மகளைப் பெற்றாள். லோகநாதனான ஐராவதமெனும் மஹாகஜம் அவளது புத்திரனே.(24) ஹரயங்களையும் {சிங்கங்களையும்}, வலிமைமிக்க வானரங்களையும் ஹரி பெற்றாள். சார்த்தூலி, கோலாங்கூலங்களையும் {குரங்குகளையும்}, வியாகரங்களையும் {புலிகளையும்} மகன்களாகப் பெற்றாள்.(25) மனுஜரிஷபா {மனிதர்களில் காளையே}, மாதங்கங்களை {யானைகளை} மாதங்கி பெற்றாள். காகுத்ஸ்தா, சுவேதை திசைகஜங்களைப் பெற்றாள்.(26) ரோகிணி, கந்தர்வி என்ற பெயர்களைக் கொண்ட புகழ்பெற்ற இரண்டு மகள்களை சுரபி பெற்றாள். புகழ்பெற்றவனே, நீ சுகமாக இருப்பாயாக. (27) ரோஹிணி பசுக்களைப் பெற்றாள், கந்தர்வி வாஜிகளை {குதிரைகளைப்} பெற்றாள். சுரஸை பலதலை நாகங்களைப் பெற்றாள். இராமா, கத்ரு பன்னகங்களைப் பெற்றாள்.(28) மனுஜரிஷபா, மனுவானவள் மஹாத்மாவான கசியபரிடம் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களான மனுஷ்யர்களைப் பெற்றாள்.(29) முகத்திலிருந்து பிராமணர்களும், மார்பில் இருந்து க்ஷத்திரியர்களும், தொடைகளில் இருந்து வைசியர்களும், பாதங்களில் இருந்து சூத்திரர்களும் பிறந்தனர் என்பது சுருதி {என்பது கேள்வி / வேதம்}[2].(30)
[2] பல பதிப்புகளில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது.
புண்ணியப் பழங்களை {பலன்களைச்} சுமக்கும் சர்வ விருக்ஷங்களையும் {மரங்கள் அனைத்தையும்} அனலை பெற்றாள். சுகியின் பௌத்திரியான {பேத்தியான} வினதை, சுரஸையின் தங்கையான கத்ரு குறித்தும் இனி சொல்கிறேன்.(31) ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தரணீதரனுமான நாகத்தை {உலகத்தைத் தாங்குபவனுமான ஆதிசேஷனை} கத்ரு பெற்றாள். வினதையோ கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்களைப் பெற்றாள்[3].(32) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, அந்த அருணனுக்குப் பிறந்த நானும், என் அண்ணன் சம்பாதியும் சியேனியின் புத்திரர்களாவோம். எனவே, ஜடாயு என்று என்னை நீ அறிவாயாக[4].(33) அத்தகையவனான நான், நீ விரும்பினால் உன் வசிப்பிடத்தில் சஹாயனாக இருப்பேன். கடப்பதற்கரிய இந்த காந்தாரம் {கானகம்} மிருகங்களாலும், ராக்ஷசர்களாலும் சேவிக்கப்படுகிறது. தாதா, லக்ஷ்மணனுடன் நீ வெளியே செல்லும்போது சீதையை நான் ரக்ஷிப்பேன்" {என்றான் ஜடாயு}.(34)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கருடன் விஷ்ணுதேவனின் கழுகு வாகனமாவான், தொடைகளற்றவனான அருணன் ஏழு குதிரைகளைக் கொண்ட சூரியத்தேரின் சாரதியாவான். சூரியனின் ஏழு குதிரைகளே வானவில்லின் ஏழு வண்ணங்களாகும். அருணனும், கருடனும் வேகம் மற்றும் உந்துசக்தியை இயல்பாகக் கொண்ட பறவைப் பிறவிகளாகும். ஜடாயுவும், சம்பாதியும் அந்தக் குலத்தைச் சார்ந்தவர்களே" என்றிருக்கிறது.
[4] அருணன்தன் புதல்வன்யான் அவன் படரும்உலகு எல்லாம் படர்வேன் ஆழிஇருள்மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன்உயிர்த் துணைவன் இமையோரோடும்வருணங்கள் வகுத்திட்ட காலத்தேவந்து உதித்தேன் கழுகின் மன்னன்தருணம்கொள் பேர் ஒளியீர்சம்பாதிபின் பிறந்த சடாயு என்றான்- கம்பராமாயணம் 2714ம் பாடல்பொருள்: "அருணனின் மகனான நான், அவன் செல்லும் உலகங்களுக்கெல்லாம் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவன். பகை இருளின் வலிமை கெட ஆணைச் சக்கரம் செலுத்திய தயரதனுக்கு இன்னுயிர் நண்பன். மற்ற உயிரினங்களை வகைப்படுத்திய பொழுதில் நானும் பிறந்தேன். இளமை பூண்ட பெரும் ஒளியுடையவர்களே, சம்பாதிக்குப் பின் பிறந்த தம்பியான சடாயு நான்" என்றான்.
இராகவன், ஜடாயுவுக்குப் பிரதிபூஜை செய்து, மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டு, பணிந்து நின்றான். அந்த ஆத்மவான் {ராமன்}, பிதாவின் {தன் தந்தை தசரதனின்} நட்பை ஜடாயு மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டான்.(35) பிறகு, மைதிலியான சீதையை அழைத்துக் கொண்டு, லக்ஷ்மணனுடனும், அதிபலமிக்க அந்த பக்ஷியுடனும் {ஜடாயுவுடனும்}, வெட்டுக்கிளிகளுக்கு {விட்டிற்பூச்சிகளுக்கு} நெருப்பைப் போல சத்ருக்களை எரிக்கும் நோக்கில் அந்தப் பஞ்சவடிக்குச் சென்றான்.(36)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 14ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |