Find that sinful one | Aranya-Kanda-Sarga-66 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனிடம் சோகத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு சொல்லி, அவனிடம் விவேகத்தைத் தூண்டிய லக்ஷ்மணன்...
பிறகு சௌமித்ரியான லக்ஷ்மணன், இவ்வாறு சோக சந்தாபத்துடன் {சோகத்தால் பீடிக்கப்பட்டு}, மஹத்தான மோஹத்தில் மூழ்கி, அநாதையைப் போல அழுது கொண்டிருந்தவனும், கதியற்றவனாக நனவிழந்திருந்தவனுமான அந்த ராமனுக்கு ஒரு முஹூர்த்தம் போல் ஆறுதல் கூறி, அவனது பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டு {பின்வருமாறு} விளக்கினான்:(1,2) "இராமரே, அமரர்கள் {அடைந்த} அமிருதத்தைப் போல, மகத்தான தபத்தாலும், மஹத்தான கர்மங்களாலும் தசரத ராஜர் உம்மை அடைந்தார்.(3) பரதனிடம் கேட்டது போல, மஹீபதியான ராஜா {தசரதர்}, உமது குணங்களில் கட்டுண்டு, உமது பிரிவால் தேவத்வத்தை அடைந்தார் {இறந்தார்}.(4)
காகுத்ஸ்தரே, பிராப்தமான {வாய்த்திருக்கும்} இந்த துக்கத்தை {உம்மால்} சஹித்துக் கொள்ள முடியவில்லையென்றால், அற்ப பலம் கொண்ட பிராக்ருதனாலோ {சாதாரணனாலோ}, பிறராலோ எவ்வாறு சஹித்துக் கொள்ள முடியும்?(5) நரசிரேஷ்டரே {மனிதர்களில் சிறந்தவரே}, எந்த பிராணிகளுக்குத்தான் ஆபத்தில்லை?. இராஜாவே, பற்றும் அக்னியும் க்ஷணத்தில் {ஒரே கணத்தில்} விட்டுவிடும். ஆசுவாசம் அடைவீராக {இளைப்பாறுவீராக}.(6) நரவியாகரரே, துக்கத்தில் இருக்கும் நீர், உமது தேஜஸ்ஸால் உலகங்களை தஹிக்கச் செய்தால் {உமது வல்லமையால் உலகங்களை எரியச் செய்தால்}, அதனால் பீடிக்கப்படும் பிரஜைகள் ஆறுதலடைய எங்கே போவார்கள்?(7)
நஹுஷாத்மஜனான யயாதி, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய ஒரே உலகத்தையே அடைந்தாலும், சாபம் அவனைத் தீண்டியது. இஃது உலகத்தின் சுபாவமே.(8) மஹாரிஷியான எந்த வசிஷ்டர், நமது பிதாவின் புரோஹிதராக இருந்தாரோ, அவருக்கு ஒரே நாளில் நூறு புத்திரர்கள் பிறந்தாலும், மீண்டும் அதே போல {ஒரே நாளில் அவர்கள்} கொல்லப்பட்டனர்.(9) கோசலேசுவரரே, எவள் ஜகத்தின் மாதாவோ, எவள் சர்வலோக நமஸ்கிருதையோ {உலகங்கள் அனைத்தாலும் வணங்கப்படுகிறவளோ} அந்த பூமியிலும் சலனம் காணப்படுகிறது.(10) யாவர் ஜகத்தின் நேத்திரங்களாக {கண்களாகத்} திகழும் தர்மர்களோ, யாவரிடம் சர்வமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த மஹாபலர்களான ஆதித்ய, சந்திரர்களையும் கிரஹணம் நெருங்குகிறது.(11) புருஷரிஷபரே, {பூமி, கிரஹங்கள் போன்ற} மஹாபூதங்களும், தேவர்களும், தேஹம் படைத்த சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} தைவத்திலிருந்து விடுபடமுடியாது {விதிப்பயனைத் தவிர்க்க முடியாது}.(12) நரசார்தூலரே, சக்கிராதி தேவர்களிடமும் {இந்திரன் முதலிய தேவர்களிடமும்}, நயாநய வர்தமானங்கள் {சுகதுக்கங்களுக்குரிய செயல்பாடுகள்} உண்டு என்று கேட்டிருக்கிறோம். நீர் துன்புறுவது தகாது.(13)
வீரரே, இராகவரே, வைதேஹி கடத்தப்பட்டிருந்தாலும், கொல்லப்பட்டிருந்தாலும் பிராகிருத அந்நியனை {இயல்பான வேறொருவனைப்} போலவே நீர் சோகத்தை அடைவது தகாது.(14) இராமரே, எப்போதும் சத்தியத்தை தரிசிப்பவர்களும், மனச்சோர்விலிருந்து விடுபட்ட பார்வையைக் கொண்டவர்களுமான உம்மைப் போன்றவர்கள், மஹத்தான ஆபத்துகளிலும் மனத்தளர்ச்சி அடையமாட்டார்கள்.(15) நரசிரேஷ்டரே {மனிதர்களில் சிறந்தவரே}, புத்தியுடன் தத்துவங்களைச் சரியாகச் சிந்திப்பீராக. மஹாபிராஜ்ஞர்கள் {அனைத்தையும் அறிந்தவர்கள்}, தங்கள் புத்தியைப் பயன்படுத்தியே, சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} அறிகிறார்கள்.(16) குண தோஷங்களை {நன்மை தீமைகளைக்} காணாதவர்களுக்கும், கர்மங்களில் உறுதியற்றவர்களுக்கும் இஷ்டபலன்கள் {விரும்பிய பயன்கள்} ஒருபோதும் வாய்ப்பதில்லை.(17)
வீரரே, பூர்வத்தில் நீரே உண்மையில் என்னிடம் இவ்வாறு பலமுறை சொல்லியிருக்கிறீர். பிருஹஸ்பதியைத் தவிர வேறு எவனால் உண்மையில் உமக்குக் கற்பிக்க முடியும்?(18) மஹாபிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, உமது புத்தியை, தேவர்களாலும் விளங்கிக் கொள்ள முடியாது. சோகத்தில் துயில் கொள்ளும் உமது ஞானத்தை நான் தூண்டிவிட விரும்பினேன்.(19) இக்ஷ்வாகு ரிஷபரே {இக்ஷ்வாகு குலத்தில் சிறந்தவரே}, திவ்யமானவையும், மானுஷ்யம் சார்ந்தவையுமான உமது பராக்கிரமங்களை, உள்ளபடியே அறிந்து கொண்டு, பகைவனை வதம் செய்ய முயற்சிப்பீராக.(20) புருஷரிஷபரே, முற்றான அழிவை ஏற்படுத்துவதன் மூலம் உமக்கு என்ன {பயன்}? பாபியான அந்தப் பகைவனைக் கண்டறிவதே உண்மையில் உமக்குத் தகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(21)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 21
Previous | | Sanskrit | | English | | Next |