Monday 24 April 2023

இராவணனே கடத்தினான் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 67 (29)

Ravana is the one who abducted | Aranya-Kanda-Sarga-67 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சிறகுகள் இழந்த ஜடாயுவைக் கண்ட ராமனும், லக்ஷ்மணனும்...

Rama and Lakshmana saw Jatayu

சாரத்தைக் கிரஹித்துக் கொள்பவனான ராகவன் {ராமன்}, பூர்வஜனாக {அண்ணனாக} இருந்தாலும், லக்ஷ்மணன் சொன்ன மாத்திரத்தில் நன்கு சொல்லப்பட்டவற்றின் மஹத்தான சாரத்தை ஏற்றுக் கொண்டான்.(1) மஹாபாஹுவான ராமன், தன்னில் பெருகிய கோபத்தை அடக்கிக் கொண்டு, சித்திரமான தனுவை {அற்புத வில்லைப்} பிடித்தபடியே லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "வத்ஸா {குழந்தாய்}, லக்ஷ்மணா, 'என்ன செய்வோம்? எங்கே செல்வோம்? எந்த உபாயத்தால் சீதையைப் பார்ப்போம்?' என்பனவற்றைச் சிந்திப்பாயாக" {என்றான் ராமன்}.(3)

இவ்வாறு பரிதாபமாக துன்புற்றுக் கொண்டிருந்த அந்த ராமனிடம், லக்ஷ்மணன் சொன்னான், "இராக்ஷசர்கள் பலரால் நிறைந்ததும், நானாவித மரங்களாலும், செடிகொடிகளாலும் மறைக்கப்பட்டதுமான இந்த ஜனஸ்தானத்தில் தேடுவதே தகும்.(4,5அ) இங்கே அடைதற்கரிய கிரிகளும் {மலைகளும்}, சுனைகளும், குகைகளும், விதவிதமானவையும், கோரமானவையும், நானாவித மிருக கணங்களைக் கொண்டவையுமான பள்ளத்தாக்குகளும், கின்னரர்களின் வசிப்பிடங்களும் {வீடுகளும்}, கந்தர்வர்களின் பவனங்களும் {மாளிகைகளும்} இருக்கின்றன.(5ஆ,6) என்னுடன் சேர்ந்து அவற்றைத் தேடுவதே உமக்குத் தகும். நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, புத்தியுடன் கூடிய உம்மைப் போன்ற மஹாத்மாக்கள், வாயு வேகத்தால் அசலங்களை {காற்றின் வேகத்தால் கலங்காத மலைகளைப்} போலக் கலக்கமடைவதில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(7,8அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும், குரோதம் நிறைந்த ராமன், லக்ஷ்மணனுடன் கூடியவனாக, தனுசில் கூர்மையான சரத்தைப் பொருத்திக் கொண்டு, சர்வ வனத்திலும் திரிந்தான்.(8ஆ,9அ) அப்போது பர்வதகூடத்திற்கு {மலைச் சிகரத்திற்கு} ஒப்பானவனும், மகாபாக்கியவானும், உத்தம துவிஜனும் {சிறந்த பறவையும்}, ரத்தம் தோய்ந்து பூமியில் கிடப்பவனுமான ஜடாயுவைக் கண்டான்.(9ஆ,10அ), கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} ஒப்பானவனைக் கண்ட ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான், "இவனே வைதேஹியான சீதையை பக்ஷித்திருக்கிறான் {உண்டிருக்கிறான்}. இதில் சந்தேகமில்லை.(10ஆ,11அ) கிருத்ர ரூபம் {கழுகின் வடிவத்தைப்} படைத்த இந்த ராக்ஷசன், விசாலாக்ஷியான சீதையை பக்ஷித்துவிட்டு {அகன்ற கண்களைக் கொண்ட சீதையை உண்டுவிட்டு} சுகமாக ஓய்ந்திருக்கிறான். கோரமானவையும், எரியும் முனைகளுடன் நேராகச் செல்லக்கூடியவையுமான பாணங்களால் இவனை வதம் செய்யப் போகிறேன்" {என்றான் ராமன்}.(11ஆ,12)

இவ்வாறு சொன்ன ராமன், குரோதத்துடன் தனுசில் க்ஷுரத்தைப் பொருத்தியபோது, சமுத்திரத்தை அந்தமாகக் கொண்ட மேதினியே {பெருங்கடலை எல்லையாகக் கொண்ட பூமியே} நடுங்கும் வகையில் அந்த கிருத்ரத்தை {கழுகை} நெருங்கிச் சென்றான்.(13) தீனமாக நுரையையும், உதிரத்தையும் கக்கிய அந்த பக்ஷி {கழுகான ஜடாயு}, தசரதாத்மஜனான அந்த ராமனிடம், தீனமான சொற்களில் {பின்வருமாறு} சொன்னான்:(14) "ஆயுஷ்மானே, ஔஷதிகளுடன் {மூலிகைகளுடன்} கூடிய மஹாவனத்தில் எவளைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ, அந்த தேவியையும் {சீதையையும்}, என் பிராணனையும் ராவணன் கவர்ந்து சென்றுவிட்டான்.(15) இராகவா, நீயும், லக்ஷ்மணனும் இல்லாதபோது, அந்த தேவியை பலவந்தமாக ராவணன் கடத்திச் செல்வதை நான் கண்டேன்[1].(16) நான் சீதையை மீட்கச் சென்றபோது, ரணத்தில் {அந்தப் போரில்} ராவணனையும், அவனது ரதத்தையும் சிதைத்து, இங்கே தரணீதலத்தில் விழச் செய்தேன்.(17) இராமா, பங்கமடைந்த இந்த தனு {வில்} அவனுடையதே; இந்தக் கவசமும் அவனுடையதே; இரணத்தில் {போரில்} பங்கமடைந்த இந்த ரதமும் அவனுடையதே.(18) என் சிறகுகளால் கொல்லப்பட்டுப் புவியில் கிடக்கும் அந்த சாரதியும் அவனுடையவனே. களைப்படைந்த என் சிறகுகள் இரண்டையும் ராவணன் கட்கத்தால் {வாளால்} வெட்டி, வைதேஹியான சீதையை எடுத்துக் கொண்டு, வானில் ஏறிப் பறந்தான். அந்த ராக்ஷசனால் ஏற்கனவே கொல்லப்பட்டவனான என்னைக் கொல்வது உனக்குத் தகாது" {என்றான் ஜடாயு}.(19,20)

[1] இதுவரை தன் மனைவியான சீதை கடத்தப்பட்டதையும், கடத்தப்பட்ட திசையையும் அறிந்திருந்த ராமன், முதன்முறையாக எவன் கடத்தினான் என்பதை இங்கேதான் அறிகிறான்.

அப்போது ராமன், தன் பிரியத்திற்குரிய சீதையைக் குறித்த கதையை அறிந்து, மஹத்தான தனுவை வைத்துவிட்டு, அந்த கிருத்ரராஜனை {கழுகு மன்னனான ஜடாயுவைத்} தழுவிக் கொண்டான்.(21) இராமன் தீரனாக இருந்தாலும் வசமில்லாமல் பூமியில் விழுந்து, இரட்டிப்பான துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாக லக்ஷ்மணனுடன் சேர்ந்து அழுதான்[2].(22) மிகச் சிரமத்துடன் {அடைதற்கரிய} தனிமையான இடத்தைத் தனியொருவனாக அடைந்தவன் {ஜடாயு} மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிடுவதைக் கண்ட ராமன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக சௌமித்ரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(23) "இராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டது, வனவாசத்தை அடைந்தது, சீதையை இழந்தது, துவிஜர் {பறவையான ஜடாயு} கொல்லப்பட்டது என இவ்வகையான என் துரதிர்ஷ்டம் பாவகனையே கூட தகித்துவிடும் {நெருப்பையே கூட எரித்துவிடும்}.(24) இப்போது சம்பூர்ணமான பெருங்கடலில் நான் பிரவேசித்தால், அந்த சரிதாம்பதியுங்கூட {ஆறுகளின் தலைவனே கூட} என் துரதிர்ஷ்டத்தால் வற்றிப் போவான்.(25) நான் அத்தகைய மஹத்தான துயரப் படுகுழியை அடைந்திருக்கிறேன். சராசரங்களுடன் கூடிய இந்த உலகத்தில் என்னைவிட பாக்கியமற்றவன் வேறொருவனும் இல்லை.(26) என் பிதாவின் நண்பரும், முதியவருமான இந்த கிருத்ர ராஜா {கழுகு மன்னன்}, என் பாக்கியத்தின் எதிர் விளைவாலேயே கொல்லப்பட்டு பூமியில் கிடக்கிறார்" {என்றான் ராமன்}.(27)

[2] உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீகக் கண்
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும்

- கம்பராமாயணம் 3496ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்

பொருள்: இராமன் ஒரு நாழிகை அளவு மூச்சற்றவனானான்; உணர்ச்சியற்று மயங்கினான் போலும் என்று ஐயங்கொண்ட தம்பி லக்ஷ்மணன் சென்று அவனைத் தழுவி மேகத்தில் இருந்து மலை அருவியாக வந்த நீரை முகத்தில் தெளித்த உடன் தாமரை கண்களைத் திறந்து மெதுவாகச் சோர்வு நீங்கி இச்சொற்களைக் கூறத் தொடங்கினான்.

இராகவன் இவ்வாறும், பலவாறும் சொல்லி, பித்ருசினேகத்தை {தந்தையிடம் காட்டக்கூடிய அன்பை} வெளிப்படுத்தும் வகையில் லக்ஷ்மணனுடன் சேர்ந்து ஜடாயுவைத் தடவினான்.(28) சிறகுகள் வெட்டப்பட்டு உதிரத்தில் நனைந்திருந்த அந்த கிருத்ரராஜனைத் தழுவிக் கொண்ட ராமன், "என் பிராணனுக்கு சமமான மைதிலி எங்கே?" என்ற சொற்களை உதிர்த்துவிட்டு பூமியில் விழுந்தான்.(29)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை