You shall not live | Aranya-Kanda-Sarga-48 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட ராவணன், சீதையை மயக்க முயற்சித்தது; இராவணனை கடுஞ்சொற்களால் இகழ்ந்த சீதை...
சீதை இவ்வாறு பேசிய போது, வெறுப்படைந்த ராவணன், நெற்றியில் புருவங்களை நெரித்துக் கோபத்துடன் கூடிய கடுஞ்சொற்களில் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(1) "வரவர்ணினியே {மேன்மையான நிறங்கொண்டவளே}, வைஷ்ரவணனின் {குபேரனின்} மாற்றாந்தாயிடம் பிறந்தவனும், தசக்ரீவனுமான நான், ராவணன் என்ற பெயரைக் கொண்ட பிரதாபவானாவேன். நீ நலமாக இருப்பாயாக.(2) பிரஜைகள் மிருத்யுவிடம் {மக்கள் மரணத்திற்குப் பயப்படுவதைப்} போல கந்தர்வர்களும், தேவர்களும், பிசாசங்களும், பதகர்களும் {பறவைகளும்}, உரகர்களும் {பாம்புகளும்} என்னிடம் கொண்ட பயத்தாலேயே சதா ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.(3)
ஏதோவொரு காரணத்திற்கான குரோதத்தில் துவந்தம் {மோதல்} நேர்ந்தபோது, என் மாற்றாந்தாயிடம் பிறந்தவனான வைஷ்ரவணன் {குபேரன்}, அந்த ரணத்தில் {போரில்} என்னுடைய விக்கிரமத்தாலேயே வீழ்த்தப்பட்டான்.(4) அந்த நரவாஹனன் {மனிதர்களை வாகனமாகக் கொண்ட குபேரன்} என்னிடம் கொண்ட பயத்தால், செல்வம் நிறைந்த தன் அதிஷ்டானத்தை {சொந்த இடத்தை} முற்றிலும் கைவிட்டு, பர்வதத்தில் சிறந்த கைலாசத்தில் வாழ்கிறான்(5) பத்ரே {உன்னதப் பெண்ணே}, எதைக் கொண்டு நான் ஆகாயத்தில் வலம் வருகிறேனோ, விருப்பத்திற்கேற்றவாறு செல்லக்கூடியதும், மங்கலமானதும், புஷ்பகம் என்ற பெயரைக் கொண்டதுமான அந்த விமானம் என்னுடைய வீரியத்தால் அடையப்பட்டதே {குபேரனிடம் இருந்து அபகரிக்கப்பட்டதே}.(6)
மைதிலி, கோபத்துடன் கூடிய என் முகத்தைக் கண்டாலே இந்திரன் முதலான ஸுரர்கள் பேரச்சத்துடன் ஓடிவிடுவார்கள்.(7) நான் எங்கே இருக்கிறேனோ அங்கே சந்தேகம் இல்லாமல் மாருதன் வீசுவான் {காற்று வீசும்}. தீவிரக் கதிர்களுடன் கூடிய ரவியும் {சூரியனும், என் மீது கொண்ட} பயத்தால் குளுமையான கதிர்களையே வெளியிடுவான்.(8) நான் எங்கே இருந்தாலும், திரிந்தாலும் அங்கே மரங்களின் இலைகளும் சடசடக்காது, நதிகளில் நீரும் அமைதியாக ஓடும்.(9) இந்திரனின் அமராவதியைப் போன்றதும், கோர ராக்ஷசர்களை சம்பூர்ணமாகக் கொண்டதும், லங்கை என்ற பெயரைக் கொண்டதுமான என் மங்கல புரி {நகரம்} சமுத்திரத்தின் மறுபுறத்தில் இருக்கிறது[1].(10) பொன்னாலான கட்டடங்களுடனும், வைடூரியமயமான தோரணங்களுடனும் கூடிய அந்த ரம்மிய புரி {லங்கை}, வெண்மையால் அலங்கரிக்கப்பட்ட {வெண் சுண்ணம் பூசப்பட்ட} பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது.(11) ஹஸ்திகள் {யானைகள்}, அசுவங்கள் {குதிரைகள்}, ரதங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டதாகவும், தூரிய நாதத்தால் ஒலிக்கப்பெற்றதாகவும், விருப்பத்திற்குரிய பழங்களைத் தரும் விருக்ஷங்களாலும் {மரங்களாலும்}, உத்யான வனங்களாலும் அலங்கரிக்கப்பட்டதாகவும் அஃது இருக்கிறது.(12)
[1] லங்காபுரி சமுத்திரத்தின் மறுகரையில் இருக்கிறது என்ற இந்தக் குறிப்பு இலங்கை எங்கே இருக்கிறது என்று ஆய்பவர்களுக்குப் பயன்படும்.
இராஜபுத்ரி, மதிப்பிற்குரிய பெண்ணே, ஹே சீதே, அங்கே என்னுடன் நீ வசிப்பாயாக. மானுஷிகளின் நாரீகளில் ஒருத்தியாக உன்னை நினைக்காதிருப்பாயாக.(13) வரவர்ணினி {அழகிய நிறம் கொண்டவளே}, மானுஷ போகங்கள், திவ்யமானவை {தெய்வீக போகங்கள்} ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டு, அற்ப ஆயுள் கொண்ட மானுஷனான ராமனை நீ நினைக்காதிருப்பாயாக.(14) பிரிய புத்திரனை {பரதனை ராஜ்ஜியத்தில்} ஸ்தாபித்த ராஜா தசரதனால், மூத்த மகனாக இருந்தும் எவன் வனத்திற்கு அனுப்பப்பட்டானோ அவன் மந்த வீரியம் கொண்டவனாவான்.(15) விசாலாக்ஷி, ராஜ்ஜியத்தை இழந்து, மனம் முறிந்தவனும், பரிதாப நிலையில் தபஸ்வியாக இருப்பவனுமான அந்த ராமனுடன் என்ன செய்யப் போகிறாய்?(16) மன்மத சரத்தால் பீடிக்கப்பட்டுக் காமத்துடன் நேரில் தானாக வந்திருக்கிறேன். சர்வ ராக்ஷசர்களுக்கும் தலைவனான என்னிடம் நீ இப்படிப் பேசுவது தகாது. (17) அச்சமுடையவளே, புரூரவஸை[2] காலால் உதைத்த ஊர்வசியைப் போல என்னை அலட்சியம் செய்து நீ பரிதாபத்திற்குரிய நிலையை அடையாதே[3].(18) வரவர்ணினியே, மானுஷனான அந்த ராமன் யுத்தத்தில் என்னொரு விரலுக்கும் சமமாக மாட்டான். உன் பாக்கியத்தால் இங்கே வந்திருக்கும் என்னை மதிப்பாயாக" {என்றான் ராவணன்}.(19)
[2] மஹாபாரதம், ஆதிபர்வம் பகுதி 75ல் புரூரவஸின் கதை சொல்லப்படுகிறது. ஆனால் ஊர்வசி புரூரவஸை மிதிக்கும் செய்தி எங்கும் காணக்கிடைக்கவில்லை.
[3] அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்துப் பொங்கஉணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்க்கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னாவணங்கினான் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான்.- கம்பராமாயணம் 3388ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப் படலம்பொருள்: இந்த உலகத்தைத் தாங்கும் மலையினும் வலிய தோள்களைக் கொண்டவன் {ராவணன்}, "தெய்வப்பெண்ணுக்கும் தெய்வம் போன்றவளே, ஆசை நோய் அகத்தில் பொங்க, வாடிய உடலைக் கொண்டவனான எனக்கு உயிரைக் கொடுத்துதவி மேலுலகிலுள்ள குழை எனும் காதணிகள் பூண்ட தெய்வப் பெண்கள் எல்லாருக்கும் கிடைப்பதற்கரிய சிறந்த நிலையை நீ ஏற்றுக் கொள்வாயாக" என்று சொல்லி {சீதையை} வணங்கினான்.
ஒருவருமற்ற இடத்தில் இவ்வாறு {ராவணன்} சொன்னதும், குரோதமடைந்து, கண்கள் சிவந்த வைதேஹி, அந்த ராக்ஷசாதிபனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைச் சொன்னாள்:(20) "சர்வ தேவர்களாலும் நமஸ்கரிக்கப்படும் வைஷ்ரவண தேவனை சகோதரன் {குபேரனை அண்ணன்} என்று சொல்லிக் கொண்டு, எவ்வாறு நீ இந்த அசுப செயல்களைச் செய்ய இச்சிக்கிறாய்?(21) இராவணா, கொடூரனே, துர்புத்தி கொண்டவனே, அஜிதேந்திரியனே {புலன்களை வெல்லாதவனே}, நீ யாவருக்கு ராஜாவோ அந்த ராக்ஷசர்கள் அனைவரும் அவசியம் முற்றாக நாசமடைவார்கள்.(22) இந்திரனின் பாரியையான சசியை அபகரித்து ஜீவிப்பது சாத்தியமானாலும், ராமரின் பாரியையான என்னைக் கவர்ந்து சென்று ஜீவிப்பது சாத்தியமல்ல.(23) இராக்ஷசா, ஒப்பற்ற அழகிய ரூபத்தைக் கொண்ட சசியை வஜ்ரதாரியிடமிருந்து {இந்திரனிடமிருந்து} அபகரித்து நீண்டகாலம் ஜீவித்திருக்கலாம். என்னைப் போன்றவளை அபகரித்தால் அமிருதம் பருகியவனாகவே இருந்தாலும் உனக்கு மோக்ஷம் கிடைக்காது" {என்றாள் சீதை}.(24)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 48ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |