Wednesday 26 April 2023

அயோமுகியும், கபந்தனும் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 69 (51)

Ayomukhi and Kabandha | Aranya-Kanda-Sarga-69 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைத் தேடிப் புறப்பட்ட ராமனும், லக்ஷ்மணனும்; கிரௌஞ்சாரண்யம்; அயோமுகியை தண்டித்த லக்ஷ்மணன்; இராமனையும், லக்ஷ்மணனையும் பிடித்த கபந்தன்; இலக்ஷ்மணனின் புலம்பல்; இராமனின் வேதனை...

Lakshmana Rama Kabandha

இவ்வாறு அவனுக்கு நீர்க்காணிக்கையளித்த ராகவர்கள், பஷ்சிம திசை {மேற்கு திசையை} நோக்கிப் புறப்பட்டு, வனத்தில் சீதையைத் தேடிச் சென்றனர்[1].(1) சரங்கள், விற்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்ட ஐக்ஷ்வாகுக்கள் இருவரும் அந்த தக்ஷிண {தென்} திசையை அடைந்து, அதிகம் மிதிபடாத {பயன்படுத்தப்படாத} பாதையை அடைந்தனர்.(2) பல குல்மங்கள் {புதர்கள்}, விருக்ஷங்கள் {மரங்கள்}, லதைகள் {கொடிகள்} ஆகியவற்றால் அடர்ந்ததாகவும், முற்றிலும் கடப்பதற்கு அரியதாகவும், மிகக் கொடியதாகவும், பார்க்க கோரமாகவும் அஃது {அந்தப் பாதை} இருந்தது.(3) மஹாபலர்கள் இருவரும், தக்ஷிண திசையில் {தென்திசையில்} சென்று, பயங்கரமான அந்த மஹா அரண்யத்தை {தண்டகாரண்யத்தை} வேகமாக நடந்து கடந்தனர்[2].(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜடாயு சொன்ன தெற்கு திசை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முதலில் மேற்கே செல்ல வேண்டியிருந்தது, அடுத்த சுலோகத்திலேயே தெற்கு நோக்கிச் செல்வதும் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. சில பதிப்புகளில், இந்த இடத்தில் மேற்குத் திசை என்று சொல்லாமல் தென்மேற்குத் திசையில் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்தில் மேற்கு குறிப்பிடப்படுகிறது, அடுத்த சுலோகத்தில் தெற்கு சொல்லப்படுகிறது. எனவே இங்கே சொல்லப்படும் மேற்கு, தென்மேற்கையே குறிப்பிடுகிறது" என்றிருக்கிறது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், கோரக்பூர் பதிப்புகளிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் "தென் திசையில் சென்று" என்ற சொற்கள் இல்லை. ஆனால் இறுதியில் தென்திசை குறிப்பிடப்படுகிறது. அங்கே, "மஹாபலர்கள் இருவரும், வியாலங்களும் {பாம்புகளும்}, சிம்ஹங்களும் சேவிக்கும் மிகப் பயங்கரமான அந்த மஹாரண்யத்தை வேகமாக நடந்து கடந்தனர்" என்றிருக்கிறது. செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில், "தென்திசையைத் தேர்ந்தெடுத்துச் சென்ற அந்த மஹாபலவான்கள் இருவரும், அந்த மஹாவனத்தில் இந்த பயங்கரமான பகுதியை வேகமாக நடந்து கடந்தனர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்பில், முதலில் உள்ள தென்மேற்குத் திசை என்பதைத் தாண்டி மற்ற இரண்டு இடங்களில் வரும் தென்திசை குறிப்பிடப்படவில்லை.

அதன்பிறகு, பெருஞ்சீற்றம் கொண்ட அந்த ராகவர்கள் இருவரும், ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோசங்கள் சென்று கடப்பதற்கரிய கிரௌஞ்ச அரண்யத்திற்குள் நுழைந்தனர்[3].(5) சீதை களவாடப்பட்டதால் துக்கத்தில் இருந்த அவர்கள் இருவரும், வைதேஹியைக் காணும் ஆவலில், ஆங்காங்கே நின்று, பல மேக கணங்களுக்கு ஒப்பானதும், எங்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடியதும், நானாவித வர்ணங்களிலான சுபமான புஷ்பங்களாலும், பக்ஷி கணங்களாலும், மிருகங்களாலும் நிறைந்ததுமான அந்த வனத்தில் தேடித் திரிந்தனர்.(6,7) பிறகு, தசரதாத்மஜர்களான அந்த உடன்பிறப்புகள் இருவரும், அங்கிருந்து கிழக்கு நோக்கி 3 குரோசம் சென்று[4], கிரௌஞ்சாரண்யத்தைக் கடந்து, மதங்காசிரமத்திற்கு இடையில் கோரமானதும், பல பயங்கரமான மிருகங்களும், துவிஜங்களும், கடப்பதற்கு அரிதாக எங்கும் அடர்ந்த விருக்ஷங்களை {மரங்களைக்} கொண்டதுமான அந்த வனத்தைக் கண்டு, அதில் ஒரு கிரியில், பாதாளத்துக்கு சமமான கம்பீரமான இருளால் எங்கும் அடர்ந்த ஒரு குகையைக் கண்டனர்.(8-10)

[3] தண்டகாரண்யத்தைக் கடந்தனர் என்று 4ம் சுலோகத்தில் சொல்லிவிட்டு, ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோச தொலைவில் உள்ள கிரௌஞ்சாரண்யம் என்று சொல்லப்படுகிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தொலைவுக்கான பண்டைய இந்திய அளவுமுறைகளைச் சொல்லும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தின்படி" என்று ஆரம்பித்து, சில அளவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிக்குறிப்பின் இறுதியில், "பிரிட்டிஷ் வருவாய்த்துறை ஒரு யோஜனையை 5 மைல்கள் {8.04 கி.மீ.} எனக் கொண்டது. பாரம்பரியமாக ஒரு யோஜனை என்பது 10 மைல்க்கள் {16.09 கி.மீ.} தூரம் என்று கணக்கிடப்படுகிறது" என்று இருக்கிறது. அந்த அடிக்குறிப்பில், சில இடங்களில் குத்துமதிப்பாகவும், சில இடங்களில் பிழையாகவும் கணக்கிடப்பட்டிருக்கும் அளவுகள் திருத்தப்பட்டுப் பின்வருமாறு தரப்படுகின்றன. ஒரு அங்குலம் = இன்றைய முக்கால் இன்ச் {19.05mm} ஆகும். 4 அங்குலங்கள் = 1 தனுகிரஹம் {வில்லின் கைப்பிடி அளவு} = 3 இன்ச் {76.2 mm}. 8 அங்குலங்கள் = 1 தனுர்முஷ்டி {கட்டைவிரல் உயர்த்தப்பட்ட உள்ளங்கையின் அளவு} = 6 இன்ச் {152.4mm}. 12 அங்குலங்கள் = 1 விதஸ்தை {உள்ளங்கைகளை விரித்தால் கட்டைவிரல் நுனியில் இருந்து சிறுவிரல் நுனி வரையுள்ள அளவு / அதாவது ஒரு சாண்} = 9 இஞ்ச் {228.6mm}. 2 விதஸ்தைகள் = 1 அரத்னி / ஹஸ்தம் {ஒரு முழம்} = 18 இன்ஞ் {457.2mm}. 4 அரத்னிகள் = 1 தண்டம் / 1 தனுஸ் {வில்லின் அளவு} = 6 அடி {1828.8 mm / 1.8288 m}. 10 தண்டங்கள் = 1 ரஜ்ஜு = 60 அடி {18.288m}. 2 ரஜ்ஜுக்கள் = 1 பரிதேசம் = 120 அடி {36.576m}. 2000 தண்டங்கள் / தனுஸ்கள் = 1 குரோசம் = 12,000 அடி = 2.2727 மைல்கள் = 3.6576 கி.மீ. 4 குரோசங்கள் = 1 யோஜனை = 48,000 அடி = 9.0909 மைல்கள் = 14.6304 கி.மீ ஆகும். ஜிஜித் நடுமுறி ரவி அவர்களின் "ஜியோகிரபி ஆஃப் ராமாயணா" புத்தகத்தில், "13ம் எண் கொண்ட அசோக மௌரியனின் கல்வெட்டு, "பாடலிபுத்திரத்தில் இருந்து யோனா மன்னன் ஆளும் அந்தியோகம் 600 யோஜனைகள் தொலைவு கொண்டது" என்று குறிப்பிடுகிறது. அந்தியோகம், மன்னன் அந்தியோகஸ் 1ம் சோடர் ஆண்ட பாபிலான் நகரம் என்று அடையாளம் காணப்படுகிறது. பாடலிபுத்திரத்தில் இருந்து பாபிலான் 4000 கி.மீ. தொலைவாகும் {இது இன்றைய பீகாரின் பாட்னாவில் இருந்து, இன்றைய ஈராக்கின் ஹில்லா நகரம் [அன்றைய பாபிலான்] வரை ராவணன் போல் நேரடியாக விமானம் மூலம் சென்றால் மட்டுமே வரும் 4004 கி.மீ. தொலைவாகும்}. அவ்வாறெனில் 1 யோஜனை 7 கி.மீ. {சரியாகச் சொன்னால் 6.673 கி.மீ. ஆகும்}. சூரிய சித்தாந்தம், ஆரியபாட்டியம் ஆகியவை ஒரு யோஜனை 8 கி.மீ. என்று வரையறுக்கின்றன. 14ம் நூற்றாண்டின் பரமேஷ்வரர், 12-13 கி.மீ. என்று கணக்கிடுகிறார். சில புராணப்படைப்புகளின் படி 12.2 முதல் 14.6 கி.மீ. வரை சொல்லப்படுகிறது. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஒரு யோஜனை என்பது 8 முதல் 9 மைல்கள் என்கிறார். சீன அளவுமுறைகளுடன் ஒப்பிட்டால் அது 6.7 - 8.2 மைல்கள் (10.8 - 13.2 கி.மீ.) என்றும் அவர் சொல்கிறார்" என்று சொல்லிவிட்டு, பின்னர், "நமது புத்தகத்தில் யோஜனை என்பதற்கு இரண்டு அளவுகோல்களை வைத்துக் கொள்கிறோம். நீள, அகல, உயரங்களைக் குறிப்பிடும் பகுதிகளில் 1 குறும் யோஜனை {s-Yojana} என்பது 120 மீட்டராகக் கொள்ளப்படுகிறது. தொலைவுகளைக் குறிப்பிடும் பகுதிகளில் 1 நெடும் யோஜனை {b-Yojana} என்பது 48 கி.மீ. யாகக் கொள்ளப்படுகிறது. 1 குறுங்குரோசம் {s-Krosa} என்பது 120 மீட்டராகவும், 1 நெடுங்குரோசம் {b-Krosa} என்பது 12 கி.மீ.யாகக் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது. ஆக, கௌடில்யர் சொல்லும் 1 பரிதேசம், அதாவது 120 அடிகளை 120 மீட்டராக மாற்றி ஒரு குறும்யோஜனை என்றும், அதுவேதான் ஒரு குறுங்குரோசமும்கூட என்றும், 48000 அடிகளை 48 கி.மீட்டராக மாற்றி ஒரு நெடும்யோஜனை என்றும், நூறு பரிதேசங்களைக் கொண்ட ஒரு குரோசத்தின் 12000 அடிகளை 12 கி.மீ. கொண்ட நெடுங்குரோசமாகவும் ஜிஜித் நடுமுறி அவர்கள் தன் ஆய்வுக்காக மாற்றிக் கொள்கிறார். இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லைதான். இருப்பினும் இந்த அளவுகளில் எதையேனும் கொண்டே இதிஹாச புராண ஆய்வுகள் செய்யப்படுகின்றன. புராணங்கள் பலவற்றையும், அவற்றைக் கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் பலவற்றையும் படிப்பவர்களுக்கும் இஃது உதவக்கூடும் என்றே இவ்வளவு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் மூன்று குரோசங்கள் என்பது கௌடில்யரின் கணக்குப்படி 36,000 அடிகளாகும்; அதாவது 6.18 மைல்களாகும்; அதாவது 10.9728 கி.மீ.ஆகும். ஜனஸ்தானத்தில் இருந்து கிரௌஞ்ச அரண்யம் தொடங்கும் பகுதி இவ்வளவு {11 கி.மீ.} தொலைவில் இருந்திருக்க வேண்டும்.

[4] கிழக்கு முகமாக 3 குரோச தொலைவைக் கடந்து, கிரௌஞ்சாரண்யத்திற்கும் மதங்க ஆசிரமத்திற்கும் இடையில் ஒரு காட்டை அடைந்து அங்கே ஒரு மலையில் ஒரு குகையைக் காண்கின்றனர். தேசிராஜு ஹனுமந்தராவ், வி.வி.சுப்பையா-பி.கீர்வானி, மன்மதநாததத்தர், தாதாசாரியர், கோரக்பூர் பதிப்புகளில் இவ்வாறே இருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் பதிப்புகளில் கிழக்குத் திசை என்பது சுட்டப்படவில்லை. தர்மாலயப் பதிப்பில், "க்ரௌஞ்சாரண்யத்தை தாண்டி, அதிலிருந்து மதங்காச்ரமத்திற்கு முந்தியே ஆறுமைல் சென்று இடையில்"..., "அந்த வனத்தையும்"...., "குகையையும் கண்டனர்" என்றிருக்கிறது. அதாவது கிழக்குத் திசை என்பதற்குப் பதில் மதங்காசிரமத்திற்கு முந்தியே என்றிருக்கிறது. மூலத்தில், "பூர்வேண" என்றிருக்கிறது. இதற்கு, "கிழக்குத் திசை" என்றும், "பூர்வத்தில்" என்றும் இரு பொருள்களைக் கொள்ளலாம் போலும்.

அந்த நரவியாகரர்கள் {மனிதர்களில் புலிகள்}, அந்தக் குகையை அடைந்ததும், அதன் அருகிலேயே மஹாரூபம் கொண்டவளும், விகார முகம் படைத்தவளுமான ஒரு ராக்ஷசியைக் கண்டனர்.(11) அப்போது உடன்பிறப்புகளான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும், அற்ப துணிவைக் கொண்டவர்களுக்கு பயத்தை விளைவிப்பவளும், அருவருப்பானவளும், ரௌத்திரத் தோற்றத்தையும், சரிந்த நீண்ட வயிற்றையும், கூரிய பற்களையும் கொண்டவளும், முதிர்ந்தவளும், கடினமான தோலைக் கொண்டவளும், பயங்கர மிருகங்களைப் பக்ஷிப்பவளும் {உண்பவளும்}, விகாரமான இடுப்பையும், விரிந்த கூந்தலையும் கொண்டவளுமான அவளை அங்கே கண்டனர்.(12,13) அவள், வீரர்களான அவ்விருவரின் அருகே வந்து, "வா, இன்புறலாம்" என்று சொல்லி, தமையனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த லக்ஷ்மணனை இறுக அணைத்துக் கொண்டாள்.(14)

அவள் {அயோமுகி}, சௌமித்ரியை {லக்ஷ்மணனை} இறுகப் பற்றிக் கொண்டு, அவனிடம் {இந்தச்} சொற்களைச் சொன்னாள், "நான் அயோமுகி என்ற பெயரைக் கொண்டவள். என்னை நீ அடைந்தாய். நீ என் பிரியன் {காதலன்}. வீரா, நாதா, இந்த ஆயுள் நெடுக பர்வதகூடங்களிலும், நதிகளிலும், மணற்கரைகளிலும் என்னுடன் நீ இனி இன்புற்றிருப்பாயாக" {என்றாள்}[5].(15,16)

[5] பேசினன் அங்கு அவள் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்
நேசம் இல் அன்பினளாயினும் நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள்.

- கம்பராமாயணம் 3592ம் பாடல், ஆயோமுகிப் படலம்

பொருள்: {இலக்ஷ்மணன் இவ்வாறு} பேசியதும், அங்கு ஊசலாடி, வருந்தி அழிகின்ற மனத்தை உடைவளும், {லக்ஷ்மணன்} தன்னை ஏற்பானோ, மாட்டானோ என்று தடுமாறும் சிந்தனை உடையவளுமான அவள், பழைய உறவு ஏதும் இல்லாத அன்புடையவள் ஆனாலும், தன் ஆசையை தானே சொல்ல நாணமடையாதவளாக, "உன்னிடம் ஆசையினால் வந்த அயோமுகி நான்" என்றாள்.

இவ்வாறு சொல்லப்பட்டதும் அரிசூதனனான லக்ஷ்மணன் கோபமடைந்து, கட்கத்தை {வாளை} உயர்த்தி, அவளது காதையும், நாசியையும், ஸ்தனத்தையும் வெட்டினான்.(17) கோரத் தோற்றம் கொண்ட அந்த ராக்ஷசி, காதும், நாசியும் வெட்டப்பட்ட பிறகு, உயர்ந்த சுவரத்தில் கதறிக் கொண்டே வந்த வழியே திரும்பி ஓடினாள்[6].(18) அவள் சென்ற பிறகு, அரிமித்ரக்னர்களும் {பகைவரின் நண்பர்களை அழிப்பவர்களும்}, தைரியத்துடன் முன்னேறிச் செல்பவர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் இருவரும், அடர்ந்த வனத்திற்குள் நுழைந்தனர்[7].(19)

[6] அயோமுகி என்றால் இரும்பினாலான முகத்தைக் கொண்டவள் என்று பொருள். சுலோகம் 11 முதல் 19 வரையுள்ள பகுதி செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இல்லை. அயோமுகி என்ற ராக்ஷசியைப் பற்றிச் சொல்லும் இந்தப் பகுதி கம்பராமாயணத்தில் அயோமுகிப் படலம் என்று 102 பாடல்களில் அமைந்திருக்கிறது. கம்பராமாயணத்தில், ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்த பின்பு, சீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராமன், லக்ஷ்மணனிடம் நீர் கொண்டுவருமாறு கேட்கிறான். இலக்ஷ்மணன் நீர் தேடிச் சென்றபோது, அயோமுகி அவன் மீது காதல் கொண்டு, தன் மந்திர வலிமையால் அவனை மயக்கி எடுத்துச் செல்கிறாள். அயோமுகி லக்ஷ்மணனைத் தழுவிய உடனேயே அந்த மாயம் நீங்கியதும், அவன் அவளை அங்கபங்கம் செய்து ராமனிடம் திரும்பிச் செல்கிறான். இதற்குள் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் கடந்து விட்டதாக அங்கே குறிப்பிருக்கிறது. இந்தப் படலத்தின் தொடக்கத்தில் சீதையை மீட்க முடியாமலும், படலத்தின் இறுதியில் லக்ஷ்மணனைக் காண இயலாமலும் இராமன் வருந்தும் பாடல்கள் கவிச்சுவைமிக்கவை.

[7] ஐஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடையுடுத்த
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எவ்வுயிரும்
கையின் வளைத்து வயிற்றின் அடக்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

- கம்பராமாயணம் 3643ம் பாடல், கவந்தன் படலம்

பொருள்: "ஐஐந்துக்கும் இரட்டிப்பான யோசனை தூரத்தில், காடுகளால் சூழப்பட்ட நிலப்பகுதியில் அவர்கள் திரிந்தனர். சூரியனும் நடுப்பகுதியை அடைந்தான், எய்யும் கணை பொருந்திய வில்லை ஏந்திய கைகளை உடைய {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும்  சென்று, தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கைகளை மட்டுமே நீட்டி தன் எல்லைக்குள் சிக்கும் எந்த உயிரினத்தையும் வளைத்துப் பிடித்துத் தன் வயிற்றில் திணித்துச் செரிக்கும் கவந்தன் வனத்தைக் கண்டனர்" என்பது பொருள். இங்கே ஐஐந்து என்பதை 25 எனக் கொண்டால் இரட்டிப்பாகும்போது வரும் 50 யோஜனைகள், 454 மைல் / 731 கி.மீ. ஆகும். ஐந்தும் ஐந்தும் 10 எனக் கொண்டால், இரட்டிப்பாகும்போது 20 யோஜனைகள், 181.8 மைல் / 292.57 கி.மீ ஆகும்.

மஹாதேஜஸ்வியும், சத்வவானும் {தைரியசாலியும்}, சீலவானும் {ஒழுக்கமுள்ளவனும்}, தூய்மையானவனுமான {நல்லெண்ணம் கொண்டவனுமான} லக்ஷ்மணன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன்னுடன் பிறந்தானிடம் {ராமனிடம், இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(20) "என் {இடது} கை திடமாகத் துடிக்கிறது. என் மனம் கலவரமடைவதைப் போலத் தெரிகிறது. பெரும்பாலும் அனிஷ்ட நிமித்தங்களே {விரும்பத்தகாத சகுனங்களே} தென்படுகின்றன.(21) எனவே, ஆரியரே, நீர் ஆயத்தமாக இருப்பீராக. {நன்மை பயக்கத்தக்க} ஹிதமான சொற்களைக் கேட்பீராக. நிமித்தங்கள், உடனே விளையப்போகும் ஆபத்தையே என்னிடம் தெரிவிப்பது போலத் தெரிகிறது.(22) பரமதாருணரே {படுபயங்கரமானவரே}, வஞ்சுலகம் என்ற பெயர் கொண்ட இந்தப் பக்ஷி யுத்தத்தில் நமக்கான விஜயத்தை முன்னறிவிப்பதைப் போல உரக்க கூவுகிறது" {என்றான் லக்ஷ்மணன்}.(23)

அவர்கள் அவ்வழியில் அந்த வனம் முழுவதும் தைரியமாகத் தேடிக் கொண்டிருந்தபோது, அந்த வனத்தையே முழுமையாக முறிப்பது போன்ற ஒரு பெரிய சப்தத்தைக் கேட்டனர்.(24) காற்றினால் முற்றிலும் பீடிக்கப்பட்ட ஆகாயத்தைப் போல, அந்த வனத்தின் சப்தமானது அந்த வனம் எங்கும் பரவியது.(25) தம்பியுடன் இருந்த ராமன், கையில் வாளுடன் அந்த சப்தத்தை அறியும் எண்ணங்கொண்ட போது, {அந்த வனத்தின்} ஒரு பகுதியில் {அடர்ந்த புதரில்}, மஹாகாயம் {மிகப்பெரும் உடலைப்} படைத்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான ஒரு ராக்ஷசனைக் கண்டான்.(26) 

அப்போது அவ்விருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, அங்கே எதிரில் நிற்பவனும், நெடிய தோற்றம் கொண்டவனும், சிரமும் {தலையும்}, கிரீவமும் {கழுத்தும்} இல்லாதவனும், வயிற்றில் முகத்தை {வாயைக்} கொண்டவனுமான கபந்த {தலையற்ற} ராக்ஷசனை அடைந்தனர்.(27) அடர்ந்து, மடியாத ரோமங்களுடன் {மயிருடன்}, மஹாகிரியைப் போல {பெரும் மலைக்கு ஒப்பாக} வளர்ந்தவனும், நீலமேகத்திற்கு ஒப்பானவனும், ரௌத்திரனும், மேகத்திற்கு ஒப்பான குரலைக் கொண்டவனும்,(28) மார்பில் அமையப்பெற்ற நெற்றியில் அக்னிஜுவாலைக்கு ஒப்பாக ஜொலிப்பதும், பெரிய இமைகளைக் கொண்டதும், பழுப்பு நிறத்திலானதும், மிக அகன்றதும், நீண்டதும், கூரிய பார்வை கொண்டதும், கோரமானதுமான ஏக நேத்திரத்துடன் {ஒரே ஒரு கண்ணுடன்} கூடியவனும், பெரும்பற்களைக் கொண்டவனும், நாக்கை நீட்டி அடிக்கடி நக்கிக் கொண்டிருப்பவனும், மஹா முகமுள்ளவனுமான அவன் {ராக்ஷசன் கபந்தன்},(29,30) மஹாகோரமான ரிக்ஷங்கள் {கரடிகள்}, சிம்ஹங்கள், மிருகங்கள் {மான்கள்}, துவீபங்கள் {யானைகள்} ஆகியவற்றை பக்ஷித்துக் கொண்டிருந்தான். 

ஒரு யோஜனை நீளும் கோரமான புஜங்கள் இரண்டையும் விரித்து,(31) ரிக்ஷங்களையும் {கரடிகளையும்}, விதவிதமான பக்ஷிகணங்களையும் {பறவைக் கூட்டத்தையும்},  அனேக மிருகங்களையும் {விலங்குகளையும்}, சிறந்த மான்கள் பலவற்றைத் தன்னிரு கரங்களாலும் பற்றி {வாய்க்குள்} வீசியபடியே, அங்கே எதிரில் வரும் அந்த உடன்பிறப்புகளின் பாதையை மறைத்து நின்று கொண்டிருந்தான்.(32,33அ) பிறகு ஒரு குரோசம் மாத்திரம் நடந்து சென்று, வலிமைமிக்கவனும், கொடியவனும், பயங்கரனும், கபந்தத்தை {தலையற்ற உடலைப்} போன்ற தன் வடிவில் இருந்து விரியும் புஜங்களைக் கொண்டவனும், கோரத் தோற்றம் கொண்டவனுமான கபந்தனைக் கண்டனர்[8].(33ஆ,34) மஹாபாஹுவான அவன் {நீண்ட கைகளைக் கொண்ட அந்தக் கபந்தன்}, தன் அகன்ற தோள்களை விசாலமாக விரித்து, அருகருகே இருந்த ராகவர்கள் இருவரையும் பலத்தால் பீடித்து இறுகப் பற்றினான்.(35) 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னர் அவர்கள் கபந்தனை வனத்தின் ஒரு பகுதியில் {அடர்ந்த புதரில்} கண்டதாகச் சொல்லப்பட்டது. இப்போதோ அவர்கள் 2.27 மைல்கள் தொலைவில் அவனைக் காண்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அவனைக் காண்பதால், கபந்தனின் உயரம் இங்கே நிறுவப்படுகிறது. தொலைவிலிருந்தே குன்றைக் காண்பது போல அவனைக் காண முடிந்திருக்கிறது. அவர்கள் செல்லக்கூடிய பாதை இதுமட்டுந்தான், அதுவும் இந்த ராக்ஷசனால் அமைக்கப்பட்டது" என்றிருக்கிறது. 

வாள்களுடன் கூடியவர்களும், திடமான தனுக்களைக் கொண்டவர்களும், தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்தவர்களும், மஹாபுஜர்களும், மஹாபலவான்களும், உடன்பிறந்தவர்களுமான அவ்விருவரும், வசமில்லாதவர்களாக அவனை அடைந்து இழுக்கப்பட்டனர்.(36) அப்போது சூரனான ராகவன் {ராமன்}, தைரியத்துடன் சலியாதிருந்தான். இலக்ஷ்மணனோ, பால்யத்தினால் புகலிடமற்ற நிலையை உணர்ந்து கவலையடைந்தான். அந்த ராகவானுஜன் {ராமனின் தம்பியான லக்ஷ்மணன்}, துன்புற்றவனாக ராகவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(37,38அ) "வீரரே, வசமில்லாதவனாக ராக்ஷசன் வசமடைந்த என்னைப் பார்ப்பீராக. இராகவரே, என்னை மட்டும் விட்டுவிட்டு, உம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்வீராக.(38ஆ,39அ) என்னை பூதபலியாக தத்தம் செய்தால் {உயிர்ப்பலியாகக் காணிக்கை அளித்தால்}, சுகத்தை அடைந்து, குறுகிய காலத்தில் வைதேஹியை நீர் அடையலாம் என்று நான் நினைக்கிறேன்.(39ஆ,40அ) காகுத்ஸ்தரே, ராமரே, பித்ரு பைதாமஹர்களின் மஹீயை {தந்தை, பாட்டன் வழி வந்த நிலத்தை} மீண்டும் அடைந்து அங்கே ராஜ்ஜியத்தில் அமர்ந்து எப்போதும் என்னை நினைத்திருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}[9].(40ஆ,41அ)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புகலிடமற்றவனாக உணர்ந்தான் லக்ஷ்மணன் என்ற இந்த சுய அனுதாபம் இந்தத் துயர்நிலையிலும் பொருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்தொடரும் அவனது வசனத்துடன் சேர்த்துப் பார்த்தால் சரியாகவே தெரிகிறது. அவன், சகோதரனுக்காகத் தன்னைத் தியாகம் செய்து, {தியாகத்தில்} ஜடாயுவை விஞ்ச விரும்புகிறான். சிறுபிள்ளைத்தனம் என்பது, இந்த காண்டத்தின் தொடக்க சர்க்கங்களில், விராதனை அவர்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை மறந்துவிட்டு லக்ஷ்மணன் பேசுவதால் சொல்லப்படுகிறது. இங்கே தன்னை பலி கொடுத்தாவது தன் சகோதரனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அவனது ஒட்டுமொத்த எண்ணமாகும்" என்றிருக்கிறது. 36 முதல் 42ஆம் சுலோகம் வரையுள்ள செய்தி செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இல்லை.

இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், ராமன் சௌமித்ரியிடம் சொன்னான், "வீரா, வீணாக அச்சமடையாதே. உன்னைப் போன்றவன் இவ்வாறு திகைக்கக்கூடாது" {என்றான் ராமன்}.(41ஆ,42அ) அதே வேளையில், குரூர தானவனும், உத்தம மஹாபாஹுவுமான {பெருந்தோள்களைக் கொண்டவர்களில் சிறந்தவனுமான} கபந்தன், உடன்பிறப்புகளான ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(42ஆ,43அ) விருஷப ஸ்கந்தர்களும் {எருது போன்ற தோள்பட்டைகளைக் கொண்டவர்களும்}, மஹாகட்கத்தையும், தனுவையும் {பெரும் வாளையும், வில்லையும்} தரித்தவர்களுமாக, கோரமான இந்த தேசத்திற்குள் {இடத்திற்குள்} வந்திருக்கும் நீங்கள் இருவரும் யாவர்? தைவத்தால் என் கண்களின் முன்பு உத்தம பக்ஷணமாக {சிற்றுண்டியாக} வாய்த்திருக்கிறீர்கள்.(43ஆ,44அ) இங்கே உங்கள் காரியத்தையும், என்ன காரணத்தினால் நீங்கள் இங்கே வந்தீர்கள் என்பதையும் சொல்வீராக. பசியால் துன்புற்று இங்கே நான் அமர்ந்திருக்கும் இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} வந்திருக்கிறீர்கள்.(44ஆ,45அ) கூரிய சிருங்கங்களைக் கொண்ட ரிஷபங்களைப் போல {கூரிய கொம்புகளைக் கொண்ட காளைகளைப் போல}, பாணங்கள், விற்கள், கட்கங்கள் ஆகியவற்றுடன் என் {வாயின்} அருகே வந்திருக்கிறீர்கள். உங்கள் ஜீவிதம் மீள்வது சாத்தியமில்லை" {என்றான் கபந்தன்}.(45ஆ,46அ)

துராத்மாவான கபந்தன் சொன்ன அந்த சொற்களைக் கேட்ட ராமன் வாடிய முகத்துடன் லக்ஷ்மணனிடம் {இதைச்} சொன்னான்:(46ஆ,47அ) "சத்தியவிக்கிரமா, துன்பத்தின் மேல் துன்பத்தை அடைந்து, பிரியத்திற்குரியவளைக் காணாத நிலையில், ஜீவிதாந்தத்திற்காக {வாழ்வின் முடிவிற்காக} இந்த பயங்கர விசனம் {துன்பம்} வாய்த்திருக்கிறது.(47ஆ,48அ) நரவியாகரா, லக்ஷ்மணா, சர்வபூதங்களிடமும் காலத்தின் வீரியம் மஹத்தானது. விசனங்களில் மோஹித்திருப்பவர்களான {துன்பங்களில் திகைத்திருக்கும்} உன்னையும், என்னையும் பார்ப்பாயாக.(48ஆ,49அ) இலக்ஷ்மணா, சர்வ பூதங்களிடமும் தைவத்திற்கு {காலத்திற்கு} பாரமானது எதுவுமில்லை. சூரர்களும், பலவான்களும், ரணக்களங்களில் {போர்க்களங்களில்} அஸ்திரங்களில் நிபுணர்களும் காலத்தை வெல்லமுடியாமல் வாலுகசேதுவை {மணல் அணைகளைப்} போல கஷ்டத்தால் கரைந்து போகிறார்கள்" {என்றான் ராமன்}.(49ஆ,50)

திடமானவனும், சத்தியவிக்கிரமனும் {வீண்போகாத வீரம் படைத்தவனும்}, பெரும் புகழ்பெற்றவனும், பிரதாபவானுமான அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன்} இவ்வாறு சொல்லிவிட்டு, சினம் தூண்டப்பட்டவனான சௌமித்ரியைக் கண்டு, ஸ்திரமான தன் சொந்த மதியைத் தன்னில் நிலைக்கச் செய்தான்.(51)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 69ல் உள்ள சுலோகங்கள்: 51

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை