Salvation of Jatayu | Aranya-Kanda-Sarga-68 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுடன் நடந்த மோதலையும், சீதை கடத்தப்பட்டதையும் ராமனிடம் சொன்ன ஜடாயு; ஜடாயுவின் மரணமும், தகனமும்...
இராமன், ரௌத்திரமாகப் புவியில் வீழ்த்தப்பட்ட அந்த கிருத்ரனை {கழுகான ஜடாயுவைக்} கண்டு, மித்ர சம்பன்னனான {நட்புடன் கூடிய} சௌமித்ரியிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "எனக்காக முயற்சி செய்கையில், இந்த விஹங்கமர் {வானுலாவி} போரில் ராக்ஷசனால் கொல்லப்பட்டிருக்கிறார். நிச்சயம் எனக்காகவே தன் பிராணனைத் துறந்திருக்கிறார்.(2) இலக்ஷ்மணா, இந்த சரீரத்தில் பிராணன் அதிபலவீன நிலையில் உள்ளதால், இவரது சுவரம் மந்தமாக இருக்கிறது; கடுந்துன்பத்துடன் காணப்படுகிறார்.(3) ஜடாயுவே, மீண்டும் வாக்கியங்களைச் சொல்ல முடியுமானால், சீதையைக் குறித்தும், உமது வதை குறித்தும் சொல்வீராக. உமக்கு நன்மை விளையட்டும்.(4)
இராவணன் எதன் நிமித்தம் ஆரியையைக் கடத்தினான்? நான் அவனுக்குச் செய்த எந்த அபராதத்தை நோக்கில் கொண்டு எனக்குப் பிரியமானவளை ராவணன் கடத்தினான்?(5) துவிஜோத்தமரே {பறவைகளில் சிறந்தவரே}, சந்திரனுக்கு ஒப்பானதும், மனோஹரமானதுமான {மனத்தைக் கவர்வதுமான} அந்த முகம் எப்படி இருந்தது? அந்தக் காலத்தில் சீதை என்ன சொன்னாள்?(6) அந்த ராக்ஷசனின் வீரியம் எப்படிப்பட்டது? ரூபம் எத்தகையது? கர்மங்கள் {அவன் செய்த செயல்கள்} என்னென்ன? அவனது பவனம் {வசிப்பிடம்} எங்கே இருக்கிறது? தாதா {ஐயா}, இவற்றைக் கேட்கும் எனக்குச் சொல்வீராக" {என்றான் ராமன்}.(7)
தர்மாத்மாவான அவன் {ஜடாயு}, அநாதையைப் போல அழுது புலம்புபவனை {ராமனை} நிமிர்ந்து பார்த்துக் கலங்கிய குரலுடன் ராமனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(8) "துராத்மாவான ராக்ஷசேந்திரன் ராவணன், வாதத்துடன் {காற்றுடன்} கூடிய இந்த துர்தினம் கலக்கமுறப் பெரும் மாயையைச் செய்து அவளைக் கடத்திச் சென்றான்.(9) தாதா {ஐயா}, அந்த நிசாசரன் {இரவுலாவி}, களைத்துப் போயிருந்த என் சிறகுகள் இரண்டையும் வெட்டிவிட்டு, வைதேஹியான சீதையை எடுத்துக் கொண்டு தக்ஷிண முகமாக {தெற்கை நோக்கிச்}[1] சென்றான்.(10) இராகவா, என் பிராணன் துடிக்கிறது; பார்வை தடுமாறுகிறது, உசீரத்தை {வெட்டிவேரை / விலாமிச்சம் வேரைத்}[2] தலைமயிராகக் கொண்ட சுவர்ண விருக்ஷங்களை {பொன்மரங்களை} நான் பார்க்கிறேன்.(11) காகுத்ஸ்தா, ராவணன் எந்த முஹூர்த்தத்தில் சீதையைக் கொண்டு போனானோ, அது முற்றான தன நஷ்டத்தை ஏற்படுத்துவதும், "விந்தம்" என்ற பெயரைக் கொண்டதுமான முஹூர்த்தமாகும்[3]. சுவாமி {உரிமையாளன்} எவனோ, அவன் சீக்கிரமே அதை {தன்னைவிட்டுப் போனதை / அபகரிக்கப்பட்டதை} மீண்டும் அடைவான். அவன் {ராவணன்} அதை அறிவானில்லை.(12,13அ) இராக்ஷசேஷ்வரனான ராவணன், உனக்குப் பிரியமானவளைக் களவு செய்து, தூண்டில் முள்ளை {கவ்வும்} மீனைப் போலப் பற்றிவிட்டான். சீக்கிரமே அவன் நாசமடைவான்.(13ஆ,இ) ஜனகனின் மகளை நோக்கி நீ கவலையின்றிச் செல்வாயாக. இரணமூர்த்தத்தில் {போர்முனையில்} சீக்கிரமே அவனைக் கொன்று, வைதேஹியுடன் நீ ரமித்திருப்பாய் {இன்புற்றிருப்பாய்}" {என்றான் ஜடாயு}.(14)
[1] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும், தர்மாலயம், கோரக்பூர் பதிப்புகளிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும், "தென் திசையில் சென்றான்" என்றே இங்கே இருக்கிறது.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெட்டிவேர் என்பது நறுமணமிக்கதும், நார்ச்சத்து மிக்கதுமான இந்தியப் புல்வகையைச் சார்ந்தது. இந்தப் புல்லானது விசிறிகள், திரைகள் ஆகியவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இலைகளுக்குப் பதிலாக புற்களைக் கொண்ட பொன்மரங்கள் மரணத்திற்கான சகுனமாகும்" என்றிருக்கிறது.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முஹூர்த்தம் என்பது, இருபத்துநான்கு மணி நேரங்களைக் கொண்ட {இன்றைய} கால அளவில், நாற்பத்தெட்டு நிமிடங்களாகும். ஒரு நாள் முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அவற்றில் சில நன்மைபயப்பவையாகவும், சில கெடுதலை விளைவிப்பவையாகவும் கருதப்படுகின்றன. தரப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய பட்டியலில் விந்தம் என்ற முஹூர்த்தம் இன்னதென்பதை அறியமுடியவில்லை. விந்தம் என்பது ஒரு நாளின் பதினோராவது முஹூர்த்தத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கெட்டதாகவும் கருதப்படுகிறது. இன்றைய நாட்களில் இது விஜயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது ஜடாயுவின் ஜோதிட அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. "வித்" {"ஈட்டுதல்"}, என்ற வேர்ச்சொல்லில் இருந்து விந்தியம் என்ற பதம் உண்டாகிறது. இந்தக் கணம் இழந்தவனுக்கு சாதகமாகவும், அபகரித்தவனுக்கு சாதகமில்லாமலும் இருக்கிறது. எனவே, ராவணன் இந்தக் கணத்தில் சீதையை அபகரித்தது அழிவையே தரும்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எந்த வேளையில் ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு சென்றானோ, இதுதான் விந்தமென்கிற (அல்லது விஜயமென்கிற) நல்ல வேளை. ஆனது பற்றி காணாமல் போன பொருளை சீக்கிரமே சுவான்தார் திரும்பி அடைகிறான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ராவணன் சீதையை எடுத்தோடின முகூர்த்தம் விந்தமென்னும் பெயருடையது; அதில் பறிகொடுத்த பொருளை யஜமானன் மீளவும் பெறுவான்; ராவணன் அதனை யறியாமல் சீதையைப் பறித்தனன்" என்றிருக்கிறது.
மரிக்கும்போதும் மயக்கமடையாமல் ராமனிடம் பேசிக் கொண்டிருந்த கிருத்ரனின் அலகில் {கழுகானவனின் வாயில்} இருந்து சதை கலந்த உதிரம் வழிந்தது.(15) "{இராவணனென்பவன்} விஷ்ரவஸின் புத்திரன், சாக்ஷாத் வைஷ்ரவணனுடன் {குபேரனுடன்} பிறந்தவன்" என்பதைச் சொல்லிவிட்டு அந்த பதகேசுவரன் {பறவைகளின் தலைவனான ஜடாயு}, அரிதான தன் பிராணனை விட்டான்.(16) இராமன், தன் கைகளைக் கூப்பி, "சொல்லும், சொல்வீராக" என்று பேசிக் கொண்டிருந்தாலும், கிருத்ரனின் பிராணன் சரீரத்தைத் துறந்து விஹத்திற்குள் சென்றது[4].(17) அவன் {ஜடாயு}, அப்போது சிரத்தை {தலையைப்} பூமியில் சாய்த்து, கால்களை நீட்டி, தன் சரீரத்தை {உடலை} பரப்பியபடியே தரணீதலத்தில் விழுந்தான்.(18)
[4] கழுகான ஜடாயுவின் உயிர், உடலைத் துறந்து வானத்திற்குள் சென்றது.
துக்கங்கள் பலவற்றால் தீனமடைந்த ராமன், தாமிரம் போன்ற கண்களைக் கொண்ட அந்த கிருத்ரன் {கழுகானவன்}, உயிர் போய், அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பாகக் கிடப்பதைக் கண்டு, சௌமித்ரியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) "இராக்ஷசர்கள் வசிக்கும் தண்டகாரண்யத்தில் சுகமாக பல வருஷங்கள் வாழ்ந்த இந்த பக்ஷியானவர் {நமக்காக} உயிரைவிட்டுவிட்டார்.(20) அனேக வயது வரை, எவர் வெகுகாலம் குறைவின்றி வாழ்ந்து வந்தாரோ, அவர் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறார். காலத்தை மீறுவது கடினம் {சாத்தியமில்லை}.(21) இலக்ஷ்மணா, எனக்கு உபகாரம் செய்ய சீதையை மீட்கச் சென்ற இந்த கிருத்ரரை {கழுகானவரை}, பலவந்தமாக ராவணன் கொன்றிருப்பதைப் பார்.(22) இந்த பதகேஷ்வரர் {பறவைகளின் மன்னர்}, தமது பித்ருபிதாமஹர்களுக்குரிய மஹத்தான கிருத்ர ராஜ்ஜியத்தைக் கைவிட்டு, எனக்கு ஹேதுவாக பிராணனைக் கொடுத்திருக்கிறார்.(23) சௌமித்ரியே, திர்யக் யோனிகளுக்குள் சென்றவர்களிலும் {விலங்குகள், பறவைகளின் கருவறைகளுக்குள் சென்றவர்களிலும்}, சூரர்கள், சரண்யர்கள் {பிறருக்கு அடைக்கலம் தருபவர்கள்}, தர்மசாரிகள் {தர்ம வழியில் நடப்பவர்கள்}, சாத்வர்கள் {நல்லவர்கள்} எங்கும் காணப்படுகின்றனர்.(24)
பரந்தபா, சௌம்யா, என் நிமித்தம் நேர்ந்த கிருத்ரரின் அழிவு ஏற்படுத்தும் துக்கத்தை, சீதை கடத்தப்பட்டபோதுகூட நான் அனுபவிக்கவில்லை.(25) பெரும்புகழ்மிக்கவரும், ஸ்ரீமானுமான ராஜா தசரதர் எப்படியோ, அப்படியே இந்த பதகேஷ்வரரும் {பறவைகளின் மன்னரும்} என்னால் பூஜிக்கப்படவும், மதிக்கப்படவும் தகுந்தவர்.(26) சௌமித்ரியே, விறகுக்கட்டைகளைக் கொண்டு வந்து, பாவகனைக் கடைந்தெடுப்பாயாக {நெருப்பை உண்டாக்குவாயாக}[5]. எனக்காக இறந்து போன கிருத்ர ராஜாவை {கழுகு மன்னர் ஜடாயுவை} தஹனம் செய்ய விரும்புகிறேன்.(27) சௌமித்ரியே, ரௌத்திரமான ராக்ஷசனால் கொல்லப்பட்ட இந்தப் பதகலோகநாதனை {பறவைகள் உலகின் தலைவரான இந்த ஜடாயுவை} சிதையில் ஏற்றி தஹனம் செய்ய விரும்புகிறேன்[6].(28)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சடங்குகளில் உண்டாக்கப்படும் அக்னி, "அரணி" என்று அழைக்கப்படும் {அதற்குப் பயன்படும் கட்டைகள் அரணிக் கட்டைகள் என்று அழைக்கப்படும்}. ஒரு கட்டையில் குழிவை உண்டாக்கி, மறுகட்டையின் கூர்முனையை அதில் வைத்துக் கடையும்போது, அந்தக் கட்டைகளின் உராய்வில் நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பைப் பஞ்சில் எடுத்து, அதைக் கொண்டே பெரும் சிதையில் நெருப்பு உண்டாக்கப்படும்" என்றிருக்கிறது.
[6] தர்மாலயப் பதிப்பில் இங்கே அதிக சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றின் பொருள் பின்வருமாறு, "வீர! புண்யமான கோதாவரியின் கரையில் சிதையை ஏற்படுத்து". வீரரும், பெரும்புகழ் படைத்தவரும், ஸர்வசரண்யரும், ஸ்ரீமானும், தர்மாத்மாவுமாகி ஸ்ரீராமர் லக்ஷ்மணரை பார்த்து இவ்விஷயத்தில் மேற்கண்டவாறு ஆக்ஞாபித்துவிட்டு ஜடாயுவை எடுத்துக் கொண்டு கோதாவரியின் கரையை நோக்கி அவ்விடத்தினின்று சென்று, புனிதமான தர்ப்பைகள் நிறைந்த அதன் கரையில் இறக்கி வைத்து அதன் மேல் உடனே லக்ஷ்மணனால் கொண்டுவரப்பட்ட கட்டைகளால் சிதையைச் செய்து அக்னியை கடைந்தெடுத்து" என்றிருக்கிறது. அதன்பின் மற்ற பதிப்புகளில் வருவது போலவே தொடர்கிறது. தர்மாலயப் பதிப்பில் இருக்கும் இந்தப் பகுதி, தாதாசாரியர், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் இல்லை.
மஹாசத்வரான கிருத்ர ராஜாவே {பெரும் வலிமைமிக்க கழுகு மன்னரே}, என்னால் அனுமதிக்கப்படும் {விடைகொடுத்து அனுப்பப்படும்} நீர், யஜ்ஞசீலர்களின் {யாகங்களைச் செய்பவரின்} கதியை அடைவீராக; வேள்வி நெருப்பை மூட்டுபவர்களின், போரில் புறமுதுகிடாதவர்களின், பூமியைக் காணிக்கையளிப்போரின் கதியை அடைவீராக. என்னால் {உத்தரக்கிரியை செய்யப்பட்டு} தூய்மையடைந்து, உத்தமமான உலகங்களுக்குச் செல்வீராக[7]" {என்றான் ராமன்}.(29,30)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த தகனச்சடங்கு குறித்த அடிக்குறிப்பு மிக நீண்டதாக இருக்கிறது. அதில் உள்ள முக்கிய பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு, "ஒரு வேதச்சடங்கைச் செய்தால் விளைவது நிச்சயம் புண்ணியமே ஆகும். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்தச் சடங்குகளைச் செய்ய வேண்டியதில்லை. அவை சொர்க்கத்தையோ, முக்தியையோ அடையப்போவதில்லை. இப்பிறவியில் செய்த பாபபுண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவியையே அடையப் போகின்றன. ஆனால் ஜடாயு சொர்க்கத்திற்குத் தகுதியான செயல்களைச் செய்திருக்கிறான். எனவே பல்வேறு பிறவிகளை அடைந்து ஈட்டப்படும் முக்தியை இந்தக் குறுக்கு வழியில் அடைந்துவிடுகிறான். அதனால் தான் ராமன் இங்கே, "என்னால் அனுமதிக்கப்பட்டு, என்னால் தூய்மைப்படுத்தப்பட்டு" என்ற சொற்களைப் பயன்படுத்துகிறான்" என்றிருக்கிறது.
தர்மாத்மாவான ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, பதகேஷ்வரனை சிதையில் ஏற்றி, தன் பந்துவுக்கு {தன் உறவினருக்கு மூட்டுவது} போல நெருப்பை மூட்டி துக்கத்துடன் தகனம் செய்தான்[8].(31) பிறகு, வீரியவானான ராமன், சௌமித்ரியுடன் சேர்ந்து வனத்திற்குள் சென்று, ஸ்தூலமான மஹாரோஹிகளை {கொழுத்த பெரும் மான்களைக்} கொன்று, அந்த துவிஜத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு} காணிக்கையாகப் பரப்பி வைத்தான்.(32) பெரும்புகழ்பெற்றவனான ராமன், ரோஹி மாமிசத்தை {மான் இறைச்சியை} எடுத்துக் கவளங்களாக {பிண்டங்களாக} உருட்டி, ரம்மியமான பசும்புல் தரையில் சகுனத்திற்கு {பறவையான ஜடாயுவுக்கு} தத்தம் செய்தான்.(33) எதை துவிஜாதியினர் {இருபிறப்பாளர்கள்}, பிரேதமான மானுடன் ஸ்வர்க்கம் செல்வதற்காகச் சொல்வார்களோ அந்த பித்ருக்களுக்குரியதையே சீக்கிரமாக ராமனும் ஜபித்தான்[9].(34)
[8] ஏந்தினன் இரு கைதன்னால் ஏற்றினன் ஈமம்தன்மேல்சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்காந்து எரி கஞல மூட்டி, கடன் முறை கடவாவண்ணம்தேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்- கம்பராமாயணம் 3537ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்பொருள்: நிறைந்த நல்ல நூல்களான சாத்திரங்களில் வல்லவனான ராமன், தன்னிரு கைகளாலும் உடலை ஏந்தி, ஈமச்சிதையில் ஏற்றி, நீரையும், சந்தனத்தையும், மலரையும் தூவி, தலைப்பக்கத்தில் எரிகிற நெருப்பை மூட்டி, செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தான்.
[9] தர்மாலயப் பதிப்பில், "பிராமணர்கள் மானிட பிணத்திற்கு பிதுருகர்மாவாகிறதும், ஸ்வர்க்கத்தை யடைவிக்கிறதுமான எந்த ஒன்றை ஜபிக்கிறார்களோ, அதை ஸ்ரீராமர் அதற்கும் (ஜடாயுவுக்கும்) ஜபித்தருளினார்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இறந்தவர்களை வானேற்றத்தக்க யாமயஸூக்தம் முதலிய மந்திரங்களை ஜபித்து, கோதாவரிக்குச் சென்று, தம்பியுடன் நீரிலாடி ஜடாயுவைக் குறித்துத் தருப்பணஞ் செய்து முடித்தருளினர்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன், இத்தகைய ஈமச்சடங்குகளில் பிராமணர்கள் பொதுவாக ஜபிக்கும் ஆபஸ்தம்ப சூத்திரங்கள் என்றழைக்கப்படும் யாமய சூக்தம், நாராயண சூக்தம் என்ற இரண்டு வேத மந்திரங்களை ஜபித்தான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
பிறகு நரவராத்மஜர்களான {மனிதர்களில் சிறந்த தசரதனின் மகன்களான} அவர்கள் இருவரும், கோதாவரி நதிக்குச் சென்று அந்த கிருத்ர ராஜனுக்காக {கழுகு மன்னன் ஜடாயுவுக்காக} நீருக்குள் இறங்கினர்.(35) அப்போது, ராகவர்கள் இருவரும், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட விதிப்படியே அந்த கிருத்ரத்திற்காக ஜலஸ்நானம் செய்து {கழுகான ஜடாயுவுக்காக நீரில் குளித்து}, அந்த கிருத்ர ராஜனுக்கு {கழுகு மன்னனுக்கு} நீர்க்காணிக்கை அளித்தனர்.(36) இரணத்தில் {போரில்} செய்யமுடியாத அற்புத காரியத்தைச் செய்து, வீழ்ந்த அந்த கிருத்ர ராஜா {கழுகு மன்னன் ஜடாயு}, அப்போது, மஹரிஷிக்கு இணையானவன் {ராமன்} மூலம் தூய்மை அடைந்து, புண்ணியமான சுப கதியை அடைந்தான்.(37) பக்ஷிசத்தமனுக்காக உதக காரியங்களைச் செய்த {பறவைகளில் சிறந்த ஜடாயுவுக்காக நீர்க் காணிக்கைகளை அளித்த} அவ்விருவரும், ஸ்திர புத்தியை அடைந்து, சீதையை அடைவதற்காக மனத்தால் பிரவேசித்து, விஷ்ணு, வாசவனை {இந்திரனைப்} போன்ற ஸுரேந்திரர்களை {தேவர்களின் தலைவர்கள் இருவரைப்} போல வனத்திற்குள் சென்றனர்.(38)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |