The war between Jatayu and Ravana | Aranya-Kanda-Sarga-51 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த போர்; ராவணனின் பத்து கைகளை வெட்டிய ஜடாயு; ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்திய ராவணன்...
புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும், குரோதத்தால் தாமிரம் போலான கண்களுடனும் கூடிய ராக்ஷசேந்திரன் {ராவணன்}, இவ்வாறு சொல்லப்பட்டதும் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் பதகேந்திரனை {பறவைகளின் மன்னனா ஜடாயுவை} எதிர்த்து விரைந்தான்[1].(1) ககனத்தில் வாதத்தால் {வானத்தில் காற்றால்} தூண்டப்பட்ட மேகங்கள் மோதிக் கொள்வதைப் போலவே, அந்த மஹாவனத்தில் அவர்களுக்கிடையில் நடந்த அந்தப் போர் பயங்கரமானதாக இருந்தது.(2) சிறகுகளைக் கொண்ட மால்யவந்த மஹாபர்வதங்கள் இரண்டும் {மோதிக் கொண்டதைப்} போலவே, அப்போது கிருத்ரனுக்கும் {கழுக்கான ஜடாயுவுக்கும்}, ராக்ஷசனுக்கும் {ராவணனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் அற்புதமானதாக இருந்தது[2].(3)
[1] ஆங்கிலத்தில் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் பதிப்புகளிலும், தமிழில் தர்மாலயம், தாதாசாரியர் பதிப்புகளிலும் இதற்கு முன் ஒரு சுலோகம் இருக்கிறது. அதன் பொருள் பின்வருமாறு, "இவ்வாறு ஜடாயு சொன்ன நியாயத்தால் சினங்கொண்ட ராவணனின் இருபது கண்கள் ஒவ்வொன்றும் அக்னியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் தேசிராஜு ஹனுமந்தராவ், ஹரிபிரசாத் சாஸ்திரி, மன்மதநாத தத்தர், கோரக்பூர் பதிப்புகளில் இந்த சுலோகம் இல்லை.
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்ததாக நம்பப்படுகிறது" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஓர் உரையாசிரியர், இதில் ஒன்று தண்டகவனத்தில் இருந்த மால்யவந்தமென்றும், மற்றொன்று கிஷ்கிந்தையில் இருந்த மால்யவந்தமென்றும் சொல்கிறார். மற்றொரு உரையாசிரியரோ, ஒன்று தண்டகவனத்தில் இருந்ததென்றும், மற்றொருன்று மேரு மலையின் அருகில் இருந்ததென்றும் சொல்கிறார். ஆனால், இரண்டாவது மால்யவந்த மலை என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. இங்கே கவி, ஒரே மலையையே மற்றொரு மலையாக உருவகப்படுத்திக் கொண்டு, ஒரே மலையே இரு வடிவங்களை ஏற்றுப் போரிட்டுக் கொண்டால் எப்படி பயங்கரமாக இருக்கும் என்பதைச் சொல்ல வருகிறார். இஃது அவர்கள் இருவரும் துணிவிலும், பலத்திலும் சமத்தன்மையுடன் இருந்தனர் என்பதைச் சொல்வதற்காக உரைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
பிறகு அந்த மஹாபலவான் {ராவணன்}, கூரிய முனைகளைக் கொண்ட மஹாகோரமான நாளீகங்களையும், நாராசங்களையும், விகர்ணிகளையும் கிருத்ரராஜன் மீது மழையாகப் பொழிந்தான்.(4) பத்ரரதேசுவரனான அந்த கிருத்ரன் {சிறகுகள் படைத்த தேராகத் திகழும் பறவைகளின் தலைவனான அந்த கழுகானவன்} ஜடாயு, அந்த சர ஜாலங்களையும், ராவணனின் அஸ்திரங்களையும் தாங்கிக் கொண்டான்.(5) மஹாபலம் கொண்ட அந்த பதகசத்தமன் {பறவைகளில் சிறந்த ஜடாயு}, தன் கால்களின் கூரிய நகங்களால் அவனது அங்கங்களின் பல இடங்களில் காயங்களை உண்டாக்கினான்.(6) அப்போது, தன் சத்ருவை அழிக்க விரும்பிய தசக்ரீவன், மிருத்யு {யமனின்} தண்டத்திற்கு ஒப்பான கோரமான பத்து கணைகளை எடுத்தான்.(7) அந்த மஹாவீரியன், {வில்லை} பூர்ணமாக வளைத்து, நேராகச் செல்லக்கூடியவையும், கூரியவையும், கோரமானவையும், இரும்பு முள் முனைகளைக் கொண்டவையுமான அந்த பாணங்களால் கிருத்ரனை {கழுகான ஜடாயுவைத்} துளைத்தான்.(8)
இராக்ஷசனின் ரதத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூடிய ஜானகியைக் கண்டவன் {ஜடாயு}, அந்த பாணங்களைக் குறித்துச் சிந்திக்காமல், ராக்ஷசனை {ராவணனை} நோக்கி வேகமாகப் பாய்ந்தான்.(9) மஹாதேஜஸ்வியான அந்த பதகோத்தமன் {பறவைகளில் உத்தமனான ஜடாயு}, முத்துகளாலும், மணிகளாலும் {ரத்தினங்களாலும்} அலங்கரிக்கப்பட்டதும், சரம் பொருத்தப்பட்டதுமான வில்லைத் தன் கால்களால் முறித்தான்.(10) பிறகு குரோதத்தால் மூர்ச்சித்த {மயங்கிய} ராவணன், மற்றொரு தனுவை எடுத்து, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சரங்களை மழையாகப் பொழிந்தான்.(11) அப்போது அவனது சரங்களால் சூழப்பட்ட அந்த பதகேசுவரன் {பறவைகளின் தலைவனான ஜடாயு}, கூட்டை அடைந்த பக்ஷியை {பறவையைப்} போலக் காட்சியளித்தான்.(12)
மஹாதேஜஸ்வியான அவன் {ஜடாயு}, அந்த சரஜாலத்தை {சரங்களாலான அந்த வலையைத்} தன் சிறகுகளால் உதறித் தள்ளிவிட்டு, அவனது {ராவணனின்} மஹத்தான தனுவை {வில்லைத்} தன் கால்களால் {மீண்டும்} முறித்தான்.(13) மஹாதேஜஸ்வியான அந்த பதகேசுவரன், அக்னியைப் போல ஒளிரும் ராவணனின் சராவரத்தையும் {கவசத்தையும்} தன் சிறகுகளால் தகர்த்தான்.(14) அந்த பலவான் {ஜடாயு}, காஞ்சனக் கவசங்களால் மறைக்கப்பட்டவையும், திவ்யமானவையும், பிசாச வதனத்தையும், பெரும் வேகத்தையும் கொண்டவையுமான அவனது கோவேறு கழுதைகளை சமரில் கொன்றான்.(15) ஏர்க்கால்களுடன் கூடியதும், விருப்பப்படி செல்லக்கூடியதும், பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்வதும், மணிகள் பதித்த படிக்கட்டுகளுடனும், சக்கரங்களுடனும் வடிவமைக்கப்பட்டதுமான அந்த மஹாரதத்தை நொறுக்கினான்.(16)
பூர்ண சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் வெண்குடை, வெண்சாமரங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, {அவற்றைப் பிடித்துக் கொண்டிருந்த} ராக்ஷசர்களையும் வேகமாக வீழ்த்தினான்.(17) மீண்டும், மஹாபலவானும், ஸ்ரீமானுமான அந்த பக்ஷிராஜன் {பறவைகளின் மன்னனான ஜடாயு}, அவனது {ராவணனுடைய} சாரதியின் மஹத்தான சிரத்தைத் தன் அலகால் வேகமாகக் கொய்தான்.(18) அந்த ராவணன், தனுபங்கமடைந்து {வில் முறிந்து}, ரதம் ஒழிந்து, அசுவங்கள் கொல்லப்பட்டு, சாரதியும் கொல்லப்பட்டதும், வைதேஹியை விலாவில் பற்றியபடி பூமியில் விழுந்தான்[3].(19) வாகனம் பங்கமடைந்து விழுந்த ராவணனைக் கண்ட பூதங்கள் {உயிரினங்கள்}, "நன்று, இது நன்று" என்று சொல்லி கிருத்ரராஜனை {பறவைகளின் மன்னனான ஜடாயுவைப்} பூஜித்தன.(20) பக்ஷியூதபனான அவன் {பறவைகளின் படைத்தலைவான ஜடாயு}, முதுமையால் களைத்திருப்பதைக் கண்ட ராவணன் மகிழ்ச்சியுடன் மைதிலியைப் பற்றிக் கொண்டு மீண்டும் உயர எழுந்தான்.(21)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தச் சொற்றொடருக்கு இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். ஒன்று வில்லன் விலாவை {இடுப்பைப்} பற்றுவது போன்றது. மற்றொன்று, பக்தனைப் போல அவளைத் தன் விலாவில் {இடுப்பில்} வைத்துக் கொள்வது. இது சீதையைத் தூக்கிய போது விராதன் கடைப்பிடித்த முறையை ஒத்திருக்கிறது" என்றிருக்கிறது. ஆரண்ய காண்டம் 2:16ல் விராதன் சீதையை விலாவில் {இடுப்பில்} வைத்துக் கொள்கிறான். அங்கே மூலத்தில் "ஸீதாம் விராத அங்ககதாம்" என்று, விராதனனின் அங்கத்தில் {விலாவில்} சீதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கே தேசிராஜு ஹனுமந்தராவ், "அங்கேந ஆதாய வைதேஹீம்" என்பதை ஆங்கிலத்தில் "he on grabbing Vaidehi by her torso" என்று மொழிபெயர்த்திருக்கிறார். தலை, கழுத்து, கைகால் உறுப்புகள் தவிர்த்த உடற்பகுதியே Torso என்றழைக்கப்படும். அவ்வாறு எடுத்துக் கொண்டே இங்கே தமிழில், "வைதேஹியை விலாவில் {இடுப்பில்} பற்றியபடி" என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. "வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர் ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் Lap என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Lap என்றால் மடி என்று பொருள். தர்மாலயப் பதிப்பில், "வைதேகிதேவியை மடியில் வைத்துக் கொண்டு பூமியில் வந்து நின்றான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பிலும், கோரக்பூர் தமிழ்ப்பதிப்பிலும் இந்தப் பொருளிலேயே இருக்கிறது. மடி என்பது மனிதரின் தொப்புளுக்குக் கீழிருந்து முன் தொடைவரையுள்ள பகுதியாகும். ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "சீதையை மார்போடு அணைத்தபடி ராவணன் தரையில் குதித்தான்" என்றிருக்கிறது.
கிருத்ரராஜனும் {கழுகுகளின் மன்னனும்}, மஹாதேஜஸ்வியுமான ஜடாயு, சாதனங்கள் அழிந்து, முழுவதும் நஷ்டமடைந்தவனும், கட்கத்தை {வாளை} மட்டுமே கொண்டவனும், ஜனகாத்மஜையை {சீதையைத்} தன் விலாவில் {இடுப்பில்} வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் உயர எழுந்தவனுமான அந்த ராவணனின் எதிரே விரைந்து சென்று {அவனைத்} தடுத்தபடியே இதைச் சொன்னான்:(22,23) "அற்ப புத்தி கொண்ட ராவணா, வஜ்ர ஸ்பரிசத்துடன் கூடிய {இடி போல் தாக்கக்கூடிய} பாணங்களைக் கொண்ட ராமனின் பாரியையான இவளை {சீதையை}, ராக்ஷசர்களின் வதத்திற்காகவே நிச்சயம் நீ கடத்திச் செல்கிறாய்.(24) தாகம் கொண்டவன் நீரைப் {பருகுவதைப்} போல, உன் மித்ரர்கள் {நண்பர்கள்}, பந்துக்கள் {உறவினர்கள்}, அமைச்சர்கள், பலம் {படை}, துணைவர்கள் ஆகியோருடன் இந்த விஷ பானத்தைப் பருகுகிறாய்.(25) அறிவற்றவர்கள், கர்மங்களின் அனுபந்தத்தை {செயல்களின் பின்விளைவை} அறியாமல் சீக்கிரம் நாசமடைவதைப் போலவே நீயும் நாசமடையப் போகிறாய்.(26) இறைச்சியுடன் கூடிய தூண்டில் முள்ளைப் பற்றிய ஜலஜத்தைப் {நீரில் பிறந்த மீனைப்} போல, வதத்திற்காக காலபாசத்தில் கட்டுண்ட நீ எங்கு சென்று அதிலிருந்து விடுபடப் போகிறாய்.(27)
இராவணா, வெல்லப்பட முடியாதவர்களும், காகுத்ஸ்தர்களுமான ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, இந்த ஆசிரமத்தின் மீது நீ தொடுத்த தாக்குதலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.(28) கோழையைப் போல நீ உலகத்தால் கண்டிக்கப்படும் கர்மத்தை செய்தாய். திருடர்கள் செல்லும் மார்க்கம் வீரர்களால் ஒரு போதும் சேவிக்கப்படுவதில்லை.(29) இராவணா, நீ சூரனாக இருந்தால், யுத்தம் செய்ய ஒரு முஹூர்த்தம் காத்திருப்பாயாக. பூர்வத்தில் கரனுக்கு நேர்ந்ததைப் போலக் கொல்லப்பட்டு பூமியில் புரள்வாய்[4].(30) ஒரு புருஷன் மரண காலத்தில் ஆத்மநாசத்தின் {தன்னழிவின்} பொருட்டு எந்தக் கர்மத்தைச் செய்வானோ அதர்மியமான அந்தக் கர்மத்தையே நீ செய்திருக்கிறாய்.(31) எந்தக் கர்மத்தின் அனுபந்தம் {பின்விளைவு} பாபமாக இருக்குமோ அதை லோகாதிபதியான பகவான் ஸ்வயம்பூவாகவே {பிரம்மனாகவே} இருந்தாலும் எவன்தான் செய்வான்?" {என்றான் ஜடாயு}.(32)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "3-50-23ம் சுலோகம் அப்படியே திரும்ப உரைக்கப்படுகிறது. இத்தகைய உரைகள் வசனங்களுக்கான பற்றாக்குறையாலோ, சொற்கோர்வைகளுக்கான பற்றாக்குறையாலோ நேரிடவில்லை. ஒரு பாத்திரம், ஒத்த சொற்களில் தன் நிலைப்பாட்டை உறுதிபடச் சொல்வதற்காக இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.
வீரியவானான ஜடாயு இந்த சுபமான வாக்கியங்களைச் சொல்லிவிட்டு, ராக்ஷசனான அந்த தசக்ரீவனின் பிருஷ்டத்தில் {பின்புறத்தில்} உக்கிரமாகப் பாய்ந்தான்.(33) அவனை {ராவணனைப்} பற்றி ஏறி, ஒரு கஜாரோஹன், துஷ்ட வாரணத்தை {யானையின் மேலேறும் பாகன், கெட்ட யானையை} எப்படிப் கட்டுப்படுத்துவானோ அதே போலத் தன் கூரிய நகங்களால் எங்கும் துளைத்தெடுத்தான்.(34) அவனது பிருஷ்டத்தை அலகால் கொத்தி, நகங்களால் பிளந்தான். நகங்கள், சிறகுகள், அலகு போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவனது கேசத்தையும் பிய்த்தெறிந்தான்.(35) கிருத்ர ராஜனால் மீண்டும் மீண்டும் இவ்வாறு எரிச்சலடைந்தவனின் {ராவணனின்} உதடுகள் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நடுங்கின. கடும் நடுக்கத்துடன் கூடிய அந்த ராக்ஷசன், தன் வலப்பக்கம் திரும்பினான்.(36) குரோதத்தில் ஆழ்ந்த ராவணன், இடது விலாவில் வைதேஹியை உறுதியாகப் பற்றிக் கொண்டு, வேகமாக {பின்புறமிருந்து கொத்திக் கொண்டிருந்த} ஜடாயுவை {தன் வலது} உள்ளங்கையால் அடித்தான்.(37)
அப்போது, ககாதிபனும் {பறவைகளின் தலைவனும்}, அரிந்தமனுமான {பகைவரை அழிப்பவனுமான} ஜடாயு, அவனைத் {ராவணனைத்} தாண்டி வந்து அலகால் அவனது இடது கைகள் பத்தையும் துண்டித்தெறிந்தான்.(38) கைகள் வெட்டப்பட்டவனுக்கு, வல்மீகத்திலிருந்து {எறும்புப்புற்றில் இருந்து} விஷ ஜுவாலைகளை கக்கியபடியே வெளிவரும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல உடனே கைகள் முளைத்தன.(39) அப்போது வீரியவனான தசக்ரீவன், சீதையை விட்டுவிட்டு, தன் முஷ்டிகளாலும், கால்களாலும் கிருத்ரராஜனை குரோதத்துடன் தாக்கினான்.(40) பிறகு, ராக்ஷசர்களில் முக்கியனும், பக்ஷிகளில் முதன்மையானவனுமான அந்த ஒப்பற்ற வீரர்கள் இருவரும் ஒரு முஹூர்த்தம் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(41) கட்கத்தை {வாளை} உயர்த்திய அந்த ராவணன், ராமனுக்காகப் போராடிக் கொண்டிருந்தவனது {ஜடாயுவின்} சிறகுகளையும், கால்களையும், விலாப்பக்கங்களையும் வெட்டினான்.(42) ரௌத்திர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசனால் சிறகுகள் வெட்டப்பட்ட அந்த மஹா கிருத்ரன் {கழுகான ஜடாயு}, உடனே அற்ப ஜீவிதத்துடன் {குற்றுயிருடன்} கூடியவனாக தரணியில் விழுந்தான்[5][6].(43)
[5] தேசிராஜு ஹனுந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜடாயுவின் பாத்திரம், மரண காலத்தில் ராமனுக்கு செய்தியைச் சொல்ல அறிமுகப்படுத்தப்படும் பாத்திரமல்ல. 3-14-34ல் "நீ விரும்பினால் உன் வசிப்பிடத்தில் சஹாயனாக இருப்பேன். கடப்பதற்கரிய இந்த காந்தாரம் {கானகம்} மிருகங்களாலும், ராக்ஷசர்களாலும் சேவிக்கப்படுகிறது. தாதா {ஐயா}, லக்ஷ்மணனுடன் நீ வெளியே செல்லும்போது சீதையை நான் ரக்ஷிப்பேன்" என்று ராமனை முதன்முதலாகச் சந்தித்தபோது சொன்னான் ஜடாயு. அந்த உறுதிமொழியை இங்கே தயக்கமின்றி நிறைவேற்றுகிறான். இந்த தன்னலமற்ற தொண்டும், ராவணனினடம் அவன் கூறிய அறிவுரைகளும் நிச்சயம் முன்மாதிரியாகத் திகழக்கூடியவை. இதுவே தாஸ்ய பக்தி என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜடாயு நமக்கொரு பாடத்தைக் கற்பிக்கிறான்" என்றிருக்கிறது.
[6] வலியின்தலை தோற்றிலன் மாற்றஅருந் தெய்வ வாளால்நலியும் தலை என்றது அன்றியும்வாழ்க்கை நாளும்மெலியும் கடை சென்றுளது ஆகலின்விண்ணின் வேந்தன்குலிசம் எறியச் சிறை அற்றது ஒர்குன்றின் வீழ்ந்தான்.- கம்பராமாயணம் 3444ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்பொருள்: தடுத்தற்கரிய தெய்வ வாளால், எவரது தலையும் அழியும் என்பதல்லாமல், வாழ்க்கை நாளும் குறைவுபடும் என்பதால், யாருக்கும் வலிமையில் தோற்காத ஜடாயு, தேவர் தலைவன் வஜ்ரத்தை வீச சிறகு இழந்து விழுந்த மலையைப் போல விழுந்தான்.
வைதேஹி, பூமியில் விழுந்து, ரத்தத்தில் நனைந்து கொண்டிருந்த அந்த ஜடாயுவைக் கண்டு துக்கமடைந்து, சொந்த பந்துவிடம் {உறவினரிடம் விரைவதைப்} போல அவனை நோக்கி ஓடினாள்.(44) இலங்காதிபதி {ராவணன்}, நீல மேகத்திற்கு ஒப்பாக ஒளிர்ந்தவனும், மிக வெளுத்த மார்பைக் கொண்டவனும், வீரமிக்கவனுமான அந்த ஜடாயுவை சாந்தமடைந்த காட்டுத் தீயைப் போலப் பிருத்வியில் கண்டான்.(45) அப்போது சசியைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்டவளும், ஜனகாத்மஜையுமான சீதை, ராவணனின் வேகத்தில் அடங்கி மஹீதலத்தில் விழுந்து கிடக்கும் அந்த பத்ரரதனை {சிறகுகள் படைத்த ரதமான ஜடாயுவை} மீண்டும் மீண்டும் எடுத்து {தழுவி} அழுது கொண்டிருந்தாள்.(46)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 46
Previous | | Sanskrit | | English | | Next |