Panchavati | Aranya-Kanda-Sarga-13 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு அகஸ்தியர் கூறிய அறிவுரை; பஞ்சவடியில் வசிக்குமாறு ராமனிடம் சொன்னது...
{அகஸ்தியர்}, "இராமா[1], நான் உன்னில் பிரீதி அடைகிறேன். நீ பத்ரமாக {நலமாக} இருப்பாயாக. இலக்ஷ்மணா, நீங்கள் இருவரும், சீதையுடன் வந்து என்னை வணங்கியதில் நிறைவடைகிறேன்.(1) வழிநடந்த சிரமத்தின் அதிக களைப்பு உங்கள் இருவரையும் வருத்துகிறது {என்பதை உங்கள் மேல்கழுத்து [மேல்கழுத்தில் உள்ள வியர்வை] வெளிப்படுத்துகிறது}[2]; இளைப்பாற ஆவலுற்றிருக்கும் ஜனகாத்மஜையான மைதிலியிடம் உங்கள் இருவரையும்விட அதிகமாகத் தெரிகிறது.(2) சுகுமாரியும் {மென்மையானவளும்}, துன்பத்தால் பீடிக்கப்படாதவளுமான இவள், பர்த்தாவிடமுள்ள சினேகத்தால் {கணவனிடமுள்ள அன்பால்} தூண்டப்பட்டு எல்லையற்ற தோஷங்களை {துன்பங்களை / குற்றங்களைக்} கொண்ட வனத்திற்கு வந்திருக்கிறாள்.(3) இராமா, இந்த சீதை இங்கே எப்படி மகிழ்ந்திருப்பாளோ அப்படியே நீ செயல்படுவாயாக {அவள் இங்கே மகிழ்ந்திருக்கும் வகையில் நீ செயல்படுவாயாக}. வனத்திற்கு உன்னைப் பின்தொடர்ந்து வந்தது இவள் செய்த செயற்கரிய காரியமாகும்.(4)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில் மட்டும் இதற்கு முன் தண்டகவனத்தின் முன்வரலாற்றைச் சொல்லும் 39 சுலோகங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவை வேறு எந்தப் பதிப்பிலும் காணப்படவில்லை.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் "உத்கண்டம்" என்ற சொல்லுக்கு, இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். முகத்தின் பக்கவாட்டில் கழுத்துக்குமேல் என்பது ஒரு பொருள், ஓய்வெடுப்பதற்கான ஆவல் என்பது மற்றொரு பொருள். எனவே, அவர்கள் வியர்வையால் நனைந்திருந்தனர் என்றோ, காட்டில் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஓய்வுக்காக ஏங்கினர் என்றோ பொருள் கொள்ளலாம்.
இரகுநந்தனா, சீராக {கணவர்கள் வளமாக} இருக்கையில் அனுபவிப்பார்கள், சீரற்று {வளமற்று} இருக்கையில் கைவிடுவார்கள்; சிருஷ்டி முதலே ஸ்திரீகளின் இயல்பு இவ்வாறே இருக்கிறது.(5) பெண்கள், நூற்றுக்கணக்கில் மின்னும் இடியின் பாய்ச்சலையும் {மின்னலின் நிலையாமையையும்}, ஆயுதங்களின் கூர்மையையும், கருடன், வாயு ஆகியோரின் வேகத்தையும் கொண்டவர்கள்[3].(6) உன் பாரியை {உன் மனைவியான சீதை} இந்த தோஷங்களேதும் இல்லாதவள். அருந்ததி தேவியைப் போல சிலாகிக்கப்படவும் {மெச்சப்படவும்}, போற்றப்படவும் தகுந்தவள்[4].(7) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, ராமா, சௌமித்ரியுடனும், இந்த சீதையுடனும் நீ எங்கே வாழ்ந்தாலும் அந்த தேசம் {அந்த இடம் பாக்கியத்தால்} அலங்கரிக்கப்பட்டதாக இருக்கும்" {என்றார் அகஸ்தியர்}.(8)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இடியின் மின்னல்கள் தங்கள் நிலையாமைக்குப் புகழ்பெற்றவை, அவ்வாறே மின்னல்வேக இதயங்களைக் கொண்ட பெண்களின் மனப்போக்கையும் கணிக்க இயலாது. நீண்ட நெடிய நட்பையும் கத்தி போன்ற தங்கள் கூரிய மனோபாவத்தால் துண்டித்துக் கொள்வார்கள். அவர்கள் சுகமாக இல்லையென்றால் கழுகு அல்லது காற்றின் வேகத்தில் பல உறவுகளை வெட்டிவிடுவார்கள்" என்றிருக்கிறது.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அருந்ததி தேவி வசிஷ்ட முனிவரின் மனைவியாவாள். கணவனிடம் கொண்ட பக்திக்காகப் போற்றப்படும் அவள், அந்த பக்தியின் விளைவாகவே வானில் ஒரு நக்ஷத்திரமாகத் திகழ்கிறாள். திருமணங்களிலும், அனைத்துக் காரியங்களின் நிறைவிலும், அது நடுப்பகல் வேளையாக இருப்பினும், கணவன் மனைவி பக்தியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக வானில் உள்ள இந்த நக்ஷத்திரம் இன்றளவிலும் {மணமக்களுக்குக்} காட்டப்படுகிறது" என்றிருக்கிறது.
முனிவர் இவ்வாறு சொன்னதும், ராகவன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அனலனைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த ரிஷியிடம் இந்த வாக்கியங்களைப் பணிவுடன் பேசினான்:(9) "உடன் பிறந்தானுடனும், பாரியையுடனும் கூடிய என் குணத்தில் என் குருவான முனிபுங்கவர் நிறைவடைந்ததால், நான் அனுக்கிரகம் பெற்ற தன்யனானேன்.(10) ஆனால், ஆசிரமபதம் எழுப்பி எங்கே சுகமாக நான் வசிக்க முடியுமோ அத்தகையதும், நீருடனும், கானகங்கள் பலவற்றுடனும் கூடியதுமான தேசத்தை எனக்குக் காட்டுவீராக" {என்று கேட்டான் ராமன்}.(11)
அப்போது, தர்மாத்மாவும், தீரருமான அந்த முனிசிரேஷ்டர் {அகஸ்தியர்}, ராமன் சொன்ன சொற்களைக் கேட்டு, ஒரு முஹூர்த்த காலம் தியானம் செய்து, தீரமிக்க இந்த சொற்களைச் சொன்னார்:(12) "தாதா {ஐயா}, ஏராளமான கிழங்குகளும், பழங்களும், நீரும் கொண்டதும், மான்கள் பலவற்றைக் கொண்டதும், செழிப்புமிக்கதும், புகழ்பெற்றதுமான பஞ்சவடி என்ற தேசம் {இடம்} இங்கிருந்து இரண்டு யோஜனைகள் {18.18 மைல் / 29.25 கி.மீ} தொலைவில் இருக்கிறது.(13) நீ, சௌமித்ரி சகிதனாக அங்கே சென்று ஆசிரமபதம் எழுப்பி, உன் பிதா சொன்ன வாக்கியத்திற்கு இணக்கமாக அங்கே இன்புற்றிருப்பாயாக[5].(14)
[5] வ.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இதற்கடுத்து இன்னும் இரண்டு சுலோகங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அப்பதிப்பில் இந்த சர்க்கம் 27 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவ்விரு சுலோகங்களின் பொருள் பின்வருமாறு: "இராகவா, நரேந்திரன் {தசரதன்} உனக்கான காலம் என எதை நிர்ணயித்தானோ அந்தக் காலம் வெகுவாகக் கடந்துவிட்டது. காகுத்ஸ்தா, பிரதிஜ்ஞையை முழுமையாக நிறைவேற்றிவிட்டு உன் ராஜ்ஜியத்தில் நீ சுகமாக வசித்திருப்பாய். இரகுநந்தனா, ராமா, உன்னைப் போன்ற மூத்த மகனைப் பெற்ற உன் பிதா {தசரதன்}, மன்னன் யயாதியைப் போல அருளப்பட்டவனாகவும், விடுபட்டவனாகவும் இருக்கிறான்".
அனகா {பாவமற்றவனே}, நான் செய்த தபத்தின் பிரபாவத்தாலும், தசரதனிடம் கொண்ட சினேகத்தாலும் உன்னைக் குறித்த விருத்தாந்தங்கள் {கதைகள்} அனைத்தையும் நான் அறிவேன்.(15) நான் உன்னை என்னுடன் இந்த தபோவனத்தில் வசிக்கச் சொல்லியிருந்தாலும், உன் ஹிருதயத்தில் உள்ள உறுதியையும் என் தபத்தால் அறிவதால், நான் சொல்வது போல பஞ்சவடிக்குச் செல்வாயாக.(16,17அ) இராகவா, அந்த வனோதேசம் {வனப்பகுதி} ரம்மியமானது. சிலாகிக்கத்தகுந்த அந்த தேசம் {இடம்} இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. மைதிலியும் அங்கே மகிழ்ந்திருப்பாள்.(17ஆ,18அ) மஹாபாஹுவே, ஏகாந்தமானதும் {தனிமையானதும்}, புண்ணியம் நிறைந்ததும் ரம்மியமானதுமான அவ்விடத்தில், ஏராளமான கிழங்குகள், பழங்கள், நானாவித பறவைக்கூட்டங்களுடன் கூடிய கோதாவரியின் சமீபத்தில் மைதிலி மகிழ்ந்திருப்பாள்.(18ஆ,19) இராமா, நல்ல ஆசாரத்தையும், ரக்ஷிக்கும் சக்தியையும் கொண்ட நீ, தபஸ்விகளை பரிபாலித்துக் கொண்டு அங்கே வசித்திருப்பாயாக.(20) வீரா, இந்த மஹத்தான மதூக மர வனத்திற்கு {இலுப்பை மரக்காட்டிற்கு} வடக்கில் உள்ள ஓர் ஆலமரத்தை நோக்கிச் செல்வாயாக.(21) அங்கே உள்ள மேட்டு ஸ்தலத்தில் ஏறினால், பர்வதத்தின் அருகில், நித்தியம் புஷ்பித்திருக்கும் கானகத்துடன் கூடிய புகழ்பெற்ற பஞ்சவடி இருக்கிறது[6]" {என்றார் அகஸ்தியர்}.(22)
[6] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பின் அடிக்குறிப்பில், "வீர, இலுப்பை விருக்ஷங்களினது பெரிய காடு இதோ காணப்படுகிறது. ஆலமரத்திற்குக் கொண்டு போய்விடும் இதனது வடக்கு வழியாலே போக வேண்டும். அங்கிருந்து ஓர் உயர்ந்த பூமியை ஏறி மலையின் சமீபத்தில் எக்காலத்திலும் புஷ்பிக்கும் மரங்களுடையதென பிரசித்தபெற்ற இடம் பஞ்சவடியென்பது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இதோ இலுப்பைமரக் காடு தோற்றுகின்றதே, இதற்கு வடக்காக அதோ பெரிய ஆலமரத்தைச் சேரும் வழிபற்றிச் செல்வீர்களாகில் அந்த மலையின் சமீபத்தில் பெரிய மேடு எதிர்ப்படும்; அதன் மேலேறிச் செல்க; அவ்விடத்திலேயே பஞ்சவடியென்பது இருக்கின்றது; அது எப்பொழுதும் மலர்கள் மலர்ந்தும், கனிகள் பழுத்தும், தளிர்கள் தளிர்த்தும், தழைத்தும் விளங்குமென்றுரைசெய்தனர்" என்றிருக்கிறது. அகஸ்தியர் சுட்டும் இடம் அவரது ஆசிரமத்தில் இருந்து இரண்டு யோஜனைகள் தொலைவில் இருப்பதாக 13ம் சுலோகத்தில் அவரே சொல்கிறார். அதாவது 18.08 மைல்கள், அதாவது 29.25 கி.மீ.. இங்கே அகஸ்தியர் ராமனை வடக்கில் செல்லச் சொல்வதால் ராமன் தெற்கில் அதிக தூரம் செல்லவில்லை. இராமாயணம் சொல்லும் இலங்கையே தெற்கில் இல்லை. மேற்கில் குஜராத்தின் அருகில் இருக்கிறது என்றும், வடக்கில் எங்கோ இருக்கிறது என்றும், மத்திய இந்தியாவில் எங்கோ இருக்கிறது சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அந்தக் கருத்தை அடைவதற்கான முக்கிய புள்ளிகளில் இந்த சுலோகமும் ஒன்றாகும்.
அகஸ்தியர் இவ்வாறு சொன்னதும், சௌமித்ரி சகிதனான ராமன், சத்தியவாதியான அந்த ரிஷியை நன்கு கௌரவித்து விடைபெற்றுக் கொண்டான்.(23) அவர் அனுமதி கொடுத்ததும், அவரை {அகஸ்தியரை} வணங்கிய அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, சீதை சகிதராக அந்த ஆசிரமத்தில் இருந்து பஞ்சவடியை நோக்கிச் சென்றனர்.(24) போரில் அச்சமற்றவர்களும், நராதிபாத்மஜர்களுமான {ராஜகுமாரர்களுமான} அவர்கள், விற்களை எடுத்துக் கொண்டும், தூணிகளைக் கட்டிக் கொண்டும், அந்த மஹரிஷி உபதேசித்த பாதையில் தீர்மானமாக பஞ்சவடிக்குச் சென்றனர்.(25)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 13ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |