Showing posts with label சதாநந்தர். Show all posts
Showing posts with label சதாநந்தர். Show all posts

Wednesday, 24 November 2021

இக்ஷ்வாகு வம்சம் | பால காண்டம் சர்க்கம் - 70 (45)

Ikshvaku's bloodline | Bala-Kanda-Sarga-70 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜனகன் தன் தம்பி குசத்வஜனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பியது; இக்ஷ்வாகு வம்ச பட்டியலையும் அதன் மகிமையையும் சொன்ன வசிஷ்டர்...

Janaka welcomes Rama

வாக்கியங்களை அறிந்தவனான ஜனகன், பொழுது விடிந்ததும் மஹாரிஷிகளின் மூலம் யஜ்ஞ கர்மங்களை முடித்துவிட்டு, புரோஹிதரான சதாநந்தரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "{கரும்புச் சாற்றைப் போன்ற நீரைக் கொண்ட} இக்ஷுமதி நதியைப் பருகுபவனும், {அந்நதியின்} நீர் சூழ சூலங்களை நாட்டி வைத்திருப்பவனும்[1], அதிதார்மிகனும், மஹாதேஜஸ்வியும், குசத்வஜன் என்று புகழ்பெற்றவனுமான என் தம்பி {குசத்வஜன்}, புஷ்பக விமானத்தைப் போன்றதும், சுபமானதும், புண்ணியமானதுமான ஸாங்காஷ்யாபுரியில் {ஸாங்காஷ்ய நகரத்தில்} இருக்கிறான்[2].(2,3) நான் அவனைக் காண விரும்புகிறேன். அவனும் என்னுடன் சேர்ந்து இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்[3]" {என்றான் ஜனகன்}.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே இருக்கும் மூலச் சொற்களான " வார்யா பலகபர்யந்தாம்" என்பதற்கு "ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெயர் பெற்ற திராட்சை {நீர்நெல்லித்} தோட்டத்தால் சூழப்பட்ட" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் மூன்றாம் அடிக்குறிப்பில் வரும் நரசிம்மாசாரியர் பதிப்பின் உரையில் இது குறித்து மேலும் அறியலாம்.

[2] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 3, 141ம் சுலோகத்தில், "தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருப்பவர்கள்" என்று வருகிறது. இக்ஷுமதி என்றால் கரும்புச்சாறு என்று பொருள். சாங்காஷ்யபுரி இன்று உத்திரபிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சங்கிசபசந்தபுரம் என்று நம்பப்படுகிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் செய்து வரும் யஜ்ஞத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இந்தக் குசத்வஜனே கொடுத்தானென்பதால் அவனும் இந்த யஜ்ஞ பலனை அனுபவிக்க வேண்டியவனாவான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ஸாங்காச்யையென்று பட்டணம் உண்டல்லவா? அது மிகவும் அழகியது. அதைச் சுற்றிலும் அகழிபோல் சூழ்ந்திருக்கிற இக்ஷுமதியென்னும் ஆற்றின் ப்ரவாஹத்தில் பகைவர் அண்டவொண்ணாதபடி காக்கும்பொருட்டுச் சூலங்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. மேலும் அந்நதியைச் சுற்றி நீர் நெல்லி மரங்கள் நெருங்கி விளங்குகின்றன. ஸுக்ருதம் போல அப்பட்டணம் தன்னிடம் வசிப்பவர்களுக்கு ஸகல அபீஷ்டங்களையுங் கொடுத்துக் கொண்டு புஷ்பகவிமாநம் போல் ப்ரகாசிக்கின்றது. மஹாபராக்ரமசாலியும், மிகவும் தர்மஸ்வபாவனும் எனக்குப் பின் பிறந்தவனும் எங்கும் ப்ரஸித்துப் பெற்றவனுமாகிய குசத்வஜனென்பவன் அப்பட்டணத்தில் இக்ஷுமதியென்னும் அந்நதியின் ஜலத்தைப் பாநஞ்செய்து கொண்டு வஸித்திருக்கின்றனன். அவன் அப்பட்டணத்திலிருந்து கொண்டு எனது யாகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்களை அப்போதைக்கப்போது ஸித்தஞ்செய்து கொடுத்துக் கொண்டிருப்பது பற்றி எனது யாகத்தைக் காப்பவன் அவனேயென்று நான் நினைத்திருக்கின்றனன். ஆகையால் அவனை இப்பொழுது நான் பார்க்க விரும்புகின்றேன். அம்மஹாதேஜஸ்வியும் இந்த விவாகத்தைப் பற்றிய ஸந்தோஷப் பெருக்கை என்னோடு கலந்து அநுபவிக்க வேண்டியவன்" என்றிருக்கிறது.

அவன் {ஜனகன்}, சதாநந்தரின் சந்நிதானத்தில் {எதிரில்} இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது சுறுசுறுப்பான தூதர் சிலர் அங்கே வந்தனர். {குசத்வஜனை அழைத்து வரும்படி} ஜனகன் அவர்களுக்கு ஆணையிட்டான்.(5) இந்திரனின் ஆணையின் பேரில் விஷ்ணுவை அழைத்து வருபவர்களைப் போல அவர்கள் {அந்தத் தூதர்கள்} நரேந்திரனின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} சாசனத்தால் அந்த நரவியாகரனை {மனிதர்களில் புலியான குசத்வஜனை} அழைத்து வருவதற்காகக் குதிரைகளில் சீக்கிரம் சென்றனர்.(6) அவர்கள் ஸங்காஷ்யத்தை {ஸாங்காஷ்யாபுரியை} அடைந்து குசத்வஜனைக் கண்டு நடந்தவற்றைச் சொல்லி ஜனகனின் சிந்தனையையும் {எண்ணத்தையும்}[4] அறிவித்தனர்.(7)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் தன் தம்பியான குசத்வஜனின் மகள்கள் இருவருக்கும் ஓர் ஏற்பாட்டை எண்ணுகிறான். தசரதனுக்கு நான்கு மகன்கள் இருப்பதால், ஜனகன் தன் இரு மகள்களையும், தன் தம்பியான குசத்வஜனின் இரு மகள்களையும் அவர்களுக்குக் கொடுத்து தசரதனுடன் வலுவான கூட்டணியை அமைக்கும் ஆலோசனையைத் தன் தம்பியிடம் முன்வைக்கிறான்" என்றிருக்கிறது.

நிருபதியான குசத்வஜன், மிக விரைவாக வந்த தூதசிரேஷ்டர்களிடம் {சிறந்த தூதர்களிடம்} இருந்து நிகழ்வுகளை அறிந்து கொண்டு நரேந்திரனின் {ஜனகனின்} ஆஜ்ஞையின் பேரில் புறப்பட்டான்.(8) அவன் {குசத்வஜன்}, தர்மவத்ஸலனும் {கடமையில் கண்ணாயிருப்பவனும்}, மஹாத்மாவுமான ஜனகனைக் கண்டான். அவன் {முதலில்} சதாநந்தரையும், {அடுத்ததாக} அதிதார்மிகனான ஜனகனையும் வணங்கி ராஜனுக்குத் தகுந்த பரம திவ்ய ஆசனத்தில் அமர்ந்தான்.(9,10அ) அமிதௌஜஸ்விகளான {அளவற்ற ஒளி பொருந்தியவர்களான} அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் {ஜனகனும், குசத்வஜனும்} மந்திரிசிரேஷ்டனான {அமைச்சர்களிற்சிறந்த} சுதாமனை அழைத்து,(10ஆ,11அ) "மந்திரிபதியே {தலைமை அமைச்சனே}, சீக்கிரம் சென்று, அளவற்ற காந்தியுடையவனும், ஐக்ஷ்வாகனுமான துர்தர்ஷனை {இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த, வெல்லப்பட முடியாத தசரதனை}, அவனது மந்திரிகளுடனும், மகன்களுடனும் இங்கே அழைத்து வருவாயாக" {என்றனர்}.(11ஆ,12அ)

அவனும் {அந்த சுதாமனும்} விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகுகுலவர்தனனை {தசரதனைக்} கண்டு அவனை சிரசால் வணங்கி {தலைவணங்கி} இதைச் சொன்னான்:(12ஆ,13அ) "வீரரே, அயோத்யாதிபதியே {தசரதரே}, மிதிலாதிபரான வைதேஹர் {ஜனகர்}, உபாத்யாயர்களுடனும், புரோஹிதர்களுடனும் உம்மைக் காண விரும்புகிறார்" {என்றான் சுதாமன்}.(13ஆ,14அ)

அப்போது அந்த ராஜா {தசரதன்}, மந்திரிசிரேஷ்டனின் வசனத்தைக் கேட்டு ரிஷிகணங்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} ஜனகன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(14ஆ,15அ) வாக்கியங்களைச் சிறந்த விதத்தில் அமைப்பவனான அந்த ராஜா {தசரதன்}, மந்திரிகள், உபாத்யாயர்கள், பந்துக்கள் சஹிதனாக இருந்த வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(15ஆ,16அ) "மஹாராஜாவே, பகவானான வசிஷ்ட ரிஷி இக்ஷ்வாகுகுல தெய்வத்தைப் போன்றவர் என்பதையும், காரியங்கள் அனைத்தையும் அறிவிப்பவர் என்பதையும் நீ அறிவாய்.(16ஆ,17அ) தர்மாத்மாவான இந்த வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் அநுமதி பெற்ற மஹாரிஷிகள் அனைவருடன் கூடியவராக என் வம்சத்தை வரிசைக்ரமமாக விவரிப்பார்" {என்றான் தசரதன்}.

Rama's lineage

தசரதன் அமைதியடைந்ததும் வாக்கியங்களை அறிந்தவரான பகவான் வசிஷ்ட ரிஷி, தன்னைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(17ஆ,18,19அ) "அவ்யக்த பிரபாவனும் {அறிவதற்கரியவனும்}, சாஷ்வதனும் {காலமற்றவனும்}, அழிவற்றவனும், நித்தியனுமான பிரம்மனுக்கு[5] மரீசி பிறந்தார். மரீசிக்கு கசியபர் பிறந்தார், கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். விவஸ்வானுக்கு மனு பிறந்தான்.(19ஆ,20) அந்த மனுவே பூர்வ பிரஜாபதியாவான். இக்ஷ்வாகு மனுவின் சுதனாவான் {மகனாவான்}. இக்ஷ்வாகு பூர்வத்தில் அயோத்தியின் ராஜனாக இருந்தான்.(21) ஸ்ரீமான் குக்ஷி, இக்ஷ்வாகுவின் மகனாக அறியப்படுகிறான். குக்ஷிக்கு புகழ்பெற்ற ஸ்ரீமான் விகுக்ஷி மகனாகப் பிறந்தான்.(22) மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் விகுக்ஷியின் புத்திரனாவான். மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான அநரண்யன் பாணனின் புத்திரனாவான்.(23) அநரண்யனுக்குப் பிருது பிறந்தான். திரிசங்கு பிருதுவின் சுதனாவான் {மகனாவான்}. திரிசங்குவுக்குப் பெரும்புகழ்பெற்ற துந்துமாரன் புத்திரனாகப் பிறந்தான்.(24) துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியும், மஹாரதனுமான யுவனாஷ்வனும், அந்த யுவனாஷ்வனுக்குப் பிருதிவீபதியான மாந்தாதாவும் மகன்களாக இருந்தனர்.(25) மாந்தாதவுக்கு ஸ்ரீமான் ஸுஸந்தி மகனாகப் பிறந்தான், ஸுஸந்திக்கு, துருவஸந்தி, பிரஸேநஜித் என்ற இரு புத்திரர்கள் பிறந்தனர்.(26) துருவஸந்திக்கு பரதன் என்ற பெயரையும், பெருங்கீர்த்தியையும் கொண்டவன் பிறந்தான். பரதனுக்கு அஸிதன் என்ற பெயரைக் கொண்ட மஹாதேஜஸ்வி பிறந்தான்.(27)

[5] பிரம்மனின் இந்த அடைமொழிகள் குறித்து நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெகுகாலமிருப்பவனாகையால் சாச்வதனென்றும், இரண்டு பரார்த்த காலம் {1 பரார்த்தகாலம் = 1014 x 1.5 மனித ஆண்டுகள், அதாவது 2 பரார்த்த காலங்கள் = 31,10,40,00,00,00,000 மனித ஆண்டுகள்} நாசமின்றி இருப்பவனாகையால் நித்யனென்றும், ப்ரவாஹ ரூபமாக இடையின்றிக் கல்பந்தோறும் இருப்பவனாகையால் அவ்யயனென்றும் கண்டுகொள்வது. சாச்வதன் வித்யன், அவ்யயன் என்கிற இம்மூன்று சப்தங்களும் நாசமின்றியிருக்கும் வஸ்துவைச் சொல்லுகின்றன" என்றிருக்கிறது.

அவனுக்கு {அஸிதனுக்கு} ஹைஹயர்கள், தாலஜங்கர்கள், சூரர்களான சசபிந்துக்களின் ராஜாக்கள் பகைவராக இருந்தனர்.(28) அவன் {அஸிதன்} அவர்களுடன் யுத்தமும், பிரதியுத்தமும் செய்து நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டான். அந்த ராஜா தன் பாரியைகள் {மனைவியர்} இருவருடன் ஹிமவந்தம் சென்றான் {இமய மலையை அடைந்தான்}.(29) ராஜா அஸிதன் அல்ப பலத்துடன் {சொற்ப படையுடன் இமயத்தில் வசித்து} காலதர்மத்தில் தன் இறுதி மூச்சை விட்டான். அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பவதிகளாக இருந்தனர். {அவர்களில்} ஒருத்தி தன் சக்களத்தியின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக நஞ்சைக் கொடுத்தாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(30,31அ)

பிறகு, சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவ {பிருகு வம்ச} முனிவர், சிறந்த மலைகளின் அழகால் கவரப்பட்டு ஹிமவந்தத்தில் தஞ்சமடைந்தார்.(31ஆ,32அ) மஹாபாக்யமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்ட ஒருத்தி {அஸிதனின் மனைவியரில் ஒருத்தி}, உத்தம சுதனை விரும்பி அங்கே தேவனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த பார்க்கவரை {சியவனரை} வணங்கினாள்.(32ஆ,33அ) {அவளுக்கு நஞ்சூட்டிய சக்களத்தியான} காளிந்தியும் அந்த ரிஷியை அடைந்து வணங்கினாள். அந்த விப்ரர், புத்திரனை விரும்பி வந்தவளிடம் {நஞ்சுண்டவளிடம்}, புத்திரஜனனம் குறித்துச் சொல்லும் வகையில்[6],(33ஆ,34அ) "மஹாபாக்யவதியே, உன் வயிற்றில் பெரும் பலம்வாய்ந்தவனும், மஹாவீரியனும், மஹாதேஜஸ்வியும், ஸ்ரீமானுமான நல்ல புத்திரன் நஞ்சுடன் அதிசீக்கிரத்தில் பிறப்பான். கமலேக்ஷணையே {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளே}, நீ வருந்த வேண்டாம்" {என்றார் சியவனர்}.(34ஆ,35)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வரிகளுக்குப் பொருள் கொள்வதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் காளிந்தியானவள் சக்களத்திக்கு நஞ்சூட்டியவள் என்றும், வேறு சிலர் காளிந்தி நஞ்சுண்டவள் என்றும் சொல்கிறார்கள். "காளிந்தியும்" என்று இங்குச் சொல்லப்படுவதால் நஞ்சூட்டியவளே காளிந்தி என்று இங்கே பொருள் கொள்ளப்படுகிறது. நஞ்சூட்டிய குற்றவுணர்வுடன் கூடிய அவளும் கர்ப்பவதியாக இருந்தாள். இதனால்தான் "அவளும்" வந்தாள் என்று "உம்" விகுதி சேர்க்கப்படுகிறது" என்றிருக்கிறது.

ராஜபுத்திரியும், பதிவிரதையும், பதியற்றவளுமான அந்த தேவி சியவனரை நமஸ்கரித்தாள். அதன்பிறகு {அந்த முனிவரின் வரத்தால்} அவள் புத்திரனைப் பெற்றாள்.(36) கர்ப்பம் கலைய சக்களத்தியால் நஞ்சூட்டப்பட்டு, அந்த நஞ்சுடன் பிறந்ததால் அவன் சகரன் என்று அறியப்பட்டான்.(37) அந்த சகரனுக்கு அசமஞ்சன் பிறந்தான். அசமஞ்சனுக்கு அம்சுமான் பிறந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரனாகப் பிறந்தான். திலீபனுக்குப் பகீரதன் பிறந்தான்.(38) பகீரதனுக்குக் காகுத்ஸ்தனும், காகுத்ஸ்தனுக்கு ரகுவும் பிறந்தனர். தேஜஸ்வியான பிரவிருத்தன் ரகுவின் புத்திரனாவான். அவனே மனித ஊனுண்ணும் கல்மாஷபாதனானான்[7]. அவனுக்கு {பிரவிருத்தனுக்கு / கல்மாஷபாதனுக்கு} சங்கணன் பிறந்தான்.(39,40அ) சங்கணனுக்குச் சுதர்ஷனனும், சுதர்ஷனனுக்கு அக்னிவர்ணனும், அக்னிவர்ணனுக்குச் சீக்ரகனும், சீக்ரகனுக்கு மருவும் மகன்களாகப் பிறந்தனர். மருவுக்குப் பிரசுஷ்ருகனும், பிரசுஷ்ருகனுக்கு அம்பரீஷனும் பிறந்தனர்.(40ஆ,41) மஹீபதியான நஹுஷன் அம்பரீஷனின் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனுக்கு யயாதியும், யயாதிக்கு[8] நாபாகனும் மகன்களாகப் பிறந்தனர்.(42) நாபாகனுக்கு அஜன் பிறந்தான், அஜனுக்குத் தசரதன் பிறந்தான். தசரதனுக்கு ராமலக்ஷ்மண சகோதரர்கள் பிறந்தனர்[9].(43)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உண்மையில் பிரவிருத்தன் இந்த வம்சத்தின் பெரும் மன்னனாக இருந்தாலும் திமிர் பிடித்தவனாக இருந்தான். எனவே ஒரு நாள் வசிஷ்டரின் கோபத்துக்கு உள்ளாகி மனிதரை உண்ணும் ராக்ஷசனானான். அவனுக்கும் மாய சக்திகள் இருந்ததால் வசிஷ்டரைச் சபிக்கத் தன் கையில் நீரை எடுத்தான். பதிவிரதையான அவனது மனைவி மதயந்தி அவனைத் தடுத்தாள். மனைவியின் சொற்களைக் கேட்டு நீரை சிந்தியபோது அந்த நீர் அவனது பாதங்களில் விழுந்தது. சபிக்க எடுக்கப்பட்ட அந்த நீர் அவனது பாதத்தில் கறையாக இருந்தது. எனவே அவன் கல்மாஷபாதனான்" என்றிருக்கிறது. இந்தக் கல்மாஷபாதனின் கதை மஹாபாரதத்தில் ஆதிபர்வம் பகுதி 178 முதல் 184 வரை சொல்லப்படுகிறது. கர்ணபர்வத்தில் கல்மாஷபாதனைக் குறித்துக் கர்ணனிடம் சல்லியன் சொல்கிறான். அநுசாஸன பர்வம் 79, 80 பகுதிகளில் சௌதாசன் என்ற பெயரில் இவன் கதை வருகிறது. அஸ்வமேத பர்வம் 57,58ம் பகுதிகளிலும் இவன் கதை சொல்லப்படுகிறது. 

 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நஹுஷன், யயாதி என்ற இந்தப் பெயர்கள் ராமாயணக் காலத்திற்கு முந்தைய யுகத்தில் இருந்தவர்களாக வேறு புராணங்களில் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நஹுஷ யயாதிகள் சந்த்ரவம்சத்து நஹுஷ யயாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவர். இதில் முறை வேறுபாடு கல்ப பேதத்தினாலுண்டானதென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

[9] ஹரிவம்சத்தில் இக்ஷ்வாகு வம்சம் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஹரிவம்ச பர்வம் - பகுதி 9, பகுதி 10, பகுதி 11, பகுதி 12, பகுதி 13, பகுதி 14, பகுதி 15, ஆகியவற்றில் வரைபடங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நிருபா {ஜனக மன்னா}, ஆதியில் இருந்தே களங்கமற்ற வம்சத்தினரும், பரமதார்மிகர்களும், வீரர்களும், சத்தியவான்களும் இக்ஷ்வாகு குலத்தில் ராஜர்களாகப் பிறந்தனர். இராமலக்ஷ்மணர்களுக்கு உன் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்குமாறு நான் கேட்கிறேன். உன் மகள்களுக்கு இவர்களே தகுந்தவர்கள். தத்தம் செய்வதே {அவர்களை இவர்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதே} உனக்குத் தகும்" {என்றார் வசிஷ்டர்}.(44,45)

பாலகாண்டம் சர்க்கம் – 70ல் உள்ள சுலோகங்கள் : 45

Previous | Sanskrit | English | Next

Friday, 12 November 2021

பிரம்மரிஷி | பால காண்டம் சர்க்கம் - 65 (40)

Brahmarishi | Bala-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் பிரம்மரிஷி நிலையை அடைந்த கதையை சொல்லி முடித்த சதாநந்தர்...

Rajarshi Janaka meets Viswamitra and Rama Lakshmana

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, பிறகு அந்த மஹாமுனி {விசுவாமித்ரர்} ஹைமவதீ திசையை[1] விட்டுக் கிழக்குத் திசைக்குச் சென்று அங்கே கடும் தவம் செய்தார்.(1) இராமா, ஆயிரம் வருடங்கள் உத்தமமான மௌன விரதம் நோற்ற அவர், ஒப்பற்றதும், எவராலும் செய்ய முடியாததுமான கடுந்தவத்தைச் செய்து வந்தார்.(2) இராமா, கட்டை போலிருந்த அந்த மஹாமுனிக்குப் பல்வேறு இடையூறுகள் நேரினும் அவருக்குள் கோபம் நுழையவில்லை. இவ்வாறு உறுதியாக நிச்சயித்துக் கொண்டு தவத்தில் திடமாக நிலைத்திருந்தார்.(3,4அ) இரகோத்தமா {ரகு குலத்தில் பிறந்தவர்களில் உத்தமனான ராமா}, ஆயிரமாண்டுகள் விரதம் பூர்ணமடைந்ததும் அந்த மஹாவிரதர் அன்னம் உண்ணத் தொடங்கினார். அந்நேரத்தில் இந்திரன் ஒரு துவிஜனாகி அந்த அன்னத்தை யாசித்தான்[2].(4ஆ,5)

[1] இமயமலை இருக்கும் வடக்குத் திசையை விட்டுக் கிழக்கே செல்கிறார். தொடக்கத்தில் விஷ்வாமித்ரர் தெற்கே செல்கிறார், பிறகு மேற்கே செல்கிறார், அதன்பிறகு வடக்கே செல்கிறார், இப்போதோ கிழக்கே செல்கிறார்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த அன்னமானது, ஆயிரம் வருடங்கள் தவம் செய்த பிறகு விஷ்வாமித்ரரால் தமக்காகச் சமைக்கப்பட்டது. தவசிகள் தங்களுக்காக சுயமாகச் சமைத்துக் கொள்ளும் உணவு பவித்ரமானது என்பதால் அது "வைஷ்வதேவம்" என்றழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

மஹாதபஸ்வியும், மௌன விரதம் இருந்தவருமான அந்த பகவான் {விஷ்வாமித்ரர்} விருப்பத்துடன் தமக்குச் சமைத்துக் கொண்ட உணவனைத்தையும் அந்த விப்ரனுக்கே {இந்திரனுக்கே} தத்தம் செய்தார். இதில் அன்னமேதும் எஞ்சவில்லை. அவர் உணவும் உண்ணாமல், விப்ரனிடமும் எதுவும் சொல்லாமல், மீண்டும் மூச்சை அடக்கி மௌனவிரதத்தைத் தொடர்ந்தார்.(6,7) அந்த முனிபுங்கவர் மேலும் ஆயிரம் வருடங்கள் மூச்சை அடக்கியபோது அவரது தலையில் இருந்து புகை எழுந்தது. இதனால் மூவுலகங்களும் பரிதவிப்பது போல நடுங்கின.(8,9அ)

அப்போது தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், பன்னகர்கள், உரகர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் அவரது தேஜஸ்ஸால் மோஹமடைந்தனர். அவரது தவத்தால் ஒளிமங்கி களங்கத்தால் சிதைந்த அவர்கள் அனைவரும் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} சென்று பேசினர்:(9ஆ,10) "தேவா, மஹாமுனி விஷ்வாமித்ரர் லோபமடையவும் {ஆசையில் மயங்கவும்}, குரோதமடையவும் {கோபமடையவும்} அனைத்து வகையிலும் நாங்கள் முயன்றும்கூட அவரிடம் தவம் பெருகி வருகிறது.(11) அவரிடம் சிறு குற்றமும் தென்படவில்லை. அவர் மனத்தில் விரும்புவது கொடுக்கப்படாவிட்டால் தம் தவத்தால் சராசரங்களுடன் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய திரிலோகத்தையும் அவர் நாசம் செய்து விடுவார்.(12,13அ) திசைகள் யாவும் கொந்தளிக்கின்றன, எதுவும் பிரகாசிக்கவில்லை. சாகரங்கள் {பெருங்கடல்கள்} யாவும் கலக்கமடைகின்றன, பர்வதங்கள் {மலைகள்} யாவும் வெடித்துச் சிதறுகின்றன.(13ஆ,14அ) பிரம்மாவே, வசுதை {பூமி} பெரிதும் நடுங்குகிறாள். வாயுவும் கொந்தளித்து வீசுகிறான். என்ன செய்ய வேண்டுமெனன எங்களுக்குத் தெரியவில்லை. மக்கள் {இறை} நம்பிக்கை அற்றவர்களாகிறார்கள். (14ஆ,15அ) திரிலோகங்களும் {மூவுலகங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும்} புலன்கள் குழம்பி மயக்கமடைந்தவை போலிருக்கின்றன. அந்த மஹாரிஷியின் தேஜஸிற்கு முன் பாஸ்கரன் {சூரியன்} ஒளி குன்றியிருக்கிறான்.(15ஆ,16அ) தேவா, அந்த மஹாமுனி {உலகங்கள் அனைத்தையும்} நாசம் செய்யும் புத்தியை அடைவதற்கு முன் அக்னி ரூபமானவரும், பெரும் பிரகாசம் கொண்டவருமான அந்த பகவான் {விஷ்வாமித்ரர்} சமாதானப்படுத்தப்பட வேண்டும்.(16ஆ,17அ) அகிலத் திரிலோகங்களும் பூர்வத்தில் காலாக்னியால் எவ்வாறு எரிக்கப்பட்டதோ அவ்வாறே இப்போதும் எரியும். அவர் தேவராஜ்ஜியத்தையும் வேண்டக்கூடும். எனவே, அவர் வேண்டுவது எதுவானாலும் அது கொடுக்கப்படட்டும்" {என்றனர் தேவர்கள்}.(17ஆ,18அ)

ஸுரகணங்கள் அனைத்தும் பிதாமஹனை முன்னிட்டுக் கொண்டு மஹாத்மாவான விஷ்வாமித்ரரிடம் சென்று, இந்த மதுர வாக்கியத்தைச் சொன்னார்கள்:(18ஆ,19அ) "பிரம்மரிஷியே, உமக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. உமது தவத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். {என்று தேவர்கள் சொன்னதும், பிரம்மன் அந்த முனிவரிடம்} கௌசிகா, உக்கிர தவத்தால் நீ பிராஹ்மண்யத்தை அடைந்துவிட்டாய்.(19ஆ,20அ) பிராமணா, மருத்கணங்களுடன் கூடிய நான் உனக்கு தீர்க்காயுளைக் கொடுக்கிறேன். பேரின்ப அருள்நிலை உன்னைத் தழுவட்டும். நீ மங்கலமாக இருப்பாயாக. சௌம்யனே {மென்மையானவனே}, நீ விரும்பியவாறு செல்வாயாக" {என்றான் பிரம்மன்}.(20ஆ,21அ)

பிதாமஹனும், திரிதிவவாசிகள் {தேவலோகவாசிகள்} அனைவரும் சொன்னதைக் கேட்ட அந்த மஹாமுனிவர் மகிழ்ச்சியுடன் வணங்கி இவ்வாறு சொன்னார்:(21ஆ,22அ) "எனக்குப் பிராஹ்மண்யமும், தீர்க்காயுளும் கொடுக்கப்பட்டால், ஓங்காரமும், வஷட்காரமும், வேதங்களும் தாமே வந்து என்னை ஆதரிக்கட்டும்.(22ஆ,23அ) க்ஷத்ரவேதத்தை {அதர்வணம்} அறிந்தவர்களிலும், பிரம்மவேதத்தை {ரிக், சாம, யஜுர்} அறிந்தவர்களிலும் சிரேஷ்டரும் {சிறந்தவரும்}, பிரம்மபுத்திரருமான வசிஷ்டர் என்னை இவ்வாறே {பிரம்மரிஷி என்று} அழைக்க வேண்டும். இதுவே என் பெரும் விருப்பமாகும். ஸுரரிஷபர்களே {தேவர்களில் சிறந்தவர்களே}, இதைச் செய்துவிட்டால் நீங்கள் செல்லலாம்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(23ஆ,24)

ஜபவரரான வசிஷ்டரும், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே வந்து, {விஷ்வாமித்ரரிடம்} நட்பை ஏற்படுத்திக் கொண்டு, "நீர் பிரம்மரிஷி ஆகிவிட்டீர்" என்று சொன்னார்.(25) மேலும், "இதில் சந்தேகம் வேண்டாம். நீர் பிரம்மரிஷியே. அனைத்தும் உமக்குக் கைகூடும்" என்று சொல்லிவிட்டு தேவர்கள் அனைவரும் வந்தவாறே சென்றனர்.(26)

தர்மாத்மாவான விஷ்வாமித்ரர், உத்தமமான பிராஹ்மண்யத்தை அடைந்ததும் பிரம்மரிஷியும், ஜபவரருமான வசிஷ்டரைப் பூஜித்தார்.(27) பிறகு அவர் இலக்கை அடைந்தவராக தவம் செய்தபடியே மஹீ {பூமி} முழுவதும் திரிந்து வந்தார். இராமா, இந்த மஹாத்மாவால் இவ்வாறே பிராஹ்மண்யம் அடையப்பட்டது.(28) இராமா, இந்த முனிசிரேஷ்டர், தவமே வடிவமானவர். எப்போதும் தர்மத்தில் ஊக்கம் உள்ளவர். இவர் வீரியத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவர்" {என்றார் சதாநந்தர்}.(29)

மஹாதேஜஸ்வியான அந்த த்விஜோத்தமர் {இருபிறப்பாளர்களில் சிறந்த சதாநந்தர்} இவ்வாறு சொல்லிவிட்டு ஓய்ந்தார். இராமன், லக்ஷ்மணன் ஆகியோரின் முன்னிலையில் சதானந்தரின் சொற்களைக் கேட்ட ஜனகன், தன் கைகளைக் கூப்பியபடியே குசிகாத்மஜரிடம் {விஷ்வாமித்ரரிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(30,31அ) "கௌசிகரே, முனிபுங்கவரே, காகுத்ஸ்தர்களுடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} என்னுடைய யஜ்ஞத்திற்குத் தாம் வந்திருப்பதால் நான் தன்யனும் ஆனேன், உமது அனுக்கிரகத்தையும் அடைந்தேன்.(31ஆ,32அ) மஹாமுனிவரே, பிராமணரே, உமது தரிசனம் பெற்ற நான் பவித்ரமடைந்தேன். உம்மைக் கண்டதனால் பல வகை குணங்களும் {வரங்களும்} என்னால் அடையப்பட்டன.(32ஆ,33அ) மஹாதேஜஸ் பொருந்திய பிராமணரே, உம்முடைய விஸ்தாரமான கீர்த்தியும், மஹாதவமும் என்னாலும், மஹாத்மாவான ராமனாலும் கேட்கப்பட்டன.(33ஆ,34அ) இந்தச் சபைக்கு வந்திருக்கும் சபை உறுப்பினர்களும் உமது எண்ணற்ற குணங்களைக் கேட்டறிந்தனர். உமது தவமும், பலமும் அளவிடப்படமுடியாதவையாகும். குசிகாத்மஜரே, உமது குணங்களும் {புகழும்} இவ்வாறே எப்போதும் நிலைத்திருக்கும்.(34ஆ,35) விபுவே, ஆச்சரியப்படத்தக்க இந்தக் கதைகளைக் கேட்டும் எனக்கு நிறைவேற்படவில்லை. முனிசிரேஷ்டரே, ரவிமண்டலம் சாய்கிறது {சூரியன் அஸ்தமிக்கப் போகிறான்}. கர்மகாலமும் {மாலைக் கடனைச் செய்யும் தருணமும்} நெருங்கிவிட்டது.(36) மஹாதேஜஸ்வியே, நாளை விடியலில் என்னைக் காண்பதே உமக்குத் தகும். ஜபசிரேஷ்டரே, ஸ்வாகதம் {உமக்கு நல்வரவு}. எனக்கு விடை கொடுத்து அனுப்புவீராக" {என்றான் ஜனகன்}.(37)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்த முனிவரர் {விஷ்வாமித்ரர்} பிரீதியடைந்தார். மகிழ்ச்சியுடன் செல்லும் புருஷரிஷபனான ஜனகனைப் புகழ்ந்து உடனே விடைகொடுத்தார்.(38) வைதேஹனான {விதேஹ நாட்டின் வழித்தோன்றலான} மிதிலாதிபன் {மிதிலையின் மன்னன்} அந்த முனிசிரேஷ்டரிடம் இவ்வாறு சொல்லிவிட்டு உபாத்யாயர்கள் {ஆசிரியர்கள்}, உறவினர்கள் ஆகியோருடன் அவரைப் பிரதக்ஷிணம் செய்தான் {வலம் வந்தான்}.(39) தர்மாத்மாவான விஷ்வாமித்ரரும், ராம, லக்ஷ்மணனுடன் மஹாரிஷிகளால் பூஜிக்கப்பட்டவராகத் தமது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றார்.(40)

பாலகாண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள் : 40

Previous | Sanskrit | English | Next

Tuesday, 12 October 2021

காமதேனுவான சபளை | பால காண்டம் சர்க்கம் - 52 (23)

Shabala, the Kamadhenu | Bala-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மன்னர் விஷ்வாமித்ரரின் விருந்தோம்பலுக்குரிய பொருட்களைப் படைக்குமாறு காமதேனுவுக்கு ஆணையிட்ட வசிஷ்டர்...

Vasishtha and Kamdhenu known as Shabala

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "மஹாபலம்வாய்ந்தவரும், வீரரும், ஜபம் செய்பவர்களில் சிறந்தவருமான விஷ்வாமித்ரர் வசிஷ்டரைக் கண்டு, பரமபிரீதியடைந்து, பணிவுடன் அவரை வணங்கினார்.(1) மஹாத்மாவான வசிஷ்டர், "ஸ்வாகதம் {நல்வரவு}" என்று சொன்னார். பகவான் வசிஷ்டர் அவரை {விஷ்வாமித்ரரை} ஆசனத்தில் அமரச் சொன்னார்.(2) அந்த முனிவரர் {வசிஷ்டர்}, துணிவுமிக்கவரும், அமர்ந்திருப்பவருமான விஷ்வாமித்ரருக்கு முறைப்படி கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்தார்.(3) ராஜசத்தமரும் {எவராலும் விஞ்சப்பட முடியாத மன்னரும்}, மஹாதேஜஸ்வியுமான விஷ்வாமித்ரர், வசிஷ்டரின் பூஜையை ஏற்றுக் கொண்டு தவம், அக்னிஹோத்ரம், சீடர்கள், வனஸ்பதி கணங்கள் {வனத்தில் இருக்கும் மரஞ்செடி கொடிகள்} குறித்து குசலம் {நலம்} விசாரித்ததும், பதிலுக்கு வசிஷ்டரும் சுற்றிலும் உள்ள அனைத்தின் குசலத்தையும் அந்த ராஜசத்தமரிடம் {விஷ்வாமித்ரரிடம்} விசாரித்தார்.(4,5)

ஜபசிரேஷ்டரும், மஹாதபஸ்வியும், பிரம்மசுதருமான {பிரம்மனின் மகனுமான} வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருக்கும் ராஜாவான விஷ்வாமித்ரரிடம்,(6) "ராஜாவே, நீ நலமாக இருக்கிறாய் என நம்புகிறேன். ராஜாவே, தார்மீகனாகவும், ராஜமார்க்கத்தின்[1] துணைகொண்டு பிரஜா தர்மத்தை {குடிமக்களுக்கான நீதியை} நிறைவேற்றுபவனாகவும் நீ பரிபாலிக்கிறாய் {ஆட்சி செய்கிறாய்} என நம்புகிறேன்.(7) உனது பணியாட்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுகிறார்கள் என நம்புகிறேன். உன் சாசனத்தை அவர்கள் {அந்தப் பணியாட்கள்} பின்பற்றுகிறார்கள் என நம்புகிறேன். ருபுசூதனா {பகைவரை அழிப்பவனே}, உன்னுடைய பகைவர்கள் அனைவரும் நிச்சயம் வெல்லப்பட்டார்கள் என நம்புகிறேன்.(8) பரந்தபா {பகைவரை வாட்டுபவனே}, அநகா {குறையற்றவனே}, நரவியாகரா {மனிதர்களில் புலியே}, பலம் {படைகள்}, கோஷம் {கருவூலம்} ஆகியவையும், மித்ரர்கள் {நண்பர்கள்}, புத்திரர்கள் {மகன்கள்}, பௌத்திரர்கள் {பேரர்கள்} ஆகியோரும் நலமென நம்புகிறேன்" {என்று கேட்டார் வசிஷ்டர்}.(9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆட்சித்திறனின் நான்கு முதன்மையான கூறுகள் பின்வருவனவாகும், "ந்யாயேந ஆர்ஜநம் அர்தஸ்ய வர்தநம் பாலநம் ததா | ஸத்பாத்ரே ப்ரதிபத்தி꞉ ச ராஜவ்ருத்தம் சதுர்விதம் ||" என்றிருக்கின்றன. அதாவது, "செல்வம் நேர்மையாக ஈட்டப்பட வேண்டும். அது நீதியுடன் பெருக்கப்பட வேண்டும். நீதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் நலனுக்காகவோ, அறச்செயல்களுக்காகவோ, தனிப்பட்ட நல்ல மனிதர்களுக்காகவோ அது வழங்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.

மஹாதேஜஸ்வியான ராஜா விஷ்வாமித்ரர் வசிஷ்டரை வணங்கி, "அனைத்தும் நலம்" என மறுமொழி கூறினார்.(10) அந்த தர்மிஷ்டர்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக நீண்ட காலம் கதைகள் பேசிக் கொண்டு, பரஸ்பரம் இன்புற்றிருந்தனர்.(11)

இரகுநந்தனா {ராமா}, அதன் முடிவில் பகவான் வசிஷ்டர் புன்னகைத்தவரே விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(12) "மஹாபலம்வாய்ந்தவனே, இந்தப் படைகளுக்கும், ஒப்பற்றவனான உனக்கும் தகுந்த விருந்தோம்பலைச் செய்ய நான் விரும்புகிறேன். அதை நீ ஏற்றுக் கொள்வாயாக.(13) என்னால் செய்யப்படும் நற்பணிகளை நீ ஏற்பாயாக. ராஜாவே, முனைப்புடன் பூஜிக்கப்படத்தகுந்தவனான நீ அதிதிசிரேஷ்டனாவாய் {விருந்தினர்களில் சிறந்தவனாவாய்}"[2] {என்றார் வசிஷ்டர்}.(14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னர் விஷ்வாமித்ரர், "காட்டின் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் இந்த முனிவர் {வசிஷ்டர்} அரசனுக்கு விருந்தையோ, குதிரைகள், யானைகளுடன் கூடிய படைகளுக்கு உணவையோ அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை" என்று கருதுகிறார். அதற்கு அந்த முனிவர், "முனைப்புடன்" ஒரு ராஜா மதிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் விஷ்வாமித்ரரோ ஓர் ஏழைத்துறவியிடம் இருந்து ஒரு ராஜவிருந்தையோ, படைகளுக்கான விருந்தையோ தயக்கத்துடன் தவிர்க்கிறார்" என்றிருக்கிறது.

வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாமதியாளரான ராஜா விஷ்வாமித்ரர், "உம்மால் பூஜாவாக்கியம் {மதிப்புமிக்கச் சொற்கள்} சொல்லப்பட்டது {இதுவே போதும், வேறேதும் வேண்டியதில்லை}.(15) பகவானே, உமது ஆசிரமத்தில் இருந்து பெறப்பட்ட கனிகள், கிழங்குகள், பாத்தியம் {பாதங்களைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, ஆசமநீயம் {வாயைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, பகவத் தரிசனம் {தேவரைப் போன்ற உமது தரிசனம்} ஆகியன பூஜிக்கத்தகுந்தன. அனைத்தையும் அறிந்தவரே, நான் விடைபெறுகிறேன். உம்மை வணங்குகிறேன்[3]. எப்போதும் {எங்களை} நண்பர்களாகக் காண்பீராக" என்றார்.(16,17)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "{உம்மை வணங்குகிறேன்} "நமஸ் தே அஸ்து" என்ற மதிப்புமிக்க வணக்கம் {இந்த சர்க்கத்தின்} இறுதிக்குறிப்பில் [5ம் அடிக்குறிப்பில்] விவாதிக்கப்படுகிறது.

ராஜா இவ்வாறு பேசினாலும், தர்மாத்மாவும், உதாரதீயுமான {கருணையால் மனம் நிறைந்தவருமான} வசிஷ்டர், மீண்டும் மீண்டும் விருந்தளிக்க முன்வந்தார்.(18) அப்போது காதேயர் {காதியின் மகனான விஷ்வாமித்ரர்}, வசிஷ்டரிடம், "முனிசத்தமரே {முனிவர்களில் உயர்ந்தவரே}, ஏற்றுக் கொள்கிறேன். பகவனான நீர் விரும்பியவாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினார்.(19)

அவர் இவ்வாறு சொன்னதும், ஜபவரரும் {ஜபம் செய்பவர்களில் சிறந்தவரும்}, கலக்கம் விலகியவருமான வசிஷ்டர் மகிழ்ச்சியடைந்து கல்மாஷியை {காமதேனுவான சபளையை} அழைத்தார்:(20) "சபளையே {ஆச்சரியகரமான நிறம் கொண்டவளே}, சீக்கிரமாக வா, நீ வருவாயாக. என் சொற்களைக் கேட்பாயாக. மிகச்சிறப்பானதும், மேலானதுமான போஜனத்தை இந்த ராஜரிஷிக்கும், இந்தப் படைகளுக்கும் விருந்தாக அளிக்க நான் ஆயத்தமாகிறேன். அதை எனக்காக நீ ஏற்பாடு செய்வாயாக.(21) திவ்யமான காமதேனுவே, விருப்பத்துடன் சுவைக்கும் ஒவ்வொருவருக்கும் ஆறு சுவைகளில் {ருசிகளில்} ஒவ்வொன்றையும் என் பொருட்டு ஏராளமாகப் பொழிவாயாக[4].(22) சபளையே {சபலையே}, ரசம் {சுவைக்கதக்கன}, அன்னம் {உண்ணத்தக்கன}, பானம் {பருகத்தக்கன}, லேஹியம் {நாவால் நனைக்க [அ] நக்கத் தக்க தேன் முதலியன}, சியேணம் {உறிஞ்சத்தக்க தயிர் முதலியன} ஆகிய அனைத்துவகை உணவுகளையும் குவியல் குவியலாக விரைந்து உண்டாக்குவாயாக" {என்றார் வசிஷடர்}"[5].(23)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திய உணவு முறையில் ஆறு சுவைகள் என்பன, 1) கார்ப்பு, 2) துவர்ப்பு, 3) இனிப்பு, 4) புளிப்பு, 5) கசப்பு, 6) உவர்ப்பு ஆகியனவாகும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அனதுபற்றி ஆறுவகை ரஸங்களில் எவனுக்கு எது இஷ்டமோ, அதையெல்லாம் அவர்களுக்கு நீ என்னைப் பற்றி அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் [மேலே 3ம் அடிக்குறிப்பில் சுட்டப்பட்ட படி] இந்த சர்க்கத்தின் இறுதிக்குறிப்பில், "நமஸ்தே என்ற மதிப்புக்குரிய வணக்கமொழி "நம்" என்ற வேர்ச்சொல்லில் இருந்து "உயர்நிலைக்கு முன்" என்ற பொருள் கொண்டுவரும் சொல்லாகும், பொதுவாக "சற்றே பணிவுடன் வணங்குவது" என்று அது மொழிபெயர்க்கப்படும். நமஸ்காரம் என்பது அவ்வாறு செயல்படும் செயலைக் குறிப்பதாகும். நமஹ என்ற இந்தச் சொல் "நான் அல்ல", "நீயே" என்ற பொருளைக் கொண்டதாகும். "நான், ’நான்’ என்ற அகங்காரத்தை இழந்து உயர்ந்த ஞானம் கொண்ட உன் முன் பணிகிறேன். நான் செய்வது ஏதுமில்லை அனைத்தும் நீ செய்வதே என்பது என்மேல் நிலைத்திருக்கட்டும். நான் உன்னை விடச் சிறியவன்" என்பதே நமஹ என்பதன் உட்பொருளாகும். குரலுடன் சொன்னால் நமஹ என்ற சொல்லும், செயலுடன் சொன்னால் அஞ்சலி {கைக்கூப்பி வணங்குதல்} என்ற செயலும் மேற்சொன்ன பொருளுக்கு உதாரணங்களாகும்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கின்றன. மேலதிகம் அறிய விரும்புவோர் https://valmikiramayan.net/utf8/baala/sarga52/bala_52_frame.htm என்ற சுட்டிக்குச் செல்லவும்.

பாலகாண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Thursday, 7 October 2021

விஷ்வாமித்ரர் | பால காண்டம் சர்க்கம் - 51 (28)

Vishvamitra | Bala-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தமது அன்னையான அஹல்யை குறித்து விசாரித்த சதானந்தர்; விஷ்வாமித்ரரின் முற்கதையை உரைத்தது...

Vishvamitra and his army

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டவரும், மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியும், கௌதமரின் ஜேஷ்ட சுதனும் {மூத்த மகனும்}, தவத்தால் பிரகாசமான ஒளி பொருந்தியவருமான சதாநந்தர், ராமனைக் கண்ட உடனேயே மயிர்க்கூச்சத்துடன் கூடிய பெரும் வியப்பை அடைந்தார்.(1,2)

பிறகு அந்த சதானந்தர், தலைக்குனிந்து பணிவுடன் சுகமாக அமர்ந்திருந்த அந்த நிருபாத்மஜர்களை {ராஜபுத்திரர்களைக்} கண்ணாறக் கண்டு, முனிசிரேஷ்டரான விஷ்வாமித்ரரிடம் சொன்னார்:(3) "முனிசார்தூலரே {முனிவர்களில் புலியே}, இந்த ராஜபுத்திரர்கள், தீர்க்க தவம் செய்தவளும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதாவை {அகலிகையை} உம்மால் தரிசித்தனர்.(4) மஹாதேஜஸ்வியும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதா, உடல் கொண்ட எவராலும் பூஜிக்கத் தகுந்த ராமனை வனப்பொருள்களால் {மலர்களாலும், கனிகளாலும், கிழங்குகளாலும்} பூஜித்தாளா?(5) மஹாதேஜஸ்வியே, என் மாதாவுக்கு தெய்வ செயலால் நேர்ந்த புராதனத்தை {பழங்கதையை} நீர் நடந்தபடியே ராமனுக்குச் சொன்னீரா?(6) கௌசிகரே, மங்கலமாக இருப்பீராக. முனிசிரேஷ்டரே, ராமனைக் கண்ட என் மாதா {அஹல்யை}, என் குருவுடன் {கௌதமருடன்} சேர்ந்து அதிதி பூஜை {விருந்தோம்பல்} செய்தாளா?(7) குசிகாத்மஜரே {குசிகரின் மகனான விஷ்வாமித்ரரே}, மஹாதேஜ்வியான என் குரு {என் தந்தை கௌதமர்}, அங்கே வந்து ராமனை பூஜித்தாரா? இந்த மஹாத்மாவால் பிரதிபூஜை செய்யப்பட்டாரா?(8) குசிகாத்மஜரே, அவர் அங்கே வந்து தீங்கு விளைவிக்காதபடி, பூஜிக்கத்தகுந்தவனான ராமனால் மனசாந்தியை அடைந்தாரா?" {என்று கேட்டார் சதானந்தர்}.(9)

மஹாமுனியும், வாக்கியங்களை அறிந்தவருமான விஷ்வாமித்ரர் சதானந்தரின் வசனத்தைக் கேட்டு, அந்த வாக்கியங்களின் பொருள் உணர்ந்து மறுமொழி சொன்னார்:(10) "முனிசிரேஷ்டா, எதுவும் செய்யப்படாமல் விடப்படவில்லை. செய்யப்படவேண்டியவை அனைத்தும் என்னால் செய்யப்பட்டன. ரேணுகையுடன் பார்க்கவரை {ஜமதக்னியைப்} போல[1] அந்தப் பத்தினியும், முனியும் {அகலிகையும் கௌதமரும்} ஒன்று சேர்ந்தனர்" என்றார் {விசுவாமித்ரர்}.(11)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முந்தைய யுகத்தில் க்ஷத்திரிய மன்னர்களின் தவறுகளைக் கண்டிக்கும் பிராமணராக விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பரசுராமரின் அன்னையாவாள் இந்த ரேணுகை. பிருகுவின் வழித்தோன்றலும், ரேணுகையின் கணவருமான ஜமதக்னி முனிவர் பார்க்கவர் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஜமதக்னி தமது மகனான பரசுராமரிடம் அவரது தாயான ரேணுகையின் தலையைக் கொய்யச் சொல்கிறார். பரசுராமரும் தமது தந்தையின் ஆணையைத் தயக்கமில்லாமல் நிறைவேற்றினார். ஒப்பற்ற ஆயுதமான கோடரியுடன் கூடிய பரசுராமர் இவ்வாறே பார்க்கவ ராமர் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பரசுராமர், இராமாயணத்தில் சீதா திருமணத்திற்குப் பிறகு ராமனை எதிர்த்து வருவார்" என்றிருக்கிறது.

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்ட மஹாதேஜஸ்வியான சதானந்தர், ராமனிடம் இதைச் சொன்னார்:(12) "நரசிரேஷ்டா, ராகவா, அபராஜிதரான {வெல்லப்பட முடியாதவரான} விஷ்வாமித்ர மஹரிஷியை முன்னிட்டு வந்த உன் வரவு நல்வரவாகட்டும்[2].(13) மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் செய்த செயல்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. இவர் தமது தவத்தின் மூலம் பிரம்மரிஷியானார். எல்லையற்ற ஒளி பொருந்திய இவரது பரமகதியை நீ அறிவாய் {நீ அறிய வேண்டும்}[3].(14) இராமா, புவியில் உன்னைவிடத் தன்யதரன் வேறு எவனும் இல்லை. உயர்ந்த தவம் பயின்ற குசிக புத்திரரே {விஷ்வாமித்ரரே} உன்னைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.(15) மஹாத்மாவான இந்தக் கௌசிகரின் பலமென்ன என்பதைக் கேட்பாயாக. அதனை நான் உனக்கு உரைக்கிறேன். நான் சொல்லும்போதே என்னிடம் கேட்பாயாக.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சதானந்த முனிவரின் இந்த வாக்கியம் பாலகாண்டம் 19ம் சர்க்கம் 14ம் சுலோகத்தில் தரசரதன் சபையில் விசுவாமித்ரர் சொன்ன "மஹாத்மாவும், சத்தியபராக்கிரமனுமான ராமனை முற்றாக நான் அறிவேன்" என்ற வாக்கியத்தை நமக்கு நினைவுப்படுத்தும். அகலிகை, கௌதமர் ஆகியோரின் மகனானதால் சதானந்தரும் அங்கே விசுவாமித்ரர் சொன்னதைப் போலவே ராமனை அறிந்திருக்கிறார். அத்தகைய முனிவர் ஒருவர் ராமனை வழிநடத்துகிறார் எனும்போது அவரைக் குறித்த பின்னணியை ராமன் அறிந்திருக்க வேண்டும். இதனால் அடுத்தடுத்து வரப்போகும் சில சர்க்கங்களில் {15 சர்க்கங்களில்} சதானந்தர் சொல்வதாக விசுவாமித்ரரின் கதை இடம்பெறப்போகிறது" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த உரையை "ஏற்கனவே நீ அறிவாய்" என்று பொருள் கொண்டால், சதானந்தர் மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை. எனவே, "நீ அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது" என்று பொருள் கொள்வதே இங்குச் சிறப்பு. இவர் பரமஹிதசந்தாயகர், அஃதாவது அண்ட அமைதிக்கான நன்மையைச் செய்பவராக இருப்பதால் "விஷ்வம்" - அண்டம், "மித்ரன்" - நண்பன் என்ற பொருளில் அண்டத்தின் நண்பன் என்பதைக் குறிப்பதற்காக விஷ்வாமித்ரர் என்ற பெயரைப் பெற்றார்" என்றிருக்கிறது.

இந்தத் தர்மாத்மா, தர்மத்தை அறிந்தவராக இருந்து, {ஆட்சித்திறத்தில்} வித்தைகளைப் பயின்று பிரஜைகளின் நலத்தைக் காக்கும் அரிந்தம {பகைவரைத் தண்டிக்கும்} ராஜாவாக நீண்ட காலம் இருந்தார்.(17) பிரஜாபதியின் மகனும், குசன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒருவர் {ஒரு காலத்தில்} மஹீபதியாக {பூமியின் தலைவராக} இருந்தார். பலவானும், நல்ல தார்மிகருமான குசநாபர், இந்தக் குசரின் புத்திரனாவார்.(18) காதி என்று கேள்விப்படும் ஒருவர் குசநாபரின் மகனாவார். மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான இந்த விஷ்வாமித்ரர் அந்தக் காதியின் புத்திரனாவார்.(19) {பின்னொரு காலத்தில்} மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் மேதினியை பரிபாலித்து {பூமியை ஆண்டு} வந்தார். ராஜாவாகப் பல்லாயிரம் வருடங்கள் ராஜ்யத்தை ஆண்டுவந்தார்.(20)

இந்த மஹாதேஜஸ்வி ஒரு காலத்தில் ஓர் அக்ஷௌஹிணி சூழ படைகளைத் திரட்டிக் கொண்டு மேதினியை வலம் வந்தார்[4].(21) நகரங்கள், ராஷ்டிரங்கள், ஆறுகள், கிரிகள், ஆசிரமங்கள் என அடுத்தடுத்து திரிந்த அந்த ராஜா ஓரிடத்தில்{22} வசிஷ்டரின் ஆசிரமபதத்தைக் கண்டார். அங்கே பலவித புஷ்பங்கள், கொடிகள், மரங்கள், பலவித மிருக கணங்கள் நிறைந்தன. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுவதும்,{23} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோரால் ஒளிபெறுவதும், மான்கள் நிறைந்ததும், பறவைக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{24} பிரம்ம ரிஷி கணங்கள் நிறைந்ததும், தேவரிஷி கணங்களால் துதிக்கப்படுவதும், எப்போதும் தவப்பயிற்சிகள் நடைபெறுவதுமான இடமாக அஃது இருந்தது, அக்னிக்கு ஒப்பான மஹாத்மாக்களும்,{25} பிரம்மனுக்கு ஒப்பான மஹாத்மாக்களும், நீரைப்பருகி வாழ்பவர்களும், காற்றை உண்டு வாழ்பவர்களும், சருகுகளை உண்டு வாழ்பவர்களும்,{26} கனி கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவங்களை வென்றவர்களும், புலன்களை வென்றவர்களும், ரிஷிகளும், வாலகில்யர்களும், ஜபங்கள், ஹோமங்கள் செய்பவர்களும்,{27} வைகானஸர்களும் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர்.(28அ) இவ்வாறே வெற்றியாளர்களில் சிறந்தவரும், மஹாபலம்வாய்ந்தவருமான விஷ்வாமித்ரர், பிரம்ம லோகத்திற்கு ஒப்பான வசிஷ்டரின் ஆசிரமபதத்தை அங்கே கண்டார்" {என்றார் சதானந்தர்}.(28ஆ,இ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்ஷௌஹினி என்றழைக்கப்படும் ஒரு படைப்பிரிவானது, 21,870 தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், 65,610 குதிரைகளும், 1,09,350 காலாட்களும் கொண்டதாகும்" என்றிருக்கிறது.


பாலகாண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Wednesday, 6 October 2021

மிதிலை | பால காண்டம் சர்க்கம் - 50 (25)

Mithila | Bala-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் வழிநடத்த லக்ஷ்மணனுடன் மிதிலையை அடைந்த ராமன்; இளவரசர்கள் இருவரைக் குறித்தும் விசாரித்த ஜனகன்; இராமனையும், லக்ஷ்மணனையும் அறிமுகம் செய்த விஷ்வாமித்ரர்...

Janaka Vishvamitra

பிறகு ராமனும், சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்} விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு வடகிழக்காகச் சென்று {ஜனகனின்} யஜ்ஞ மண்டபத்தை {யாகசாலையை} அடைந்தனர்.(1) இலக்ஷ்மணனுடன் கூடிய ராமன் அந்த முனிசார்தூலரிடம் {விஷ்வாமித்ரரிடம்}, "மஹாத்மாவான ஜனகரின் யஜ்ஞ ஏற்பாடுகள் உண்மையில் மிகச் சிறப்பாக இருக்கின்றன.(2) பெரும் நற்பேறு பெற்றவரே, இங்கே {இந்த இடத்தில்} பல தேசங்களைச் சேர்ந்தவர்களும், வேத விற்பன்னர்களுமான பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.(3) {வேள்விக்குரிய பொருட்களைச் சுமக்கும்} நூற்றுக்கணக்கான வண்டிகள் நிறைந்திருக்கும் ரிஷிகளின் குடில்களும் நிறைந்திருக்கின்றன. பிராமணரே, நாம் இருப்பதற்கான ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பீராக" என்றான் {ராமன்}.(4)

மஹாமுனி விஷ்வாமித்ரர், ராமனின் வசனத்தைக் கேட்டு {புத்துணர்வூட்டும்} நீர் நிறைந்ததும், கூட்டமற்றதுமான ஓரிடத்தில் விடுதியை ஏற்படுத்தினார்.(5) நிருபவரன் {மன்னர்களில் சிறந்த ஜனகன்}, விஷ்வாமித்ரர் {மிதிலை} வந்திருப்பதைக் கேட்டு, குற்றமற்றவரான தன் புரோஹிதர் சதாநந்தரை முன்னிட்டுக் கொண்டு, வணக்கத்துடன் கூடியவனாக உடனே {விஷ்வாமித்ரரை} எதிர்கொண்டான்.(6,7அ) அந்த மஹாத்மாவின் {ஜனகனின்} ரித்விஜர்களும் அர்க்கியத்தை எடுத்துக் கொண்டு விரைந்து வந்து, {தூய்மைச்சடங்கைச் செய்யும்} தர்மத்தை மனத்தில் கொண்டு {மந்திரங்களுடன்}, தர்மமான முறையில் அதை {அர்க்கியத்தை} விஷ்வாமித்ரருக்குக் கொடுத்தனர்.(7ஆ,8அ) மஹாத்மாவான ஜனகனின் பூஜையை ஏற்றுக் கொண்ட விஷ்வாமித்ரர், அந்த ராஜனிடம் குசலமும், இடையூறின்றி யஜ்ஞம் நடைபெறும் விதமும் விசாரித்தார்.(8ஆ,9அ) பிறகு, உபாத்யாயர்கள் {ஆசிரியர்கள்}, புரோதஸர்கள் {போதகர்கள்}, முனிவர்கள் ஆகியோரின் நலத்தையும் தகுந்த முறையில் விசாரித்த அவர் {விசுவாமித்ரர்} ரிஷிகள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்தார்.(9ஆ,10அ)

அப்போது அந்த ராஜா {ஜனகன்}, தன் கைகளைக் கூப்பியபடி அந்த முனிசிரேஷ்டரிடம் {விசுவாமித்ரரிடம்} பேசினான்: "பகவானே, உயர்ந்தவர்களான இந்த முனிவர்களுடன் சேர்ந்து ஆசனத்தில் அமர்வீராக" {என்றான் ஜனகன்}.(10ஆ,11அ) ஜனகனின் சொற்களைக் கேட்ட அந்த மஹாமுனி {இருக்கையில்} அமர்ந்தார். {அரச} புரோஹிதருடனும் {சதாநந்தருடனும்}, ரித்விஜர்களுடனும், மந்திரிகளுடனும் சேர்ந்து ராஜனும் அங்கே அமர்ந்தான்.(11ஆ,12அ)

பிறகு அந்த நிருபதி {ஜனகன்}, அங்கே இருந்த அனைவரும் விதிப்படி ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு விஷ்வாமித்ரரிடம் பேசினான்:(12ஆ,13அ) "இன்று என்னுடைய யஜ்ஞம் தெய்வ செயலால் கனிந்தது. இன்று கிட்டிய பகவத்தரிசனத்தின் மூலம் என்னால் யஜ்ஞ பயன் அடையப்பட்டது.(13ஆ,14அ) முனிபுங்கவரே, பிராமணரே, முனிவர்களுடன் எனது யஜ்ஞசாலைக்கு வந்த உமது கருணையைப் பெற்றதால் நான் தன்யனானேன்.(14ஆ,15அ) பிரம்மரிஷியே, தீக்ஷை முடிய {இந்த வேள்வி முடிய} பன்னிரெண்டு நாட்களே எஞ்சியிருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். கௌசிகரே, அதன்பிறகு {அந்த பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு} தங்கள் பாகங்களைப் பெற வரப்போகும் தேவர்களைக் காண்பதே உமக்குத் தகும்" {என்றான் ஜனகன்}.(15ஆ,16அ)

அந்த நிருபன் {ஜனகன்} அந்த முனிசார்தூலரிடம் {விசுவாமித்ரரிடம்} இதைச் சொல்லிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் தன் கைகளைக் குவித்துக் கொண்டு மீண்டும் பேசினான்:(16ஆ,17அ) "முனிவரே, நீர் மங்கலமாக இருப்பீராக. இந்தக் குமாரர்கள், {விஷ்ணு} தேவனின் துல்லிய பராக்கிரமத்தையும், கஜசிம்ம கதியையும் {யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையைக்} கொண்ட வீரர்களாகவும், புலிக்கும், காளைக்கும் ஒப்பானவர்களாகவும், பத்மபத்ரவிசாலாக்ஷம் {தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளைக்} கொண்டவர்களாகவும், கட்கம் {வாள்}, தூணி {அம்பறாத்தூணி}, தனு {வில்} ஆகியவற்றைத் தரித்தவர்களாகவும், அஷ்வினிகளைப் போன்ற ரூபத்தைக் கொண்டவர்களாகவும், இளமையின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும், தேவலோகத்தில் இருந்து தம் விருப்பம்போல் பூமிக்கு வந்த அமரர்களைப் போலவும் தெரிகிறார்கள். இவர்கள் இங்கே பாதங்களைப் பதித்தது எவ்வாறு? அதன் காரணமென்ன? இவர்கள் இங்கே வந்தது ஏன்? இவர்கள் யாருடையவர்கள்?[1](17ஆ-19) மஹாமுனியே, சிறந்த ஆயுதங்களைத் தரித்த இந்த வீரர்கள், சந்திரனாலும், சூரியனாலும் அலங்கரிக்கப்பட்ட அம்பரத்தை {ஆகாயத்தைப்} போல இந்தத் தேசத்திற்குப் புதுப் பொலிவூட்டுகிறார்கள். பிரமாணத்திலும் {உடல் அமைப்பிலும்}, இங்கிதத்திலும் {முகத்தோற்றத்திலும்}, சேஷ்டைகளிலும் {செய்யும் செயல்களிலும்} பரஸ்பரம் {ஒருவரையொருவர்} ஒத்திருக்கின்றனர். காகபக்ஷங்கள்[2] தரித்த இந்த வீரர்கள் யாருடைய புத்திரர்கள்? இவற்றைக் கேட்க நான் விரும்புகிறேன்" {என்றான் ஜனகன்}[3].(20,21)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், இந்தச் சுலோகங்கள் பாலகாண்டம், 48ம் சர்க்கம் 2, 3, 4 சுலோகங்களில் மன்னன் சுமதி சொன்ன அதே வாக்கியங்களைச் சொல்பகுப்பு மாறாமல் கொண்டிருக்கின்றன" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராஜபுத்ரர்கள் வைத்துக் கொள்ளும் முக்குடுமி. இதைப் பக்கக் குடுமியென்றும் சிறு குடுமியென்றும் கன்றுக்குடுமியென்றும் ஜில்பா என்றுஞ் சொல்லுவார்கள்" என்றிருக்கிறது. 

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், இந்தச் சுலோகங்கள் பாலகாண்டம் 48ம் சர்க்கம் 5, 6 சுலோகங்களில் உள்ள அதே வாக்கியங்களைச் சொல் வேறுபாடுகளுடன் கொண்டிருக்கின்றன" என்றிருக்கிறது.

மஹாத்மாவான ஜனகனின் இந்த வசனத்தைக் கேட்ட அந்த அமேயாத்மா {எல்லையில்லா ஆன்மா கொண்ட விசுவாமித்ரர்}, அவ்விருவரும் தசரதனின் புத்திரர்கள் என்பதைத் தெரிவித்தார்.(22) சித்தாசிரமவாசம், ராக்ஷச வதம், தம்முடன் அவர்கள் செய்த பயணம், விசாலாபுரியைக் கண்டது,(23) அஹல்யை தரிசனம், கௌதமரோடு {அஹல்யை} கலந்தது, மஹாதனுவை {மிதிலையில் உள்ள பெரும் வில்லை} அறிய {கைப்பற்ற} வந்தது(24) என அனைத்தையும் மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், மஹாத்மாவான அந்த ஜனகனிடம் சொல்லி நிறுத்தினார்.(25)

பாலகாண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை