Showing posts with label தாடகை. Show all posts
Showing posts with label தாடகை. Show all posts

Thursday, 19 August 2021

தாடகை வதம் | பால காண்டம் சர்க்கம் - 26 (36)

Elimination of Tataka | Bala-Kanda-Sarga-26 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரரின் ஆணையின் பேரில் தாடகையைக் கொன்ற ராமன்...

Tataka vadha

திடவிரதனான அந்த நரவராத்மஜன் {சிறந்த மனிதனின் மகனான ராமன்}, {அச்சமில்லாதவனாக} ஆண்மையுடன் அந்த முனிவசனத்தைக் கேட்டுக் கைகளைக் கூப்பி மறுமொழி சொன்னான்:(1) {ராமன்}, "என் பிதாவின் வசனம் {தந்தையின் சொற்கள்}, என் பிதாவின் வசனத்தில் {நான்} கொண்டிருக்கும் மதிப்பு, கௌசிகரின் வசனம் ஆகியவற்றால் மேலும் சந்தேகிக்காமல் நிச்சயம் இதை {தாடகைவதத்தை} நிறைவேற்ற வேண்டும்.(2) அயோத்தியின் குருக்களுக்கு மத்தியில் மஹாத்மாவும், என் பிதாவுமான தசரதரால் எனக்கு ஆணையிடப்பட்ட வசனத்தை நான் அலட்சியம் செய்ய முடியாது.(3) இவ்வாறிருக்கும் நான், என் பிதாவின் வசனத்தைக் கேட்டு, பிரம்மவாதியின் சாசனத்தை {பிரம்மவாதியான உமது உத்தரவை} சந்தேகமில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.(4) கோக்களின் நன்மைக்காகவும், பிராமணர்களின் நன்மைக்காகவும், இந்தத் தேசத்தின் நன்மைக்காகவும் அளவிடற்கரியவரின் {உமது} வசனத்தை நிறைவேற்றப் போகிறேன்" {என்றான்}.(5)

அந்த அரிந்தமன் {பகைவரை அடக்குபவனான ராமன்}, இவ்வாறு சொல்லிவிட்டு, தன் முஷ்டியை மடித்து தனுசின் மத்தியைப் பற்றி, திசைகளை வெடிக்கச் செய்யும் சத்தத்துடன் கூடிய தீவிர நாணொலியை உண்டாக்கினான்.(6) தாடகாவனவாசிகள் அந்த சத்தத்தால் அச்சமடைந்தனர். தாடகையுங்கூட அந்த சத்தத்தால் மோஹமடைந்து பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை அடைந்தாள்.(7) அந்தச் சத்தத்தைக் கேட்டுக் குரோதமடைந்த அந்த ராக்ஷசசி {தாடகை}, சத்தம் வந்த வழியைக் கவனித்து {அங்கே} மூர்க்கத்துடன் விரைந்து சென்றாள்[1].(8)

[1] தாடகையின் வருகையைக் கம்பர் பின்வருமாறு வர்ணிக்கிறார்

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலைச்
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக நிலக் கிரிகள் பின் தொடர வந்தாள்.

இறைக்கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறைக் கடை அரக்கி வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள்.

கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர்
இடங்களும் நெடுந் திசையும் ஏழ் உலகும் யாவும்
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள்.

- கம்பராமாயணம் பாலகாண்டம் 368-370

அவன் {ராமன்}, விகாரத் தோற்றமும், விகார முகமும் கொண்டவளும், பரிமாணத்தில் பேரளவு கொண்டவளும், வெறி கொண்டவளுமான அவளைக் கண்டு லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(9) "இலக்ஷ்மணா, இந்த யக்ஷியின் கோரமான பயங்கர வடிவைப் பார். இதைக் கண்டால் கோழைகளின் {அச்சமடைபவர்களின்} இதயங்கள் பிளந்துவிடும்.(10) தடுக்கப்பட முடியாதவளும், மாயாபலம் கொண்டவளுமான இவளது காதுகளையும், நுனிமூக்கையும் அறுத்து நான் விரட்டப் போவதை இப்போது பார்ப்பாயாக.(11) ஸ்திரீ சுபாவம் இவளைக் காக்கிறது, உண்மையில் நான் இவளைக் கொல்ல முயற்சிக்கவில்லை. இவளது வீரியத்தையும், அசையும் ஆற்றலையும் நிறுத்துவதே என் நோக்கம்" {என்றான்}.(12)

இராமன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே குரோதத்தில் மூழ்கியிருந்தவள் {தாடகை}, கைகளைச் சுழற்றி கர்ஜித்தபடியே ராமனை நோக்கி விரைந்தாள்.(13) பிரம்மரிஷியான விஷ்வாமித்ரர் ஹுங்காரம் செய்து அதட்டி, "இராகவர்களே, {உங்களுக்கு} நலமும் {பாதுகாப்பும்}, ஜயமும் {வெற்றியும்} உண்டாகட்டும்" என்றார்.(14)

அவள் ராகவர்கள் மீது புழுதியை கோரமாக வாரி இறைத்து, ஒரு முஹூர்த்த காலம் பெரும்புழுதி மேகத்தால் அவர்களைக் கலங்கடித்தாள்.(15) பிறகு அவள் மாயையைக் கைக்கொண்டு அந்த ராகவர்களைச் சுற்றிலும் கல்மழையைப் பொழிந்தாள். அப்போது ராமன் குரோதமடைந்தான்.(16) ராகவன், அவளது கல்மழையைச் சரமழையால் தடுத்து, தன்னை நோக்கி விரைந்து வரும் அவளது கரங்கள் இரண்டையும் {சரங்களால்} சிதைத்தான்.(17) கைகள் அறுந்தவளும், களைத்தவளுமான அவள், {லக்ஷ்மணனின்} அருகில் சென்று பயங்கரமாக கர்ஜித்தாள். அப்போது குரோதமடைந்த சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, அவளது காதுகளையும், நுனிமூக்கையும் அறுத்தான்.(18) விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான அவள் அனேக வடிவங்களை ஏற்றும், {சமயங்களில்} மறைந்தும், மாயையால் {அவர்களை} மோகமடைய {மயங்கச்} செய்தும், கல்மழையைப் பொழிந்தபடியும் பீதியடையச் செய்யும் வகையில் திரிந்தாள்.(19,20அ)

அப்போது, ராமனையும், லக்ஷ்மணனையும் சூழும் கல்மழையைக் கண்டு ஸ்ரீமானான காதிசுதன் {காதியின் மகனான விஷ்வாமித்ரர்}, இந்த வசனத்தைச் சொன்னார்:(20ஆ,21அ) "உன் கருணை போதும் ராமா, பாவியும், தீய நடை கொண்டவளும், யஜ்ஞத்தை அழிப்பவளுமான இந்த யக்ஷி, மாயையைப் பயன்படுத்திக் குறுகிய காலத்தில் மீண்டுவிடுவாள்.(21ஆ,22அ) செவ்வந்தி {மாலை சந்தி} நேர்வதற்குள் இவளை வதம் செய்வாயாக. சந்தியாகாலத்தில் ராக்ஷசர்கள் எதிர்க்கவொண்ணா வல்லமை பெறுவார்கள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(22ஆ,23அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவன் {ராமன்}, அந்த யக்ஷியிடம் சப்தவேதித்வத்தை {சத்தத்தைக் கொண்டு கணைகளை ஏவும் கலையை} வெளிப்படுத்தி, அவள் பொழியும் கல்மழையைத் தன் கணைகளால் தடுத்தான்.(23ஆ,24அ) பாணஜாலத்தால் தடுக்கப்பட்ட அந்த மாயாபலம் கொண்டவள் {தாடகை}, கடுமையாக கர்ஜித்தபடியே காகுத்ஸனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் நோக்கி விரைந்தாள்.(24ஆ,25அ) மோதுவதற்காக இடியைப் போல வேகமாக விரைந்து வந்து பாய்ந்த அவளது மார்பில் அவன் சரம் எய்த உடனேயே கீழே விழுந்து மாண்டாள்.(25ஆ,26அ)

ஸுரபதியும் {இந்திரனும்}, ஸுரர்களும் {தேவர்களும்}, பயங்கரவடிவத்துடன் கூடியவள் அழிக்கப்பட்டதைக் கண்டு, "நன்று, நன்று" என்று சொல்லி அந்தக் காகுத்ஸனை பூஜித்தனர்.(26ஆ,27அ) ஸஹஸ்ராக்ஷனான {ஆயிரம் கண்களைக் கொண்ட} புரந்தரன் {பகைவரின் கோட்டைகளை அழிக்கும் இந்திரன்}, பரமபிரீதியுடனும், ஸுரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் விஷ்வாமித்ரரிடம் சொன்னார்கள்:(27ஆ,28அ) "கௌசிக முனியே {விஷ்வாமித்ரரே}, பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பீராக. இந்திரனுடன் கூடிய மருத்கணங்கள் அனைவரும் இந்தச் செயலால் நிறைவடைந்திருக்கின்றனர். ராகவனிடம் {ராமனிடம்} ஸ்னேகத்தைக் காட்டுவீராக.(28ஆ,29அ) பிராமணரே, சத்திரபராக்கிரமம் கொண்டவர்களும், தவபலம் கொண்டவர்களுமான கிருஷாஷ்வப்ரஜாபதியின் {பிரஜாபதியான பிருசாச்வரின்} புத்திரர்களை {அஸ்திர சஸ்திரங்களை} ராகவனுக்கு {ராமனுக்குக்} கொடுப்பீராக[2].(29ஆ,30அ) பிராமணரே, இவன் {உம்மை} உறுதியாகப் பின்பற்றுகிறான். எனவே உமக்கு இவன் தகுந்தவன். இந்த ராஜசுதன், ஸுரர்களுக்காக {தேவர்களுக்காக} பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது" {என்றனர்}.(30ஆ,31அ)

[2] பாலகாண்டம் 21ம் சர்க்கம் 10 முதல் 20ம் சுலோகம் வரை சொல்லப்படும் தெய்வீக ஆயுதங்களைத் தான் தேவர்கள் இங்கே விஷ்வாமித்ரரிடம் சொல்கின்றனர்.

இவ்வாறு சொன்ன ஸுரர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரைப் பூஜித்துவிட்டு நிறைவுடன் சொர்க்கத்திற்குச் சென்றனர். அப்போது சந்தியாகாலமும் வந்தது.(31ஆ,32அ) தாடகாவதத்தால் மகிழ்ச்சியும் நிறைவுமடைந்த அந்த முனிவரர் {விஷ்வாமித்ரர்}, ராமனின் நெற்றியை முகர்ந்து {உச்சிமுகர்ந்து} இந்த வசனத்தைச் சொன்னார்:(32ஆ,33அ) "காண்பதற்கு இனியவனே, இன்றிரவு இங்கே வசிப்போம். நாளை காலையில் என்னுடைய ஆசிரமத்திற்குச் செல்வோம்" {என்றார்}.(33ஆ,34அ)

விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த தசரதனின் மகன் {ராமன்}, அந்தத் தாடகாவனத்தில் அவ்விரவில் சுகமாக வசித்திருந்தான்.(34ஆ,35அ) அதே நாளில் அந்த வனமும் சாபத்தில் இருந்து விடுபட்டு சைத்ரரத வனம் போல ரமணீயமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(35ஆ,இ) அந்த ராமனும், யக்ஷனின் மகளை {தாடகையை} முற்றிலும் அழித்து, ஸுர, சித்த கூட்டத்தால் துதிக்கப்பட்டு விடியல் வேளையில் எழுப்பப்படும்வரை அங்கே இருந்தான்.(36)

பாலகாண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள் : 36

Previous | Sanskrit | English | Next

Wednesday, 18 August 2021

தாடகை | பால காண்டம் சர்க்கம் - 25 (22)

Tataka | Bala-Kanda-Sarga-25 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தாடகையின் பிறப்பு, திருமணம், சாபம் ஆகியவற்றைச் சொன்ன விஷ்வாமித்ரர்; தாடகையைக் கொல்ல ராமனை ஏவியது...

Lord Brahma

நினைத்தற்கரிய சக்தியைக் கொண்ட அம்முனிவரின் {விஷ்வாமித்ரரின்} வசனத்தைக் கேட்ட அந்தப் புருஷஷார்தூலன் {மனிதர்களில் புலியான ராமன்} நற்சொற்களால் பதில் கூறும் வகையில்,(1) "முனிபுங்கவரே, யக்ஷிகள் அற்ப வீரியம் கொண்டவர்கள் என்று கேள்விப்படுகிறோம். ஓர் அபலையான அவள் {தாடகை} ஆயிரம் யானைகளின் பலத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?" {என்று கேட்டான்}.(2)

அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராகவனால் இவ்வாறு சொல்லப்பட்ட வசனத்தைக் கேட்டும், அந்த அரிந்தமனையும் {பகைவரை அடக்குபவனான ராமனையும்}, லக்ஷ்மணனையும் உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் {விஷ்வாமித்ரர்} இனிய வசனங்கள் கொண்ட இந்த வாக்கியத்தைச் சொன்னார்: "ஓர் அபலை அளவற்ற பலத்தைப் பெற்றது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக. தான் பெற்ற வரத்தின் வீரியத்தால் அவள் பலம் பெற்றாள்.(3,4) பூர்வத்தில் சுகேது என்ற பெயரில் ஒரு வீரியவான் இருந்தான். நன்னடத்தையுடைய அந்த மஹாயக்ஷன், பிள்ளையற்றவனாக இருந்ததால் மஹாதவத்தைச் செய்து வந்தான்.(5) ராமா, பிறகு மகிழ்ச்சியடைந்த பிதாமஹன் {பிரம்மா} அந்த யக்ஷபதிக்கு {யக்ஷர்களின் தலைவனான சுகேதுவுக்கு} தாடகை என்ற பெயரில் புகழ்பெற்ற கன்னியாரத்னத்தை {ரத்தினம் போன்ற கன்னிகையை மகளாகக்} கொடுத்தான்.(6) பிதாமஹன் {பிரம்மன்} அவளுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தையும் கொடுத்தான். எனினும், உயர்ந்த சிறப்புகளைக் கொண்ட பிரம்மன், அந்த யக்ஷனுக்குப் புத்திரனைக் கொடுத்தானில்லை.(7) பால பருவத்தில் இருந்து வளர்ந்து ரூபத்தையும் {அழகையும்}, யௌவனத்தையும் {இளமையையும்}, பிரகாசத்தையும் அடைந்த அவள் {அந்தத் தாடகை, தன் தந்தையான சுகேதுவால்} ஜம்பனின் {ஜர்ஜனின்} புத்திரனான சுந்தனுக்குப்[1] பாரியையாக {மனைவியாகக்} கொடுக்கப்பட்டாள்.(8) சிறிது காலம் கழிந்ததும் அந்த யக்ஷி {தாடகை}, கட்டுப்படுத்த முடியாதவனும், மாரீசன் என்ற பெயரைக் கொண்டவனுமான புத்திரனைப் பெற்றாள். அவன் சாபத்தால் ராக்ஷசனானான்.(9)

[1] பாலகாண்டம் 20:25,26ல் மாரீசனும், ஸுபாஹுவும் சுந்த உபசுந்தர்களின் மகன்கள் என்று விஷ்வாமித்ரரே  குறிப்பிடுவதாக வருகிறது.  இந்த சர்க்கத்தில் சுந்தன், ஜம்பன் (அ) ஜர்ஜனின் மகனாகச் சொல்லப்படுகிறான். மஹாபாரதத்தில் சொல்லப்படும் சுந்தன் நிகும்பனின் மகனாவான்.  மஹாபாரதம் ஆதிபர்வம் 214:25ல் சுந்தனும், உபசுந்தனும் திலோத்தமைக்காக ஒருவரையொருவர் அழித்துக் கொண்டனர் என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 10ம் சுலோகத்தில், சுந்தன் அகஸ்தியரால் கொல்லப்பட்டான் என்று வருகிறது. இந்தப் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால், நிகும்பனுக்கு ஜம்பன் (அ) ஜர்ஜன் என்ற பெயர் இருந்திருக்கலாம் என்றும், அகஸ்தியரின் சாபத்தால் திலோத்தமையின் மூலம் சுந்தனும், உபசுந்தனும் ஒருவரை ஒருவர் கொன்று ஒழிந்திருக்கலாம் என்று பொருள் கொள்ளலாம். மேற்கண்ட கூற்று பொருந்தவில்லையெனில், இந்த சுந்தனும், மஹாபாரத சுந்தனும் வெவ்வேறானவர்களாகவே இருக்க வேண்டும்.

ராமா, {அகஸ்தியரால் தன் கணவன்} சுந்தன் கொல்லப்பட்ட போது, தாடகையும், அவளது புத்திரனும் {மாரீசனும்} ரிஷிஸத்தமரான {ரிஷிகளில் உயர்ந்த} அகஸ்தியரைத் தாக்கி அழிக்க இச்சித்தனர்.(10) அவள் பெரும்பரபரப்புடன் கர்ஜித்தபடியே அவரை பக்ஷிப்பதற்காக {உண்பதற்காக} விரைந்து சென்றபோது, பகவானும், ரிஷியுமான அகஸ்தியர் தம் மீது அவர்கள் பாய இருப்பதைக் கண்டு, "நீ ராக்ஷசனாவாயாக" என்று மாரீசனிடம் சொன்னார்[2].(11,12அ) பெருங்கோபமடைந்த அகஸ்தியர், தாடகையையும் சபிக்கும் வகையில், "மஹா யக்ஷியே, நீ இந்த வடிவை இழந்து, உருகுலைந்த வடிவத்தையும், சிதைந்த முகத்தையும், பயங்கரத் தோற்றத்தையும் கொண்ட புருஷாதீயாவாயாக {மனிதரை உண்பவளாவாயாக}" என்றார்.(12ஆ,13)

[2] 9ம் சுலோகத்தில் சொல்லப்படும் சாபம் இதுவே.

சாபத்தால் உண்டான வெறியுடன் கூடிய அவள் {தாடகை}, கோபத்தில் மூழ்கியவளாக அகஸ்தியர் நடமாடிய இந்த மங்கல தேசத்தைப் பாழடையச் செய்கிறாள்.(14) ராகவா {ராமா}, அவள் துர்நடத்தை கொண்டவளாகவும், பரம பயங்கரியாகவும், துஷ்ட பராக்கிரமம் கொண்டவளாகவும் இருக்கிறாள். கோக்களின் {பசுக்களின்} நன்மைக்காகவும், பிராமணர்களின் நன்மைக்காகவும் இந்த யக்ஷியை {தாடகையை} நீ அழிப்பாயாக.(15) ரகுனந்தனா {ராமா}, சாபத்தில் உறைந்திருக்கும் அவளை முழுமையாக அழிப்பாயாக. மூவுலகங்களிலும் உன்னைத் தவிர வேறொருவனால் அவளை அழிக்க இயலாது.(16) நரோத்தமா {மனிதர்களில் சிறந்த ராமா}, ஸ்திரீ வதம் குறித்த கருணை காரியத்திற்கு ஆகாது. ராஜசுதனான {அரசனின் மகனான} நீ சதுர்வர்ணங்களுக்கும் நன்மையை விளைவிக்கும் காரியத்தைச் செய்ய வேண்டும்.(17) ரக்ஷதன் {பாதுகாவலனான மன்னன்}, அது கொடிதாகவோ, கொடுமையற்றதாகவோ, பாவத்தை விளைவிப்பதாகவோ, களங்கத்தைத் தருவதாகவோ இருந்தாலும் பிரஜைகளை ரக்ஷிக்கும் {மக்களைக் காக்கும்} காரணத்துக்காக எப்போதும் அதைச் செய்ய வேண்டும்.(18)

காகுத்ஸா {காகுத்ஸனின் வழித்தோன்றலே ராமா}, ராஜ்ய பாரத்தில் நியமிக்கப்பட்டவர்கள், ஸநாதன தர்மத்திற்காக {தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் கடமைக்காக} தர்மம் காணப்படாத அதர்மியை அழிக்க வேண்டும்.(19) நிருபா {மக்களைப் பாதுகாப்பவனே ராமா}, பூர்வத்தில் பிருத்வியை {பூமியை} அழிக்க விரும்பியவளும், விரோசனன் மகளுமான மந்தரையைச் சக்ரன் {இந்திரன்} அழித்தான் என்று கேள்விப்படுகிறோம்.(20) இராமா, பூர்வத்தில் இந்திரனற்ற உலகத்தை விரும்பியதற்காக பதிவிரதையும், பிருகுபத்தினியுமான காவியமாதாவை {சுக்கிரரின் அன்னையை} விஷ்ணு அழித்தான்[3].(21) இந்த மஹாத்மாக்களும், புருஷஸத்தமர்களும் {மனிதர்களில் உயர்ந்தவர்களும்}, இராஜபுத்திரர்கள் பிறரும் அதர்மிகளாக இருந்த நாரியைகள் {பெண்கள்} பலரைக் கொன்றிருக்கின்றனர்" {என்றார் விஷ்வாமித்ரர்}[4].(22)

[3] இந்தக் கதை தேவிபாகவதத்தில் உள்ளது. அது பின்வருமாறு: "ஒரு காலத்தில் நேர்ந்த தேவாசுரப் போரில் அசுரகுருவான சுக்ரர் சிவனின் உதவிய நாடினார். அவர் கைலாச மலையில் தவம் செய்து கொண்டிருந்ததால் அசுரர்கள் பாதுகாப்பற்றவர்களானார்கள். அசுரர்கள் சுக்ரரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அப்போது அந்த ஆசிரமத்தில் ஆடவர் எவரும் இல்லை. அதிதி தர்மத்தின்படி {விருந்தோம்பலின்படி} காவியமாதாவும் அவர்களுக்குப் பல மாதங்கள் பாதுகாப்பை அளித்தாள். அந்த ஆசிரமம் இந்திரனாலும் ஊடுருவப்பட முடியாததாக இருந்தது. தேவர்கள் பரிந்து கேட்டும் காவியமாதா அந்த அசுரர்களை ஒப்படைக்க மறுத்து, தேவர்கள் அனைவரையும் தன் சக்தியால் உறங்கச் செய்தாள். விஷ்ணு தன் சுதர்சனச் சக்கரத்தை ஏவினான். அஃது ஆசிரமத்தின் பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து காவியமாதாவின் தலையை அறுத்தது. ஆசிரமத்திற்குத் திரும்பிவந்த பிருகு, விஷ்ணுவைச் சபித்தார். அந்த ஸ்திரீஹத்தியின் காரணமாகவே விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தான். சுக்ராசாரியர் இதை அறிந்ததும் அசுரலோகத்தில் முற்றிலும் விஷ்ணு வழிபாட்டைத் தடை செய்தார். பிருகு தமது தவச் சக்தியால் கமண்டலத்தில் இருந்து நீரைத் தெளித்து காவியமாதாவை மீண்டும் உயிர்ப்பித்தார்".

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது இராமாயணத்தில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாகும். பெண்களைக் கொல்வது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பெண்ணைக் கொன்றது தர்மமா இல்லையா என்பதே அவ்விவாதம். பெண்வடிவத்தில் இருந்தாலும் அதர்மியைக் கொல்வதால் தர்மத்திற்கு எந்தத் தீங்கும் நேராது என்பது இதற்கு பதிலாகச் சொல்லப்படுகிறது. பல அப்பாவிகளைக் காப்பதற்காக ஒரு தீயவரை அழிப்பது மன்னர்களுக்குப் பாவத்தை அளிக்காது என்று விஷ்ணுபுராணம் 1:13:73,74ல் சொல்லப்பட்டுள்ளது. தற்காப்பின்றி இருக்கும் பல மக்களுக்காக்க அதர்மியான ஓர் ஆணையோ, பெண்ணையோ கொல்வது சாத்திரப்படியும் மன்னனின் கடமையே ஆகும்" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 20, 21 ஸ்லோகங்களும் அதையே வலியுறுத்துகின்றன.

பாலகாண்டம் சர்க்கம் –25ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Tuesday, 17 August 2021

தாடகை வனம் | பால காண்டம் சர்க்கம் - 24 (32)

Tataka Vana | Bala-Kanda-Sarga-24 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கங்கையின் மறுகரையில் உள்ள கொடுங்காட்டுக்கு ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்துச் சென்ற விஷ்வாமித்ரர்; தாடகையின் இயல்பைச் சொல்லி அவளைக் கொல்ல ராமனை ஆயத்தம் செய்தது...

Rama and Lakshmana with Vishwamitra

பகைவரைக் கொல்பவர்களான அவர்கள் {ராமனும், லக்ஷ்மணனும்} விடியலில் காலைச் சடங்குகளைச் செய்துவிட்டு, விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு நதி தீரத்தை {ஆற்றங்கரையை} அடைந்தனர்.(1) மஹாத்மாக்களும், விரதங்களில் விழிப்போடுள்ளவர்களுமான {ஆசிரம} முனிவர்கள் அனைவரும் அழகிய நாவம் {ஓடம்} ஒன்றை அருகில் கொண்டு வந்தனர். பிறகு அவர்கள் விஷ்வாமித்ரரிடம்,(2) "ராஜபுத்திரர்களை முன்னிட்டுக் கொண்டு இந்த ஓடத்தில் ஏறுவீராக. செழித்த வழியில் கடந்து செல்வீராக. கால விரயம் செய்ய வேண்டாம்" என்றனர்.(3)

விஷ்வாமித்ரர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு அந்த ரிஷிகளுக்குப் பிரதிபூஜை செய்தபிறகு, சாகரம் செல்லும் சரிதத்தில் {கடலை அடையும் ஆற்றில்} அவ்விருவருடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} கடந்து சென்றார்.(4) ராமன், நீரோடையின் மத்தியை அடைந்ததும், நீரோட்டத்தால் பெருகும் சத்ததைக் கேட்டான். தம்பியுடன் கூடியவனான அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, அந்தச் சத்தத்தை நிச்சயித்துக் கொண்டு அதை அறிய விரும்பினான்.(5,6அ) ஆற்றின் மத்தியில் இருந்த ராமன், அந்த முனிபுங்கவரிடம் {விஷ்வாமித்ரரிடம்}, "நீரானது ஒன்றோடொன்று மோதுவதைப் போல எழும் இந்தப் பேரொலி என்ன?" {என்று கேட்டான்}.(6ஆ,7அ)

குதூகலத்துடன் கூடிய ராகவனின் {ராமனின்} சொற்களைக் கேட்ட அந்த தர்மாத்மா {விஷ்வாமித்ரர்}, அந்தச் சத்தத்தின் காரணத்தை நிச்சயித்துச் சொல்லத் தொடங்கினார்.(7ஆ,8அ) {அவர்}, "நரஷார்தூலா {மனிதர்களில் புலியே}, கைலாச பர்வதத்தில் பிரம்மன் தன் மனத்தால் ஒரு பரம ஸரஸ்ஸை {பெருந்தடாகத்தை} அமைத்தான். எனவே, அது மானஸ ஸரஸ்ஸானது {என்றழைக்கப்பட்டது}.(8ஆ,9அ) அதிலிருந்து {அந்த மானஸ தடாகத்தில் இருந்து} தங்குதடையின்றிப் பாயும் சரசம் {சரயு ஆறு} அயோத்தியைச் சூழ்கிறது[1].{9ஆ} சரஸ்ஸில் தோன்றியதால் அது சரயு ஆனது. பிரம்ம சரஸ்ஸில் {பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த மானஸத் தடாகத்தில்} இருந்து பாய்ந்து, புண்ணியமான ஜாஹ்னவியை {கங்கையை} அடையும்போது, நீர் மோதலால் இந்தக் குறிப்பிட்ட சத்தம் உண்டாகிறது. எனவே ராமா, மன ஊக்கத்துடன் நீ {இந்த ஆறுகளை} வணங்குவாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(10,11அ)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஸரயூநதி ப்ரஹ்மாவினாற் படைக்கப்பட்ட மாநஸஸரஸ்ஸினின்றும் பெருகி அயோத்யா நகரத்திற்கு மேற்குத் திசையில் ஆரம்பித்து அப்பட்டணத்திற்கு வடக்குத் திசையின் வழியாக அந்நகரத்திற்குக் கிழக்கே வந்து அங்க தேசத்தில் பெருகிப் போகின்ற கங்கா நதியோடு கலக்கின்றது. அவ்விரண்டு நதிகளுங் கலக்குமிடத்தில் ஸ்தாணுவின் {உருத்திரனின்} ஆச்ரமம் இருக்கின்றது. ஆகையால் ஸரயூ நதியுடன் கலந்த கங்கா நதியைத் தாண்டும் பொழுது, ஸரயூ நதி மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுந்து வருகையால் அந்தப்ரவாஹத்தில் த்வநி உண்டாகின்றதென்றுணர்க. இவ்வொலியேதென்று ராமன் வினவ, இது மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுந்து பாயும் ஸரயூ நதியின் ப்ரவாஹத்தில் உண்டானதென்று சொல்ல வேண்டியிருக்க, அந்நதியின் பிறப்பைச் சொன்னது அங்கு நமஸ்காரஞ் செய்கைக்காகவென்று கண்டு கொள்வது" என்றிருக்கிறது.

அதிதார்மீகர்களான அவ்விருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, அவற்றை {அந்த ஆறுகளை} வணங்கி தக்ஷிண தீரத்தை {தென் கரையை} அடைந்து லகுவாக மேலும் தொடர்ந்து சென்றனர்.(11ஆ,12அ) ஐக்ஷவாகனும் {இக்ஷ்வாகு குலத்தவனும்}, நரவரனின் {மனிதர்களில் சிறந்த தசரதனின்} மகனுமான அவன் {ராமன்}, கோரமாகத் தெரிவதும், எவராலும் அடையப்படாததுமான ஒரு வனத்தைக் கண்டு, அந்த முனிபுங்கவரிடம் {விஷ்வாமித்ரரிடம்} கேட்டான்:(12ஆ,13அ) "அஹோ, இந்த வனம் நுழைய முடியாததாக இருக்கிறது. சில்வண்டுக்கூட்டங்கள், ஊனுண்ணும் கொடிய விலங்குகள், சகுனைகள் {கள்ளிக் காக்கைகள்} ஆகியவற்றின் கொடும் அரவம் இங்கே நிறைந்திருக்கிறது.(13ஆ,14அ) கடுங்குரலுடன் கீச்சொலியை வெளியிடும் பல வகை சகுனைகள், சிம்மங்கள், புலிகள், காட்டுப் பன்றிகள், யானைகள் ஆகியவற்றால் இஃது ஒளிர்கிறது.(14ஆ,15அ) தவம் {வெள்வேல்}, அஷ்வகர்ணம் {ஆச்சா}, அர்ஜுனம் {மருதம்}, வில்வம், துந்துகம், பாதளம் {இலந்தை}, பதரி {பாதிரி} மரங்கள் அடர்ந்திருக்கும் இந்தப் பயங்கரக் காடு யாது {இந்தக் காட்டின் பெயர் என்ன}" {என்று கேட்டான் ராமன்}.(15ஆ,16அ)

மஹாதேஜஸ்வியான மஹாமுனி விஷ்வமித்ரர், அவனிடம் {ராமனிடம்} சொன்னார்: "காகுத்ஸ்தா {காகுத்ஸனின் வழித்தோன்றலே} இந்தக் கொடிய வனத்தைக் குறித்து {நான் உனக்குச் சொல்கிறேன்} நீ கேட்பாயாக.(16ஆ,17அ) நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, "பூர்வத்தில் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மலதம், கரூசம்[2] என்ற பெரும் ஜனபதங்கள் இருந்தன.(17ஆ,18அ) ராமா, ஒரு காலத்தில் விருத்திர வதத்தின் போது, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {இந்திரன்}, பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டதால் மலமும், பசியும் அவனை முழுமையாக மூழ்கடித்தது.(18ஆ,19அ) தவத்தையே தனமாகக் கொண்ட ரிஷிகள், இந்திரனிடம் இருந்த அந்த மலத்தைக் கழித்துத் தூய்மைப்படுத்த {நீர் நிறைந்த} கலசங்களைக் கொண்டு அவனை நீராடச் செய்தனர்.(19ஆ,20அ) இந்தப் பூமியில், மஹேந்திரனின் சரீரத்தில் இருந்து மலமும், பசியும் வெளியேறியதும் தேவர்கள் மகிழ்ச்சியை அடைந்தனர்.(20ஆ,21அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மலதம் என்றால் மலத்தை {கழிவை} அழிப்பது என்று பொருள். மலம் என்று நேரடி பொருள் கொள்வது இங்கே தகாது. கரூசம் என்றால் பசியை நீக்குவது என்று பொருள். பசி இருக்கும் வரை மலமும் இருக்கும். இந்திரன் இறக்கும் ஆபத்தும் நேரும். பசி நீக்கப்பட்டால் மலம் இருக்காது. ஒரு காலத்தில் இந்த மாகாணங்கள் சொர்க்கத்திற்கு இணையாகப் பசியை நீக்குபவையாக இருந்தன. பின்பு தாடகையால் பூமியில் சொர்க்கம் எனும் அந்நிலை சிதைந்தது" என்றிருக்கிறது.

இந்திரன், மலத்தில் இருந்தும், பசியில் இருந்தும் விடுபட்டுத் தூய்மையடைந்ததும், மகிழ்ச்சியடைந்த அவன் இந்த இடங்களுக்கு உத்தம வரத்தை அளித்தான்:(21ஆ,22அ) "என் உடலின் மலத்தைத் தாங்கியதால் இந்த ஜனபதம் செழிப்படைந்து மலதம், கரூசம் என்று {என்ற பெயர்களில்} இந்த உலகில் புகழ் பெற்றிருக்கும்" {என்றான் இந்திரன்}.(22ஆ,23அ) பெரும் மதியுடைய சக்ரன் {இந்திரன்} அந்த தேசங்களைப் பூஜித்ததைக் கண்ட தேவர்கள், "நன்று, நன்று" என்று சொல்லி, பாகசாசனனை {பாகன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனைப்} புகழ்ந்தனர்.(23ஆ,24அ)

அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, ராமா, மலதமும், கரூசமும் தன தானியங்களுடன் கூடிய ஜனபதங்களாக நெடுங்காலம் இருந்தன.(24ஆ,25அ) பின்னர் ஒரு காலத்தில் காமரூபிணியும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளும்}, ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவளும், பெரும் மதியுடைய சுந்தனின் பாரியையும் {மனைவியும்}, தாடகை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு யக்ஷி {யக்ஷகன்னிகை} அங்கே தோன்றினாள். {ராமா} நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. சக்ர பராக்கிரமம் {இந்திரனைப் போன்ற ஆற்றலைக்} கொண்ட ராக்ஷசன் மாரீசன் அவளது மகனாவான்.(25ஆ-27அ) பருத்த தோள்களையும், பெரும் தலையையும், குகை போன்ற வாயையும், பெரும் வடிவத்துடன் கூடிய பேருடலையும் கொண்ட அந்த ராக்ஷசன் {மாரீசன்}, பிரஜைகளை {மக்களை} நித்தம் அச்சுறுத்துபவனாக இருந்தான்.(27ஆ,28அ)

Sarayu, Kamashrama, Tataka vana,

இராகவா {ராமா}, தீய நடை கொண்ட அந்தத் தாடகை, மலதம், கரூசம் என்ற இந்த ஜனபதங்களை நித்தம் அழித்து வருகிறாள்.(28ஆ,29அ) இந்த வழியைத் தடுத்துக் கொண்டிருக்கும் அவள், {இங்கிருந்து} ஒன்றரை யோஜனையில் {தொலைவில்} வசித்து வருகிறாள். எந்தக் காரணத்தால் இது தாடகையின் வனமானதோ, அதே காரணத்திற்காகவே இஃது அடையப்பட வேண்டும்[3].(29ஆ,30அ) தீய நடை கொண்ட அவளை உன் தோள்பலத்தினால் நீ கொல்ல வேண்டும். என் சொல் படி நீ இந்த தேசத்தை முட்களற்றதாக்க வேண்டும்.(30ஆ,31அ) இராமா, கோரமானவளும், பொறுத்துக் கொள்ள முடியாதவளுமான அந்த யக்ஷி {தாடகை}, யாரும் வர இயலாதபடி இந்தத் தேசத்தை அழித்துவிட்டாள்.(31ஆ,32அ) அந்த யக்ஷியால் இந்த மொத்த வனமும் எவ்வாறு அழிக்கப்பட்டுதோ அவ்வாறே அனைத்தையும் நான் உனக்குச் சொன்னேன்" {என்றார் விஷ்வாமித்ரர்}[4].(32ஆ,இ)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்திற்கு 'அந்தத் தாடகை வனம் எங்கிருக்கிறதோ அங்கே நாம் செல்ல வேண்டும்' என்றும் பொருள் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்டிருப்பது இந்த சுலோகத்திற்கான மற்றொரு பொருளாகும்" என்றிருக்கிறது.

[4] இந்தக் காவியத்தில் பயன்படுத்தப்படும் அடைமொழிகள் இப்போதிலிருந்து அதிகரிக்கும். அவற்றை அவசியமற்ற இட நிரப்பல்களாகக் கருதக்கூடாது. அவை அனைத்தும் மறைமுக அர்த்தங்களைக் கொண்டவை. அவற்றை உரைகளின் உதவியுடனேயே புரிந்து கொள்ள முடியும். இப்பணியில் மிகப் பெரிய உரைகளை உள்ளடக்க முடியாது என்பதால், உரையாசிரியர்களால் விளக்கப்பட்ட அடைமொழிகள் பலவற்றின் பொருள்களை இங்கே சேர்க்கவில்லை. இந்தப் புறக்கணிப்பு சாதாரண உரைநடையை எந்த வகையிலும் பாதிக்காது. உதாரணத்திற்கு முனிபுங்கர், நரஷார்தூலன் என்ற சொற்கள், முனிவர்களில் உயர்ந்தவர், மனிதர்களில் புலி என்ற பொருள்களைக் கொண்டவையாகும். சில உரைகளை நாடாமல், இவற்றின் அர்த்ததை வலிந்து பிழிந்து எடுக்க முனைவது பயனற்றது. அதே போல, இந்திரன், சந்திரன், சிம்மம், சார்தூலன், நாகன், ரிஷபன், புங்கவன் ஆகியவை வேற்றுமைச் சொற்களின் பின்னொட்டுகளாகச் சேர்க்கப்படும்போது அவை, சிறந்த, மிகச் சிறந்த, உன்னத என்ற பொருளைக் கொள்ளும். ஆனால் உரையாசிரியர்கள் அந்தந்தக் குறிப்பிட்ட இடங்களில் அந்தச் சொற்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்கிச் சொல்லியிருக்கின்றனர். உதாரணத்திற்கு தர்மாத்மா என்று ராமயாணத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அடைமொழிக்கு பல பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு: 1) வாழ்வையே தர்மமாகக் கொண்டவன், 2) தர்மனின் அவதாரமாக அவதரித்தவன், 3) தர்மத்தால் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவன், 4) தர்மமே வடிவானவன் என்று நிகண்டுகள் பகரும். ஆரண்ய காண்டத்தின் பல இடங்களில் வைதேஹி என்றும், மைதிலி என்றும் அழைக்கப்படுகிறாள். சில தகவல்கள் அந்த உரைகளில் கிடைக்கின்றன. உரைகள் கிடைக்கும்போதெல்லாம் வேண்டிய இடங்களில் அவற்றைக் குறிப்பிடவே செய்கிறோம். எனவே அர்த்தமில்லாத அர்த்தங்களை வலிந்து பிழிந்து எடுக்காமல் அவற்றைப் பண்டிதர்களின் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம். இப்பணியில் அந்தச் சிக்கல்களை உள்ளடக்க முடியாது என்பதால் இனிவரும் அடைமொழிகளை எளிமையாகவே சொல்லப் போகிறோம். சில இடங்களில் அவை புறக்கணிக்கவும் படலாம். படிக்கும் போது இவற்றைக் கருத்தில் கொண்டு படிப்பீராக" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பு நமது ராமாயாண ஆக்கத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே சேர்க்கப்படுகிறது. வலிந்து பொருள் கொண்டு நீட்டி முழக்குவதால் அசல் பதிப்பின் கச்சிதம் கெடும்.

பாலகாண்டம் சர்க்கம் –24ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை