Wings burnt | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் சிறகுகள் எரிந்தது எவ்வாறு என்பதையும், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதையும் முனிவர் நிசாகரரிடம் சொன்ன சம்பாதி...
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம் |
{அங்கதனிடம் சம்பாதி}, “அப்போது, சாகசமாகச் செய்யப்பட்டதும், செய்வதற்கரியதுமான அந்த பயங்கரமான கர்மத்தையும், சூரியனைப் பின்தொடர்ந்து சென்றது என, அனைத்தையும் முனிவரிடம் {நிசாகரரிடம் பின்வருமாறு} சொன்னேன்:(1) “பகவானே, புண்களுடனும், லஜ்ஜையுடனும் {வெட்கத்துடனும்}, கலங்கிய இந்திரியங்களுடனும் கூடியவனாகச் சோர்ந்திருக்கும் எனக்கு நெடும்வசனம் பேசும் சக்தியில்லை.(2) நானும், ஜடாயுவும் ஆணவத்தால் மோஹமடைந்து, பராக்கிரமத்தை அறிய விரும்பும் போட்டியில், தூரமாக ஆகாயத்தில் பாய்ந்து சென்றோம்.(3) கைலாச சிகரத்தில் இருந்த முனிவர்களின் முன்னிலையில், ‘அஸ்த மஹாகிரிவரை ரவியை {சூரியனைப்} பின்தொடர்ந்து செல்வது’ என்ற பந்தயத்திற்குக் கட்டுப்பட்டோம்.(4)
ஒரே நேரத்தில் {வானத்தை} அடைந்த நாங்கள், மஹீதலத்தில் ரதச்சக்கரத்தின் பிரமாணத்தில் {பூமியில் தேர்ச்சக்கரத்தின் அளவில்} நகரங்களைத் தனித்தனியாகப் பார்த்தோம்.(5) சிலவேளைகளில் வாத்திய கோஷங்களுடனும், சிலவேளைகளில் பூஷணங்களின் {ஆபரணங்களின்} மெல்லொலிகளுடனும் பாடும், செவ்வாடை உடுத்திய அங்கனைகள் {பெண்கள்} பலரைப் பார்த்தோம்.(6) ஆகாசத்தில் துரிதமாக எழுந்து, ஆதித்யனின் பாதையை அனுசரித்த நாங்கள், புல்வெளித்தரை போல அந்த வனத்தைப் பார்த்தோம்.(7) உயரமான சைலங்களுடன் கூடிய பூமி சிறுகற்களால் மறைக்கப்பட்டதைப் போலவும், ஆறுகளுடன் கூடிய வசுந்தரை {நிலம்} சூத்திரங்களால் பின்னப்பெற்றதை {நூல்களால் சுற்றப்பட்டதைப்} போலவும் தெரிந்தன.(8) பூதலத்தில் ஹிமவானும் {இமயமும்}, விந்தியமும், மஹாகிரியான மேருவும், ஜலாஷயங்களில் நாகங்களை {நீர்க்கொள்ளிடங்களில் / மடுக்களில் யானைகளைப்} போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(9)
பிறகு, நாங்கள் இருவரும் தீவிர வியர்வையும், களைப்பும், பயமும் அடைந்தபோது, மோஹமும் {மயக்கமும்}, பயங்கரமான மூர்ச்சையும் {நினைவிழக்கும் நிலையும்} எங்களை ஆட்கொண்டன.(10) யாம்ய {தென்} திக்கும் தெரியாமல், ஆக்நேயீயும் {தென்கிழக்கும்} தெரியாமல், வாருணீயும் {மேற்கும்} தெரியாமல், உலகம் யுகாந்தத்தில் அக்னியால் எரிக்கப்பட்டு அழிவதைப் போன்ற நிலையை அடைந்தோம்.(11) மனம் நிலைகுலைந்தாலும், கண்களின் சார்பை அடையும் மஹத்தான யத்னத்துடன் {பெரும் முயற்சியுடன்} கூடிய நான், மீண்டும் மீண்டும் மனத்தையும், கண்களையும் அதில் {பார்வையை அடைவதில்} நிலைக்கச் செய்தேன்.{12} மீண்டும் மஹத்தான யத்னத்துடன் பாஸ்கரனை நேரடியாக நோக்கினேன். பாஸ்கரன், பிருத்வியின் பிரமாணத்திற்குத் துல்லியனாக எங்களுக்குப் புலப்பட்டான் {சூரியன், பூமிக்கு இணையான அளவில் எங்களுக்குத் தெரிந்தான்}.(12,13)
ஜடாயு, {என்னைக்} கேட்காமல் கொள்ளாமல் மஹீயை {பூமியை} நோக்கி இறங்கியபோது, அவனைக் கண்ட நான், துரிதமாக ஆகாசத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.(14) என் சிறகுகள் இரண்டால் மறைக்கப்பட்டதால், ஜடாயு அதிகம் எரியவில்லை. அங்கே பிரமாதமாக வாயு பாதையில் இருந்து இறங்கிய நான் முழுமையாக எரிக்கப்பட்டேன்.(15) அந்த ஜடாயு, ஜனஸ்தானத்தில் விழுந்தான் என்று யூகிக்கிறேன். நானோ எரிந்த சிறகுகளுடன் ஜடமாக்கப்பட்டவனாக விந்தியத்தில் விழுந்தேன்.(16) இராஜ்ஜியத்தையும், உடன்பிறந்தவனையும் {தம்பி ஜடாயுவையும்}, சிறகுகளையும், விக்கிரமத்தையும் இழந்த நான், எப்படியாவது மரிக்க வேண்டி, கிரி சிகரத்தில் இருந்து விழ விரும்பினேன்” {என்று நிசாகரரிடம் சொன்னேன்” என்றான் சம்பாதி}.(17)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |