Indrajith killed | Yuddha-Kanda-Sarga-090 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கையில் இருந்து வேறொரு தேரில் வந்த இந்திரஜித்; விபீஷணனைத் தாக்கியது; அவனது குதிரைகளைக் கொன்ற விபீஷணன்; இலக்ஷ்மணனிடம் வீழ்ந்த இந்திரஜித்...
அஷ்வங்கள் {குதிரைகள்} கொல்லப்பட்டதால், மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் {வலிமைமிக்க இரவுலாவியான இந்திரஜித்} பூமியில் நின்றான். பரம குரோதத்தில் எரிந்த இந்திரஜித் தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(1) தனு தரித்தவர்களான அவ்விருவரும், விஜயத்திற்காக வனத்தைவிட்டு வெளிப்படும் இரு கஜங்களை {யானைகளைப்} போல, அன்யோன்யம் கொல்லும் நோக்கம் அதிகம் கொண்டவர்களாக தங்கள் கணைகளை ஏவினர்.(2) எங்குமிருந்து விரையும் அந்த ராக்ஷசவனௌகசர்கள் {ராக்ஷசர்களும், வனத்தில் வசிப்பவர்களான வானரர்களும்}, அன்யோன்யம் {ஒருவரையொருவர்} கொன்று, யுத்தத்தில் தங்கள் தலைவர்களைக் கைவிடாதிருந்தனர்.(3)















