Large form | Sundara-Kanda-Sarga-37 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைப் பின்னே ஏற்றிக் கொண்டு இராமரிடம் செல்வதாகச் சொன்ன ஹனுமான்; சீதையின் சந்தேகம்; பெரும் வடிவை ஏற்ற ஹனுமான்; தன் கணவனை லங்கைக்கு அழைத்து வரும்படி சீதை வேண்டியது...
பூர்ணச்சந்திரனுக்கு ஒப்பான முகத்துடன் கூடிய அந்த சீதை, ஹனுமந்தன் சொன்னதைக் கேட்டு, தர்ம, அர்த்த சகிதமான இந்த சொற்களை ஹனுமந்தனிடம் சொன்னாள்:(1) “வானரா, ‘ராமர் வேறு எதையும் மனத்தில் கொள்ளாமல் இருக்கிறார்’ என்றும், ‘சோகத்தில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்’ என்றும் அம்ருதமும், விஷமும் கலந்து பேசுகிறாய்.(2) கிருதாந்தமானது {வினைப்பயனானது / விதியானது}, மிக விஸ்தீரணமான ஐஷ்வர்யத்திற்கோ, அதிபயங்கர விசனத்திற்கோ உள்ளே ஒரு புருஷனை {மனிதனைக்} கயிறு போல் கட்டி இழுக்கிறது.(3) பிலவகோத்தமா {தாவிச் செல்பவர்களில் உத்தமனே}, பிராணிகளால் விதியை நிச்சயம் தவிர்க்கமுடியாது. சௌமித்ரியும் {லக்ஷ்மணரும்}, நானும், ராமரும் விசனத்தால் கலங்கிப்போயிருப்பதைப் பார்.(4)
