Makaraksha killed | Yuddha-Kanda-Sarga-079 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மகராக்ஷனின் கணைகளால் அச்சமடைந்த வானரர்கள்; மகராக்ஷனின் தேரை நொறுக்கி, குதிரைகளைக் கொன்று, அவனையும் கொன்ற ராமன்...
மகராக்ஷன் வருவதைக் கண்ட அந்த சர்வ வானரபுங்கவர்களும் {வானரர்களில் முதன்மையானோர் அனைவரும்}, யுத்த ஆவலுடன் தாவிச் சென்று, தங்கள் நிலைகளை அடைந்து ஆயத்தமாக இருந்தனர்.(1) அப்போது, தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் {நடந்ததைப்} போல, ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் வகையில், பிலவங்கமர்களுக்கும், நிசாசரர்களுக்கும் {தாவிச் செல்பவர்களான வானரர்களுக்கும், இரவுலாவிகளான ராக்ஷசர்களுக்கும்} இடையில் மஹத்தான யுத்தம் நேர்ந்தது.(2) பிறகு, கபிநிசாசரர்கள் {குரங்குகளும், இரவுலாவிகளும்} விருக்ஷங்கள், சூலங்களை ஏவியும், கதைகள், பரிகங்களை ஏவியும் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} துன்புறுத்தினர்.(3) அந்த நிசாசரர்கள், சக்தி, கட்கம் {வேல், வாள்}, கதை, குந்தம், தோமரங்களாலும், பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, பிந்திபாலங்களாலும் தாக்கினர்.{4} வேறு சில ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்}, பாசங்கள் {பாசக்கயிறுகள்}, முத்கரங்கள், தண்டங்கள் {தடிகள்}, மண்வெட்டிகள் ஆகியவற்றாலும் கபிசிம்மங்களை {குரங்குகளில் சிங்கங்களை} அழித்தனர்.(4,5)

