Reproach of Sita | Aranya-Kanda-Sarga-53 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கண்டித்து, மன்றாடி, ஏற்படப் போகும் பயங்கர விளைவுகளைச் சொல்லி அச்சுறுத்திய சீதை...
ஜனகாத்மஜையான மைதிலி {சீதை}, வானத்தில் உயர்ந்து ஏறுபவனை {ராவணனைக்} கண்டு, பரம கலக்கத்தையும், மஹத்தான பயத்தையும், துக்கத்தையும் அடைந்தாள்.(1) சீதை கடத்தப்பட்ட போது, சினத்தால் தாமிரம் போலான கண்களில் கண்ணீர் சிந்தி அழுதபடியே, பயங்கர கண்களைக் கொண்ட ராக்ஷசாதிபனிடம் பரிதாபகரமாக இதைச் சொன்னாள்:(2) "நீசா, ராவணா, யாருமில்லாதவளாக {என் தனிமையை} அறிந்து, என்னைத் திருடிக் கொண்டு ஓடும் உன்னுடைய இந்த கர்மத்திற்காக நீ வெட்கப்படவில்லையா?(3) துஷ்டாத்மாவே, கடத்த இச்சிக்கும் கோழையான நீயே, நிச்சயம் மிருக ரூபத்திலான {மான் வடிவிலான} மாயையால் என் பர்த்தாவை {கணவரை} அப்புறப்படுத்தி இருக்கிறாய்.(4) என்னைக் காக்கப் போராடியவரும், என் மாமனாரின் பழைய சகாவுமான கிருத்ரராஜா {கழுகு மன்னன் ஜடாயு} உண்மையில் வீழ்ந்துவிட்டார்.(5)
இராக்ஷசாதமா {இழிந்த ராக்ஷசா}, உன் பரம வீரியத்தைக் காட்டிவிட்டாய். பெயரைக் கேட்கச் செய்த உன்னால் யுத்தத்தில் நான் வெல்லப்படவில்லை[1].(6) நீசா, பிறர் ஸ்திரீயை யாருமில்லாத போது கடத்தும் இத்தகைய கேவலமான கர்மத்தைச் செய்துவிட்டு, எவ்வாறு லஜ்ஜை {நாணம்} இல்லாதிருக்கிறாய்?(7) வலிமையெனத் தற்புகழ்ந்து கொள்ளும் உன் செயலை மனிதத் தன்மையற்றதாக, தர்மமற்றதாக, இழிவானதாகவே உலக புருஷர்கள் சொல்வார்கள் {தூற்றுவார்கள்}.(8) நீ அப்போது சொன்ன உன் வலிமைக்கும், தைரியத்திற்கும் ஐயோ. உலகில் உன் குலம் வருந்தத்தக்க இத்தகைய உன் நடத்தைக்கும் ஐயோ.(9) இவ்வாறு வேகமாக நீ ஓடுவதால் என்ன செய்துவிட முடியும்? ஒரு முஹூர்த்தம் காத்திருந்தாலும் நீ ஜீவனுடன் திரும்பிப் போக மாட்டாய்.(10)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ், வி.வி.சுப்பாராவ-பி.கீர்வானி பதிப்புகளில் மேற்கண்டவாறே இருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "இராக்ஷசர்களில் இழிந்தவனே, உன் வலிமை மகத்தானதாகக் காணப்பட்டது; உன் பெயரை மட்டுமே சொல்லி என்னைக் கடத்திவந்தாயேயன்றி போரில் என்னை வெல்லவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "இராக்ஷசர்களில் இழிந்தவனே, உண்மையில் உன் மகத்தான வீரம் காணப்பட்டது. நம்பிக்கை என்று அறியப்பட்ட போரில் மட்டுமே நீ என்னை வென்றாய்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இராக்கதப்பதரே, உனது வீர்யம் மிகச் சிறந்ததாகவே காணப்படுகிறது. உன்னால் பெயரைக் கூறி, போர் செய்து நான் ஜயிக்கப்பட்டேனல்லவா" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ மிகச் சூரன் போலும்; ஆகிலும், இவ்வண்ணம் கபடம் செய்யாமல் யான் ராவணனென்றுரைத்து எதிரில் நின்று என் பர்த்தாவுடன் போர் செய்து வெற்றி கொண்டு என்னை எடுத்து வருவாயாகில், சூரனே யாகுவாய்; இவ்வண்ணம் என்னைக் களவு செய்தும் நாணுகின்றிலையே?" என்றிருக்கிறது.
பார்த்திப புத்திரர்கள் இருவரது பார்வையின் பாதையில் வந்தால், நீயும், உன் சைனியத்தாரும் ஒரு முஹூர்த்தமும் ஜீவிக்கும் சமர்த்தராக மாட்டீர்கள்[2].(11) வனத்தில் எரியும் அக்னியை ஸ்பரிசிக்கும் பறவையைப் போலவே நீயும் அவ்விருவருடைய சரங்களின் ஸ்பரிசத்தைப் பொறுத்துக் கொள்ளவல்லனல்ல.(12) இராவணா, நல்லவனாக, ஆத்மாவுக்கான பத்தியத்தை {உனக்கான நன்மையைச்} செய்து கொள்வாயாக. என்னை விடுவிப்பதே நல்லது. நீ என்னை விடவில்லையென்றால், என்னை ஒடுக்கியதில் கோபமடையும் என் பதி {கணவர் ராமர்}, தன்னுடன் பிறந்தவருடன் {லக்ஷ்மணருடன்} சேர்ந்து உனக்கான நாசத்தை விதிப்பார்.(13,14அ) நீசா, எந்த வியவஸாயத்தால் என்னை நீ பலவந்தமாகக் கடத்த இச்சிக்கிறாயோ, அந்த வியவஸாயம் உனக்கு அர்த்தமற்றதாகவே விளையும்[3].(14ஆ,15அ) தேவனுக்கு ஒப்பான பர்த்தாவானவரை {ராமரைப்} பார்க்காமல், சத்ருவின் வசப்பட்டவளாக நீண்ட காலம் பிராணனைத் தரித்திருக்க நான் துணிய மாட்டேன்.(15ஆ,16அ)
[2] பூமியின் தலைவரான தசரதரின் மகன்கள் இருவருடைய {ராமலக்ஷ்மணரின்} பார்வையில் அகப்பட்டால், நீயும், உன் சைனியத்தாரும் ஒரு முஹூர்த்த காலமும் உயிர்வாழவல்லவராக மாட்டீர்கள்.
[3] "எந்த நோக்கத்தைச் செயல்படுத்த என்னை நீ பலவந்தமாகக் கடத்த விரும்புகிறாயோ அந்த நோக்கத்திற்கான உன் செயல் பொருளற்றதாகவே முடியும்" என்பது இங்கே பொருள். தர்மாலயப் பதிப்பில், "நீ எந்த எண்ணத்தால் என்னை பலாத்காரமாய் திருடிச் செல்ல துணிந்திருக்கிறாயோ, அற்ப, உனது அந்த பிரயாசை பிரயோஜனமற்றதாக ஆகப்போகிறது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ என்ன எண்ணங்கொண்டு என்னை எடுத்துக் கொண்டுடோடுகின்றனையோ? அந்த எண்ணம் ஒருகாலும் நிறைவேறாதென வுணர்க" என்றிருக்கிறது.
ஒரு மனிதன், மிருத்யு காலத்தில் {சாகும் வேளையில்}, விபரீதமானதை சேவிப்பதைப் போலவே, உன் ஆத்மாவுக்கான பத்தியத்தையோ {உன் நலத்தையோ}, நன்மையையோ நிச்சயம் நீ கருத்தில் கொள்ள மாட்டாய்.(16ஆ,17அ) இறக்கப் போகும் மனிதர்கள் யாவரும், எது பத்தியமானதோ {நலத்தை விளைவிப்பதோ}, அதை விரும்பமாட்டார்கள். இப்போது நீ உன் கண்டத்தில் {கழுத்தில்} சுற்றியிருக்கும் காலபாசத்தைக் காணாமல் இருக்கிறாய்.(17ஆ,18அ) தசானனா {பத்து முகத்தானே}, இந்த பய ஸ்தானத்திலும் {பயப்பட வேண்டிய இந்த இடத்திலும்} நீ பயப்படாமல் இருக்கிறாய். எனவே, ஹிரண்யமயமான மரங்களை நன்றாகப் பார்க்கிறாய் என்பது உண்மையில் வெளிப்படையாகத் தெரிகிறது.(18ஆ,19அ) இராவணா, உதிர ஓடைகள் பாயும் கோரமான வைதரணீ நதியையும், பயங்கரமான வாள்களையே இலையாகக் கொண்ட வனங்களையும் நீ பார்ப்பாய்.(19ஆ,20அ) புடம்போட்ட காஞ்சன புஷ்பத்தாலும், சிறந்த வைடூரிய இலைகளாலும், கூரிய இரும்பு முட்களாலும் நிறைந்த சால்மலியை {முள்ளிலவம் மரத்தை} நீ தரிசிப்பாய்.(20ஆ,21அ)
கருணையற்றவனே, மஹாத்மாவானவருக்கு {ராமருக்கு} இத்தகைய இழிவைச் செய்ய விரும்பிய நீ, விஷம் பருகியவனைப் போல நீண்ட காலம் நிலைத்திருக்க மாட்டாய்.(21ஆ,22அ) இராவணா, நீ தவிர்க்க முடியாத காலபாசத்தில் கட்டுண்டிருக்கிறாய். மஹாத்மாவான என் பர்த்தாவிடம் செல்லாமல் எங்கே நீ அமைதியை அடையப் போகிறாய்?(22ஆ,23அ) உடன்பிறந்தவர் இல்லாமலேயே, போரில் நிமிஷாந்தர மாத்திரத்தில், பதினான்காயிரம் ராக்ஷசர்களைக் கொன்றவரும், சர்வ அஸ்திரங்களிலும் திறம்பெற்றவரும், பலமிக்க வீரருமான அந்த ராகவர், தன் இஷ்ட பாரியையை {விருப்பத்திற்குரிய மனைவியை} அபகரித்துச் செல்லும் உன்னை கூரிய சரங்களால் எவ்வாறு கொல்லாதிருப்பார்?" {என்றாள் சீதை}.(23ஆ-25அ)
இராவணனின் விலாவில் இருந்த வைதேஹி, பயத்தாலும், சோகத்தாலும் நிறைந்த இத்தகையவற்றையும் இன்னும் கூரியவற்றையும் சொல்லி பரிதாபகரமாக அழுது புலம்பினாள்.(25ஆ,இ) பெருந்துன்பத்துடன் அழுது புலம்பி, பல்வேறு வகையில் பரிதாபகரமாகப் பேசுகிறவளும், மனம் துடித்து, உடல் நடுங்கி தீனமடைந்த நிருபாத்மஜையுமான அந்த பாமினியை {சோர்வடைந்த இளவரசியான அந்த அழகிய பெண்ணை} அந்தப் பாவி இவ்வாறே கவர்ந்து சென்றான்.(26)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |