Showing posts with label கௌதமர். Show all posts
Showing posts with label கௌதமர். Show all posts

Monday, 4 October 2021

சாபவிமோசனம் | பால காண்டம் சர்க்கம் - 49 (22)

Curse Redemption | Bala-Kanda-Sarga-49 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரனின் வீரியத்தை மீட்டெடுத்த தேவர்கள்; அகலிகையை சாபத்தில் இருந்து விடுவித்த ராமன்; தன் மனைவியான அகலிகையை ஏற்றுக் கொள்ள வந்த கௌதமர்...

Curse redemption of Ahalya

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "கனியற்றவனான சக்ரன் {இந்திரன்}, பீதியடைந்த கண்களுடன் அக்னியை முன்னிட்டுக் கொண்டு தேவர்களிடமும், சித்தர்கள், கந்தர்வர்கள், சாரணர்களிடமும் பேசினான்:(1) "மஹாத்மாவான கௌதமரின் குரோதத்தைத் தூண்டி அவரது தவத்திற்கு இடையூறு விளைவித்ததால் உண்மையால் என்னால் ஸுர காரியம் {தேவ காரியம்} ஒன்று நிறைவேறியது[1].(2) அவரது குரோதத்தால் நான் கனியற்றவனானேன். அவளும் {அகலிகையும்} கடுமையாகச் சபிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாள். அவரது தவம் என்னால் கெடுக்கப்பட்டது.(3) எனவே, ரிஷிசங்கத்தாருடனும், சாரணர்களுடனும் கூடிய ஸுரவரர்கள் {சிறந்த தேவர்கள்} அனைவருக்கும் ஸுர காரியத்தைச் செய்த எனக்குக் கனிகள் கிடைக்கச் செய்வதே தகும்" {என்றான் இந்திரன்}.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திரன் என்பது ஒரு குறிப்பிட தகுதியை அடைவதால் சில மஹாத்மாக்களுக்கு ஒதுக்கப்படும் பதவியாகும். பருவ காலங்களையும், மழை, நிலநடுக்கம் முதலிய இயற்கையின் ஒவ்வொரு இயல்பையும் பராமரிக்கும் தலைமை அதிகாரியின் நிலை அது. வேள்விகள் நடைபெறும்போது அந்தச் சடங்கில் தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்கும் என்று தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தவம் செய்யும்போதோ அந்தப் பதவியில் இருப்பவனுக்குத் தன் பதவி பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் இந்திரன் அப்சரஸ்களை அனுப்புவது, துன்பங்களைத் தருவது எனத் தவம் செய்வோருக்கு இடையூறு விளைவிப்பான். இங்கே கௌதமர் இந்திரனின் நிலையை அடைய தவம் செய்யவில்லை. இருப்பினும் இந்திரனே அவ்வாறு நினைத்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.

அக்னி முதலிய தேவர்கள், சதகிரதம் {நூறு வேள்விகளைச்} செய்தவன் {இந்திரன்} சொன்னதைக் கேட்டு, மருத் கணங்கள் அனைவருடன் சேர்ந்து பித்ரு தேவர்களிடம்[2] சென்று பேசினர்:(5) "இந்த மேஷம் {செம்மறியாடு} விருஷணங்களுடன் {விரைகளுடன்} இருக்கிறது, சக்ரனோ விருஷணங்களற்றவனாக இருக்கிறான். மேஷத்தின் விருஷணங்களைக் கொய்து அவற்றைச் சக்ரனுக்குக் கொடுப்பீராக.(6) கனிகளற்றதாகச் செய்யப்படும் இந்த மேஷம், நிச்சயம் உங்களுக்கு முழுமையான நிறைவை அளிக்கும். உங்கள் நிறைவுக்காக இதைச் செய்யும் எந்த மானவருக்கும் {மனிதருக்கும்} குறைவற்ற பலன்களை நீங்கள் அபரிமிதமாக அளிப்பீராக[3]" {என்றான் அக்னி}.(7)

[2] பி.எஸ்.சுப்பிரமண்ய சாஸ்திரி அவர்களின் "வடமொழி நூல்வரலாறு" என்ற நூலில், "தேவர்கள் 'பித்ருதேவர்கள்' என்றும், 'கர்மதேவர்கள்' என்றும், 'தேவர்கள்' என்றும் பலவகையாகப் பிரிக்கப்பட்டனர் என அறியப்படுகிறது. பித்ருதேவர்கள் வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள் என மூவகைப்பட்டனர் என்பதும், அவர்கள் தேவர்களைக் காட்டிலும் குறைந்த பதவியில் இருந்தனர் என்பதும் அறியப்படுகிறது. ரிபுக்கள் ஸுதன்வ ரிஷியின் பிள்ளைகளாய்ப் பிறந்து தங்களின் செயல்களால் இந்திரனின் நட்பை அடைந்து தேவர்கள் ஆயினர்; அவர்கள் கர்மதேவர்களைச் சார்ந்தவர்கள். இந்திரன் முதலியோர் தேவர்கள் ஆவர். இவர்களின் தராதரம் தைத்ரீயோபநிஷத்தில் கூறியது காண்க" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பித்ருக்குள் என்பார் தேவர்களைப் போல மதிக்கப்படும் இறந்து போன மூதாதையரின் ஆன்மாக்களாவர். தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நிறைவேற்படுத்த சிதைக்கப்படாத  விலங்குகளை வேள்விகளில் அளிப்பதே வழக்கமாகும். இப்போதும் சில மனிதர்கள் சிதைக்கப்படாத செம்மறியாட்டையே பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தனர். பித்ருக்களும் அவற்றைப் புசிக்க இருந்த சமயத்தில், அக்னி முதலிய தேவர்கள் அந்தக் காணிக்கையில் ஒரு பகுதியை இந்திரனுக்காக விட்டுத் தரும்படி பித்ருக்களை வேண்டுகின்றனர். விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படத் தயங்கும் பித்ருக்களிடம், ஒரு வரம் போன்ற அறிவிப்பைச் சொல்லி அக்னிதேவன் விதிகளைத் தளர்த்துகிறான். "இனிமேல் பூமியில் உள்ள மானிடர்கள் விதை நீக்கப்பட்ட ஆட்டைக் காணிக்கை அளித்தாலும் பித்ருக்கள் முழுமையாக நிறைவடையலாம். பதிலுக்குப் பித்ருக்களும் அவர்களுக்கு {ஆட்டைக் காணிக்கையளித்த நபருக்கு} அபரிமிதமான பலன்களை அளிக்கலாம்" என்று விதி மாற்றப்படுகிறது" என்றிருக்கிறது.

கூடியிருந்த பித்ரு தேவர்கள் அக்னியின் வசனத்தைக் கேட்டு மேஷத்தின் விருஷணங்களைக் கொய்து சஹஸ்ராக்ஷனுக்கு அளித்தனர்.(8) காகுத்ஸ்தா {ராமா, காணிக்கையில் தங்கள் பங்கைப் பெற} வரும் பித்ரு தேவர்கள் அதுமுதல் கனிகளற்ற மேஷத்தையே புசிக்கின்றனர். அவற்றின் கனிகள் {இந்திரனைச்} சேர்கின்றன {பலன்கள் காணிக்கை அளிப்பவரைச் சேர்க்கின்றன}[4].(9) இராகவா, மஹாத்மாவான கௌதமரின் பிரபாவத்தாலும், தவத்தாலும் அது முதல் இந்திரன் மேஷவிருஷணன் ஆக்கப்பட்டான்.(10) எனவே மஹாதேஜஸ்வியே, புண்ணியக் கர்மங்களைச் செய்தவரின் {கௌதமரின்} ஆசிரமத்திற்குள் செல்வாயாக. பெரும் நற்பேறு பெற்றவளும், தேவரூபிணியுமான அந்த அஹல்யை {சாபத்திலிருந்து} ஈடேறட்டும்" {என்றார் விசுவாமித்ரர்}.(11)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விரைகளுடன் கூடிய செம்மறியாடுகள் காணிக்கையளிக்கப்பட்டால் பித்ருக்கள் அவற்றின் விரைகளை நீக்கி மற்றவற்றைப் புசிக்கின்றனர். ஒரு வெள்ளாட்டைக் காணிக்கையளித்தாலும், செம்மறியாடாகக் கருதி அதனையும் அவர்கள் புசிக்கிறார்கள். எனவே, எவ்வாறு காணிக்கை அளித்தாலும் காணிக்கை அளிப்பவன் பலன்களால் அருளப்படுகிறான், இந்திரன் விரைகளைப் பெறுகிறான்" என்றிருக்கிறது.

இலக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு, விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(12) பெரும் நற்பேறு பெற்றவளும், தவ ஒளியால் பிரகாசிப்பவளும், உலக உயிரினங்கள், ஸுரர்கள், அஸுரர்கள் அருகில் வந்தாலும் புலப்படாதவளும்,(13) தாதாவால் {படைப்பாளனால்} கவனமாக வடிவமைக்கப்பட்டவளும், திவ்யமாயமயியும் {தேவ மாயையால் உண்டாக்கப்பட்டவளைப் போன்றவளும்}, பனியாலும், மேகங்களாலும் மறைக்கப்பட்ட பூர்ணச் சந்திரனைப் போல ஒளிர்பவளும், நீரின் மத்தியில் காணப்பட முடியாத சூரிய ஒளியைப் போலப் பிரகாசிப்பவளும், புகையுடன் கூடிய தழல்களால் சூழப்பட்ட அங்கங்களைக் கொண்டவளும், தழல்விட்டெரியும் அக்னியைப் போன்ற நாவைப் பெற்றவளுமான அவளை {அகலிகையை} அவன் {ராமன்} கண்டான்.(14,15)

அவள் கௌதம வாக்கியத்தால் ராம தரிசனம் கிட்டும் வரை மூவுலகத்தினருக்கும் புலப்படாதவளாக இருந்தாள்.(16அ) சாபம் முடிவதற்கான நேரம் வந்ததும் அவளுக்கு அந்தத் தரிசனம் கிடைத்தது. அப்போது ராகவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்து {மதிப்புடன்} அவளது பாதங்களைத் தீண்டினர்.(16ஆ,17) அவளும் கௌதமர் சொன்னதை நினைவுகூர்ந்து, அவ்விருவரை வரவேற்று, சுயநினைவுடன் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றை {பாதங்களையும், கைகளையும் கழுவிக் கொள்வதற்கான நீரை} அந்த விருந்தினர்களுக்குக் கொடுத்து, விதிப்படியான கர்மங்களைச் செய்தாள். காகுத்ஸ்தனும் அவற்றை ஏற்றுக் கொண்டான்[5].(18)

[5] இங்கு கம்பராமாயணத்தில் ஒரு பாடலைக் காண்போம்:
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கிபோரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்

- கம்பராமாயணம் பாலகாண்டம் 475

"இவ்வாறு நிகழந்த வண்ணம் இனி இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் துன்பம் நீங்குமேயன்றி மற்றொரு துன்பமும் நேரக்கூடுமோ? மேக வண்ணம் கொண்ட அண்ணலே, அங்கே மைவண்ண அரக்கியுடனான போரில் உன் கைவண்ணத்தை கண்டேன், இங்கே {அகலிகை துன்பம் நீங்கியதில்} உன் கால்வண்ணம் கண்டேன்" என்று ராமனிடம் விசுவாமித்ரர் சொல்வதாக அமைகிறது இந்தப் பாடல்

தேவதுந்துபிகள் முழங்கின, பூமாரி பொழிந்தது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் உற்சவம் போல அதைப் பெரிதும் கொண்டாடினர்.(19) கௌதமருக்குத் தொண்டு செய்பவளும், தபோபலத்தால் சுத்த அங்கங்களைப் பெற்றவளுமான அஹல்யையிடம் தேவர்கள், "சாது, சாது {நன்று, நல்லது}" என்று சொல்லி அவளைப் பூஜித்தனர்.(20) மஹாதபஸ்வியும், மஹாதேஜஸ்வியுமான கௌதமரும், அஹல்யை சகிதராக மகிழ்ச்சியடைந்து ராமனை விதிப்படி பூஜித்துத் தமது தவத்தைத் தொடர்ந்தார்.(21) இராமனும், கௌதம மஹாமுனி வந்து விதிப்படி தனக்குப் பரம பூஜை செய்ததை ஏற்று அங்கிருந்து மிதிலைக்குச் சென்றான்[5].(22)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகலிகை ஒரு மனிதப் பெண்ணா, தேவியா, நிலப்பகுதியா என்பது தெளிவில்லை என்பதால் இந்தக் கதை பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. அஹல்யா என்பது உழப்படாத நிலம் என்று பொருள் முதல்வாதிகள் பொருள் கொள்கின்றனர். இதனால் ராமன் அந்நிலத்தை உழுவதற்கேற்ற நிலமாக மாற்றி அமைத்தான் என்ற பொருள் சேர்கிறது. இராமாயணத்தில் பூமியுடன் தொடர்புடைய இதுபோன்ற தொன்மக் கதைகள் பலவும் இருக்கின்றன" என்றும் இன்னும் அதிகமும் இருக்கின்றன.

பாலகாண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள் : 22

Previous | Sanskrit | English | Next

Sunday, 3 October 2021

அகலிகை | பால காண்டம் சர்க்கம் - 48 (33)

Ahalya | Bala-Kanda-Sarga-48 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அகலியையின் கதை; அஹல்யையைக் கண்டு மயங்கிய இந்திரன்; இந்திரனையும் அகலிகையையும் சபித்த கௌதமர்...

Gautama Ahalya and Indra in Gautamas form

அவர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டதும் குசலம் விசாரித்த {மன்னன்} சுமதி, இறுதியில் அந்த மஹாமுனியிடம் {விசுவாமித்ரரிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "முனிவரே, நீர் மங்கலமாக இருப்பீராக. இந்தக் குமாரர்கள், {விஷ்ணு} தேவனின் துல்லிய பராக்கிரமத்தையும், கஜசிம்ம கதியையும் {யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையைக்} கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், புலிக்கும், காளைக்கும் ஒப்பானவர்களாகவும்,(2) பத்மபத்ரவிசாலாக்ஷம் {தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளைக்} கொண்டவர்களாகவும், கட்கம் {வாள்}, தூணி {அம்பறாத்தூணி}, தனு {வில்} ஆகியவற்றைத் தரித்தவர்களாகவும், அஷ்வினிகளைப் போன்ற ரூபத்தைக் கொண்டவர்களாகவும், இளமையின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும்,(3) தேவலோகத்தில் இருந்து தன் விருப்பம்போல் பூமிக்கு வந்த அமரர்களைப் போலவும் தெரிகிறார்கள். இவர்கள் இங்கே பாதங்களைப் பதித்தது எவ்வாறு?[1] அதன் காரணமென்ன? இவர்கள் இங்கே வந்தது ஏன்? இவர்கள் யாருடையவர்கள்?(4) இந்த நரசிரேஷ்டர்கள் இருவரும் பிரமாணத்திலும் {உடல் அமைப்பிலும்}, இங்கிதத்திலும் {முகத்தோற்றத்திலும்}, சேஷ்டைகளிலும் {செய்யும் செயல்களிலும்} பரஸ்பரம் {ஒருவரையொருவர்} ஒத்திருக்கின்றனர். சந்திரனாலும், சூரியனாலும் அலங்கரிக்கப்பட்ட அம்பரத்தை {ஆகாயத்தைப்} போல இந்த தேசத்திற்கு இவர்கள் புதுப் பொலிவூட்டுகிறார்கள்.(5) சிறந்த ஆயுதங்களைத் தரித்திருக்கும் இந்த வீரர்களுக்கு, இந்தக் கடினமான பாதையைக் கடப்பதால் உண்டாகும் பயனென்ன? உண்மையில் இவற்றைக் கேட்க நான் விரும்புகிறேன்" {என்று கேட்டான் மன்னன் சுமதி}.(6)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தந்தையைப் போன்ற எந்த மனிதனும் இளைஞர்கள் நெடுந்தொலைவு நடப்பதை ஏற்கமாட்டார்கள். முனிவர்களோ நடந்து கொண்டே இருப்பவர்கள். தசரதன் விஷ்வாமித்ரருடன் ராமனை அனுப்ப மறுத்த காரணங்களில் இதுவும் ஒன்றாகும். தந்தையைப் போன்றவனான மன்னன் சுமதியும் இதையே இங்கே விஷ்வாமித்ரரிடம் கேட்கிறான்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.

அவனது {சுமதியின்} இந்த வசனத்தைக் கேட்டதும் அவர் {விசுவாமித்ரர்} சித்தாசிரமவாசத்தையும், ராக்ஷச வதத்தையும், நடந்தவை அனைத்தையும் சொன்னார். அந்த ராஜா {சுமதி}, விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு பரம ஆச்சரியமடைந்தான்.(7) அவன், பரம அதிதிகளை {விருந்தினர்களை} அடைந்த பிராப்தத்தைப் பெற்றவனாக மகிழ்ந்து, கௌரவிக்கப்படத் தகுந்தவர்களும், மஹாபலவான்களுமான அந்த தசரதபுத்திரர்கள் இருவரையும் விதிப்படி பூஜித்தான்.(8) சுமதியால் பெரிதும் கௌரவிக்கப்பட்ட ராகவர்கள் இருவரும் ஓரிரவு அங்கே வசித்து மிதிலைக்குப் புறப்பட்டனர்.(9)

முனிவர்கள் அனைவரும் ஜனகனின் மங்கல நகரைக் கண்டதும், "ஸாது, ஸாது {நல்லது, நன்று}" என்று புகழ்ந்து அந்த மிதிலையைப் பூஜித்தனர்[2].(10) இராகவன் மிதிலையின் அருகில் இருந்த வனத்தில் புராதனமானதும், ஜனங்களற்றதும், ரம்மியமானதுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டு, அந்த முனிபுங்கவரிடம் {விசுவாமித்ரரிடம்}:(11) "பகவானே, ஆசிரமம் போன்று தெரிவதும், முனிவர்களால் விலக்கபட்டதுமான இஃது என்ன? பூர்வத்தில் இந்த ஆசிரமம் யாருடையது? இவைற்றைக் கேட்க விரும்புகிறோம்" {என்று கேட்டான்}.(12)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோட்டை அமைப்புகளுக்காக அயோத்தி நகரம் பார்வையாளர்களால் போற்றப்பட்டாலும், வழிபடப்படும் அளவுக்கு {அந்தக் காலத்தில்} அதற்கு அதிர்ஷ்டம் இல்லை. ஆனால், மிதிலையோ கோவில் நகரம் என்றும், தங்குதடையில்லாமல் எப்போதும் வேத சடங்குகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இடம் என்றும் {அப்போதே} புகழப்பட்டும் நகரமாக இருந்திருக்கிறது. சிவனின் வில்லைக் கொண்டிருப்பதால் பழங்காலத்தில் இருந்து வில் வழிபாடு நடைபெறும் அருளப்பட்ட இடமாகவும் அஃது இருந்திருக்கிறது" என்றிருக்கிறது.

வாக்கியவிசாரதரும் {வாக்கியத்தில் நிபுணரும்}, மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், ராகவனால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு மறுமொழியாக:(13) "இராகவா, மகிழ்ச்சியடைகிறேன்[3]. ஒரு மஹாத்மாவால் கோபத்துடன் சபிக்கப்பட்ட இந்த ஆசிரமபதம் யாருடையது என்பதை உள்ளபடியே உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, திவ்ய ஒளி படைத்ததும், ஸுரர்களால் {தேவர்களாலும்} பெரிதும் பூஜிக்கப்பட்டதுமான இந்த ஆசிரமம் ஒரு காலத்தில் மஹாத்மாவான கௌதமருடையதாக இருந்தது.(15) பெரும்புகழ் பெற்றவனே, ராஜபுத்திரா, ஒரு காலத்தில் அவர் {கௌதமர்} அஹல்யை சகிதராக {அகலிகையுடன்} அநேக வருடங்கள் இங்கே தவத்தில் உறுதியாக அமர்ந்திருந்தார்.(16)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் அருளால் அகலிகை சாபத்தில் இருந்து விடுபடும் நேரம் வாய்த்ததற்காக விசுவாமித்ரர் இங்கே மகிழ்ச்சியடைகிறார்" என்றிருக்கிறது.

சசிபதியான {சசிதேவியின் கணவனான} சஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண் இந்திரன்}, அவர் {கௌதமர்} இல்லாத சமயத்தை அறிந்து, முனி வேஷந்தரித்து {கௌதமரின் வடிவை ஏற்று} அஹல்யையிடம் இதைச் சொன்னான்:(17) "தகுந்தவளே, ஆசையாவல் கொண்டவர்கள் ருது காலத்திற்காகக் காத்திருக்க மாட்டார்கள்[4]. நல்ல இடையைக் கொண்டவளே, நான் உன்னுடன் சங்கமிக்க இச்சிக்கிறேன்" {என்றான் இந்திரன்}.(18)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உன்னிடம் நான் சந்ததியைப் பெற விரும்பவில்லை. எனவே, உரிய வேளை இல்லை என்ற அச்சம் வேண்டாம் என்று இந்திரன் சொல்கிறான்" என்றிருக்கிறது

இரகுநந்தனா, துர்மேதையும், முனிவேஷந்தரித்தவனுமான சஹஸ்ராக்ஷனை {இந்திரனை} அறிந்தும் அவள் {அகல்யை} தேவராஜனின் குதூஹலத்திற்கு மனம் இசைந்தாள்[5].(19) அப்போது அந்தராத்மாவில் நிறைவடைந்தவளாக அவள் {அகலிகை} ஸுரசிரேஷ்டனிடம் {தேவர்களில் சிறந்தவனிடம்} சொன்னாள்: "ஸுரசிரேஷ்டரே, நான் நிறைவடைந்தேன். பிரபுவே, இங்கிருந்து சீக்கிரம் செல்வீராக. தேவேசரே, உம்மையும், என்னையும் எப்போதும் கௌதமரிடம் இருந்து பாதுகாப்பீராக" {என்றாள் அகலிகை}.(20,21அ)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "என் கணவர் இது போல் கேட்கவும் மாட்டார், வேளைகளை மீறவும் மாட்டார். எனவே இங்கே வந்திருப்பவன் இந்திரனையன்றி வேறில்ல. இந்திரன் நீண்ட காலமாக என்னை விரும்புகிறான் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களின் மன்னன் இத்தகைய விருப்பத்தை வெளிப்படுத்தும்போது அதை மறுத்தல் தகாது. எனவே இவன் என்னை அடையட்டும் என்று அவள் நினைத்தாள்" என்றிருக்கிறது.

இந்திரன் சிரித்துக் கொண்டே அஹல்யையிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்: "நல்ல இடையைக் கொண்டவளே, நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வந்தவாறே செல்வேன்" என்றான்.(21ஆ,22அ)

இராமா, இவ்வாறு அவளுடன் சங்கமித்த அவன், கௌதமரை எண்ணி பதறியபடியே அந்தக் குடிலில் இருந்து விரைந்து வெளியேறியபோது, மஹாமுனிவரான கௌதமர் பிரவேசிப்பதை அவன் கண்டான்.(22ஆ,23), தேவ தானவர்களாலும் தீண்டப்பட முடியாதவரும், தபோபலம் நிறைந்தவரும், தீர்த்தங்களால் தூய்மையானவரும், அநலம் {நெருப்பைப்} போலப் பிரகாசிப்பவருமான அவர்,(24) கையில் சமித்துகளுடனும் {விறகுளுடனும்}, நல்ல குசப்புற்களுடனும் {தர்ப்பைகளுடனும்} இருப்பதைக் கண்டு ஸுரபதி {இந்திரன்} அச்சத்தால் முகம் சிவந்தான்.(25)

நல்லொழுக்கம் பொருந்திய அந்த முனிவர் {கௌதமர்}, முனிவேஷம் தரித்தவனும், துர்நடத்தை கொண்டவனுமான சஹஸ்ராக்ஷனை {இந்திரனைக்} கண்டு சீற்றத்துடன் இந்த வசனத்தைச் சொன்னார்:(26) "துர்மதி கொண்டவனே, என் ரூபத்தை ஏற்று இந்த ஏற்பில்லா காரியத்தைச் செய்ததால், நீ கனிகளற்றவனாவாயாக[6]" {என்றார் கௌதமர்}.(27)

[6] தாதாசாரியரின் பதிப்பில், "நீ உன்மத்தனாகிச் சிறிதும் அறத்தினெறியை யுணராமல் என்னுடைய வேடம்பூண்டு நல்லறிவாளர் செயற்கரிய இத்தீச்செயலை நீ செய்தமையால் காமத்தைப் பெருக்குகைக்குக் காரணமாகிய அண்டங்களிரண்டும் அற்று அலி போலாகக் கடவையென்று சாபமிட, உடனே இந்திரனுடைய அண்டங்களற்று விழுந்தன" என்றிருக்கிறது.

அந்த மஹாத்மா இவ்வாறு சீற்றத்துடன் சொன்ன உடனேயே சஹஸ்ராக்ஷனின் விருஷணங்கள் {விரைகள்} பூமியில் விழுந்தன.(28) சக்ரனை {இந்திரனை} இவ்வாறு சபித்துவிட்டு, தன் பாரியையையும் {மனைவியையும்} சபிக்கும் வகையில், "பல்லாயிரம் வருடங்கள் நீ இங்கேயே இருப்பாயாக.(29) உணவில்லாமல் வாயுபக்ஷணம் செய்து {காற்றை உண்டு}, பஸ்மத்தில் {சம்பலில் / புழுதியில்} புரண்டுருண்டு, பழியுணர்ந்து வருந்தி, உயிரினங்கள் எதனுக்கும் புலப்படாதவளாக இந்த ஆசிரமத்திலேயே வாழ்ந்திருப்பாயாக.(30) தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, தடுக்கப்பட முடியாதவனுமான ராமன், இந்த கோர வனத்திற்குள் வரும்போது நீ தூய்மையடைவாய்.(31) துர்விருத்தம் {தீய நடத்தை} கொண்டவளே, அவனை {ராமனை} வரவேற்று, லோபத்தையும் {பேராசையையும்}, மோஹத்தையும் {மயக்கத்தையும்} கைவிட்டு மகிழ்ச்சி அடைந்து நீ என் அருகில் உன்னுடலைத் தரிப்பாய்" {என்றார் கௌதமர்}[7].(32)

[7] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "எப்பொழுது, யாவராலும் எதிரிடப்போகாத பராக்ரமம் பொருந்தியவனும், தசரதசக்ரவர்த்தியின் புதல்வனுமாகிய ராமன் பாழடைந்து பயங்கரமாயிருக்கின்ற இவ்வாச்ரமத்துக்கு வருவானோ, அப்பொழுது அவனுடைய பாதாரவிந்தத்தின் பராகம் {தூசி} பட்டுப் பரிசுத்தையாகி லோபமோஹங்களை விட்டு அவனை அதிதி ஸத்காரங் கொண்டு பூஜித்து என்னருகில் ஸந்தோஷத்துடன் மறுபடியும் உனது உருவம் பெறுவாய்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அஹல்யை புத்திபூர்வமாக வியபிசாரம் செய்ததற்காகக் கௌதமமாமுநிவர் சாபரூபமாக ப்ராயச்சித்தம் விதித்தனர். ஆகையால் அஹல்யையைக் கல்லாகச் சபித்தரென்று சொல்லலாகாது. ஆகையாலேயே "உனது உருவம் பெறுவாய்" என்கிறவிடத்தில் முன்போல் எல்லோருக்கும் புலப்படும்படியான உன்னுடைய தேஹத்தைப் பெறுவாயென்று பொருள் கொள்ள வேணும். ஆனாலும் பாத்மபுராணத்தில் அஹல்யைக்குச் சிலாரூபஞ் சொல்லப்பட்டது இது கல்பாந்தரவ்ருத்தாந்தத்தை அநுஸரித்துச் சொல்லப்பட்டதென்று சிலர். மற்றுஞ்ஞிலர் பாத்மபுராணத்தை அநுஸரித்து அஹல்யை சிலையாகச் சபிக்கப்பட்டாளென்று கொண்டு, அதற்கநுகுணமாக "உனது உருவம் பெறுவாய்" என்கிறவிடத்தில் நீ சிலாரூபத்தை விட்டு உனக்கு அஸாதராணமாயுள்ள தேஹத்தைப் பெறுவாயென்று கருத்து கூறுகின்றனர்" என்றிருக்கிறது.

மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான கௌதமர், அந்த துஷ்டசாரிணியிடம் இவ்வாறு சொல்லி இந்த ஆசிரமத்தை விட்டகன்று சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுபவராக ரம்மியமான இமய சிகரத்தில் தவம் பயின்று வருகிறார்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(33)

பாலகாண்டம் சர்க்கம் – 48ல் உள்ள சுலோகங்கள் : 33

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை