Bewailing Sita | Aranya-Kanda-Sarga-52 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைக் கடத்திச் சென்ற ராவணன்; ஒட்டுமொத்த இயற்கையும் சீதைக்காக வருந்தி தவித்தது...
தாராதிபனின் முகம் படைத்தவள் {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனைப் போன்று ஒளிரும் முகம் படைத்த சீதை} ராவணனால் கொல்லப்பட்ட அந்த கிருத்ர ராஜனை {ஜடாயுவைக்} கண்டு பெரும் துக்கத்தில் {இவ்வாறு} அழுது புலம்பினாள்[1]: (1) "இலக்ஷணஞானம்[2], பறவைகளின் சுவரங்களை கவனிப்பது போன்ற நிமித்தங்கள், நரர்களின் சுக துக்கங்களை அவசியம் புலப்படுத்துகின்றன[3].(2) இராமரே, உண்மையில் நீர் மஹத்தான விசனத்தை அறிந்தீரில்லை. காகுத்ஸ்தரே, எனக்காகவே மிருக பக்ஷிகள் உண்மையில் {உம்மிடம் உண்மையைச் சொல்ல} விரைகின்றன.(3) இராமரே, என்னைக் காக்க கிருபையுடன் இங்கே வந்த இந்த விஹங்கமர் {வானுலாவியான ஜடாயு}, என் பாக்கியமின்மையால் கொல்லப்பட்டுப் பூமியில் துடித்துக் கொண்டிருக்கிறார்" {என்று புலம்பினாள்}.(4) அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்த வராங்கனை {சிறந்த பெண்மணியான சீதை}, "காகுத்ஸ்தரே {ராமரே}, லக்ஷ்மணரே, என்னை இப்போது காப்பீராக" என்று அருகில் இருப்போர் கேட்கும் வண்ணம் கூவி அழுதாள்.(5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிழக்கு பாடத்தில், இதற்கு முன் ஒரு சுலோகம் இடம்பெற்றுள்ளது. "தம் அல்ப ஜீவிதம் க்³ருʼத்⁴ரம் ஸ்பு²ரந்தம் ராக்ஷ அதி³ப | த³த³ர்ஷ² பூ⁴மௌ பதிதம் ஸமிபே ராக⁴வ ஆஷ்²ரமாத் ||", அதாவது, தன் இறுதி மூச்சை விடுவதற்காக பூமியில் புரண்டு கொண்டிருந்த ஜடாயுவை ராவணன் முதலில் பார்த்ததாகவும், அதன் மூலம் நடந்ததை நினைவுகூர சீதைக்குச் சிறிது நேரம் கொடுத்ததாகவும் கூறுகிறது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், இந்த அதிகப்படியான சுலோகம், "ராக்ஷச மன்னன் ஸ்ரீராகவாச்ரமத்திற்கு அருகில் அந்தக் கழுகைத் தரையில் குற்றுயிராக விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறதாய் கண்டான்" என்றிருக்கிறது. தமிழில் தாதாசாரியரின் பதிப்பிலும், கோரக்பூர் பதிப்பிலும் இதே பொருளில் இருக்கிறது. ஆங்கிலத்தில் பிபேக்திப்ராய் பதிப்பிலும் கோரக்பூர் பதிப்பிலும் இதே பொருளில் இருக்கிறது. மற்ற பதிப்புகளில் இல்லை. ஜடாயு, ராமனுடைய ஆசிரமத்தின் அருகில் விழுந்திருக்கும் வாய்ப்பில்லை.
[2] அகத்திலும், புறத்திலும் தோன்றும் அறிகுறிகளைக் குறித்த அறிவு
[3] தாதாசாரியர் பதிப்பில், "கண்துடிப்பது முதலிய அங்கக்குறிகளும், கன்னிகை, மோர் முதலியவைகள் எதிரில் வருவதும், காக்கை முதலிய பறவைகள் தொனி செய்வதும் மனிதர்களது இன்ப துன்பங்களை உண்மையாக வறிவிக்கின்றனவல்லவோ?" என்றிருக்கிறது
மாலையும், ஆபரணங்களும் புழுதியடைந்து, அநாதையைப் போல கதறி அழுது கொண்டிருந்த அந்த வைதேஹியிடம் ராக்ஷசாதிபனான ராவணன் விரைந்து சென்றான்.(6) அந்தகனின் ஒளியுடன் கூடிய அந்த ராக்ஷசாதிபன், கொடியைப் போல பெரும் மரங்களைச் சுற்றிக் கட்டிப் பிடித்துக் கொண்டு ராமனில்லா வனத்தில், "ராமரே, ராமரே" என்று கூவி அழுது கொண்டிருந்தவளை, "{மரத்தை} விடு, விட்டுவிடு" என்று பலமுறை சொல்லி, தன் ஜீவித அந்தத்திற்காக[4] அவளது கேசத்தைப் பற்றினான்.(7,8) வைதேஹி இவ்வாறு தாக்கப்பட்டபோது, மதிப்பற்றுப் போன சராசரங்களுடன் கூடிய சர்வ ஜகத்திலும் இருள் சூழ்ந்தது[5]. அங்கே மாருதன் {காற்றுதேவன்} வீசவில்லை, திவாகரன் பிரபையற்றவனானான் {சூரியன் ஒளியிழந்தான்}.(9,10அ)
[4] தன் வாழ்வின் எல்லையை அடைந்து இறப்பதற்காக.
[5] அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த உலகத்திலும் இருள் சூழ்ந்தது.
ஸ்ரீமானும், தேவனுமான பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, சீதை பிறனால் {தகுதியற்றவனால்} தீண்டப்படுவதைத் தன் திவ்யமான கண்களால் {ஞானப்பார்வையில்} கண்டு, "காரியம் நிறைவேறியது" என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தான். பரமரிஷிகள் அனைவரும் மனம் தளர்ந்தனர்[6].(10ஆ,11) சீதை பிறனால் தீண்டப்படுவதைக் கண்ட தண்டகாரண்யவாசிகள், ராவணனின் நாசத்திற்கான பிராப்தம் {அழிவிற்கான வாய்ப்பு} தற்செயலாக நேர்ந்து விட்டதாக நினைத்தனர்.(12) இராக்ஷசேசுவரனான அந்த ராவணன், "ராமரே, ராமரே" என்றும், "லக்ஷ்மணரே" என்றும் கூவி அழுது கொண்டிருந்தவளை எடுத்துக் கொண்டு ஆகாசத்தில் சென்றான்[7].(13)
[6] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராவணனை அழிப்பதற்கான பணி நிறைவேற்றப்பட்டதால் பிரம்மன் மகிழ்கிறான். திடீரென வரும் இந்த சுலோகம் தொடர்ச்சியைக் கெடுக்கிறது. மேலும் இந்த இடத்திற்குப் பொருத்தமற்றதாகவும் தெரிகிறது" என்றிருக்கிறது.
[7] ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன்ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான்வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்வீங்கு தோள்மீக் கொடு விண்ணின் ஏகினான்- கம்பராமாயணம் 3452ம் பாடல், சடாயு உயிர் நீத்த படலம்பொருள்: ஏங்கிக் கொண்டிருக்கும் சீதையின் தனிமையையும், சிறகு இழந்த ஜடாயு அங்கே அடைந்த நிலைமையையும் அரக்கன் {ராவணன்} நோக்கினான். தேரில் வைத்த மண்ணோடும் பெயர்த்தெடுத்து பருத்த தன் தோள்கள் மீது சீதையை வைத்துக் கொண்டு விண்ணில் சென்றான்.
புடம்போட்ட ஆபரணத்தின் வர்ணத்திலான உடலைக் கொண்டவளும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவளுமான அந்த ராஜபுத்திரி {சீதை}, மேகத்திலுள்ள மின்னல் கீற்றுகளைப் போல விளங்கினாள்.(14) அவளது மஞ்சள் பட்டு வஸ்திரத்தின் அசைவால் ராவணன் அக்னியுடன் ஒளிரும் கிரியை {மலையைப்} போல அதிகமாக ஒளிர்ந்தான்.(15) பரம கல்யாணியான {மங்கலமிக்கவளான} அவள், சூடியிருந்தவையும், தாமிர வண்ணத்தில் இருந்தவையும், நறுமணமிக்கவையுமான பத்மபத்ரங்கள் {தாமரை இதழ்கள்} ராவணன் மீது சிதறி விழுந்தன.(16) ஆகாசத்தில் அசைந்து கொண்டிருந்ததும், கனக பிரபையுடன் கூடியதுமான {பொன் போல் ஒளிர்வதுமான} பட்டாடையானது, ஆதித்யனின் {சூரியனின்} செவ்வண்ணத்தில் உண்டான வெப்பத்தால், தாமிர வண்ண மேகம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது[8].(17)
[8] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அது நடுப்பகலாக இருந்ததால் வெப்பமாக இருந்தது. செம்மேகம் காலையிலோ, மாலையிலோ தோன்றும். ஆனால் நடுப்பகலில் தோன்றுவது கெட்ட சகுனமாகும்" என்றிருக்கிறது.
ஆகாசத்தில், ராவணனின் விலாப்பகுதியில் இருந்த அவளுடைய அந்த களங்கமற்ற முகம், தண்டில்லாத பங்கஜத்தை {புழுதியில் பிறந்த தண்டில்லாத தாமரையைப்} போல ராமன் இல்லாமல் ஒளி குன்றி இருந்தது.(18) அழகிய நெற்றியையும், அழகிய கேச நுனிகளையும், பத்ம கர்ப்ப ஒளியையும் {தாமரையின் உட்புற நிறத்தையும்} கொண்டதும், மாசு, மருவற்றதும், வெளுத்துத் தூய்மையாகக் களங்கமில்லாமல் பிரகாசிக்கும் பற்களால் அலங்கரிக்கப்பட்டதும், அழுவதால் கண்ணீர் வழிந்தாலும் சந்திரனைப் போன்ற இனிய தோற்றத்துடன் ஆகாசத்தில் பொன் போல் ஒளிர்வதும், அழகிய நாசியையும், அழகிய நயனங்களையும் {கண்களையும்}, அழகிய தாமிர வண்ண உதடுகளையும் கொண்டதும், ஆகாசத்தில் ராவணனின் விலாவை அடைந்தவளுக்குரியதுமான அந்த {சீதையின்} முகம், நீல மேகத்தைப் பிளந்து உதிக்கும் சந்திரனைப் போலத் திகழ்ந்தது.(19-21) இராக்ஷசேந்திரனால் பெரிதும் கலக்கமடைந்த அந்த மங்கல வதனம் {முகம்}, ராமன் இல்லாததால், பகல்நேரத்தில் உதித்த சந்திரனைப் போலப் பிரகாசிக்காதிருந்தது.(22)
நீலாங்க ராக்ஷசாதிபனால் பற்றப்பட்டவளும், ஹேமவர்ணம் கொண்டவளுமான அந்த மைதிலி, நீலமணியுடன் கூடிய காஞ்சன மேகலையைப் போல விளங்கினாள்[9].(23) மஞ்சள் பத்மம் {தாமரை} போன்றவளும், ஹேமத்தின் நிறம் கொண்டவளும், பொன் ஆபரணங்களுடன் ஜொலிப்பவளுமான அந்த ஜனகாத்மஜை {சீதை}, ராவணனை அடைந்து, கரிய மேகத்திலுள்ள மின்னலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(24) இராக்ஷசாதிபன் அந்த வைதேஹியின் ஆபரண கிங்கிணி ஒலியுடன் கூடியவனாக மின்னல் {இடி} முழங்கும் நீல மேகத்தைப் போல விளங்கினான்.(25) கடத்திச் செல்லப்படும் அந்த சீதையின் உத்தம அங்கத்தில் {தலையில்} இருந்து பொழிந்த புஷ்பமாரி தரணீதலமெங்கும் விழுந்தது.(26) அந்தப் புஷ்பமாரி எங்கும் சிதறி விழுந்தாலும் ராவணனின் வேகத்தால் தூற்றப்பட்டு மீண்டும் தசக்ரீவனையே அடைந்தது.(27) புஷ்பங்களின் தாரையானது, களங்கமற்ற நக்ஷத்திர மாலை, உன்னத மேரு மலையை {சூழ்ந்ததைப்} போல வைஷ்ரவணானுஜனை {குபேரனின் தம்பியான ராவணனை} அடைந்தது.(28)
[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், ""நீல மேனி கொண்ட ராக்ஷசாதிபனால் பற்றப்பட்டவளும், ஹேமவர்ணம் கொண்டவளுமான மைதிலியானவள், யானையின் மீதுள்ள பொன்கச்சையைப் போலப் பிரகாசித்தாள்" என்று மஹேஸ்வரத் தீர்த்தர் உரையில் இருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. நீல மணி வெள்ளி ஆபரணத்தில் இருந்தால் ஒளிருமேயன்றி, தங்கத்தாலான ஆபரணத்தில் பொருத்தப்பட்டால் ஒளிராது. சீதையும், ராவணனும் ஒன்றாக இருப்பது பொருந்தவில்லை என்பது இங்கே பொருள். தர்மாலயப் பதிப்பில், "கருமேனியனான ராக்ஷசமன்னனை அடைந்திருந்த அந்த பொன்நிறமுள்ள சீதாதேவி பொன் ஒட்டியாணம் ஒன்று கறுத்த மண்பாண்டத்தை அடைந்து எவ்வண்ணமோ அப்படியே தோன்றினாள்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "கரிய ராவணனருகில் பொன்னொளிகொண்ட பிராட்டியார் மேகத்திடையில் மின்னல் போலவும், யானையணிந்த பொன்மாலை போலவும், பச்சிலை மரத்தில் படர்ந்த பொற்கொடியைப் போலவும் விளங்கினர்" என்றிருக்கிறது.
வைதேஹியின் காலில் இருந்து நழுவியதும், ரத்தினங்கால் அலங்கரிக்கப்பட்டதுமான நூபுரம் {சிலம்பு}, மின்னல் மண்டலத்திற்கு ஒப்பான ஒளியுடன் தரணி தலத்தில் விழுந்தது.(29) மரத்தின் சிவந்த தளிரைப் போன்ற {மென்மையான} அந்த வைதேஹியுடன் கூடிய நீல அங்க ராக்ஷசேசுவரன், காஞ்சன மேகலையுடன் கூடிய கஜத்தை {யானையைப்} போல பிரகாசித்தான்.(30) அந்த வைஷ்ரவணானுஜன் {குபேரனின் தம்பியான ராவணன்}, ஆகாசத்தில் மஹா உல்கத்தை {பெரும் எரிகொள்ளியைப்} போல, சொந்த தேஜஸ்ஸுடன் {தன்னொளியுடன்} கூடிய அந்த சீதையை ஆகாசத்தில் கவர்ந்து சென்றான்.(31) அக்னி வர்ணத்திலான அவளது ஆபரணங்கள், அம்பரத்தில் இருந்து விழும் தாரைகளைப் போன்ற கோஷத்துடன் மஹீதலத்தில் விழுந்து சிதறின[10].(32) அந்த வைதேஹியின் ஸ்தனங்களுக்கு மத்தியில் இருந்ததும், தாராதிபனின் {சந்திரனின்} ஒளியுடன் கூடியதுமான ஹாரம் நழுவி விழுந்தபோது, ககனத்தில் இருந்து நழுவிய {வானில் பாயும்} கங்கையைப் போலத் தெரிந்தது.(33)
[10] நெருப்பின் நிறத்திலான அவளது ஆபரணங்கள், வானில் இருந்து விழும் நட்சத்திரங்களைப் போன்ற கோஷத்துடன் பூமியின் தரையில் விழுந்து சிதறின.
வாதத்தால் {காற்றால்} நன்றாகத் தாக்கப்பட்டவையும், நானாவித துவிஜகணங்கள் {பறவைக் கூட்டங்கள்} அமர்ந்திருந்தவையும், நன்றாக அசையும் நுனிகளுடன் கூடியவையுமான மரங்கள், "பயம் வேண்டாம்" என்று சொல்வது போல ஆடின.(34) அசையும் கமலங்களுடனும், அஞ்சித் தவிக்கும் மீனங்களுடனும், ஜலசரங்களுடனும் கூடிய நளினிகள், உற்சாகமிழந்த சகிகளை போலவும், மைதிலிக்காக பரிதபிப்பவை போலவும் விளங்கின[11].(35) அப்போது சிம்மங்கள், வியாகரங்கள், மிருகங்கள், துவிஜங்கள் ஆகியவை எங்கும் ஒன்று திரண்டு நிழலைப் பின்தொடர்ந்து ரோஷத்துடன் {சினத்துடன்} சீதையின் பின்னே தாவிச் சென்றன[12].(36) சீதை கடத்தப்பட்டபோது, ஜலபிரபாதைகளெனும் {அருவிகளெனும்} கண்ணீரொழுகும் முகங்களுடனும், சிருங்கங்களெனும் {சிகரங்களெனும்} உயர்த்தப்பட்ட கைகளுடனும் அழுது கதறுபவை போலப் பர்வதங்கள் தெரிந்தன.(37) கடத்தப்படும் வைதேஹியைக் கண்ட ஸ்ரீமான் தினகரன் {சூரியன்}, தீனமடைந்து, பிரபை குன்றி, வெண்மண்டலத்துடன் கூடியவனானான்.(38)
[11] அசையும் தாமரைகளுடனும், அஞ்சித்தவிக்கும் மீன்களுடனும், நீரில் திரியும் உயிரினங்களுடனும் கூடிய தாமரையோடைகள், உற்சாகமிழந்து, மைதிலிக்காக வருந்தும் தோழிகளைப் போல விளங்கின.
[12] சிங்கங்களும், புலிகளும், மான்களும், பறவைகளும் எங்கும் ஒன்றுகூடி மேலே பறந்து செல்பவர்களின் நிழலைப் பின்தொடர்ந்தபடியே சினத்துடன் சீதையின் பின்னே தாவிச் சென்றன.
"எங்கே ராமனின் பாரியையான வைதேஹியை ராவணன் கடத்தினானோ அங்கே தர்மம் இல்லை. சத்தியம் இல்லை, நேர்மை இல்லை, தயை இல்லை" என்று சர்வ பூதகணங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} புலம்பின.(39,40அ) மிருகபோதகங்கள் {மான்குட்டிகள்} பேரச்சம் கொண்டவையாக தீன முகத்துடனும், கண்ணீரால் மங்கிய பார்வை கொண்ட நயனங்களுடனும் {கண்களுடனும்} உயரப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டிருந்தன.(40ஆ,41அ) இவ்வாறு சீதையைக் கண்ட வனதேவதைகளும், துக்க கதியை அடைந்து, திடமான கூச்சலுடன், பெரிதும் உடல் நடுங்கினர்.(41ஆ,42அ) "இலக்ஷ்மணரே, ராமரே" என்று மதுர சுவரத்தில் {இனிய குரலில்} கதறியபடியும், அப்போதைக்கப்போது தரணீதலத்தைப் பார்த்துக் கொண்டும், அவிழ்ந்த கேச நுனிகள் சிலிர்த்துக் கலையவும், அழிந்த திலகத்துடனும் இருந்த மனஸ்வினியான {உயர்ந்த மனம் படைத்தவளான} அந்த வைதேஹியை, அந்த தசக்ரீவன், தன் ஆத்ம நாசத்திற்காகவே {தன்னழிவுக்காகவே} கடத்திச் சென்றான்.(42ஆ,43) பிறகு அழகிய பற்களையும், தூய புன்னகையையும் கொண்டவளும், பந்து ஜனங்கள் இல்லாதவளாக ஆக்கப்பட்டவளுமான அந்த மைதிலி, ராகவனையும், லக்ஷ்மணனையும் காணாமல் பய பாரத்தால் பீடிக்கப்பட்டு, முக வர்ணத்தை இழந்திருந்தாள் {முகம் வெளுத்தவளானாள்}.(44)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள்: 44
Previous | | Sanskrit | | English | | Next |