Eight Rakshasas | Aranya-Kanda-Sarga-54 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு மத்தியில் சில ஆபரணங்களை வீசி எறிந்த சீதை; பெருங்கடலைக் கடந்த ராவணன்; சீதையை அடைத்து வைத்தது; எட்டு ராக்ஷசர்களை ஜனஸ்தானத்தில் நியமித்தது...
கடத்தப்படும் வைதேஹி, நாதன் {காப்பவர்} யாரையும் காணாதவளாக, கிரி சிருங்க ஸ்தானத்தில் {ஒரு மலையின் உச்சியில்} ஐந்து வானர புங்கவர்களை தரிசித்தாள்.(1) அகன்ற விழிகளையும், அழகிய இடையையும் கொண்ட அந்த பாமினி {அழகிய பெண்}, கனகத்தின் பிரகாசத்துடன் கூடிய பட்டு உத்தரீயத்துடன் {பொன்னிறத்தாலான பட்டு மேலாடையுடன்} மங்கல ஆபரணங்களையும், "இராமருக்கு அறிவிப்பார்கள்" என்று {நினைத்து} அவர்களின் மத்தியில் போட்டாள்[1].(2,3அ) பூஷணங்களுடன் கூடிய வஸ்திரத்தை அவர்களின் மத்தியில் {அந்த ஐந்து வானரர்களின் மத்தியில் அவள்} விட்டெறிந்தபோது, கலக்கத்தில் இருந்த தசக்ரீவன் அந்த கர்மத்தை {சீதையின் செயலை} உணர்ந்தானில்லை.(3ஆ,4அ) இளஞ்சிவப்புக் கண்களுடன் கூடிய வானர ரிஷபர்கள், அப்போது அழுது கொண்டிருந்தவளும், விசாலாக்ஷியுமானன அந்த சீதையை நிமிஷமற்ற நேத்திரங்களுடன் தரிசித்தனர் {சிமிட்டாத கண்களுடன் கண்டனர்}.(4ஆ,5அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை தன் மேலாடையைக் கிழித்து, அதில் ஆபரணங்களைப் பொதிந்து போட்டாள் என்று சிலரும், மேலாடை முழுவதையும், ஆபரணங்களையும் போட்டாள் என்று சிலரும், ஆபரணங்கள் பொதியப்பட்ட மொத்த மேலாடையையும் போட்டாள் என்று சிலரும் சொல்கிறார்கள். இன்றைய வேட்டியைப் போன்றே அன்றைய பெண்கள் சீலை உடுத்தினார்கள். ஆனால் தங்கள் மார்புகளை மறைக்க மேலாடையும் அணிந்தார்கள். வேட்டி போன்ற சீலை, மார்புக்கச்சை, அதற்கு மேல் மார்பை மறைக்கும் மேலாடை என்று மூன்று துண்டுகளாக ஆடைகளை அணிந்தார்கள். ஆண்கள் தங்கள் தோள்களில் மேலாடை {துண்டு} அணிவார்கள்" என்றிருக்கிறது.
அந்த ராக்ஷசேசுவரன், அழுது கொண்டிருந்த மைதிலியை எடுத்துக் கொண்டு பம்பையைக் கடந்து, லங்காபுரியை நோக்கிச் சென்றான்.(5ஆ,6அ) இராவணன், மஹாவிஷத்தையும் கூரிய பற்களையும் கொண்ட புஜகீயை {பெண்பாம்பைத்} தன் மடியில் வைத்துக் கொள்வதைப் போல, தன் மரணத்தின் வடிவமாகத் திகழ்பவளைக் கடத்திச் செல்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான்.(6ஆ,7அ) அவன், வில்லில் இருந்து ஏவப்படும் சரத்தைப் போல சீக்கிரமாக வனங்களையும், சரிதங்களையும் {ஆறுகளையும்}, சைலங்களையும் {மலைகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்} ஆகாய வழியில் கடந்து சென்றான்.(7ஆ,8அ) திமிங்கலங்களும், முதலைகளும் வசிக்கும் வருணாலயமும் {வருணனின் இடமும்}, அக்ஷயமானதும் {வற்றாததும்}, சரிதங்களின் சரண்யமுமான {ஆறுகளின் புகலிடமுமான} சாகரத்தை அடைந்து, நன்றாக {விரைவாகக்} கடந்து சென்றான்.(8ஆ,9அ) வைதேஹி கடத்தப்படும்போது கலக்கமடைந்த வருணாலயம் {பெருங்கடல்}, தன் அலைகளை மேலெழும்பச் செய்து திருப்பிக் கொண்டது. மீன்களும், மஹா உரகங்களும் {பெரும்பாம்புகளும்} தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன[2].(9ஆ,10அ) அப்போது அந்தரீக்ஷத்தில் {வானத்தில்} சென்ற சாரணர்கள், "தசக்ரீவனின் அந்தமிது {முடிவு இது}" என்ற சொற்களைச் சொன்னார்கள், சித்தர்களும் அவ்வாறே சொன்னார்கள்.(10ஆ,11அ)
[2] 7அ முதல் 10அ வரையுள்ள சுலோகங்களின் பொருள், ராவணன் சென்ற வழியைக் குறிப்பிடுகிறது. இராவணன் பஞ்சவடியில் இருந்து கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சீதையைக் கடத்திச் சென்று ஜடாயுவை சந்தித்தது வரை எவ்வளவு தொலைவு? ரதம் தகர்ந்த பிறகு, சென்ற சர்க்கத்தில் சீதை அழுது புலம்பி, பின்பு சோர்ந்து போன சமயம் வரை கடந்தது எவ்வளவு தொலைவு? அங்கிருந்து இந்த வானரங்கள் இருக்கும் மலை வரை எவ்வளவு தொலைவு? இங்கே குறிப்பிடப்படும் பம்பை எங்கிருக்கிறது? வானரங்கள் இருந்த மலைக்கும் இங்கே குறிப்பிடப்படும் பம்பைக்கும் எவ்வளவு தொலைவு? பம்பைக்குப் பிறகு பல காடுகள், ஆறுகள், மலைகள், தடாகங்கள் ஆகியவற்றைக் கடந்து சாகரத்தை அடைந்ததாக இங்கே குறிப்பிருக்கிறது. ஆனால் இதுவரை பஞ்சவடியில் இருந்து ராவணன் எந்தத் திசையில் பயணித்தான் என்ற குறிப்பில்லை. ஒரு வேளை பிறகு வரக்கூடும். முதலைகள் கடலில் வசிக்காது என்பது சிலரின் வாதம். ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் உப்பு நீர் முதலைகள் இன்றும் கடலோரங்களில் இருக்கின்றன. ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய நிலை என்னவோ? இந்த சர்க்கமும் ராவணனின் லங்காபுரி எங்கிருந்தது என்பதைக் கணிப்பதற்கான தகவல்களைத் தரும் அத்தியாயமாகும். இவை யாவும் ராமாயணம் உண்மையாக நடந்த நிகழ்வே என்று சாதிக்க விரும்புகிறவர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய செய்திகள் ஆகும். இராவணனின் லங்காபுரி, மத்தியப்ரதேசித்தில் இருந்தது, குஜராத்தின் அருகில் இருந்தது, இன்றைய இலங்கைத் தீவில் இருந்தது என்று நிறுவ முற்படுபவர்களுக்காகவே, அவர்களின் ஆய்வுக்காகவே இங்கே இந்தப் பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதிகாசங்களில் உள்ள நெறிகளும், தத்துவங்களும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை ஈட்டும் வழிமுறைகளும்தான் முக்கியம் என்பவர்களுக்கு இத்தகவல்கள் அனைத்தும் அவசியமற்றவையே.
அந்த ராவணன், தனக்கான மிருத்யு ரூபிணியும் {தன் மரணத்திற்கான வடிவமாகத் திகழ்பவளும்}, துடித்துக் கொண்டிருப்பவளுமான சீதையை விலாவில் எடுத்துக் கொண்டு லங்காபுரிக்குள் பிரவேசித்தான்.(11ஆ,12அ) நன்கு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட மஹாபாதைகளுடன் கூடிய லங்காபுரியை அடைந்தவன், நல்ல காவல் நிறைந்த வாயில்கள் பலவற்றைக் கொண்ட தன் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தான்.(12ஆ,13அ) இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் மாயா அசுரியை {வைத்ததைப்} போல வைத்தான் {இறக்கி விட்டான்}[3].(13ஆ,14அ)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், மேற்கண்ட ஒருவடிவிலும், "இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் ஹேமை என்ற தன் காதலியை மாயமான கருந்துளைக்குள் வைத்ததைப் போல வைத்தான்" என்றும், "இராவணன், கருத்த இமைகளைக் கொண்டவளும், சோக மோஹத்தில் தொலைந்தவளுமான அந்த சீதையை, மயன் தன் குருவான சுக்கிராசாரியரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட மாய சாஸ்திரங்களை ஒரு மாயத்துளைக்குள் வைத்ததைப் போல வைத்தான்" என்றும் மூன்று வடிவங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, கோரத்தோற்றம் கொண்ட பிசாசிகளிடம் {பின்வருமாறு} சொன்னான், "என் ஒப்புதலில்லாத எந்த புமானும் {ஆணும்}, ஸ்திரீயும் இந்த சீதையை எவ்வழியிலும் பார்க்கக்கூடாது.(14ஆ,15அ) முத்துக்கள், மணிகள் {ரத்தினங்கள்}, சுவர்ணங்கள், வஸ்திரங்கள், ஆபரணங்கள் என எதை எதை இவள் இச்சித்தாலும் அவை அனைத்தையும் இவளுக்கு என் விருப்பப்படியே {எந்த தயக்கமுமின்றி} கொடுப்பீராக.(15ஆ,16அ) எவள்[4], அறியாமலோ, அறிந்தோ வைதேஹிக்குப் பிரியமற்ற சொற்கள் எதையும் சொல்வாளோ அவளுக்கு ஜீவிதம் பிரியமற்றுப் போகும்" {என்றான் ராவணன்}[5].(16ஆ,17அ)
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அங்கே இருந்த காவலர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் இங்கே பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.
[5] வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய்செஞ்சவே திரு உருத் தீண்ட அஞ்சுவான்நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடைசிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ- கம்பராமாயணம் 3461ம் பாடல், சடாயு உயிர் நீத்த படலம்பொருள்: வஞ்சிக் கொடி போன்ற சீதையை அரக்கன் ராவணன் விரைவாக எடுத்துக் கொண்டு போய் சீதையின் திருவுருவத்தை நேரடியாகத் தீண்ட அஞ்சியவனாக தன் வீட்டிற்கு இடையில் இருந்த வனத்தில் நஞ்சின் இயல்பைக் கொண்ட அரக்கியரின் நடுவே சிறை வைத்தான்.
பிரதாபவானான ராக்ஷசேந்திரன் அந்த ராக்ஷசிகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு அந்த அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்து, "{இனி} என்ன செய்வது" என்று சிந்தித்து, மஹா வீரியவான்களும், பிசிதாசனர்களுமான {பச்சை மாமிசம் உண்பவர்களுமான} எட்டு ராக்ஷசர்களைப் பார்த்தான்.(17ஆ,18) மஹாவீரியனும், வரதானத்தில் மோஹித்திருந்தவனுமான அவன் {தான் பெற்ற வரத்தினால் உண்டான மயக்கத்தில் இருந்த ராவணன்}, பலத்தாலும், வீரியத்தாலும் புகழப்படுபவர்களை {அந்த எட்டு ராக்ஷசர்களைக்} கண்டு, அவர்களிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(19) "நானாவித படைக்கலங்களை {ஆயுதங்களைத்} துரிதமாக எடுத்துக் கொண்டு, இதற்கு முன்பு கரனின் ஆலயமாக இருந்து {தற்போது} ஹதஸ்தானமான {கொலைக்களமான} ஜனஸ்தானத்திற்கு இங்கிருந்து சீக்கிரமாகச் செல்வீராக.(20) அச்சத்தை தூரமாக வீசியெறிந்துவிட்டு, ராக்ஷசர்கள் கொல்லப்பட்டு சூனியமாகி இருக்கும் அந்த ஜனஸ்தானத்தில் உங்கள் பௌருஷத்தையும் {ஆண்மையையும்}, பலத்தையும் நம்பி வசித்திருப்பீராக.(21)
மஹாவீரியம் பொருந்திய பல சைனியங்கள் ஜனஸ்தானத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், யுத்தத்தில் ராமனின் சாயகங்கள் {கணைகள்} தூஷணனுடனும், கரனுடனும் {அவற்றை} மொத்தமாக அழித்தன.(22) எனவே, அபூர்வமான {எப்போதும் இல்லாத} குரோதமும், தைரியமும் என்னிடம் பெருகுகின்றன. பொறுக்க முடியாத மஹத்தான வைரம் {பகை} ராமன் மீது உண்டாகிறது.(23) என் பகைவனிடம் அந்த வைரத்தைச் செலுத்த இச்சிக்கிறேன். போரில் பகைவனைக் கொல்லாமல் உண்மையில் நான் நித்திரையை அடைய மாட்டேன்.(24) கர தூஷணர்களைக் கொன்ற அந்த ராமனை நான் இப்போது கொன்றால், தனமற்றவன் தனத்தை அடைவதைப் போன்ற மகிழ்ச்சியை அடைவேன்.(25) நீங்கள் ஜனஸ்தானத்தில் வசித்திருக்கும்போது, ராமன் என்ன செய்யப் போகிறான் என்ற செயல்பாட்டைச் சரியாக {என்னிடம்} கொண்டு வருவீராக.(26) சர்வ நிசாசரர்களும் {இரவுலாவிகளும்} இவ்வாறு அலட்சியமின்றி சென்று, ராகவனை வதம் செய்வதற்கான பிரயத்னங்களையும் {முயற்சிகளையும்} சதா செய்து கொண்டிருப்பீராக.(27) இரணமூர்த்தங்களில் {போர்முனைகளில்} பலமுறை உங்கள் பலத்தை அறிந்திருப்பதால் மட்டுமே உங்களை அந்த ஜனஸ்தானத்தில் நியமிக்கிறேன்" {என்றான் ராவணன்}.(28)
பிரியமானவையும், மஹா அர்த்தங்களைக் கொண்டவையுமான வாக்கியங்களை அப்போது கேட்ட அஷ்ட ராக்ஷசர்களும், ராவணனை வணங்கிவிட்டு, ஒன்று சேர்ந்தவர்களாக, {ஒருவருக்கும்} புலப்படாத தோற்றத்தை ஏற்று, லங்கையை விட்டு ஜனஸ்தானம் எங்கிருக்கிறதோ அங்கே சென்றனர்.(29) பிறகு, ராக்ஷசனான அந்த ராவணன், சீதையைக் கண்டதிலும், அந்த மைதிலியைக் கைப்பற்றியதிலும் பெரும் மகிழ்ச்சியடைந்தான். இராமனிடம் உத்தம வைரத்தை உறுதி செய்தும்கூட, மோஹத்தால் {மூட மயக்கத்தால்} மகிழ்ந்திருந்தான்.(30)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |