Showing posts with label நீலன். Show all posts
Showing posts with label நீலன். Show all posts

Monday, 19 May 2025

வந்தவரில் எஞ்சியோரின் நிலை | யுத்த காண்டம் சர்க்கம் - 070 (67)

The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...

Rishabha's final blow to Mahaparshva

A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image

நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்},  பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)

Monday, 17 February 2025

பிரஹஸ்த வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 058 (61)

Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...

Prahasta coming for war

அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)

Saturday, 8 June 2024

ஹனுமானின் கோரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 59 (37)

Appeal of Hanuman | Sundara-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் சீதையின் பரிதாப நிலையைக் குறித்துச் சொன்ன ஹனுமான்; சக வானரர்களின் வீரப் பிரதாபங்களை நினைவுகூர்ந்து அவர்களைத் தூண்டியது...

Hanuman inciting fellow vanaras

மாருதாத்மஜனான ஹனுமான், இவை யாவற்றையும் {ஜாம்பவானிடம்} சொல்லிவிட்டு, மேலும் {பிறரிடம்} பின்வரும் வசனத்தைச் சொல்லத் தொடங்கினான்:(1) "சீதையுடைய சீலத்தினால் {ஒழுக்கத்தினால்}, ராகவரின் உத்யோகமும், சுக்ரீவரின் பற்றார்வமும் பலனை அடைந்தன. என் மனம் சாய்கிறது {என் மனம் பக்தியுடன் சீதையிடம் செல்கிறது}.(2) இராக்ஷசாதிபனான இந்த ராவணன், அனைத்துவகையிலும் மேன்மைமிக்கவன்; தன் தபத்தால் உலகங்களை எரித்துவிடவல்லவன்; குரோதமடைந்தாலும் {தன் பகைவரை} எரித்துவிடுவான்.(3) அவளை {சீதையை} ஸ்பரிசித்த அவனது காத்ரம் {ராவணனின் உடல்}, அவனது தபஸ்ஸாலேயே நாசமடையவில்லை. ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, குரோதத்தால் தூண்டப்பட்டால் எதைச் செய்வாளோ, அதைக் கையால் முழுமையாக ஸ்பரிசிக்கப்பட்ட அக்னி சிகையாலும் செய்ய முடியாது.(4,5அ) இந்தக் காரியம், இந்த கதியிலேயே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. ஜாம்பவான் முதலான சர்வ மஹா ஹரிக்களிடமும் {பெருங்குரங்கினர் அனைவரிடமும்} அனுமதி பெற்றுக் கொண்டு, வைதேஹியுடன் சேர்ந்து, அந்தப் பார்த்திவாத்மஜர்கள் {ராஜகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் காண்பதே நியாயமாகும்[1].(5ஆ,6)

Thursday, 9 November 2023

மூன்றாம் உபாயம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 54 (22)

Third ideation | Kishkindha-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தைக் கைவிட்டு, தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தால், சுக்ரீவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தி அறிவுரை கூறி அங்கதனைத் தேற்றிய ஹனுமான்...

Hanuman advising Angada
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு

தாராதிபதியின் {சந்திரனின்} ஒளியுடன் கூடிய தாரன் இதைச் சொன்னபோது, அங்கதனால் அந்த ராஜ்ஜியம் அபகரிக்கப்படுமென ஹனுமான் நினைத்தான்.(1) ‘வாலிசுதன் {வாலியின் மைந்தனான அங்கதன்} அஷ்டாங்க புத்தியுடனும், சதுர்பலத்துடனும் {நால்வகை பலங்களுடனும்}, சதுர்தச {பதினான்கு} குணங்களுடனும் கூடியவன்’[1] என்று ஹனுமான் நினைத்தான்.(2)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஒரு சராசரி மனிதனின் நுண்ணறியுந்திறன் எட்டு அங்கங்களுடன் கூடியது என்று {பின்வருமாறு} சொல்லப்படுகிறது, 
“ஷு²ஷ்²ரூஷ ஷ²ரவணம் சைவ க்³ரஹணம் தா⁴ரணம் ததா² | 
ஊஹ அபோஹ அர்த² விஜ்ஞானம் தத்த்வ ஜ்ஞானம் ச தீ⁴ கு³ணா: |” 

அதாவது, 1. சுஷ்ரூஷம் - கூர்மையாக கவனித்தல், 2.  சிரவணம் - கருத்தில் கொள்ளுதல், 3. கிரஹணம் - ஈர்த்து வைத்துக் கொள்ளுதல் {நினைவில் நிறுத்தல்}, 4. தாரணம் - நினைவில் மீட்டல், 5. ஊஹம் - ஊகித்தறிதல், 6. அபோஹம் - நுட்பமாகப் பகுத்தறிதல், 7. அர்த்தவிஜ்ஞானம் - அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுதல், 8. தத்துவஞானம் - {உண்மையைப் புரிந்து கொள்ளுதல்} என்பன அந்த குணங்களாகும். 

நால்வகை பலங்கள் என்பன 1. மனோபலம் - மனவலிமை, 2. பாஹுபலம் - தோள்வலிமை, 3. உபாய பலம் - உத்தி வலிமை, 4. பந்து பலம் - உறவினர் வலிமை என்று சொல்லப்படுகின்றன. 

பதினான்கு குணங்கள் என்பனவற்றுக்கு, 
“தே³ஷ² காலஜ்ஞத தா³ர்ட்⁴யம் ஸர்வ க்லேஷ² ஸஹிஷ்ணுதா |  
ஸர்வ விஜ்ஞானிதா தா³க்ஷ்யம் ஊர்ஜ: ஸம்வ்ருʼத மந்த்ரதா |  
அவிஸம்விதி³தா ஷௌ²ர்யம் ஷ²க்திஜ்ஞத்வம் க்ருʼதஜ்ஞதா |  
ஷ²ரண ஆக³த வத்ஸ்ல்யம் அமர்ஷத்வம் அசாலன |” 
என்று சொல்லப்படுகிறது. 

அதாவது, 1. தேசகாலஜ்ஞம் - இடம், நேரம் ஆகியவற்றை அறிதல், 2. தார்டியம் - கடுமை / மன உறுதி, 3. ஸர்வகிலேசஸஹிஷ்ணுதம் - தொல்லைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுதல், 4. சர்வவிஜ்ஞானிதம் - அனைத்தையும் அறிதல் / எல்லாம் உணர்தல், 5. தாக்ஷ்யம் - நிபுணத்துவம் / வல்லமை, 6. ஊர்ஜம் - விடாமுயற்சி, 7. ஸம்விருத மந்திரதம் - ஆலோசனைகளை வெளியிடாமல் மறைத்தல் 8. அவிஸம்விதிதம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தல் / அபத்தமாகப் பேசாதிருத்தல், 9. ஷௌர்யம் - துணிவு, 10. சக்திஜ்ஞத்வம் - பிறரின் வலிமையை முழுமையாக அறிதல், 11. கிருதஜ்ஞதம் - நன்றி மறவாமை, 12. சரணாகதவத்ஸல்யம் - அண்டியோரை அன்புடன் ஆதரித்தல், 13. அமர்ஷத்வம் - தேவையான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தல், 14. அசாலனம் - நடுக்கமின்மை / கலக்கமின்மை / கலவரமின்மை என்பன அந்த குணங்களாகும்” என்றிருக்கிறது.

சுக்லபக்ஷத்தில் வளரும் சசியை {வளர்பிறைச் சந்திரனைப்} போல உறுதியிலும், தேஜஸ், பலம், பராக்கிரமம் ஆகியவற்றிலும் நிறைபவனும், பெரும் வர்த்தமானம் கொண்டவனும் {பேருடல் படைத்தவனும்},{3} புத்தியில் பிருஹஸ்பதிக்கு சமானனும், விக்கிரமத்தில் பிதாவுக்கு {வாலிக்கு} ஒப்பானவனும், சுக்கிரனுக்குப் புரந்தரனைப் போல கூரிய கவனத்துடன் தாரனை சேவிப்பவனும்,{4} தலைவனின் அர்த்தத்தில் {சுக்ரீவனின் காரியத்தில்} அலுப்படைந்தவனுமான அங்கதனை அனுகூலனாக்க சர்வ சாஸ்திர விசாரதனான ஹனுமான் பேச ஆரம்பித்தான்.(3-5) அவன் {ஹனுமான்}, நான்கு உபாயங்களில் மூன்றாவதை {பேதத்தை} விவரித்து, அந்த வானரர்கள் அனைவரையும் வாக்கிய சம்பத்தால் பேதிக்க {சொற்றொடர்களெனும் செல்வத்தால் பிரிக்கத்} தொடங்கினான்[2].(6)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “அரசியல் பகை தொடர்பாக 1. சாமம் {அமைதி அடைதல் / சமாதானம் செய்து கொள்ளல்}, 2. தானம் {கொடை அளித்தல்}, 3. பேதம் {பிரிவினை உண்டாக்கல்}, 4. தண்டம் {தண்டித்தல்} என்பனவே இந்த நான்கு உபாயங்களாகும்” என்றிருக்கிறது. அதில் மூன்றாம் உபாயம் என்பது பேதங்கொள்ளச் செய்வதாகும்.

அவர்கள் அனைவரிடமும் வேற்றுமையை உண்டாக்கிய பிறகு, கோபமெனும் உபாயத்துடன் கூடிய விதவிதமான பயங்கர வாக்கியங்களை அங்கதனிடம் சொல்லத் தொடங்கினான்:(7) “தாரேயா {தாரையின் மகனே}, நீ யுத்தத்தில் உன் பிதாவை {வாலியைக்} காட்டிலும் அதிசமர்த்தன். நிச்சயம் உன் பிதாவைப் போலவே கபிராஜ்ஜியத்தை {குரங்குகளின் ராஜ்ஜியத்தைத்} திடமாகத் தாங்கவல்லவன்.(8) ஹரிபுங்கவா, கபயர்கள் {குரங்குகள்} நித்தியம் நிலையற்ற சித்தம் கொண்டவர்கள். புத்திரர்கள், தாரங்கள் ஆகியோரைப் பிரிந்தவர்கள், நீ ஆணையிடுவதை சஹித்துக் கொள்ள மாட்டார்கள்.(9) எப்படி பிரத்யக்ஷமாக {நேரடியாகச் சொல்ல} முடியுமோ அப்படியே நான் உனக்குச் சொல்கிறேன். இந்த ஜாம்பவான், மஹாகபிக்களான நீலன், சுஹோத்ரன் உள்ளிட்ட இவர்களில் யாரும் உன்னை அனுசரிக்கமாட்டார்கள்.{10} நானும் மாட்டேன். அவர்களும், இவர்களுமான எங்கள் அனைவரையும் சாமம், தானம் முதலிய குணங்களாலும், தண்டத்தாலும்  சுக்ரீவனிடம் இருந்து பிரிப்பது உனக்கு சாத்தியமில்லை.(10,11) பலவானின், எதிர் ஆசனத்தில் அமர்ந்து துர்பலன் {பலமற்றவன்} பேசினாலும், ஆத்மரக்ஷாகரத்திற்காகவும் {தற்காப்பிற்காகவும்} துர்பலன் {அந்த பலவானை} எதிர்க்கலாகாது.(12) 

இதில் எந்த தாத்ரியை {குகையை} நினைக்கிறாயோ, {தாரன் சொல்ல} “இந்த பிலம்” என்று கேட்கிறாயோ, இவை அனைத்தையும் பிளப்பது லக்ஷ்மண பாணங்களுக்கு அற்ப காரியமே.(13) பூர்வத்தில் அசனி ஏவிய இந்திரனாலேயே அஃது அற்பமாக செய்யப்பட்டது எனும்போது, இலக்ஷ்மணர், தன் கூரிய பாணங்களால் இலை தொன்னையைப் போலக் கிழித்துவிடுவார்.(14) இந்த விதமான லக்ஷ்மணரின் நாராசங்கள், ஸ்பரிசத்தால் கிரிகளையே பிளக்கவல்ல அசனிக்கும், வஜ்ரத்திற்கும் சமமானவையாக இருக்கின்றன.(15) பரந்தபா {எதிரிகளை எரிப்பவனே}, நீ எப்போது கீழே இறங்குவாயோ அப்போதே சர்வ ஹரயர்களும் {குரங்குகளும்} ஒரு நிச்சயத்தை அடைந்து {உன்னைக்} கைவிடுவார்கள்.(16) புத்திரர்களையும், தாரங்களையும் நினைத்து நித்தியம் கவலையுடனும், பசியுடனும் {ஏக்கத்துடனும்}, துக்கத்துடனும் சயனங்களில் அழுது கொண்டிருப்பவர்கள் உன்னை விட்டுச் செல்வார்கள்.(17) 

நலம் விரும்பும் நண்பர்களாலும், பந்துக்களாலும் கைவிடப்படும் நீ, அசையும் துரும்பைக் கண்டும் அச்சமடைபவனாக மாறுவாய்.(18) அதி உக்கிர வேகத்துடன் கூடியவையும், கூர்மையானவையும், கோரமானவையுமான லக்ஷ்மண சாயகங்கள் {அம்புகள்}, விலகிச் செல்லும் உன்னைக் கொல்ல ஏவப்பட்டால் அவற்றின் மஹாவேகத்தைத் தடுக்க முடியாது.(19) எங்களுடன் கூடியவனாகப் பணிவுடன் {கிஷ்கிந்தைக்குத்} திரும்பிச் சென்றால், முன்பைப் போலவே சுக்ரீவர் உன்னை ராஜ்ஜியத்தில் ஸ்தாபிப்பார்.(20) உன் பித்ருவ்யரும் {சிறிய தந்தையும்}, அன்பை விரும்புகிறவரும், திட விரதரும், தூய்மையானவரும், சத்தியப்ரதிஜ்ஞருமான அந்த தர்மராஜா {சுக்ரீவர்} நீ எவ்வகையிலும் நாசமடைவதை விரும்பமாட்டார்.(21) உன் மாதாவின் {தாரையின்} பிரியத்திற்கும், விருப்பத்திற்கும் உரியவர். அவரது ஜீவிதத்தின் அர்த்தமும் அதுவே. அவருக்கு {சுக்ரீவருக்கு} வேறு சந்ததியும் இல்லை. எனவே, அங்கதா, அங்கே செல்வாயாக” {என்றான் ஹனுமான்}.(22)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Friday, 28 July 2023

மீண்டும் தாரையின் புலம்பல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 23 (30)

Tara laments again | Kishkindha-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வாலியின் விதியை நினைத்து வருந்திப் புலம்பிய தாரை; வாலியின் அவலநிலையைக் காணும்படி அங்கதனை அழைத்தது...

Vali instructing Angada

அப்போது, உலகத்தால் நன்கு அறியப்பட்டவளான தாரை, கபிராஜனின் {குரங்குகளின் மன்னனான வாலியுடைய} அந்த முகத்தின் சமீபம் சென்று முகர்ந்து, மரித்த பதியிடம் {இறந்து போன தன் கணவன் வாலியிடம், பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(1) "வீரரே, என் சொற்களின்படி செயல்படாத நீர், சமமற்றதும், கற்கள் பரப்பப்பட்டதும், மிகக் கடினமானதுமான வசுதாதலத்தில் {தரையில்} கிடக்கிறீர்.(2) வானரேந்திரரே {வானரர்களின் தலைவரே}, மஹீயே {நிலமகளே} உமக்கு என்னைவிட பிரியமானவள் என்பது நிச்சயம். அதனாலேயே, எனக்கு மறுமொழி ஏதும் கூறாமல் அவளைத் தழுவிக் கிடக்கிறீர்.(3) வீரரே, சாஹஸப்பிரியரே, நீர் சுக்ரீவரின் வசம் அடைந்தீர்; சுக்ரீவரே விக்ராந்தரானார் {வெற்றியடைந்தார்}. அஹோ, இதுவே விதியானது.(4) 

இரிக்ஷவானர முக்கியர்கள் {கரடிகள், குரங்குகள் ஆகியோரில் முக்கியமானவர்கள்} பலியை {வழிபடத்தகுந்தவரைப்} போல உம்மை முழுமையாக உபாசிக்கின்றனர் {வழிபடுகின்றனர்}. அவர்களின் பரிதாபகரமான புலம்பல்களையும், அங்கதனின் அழுகையையும், என்னுடைய இந்தக் கதறலையும் கேட்டும் ஏன் நீர் விழித்தெழாமல் இருக்கிறீர்?(5,6அ) உம்மாலே பூர்வத்தில் அழிக்கப்பட்ட ரிபுக்கள் {பகைவர்} எங்கே சாய்க்கப்பட்டனரோ அந்த வீரசயனத்திலேயே இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறீர்.(6ஆ,7அ) சுத்தமான சத்வ குலத்தில் ஜனித்தவரே, யுத்தப்பிரியரே, மானத்தைக் காப்பவரே, என் அன்புக்குரியவரே, நீர் என்னைத் தனிமையில் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டீர்.(7ஆ,8அ) 

விவேகிகள், கன்னியை சூரனுக்குக் கொடுக்கக்கூடாது. கொல்லப்பட்ட சூரரின் பாரியையான நான், விதவையாகிவிட்டதை இப்போது பார்க்கலாம்.(8ஆ,9அ) என் மானம் பங்கமடைந்தது. என் சாஷ்வதகதி பங்கமடைந்தது {நன்னிலையும், இன்பமும் பாழானது}. ஆழமானதும், பெரியதுமான சோக சாகரத்தில் நான் மூழ்குகிறேன்[1].(9ஆ,10அ) கொல்லப்பட்ட பர்தாவை {கணவர் வாலியைக்} கண்டும், எது நூறாகப் போகாமல் {சிதறாமல்} திடமாக இருக்கிறதோ, அத்தகைய என் ஹிருதயம் நிச்சயம் கல்லின் சாரத்தாலானதாக இருக்க வேண்டும்.(10ஆ,11அ) இயல்பிலேயே எனக்குப் பிரியமானவரும், நண்பரும், பர்த்தாவும், போர்களில் பராக்கிரமருமான சூரர் பஞ்சத்வத்தை[2] {ஐந்தாம் நிலையான மரணத்தை} அடைந்துவிட்டார்.(11ஆ,12அ) புத்திரிணியாக {பிள்ளைகளைப் பெற்றவளாக} இருந்தாலும், தனம், தானியம், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், பதியை இழந்த எந்த நாரீயையும் ஜனங்கள் {எந்தப் பெண்ணையும் மக்கள்} விதவை என்றே அழைப்பார்கள்.(12ஆ,13அ)

[1] வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை காண்கிலேன்
உரை சேர் ஆருயிரே என் உள்ளமே
அரைசே யான் இது காண அஞ்சினேன்

- கம்பராமாயணம் 4098ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: மலையினை ஒத்த உமது தோள்களில் சேர்ந்து எந்நாளும் இன்புற்றிருந்த நான் கரை காணாத துன்பக்கடலின் எல்லையைக் காணாதிருக்கிறேன். புகழ்பொருந்திய என் ஆருயிரே, என் உள்ளமே, அரசே, நான் இதைக் காண அஞ்சினேன் {நீர் இறந்து கிடக்கும் இந்தத் துன்பக் காட்சியைக் காண அஞ்சினேன்}.

[2] "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்று கிஷ்கிந்தா காண்டம் 20ம் சர்க்கம் 9ம் சுலோகத்திற்கான அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார்.

வீரரே, உமது காத்திரங்களில் {உறுப்புகளில்} இருந்து வெளிப்பட்ட உதிர மண்டலத்தில், இந்திரகோபப் பூச்சியின் {சிவப்பு} வண்ணத்திலான உமது சயனத்தில் கிடப்பது போல் கிடக்கிறீர்.(13ஆ,14அ) பிலவகரிஷபரே {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையே}, புழுதியும், குருதியும் படிந்த உமது காத்திரங்களை {அங்கங்களை} என் இரு கைகளாலும் முழுமையாகத் தழுவிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை[3].(14ஆ,15அ) அதிபயங்கரமான இந்த வைரத்தில் {உமக்கும், சுக்ரீவருக்கும் இடையிலான இந்தப் பகையில்} இதோ சுக்ரீவர் காரியத்தை நிறைவேற்றிவிட்டார். இராமன் ஏவிய ஒரே கணையில் அவரது {சுக்ரீவரின்} பயம் தீர்ந்தது.(15ஆ,16அ) நீர் பஞ்சத்வத்தை அடைந்தீர். உமது ஹிருதயத்தில் தைத்திருக்கும் சரத்தால் தடுக்கப்பட்டு, உமது காத்திரங்களை {அங்கங்களை} ஸ்பரிசிக்க முடியாமல் உம்மைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" {என்றாள் தாரை}.(16ஆ,17அ)

[3] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என் வயின் ஊனம் யாவதோ?

- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: மலைகள் போன்ற உமது தோள்கள் புழுதி படிய தரை மேல் கிடப்பவரே, "நீர் அடைந்த கதியும் இதுவோ?" என்று கரைந்துருகாமல் கதறும் என் அழுகையைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீரே; என்னிடம் உள்ள குற்றம் என்ன?

அப்போது நீலன் {என்ற வானரன்}, அவனது காத்திரத்தில் {வாலியின் மார்பில்} பாய்ந்த சரத்தை, மலைப்பிளவில் உறுதியாகப் பற்றிக் கொண்டு பளபளக்கும் விஷப்பாம்பைப் போலப் பிடுங்கினான்.(17ஆ,18அ) பிடுங்கியபோது அந்த பாணம், தினகரனில் இருந்து வந்து அஸ்தமலையைத் தாக்கி முழுமையாகத் தடுக்கப்பட்டும் {அஸ்தமனக்} கதிர்களைப்போல மின்னியது.(18ஆ,19அ) தராதரத்தில் {பூமியால் தாங்கப்படும் மலையில்} இருந்து {பெருகும்} தாமிரகைரிகம் {செந்தாது} கலந்த தாரைகளைப் {நீர்த்தாரைகளைப்} போலவே அவனது புண்களில் இருந்து ரத்தத் தாரைகள் எங்கும் பெருகின.(19ஆ,20அ) போர்ப்புழுதியால் எங்கும் பூசப்பட்டிருந்த பர்த்தாவை {கணவன் வாலியைத்} துடைத்து, அஸ்திரத்தால் தாக்கப்பட்ட சூரனைத் தன் நயனத்தில் ஜனித்த கண்ணீரால் நனைத்தாள்.(20ஆ,21அ)

அங்கனையான {அழகிய பெண்ணான} தாரை, கொல்லப்பட்டு, உதிரத்தால் சர்வ அங்கங்களும் நனைந்த பதியைக் கண்டு, சிவந்த கண்களுடன் கூடிய புத்திரன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(21ஆ,22அ) "புத்திரா, பிதாவின் கொடூரமான பஷ்சிம {மேற்கு / மறையும் / மரண} அவஸ்தையைப் பார். பாப கர்மங்களால் பற்றப்பட்ட வைரம் அந்தகதியடைந்தது {பகை முடிவை அடைந்தது}.(22ஆ,23அ) புத்திரா, பாலசூரியனின் பிரகாச உடலைக் கொண்டவரும், யமனின் வசிப்பிடத்திற்குப் பிரயாணம் செய்பவரும், கௌரவமளிக்கும் ராஜாவுமான பிதாவை வணங்குவாயாக" {என்றாள் தாரை}.(23ஆ,24அ)

இவ்வாறு சொல்லப்பட்டவன், வேகமாக எழுந்து, "நான் அங்கதன்" என்று சொல்லி, பருத்தவையும், உருண்டவையுமான தன்னிரு கைகளாலும் பிதாவின் சரணங்களைப் பற்றிக் கொண்டான்.(24ஆ,25அ) {அப்போது தாரை}, "உம்மை வணங்கும் அங்கதனிடம், முன்பு போல, 'புத்திரா, ஆயு பவ {பல்லாண்டு வாழ்க}' என்று நீர் சொல்லாமல் இருப்பது என்ன அர்த்தம்?(25ஆ,26அ) சிம்மத்தால் கோவிருஷம் {காளை} வீழ்த்தப்பட்டதும், வத்சத்துடன் கூடிய கோவைப் போல {கன்றுடன் கூடிய பசுவைப் போல}, இதோ புத்திரனின் சகாயத்துடன் கூடிய நான், சேதனமிழந்த {நனவு போன} உம்மை உபாசிக்கிறேன் {உமக்குத் தொண்டாற்றுகிறேன்}.(26ஆ,இ) சங்கிராம யஜ்ஞம் {போர் வேள்வி} செய்துவிட்டு, பத்தினியான என்னை விட்டுவிட்டு, ராமனின் ஆயுதமெனும் நீரில் எவ்வாறு அவப்ருத[4] ஸ்நானம் {நீராடும் சடங்கைச்} செய்தீர்?(27) 

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவப்ருதம் என்பது யாகத்தின் மிக முக்கியமான இறுதி அங்கமாகும். இது வேள்வியின் இறுதியில் நீராடும் சடங்காகும். வாலியின் வாழ்வின் கடைசி நீராடலாக இங்கே குறிப்பிடப்படும் அவப்ருதம் மரணத்தைக் குறிக்கிறது. போரானது இவ்வாறு ஒரு வேள்வியுடன் ஒப்பிடப்படும்போது, அவப்ருதம் என்ற சொல் அந்த உரையில் பயன்படுத்தப்படுகிறது. எந்த யாகத்தையும், அதைத் தொடர்ந்த நீராடலையும் மனைவியுடனேயே செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் திருப்தியடைந்த தேவராஜன் {இந்திரன்}, எதை உமக்கு தத்தம் செய்தானோ, எது உமக்குப் பிரியமானதோ, அந்தப் பொன்மயமான மாலை இப்போது ஏன் காணப்படவில்லை?(28) கௌரவங்களை அளிப்பவரே, சைலராஜனை {மலைகளின் மன்னனான மேரு மலையை} வலம் வரும் சூரியனின் பிரபையைப் போலவே ராஜ்ஜியஸ்ரீயும் {ராஜலக்ஷ்மியும்} உயிர் போனாலும் உம்மைவிட்டு போகமாட்டாள்.(29) நான் சொன்ன பத்தியமான சொற்களின்படி நீர் செயல்படவில்லை. உமக்கு நிவாரணம் செய்யும் {உம்மைத் தடுக்கும்} சக்தியும் எனக்கில்லை. போரில் நீர் கொல்லப்பட்டதும், புத்திரனுடன் நானும் கொல்லப்பட்டவளானேன். உம்முடன் சேர்ந்து ஸ்ரீயும் {செழிப்பின் தேவியான லக்ஷ்மியும்} என்னைக் கைவிட்டுவிட்டாள் {என்றாள் தாரை}.(30)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Sunday, 8 August 2021

வானரர்கள் | பால காண்டம் சர்க்கம் - 17 (37)

Vanaras | Bala-Kanda-Sarga-17 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மனின் அறிவுரை; ராவணனைக் கொல்வதில் ராமனுக்கு உதவி செய்யும் வானரங்களாக அவதரித்த தேவர்கள்...

lord-hanuman

விஷ்ணு, மஹாத்மாவான அந்த ராஜனனின் {தசரதனின்} புத்திரத்வத்தை அடைந்தபோது {மகனாக அவதரிக்க எண்ணியிருந்த போது}, ஸ்வயம்பூ பகவான் {பிரம்மன்}, தேவர்கள் அனைவரிடமும் இவ்வாறு பேசினான்:(1) "ஸத்யஸந்தனும், வீரனும், நம் அனைவரின் நன்மையை விரும்புகிறவனுமான விஷ்ணுவுக்கு, பலவான்களாகவும், காமரூபர்களாகவும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களாகவும்} ஸஹாயர்களை {சகா/ துணை புரிபவர்களை} உண்டாக்குவீராக.(2) மாயாவிகளும், சூரர்களும், வாயு வேகம் கொண்டவர்களும், நியாயமறிந்தவர்களும், புத்திசாலிகளும், விஷ்ணுவுக்கு நிகரான பராக்கிரமம் வாய்ந்தவர்களும்,(3) அழிக்கப்பட முடியாதவர்களும், உபாயம் அறிந்தவர்களும், தேவ சம்பந்தம் உடையவர்களும் {தெய்வீகத் தொடர்புகளுடன் கூடியவர்களும்}, அஸ்திரங்கள் அனைத்தின் குணங்களை அறிந்தவர்களும், அமுதம் பருகுபவர்களுமான உங்களைப் போன்ற,(4) துல்லிய பராக்கிரமம் கொண்ட புத்திரர்களை முக்கிய அப்சரஸ்கள், கந்தர்விகள் ஆகியோரின் உடல்களில் இருந்தும், யக்ஷ, பன்னக {நாகக்} கன்னிகைகள், ரிக்ஷிகள் {பெண்கரடிகள்}, வித்யாதரிகள், கிங்கரிகளின் உடல்களில் இருந்தும், வானரிகளின் உடல்களில் இருந்தும் ஹரி ரூபத்தில் {குரங்கு வடிவங்களில்} உண்டாக்குவீராக.(5,6) பூர்வத்தில் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ரிக்ஷபுங்கவனான {கரடிகளில் சிறந்த} ஜாம்பவான், நான் கொட்டாவி விட்டபோது என் முகத்தில் இருந்து தீடிரென வெளிப்பட்டவன் ஆவான்" {என்றான் பிரம்மன்}[1].(7)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் மூலம், தேவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான மாதிரி படைப்பாக பிரம்மன் ஏற்கனவே ஜாம்பவானைப் படைத்துவிட்டான் என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

பகவான் {பிரம்மன்} இவ்வாறு சொன்னதும் அவர்கள் {தேவர்கள்} அந்த சாசனத்தை {உத்தரவை} ஏற்றுக் கொண்டு, அதன்படியே வானர ரூபங்கொண்ட புத்திரர்களைப் பிறக்கச் செய்தனர்[2].(8) மஹாத்மாக்களான ரிஷிகளும், சித்தர், வித்யாதரர், சாரணர்கள் ஆகியோரும், வீரியவான்களும், வனசாரிகளுமான {காட்டில் திரிபவர்களுமான} சுதன்களை {மகன்களை} உண்டாக்கினர்.(9) இந்திரன், மஹேந்திர மலையைப் போன்ற உடற்கட்டைக் கொண்ட வானரேந்திரன் வாலியையும், ஈரப்பதமூட்டுவர்களில் பெரியவனான தபனன் {சூரியன்}, சுக்ரீவனையும் பிறக்கச் செய்தனர்.(10) பிருஹஸ்பதி, வானரர்கள் அனைவரிலும் முக்கியனும், மிகச் சிறந்தவனும், புத்திமானும், தாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மஹாகபியை {பெருங்குரங்கைப்}[3] பிறக்கச் செய்தான்.(11)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மரபுவழிக்கு இன்னும் குரங்கு எனும் முத்திரை கொடுக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் குரங்குகளைப் போன்றவர்கள்; குரங்குகள் அல்ல. வானர ரூபிணாம் என்ற ஸ்லோக வரி, குரங்குகளை ஒத்தவர்கள் என்ற பொருளையே தருகிறது. பரந்த வனத்தில் திரிபவர்கள் என்ற பொருளில் {வநே சரதி இதி வநர:} அவர்கள் வானரர்கள் என்று அழைக்கப்பட்டார்களேயன்றி இவர்கள் உண்மையில் குரங்கினம் அல்ல" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படுவது வாலியின் மனைவியான தாரையல்ல; இவன் வானர வீரன். இங்கே முதல் முறையாகக் பெருங்குரங்குக்கான மஹாகபி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.

ஸ்ரீமான் கந்தமாதனன் என்ற வானரன் தனதஸ்யனின் {குபேரனின்} சுதனாவான் {மகனாவான்}. விஷ்வகர்மன், நளன் என்ற பெயரைக் கொண்ட மஹாகபியை {பெருங்குரங்கைப்} பிறக்கச் செய்தான்.(12) பாவகசுதன் {அக்னியின் மகன்}, அக்னி போன்று சுடர்விடுபவனான நீலனாவான். அந்த வீரியவான், தான் கொண்ட தேஜஸிலும், புகழிலும் வானரர்கள் அனைவரிலும் மேலானவனாக இருந்தான்.(13) ரூபமெனும் திரவியத்தை {அழகெனும் செல்வத்தைக்} கொண்ட அஷ்வினிகள், அழகால் அருளப்பட்ட மைந்தன், துவிவிதன் ஆகியோரைப் பிறக்கச் செய்தனர்.(14) வருணன், சுஷேணன் என்ற பெயர் கொண்ட வானரனைப் பிறக்கச் செய்தான். பர்ஜன்யன், மஹாபலம் பொருந்திய சரபனைப் பிறக்கச் செய்தான்.(15) ஸ்ரீமானும், வீரியவானும், வஜ்ரம் போன்ற உடல் கொண்டவனும், வைனதேயனுக்கு {கருடனுக்கு} இணையான வேகத்துடன் கூடியவனும், ஹனுமான் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரன், மாருதனின் {வாயுவின்} மகனாவான்.(16) அவன் {ஹனுமான்}, வானரர்கள் அனைவரில் முக்கியமானவனும், புத்திமானும், பலவானும் ஆவான்.(17அ)

தசக்ரீவனின் {ராவணனின்} வதத்திற்காக வெளிப்பட்டவர்களில் இன்னும் பரமபலம் பொருந்தியவர்களும், துணிவுமிக்கவர்களும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான பல்லாயிரம் வீரர்கள் சிருஷ்டிக்கப்பட்டனர்.(17ஆ,18அ) கஜங்களையும் {யானைகளையும்}, மலைகளையும் போன்றவர்களும், மஹாபலவான்களும், பேருடல் படைத்தவர்களுமான ரிக்ஷர்களும் {கரடிகளும்}, வானரர்களும், கோபுசங்களும் {கருங்குரங்கு வகையைச் சேர்ந்த முசுக்களும்} விரைவில் பிறந்தனர்.(18ஆ,19அ) எந்த தேவன் எந்த வடிவில் இருப்பானோ அதே வேஷமும், பராக்கிரமும் கொண்டவர்களாகவும், அவனவனுக்கு {அந்தந்த தேவனுக்கு} இணையானவர்களாகவும் அவர்களைப் பிறக்கச் செய்தனர்.(19ஆ,20அ)

உன்னதப் பராக்கிரமம் கொண்ட சில வானரர்கள், கோலாங்கூலிகளிடமும் {பெண் லங்கூர்களிடமும்}, மேலும் சிலர் ரிக்ஷிகள் {பெண் கரடிகள்}, கின்னரிகளிடமும் {தெய்வீகப் பெண் இசைக்கலைஞர்களிடமும்} பிறந்தனர்.(20ஆ,21அ) தேவர்கள், மஹாரிஷிகள், கந்தர்வர்கள், தார்க்ஷ்யர்கள் {கழுகுகள்}, கொண்டாடப்பட்ட நாகர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள், சாரணர்கள் பலர் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக முக்கிய அப்சரஸ் கன்னிகைகள், வித்யாதரிகள், நாககன்னிகைகள், கந்தர்விகள் ஆகியோரின் உடல்களில் இருந்து, வனங்களில் சஞ்சரிக்கவல்லவர்களும், பேருடல் படைத்தவர்களும், வீரியவான்களுமான வானர சுதன்கள் {மகன்கள்} பலரை ஆயிரக்கணக்கில் பிறக்கச் செய்தனர்.(21ஆ-24ஆ) விரும்பியவடிவம் ஏற்கவல்லவர்களும், பலங்கொண்டவர்களும், தங்கள் விருப்பம் போல் சுதந்திரமாகத் திரியவல்லவர்களுமான அவர்கள், வலிமையிலும், செருக்கிலும், புலிக்கும், சிங்கத்திற்கும் ஒப்பானவர்களாகத் திகழ்ந்தனர்.(24இ,25அ)

அவர்கள் அனைவரும் கற்களைக் கொண்டு தாக்குபவர்கள், அவர்கள் அனைவரும் மரங்களைக் கொண்டு தாக்குபவர்கள், அவர்கள் அனைவரும் நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் அனைத்து அஸ்திரங்களிலும் திறன்வாய்ந்தவர்கள்.(25ஆ,26அ) அவர்கள், பெரிய மலைகளையே அசைக்கவல்லவர்கள், ஸ்திரமான மரங்களை வேருடன் பிடுங்கக்கூடியவர்கள், தங்கள் வேகத்தால் ஸரிதாம்பதியான சமுத்திரத்தை {ஆறுகளின் கணவனான பெருங்கடலை} கலங்கடிக்கக்கூடியவர்கள்.(26ஆ,27அ) அவர்கள், தங்கள் பாதங்களால் தரையைப் பிளக்கவல்லவர்கள், பெருங்கடலையே குதித்துத் தாண்டக் கூடியவர்கள், ஆகாயத்தில் எழுந்து மேகங்களையும் பிடிக்கவல்லவர்கள்.(27ஆ,28அ) அவர்கள் வனத்தில் ஆரவாரத்துடன் திரிந்து, மதங்கொண்ட யானைகளையும் பிடிக்கவல்லவர்கள், தங்கள் குரலொலி முழக்கத்தால் {ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்} பறவைகளையும் விழச் செய்பவர்கள்.(28ஆ,29அ) விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும், போரில் வீரத்தலைவர்களும், மஹாத்மாக்களுமான அவர்கள், இவ்வகையில் நூறு லட்சம் குரங்குகளைப் பிறக்கச் செய்தனர்.(29ஆ,30அ) பிரதானக் குரங்குக் கூட்டத்தின் குரங்குத் தலைவர்களான அவர்கள் துணிச்சல்மிக்கக் குரங்குகளைப் பிறக்கச் செய்தனர்,(30ஆ,31அ)

சில ஆயிரக்கணக்கானோர் ரிக்ஷவான் மலையின் முகடுகளில் இருந்தனர், வேறு சிலர் நானாவித மலைகளையும், கானகங்களையும் அடைந்தனர்.(31ஆ,32அ) அவர்கள் அனைவரும் சூரியபுத்திரனான சுக்ரீவனும், சக்ரபுத்திரனான வாலியுமாகிய சகோதரர்களை அண்டி அவர்களின் தலைமையில் இருந்தனர். குரங்குத் தலைவர்களான நளன், நீலன், ஹனுமான் ஆகியோரும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களும் கூட அவர்களை {வாலி, சுக்ரீவன் ஆகியோரைப்} புகழ்ந்திருந்தனர்.(32ஆ,33) தார்க்ஷ்ய {கருடனைப் போன்ற} பலம் கொண்டவர்களும், யுத்தம் செய்வதை நன்கறிந்தவர்களுமான அவர்கள் அனைவரும் சிங்கங்கள், புலிகள், பெரும்பாம்புகள் ஆகியவற்றின் செருக்கை அழித்துத் திரிந்திருந்தனர்.(34) பெருந்தோள்களைக் கொண்டவனும், பெரும் வலிமைமிக்கவனும், மஹாபலவானுமான வாலி, ரிக்ஷர்களையும் {கரடிகளையும்}, கோபுசர்களையும் {முசுக்களையும்}, வானரர்களையும் காத்துவந்தான்.(35)

மலைகள், வனங்கள், கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானது, சூரர்களும், பல்வேறு வகை உடலமைப்புகளையும், உடல் தோற்றங்களையும் {அடையாளங்களையும்} கொண்டவர்களுமான அவர்களால் நிறைந்திருந்தது.(36) பூமியானது, ராமனுக்கு ஸஹாயம் செய்யும் காரணத்திற்காக உண்டானவர்களும், மேகக்கூட்டங்களையும், மலைச்சிகரங்களையும் போன்றவர்களும், மஹாபலசாலிகளும், பீமசரீரரூபங் {பயங்கர உடற்தோற்றம்} கொண்டவர்களுமான அவர்களாலும், வானரப்படைத்தலைவர்களாலும் நிறைந்திருந்தது.(37) 


பாலகாண்டம் சர்க்கம் –17ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை